நெல்லைத் தமிழில் திருக்குறள்- 97

நாங்குநேரி வாசஸ்ரீ
97. மானம்
குறள் 961
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்
கட்டாயமா செஞ்சு முடிக்க வேண்டிய வேலையின்னாலும் அதால தன் குடும்பப் பெரும கொறையும்னு நெனச்சா செய்யக் கூடாது.
குறள் 962
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்
புகழோட சேந்த வீர வாழ்க்க வேணும்னு நெனக்கவுக புகழச் சேக்கதுக்காவ மானங்கெட்ட காரியத்த செய்ய மாட்டாக.
குறள் 963
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு
பணக்காரனா ஒசந்த நெலயில இருக்குதப்போ அடக்கம் வேணும். ஏழையா இருக்குதப்போ அடிமயா அடங்கிப்போவாம மானத்தோட இருக்கணும்.
குறள் 964
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை
மக்களோட மனசுல ஒசந்த நெலயில இருந்த ஒருத்தர் மானங்கெட்டு தாழ்ந்துட்டாருன்னா தலையிலேந்து உதிந்து கெடக்க தலமயிருக்கு சமமா நெனக்கப்படுவார்.
குறள் 965
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்
மலை போல ஒசந்து கம்பீரமா இருக்கவுகளும் குந்துமணி அளவு தாழ்ச்சியான காரியத்த செஞ்சாகன்னா தாழ்ந்து போயிடுவாக.
குறள் 966
புகழின்றால் புத்தேணாட் டுய்யாதால் என்மற்
றிகழ்வார்பின் சென்று நிலை
மதிக்காம எளக்காரம் செய்யுதவன் பொறத்தால மானங்கெட்டு போவதால இப்பமும் புகழ் கெடைக்காது. மேலோகத்துலயும் சேர்க்காது. வேற என்னதான் தரும் அது?
குறள் 967
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று
மதிக்காதவன் பொறத்தால போயி உசிரு வாழுதான்னு இருக்கதவிட செத்துப் போயிட்டாம்னு சொல்லப்படுதது எம்புட்டோ மேல்.
குறள் 968
மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து
தன் குடும்ப மானங்கெட்டு சீரளியுதப்போ கூட சாவாம இந்த ஒடம்ப காத்து வாழுத வாழ்க்க சாவாமைக்கு மருந்து ஆவுமா?
குறள் 969
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்
ஒடம்புல இருக்க உரோமமெல்லாம் உதிந்துபோச்சுதுன்னா கவரிமான் உசிர உடுதது கணக்கா மானங்கெட்ட பொறவு உசிரு வாழ மாட்டாக மானமுள்ள பெரிய மனுசருங்க.
குறள் 970
இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழு தேத்தும் உலகு
மானம் போவுத நேரம் உசிர உடுத மனுசங்களோட புகழ இந்த ஒலகம் எப்பமும் போற்றி நிக்கும்.