இருபது இருபது
அண்ணாகண்ணன்
புதியது மேவும் புவியில் எந்நாளும்
விதியதை வெல்லும் வினைத்திறம் ஆளும்
மதியது ஓங்கும் மாற்றம் உண்டாகும்
இருபது இருபதில் ஏற்றம் உண்டாகும்!
பெறுவதும் உறுவதும் பெருமைகள் ஆகும்
கனவிலும் நனவிலும் களிநகை ஊறும்
எழுவதில் எழுவதில் எல்லைகள் விரியும்
இருபது இருபதில் இனிமைகள் சேரும்!
களைவதும் அணிவதும் நித்திய வேடம்
விடுவதும் தொடுவதும் பந்தயப் பாடம்
இருப்பதும் மறைவதும் காட்சியின் மாயம்
இருபது இருபது வேட்கையின் வேகம்!
அனுதினம் இங்கே அனுபவம் ஏறும்
நுண்கணம் தோறும் நூதனம் கூடும்
அடியெது முடியெது அளந்திடலாமே
இருபதுக்கு இருபது எய்திடலாமே!
வல்லமை அன்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இந்தப் பாடலை என் குரலில் இங்கே கேட்கலாம் – https://www.youtube.com/watch?v=W2kVEkHCpE4