ஞாலம் போற்றும் தமிழ்க்காதலன்!

0

–ஜியாவுத்தீன்.

கண்ணதாசன் பிறந்தநாள் நக்கீரன் படம்

கண்ணதாசன்!

காலத்தை வென்ற கவிஞன்!
ஞாலம் போற்றும் தமிழ்க்காதலன்!

இந்தப் பெயரை உச்சரிக்கும்போதே, எழுதும்போதே உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்படுவதுதான் நம்மீதான அவரின் தாக்கம் என்றால் மிகையில்லை.

என் பார்வையில் என்றில்லை, யார் பார்வையிலும் ஒரு குறிப்பிட்ட வரையரைக்குள் அடங்காத மகோன்னதக் கவிஞன்தான் கண்ணதாசன். பாரதியின் நாவில் சரஸ்வதி குடிகொண்டிருந்தாள் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். பாரதி மறைந்தபின் குடிகொள்ள இடமின்றித் தள்ளாடிக் கொண்டிருந்த சரஸ்வதி கண்ணதாசன் பிறந்தவுடன் அவரின் நாவில் குடிகொண்டுவிட்டாள் போலும். அதனால்தான் இம்மனிதனின் நா உதிர்த்த வார்த்தைகளெல்லாம் பாடல்களாயின, பாடல்கள் ஒவ்வொன்றும் தமிழ்மகனின் வேதங்களாயின.

சோழசபையில் அம்பிகாபதியின் புலமையைப் பரிசோதிக்க பக்திப் பாடல்கள் 100ஐ தொடர்ந்து பாடவேண்டும் என்று கட்டளையிடப்பட்ட கதையைக் கேட்டிருக்கிறோம். அது எப்படி 100 பாடல்கள் பாட முடியும் என்று வியந்து நம்பாமல்கூட இருந்திருப்போம். ஆனால், கண்ணதாசனின் கதையைக் கேட்கும்போது, திறமையாளர்களுக்கு அது ஒன்றும் திணறும் காரியமல்ல என்பதை உறுதியாய் நம்பத் துவங்குகிறோம். ஆம்! இவரிடம் எத்தனை பாடல்கள் கேட்டாலும், எத்தனை விதமாய்க் கேட்டாலும், எந்த நிலையில் கேட்டாலும் சரம்சரமாய்க் கொட்டின என்று இவருடன் பழகிய பலரும் கூறக் கேட்கையில், தமிழுலகில் இவரை ‘பாடல்களின் அமுதசுரபி’ என்று சொல்லத் தோன்றுகிறது.

அரிய விஷயங்களை, அற்புதமான மனிதர்களை, மனிதர்கள் ஏங்குமளவு அவர்களுக்குப் பிடித்தமானவற்றை இறைவன் எதிர்பாரா தருணங்களில், எதிர்பார்க்கும் காலத்துக்கும் முன்பாகவே பறித்துக் கொண்டுவிடுவதை ஒரு வாடிக்கையாகவே வைத்திருக்கிறான். அதன் நிதர்சன உதாரணங்கள், பாரதியும் கண்ணதாசனும். இப்பூவுலகில் பாரமாய், மனிதகுலத்தை மாசுபடுத்தும் நச்சுக்களாய் எத்தனையோ ஜீவன்கள் நீண்ட காலம் வாழும் நிலையில், நம் இதயம் கவர்ந்தவர்களை இறைவன் கவர்ந்துவிடும்போது, அவன்மேல் கோபமாய்த்தான் வருகிறது. என்ன செய்வது? இயற்கையின் திருவிளையாடல், இறைவனின் திருவிளையாடல். ஜீரணிக்கக் கஷ்டமாயினும் ஏற்றுக் கொண்டுவிடுகிறோம்.

என் பார்வையில் கண்ணதாசனை மனசாட்சியென்றுதான் சொல்லத் தோன்றுகிறது. என் மனசாட்சி மட்டுமில்லை, நம் ஒவ்வொருவரின் மனசாட்சியும்தான். ஆம், அவரின் பாடல்களில் ஏதாவதொரு பாடல், நம் ஒவ்வொருவரின் மனநிலைக்கும் சூழ்நிலைக்கும் உணர்வுகளுக்கும் ஏற்ப பொருந்துகின்றன என்பதை வேறு எப்படிச் சொல்வது? நாம் துவளும்போது தத்துவம் சொல்லி உத்வேகம் தரும், நாம் மகிழும்போது நண்பனாய் நமக்கு வாழ்த்துச் சொல்லும், நாம் கோபப்படும்போது, சகோதரனாய் ஆசுவாசப்படுத்தும், நாம் காதல் கொண்டால், நம் உளமறிந்து லாலி பாடும். நமக்கு சோகம் நேர்ந்தால், சுகமாக்கும் மருந்தாய்த் தோன்றும். இப்படி ஒவ்வொரு நிலைக்கும் ஏற்ப கவியரசரின் பாடல்கள் நம்முடன் வரும்போது, அதை ‘மனசாட்சி’ என்று சொல்வதில் தவறில்லை அல்லவா?

இம்மனிதர் பணத்திலும் திளைத்திருக்கிறார், பணமின்றித் தவித்தும் இருக்கிறார். வெற்றி பெற்ற அரசியலிலும் இருந்திருக்கிறார், தோல்வியுற்ற அரசியல்வாதியுடனும் இருந்திருக்கிறார். கட்சிகள் மாறியிருக்கிறார், மாறியபின் வசை பாடியுமிருக்கிறார். போகுமுன்னே தூது விட்டிருக்கிறார், போனபின்னே வாழ்த்தியுமிருக்கிறார். கட்டிய மனைவியிடம் காதலாய்க் கசிந்திருக்கிறார், கன்னியரிடம் மனதைக் காமுறவும் விட்டிருக்கிறார். குழந்தைகளை நேசித்திருக்கிறார், குழந்தையாகவே மாறி குமரிகளின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டுமிருக்கிறார்.

அமைதியாய் சலசலப்பின்றி ஓடும் ஆறாய் இருந்ததில்லை இவரின் வாழ்க்கை. ஆரவாரமாய், மேடுபள்ளங்களைக் கடந்து பாயும் அருவியாய் இருந்திருக்கிறது. கள்ளம் கபடமின்றி வாழ்ந்திருக்கின்றார், உள்ளங்களெல்லாம் வெள்ளை என்று எண்ணி ஏமாந்துமிருக்கிறார். வஞ்சகத்தைக் கண்டிருக்கிறார், தன் வார்த்தைகளால் அவற்றை வென்றிருக்கிறார். அன்பிலே மிதந்திருக்கிறார், அதை பாடல்களாய்த் தொடுத்துமிருக்கிறார். வேதனையில் வெந்திருக்கிறார், அதை சாதனைப் பாடலும் ஆக்கியிருக்கிறார். சோகத்தில் புழுங்கியிருக்கிறார், ஆனாலும் சுகமாகப் பாட்டிசைத்திருக்கிறார். அன்புக்கு ஏங்கி தாகத்தில் தவித்திருக்கிறார். அற்புதமான சொற்களால் வேகமாய்ப் பாடியிருக்கிறார். இப்படி கண்ணதாசனைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம்.

இந்திய நாட்டைக் குறிப்பிடும்போது, வேற்றுமையில் ஒற்றுமை, வேறுபாடுகள் நிறைந்த நாடு என்று வரலாற்றுப் பாடம் படித்திருக்கிறோம். அதேபோலத்தான், கண்ணதாசனையும் வேற்றுமையில் ஒற்றுமை என்றும், வேறுபாடுகள் நிறைந்த மனிதர் என்றும் மேற்சொன்னவற்றின் மூலம் குறிப்பிடலாம். இத்தனை அறிவார்ந்த மனிதனை, ஆண்டவன் ஏன் சோதனைகளுக்கு உட்படுத்தினான் என்று எண்ணினால், உண்மை விளங்கும். நல்லவர்களைத்தான் ஆண்டவன் சோதிப்பான் என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போய்விட முடியாது.

ஒருவேளை, ஆண்டவன் கண்ணதாசனை சோதனைகளுக்கு உட்படுத்தாமல் இருந்திருந்தால், நமக்கு கண்ணதாசன் என்னும் மகாக்கவிஞன் கிடைக்காமலே போயிருக்கவும் வாய்ப்புண்டு. ஆம்! இறைவன் ஒவ்வொருமுறையும், ஒவ்வொரு விதமாய் கவிஞரை சோதனைகளுக்கு உள்ளாக்கிய போதெல்லாம், சாதனைகள் படைத்த பல நல்ல பாடல்கள் நமக்குக் கிடைத்தன என்பதுதான் உண்மை. அவர் ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஆளான போதெல்லாம் ஒவ்வொரு பாடலும் வீரியமாய் விழுந்தன. அதற்கு அவரின் திரைப்பட இசையமைப்பாளர்களின் மெட்டுக்கள் உரமிட்டன என்பதுதான் உண்மை. இன்னும் சொல்லப் போனால், அவர் பிரச்சினைகளுக்கு உள்ளாகும் போதெல்லாம், உணர்வுபூர்வமாக அழுத்தமாக இன்னும் ஆழமாகப் பாடல்கள் வெளிப்பட்டன. இங்கே அவரின் பாடல்களைத் தனியாகக் குறிப்பிடப் போவதில்லை. அவை இத்தமிழுலகம் அன்றாடம் அள்ளிப் பருகும் தேமதுர கானங்கள். எனவே, அவற்றை எழுதவேண்டிய அவசியமில்லை.

மேலே குறிப்பிட்டதுபோல், அவர் ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஆட்படாமல் போயிருந்தால், அப்போது வெளிப்பட்ட சிறந்த பல பாடல்கள் கிடைக்காமல் போயிருக்குமோ என்னும் அச்சம் ஏற்படுவது இயற்கைதானே? இது என்னுடைய (நம்முடைய?) ஒருவித சுயநலம் என்றுகூட தோன்றுகிறது. ஆனாலும் பாவமில்லை, அவரின் சிரமங்களில் தோன்றிய பாடல்களனைத்தும், நமக்கு பாடம் கற்றுத்தரும் பள்ளிக்கூடங்கள் என்றால் மிகையில்லைதானே?

பல்லாயிரம் பக்கங்கள் கொண்ட பக்தி இலக்கியங்களை, பத்துவரிப் பாடலில் விளங்க வைத்தார். பல ஆண்டுகளில் கிடைக்கும் அனுபவங்களை, நான்கு நிமிடப் பாடலில் சுருங்க வைத்தார். படித்துப் பட்டம் பெற்று உணரும் கல்வியறிவை, கேட்கும் பாடலிலேயே புரிந்துகொள்ளும் எளிமை விதைத்தார். விதைத்தவனாயினும், வதைப்பவன் ஆண்டவன் என்றால், கேள்வி கேட்கத் தயங்காதே என்று தைரியம் வளர்த்தார். நண்பனாயினும், நயவஞ்சகனாய் மாறிவிட்டால், நடித்துக் கொண்டிராதே, நட்பை முடித்துக்கொண்டுவிடு என்று போதனை ஊட்டினார். வஞ்சகியின் வலையில் விழுந்துவிட்டால், வாழ்க்கை நஞ்சாய் மாறிவிடும் என்பதை அறிவுறுத்தினார். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இன்னும் சொல்லப் போனால், அவரவர் மதங்கள் சார்ந்த வேதங்களைக் கூட கற்காமல் இருந்திருப்பார்கள், ஆனால் கண்ணதாசனின் பாடல்களைக் கேட்காமல் இருந்திருக்க மாட்டார்கள். கல்விச்சாலைகளுக்குக் கூட செல்லாமல் இருந்திருப்பார்கள், கண்ணதாசனின் பாட்டுச் சோலைகளில் திளைக்காமல் இருந்திருக்க மாட்டார்கள். மதுக்கடைகளை நாடாதவர் எத்தனையோ பேர், ஆனால், இவர் பாடல்களைக் கேட்டு மதுவுண்ட வண்டுகளாய் மனம் கிறங்கிப் போவார்கள்.

இக்கவிஞனின் வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும், ஆனால், அதன்மூலம் அவன் கற்றுணர்ந்து நமக்கு விட்டுப் போயிருப்பது விலைமதிப்பில்லா பொக்கிஷங்கள். சாலையில் போகும்போது இடறும் கல்லை எடுத்து தூரப் போட வேண்டும் அல்லது இங்கே உள்ள கல்லில் இடறிவிடாதீர்கள், கவனமாயிருங்கள் என்று ஒரு சிறிய அறிவிப்பையாவது அங்கு வைக்க வேண்டும். கண்ணதாசனை இடறிய எத்தனையோ தடைகளை அவரால் எடுத்துப் போட்டிருக்க முடியாது என்று வைத்துக் கொண்டாலும் ‘இத்தடைகள் என்னை இடறின, அடுத்து வருபவர்கள், எச்சரிக்கையாய் இருங்கள்’ என்று அழுத்தமாக, ஆழமாக அறிவிப்புப் பலகையை அசைக்க முடியாதவாறு அகிலத்தில் நட்டுச் சென்றிருக்கிறார் அம்மகாக் கவிஞர். அதைப் பின்பற்றுவதும், பின்பற்றாமலிருப்பதும் அவரவர் விருப்பம். ஆனாலும் கவிஞர் ஒரு காலக்கண்ணாடியாய் என்றென்றும் இப்பூவுலகில் நீக்கமற நிறைந்திருப்பார் என்பது நிதர்சனமான உண்மை.

அவரைப்பற்றி ஏதேதோ குறைகள் கூறுபவர்கள்கூட, அவர் யாரையாவது ஏமாற்றினார் என்றோ, யாருக்காவது துரோகமிழைத்தார் என்றோ, புறம் பேசினார் என்றோ, யாருக்காவது வஞ்சகம் நினைத்தார் என்றோ எதையும் கூறியதில்லை. அத்தனையும் அவரின் தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கை பற்றிய தகவல்கள். அவற்றைப் பற்றி விமர்சிக்க யாருக்கும் உரிமையும் கிடையாது, தகுதியும் கிடையாது என்பது நிச்சயம். அறிஞர்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ரகசியமான எத்தனையோ பக்கங்கள் இருக்கக்கூடும்தான். அவற்றை ஆராய்வது நம் வேலையல்ல, அவர்கள் சமுதாயத்திற்கும் மனித இனத்திற்கும் அறிவிப்பது என்ன? விட்டுப்போனது என்ன? சொல்ல விரும்புவது என்ன? என்பவை பற்றியதாகத்தான் நம் வேட்கை இருக்க வேண்டும்.

இந்த பூமியிலே எத்தனையோ கவிஞர்கள் வருகிறார்கள் எழுதுகிறார்கள் போகிறார்கள். ஆனால், யாராவது கண்ணதாசனின் உயரத்தைத் தொட்டார்களா? தொடுவார்களா? என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நாம் தமிழர்கள் அனைவரும் தமிழில்தான் படிக்கிறோம், பேசுகிறோம், எழுதுகிறோம், தமிழிலேயே வாழ்வதாகக்கூட சொல்லிக் கொள்கிறோம். ஆனால், அவனுக்கு மட்டும் வாழ்க்கையின் கடினமான விஷயங்களைக்கூட எளிமையான வார்த்தைகளால் கோர்க்கத் தெரிந்த வித்தையெது? சந்தக்களுக்குள் சொந்தம் ஏற்படுத்தும் வண்ணம் சொற்கள் தைத்த மந்திரமெது? வாய் திறந்தால் வார்த்தைகளாய்க் கொட்டிய வசியமென்ன? தமிழன்னை தன் கரம் நிறைய வரங்கள் வைத்துக்கொண்டு, காத்திருக்க, வரமாய் வந்த கண்ணதாசன் அவ்வரங்களைக் கைகொள்ளும் கலனாய் மாறிப்போனார் என்பதுதானே உண்மை? படித்தவனுக்கும் பாமரனுக்கும் சரிசமமாய்ப் புரிந்தன அவரின் பாடல்கள்! ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தும் வண்ணம் ஆயிரமாயிரம் சங்கதிகளைக் கொண்டு படைக்கப்பட்டவை அவரின் நூல்கள்! அவரின் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுப்பாடம்!

அந்த வகையில், கண்ணதாசன் நமக்காக விட்டுப்போயிருக்கும் பொக்கிஷத்தைப் புரிந்துகொண்டு, அவற்றின் அர்த்தங்களைத் தெரிந்துகொண்டு, அவைதரும் பாடங்களை அறிந்துகொண்டு வாழ்வில் உன்னதமடைவோம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

எனவே, மீண்டுமொருமுறை கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்,

என் பார்வையில் கண்ணதாசன் என்னுள்ளிருக்கும் ‘மனசாட்சி’!
என்றென்றும் தொடர்ந்துகொண்டேயிருக்கும் அவன் பாடல்களின் அரசாட்சி!
எவரும் என் கூற்றை ஏற்றுக்கொள்வர் என்பதுவே இதற்கு தெளிவான சாட்சி!

வாழ்க கண்ணதாசன்! ஓங்குக அவன் புகழ்!

படம் உதவி நக்கீரன் இணையதளம்: http://www.nakkheeran.in/users/frmGallery.aspx?G=41226&GS=4&GV=1972

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *