மதுரையில் பறந்த மீன்கொடியை.. – கவிஞர் வாலி…

கவிஞர் காவிரி மைந்தன்

கவிஞர்களின் கற்பனையில் பாடுபொருள் ஒன்றுதான் என்றாலும் புதிய யுக்தி, புதிய சிந்தனை, புதிய பார்வை – இவைதான் மக்களின் கவனத்தை ஈர்க்கும். காதலைப் பற்றியும், காதலியின் அழகைப் பற்றியும் பாடாத கவிஞர்கள் இல்லை! இது தொன்றுதொட்டு நடந்துவரும் ஒன்றுதான் என்றாலும், கவிஞர்கள் தங்கள் கற்பனையை பலநூறு முறை கொட்டிக்கவிழ்த்தாலும், இன்னுமின்னும் மிளிர்கிறதே! அதுதான் நம் தமிழ் மொழியின் மேன்மை! சொல்லாட்சி! கற்பனா வளம் மிக்க கவிஞர்களின் கையில் தமிழ் கிடைத்துவிடும்போது எத்தனை அற்புதமாய் கவிதை பிறந்துவிடுகிறது! திரைப்பாடலென்பது ஒரு பல்லவி – மூன்று சரணங்கள் என்கிற அளவுகோலுக்குள் அடடா ஒரு ஜீவசிற்பத்தை செதுக்குவதுபோல் கவிஞரின் பேனா நகர்கிறது! நாம் விரும்பி நனையும் கவித்துவமழையும் பொழிகிறது! இதோ கவிஞர் வாலியின் புகழ்க்கொடி பறக்கிறது!

பாடல்: மதுரையில் பறந்த மீன் கொடியை
திரைப்படம்: பூவா? தலையா?
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்டு: 1969

sddefault
மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே – போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே
மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே – போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே – இவை
மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே
உன்னை தமிழகம் என்றேனே

மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே – போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே

காஞ்சித் தலைவன் கோவில் சிலை தான் கண்மணியே உன் பொன்னுடலோ
குடந்தையில் பாயும் காவிரி அலை தான் காதலியே உன் பூங்குழலோ
சேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான் சேயிழையே உன் செவ்விதழோ?
தூத்துக் குடியின் முத்துக் குவியல் திருமகளே உன் புன்னகையோ?

மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே – போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே

பொதிகை மலையில் புறப்படும் தென்றல் இளையவளே உன் நடையழகோ?
பொதிகை மலையில் புறப்படும் தென்றல் இளையவளே உன் நடையழகோ?
புதுவை நகரில் புரட்சிக் கவிஞன் குயிலோசை உன் வாய் மொழியோ?
கோவையில் விளையும் பருத்தியில் வளரும் நூலிழைதான் உன் இடையழகோ?
குமரியில் காணும் கதிரவன் உதயம் குலமகளே உன் வடிவழகோ?
இவை யாவும் ஒன்றாய் தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே
உன்னை தமிழகம் என்றேனே

மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே – போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே

ஒரு பெண்ணை வர்ணிக்க இவர் ஒட்டுமொத்த தமிழகத்தையே தனது உவமைக் களமாக்கியிருக்கிறார்! இப்படியெல்லாம்கூட வர்ணிக்க முடியுமா என்று நம் உள்ளத்திலும் உயர்கிறார்! பொருத்தமான வார்த்தைகளை எடுத்து அதற்கான அங்கங்களோடு அழகுபார்த்து சேர்த்திருக்கும் கவிஞரின் திறன் போற்றத்தக்கது! புகழத்தக்கது! டி.எம்.செளந்திரராஜன் குரலில் கம்பீரமாக ஒரு காதல் ஆலாபானை கற்பனைக் கொடி பறக்க காற்றில் தவழ்கிறது! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் பூவா தலையா – இது இயக்குனர் கே.பாலச்சந்தர் படம்! காதல் பாடல்கள் வரிசையில் ஒரு கானாமிர்தம்! கவிதை வகையில் சொன்னால் தேனாமிர்தம்! அண்மைக் காலத்தில் வெளியான பொற்காலம் திரைப்படத்தில் இடம்பெற்ற பா.விஜய் அவர்களின் கற்பனையிலும் இந்த யுக்தி எதிரொலித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..- தஞ்சாவூரு மண்ணை எடுத்து… ..

கலைஞரும் கவிஞரும்

இத்திரைப்படத்தின் 100வது நாள் வெற்றிவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று விருதுகள் வழங்கிய பெருமகனார் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள். வாழ்த்துரை வழங்க கலைஞரின் பின்பக்கம் அமர்ந்திருந்த கண்ணதாசன் கண்களில் கலைஞரின் தலைப்பாகம் பட்டிருக்க, தனது பேச்சின்போது.. கண்ணதாசன், நான் பின்னிருந்து பார்க்கையிலே கலைஞரின் தலை பூவா.. தலையா என்றே சந்தேகம் எழுந்தது என்றார். கலைஞர் தனது சிறப்புரையில்.. இதைக் குறிப்பிட்டு.. நல்லவேளை நண்பர் கவிஞர் கண்ணதாசனுக்கு எந்தன் தலை பூவா.. தலையா என்று சந்தேகம் மட்டும் வந்தது. பூ என்று நினைத்து பறிக்க வந்துவிடவில்லை என்று நகைச்சுவையோடு குறிப்பிட்டார் என்பது ஒரு சுவையான தகவல்!

 

http://www.youtube.com/watch?v=1Px2HmGehSM

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மதுரையில் பறந்த மீன்கொடியை.. – கவிஞர் வாலி…

  1. என் மனம் கவர்ந்த திரைப்பாடல்களில் ஒன்றான “மதுரையில் பறந்த மீன் கொடி” பாடலை நினைவுகூர்ந்த காவிரிமைந்தனுக்கு நன்றி. அவருடைய நடையும், கவிதை ரசனையும் மிகச் சிறப்பாக உள்ளன. தொடரட்டும் அவருடைய திரை இலக்கியப் பணி! கே.ரவி

Leave a Reply

Your email address will not be published.