வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்- 5
தி. இரா. மீனா
8. “எனக்கு இங்கொரு கணவன் அங்கொரு கணவன் என்றிருக்க
முடியாது
உலகவாழ்க்கைக்கு ஒருவன் ஆன்மீக வாழ்க்கைக்கு ஒருவன்
என்றிருக்க முடியுமா?
சென்னமல்லிகார்ச்சுனன் தவிர வேறுயாரும் என்கணவனாக
முடியாது.
மற்ற எல்லாக் கணவர்களும் மேகங்களின் பின்னால் தெரிகிற
உருவம் போன்றவர்கள்தான்”
9. “மலையில் வீடுகட்டும்போது
காட்டு விலங்குகளைப் பார்த்து பயப்படுதல் கூடாது
கடற்கரையில் வீடு கட்டும்போது
அச்சம் தரும் அலைகளைப் பார்த்து பயப்படக்கூடாது
சந்தையருகே வீடுகட்டும்போது சத்தம்கேட்டு பயப்படக்கூடாது
சென்னமல்லிகார்ச்சுனா உலகத்தில் பிறந்தபிறகு
புகழுக்காகவோ குறைகளுக்காவோ அமைதியை இழக்கக்கூடாது”
10. “அறியாமை நிறைந்தவர்களோடு
பழகுவது கற்களைத் தேய்த்து தீ உருவாக்குவது போன்றது
அறிவு நிறைந்தவர்களோடு பழகுவது
தயிர் கடைந்தபிறகு வெண்ணெய் எடுப்பதுபோன்றது
ஓ சென்ன மல்லிகார்ச்சுனா உன்சரணர்களோடு பழகுவது
ஒரு கற்பூரமலை தீப்பிடிப்பது போன்றது”
11. “காய்ந்த மூங்கில் முளைவிடுமா?
எரிந்தபானை மீண்டும் களிமண்ணாகுமா?
தன் தண்டிலிருந்து விழுந்த கனி
மீண்டும் முளைக்குமா
உழைக்கும் மக்கள்
தெரியாமல் எதையோ சொல்ல
ஆழ்நிலை பக்தர்கள் பூமிக்குத் திரும்புவார்களா?
சென்ன மல்லிகார்ச்சுனா”
12. “நீ தண்ணீரில் பாலைப் போன்றவன்
எது முன்னால்
எது பின்னால் .
யார் எஜமானன் யாரடிமை
எது பெரியது
எது சிறியதென்று
என்னால் சொல்ல முடியாது.
சென்ன மல்லிகார்ச்சுனா
ஓர் எறும்பு உன்மீது
அன்புகாட்டி உன்னைப் புகழுமென்றால்
அதற்கு ராட்சஷ பலம் வராதா?”
13. “இறைவா நீ கேட்டாலும் கேட்காவிட்டாலும்
நான் பாடுவதைக் கட்டுப்படுத்த முடியாது
நீ பார்த்தாலும் பார்க்காவிட்டாலும்
உன்னைப் பார்ப்பதை விடமுடியாது
நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
உன்னை அணைப்பதைத் தடுக்கமுடியாது
உனக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்
உன்னை வணங்குவதை விடமுடியாது
சென்ன மல்லிகார்ச்சுனா
உன்னால் நான் பேரானந்தத்திலிருக்கிறேன்.”
14. “மரணத்திலிருந்து தப்பமுடியா விட்டால்
திறமை மிகுதியால் என்ன பலன்?
விரதமிருக்கலாம் தீய பழக்கங்களை விட்டுவிடலாம்
மூச்சையடக்கலாம் பசியைக் கட்டுபடுத்தலாம்
முழுவுலகமும் காவல்காரனாக இருந்தால்
திருடன் எங்கே ஒளிவான் சென்ன மல்லிகார்ச்சுனா”
15. “எருமைக்கு அதன்கவலை
தோல் தொழிலாளிக்கு அவன்கவலை
உலகமனிதர்களுக்கு அவர்கள் கவலை
அவனுக்கு அவன் கவலை
எனக்கு சென்ன மல்லிகார்ச்சுனன் விரும்புவானா என்ற கவலை”
16. “அன்பு ஆழமாகவும் உண்மையாகவுமிருக்கும்போது
நாம் சாதியையும் சமயத்தையும் பார்ப்போமா
மயங்கும்போது வெட்கம் வருமா
சென்ன மல்லிகார்ச்சுனனிடம் மயங்கும்போது
உலகவாழ்க்கை புரியுமா? ”
17. “உள்ளிருக்கும் நஞ்சின் வேட்கையை விடாத வரையில்
மகுடி இசைக்கு நாகம் படமெடுத்து ஆடியென்ன?
மனதுள்ளிருக்கும் தீக்குணம் விடாத வரையில்
பாடியென்ன? கேட்டென்ன?
அகமறிந்து புறம் மறந்தவரை எனக்குக்
காட்டிடுவீர் சென்ன மல்லிகார்ச்சுனா.”
18. “எங்கே சென்றாலும் வீரனுக்கு பயமில்லை
கோழைக்கு மகிழ்ச்சியில்லை காணீரய்யனே!
கொடுப்பவனுக்கு தீயகுணமில்லை
கருணையுள்ளவனுக்குப் பாவமில்லை
உம்மைத் தொட்டு பிறர்பொருள் பிறன்மனை
தொடாதவனுக்கு மறுபிறவியில்லை சென்ன மல்லிகார்ச்சுனா.”
19. “குயில்களே! அவன் எங்கேயிருக்கிறான்
மயில்களே உங்களுக்குத் தெரியுமா
அவன் எங்கேயிருக்கிறான் தெரிந்தால் சொல்லுங்கள்
என் சென்ன மல்லிகார்ச்சுனன் ”
20. “மரங்களே! பறவைகளே! நான் ஏன்
அவனைப் பார்க்க முடியவில்லை?
மயில் மலையை விட்டு மண்மேட்டில் ஆடுமா?
வாத்து ஏரியைவிட்டுச் சிறுபள்ளத்தில் நீந்துமா?
குயில் மாவிளந்தளிர்களைக் கோதாமல் பாடுமா?
மணமில்லாத மலரருகே தேனீ சுற்றுமா?
மனம் சென்ன மல்லிகார்ச்சுனனை விட்டு வேறு எதையும்
நாடுமா? “
21. “குருவே எசமானன் ஆனான்
இலிங்கம் மணமகனானான்
நானே மணமகள் ஆனேன்
கணக்கற்ற பெற்றோர்கள் எனக்கு; உலகறியுமிது
தகுந்த வரன் தேடியதால் எனக்கு
சென்ன மல்லிகார்ச்சுனன் கணவனானான்.
உலகின் பிற மனிதர்கள் எனக்கு உறவல்ல, பிரபுவே”
22. “இன்று என் கணவன் வீட்டுக்கு வரப்போகிறான்
நீங்கள் எல்லோரும் தயாராக இருங்கள்
சென்ன மல்லிகார்ச்சுனன் இப்போது வரலாம்
அவனை எல்லோரும் வரவேற்று மகிழுங்கள்”
வசன இலக்கியம் என்னும் போது வசனகாரர்களில் ஆண்களில் பசவேசரையும், பெண்களில் அக்கமாதேவியையும் சொல்வதுதான் மரபாக இருக்கிறது. இன்றும் அக்காவின் வசனங்கள் எல்லா நேரங்களிலும் கன்னட மண்ணில் மிகச் சாதாரணமாகவும், சரளமாகவும் பயன் படுத்தப்பட்டு வருவது அக்கமாதேவியின் வசனங்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.
[தொடரும்]