இந்த வார வல்லமையாளர்!
இந்த வார வல்லமையாளர்!
ஜூன் 23, 2014
சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர்
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு திரு. வாசு ரெங்கநாதன் அவர்கள்
இவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரியும் திரு. வாசு ரெங்கநாதன் (http://plc.sas.upenn.edu/people/faculty/vasurenganathan) அவர்கள்.
இவரைப் பரிந்துரைத்தவர் வல்லமை வாசகர், முனைவர் நா. கணேசன் அவர்கள். திரு. வாசு ரெங்கநாதன் அவர்கள் அமெரிக்க கல்விக் கழகம் நிதி உதவியில், கடந்த ஏழு ஆண்டுகளாக அவர் நிர்மானித்து பராமரித்து வரும் தமிழ் பயிற்சி வலைத்தளத்தில் (வலைதளத்தின் முகவரி: http://www.thetamillanguage.com/), பண்டைய தமிழ் இலக்கியங்களை படிப்பவர்களுக்கு உதவக்கூடிய முறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். இணையத்தில் உள்ள சங்கத்தமிழ் இலக்கியங்களை. எளிதில் பொருள் விளங்கிக் கொள்ளும் வகையில், கணினித் திரையில் தோன்றும் ஒவ்வொரு சொற்களையும் கணினித் திரையில் சுட்டினாலே அகராதியில் இருந்து அந்த சொல்லின் பொருள் திரையில் தோன்றும் வகையில் அகராதியுடன் இணைத்துள்ளார்.
உதாரணமாக நற்றிணைப் பாடல்களை இந்த பக்கத்தில் காணலாம் : http://www.thetamillanguage.com/sangam/url_gloss.php?url=http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0296.html
“நின்ற சொல்லர்; நீடுதோறு இனியர்;
என்றும் என் தோள் பிரிபு அறியலரே”
என்று தலைவி தோழியிடம் சொல்வதில், ‘பிரிபு’ என்றால் எதைக்குறிக்கிறது என்று எண்ணி திரையில் அச்சொல்லைச் சுட்டினால், உடனே அகராதியில் இருந்து பொருள் விளக்கம் காட்டப்படுகிறது.
இவ்வாறாக சங்கப்பாடல்களைப் படிக்கும் ஆர்வமுள்ளவர்கள், எளிதில் பொருள் தேடி அறிய இணைய அகராதியுடன் பாடல்களின் சொற்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இது போல மதுரைத்திட்டம் வழங்கும் இணைய இலக்கியங்கள் யாவற்றையும் (http://www.projectmadurai.org/pmworks.html) இவ்வாறு படிக்க இயலும்.
காட்டாக:
http://www.thetamillanguage.com/sangam/url_gloss.php?url=
என்ற சுட்டியின் பின்னர் ‘மதுரை திட்டம்’ வழங்கும் கொன்றை வேந்தன் பாடல்களைப் படிக்க விரும்புபவர், அந்த இலக்கியத்திற்கான இணையதள சுட்டியான http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0002.html என்பதை http://www.thetamillanguage.com/sangam/url_gloss.php?url= க்குப்பிறகு இணைத்து
http://www.thetamillanguage.com/sangam/url_gloss.php?url=http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0002.html என்ற இணையதள முகவரியாக மாற்றிய பின்னர் இணையத்தேடல் பொறியில் வெட்டி ஒட்டி சொடுக்கினால் போதும்.
http://www.thetamillanguage.com/sangam/url_gloss.php?url=http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0002.html
பொருள் விளக்கம் அறியும் வகையில் கொன்றைவேந்தன் உங்கள் விரல்நுனிகளில் கிடைக்கும்.
பள்ளி வகுப்புகளுடன் தமிழிலக்கியம் படிப்பது தடைபட்டு, பின்நாளில் சொந்த முயற்சியில் படிக்க விரும்புபவர்களுக்கு தமிழிலக்கிய நூல்களும், அவற்றின் பொருளை விளக்கும் உரைநூல்களும் கிடைப்பது இனி அரிதான ஒன்றே அல்ல.
இந்த எளிய முறையை சென்றவாரம் தமிழுலகிற்கு உருவாக்கித் தந்த திரு. வாசு ரெங்கநாதன் அவர்களை வல்லமையாளர் விருதுக்கு பரிந்துரைத்த முனைவர் கணேசன், அவரைப்பற்றி பற்றி கீழ் வருமாறு அறிமுகப்படுத்தி எழுதியுள்ளார்.
பேரா. வாசு ரெங்கநாதன் தமிழ் மொழியியலில் இருமுறை முனைவர் பட்டம் பெற்றவர். மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். ஆய்வியல் அறிஞர் செ. வை. சண்முகம் அவர்களிடம் அண்ணாமலைப் பல்கலையிலும், பின்னர் பென்சில்வேனியா பல்கலையில் ஹெரால்ட் ஷிப்மனிடமும் பயின்ற வாசு ரெங்கநாதன் இப்பொழுது ‘பென் மொழிகள் மையம்’ (Penn Language Center) என்னும் அமைப்பில் பணிபுரிகிறார். தமிழ்க் கல்லூரி ஆசிரியர்கள் கணினிப் பக்கமே போகாத நிலை இன்னும் தமிழ்நாட்டில் நிலவுகிறது. அந்நிலை மாற வழிவகுப்போரில் முனைவர் வாசு முக்கியமானவர். வாசு ரெங்கநாதன் கணினியின் மூலமாக தமிழைக் கற்பிக்கும் முன்னோடிகளில் ஒருவர். தமிழ் தட்டச்சு விசைப்பலகையை முதலில் கணினிக்கு ஏற்ற வகையில் வடிவமைத்ததால் இலங்கையில் ‘ரெங்கநாதன் விசைப்பலகை’ என்று அறியப்படுகிறது. அமெரிக்காவில் தமிழரல்லா பிற மொழியினருக்குத் தமிழ் கற்பிக்கும் முறைகளில் அனுபவமும் திறமையும் மிக்க இவர் இணையத்தில் தமிழ் போதிக்க வலைத்தளங்கள் அமைத்துள்ளார். அமெரிக்க தமிழ் அகாதமி என்ற புதிய அமைப்பு பொதுமக்கள் பயிலும் பள்ளிகளில் அங்கீகாரம் பெற்ற பாடமாகத் தமிழை அறிமுகப்படுத்த ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. அமெரிக்கன் தமிழ் அகாதமிக்கு ஆலோசகராக நல்ல பல ஊக்கங்களை அளித்துவருகிறார்.
உத்தமம் என்ற பல்நாட்டுத் தமிழ்க் கணினித் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாநாடுகளை நடத்தப் பெரும்பங்கு ஆற்றும் வாசு இந்த ஆண்டு உத்தமம் அமைப்பின் தலைவர். புதுச்சேரியில் நடக்கும் 13–ஆம் ஆண்டு கருத்தரங்கம் பல அரசியல் தலைவர்களியும், உத்தமத்தினரையும், கல்லூரி ஆய்வாளர்களையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அண்மையில் ஒரு வலைப்பக்கத்தைக் கொடுத்தால் அதைத் தமிழாகப் படிக்கும் தானியங்கி மென்கலனை உருவாக்கி தமிழ் கூறும் நல்லுலகிற்கு அளித்துள்ளார். இன்று தந்துள்ள சேவையின் மூலம், பழைய சங்கப் பாடல்களைப் பொருள் புரிந்துகொள்ள எளிதாகிறது. ஒரு சொல்லியின் மீது கணியெலிச் சுட்டியை வைத்தால் அச் சொல்லின் பொருளைக் காட்டுகிறது.
இயற்கை மொழி கணியாய்வில் (Natural Language Processing) தனது கணினி திறனையும், தமிழார்வத்தையும் இணைத்து, பழந்தமிழ் இலக்கியங்களை அனைவரும் எளிதில் படித்திட வகை செய்த திரு. வாசு ரெங்கநாதன் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]
படங்கள் மற்றும் தகவல்கள் இணையத்திலிருந்து.
இந்த வார வல்லமையாளர் பேராசிரியர் வாசு ரெங்கநாதன் அவர்களுக்கு உளமார்ந்த பாராட்டுகள். சங்க இலக்கியச் சொற்களுக்கு கணினித் திரையில் பொருள் தரும் அகராதி அறிமுகம் சிறப்பான முயற்சி. பேராசிரியருக்குப் பாராட்டுகள். தேர்ந்தெடுத்துச் சிறப்பித்த வல்லமை குழுவினருக்கு நன்றி.
மண் ஆண்ட மன்னரெல்லாம் தமிழ் வளர்த்தது அன்று.வலை ஆளும் வல்லமையாளரெல்லாம் தமிழ் வளர்ப்பது இன்று.
மொழி பெயர்பு அரிய முயற்சியை எளிமையாக்கி தந்த பேராசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பேராசிரியர் வாசு.ரெங்கநாதன் வர்களின் தமிழ்ப்பணி போற்றுதலுக்கு உரியது. இந்த வர வல்லமையாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
“உத்தமம்” சார்பில் புதுச்சேரியில் நடைபெற இருக்கும் 13 வது மாநாடு சிறப்பாக அமையவும் வாழ்த்துகிறேன்.
இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் வாசுவுக்கு என் பாராட்டு! வாசுவின் கணினித் தொண்டு மேன்மேலும் சிறக்க என் வாழ்த்து!
வாசு, எப்போதப்பா “பேராசிரியர்” ஆயினீர்?!! பென் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பிக்கும் தமிழருக்கு என்றையிலிருந்து “பேராசிரியர்” பதவி கொடுக்கத் தொடங்கினார்கள், சொல்லுவீர்களா?
பென் நம்ம பேட்டையாச்சே (1975-1993).
பென் மட்டுமல்ல, பிற அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் கற்பிக்கும் தமிழருக்குப் “பேராசிரியர்” பதவி இல்லை என்ற என் புலம்பலைத் தமிழ் மக்கள் கேட்டு அந்தக் குறையை நிவர்த்தி செய்ய வேண்டிய நிலையில் … இந்த மாதிரித் தவறான செய்தி தேவையா? இந்த மாதிரிச் செய்திகளைச் சரி பார்க்காமல் வெளியிடுவது வல்லமைக் குழுவினரின் வல்லமைக்குச் சோதனை.
நும் வலைத்தளத்தில் (http://plc.sas.upenn.edu/people/faculty/vasurenganathan) இன்னும் உங்களை “விரிவுரையாளர்” (Official Title: Lecturer) என்றல்லவா குறிப்பு இருக்கிறது? இன்றையச் செய்தி உண்மையானால் கூடிய விரைவில் நும் தளத்திலும் அந்த உண்மை வெளிப்படும் என நம்புகிறேன்.
“எல்லாம் சுபம்” என்று போவது எளிது. எங்கே நேர்மையின்மை இருக்கோ அங்கே போராடுவது கடிது. வெளிநட்டில் தமிழ் கற்பிக்கும் தமிழருக்கு அயலவருக்குத் தகுந்த பதவியும் வருவாயும் இல்லாத நிலையைக் கண்டறிந்து போராடுவதற்குப் பதில் வெறுமே பட்டங்கள் சூட்டிக் கொண்டாடுவதில் பயனில்லை என்பதில் எல்லாத் தமிழரும் புரிந்துகொண்டால் நல்லது.
வணக்கத்துடன்,
ராஜம்
(முன்னாள் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத் தமிழாசிரியை)
http://www.letsgrammar.org
http://mytamil-rasikai.blogspot.com
http://viruntu.blogspot.com
வல்லமையாளர் முனைவர் வாசுரெங்கநாதன் அவர்களுக்குப் பாராட்டுகள்.
கணிநுட்பர்களின் பணிகளை மட்டும் பாராட்டும் உலகில் பேராசிரியர் கணித்தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றும் தொண்டினைப் பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது.
மொழியியலாளருக்கே உரிய பண்பின் அடிப்படையில் அவர் பேச்சுத் தமிழைத் தொடக்க நிலையிலேயே கற்பிப்பது தமிழுக்குத் தீங்கு விளை விக்கும். இத்தகைய பேச்சுத் தமிழுக்கான ஊக்கமே தமிழில் இருந்து பிற மொழிகள் உருவாகக் காரணமாக அமைந்தன. எனவே, அதில் மாற்றம் தேவை.
பேராசிரியர் இராசம் அம்மையார் அவர்கள் குறிப்பிட்டது சரிதான். ஆனால், பேராசிரியர் எனக் குறிப்பது பதவியின் அடிப்படையில் அல்லாமல் வழக்கத்தில் கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியத்துறையினரைக் குறிக்கும் பொதுச்சொல்லாக ஆகிவிட்டது. அன்னாரின் பதவிப் பெயரைக் குறிப்பிட்டு அவர் பெயருடன் பேராசிரியர் என்னும் அடைமொழியைச் சேர்த்திருக்கலாம்.
இது தொடர்பில் வேறு சில கருத்துகளைப் பகிர விரும்புகின்றேன்.
அரசு இசைக்கல்லூரிகளில் பயிற்றுநர் என்னும் பணி இன்னும் இருக்கின்றது. இப்பணியில் உள்ளோர் தங்களைப் பேராசிரியர் என்றுதான் குறிப்பிட்டுக் கொள்வர். கவின்கலைக் கல்லூரியில் பணியாற்றும் இத்தகையோர் பேராசிரியர் என்றே எல்லா இடத்திலும் குறிப்பிடுவர். . அலுவல் முறையில் பயிற்றுநர் எனப் பதவிப் பெயரைக் குறிப்பிட்டு எழுதும் பொழுது என் மீது கடும் சினம் கொள்வர். கவின் கல்லூரியில் இணை விரிவுரையாளராக இருந்த ஒருவர், விரிவுரையாளர் பதவி உயர்வு பெற்று, அடுத்துத் துறைத்தலைவர் பதவி உயர்வு பெற்று அதன் பின்னரே முதல்வராக வேண்டும். ஆனால், அவர் மூத்தவரை மிரட்டி, தன் சாதிக்கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு முதல்வர் பொறுப்பு என்று வாங்கிக் கொண்டார். முதல்வர் என்றே எல்லா இடத்திலும் குறித்துக் கொள்வார். உரிய முறைப்படி, முதல்வர் பொறுப்பு எனக் குறிப்பிட்டால் வெறுப்பை உமிழ்வார். கலை பண்பாட்டுத்துறையின் செயலராக இருந்தமுனைவர் இறையன்பன் அவர் பதவி உயர்விற்காக, அடுத்து முதல்வராக அமர்த்த வேண்டும் என்பதைத் துறைக் கூட்டத்தில் ஒரு முறை தெரிவித்தார். அவர் அதற்கு முன்னதாக வேறு சில உயர்வுகளைப் பெற்றாக வேண்டும். இந்த நிலையில் நேரடியாக முதல்வராக முடியாது என்பதை அவரிடம் உணர்த்தினேன். தான் ஒருவரே முதல்வருக்குத் தகுதியானவன் என்றும் தானே முதல்வன் என்றும் எல்லாரிடமும் கதை அளந்த அவருக்குச் சினம் வந்து விட்டது. அதெல்லாம் தவறு என்றார். முனைவர் இறையன்பு இதுவரை கேட்டுவந்ததற்கு மாறாக நான் கூறியதால், நான் தவறாகத் தெரிவிக்கின்றேனோ என எண்ணினார். ‘’நான் குறிப்பிட்டவரின் நலனுக்காகத்தான் தெரிவிக்கின்றேன். அவர் பெற வேண்டிய பதவி உயர்வு நிலுவையில் உள்ளது. அவர் முதல்வர் என்றே கூறிக் கொள்வதால், உரிய கோப்பு கிடப்பில் இருக்கின்றது’’ என்பதை முனைவர் இறையன்பு உணர்ந்தார்.
மதுரை இசைக்கல்லூரியில் பள்ளி ஆசிரியர் சம்பள நிலையில் தமிழ் விரிவுரையாளராக ஒருவர் பணியாற்றினார். அவர் தன்னை எப்பொழுதும் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் என்றே எல்லா இடங்களிலும் குறிப்பிட்டுக் கொள்வார்.
அரசு இசைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் யாவரும் தங்களை முதல்வர்கள் என்றே குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.
இசைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் , பேராசிரியர்கள் என்றே குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.
இவை போன்ற எடுத்துக்காட்டுகள் ஏராளம் உள்ளன.
பணியின் காரணமாகச் சிறப்படைந்து பிறர் அறிந்தோ அறியாமலோ பேராசிரியர் என்று குறிப்பிடுவது வேறு. ஆனால், உண்மை நிலை அறிந்தே தம்மை உயர்வாகக் குறிப்பிட்டுக் கொள்ளும் இழிந்த நிலையில் உள்ளவர்களும் உள்ளனர்.
பொதுவாகவே கல்லூரிகளில் பணியாற்றுவோர் தங்களைப் பேராசிரியர் என்று குறித்துக் கொள்வதாலும் அழைப்போர் பேராசிரியர் என்றே குறிப்பதாலும் நடைமுறைக்கிணங்கப் பேராசிரியர் எனக் குறித்ததாகவே கொள்ளலாம். எனினும் அவரைப்பற்றி அல்லாமல் தமிழின் நிலையை உணர்த்த, தாங்கள் குறிப்பிடும் பதவி நிலை உண்மை உதவுகிறது.
மீண்டும் வல்லமையாளர் வாசு அவர்களுக்குப் பாராட்டுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இண்பிட் வலைக்குழுவில் பல அங்கத்தினர்கள் பேரா. வாசு ரெங்கநாதனுக்குத் தங்கள் வாழ்த்துக்களை வழங்கியுள்ளனர்.
Dr. நா. கணேசன்