குறளின் கதிர்களாய்…(335)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்...(335)
உறன்முறையா னுட்பகை தோன்றி னிறன்முறையான்
ஏதம் பலவுந் தரும்;.
– திருக்குறள் – 885 (உட்பகை)
புதுக் கவிதையில்...
புறத்து
உறவுமுறைத் தன்மையுடன் கூடிய
உட்பகை அரசனுக்கு உண்டானால்,
அது அவனுக்கு
இறத்தல் தன்மையோடு கூடிய
குற்றங்கள் பலவற்றைக்
கொண்டுவரும்…!
குறும்பாவில்...
உறவுமுறைத் தன்மையோடு கூடிய
உட்பகை தோன்றினால் அது கொண்டுவரும்
இறத்தல் தன்மையுடன் கூடிய குற்றங்களை…!
மரபுக் கவிதையில்...
மன்னவன் தனது பின்னாலே
மறைந்தே யிருந்து தாக்கவல்ல
இன்னலாம் உட்பகை உறவுமுறையுடன்
இணைந்து வந்தே தோன்றிவிடில்,
அன்னவ னுக்கது பல்வகையில்
ஆபத் துடனே ஆட்கொல்லும்
தன்மை மிக்கக் குற்றங்களைத்
தானே கொணர்ந்து சேர்த்திடுமே…!
லிமரைக்கூ..
உட்பகை உறவுமுறையுடன் வந்திடும்,
அரசனுக்கு அதுவே இறத்தல் தன்மையுடன்
கூடிய குற்றங்களைத் தந்திடும்…!
கிராமிய பாணியில்...
கொடியது கொடியது
உட்பக கொடியது,
ஒலக வாழ்க்கயிலயும்
ராசாங்கத்திலயும்
உட்பக கொடியது..
அதுலயும்
ஒறவு மொறயோட
கூடி வருற
உட்பக ராசாவுக்கு
சாவுத் தன்மயுள்ள
குத்தங்களக்
கொண்டுவந்துடுமே..
அதால
கொடியது கொடியது
உட்பக கொடியது,
ஒலக வாழ்க்கயிலயும்
ராசாங்கத்திலயும்
உட்பக கொடியது…!