-மேகலா இராமமூர்த்தி

வல்லமை வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

புகைப்படக் கலைஞர் திருமிகு. நித்தி ஆனந்த் படம்பிடித்துத் தந்திருக்கும் இந்த வண்ணக் கோலத்தை, வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து படக்கவிதைப் போட்டி 238க்கு அளித்திருப்பவர் திருமிகு. சாந்தி மாரியப்பன். கலைஞருக்கும் தேர்வாளருக்கும் என் நன்றி!

இல்ல வாயில்களில் பெண்கள் வரையும் மாக்கோலம் கவின்கலைகளில் சிறந்த ஒன்றாகும். எத்தகைய கணிதக் கருவிகளின் துணையுமின்றிக் கண்களையே நுண்ணிய அளவுகோலாய்க் கொண்டு வரையப்படும் கோலங்கள் கவனக்குவிப்புக்கும், பிசிறில்லாமல் துல்லியமாகக் கோடுகளும் பிற வடிவங்களும் வரைவதற்கும் நல்ல பயிற்சியாகும். வண்ணக் கோலங்களால் இல்லம் பொலிவுறுகின்றது; உள்ளம் மகிழ்வு பெறுகின்றது. அரிசி மாவில் இடப்படும் கோலம், சிற்றுயிர்களுக்கும் உணவாய் அமைவதனால் உண்டிக்கொடை அளித்த சிறப்பையும் பெண்டிருக்கு நல்குகின்றது.

நம் முன்னோர் தொடங்கிவைத்த பல செயல்களை, எவ்வித மனச்சாய்வுமின்றி, ஆய்ந்துபார்த்தால் அவை தனிமனித மகிழ்ச்சியைத் தாண்டி பிற உயிர்களின் மகிழ்ச்சியையும் நிறைவையும் உள்ளடக்கியதாகவே அமைந்திருப்பதை அறியமுடிகின்றது.

இனி, இந்த வண்ணக் கோலத்திற்கு இசைவான பாடல்களைப் புனைந்துதர நம் கவிஞர்கள் காத்திருக்கின்றார்கள். புத்தாண்டு வாழ்த்துக்களோடு அவர்கள் அனைவரையும் வரவேற்பதில் மகிழ்கின்றேன்.

*****

”மார்கழிக் காலைகளை அலங்கரிக்கும் முழுநிலாக் கோலங்கள் மதி சூடிய ஈசனையும் அதிசயிக்க வைப்பவை” என்று பாராட்டுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

கோலங்கள்…

ஒழுங்காய் வராது ஒருநிலாவும்
ஒருசில நாளில் மறைந்துவிடும்,
எழுந்தன மார்கழிக் காலையிலே
எழிலுடன் நிலத்து நிலவுகளே,
அழுது வடியும் பனியினிலும்
அழகுக் கோலமாய்த் தெருவினிலே,
எழுதிய ஈசனும் அதிசயிக்க
எழுதினர் பல்வகைக் கோலங்களே…!

*****

”உழவுக்கும் உழைப்புக்கும் உயர்வளிக்கும் கோலம்; தமிழ்நாடு போற்றுகின்ற தைப்பொங்கல் கோலம்” என்று கோலத்தின்சீர் பரவுகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

தைப்பொங்கல் கோலம்

வாழும் மக்கள் வயிற்றுப்பிணித் தீர்த்துவிடும் கோலம்
வஞ்சமில்லா நெஞ்சம்மகிழ் பச்சைப்பசுங்கோலம்
கழனிபுகு விவசாயி கதிஉயர்த்தும் கோலம்
உழவுக்கும் உழைப்புக்கும் உயர்வளிக்கும் கோலம்

கதிரவனின் தேர்திரும்ப வரவேற்கும் கோலம்
நிலமடந்தைக் கதிராடை உடுத்திநின்ற கோலம்
பசுஞ்சோலைப் பூக்கப் பிஞ்சு மொட்டுவிடும் கோலம்
வசந்த காலம் வருவதையே கட்டியஞ்சொல்லும் கோலம்

காடுவளர் காளைக்கெல்லாம் கனிவளிக்கும் கோலம்
கன்னிப்பெண்கள் குடி உயர்த்தும் கதிர்மணிக் கோலம்
கூடி நாமும் வாழவழிச் செய்யும் சீர்க் கோலம்
கன்னித் தமிழ்நாடு போற்றும் தைப்பொங்கல் கோலம்

*****

நீர்தெளித்துக் கோலமிட்டு யார் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றாள் இப்பாவை? என்று வினாவெழுப்பும் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ், வேலைதேடி நகரத்துக்குச் சென்றவன் வீட்டு வாயிலை அலங்கரிப்பவையோ நெஞ்சில் ஒட்டாத ஒட்டுக்கோலங்கள் என்ற உண்மையையும் உரைக்கத் தவறவில்லை.

வாசலிலே நீர் தெளித்து
வண்ணக் கோலம் போட்டுவைத்து
யார் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும்
இத்திருப்பாவை?

நாணயத்தைக் கோலத்தில் சேர்த்து
நாராயணனுக்கு நாகரிகமாய் உணர்த்தியதோ
லட்சுமி குடியிருக்கும் இவ்விடத்தை
இத்திருப்பாவை?

பூக்கோலம் போட்டு வைத்துப்
பூமாலை தொடுத்து வைத்தேன்!
பாமாலை தொடுத்து உன் திருத்தோள்களில்
மணமாலை சூடிடக் காத்துநிற்கும்
இத்திருப்பாவை!

வாய்ப்புத்தேடி வாழ்க்கையைத்தேடி
வீடு வாசல் துறந்தவன்
வானுயர்ந்த மாளிகையில்
வாசல் சுருங்கிட வாழ்கின்றான்!

மார்கழி மறந்து போர்வைச் சிறைக்குள்
விடிந்தும் உறங்குகிறான்
இவன் வாசல் கூட அழகாய் ஜொலித்திடும்
வண்ண வண்ண மையால் எழுதிய
அழியாத கோல ஒட்டிகளால்!

காலம் மாறிப்போச்சு…..
கோலமும் மாறிப்போச்சு!

*****

மாக்கோலத்தை வைத்து மனிதர்களின் மனக்கோலத்தை அழகாய்ப் படம்பிடித்துக் காட்டியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டும் நன்றியும்!

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

நல்வரவு

விருந்தினர் வருகையும்
இல்லத்தின் நிறைவும்
வாசலில் அறிவிப்போம்!

அரிசிமாவில் கோலமிட்டுப்
பல்லுயிர் வாழ்ந்திடவே
தமிழ்மறையில் ஒளித்துவைத்தோம்!

காலையும் மாலையும்
கோலமிடும் உடற்பயிற்சியினைக்
கலையுடன் இணைத்துவைத்தோம்!

குடும்பத்தில் உள்ள
நெளிவு சுளிவுகளைச்
சிக்கல் கோலங்களில் பயிற்றுவித்தோம்!

கூரிய சிந்தனைகளுடன்
மனதை ஒருநிலைப்படுத்திடவே
புள்ளிகள் இணைப்பதில் கடத்திவைத்தோம்!

மார்கழித் திங்கள்
(இறை)சக்தியின் வருகை
அதிகாலை அறிந்திடுமே
எம்மனைப் பெண்கள் நலம்பெற்றிடவே
வாசலை அலங்கரித்துத் தொழவைத்தோம்!

கற்பனை ஓவியங்களைக்
கைத்திறன் நேர்த்தியின் அழகினிலே
வீதியில் பிரதிபலித்தோம்!

மனதின் மாசினைப் போக்கிடவும்
பகைமை மறந்திடவும்
எந்நாளும் நல்வரவைப் போற்றிடுவோம்
அதைப் பறைசாற்றிடும் வகையிலே
வாசலில் கோலமிட்டு உறுதிசெய்வோம்!

”குடும்பத்தின் நெளிவுசுளிவுகள் உணர்த்தும் சிக்குக் கோலங்கள்; கைத்திறன் வளர்க்கும் கற்பனைக் கோலங்கள், சிந்தனையைச் செம்மையாக்கும் புள்ளிக் கோலங்கள் என்று கோலத்தின் மூலமே மனித வாழ்வியலை விளங்க வைத்திருக்கின்றனர் நம் மக்கள்” என்று நவின்றிருக்கும் திரு. ராவணா சுந்தரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகத் தெரிவுசெய்து பாராட்டுகின்றேன்.

இன்றோ மாக்கோலங்கள் மக்களின் மனக்கருத்துக்களை வெளிப்படுத்தும் சாதனங்களாகவும் நூதன அவதாரம் எடுத்திருப்பது காலத்தின் கோலமே!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *