படக்கவிதைப் போட்டி – 239
அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
முபாரக் அலி மக்கீன் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (05.01.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
மனிதன் மட்டும்…
சின்னஞ் சிறிய பறவைமுதல்
சிறப்பாய் விளங்கும் மனிதன்வரை,
அன்னையின் அன்பு மாறுவதில்லை
அதற்கிணை உலகில் எதுவுமில்லை,
சின்னக் குரங்கை மடிசுமக்கும்
சிறந்த பாசக் குரங்கினத்தின்
பின்னால் வந்த மனிதனவன்
பிழைதான் முதியோர் இல்லமதே…!
செண்பக ஜெகதீசன்…
குட்டியின் குமுறல்-
அம்மா எனக்கு அடிக்கிறான் தம்பி
சும்மா நானிருந்தாலும் சுரண்டித் தனகுகிறான்
கிட்ட வந்து என் முதுகில் கிள்ளுகிறான் – நான் திரும்ப
எட்டி அறைகின்றான், எனக்கும் வரும் கோபம்.
சின்னக் குழந்தையென்று சினக்காதிருந்தாலும்
என்னையவன் சீண்டி எனைக் கோபம் மூட்டுகிறான்
அம்மா அவனுக்கு அறிவுரை சொல் அல்லவெனில்
நானும் அடிப்பேன் நகத்தாலே பேர்த்திடுவேன்.
தாய் பதில் –
வேண்டாம் மகளே வீணான சச்சரவு
கடவுள் இருக்கின்றார் காத்திடுவார் உன்னை.
எத்தனை கோடி உயிர்கள் இருந்தாலும்
எல்லாரையும் காப்போன் ஏக இறைவன்தான்
காக்கும் கடவுளுனைக் கண்ணெடுத்து ஓர் போதும்
நோக்காது விடமாட்டார் நொந்தவரைக் காக்கின்ற
ஆயிரம் கண்ணுடைய ஆண்டவனே எப்போதும்
தாயினும் மேலாய்த் தயை புரிவான் சகித்துக்கொள்.
குட்டி
அம்மா எனக்கிப்போ அவசரமாய் வேண்டுவது
இம்மா துயரில் இருந்து விடுதலையே
ஆண்டவன் வருவானா அப்பாவி எனைக்காக்க?
என் கையே எனக்குதவி இனிப் பொறுப்பதில்லையம்மா
மானிடர்களின் பொறுமை வானரர்க்கு வேண்டுவதோ?
நானினிமேல் என்றன் நகங்களையே நம்பிடுவேன்.
பாய்ந்தறைந்தாற்தான் தம்பி பணிவான் அதுவேதான்
ஆய்ந்தறிந்த என்றன் அறுதி முடிவம்மா.
(தனகு – சீண்டுதல்-ஈழவழக்கு).
பரிணாமம்
காக்கைக் கரவாக் கரந்துண்ணும் என்னும்
வாக்கை நினைந்து நிற்பாய் மானிடனே
யாக்கை எடுத்த பயன் பிரற்குழைக்க என்னும்
பாடம் கற்றுப் பரினமிபாய் வாநரனே வா
பொய் பொறாமைத் தீக்குனங்கள் தான்விடுத்து
செய் நன்றி கொண்டார்க்கு உய்வில்லையெனும்
மெய்ப்பொருளைத் தானுணர்ந்து
உய்வு கொண்டு பரிணமிப்பாய் வாநரனே வா
கவி காட்டும் மெய்யண்பைக் கண்டுணர்ந்து
புவியணைத்தும் களிக்கும் வகைச்செய்து
பொதிகை வளர் திருநாட்டில் புது
ஆதிமந்தியெனப் பரிணமிப்பாய் வாநரனே வா
நட்பே துணை
வானுயர்ந்த சோலையும்
வளர்ந்து நின்ற மரங்களும்
வளம் பொங்கும் வனமாகும்
இறை தேடி இந்த வானரம்
இடம்பெயர்ந்து செல்ல
இந்த வனம் எங்கும்
காட்டுதீயிக்கு இறை ஆனதே
வேகமாய் பரவிய தீயில்
சிக்கி தவித்த உயிர்களின்
வேதனை அறியும் முன்னே
சிதைத்து போன உடல்கள் இங்கே
துள்ளி குதித்து திசை அறிந்து
வந்து நின்ற சிறு குரங்கு
தீயில் கருகி போகும்
வனம் கண்டு கலங்கி நின்றதே
ஓடி ஆடி திரிந்த காலம்
கண் முன்னே வந்து போக
மெல்ல நகர்ந்த அதன் விழியில்
கருகி போன தன் அன்னையை கண்டதே
தான் குடி இருந்த கோயில்
தீயில் கருகி தான் போக
இடி வந்து நெஞ்சை தாக்க
உடைந்து தான் போனதே
உறவுகள் இன்றி தனிமையில் தவித்திட
உதவிக்கரம் நீட்டி ஆறுதல் சொல்லி
என்னை தேற்றி நின்றது
தோழமை போற்றும் நட்பெனும் உறவே