திருமால் திருப்புகழ் (120)
கிரேசி மோகன்
கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
—————————————————————–
”கண்ணன் வெண்பாக்கள்’’
————————————————-
ஆபாசம், அச்சம், அழுக்கா(று), அகங்காரம்,
நாபேசும் இன்னா நயவஞ்சா! -ஏபாவா!
என்பக்கம் வாராதே, உன்னுருவைப் புண்ணியமாய்,
கண்ணப்பன் மாற்றிடுவான் காண்….(233)
காணல் அவன்ரூபம், பூணல் அவன்நாமம்,
நாணல் யமுனா நதிதீரம், -சாணப்,
புரவிக்கு நீரூற்றி, புல்வார்க்கும் கண்ணன்,
கருமமே கண்ணான வன்….(234)
அந்தரங்க சுத்தியுடன், அந்தணங்கு ஆண்டாள்போல்,
அந்தரங்க ராஜனை அர்ச்சிக்க, -வந்திறங்கி,
வைகுண்டம் வாவென்று, கைகொடுத்து தூக்கிவிடும்
பைகொண்ட நாகமுற்ற பொற்பு….(236)
நீராடை பூண்ட, நிலத்தை உண்டன்று,
ஓரா லிலையில் உறங்கிய, -சீராளன்,
போரானை கொம்பொசித்து, நூறோர் கதைமுடித்த,
நாரா யணனே நெறி….(237)
கருந்தா மரையின்கீழ், செந்தா மரைபோல்,
புறங்கை அடியில் புலர்ந்த, -வரங்கை,
கோலும் குழலுமேந்த, கோகுலம் காத்தவனாம்,
மாலோன் மலர்த்தாள் மருவு….(238)
திருவிருந்த மார்பன், திருத்துழாய் மார்பன்,
மருவிருந்த மார்பன், மகனாய்ச் -சிறையில்,
கருவிருந்த மார்பன், தெருவிருந்த மண்ணை,
பெருவிருந்தாய் உண்ட புதிர்….(239)
—————————————————————————————————————-
படங்களுக்கு நன்றி:
http://bhagavatham.blogspot.in/