இசைப்பாடலிலே உன் உயிர்துடிப்பு – பகுதி 2

0

–மு. ஜெயலட்சுமி.

 கண்ணதாசன் பிறந்தநாள் நக்கீரன் படம்

கண்ணதாசனின் கவிதையாளுகை

“என்றன் பாட்டுத் திறத்தாலே, இவ்வையத்தைப்
பாலித்திடல் வேண்டும்”
என்றான் முண்டாசுக் கவிஞன்.  இதற்கு இலக்கணமாக இவ்வுலகம் பயன்பெறக்கூடிய வகையில் தம் பாடல்களால் மக்களை ரசித்து, அவர்கள் நினைவில் நீங்காது இடம் பெற்றவர் கவிஞர் கண்ணதாசன். கவிஞர் கண்ணதாசன் சங்கப்பாடல் முதல் சிற்றிலக்கியம் வரை – தாம் படித்த கவிதைகளின் சாரத்தையெல்லாம் காதல் பாடல்களாகத் திரையில் வடித்துள்ளார்.  இவரது கருத்தாழமிக்க பாடல்கள் ஒலிக்காத விழாக்களே இல்லையென்று சொல்லாம்.  அவற்றை நாம் இங்கு காண்போம்.

காதல் பெருமை:
காதல் என்பது “ஒரு ஆணும் ஒரு பெண்ணும் மனதளவில் ஒருவரை ஒருவர் விரும்புவது’’ என்று மட்டும் கூறிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், அந்த காதலுக்குப் பல பரிணாமங்களை வடிவமைத்துக் காட்டிய பெருமை கண்ணதாசனுக்கே உண்டு!
உலகமெங்கும் ஒரே மொழி
உள்ளம் பேசும் காதல் மொழி
ஓசையின்றி பேசும் மொழி
உருவமில்லா தேவன் மொழி !” —————-(நாடோடி)
காதல் என்பது புனிதமானது; பெருமைக்குரியது; உலகம் முழுவதும் பரவியது என்பது கவிஞர் கண்ணதாசனின் கருத்து.  காதல் சிறப்பை, “உலகெங்கும் நிலவுவது காதல் என்று அதன் பரப்பினைக்’’ கூறுகிறார்.

மேலும் மக்களால் போற்றப்படும் காதல், நிலையுடையது என்னும் கருத்தில் அதேப் பாடலில்
“கோடி மனிதர் பேசிய பின்னும்
குறைவில்லாமல் வளர்வது காதல்” ————–(நாடோடி)
என்று காதல் தவறு உடையதன்று; அது ஏற்றுக் கொள்ளக் கூடியது.  என்றெல்லாம் எழுதிக் காதல் பெருமையைக் கவிஞர் கண்ணதாசன் வலியுறுத்துகிறார்.

காதல் தோற்றம்:
காதல் தோற்றம் சாட்சியினால் நிகழ்கிறது.  சாட்சி காணும் கண்கள், காதலுக்கு அடிப்படை என்பதைக் கவிஞர் கண்ணதாசன் காதல் என்றால் ஆணும் பெண்ணும் வேண்டும்.  அந்தக் காதலின் துவக்கம் கண்கள் மூலமே நிகழ்கின்றது.  கண்கள் என்ற வாசல் வழியே சென்று கருத்தினில் கலந்து இரண்டு மனங்களையும் வயப்படுத்துகின்றது காதல்.  காதலில் மனதுக்கு முன்னால் கண் செயல்படத் துவங்கி விடும், இருவரின் பார்வையும் சந்தித்த உடனேயே மனமும் அங்கே சென்று விட்டது முதலில் பார்த்தவர் யார் என்ற பேச்சுக்கே இடமின்றி `கண்டபோதே சென்றன அங்கே’ என்ற வரிகள் மூலம் இரண்டும் ஒன்றாலையே நிகழ்ந்ததாகக் கூறுகின்றார்கள்.
“கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே
கண்ட போதே  சென்றன அங்கே’’ ——————–(கர்ணன்)
கண்ணுக்கும் மனதுக்கும் உள்ள இந்த உறவையும் அந்த உறவின் மூலமாக வெளிப்படுகின்ற காதல் உணர்வையும் இவ்வரிகள் அழகாக காட்டுகின்றன.

தலைவன் தலைவியைப் பார்க்கிறான்.  அவள் கனிவு முகம் இவனைக் காதல் வயப்படுத்துகின்றது.  நேற்றுவரை இவள் என் கண்ணுக்குத் தோன்றாமல் இருந்தது எப்படி? நேர் வழியாம் காதல் வழியில் செல்ல என்னை மாற்றிவிட்டாளோ என்று மகிழ்கிறான்.
“கண்ணெதிரே தோன்றிளாள்
கனிமுகத்தைக் காட்டினாள்
நேர்வழியில் மாற்றினாள்
நேற்றுவரை ஏமாற்றினாள்” ——————-(இருவர் உள்ளம்)
அவள் கனிவுமுகம், தனியாகச் சென்ற இவள் உள்ளத்தைத் தைத்தது; மனம் மகிழ்ந்தது; இனம் புரியாத மயக்கத்தை ஏற்படுத்தியது.  இங்கே காதலை மென்மையாக காட்டுகிறார்.

காதலின் உணர்வு:
“சொல்லித் தெரியாது சொல்ல முடியாது
உள்ளத்திலிருப்பது எது? – வரும்
உறக்கத்தைக் கெடுப்பது எது?” ———————(கல்யாணியின் கணவன்)
என்று காதலின் உணர்வை துல்லியமாகச் சொல்லியுள்ளார்.

“ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்
அந்த உறவுக்குப் பெயர் என்ன?
காதல்” —————————————(சாரதா)
இப்பாடலில் ஒருவன் ஒருத்தியை நினைத்துவிட்டால் என்று எழுதி இருந்தாலும் இசைக்கு ஒத்து வந்திருக்கும். ஆனால் ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் என்று அவர் எழுதியிருக்கும் காரணம், கதைப்படி காதல் வயப்பட்ட கதாநாயகிதான் காதலை தொடங்குகிறாள் என்பது ஒரு புறம் இருந்தாலும், ஒருத்தி ஒருவனைத்தான் நினைப்பாள், ஆனால் ஒருவனோ பலரை நினைப்பான் என்று, பெண்ணுக்குரிய கண்ணியத்தை உச்சியில் ஏற்றிவைத்து அழகுப் பார்த்தவர்.

“உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல உன்னை
எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல நீ சொல்லாத சொல்லும்
சொல்லல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல
இங்கு நீ யொரு பாதி நானொரு பாதி
இதில் யார்பிரிந்தாலும் வேறென்னமீதி” —————-(இதயக் கமலம்)
மனிதனில் ஆண்பாதி பெண்பாதி, ஒரு பாதி இன்னொரு பாதியை தேடுவது தானே காதல் !

சுதந்திர உணர்வு:
“சிட்டு குருவிக்கென்ன கட்டுப்பாடு
தென்றலே உனக்கெது சொந்த வீடு
உலகம் முழுதும் பறந்து பறந்து
ஊர்வலம் வந்து விளையாடு
உலகம் முழுதும் பறந்து பறந்து
ஊர்வலம் வந்து விளையாடு” ————————(சவாலே சமாளி)
சிட்டுக்குருவியைப் போல சுறுசுறுப்பாகவும், தென்றலைப்போல சுகமாகவும் மனித இனம் உலகம் முழுவதும் பறந்து திரிந்து இயற்கையை அனுபவித்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்கிறார்.  இன்பத்தை எப்பொழுதும் அடைய வேண்டும் என்ற எண்ணம் நம் உணர்வுகளில் கலந்த ஒன்று.  அதற்கு கட்டுப்பாடு இல்லாது இருக்க வேண்டும்.  இதில் கவிஞரின் சுதந்திர உணர்வை வலுப்படுத்துகிறது.

இளமைக் காதல்:
காதலுக்கு நிலைக்களனாகிய இன்பம் எல்லா உயிர்க்கும் உண்டு.  கீழுள்ள இந்த வரி கவிதை கருத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது.  மார்கழி மாதத்தில் பனி இல்லாமலும், மன்னராக இருப்பவன் படைபலம் இல்லாமலும், இனிப்புச் சுவை இல்லாத முக்கனிகளும், இசை இல்லாத முத்தமிழும், கலையில்லாத நாடகமும் எப்படி இருக்க முடியாதோ அப்படித்தான் வாலிபத்திலும் காதல் இல்லாமல் இருக்காது என்று ஒற்றை வரியில் சவால் விடும் அளவிற்கு காதலுக்கு ஆட்படாத வாலிப நெஞ்சமே இல்லை என்று கூறுகிறார்.
“காதல் இல்லாத வாலிபமா?’’ ————-(ஆனந்த ஜோதி)
என்றும்,
உடம்பு தளர்ந்தாலும், தோல் சுருங்கிப் போனாலும், தன் தலைவி மீது அன்பு ஊறிக் கொண்டே இருக்கவேண்டும்.  அதுதான் முழுமையான – செழுமையான காதல் என்கிறார்.  இதையே…

“இளமையிலே காதல் வரும்
எதுவரையில் கூட வரும்?
முழுமைபெற்ற காதலெல்லாம்
முதுமைவரை ஓடி வரும்” –——————-(திருடாதே)
என்கிறார். காதல் தலைவி, தன்னுள் காதல் தோன்றிய இரகசியத்தை தன் தலைவனுக்கு உரைக்கிறாள்.  அதில் இளம்பருவத்தை உடைய தலைவனிடம், இளமைப் போய் முதுமை சேர்ந்தாலும், இருவர் காதலும் மாறாது என்று காதல் கோட்பாடுகளை எடுத்துக் காட்டியுள்ளார்.

“இளமையின் இன்ப ரகசியம்
இயற்கையில் வந்த அதிசயம்
இதை வாழ்ந்து பார்த்தவர் ஆயிரம்
அதில் நாமும் இன்றொரு காவியம்
இந்த இளமை போகலாம் முதுமை சேரலாம்
இருவர் காதலும் மாறுமோ?”——-(காதலிக்க நேரமில்லை)
என்றும்…

“காதலுக்கு ஜாதி இல்லை மதமும் இல்லையே,
கண்கள் பேசும் வார்தையிலே பேதமில்லையே
வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே
மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே?” —-(பாவ மன்னிப்பு)
என்றும் காதலில் வாய் பேசுவதைவிடக் கண்கள் பேசுவதே அதிகம்.  எந்த ஆணுக்கும் அல்லது பெண்ணுக்கும் இதில் வேறுபாடு இல்லை.  வானில் நீந்திச் செல்லும் மேகங்கள், நம் கற்பனைக்கேற்ற உருவத்தைக் காட்டும்; ஆனால் அந்த உருவங்கள் சற்று நேரத்தில் கலைந்து விடும்.  ஆனால் காதல் அப்படிக் கலைவதில்லை என்கிறார்.

“இதயம் பொல்லாது
கண்ணெதிரே பெண்ணழகை
கண்ட பின்னே இளமைவேகம்
கொள்ளாமல் நில்லாது”—————————-(இதயம்)
என்பன போன்று காதல் அற்புதத்தைக் கோடிட்டு; பலவித காதல் கவிதைகளை இயற்றியுள்ள பெருமையும் இவருக்குத்தான் உண்டு.

கனவாகும் காதல்:
கவியரசு கண்ணதாசன் 1948-இல் திரையுலக வாழ்க்கைக்கு வந்தார்.  `கன்னியின் காதலி’ என்னும் திரைப்படத்திற்காகத் தம் முதல் பாடலை எழுதினார்.  படத்தின் பெயரிலேயே காதல் அமைந்தக்காரணத்தினால் காதலிலேயேத் தொடங்கினார்.  ஆண் வேடம் தரித்த பெண், மற்றொரு பெண்ணுக்கு ஆறுதல் கூறுவது போல் உள்ள சூழலுக்கு,
“கலங்காதிரு மனமே – நீ
கலங்காதிரு மனமே – உன்
கனவெல்லாம் நனவாகும்
ஒரு தினமே’’ –——————–(கன்னியின் காதலி)
என்று எழுதினார்.

தலைவன் தலைவியின் அழகை வர்ணிக்கும் விதம் மென்மையைக் குறிக்க, `அவள் காற்றினில் பிறந்தவள்’ என்று சொன்னதே கற்பனைதான்.  கற்பனையே கற்பனை செய்து இவளை வடித்தது என்பது ஆதிதமான கற்பனை.  பொதுவாக எந்த பெண்ணும் இன்னொருத்தி தன்னை விட அழகானவள் என்று ஒப்புக்கொள்ளமாட்டாள்.  ஆனால் இவளோ, மற்றொரு பெண்ணே இவள் மீது ஆசை கொள்ளும் அளவிற்கு அழகானவளாம்!

“காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்
கற்பனை வடித்தவளோ?
…………………….
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ?” —————- (மாலையிட்டமங்கை)
என்று காதலன் தலைவியை வர்ணிக்கும் கவித்திறன் அருமையிலும் அருமை.

காதலியின் கோபமும் காதலனின் கேள்வியும்:
நிலவையும், காதலையும் சேர்த்துப்பாடாத கவிஞர்களே இல்லையெனலாம்.  காதலன் நேரம் கழித்து வந்து விட்டான்.  வந்தது மட்டுமல்லாமல், காதலியின் மனதுக்கு விருப்பமில்லாத வகையில் நடந்து கொள்கின்றான்.  காதலிக்கு கோபத்தால் முகம் சிவந்து விடுகிறது.  ஆசையாக தொட வந்தவனையும் தவிர்க்கின்றாள்.  நிலவின் குளிர்சியை உடையவளுக்கு, நெருப்பாக எரியும் கோபமும், மலரைப் போன்ற மென்மையானவள் முள்ளாய் மாறியதற்கு என்ன காரணம் என்று கேட்கிறான்.  இதையே
“நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம்
முள்ளாய் மாறியது” ———————- (போலீஸ்காரனின் மகள்)
என்று வளமான கற்பனை உடையவராக கவிஞர் கண்ணதாசன் மிளிர்கிறார்.  சூழலையும் மனோபாவத்தையும் பொறுத்துதான் காதல் கூட இனிமையாய் இருக்கும் என்று சுட்டுகிறார்.

பண்பாடு மாறாத காதல்:
காதல் கொள்கிறாள் காதலி. காதலனோ, ஏற்கனவே திருமணமாகி மனையாளைப் பறிக்கொடுக்கிறான்.  அவனை தன் காதலனாக நினைத்து அவனிடம் அன்பாகப் பேசி நெருங்குகிறாள்.  அவனுக்கோ காதலில் மனம் செல்லவில்லை.  இருப்பினும் அவன், அவள் மனதை புண்படாதவாறு தன் கருத்தை வெளிப்படுத்துகிறான்.  எந்த ஒரு சூழ்நிலையிலும், நம் பக்கத்து நியாயத்தையும் மனநிலையையும் எடுத்து வைக்க முடியும் என்பதை இந்த வரிகள் காட்டுகின்றது.
“நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை “—————————-(ராமு)

நான் நீ யாவது நீ நானாவது:
காதல் செய்யும் போது கருத்து வேறுபாடுகள் வரலாம்.  அந்த நேரத்தில் நீ நீயாகவும், நான் நானாகவும் இருந்தால் பிரச்சினையை எளிதில் தீர்க்க இயலாது.  அதனால் நான் நீயாகவும், நீ நானாகவும் இருந்தால் பிரச்சினையைப் புரிந்து கொண்டு அதை தீர்க்க முடியும் என்கிறார். கவிஞர் இங்கு “உலகங்கள்” என்று ஏன் சொல்கின்றார் என்றால், சமுதாயத்தில் சொந்தம் பந்தம் போன்று பல்வேறு தளங்களில் மனிதனுக்குக் கடமைகள் உள்ளன.  இப்படி இருவரின் கடமைகளிலும் பொறுப்புகளிலும் ஒன்றாகின்ற நிலைதான் காதலின் உயர்நிலை, நீ எந்த கோணத்தில் புரிந்து கொள்கிறாயோ, அந்தக் கோணத்தில் தான் எனக்கு புரிய வைக்க முடியும்.  நானும் புரிந்துக் கொள்ள முடியும் என்கிறார்.
“நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் “————(பாலும் பழமும்)

புதுமையான காதல்:
அங்கம் சிறிது குறையுடைய ஆடவனை மங்கை ஒருத்தி மணக்க நேரிடுகிறது.  ஆனாலும் அவள் மனம் அதற்காக வருந்தவில்லை, மற்றொருவனை நாடி ஓடவில்லை.  உறுப்புக் குறைந்தவர்களை காதலர்களாகப் பாடப்பெறுவதில்லை.  கண்ணதாசன் இதிலும் புதுமையை காட்டுகிறார்.  மங்கையர் உள்ளம் அங்கம் குறைந்தவனைக் காதலிக்க மறுப்பதில்லை என்று அங்கக் குறைவு அன்புமிகு காதலுக்கு தடையில்லை என்றும், உண்மைக் காதலை சமுதாயத்தின் உச்சியில் ஏற்றி வைத்து அழகுப் பார்த்தவர்.
“தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ? – உங்கள்
அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ?”————————-(பாகப் பிரிவினை)
என்றும்,

“கைகால் விளங்காத
கணவன் குடிசையிலும்
காதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா” ———-(பாகப் பிரிவினை)
என்று குழந்தையை தாலாட்டும் போதும், தன்னுடைய மகனுக்கு அங்கக் குறைவினை எடுத்துச் சொல்லி காதல் மனத்தையும் தாலாட்டுப் பாடலுடன் சேர்த்து வெளிப்படுத்திய திறன் கவிஞர் கண்ணதாசனுக்கு மட்டுமே உரிய சிறப்பாகும்.

பெண்மை தாய்மையில் நிறைவுறுகிறது:
ஒரு மனிதன் பிறக்கும் போது இருந்தே அவனுடைய இன்ப துன்பங்கள் ஆரம்பித்து விடுகின்றன. கவியரசரின் கவிதையில் தத்துவக் கருத்துக்கள், பிறப்பிலிருந்து தொடங்குகிறது.
“தந்தை தவறு செய்தார்
தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம்
வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்”-———(அவன்தான் மனிதன்)
என்ற வரிகள் பிறப்பையும், பந்தத்தையும் எடுத்துக்காட்டுகிறது.  இங்கே “தாயும் இடம் கொடுத்தாள்” என்பது, தந்தைக்கு மட்டுமல்ல, நாம் இருந்து வளர்வதற்கும் தாய் கருவரை எனும் இடம் கொடுத்தாள் என்கிறார்.  இதில் பெண்மை தாய்மையில் நிறைவு பெறுவதை குறிப்பால் மிக அழகாக உணர்த்துகின்றார்.

முடிவுரை:
‘காதல்’ என்ற பாடுபொருளை கவிஞர் கண்ணதாசன் எங்கனம் தம்முடைய திரையிசைப் பாடல்களில் மிகவும் திறம்பட நயமுடன் எடுத்தாண்டுள்ளார் என்பது தெரிகிறது.  தாம் கற்றறிந்து போற்றிய, தம் உள்ளம் கவர்ந்த இலக்கியத் தொடர்களை எளிய தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் கவிஞர் கண்ணதாசன் கவின்மிகு பாங்கு எண்ணியெண்ணி மகிழத்தக்கதாகும்.  தமிழ் இலக்கியத்திற்க்குள் புதைந்து கிடந்த காதல் இன்பத்தை பாமர மனிதரின் சிந்தனைக்கு எட்டும் வண்ணம் செதுக்கிய பெருமை கவிஞர் கண்ணதானையே சாரும் என்பதை யாரும் மறுக்கவே முடியாது.

படம் உதவி நக்கீரன் இணையதளம்: http://www.nakkheeran.in/users/frmGallery.aspx?G=41226&GS=4&GV=1972

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.