Blog

  • திருப்பாவை – 30 | வங்கக் கடல்கடைந்த

    திருப்பாவை – 30 | வங்கக் கடல்கடைந்த

    திருப்பாவை – 30

    வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை
    திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
    அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்
    பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
    சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
    இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள்
    செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
    எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

    திருப்பாவை – 30 | வங்கக் கடல்கடைந்த | ஸ்வேதா குரலில்

    பாற்கடலைக் கடைந்த பரந்தாமனுக்காகத் தமிழ்ப் பாக்கடலைக் கடைந்து, திருப்பாவை எனும் அமுதம் தந்தவர் ஆண்டாள். தாமரைப் பூவிதழ்களால் பூமாலை தொடுத்து, அரங்கனுக்குச் சாற்றியவர் பட்டர்பிரான். இன்னமுதச் சொற்களால், பாசுரப் பாமாலை தொடுத்து, அரங்கன் உள்ளத்தில் இடம்பெற்றவர் கோதை.

    இந்தச் சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே பாடுவோர் எங்கும் என்றும் இன்புறுவர். செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமால், நம்மை என்றும் காக்கட்டும்.

    இந்த முப்பது பாடல்களையும் தம் இனிய குரலால் பாடிய செல்வி ஸ்வேதா அவர்களுக்கு என் சார்பிலும் வல்லமை வளர்தமிழ் மையத்தின் சார்பிலும் நன்றிகள், வாழ்த்துகள். தமிழ்கூறு நல்லுலகம், இவரைத் தக்க வகையில் பயன்படுத்த வேண்டும். திருப்பாவையின் இந்த நிறைவுப் பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேட்டு மகிழுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • படக்கவிதைப் போட்டி 292இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 292இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    வல்லமை வாசகர்கள், படைப்பாளர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    பொங்கட்டும் தைப்பொங்கல்!
    தங்கட்டும் மகிழ்வெங்கும்!

    *****

    கிளியேந்திய பெண்கொடியாய்க் காட்சிதரும் இந்தக் கயற்கண்ணாளின் கோலம், காண்போரின் கண்களுக்குக் காட்டிடுதே வர்ணஜாலம். இவ்வழகிய ஒளிப்படத்தின் சொந்தக்காரர் திரு. மாரியப்பன் கோவிந்தன். இப்படத்தை அவரின் ஒளிப்படத் தொகுப்பிலிருந்து தெரிந்தெடுத்து நமக்கு வழங்கியுள்ளார் திருமிகு. ராமலக்ஷ்மி. ஒளிப்பதிவாளர், தேர்வாளர் இருவர்க்கும் என் நன்றிகள் உரித்தாகுக!

    மீனாட்சியின் கோலம் புனைந்த இந்தப் பெண்ணைப் பார்க்கையில் மதுரை அரசாண்ட மீனாட்சியும் அவளைப் பாவில் ஆண்ட பாவலர் குமரகுருபரரும் நினைவுக்கு வருகின்றார்கள். ’மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்’ பாடி அந்த மீனாளிடம் முத்துமாலை பெற்றதல்லவா அவரின் அற்புதத் தமிழ்!

    அம்மையின் வருகைப் பருவத்தில் அவளை,

    தொடுக்கும் கடவுள் பழம்பாடல்
    தொடையின் பயனே நறைபழுத்த
    துறைத்தீந் தமிழின் ஒழுகுநறுஞ்
    சுவையே அகந்தைக் கிழங்கை அகழ்ந்து
    எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு
    ஏற்றும் விளக்கே வளர்சிமய
    இமயப் பொருப்பில் விளையாடும்
    இளமென் பிடியே எறிதரங்கம்
    உடுக்கும் புவனம் கடந்துநின்ற
    ஒருவன் திருவுள் ளத்தில்அழகு
    ஒழுக எழுதிப் பார்த்திருக்கும்
    உயிர் ஓவியமே மதுகரம்வாய்
    மடுக்கும் குழற்கா டேந்தும்இள
    வஞ்சிக் கொடியே வருகவே
    மலயத் துவசன் பெற்றபெரு
    வாழ்வே வருக வருகவே!
    என்றழைக்கின்றார் குமரகுருபரர்.

    இப்படித் தமிழ்ச்சுவை நனிசொட்டச் சொட்டப் பாடியழைத்தால் அம்மை வருவதில் அதியமென்ன?

    படத்தில் காட்சியளிக்கின்ற ஒப்பனைமிகு மீனாளைக் காணுகின்ற நம் கவிஞர்களின் கற்பனை எப்படியெல்லாம் விரிகின்றது என்று அறிந்துவருவோம்! புறப்படுங்கள்!

    *****

    ”புரமதை எரித்தோன் தேவியான மரகதவல்லி மீனாட்சியைக் கரமது கூப்பி வணங்கிடுவோம்” என்று நமை அழைக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    மரகதவல்லி…

    மரகத வல்லி மீனாட்சி
    மண்ணுல கதிலே இவளாட்சி,
    கரத்தினில் பிடித்த கிளியுடனே
    கண்களில் கருணை காட்டிடுவாள்,
    புரமதை எரித்தோன் தேவியவள்
    பூவுல காள்கிறாள் மதுரையிலே,
    கரமது கூப்பி வணங்கிடுவோம்
    கண்ணா லருளும் தேவியையே…!

    *****

    ”பச்சைநிறமான மீனாட்சித் தாயே! என் கண்ணுக்கு நீ ஸ்ரீவில்லிபுத்தூர் பாசுரத் தாயாய்க் காட்சியளித்தாயே!” என்று நெகிழ்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    பச்சைநிறமானவளே
    மதுரை மீனாட்சித் தாயே
    கையில் கிளியேந்திய நீ
    என் கண்ணில் பாசுரத் தாயே
    ஸ்ரீவில்லிபுத்தூர் பாசுரத் தாயே

    மதுரையென்ன வில்லிபுத்தூரென்ன
    மாதர்குலத் தெய்வங்கள் நீவீர்
    மடிநிறையக் கவலையோடு வந்த எம்மை
    மகிழ்வெள்ளம் புரளச்செய்து வாழ்த்தியெம்மை அனுப்பிட்டாயே
    மொத்தத்தில் நீ எனக்குத் தெரிந்த
    மரகதப் பச்சைக்காரி
    மதுரை மீனாட்சி தாயே
    உலகாளும் உமையே!

    *****

    ”பச்சைக் கொடி என எண்ணிப் பச்சைக்கிளியும் நின் தோளமர்ந்து,
    கொஞ்சிப் பேசிட மறந்து விட்டதே வஞ்சிக்கொடி உன் மொழி கேட்டு” என்று வியக்கின்றார் திருமிகு. ராதா.

    உலகம் யாதுமாகி நிற்பவளே எங்கும்
    உன்னையே காண வேண்டுமெனக்
    காட்சிகள் அனைத்தினையும்
    சாட்சிகள் கூறவும் வைத்து விட்டாய்…

    பச்சைச் செடி கொடி மரம் கண்டாலே
    பச்சை வண்ணத்தில் நீயே என
    எண்ண ஏதுவாய் எங்கும் உள்ளாய்
    எங்கும் நிறை இறைவியே சரணம்!

    பச்சைக் கொடி என எண்ணி இப்
    பச்சைக்கிளியும் நின் தோளமர்ந்து
    கொஞ்சிப் பேசிட மறந்து விட்டது
    வஞ்சிக்கொடி உன் மொழி கேட்டு….

    செவ்விதழ் உனதினைக் கண்ட கிளி
    தலை குனிகிறது வெட்கத்தில்!
    உவமைக்கு ஒப்பா உனதழகு -இது
    ஐந்தறிவு ஜீவி உணர்ந்த உண்மை

    ஐந்தறிவுக் கிளி உணர்ந்த போதம்
    ஆறறிவு மக்கள் உணரவில்லை
    அவளுக்குள் நாம் அடக்கமே அன்றி
    நம்மில் அவள் அடக்கமில்லை என்றும்!

    படத்தில் காணும் மீனாட்சியின் எழில் தோற்றத்தில் சிந்தை பறிகொடுத்த நம் கவிஞர்கள், பக்திப் பரவசத்தோடு, அன்னையைப் புகழ்ந்து கவிமழை சிந்தியிருக்கின்றார்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது…

    குத்துவிளக்கு

    கடவுள் வேடம் போட்டாலும்
    கவலைகள் ஏதும் தீரவில்லை!
    கிளிபோல் இன்மொழிச் சொற்கள் அறிந்தும்
    பேசிட இங்கே உரிமையில்லை!
    மணிமுடியணிகலம் யாவும் இருந்தும்
    அடிமைக்கோலம் மறைந்திடவில்லை!
    மறுமொழி உரைக்கும் கல்விகள் இன்றித்
    தடைகள் எப்போதும் உடைவதில்லை!

    பச்சை நிறங்கள் இருந்தாலும்
    பாசியில் வளங்கள் ஏதுமில்லை!
    இச்சைப்பேச்சு வார்த்தையன்றி
    உரிமைகள் ஏதும் கிட்டுவதில்லை!
    பச்சைக்காளிகள் அழித்தாலும்
    தஞ்சகன் என்றும் மாய்வதில்லை!
    பவழக்காளியாய் மாறினாலன்றித்
    தீமைகள் எதுவும் அழிவதில்லை!

    பெண்ணினம் சரிநிகரெனினும் அவர்
    ஆண்டிடும் வழிகள் இங்கில்லை!
    கண்ணிமையாகக் காப்பதாய்க் கூறி
    அடைத்து வைத்தல் ஞாயமில்லை!
    குத்து விளக்கெனக் குடத்தில் மூடினால்
    வெளிச்சம் யார்க்கும் தெரிவதில்லை!
    கைவிலங்குடைத்து வெளியேறாவிடில்
    சுதந்திர வாசம் கிடைப்பதில்லை!

    பெண்ணடிமைத் தீர்ந்திடாத வரையில் பெண்கள் எந்த வேடம் புனைந்தாலும் பயனொன்றுமில்லை என விளம்பும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்,

    ”குத்து விளக்கெனக் குடத்தில் மூடினால்
    வெளிச்சம் யார்க்கும் தெரிவதில்லை!
    கைவிலங்குடைத்து வெளியேறாவிடில்
    சுதந்திர வாசம் கிடைப்பதில்லை!” என்று பெண்கள் தடைகளை உடைத்து வெளியேற வேண்டியதன் அவசியத்தையும் இக்கவிதையில் நயமுற உரைத்திருக்கின்றார். அவரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

       

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 113

    சேக்கிழார் பாடல் நயம் – 113

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பாடல் :

    “ஓங்கு கோவணப் பெருமையை யுள்ளவா றுமக்கே
    யீங்கு   நான்சொல வேண்டுவ தில்லைநீ   ரிதனை
    வாங்கி நான்வரு மளவுமும் மிடத்திக ழாதே
    யாங்கு வைத்துநீர் தாரு“ மென் றவர்கையிற்   கொடுத்தார்.

    பொருள் :

    (குணத்தினால்) ஓங்கு கோவணத்தின் பெருமையை உள்ளபடி உமக்கே இங்கு நான் எடுத்துச் சொல்ல வேண்டுவதில்லை; நீர், இதை வாங்கி நான் நீராடித்திரும்பி வரும் வரையில் உம்மிடத்தில் இகழ்ந்து விடாமற் காப்பாற்றி ஆங்கு வைத்து நீர் திருப்பித் தருவீராக!“ என்று சொல்லி அதனை அந்நாயனாருடைய கையிலே கொடுத்தார்.

    திருநல்லூரில் வாழ்ந்த அமர்நீதிநாயனார்,  தம்ஊருக்கு வரும் அடியார் களுக்கு, வேண்டிய அனைத்தையும்  பணிவோடும் பரிவோடும்  அளித்து வாழ்ந்தார்!  அவர்  அவ்வூரின்  திருவிழா நிகழ்ந்த நிலையில் அடியார்களுக்கு அமுதுசெய்வித்து  மகிழ்ந்தபோது ஒருநாள் சிவபிரான் ஒருபிரமச்சாரி வடிவம்    கொண்டு  அமர்நீதி நாயனார் இல்லம்   நோக்கி  வந்தார்.

    அவர் சடைகரந்த குடுமி, திருநீறணிந்த மேனியும், வெண்புரி நூலும், மான்தோலும் கொண்டு, தருப்பைப் புல்லைத் திரித்துக் கயிறாக்கிக் கட்டிய கோவணஆடையும்கொண்டு, மெல்லிய திருவடி பதித்து, கையில் ஏந்திய தண்டத்தில் இருகோவணங்கள், திருநீற்றுப்பை, தருப்பைப்புற்கள்  ஆகிய வற்றுடன், அமர்நீதியார் திருமடத்திற்கு வந்தார்.

    அவ்வாறு வந்த இறைவன்  திருவடிவைக்  கண்ட நாயனார், மனத்தைவிட முகம்   மிகவும்   மலர்ந்து,  ‘’இங்கு  நீங்கள் எம்மை  நாடிவர,  யான்  என்ன தவம்  செய்தேனோ?’’ என்று கூறிவணங்கி வரவேற்றார். ‘’இங்கே அடியார்க்கு வேண்டிய உணவும் இடமும்  ஆடையும் நீர்   தருவதாகக்  கேட்டு, உம்மைக்  காண, (நீர் எம்மைக் காண) வந்தோம்.’’ என்றார்.

    ‘’இங்கே அந்தணர்  அமுதுசெய்வதற்கு உரிய வகையில்  அந்தணரே சமைத்து இடுவதற்கு  உரிய ஏற்பாடு  உள்ளது!’’  என்று கூறி,  ‘’இங்கேயே அமுதுசெய்து அருளுக!’’   என வேண்டினார்.

    அப்போது இறைவர் தம் உடைமைகளில் கோவணம் ஒன்றை அடியாரிடம் தந்தார்.

    (குணத்தினால்) ஓங்கு கோவணத்தின் பெருமையை உள்ளபடி உமக்கே இங்கு நான் எடுத்துச் சொல்ல வேண்டுவதில்லை; நீர், இதை வாங்கி நான் நீராடித்திரும்பி வரும் வரையில் உம்மிடத்தில் இகழ்ந்து விடாமற் காப்பாற்றி ஆங்கு வைத்து நீர் திருப்பித் தருவீராக!“ என்று சொல்லி அதனை அந்நாயனாருடைய கையிலே கொடுத்தார்.

    விளக்கம்:

    கோவணத்தின் ஓங்கு பெருமையை என மாற்றுக. ஓங்குதல் – பிறவற்றை யெல்லாந் தாழச்செய்து தான் மேலோங்கிப் புகழால் மிகுதல்.

    “புவனம் யாவையு நேர்நிலா வென்பது புகழோ?“ (540) என்று இதனையே பின்னர் விரித்தனர்

    ஓங்கு கோவணம் என்று கொண்டு, கோவணம் வேதம்;வேதம் நாத உருவமாய் மேலோங்கி நின்று ஏனைய வெல்லாம் தன்னினின்று பிறக்க நிற்பது என்று உரைப்பினும்   அமையும்.

    “மன்னுதலை துன்னு பொருள் மறைநான்கே வான்சரடாத்,
    தன்னையே கோவணமாய்ச் சாத்தினன்காண் சாழலோ“

    என்றதிருவாசகத்திற் கோவணப் பெருமையை விரித்தவாறு காண்க. மேலும் “அருமறைநூற் கோவணத்தின்“ என்றமானக்கஞ்சாறர் புராணம், “மறையே நமது கோவணமாம்“  என்ற திருவிளையாடற் புராணம் காண்க.

    ஈங்கு நான் சொல்ல வேண்டியதில்லை – நீர் கோவணப் பெருமையை அறிந்து அடியார்க் களித்துவருகின்றீ ராதலின் நான் சொல்லித் தெரிய வேண்டுவ தில்லை. ஈங்கு இவ்விடத்தில். இப்போது என்றலுமாம்.

    இப்பெருமையைப் பின்னர் நான் சொல்லாமல் நீரே அறிந்து கொள்ளுவீர் என்பதும் குறிப்பு. வரும் அளவும்  என்றதொடருக்கு,  நீராடித் திரும்பி வரும் வரையிலும் என்பது பொருள்

    இகழாதே என்ற சொல்லுக்கு உம்மிடத்தில் உள்ள அளவற்ற கோவணங்களைப் போன்றதே யிதுவுமாம் என்று இகழ்ச்சியாகக் காணாது காவல் செய்து  என்பது பொருள்.

    ஆங்கு – காவலுள்ள தனியிடத்தில், என்றபொருள்கொண்டது.

    நீர் வாங்கி…..வைத்து…..நீர்தாரும் என, நீர் என்றதனை இருமுறையும் வைத்த தென்னை? எனின், வாங்குதலும் வைத்தலும் நீர் செய்வீர். நான் வாங்குகின்றேன், நான் வைக்கின்றேன் என்ற ஆன்ம போதத்துடன் செய்யும் செயல் நீர் செய்வீர். ஆனால் பின்னர் அக்கோவணத்தைத் திருப்பித் தருகின்ற செயல் உம்முடைய செயலாக நீர் செய்யப் போவதில்லை. தற்போத மிழந்த நிலையில் உம்மையே நீர் தந்து கோவணத்துக்கு நேர் கண்டுகொள்ளுவீர் என்பது குறிப்புமாம்.

    நீர் – வாங்கி வைத்து, என்றது உயிரின் தற்போத நிலை. “யாவையும் வைச்சு வாங்குவாய்“ – திருவாசகம்.

    “எல்லாந் தான்வைத்து வாங்க வல்லான்“ (379) என்றபடி வைத்தலும் வாங்குதலும் என்ற தொழில். ஆனால் நீர் வாங்குவதாயும் வைப்பதாயும் எண்ணி வாங்கி வைக்கின்றீர் என்ற குறிப்புமாம்.

    வைத்தல் – வாங்குதல் என்ற சொல்லாட்சிகள் காண்க. வைத்தல் – சிருட்டி; வாங்குதல் – ஒடுக்கம். இங்கு வாங்கி – வைத்து – தாரும் என்றது கோவணத்தின் மறைவினையும், பின்னர் நாயனார் இறைவனில் ஒடுங்குவதனையும் குறித்து நின்றன என்பர்.

    நீர்தாரும் – என்றது பரவசமாகித் தற்போதமிழந்து சிவம் விளங்கிய நிலை. “இருதிறன் அறிவுள திரண்டலா வான்மா“ என்பது சாத்திரம்.

    வாங்கி – வைத்து என்ற வினைகளுக்கு எழுவாயாய் நின்ற நீர் என்றதின் தன்மை வேறு;  தாரும் – என்ற வினைக்கு எழுவாயாய் நிற்கும் நீர் என்றதின் தன்மை வேறு. ஆதலின் உயிர் ஒன்றேயாகவும், சார்புபற்றித் தன்மை வேறுபாடு நோக்கி இருமுறை கூறினார் என்க.

    “இப்பி றப்பினில்  இணைமலர் கொய்துநான்
    இயல்பொடும்  அஞ்செழுத் தோதித்,
    தப்பி லாதுபொற் கழல்களுக்
    கிடாதுநான் தடமுலை யார்தங்கண்,
    மைப்பு லாங்கண்ணால்  ஏறுண்டு கிடப்பேனை“

    என்ற திருவாசகத்தில் நான் என்றது இருமுறையும் ஆளப் பெற்றது காண்க.

    சொல்ல வேண்டுவதில்லை – இதனை வாங்கி வைத்துத் தாரும் என்றது இதன் பெருமை ஒருபுறமிருக்க, ஒப்புவித்த பொருள் பெரிதேயாக, அன்றிச், சிறியதேயாக, அதனைக் காப்பாற்றித் திருப்பித் தருதல் உமது கடமை என்பதும் குறிப்பாம்.

    Share
  • கடந்து போயினும் மறந்து போகுமோ 2020?

    கடந்து போயினும் மறந்து போகுமோ 2020?

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    2019ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் திகதி சென்னையை நோக்கிய எனது பயணத்தின் முக்கிய நோக்கம், என் மனைவியின் நீண்டநாள் கனவு, தன்னுடைய பிறந்த மண்ணை விட்டு புலம் பெயர்ந்த பின்னால் ஒருமுறையாவது ஆண்டு தொடங்கும் போது தான் பிறந்த மண்ணில் இருக்க வேண்டும் எனும் அவாவிலே எழுந்ததாகும். 28ஆம் திகதி சென்னையைச் சென்றடைந்த நாம் 31ஆம் திகதி எனது மனைவி பிறந்த ஊரான தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் உள்ள கிருஸ்ணாபுரத்தைச் சென்றடைந்து 2020இன் புத்தாண்டுப் பிறப்பை கிருஸ்ணாபுரத்தில் கொண்டாடினோம்.

    இப்படியாக ஆரம்பித்த எமது 2020இன் ஆரம்பத்தில் 2020இன் முடிவு இத்தகையதாக இருக்கும் என்று எண்ணிப் பார்க்கக் கூட முடியவில்லை, பெப்பிரவரி மாதம் நடுப்பகுதி வரை தமிழ்நாட்டில் நாம் தங்கியிருந்த சமயம், சீனாவின் வூகான் மாநிலத்தில் ஒரு புதுவித வைரஸின் தாக்கம் பற்றிக் கேள்விப்பட்டோமே ஒழிய அதன் தாக்கத்தின் முழு விஸ்தீரணத்தையும் பற்றி அறிந்திருக்கவில்லை.

    நாம் எமது விடுமுறையை முடித்துக்கொண்டு இங்கிலாந்து வந்தடைந்த நேரம்தான், இங்கிலாந்தில் கொரோனாவின் தாக்கம் பரபரப்பாகிக் கொண்டிருந்தது, மேற்கு ஐரோப்பா முழுவதும் கொரோனா தனது கோரப் பிடியை ஆரம்பித்திருந்தது. அப்போது அது தனது முழுக் கோரத் தாண்டவத்தையும் இத்தாலி நகரத்தில் ஆடிக்கொண்டிருந்தது. உலகின் பல்வேறு நாடுகளும் லாக்டவுண் எனும் புதிய கட்டுப்பாட்டினைத் தமது நாட்டு மக்களின் மீது விதிக்க ஆரம்பித்திருந்தன. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், தனித்திருத்தல் போன்ற பதங்களுக்கான அழுத்தங்கள் மக்களின் மனங்களில் உறைய ஆரம்பித்தது.

    இங்கிலாந்தில் லாக்டவுண் கொண்டுவருவதைப் பற்றிய விவாதங்கள் பலமுனைகளில் இடம்பெற்றாலும் அதை அமுலாக்குவதற்குச் சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பததாக கூறிய பிரதமர், தாம் விஞ்ஞானிகளின் விஞ்ஞான அறிக்கையின் அடிப்படையில் தான் முடிவுகள் எடுப்பதாகக் கூறினார். அதன் பின்பு நாடு முழுவதுமான முழு லாக்டவுண் ஒருமாத காலத்துக்கு அமுலாக்கப்பட்டது. இதனால் ஏற்படும் பொருளாதாரத் தாக்கத்தைச் சமாளிக்கும் பொறுப்பு, தமிழ்நாட்டு மாப்பிள்ளையான இங்கிலாந்தின் இளம் நிதியமைச்சர் ரிஷி சுனாக் அவர்களின் கையில் விடப்பட்டது. இதுவரை இங்கிலாந்து சரித்திரத்தில் காணாத வகையில் பலவகையிலான பொருளாதார உதவிகள் அறிவிக்கப்பட்டன. இங்கிலாந்து இளவேனில் காலத்திலிருந்து வசந்த காலத்துக்குள் நுழையும் போது கொரோனாவின் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சொற்பமாகிக் கொண்டிருந்த அதேசமயம், தினசரி கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கையும் குறைந்துகொண்டு வந்தது.

    பொருளாதாரச் சீர்கேட்டைச் சரிசெய்யும் பல திட்டங்களை அரசு மேற்கொள்ள வேண்டிய தேவையிருந்தது, லாக்டவுண் கெடுபிடிகள் தளர்த்தப்பட்டன. லாக்டவுணினால் பாதிக்கப்பட்ட உணவு விடுதிகளை மீண்டும் பரபரப்பாக்குவதற்காக அரசு மக்களை உணவு விடுதிகளுக்குச் சென்று உணவருந்த ஊக்கப்படுத்தியது. ஒருமாத காலத்துக்கு வாரத்துக்கு மூன்று நாட்கள் உணவு விடுதியில் உணவருந்துவோரின் செலவின் பாதியை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.

    மறுபடி கொஞ்சம், கொஞ்சமாக சகஜ நிலைக்கு வாழ்க்கை திரும்பி விடும் என்று மக்கள் எண்ணத் தொடங்கினார்கள். கொரோனாவின் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதிகளைச் சற்றே மறக்கத் தொடங்கிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஒருபுறமிருக்க, இங்கிலாந்தின் பொருளாதாரத்தைத் தாக்கவிருக்கும் மற்றொரு முக்கிய நிகழ்வின் முக்கியத்துவத்தைக் கொரோனா பின் தள்ளிவிட்டது என்பதுவே உண்மை. 2019 டிசம்பர் 31ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய ஐக்கிய இராச்சிய அரசுக்கு ஒரு வருட அவகாசம் கொடுத்திருந்தது ஐரோப்பிய ஒன்றியம். இந்த ஒரு வருட காலத்துக்குள் அதாவது 2020 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு வணிக ஒப்பந்தத்தை எட்டாத பட்சத்தில் இரு பகுதிகளுக்கும் இடையிலான வணிகப் பொருட்கள் மீது வரி அறவிடப்படவிருந்தது.

    கொரோனாவின் கொடும்பிடிக்குள் சிக்கியிருந்த இரு பகுதிகளுக்கு இடையில் இந்த வணிக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையும் ஒருபுறம் நடந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் அவர்களுக்கிடையிலிருந்த இடைவெளி மலையளவாக இருந்தது, அதனைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டு வரும் அவசிய தேவையிருந்தது. 2020 மே மாதம் நடைபெறவிருந்த லண்டன் மேயருக்கான தேர்தல் ஒத்திப் போடப்பட்டது. கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகள் எனப் பலமுனைத் தாக்குதலுக்கு உள்ளான ஐக்கிய இராச்சியப் பிரதமர் பொரிஸ் ஜான்சன் கொரோனாவின் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலைக்கு உள்ளானார். ஒருவாறு வெற்றிகரமாக கொரோனாத் தாக்குதலினின்றும் மீண்டுகொண்டார்.

    இத்தனை பரபரப்புகளுக்கும் மத்தியில் பிரதமர் பொரிஸ் ஜான்சனின் காதலி, குழந்தைக்குத் தாயானார். ஆம் 2020 இங்கிலாந்துப் பிரதமரைப் பொறுத்தவரையில் ஒரு பரபரப்பு நிகழ்வுகளைத் தாங்கிய ஒரு வருடமாகவே இருந்தது.

    பிரதமர் பொரிஸ் ஜான்சன் அவர்களின் சர்ச்சைக்குரிய ஆலோசகரான டொமினிக் கமின்ஸ் என்பவர், மந்திரி சபையில் பதவி வகிக்கும் பல அமைச்சர்களோடு கருத்து மோதல்கள் கொண்டிருந்தார். நாடு முழுவதும் லாக்டவுண் எனும் பிடிக்குள் சிக்கியிருந்த சமயம், கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியிருந்த டொமினிக் கமின்ஸ், இந்த லாக்டவுண் விதிகளை மீறியமை வெளிச்சத்துக்கு வந்தது. மக்களுக்கொரு நீதி, பிரதமரின் ஆலோசகருக்கு ஒரு நீதியா? என ஊடகங்களும் அரசியல் அவதானிகள் பலரும் கொதித்தெழுந்த போதும் பிரதமர் தனது ஆலோசகருக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியது பல அரசியல் முனைகளில் விசனத்தை ஏற்படுத்தியது.

    இப்படியாக லாக்டவுண், லாக்டவுண் தளர்வு, பிரெக்ஸிட் எனக் கரடுமுரடான பாதைகளுக்குள்ளால் பயணித்த இங்கிலாந்து, ஒருவாறு செப்டெம்பர் மாதத்துக்குள் நுழைந்தது. வழக்கமாகவே இங்கிலாந்துக் குளிர்காலத்தில் ப்ளூ எனப்படும் தீவிர ஜலதோஷம் போன்ற உபாதைகளினால் சராசரியாக 20,000 பேர் மரணிப்பார்கள். ஆனால் இம்முறை அதனுடன் இணைந்து கொரோனாவின் தாக்கமும் சேர்ந்தால் தேசிய சுகாதாரச் சேவை அல்லாடப் போகிறது எனும் கருத்து, விஞ்ஞான அவதானிகளினால் அடிக்கடி நினைவூட்டப்பட்டது. மக்களனைவரும் அவதானமாக தம்மைத் தாமே இக்கொரொனாத் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகை நடந்துகொள்ள வேண்டும் எனும் அறிவுறுத்தல் அளிக்கப்பட்டது.

    என்னே ஐக்கிய இராச்சியத்துக்கு வந்த சோதனை! கொரோனா தனது கட்டமைப்பை மாற்றி, அடுத்தவர்களைத் தொற்றிக்கொள்ளும் வீரியத்தை அதிகப்படுத்திக் கொண்டது. இதன் தாக்கம் இங்கிலாந்தில் இதுவரை கட்டுப்பாட்டுக்குள் இருந்த தொற்றின் வீரியம் விரைவாக அதிகரிக்கத் தொடங்கியது. அச்சமடைந்த ஐக்கிய இராச்சிய அரசாங்கம், நவம்பர் மாதம் கட்டுப்பாடுகளைச் சிறிது தீவிரமாக்கியது. கிறிஸ்துமஸ் பண்டிகை, இங்கிலாந்தின் மிக முக்கியப் பண்டிகையாகும். இப்பண்டிகையின் போதே வருட்த்துக்கொருமுறை உறவினர்கள், நண்பர்கள் பலரும் சந்தித்துக்கொள்வது வழக்கம். இப்பண்டிகைக் காலத்தில் கெடுபிடிகளை ஐந்து நாட்களுக்குத் தளர்த்த முடிவு செய்தது அரசாங்கம். விஞ்ஞானிகளும், அரசியல் அவதானிகள் பலரும் இதற்கு எதிரான கருத்தினைக் கொண்டிருந்தார்கள்.

    கொரோனாத் தொற்று கட்டுக்குள் அடங்காமல் அதிகரிக்கத் தொடங்கியது. வைத்தியசாலைகள் கொரோனா நோயாளிகளினால் நிரம்பி வழியத் தொடங்கியது. இறப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அல்லாடிய அரசாங்கம் 2021 ஜனவரி தொடக்கம் புதிய தீவிரமான லாக்டவுண் விதிகளை அறிவித்தது. இல்லங்களில் இருந்து பணிபுரியக்கூடியவர்கள் வெளியே செல்லக் கூடாது, பள்ளிகள் பெப்பிரவரி நடுப்பகுதி வரை மூடப்படும், உணவு விடுதிகளில் பார்சல்கள் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். நண்பர்கள், உறவினர்கள் சந்திப்பது தடை செய்யப்பட்டது.

    இதற்கிடையில் டிசம்பர் 31 ப்ரெக்ஸிட் காலக்கெடுவுக்கு முன்னால் அவசரம், அவசரமாக ஒரு வணிக ஒப்பந்தம் எட்டப்பட்டது. இவ்வொப்பந்தப் பிரகாரம் ஐக்கிய இராச்சியத்துக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான வணிகம் எதுவித இடையூறுமின்றி தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தக் கட்டமைப்பு மாறிய கொரோனா வைரஸ், ஐக்கிய இராச்சியத்திலேயே உருவாகியது எனும் காரணத்தினால் உலகின் பலநாடுகளும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இங்கிலாந்துக்கும், தமக்குமிடையிலான விமான சேவைகளை இரத்துச் செய்தன. டிசம்பர் 22ஆம் தேதியளவில் பிரான்சு நாட்டுக்கும், ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையிலான போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் பல ட்ரக்குகள் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைய முடியாமல் இங்கிலாந்துக் கரையில் சுமார் இருபது மைல் நீளத்துக்கு வரிசையில் நிற்க வேண்டிய நிலையேற்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த வாகன ஓட்டுநர்கள் பலர், தமது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கழிக்க முடியாத நிலைக்கு உள்ளானார்கள். பிரான்சும், இங்கிலாந்தும் பேச்சுவார்த்தைகளின் மூலம் கொரோனா வைரஸுக்கான பரிசோதனையின் பின்னால் இந்த லாரிகள் ப்ரெஞ்சு எல்லைக்குள் அனுமதிக்கப்படும் எனும் ஒரு புரிந்துணர்வை எட்டினார்கள்.

    டிசெம்பர் மாத நடுப்பகுதியில் கொரோனா தடுப்பூசி நடவடிக்கையை இங்கிலாந்து ஆரம்பித்தது. பெப்பிரவரி நடுப்பகுதிக்கு முன்னால் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மற்றும் வைத்திய சுகாதாரச் சேவை பணியாளர்கள், வயோதிபர் இல்ல உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுவிடும், அதைத் தொடர்ந்து ஏப்பிரல் மாத முடிவுக்குள் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுவிடும் என்றும் 2021 அக்டோபர் மாதத்துக்கு முன்னால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுவிடும் என்ற தமது திட்டத்தை அறிவித்திருக்கிறது இங்கிலாந்து அரசு.

    இன்றைய ஐக்கிய இராச்சிய நிலவரம் பின்வருமாறு.

    கட்டமைப்பு மாறிய கொரொனா வைரஸின் தொற்று அதிகரித்த வண்ணமுள்ளது, தொற்றின் காரணமாக வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30,000 ஐத் தாண்டி விட்டது. 2020 மார்ச் மாதம் அதி உச்ச நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தோரின் எண்ணிக்கை சுமார் 21,000 என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதுவரை இக்கொரொனாத் தொற்றுக் கொண்டோரின் இறப்பு எண்ணிக்கை 80,000 ஐத் தாண்டியுள்ளது. நிலைமை சீராவதற்கு முன்னால் எதிர்வரும் இரண்டு வாரங்களில் நிலை இன்னும் தீவிரமாகும் எனவும் இரண்டு வார காலத்துக்குள் எண்ணிக்கை உச்சமடைந்த பின்னால் தான் குறைவதற்குரிய சான்றுகள் உண்டெனவும் கூறப்படுகிறது.

    அடுத்தடுத்த ஆக்கங்களில் 2020இன் சர்வதேச தாக்கங்களைப் பற்றிப் பார்ப்போம்.

    Share
  • Lets Reap from REEP

    Lets Reap from REEP

    Seshadri Baskar

    There has been some news on the RTO approval of the garbage van being run on battery. The manufacturer (REEP Motors) nowhere claims in any place in the website that it is to be approved by RTO. It’s a battery run rechargeable electric vehicle and since it can be run only at a maximum speed of 25 kmph the question of RTO approval is not needed. It can be used only for a maximum of eight hours if charged fully and Probably the battery designed one (a Mosfet based one) do run at no noise level (its less than 75 Db) and the carrying weight and running speed makes no big difference on the continuous operations for about six /Eight Hours.

    The factory has its operations in Tamilnadu and has dealers too all over. It seems big bungalows and theme parks and large housing community has few of them for a short journey within the campus. In fact the vehicles that are being used in T Nagar Pondy bazaar area in smart city project may be the same it seems. And of course the license for the same is also not needed it is learnt. If the prices are brought down drastically it can be a best bet for fuel fired vehicles on the count of pollution/ Noiseless driving and of course for a safe and simple driving for a limited local drive.

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 24

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 24

    -மேகலா இராமமூர்த்தி

    பன்னசாலையில் சீதையைக் காணாது இராமனும் இலக்குவனும் கலங்கி நின்ற வேளையில் தரையில் தெரிந்த தேர்ச்சக்கரச் சுவடுகளைச் சுட்டிக்காட்டிய இலக்குவன், இவற்றை நாம் பின்தொடர்ந்து செல்வோம் என்று கூறவே இராமனும் அக்கருத்தை ஏற்று இலக்குவனோடு அச்சுவடுகளைத் தொடர்ந்து சென்றான். ஆனால் சற்றுத் தூரத்திலேயே அச்சுவடுகள் காணாமல் போய்விட்டதைக் கண்டு திகைத்தனர் இருவரும்.

    ”இனி நாம் என்ன செய்வது இளவலே?” என்று இராமன் வருந்த, ”அண்ணா! தேர்ச்சுவடு மறைந்தால் என்ன…தேர் தெற்கு நோக்கித்தான் சென்றிருக்கின்றது என்பதை நாம் அறிந்துகொண்டுவிட்டோம் அல்லவா? ஆதலால், தென் திசையிலேயே தொடர்வோம் நம் தேடலை” என்றான் இலக்குவன்.

    இருவரும் தெற்குநோக்கித் தம் பயணத்தைத் தொடர்ந்தனர். சற்றுத் தூரத்தில் வீணைக்கொடி முறிந்துகிடப்பதைக் கண்டனர். மேலும் சிறிது தூரம் சென்றதும் பெரிய வானவில்லைப் போன்றதும், கடலின் ஓங்கிய அலைபோல் தோற்றமளிக்கக்கூடியதுமான கொடிய வில்லொன்று முறிந்து கிடப்பதைக் கண்டனர். இவற்றையெல்லாம் முறித்தெறிந்தவன் சடாயுவாகவே இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தவர்கள் தொடர்ந்து அப்பாதையில் பயணித்தனர். அங்கே அம்பறாத்தூணி, மார்புக் கவசம் என மேலும் பல பொருள்கள் உடைந்து கிடப்பதைக் கண்டனர். இன்னும் சற்றுத் தொலைவில் குண்டலங்களும் தோள்வளைகளும் சிதறிக் கிடப்பதைக் கண்ட இராமன், நம் தந்தையாகிய சடாயுவோடு சிங்கம்போன்ற வலிகொண்ட பலர் போர் புரிந்திருக்கவேண்டும் எனும் தன் ஐயத்தை வெளிப்படுத்தினான். அதனை மறுத்த சுமித்திரையின் சிங்கமான இலக்குவன், இங்கே சிந்தியுள்ள குண்டலங்களும் தோள்வளைகளும் தருபோல் நீண்ட தோள்களும் பல தலைகளும் கொண்ட இராவணனுடையவையாகவே இருக்கவேண்டும். நம் தந்தை சடாயுவோடு பொருது சீதையை நெடுந்தொலைவு கொண்டுபோனவன் அவனாகவே இருத்தல் கூடுமெனத் தீர்மானமாக உரைத்தான்.

    திருவின் நாயகன் உரைசெய
         சுமித்திரை சிங்கம்
    தருவின் நீளிய தோள் பல
         தலை பல என்றால்
    பொருது தாதையை இத்தனை
         நெறிக் கொடு போனான்
    ஒருவனே அவன் இராவணன் ஆம்
         என உரைத்தான். (கம்ப: சடாயு உயிர்நீத்த படலம் – 3594)

    இராமன் மனக்கலத்தோடு எதனையும் தெளிவாகச் சிந்திக்கவியலாது தடுமாறும் தருணங்களிலெல்லாம் இலக்குவன் புத்திக்கூர்மையோடு சிந்தித்துக் கருத்துக்களை வெளிப்படுத்துவதை இராமகாதையில் நாம் பல இடங்களில் காணமுடிகின்றது. முன்பு மாய மானை இராமன் துரத்திச்செல்ல முற்போட்டபோது, இஃது அரக்கனின் மாயை; உண்மையான மானில்லை என்று சரியாகக் கணித்துரைத்ததையும், மாரீசன் இராமன் குரலில் ஓலமிட்டபோது அதனை இராமன் குரலென்றெண்ணிச் சீதை மனங்கலங்கியபோது, இஃது இராமனின் குரலன்று; மாரீசனின் குரலே என்றுரைத்துச் சீதையைத் தேற்றியதையும் போலவே இப்போதும் சடாயுவோடு போரிட்டவர் பலரல்லர்; இராவணன் ஒருவனே என்று துல்லியமாகக் கணித்துரைக்கின்றான் நுண்மாண்நுழைபுலம் மிக்க இலக்குவன்.

    போரிட்ட சடாயுவின் நிலையறிய எண்ணிய இராமனும் இலக்குவனும் அவ்வழியே விரைந்தனர். ஆங்கே அவர்கள் கண்ட காட்சி அவர்களை மருளச் செய்தது. இராவணனோடு போரிட்டுப் புண்பட்டதால் உடலிலிருந்து குருதியானது கடல்போல் வழிய அதிலே மந்தர மலையெனக் கிடந்தான் சடாயு. அவன்நிலை கண்டு நெஞ்சழிந்து கண்ணீர்சொரிந்த இராமன், அஞ்சனமலையென அவன்மேல் வீழ்ந்து மூர்ச்சித்தான். இலக்குவன் இராமன்மீது நீர்தெளித்து அவனை மூர்ச்சை தெளிவித்தான்.

    தன்னால்தான் இத்தனை அவலங்களும் நேர்ந்தன என்றெண்ணித் தன்மீதே கோபமும் வெறுப்பும்கொண்ட இராமன், ”நெடுமரம்போல் வளர்ந்து நிற்கின்ற என்னால் யாருக்கும் எப்பயனும் இல்லை; இந்த இழிபிறப்பை நான் விரும்பவில்லை” என்று கழிவிரக்கத்தோடு புலம்பத் தொடங்கினான்.

    சிறிதே உணர்வு வரப்பெற்ற புள்ளரசன் சடாயு, மெள்ளக் கண்விழித்தான். தன்னருகில் இராம இலக்குவர் இருப்பதைக் கண்டு இற்றுப்போன தன் சிறகுகளை மீண்டும் பெற்றவன்போல் மகிழ்ந்தான்; இருவரையும் அன்போடு உச்சிமோந்தான்.

    ”வஞ்சனையால்தான் இராவணன் சீதையைக் கவர்ந்து வந்திருக்கவேண்டும் என்று என் மனம் சொல்லிற்று. ஆற்றல் பொருந்திய நீவிர் இருவரும் அருந்ததி அனைய கற்பினாளை, அஞ்சொல் மயிலைத் தனியே விட்டுச் சென்றீரா?” என்று வருத்தத்தோடும் ஒரு தந்தையின் பொறுப்புணர்வோடும் இருவரையும் கடிந்துகொண்டான் சடாயு. இது முன்னமே தெரிந்திருந்தால் நான் இன்னும் சற்று விழிப்போடிருந்து சீதையைக் காத்திருப்பேனே என்ற சடாயுவின் உளக்குறிப்பு இதில் ஒளிந்திருக்கக் காண்கின்றோம்.

    வஞ்சனையால் வந்த வரவு
         என்பது என்னுடைய
    நெஞ்சகமே முன்னே நினை
         வித்தது ஆனாலும்
    அம் சொல் மயிலை
         அருந்ததியை நீங்கினிரோ
    எஞ்சல் இலா ஆற்றல் இருவீரும்
         என்று உரைத்தான். (கம்ப: சடாயு உயிர்நீத்த படலம் – 3606)

    நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் சடாயுவுக்கு விளக்கினான் இலக்குவன். அதைக் கேட்ட சடாயு, இராம இலக்குவரைத் தேற்றும்பொருட்டு, ”ஊழ்வினையின் பயனால் நமக்கு நேரும் இன்ப துன்பங்களை நாம் விலக்கிவிட முடியாது. வில்வீரனே! சீதையின் பிரிவு தேவர்களின் துன்பம் தீர்தற்பொருட்டு ஏற்பட்டதேயாகும் என எண்ணுகின்றேன். மாவடுவைப் பிளந்ததுபோன்ற கண்களையும் நீண்ட கூந்தலையும் கொண்ட சீதையை இராவணன் நிலத்தோடு பெயர்த்துத் தூக்கிச் செல்வதைக் கண்ணுற்ற நான், என்னால் ஆனமட்டும் பலங்கொண்டு அதனைத் தடுத்தேன். இறுதியில் அரன் தந்த சந்திரகாசம் எனும் வாளால் அவன் என்னை வெட்டிவீழ்த்தவே ஈண்டு வீழ்ந்துவிட்டேன்” என்றுரைத்து வருந்தினான்.

    அதைக் கேட்டதும் இராமனின் சினம் எல்லை கடந்தது. தனியாக இருந்த பெண்ணொருத்தியை அறிவற்ற அரக்கன் ஒருவன் தூக்கிச்செல்லும்போது அதனைத் தடுப்பதற்கு ஏதும் செய்யாமல் பார்த்துக்கொண்டிருந்த எட்டுத் திசைகளையுடைய உலகங்களையும் தேவர்களையும் இப்போதே ஒழித்துக்கட்டுகின்றேன் என்று கர்ஜித்தான்.

    இராமனின் சினமொழிகளைக் கேட்டு வெஞ்சுடர்க் கடவுளான கதிரவன் மலைக்குப்பின் அஞ்சி மறைந்தான். திக்குகளிலுள்ள யானைகள் ஓடி ஒளிந்தன. இராமனின் கடுங்கோபம் கண்டு வீரத்திருமகன் இலக்குவனே சற்று நடுக்கம் கொண்டான்.

    ஆனால் சடாயுவோ இராமனின் கருத்தை மறுத்து, ”இராமா! செங்கையில் வில்லேந்திய நீங்கள் இருவரும் கச்சணிந்த வஞ்சியாள் சீதையை வனத்திடை தனியேவிட்டு மானின் பின்னேபோய் உங்கள் குலத்துக்கே பெரும்பழி கூட்டிக்கொண்டீர்கள். எனவே, இஃது உங்கள் குற்றமேயன்றி உலகோரின் குற்றமன்று!” என்று இடித்துரைத்தான்.

    வம்பு இழை கொங்கை வஞ்சி
         வனத்திடைத் தமியள் வைகக்
    கொம்பு இழை மானின் பின் போய்
         குலப் பழி கூட்டிக் கொண்டீர்
    அம்பு இழை வரிவில் செங்கை
         ஐயன்மீர் ஆயும்காலை
    உம்பிழை என்பது அல்லால் உலகம்
         செய் பிழையும் உண்டோ. (கம்ப: சடாயு உயிர்நீத்த படலம் – 3627)

    தந்தையை ஒத்த சடாயுவின் பொருள்பொதிந்த சொற்கள் பொங்கிய பாலில் தெளித்த நீரென இராமனின் சினத்தை உடனே அடக்கின. ”ஆம்! பிழையை நான் செய்துவிட்டு மற்றவரை நோவதென்ன?” என்று சிந்தித்தவன், அரக்கரை அழித்துச் சீதையை மீட்டலே இனிச் செய்யவேண்டியது என்று முடிவுசெய்தவனாய்ச் சடாயுவை நோக்கி, ”தந்தையே! உன் சொற்களை ஏற்று நடப்பது என் கடன்; இராவணன் சீதையைத் தூக்கிச் சென்றது எங்கே என உரைப்பாய்?” என்று வினவ, கடுமையாய்ப் புண்பட்டு உணர்வு குன்றியிருந்த சடாயு பதிலேதும் சொல்லாமல் உயிரை விட்டான்.

    ”என்னைப் பெற்ற தந்தையும் இறந்தான்; கானகத்தில் நான் உற்ற தந்தையும் இறந்தான்” என்று வேதனையோடு விளம்பிய இராமன், சடாயுவுக்கு ஒரு மகனைப்போல் ஈமக் கடன்கள் செய்தான். இராமகாதையில் இராமன் கைகளால் நீர்க்கடன் செய்யப்பெறும் பேறு அவனைப் பெற்ற தந்தையான தயரதனுக்குக் கிட்டவில்லை. ஆனால் எங்கோ ஒரு காட்டில் வாழ்ந்துவந்த பறவையான சடாயுவுக்குக் கிடைக்கின்றது என்பதை அறியும்போது ஊழின் போக்கை நாம் வியக்கத்தான் வேண்டியிருக்கின்றது.

    இரவு வந்தது! அது துயரத்தையும் உடன் அழைத்து வந்தது. தான் இல்லாத சமயத்தில் சீதையை இராவணன் கவர்ந்து சென்றதால் ஏற்பட்ட அவமானமும், சீதை மீதான காதலும் மாறிமாறித் துன்புறுத்த, வலிமைமிகு இரு யானைகள் இழுப்பதனால் நைந்து அறுந்துவிடும் நிலையிலுள்ள ’தேய்புரிப் பழங்கயிறு’ போலானது இராமனின் அவலநிலை.

    நீண்ட இரவு விடைபெற்றுப் போக, பொழுது புலர்ந்தது; பூக்கள் மலர்ந்தன! காளையர் இருவரும் காடுகளையும் மலைகளையும் கடந்து காரிகையாள் சீதையைத் தேடும் படலத்தைத் தொடர்ந்தனர்.

    நீண்ட நடைக்குப் பிறகு ஏற்பட்ட களைப்பைப் போக்க இலக்குவனை நீர் கொணரப் பணித்தான் இராமன். நீர்தேடிச் சென்ற இளவலைக் கண்டாள் அயோமுகி எனும் அரக்கி. அவளுக்கு அவன்மீது ஆசை பிறந்தது. பாம்புகளைக் கை வளையல்களாகவும், யாளிகளையே தாலியாகவும் அணிந்த அவள் இலக்குவன் அருகில்வந்து, எந்த ஆடவனும் தொடாத கன்னியாகிய என்னை ஏற்றுக்கொள் எழில்வீரனே என்று கெஞ்சுகின்றாள். அவன் வழக்கம்போலவே அதற்கு மசியாததால் ’மோகனை’ எனும் வசியவித்தை செய்து அவனை வானில் தூக்கிச் சென்றாள்.

    இலக்குவனைத் தூக்கிச்சென்ற அயோமுகி, மந்தரமலையைத் தூக்கிச் செல்லுகின்ற கடல்போலவும், இந்திரன் ஊர்ந்துசெல்லுகின்ற பெண்யானை போலவும், முருகன் ஊர்கின்ற மயில்போலவும் விளங்கினாள் என்று மூன்று உவமைகள்வழி கற்பனை நயந்தோன்ற அக்காட்சியை விளக்குகின்றார் கம்பர்.

    மந்தரம் வேலையில் வந்ததும் வானத்து
    இந்திரன் ஊர் பிடி என்னலும் ஆனாள்
    வெந் திறல் வேல் கொடு சூர் அடும் வீரச்
    சுந்தரன் ஊர்தரு தோகையும் ஒத்தாள்.
    (கம்ப: அயோமுகிப் படலம் – 3701)

    இங்கே மந்தரமலை, இந்திரன், முருகன் ஆகியவை இலக்குவனுக்கு உவமைகள். மலையைச் சுமக்கின்ற கடல், இந்திரன் ஊர்கின்ற பெண் யானை, முருகன் ஊர்கின்ற மயில் ஆகியவை அயோமுகிக்கு உவமைகள்.

    நேரம் நீண்டது; நீர்கொணரச் சென்ற இளவலோ மீண்டானில்லை. இராமனின் உள்ளத்தில் அது கலக்கத்தை விளைவித்தது.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

     

    Share
  • நாணயங்கள் காட்டும் நாடுகள்

    நாணயங்கள் காட்டும் நாடுகள்

    நாணயங்கள் வழியாகவே உலகம் சுற்றலாம். ஒவ்வொரு நாட்டையும் காணலாம், அந்த நாட்டைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம், புரிந்துகொள்ளலாம். இதோ, நம் முன்னால் எட்டு நாடுகள். சிற்றுலாப் போகலாம், வாருங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 29 | சிற்றஞ் சிறுகாலே

    திருப்பாவை – 29 | சிற்றஞ் சிறுகாலே

    திருப்பாவை – 29

    சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
    பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்
    பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ
    குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
    இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
    எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
    உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
    மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

    திருப்பாவை – 29 | சிற்றஞ் சிறுகாலே | ஸ்வேதா குரலில்

    கோவிந்தா, சிற்றஞ்சிறு காலையிலே வந்து உன்னைச் சேவிக்கின்றோம். உன் பொற்றாமரை அடியைப் போற்றுகின்றோம். உனக்குச் சேவகம் செய்யும் வாய்ப்பை வழங்கு. இந்தப் பிறவியில் மட்டுமின்றி என்றைக்கும், எழுகின்ற ஒவ்வொரு பிறப்பிலும் உன்னுடனே இருக்க வேண்டும். உனக்கு உரியவராய் இருக்க வேண்டும். நீயே எங்களை ஆட்கொள்ள வேண்டும். இதைத் தவிர வேறு விஷயங்களில் கவனம் செல்லாதவாறு நீயே எம்மைக் காத்தருள வேண்டும் எனப் பாவையர்கள் வேண்டுகிறார்கள்.

    விடியலைச் சிற்றஞ்சிறு காலே என அழைக்கும்போதே செல்லம் கொஞ்சும் தொனி வந்துவிடுகிறது. குற்றேவல் எனச் சொல்லும்போது அதில் ஒரு குறும்பும் வெளிப்படுகிறது. எங்கள் கவனம் உன் மீதன்றி, வேறு பக்கம் போகக் கூடாது, அதற்கும் நீயே பொறுப்பு என உரிமையுடன் கேட்கும்போது இன்னும் நெருக்கம் அதிகமாகிறது.

    எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்னுடனே இருக்க வேண்டும் என்றதால், மீண்டும் மீண்டும் பிறந்து இதேபோன்று இன்புற்று இருக்க வேண்டும் என்ற குறிப்பும் வெளிப்படுகிறது. கோதைப் பிராட்டி மீண்டும் தமிழ் மண்ணில் பிறந்து, இனிய கவிதைகள் யாக்க வேண்டும். உலகம் அதில் தோய வேண்டும். இதோ, இந்த 29ஆம் பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 28 | கறவைகள் பின்சென்று

    திருப்பாவை – 28 | கறவைகள் பின்சென்று

    திருப்பாவை – 28

    கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
    அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்
    பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
    குறையொன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
    உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
    அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னைச்
    சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே
    இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

    திருப்பாவை – 28 | கறவைகள் பின்சென்று | ஸ்வேதா குரலில்

    மாலே, நெடுமாலே, மணிவண்ணா, ஆழி மழைக்கண்ணா, பூவைப் பூவண்ணா, மலர்மார்பா, கோவிந்தா… எனத் திருப்பாவை முழுவதும் கண்ணனை ஏக வசனத்தில் ஆண்டாள் அழைக்கிறார். அது, உரிமை தந்த நெருக்கம். அதேபோன்று ஆயர்பாடியில் உள்ள பாவையர்களும் அழைக்கிறார்கள். அவளைப் போல் நாங்களும் உரிமையுடன் அழைக்கிறோம் என மகிழ்ச்சி இருந்தாலும், சிறு தயக்கம் அவர்களுக்கு. அப்பா, குறையொன்றும் இல்லாத கோவிந்தா, சிறுபேர் இட்டு அழைத்ததற்காகக் கோபிக்காதே என்கிறார்கள். Nick name என்பதைச் சுருக்கப் பெயர், செல்லப் பெயர் என இன்று அழைக்கிறோம். இதைச் சிறுபேர் என ஆண்டாள் வழங்குகிறார். நல்லதொரு சொல்லாக்கம். சிறுச்சிறிதே என முன்பே மொழிந்ததையும் இங்கே நினைவுகூரலாம்.

    சீறாதே எனச் சொல்லாமல் சீறி அருளாதே என்கிறார். ஏனெனில், அவன் சீறினால், கோபித்தால், அதுவும் அவனது அருளே. நடப்பது அனைத்தும் அவனது ஆசீர்வாதம் என ஏற்கும் பக்குவம் பெற்ற உள்ளம், அது.

    இந்தப் பாடலில் அறிவொன்றும் இல்லாத என்றும் அறியாத பிள்ளைகள் என்றும் சிறுபேர் அழைத்தனம் என மூன்று விதமாகச் சொல்கிறார். அறிவொன்றும் இல்லாத என்பதற்கு, உன்னைப் புரிந்துகொள்ளும் அறிவொன்றும் இல்லாத எனப் பொருள்கொள்ளலாம். கறவைகள் மேய்ப்போம், அவற்றின் பின்னே காட்டுக்குள் செல்வோம், எல்லோரும் சேர்ந்து உண்போம். இவற்றைத் தவிர வேறொன்றும் தெரியாது எனச் சொல்வதாகவும் கொள்ளலாம். இது ஒருவகை அவையடக்கம்.

    அறிவொன்றும் இல்லாத எங்கள் குலத்தில் நீ பிறப்பதற்கு என்ன புண்ணியம் செய்துவிட்டோம் எனக் கண்ணனை நோக்கி ஆண்டாள் பாடுகிறார். அதையே ஆண்டாளை நோக்கி நாமும் பாடலாம். எங்கள் தமிழ்க்குலத்தில் நீ பிறப்பதற்கு என்ன புண்ணியம் செய்தோமோ. கோதை நாச்சியாரைக் கொண்டாடி, அவர் பின்செல்வோம். கறவைகள் பின்சென்று கானத்தைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கூட்லு அருவியை நோக்கி

    கூட்லு அருவியை நோக்கி

    கர்நாடகத்தின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கூட்லு அருவியை இன்று காண்கின்றோம். கூட்லு தீர்த்தம் என அழைக்கப்படுகிற இந்த அருவி, உடுப்பியிலிருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ளது. அடர்த்தியான கூட்லு காட்டுக்குள், கரடு முரடான பாதை வழியே சென்றால், இந்த அருவியைக் காணலாம். 300 அடி உயரத்திலிருந்து தண்ணீர் செங்குத்தாக விழுகின்றது. இந்தத் தண்ணீர் ஆறாக ஓடும் இடத்தில் படகிலும் செல்லலாம். இந்த வசீகர அருவியை நமக்காகப் படமெடுத்து வந்திருக்கிறார், காயத்ரி சேஷா.

    Image Courtesy: Wikipedia

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 27 | கூடாரை வெல்லும்

    திருப்பாவை – 27 | கூடாரை வெல்லும்

    திருப்பாவை – 27

    கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்
    பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
    நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
    சூடகமே தோள்வளையே தோடே செவிப் பூவே
    பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
    ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
    மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
    கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

    திருப்பாவை – 27 | கூடாரை வெல்லும் | ஸ்வேதா குரலில்

    நெய்யுண்ணோம்; பாலுண்ணோம் எனப் பாடிய பாவையர்கள், பாவை நோன்பு நோற்று முடிக்கும் தறுவாயில், பாற்சோறு உண்போம், முழங்கை வழிய நெய்யுண்போம். உன்னுடன் கூடியிருந்து குளிர்ந்திருப்போம் என்கிறார்கள். கூடாரை வெல்லும்சீர் கோவிந்தனிடம் நாடு புகழும் பரிசிலும் பல்வகை ஆபரணங்களும் வேண்டும் பாவையர், எல்லாப் பரிசுகளுக்கும் உச்சிப் பரிசாக வேண்டுவது, கூடியிருந்து குளிர்ந்திருப்பதையே. மற்ற பரிசுகள் யாவும் நாடு புகழ்வதற்காக. மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடியிருப்பது தங்கள் உள்ளம் குளிர்வதற்காக. சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்ற திருநாமத்தைக் கொண்ட கோவிந்தன், இந்தப் பாவையருடன் கூடியிருந்து தானும் உள்ளம் குளிர்ந்திருப்பான். கூடாரை வெல்லும்சீர் கோவிந்தனைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேட்டு, நாமும் உள்ளம் குளிர்ந்திருப்போம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • Time Flies and Mind Stays

    Time Flies and Mind Stays

    Baskar Seshadri 

    When I knocked the manager room glass door there was a instant reply — please do come. I went straight to that madam and showed my letter and document for withdrawal.

    Sir, please do sit for awhile. She called someone for a cup of coffee and made sure that it was placed in front of me.

    Madam, I don’t need this but an issue is to be sorted out since I am on a deputation here for a period of six months.

    She picked all the papers and after conversing with someone she solved my issue of withdrawals in just five minutes flat.

    Am honored by your service ma.. so so glad that you came to my rescue.

    Its my duty sir and if I don’t do it to Baskar sir aka csb who else will?

    Common, how do you know my name?

    Sir, you have forgotten my face and I had worked as your secretary for more than two years in mid of nineties..

    Oh… ou are Saroja then?

    No sir, I joined after she left…

    Sorry ma.. I am on tabs very often. I tend to forget very many things

    Its ok sir. I have no feeling on that count.

    Oh oh… sorry ma, what’s your name?

    Am Malathi…

    Ya, I got it.

    Ayyo, I have scolded you a lot and had made you embarrassed several times in connection with the impending work – sorry ma.

    So what sir, that exercise had helped me to do the current work better.

    Oh, I feel too shy and embarrassed now that these all come to my mind.

    How do you got selected? Any service commission?

    No sir, My husband died in the office when he was left with nine years of service and on humanitarian grounds they offered this.

    Oh. all that you say melt me a lot. Sorry Mrs Malathi, please excuse now for all the embarrassments I had caused two decades ago.

    No sir, your approach and perfection is now handy for the past two years. You have been working on perfectionism even those days and it had only matured. Credit still goes to you only for having shaped me to take up the assignment. I think of you every now and these days but never I dreamt I will have the pleasure to see you. She gave her card and on seeing that I was drifted back to early nineties.

    Can I take a break and drop you at home…? How is your son Karthik ? We all saw him at Apollo. When he was born…..?

    He is fine. More than the happiness of me seeing her as a bank manager the pressure she underwent those days was hitting my head.

    I gave my hand to her and said please excuse. She caught of both hands and fell at my feet.

    Malathi your patience is mighty. While in office and now at bank  and its time that I have to learn from you now onward.

    No sir, in this twenty years plus you have grown much and I may be trailing behind by now.

    You mean you ….oh no …no more sins on my head.

    I will invite you for a coffee this weekend. Please do make it.

    Sure, only coffee but no class for me.

    It was a peel of laughter then on…

    Share
  • அன்பே வா (சிறுகதை)

    அன்பே வா (சிறுகதை)

    பாஸ்கர் சேஷாத்ரி 

    அப்பா சாயங்காலம் ஆறு மணிக்கு ரெடியா இரு.

    என்னடா எதனா கோவிலுக்குக் கூட்டிண்டு போறயா?

    இல்ல , உனக்குப் பிடிச்ச அன்பே வா படம் டி டீ எஸ் ல போடறாங்க.

    வேணாண்டா, போன மாசம் கொஞ்ச நேரம் டி வி ல பார்த்தேன்.

    நீ வேற, இது லெவல் வேற. புது கலர், சூப்பர் சவுண்ட் எபெக்ட். பாரு அந்த பெரிய ஸ்க்ரீன்ல.

    உள்ளே நுழைந்தோம்  பெரிய தியேட்டர் தான். ஒரே இருட்டு. நடுங்கும் குளிர் வேறு.

    ஏன்டா, எவ்வளவுடா டிக்கெட்டு

    சும்மா வாப்பா.

    நீ படம் பாரு. பாட்டெல்லாம் எப்படி இருக்கு பாரு

    உனக்கு பிடிச்ச விசுவோட மியூசிக்

    தெரியுண்டா. ஒன்பது  பாட்டு. அதுல ஒன்னு இங்கிலீஷ்.

    மனம் படத்தில் லயிக்கும்போதே கொஞ்சம் அன்னியமாய்ப்பட்டது. இந்தப் பணக்காரத்தனம், மனசுக்கு ஒட்டவில்லை.

    டே போலாம்டா.

    ஏம்பா. படம் ஆரம்பிச்சு ஒரு மணி கூட ஆகலை.

    கொஞ்சம் இரு என்றவன் அஞ்சு நிமிஷத்தில் ஒரு பக்கெட்டுடன் வந்தான்.

    என்னடா இது.

    பாப்கார்ன் பா. சும்மா சாப்பிடு

    டே எனக்கு எல்லாமே கொஞ்சம் தள்ளி இருக்கற மாதிரி இருக்கு.

    சும்மா புலம்பாதே. பாரு கபாலி, காமதேனுல இதைப் பார்த்தா மூட்டைபூச்சி தான் கடிக்கும்.

    ஸ்க்ரீனுக்கே துட்டு. அதே சிம்லா லொகேஷன் தான். இங்கே எப்படி இருக்கு பார்த்தியா? காலை நீட்டித்தான் வச்சுக்கொயேன்.

    சரிடா. நான் இந்த அமைப்புக்கு செட் ஆக மாட்டேன். சொல்றா , எவ்வளவுடா டிக்கெட் .

    ப்ரீ பா. பாரு பாரு . அந்தக் குதிரை பாட்டு.

    ஆமாம். குதிரை சப்தம் யாரு தெரியுமா?

    யாருப்பா, சதன் தானே

    சே சே அப்ப அவன் விசுகிட்ட சேரல. இது மீசை முருகேஷ். மூணு நாள் கஷ்டப்பட்டான். இந்தப் பாட்டு செட் போட்டு எடுத்தது. கிட்டத்தட்ட விசுவுக்கு புக்கான முதல் படம். கொஞ்சம் புரோடக்க்ஷன் டிலே. ஈஸ்ட்மன் கலர் புரோசெஸ்ல பாம்பேல லேட் பண்ணிட்டான்.

    காமிரா யாரு வின்செண்டா?

    சே. இது அறுபத்தி ஆறு ரிலீஸ். ஆபரடிவ் காமிரமேன் மாருதிராவ். யாரு தெரியுமா? முதல்ல விசுவுக்கு புக் ஆனது சந்திரோதயம் தான். நடுவுல கலங்கரை விளக்கம்னு சில பேர் சொல்றா. ஆனா அன்பே வா அறுபத்திஆறு பொங்கல். சந்திரோதயம் மே மாசம் வந்தது.

    மாருதி ராவ் யார் தெரியுமா?

    தெர்ல பா

    டாக்டர் மகேந்திரன் இருக்கான்ல?

    அந்தக் காது டாக்டர்.

    அவர் தான். அவன் அப்பா தான் மாருதிராவ்.

    சரிடா, கிளம்பு.

    எனக்கு ஒன்னுக்கு வரது. ஏதோ டிஸ்கம்பார்ட்.

    இருட்டில் வெளியே போய் வருவதற்குள் ஒரு பாட்டு போய்விட்டது.

    மெல்ல போடா, ஒரே இருட்டு. எல்லாம் ஒரே  ஷோக்கு லைட். ஒரு மண்ணும் தெரியல.

    உட்காருப்பா

    டேய், ஒரு உபகாரம் பண்ணு .

    என்னப்பா ஏதனா வேணுமா?

    ஆமாண்டா.

    சொல்லு .

    நாலு புளிப்பு மிட்டாயும் ஒரு ஆரஞ்சு கலர் சோடாவும் கிடைக்குமா?

    Share
  • தாம்பத்தியத்தில் கத்தரிக்காய் (சிறுகதை)

    தாம்பத்தியத்தில் கத்தரிக்காய் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    “பாரு! இங்க வந்து பாரேன்,” உற்சாகமாகக் கூவினார் ஜம்பு.

    “வேலையா இருக்கேன்,” என்று பதில் குரல் கொடுத்தாள், அவருடைய தர்மபத்தினி.

    எரிச்சலுடன், `இவருக்கென்ன! மாசம் பொறந்தா, `டாண்’ணு பென்ஷன் வந்துடும்! பொண்ணாப் பிறந்தவளுக்கு ஏது ஓய்வு, ஒழிச்சல் எல்லாம்!’ என்று முணுமுணுத்துக்கொண்டாள்.

    “பாரு!” புழக்கடைத் தோட்டத்திலிருந்து வந்த குரலில் ஸ்ருதி இன்னும் ஏறியிருந்தது.

    அடுப்பைச் சிறியதாக எரியவிட்டாள் பாரு. இல்லாவிட்டால், கத்தரிக்காய் கறி கரியாகிவிடுமே!

    `ஒனக்குக் கொஞ்சமாவது பணத்தோட அருமை தெரியறதா?’ என்று அதற்கு வேறு கத்துவார்.

    கணவர் இன்னொருமுறை அலறுவதற்குள், “வந்துட்டேன்,” என்று குரல் கொடுத்தபடி பின்புறம் போனாள்.

    “அப்படி என்ன தலைபோற விஷயம்?”

    “இங்கே பாரேன்!” அவரது மகிழ்ச்சிக்குப் பாத்திரமாகி இருந்ததை ஒரு விரலால் சுட்டிக் காட்டினார். கத்தரிக்காய் செடியில் ஒரு மொட்டு. தான் நட்ட செடியில் முதன்முறையாகக் காய்க்கப்போகிறது!

    உதட்டைப் பிதுக்கினாள் பாரு. “இதுக்கா இத்தனை ஆர்ப்பாட்டம்?” என்று கேட்காமல் இருக்க முடியவில்லை அவளால்.

    “நான் மார்க்கெட்டில காய் வாங்கிண்டு வந்தா, சொத்தை, வாடல், பூச்சின்னு நூறு குத்தம் கண்டுபிடிப்பியே!” என்று அவளையே தாக்கினார். “இன்னும் கொஞ்ச நாளிலே பச்சை வாசனை போகாம, செடியிலேருந்து பறிச்ச ஒடனேயே சமைக்கலாம்!”

    அவருடைய பெருமையில் பங்குகொள்ளாது, “ஒங்களோட பேசிண்டிருந்தா, கறி தீய்ஞ்சுடும்,” என்றபடி உள்ளே நடந்தாள்.

    `ரசனையே துளிக்கூட இல்லாத அசமஞ்சம்!’ என்று திட்டினார். மெள்ளத்தான். எல்லாம், அவளுக்குக் கேட்கவா போகிறது என்ற தைரியம்தான்!

    இல்லாவிட்டால், இலையைக் கவனித்துப் பரிமாறுவாளா? `நீங்களே எடுத்துப் போட்டுக்கோங்கோ,’ என்று விறைப்பாகக் கூறிவிட்டு, தொலைக்காட்சியின்முன் உட்கார்ந்துவிடுவாளே!

    “இன்னிக்கு.. சமையல் ரொம்ப நன்னாயிருக்கு, பாரு – எங்கம்மா கைப்பக்குவம் மாதிரி. கத்திரிக்காயை எண்ணெயிலேயே குளிப்பாட்டி, உளுத்தம்பருப்பு, மிளகாய்வத்தல் ரெண்டையும் வறுத்துப் போட்டியா? ஆகா!” என்றபடி ஒரு பிடி பிடித்தார்.

    `டாக்டர் எண்ணெய்ச் சாமானே கூடாதுங்கிறார். இவருக்கோ அதுதான் பிடிக்கிறது. கண்ணுல படாம, கொஞ்சம் காயை ஒளிச்சு வெச்சிருக்கணும்!’ என்று தன்னையே நொந்துகொண்டவள், இனிமேல் அப்படித்தான் செய்யவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டாள்.

    அடுத்தடுத்த வாரங்களில் ஒரு சிறு டபராவில் இருந்ததைப் பார்த்து, “ஒரு கிலோ வாங்கினேனே! இவ்வளவுதானா இருக்கு?” என்றவருக்கு அவள் எந்த பதிலும் சொல்லவில்லை.

    “எல்லாத்தையும் நீயே சாப்பிட்டுட்டியா?” என்று மேலும் துளைத்தார்.

    “நான் என்னிக்கு ஒங்களுக்கு முன்னாலே சாப்பிட்டிருக்கேன்!” என்று அலுத்த குரலில் கூறியவள், “வயசானா, நாக்கை அடக்கக் கத்துக்கணும். பாத்துச் சாப்பிடுங்கோ. நிறைய எண்ணெய் விட்டு வதக்கியிருக்கேன்,” என்ற மனைவியின் எச்சரிக்கைக்கு அப்போதெல்லாம் செவிசாய்த்திருந்தால் ஜம்புவின் இருதய அடைப்பு மோசமாகி, அவருக்கு நிரந்தர விடுதலை வாங்கித் தந்திருக்காது.

    `கத்தரிக்கா மொட்டுவிட்டபோது எப்படிப் பூரிச்சேள்! இப்போ, காய்ச்சுக் குலுங்கறதைப் பாத்தா, உசிரையே விட்டிருப்பேள்!’ பேச்சுவாக்கில் சொல்லிவிட்ட பாரு, நாக்கைக் கடித்துக்கொண்டாள்.

    `நல்ல பிஞ்சுக் காயாப் பறிச்சு, அவருக்குப் பிடிச்சமாதிரி வதக்கிப் படைக்கணும்!’

    மாலை அணிந்திருந்த சட்டத்துக்குள் அடைபட்டிருந்த ஜம்புவுக்கு அவளது ஆதங்கம் புரியவில்லை. எப்போதும்போல் விறைப்பாகத்தான் காட்சியளித்தார்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(335)

    குறளின் கதிர்களாய்…(335)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(335)

    உறன்முறையா னுட்பகை தோன்றி னிறன்முறையான்
    ஏதம் பலவுந் தரும்;.

    – திருக்குறள் – 885 (உட்பகை)

    புதுக் கவிதையில்...

    புறத்து
    உறவுமுறைத் தன்மையுடன் கூடிய
    உட்பகை அரசனுக்கு உண்டானால்,
    அது அவனுக்கு
    இறத்தல் தன்மையோடு கூடிய
    குற்றங்கள் பலவற்றைக்
    கொண்டுவரும்…!

    குறும்பாவில்...

    உறவுமுறைத் தன்மையோடு கூடிய
    உட்பகை தோன்றினால் அது கொண்டுவரும்
    இறத்தல் தன்மையுடன் கூடிய குற்றங்களை…!

    மரபுக் கவிதையில்...

    மன்னவன் தனது பின்னாலே
    மறைந்தே யிருந்து தாக்கவல்ல
    இன்னலாம் உட்பகை உறவுமுறையுடன்
    இணைந்து வந்தே தோன்றிவிடில்,
    அன்னவ னுக்கது பல்வகையில்
    ஆபத் துடனே ஆட்கொல்லும்
    தன்மை மிக்கக் குற்றங்களைத்
    தானே கொணர்ந்து சேர்த்திடுமே…!

    லிமரைக்கூ..

    உட்பகை உறவுமுறையுடன் வந்திடும்,
    அரசனுக்கு அதுவே இறத்தல் தன்மையுடன்
    கூடிய குற்றங்களைத் தந்திடும்…!

    கிராமிய பாணியில்...

    கொடியது கொடியது
    உட்பக கொடியது,
    ஒலக வாழ்க்கயிலயும்
    ராசாங்கத்திலயும்
    உட்பக கொடியது..

    அதுலயும்
    ஒறவு மொறயோட
    கூடி வருற
    உட்பக ராசாவுக்கு
    சாவுத் தன்மயுள்ள
    குத்தங்களக்
    கொண்டுவந்துடுமே..

    அதால
    கொடியது கொடியது
    உட்பக கொடியது,
    ஒலக வாழ்க்கயிலயும்
    ராசாங்கத்திலயும்
    உட்பக கொடியது…!

    Share