Blog

  • மாற்றம் மக்களிடமே தேவை

    ஞா.ஜார்ஜ்
    ஆராய்ச்சியாளர்
    அரசியல் அறிவியல் மற்றும் வளர்ச்சி நிர்வாகத் துறை
    காந்திகிராம பல்கழைக் கழகம்
    காந்திகிராமம்
    திண்டுக்கல்

    images (1)

    இந்தியா சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் பொருளாதாரம் கலாச்சாரம் மற்றும் அறிவியல் துறையில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. உலக அரங்கில் இந்தியா ஓர் தனிப்பெரும் நாடாகவும் மக்கள் ஆட்சிக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது. பல சாதனைகள் ஒருபுறம் இருக்க மக்கள் சாதி மதம் இனம் மற்றும் மொழி ஆகிய காரணங்களால் வேறுபட்டும் இருக்கின்றனர். பலதரப்பட்ட மக்களைக் கொண்டு உருவாகும் அரசு மக்களை முதன்மைப்படுத்துவதாகவும் மக்களை முன்னேற்றப்பாதைக்கு இட்டுச்செல்வதாகவும் இருப்பது அவசியம். மக்களால் உருவாக்கப்படும் அரசுக்கும் அதன் செயல்பாட்டிற்கும் எப்படி மக்கள் பங்கேற்பை அளிக்கின்றனர் என்பதுதான் நாம் இன்று சிந்திக்க வேண்டியது. அதுவல்லாது வெறும் வாக்கை அளித்துவிட்டதன் மூலம் தங்கள் ஜனநாயக கடமை முடிந்து விட்டது என்று எண்ணாமல் அரசுக்கும் அதன் செயல்பாட்டிற்கும் ஆதரவாக தங்களுடைய பங்கேற்பை அளிப்பதுதான் நமது முதற்கடமை. இது அனைத்துதரப்பு மக்களுக்கும் பொருந்தும். வெறுமனே அரசு சரியில்லை அரசு செயல்பாடு சாமானியமக்களை சென்றடையவில்லை அரசு அதிகாரிகள் சரியில்லை அரசியல்வாதிகள் சுயநலவாதிகள் என்று குறைகூறுவது முட்டாள் தனமான ஒன்று. அரசு அரசியல்வாதி மற்றும் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளிலும் திட்டமிடுதலிலும் சுயநலம் கலந்து இருப்பதாக கூறும் மக்கள் தங்களின் பங்கேற்பும் செயல்பாடுகளும் எப்படி சமூக முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கிறது என்பதை சற்றே சிந்தித்துப்பார்க்க வேண்டும். சமூக வளர்ச்சிக்கும் அதன் முன்னேற்றத்திற்கும் மக்களின் பங்களிப்பு என்பது அவசியமான ஒன்று. ஆனால் இன்றைய சூழலில் மக்களின் பங்களிப்பு மற்றும் பங்கேற்பு என்பது மிகவும் குறைவாக காணப்படுகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதற்கு என்னுடைய இரயில் பயணத்தில் நான் கண்ட சில உதாரணங்கள் நான் மதுரையில் இருந்து இராமேசுவரம் வரையில் பயணித்த போது என்னுடன் பயணித்த சில நூறு பயணிகளை நான் நன்கு கவனித்தேன். அவர்களில் அதிகமானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். இரயில்வேத் துறை சார்பில் ஓர் அறிவிப்பு பலகை இருந்தது அதில் இரயில்வண்டி நிற்கும் போது கழிவறை பயன்படுத்துவதை தவிர்கவும் என்று. ஆனால் அதிகப்படியான மக்கள் இரயில் வண்டி நிறுத்தத்தில் கழிவறையைப் பயன்படுத்துவதைக் காணமுடிந்தது. இப்படி படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரையிலும் அனைத்துத் தரப்புமக்களும் இரயில் வண்டி நிறுத்தத்தில் கழிவறையைப் பயன்படுத்துவது என்பது சமூகத்தின் மீது கொண்டுள்ள அக்கரையின்மையை காட்டுவதாக இருப்பதுடன் அரசு செயல்பாட்டில் குறுக்கிடுவதாகவும் உள்ளது. சமூக அக்கரையின்மையின் காரணமாக இவர்கள் செய்யும் செயல் தாழ்த்தப்பட்ட சமூகத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அடிமை வேலை செய்யப் பணிக்கிறது. அடிமைத் தனமான வேலையை தலித் மக்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காகச் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மக்கள் தங்களின் அவசரத்திற்காகச் செய்யும் இந்த இழிவான செயலால் வரும் விளைவை மலத்தை அகற்றுபவர் என்ற முறையில் தலித்துக்கள் இந்த கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கான சட்டத்திருத்தம் 2013-ன் படி மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவர்கள் வேறுதொழிலில் ஈடுபட கடனுதவி அவர்களுடைய குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது முதலியன இந்தச் சட்டத்திருத்தத்தின் பிரதான நோக்கமாக உள்ளது. அத்துடன் மனிதக் கழிவகற்றும் தொழிலாளர்களை பணி அமர்த்துவதும் அவர்களை மனிதக் கழிவகற்ற பணிப்பதும் சட்டப்படி குற்றம் அதைமீறினால் அபதாரம் மற்றும் சிறை தண்டனை என்பன இச்சட்டத்தின் சிறப்பு. ஆனால் இன்றைக்கும் மனிதக்கழிவு அகற்றும் பணியாளர்கள் அனைவரும் தலித்துக்களாக இருந்து வருகின்றனர். இந்தப் பணி பலரையும் முகம் சுழிக்கவைக்கக்கூடிய மற்றும் அருவறுக்கத்தக்க செயலாக இருந்து வருகின்றது. இதற்குக் காரணம் சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் மக்களிடம் இருக்கும் சுயநலம் தான் காரணமே தவிர அரசு இதற்கு பொறுப்பு என்று கூறுவது தவறு. மக்களுக்கான அரசு மக்களின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையான சட்டங்களை இயற்றுவது திட்டங்கள் தீட்டுவது ஓர் அரசின் கடமை. அதுபோல் மக்களும் அரசின் திட்டங்களுக்கும் சட்டங்களுக்கும் அதன் செயல்பாட்டிற்கு உறுதுணையாகவும் அதில் பங்கேற்பையும் அளிப்பது மக்களின் கடமை. ஆதலால் தான் சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை களைய அரசு கொண்டுவரும் திட்டங்கள் சரியாகவே இருந்தாலும் அதை நடைமுறையில் மக்கள் ஏற்காதவரை அது இந்திய அரசியல் அமைப்பு புத்தகத்தில் எழுதப்பட்ட திட்டமாகவே தான் இருக்குமே தவிர நடைமுறையில் அதன் செயல்பாடுகள் மக்கள் மத்தியிலும்சரி சமூகத்திலும்சரி எந்த வளர்ச்சியையும் மாற்றத்தையும் கொண்டுவர இயலாது. எனவே பொது இடங்களில் மலம் கழிப்பது இரயில் நிலையங்களில் நிற்கும் இரயில் வண்டிகளில் உள்ள கழிப்பறையைப் பயன்படுத்துவது ஆகிய சமூகச் சீர்கேடுகளைக் குறைப்பதும் அதைச் சமூகத்தில் முற்றிலும் அகற்றுவதும் என்பது அரசு மற்றும் மக்களின் ஒருமித்த செயல்பாட்டில்தான் உள்ளது. இதற்கான முயற்சியாக அரசு தனிமனித சுகாதாரம் எவ்வளவு முக்கியமோ அது போல சமூகத்தின் சுகாதாரமும் முக்கியம் என்பதை உணர்த்தும் விதமாக சமூக விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும். இது போன்ற சமூக விழிப்புணர்வின் மூலம் மக்களின் மனங்களில் ஏற்படும் உள்ளார்ந்த மாற்றம்தான் ஒரு மேம்பட்ட சமுதாயத்தை உருவாக்க வழிகோலிடும்.

    மற்றொரு நிகழ்வு என்னவென்றால் இராமேசுவரம் என்பது இந்துக்களின் புண்ணியத் தலங்களில் ஒன்று. அதுமட்டுமல்லாமல் பிற மதத்தவரும் வந்து செல்லும் சுற்றுலாத்தலமாகவும் திகழ்கிறது. இப்படிப்பட்ட இராமேசுவரத்தில் இந்துக்களின் கலாச்சாரப்படி இறந்தவர்களுக்கு அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி கர்மகாரியங்கள் நடத்துவது பின்பு கடலில் புனித நீராடுவதும் வழக்கம், அத்துடன் நின்றுவிடாமல் அவர்கள் உடுத்திவந்த உடைகளை கடலில்விடுவதும் வழக்கம். ஆனால் இந்தச் செயலால் கடலில் துணிகள் மிதப்பதுடன் புனிதநீர் என்று கருதப்படும் கடல்நீர் மாசுபடுகிறது. கடல் நீர் மாசுபடுவதால் மீன் வளத்தைகுறைவிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இச்செயலால் கடற்கரை ஓரத்தில் மீன் உற்பத்தி குறைகிறது. இதனால் கரைஓர மீன்பிடிதொழில் செய்யும் மீனவர்கள் பாதிப்படைகின்றனர். கரையில் இருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவுவரை துணிகள் கடலுக்கடியில் படிந்தும் மிதந்தும் காணப்படுகின்றது. கோயில் நிர்வாகம் அறிவிப்பு பலகைகள் வைத்தும் துணிகளை போடுவதற்கான தொட்டிகள் அமைத்து இருந்தாலும் மக்கள் அதை பின்பற்றுவது இல்லை. இதைப்பற்றி சில சமூக ஆர்வலர்கள் மற்றும் மீனவர்களிடம் கேட்டபோது என்னதான் அறிவிப்பு பலகை மற்றும் துணியைப் போடுவதற்கு தொட்டிகள் அமைத்துத்தந்தாலும் வரும் பக்தர்கள் துணிகளை விடுவதை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறுகின்றனர். இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் உள்ளாட்சி நிர்வாகமும் கோயில் நிர்வாகமும் செயலற்ற நிலையில் இருப்பதை நம்மால் காணமுடிகிறது. உள்ளாட்சி அமைப்பும்சரி கோயில் நிர்வாகமும் சரி வெறும் அறிவிப்புப் பலகையுடன் நில்லாமல் அதற்கான விழிப்புணர்வை கொடுக்கவும் முன்வரவில்லை அதற்கான செயல்பாட்டை எடுத்ததாகவும் தெரியவில்லை. இது போன்ற நிகழ்வு உள்ளாட்சி அமைப்புகளின் சமூக அக்கறையின்மையை காட்டுவதாக உள்ளது. சுற்றுலாத் துறையும் அதன் துறைசார்ந்த செயல்பாட்டில் ஒரு குறைபாட்டுடன் தான் செயல்படுகிறது. இது போன்று அரசுத்துறைகளில் உள்ள குறைபாடுகளைப் பற்றி மக்கள் பேசுவதை விடுத்து முதலில் தங்களிடம் உள்ள குறைபாடுகளைக் களைய முயற்சிக்க வேண்டும். இதற்கானத் தீர்வாக கலாச்சாரம் என்ற பெயரில் பாவங்களில் இருந்து தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு பொதுஇடம் அதிலும் புண்ணியத்தலத்தை அசுத்தம் செய்வதை ஒவ்வொரு மக்களும் சிந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்தித்து அவர்களுக்குள்ளாக வரும் மாற்றம் தான் இப்போது தேவை.

    சமூக வளர்ச்சியையும் அதன் முன்னேற்றத்தையும் பாதிக்கும் பிரச்சனைகளான சாதியப் பாகுபாடு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை சமூகத்தில் இருந்து களைய, படித்தவர் படிக்காதவர் மற்றும் பணக்காரன் ஏழை என்ற பாகுபாடுகள் இன்றி அனைத்துத் தரப்பு மக்களுக்குள்ளும் வரும் ஓர் சீரிய மாற்றம் தான் சமூகப் பிரச்சனைகளைக் குறைத்து ஒரு மேம்பட்ட சமூகம் உருவாக வழிவகுக்குமே தவிர சட்டங்களைக் கடுமையாக்குவது புதிய திட்டங்கள் தீட்டுவதினால் ஒருமாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. ஆகவே முதலில் மக்கள் மனங்களில் தான் மாற்றம் தேவை என்பது தான் என் கருத்தாக முன்வைக்க விரும்புகிறேன்.

    Share
  • முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே …

    –கவிஞர் காவிரிமைந்தன்.

    aahaa1

    aahaaவாலிபக்கவிஞர் வாலி அவர்களின் வசந்த வரிகளில் இதோ மற்றுமொரு பாடல்! திரைப்படத்தின் பெயர் கூட “ஆஹா” என்கிறது! இப்பாடலைத்தான் சொல்கிறதோ? இசையமைப்பாளர் தேவா அவர்களின் ரம்மியமான இசையில் இளம்பாடகர் ஹரிகரன் குரலில் ஒலிக்கும் காதல் பாடல்!

    இளம் உள்ளத்தின் பருவ வாசலில் தோன்றும் அத்தனை உணர்ச்சிகளையும் ஒட்டுமொத்தமாக கவிஞனால் மட்டும் அப்படியே படம்பிடித்துக்காட்ட முடிகிறது! காவியக்கவிஞருக்கு அது கைவந்த கலையாக!

    பாடலின் தொடக்கம் முதல் தொய்வில்லாத ஒரு உந்துதல்… மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது பாருங்கள்… கேளுங்கள்! ஆனந்தம் அலைமோதும் எண்ணங்களில் வார்த்தைகள் வந்துவிழாதா என்ன? சுவையான கீதம் நம்மை இனிமையான சூழலுக்கு அழைத்துச் செல்வதும்… மதுரமான இசையில் ஆழ்த்துவதும் சராசரி பாடலுக்கே சாத்தியப்படும்போது… வார்த்தைகளை கவிஞர் சர்க்கரை, தேன்பாகு போல் கொட்டிக்கவிழ்த்திருக்கும் இப்பாடல் ஈர்க்கமாலிருக்குமா?

    ஆழ்ந்த சிந்தனையிலிருந்து அற்புத வரிகள் தோன்ற பாய்ந்துவரும் வெள்ளமென பாடல் பிறக்கிறது… எளிமையெனும் ரதமேறி குரல்வழியே நாம் அந்தக் குதூகலத்தை அடையலாம்..

    நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
    அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
    முதற்பார்வை நெஞ்சில் என்றும் உயிர் வாழுமே!

    நல்லவளே அன்பே உன்னால்தான்
    நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்

    இவை என்ன காதலுக்கு எழுதிவைக்கப்பட்டிருக்கும் வேதவரிகளா?

     

    முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
    எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
    என்னில் இன்று நானே இல்லை
    காதல் போல ஏதும் இல்லை
    என்னில் இன்று நானே இல்லை
    காதல் போல ஏதும் இல்லை
    எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா?
    (முதன் முதலில்…)

    நந்தவனம் இதோ இங்கேதான்
    நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்
    நல்லவளே அன்பே உன்னால்தான்
    நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்

    நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
    அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
    நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
    அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
    முதற்பார்வை நெஞ்சில் என்றும் உயிர் வாழுமே
    உயிர் வாழுமே
    (முதன் முதலில்…)

    உத்தரவே இன்றி உள்ளே வா
    நீ வந்த நேரத்தில் நான் இல்லை என்னில்
    அந்த நொடி அன்பே என் ஜீவன்
    வேறெங்கு போனது பாரடி உன்னில்
    உன்னைக் கண்ட நிமிஷத்தில் உறைந்து நின்றேன்
    மறுபடி ஒரு முறை பிறந்து வந்தேன்
    உன்னைக் கண்ட நிமிஷத்தில் உறைந்து நின்றேன்
    மறுபடி ஒரு முறை பிறந்து வந்தேன்
    என் சுவாசக் காற்றில் எல்லாம்
    உன் ஞாபகம் உன் ஞாபகம்
    (முதன் முதலில்…)
    ____________________________________________
    படம்: ஆஹா (1998)
    பாடல்: வாலி
    இசை: தேவா
    பாடியவர்: ஹரிஹரன்
    காணொளி: https://www.youtube.com/watch?v=OqC-Y9YGNxE&spfreload=10

     

     

    https://youtu.be/XCggs6WA9Nk

    Share
  • சிவபிரதோஷம்

    மீ.விசுவநாதன்

    images
    சின்னஞ் சிறிய வயதினிலே சிட்டாய்ப் பறந்து திரிகையிலே
    என்னுள் இருந்து விழிகாட்டி இருந்தாய் சிவனே வழிகாட்டி !
    கன்னம் குழித்துச் சிரிக்கின்ற கரும்புச் சுவையாம் சரவணனின்
    சின்னம் நெருப்புச் சுவைவண்ணா ! சிறுவன் எனக்கருள் செய்நன்னா !

    உயரே பரந்த ஒலிவானம் உதிரும் மொழியோ சிவநாமம் !
    பயனை நினைத்துப் பணியாத பனிபோ லிருப்போ னுருவாகும் !
    நயனம் இரண்டும் ஒளிவீச நடக்கும் வடிவில் குருவாகும் !
    அயனும் அரியும் அறியாத அவனே அருமை அரனாகும் !

    (18.03.2015)
    (அறுசீர் விருத்தம் வாய்பாடு: மா, மா, காய் , மா, மா, காய் ,)

    Share
  • ஐந்து கை ராந்தல் (4)

    வையவன்

    “அகத்து வரூ”

    க்வார்ட்டர்ஸின் கதவுக்கு மாட்டியிருந்த பச்சை ஸ்கிரீனை’த் தள்ளிக் கொண்டு வெளிப்பட்டாள் பிரீதா. கதவுக்கு வெளியே வாசற்படியருகில் சிவா நின்றான். கையில் குக்கர் வைத்த அட்டைப் பெட்டி.
    “எந்தா குக்கரோ?” என்றாள். அவள் புன்னகையில் ஒரு பசுமைக் குளிர்ச்சி இருந்தது.
    வெளியே வாட்டிய வெய்யிலில் அவளைப் பார்ப்பதே குளிர்ச்சியாக இருந்தது.

    ட்யூட்டி முடித்துக் குளித்திருந்தாள். தலை ஈரம் ஆறும் முன் போட்ட மலையாளக் கொண்டை. பூசினாற் போன்று பருத்த அவளது செம்மஞ்சள் மேனிக்கு இந்த பச்சை நைலக்ஸ் மட்டுமல்ல எந்த உடையும் பொருத்தம்தான்.
    விளக்கு வைத்த மாதிரி ஒரு பார்வை. அந்த குறுஞ்சிரிப்பில் கண்களின் சுடர் தெறித்தது.

    சிவா காம்பவுண்ட் கேட்டைத் திறந்து கொண்டு படியேறினான். நடுவே ஓடிய காங்க்ரீட் பாதையின் இரு பக்கமும் தண்ணீருக்குத் தவிக்கும் சின்னத் தோட்டம்.

    “இண்டர்வ்யூ கழிஞ்ஞோ?” என்ஙறு அவன் கையிலிருந்த குக்கர் பெட்டியை வாங்கிக் கொண்டே கேட்டாள்.
    பிரீதாவிடமிருந்து ஒரு பெர்ஃப்யூம் வாசனை வந்தது.

    “இவ்விட இரீ” என்று ஒரு பிரம்பு நாற்காலியைக் காட்டி ஆதுரமாகப் புன்னகைத்தாள்.
    பிரீதாவின் புன்னகையிலும் சிரிப்பிலும் கண்கள் ஒளிவிட்டன. இவளுக்கும் பாவங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று அவள் முகத்தின் நேர்மை கேட்டது.

    எவ்வளவு சுருக்கமாக இவள் தன் பிரியத்தை வெளியிடுகிறாள்!
    “இதோ வருந்து” என்று பிரீதா மீண்டும் உள்ளே போனாள்.

    பக்கத்திலிருந்த டீப்பாயில் ஒரு மலையாள தினசரி மடிந்து கிடந்தது. புழுக்கத்திற்கு விசிறிக் கொள்ள எடுத்தான். கீழே நந்தவனம். அந்த வாரத்து இதழ். பிரதா தமிழ் கற்று வருகிறாள் என்று நினைவு வந்தது.
    எந்த இடத்தில் அவனது கதை பார்க்கக் கிடைக்கிறது!

    பத்திரிகையை எடுக்கும் போது கை லேசாக நடுங்கிற்று. அட்டைப்பட ஓவியத்தைப் பார்க்கும் போது அவனுக்கு மறுபடியும் அம்மா நினைவு வந்தது. கண்கள் ஊற்றெடுத்தன-பார்வை மறையுமளவு.
    ‘மனமே இன்பத்திலும் துன்பத்திலும் சமமாயிரு.’ தாமுவின் முதல் கதை பிரசுரமாயிருந்தால் அவன் இவ்வளவு கிளர்ச்சியுறுவானா? வெற்றிவேல்?

    ‘லகானை’ இழுத்த மாதிரி அவனுக்குள் ஒரு தன்வசம் கிட்டியது.
    ‘டபிள் ஸ்ப்ரெட்’டாக அட்டையின் முன்னும் பின்னும் ஏழு வண்ணத்தில் பரவியிருந்த ஓவியம்.
    பிரித்தான். அவனது கண்ணீரும் கண் விழிப்பும் உதிரமும் பெருமூச்சும் சிதறியிருந்த வரிகள்; பொடிப் பொடியான ஒவ்வோர் எழுத்தும் அவனது வெற்றியைச் சிற்றுளியால் கொத்திய ஒவ்வொரு கொத்து போன்று சிரித்தன.
    பிரீதா ஒரு கண்ணாடித் தம்ளரோடு திரும்பி வந்தாள். லெமன் ஜூஸ்.

    “கழிக்கூ”
    பிரீதா நீட்டியதை வாங்கிக் கொண்டான். ‘பிரிஜ்’ஜிலிருந்து வந்ததால் டம்ளர் சில்லென்றிருந்தது.
    “இண்டர்வ்யூ எந்தாயி?”
    ஒரு விழுங்கு குளிர்ச்சியில் வெய்யில் பரவசம் எல்லாமே மட்டுப்பட்டன.
    “மாமூல்”

    “மாமூலென்னு பரஞ்ஞால்?”
    “ஜஸ்ட் ஃபர் நேம் ஸேக். ஆளை ஏற்கெனவே தீர்மானிச்சாச்சு. பத்தாயிரம் ரூபாய்.”
    “ஆ லெட்டரினெ கொடுத்தோ?”

    அது மாதிரி நூறு கடிதங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். பெரிய துண்டும் பைலுமாக பருத்த மனிதர்கள் நாலைந்து பேர் இண்டர்வியூ ஹாலுக்கு வெளியே திரிந்தார்கள்.
    “அதுக்கு அவசியமே ஏற்படலே”

    அவன் அவளிடம் உண்மையை மறைக்க விரும்பவில்லை. பிரீதாவின் முகத்தில் வருத்தம் ஏடு கட்டியது.
    ‘இவளிடம் சொல்லலாமா?”

    தனக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டுமென்று நிஜமாய் விரும்பும் இவளுக்கு இது தெரிய வேண்டுமே!
    சிவா பத்திரிகையை அந்தப் பக்கத்தின் நடுவில் கை வைத்து அவள் முன்பு நீட்டினான்.
    “எந்தாணு?” அவள் வாங்கி எழுத்துக் கூட்டினாள்..

    “எதிரெலியே நீ எங்கே?”
    சிவா சிரித்து விட்டான்.
    “தெற்றாணோ?” தப்பு செய்த குழந்தை மாதிரி அவள் ரசமாக விழித்தாள்.

    “எதிரொலியே நீ எங்கே?”
    அவன் திருத்திப் படித்தான். அவன் விரல் கீழே எழுதியிருந்த பெயரைச் சுட்டிக் காட்டியது.
    “சிவா…’ அவள் விழிகள் ஒரு கணம் நிலை குத்தின. இமைகள் படபடத்துக் கொண்டே அவன் மீது மொய்த்தன.
    “ஹாய்.. நிண்டேதோ?”

    “ஆம்” அவன் அடக்கப் புன்முறுவலுடன் தலையாட்டினான்.
    புது வியப்புடன் பார்த்தாள். பக்கங்களைப் புரட்டினாள் படங்களைப் பார்த்தாள். கவர்ஸ்டோரி என்று எழுதியிருந்ததை எழுத்துக் கூட்டிப் படித்தாள்.

    அட்டைப் படத்தைத் திருப்பிப் பார்த்தாள்.
    மீண்டும் அவன் மீது ஒரு பார்வை. அதில் ஒரு புது மரியாதை பிறந்திருந்தது.
    இனி அவளுக்குத் தான் பழைய சிவா இல்லை.

    வேலை தேடுகின்ற, தங்க நிழல் தந்தவர்களுக்குச் சமைத்துச் சேவகம் புரியும், பரிவிற்குரிய பழைய சிவா இல்லை.
    “கங்ராஜூலேன்ஸ்.. க்ளாட். ஐ’ம் வெரி க்ளாட். எனிக்கு எத்ர சந்தோஷமென்னு பரயாம்பாடில்ல”
    அவளது கரிய இமைகளில் பருத்துச் சிவந்த உதடுகளில் துளும்பிய களிப்பிலே ஒரு தூய்மை இருந்தது. அது ஒரு கன்று மரமாகிக் கனி குலுங்கக் கண்ட மகிழ்ச்சி.
    சிவாவுக்குச் சிலிர்த்தது.

    இவள் பார்வைக்கு தான் ஒரு வேலைக்காரன். தன் வெற்றியில் இவள் என்னமாய் பூரிக்கிறாள்!
    அந்தத் தூய்மையான களிப்பும் உற்சாகமும் கண்ணுக்குத் தெரியாத ட்யூப் இணைப்புக்களில் சொட்டுச் சொட்டாய் தனக்குள் நிரம்புவதை உணர்ந்தான் சிவா.

    “இங்ஙன நீ வல்யவனாயி”
    நீ பெரிய மனிதனாய் விட்டாய் என்று அவனது உலகம் ஒரு சங்கீத மலையாளத்தில் முதன் முறையாக அவனுக்கே எடுத்துக் கூறியது.

    “ஞான் இன்னு நினக்கு ஸ்வீட் தரும்”
    சிவா தடுக்குமுன் பிரீதா பச்சைத் திரையின் உள்ளே மறைந்து விட்டாள்.
    வெய்யிலில் பசி நடையாய் நடந்த கால் வலி எல்லாம் மறந்து விட்டது.
    ஸ்க்ரீனுக்கு மாட்டியிருந்த உலோக வளையங்கள் நகர்ந்து விலகியதால் ரீங்கரித்தன. திரையை ஒதுக்கிவிட்டு பிரீதா வந்தாள்.

    “அகத்துவரூ”
    அவன் இதுவரை அந்த வீட்டினுள் நுழைந்ததில்லை. தயங்கினான்.
    “கம் ஆன்… டோன்ட் பி ஷை!”
    லெமன் ஜூஸ் தீர்ந்த காலி டம்ளருடன் அவன் எழுந்தான்.
    “தரூ” அதை அவள் வாங்கிக் கொண்டாள்.
    நுழைந்தவுடனே ஒரு குளுமை. இள நீல டிஸ்டெம்பர் அடித்த சுவர்கள். மொசைக் தரை; லாமினேட் ஒட்டிய மேஜை நாற்காலிகள்.

    எதிரில் சுவற்றில் ஒரு சிறிய கண்ணாடிப் பெட்டியில் குருவாயூரப்பனின் பளிங்குச் சிலை. அதற்கு வெளியே ஊதுவத்தி ஸ்டாண்டில் சந்தன ஊதுவர்த்தி மென்மையாகப் புகைந்தது.
    ரூமை ஒட்டி சிறு நடை; வலப்புறம் படுக்கையறையில் நீல நைலான் கொசுவலை கட்டிலுக்கு மேலே தூக்கி விடப்பட்டிருந்தது.

    உள்ளே நீண்ட நடை வழி. சமையலறையும் பாத்ரூமும் டைனிங் ஹாலும் உள்ளே இருக்க வேண்டும்.
    சிவாவை மேஜையருகே உட்கார வைத்துவிட்டு அவள் நேரே உள்ளே போனாள். இரண்டு கைகளிலும் இரு பீங்கான் ‘ஸாஸர்’களை ஏந்தித் திரும்பினாள்.

    மேஜையின் மீது வைத்தாள். ரஸகுல்லாவும், வறுத்த முந்திரியும்.
    “நீங்க?”

    “நீயாணு ‘கஸ்ட்.’ கதா க்ருத்தாய கஸ்ட்”
    அவன் ஸ்வீட்டை விண்டு வாயில் போட்டதும் வயிறு பசித்தது.

    அவள் அவனுக்கு எதிரில் நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு மேஜை மீது ஊன்றிய இரு கரங்களாலும் மோவாயைத் தாங்கிக் கொண்டு அவனை உற்றுப் பார்த்தாள்.
    அவனுக்குக் கூச்சமாக இருந்தது.

    ‘உச்சய்க்கு எந்தெங்கிலும் கழிச்சோ?”
    மத்தியானம் ஒன்றும் சாப்பிடவில்லை. அந்த தகவல் இவளுக்கு எதற்கு.
    “கழிச்சு” அவன் மலையாளம் பேசினான்.

    “எந்த கழிச்சு?”
    “சோறு”
    “நுண”
    “இல்லை. மெய்தான்.”

    பிரீதா நம்பினாள். மலையாளத்தில் விடுவிடென்று பேசிக் கொண்டு போனாள். அவள் கண்களில் இளமை நினைவுகள் தலையெடுக்கும் மெல்லிய துயர் படர்ந்தது.

    “சிவா, எனக்கு ஓர் இளம் பருவத் தோழன்இருந்தான். செரு துருத்தியில். செருதுருத்தி கேள்விப்பட்டிருக்கிறாயா? ஷோரனூர் ஜங்ஷனுக்குப் பக்கத்தில்…”
    “மகாகவி வள்ளத்தோல் பிறந்த ஊர்…”
    “அதேதான். கேரள கலாமண்டலி பிரசித்தி ஆச்சே”
    “கேள்விப்பட்டிருக்கிறேன்.”

    “அங்கே கதகளி பயில்வதற்காக கொடுங்கல்லூரிலிருந்து அவன் வந்திருந்தான். செக்கச் செவேலென்று ஒரு பெண் மாதிரி… உன் சாயலில் இருப்பான்.”

    “என் சாயல் என்பது எது? பெண் மாதிரியா… சிவப்பா?” சிவா சிரித்துக் கொண்டே கேட்டான்.
    “உன் முகம்… உன் நடை… உன் உயரம்”

    “அப்போது அவனுக்கு பதின்மூன்று வயது. கவிதை எழுதுவான். பாடுவான்”
    “பெண் குரலா?”

    “இல்லை… கம்பீரமான ஆண் குரல். உச்ச ஸ்தாயிக்குப் போனால் மனசை அடிமை கொள்ளும் பௌருஷம், முகத்துக்கும் இயல்புக்கும் பொருந்தாத கம்பீரமான குரல்.”
    அவனை இவள் காதலித்திருப்பாளோ!
    பிரீதாவே சொன்னாள்.

    “என்னை அவன் காதலித்தான். நானும்…”
    சிவா வாய்க்குக் கொண்டு போன ஸ்பூனை நிறுத்தினான்.
    “இட்ஸ் எ காஃப் லங்… கன்றுக்குட்டிக்காதல். கற்பூரம் எரியற மாதிரி, காட்டுக் குயில் பாடற மாதிரி.. மாசுமறு வில்லாத களிப்பு.. எனக்கும் பதின்மூன்று வயது”

    அவன் என்னவானான்? ஏமனுக்கோ துபாய்க்கோ தினாரோ ரியாலோ சம்பாதிக்கப் போய் விட்டானா…
    பிரீதாவே தொடர்ந்தாள்.

    “ஒரு நாள் என் கண்ணெதிரில்.. நான் பார்த்துக் கொண்டு நிற்கும்போதே அந்த பிரபாகர் செருதுருத்தியில் ஓடும் பாரதப்புழா நதியில் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டான்.. நாலாவது மைலில் அவன் பிரேதம் மறுநாள் கண்டுபிடிக்கப்பட்டது.”

    சமையலறையில் ஒரு டப்பா உருண்டது. பூனையோ! பிரீதா அசையவில்லை.
    “சிவா… அதுதான் என் வாழ்வில் நான் சந்தித்த முதலாவது மரணம்!”
    வெண்டிலேட்டர் மீது வெய்யில் தாளாமல் வந்து உட்கார்ந்த இரண்டு சிட்டுக் குருவிகள் கீச்சிட்டன.

    “உன்னைப் பார்க்கும் போது பிரபாகர் ஞாபகம் வருகிறது. உன் மாதிரியே, அவனும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்பான். ராஜவம்சம், அவன் முழுப் பெயர் ஆனப்பாலம் பிரபாகர வர்மா”
    இதை ஏன் சொல்கிறாள்? இன்று.. இந்த வேளையில்…

    “மாத்ருபூமியில் அவன் எழுதிய முதல் கவிதை பிரசுரமாகியிருந்தது… ஆனால்…”
    “ஆனால் என்ன?”

    “அது அவன் மறைந்த பத்தாம் நாள்தான் அந்தப் பத்திரிகையில் பிரசுரமாயிற்று”
    சிவா அவள் கண்களில் நீர் துளிர்த்ததைப் பார்த்து தலை கவிழ்ந்தான்.
    “அப்புறம் மரணம் அடுத்தடுத்து வந்து முகம் காட்டி விட்டுப் போயிற்று. அம்மா.. தம்பி.. அக்கா… ஒவ்வொருவராய் சட்டுச் சட்டென்று மறைந்து போனார்கள்… ஐம் ஸாரி…” அவள் முகத்தைத் துடைத்துக் கொண்டே புன்முறுவல் செய்தாள்.
    “ஏன்?”

    “என்னவோ பேசிக்கிட்டே போய் உன்னை வருத்தப்படுத்திட்டேன். ஒரு சந்தோஷத்தை நாம் கொண்டாட வேண்டிய சந்தர்ப்பத்திலே இதைச் சொல்லறேன்…”
    “இட்ஸ் ஆல் ரைட்”
    “தாமுவுக்குத் தெரியுமோ?…
    “இல்லே”

    “ரொம்ப சந்தோஷப்படுவார்”
    “ஆமாம்”
    “சாப்பிடு”
    “மதனபள்ளியிலிருந்து தந்தி வந்தது. ஊருக்குப் போயிருக்கார். அப்பா ஸீரியஸாம்…”

    “அறியாம், போன் செய்து”
    அவன் முந்திப் பருப்பைத் தின்று முடித்துக் கையலம்ப எழுந்தான். அறை மூலையிலிருந்த வாஷ் பேஸினைக் காட்டினாள் பிரீதா.

    பேஸின் அருகே சின்ன நாப்கின் தொங்கியது. கழுவியதும் கை துடைத்து கொண்டான்.
    “வீடு ரொம்பத் துப்புரவா இருக்கு. பர்ஃபெக்ட்லி க்ளீன்.”
    அவள் நாணத்தோடு சிரித்தாள்.

    “தாங்க்யூ”
    நாற்காலியில் அவன் வந்து உட்கார்ந்தான்.
    “சிவா… இனி வேலை தேட வேண்டாம். எழுதணும். அற்புதமாய்… உன்னதமாய் எழுதணும்.”

    அவன் அவளை வரம் வழங்கும் தேவதையைப் பார்ப்பது போல் நோக்கினான்.
    “ஜீவிதம் அநித்தியமாணு. ஒவ்வொரு நிமிஷமும் அநித்தியமாணு.”
    அழகும் ஆரோக்கியமும் இளமையும் பொலிந்து நின்ற அவளிடமிருந்து இந்த வாக்கு வருவது அதிசயமாக இருந்தது.

    அவன் பிரீதாவையே உற்றுப் பார்த்தான். அவள் மலையாளத்தில் சொல்லிக் கொண்டே போனாள்.
    “ஆனால் இந்த வாழ்க்கையின் மீது நீ நேசம் வைத்தால் அது நிலைத்து நிற்கும். அதற்கு அர்த்தமுண்டு. இந்த ஜனங்கள் மீது நீ அன்பு வைத்தால் நீ காவியங்களைப் படைக்கலாம்…”

    சிவாவின் கண்களுக்குள் ஊடுருவியது போன்று அவள் பேசினாள்.
    “ஆனா அந்த அன்பு பரிசுத்தமா இருக்கணும். லவ் ஃபர் லவ் ஸேக்”

    சிவாவுக்கு இன்னும் சற்று நேரம் அங்கே உட்கார்ந்திருக்க வேண்டும் போல் தோன்றிற்று. ஆனால் அதிக நேரம் இருந்து விட்டோம் என்று நினைத்தான். உடனே விடை பெற்றுக் கொண்டான்.

    Share
  • நிதர்சனம்

    —சரஸ்வதி ராஜேந்திரன்.

    வெளியூரிலிருந்து திரும்பி வந்த குடும்பத்தினர் வீடு திறந்து கிடப்பதைக் கண்டு பதறினர்.

    மகன் ஒருபக்கம், மகளொருபக்கம், தந்தை ஒரு பக்கம் என ஓடியதைக்கண்ட தாய்,
    “ச்சே … என்ன ஒரு சுய நலம்… அதது பொருட்களை பார்க்க ஓடுதுகள்” என அலுத்துக்கொண்டே தன் பீரோவை செக் பண்ணினாள்.

    நல்லவேளை என் லேப்டாப் இருக்கு என்றாள் மகள்.
    நல்ல வேளை என் பாஸ்போர்ட், விசா இருக்கு என்றான் மகன் .
    நல்லவேளை என் ஏ.டி.எம். கார்டு இருக்கு என்றார் தந்தை.

    முன் ஜாக்கிரதையா நகை, பண த்தையெல்லாம் லாக்கரில் வைத்தது நல்லதாப் போச்சு என்று சொன்ன அப்பா அம்மாவைக் கேட்டார், “உன்னுது ஏதாவதுபோச்சா?”

    “ஆமாம், மேஜையில் இருந்த டைஜின் மாத்திரை அட்டையைக் காணோம்”

    “அப்பா, எதற்கும் நம்ம ஏரியா போலீஸ்கிட்ட சொல்லிவைக்கலாமா?”என்று மகன் கேட்க …

    “வேண்டாம், இதைக் காரணம் காட்டிஅவர் தினமும் என்கிட்ட நூறு ரூபாய் கறக்கிறதுக்கா?” என்றார் அப்பா.

    Share
  • அவ்வளவுதான் விளக்கம்!

    நாகினி

     

    மனமது புரியவில்லை
    உண்மை மனிதமெது விளங்கவில்லை
    வெற்று வாய் வார்த்தை
    வெறுமை துயரதை துடைப்பதில்லை

    தன் நிலை புரியவில்லை
    குழம்பும் மனமது தெளியவில்லை
    மதியில் தெளிவு இருந்தும்
    விளம்பும் பொய்யதை கழற்றவில்லை

    தினம் தேடியும் கிடைக்கவில்லை
    பால்வெண்மை மனதினோர் உயிர்க்கவில்லை
    முகம் பார்த்து பேசிடுவோர்
    அகம் காண விழையவில்லை

    வானளக்கும் வாயோரத்திலில்லை
    அகங்குளிரும் அன்யோன்யம் எனுமுணர்வில்லை
    போலி முகமணியா மனிதமெது
    விளக்கம் தெளியும் விளக்கமில்லை!!

    … நாகினி

    Share
  • சிந்தனையில் சிகரம் தொடு!

    -ஆர். எஸ். கலா

    மண்ணில் போட்ட விதை
    அத்தனையும் முளை
    விடுவதில்லை

    முளையிட்ட விதை அத்தனையும்                   fruit tree
    பிழைப்பதும் இல்லை

    முளைத்த விதை அத்தனையும்
    விரிச்சமாவதும் இல்லை

    விரிச்சமான விதை அத்தனையும்
    பூத்துக் குலுங்கி காய்ப்பதுமில்லை

    காய்த்த  காய் அத்தனையும்
    கனியாவதும் இல்லை

    கனிந்த காய் அத்தனையும்
    புசிக்க உதவுவதும் இல்லை

    சுவைத்த கனியில் இருந்து
    கிடைத்த விதை அத்தனையும்
    மீன்டும் மண்ணில் புதைவதும்
    இல்லை

    குளம் குட்டை குப்பையில்
    பாதி, மீதி பாதையில் மிதி
    பட்டு உடைந்து வீணாகவே
    போகின்றது

    இச் சிறு விதையிலே
    இத்தனை ஏமாற்றங்கள்
    என்றால்…

    மனிதன் தன் வாழ்க்கையைக்
    கடக்கும்  ஒவ்வொரு நொடிப்
    பொழுதும்  எத்தனை ஏமாற்றங்களை
    அவன்  பார்க்க வேண்டி இருக்கும்

    அந்த ஏமாற்றமே அவனின்
    ஏற்றமான படி என்று துணிந்தால்
    விரைந்து விழும் வெற்றிக் கனி
    அவன் கையில்

    கல்லிலும் முளையிடும் விதை உண்டு
    மண்ணிலும் மடிந்து விடும்
    விதை உண்டு

    துணிந்து வெற்றி காணும் மனிதனும்
    உண்டு சோர்ந்து தோல்வி காணும்
    மனிதனும் உண்டு

    சிறு விதையில் விரிச்சம்  காணும்
    விதை போல் சிறந்த சிந்தனையில்
    வெற்றி காண முயற்சிசெய் மானிடனே!

     

    Share
  • திருப்புமுனைத் திருப்பதி!

    கோதை நாராயணன்

    அமர்க்கள 
    ஆரம்பம் எங்கள் 
    திருப்பதிப் பயணம்…!
    பெருமாளின் திருவடிப்                               balaji
    பெருமை உணர்ந்த 
    பரவசம் அனைவரிடமும்…!

    சந்திப்புகள் வந்தும் 
    சலிக்காமல் சென்ற ரயிலின் 
    வேகத்தை நட்பு கொண்டு 
    விவேகமாய் இறங்கியதும் 
    புரிந்தது தைரியத்தின் விலை…

    ஆவலாய்ப் பயணித்த எங்களின் 
    அடுத்த கட்டமோ அம்பாளை நோக்கி…
    என் தாய் திருவடி தேடிய யாவரும் 
    மெய் மறந்த அவ்வேளை,
    ரோஜா மணக்க 
    பட்டு ஜொலிக்க 
    தெய்வீகம் திணறச் செய்ய 
    அலங்காரத்தில் அம்சமாய் அம்பாள் 
    அன்பால் எங்களை ஆட்கொள்ள…
    பிரார்த்தனைக்கு வார்த்தையின்றித் தேடப் 
    பிள்ளையின் பசி அறியாத தாயாயென்ன ?
    இன்னும் 
    இனிமையாய் ரோஜா மணம் …!

    இன்முகமாய் நாங்கள்… 
    அவளின் கண்கள் பேசியதோ 
    பெருமாளைக் காணக் காத்திருந்த 
    பக்த கண்களோடு ரகசிய மொழி…

    அவளின் அருள் தித்திப்பில் 
    திகைப்பாய் நகர்ந்தோம் திருவடி காண…
    வகை வகையாய் வரிசைகள்…
    வான் முழுதும் கலந்த 
    என்பெருமாளின் அருள் சுகந்தம்…
    இடர்களை இடித்து 
    இன்பம் தரும் நம்பிகையொளி…

    ஆம்…தந்தார் தரிசனத்தை அமைதியாய்…
    மெய்சிலிர்க்கக் காணக் கண்கள் கோடி…
    சில்லென்று உணர்ந்த தருணம் 
    சிங்காரமாய் தெய்வமே…ஏழுமலையானே…ஸ்ரீனிவாசா…
    தங்க மேனியில் தணலாய் ஜொலிக்கக் 
    குவிந்த எங்கள் கரங்கள் 
    குறை தீர்ந்த திருப்தியில்…!

     

    Share
  • நாணயமானவளே…!

    -பிச்சினிக்காடு இளங்கோ

    நீ துணையிருந்தால்
    எனக்கு
    யானைபலம்

    அன்றாடம்
    எல்லாம் எளிதாகிவிடுகிறது                     one-rupee
    இல்லையேல் அரிதாகிவிடுகிறது

    துக்கம்கூடத்
    துக்கமாயில்லை

    கைகுலுக்கக் காத்திருக்கிறார்கள்
    இல்லையேல்
    கவனிக்கத் தவறிவிடுகிறார்கள்

    நீ இல்லாதபோதும்
    நிம்மதி இருக்கிறது
    கூட இருந்தால்
    அது கூடிவிடுகிறது

    நீ இல்லாதபோதும்
    எனக்கு
    முகவரியிருக்கிறது

    என் முகவரி
    என்னால் வந்தது
    அதன் ஒவ்வொரு
    அங்குல உயர்விற்கும்
    நானே காரணம்

    எனினும் என்னுடன்
    நீயும் இருந்துவிட்டால்
    பிறரைத்தேட வைக்கிறது

    இதுவரை
    என்னிடமிருந்தாலும்
    என்னிடம் வந்தாலும்
    உனக்குப் பெருமை
    இனி
    உன்னால் எனக்கும்பெருமை

    வாழ்க்கை
    பொருளுடையதாய் விளங்க
    நீதான் அடிப்படை

    நீயா நானா
    என்பதைவிட
    நீயும் நானும்
    சேர்ந்திருப்பதே
    தேவையானது
    நியாயமானது
    நாணயமானது

    நாணயமான
    வாழ்க்கைதானே
    நாகரீகமானது?

     

    Share
  • நினைக்கத் தெரியாத மனமே

    – ரா.பார்த்தசாரதி.

     

    ராகவன் மும்பையில் உள்ள ஒரு பெரிய நிறுவனத்தின் பொது மேலாளர். அவருக்கும் அவர் பிள்ளைக்கும் வலது கையில் ஆறு விரல்கள். அவருக்கு அதிர்ஷ்டமாகவே எல்லாம் நடந்தது. அவர் பிள்ளை முரளி இவருக்கு நேர்மாறாக ஓர் ஊதாரி. ஒரே பிள்ளையாக இருந்ததால் அவன் அம்மா நிர்மலா அவனுக்குச் செல்லம் கொடுத்து, கணவனுக்குத் தெரியாமல் பணம் கொடுத்து அவனைக் கெடுத்தாள். ஒரு நாள் ராகவன் கோபமாக பேசிவிட, முரளி யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்தான். ஒரு கம்பெனியில் காப்பி, டீ சப்பிளையராக மூன்று வருடங்களாக வேலை செய்து அவனால் மும்பையில் கைவிடப்பட்ட வடநாட்டுப் பெண்ணிற்கும், தனது மகனிற்கும் மாதம் ஒரு சிறுதொகை அனுப்புவான். அவனுக்கு அவன் அம்மாவிடம் ரொம்ப பாசம். அவளை நினைக்காத நாள் இல்லை. ஆனாலும் வீட்டிற்கு நாள் கிழமையில் கூட செல்வதில்லை. வருடா வருடம் ஐய்யப்பன் கோவிலுக்கு மட்டும் போய்வருவான்.

    ஒரு நாள் ராகவன் சென்னையில் உள்ள தன் கம்பெனியின் இன்ஸ்பெக்க்ஷனுக்கு வந்தார். அவரது மேனேஜரும் அவருக்கு காப்பி வரவழைத்தார். காப்பியுடன் வந்தவன் முரளி. தாடியுடன் வந்த முரளியை ராகவனுக்கு அடையாளம் தெரியவில்லை. முரளி ராகவனுக்கு காப்பி கொடுக்கும் போது கை நடுங்கி அவரது காலில் கொட்டிவிட்டான். உடனே தனது கைகுட்டையால் அதைத்  துடைக்கும் போது ராகவன் அவனது கையில் இருந்த  ஆறாவது விரலை பார்த்துவிட்டார். உடன் இருந்த மேனேஜர் முரளியை முட்டாள் என்று திட்டி அன்றைக்கே வேலையை விட்டுப் போகச் சொன்னார்.

    தாடி இருந்ததால் முரளியை ராகவனுக்கு அடையாளம் தெரியாவிட்டாலும் மேனேஜர் முரளி என்று அவன் பெயரைச் சொல்லி திட்டியதால்அவனை தனது மகன் எனத் தீர்மானித்தார். ராகவன் மேனேஜரிடம் நல்ல டெஷிஷன் எடுத்திங்க அன்றார். பிறகு முரளியை தனிமையில் அழைத்து கம்பெனிக்கு வெளியே நிற்கச் சொன்னார். அவனை தனது காரில் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். ரூமிற்குச் சென்றதும் முரளி அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். அப்பா உங்களுக்கு காப்பி கொடுக்கும் போதே உங்க விரலை பார்த்தேன். ராகவனும் தானும் முரளி அவரது காலை துடைக்கும்போதே பார்த்துவிட்டதாகச் சொன்னார்.

    அன்று இரவே அவனை மும்பைக்கு அழைத்துச் சென்றார். முரளி அம்மா எப்படி இருக்கிறார்கள் என்று அவரிடம் கேட்டான். நீயே வந்து பார் என்றார் ராகவன் தனது மனதின் துக்கத்தை வெளிக்காட்டாமல். மும்பை சென்றதும் அம்மா என்று ஆசையுடன் அழைத்தவாறு உள்ளே நுழைந்த முரளி அதிர்ச்சி அடைந்தான். அவனது அம்மாவின் படத்திற்கு மாலை போடப்பட்டு இருந்தது. மிகவும் கண்கலங்கினான். கடைசி காலத்தில் என்னையும், உங்க அம்மாவையும் மதுமிதாதான் கவனித்தாள். நானும் என் மகளைப் போல அவளைப் பார்த்துக் கொள்கிறேன். மதுமிதாவின் பையனும் நல்லா படிக்கின்றான். அவன் நம்ம வீட்டில் சின்ன, சின்ன வேலை செய்கின்றான் என்றார். மது காப்பி கொண்டுவா என்று உள்நோக்கி குரல் கொடுத்தார். முரளி காபியுடன் வந்தவளைப் பார்த்ததும் அவன் மனைவியே அங்கிருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். ராகவனிடம் அப்பா மன்னித்து விடுங்க, இவள் உங்க மகள் இல்ல, மருமகள் என்றான். அத்துடன், இவளை என் மனம் ஒரு நாள் கூட நினைக்கத் தெரியாமல் இருந்து விட்டதே. எல்லாம் ஐய்யப்பன் அருள் என்று மனதில் நினைத்து கொண்டான்.

    Share
  • பள்ளி நினைவு!

    -றியாஸ் முஹமட்

    பாதி ராத்திரியில்
    பாதிக் கனவுகளோடு,
    எழுந்து விடுகிறேன்
    ஒரு
    பரதேசியாக….

    உடலில் ஒரு
    இறுக்கம்.
    மனதில் ஒரு
    ஏக்கம்…

    கண்டது
    கனவுதானே என்றதும்
    கண் கலங்கிப்
    போனேன்.

    கண்ட கனவு,
    பள்ளிக் கனவு.
    பனிக் கட்டியாக
    உறைந்து விடுகிறது
    என்னிதயம்.

    கலையாத கனவுடன்
    கனத்த இதயத்தோடு
    பள்ளி வளாகத்தில்
    நுழைந்து விடுகிறேன்.

    அதுதான்
    என் பள்ளி,
    ஓட்டமாவடி தேசியப்
    பள்ளி…

    புதிய கட்டிடங்களின்
    குறுகுறுப் பார்வை
    என்னை உரசி விளையாட,
    அடையாளம் கண்டு
    ஆரவாரத்தோடு,
    அணைத்துக் கொண்டது
    ஹிஜ்றா அரங்கும்,
    அஷ்ரப் மண்டபமும்.

    நுழைந்து விடுகிறேன்
    பள்ளி வளாகத்தில்.
    பள்ளி மண்ணை
    அள்ளித் தின்றேன்,
    பள்ளி அறையில்

    படுத்துப் புரண்டேன்,
    பள்ளித் தண்ணீரை
    வயிறு முட்டக்
    குடித்தேன்.

    தீர வில்லை
    அந்தத் தாகம்,
    தாங்க முடியவில்லை
    இந்தச் சோகம்.

    சிறிய மாணவர்கள்
    செய்யும் சிறு
    குறும்புகளை
    நான் செய்து
    பழைய மாணவன்
    என்பதை மறந்தே
    போனேன்…

    அன்றைய
    வகுப்பறைகள்தான்
    இன்றும்…
    கலர் மாறியதே
    தவிர
    உருவம் மாறவில்லை.

    நாங்கள் அடித்த
    பந்துகளின் தடமும்
    விட்ட ராக்கெட்டும்
    எழுதிய எழுத்தும்
    வரைந்த ஓவியங்களும்
    காதல் கதைகளும்
    அன்று போல்

    இன்றும்
    பேசிக் கொண்டுதான்
    இருக்கின்றன
    மெளனமாக
    அஜந்தா ஓவியங்களாக….

    கலங்கிப் போன
    என் கண்கள்.
    வகுப்பறையை
    மேய்ந்தது…
    என் மேசையைத்
    தேடுகின்றது…
    என் பெயர்
    அடையாளம்
    இடப்பட்ட மேசை
    இன்றும் இருக்கலாமோ
    என்று!

    அடங்காத
    ஆசையை
    அடக்க முடியாது
    தேட முற்படுகையில்
    அந்தப் பிஞ்சு
    மாணவ முகங்கள்
    சொல்லாமலே சொன்னது
    இது உங்கள்
    நேரமல்ல
    எங்கள் நேரம்
    என்று….

    கனத்த இதயத்தோடு
    வெளியே வர
    நாட்டிய மரங்கள்
    நடனமாட
    அதே வேப்பையும்
    பனையும்
    அங்கேயே இருக்க

    எங்கே
    போனார்கள் என்
    பள்ளி தோழர்கள்
    மட்டும்…?

    கலங்கிப் போன
    கண்கள் தேட
    நிஜத்தை நினைக்க
    இரத்த நாளங்கள்
    இறுக்கமாக…
    அமர்ந்து விடுகின்றேன்
    புதிய வகுப்பறையில்
    பழைய மாணவனாக!

    சிணுங்கி நிற்கும்
    சின்ன  மாணவனுக்கு
    எங்கே போய் – நான்
    வாங்கிக் கொடுப்பேன்
    சீனி மாமாவின்
    சீனி முட்டாசியும்
    சீவல், வடையும்!

    தாங்க முடியவில்லை
    இந்த வேதனை
    ஏன் இந்தச்
    சோதனை?

    நான் பிறக்க
    வேண்டும்
    என் தாயின்
    வயிற்றுக் கூடத்தில்
    அவள் (மீண்டும்)

    சேர்க்க வேண்டும்
    இதே என்
    பள்ளிக்கூடத்தில்!

     

    Share
  • அண்ணா!

    நாகினி

    images

    நடுத்தர குடும்பத்து நெசவாளர்
    நடராஜன் பங்காருஅம்மை பெற்ற மகவாளர்

    காஞ்சி தந்த பேச்சாளர்
    அண்ணா! திராவிட இயக்க மூச்சாளர்

    தமிழ் ஆங்கில எழுத்தாளர்
    மேடை நாடகப் புகழாளர்

    ராணி மங்கை மணவாளர்
    அண்ணா! அரசியல் வாழ்க்கைப் பயணாளர்..

    விடுதலை குடியரசு இதழாசிரியப் பொறுப்பாளர்
    திராவிட நாடு இதழ் தொடங்கிய மேலாளர்

    சுபப்பெலோஷிப் விருதுடன் யேல் பல்கலைக்கழகப் போற்றாளர்
    அண்ணா! மதராஸை தமிழ்நாடு ஆக்கிய பேற்றாளர்

    இறுதி ஊர்வலத்திலும் கின்னஸ் சாதனையாளர்
    அண்ணாசதுக்கத்தில் அஞ்சலிக்காகத் துயிலாளர்..

    அரசியல் இலக்கியம் இரு கண்ணாளர்
    அண்ணா! அடுக்குமொழி மேடைப்பேச்சின் மூச்சாளர்

    கடமை கண்ணியம் கட்டுப்பாட்டின் வித்தாளர்
    இருமொழிக் கொள்கையைச் சட்டமாக்கிய விந்தையாளர்

    அண்ணாநூற்றாண்டு நூலகம் உருவாக்கப் பெயராளர்
    அண்ணா! பல்நூற்றாண்டிற்கும் மறையாத புகழாளர்..!!

    .. நாகினி

    Share
  • பண்டரி தரிசனம்!

    கிரேசி மோகன்

    ஸ்ரீமத் பாண்டுரங்க பக்த விஜயம் வாசித்துக் கொண்டிருக்கிறேன்….வெண்பாவில் எழுத வழக்கம் போல் ஆசை வந்தது….காப்புச் செய்யுள் எழுதி கணபதியிடம் முடித்துத் தரும் பொறுப்பை விட்டு விட்டேன்….பார்க்கலாம் என்ன ஆகிறதென்று….

    images

    காப்புச் செய்யுள்
    ———————

    “பண்டரி நாதரின் பக்த விஜயத்தை,
    சுண்டெலி தாங்கும் சிவக்கொழுந்தே -விண்டுரைக்க
    வாராய் விநாயகா வாக்கில் அமர்ந்தெனக்கு
    தாராயுன் தம்பியின் தமிழ்”…..கிரேசி மோகன்…

    “வனிதை பதுமா வதியை வரித்து
    புனிதமண வாழ்வில் புகுந்தார்;-இனிதான
    பாரியா ளோடு பிணைந்தாலும், போக்கினார்
    பூரியானில் பூரித்து போது”

    “விரகதா பத்தால் வெயிலாய் தலையில்,
    கரகமாடும் சூட்டைக் குறைக்க, -உருகுமுந்தன்,
    பாதப் பனிமலரை ராதேவை” என்பதாய்
    கீதகோ விந்தக் கவி”

    “பதிவிரதா தர்மம் பழகிடும் பத்மா
    வதிவழி பாடு ,விரதம் -துதியென்று
    கஷ்டப் படாமலே கண்டாள் கணவனாய்,
    அஷ்டபதி நாயகனை அன்று”….

    —————————————————————————

    images (1)
    நாமடைதல் சிற்றின்பம் நாமாதல் பேரின்பம்
    நாமாதல் நாமடைய நாடுவீர் -நாமா
    வளிசொல்லி பண்டரி விட்டலனை வாழ்த்தி
    களிகொள் அடியார்தம் கூட்டு….

    இல்லா ததைத்துரத்தி செல்லா ததைச்சேர்த்து
    பொல்லா தவனென்ற பேர்வாங்கி -நில்லாது
    விட்டிலென மாயா வெளிச்சத்தில் வீழாது
    விட்டலிருள் வண்ணன்தாள் வீழ்.

    தொட்டால் சுடுவான் தொடாமல் இருப்போரை
    கொட்டோகொட் டென்று குளிர்விப்பான் -விட்டலன்
    சுட்டபழம் ஏற்பான் சுடாத பழங்களை
    பட்டறையில் வைப்பான் புதைத்து

    வாழை யடிவாழை வந்தோர் வளத்துடன்
    வாழ அடிவைப்பாய் வீட்டுக்குள் -ஏழை
    சகாயா ஏபாண்டு ரங்கா என்னுள்
    புகாயோ புகல்வாய் பதில்.

    வண்டரி யென்றரி யாமலே வந்திரு
    புண்டரி காட்ஷத்தைப் பார்க்கின்ற -பண்டரி
    விட்டலா செங்கலை விட்டுவா வெவ்வினை
    கொட்டுதே தேளாய்க் கடுத்து.

    சேணம் பிடித்தைவர் சேனை ஜெயித்திட
    வானத்து வைகுண்டம் விட்டகன்ற -ஓணத்தன்
    வாத புரீசன் வடமதுரா மன்னவன்
    கீதகோ விந்தந்தாள் காப்பு.

    “விட்டலை(விட்டு அலை) பாற்கடல், வீர மராத்தியர்
    கட்டளைக்கு கல்லேறி காத்திருக்கும்- விட்டலை,
    பாண்டுரங்க நாதனை, பண்டரி தேவனை
    வேண்டுவோர்க்கு வாழ்விலென்றும் WIT”….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    ”Gracy Krishna Bringing The Kingdom Of Heaven To Earth”….
    ————————————————————-

    crazy

    ”தராசில் அடியார்கள் தம்பாரம் தீர்க்கும்
    புரீசன் புவிபாரம் போக்க, -கிரேசியாய்(GRACYயாய்)
    வண்ணக் குழலூதி வாய்க்கெட்டும் தூரத்தில்,
    விண்மண் வசப்பட வைப்பு’’….கிரேசி மோகன்….

    Share
  • வ. விஜயபாஸ்கரனின் சமரன் களஞ்சியம் – ஆவணமாகிவிட்ட ஒரு அரசியல் இதழின் எளிய ஆரம்பங்கள்.

    வெங்கட் சாமிநாதன்

    சரஸ்வதி என்ற பெயரில் ஒரு இலக்கிய மாதப் பத்திரிகையை, சுமார் ஐந்து அல்லது ஆறுவருட காலம் 1956 – 1961) ஆசிரியப்பொறுப்புடன் நடத்தி வந்தவர் என்றே நான் அறிந்திருந்த, வ. விஜயபாஸ்கரன், 11.5.1962 லிருந்து 3.5.64 வரை இரண்டு ஆண்டுகள், சமரன் என்ற ஒரு அரசியல் இதழையும் நடத்தி வந்திருக்கிறார். சுமார் இரண்டு வருஷங்கள். தமிழக அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த கால கட்டம் அது. தமிழக அரசியலில் மாத்திரம் இல்லை. இந்திய அரசியலிலும் தான். இந்திய அரசியல் கட்சிகள் பெரும் சவால்களை எதிர்கொண்ட கால கட்டமும் அது. அவற்றின் நம்பிக்கை களுக்கும் , கொள்கைகளுக்கும் எழுந்த பெரும் சவால்கள் அவை. தேசீய தளத்திலும் சர்வ தேசீய தளத்திலுமான சவால்கள். தமிழக அரசியலிலோ எழுந்த சவால்கள் அதன் பண்பாட்டு, வரலாற்று, தார்மீக சவால்களாக அவை இருந்தன. இரண்டு தளங்களிலும் ஒரு பெரும் திருப்பு முனையாக முன்னின்ற கால கட்டம் அது.

    தேசீய தளத்தில் முன் நின்ற பெரும் சவால், சீன ஆக்கிரமிப்பும் அதன் வரலாற்றிலேயே பதிந்திருந்த ஏகாதிபத்ய முனைப்புகளும் கனவுகளும். இந்தியாவின் வெளிநாட்டு உறவுகளை தீர்மானிக்கும் நிபுணத்வமும் உலக வரலாற்று அறிவும் நிறைந்த பெட்டகமாக தன்னை நினைத்துக்கொண்டிருந்த நேருவுக்கு கிடைத்த பலத்த அடி. அதை சீனாவின் நயவஞ்சகமாக, துரோகமாக நேரு பிரகடனம் செய்தார். நேரு போன்ற சீனாவின் வரலாறு அறிந்த ஒரு தேசத்தை ஆளும் பொறுப்பேற்ற தலைவர்களுக்கு, அதன் ஏகாதிபத்ய குணங்களும் வல்லரசு ஆசைகளும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். ஏமாந்தது நேருதானே ஒழிய, சீனா நட்புத் துரோகம் செய்ததாக சொல்ல முடியாது. அது தன் வரலாற்றில் அனேக நூற்றாண்டுகளாக பதிந்திருந்த தன் தேசீய குணத்தின் படி செயல்பட்டது. எப்பொழுதெல்லாம் சீனா ஒன்றுபட்டதோ, அப்போதெல்லாம் அதன் ஆக்கிரமிப்பு குணம் வெளிப்படும். திபெத்தை விழுங்கியதிலிருந்து இன்று ஜப்பானிலிருந்து ஒரு பெரும் அரைவட்டமாக அஸ்ஸாம் வரை, பின்னும் நீண்டு லதாக் வரை அதன் ஆக்கிரமிப்பு 60 வருடங்களுக்கு மேலாக தொடர்வதைக் காணலாம். நேருவின் வரலாற்று அறிவுக்கும் வெளிநாட்டு உறவு பற்றிய பரிச்சயத்துக்கும் நேருவுடன் போட்டியிடாத, வல்லபாய் படேல், சைனா திபெத்தை ஆக்கிரமித்த அந்த ஆரம்ப கட்டத்திலேயே நேருவை எச்சரித்தும் அதை அலட்சிய செய்தவர் நேரு.

    சைனாவின் ஆக்கிரமிப்பும், அதன் வெளிக்கிளர்ந்த ஏகாதிபத்திய பேராசைகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பெரும் குழப்பத்தை உண்டாக்கியது. ஒரு வாய்ப்பாடாக அதற்கு கற்பிக்கப்பட்டிருந்த கொள்கை, ஒரு சோஷலிஸ நாட்டுக்கு ஆக்கிரமிப்பு உணர்வோ எண்ணங்கள் இருப்பது சாத்தியமே இல்லை. ஆக, சீனா ஒரு ஆக்கிரமிப்பு நாடல்ல. அது ஒரு நட்புணர்வு கொண்ட நாடு. என்று பிரசாரம் செய்தது இதைப் போன்ற ஒரு மடமையும் மூர்க்கத்தனமும் ராஜத்துவேஷமும் ஒன்று கலந்த ஒரு வெளிப்பாட்டையும் நடைமுறையையும் ஒரு அரசியல் கட்சியின் கொள்கை யாக எங்கும் காணமுடியுமா, என்றால், நாம் அன்று உலகெங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் காணமுடிந்திருக்கிறது.

    இந்த துரோக கோமாளித்தனத்தின் இன்னொரு உருவமாக, நேரு அமெரிக்காவுடன் அணி சேராது ரஷ்யாவுடன் நட்புணர்வை வளர்த்துகொண்ட காரணத்தால், ரஷ்யாவும் ஒரு புதிய வாய்ப்பாட்டை உருவாக்கிக் கொண்டது. சமயத்துக்கு ஏற்ப பேசுவது தானே ராஜதந்திரம்! ”சீனாவுடன் எங்கள் உறவு சகோதர உறவாக்கும்.. இந்தியாவுடனோ எங்கள் உறவு நட்புணர்வு” என்று ஒரு புதிய பிரகடனம் வந்தது ரஷ்யாவிடமிருந்து. ஆக, நேருவின் கண்ணையும் துடைத்தாயிற்று சீனாவுக்கும் ஓரக் கண்ணாலொரு கண் சிமிட்டலும் தந்தாயிற்று. (மார்க்ஸிஸம் ஒரு விஞ்ஞானம் – ஜ்யோதி பாசு) இந்த வாத பிரதி வாதங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் பிரதிபலித்தன.

    இந்நிலை கொஞ்ச காலம் நீடித்தது. அது வரை இந்திய கம்யுனிஸ்ட் கட்சிக்குள் வாக்கு வாதமே உள்நாட்டுச் சண்டையாக வளர்ந்து வந்தது. இந்த கால கட்டத்தில் தான் சமரன் இதழ் தொடங்கியது. அகில இந்திய தளத்தில் நடந்து வந்த கம்யூனிஸ்ட் கட்சியின் உட்கட்சி வாத விவாதங்களின் பாதிப்புகளை சமரன் இதழிலும் பார்க்கலாம். சமரன் ஒரு புறம் என்றால், தீக்கதிர் என்றொரு தமிழ் பத்திரிகை சமரனின் நிலைப்பாட்டை எதிர்த்து குரல் எழுப்பி வந்திருக்கிறது என்பதையும் அவ்வப்போது சில கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும், சீன ஆதரவுக் குரல் எழுப்பி வந்திருக்கிறார்கள் என்பதையும் சமரன் இதழில் காணலாம். இவர்கள் எல்லாம் பின்னர் பிரிந்து கம்யூனிஸ்ட் பார்ட்டி (மார்க்ஸிஸ்ட்) என்று தமக்கு பெயர் சூட்டிக்கொண்டனர். சீனாவுக்கு ரஷ்யாவுடனும் எல்லைத் தகராறு எழவே, (சீனா சகோதர நாடு, இந்தியா நட்பு நாடு என்ற வாய்ப்பாடும் ஒரு சோஷலிஸ நாடு என்றும் ஆக்கிரமிப்பு நாடாகாது என்ற வாய்ப்பாடும், கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே கூட அரசியல் செலாவணி இழந்து போயின, மறுக்கவில்லை. மௌனம் சாதித்தார்கள். அவ்வளவே.
    இவையெல்லாம் உலக தளத்திலும், அகில இந்திய தளத்திலும் நிகழும் நிகழ்ச்சிகளாயிற்றே, இதற்கு என்று தமிழில் ஒரு பத்திரிகை தொடங்குவானேன் என்றால், விஜய பாஸ்கரன், ஒரு சுதந்திர உணர்வோடு, சுய சிந்தனை கொண்ட போராளியாக, தமிழ் நாடு கம்யூனிஸ்ட் கட்சியுடன் உறவாடியவர். அந்த சித்தாந்தத்துடன் அவருக்கு ஒட்டுணர்வு உண்டு. சமரன் பத்திரிகை தொடங்கியது, அந்நாளைய தமிழக அரசியலில் தன் குரலை எழுப்பத்தான் என்றாலும், கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடக்கும் கொள்கைப் போரிலும் தன் குரலை பதியவேண்டியது முக்கியமாயிற்று. இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் சமரன் இதழ்களில் இவ்விரண்டு நிலைகளிலும் சமரனின் குரல் அழுத்தமாகப் பதிவாகியிருப்பதைப் பார்க்கலாம். அதில் பெரும் பகுதி அப்போது திராவிட முன்னேற்ற கழகத்தின் குரல், மற்ற எந்த அரசியல் கட்சியின் குரலை விட ஓங்கி ஒலிக்கத் தொடங்கிய காரணத்தால் அதையும் எதிர்த்து, குரல் எழுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. சொல்லப் போனால் தேர்தல் வரவிருக்கும் கட்டத்தில், திராவிட முன்னேற்ற கழகத்தை எதிர்த்து, குரல் எழுப்புவது தான் சமரனின் தலையாய கடமையும் ஆயிற்று.

    சரஸ்வதி என்று ஒரு வித்தியாசமான இலக்கிய மாத இதழை நடத்தி வந்தார். அது முதன் முறையாக, தமிழகத்திற்கும் இலங்கைத் தமிழருக்கும் ஒரு பாலமாக இருந்து, ஒரு சீரிய இலக்கிய தளத்தில் இரு நாட்டுத் தமிழ் இலக்கிய பரிமாற்றத்துக்கு வழி அமைத்திருந்தது. அதில் க.நா.சுப்பிரமணியத்தின் ”திருக்குறள் இலக்கியமல்ல” என்ற பிரகடனத்தையும் படிக்கலாம். சிதம்பர ரகுநாதன் சாகித்ய அகாடமியின் தமிழ் இலக்கிய பரிசுகளின் அவலத்தை எதிர்த்த கட்டுரையையும் படிக்கலாம். மௌனி வெகு கால இடைவெளிக்குப் பிறகு எழுதிய சிறுகதை ஒன்றையும் படிக்கலாம். அது கூட காணப் பொறுக்காத இலங்கை பேராசிரியர் ஏ. ஜெ. கனகரட்னா, மௌனி வழிபாடு என்று காலம் தாழ்த்தாது உடன் எழுதி அனுப்பிய கண்டனக் குரலுக்கும் அதில் இடம் இருந்தது. இப்படி இடது சாரி ஆதரவாளர் ஒருவர், எல்லோருக்கும் இடம் தந்து ஒரு பத்திரிகை நடத்துவதை எப்படி, எந்த நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியும் அங்கீகரிக்க முடியும்? அதுவும் தமிழ் நாட்டிலா? சுதந்திரமாக இயங்கும் ஒரு இலக்கிய பத்திரிகையைப் பொறுத்துக்கொள்ள முடியாத கட்சித் தலைவர், கம்பனையும் பாரதியையும் போற்றி தமிழ்நாடு முழுதும் முழக்கமிட்டுக்கொண்டிருந்த ஜீவாவாக இருந்தது ஒரு முரண் தான். சரஸ்வதி கடை மூட வைப்பதுதான் உடன் நடந்தது. ஜன சக்தி பிரஸ் சரஸ்வதியை அச்சிடாமல் தாமதம் செய்தது. சரஸ்வதி காலி செய்த இடத்தில், கட்சி சார்பில், ஜீவானந்தத்தின் ஆசியுடன், தாமரை என்று ஒரு புதிய பத்திரிகை வெளிவரத் தொடங்கியது. இது எங்கும் எந்த கம்யூனிஸ்ட் கட்சியிலும் நடப்பது தான். விஜய பாஸ்கரனின் சரஸ்வதி இதழை எப்படி ஜீவா ஆறு வருடங்கள் பொறுத்திருந்தார் என்னும் அதிசயம் தான் ஆராயச்சிக்கான விஷயம். இந்த தகவலையும் நாம் எந்த வம்புக்கும் சச்சரவுக்கும் போகாத நல்ல பிள்ளையாகவே எண்பத்து சொச்சம் ஆண்டுகள் வாழ்ந்த வல்லிக்கண்ணனிடமிருந்து தான் தெரிந்து கொள்ள முடிகிறது. சுவர் மேல் பூனையாக கண்மூடி சுகமாய்த் தியானித்து இருந்த அவர் தான் தன் வாழ்விலேயே முதல் தடவையாக கண் திறந்து பார்த்ததும், சுவரை விட்டு ஒரு பக்கமாக கீழே குதித்து, இதை வெளிக்கொணர்கிறார். எந்த கம்யூனிஸ்ட் கட்சி தொண்டரோ தலைவரோவும் அல்ல. நம்ப முடிகிறதா? ஆனால் நடந்திருக்கிறது. வல்லிக்கண்ணனுக்கு நம் நன்றி அரசியலிலும் சரி, இலக்கியத்திலும் சரி கோமாளிகள் இருக்கும் வரை விடம்பன நிகழ்வுகளுக்கு பஞ்சம் இருப்பதில்லை சரஸ்வதி மூச்சடைக்கப்பட்டதும், விஜய பாஸ்கரனுக்கு அன்றிருந்த அரசியல் சூழலில், தன் பார்வையிலான அரசியல் வெளிப்பாட்டுக்கு என்றே ஒரு இதழ் வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. சமரன் பிறந்தது. தமிழக அரசியல் களம் இதற்கு முன் என்றும் இல்லாதவாறு பல வேறு சக்திகளின் மோதல் தளமாக மாறியிருந்தது. அனேகமாக எல்லாம் சுயநலத்தையும் தன் தனிமனித அக்கறைகளையுமே, அரசியல் கொள்கைகளாக முன்னிறுத்திய தலைவர்களின், கட்சிகளின் மோதலாக அது இருந்தது.

    சமரன் பத்திரிகையின் இத்தொகுப்பைப் பார்க்கும் போது, தம்மை முற்றிலும் ஒரு அரசியல் கட்சிக்கு தொண்டனாக பாவித்துக் கொள்ளாதவர்களும் அரசியல் தவிர நவீன இலக்கியம், மாற்று சினிமா, கம்பன் போன்று வேறு சீரிய அக்கறைகள் கொண்டவர்களுமே அதிகம் எழுதி யிருக்கிறார்கள் என்று தெரிய வரும். ஜெயகாந்தன், வல்லிக்கண்ணன், எஸ் ராமகிருஷ்ணன். பின் ஆசிரியருக்குள்ள உரிமையில், தன் பெயரைக் குறிப்பிட்டும், குறிப்பிடாமலும், வ.விஜயபாஸ்கரனும், பின், பால தண்டாயுதம், தா. பாண்டியன் போன்ற கட்சி பிரமுகர்களையும் கூட சமரனின் பக்கங்களில் காணலாம்.

    ஒரு கால கட்ட அரசியல் நெருக்கடி, கம்யூனிஸ்ட் கட்சியில் வெடித்த கருத்து மோதல்கள், சீன, ரஷ்ய, விசுவாச மோதல்கள், கட்சி சார்ந்த நெருக்கடி என்பதற்கும் மேலாக, அம்மோதல்கள், இந்திய இறையான்மைக்கே, கட்சி விசுவாசம் தம் நாட்டுப் பற்றைக் கறைபடுத்தும் விசுவாசமாக மாறிவிடும் போது எழும் நெருக்கடிகள், இவற்றினிடையே கம்யூனிஸ்ட் கட்சியின் எந்த பிரிவுக்கும் தன்னை இழந்து விடாது, பொதுவான இடது சாரி சித்தாந்த ஈடுபாட்டையும் விடாது தன் சுயாதீனத்தையும் விடாது வாழ்வேண்டிய நிர்ப்பந்தத்தில் பிறந்தது சமரன் என்று தெரிகிறது. அந்த காலகட்டம் இன்னொரு பரிமாணத்தையும் பெற்றிருந்தது. அந்தப் பரிமாணம் தான் இப்போது தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.

    அது தமிழக அரசியலில் நிகழ்ந்து வந்த தீவிர குணமாற்றம். அது ஏதோ ஒரு பெரிய புரட்சிகர மாற்றமாக, பேசப்பட்டு வந்தது அதற்குக் காரணமானவர் களால். அதன் ஆரம்பங்களில் கடந்த நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில், அதன் பின் அதன் வளர்ச்சியின் போதும், அதை அலட்சியத்துடன் புறமொதுக்கி வந்தவர்கள், இந்த அலட்சியத்தாலேயே அது எவ்வித தீவிர எதிர்ப்பும் இன்றி வளர்ந்து பலம் பெற்று ஒரு தரங்கெட்ட இயக்கமாக தோற்றம் பெறத்தொடங்கியதும், விஷக் கிருமிகள் என்று வெளிப்படையாக அதன் குணத்தைச் சொன்னவர் பக்தவத்சலம் தான். அவர் சொல்லக் காரணம் அவர் அக்கிருமிகளின் நேரடித் தாக்குதலுக்கு ஆளான போதுதான். அப்போதும் அவர் கட்சி மாச்சரியத்தால் சொன்னதாகவே கருதப்பட்டது. தமிழ் நாட்டின் மற்ற அரசியல் தலைமைகள் அப்படிச் சொல்லவில்லை. பத்திரிகைகள், புத்திஜீவிகள் அப்படிச் சொல்லவில்லை. இந்த அலட்சியத்தின் காரணமாக விஷக் கிருமிகள் என்று சரியாக கணிக்கப்பட்ட திராவிட இயக்கத்தினருக்கு ஒரு அரசியல் மதிப்பும், புத்தி ஜீவிகளின் ஒரு கணிசமான பகுதியினரிடையே மதிப்பும் ஏற்பட்டது. பெரும்பாலான பொது மக்களிடையே ஒரு வியப்பு. மாறுதலுக்கான ஒரு சாத்தியப்பாடு என்றும் ஒரு கருத்து நிலவியது. இது தான் ஒரு பரிதாபகரமான காட்சி. காரணம், என்றும் தமிழகத்தில் அறிவு ஜீவிகள் மத்தியில் நிலவும், என்ன ஆனாலும் தற்காப்பு யுக்தியாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும் குணம்.

    நான் திராவிட இயக்கத்தின் வாழ்வை என் பள்ளிப் பருவ காலத்திலிருந்து பார்த்து வருகிறேன். அதன் சிந்தனையும் செயலும், பேச்சும் எழுத்தும் தரங்கெட்டவை. அதன் பெரியார் என்று துதிக்கப்படும் தலைமையிலிருந்து அடிமட்ட தொண்டன் வரை, அண்ணாதுரை அங்கு நான் கணட ஒரே விதிவிலக்கு. அவர் பேச்சில் தான் அலங்காரமும், மென்மையும், நாகரீகமும் இருக்குமே தவிர அவர் சொல்லவரும் கருத்துக்கள் அவர் சார்ந்த இயக்கத்தினரின் தரம் மீறீயதில்லை. இதைக் கேள்வி கேட்டவர் அப்போது யாருமில்லை. காரணம் அவரது மென்மையான சுபாவம். தளபதியிலிருந்து, அறிஞராகி, பின்னர் பேரறிஞருமாகி பெற்ற ஒளிவட்டம். இதற்கும் மேல்,

    காரணங்கள் என்று நான் கருதுவது ”நமக்கேன் வம்பு நாகரீகமற்றுப் பேசும் இவர்களிடம் இன்னும் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டுமா? என்று வாய் பொத்தி இருக்கும் சுபாவம். பின் காற்று எப்படி வீசுமோ, அதற்கு ஏற்ப நடந்து கொள்ளலாம் என்ற குணம். இது தமிழ்க் குணம் என்றே சொல்லக் கூடும் அளவு எல்லாத் தளங்களிலும் காணக் கிடைப்பது. ஒரு அலட்சியம் ”இவங்களையெல்லாம் மதிக்கணுமா என்ன?” எனறு மூக்கு வானை நோக்கும். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
    இந்த சுபாவங்களுக்கு திராவிட இயக்கத்தினரும், தொண்டனிலிருந்து தலைமைகள் வரை, விலக்கல்ல. சந்தர்ப்பத்திற்கேற்ப இவர்கள் காலில் விழும் வேகம் தீவிரமடையும். சடேரென்று மூக்கு தரையைத் தொடும். குனியும் முதுகின் வளைவும் இன்னமும் குறுகும். தலை அவர்கள் பாதத்தைத் தொடும். இது நெடுங்காலப் பயிற்சியில் கிட்டிய சௌபாக்கியம். .

    மிக மிக தரங்கெட்ட அரசியல் சம்வாதம், வாழ்க்கை இவர்களது. ஆயினும், எதிர்ப்பே இல்லாத காரணத்தால், தடையில்லாத வளர்ச்சி பெற்றவர்கள் திராவிட இயக்கத்தினர். காட்டு விளைச்சல் இது.

    இதன் ஆரம்பங்களைப் பற்றியோ, பின் வந்த வருடங்களில் இவர்களது அரசியல் வாழ்க்கையின் குணம் பற்றியோ இன்றைய தலைமுறை யினருக்கும் சற்று மூத்த தலைமுறையினருக்கும் ஏதும் தெரியாது அது பற்றி தெரிந்து கொள்ள முயல்பவர்களுக்கு அன்றைய பத்திரிகைகள் ஏதும் சொல்லாது. இவர்களது அன்றைய மேடைப் பேச்சின் தரம் பற்றிச் சொல்லும் பத்திரிகைகளோ, அன்றைய விமர்சனங்கள் கொண்ட எழுத்துக்களோ ஏதும் கிடைக்காது. அது பற்றித் தேடச் சென்றால், இவர்கள் தம்மையே புகழ்ந்து எழுதிக்கொள்ளும் பண்பை வளர்த்துக் கொண்ட இயக்கத்தினரின் பத்திரிகைகள் தான் கிடைக்கும். இது தமிழ் நாட்டின் அறிவு ஜீவிகளின் நிலை. என் பள்ளிப் பருவத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் ரமணர் வெகு நாட்கள் நோய்வாய்ப்பட்டு இறந்தார். இது பற்றி விடுதலை பத்திரிகை எழுதுகிறது. “அவாள் பகவான் புழுத்துச் செத்தார்” என்று. இக் கீழ்த்தர வெறுப்பு உமிழும் மன நிலை கொண்ட இயக்கம் என்றோ, இது பற்றியோ விடுதலை தவிர வேறு எந்த தமிழ்ப் பத்திரிகையிலும் செய்தி இராது. இது ஒரு சிலரின் நினைவில் தான் இருக்குமே தவிர பரவலாக அச்சில் காணமுடியாத.என் நினைவிலிருந்து இதை எழுதுகிறேன். ரமணர் திராவிட கழகங்களின் அரசியலையோ அதன் தலைமைகளையோ எவ்விதத்திலும் பாதித்ததாகவோ அது பற்றி அவர் கவலைப்பட்டதாகவோ ஏதும் இல்லை. விடுதலை பத்திரிகைக்கு அவரிடம் இவ்வளவு வன்மம் இருக்கக் காரணம் அவர் பிராமணர், எங்கோ ஒரு மூலையில் ஒதுங்கி யிருந்த போதிலும் அவர் காலத்தில் அவர் தனித்த ஆஸ்ரம வாழ்க்கையை மீறி அவர் தமிழக எல்லையையும் மீறி புகழ் பெற்று விட்டது கண்ட வெறுப்புதான் இத்தகைய கீழ்த்தர வெளிப்பாடாகியுள்ளது. இந்த அறிவுக்கு ஏலாத மனப்போக்கு திராவிட ப்ராண்ட் பகுத்தறிவு அரசியலுக்கு, அடித்தளமான ஒன்று. திராவிட அரசியலை ஆராயும் ஒருவருக்கு இந்த நிகழ்வின் சான்று எங்கு கிடைக்கும்? எந்த தமிழ் நாட்டு பத்திரிகையிலும் ஆங்கிலமோ தமிழோ எதிலும் கிடைக்காது. ஒன்று நாகரீகமற்றவர்களோடு விவகாரம் வைத்துக்கொள்ளக் கூடாது என்ற வாழ்க்கை நோக்கு. இரண்டு இது பற்றி எழுதவோ, பேசவோ தகுதியற்ற ஒரு நிகழ்வு இது என்ற பார்வை. இப்படி எத்தனையோ விஷயங்கள், நம் வாழ்க்கை தர்மங்களையும் தனிப்பட்ட ஒதுங்கி வாழும் நியதியிலும் இன்று நம் முன் பொன்னாடை போர்த்தி உலவும் தலைமைகளின் நேற்றைய படு பாதாள அவலங்கள் மறைக்கப்பட்டு, மறக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, இல்லாதனவாகிவிடுகின்றன. இந்த அவலங்கள் நிகழ்ந்த காலத்தில் அவை அவலங்கள் என உணர்த்தப்பட்டு, இன்று அவை பொன்னாடை போர்த்தி உலா வரும்போது, இது பொன்னாடை அல்ல, உள்ளிருப்பது அவலம் என்பது இன்று காணும்போதும் அது நிதர்சனமாக வேண்டும்

    இத்தகைய பதிவுகளை, அன்று ஒரு அரசியல் போராட்டத்தின் நிர்ப்பந்தமாக சமரன் பத்திரிகை தன் பக்கங்களில் தந்திருந்த பதிலடிகளில் காணலாம். ஆனால் அவை வெளிவந்த அன்றோடு பலசரக்குக் கடைகளில் பொட்டலமாக மடிக்கப்பட்டு காலத்தில் கரைந்திருக்க்கும். அவையெல்லாம் இன்று தொகுக்கப்பட்டு இன்று மறு ஜீவனம் பெற்று நமக்குத் தரப்படும் போது, தான் நினைத்த போதெல்லாம் குல்லுக பட்டர் என்று கேலிசெய்த ஒரு தலைவரை இன்று அரசியல் சாணக்கியர் என்று தானும், தன் தலைவர் அறிஞர் அண்ணாவும், தன் கட்சித் தொண்டர்களும் போற்றிப் புகழ வேண்டி யிருக்கிறதே. இதை என்ன முரசொலி பத்திரிகையிலா காணமுடியும்? பதிவாகியிருக்கிறதா என்று தேடினாலும் அது கிடைக்காது. அந்த சரித்திரத்தைப் பற்றியெல்லாம், எதைச் சொல்லலாம், எதை மறைக்கலாம், எதை புதிதாக கற்பித்து இன்றைய தேவைக்கு உருவாக்கலாம் என்பதை தலைவரே தீர்மானித்து தன் வரலாற்றை எழுதித் தருவார். அது தான் அதிகார பூர்வமானது. மற்றதெல்லாம் கைபர் கணவாய் வழி வந்த பார்ப்பன சதி வேலைகள்.

    சமரன் வெளிவந்த அந்த கால கட்டத்தில் தான், திமுக பதவி வேட்டையாடத் தொடங்கிய காலம். முதலில் முனிசிபல் பதவிகள். பதவி வேட்டையில் தன் தந்திரோபாயங்களை, அதன் பலன்களை அனுபவிக்கக் கற்கத் தொடங்கிய காலம். அப்போது மிகப் பிரபலமான மந்திர வாக்கியம் திமுகவுக்கே ப்ராண்ட் ஆகிப்போன மந்திர வாக்கியம்” காட்டுவதைக் காட்டி, பெறுவதைப் பெற்ற” யுத்த தந்திரம். இப்படிச் சூளுரைத்து வெற்றியும் பெற்றவர். அண்ணாதுரை யின் பாராட்டையும் பெற்றவர் திருக்குவளைக் காரர்.க் இந்த அசாத்திய வீரச் செயலுக்காகவே அண்ணாதுரை ஒரு மோதிரமும் பரிசளித்தார் என்று சொல்லப்பட்டது. அது கருணாநிதியே வாங்கி அண்ணவிடம் கொடுத்து மேடையில் சூட்டிக்கொண்டது என்று பலர் சொல்லியிருக்கிறார்கள். “கருணாநிதியே வாங்கி” என்பதில் தான் சந்தேகம் வருகிறது.

    ஆக, அன்று தொடங்கியது தான் ஒரு மரபாக, வாழையடி வாழையாக இன்றும் தொடர்ந்து காப்பாற்றப்படுகிறது. 2-ஜி, கலைஞர் டிவி-க்கு 200 கோடி என்று. இடைபட்ட காலங்களில் அது சர்க்காரியா கமிஷன் என்றெல்லாம் பெயர் பெறும். அது ஒரு நீண்ட தொடர்ந்த இடைவெளி இல்லாத வரலாறு. இதையெல்லாம் முரசொலியிலோ, “உடன் பிறப்பே” கடிதங்களிலோ காணமுடியாது. அது வேற்று மொழியில் வந்திருந்தாலும் வந்திருக்கலாம். வேற்று மொழியில் என்றால்….அது சமயத்துக்கு, அவ்வப்போதைய பதவி வேட்கைக்கு ஏற்ப, தற்காப்புக்கு ஏற்ப மொழி மாற்றம் பெறும்.
    சமரன் இதழ் மேற்கோள் காட்டும் ஒரு முரசொலி துணுக்கு:

    கேள்வி: நாட்டுப் பிரிவினையைத் தடுக்கும் சட்டம் வந்தால் தி.மு.கழகம் தன் விடுதலைக் கொள்கையை விட்டு விடுமா?
    பதில்: வரப் போகிற சட்டம் இராணுவ பலத்தோடு வந்தாலும் சரி, பீரங்கி சகிதம் வந்தாலும் சரி, அணுகுண்டுகளை மடியில் கட்டிக்கொண்டு வந்தாலும் சரி, எங்கள் குடும்பங்கள், குழந்தை குட்டிகள் கூண்டோடு அழிய நேரிட்டாலும் சரி, “திராவிட நாடு திராவிடருக்கே” என்ற முழக்கத்தை, வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி,ஊருக்கு ஊர் ஒலித்தே தீருவோம்.
    கேள்வி: கட்சியைத் தடை செய்தால் எத்தனை பேர் சிறை செல்லக் கூடும்?

    பதில்: அப்படிக் கேட்காதே. எத்தனை சிறைச் சாலைகள் புதிதாகக் கட்ட வேண்டியிருக்கும் என்று கேள்.

    முரசொலி 19.8.61

    எப்போதும் இவருக்கு கைவருவது தமிழ் சினிமாத்தனமான வீரவசனம் தான். 14 வயதில் தொடங்கியதாக மு.க. சொல்லும் கையெழுத்துப் பத்திரிகை தொடங்கி, குமாரி பராசக்தி, மந்திரி எல்லாம் கடந்து நேற்றைய முரசொலி யில் அவரே எழுதி பதில் சொல்லிக்கொள்ளும் கேள்வி பதில், பின் உடன் பிறப்புக்கு எழுதும் கடிதம் வரை.
    அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்ற வசனத்தின் இன்னொரு மொழி மாற்றம், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி. இதன் இன்னோரு வடிவம், “நேருவென் மகளே வருக, நிலையான ஆட்சி தருக”. இது தன் முதன் மந்திரி பதவியைக் காப்பாற்றிக்கொள்ள.காட்டுவதைக் காட்டி, பெறுவதைப் பெறும் மாமந்திரத்துக்கு கருணாநிதியின் இன்னொரு விளக்க உரையாகவும் கொள்ளலாம்.

    இந்த வீரவசனங்கள் கேலிப்பொருளாகியது சமரன் இருந்த காலகட்டத்தில் தான். இதற்கு சில வருடங்க்ள் சற்று முன்னும், சிலவருடங்கள் பின்னும். சமரன் இன்னம் சற்றுக்காலம் முன்னர் தோன்றி, இன்னம் சற்றுக்காலம் 1965-க்கு பின்னரும் நீடித்திருந்தால் இந்த திராவிட நாடு காமெடியும் முழுதாக பதிவாகியிருக்கும். இருப்பினும் அவ்வப்போது இத்தலைமைகள் வெளியிட்ட கருத்துக்கள் சமரனில் காணக் கிடைக்கும். முதலில் திராவிடர் யார்? திராவிட நாடு? எது என்பதை விளக்குவதிலேயே தவித்துப் போவது தெரிகிறது. இந்த கருத்துக்கள் எங்கேயோ பிறப்பெடுத்தவை. புழு குளவியான கதை தான். பதவி வேட்டையில் பிறந்த பொறாமையில் வெள்ளைக்காரனுக்கு அடிமை சேவகம். பிராமண துவேஷம். ஒதுக்கீடு. அடுத்து பிராமண துவேஷம் தந்த சுய மரியாதை இயக்கம்.. வெள்ளைக்காரனுக்கு சேவகம் செய்துகொண்டே சுயமரியாதையை காப்பது எப்படி? பிராமண எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு என்று வர்ணம் பூசப்பட்டது. பின்னர் நிறையப் படிதத வரலாறு தெரிந்த அண்ணாவின் வாக்கு வளமை பெரியாரை ஈர்க்க, திராவிட நாடு என்ற கருத்தும், கைபர் கணவாய் வழி ஆரியர் என்ற கோஷமும், சூத்திரர் எல்லாம் திராவிடர் என்றும், திராவிட நாடு என்ற கோஷமும் ஒரு சேர ஒரு மாநாட்டில் பிறந்தது பெரியாருக்கு பிராமணன் சூத்திரன் தான் தெரியும். அவர் எங்கே திராவிடனையும் கைபர் கணவாயையும் கண்டார்? அவருக்கு சென்னை மாகாணாம் தான் திராவிட நாடு. அதற்குத் தான் ஜின்னாவிடம் போனார். வெள்ளையனிடம் சென்னை மாகாணத்தை விட்டுப் போகாதே. ஆரிய வலையில் நாங்கள் விழுந்து விடுவோம். என்று சரணாகதி. மொழி வழி நாட்டின் சீரமைப்பு ஏற்பட்டதும், நான்கு திராவிட மொழி பேசும் பிரதேசங்கள் தான் திராவிட நாடு என்று சொன்னார் அண்ணா. (கால்ட் வெல்லுக்கு நன்றி) கேரளா, கர்நாடகா, ஆந்திராவுக்குத் தெரியாமலேயே திமுக திராவிட நாடு வரைபடம் வரைந்து கொண்டது, கோமாளித் தனம் இல்லையா? அன்றிலிருந்து இன்று வரை மற்ற திராவிடர்களுக்கு தமிக திராவிடர்களோடு சண்டை. காவிரி, முல்லைப் பெரியாறு கிருஷ்ணா நதி எல்லாம் நினைவுக்கு வரும். இந்த வரை படம் வரைந்த திமுக வுக்கே இதில் உடன்பாடு இல்லை. ராஜாஜி இந்த நான்கு மாநிலங்களையும் ஒன்றாக்கி தக்ஷிணபிரதேசம் என்று ஒன்றாக்கிவிடலாம் (இது தானே அன்ணா வரைந்த திராவிட நாடு!) என்று சொன்னதற்கு தீவிர எதிர்ப்பு “அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு” என்று கோஷமிட்டவர்களுக்கு அதில் இஷ்டமில்லை. காரணம் சொல்லவில்லை. கூத்து தானே.

    இப்படித்தான் திமுக வினதும், பெரியாரினதும் ஒவ்வொரு கோஷமும் பொய்மையில் தோய்ந்து ஊறியவை. கோஷம் சொல்வது ஒன்று. அதன் பின் சொல்லாது மறைக்கப்பட்டிருக்கும் அவர்களது ஆசை வேறாக இருக்கும்.1925 வரை ஈ.வே.ரா நாத்திகர் இல்லை. குடியரசு அலுவலகம் துவக்க விழாவில், பிறந்த நாளிலிருந்து நாத்திகராக இருந்த தாகச் சொல்லப்படும் பகுத்தறிவுப் பகலவன் பேசுகிறார்:”

    “இப்பத்திரிகாலயத்தை திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ சுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும். இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை என்றும் நிலை பெற, மற்ற பத்திரிகைகளிடமுள்ள குறையாதுமின்றிச் செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசிர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டிக்கொள்கிறேன்.” (திருப்பாதிரிப்புலியூர் ஞானிகள் மடம் ஸ்ரீல ஸ்ரீ சிவசண்முகம் மெய்ஞான சிவாச்சாரி சுவாமிகளின் ஆசீர்வாதத்தைத் தான் பெரியார் வேண்டுகிறார்.

    பிராமண வெறுப்பே சாதி ஒழிப்பாகக் கண்ட ஞானம் பிறந்தது எப்போது?

    பிட்டி தியாகராஜ செட்டியார் இறந்ததும் பெரியார் இரங்கல் எழுதுகிறார்”

    “”அரசியல் உலகில் அப்பெரியாருக்கும் எனக்கும் உள்ள வட துருவம், தென் துருவமெனில் அது குன்றக் கூறலாகும். நம் தமிழ் நாட்டின் தவப்பேற்றின் குறைவினால் பாப்பனர் அல்லாதார் கூட்டம் ஒன்று கண்டார். அத்தகைய கூட்டம் ஒன்று காணாது, காங்கிரஸ் வழி நின்று தேசத் தொண்டாற்ற வந்திருப்பாராயின், நமது நாட்டில் நிலமை இன்று வேறு விதமாகத் தோன்றும் என்பது எனது கொள்கை.”

    இதுவும் 1925 பெரியார். குடியரசு இதழில்.

    ஒரு சில இதழ்களுக்குப் பிறகு, முதல் பக்கத்தில் அச்சிடப்பட்டிருந்த பாரதியார் படமும் கவிதை வரிகளும் காணால் போயின. ஏன்? பெரியார் நாத்திகரானார். கடவுள் இல்லவே இல்லை என்று கண்டார். பார்ப்பனர் துவேஷத்துக்குரியவர் ஆயினர். அவர்க்ள் இன்னும் கைபர் கணவாய் வழி வரவில்லை. அதற்கு இன்ன்ம் கொஞ்ச் காலம் காத்திருக்க வேண்டும்.
    இந்தக் கூத்தெல்லாம் பகுத்தறிவுப் பகலவனதும், பேரறிஞர் அண்ணாதுரை யினதும் திமுகவின் பகுத்தறிவுகள் யாரும் அண்ணாவையோ, பெரியாரையோ கேள்வி கேட்டதில்லை. இந்தக் கூத்து என்றிலிருந்து? என்று.

    திமுக பிரிந்து தேர்தலில் நிற்பது என்று முடிவு செய்ததும், அவரை எதிர்த்து பிரசாரம் செய்தது பெரியார் தான். அவர் தேர்தலில் பிரசாரம் செய்தது பிராமண வேட்பாளருக்காக. திமுகவை எதிர்த்து.

    இந்தப் பெரியாரும், அண்ணாவும் தான், கருணாநிதி முதன் மந்திரியாக இருக்கும் போதெல்லாம் அவரை தூங்க விடுவதில்லை. தினம் கனவில் வந்து அவரது முடிவுகளுக்கெல்லாம் வழிகாட்டுவார்கள். இவரைப் பீடித்திருப்பதும் திராவிட கழக ப்ராண்ட் பகுத்தறிவு தான். இன்று வரை கோபால புரம் குடும்பத்தின் மூன்று தலைமுறையினர் யாரும் எது பற்றியும் பதட்டம் நேரும்போதெல்லாம் கோவிலுக்கு சென்று அம்மனை வேண்டிக்கொள்ளாது இருப்பதில்லை. அம்மன் எதுக்கு இருக்கா? வேட்பாளர் மனு பதிவு செய்ய, தேர்தலில் வெற்றி பெற, ஊழல் வழக்குகளிலிருந்து காப்பாற்ற, இதை விட வேறு என்ன வேலை அந்த அம்மனுக்கு? இது முரசொலியில் எங்காவது பதிவாகுமோ, இல்லை கேள்வி ஒன்றை தானா கேட்டு பதில் தந்திருப்பாரோ தெரியாது.

    ஆனால், இந்த இரண்டு சொச்சம் வருஷங்களில், சமரன் இருந்த காலத்தில், செய்திகளில் சிக்கும் விஷயங்கள் சமரனில் பதிவாகியுள்ளன. அவற்றைப் படிக்கும் போது முன்னும் பின்னுமான பல விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. ஆனால் சமீபத்திய இரண்டு தலைமுறையினருக்கு, இவை ஏதும் தெரிந்திராது. இன்று திமுக தலைமையின் சுய பிரதாப தலைமைகளும் இவற்றைப் பற்றிப் பேசாது. தொண்டர்களும் ஏதோ செவி வழி செய்தி கேட்டிருந்தாலும் வாய் திறக்க மாட்டார்கள்.

    அது பற்றியெல்லாம், அன்று பத்திரிகைகளோ,மற்ற கட்சித் தலைவர்களோ பேசாத விஷயங்களை சமரன் தான் பேசியது. ஆனால் அதற்கு முந்திய, பிந்திய விஷயங்களை யார் நினைவு கொள்வார்கள்? யாரும் பேசினால் யார் ஆமாம் என்று ஒத்துக்கொள்வார்கள்.

    பகுத்தறிவுப் பகலவன், சாதியை ஒழிக்க வந்த பெரியார், “இப்போ பறச்சிகள் எல்லாம் ரவிக்கை போட ஆரம்பிச்சுட்டாளுங்க. பின்னே துணிப்பஞ்சம் வராதாய்யா? என்று கேட்டதை எந்த கழக தலைமையோ தொண்டனோ கேள்வி கேட்பான். திருமாவலவன் கேட்பாரா? அன்று சமரன் இல்லை. மா.இளைய பெருமாள் பெரியாரிடம்,” கழிவறைகளை மனிதரே சுத்தம் செய்யும் அவலம் நீங்கவேண்டும்.” என்று சொல்ல “இவங்க தான் இதுநாள் வரைக்கு செஞ்சிட்டு வராங்க. இவங்க செய்யாட்டி வேறெ யார் செய்வாங்க. நீங்களே சொல்லுங்க” ன்னு பகுத்தறிவுப் பகலவன் பதில் சொன்னாராம்.

    “ஆச்சாரியார் என் நண்பர்தான்.ஆனா அவர் பாப்பானாச்சே. அவர் பாப்பானுக்கு நல்லது செய்வாரா, நமக்கு நல்லது செய்வாரா? என்று கேட்ட பகுத்தறிவுப் பகலவன், மணி அம்மையைக் கல்யாணம் செய்துகொள்ளும் தீர்மானத்தோடு, அந்த பாப்பானுக்கே சாதகமாகச் செயல்படும் ஆச்சாரியாரை ரகசியமாகப் போய் ஆலோசனை செய்வானேன்? யாரும் கேட்டார்களா? அண்ணா கேட்டார். ஏன் அவரிடம் போனீர்கள்? என்று கேட்கவில்லை. என்ன பேசினீர்கள்? என்று தான் கெட்டார். அடுத்து சில வருஷங்களில், அண்ணாவே குல்லுக பட்டர், மூதறிஞர், அரசியல் சாணக்கியர் என்று மாறி மாறி பட்டங்கள் கொடுக்கப்படும் ஆச்சாரியரோடு அணி சேர விருந்தார். யாரும் திமுக வில் இந்த சரணாகதி ஏன் என்று கேட்டார்களா? திமுக வை விடுங்கள். ஹிந்து, சுதேசமித்திரன், முரசொலி?

    சரி, கட்சிப் பணத்துக்குத் தான் ஏற்பாடு, கல்யாண ஆசை இல்லை என்றால், 26 வயசுப் பெண்ணை 70 வயசு கணவனாக நீங்கள் மணம் செய்து, அவளது அப்பருவ வாழ்க்கையைக் கெடுக்கிறீர்களே? நீங்கள் பேசிய பெண்ணுரிமை என்ன ஆகிறது? ஈரோட்டில் நீங்கள் விளையாடிய பால்ய கால விளையாட்டையெல்லாம் நினைத்துப் பாருங்கள். உங்களுக்கு ஒரு நியாயம், மணி அம்மைக்கு ஒரு நியாயமா?” என்று கருணாநிதி கேட்கலாமல்லவா? கேட்க வில்லை.இதுபற்றி யாருக்கும் அன்று கவலை எழவே இல்லை. அவர்கள் எதிர்ப்பு எல்லாம் திராவிட இயக்கம் என்னாவது? என்று தான். இழந்த அந்தப் பதவியைப் பெறத் தானே திமுக என்று ஒரு தனிக்கட்சி. அவர்கள் தான் தனியாகப் போய்விட்டார்கள். பெரியாரையே அண்டியிருந்த வீரமணி ஏன் கேட்கவில்லை?

    இந்தக் கட்டத்தில் அண்ணாவிடம் கொண்ட கோபம், அன்ணா தன்னைக் கொல்ல சதி செய்தார் என்ற பழி வேறு. இதை தாங்க முடியாத அண்ணா வழக்குத் தொடுக்க, பெரியார்,பகுத்தறிவுப் பகலவன் மன்னிப்புக் கேட்டு தன் பழியை வாபஸ் பெற்றார் என்பதை எந்த திக, திமுக, ஒப்புக் கொள்ளும்?

    இந்தப் பெரியார் கருணாநிதியின் கனவில் அடிக்கடி வந்த காரணத்தாலோ என்னவோ, வை. கோ பேரிலும் தன்னை கொல்ல சதி செய்ததாகவோ என்னவோ ஒரு கட்டத்தில், கருணாநிதி குற்றம் சாட்டினார். அவர் தான் எப்போதும் பெரியார் வழி நடப்பதாகச் சொல்பவராயிற்றே. அந்தந்த சமயத்துக்கேற்ப கருணாநிதிக்கு கற்பனைகள் நிறையப் பெருகும்.
    திமுக தேர்தலில் நின்றபோது, பாப்பானையே ஆதரித்து திமுகவுக்கு எதிராக பெரியார் பிரசாரம் செய்தது ஏன்? அன்று பெரியார் பேச்சில் எவ்வளவு ஆத்திரம், ஆத்திரத்தில் பிறந்த வசைகள். இதைப் போல ஒரு துரோகத்தை ஒரு பகுத்தறிவுப் பகலவன், ஒரு சாதி எதிர்ப்பாளன் செய்யலாமா?

    இந்த மாதிரி குணமும் பொறாமையும் எரிச்சலும் பட்டு திராவிட இயக்கத்துக்கு எதிராக செயபட்ட, இந்த பெரியார் ஏன் கருணாநிதியின் கனவில் அடிக்கடி வந்து அரசுப் பணியில் தலையிடுகிறார்? அதை ஏன் கலைஞர் பக்தியோடு கேட்டுச் செயல்படுகிறார்.

    இதை யார் அக்காலங்களில் கேட்டார்கள்? கேட்பதில்லை. ஏன்? 1971 லிருந்து தமிழ் நாட்டில் இருந்த காங்கிரஸும் சரி, மற்ற சில்லரைக் கட்சிகளும் சரி, கம்யூனிஸ்ட்டுகளையும் சேர்த்து, திமுக, அல்லது அதிமுக வை அண்டியே வாய் பொத்தி,சிரம் தாழ்த்தி, சேவக வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். ஏதோ ஒருவரை மாறி மாறி சேவகம் புரிந்தார்கள். வாய் திறக்க மாட்டார்கள். காற்றோடு போகும் சொல்லே வெளிவராத போது, எழுத்திலா பதிவார்கள்? கட்சிகளும் சரி, பத்திரிகைகளும் சரி. இப்போது தான் எல்லோரும் வாய் திறக்க, எழுத கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

    மகா கேவலமான வாழ்க்கை. ஏதாவது தப்பித் தவறி, திருக்குவளைக் கலைஞரை, எந்த காங்கிரஸ்காரனாவது லேசாக விமர்சித்து விட்டாலும் சரி, அன்னை சோனியா, சொக்கத் தங்கம் சோனியா, மணிமேகலை சோனியா உடனே “கலைஞரைப் போய் பார்த்து அவரைச் சமாதானம் செய்யுங்கள் என்று ஒரு தாக்கீது அனுப்பிவிடுவார். இதற்கு சிதம்பரமோ, ஈ.வி.கே.எஸ் இளங்கோவனோ, தங்கபாலுவோ யாரும் விலக்கில்லை. பீட்டர் அல்ஃபான்ஸோ தான் அருகிலேயே தஞ்சம் அடைந்திருப்பவர். கவலை இல்லை. இம்மாதிரி தாக்கீது ஏதும் வராது பார்த்துக்கொள்வார். அவரது இதயத்தில் காமராஜ் இருந்த இடத்தில் அமர்ந்திருப்பது கலைஞர். இப்படி இருக்க எந்த காங்கிரஸ்காரர் எவ்வளவு அகங்காரத்தோடும், அநாகரீக மாகவும் கழகத்தினர் பேசினாலும், வாய் பொத்தி இருக்க பழக்கப்பட்டவர், எழுத்திலும் பேச்சிலுமா நடந்த சரித்திரத்தின் பதிவு இருக்க முடியும்?

    கம்யூனிஸ்டுகளே ஒரு சமயம் அதிமுக இன்னொரு சமயம் திமுக என்று அணிசேரவோ, இல்லை ராஜ்ய சபா சீட்டுக்கோ, இல்லை சட்ட மன்ற தொகுதிக்கோ என்று அருள் வேண்டி, அம்மையாரிடமோ, திருக்குவளைக்காரரிடமோ போய் காத்திருக்க வேண்டியிருந்தால்… என்ன செய்ய? மாறி மாறி இது எத்தனை தடவை நிகழ்ந்துள்ளது! கடந்த ஒரு தலைமுறை காலத்துக்கும் மேல் அவர்கள் மார்க்ஸையும், லெனினையும் மறந்து அதன் இடத்தில் திமுக/அதிமுக வுக்கு சேர்ந்திருக்கும் அணிக்கு ஏற்ப, அம்மையாரோ, கலைஞரோ வந்து அமர, சட்ட மன்றத்தில் கை தூக்குபவர்களாக, அல்லது வெளிநடப்பு செய்பவர்களாக ஆகிவிட்டார்கள். சுருக்கமாக, அவர்கள் சுயத்தை இழந்தாயிற்று. இப்போது கம்யூனிஸ்ட் தலைவர்கள் (இரண்டு பிரிவுகளிலும் யார் என்பது யாருக்காவது தெரியுமா? யாராவது கவலைப் படுகிறார்களா?) இப்போது ராஜா பெற்றிருக்கும் ராஜ்ய சபா அங்கத்தினர் பதவி, பிரகாஷ் காரத் சிபாரிஸோடு ராஜா ஜெயலலிதாவை சந்தித்து அவர் தந்த வோட்டில் பெற்றது.

    காமராஜர் இருந்த காலத்தில், கலைஞரின், அவர் அடிக்கடி, சொல்லி தம்மையே பாராட்டிக் கொள்ளும், நயத்தக்க நாகரீகமான மொழியில் “காமராஜரின் தோலை உரித்தால், நாலு மத்தளத்துக்கு ஆகும்” என்று பேசக்கேட்டவர் என் எழுத்தாள நண்பர். அதை அவர் தான் தன் எழுத்தில் பதிவு செய்திருக்கிறார். அத்தகைய பண்பாளரான, கலைஞர் தான், “காமராஜ், ஒரு சகாப்தம்” என்ற தன் நூலை வெளியிடத் தகுந்தவர்” என்று கோபண்ணா என்னும் காங்கிரஸ்காரர், கலைஞர் தலைமையில் வெளியிட்டு விழா நடந்தது. பதிலுக்கு கலைஞரும் கோபண்ணாவுக்கு விருது ஒன்று அளித்து அழகு பார்த்து மகிழ்ந்தார் இப்படி ஒரு சரித்திரம் இன்றைய காங்கிரஸுக்கு.

    மிகச் சிறந்த பேச்சாளராக கழகத்தார் கொண்டாடும், திமுகவின் இரண்டாம் படித்தலைவரான, துரை முருகன், திமுகவினருக்கே உரிய நயத்தக்க நாகரீக மொழியில், “இந்திரா அம்மையார் கலைஞரின் விதவை மறுவாழ்வுத்திட்டத்துக்கு மனுச்செய்துகொண்டால், அம்மனுவை கலைஞர் மனிதாபிமானத்தோடு கவனிப்பார்” என்று கருணாநிதி தலைமை தாங்கிய கூட்டத்திலேயே, அவரைத் தாஜா செய்யும் நோக்கத்தில் கருணாநிதி மனம் மகிழ அருகில் அமர்ந்து கேட்க, ஒரு யோசனை முன்வைத்தாராம். அவ்வப்போது இருவருக்குள்ளும் உரசல் வரும்போது, இப்படி ஏதாவது பேசி தாஜா செய்வது துரை முருகன் கையாளும் உத்தி.

    இப்படியான ஒரு கூட்டத்தினரிடமா, ஒவ்வொருவருடைய உண்மை வரலாறு பதிவாகும். நான் கழகத்தின் செயற்குழு கூட்டத்திலோ, அவர்களுக்குள் பேசிக்கொள்ளும் தனிப்பட்ட குலாவலிலோ, ஏன் சட்டமன்றத்தில், கருணாநிதி, மைக்கைத் தன் கைகளுக்குள் மூடிக்கொண்டோ பேசிய வற்றையோ இங்கு மேற்கோள் காட்டவில்லை. பத்திரிகைகளில் வந்தவை, அன்றன்று மறக்கப்பட்டவை, நினைவிலிருப்பவற்றைத் தான் எடுத்துச் சொல்கிறேன். அவற்றில் சில நான் என் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதிலும் இந்த ப்ராண்ட் நயத்தக்க நாகரீகம் பொங்கித் ததும்பும். அவற்றைச் சொல்வது சரியல்ல. சட்ட மன்றத்தில் நடந்த மகாபாரதக் காட்சி எல்லோரும் அறிந்தது.

    இன்று சுமார் ஒரு பத்து வருஷங்களாக, பத்திரிகைகள் முன்னர் இல்லாத சுதந்திர உணர்வு பெற்று எழுதுகின்றன. ஆனால் திராவிட கழகத்தின் தோற்றத்திலிருந்து, நடந்த அநாகரீகங்கள், சொல்லிலும் நடத்தையிலும், இன்றைய தலைமுறைக்குத் தெரியாது. அவர்கள் அறியவும் வாய்ப்பில்லை. பத்திரிகைகள், எதிர்க்கட்சிகள், ஒன்று அலட்சியப்படுத்தின. பின்னர் அவற்றின் இரைச்சல் அதிகமாக, இந்த சாக்கடையில் கல்லெறியத் தயங்கின. அடுத்த கட்டத்தில் இவை பலம் பெறவே, அந்த பலத்தைக் கண்டு பயந்தன.

    ஒரு சிலர் தமக்கு நல்லதாக, பாராட்டத் தக்கதாகப் பட்டதைப் பற்றி எழுதின. அப்போது இவை, பார்ப்பன ஏடுகளே பாராட்ட வேண்டியதாயிற்று”. என்று சொல்லப்படும். மாறாக, கண்டனமாக இருந்து விட்டாலோ, ”பார்ப்பன ஏடுகளுக்கு பாராட்ட மனம் எப்படி வரும்?” என்று சொல்லப்படும்.

    சமரன் இதழின் இத்தொகுப்பில், அன்றைய enfant terrible ஜெயகாந்தனின் எழுத்துக்கள் கணிசமாக உள்ளன., அனேகம் கருணாநிதியைப் பற்றியவை. அவை இந்த அரசியல் அநாகரீகத்தை, ஆபாசத்தைக் கண்டு எழும் தன் மனக்கொதிப்பை எவ்வளவு காட்டமாகக் கொட்டியிருக்கிறார் என்று சொல்லும். இளம் ரத்தம். “எந்தக் கொம்பனுக்கும்” நான் பயந்தவனில்லை என்றோ, என்னவோ அவர் அடிக்கடி சூளுரைப்பது வழக்கம் இது சமீப காலம் வரை உண்மையாகத் தான் இருந்தது. அக்காலத்தில் இப்படிப் பேசி யாரும் கால் கை சேதமடையாமல் வீடு திரும்ப முடியாது. அந்த நிலைகளுக்கு அவர் இரையானதும் உண்டு என்று சொல்லக் கேள்விப் படுகிறேன். ஆனால் இன்று, மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்கு அல்ல, நேரே கோபாலபுரத்துக்குத் தான் நன்றி சொல்ல விரைந்ததாகச் சொல்லப் பட்டது. இதையும் தாண்டி, மேடையில் கலைஞர் மனம் மகிழ புகழ் மழை பொழிகிறார் என்றும் பத்திரிகைகளில் படிக்கிறேன். எந்தக் கொம் பனுக்கும் .நான்……” என்று ஜெய காந்தன் அக்காலங்களில் பேசியது நினைவுக்கு வரலாம். இல்லையெனில் சமரனில் பதிவாகியிருப்பதைப் பார்த்து நினைவு படுத்திக்கொள்ளலாம். அது மகிழ்ச்சி தரும், கர்வம் கொள்ளத் தக்க கணங்களாக இராது. காலம் யாரையெல்லாம் என்ன அலங்கோலம் செய்து விடுகிறது!

    தமிழகம் அக்காலங்களில் தன் எதிர்ப்பைக் காட்டாததும், பதிவு செய்யாததும் எத்தகைய சீரழிவுக்கு காரணமாகியிருக்கிறது என்பது சமரன் தொகுப்பு நமக்குச் சொல்லும். இன்று அனேகமாக பத்திரிகைகள் அன்றைய பயத்தில் இல்லை. எழுதுகின்றன. ஆனால் கட்சிகளின் தலைமைகள் வாய் திறப்பதில்லை. மத்திய அரசுடன் ஏதோ கொடுக்கல் வாங்கல் பேரத்தில் எல்லாம் சிக்கியிருக்கின்றன. கட்சிகளும் தலைமைகளும்.

    எந்த சுதந்திரத்தை தலைமைகள் அன்றிலிருந்து இன்று வரை, பத்திரிகைகள் சமீப காலம் வரை இழந்திருக்கின்றன? அதன் பாதிப்புகள் என்ன? என்பதை, சுமார் இரண்டே வருஷங்கள் வாழ்ந்த சமரன் கொண்டிருந்த சுதந்திரத்தின் பதிவுகளை, இத்தொகுப்பு சொல்லும்.தன்னளவுக்கு தன் காலத்தில் கண்ட அளவுக்குச் சுட்டிக் காட்டும்.

    பேசவேண்டியதை, எழுத வேண்டியதைப் பேசுவதும், எழுதுவதும், பின் அவை காற்றோடு மறையாது பதிவு செய்வதும் அடுத்த தலைமுறைக்கு தருவதும் எவ்வளவு முக்கியமானது என்பது சமரன் தொகுப்பிலிருந்து தெரிய வரும்.

    இல்லையெனில் தம் உண்மையான கடந்த காலம் தெரியவராது தடுக்க, தாமே தம் வரலாற்றை தமக்குப் பிடித்த வகையில் பதிவு செய்து மகிழ்வார்கள். முரசொலியின் உடன் பிறப்பே கடிதங்களும், ஆத்திரம் தாங்காது புனைபெயரில் எழுதப்பட்டவையும் தொகுக்கப் பட்டால் எப்படி யிருக்கும்? எனக்குச் சட்டென்று நினைவுக்கு வருவது, ஜெயமோஹன், திராவிட இயக்கத் தலைமைகள் எழுதுவது எதுவும் இலக்கியமில்லை என்று சொன்னதற்கு, யாரும் பதில் தரவில்லை. மாறாக, முரசொலியில் யாரோ புனை பெயரில் “ நீ நாய் மலையாளத்து நரி, யானையிடமா மோதுகிறாய்… ? ரகத்து வசைகள் தான் பிறந்தன. புனை பெயரில் யார் எழுதியிருப்பார்கள்? இது வசையோடு போயிற்று. அக்காலங்களில் “ஆட்டோ” வீடு தேடி வரும் என்பார்கள்.

    சிலர் புத்தகங்களாக எழுதியிருக்கிறார்கள். மலர் மன்னன், பி. ராமமூர்த்தி, அரவிந்தன் நீலகண்டன், சுப்பு, ம. வெங்கடேசன் கே. சி. லக்ஷ்மி நாராயணன், பழ. கருப்பையா போன்றோர். (இப்போதைக்கு நினைவுக்கு வருபவர்கள்) எழுதியிருக்கிறார்கள். ஒப்பீட்டுக்கு கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி, ஆறு பாகங்களையும் படித்துக்கொள்ளலாம். இவற்றோடு, சமரன் போன்ற, தொகுப்புகளும் வருமாயின் நம்மை கண்விழிக்கச் செய்யும். மிக முக்கியமாக குடியரசு இதழ் தொகுப்பு பற்றி ஒரு அன்பர் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். அது இல்லையெனில் பெரியாரின் 1925 எழுத்துக்கள், பேச்சுக்கள் பற்றி எப்படி நான் அறிந்திருக்க முடியும். விடுதலையையும், முரசொலியையும் யாரும் தொகுக்க முயன்றால், அதற்கு எதிர்ப்பு அவர்களிடமிருந்தே வரும். அது தான் வரலாற்றுப் பதிவுகளின் பலம்.

    வெங்கட் சாமிநாதன்/14.2.2015.

    Share