இந்த வார வல்லமையாளர்!
ஜூன் 23, 2014
சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர்
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு திரு. வாசு ரெங்கநாதன் அவர்கள்

இவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரியும் திரு. வாசு ரெங்கநாதன் (http://plc.sas.upenn.edu/people/faculty/vasurenganathan) அவர்கள்.
இவரைப் பரிந்துரைத்தவர் வல்லமை வாசகர், முனைவர் நா. கணேசன் அவர்கள். திரு. வாசு ரெங்கநாதன் அவர்கள் அமெரிக்க கல்விக் கழகம் நிதி உதவியில், கடந்த ஏழு ஆண்டுகளாக அவர் நிர்மானித்து பராமரித்து வரும் தமிழ் பயிற்சி வலைத்தளத்தில் (வலைதளத்தின் முகவரி: http://www.thetamillanguage.com/), பண்டைய தமிழ் இலக்கியங்களை படிப்பவர்களுக்கு உதவக்கூடிய முறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். இணையத்தில் உள்ள சங்கத்தமிழ் இலக்கியங்களை. எளிதில் பொருள் விளங்கிக் கொள்ளும் வகையில், கணினித் திரையில் தோன்றும் ஒவ்வொரு சொற்களையும் கணினித் திரையில் சுட்டினாலே அகராதியில் இருந்து அந்த சொல்லின் பொருள் திரையில் தோன்றும் வகையில் அகராதியுடன் இணைத்துள்ளார்.
உதாரணமாக நற்றிணைப் பாடல்களை இந்த பக்கத்தில் காணலாம் : http://www.thetamillanguage.com/sangam/url_gloss.php?url=http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0296.html
“நின்ற சொல்லர்; நீடுதோறு இனியர்;
என்றும் என் தோள் பிரிபு அறியலரே”
என்று தலைவி தோழியிடம் சொல்வதில், ‘பிரிபு’ என்றால் எதைக்குறிக்கிறது என்று எண்ணி திரையில் அச்சொல்லைச் சுட்டினால், உடனே அகராதியில் இருந்து பொருள் விளக்கம் காட்டப்படுகிறது.
இவ்வாறாக சங்கப்பாடல்களைப் படிக்கும் ஆர்வமுள்ளவர்கள், எளிதில் பொருள் தேடி அறிய இணைய அகராதியுடன் பாடல்களின் சொற்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இது போல மதுரைத்திட்டம் வழங்கும் இணைய இலக்கியங்கள் யாவற்றையும் (http://www.projectmadurai.org/pmworks.html) இவ்வாறு படிக்க இயலும்.
காட்டாக:
http://www.thetamillanguage.com/sangam/url_gloss.php?url=
என்ற சுட்டியின் பின்னர் ‘மதுரை திட்டம்’ வழங்கும் கொன்றை வேந்தன் பாடல்களைப் படிக்க விரும்புபவர், அந்த இலக்கியத்திற்கான இணையதள சுட்டியான http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0002.html என்பதை http://www.thetamillanguage.com/sangam/url_gloss.php?url= க்குப்பிறகு இணைத்து
http://www.thetamillanguage.com/sangam/url_gloss.php?url=http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0002.html என்ற இணையதள முகவரியாக மாற்றிய பின்னர் இணையத்தேடல் பொறியில் வெட்டி ஒட்டி சொடுக்கினால் போதும்.
http://www.thetamillanguage.com/sangam/url_gloss.php?url=http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0002.html
பொருள் விளக்கம் அறியும் வகையில் கொன்றைவேந்தன் உங்கள் விரல்நுனிகளில் கிடைக்கும்.
பள்ளி வகுப்புகளுடன் தமிழிலக்கியம் படிப்பது தடைபட்டு, பின்நாளில் சொந்த முயற்சியில் படிக்க விரும்புபவர்களுக்கு தமிழிலக்கிய நூல்களும், அவற்றின் பொருளை விளக்கும் உரைநூல்களும் கிடைப்பது இனி அரிதான ஒன்றே அல்ல.
இந்த எளிய முறையை சென்றவாரம் தமிழுலகிற்கு உருவாக்கித் தந்த திரு. வாசு ரெங்கநாதன் அவர்களை வல்லமையாளர் விருதுக்கு பரிந்துரைத்த முனைவர் கணேசன், அவரைப்பற்றி பற்றி கீழ் வருமாறு அறிமுகப்படுத்தி எழுதியுள்ளார்.
பேரா. வாசு ரெங்கநாதன் தமிழ் மொழியியலில் இருமுறை முனைவர் பட்டம் பெற்றவர். மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். ஆய்வியல் அறிஞர் செ. வை. சண்முகம் அவர்களிடம் அண்ணாமலைப் பல்கலையிலும், பின்னர் பென்சில்வேனியா பல்கலையில் ஹெரால்ட் ஷிப்மனிடமும் பயின்ற வாசு ரெங்கநாதன் இப்பொழுது ‘பென் மொழிகள் மையம்’ (Penn Language Center) என்னும் அமைப்பில் பணிபுரிகிறார். தமிழ்க் கல்லூரி ஆசிரியர்கள் கணினிப் பக்கமே போகாத நிலை இன்னும் தமிழ்நாட்டில் நிலவுகிறது. அந்நிலை மாற வழிவகுப்போரில் முனைவர் வாசு முக்கியமானவர். வாசு ரெங்கநாதன் கணினியின் மூலமாக தமிழைக் கற்பிக்கும் முன்னோடிகளில் ஒருவர். தமிழ் தட்டச்சு விசைப்பலகையை முதலில் கணினிக்கு ஏற்ற வகையில் வடிவமைத்ததால் இலங்கையில் ‘ரெங்கநாதன் விசைப்பலகை’ என்று அறியப்படுகிறது. அமெரிக்காவில் தமிழரல்லா பிற மொழியினருக்குத் தமிழ் கற்பிக்கும் முறைகளில் அனுபவமும் திறமையும் மிக்க இவர் இணையத்தில் தமிழ் போதிக்க வலைத்தளங்கள் அமைத்துள்ளார். அமெரிக்க தமிழ் அகாதமி என்ற புதிய அமைப்பு பொதுமக்கள் பயிலும் பள்ளிகளில் அங்கீகாரம் பெற்ற பாடமாகத் தமிழை அறிமுகப்படுத்த ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. அமெரிக்கன் தமிழ் அகாதமிக்கு ஆலோசகராக நல்ல பல ஊக்கங்களை அளித்துவருகிறார்.
உத்தமம் என்ற பல்நாட்டுத் தமிழ்க் கணினித் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாநாடுகளை நடத்தப் பெரும்பங்கு ஆற்றும் வாசு இந்த ஆண்டு உத்தமம் அமைப்பின் தலைவர். புதுச்சேரியில் நடக்கும் 13–ஆம் ஆண்டு கருத்தரங்கம் பல அரசியல் தலைவர்களியும், உத்தமத்தினரையும், கல்லூரி ஆய்வாளர்களையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அண்மையில் ஒரு வலைப்பக்கத்தைக் கொடுத்தால் அதைத் தமிழாகப் படிக்கும் தானியங்கி மென்கலனை உருவாக்கி தமிழ் கூறும் நல்லுலகிற்கு அளித்துள்ளார். இன்று தந்துள்ள சேவையின் மூலம், பழைய சங்கப் பாடல்களைப் பொருள் புரிந்துகொள்ள எளிதாகிறது. ஒரு சொல்லியின் மீது கணியெலிச் சுட்டியை வைத்தால் அச் சொல்லின் பொருளைக் காட்டுகிறது.
இயற்கை மொழி கணியாய்வில் (Natural Language Processing) தனது கணினி திறனையும், தமிழார்வத்தையும் இணைத்து, பழந்தமிழ் இலக்கியங்களை அனைவரும் எளிதில் படித்திட வகை செய்த திரு. வாசு ரெங்கநாதன் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
படங்கள் மற்றும் தகவல்கள் இணையத்திலிருந்து.













