மங்காப் புகழோடு வாழும் இறவாக் கவிஞன்!

0

–நர்கிஸ் பானு.

கண்ணதாசன் பிறந்தநாள் நக்கீரன் படம்

விஞ்சியவர்… மிஞ்சியவர்…
நம் உள்ளங்களின் உணர்வுகளுக்கு
தன் சொல்லால் உயிர் தந்த வித்தகர்.
படைப்பாளி.
படைத்தவனுக்கே
பட்டம் தரத் தேடுகிற
உள்ளப் படைப்பாளி.
தன்னிகரில்லா தமிழ்க்கவியரசர்.
கட்டுக்கு அடங்கா காட்டாற்று வெள்ளமென
கவிஞரின் தமிழ்மொழி ஆற்றல், அளவுகோலுக்கு அடங்காதது.
அவர்தம் தன்னம்பிக்கையோ மரணத்தையும் வென்றது.

‘நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை’

அழியும் மானிடப் பிறவியில் அழியாப் புகழ் பெற்றவர்.

பல திரைப்படங்களில் ஒலிக்கும் பாடல்கள் கதாநாயகனையும் மீறி, கதையோட்டத்தையும் மீறி, நம் மனதில் சிம்மாசனமிட்டு அமர்வது கவியரசர்தான் என்பது அப்பட்டமான உண்மை. பிறவிக்கவிஞர் அவர். மனிதப் பிறவியில் ஒவ்வொரு தருணத்திலும் ஏற்படும் அனுபவங்களை பாடலாக வடித்து நம் ஆன்மாவில் நமக்கே தெரியாமல் இரண்டறக் கலந்தவர்.

நமது உணர்வுகள் கவியரசரின் வரிகளில் பளிங்கு மாளிகையாய் மணிமண்டபமாய் உயரத்து கோபுரமாய் நாமே உணர தீர்க்க தரிசியாய் அன்னை மொழிதனில் அற்புதமாய் சொல்லிச் சென்றவர். அவர் பாடலை மேற்கோள் காட்டாத நாளில்லை எனலாம்.

‘மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழ வேண்டும். ஒரு
மாற்று குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்’.

என்னவென்று சொல்வது?
வேள்விகள் வளர்த்து வணங்கினர் அரசர்கள்
கேள்விகள் கேட்டு அசத்தியவர் கவியரசர் – கடவுளையே
கேள்விகள் கேட்டு அசத்தியவர் கவியரசர்.

‘கண்ணா கருமை நிறக் கண்ணா’ பாடலில்

‘நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா! எந்தக்
கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா?’

அடுத்து,

கடவுளை போற்றித் துதிப்போர் மத்தியில்

‘கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் – அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்
பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் – அவன்
பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்’
என்று சாபமிட்டுவிட்டு,

அடுத்து,
‘அவனை அழைத்து வந்து
ஆசையில் மிதக்கவிட்டு
ஆடடா ஆடு என்று
ஆடவைத்து பார்த்திருப்பேன்’ என்கிறார் கவிஞர்.

அடடா, அச்சமின்றி ஆண்டவனையே அசாத்தியமாய்ப் பாட கவியரசரைவிட யாருக்கு வந்துவிடும் இத்தனை உரிமையும் தைரியமும்?

சுடுகின்ற உண்மையைக்கூட விளம்பும் வித்தியாச குணத்தவர். இம்மேதையை மறப்பார் உண்டா? அவர் சாதனையை மறுப்பார்தான் உண்டா?

நம் வாழ்க்கை எவ்வளவு தூரம்?

‘பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
சேத்தா விறகுக்காகுமா, ஞானத்தங்கமே?
தீயிலிட்டால் கரியும் மிஞ்சுமா, ஞானத்தங்கமே?’ என்று கண்களில் நடிகர் திலகம் நிறைந்திருக்கலாம், கதைப்படி அவரே சிவனாகவும் நடித்திருக்கலாம். ஆனால், நம் கருத்தில் விஞ்சி நிற்பதோ கவிஞரின் விஞ்சிய தத்துவமே! தத்துவம் மட்டுமா? சந்தம் இவர் சிந்தனைக்குச் சொந்தம். இலக்கணம் இவருக்கு இலகுவாய் வரும்.

அந்தாதியில் இவரின்
‘வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்’ என்றும்

‘ஆடிவெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடிவந்தேன் காவிரியின் ஓரம்!
ஓரக்கண்ணில் ஊறவைத்த தேன்கவிதைச் சாரம்
ஓசையின்றிப் பேசுவது ஆசையென்னும் வேதம்’ என்று இன்றும் நம் காதுகளில் ரீங்காரமிட்டு வருகின்றன!

படித்தவனும் மறந்துபோன,
பாமரனுக்கு எட்டாக் கனியான
பல தமிழ் இலக்கியங்களை எளிமையான
பாடல்களாக்கிய அற்புதச் சிற்பி கண்ணதாசன்.

‘மயக்கமா? கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?’

இப்பாடல் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் என்றாவது ஒரு சமயம் மௌனகுருவாக, உற்ற தோழனாகத் திகழ்வது சத்தியமே. இவரின் செல்வாக்கு கலையுலகில் மட்டுமா? ஒவ்வொருவர் மனதிலுமல்லவா சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்?

ஒருசில மாமேதைகளுக்கு மட்டுமே இத்தனை அரிய சிம்மாசனம் காத்திருக்கும். காலத்தைக் கடந்து பல இதயங்களில் வீற்றிருக்கும். சொல்ல சொல்ல இன்னும் சொல்லவே சொற்கள் தவம் கிடக்கின்றன. என் பார்வையில் கண்ணதாசன் நிலம், நீர், காற்று, வானம், நெருப்பு என்னும் பஞ்சபூதங்களைப்போல், இவ்வுலகில் மனித இனம் உள்ளவரை மங்காப் புகழோடு வாழும் இறவாக் கவிஞன். அவரின் பாடல்கள் தமிழ்த்தென்றல் வீசும்வரை தாலாட்டிக் கொண்டிருக்கும். தமிழ் வாழும் காலமெல்லாம் அவரின் புகழ் நிலைகொண்டிருக்கும். அதை அவரே தன் பாடல் மூலம் பதிவும் செய்துவிட்டுப் போயிருப்பதுதான் அவரின் தீர்க்க தரிசனம். என் மனம் கவர்ந்த அவ்வரிகளையே இங்கு பார்வையாக்கி கவியரசருக்கு சமர்ப்பணமாக்கி என் கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

‘கவியரசே!
நீ
நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த
நிலையிலும் உனக்கு மரணமில்லை’

படம் உதவி நக்கீரன் இணையதளம்: http://www.nakkheeran.in/users/frmGallery.aspx?G=41226&GS=4&GV=1972

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.