Blog

  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 97

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 97

    நாங்குநேரி வாசஸ்ரீ

    97. மானம்

    குறள் 961

    இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
    குன்ற வருப விடல்

    கட்டாயமா செஞ்சு முடிக்க வேண்டிய வேலையின்னாலும் அதால தன் குடும்பப் பெரும கொறையும்னு நெனச்சா செய்யக் கூடாது.

    குறள் 962

    சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
    பேராண்மை வேண்டு பவர்

    புகழோட சேந்த வீர வாழ்க்க வேணும்னு நெனக்கவுக புகழச் சேக்கதுக்காவ மானங்கெட்ட காரியத்த செய்ய மாட்டாக.

    குறள் 963

    பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
    சுருக்கத்து வேண்டும் உயர்வு

    பணக்காரனா ஒசந்த நெலயில இருக்குதப்போ அடக்கம் வேணும். ஏழையா இருக்குதப்போ அடிமயா அடங்கிப்போவாம மானத்தோட இருக்கணும்.

    குறள் 964

    தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
    நிலையின் இழிந்தக் கடை

    மக்களோட மனசுல ஒசந்த நெலயில இருந்த ஒருத்தர் மானங்கெட்டு தாழ்ந்துட்டாருன்னா தலையிலேந்து உதிந்து கெடக்க தலமயிருக்கு சமமா நெனக்கப்படுவார்.

    குறள் 965

    குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
    குன்றி அனைய செயின்

    மலை போல ஒசந்து கம்பீரமா இருக்கவுகளும் குந்துமணி அளவு தாழ்ச்சியான காரியத்த செஞ்சாகன்னா தாழ்ந்து போயிடுவாக.

    குறள் 966

    புகழின்றால் புத்தேணாட் டுய்யாதால் என்மற்
    றிகழ்வார்பின் சென்று நிலை

    மதிக்காம எளக்காரம் செய்யுதவன் பொறத்தால மானங்கெட்டு போவதால இப்பமும் புகழ் கெடைக்காது. மேலோகத்துலயும் சேர்க்காது. வேற என்னதான் தரும் அது?

    குறள் 967

    ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
    கெட்டான் எனப்படுதல் நன்று

    மதிக்காதவன் பொறத்தால போயி உசிரு வாழுதான்னு இருக்கதவிட செத்துப் போயிட்டாம்னு சொல்லப்படுதது எம்புட்டோ மேல்.

    குறள் 968

    மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
    பீடழிய வந்த இடத்து

    தன் குடும்ப மானங்கெட்டு சீரளியுதப்போ கூட சாவாம இந்த ஒடம்ப காத்து வாழுத வாழ்க்க சாவாமைக்கு மருந்து ஆவுமா?

    குறள் 969

    மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
    உயிர்நீப்பர் மானம் வரின்

    ஒடம்புல இருக்க உரோமமெல்லாம் உதிந்துபோச்சுதுன்னா கவரிமான் உசிர உடுதது கணக்கா மானங்கெட்ட பொறவு உசிரு வாழ மாட்டாக மானமுள்ள பெரிய மனுசருங்க.

    குறள் 970

    இளிவரின் வாழாத மானம் உடையார்
    ஒளிதொழு தேத்தும் உலகு

    மானம் போவுத நேரம் உசிர உடுத மனுசங்களோட புகழ இந்த ஒலகம் எப்பமும் போற்றி நிக்கும்.

    Share
  • எழுத்து – 14

    எழுத்து – 14

    வேதா. இலங்காதிலகம்
    டென்மார்க்

    எழுத்துகளின் சேர்க்கையில் எண்ணிக்கை அற்ற
    விழுப்பம் வைத்தாய் எங்கள் இறைவா!
    ழுத்து அறிவற்றவனுக்கது சிதம்பர சக்கரம்
    எழுத்தை  அறிந்தவனுக்கது இவ்வுலக சுவர்க்கம்.
    பார்வை அற்றவனுக்கும் மொழி உண்டு.
    எண்ணத்தின் உயிர்ப்பு எழுத்து, கையெழுத்து
    எழுத்தின் இதம் ஆர்ப்பரிப்பை அடக்கும்
    அழுத்தி அலையும் மனத்தை அமைதியாக்கும்.

    எழுத்து யாகம், பூசனை ஓமகுண்டம்
    அம்மா என்பது மூன்று எழுத்து
    அடி என்பது இரண்டு எழுத்து
    வா என்பது ஓர் எழுத்து
    எழுத்து ஒரு பிரமிப்பு! சுவாசம்
    எழுத்து வேளாண்மை ஓர் ஆயதமுமாகும்
    திறமையெனும் ஞானச்சாவி கொண்டு எழுதலாம்.
    பன்முகக் கூறுடைய எழுத்தே திருவள்ளுவம்.

    அன்றாட நெறி ஆன்மீக அறம் நிறைத்து
    ஈரடியில் உலகத் தத்துவம் கூறுவது.
    தகவல் பரிமாற்றத்தின் அடிப்படை மொழி
    என்பதால் எழுத்து கருவி ஆகிறது
    எல்லா மலர்களும்  கண் வைப்போரை
    கொல்லும் அழகால் வளைப்பது போல
    வல்லமை எழுத்தும் ரசனைத் தேனாம்
    வெல்லும் அறிவைப் பரிமாறுவது உண்மை.

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்- 5

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்- 5

    தி. இரா. மீனா        

    8.  “எனக்கு இங்கொரு கணவன் அங்கொரு கணவன் என்றிருக்க
         முடியாது
         உலகவாழ்க்கைக்கு ஒருவன் ஆன்மீக வாழ்க்கைக்கு ஒருவன்
         என்றிருக்க முடியுமா?
         சென்னமல்லிகார்ச்சுனன் தவிர வேறுயாரும் என்கணவனாக
         முடியாது.
         மற்ற எல்லாக் கணவர்களும் மேகங்களின் பின்னால் தெரிகிற
         உருவம்  போன்றவர்கள்தான்”

    9. “மலையில் வீடுகட்டும்போது
        காட்டு விலங்குகளைப் பார்த்து பயப்படுதல் கூடாது
        கடற்கரையில் வீடு கட்டும்போது
        அச்சம் தரும் அலைகளைப் பார்த்து பயப்படக்கூடாது
        சந்தையருகே வீடுகட்டும்போது  சத்தம்கேட்டு பயப்படக்கூடாது
        சென்னமல்லிகார்ச்சுனா உலகத்தில் பிறந்தபிறகு
        புகழுக்காகவோ குறைகளுக்காவோ அமைதியை இழக்கக்கூடாது”

    10. “அறியாமை நிறைந்தவர்களோடு
          பழகுவது கற்களைத் தேய்த்து தீ உருவாக்குவது போன்றது
          அறிவு நிறைந்தவர்களோடு பழகுவது
          தயிர் கடைந்தபிறகு வெண்ணெய் எடுப்பதுபோன்றது
          ஓ சென்ன மல்லிகார்ச்சுனா உன்சரணர்களோடு பழகுவது
          ஒரு கற்பூரமலை தீப்பிடிப்பது போன்றது”

    11. “காய்ந்த மூங்கில் முளைவிடுமா?
          எரிந்தபானை மீண்டும் களிமண்ணாகுமா?
          தன் தண்டிலிருந்து விழுந்த கனி
          மீண்டும் முளைக்குமா
          உழைக்கும் மக்கள்
          தெரியாமல் எதையோ சொல்ல
          ஆழ்நிலை பக்தர்கள் பூமிக்குத் திரும்புவார்களா?
          சென்ன மல்லிகார்ச்சுனா”

    12. “நீ தண்ணீரில் பாலைப் போன்றவன்
          எது முன்னால்
          எது பின்னால்  .
          யார் எஜமானன் யாரடிமை
          எது பெரியது
          எது சிறியதென்று
          என்னால் சொல்ல முடியாது.
          சென்ன மல்லிகார்ச்சுனா
          ஓர் எறும்பு உன்மீது
          அன்புகாட்டி உன்னைப் புகழுமென்றால்
          அதற்கு ராட்சஷ பலம் வராதா?”

    13. “இறைவா நீ கேட்டாலும் கேட்காவிட்டாலும்
          நான் பாடுவதைக் கட்டுப்படுத்த முடியாது
          நீ பார்த்தாலும் பார்க்காவிட்டாலும்
          உன்னைப் பார்ப்பதை விடமுடியாது
          நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
          உன்னை அணைப்பதைத் தடுக்கமுடியாது
          உனக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்
          உன்னை வணங்குவதை விடமுடியாது
          சென்ன மல்லிகார்ச்சுனா
          உன்னால் நான் பேரானந்தத்திலிருக்கிறேன்.”

    14. “மரணத்திலிருந்து தப்பமுடியா விட்டால்
          திறமை மிகுதியால் என்ன பலன்?
          விரதமிருக்கலாம் தீய பழக்கங்களை விட்டுவிடலாம்
          மூச்சையடக்கலாம் பசியைக் கட்டுபடுத்தலாம்
          முழுவுலகமும் காவல்காரனாக இருந்தால்
          திருடன் எங்கே ஒளிவான் சென்ன மல்லிகார்ச்சுனா”

    15. “எருமைக்கு அதன்கவலை
          தோல் தொழிலாளிக்கு அவன்கவலை
          உலகமனிதர்களுக்கு அவர்கள் கவலை
          அவனுக்கு அவன் கவலை
          எனக்கு சென்ன மல்லிகார்ச்சுனன் விரும்புவானா என்ற கவலை”

    16. “அன்பு ஆழமாகவும் உண்மையாகவுமிருக்கும்போது
          நாம் சாதியையும் சமயத்தையும்  பார்ப்போமா
          மயங்கும்போது வெட்கம் வருமா
          சென்ன மல்லிகார்ச்சுனனிடம் மயங்கும்போது
          உலகவாழ்க்கை புரியுமா? ”

    17. “உள்ளிருக்கும் நஞ்சின் வேட்கையை விடாத வரையில்
          மகுடி இசைக்கு நாகம் படமெடுத்து ஆடியென்ன?
          மனதுள்ளிருக்கும் தீக்குணம் விடாத வரையில்
          பாடியென்ன? கேட்டென்ன?
          அகமறிந்து புறம் மறந்தவரை எனக்குக்
          காட்டிடுவீர் சென்ன மல்லிகார்ச்சுனா.”

    18. “எங்கே சென்றாலும் வீரனுக்கு பயமில்லை
          கோழைக்கு மகிழ்ச்சியில்லை காணீரய்யனே!
          கொடுப்பவனுக்கு தீயகுணமில்லை
          கருணையுள்ளவனுக்குப் பாவமில்லை
          உம்மைத் தொட்டு பிறர்பொருள்  பிறன்மனை
          தொடாதவனுக்கு மறுபிறவியில்லை சென்ன மல்லிகார்ச்சுனா.”

    19. “குயில்களே! அவன் எங்கேயிருக்கிறான்
          மயில்களே உங்களுக்குத் தெரியுமா
          அவன் எங்கேயிருக்கிறான் தெரிந்தால் சொல்லுங்கள்
          என் சென்ன மல்லிகார்ச்சுனன் ”

    20. “மரங்களே! பறவைகளே! நான் ஏன்
          அவனைப் பார்க்க முடியவில்லை?
          மயில் மலையை விட்டு மண்மேட்டில் ஆடுமா?
          வாத்து ஏரியைவிட்டுச் சிறுபள்ளத்தில் நீந்துமா?
          குயில் மாவிளந்தளிர்களைக் கோதாமல் பாடுமா?
          மணமில்லாத மலரருகே தேனீ சுற்றுமா?
          மனம் சென்ன மல்லிகார்ச்சுனனை விட்டு வேறு எதையும்
          நாடுமா? “

    21. “குருவே எசமானன் ஆனான்
           இலிங்கம் மணமகனானான்
           நானே மணமகள் ஆனேன்
           கணக்கற்ற பெற்றோர்கள் எனக்கு; உலகறியுமிது
           தகுந்த வரன் தேடியதால் எனக்கு
           சென்ன மல்லிகார்ச்சுனன் கணவனானான்.
           உலகின் பிற மனிதர்கள் எனக்கு உறவல்ல, பிரபுவே”

    22. “இன்று என் கணவன் வீட்டுக்கு வரப்போகிறான்
          நீங்கள் எல்லோரும் தயாராக இருங்கள்
          சென்ன மல்லிகார்ச்சுனன் இப்போது வரலாம்
          அவனை எல்லோரும் வரவேற்று மகிழுங்கள்”

    வசன இலக்கியம் என்னும் போது வசனகாரர்களில் ஆண்களில் பசவேசரையும், பெண்களில் அக்கமாதேவியையும் சொல்வதுதான் மரபாக இருக்கிறது. இன்றும் அக்காவின் வசனங்கள் எல்லா நேரங்களிலும் கன்னட மண்ணில் மிகச் சாதாரணமாகவும், சரளமாகவும் பயன் படுத்தப்பட்டு வருவது அக்கமாதேவியின் வசனங்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

                                                                                                                                                                [தொடரும்]

    Share
  • 2020இல் சந்திரயான் -3: புதிய நிலவுப் பயணத் திட்டம்

    2020இல் சந்திரயான் -3: புதிய நிலவுப் பயணத் திட்டம்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    India targets New Moon Mission Chandrayaan -3 in 2020

    *******************************

    ++++++++++++++++++++++

    Related image

    2020 ஆண்டில் இந்தியா மீண்டும் சந்திரயான் – 3 அனுப்பி  நிலாவில் தளவுளவி, தளவூர்தி இறக்கப் போகிறது.

    2019 செப்டம்பரில் வெற்றிகரமாகச் சந்திரயான் -2 நிலவைச் சுற்றி, தளவுளவியைப் பாதுகாப்பாக இறக்கினாலும், நேராக நிற்க இயலாமல், சரிந்து போய் தளவூர்தி நகர்ந்து ஊர்ந்திட முடியாமல் சிக்கிக் கொண்டது.  மேலும் தளவுளவி மெதுவாக இறங்கி, நிலவைத் தொடும் முன்பே, தகவல் அனுப்பு தடைப்பட்டது.  ஆகவே சந்திரயான் -2 அனுப்புத் திட்டப்பணி 95% அளவு வெற்றிதான் பெற்றது.  இப்போது 2020ஆம் ஆண்டில் மேற்கூறிய தவறுகளைத் திருத்த, சந்தியான் -3 புதிய நிலவுப் பயணத்தை இந்தியா மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.  அதை 2020 ஜனவரி முதல் தேதியில் அறிவித்தவர், இந்திய விண்வெளித் தேடல் வாரியத் தலைவர் கே. சிவன்.  திட்டம்  நிறைவேறும் மாதம் 2020 நவம்பர் அல்லது 2021 முதல் மாதங்கள்.  அதற்குச் செலவாகும் நிதித் தொகை : சுமார் 35 மில்லியன் டாலர் என்றும் டாக்டர் சிவன் அறிவித்தார்.  மேலும் 2022 ஆண்டு நடு மாதங்களில் மூன்று விண்வெளி விமானியர் இயக்கும், மனித விண்வெளிச் சிமிழ் பூமியைச் சுற்றிவரும் திட்டம் தயாராகி வருகிறது.  அதற்கு  நால்வர் இம்மாதம் ரஷ்யாவில் பயிற்சி தொடங்குவார் என்றும், அப்பெரிய நிகழ்ச்சி இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டு பூர்த்தி நினைவாக இருக்கும் என்றும் பெருமையாகக் கூறினார்.

    ++++++++++++++++++++++++++++++++++

    Related image

    Image result for vikram lander failure

    விக்ரம் தளவுளவி விழுந்த இடம் கண்டுபிடிப்பு

    [டிசம்பர் 3, 2019]

    ++++++++++++++++++

    Image result for ISRO CHANDRAYAAN -3
    +++++++++++++++++++++
    ++++++++++++++++++++

    நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்
    உளவிச் சென்று நாசா
    துணைக்கோளுடன் தென் துருவத்தில்
    ஒளிமறைவுக் குழியில்
    பனிப் படிவைக் கண்டது !
    நீரா அல்லது வாயுவா என்று
    பாரதமும் நாசாவும் ஆராயும்  !
    சந்திரனில் சின்னத்தை இறக்கியது
    இந்திய மூவர்ணக் கொடி !
    யந்திரத் திறமை காட்டும் இப்பயணம்
    பந்தய மில்லை !
    விந்தை புரிந்தது இந்தியா !
    இரண்டாம் சந்திரயான் விண்சிமிழ்
    2019  செப்டம்பரில்
    முதன்முதல்  இறக்கும்  தளவுளவி
    தகவல் இணைப்பு இழந்து,
    சரிந்துபோய் விழுந்தது !
    மூன்றாம் சந்தரயான் விண்சிமிழ்
    நிலவைச் சுற்றி  இறக்கும்
    மீண்டும் ஓர் தளவுளவி.
    தளவுளவி இறக்கும் மீண்டுமோர்
    தளவூர்தி.
    தவறுகள் திருத்துவார்.
    விண்வெளிச் சாதனையில் இந்தியா
    நாலாம் இடம் பெறும்.  

    +++++++++++

     

    Image result for nasa finds indian moon lander
    தளவுளவி விழுந்த இடம் கண்டுபிடித்த சண்முக சுப்ரமணியன்
    +++++++++++++++++++++
    +++++++++++++++++++
    Image result for ISRO CHANDRAYAAN -3
    +++++++++++++++++++++

    Related image

    2019 செப்டம்பரில் தவறி விழுந்த சந்திரயான் -2 தளவுளவி விக்ரம் மூன்று மாதம் கழித்து நிலவில் இருப்பிடம் கண்டுபிடிக்கப் பட்டது.  அதைக் கண்டுபிடித்த தமிழர் பெயர் சண்முக சுப்ரமணியன்.  அவர் ஓர் விண்வெளி ஆர்வலர் [Amateur Space Enthusiast].  33 வயதானர்.  பழைய ஐ.ஐ.டி. சென்னை மாணவர். நாசா டிசம்பர் 2 ஆம் தேதி தனது நிலவு உளவிச் சுற்றி  [Lunar Reconnaissance Orbiter (LRO] மூலம் செப்டம்பர் 6 இல் கிடைத்த தளப் படமுடன் இந்தச் செய்தியை வெளியிட்டது. நிலாச் சுற்றி அனுப்பிய செப்டம்பர் 17  தளப்படத்தில் விக்ரம் விழுந்த இடம் அறிய முடியவில்லை.  அப்படங்களை வைத்துக் கொண்டு சண்முக சுப்ரமணியன் தனது மடிக்கணினிகள் மூலம், சவாலான தளவுளவி விழுந்த இடத்தைத் தேடினார்.  நாசா அனுப்பிய பழைய படங்கள் ஒரு மடிக்கணனியிலும், புதிய படங்களை அடுத்தோர் மடிக்கணனியிலும் இட்டு ஒப்பு நோக்கினார். நாசா 100% மெய்யாக சரிபார்த்த பிறகுதான், இந்த அரிய கண்டுபிடிப்புச் செய்தியை வெளியிட்டது.  இந்தியா ஏவிய சந்திரியான் -2 தளவுளவி நிலவில் பாதுகாப்பாக, வெற்றிகரமாக இறங்கி, ரஷ்யா, அமெரிக்கா, சைனா  நாடுகளோடு உலகில் நான்காவது நாடாகப் பெயர் பெற்றுள்ளது. ஆயினும் தளவுளவி சமிக்கை அனுப்பி இன்னும் உரையாட வில்லை.  தளவுளவி நேராகித் தளவூர்தியை இறக்கவில்லை.

    +++++++++++++++++++++++++

    Image result for vikram lander failure

    இந்தியச் சந்திரயான் -2 தளவுளவி விக்ரம் இறுதித் தோல்வி முன்னேர்ச்சியில் பெற்ற ஒரு பின்னேர்ச்சி.

    2019 செப்டம்பர் 7 இல் இந்திய விண்வெளித் தேடல் வாரியம் நிலவை நோக்கி ஏவிய சந்திரயான் -2 பேரார்வத் திட்டம்  95% வெற்றி அடைந்து, இறுதியில் மெதுவாக இயங்கிய தளவுளவி, நிலவுக்கு மேல் சுமார் ஒரு மைல் உயரத்தில் தகவல் அனுப்பத் தவறி,  செங்குத்து நிலை சரிந்து, முறியாமல் விழுந்துள்ளது, உலக நாடுகளின் கவனத்தைக் கவர்ந்துள்ளது.  சரிந்து நொறுங் காமல், நிலவின் தென் துருவத்தில், திட்டமிட்ட இடத்தில் இறங்கியுள்ள விக்ரம் தளவுளவியைச் சந்திரயான் – 2 இன் விண்சிமிழ் கண்டுபிடித்துள்ளது.  அதே சமயத்தில் நிலவைச் சுற்றி வந்த அமெரிக்க நிலவுக் கண்காணிப்புச் சுற்று துணைக் கோள்  [(LRO) -LUNAR RECONNAISSANCE ORBITAL] சந்திரயான் -2 விக்ரம் தளவுளவியைத் தேடிய போது, நிலவில் இருட்டாகி விட்டதால், காண முடியாமல் போனது.  அடுத்து சூரிய ஒளி நிலவின் தென் துருவத்தில் விழும்போது, அமெரிக்கத்  துணைக்கோள் தேடிக் காண வாய்ப்புகள் உள்ளன.

    Image result for vikram lander failure

    தொடர்ந்தெழும் இந்திய விண்வெளித் தேடல் முயற்சிகள்

    சந்திரயான் -2 விண்வெளித் திட்ட வினைப்பாடுகள் யாவும் சமீபத்தில் இந்தியா சாதித்த உன்னத விஞ்ஞான பணிகளாகக் கருதப் படுகின்றன.   அதுபோல் ராக்கெட் நுணுக்கம் விருத்தியாகி, இந்தியா ராணுவப் பாதுகாப்பு முன்னணியில் இருப்பது, சைனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்குச் சவாலாக உள்ளது.  இந்தியா நிலவுக்கும், செவ்வாய்க் கோளுக்கும், விண்சிமிழ்களை அனுப்பி, விண்வெளித் தேடல் முயற்சிகளை, 50 ஆண்டுகட்கும் மேலாக நடத்திக் கொண்டு வருவது பெருமைக்கு உரிய வரலாற்றுச் சாதனைகள் ஆகும்.

    Related image

    1969 இல் இந்திய விண்வெளித் தேடல் வாரியம் நிறுவகம் ஆனது.  ஆரம்ப காலங்களில் ராக்கெட் ஏவுகணைகள் விருத்தி செய்யப்பட்டு, துணைக் கோள்கள் பூமியைச் சுற்றிவர அனுப்பப் பட்டன.  2008 இல் சந்திரயான் -1 நிலவு நோக்கி ஏவப்பட்டது.  அதுவே நிலவில் நீர் இருப்பதை முதல் கண்டுபிடித்தது.  2014 இல் செந்நிறக் கோள் செவ்வாய் நோக்கி, இந்தியா மங்கல்யான் விண்சிமிழ் ஏவி வெற்றிகரமாக, சுற்றி வந்தது.  2019 இல் சந்திரயான் -2 மீண்டும் நிலவு நோக்கிச் சென்று, முதன்முதல் விக்ரம் தளவுளவியை  நிலவின் தென் துருவத்தில் இறக்கி விட்டது.  இதுவரை எந்த நாடும் துணிந்து புரியாத தீரச் செயலாகக் கருதப்படுகிறது.   அடுத்து இந்தியாவின் திட்டம், மூவர் இயக்கும் விண்கப்பல் 2022 ஆண்டில் ஏவப் பட்டு வெற்றிகரமாகப் பூமியைச் சுற்றிவரும்.

    +++++++++++++++++

    Image result for vikram lander

    விக்ரம் தளவுளவிக்கு 14 நாட்கள் ஓய்வு

    +++++++++++++++++++++

    1. https://www.space.com/topics/india-space-program
    2. https://www.space.com/india-moon-lander-time-running-out.html
    3. https://www.space.com/lro-fails-see-india-moon-lander-vikram.html
    4. https://www.space.com/india-chandrayaan-2-moon-south-pole-landing-site.html

    +++++++++++++++++

    Image result for isro chandrayaan -2 vikram lander

    விக்ரம் தளவுளவி சாய்ந்து இறங்கியுள்ளது

    சூரிய ஒளிமறைவுப் பகுதி நிலவில் சிக்கிய விக்ரம் தளவுளவி.

    2019 செப்டம்பர் 17 இல்  நாசாவின் நிலவுக் கண்காணிப்புச் சுற்றி [(LRO) LUNAR RECONNAISSANCE ORBITOR] நிலவின் தென் துருவத்தை நெருங்கி சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி விழுந்திருக்கும் இடத்தின் மீது பறக்கும் போது, அந்திமப் பொழுதாகி விட்டதால் தளவுளவி உருவத்தைப் படம் எடுக்க முடியவில்லை.  அந்திமப் பொழுதின் மங்கிய வெளிச்சத்தில் தளவுளவி விழுந்த இடத்தைக் நாசாவின் நிலவு கண்காணிப்புச் சுற்றியின் சக்தி வாய்ந்த காமிரா காண முடியாமல் போனது.  இப்போது [2019 செப்டம்பர் 19] நிலவின் இராப் பொழுது துவங்கி விட்டதால் இன்னும் 14 நாட்கள் தளவுளவி இருட்டு விண்வெளியில் சூரிய வெளிச்சம் படாது.

    ஆயினும் நிலவைச் சுற்றிவரும்  சந்திரயான் -2 விண்சிமிழ் கருவிகள் சோதிக்கப் பட்டு, திட்டமிட்ட மற்ற தகவலை இன்னும் சுமார் ஏழாண்டுக்கு அனுப்பிவரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  ஆனால் தகவல் அனுப்ப இயலாத தளவுளவி 14 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும்.  அதற்குப் பிறகு விழித்து தகவல் அனுப்பினால் இந்தியாவுக்கு நிலவுப் பயண வெற்றியில் நான்காம் இடம் கிடைத்துப் புகழடையும்.

    An artist's depiction of India's Chandrayaan-2 lander and rover on the surface of the moon, near its south pole.

    விக்ரம் தளவுளவி நேராக இறங்கி நிலவின் தென் துருவத்தில் அமர எதிர்பார்க்கப் பட்டது.

    +++++++++++++++++++

    1. https://economictimes.indiatimes.com/news/science/nasa-joins-isro-to-track-vikram-calling-home/articleshow/71097087.cms
    2. https://www.moneycontrol.com/news/india/chandrayaan-2-nasa-helps-isro-to-establish-communication-with-vikram-lander-4432871.html?fbclid=IwAR3zEJRhzpwcwWipD2mgPMutgpMNpCfHXFSbq2-APrec5utl-ucVeEW5VJY
    3. https://www.businesstoday.in/latest/trends/chandrayaan-2-not-only-isro-nasa-also-sends-messages-lander-vikram-moon/story/378594.html?fbclid=IwAR3aeAO2h152zc0uRLO90Ym7FpPyrmXXHIMpqtJ3jXX1qA145d_NBuz_Pgs
    4. https://www.businesstoday.in/latest/trends/chandrayaan-2-landing-failed-isro-loses-contact-with-lander-vikram/story/377813.html?utm_source=recengine&utm_medium=WEB&referral_sourceid=378149&referral_cat=Trends
    5. https://www.indiatoday.in/science/story/chandrayaan-2-vikram-landing-somersault-isro-exlusive-1598882-2019-09-13
    6. https://www.indiatoday.in/science/story/2-giant-asteroids-as-big-as-burj-khalifa-to-zip-past-earth-today-nasa-1599001-2019-09-14

    ++++++++++++++++++++++++++++++

    ISRO OFFICIALY CONFIRMS THAT ORBITER HAS LOCATED VIKRAM LANDER

    சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் தகவல் அனுப்பத் தவறி நிலவில் சாய்ந்து கிடக்கிறது.

    இப்போது இந்திய விண்வெளித் தேடல் விஞ்ஞானிகளுக்கும், பொறியியல் நுணுக்க நிபுணருக்கும் மிக மிகச் சவாலான தருணம் நேர்ந்துள்ளது.  சந்திரயான் -2 திட்டம் 95% வெற்றிகர மாக நிகழ்ந்து, நிலவின் தென் துருவத்தில், விகரம் தளவுளவி இறங்கி வரலாற்று முதன்மை பெற்றுள்ளது.  இறுதி நேரத்தில் தளவூர்தி தகவல் அனுப்பத் தவறி, சில மின்யந்திரக் கோளாறு களால், செங்குத்து நிலை தடுமாறி நிலவில் சாய்ந்து கிடப்பதை, நிலவைச் சுற்றிக் கொண்டிருக்கும் சந்தியான் -2 விண்சிமிழ் கண்டுபிடித்துப் படம் எடுத்துள்ளது.  இப்போது விக்ரம் தளவூர்தி நேராக நிமிர்த்தப் படவேண்டும்.  மீண்டும் தகவல் இணைப்பு நிகழ வேண்டும்.  இப்பணிகள்தான் இப்போது முயற்சியில் உள்ளன.  இந்திய விஞ்ஞானி களுக்கு விக்ரம் தளவுளவியை உயிர்ப்பிக்க அமெரிக்க நாசாவின் வல்லுநர் முன்வந்துள்ளனர்.  காரணம் நாசாவின் சில கருவிகள் விக்ரம் தளவுளவியில் இணைக்கப் பட்டுள்ளன.  இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த அவசரப் பணிகள் முடிந்து, சந்திரயான் -2 இன் திட்டம் முழுமையாய் வெற்றி அடைய வாய்ப்புக்கள் உள்ளன.

    https://www.indiatoday.in/science/story/2-giant-asteroids-as-big-as-burj-khalifa-to-zip-past-earth-today-nasa-1599001-2019-09-14

    WHAT NOW?

    It’s been nearly a week since the Indian Space Research Organisation lost contact with the Chandrayaan-2 lander. Since then, Isro, which continues to remain tight-lipped over the matter, has been making constant efforts to re-establish communication with the spacecraft.

    A day after losing contact with Vikram, Isro said it had been able to locate the Chandrayaan-2 lander on the Moon. However, communication with the lander remains elusive.

    Next week, a lunar orbiter operated by the United States’ National Aeronautics and Space Administration (Nasa) is set to fly over the area where Vikram is located. The orbiter is expected to take pictures and offer clues to Vikram’s fate.

    Meanwhile, the Chandrayaan-2 orbiter remains safe in its orbit around the Moon. In fact, it was the Chandrayaan-2 orbiter that, on Sunday, managed to locate Vikram on the lunar surface.

    The orbiter’s mission life has been extended from one year to seven years, due fuel savings made during the trip to the Moon. Over the course of its mission life, the Chandrayaan-2 orbiter will perform several experiments, including one to estimate the quantity of iced water on the Moon.

    Image result for cHANDRAYAAN -2 lost contact

    சந்திரயான் -2 திட்டம்  95% நிறைவு பெற்று, இறுதியில் 

    தகவல் அனுப்பத் தவறியது. 

    [ விண்வெளித் தேடல் வாரியத் தலைவர் டாக்டர் சிவன்.]

    ++++++++++++++++

    1. https://youtu.be/q7Omv4EX8RM
    2. https://economictimes.indiatimes.com/news/science/chandrayaan-2-setback-india-loses-contact-with-vikram-lander-during-descent/articleshow/71018277.cms?utm_source=newsletter&utm_medium=email&utm_campaign=mlpdaily&ncode=4b749efe6f3285bfc668b352f29b8270
    3. https://youtu.be/phN5S9cHeWM
    4. https://frontline.thehindu.com/static/html/fl2619/stories/20090925261913200.htm
    5. http://www.cnn.com/2009/WORLD/asiapcf/08/30/india.moon.mission/index.html
    6. https://youtu.be/sd6grEvZn1A
    7. https://youtu.be/ANyg9VGSqbY
    8. http://www.moondaily.com/reports/NASA_finds_Indian_Moon_lander_with_help_of_amateur_space_enthusiast_999.html?
    9. https://news.abplive.com/news/india/indian-techie-shanmuga-subramanian-helps-nasa-find-chandrayaan-2s-vikram-lander-on-moon-1117529
    10. https://www.nytimes.com/2019/12/02/science/india-moon-mission-vikram-lander-found.html
    11. http://www.moondaily.com/reports/India_targets_new_moon_mission_in_2020_999.html

    +++++++++++++++++++++

    S. Jayabarathan [jayabarathan.wordpress.com/]  January 5, 2020  [R-3]

    Share
  • (Peer Reviewed) காப்பியமாந்தர் படைப்புகளும் கருத்துருவாக்கங்களும்

    (Peer Reviewed) காப்பியமாந்தர் படைப்புகளும் கருத்துருவாக்கங்களும்

    முனைவர் மு.சுதா
    உதவிப்பேராசிரியர்
    தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம்
    காரைக்குடி


    தமிழின் பெருமையை உலகிற்குப் பறை சாற்றியவை தமிழ் இலக்கியங்கள். சங்க இலக்கியங்கள், அற இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் எனத் தொடர்ந்து இன்றைய நவீன இலக்கியங்கள் வரை ஒவ்வொரு படைப்புகளும் தன்னளவில் தனித்துவம் பெற்றனவாக விளங்கி வருகின்றன. குறிப்பாக ஆய்வுக்குரிய காப்பிய இலக்கியங்கள்.

    அகத்தையும் புறத்தையும் பாடுபொருளாகக் கொண்ட சங்க இலக்கியங்கள் குறுகிய அடிகளில் மக்களின் உள்ளத்து உணர்வுகளின் வெளிப்பாடாய் வாழ்வியல் பதிவுகளாய் அமைந்தன. அற இலக்கியங்கள் அம்மக்களுக்கு நல்வழியை எடுத்தோதின. பின்வந்த காப்பிய இலக்கியங்கள் அகம், புறம், அறம், பக்தி என்ற பல நிலைப்பாடுகளையும் ஒருங்கே தன்னகத்துக் கொண்டு தோன்றியதுடன் அவை தோன்றிய சமூகப் பதிவாய் அமைந்ததும் தனிச் சிறப்பாகும். தாம் தோன்றிய சமூகக் கட்டமைப்புக்குக் உட்பட்டு அதே நேரத்தில் சமூக மேன்மைக்குக் காரணமான தங்களது உள்ளக்கிடக்கைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ தங்கள் படைப்புகளின் வழி பதிவு செய்து வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் காப்பியப் பெருமக்கள். இது இவர்களுடைய ஆளுமைத்திறனாகும். இவ்வாளுமைப்பண்பை உணர இவர்கள் தம் படைப்புகளை ஆழ்ந்து நோக்கவேண்டும்.

    படைப்புகளை ஆழ்ந்து நோக்கினால் மட்டுமே படைப்பின் நோக்கம் பற்றியும் அறிய இயலும். அவற்றின்வழி அப்படைப்பு தோன்றிய சமூகம் பற்றியும் உணரவியலும். சமுதாயத்திற்குத் தன் உருவாக்கத்தின் வழி ஏதோ ஒன்றைக் கூறவியலும் ஆசிரியனின் உள்ளக்கிடக்கையை உணர முடியும். அவ்வாறில்லாமல் ஓர்காப்பியத்தைச் சுவைக்காகப் பொழுதுபோக்கிற்காகப் புத்திலக்கியம் என்ற நிலையில் மட்டும் காண்பது சரியானதல்ல. காப்பிய ஆசிரியனின் ஒவ்வொரு படைப்பும் நல்லகருத்து உருவாக்கத்திற்கே. அந்த சமூகநோக்குச் சிந்தனையைக் கருத்தினைத் தான் உருவாக்கிய மாந்தர் படைப்புளின் வழி அவ்வாசிரியன் வெளிக்கொணருகின்றான்.

    மாந்தர்படைப்பு என்பது காப்பியத்தின் உயிர்நாடியைப்போன்றது என்பர். இத்தகைய மாந்தர்களை எடுத்தாளும் காப்பியன் தான் ஒரு நோக்கத்தில் அம்மாந்தர் படைப்புகளுக்கு உயிர் கொடுக்க அதனைத் தவறாக உணர்வதுடன் காலப்போக்கில் அப்படைப்பு பற்றிய தவறான கருத்துருவாக்கங்களையும் பதியவைத்துப் படைப்பாசிரியரின் நோக்கத்தையே சிதைத்து விடுகின்றனர். இத்தகைய போக்கு மாறவேண்டும் என்ற அடிப்படையிலேயே காப்பியமாந்தர் படைப்பும் கருத்துருவாக்கங்களும் என்ற தலைப்பில் இவ்வாய்வுக்கட்டுரை அமைகின்றது.

    கோவலன் மாந்தர் படைப்பும் கருத்துருவாக்கங்களும்

    சிலம்பின் முதன்மை மாந்தர் கோவலன். கற்பில் சிறந்தவளாம் பொற்புடைத் தெய்வமாம் புகழப்படும் கண்ணகியையும், கணிகையர் குலத்துப்பிறந்த கற்பில் சிறந்தவளாகிய மாதவியையும் தன் உறவாக்கிக் கொண்டவன். சூழலால் செல்வம் இழந்து, பிறந்தகத்தைத் தொலைத்து, அன்புக்குரியோளைப் பிரிந்து அகம்காத்தோளை அழைத்துக்கொண்டு தொலைத்த செல்வத்தை மீட்டுப் பெறச் சென்றவன் பிறந்த மண்தொடாதே மரணத்தைத் தொடுகின்றான். அய்யோ பாவம்! என அவலமடையச்செய்யும் மாந்தர்படைப்பாகக் கோவலன் அனைவரின் மனத்திலும் பதிகின்றான். கணவனுக்காக நீதிகேட்கும் கண்ணகியின் போர்ச்செயலில் கோவலன் உயர்வடைகின்றான். ஆனால் கோவலனின் மாந்தர் படைப்பை உற்று நோக்குகையில் இளங்கோவடிகள் ஏதோ ஒன்றை உணர்த்த விரும்புவதை உணரவேண்டும். செல்வத்தில் பிறந்து வாழ்க்கையை வாழத்தெரியாத ஒருவன் தான் அழிந்து போவது மட்டுமல்லாமல் தன்னைச் சார்ந்தோரையும் அழித்துவிடுவான் என்ற சமூகநோக்குச் சிந்தனை விதைக்கு உதாரணமாக கோவலன் விளங்குவதை தனது காப்பியஅடிகளில் இளங்கோவடிகள் சுட்டிச் செல்வதை நோக்கவேண்டும்.

    சிலப்பதிகாரக் காப்பியத்தலைவன் கோவலன் கண்ணகியை மணம் புரிந்து வாழ்வினைத் துவங்குவது முதல் மாதவியுடன் வாழ்வு, மீண்டும் கண்ணகியை வந்தடைந்து மதுரைக்குச் செல்லுதல், ஊழ்வினை காரணமாகக் கொலைப்படுதல் என்று இம்மாந்தர் படைப்பு அமைகின்றது.

    இம்மாந்தர்படைப்பினைக் காப்பியக் கதைப்போக்கில் காணுவது ஒருநிலை என்றால் அம்மாந்தரின் வழிச் சமூகத்திற்குப் படைப்பாளன் கூறவிழைவதென்ன? என்பதனை ஆய்வின் வழி எடுத்துரைப்பதும் கடமையாகும். ஏனென்றால் ஒவ்வொரு படைப்பாளனுக்கும் அவனது படைப்பிற்கும் எனக் கொள்கைகள் உண்டு. சமூகத்திற்கு அவன் கூற விழையும் கருத்துண்டு. அவற்றை ஆய்வின் வழி கூறல் என்பது இன்றியமையாதது.

    கோவலன் என்ற படைப்பின் வழி இளங்கோவடிகள் பல கருத்துகளை உலகிற்குச் சுட்டிச்செல்கிறார். அவற்றில் ஒன்று எல்லா காலத்திற்கும் உரியவாகும் ‘நிதிமேலாண்மை’ எனும் வாழ்வில் பின்பற்ற வேண்டிய இன்றியமையா சிந்தனையாகும்.

    அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
    இவ்வுலகம் இல்லாகி யாங்கு (குறள்: 247)

    பொருளின் முக்கியத்துவம் இங்கு உணர்தத்ப்படுகின்றது. வாழ்க்கைக்குரிய ஆதாரமான இப்பொருளாதாரம் அன்று மட்டுமல்ல இன்றும் மிகத்தேவையான ஒன்றாகும். இத்தகையப் பொருளைப் போற்றிக்காவாதுவிட்டால் அது பொருளுக்குரியவரை மட்டுமல்லாது அவரைச் சார்ந்து வாழும் அனைவரையும் அல்லல்படுத்தும். தனிமனிதன் மட்டுமல்லாது அவனால் உருவாகும் இச்சமுதாயம் மேம்பட ஒவ்வொருவருக்கும் பொருளாதாரம் பற்றிய சிந்தனை இருக்கவேண்டும்.

    இக்கருத்தை காலம்தோறும் இலக்கியங்கள் பதிவுசெய்துகொண்டு வருகின்றன. பொருளின் தேவையை மட்டும் பதிவுசெய்யாது அப்பொருளை எவ்வாறு பாதுகாக்கவேண்டும் என்பதனையும் வலியுறுத்துவது இவ்விலக்கியங்களின் குறிப்பிடத்தக்கச் சிறப்பாகும்.

    இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
    வகுத்தலும் வல்லது அரசு (குறள்: 385)

    என்பது வள்ளுவரின் வாக்கு. எத்தகையோன் அரசன்? எது சிறந்த ஆட்சி? என்று எடுத்துரைக்கையில் பொருளைச்சேர்தலும் அப்பொருள் வரும் வழிகளை மேன்மேல் உளவாக்கலும் அங்ஙனம் வந்தவற்றை  ஒருவழித் தொகுத்தலும் தொகுத்தவற்றைப் பிறர் கொள்ளாமல் காத்தலும் காத்தவற்றை அறம் பொருள் இன்பங்களின் பொருட்டு விடுத்தலும் செய்தல்வேண்டும். தேடும் பொருளை இவ்வாறு பாதுகாப்பதே நல்ல அரசு என்று வள்ளுவர் கூறும் கருத்து ஓர் அரசனுக்கு மட்டும் உரிய மேலாண்மைப்பண்பு மட்டுமல்ல. பொறுப்புடைய ஒவ்வொருவருக்கும் வேண்டிய பண்பாகும்.

    நிதிமேலாண்மை இல்லாத ஒருவனிடத்து அப்பொருள் தங்குவதில்லை. அவ்வாறு தங்காதப்பொருளினால் அப்பொருளுக்குரியவன் மட்டுமல்லாது அவனைச் சார்ந்தோரும் துன்புறுவர் என்பதையே நம் இலக்கியங்கள் காலந்தோறும் சுட்டிக்காட்டி வந்துள்ளன. நாட்டிற்குத் தலைவனானாலும் வீட்டிற்குத் தலைவனானாலும் அங்கு அவனுக்கு பொருளின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகின்றது. பொருளைச் சேர்ப்பது மட்டுமல்லாமல் அதனைப் பாதுகாத்துச் சுற்றம் காப்பவனே சிறந்த மேலாண்மைப்பண்புடையவன் என்று இலக்கியங்கள் அறிவுறுத்தத் தவறவில்லை.

    குறிப்பாக நிதிமேலாண்மை  பற்றிக்குறிப்பிடுகையில்

    ஒரு நிறுவனம் வரவும் வரவிற்குள் செலவும் செய்யத் திட்டமிடல் வேண்டும். வருங்காலத்தில் எதிர்பாராத் தேவைகள் ஏற்படக் கூடுமாதலால் தனியே ஒரு ஒதுக்கீட்டு நிதி ஏற்படுத்தவேண்டும் என்கிறது. மேலும் இவ்வாறு திட்டமிடாத நிறுவனம் அழிந்து விடுவதுடன் நிதி ஆதாரமின்றி செலவழிக்கும் அந்நிறுவனத்தார் நிதிமேலாண்மைப் பண்பற்றவர்கள் (பேரா.சி.நாகராசன், பேரா.சா.நடராசன், பேரா.சி.ரா.மணிவாசகம், மேலாண்மை பொருளும் கோட்பாடுகளும், : 245) என்றும் திறனாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

    சிலப்பதிகாரம் இந்நிதிமேலாண்மைச் சிந்தனையை அழகாகப் பதிவு செய்துள்ளது. இளங்கோவடிகள்  மேலாண்மைப்பண்பு குறித்தத் தன் கருத்துகளை மக்களுக்கு எடுத்துரைக்க கோவலன் மாந்தர்படைப்பைப் பயன்படுத்திக்கொள்கிறார். காப்பியத் தலைவனாகக் கோவலன் சுட்டப்பட்டாலும் அவன் போற்றுதலுக்கு உரியன் அல்லன் என்பதற்கான ஒருகாரணம் அவனிடத்து நிதிமேலாண்மைப்பண்பு இல்லாததேயாகும்.

    இப்பண்பில்லாத கோவலன் மட்டுமன்றி அவனைச் சார்ந்த மனைவியர், குடும்பம், சுற்றம், நட்பு ஆகியோரும் எவ்வித தொடர்பில்லாத மதுரையைச் சார்ந்த மன்னவன் மக்கள் வரை அனைவரும் அல்லலுறுகின்றனர். வள்ளுவர் அரசுக்குக் கூறிய நிதிமேலாண்மைப்பண்பு அரசனுக்கு நிகராகச் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த உயர் குடியினராகப் போற்றப்பட்ட வணிகக்குடியில் வந்த கோவலனுக்கு இல்லாது போனதால் ஏற்பட்ட இழிநிலையாகும். செல்வச் செழிப்பானக் கோமானாய்ப் பிறந்தவன். அச்செல்வத்தைப் பேணிப் பாதுகாக்காததால் அடையும் நிலையினை, நிதிமேலாண்மைப் பண்பு என்றால் என்ன என்பதனை, அத்திறன் இல்லாதவர் எந்நிலை அடைவர் என்பதனைக் கோவலன் எனும் மாந்தர் படைப்பின் வழி மக்களுக்கு உணர்த்திச் செல்கிறார்.

    பெருநில முழுதாளும் பெருமகன் தலைவைத்த
    ஒரு தனிக் குடிகளோடு  உயர்ந்தோங்கு செல்வத்தான்
    வருநிதிபிறர்க் கார்த்து மாசாத்து வானென்பான் ( சிலம்பு: மங்கலவாழ்த்துக்காதை: 30-33)

    என்று கோவலனின் தந்தை மாசாத்துவானை அறிமுகப்படுத்துகிறார். இங்கு கோவலனின் செல்வவளம் சுட்டப்படுகிறது. இவன் திருமணம் செய்ததும் ‘வான்மழை போன்ற கொடைத்தன்மை’ பொருந்திய கையை உடைய செல்வச் செழிப்பைக் கொண்ட மாநாய்கனின் மகளான கண்ணகியையாம். இவர்கள் பிறந்த புகாரும் வந்தாரை வாழவைக்கும் செழிப்புடையது.

    உரைசால் சிறப்பின் அரை கவிழை திருவின்
    பரதர் மலிந்த பயங்கெழு மாநகர்
    முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும்
    வழங்கத் தவாஅ வளர்த தாகி
    அரும்பொருள் தரூஉம் விருந்தின் தேஎம்
    ஒருங்கு தொக்கு அன்ன உடைப்பெரும பண்டம்
    கலத்தினும் காலினும் தருவனர் ஈட்டக்
    குலத்தில் குன்றாக் கொழுங்குடிச் செல்வர்(சிலம்பு: மனையறம்படுத்தக்காதை: 1-8)

    என்று புகழ்கின்றார். கோவலனையும் கண்ணகியையும் அவர்களுடன் பணிபுரியத்தக்க ஏவலாளிகளுடன் தனிக்குடித்தனம் வைத்து மகிழ்ந்ததை ‘உரிமைச்சுற்றமொடு ஒருதனிப் புணர்க்க’ என்று குறிப்பிடுகிறார். இளங்கோவடிகள் கோவலனின் பொருள்சிறப்பை இவ்வாறு விளக்கியுரைக்கக் காரணம் இப்பொருளைப் பாதுகாக்கும் தன்மையில்லாததைச் சுட்டவே எனக்கொள்ளலாம்.

    மாதவியைக் கண்டு மயங்கி உள்ளத்தைப் பறி கொடுத்த கோவலன் ஆயிரத்தெட்டு கழஞ்சுபொன்கொடுத்து மாதவியை விலைக்கு வாங்கும் அளவிற்கு சிறந்த செல்வந்தன். செல்வச்செழிப்பில் தன் மனதிற்கினிய வாழ்க்கையைப் பெற்ற கோவலன் அச்செல்வம் முழுவதையும் அவளுக்கு அர்ப்பணிக்கின்றான். வீடுமறந்து செய்தொழில் மறந்து சுற்றம் மறந்து காதலும் காமமும் நிறைய மகிழ்வான வாழ்வை மேற்கொள்ளுகின்றான்.

    ஆகாறு அளவிட்டதாயினும் கேடு இல்லை
    போகாது அகலாக் கடை (குறள்: 478)

    என்று வள்ளுவர் வரவும் செலவும் குறித்து உரைப்பது ஈண்டு குறிக்கத்தக்கது. இங்கு வரவின்றிச் செலவு மட்டும் செய்து தன்நிலை தாழ்ந்து செல்கின்றான் கோவலன். ஒரு நிலையில் தான் காதல் கொண்ட அத்தூயவளின் உள்ளமும் அறியாமல் உலவுற்றத் திங்கள் முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்கின்றான். நல்ல செயலையும் மேற்கொள்ளாமல் செய்த செயலிலும் தடுமாறாமல் வாழுவதை அறியாத கோவலன் கண்ணகி, மாதவி என்ற இருநற் துணையின் உள்ளமறிந்து கொள்ளாத தலைமைக்குரிய பண்பில்லாதவனாகவே காணமுடிகின்றது.

    செல்வம் அனைத்தையும் உயர் குடிப்; பிறப்பிற்கு இழிவு நேரும் வகையில் இழந்து மீண்டு வந்த கோவலன் கண்ணகியின் வாடிய மேனியைக் கண்டு வருத்தம் கொண்டு

    சலம்புணர் கொள்கைச் சலதியொ டாடிக்
    குலந்தரு வான்பொருட் குன்றம் தொலைத்த
    இலம்பாடு நாணுத் தருமெனக் கென்ன(சிலம்பு: கனாத்திறம் உரைத்தக் காதை: 69-71)

    என்பதாக இளங்கோவடிகள் சுட்டுகிறார். செல்வச் செழிப்புள்ள குடியில் பிறந்து மன்னனுக்கு நிகராக வாழ்ந்தவன் அச்செல்வத்தைப் பாதுகாக்காத மேலாண்மைத் திறனில்லாதவனாக இருந்தால் இறுதியில் நாணுற்றுத் தலைகுனியத்தான் வேண்டும் என்பதற்கு இந்நிகழ்வுகள் சான்று பகரும். இதுபோன்று கோவலன் நிதிமேலாண்மைத் திறனில்லாதவன் என்பதற்கு இக்காப்பியம் முழுவதும் சான்று காட்டிச்செல்லலாம்.

    தன்னிடத்து வெட்கி நிற்கும் தன் தலைவனிடம் ‘சிலம்புள கொண்மென’ உரைக்கின்றாள் கண்ணகி. செல்வம் அனைத்தையும் இழந்தாலும் அவன் குடிக்கேயுரிய பண்பு அவனை மீண்டும் விடியலைத் தேட ஆயத்தப்படுத்துகிறது. ஆனாலும் அப்பொழுதும் தவறான முடிவால், எண்ணித் துணியாத கருமத்தினால்  அவன் அழிவை நோக்கியே செல்வதைக் காணமுடிகிறது. சிலம்பினைக் கொண்டு ‘சென்ற கலனோடு உலந்தபொருள் ஈட்டுதல் உற்றேன்’ என்று மதுரைக்குப் புறப்படுகிறான்.

    இங்குதான் இளங்கோவடிகள் சுட்டிய புகார் நகரப் பெருமையை நோக்க வேண்டும் வந்தாரை வாழ வைக்கும் செல்வச்செழிப்புடைய ஊர் கோவலனது குடிப்பிறப்பு அறிந்த ஊர் அவன் வாணிகம் செய்த ஊர்  இங்கு அவன் குடி வணிக நேர்த்திக்கு அறிமுகமே தேவையில்லை. இத்தகைய நகரைவிட்டு முன்பின் அறியா மக்களை நம்பி மதுரை மாநகருக்கு பயணிக்கிறான். ஒரு நல்ல வணிகன் செய்யும் செயலல்ல இது. நாணத்தின் காரணமாக ஊரைவிட்டுச் செல்கின்றான் என்றாலும் விடியலைத்தேடுபவன் முன்பின் அறியா இடத்திற்கு இரவில் புறப்படுகின்றான். அதுவும் வண்ணச்சீறடி மண்மகள் அறிந்திலாதவளிடத்துப் பொருள் சேர்த்து வருகிறேன் என்று வீறுகொண்டு கூறிச்செல்லாமல் பழகியறியாத பகுதிக்கு ‘ஏடு அலர் கோதாய் எழுக’ என்று கூறி அழைத்துச்செல்கின்றான். ‘இவளை உடன்கொண்டு போதல் ஏற்புடைய செயல்; அன்று என்று எவ்வளவு கூறினும் செல்லாது இருக்க மாட்டீர் போலும்’ என்று கவுந்தியடிகள் கோவலனின் செயலைத் தவறென்று உரைப்பது குறிக்கத்தக்கது.

    கோவலன் திட்டமிட்டு வணிகம் செய்யத் தெரியாதவன் என்பதற்கு இன்னும் வலுவான சான்றுகளைக் காட்டிச் செல்லலாம். காடுகாண்காதையில் மாங்காட்டு மறையோனிடம் ‘மாமறை  முதல்வ மதுரைச் செந்நெறி கூறு நீயென’ என்று வேண்டுகிறான். முன்பின் அறியா மதுரை மாநகருக்கு வணிகம் செய்யச் செல்லுதல் அவனுடைய தவறென்றால் மறையோன் குறிப்பிடும் மற்றொரு செய்தி கோவலனின் தவறானத் திட்டமிடாத செயல்படுத்துதலை உணர்த்தும். ‘முல்லையும்  குறிஞ்சியும் நல்லியல்பு கெட்டுத் தன்னைச் சார்ந்தாரை நடுங்கச்செய்யும் பாலை எனப்படும் வேனிற்காலத்தே காரிகையுடன் பயணம் மேற்கொண்டீரே’ என்று வருந்தியுரைக்கிறார் மாங்காட்டு மறையோன். இதனைப் பின்னர் கோவலன்

    நெறியின் நீங்கியோர் நீர்மையே னாகி
    நறுமலர் மேனி நடுங்குதுயர் எய்த
    அறியாத தேயத்து ஆரிடை உழந்து
    சிறுமை உற்றேன் செய்தவத் தீர்யார்(சிலம்பு:ஊர்காண்காதை: 17-20)

    தானே செய்தவறுக்கான ஒப்புதல் வாக்குமூலம் தருகின்றான். ஆராயாமல் முடிவெடுத்து பின் துன்புறும் இவனது பண்பு இங்கு வெளிப்படுகிறது.

    ஒப்பற்றச் செல்வத்தைப் பெற்றவன் அதனைப் பேணாது விட்டுவிட்டாலும் மீண்டும் அதைப்பெற முயலவேண்டும். அதுவும் வணிகமே தொழிலாகக் கொண்டவன் மீண்டும் முயலும் போது முன்பைவிட நுட்பமாக ஆய்ந்து வணிகம் செய்தால் மட்டுமே அச்செல்வத்தைப் பெறமுடியும். ஆனால் திட்டமிடுதல் செயல்படுத்துதல் வெற்றியடைதல் என்ற வணிக மேலாண்மையே அறியாதவனாக அவனது அடுத்தடுத்தச்; செயல்கள் அமைகிறது.

    வணிகநோக்கில் செல்லும் கோவலன் மதுரையின் அரசரும் விரும்பும் அங்காடிவீதி, நவரத்தினக்கடைவீதி, பொன்மிகுகடைவீதி, கூலம் குவித்த கூலவீதி என அனைத்தையும் கண்டு தெளிந்து மீண்டும் கவுந்தியடிகளும் அடைக்கலமிருந்த கண்ணகியிருக்குமிடம் வருகின்றான்.

    மீண்டும் மாதரி ஐயையுடன் கண்ணகியை விட்டுச்செல்லும்போது ‘சிலம்புள கொண்மின்’  என்ற கண்ணகியின் முன் கூற்றின்படி இரண்டு சிலம்புகளைப் பெறாமல் ‘சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டு யான் போய் மாறிவருவன்’ என்கிறான். சிலம்பு ஒன்றைத் தா விற்றுவருகிறேன் என்பது நல்ல வணிக மகன் செய்யும் செயலல்லவே. இரு பொருளாகப் பயன்படும் ஓர் அணிகலனை ஒற்றையாய் விற்பது சரியோ! அதனை வாங்குவோர் தான் உண்டோ! இதைக் கோவலன் உணராது செய்கின்றான். இங்கும் இவனது வணிகத்திற்கு ஒவ்வாத செயல்தான் வெளிப்படுகிறது.

    அது மட்டுமன்றி அச்சிலம்பைக் கடைத்தெருவின் விற்கச் சென்றவன்

    சாதரூபம் கிளிச்சிறை ஆடகம்
    சாம்ப10 நதம்என ஓங்கிய கொள்கையில்
    பொலம்தெரி மாக்கள் கலங்கஓர் ஒழித்தாங்கு
    இலங்குகொடி யெடுக்கும் நலம்கிளிர் வீதியாகிய(சிலம்பு:ஊர்காண்காதை: 201-204)

    பொன்னின் வேற்றுமையைப் பகுத்தறியும் பொன்வாணிகர் காணப்படும் பொன்மிகு கடைவீதியை முன்னரே கண்டவனன்றோ! அங்கல்லவா செல்லவேண்டும். ஆனால் கடைத்தெருவில்  செல்லும் வழியில் தான்கண்ட பொற்கொல்லனை அணுகி சிலம்பினை மதிப்பிடச் செய்கின்றான்.

    காவலன் தேவிக்கு ஆவதோர் காற்கணி
    நீவிலை யிடுதற்காதி யோவெனகோவலன் கேட்க, அதற்கு அவன்

    அடியேன் அறியே னாயினும் வேந்தர்
    முடிமுதல் கலன்கள் சமைப்பேன் யான்(சிலம்பு:கொலைக்களக்காதை: 111-114)

    எனப் பதிலுரைக்கின்றான். பெண்களின் காற்சிலம்பினை மதிப்பிட அறியாதவன் ஆயினும் மன்னர்க்கு முடிமுதலிய அணிகளைச் செய்வதில் வல்லவன் நான் என்கிறான். கேட்கும் கேள்விக்கு தான் அறிந்தது என்ன என்று தெளிவாகப் பதிலிறுக்கிறான். ஒரு பொருளின் மதிப்பறியா ஒருவனிடத்து அப்பொருளைக் கொடுப்பது சரியானதோ! தன்தொழில் திறனைத் தானே அறிவிக்கும் அப்பொற்கொல்லனிடத்து ஒரு நல்ல வணிகநேர்த்தியறிந்தவன் பொருளைக் கொடுப்பனோ! ஆனால் கோவலன் போற்றருஞ் சிலம்பின் பொதிவாய் அவிழ்த்து அளிக்கின்றான். இதைவிட கோவலனின் மேலாண்மைக்குத் திறனுக்குச் சான்று காட்டத்தேவையில்லை.

    முறையற்ற இச்செயலால் கொலைக்களப்படுகின்றான் கோவலன். பிறந்தது முதல் பெற்ற செல்வத்தைப் போற்றிப் பாதுகாவாது கண்ணகி கூறியது போல் ‘போற்றா ஓழுக்கம்’ புரிந்தகோவலன் தான் பெற்றப் பொருளை போற்றாது, காவாது, வரவிற்கான முயற்சி செய்யாது அச்செல்வத்தை அழித்தலை மட்டும் செய்து அடுத்தடுத்து பொருளாதார மேன்மையடைதல் என்ற மேலாண்மைப் பண்பேயற்று உயர்வணிகக்குடியில் பிறந்தும் அக்குலத்திற்கேயுரிய வணிகத்திறமையும் இன்றி தவறுகள் இழைக்கின்றான். தானும் முயற்சிக்காது தன்முன்னோர்கள் ஈட்டிய பொருளையும் பாதுகாக்காது நல்ல தலைமைக்குரிய செயல்பாடுகள் இல்லாது அடுத்தடுத்தத் தவறான முடிவுகளால் உயிரையே இழக்கின்றான்.

    இளங்கோவடிகள் கோவலனின் முன்ஊழ் அவன் இறப்பிற்குக் காரணம் என்று வெளிப்படையாகச் சுட்டியிருந்தாலும் இம்மாந்தர்படைப்பின் வழியாக நிதிமேலாண்மைச் சிந்தனையையே முன்வைப்பதை உணரவேண்டும். தான் படைத்தக் காப்பியத்தில் உலாவரும் மாந்தர்களின் வழி நற்கருத்துகளைப் பதிவு செய்யும் அடிகள்  நிதிமேலாண்மைச் சிந்தனையை கோவலன் வழி எடுத்துரைக்கின்றார்.

    காப்பியங்கள் என்பது வெறும் கதையல்ல. நல்ல கருத்துகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் இணைப்புப்பாலம். உண்மையோ கற்பனையோ இக்காப்பியங்களின் தனிச்சிறப்பே தான்தோன்றியகாலத்து வாழ்ந்த மக்களுக்கு அவர்களால் ஏற்கப்பெறும் கதைப்போக்கில் அம்மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் நல்ல அறிவுறுத்தல்களை கதைப்போக்கில் மாந்தர் படைப்புகளின் வழி எடுத்துரைப்பது ஆகும். இங்கு சமூகமேம்பாட்டை நோக்கிய படைப்பாளனின் கருத்து பதிவு செய்யப்படுவதோடு அப்படைப்பும் வெற்றிபெறுகிறது. காப்பியங்களைப் பொறுத்தவரையில் படைப்பாளனையும் படைப்பினையும் நோக்குதல் அவசியமானது. காப்பியத்தின் வழி எத்துணையோ நற்சிந்தனைகளை பதிவு செய்ய விழையும் இளங்கோவடிகள் கோவலன் எனும் மாந்தர் படைப்பின் வழி நிதிமேலாண்மை எனும் பொருளாதாரத்தத்துவத்தை கருத்துருவாக்கம் செய்கின்றார். இதுபோன்ற உண்மைகளை வெளிக்கொணராது ஏதேனும் ஓர் நோக்கிலேயே காணும் பார்வை மாறவேண்டும்.

    துணை நின்றன


    1. அழகு கிருஷ்ணன். பொ (1988) ,சிலப்பதிகாரம் காட்டும் பண்பாடும், சமுதாய வரலாறும், ஐந்திணைப்பதிப்பகம்.

    2. துரைசாமிப்பிள்ளை. சு. ஔவை (1957) சிலப்பதிகார ஆராய்ச்சி, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்.

    3. பஞ்சாங்கம்.க, (2002), சிலப்பதிகாரத்திறனாய்வுகள், மெய்யப்பன் தமிழாய்வகம்.

    4. பரிமேலழகர் (உ.ஆ), (1991) திருக்குறள், கங்கை புத்தக நிலையம்.

    5. பெருமாள்சாமி.வெ, சிலப்பதிகாரம் (மறுக்கப்பட்ட நீதியும் மறைக்கப்பட்ட உண்மையும்), பாரதி புத்தகாலயம்.

    6. பேரா.சி.நாகராசன், பேரா.சா.நடராசன், பேரா.சி.ரா.மணிவாசகம், மேலாண்மை பொருளும் கோட்பாடுகளும், ஆசிரியப்பயி்ற்சி பாடநூல்.

    7. வேங்கடசாமி நாட்டார்.ந.மு, (2014) சிலப்பதிகாரம் (மூலமும் உரையும்), ராமையா பதிப்பகம்


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    செவ்விலக்கியப் படைப்புகளுக்கு அடுத்த நிலையில் சிறப்பினைப் பெற்று விளங்குவன காப்பியங்கள். இக்காப்பியங்களில் இடம்பெறும் மாந்தர்களின் படைப்பு என்பது காப்பியத்திற்கு உயிர்நாடியாக அமைகின்றது. சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தில் இளங்கோவடிகளால் படைக்கப்பட்ட தலைமாந்தர் கோவலன். இம்மாந்தர் படைப்பு, சிலப்பதிகாரக் காப்பியத்திற்கு எத்தகைய சிறப்புநிலை நோக்கிப் படைக்கப்பட்டது என்பதைக் கட்டுரையாளர் திறம்பட விளக்கியிருக்கின்றார்.


    Share
  • பல்கலைப் புலவர் – கா. சுப்பிரமணியப் பிள்ளை

    பல்கலைப் புலவர் – கா. சுப்பிரமணியப் பிள்ளை

    -மேகலா இராமமூர்த்தி

    1888ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் நாள் திருநெல்வேலியைச் சார்ந்த காந்திமதிநாதப் பிள்ளை, மீனாட்சியம்மை இணையருக்கு மகனாய்ப் பிறந்தார் கா. சுப்பிரமணியப் பிள்ளை.

    திருநெல்வேலியில் இருந்த திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்றில் தமது கல்வியைத் தொடங்கிய அவர், பின்னர் அருகிலிருந்த தொடக்கப் பள்ளியில் தம் படிப்பைத் தொடர்ந்தார். 1906ஆம் ஆண்டில் மெட்ரிக்குலேசன் தேர்வில் சென்னை மாகாணத்திலேயே முதல் மாணாக்கராய்த் தேறினார்.

    1908ஆம் ஆண்டில் சென்னை மாகாணக் கல்லூரியில் பயின்று கலை உறுப்பினர் (Fellow of Arts) தேர்வில் வெற்றிபெற்றார். அதேவேளையில் மதுரைத் தமிழ்ச்சங்கம் நடாத்திய புலவர் தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சியுற்றார். 1910ஆம் ஆண்டில் வரலாற்றைச் சிறப்புப் பாடமாய்ப் படித்து இளங்கலைப் பட்டம் பெற்றார். 1913ஆம் ஆண்டு ஆங்கில இலக்கியத்திலும், 1914ஆம் ஆண்டு தமிழ் இலக்கியத்திலும் தேறி முதுகலைப் பட்டங்களைப் பெற்றார்.

    பின்னர், சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று சட்டத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களையும் பெற்றார். இவருடைய உறவினர்களில் முதன்முறையாக எம். எல். பட்டம் பெற்றவர் இவரே என்பதால், உறவினர்கள் இவரை எம். எல். பிள்ளை என்றே அடையிட்டு அழைத்தனர்.

    அக்காலத்தில், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ’தாகூர் சட்ட விரிவுரையாளர்’ பரிசு அமைத்திருந்தார்கள். சட்டக்கலை குறித்துச் சிறப்பான சொற்பொழிவுகள் 12 நிகழ்த்துவோருக்கு அப்பரிசு வழங்கப்பட்டு வந்தது. 1925இல் கல்கத்தா பல்கலைக்கழகம் சென்று ’குற்றங்களின் நெறிமுறைகள்’ (Principles of Criminology) என்ற தலைப்பில் பன்னிரு உரைகள் நிகழ்த்தி அப் பரிசினை வென்ற ஒரே தமிழர் கா.சு. பிள்ளையவர்களே என்பது குறிக்கத்தக்கது.

    சென்னை சட்டக்கல்லூரியில் ஒன்பது ஆண்டுக் காலம் பேராசிரியராய்ப் பணியாற்றினார் பிள்ளை.  சென்னையில் இருந்த காலத்தில், மயிலாப்பூரில் திருவள்ளுவர் கழகத்தை ஏற்படுத்தினார். சில காலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராய்ப் பணியாற்றினார். நாவலர் இரா. நெடுஞ்செழியன், பேராசிரியர் க. அன்பழகன் இருவரும் பிள்ளையிடம் மாணாக்கர்களாய்ப் பயின்றவர் ஆவர்.

    நெல்லை திரும்பியவர், ’தமிழ் இலக்கிய வரலாறு’ எனும் நூலை எழுதினார். இன்றளவும் அது குறிப்பிடத்தக்கதொரு நூலாய்த் திகழ்ந்துவருகின்றது. இரண்டு பகுதிகளாக வெளிவந்த அந்நூலில் இடம்பெற்ற சில அரிய செய்திகளாவன:

    1. தூணில் கடவுள் வழிபாடு செய்யும் மரபு தமிழரிடம் இருந்தது. (மணிமேகலையில் வருகின்ற கந்திற்பாவையை ஈண்டு நாம் நினைவுகூரலாம்.)

    2. தமிழக நெய்தல் நில மக்கள் ஆரிய வருண வழிபாட்டைக் கைக்கொண்டிருந்தனர் எனல் பொருந்தாது.

    3. தொல்காப்பியப் பாயிரம் கூறும் நான்மறை என்பது ரிக், யசுர், சாம அதர்வண வேதங்கள் அல்ல. தமிழிலேயே நான்கு மறைகள் தோன்றின. அகத்தியம், பன்னிரு படலம் போலப் பண்டைக் காலத்திலேயே அவை அழிந்தன.

    4. திருக்குறளின் காலம் கிமு 5-ஆம் நூற்றாண்டாகலாம். அதற்குப் பிறகே கலித்தொகை, சிலப்பதிகாரம் போன்றவை தோன்றியிருக்கவேண்டும்.

    சங்கப் பாக்களுக்கு நயம் சொல்லிக்கொண்டிராமல், பெயரமைவுகள், ஊர்ப்பெயர்கள், காலம், அரசர்க்கும் புலவர்க்குமான உறவு போன்ற பற்பல செய்திகளைத் தம் தமிழிலக்கிய வரலாற்றில் கா. சு. பிள்ளை ஆய்வு நோக்கில் எடுத்தியம்பியுள்ளமை போற்றத்தக்கது.

    ‘செந்தமிழ்ச் செல்வி’ இதழில் தொடர்ந்து எழுதிவந்த பெருமைக்குரியவரான பிள்ளையவர்கள்,  திருநெல்வேலியிலிருந்து வெளிவந்த ’மணிமாலை’ என்ற இதழிலும் இலக்கியச் செய்திகளைப் பதிவு செய்துள்ளார்.

    மறைமலையடிகள் மீதும் அவரின் கொள்கைகள் மீதும் மாறாக் காதல் கொண்டவர் கா.சு. பிள்ளை. அடிகளைப் போலவே மணிவாசகர் தேவார முதலிகளுக்கு முற்பட்டவரென்றும் கி.பி. 3-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர் என்றும் கருத்துக்கொண்டவராகத் திகழ்ந்த பிள்ளை, அதனைத் தமிழிலக்கிய வரலாற்றின் இரண்டாம் பகுதியிலும் அதன்பின் வந்த நூல்களிலும் குறிப்பிட்டிருக்கக் காண்கின்றோம்.

    அதற்கு அவர் முன்வைக்கும் சான்றுகளாவன:

    வரகுணனும் அவனுக்குப் பின் மணிவாசக அடிகள் காலத்தில் அரிமர்த்தனனும் பாண்டிய நாட்டை அரசாண்டரெனத் தெரிகின்றது. போர் புரிவதில் வல்லவனாய் எட்டாம் நூற்றாண்டுக் கல்லெழுத்துக்களில் பேசப்பட்ட வரகுணன் வேறொருவன்.

    வரகுணன் என்பது வடமொழிப் பெயராதலின், அப்பெயருடைய மன்னன் 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்றுரைத்தல் தவறு. கடைச்சங்க மன்னனாகக் குறிக்கப்பெறும் உக்கிரப் பெருவழுதி என்ற சொற்றொடரில் ’உக்கிர’ என்பது வடமொழியாதல் காண்க. வரகுணன் என்ற பெயரைத் தமிழ் எனக்கொள்வாரும் உளர். கி.பி. 3ஆம் நூற்றாண்டில் மலையாளக் கரைக்கு வந்த கிறித்தவப் பாதிரிமார்கள் மாணிக்க வாசக அடிகளைக் குறித்துத் தம் நாட்டினருக்கு எழுதியுள்ள கடிதங்கள் அடிகளின் காலம் மூன்றாம் நூற்றாண்டே என்பதைப் பறைசாற்றுகின்றன.

    பிள்ளையவர்கள் தாம் எழுதிய ’தமிழர் சமயம்’ எனும் நூலில் தந்திருக்கும் பல செய்திகள் தமிழ்கூறு நல்லுலகம் அறிந்து பயன்கொள்ளத்தக்கவை. அவற்றில் சில:

    1. ஒரு காலத்தில் தமிழர்க்குள் சடங்கில்லாமல் மணவாழ்க்கை தொடங்கி நடத்தப்பெற்றது. மணமக்களின் ஒத்த உளக்காதலே இல்லறத்துக்கு அடிப்படையாய் அமைந்திருந்தது. பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் மணச்சடங்கு முறைகள் சமுதாயத் தலைவர்களால் ஏற்படுத்தப்பட்டன.

    2. பருத்தியுடை இந்திய நாட்டில்தான் முதன்முதலில் வழக்கத்தில் வந்தது. சிந்தம் (சிந்து என்பதன் திரிபு) என்ற பெயரால் அது மேலை ஆசிய நாடுகளுக்குச் சென்றது. மூங்கில்தாள் போன்ற மெல்லிய உடைகள் பண்டைக் காலத்தில் ஐரோப்பாவுக்கு மிகுதியாக ஏற்றுமதி செய்யப்பட்டன.

    3. மெல்லிய பஞ்சினால் படுக்கைகள், தலையணைகள் தயார் செய்வதும், புல்லினால் மிக மெல்லிய பாய்கள் நெய்வதும் பண்டைத் தமிழர் தொழிலே. கச்சணிதல் பண்டைத் தமிழ் நூல்களிலெல்லாம் பேசப்படுவதால் தமிழ்ப்பெண்டிர் மேலாடை இன்றியிருந்தனர் என்பது தவறான செய்தி.

    4. தமிழர்கள் கோட்டைகளும் கொத்தளங்களும் கட்டிப் பெரிய வீடுகளில் வாழ்ந்தனர். ரிக் வேதத்தில் தசியூக்கள் பெரிய அரண்மனைகளில் வசித்தனரெனவும் அவர்களுடைய அரண்மனைகளுக்கு நூறு வாசல்கள் இருந்தனவென்றும் பேசப்படுகின்றது.

    5. எழுநிலை மாடங்கள் என்பனவே பிற்காலத்துக் கோபுரங்களாயின. (இடஞ்சிறந்து உயரிய எழுநிலை மாடத்து – அடி: 86 என முல்லைப்பாட்டில் வருதல் காண்க.) ஆயிரங்கால் மண்டபங்கள் அக்காலத்தில் இருந்தபடியே இக்காலத்திலும் காணப்படுகின்றன. தென்னாட்டிலுள்ள பெரிய கோயில்கள்போலப் பெருங் கட்டடங்களை வடநாட்டிற் காண்டல் அரிது. சிந்து நாகரிகக் காலத்திலேயே கோயில்கள் இருந்தமையால் புத்தர் காலத்திற்குப் பின்தான் கோயில்கள் ஏற்பட்டனவென்பது பிழை.

    6. பல்லாயிர ஆண்டுகளாகக் கட்டட அமைப்பிலும் வடிவங்கள் செதுக்குஞ் சிற்பவேலையிலும் தலைசிறந்து விளங்கிய தமிழர் உயர்ந்த தத்துவக் கருத்துக்களைப் பொதுமக்களுக்கு விளக்கிக் காட்டுவதற்காகப் பல்வகைத் தெய்வ வடிவங்களையும் அவற்றிற் சேர்க்கப்படும் படைக்கலங்களையும் வகுத்தமைத்தனர். தென்னாட்டுக் கற்சிற்பங்களில் காணப்படும் பதுமைகள் மத்திய அமெரிக்காவிலுள்ள மெக்சிகோவில் தோண்டியெடுக்கப்பட்ட பிம்பங்களை ஒத்திருக்கின்றன என்கிறார் எச்.ஜி. வெல்ஸ் (Herbert George Wells) எனும் ஆங்கில எழுத்தாளர் தம்முடைய ’உலக வரலாற்றின் சுருக்கம்’ (A Short History of the World) எனும் நூலில்.

    பிறப்பைப் பற்றிய உயர்வு தாழ்வு தமிழர் வழிபாட்டில் இல்லை என்பதைக் காசியில் யாவரும் வருண வேறுபாடின்றிச் சிவபெருமானைப் பூசிக்கும் வழக்கத்தினின்று நாம் அறிந்துகொள்ளலாம்.  காசியின் நடைமுறை வழிபாட்டினர்க்கு வசதி தாராதாகலின், நல்லொழுக்கமும் கள், ஊன் விலக்குமுடைய அறிஞர் எக்குலத்தவராயினும் பூசனை முறையறிந்து அன்பாய்ப் பூசிக்கக் கூடுமாயின் அவரை ஆலயத்தில் அர்ச்சகராய் நியமித்துக் கொள்ளுதல் நலம். இப்போது ஆலயங்களின் குருக்களாய் உள்ள ஆதிசைவ மரபினர் தமிழப் பார்ப்பனரே ஆவர். அவர்கள் சிவன்முகத்து அருள்பெற்ற அந்தணரெனவும், சுமார்த்த பிராமணர் அயன் முகத்துதித்த பிராமணர் எனவும் கருதப்படுவதுடன் பின்னையோர் கோயில் பூசனைக்கு உரியரல்லர் என்றும் ஆகமம் விதிக்கின்றது.

    ஆதிசைவர் தமிழ்நாட்டிலே தோன்றிப் பொதியின் மலைக்குத் தெற்கிலுள்ள பெருஞ்செல்வமென்னும் மகேந்திர மலையில் தவமியற்றித் திருவருள் பெற்ற ஐந்து தமிழ் முனிவர்களின் வழித்தோன்றல்களாவர். அவர்கள் இக்காலத்தில் தம்மை இன்னார் என்றறியாது சுமார்த்த மதநெறியைத் தழுவி நடக்க முயலுகின்றனர் என்று ஆதிசைவருக்கும் சுமார்த்த பிராமணருக்கும் உள்ள வேறுபாட்டைத் தெளிவுபடுத்தும் கா.சு. பிள்ளை, தமிழர் கோயில்களில் தமிழ்ப் பாடல்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்; பிறமொழிப் பாடல்களுக்கு அத்துணை அவசியமில்லை. தேவாரம், திருவாசகம், திருவாய்மொழிப் பாடுவோர் தக்க இயல் இசைப் பயிற்சி உடையோராய் இருத்தல் வேண்டும். உள்ளம் உருகும்படிப் பாடும் திறனுடையோர்க்குப் பரிசளித்தல் வேண்டும் என்று தம் சிந்தனைகளை முன்வைக்கின்றார்.

    ”தமிழர் என்பவர் யார்?” என இன்றுவரை சர்ச்சைக்குரியதாய் விவாதிக்கப்படும் வினாவிற்கு, “தமிழைத் தாய்மொழியாக உடையவர் தமிழர். தமிழ்நாட்டில் பிறந்தும் தமிழைத் தாய்மொழி எனக் கருதாதவர் தமிழர் ஆகார். தமிழ்நாட்டில் பிறவாதிருந்தும் தமிழைத் தாய்மொழிபோல் போற்றுபவரைத் தமிழர் எனல் இழுக்காகாது. தமிழ் நாகரிகத்தை உயர்ந்தது எனக் கருதுபவரும் தமிழரே!” என அன்றே வரையறுத்து விடையிறுத்துள்ளார் கா. சுப்பிரமணியப் பிள்ளை.

    ’பல வித்வான்கள் பாடிய தனிப்பாடல் திரட்டு’ என்ற தலைப்பில் இரு பகுதிகளாக வந்துள்ள கா.சு. பிள்ளையின் நூல், சிறந்த உரையாசிரியராகவும் திகழ்ந்தவர் அவர் என்பதற்குச் சான்று பகர்கின்றது.

    Principles of criminology, Lectures on the Indian Penal Code முதலிய சட்டநூல்கள், மாந்த வரலாறு, இலக்கிய வரலாறு, சைவ சமயக் குரவர்கள் வரலாறு, சைவ சித்தாந்த நூல்கள் குறித்த விளக்கம் எனப் பல்துறைசார்ந்த அறுபதுக்கும்  மேற்பட்ட நூல்களைக் கா.சு. பிள்ளை எழுதியுள்ளார். இவை வெறும் தகவல்தரும் நூல்களாக இல்லாமல், கற்பாரின் சிந்தனைக்கு விருந்து படைப்பனவாகவும், சீர்திருத்தக் கருத்துக்கள் நிறைந்தனவாகவும் மிளிர்வது இவற்றின் தனிச்சிறப்பாகும்.

    பல்கலைப் புலவராகவும், நுண்மாண் நுழைபுலம் மிக்க சான்றோராகவும் விளங்கிய கா.சு. பிள்ளையவர்கள், தம் இறுதிக்காலத்தில் வாத நோயினால் பாதிக்கப்பட்டு 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் தம்முடைய 56ஆம் அகவையிலேயே இயற்கை எய்தியமை வருந்தத்தக்கது.

    எனினும், தமிழின் கருவூலமாகவும் சைவத்தின் திருவுருவாகவும் விளங்கிய நற்றமிழர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, நெல்லை மண்ணுக்குப் பெருமை சேர்த்த நல்லறிஞர் வரிசையில் என்றும் நிலைத்திருப்பார் என்பதில் ஐயமில்லை.

    கட்டுரைக்குத் துணைநின்றவை:

    1. செந்தமிழ்ச் செம்மல்கள் – முனைவர் அ. அறிவுநம்பி, சித்திரம் வெளியீடு, 15, கலைவாணி நகர், இலாசுப்பேட்டை, புதுச்சேரி – 8.

    2. தமிழர் சமயம் – கா. சுப்பிரமணியப் பிள்ளை, எம்.ஏ., எம்.எல்., தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

    3.https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/center-page-articles/2016/nov/05/தமிழுக்குத்-தொண்டுசெய்த-பிள்ளை-2592655.html

    Share
  • உங்கள் குழந்தைகளுடன் ஒரு நாள் பயணம் செல்ல உகந்த இடம்

    உங்கள் குழந்தைகளுடன் ஒரு நாள் பயணம் செல்ல உகந்த இடம்

    லெ. சொக்கலிங்கம்,
    காரைக்குடி.

    அறிமுகம் 

    நண்பர்களே! சமீபத்தில் சென்னை சென்று இருந்தேன்.

    மாணவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய மியூசியம் ரயில்வே மியூசியம்.

    எங்கு உள்ளது? எப்படி பார்க்கலாம்?

    நண்பர்களே! சென்னை வில்லிவாக்கம் பகுதியில் பெரம்பூர் அருகே ரயில்வே தொழிற்சாலை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. மிகவும் அழகான அருமையான பல்வேறு தொழில்நுட்பங்களை (லெ. சொக்கலிங்கம், காரைக்குடி) விளக்கக்கூடிய மாணவர்களுக்கு அதிகமாக பயனுள்ள தகவல்களை தரக்கூடிய ஒரு அருங்காட்சியமாகும்.

    நீங்கள் உள்ளே நுழைந்தவுடன் ஆர்ட் கேலரி பார்க்கச் சொல்கிறார்கள் .

    இந்திய ரயிலின் உலக அளவிலான வளர்ச்சி :

    ரயில்வே துறையின் வளர்ச்சி, ரயில்களின் வளர்ச்சி, உலக அளவிலும் இந்திய அளவிலும் உள்ளவற்றை வரிசைப்படுத்தி உள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியாவில் (லெ. சொக்கலிங்கம், காரைக்குடி ) எப்படி எல்லாம் வளர்ச்சி அடைந்து உள்ளது என்கிற தகவல்களை மிக எளிதாக அனைவரும் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் வரிசைப்படுத்தி உள்ளார்கள். இரண்டாவதாக ரயில் தொழில்நுட்பத்துடன் கூடிய இன்ஜின்கள் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்பக் கூறுகள் மிக அழகாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேலே சொன்ன தகவல்களை காட்சிப்படுத்தி தனித்தனியாக பிரித்து வைத்துள்ளார்கள்.

    பெரியவர்களையும் குழந்தைகளுக்கும் ரயில்

    கல்லூரி மாணவர்கள் குழுவாக சென்றால், பள்ளி மாணவர்கள் குழுவாக சென்றால், ரயில் அருங்காட்சியகத்தில் மிக அழகாக விரிவாக விளக்கி கூறுகிறார்கள். மற்றவர்கள் செல்லும்பொழுது தாங்களாக கேட்டால் மட்டுமே விளக்கங்கள் பெற இயலும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்ல கூடிய ட்ரைனும் குழந்தைகளுக்காக ஒட்டப்படுகிறது. குழந்தைகளும் பெரியவர்களும் அதில் ஏறிச் செல்லலாம். அவ்வாறு தாங்கள் ஏறிச் செல்லும் பொழுது மிகப்பழமையான நடைமுறையில் உள்ள பல்வேறு ரயில்களும் அங்கே வரிசையாக காட்சிக்கு நிற்க வைக்கப்பட்டு இருக்கிறது. ரயில்களை ஒவ்வொன்றாக நீங்கள் ஆழமாக ரசித்து ரசனையுடன் காண இயலும். அதற்கான விளக்கங்களும் அங்கே வைக்கப்பட்டுள்ளன.

    ஸ்கிராப் பொருள்களில் இருந்து கலை நயமிக்க பொருள்கள் :

    ரயில் நிலையத்தில் உள்ள பழைய பொருள்கள் மூலமாக பல்வேறு வடிவங்களில் காட்சிப் பொருட்கள் மிக அழகாக தயார் செய்யப்பட்டு உள்ளன. அவற்றைப் பார்க்கும்போது நமக்கே மிகவும் பிரம்மிப்பாக உள்ளது. வெஸ்ட் பொருள்களில் இருந்து நல்ல அழகான கலை நயம் மிக்க பொருள்கள் தயார் செய்ய இயலும் என்பதனையும் அங்கே காண்பிக்கிறது. ரயில் என்னென்ன பொருட்கள் பயன்படுத்துகிறார்கள், எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்கிற தகவல்களும் அங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

     

    ஆச்சரியப்படுத்தும் ட்ரெயின் கேலரி

    ட்ரெயின் கேலரி என்று ஒரு அறை வைத்துள்ளனர். அந்த அறையின் உள்ளே ட்ரெயினில் பயன்படுத்தக் கூடிய பொருள்கள் பல்வேறு வகையான பொருட்களை வரிசைப் படுத்தி உள்ளார்கள். பழங்காலத்து ட்ரெயின் தொடர்பான பல பொருள்களை அங்கே வரிசைப்படுத்தி உள்ளது  பார்க்கும்போது நமக்கே மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது. இந்த ரயில் பொருட்கள் அனைத்தும் நமக்கு பல்வேறு புதிய விஷயங்களை கற்றுத் தருகிறது என்பதே உண்மை. இதன் தொடர்ச்சியாக அந்த அறையினுள்ளே பழங்காலத்தில் பயன்படுத்திய தொலைபேசி, ரயில் நிலையங்களுக்கு இடையில் மட்டுமே பேசக்கூடிய தொலைபேசிகளும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவற்றைக் காணும்போது நமக்கு பல்வேறு புதிய தகவல்களை கற்றுத்தருகிறது. சிறுசிறு ரயில்களை எலக்ட்ரிக்கல் மூலமாக தொடர்பு படுத்தி எவ்வாறு செல்லும்போது இன்னொரு ட்ரெயின் செல்லும் என்பதையும், டிராபிக்கில் எவ்வாறு கதவுகள் அடைக்கப்படுகிறது, சிக்னல் எவ்வாறு காண்பிக்கப்படுகிறது, போன்ற தகவல்களை இளம் மாணவர்கள் உட்பட அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் ஆர்வமுடன் கவனிக்கும் வகையிலும் வரிசைப்படுத்தி நமக்காக ஓட்டி காண்பிக்கின்றனர். சிறு குழந்தைகள் அந்த இடத்தை விட்டு நகர மனமில்லாமல் ஆர்வத்துடன் அதனைப் பார்த்துக் கொண்டுள்ளனர். பெரியவர்களும் அதனை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு உள்ளனர் அந்த சிறு சிறு டிரெயின்கள் அழகாக வட்டமிட்டு வண்ண விளக்குகளுடன் செல்லும்பொழுது நமக்கு பல்வேறு விஷயங்களை கற்றுத் தருகிறது. பொதுவாக நாம் ரயில் நிலையங்களுக்கு செல்லும் பொழுது ட்ராக்கில் ஏதோ கட்டி உள்ளனர் என்று நினைக்கின்றோம். ஆனால் ரயில் ட்ராக்குகளில் நான்கு அடுக்குகள்  பயன்படுத்தபடுகிறது. முதல் நிலை இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, நான்காம் நிலை என்று நான்கு விதமான தளங்கள் அதில் பயன்படுத்தப்பட்டு பாதுகாப்பாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ட்ரெயின் கேலரியில் முன்பாக மிக அழகான ஒரு ஸ்கிராபிக் தயாரிக்கப்பட்ட பொம்மை அமைக்கப்பட்டுள்ளது.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழ ஊஞ்சல் உட்பட பல விளையாட்டு பொருள்கள் :

    சிறு குழந்தைகள் முதல் பெரியவர் வரை விளையாடி மகிழும் வகையில் பல்வேறு விதமான விளையாட்டு உபகரணங்களும் அங்கே  வைக்கப்பட்டுள்ளன. ஒரு நாள் முழுவதும் நீங்கள் முழுவதுமாக அங்கே செலவிடலாம் .காலையில் உணவைக் கட்டிக் கொண்டு அங்கே சென்று விட்டால் மாலை வரை நீங்கள் உள்ளே இருக்கலாம். நன்றாக விளையாடிவிட்டு ட்ரெயின் கேலரியை ஆர்வம்தீர  பார்த்து விட்டும் நமது சாப்பாட்டை நாம் சாப்பிடலாம்.

    ட்ரெயின் என்ஜினை காணும் அருமையான வாய்ப்பு :

    ட்ரெய்னில் எவ்வாறெல்லாம் நிலக்கரியை எடுத்து மற்றொரு பக்கம் போடுகிறார்கள் என்பதை அந்த ட்ரெயின் உள்ளேயே சென்று நாம் காணமுடியும். பொதுவாக நாம் ரயிலைதான் தான் பார்க்கிறோம். இன்ஜின்கள் எவ்வாறெல்லாம் உள்ளது என்பதை நாம் பார்ப்பதற்கான வாய்ப்புகள் இல்லை .ஆனால் இங்கே அந்த வாய்ப்புகள் நமக்குத் தரப்பட்டிருக்கிறது. மிக அழகாக நாம் அவற்றைக் காணக் கூடியநிலையில் இருக்கின்றோம். இது ஒரு மிகப்பெரிய அருமையான வாய்ப்பு. மேலும் பழங்காலத்திலிருந்து நமது இந்தியாவில் செல்ல கூடிய அனைத்து விதமான ரயில்களையும் நாம் அங்கே காண முடிகிறது. பஸ்ட் கிளாஸ் ஏசி முதல் கடைசி நிலை வரை எவ்வாறு ரயில்  பெட்டிகள் அமைக்கப்பட்டிருக்கிறது, இன்ஜின்கள் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை எல்லாம் எளிதாக பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது. அந்த காலத்தில் ரயில்கள் எப்படி எல்லாம் ஓடியது என்கிற தகவலும் உண்டு. அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. நமக்குத்தான் (லெ. சொக்கலிங்கம், காரைக்குடி ) நேரமும் காலமும் அதிகமாக வேண்டும். அதுதான் உண்மை கால் வலிக்கும் போது நாம் ஆங்காங்கே ஓய்வு  எடுத்துக் கொள்வதற்கு சிமெண்ட் பலகைகளை அமைக்கப்பட்டுள்ளன .

    காண்போரை பரசவப்படுத்தும் மூவி தியேட்டர் :

    மூவி தியேட்டர் என்று ஒன்று வைத்துள்ளனர். இந்த மூவி தியேட்டரை நீங்கள் (லெ. சொக்கலிங்கம், காரைக்குடி) சென்று கேட்டால் மட்டுமே அவர்கள் போட்டு காண்பிக்கிறார்கள். ஏனென்றால் சில தயாரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருப்பதால் குறைந்தது இருபது பேர் இருந்தால் அந்த மூவி தியேட்டரில் ரயில் வாழ்க்கை வரலாறை போட்டு காண்பிக்கிறார்கள். ட்ரெயின் எவ்வாறெல்லாம் வளர்ச்சி அடைந்தது, அதனுடைய வளர்ச்சியின் தன்மைகள் என்ன என்பதையெல்லாம் மிக அழகாக படத்தில் காண்பித்துள்ளனர். மிக அருமையான ஒரு தியேட்டர். ஒலி ஒளி அமைப்பு மிக அருமை. காட்சிகளும் மிக அருமை. அதற்காக அவர்கள் எடுத்த முயற்சிகளும் அருமை. ஊட்டி டிரெயின் பற்றி நாம் பலமுறை கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் அதனை நேரடியாக இங்கு படத்தில் காண முடிகிறது. அதற்கான அமைப்புகள் என்ன என்பதை தெளிவுபடுத்தி உள்ளனர். பார்க்கும் போதே நமக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. பழங்காலத்தில், பழங்காலம் என்றால் சில காலங்களுக்கு முன்பாக டிரெயின் வரும்பொழுது ஒரு வட்ட வடிவமான ஒரு குச்சியை தயார் பண்ணி அதனுள்ளே ஸ்டேஷன் மேலாளர் டெலிபோனில் பேசி விட்டு ஒருபால் போன்ற பொருளை எடுக்கின்றார். உதாரணமாக C 17 என்கிற பால் எடுத்து அதனை அந்த வட்டவடிவ கூண்டில் கட்டி அதை வரும் ட்ரெயினில் ஒரு ஆளை வைத்து கொடுக்கின்றனர். இரவு நேரங்களில் தீப்பந்தம் எரியவிட்டு அதனை கட்டி விடுகிறார்கள். அப்போது அந்த ட்ரெயின் வேகமாக செல்லும்போது அது தட்டி விட்டு செல்கிறது .தட்டி விட்டால் அந்த ட்ரெயின் அந்த நிலையத்தை கடந்து விட்டதாக அர்த்தம் ஆக எடுத்துக் கொள்கிறார்கள் .மேலும் உலகத்திலேயே முதன்மையான இந்திய ரயில் தொழிற்சாலை பற்றி மிகத் தெளிவாக கொடுத்துள்ளனர் .அதுவும் அது சென்னையில் அமைந்துள்ளது நமக்கெல்லாம் மிகப்பெரிய பெருமை என்று கூறலாம்.

    பழங்காலத்தில் செயல்பட்ட டார்ஜிலிங் ரயில் தொடர்பாகவும் மிக அழகாக ஒரு காட்சியை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒளியும் ஒளியும் மிகவும் அருமை. புதிய காலத்திற்கான பல்வேறு நாடுகளில் உள்ள ரயில்கள் தொடர்பாகவும், சுற்றுலா ரயில்கள் தொடர்பாகவும், பல்வேறு தகவல்கள் ஒலி ஒளி காட்சிகள் காண்பிக்கப்படுகிறது. கனடா, லண்டன், அமெரிக்கா, ஈகுவடார் இன்னும் பல்வேறு நாடுகளின் உடைய ரயில்களின் வடிவமைப்புக்கள் இங்கே காட்சிப்படுத்தப்படுகிறது. இந்தியாவில் செல்லக்கூடிய பல்வேறு இரயில்களின் குறிப்பாக சுற்றுலா ரயில்களின் வடிவமைப்பதிலும், அழகான ஒளி ஒலி அமைப்புடன் காண்பிக்கப்படுகிறது .இப்படியெல்லாம் டிரெயின்கள் இருக்கிறது என்கிற தகவலும் நாம் அங்கேயே தெரிந்துகொள்ள முடிகிறது.

    பிளாஸ்டிக் விழிப்புணர்வு :

    இந்த ஒலி-ஒளி காட்சி நிறைவாக பிளாஸ்டிக் விழிப்புணர்வு மிக அருமையாக எடுத்து வைக்கப்படுகிறது .இரண்டு நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய ஒளி ஒலி கண்காட்சியில் நாம் குடிக்கும் தண்ணீரிலும் சாப்பிடும் உணவிலும் பிளாஸ்டிக் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை நம் ஆழ் மனதில் பதியுமாறு எடுத்துரைக்கின்றனர். இது மிகப்பெரிய பாராட்டுக்குரிய விஷயம் ஆகும்

    ICF  உள்ளே கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள் :

    ICF  உள்ளே எவ்வளவு வேலை வாய்ப்புகள் உள்ளன, என்னென்ன மாதிரியான செயல்பாடுகள் அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்கிற தகவலை எல்லாம் தெளிவாக கொடுக்கிறார்கள்.

    பெண்களே ரயில் பெட்டி தயாரிக்கும் மகிளா யூனிட் :

    ஒரு யூனிட்டிற்கு மகிளா யூனிட் என்று பெயர் வைத்து முற்றிலும் பெண்களே இயக்கக்கூடிய, தயாரிக்கக் கூடிய ஒரு யூனிட் அங்கே ரயில் பெட்டி தொழிற்சாலையில் உள்ளே அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றனர். ரயில் பெட்டி தொழிற்சாலை தயாரிக்கும் பணியில் அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்கும் பல்வேறு விதமான சலுகைகளையும் வசதிகளையும் செய்து கொடுத்து உள்ளனர். ஒவ்வொரு குடியிருப்பு மிக அருமையாக கட்டமைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளின்  வடிவமைப்பு மிகவும் நேர்த்தியாக உள்ளது. நமக்கான பல்வேறு வாய்ப்புகள் அங்கே காணப்படுகிறது. விளையாட்டில் திறமையாக இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ரயில்வே தொழிற்சாலை மக்களுக்காகவும் பல்வேறு நலத்திட்டங்களையும் செய்து வருகிறது. குறிப்பாக மூன்று கல்யாண மண்டபங்கள், சமுதாயப் பணிகள் என்று பல்வேறு விதமான தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பார்க்கும் பொழுது இவ்வளவு வேலை வாய்ப்புக்கள் உள்ளன என்கிற தகவலையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

    ரயில்  உணவு :

    நீங்கள் (லெ. சொக்கலிங்கம், காரைக்குடி) உள்ளேயே சாப்பிடுவதற்கு மகாராஜா ரயில் போன்ற வடிவத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் சென்னை மியூசியம் என்று ஒரு ரயில் உணவகம் அமைத்துள்ளனர். ரயில் உணவகத்தில் நான்வெஜ் தான் முழுவதுமாக உள்ளது. கொஞ்சம் விலை அதிகமாக உள்ளது. ஆனால் உணவின் தரம் கொஞ்சம் குறைவாகவே உள்ளது. இடையிடையில் நீங்கள் டீ சாப்பிடுவதற்கு வேறு உணவுகள் சாப்பிடுவதற்கும்  பல்வேறு விதமான ஸ்னாக்ஸ்  சாப்பிடுவதற்கும் கேண்டீன் ஒன்றும் உள்ளது. நீங்கள் உள்ளே செல்வதற்கு வாங்கும் டிக்கெட் விலையில் கேன்டீனில் உள்ளே சாப்பிட 10 ரூபாய் அதற்கான டோக்கன் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகமாக வேண்டுமானால் நீங்களே உணவுகளை காசு கொடுத்து வாங்கி சாப்பிட்டு கொள்ள வேண்டும் .திங்கள்கிழமை விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. ரயில் உணவகத்தில் நீங்கள் அமர்ந்து சாப்பிடும் பொழுது ரயிலில் இருப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகின்றன. அதற்கு அவர்கள் உள்ளே போய் உட்கார்ந்து சாப்பிடுவது போன்று  பார்த்துவிட்டு வரலாம்.

    ரயில் மியூசியம் தோழர்களுக்கு நன்றி :

    இந்த நிகழ்வுகளுக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நண்பர்களுக்கும். ஒரு நாள் முழுவதற்குமான பொழுதுபோக்கு, தொழிற்சாலை பிரிவுத் தகவல்கள், வேலைவாய்ப்புத் தகவல்கள், சுற்றுலா தகவல்கள், பொழுதுபோக்கு தகவல்கள், குடும்பத்துடன் கொண்டாட கூடிய தகவல்கள், என பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய ரயில் மியூசியத்திற்கு நான் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

    எங்கிருந்து எங்கு சென்றோம்?

    நண்பர்களே நாங்கள் அடையாரில் இருந்து நண்பர் ஆனந்த் அவர்களின் காரில் வில்லிவாக்கம் பெரம்பூர் அருகே உள்ள ஐசிஎப் தொழிற் சாலைக்கு சென்றோம் .அனைத்து அணிகளையும் பார்த்துவிட்டு மீண்டும் மாலை ஐந்து முப்பது மணி அளவில் பெரம்பூரில் கிளம்பி பெசன்ட் நகர் பீச்சுக்கு சென்று விட்டோம் .அங்கு ஒரு மணி நேரம் இருந்து விட்டு இரவு உணவை ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வீட்டை அடைந்தோம். காலை முதல் இரவு வரை ஒரு நாள் முழுவதும் சுற்றுலாவுக்கு செல்லக்கூடிய மிக அருமையான இடம் ஐசிஎப் ரயில்வே மியூசியம் ஆகும்.

    நண்பர் ஆனந்துக்கு நன்றி:

    ஒத்துழைப்பு நல்கிய நண்பர் ஆனந்த் அவர்களுக்கும் ,அவரது குடும்பத்தினருக்கும் மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் .ரயில்வே மியூசியத்தில் உள்ள அனைத்து அலுவலர்களும் ஊழியர்களும் மிக நல்ல முறையில் நம்மை அனுசரித்து நமக்கு வேண்டிய பல்வேறு தகவல்களையும் பொறுமையுடன் எடுத்துரைத்தனர் .அது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம் ஆகும் .

    ரயில் ம்யூஸியத்தின் உள்ளே உள்ள காட்சிகளை வீடியோவாக காண:

    1) https://www.youtube.com/watch?v=Ibmv7XgCKJk

    2)  https://www.youtube.com/watch?v=Aq4nOKAtFA8

    3) https://www.youtube.com/watch?v=e7cM6PDL0cQ

    4) https://www.youtube.com/watch?v=Rc77d6tBGfI

    5) https://www.youtube.com/watch?v=EOUa3XrEJEo

    பட விளக்கம் : சென்னை ரயில் மியூசியத்தில் ஒரு நாள் முழுவதும் பயனுள்ள வகையில் சுற்றி பார்க்கும் இடங்களை சுற்றி பார்த்த சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்

    Share
  • இயற்கையில் எழுந்த இசை – பகுதி 4

    இயற்கையில் எழுந்த இசை – பகுதி 4

    நிர்மலா ராகவன்

    குமரேசா

    ஒவ்வொரு பாட்டை எழுதி முடித்தபின்னரும், கோலாலம்பூர் பத்துமலை முருகன் கோயிலுக்குச் சென்று `அரங்கேற்றம்’ செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.

    ஒரு முறை, `எல்லார்மேலேயும் எழுதறியே! என்மேலே ஒரு பாட்டு எழுதக்கூடாதா?’ என்று முருகன் கேட்பதுபோல் இருந்தது. பயந்துவிட்டேன். பாட்டு தானாகவேதான் எழவேண்டும். இல்லாவிட்டால் நன்றாக இருப்பதில்லை.

    அதற்கடுத்த வாரம் பினாங்கு தண்ணீர்மலையிலுள்ள முருகன் கோயிலுக்குப் போனபோது, `ஒனக்குப் பாட்டு வேணும்னா, நீயே சொல்லிக்கொடு!’ என்று பாரத்தை அவன் தலையிலேயே போட்டேன்.

    சரியாக ஒரு வாரம் கழித்து, `குமரேசா’ என்ற பாடலின் முதல் பாகம் (பல்லவி) நள்ளிரவு தூக்கத்தில் என் காதில் ஒலித்தது, கோலாலம்பூரில். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தேன். இரண்டு மூன்று முறைகளுக்குப்பின் விழிப்பு கொடுத்தது. தயாராக வைத்திருந்த நோட்டில் ஸ்வரப்படுத்தி எழுதிவிட்டு உறங்கிவிட்டேன். காலையில்தான் ஆபோகி ராகம் என்றே புரிந்தது!

    பத்துமலை உச்சியில் பலமுறை இப்பாடலைப் பாடியிருக்கிறேன்.

    அகன்ற குகை. அங்கு பாடுகையில், கூடவே வீணையோ, புல்லாங்குழலோ ஒலிப்பது கேட்கும். ஒரு வெள்ளைக்காரர் என் வாய்க்குள் புகாதகுறையாகத் தலையை நீட்டி எட்டிப்பார்த்தது வேடிக்கையான அனுபவம்.

    பதினைந்து வயதுக்குட்பட்ட சிறுமிகள் இப்பாட்டிற்கு அபிநயம் பிடிக்கையில் சகோதரனுடன் சண்டைபிடித்தல், முகத்தைத் தூக்கிவைத்துக்கொள்வது எல்லாம் அவர்கள் வாழ்வில் நடந்ததாகவே இருக்க. பார்ப்பவர்கள், `ஆகா! என்ன பாவம்!’ என்று பாராட்டுவார்கள்!

    பி.கு: `கு’ என்றால் அறியாமை. நம் அறியாமையை மாற்றுபவன் குமாறன். அது மருவி, குமாரன் ஆகிவிட்டதாம்.

    இப்பாடலைக் கேட்க:

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 96

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 96

    நாங்குநேரி வாசஸ்ரீ

    96. குடிமை

    குறள் 951

    இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்
    செப்பமும் நாணும் ஒருங்கு

    பாரபட்சம் பாக்காத நடுவுநெலமையும், ஆர்ப்பாட்டமில்லாத அடக்க கொணமும் ஒசந்த குடியில பொறந்தவுகளத் தவித்து மத்தவுக கிட்ட இல்ல.

    குறள் 952

    ஒழுக்கமும் வாய்மையும் நாணுமிம் மூன்றும்
    இழுக்கார் குடிப்பிறந் தார்

    ஒசந்த குடியில பொறந்தவுக ஒழுக்கம், நாணயம், மானம் இந்த மூணயும் விட்டுவெலகி நெலதடுமாறி நடக்க மாட்டாக.

    குறள் 953

    நகையீகை அன்சொல் இகழாமை நான்கும்
    வகையென்ப வாய்மைக் குடிக்கு

    ஒசந்த குடியில பொறந்தவுகளுக்கு சிரிச்ச மொகம், இனிக்கப் பேசுத கொணம், கொடுக்குத கொணம், கேலி பேசாம இருக்கது இந்த நாலு நல்ல கொணமும் இருக்கும்.

    குறள் 954

    அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
    குன்றுவ செய்தல் இலர்

    பலகோடி செல்வம் கெடைக்கதா இருந்தாலும் ஒசந்த குடியில பொறந்தவுக தங்குடிப் பெரும கெடுததுக்குத் தக்கன காரியத்த செய்ய மாட்டாக.

    குறள் 955

    வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
    பண்பின் தலைப்பிரிதல் இன்று

    ஏழையாப் போயி மத்தவுகளுக்கு கொடுத்து ஒதவுதது கொறஞ்சு போனாலும் பழைய பெரும இருக்க குடியில பொறந்தவுக கொடுக்குத கொணத்த உடமாட்டாக.

    குறள் 956

    சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
    குலம்பற்றி வாழ்துமென் பார்

    குத்தங்கொறையில்லாம வாழ நெனைக்கவுக வஞ்ச மனசோட தகாத காரியங்களச் செய்ய மாட்டாக.

    குறள் 957

    குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
    மதிக்கண் மறுப்போல் உயர்ந்து

    ஒசந்த குடியில பொறந்தவுகளோடகுத்தங்கொற வானத்து நிலாவுல இருக்க களங்கம் கணக்கா பெரிசாத் தோணும்.

    குறள் 958

    நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
    குலத்தின்கண் ஐயப் படும்

    நல்லகொணத்தோட இருக்க ஒருத்தன் நேசமில்லாம இருந்தாம்னா அவன் பொறந்த குலத்தையே இந்த ஒலகம் சந்தேகப்படும்.

    குறள் 959

    நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
    குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்

    வெளஞ்ச பயிரப்பாத்தே இது இன்ன நெலத்துல வெளஞ்சதுனு தெரிஞ்சிக்கிடலாம். அதுகணக்கா ஒருத்தங்க பேசுத பேச்ச வச்சி அவுக எந்தமாரி குடும்பத்துல பொறந்திருக்காகனு தெரிஞ்சிக்கிடலாம்.

    குறள் 960

    நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
    வேண்டுக யார்க்கும் பணிவு

    ஒருத்தன் நன்ம வேணும்னு நெனச்சா வேண்டாத காரியம் செய்ய பயந்துக்கிடணும். நல்ல குடும்பத்துல பொறந்தவன்னு பேரு வேணும்னு நெனச்சா எல்லார்க்கும் பணிஞ்சு போவணும்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(282)

    குறளின் கதிர்களாய்…(282)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(282)

    நட்டார்போ னல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
    ஒல்லை யுணரப் படும்.
    – திருக்குறள் -826 (கூடா நட்பு)

    புதுக் கவிதையில்…

    நட்பினர்போல் நடித்து
    நமக்கு
    நல்லவை சொன்னாராயினும்,
    பகைவர்தம் சொல்
    தீமைபயப்பதென அறிந்து
    விரைவில் உணரப்படும்…!

    குறும்பாவில்…

    நண்பர்போல் நல்லவை சொன்னாலும்,
    பகைவர்சொல் தீயதெனத் தெரிந்து
    விரைவில் உண்மை உணரப்படும்…!

    மரபுக் கவிதையில்…

    நன்மை செய்திடும் நண்பர்போல்
    நன்றாய் நடித்தே உடனிருந்தே
    இன்சொலால் நல்லவை சொன்னாலும்
    இன்னா செய்திடும் பகைவர்சொல்,
    என்றும் நன்மை தாராதே
    எல்லாத் தீமையும் தருவதென
    நன்றாய் அறிந்தே உடனடியே
    நலந்தரா உண்மை தெரிந்திடுமே…!

    லிமரைக்கூ..

    நண்பர்போல் சொன்னாலும் நல்லவை
    பகைவர்சொல் நன்கறிந் துடனே உணரப்படும்,
    அவையெலாம் நலந்தரா அல்லவை…!

    கிராமிய பாணியில்…

    நட்புவேண்டாம் நட்புவேண்டாம்
    கெட்டவனோட நட்புவேண்டாம்,
    நல்லவனப்போல நடிச்சிவந்தாலும்
    கெட்டவனோட நட்புவேண்டாம்..

    நண்பன்போல நடிச்சி
    நமக்கு
    நல்லதெல்லாம் சொன்னாலும்,
    அந்தப்
    பகயாளி வார்த்தயால
    நன்ம எதுவுமே வராம
    தீமதான் வருமுண்ண உண்ம
    ஒடனே தெரிஞ்சிபோவுமே..

    அதால
    நட்புவேண்டாம் நட்புவேண்டாம்
    கெட்டவனோட நட்புவேண்டாம்,
    நல்லவனப்போல நடிச்சிவந்தாலும்
    கெட்டவனோட நட்புவேண்டாம்…!

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 95

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 95

    நாங்குநேரி வாசஸ்ரீ

    95. மருந்து

    குறள் 941

    மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
    வளிமுதலா எண்ணிய மூன்று

    மருத்துவம் படிச்சுவுக சொல்லுத வாதம், பித்தம், கபம் இந்த மூணுல ஏதும் ஒண்ணு அதிமானாலோ கொறஞ்சாலோ நோய் உண்டாவும்.

    குறள் 942

    மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
    தற்றது போற்றி உணின்

    ஒருத்தன் மொத சாப்பிட்டது செரிச்சுட்டுதான்னு தெரிஞ்ச பொறவு அடுத்தாப்ல சாப்பிட்டாம்னா அவனுக்கு மருந்துனு ஒண்ணு தேவ கெடையாது.

    குறள் 943

    அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு
    பொற்றான் நெடிதுய்க்கும் ஆறு

    தின்னது செரிச்சிடுச்சுனு தெரிஞ்சுக்கிட்டு அடுத்தாப்ல அளவா சாப்பிட்டு இருக்கதுதான்  நெறைய ஆயுசோட இருக்கதுக்குண்டான வழி.

    குறள் 944

    அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
    துய்க்க துவரப் பசித்து

    மொத தின்னது செரிச்சத உணந்துக்கிட்டு ஒடம்பு ஒத்துக்கிடுத சாப்பாட்ட வயிறு பசிஎடுத்த பொறவு திங்கணும்.

    குறள் 945

    மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்
    ஊறுபா டில்லை உயிர்க்கு

    ஒடம்புக்கு ஏத்த சாப்பாட்டக் கூட மூக்குப்பிடிக்க திங்காம அளவா தின்னாம்னா அவன் வாழ்க்கையில நோவுநொடியால சங்கடப்படமாட்டான்.

    குறள் 946

    இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
    கழிபேர் இரையான்கண் நோய்

    அளவா சாப்பிடுதவன விட்டு சொகம் வெலகாம இருக்கது கணக்கா மூக்குபிடிக்க திங்கவனவிட்டு நோய் வெலகாம நிக்கும்.

    குறள் 947

    தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
    நோயள வின்றிப் படும்

    வயித்துப்பசியோட அளவு தெரியாம அதிகமா திங்கவன் ஒடம்புல நோவுநொடி அளவில்லாம வளந்துபோடும்.

    குறள் 948

    நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
    வாய்நாடி வாய்ப்பச் செயல்

    நோய் இன்னதுனு தெரிஞ்சிக்கிட்டு அது வந்த காரணத்த அறிஞ்சு அதப் போக்குத வழிமொறையத் தெரிஞ்சு தக்கமாரி தப்பில்லாம வைத்தியம் பாக்கணும்.

    குறள் 949

    உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
    கற்றான் கருதிச் செயல்

    சீக்காளியோட வயசு, சீக்கோட தன்ம, வைத்தியம் பாக்க ஆவுத நேரம் எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்ட பொறவு தான் வைத்தியர் வைத்தியம் செய்யணும்.

    குறள் 950

    உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்
    றப்பானாற் கூற்றே மருந்து

    சீக்காளி, மருந்து, மருந்து கொடுக்கவர்,வைத்தியர் னு வைத்திய மொற நாலு வகையா அமைஞ்சிருக்கு.

    Share
  • வாழ்க்கையை அதன் போக்கில் விடு

    வாழ்க்கையை அதன் போக்கில் விடு

    பாஸ்கர் சேஷாத்ரி

    முப்பது வருஷங்களுக்கு முன் புது வருட வேலைக்கு செல்லும் நாள் வந்தால் ஒரு வருத்தம் கவ்வும். சின்ன வயது. எல்லோருக்கும் விடுமுறை எனும்போது நமக்கு மட்டும் அலுவலகம் என்ற சிந்திப்பு தான் காரணம்.

    அப்போது விற்பனை பிரதிநிதி வேலை. நாள் கிழமை நேரம் காலம் எல்லாம் இல்லை. எப்போதும் பிழைப்பு என்ற புத்தி உள்ளே ஊறிய நேரம். வழக்கமான கைப்பெட்டி ஒரு ஷூ என எல்லாத் தகுதிகளும் கொண்ட ஒரு சேல்ஸ்மேன். 

    அது ஒரு மிக்சி கம்பெனி. பெரிய கடை வாசலில் மாலை நேரங்களில் ஒரு டெமோ நடக்கும். பகல் நேரங்களில் மீட்டிங் என பரபரப்பான நேரங்கள் அவை. டெமோ நடக்கும் போது ஒரு மேஜையில் மிக்சி வைத்து அரைத்துக் காட்ட வேண்டும். சட்னி முதல் மஞ்சள் வரை அதனைச் சடுதியில் அரைத்து, வருபவர்களுக்குக் காட்டும் போது, கிட்டத்தட்ட ஒரு மேஜிக் ஷோ போல இருக்கும். பெண்கள் அங்கேயே உடனே வாங்குவார்கள். சிலர் பதிவு செய்து செல்வார்கள். வசீகரமான மாலைகள் அவை. இதில் சலிப்பு போகும்.

    விற்பனைப் பிரதிநிதிகள் தன்னம்பிக்கை உடையவர்கள். இல்லாமல் இருந்தாலும் தொழில் அதனைக் கற்றுக் கொடுத்துவிடும். இதனை எந்தப் படிப்பும் சொல்லிக் கொடுக்க முடியாது.

    அனுபவம் பெரிய பாடம். அதுவும் பெரிய கடை வாசலில் எல்லோரும் குழுமி இருக்க, ஒருவர் திறம்பட வேலை செய்து பாராட்டுப் பெறும்போது ஏற்படும் நெகிழ்வும் சந்தோஷமும் எந்தப் பணமும் கொடுக்காது. கைத்தட்டல் தான் இல்லை. மண்டையில் இந்த நேரங்களில் தான் கனம் ஏறும். ஒரு கர்வம் தலை தூக்கும். திமிர் பெருகும். இது கிட்டத்தட்ட வித்யா கர்வம்.

    அதே துறையில் கிடைக்கும் தோல்வி அதனைச் சமன்படுத்தும். கிட்டத்தட்ட நான் எந்தக் கடைக்கு சென்றாலும் ஒரு ஹீரோ போலக் கருதப்படுவேன். ஓரளவுக்கு நல்ல உடை, நுனி நாக்கு ஆங்கிலம், கொஞ்சம் தொழில் திறன் என்று கொஞ்சம் இருக்கவே இவ்வளவு மரியாதையா என யோசிப்பேன்.

    பிரபலத்திற்கு ங்காத மனசு உண்டா? இவை எல்லாமே ஒரு எண்ணூறு ரூபாய் சம்பளத்திற்கு. இன்று பிளம்பரின் ஒரு நாள் கூலி இது. எங்குச் சென்றாலும் பஸ் தான். கையில் சூட்கேஸ் சுமையை வைத்துக் கொண்டு ஒவ்வோர் இடமாகச் சென்று பேசிய காலம் அது. அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்தவுடன் எப்போது புத்தாண்டு பிறக்கும் என்ற ஆசை துளிர் விட ஆரம்பித்தது.

    துக்கம் போய் இப்போது எதிர்நோக்கும் ஏக்கம். இதன் அடிப்படை தொழில் நேசிப்பு, அங்கீகாரம், உழைப்பு, பேருக்கு அலையும் புத்தி, முன்னுக்கு வர வேண்டும் என்ற சிந்தனை.

    அடிநாதத்தில் ஒரு வாழ்க்கை பயம். இங்கு எல்லாமே வழக்கொழிந்து போகவே பிறக்கிறது. இது வாழ்க்கைச் சுழற்சியின் இயல்பு. பிரயாணத்தில் நிற்றல் இல்லை. கற்றல் மூச்சு. அது தானியங்கி. வாழ்க்கையை அதன் போக்கில்தான் விட வேண்டும் போல இருக்கிறது. நாம் அதனைப் பயிற்சி நாய் போல மாற்றிக்கொண்டு இருக்கிறோம்.

    Share
  • வரந் தருவாய் முருகா!

    வரந் தருவாய் முருகா!

    மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா
    மெல்பெண், ஆஸ்திரேலியா

    வரந் தருவாய் முருகா – வாழ்வில்
    நிரந் தரமாய் உன்னை
    நினைந்துமே நான் வாழ
    வரந் தருவாய் முருகா
    சிரமேறும் ஆணவம் குறைத்திடுவாய் – வாழ்வில்
    மரமாக இருப்பதையும் ஒழித்திடுவாய்
    உணர்வோடு உனைநினைக்க உதவிடுவாய் – என்றும்
    உயிர்ப்போடு வாழ்வதற்கு அருளிடுவாய்   (வரந்தருவாய் முருகா)

    குறைகூறும் மனமகல உதவிடுவாய் – வாழ்வில்
    கறையுள்ள செயலனைத்தும் களைந்தெறிவாய்
    திறலுடை பெரியோரை இணைத்திடுவாய் – என்றும்
    மறவாமல் உனைத்துதிக்க வரமருள்வாய் (வரந்தருவாய் முருகா)

    மாறுபடு சூரரினை திருத்தியவா – வாழ்வில்
    வேறுமுகம் அமையாது காத்திடுவாய்
    காரிருளை கருணையினால் களைந்திடுவாய் – என்றும்
    கரிசனையை என்மீது காட்டிடுவாய் (வரந்தருவாய் முருகா)

    Share
  • படக்கவிதைப் போட்டி – 239

    படக்கவிதைப் போட்டி – 239

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    முபாரக் அலி மக்கீன் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (05.01.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 238-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 238-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    வல்லமை வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    புகைப்படக் கலைஞர் திருமிகு. நித்தி ஆனந்த் படம்பிடித்துத் தந்திருக்கும் இந்த வண்ணக் கோலத்தை, வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து படக்கவிதைப் போட்டி 238க்கு அளித்திருப்பவர் திருமிகு. சாந்தி மாரியப்பன். கலைஞருக்கும் தேர்வாளருக்கும் என் நன்றி!

    இல்ல வாயில்களில் பெண்கள் வரையும் மாக்கோலம் கவின்கலைகளில் சிறந்த ஒன்றாகும். எத்தகைய கணிதக் கருவிகளின் துணையுமின்றிக் கண்களையே நுண்ணிய அளவுகோலாய்க் கொண்டு வரையப்படும் கோலங்கள் கவனக்குவிப்புக்கும், பிசிறில்லாமல் துல்லியமாகக் கோடுகளும் பிற வடிவங்களும் வரைவதற்கும் நல்ல பயிற்சியாகும். வண்ணக் கோலங்களால் இல்லம் பொலிவுறுகின்றது; உள்ளம் மகிழ்வு பெறுகின்றது. அரிசி மாவில் இடப்படும் கோலம், சிற்றுயிர்களுக்கும் உணவாய் அமைவதனால் உண்டிக்கொடை அளித்த சிறப்பையும் பெண்டிருக்கு நல்குகின்றது.

    நம் முன்னோர் தொடங்கிவைத்த பல செயல்களை, எவ்வித மனச்சாய்வுமின்றி, ஆய்ந்துபார்த்தால் அவை தனிமனித மகிழ்ச்சியைத் தாண்டி பிற உயிர்களின் மகிழ்ச்சியையும் நிறைவையும் உள்ளடக்கியதாகவே அமைந்திருப்பதை அறியமுடிகின்றது.

    இனி, இந்த வண்ணக் கோலத்திற்கு இசைவான பாடல்களைப் புனைந்துதர நம் கவிஞர்கள் காத்திருக்கின்றார்கள். புத்தாண்டு வாழ்த்துக்களோடு அவர்கள் அனைவரையும் வரவேற்பதில் மகிழ்கின்றேன்.

    *****

    ”மார்கழிக் காலைகளை அலங்கரிக்கும் முழுநிலாக் கோலங்கள் மதி சூடிய ஈசனையும் அதிசயிக்க வைப்பவை” என்று பாராட்டுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    கோலங்கள்…

    ஒழுங்காய் வராது ஒருநிலாவும்
    ஒருசில நாளில் மறைந்துவிடும்,
    எழுந்தன மார்கழிக் காலையிலே
    எழிலுடன் நிலத்து நிலவுகளே,
    அழுது வடியும் பனியினிலும்
    அழகுக் கோலமாய்த் தெருவினிலே,
    எழுதிய ஈசனும் அதிசயிக்க
    எழுதினர் பல்வகைக் கோலங்களே…!

    *****

    ”உழவுக்கும் உழைப்புக்கும் உயர்வளிக்கும் கோலம்; தமிழ்நாடு போற்றுகின்ற தைப்பொங்கல் கோலம்” என்று கோலத்தின்சீர் பரவுகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    தைப்பொங்கல் கோலம்

    வாழும் மக்கள் வயிற்றுப்பிணித் தீர்த்துவிடும் கோலம்
    வஞ்சமில்லா நெஞ்சம்மகிழ் பச்சைப்பசுங்கோலம்
    கழனிபுகு விவசாயி கதிஉயர்த்தும் கோலம்
    உழவுக்கும் உழைப்புக்கும் உயர்வளிக்கும் கோலம்

    கதிரவனின் தேர்திரும்ப வரவேற்கும் கோலம்
    நிலமடந்தைக் கதிராடை உடுத்திநின்ற கோலம்
    பசுஞ்சோலைப் பூக்கப் பிஞ்சு மொட்டுவிடும் கோலம்
    வசந்த காலம் வருவதையே கட்டியஞ்சொல்லும் கோலம்

    காடுவளர் காளைக்கெல்லாம் கனிவளிக்கும் கோலம்
    கன்னிப்பெண்கள் குடி உயர்த்தும் கதிர்மணிக் கோலம்
    கூடி நாமும் வாழவழிச் செய்யும் சீர்க் கோலம்
    கன்னித் தமிழ்நாடு போற்றும் தைப்பொங்கல் கோலம்

    *****

    நீர்தெளித்துக் கோலமிட்டு யார் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றாள் இப்பாவை? என்று வினாவெழுப்பும் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ், வேலைதேடி நகரத்துக்குச் சென்றவன் வீட்டு வாயிலை அலங்கரிப்பவையோ நெஞ்சில் ஒட்டாத ஒட்டுக்கோலங்கள் என்ற உண்மையையும் உரைக்கத் தவறவில்லை.

    வாசலிலே நீர் தெளித்து
    வண்ணக் கோலம் போட்டுவைத்து
    யார் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும்
    இத்திருப்பாவை?

    நாணயத்தைக் கோலத்தில் சேர்த்து
    நாராயணனுக்கு நாகரிகமாய் உணர்த்தியதோ
    லட்சுமி குடியிருக்கும் இவ்விடத்தை
    இத்திருப்பாவை?

    பூக்கோலம் போட்டு வைத்துப்
    பூமாலை தொடுத்து வைத்தேன்!
    பாமாலை தொடுத்து உன் திருத்தோள்களில்
    மணமாலை சூடிடக் காத்துநிற்கும்
    இத்திருப்பாவை!

    வாய்ப்புத்தேடி வாழ்க்கையைத்தேடி
    வீடு வாசல் துறந்தவன்
    வானுயர்ந்த மாளிகையில்
    வாசல் சுருங்கிட வாழ்கின்றான்!

    மார்கழி மறந்து போர்வைச் சிறைக்குள்
    விடிந்தும் உறங்குகிறான்
    இவன் வாசல் கூட அழகாய் ஜொலித்திடும்
    வண்ண வண்ண மையால் எழுதிய
    அழியாத கோல ஒட்டிகளால்!

    காலம் மாறிப்போச்சு…..
    கோலமும் மாறிப்போச்சு!

    *****

    மாக்கோலத்தை வைத்து மனிதர்களின் மனக்கோலத்தை அழகாய்ப் படம்பிடித்துக் காட்டியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டும் நன்றியும்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    நல்வரவு

    விருந்தினர் வருகையும்
    இல்லத்தின் நிறைவும்
    வாசலில் அறிவிப்போம்!

    அரிசிமாவில் கோலமிட்டுப்
    பல்லுயிர் வாழ்ந்திடவே
    தமிழ்மறையில் ஒளித்துவைத்தோம்!

    காலையும் மாலையும்
    கோலமிடும் உடற்பயிற்சியினைக்
    கலையுடன் இணைத்துவைத்தோம்!

    குடும்பத்தில் உள்ள
    நெளிவு சுளிவுகளைச்
    சிக்கல் கோலங்களில் பயிற்றுவித்தோம்!

    கூரிய சிந்தனைகளுடன்
    மனதை ஒருநிலைப்படுத்திடவே
    புள்ளிகள் இணைப்பதில் கடத்திவைத்தோம்!

    மார்கழித் திங்கள்
    (இறை)சக்தியின் வருகை
    அதிகாலை அறிந்திடுமே
    எம்மனைப் பெண்கள் நலம்பெற்றிடவே
    வாசலை அலங்கரித்துத் தொழவைத்தோம்!

    கற்பனை ஓவியங்களைக்
    கைத்திறன் நேர்த்தியின் அழகினிலே
    வீதியில் பிரதிபலித்தோம்!

    மனதின் மாசினைப் போக்கிடவும்
    பகைமை மறந்திடவும்
    எந்நாளும் நல்வரவைப் போற்றிடுவோம்
    அதைப் பறைசாற்றிடும் வகையிலே
    வாசலில் கோலமிட்டு உறுதிசெய்வோம்!

    ”குடும்பத்தின் நெளிவுசுளிவுகள் உணர்த்தும் சிக்குக் கோலங்கள்; கைத்திறன் வளர்க்கும் கற்பனைக் கோலங்கள், சிந்தனையைச் செம்மையாக்கும் புள்ளிக் கோலங்கள் என்று கோலத்தின் மூலமே மனித வாழ்வியலை விளங்க வைத்திருக்கின்றனர் நம் மக்கள்” என்று நவின்றிருக்கும் திரு. ராவணா சுந்தரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகத் தெரிவுசெய்து பாராட்டுகின்றேன்.

    இன்றோ மாக்கோலங்கள் மக்களின் மனக்கருத்துக்களை வெளிப்படுத்தும் சாதனங்களாகவும் நூதன அவதாரம் எடுத்திருப்பது காலத்தின் கோலமே!

     

     

    Share