இசைப்பாடலிலே உன் உயிர்துடிப்பு – பகுதி 1

0

–மு. ஜெயலட்சுமி.

கண்ணதாசன் பிறந்தநாள் நக்கீரன் படம்

திரையிசைப் பாடல்களில் திருக்குறள்

 

முன்னுரை:
கவியரசு கண்ணதாசன் அவர்கள் திரைப்படங்களுக்குப் பாடல்கள் ஏராளமாகப் புனைந்ததன் மூலம் இன்றும் நிலைத்த புகழ் பெற்றவராய் விளங்குகிறார்.  பாமரரும் புரிந்துக்கொள்ளக் கூடிய எளிய தமிழில் நல்ல கருத்துக்கள் பலவற்றை உள்ளடக்கிப் பாடல்கள் படைத்துள்ளார்.  அவர் எழுதியுள்ள பாடல்கள் பலவும் மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும் வல்லமைப் பெற்றது.  ஒரு கவிஞன் தன் கவிதையைச் சிறப்படையச் செய்ய எண்ணினால் சொற்களை இடமறிந்து கையாளும் திறம் மிக்கவனாக இருத்தல் வேண்டும்.  கவிஞரவர்கள் சொற்களை இடமறிந்து பொருளோடு பயன்படுத்துவதில் திறமைமிக்கவராய்த் திகழ்கிறார்.  கவிஞர் நல்ல சொல்லாட்சியோடு தகுந்த வடிவில் கற்பனை மிளிர்ந்திடப் பிறந்தமையால் இன்றும் அவர் படைப்புகள் புகழ் ஓங்கி நிற்கின்றன.

என்னுடைய பேனாவிலிருந்து சிந்தும் மை பணமாகாமற் போனாலும் போகலாம்; சரித்திரமாகாமற் போகாது” என்கின்ற தன்னம்பிக்கை கவிஞருக்கே உரிய தனித்தன்மை.  ஒரு கவிஞனின் சிறப்பை, அவன் வாழ்ந்த காலத்தைக் கொண்டே நிர்ணயிக்க வேண்டும்.  இன்று என் பாடல்களை நான்கு கோடி மக்கள் ரசிக்கின்றார்கள்; பாடுகிறார்கள்.  அதைக் கண்ணால் பார்க்கும் போதும், காதால் கேட்கும் போதும் எனக்கு உற்சாகம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  அதனால் மேலும் மேலும் நான் எழுதுகிறேன் என்று குறிப்பிடுகிறார்.

பொறுமை:
காலம் காலமாய் பொறுமையைக் கடைபிடித்து ஒரு தாய் இந்த மண்ணின் பெருமையை காப்பாற்றி வருகின்றாள்.  இந்த பண்பு அவளின் பிறப்பிலேயே வந்தது என்பதைக் கவிஞர்
“மண் வளர்த்த பொறுமையெல்லாம் மனதில் வளர்த்தவளாய்
கண்மலர்ந்த பெண்மயிலை நானடைந்தேன்
நீ வளர்ந்து மரமாகி நிழல்தரும் காலம் வரை
தாய் மனதைக் காத்திருப்பேன் தங்க மகனே” ……………………………. (பாகப்பிரிவினை)
என்ற வரிகளின் மூலம் தந்தை தன் மகனுக்கு தாயின் பெருமையைச் சொல்லி அவனுடைய கடமையை உணர்த்துவதை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறார் கவிஞர்.

“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை”.……………………………………………………………. (குறள் – 151)
என்பது வள்ளுவரின் வாக்கு.

பலவகை கருவிகளைக் கொண்டு தன்னை அகழ்கின்ற மக்களுக்கு, வாழ்க்கைக்குத் தேவைப்படும் அனைத்துப் பொருள்களையும் கொடுத்துக் காப்பாற்றுகின்ற நிலத்தைப் போன்று, தன்னை அவமதித்துத் துன்புறுத்துபவர்களையும் பொறுத்துக் கொண்டு அவர்களுக்கு உதவி செய்வதே தலையாய பண்பு.

காதல்:
சங்க காலம் முதற்கொண்டு அனைத்து இலக்கியங்களிலும் காதல் வரிகள் இல்லாமலில்லை.  இன்னும் சொல்லப்போனால் காதல் இல்லாத இலக்கிய பக்கங்களே இல்லை என்று கூறுமளவிற்கு “காதலை” அழகுபடக்  கையாண்டிருக்கின்றனர். “உலகப் பொதுமறை” என்று சிறப்பித்து கூறப்படும் வள்ளுவம் கூட தன்னுள் மூன்றில் ஒரு பங்கு இடத்தை காதலுக்கு என்று ஒதுக்கி வைத்து புகழ் சேர்க்கிறது.

காதல் என்னும் மாளிகைக்கான கதவுகளின் திறவுகோல்தான் கண்கள் என்கிறார் கவிஞர்.  கண்கள் பேசுவதாகவும், அப்படி பேசுவதை மொழியாகவும், கண்களின் அசைவை சிரிப்பாகவும் வர்ணித்தவர் கவிஞர்.
“நிலவென்ன பேசும், குயிலென்ன பாடும்
மலரென்ன சொல்லும் மனதிலே!
கதை பேசுமோ, இன்பக்கவி பாடுமோ இங்கு
கண்ணோடு கண் சொல்லும் மொழியிலே”.……………………………… (ராணி சம்யுக்தா)
இப்பெருமைமிகு காதலின் துவக்கத்திற்கு, கொடியசைத்து வரவேற்பிதழ் அளிக்கும் கண்கள் எந்த அளவு பெருமை கொண்டதாய் இருக்க வேண்டும் என்று சிந்திக்கிறார் கவிஞர்.

வள்ளுவரோ,
“எண்ணெண்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண் என்பவாழும் உயிர்க்கு”.……………………………………………………………….. (குறள் – 392)
என்று எண் அறிவு, எழுத்தறிவு, அதாவது கணக்கு, இலக்கியம் இரண்டும் மக்களுக்குக் கண்ணெணப் போற்றிப் பாராட்டத் தக்கவையாகும் என்கிறார் அத்துடன் நில்லாது கண் உடையவர் மட்டுமே அறிவிற்சிறந்தவர் என்றும், அறிவு அற்றவர்கள், கண்கள் பெற்றவராயிருந்தும், அக்கண்கள், முகத்தில் தோன்றிய புண்கள் என்றும் சுட்டுகிறார்.  இதிலிருந்து கண்களின் பெருமை தெரிகிறது.
“கண்ணுடையவர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையவர் கல்லா தவர்”……………………………………………………………. (குறள் – 392)

காதலே பெருமை கொண்டது.  அப்பெருமை மிகு காதலைக் கொள்வது கண்கள்! அதனால் தலைவன் தலைவியை கீழ்கண்ட பாடல் மூலம் வர்ணிக்கிறார்.
“பொன்னென்பேன் – சிறு
பூவென்பேன் – காணும்
கண்ணென்பேன் – வேறு
என்னென்பேன்?”…………………………………………………………………. (போலீஸ்காரன் மகள்)
என்று தன் காதலியை ‘கண்’  என்று வர்ணிக்கிறார்.
கண்களின் உயிரே பார்வைதானே! பார்வையற்ற கண்கள் இருந்தென்ன பயன் விளையும்?  அந்த பார்வைதானே தலைவனை காதல் கொள்ளவைத்தது.  அதனால் தலைவி பதில் உரைக்கிறார்.
“………………கண்கள்
நானென்றால் – பார்வை
நீயென்பேன்!”………………………………………………………………………….. (போலீஸ்காரன் மகள்)
அதாவது, நான் கண் என்றால், நீ அதன் பார்வை என்று! இந்த மேன்மைக்கு பதிலைப் பெற்ற தலைவன், தான் அவள் கண்களில் கலந்திருப்பதாக கூறுகிறான்.

தலைவியிடம் காதல் பிறந்தது என்பதை உணர்ந்த காதலன், அந்த காதலை எப்படி உறுதி செய்வது என்று தலைவியைப் பார்த்து, தான் கொடுத்த பார்வைக் கேள்விகளுக்குப் பதில் கேட்கிறாள்.
“எந்தன் – பார்வையின் கேள்விக்கு
பதிலென்ன சொல்லடி ராதா! ……………………………………………………………….. (சுமைதாங்கி)
என்று கேட்க, அதற்கு தலைவி, என் பார்வையே, உன் பார்வையின் கேள்விக்குப்பதில் என்று, கூறி தலைவனை காதலில் மூழ்கடிக்கிறாள்.
“உந்தன் – பார்வைக்குப் பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா!”  ……………………………………………………………….. (சுமைதாங்கி)
காதலின் துவக்கமே பார்வையில் தான்.  அதற்கு மாற்றுக்கருத்து இல்லை.

தலைவி, தன் காதலனைப்பார்க்கும் போது, தன் கண்ணைச் சுருக்கிக் கொண்டு, பார்ப்பதை, கவிஞர் கண்ணதாசன் பாதி கண்மூடி, பின் திறந்து பார்ப்பதாகக் கூறுகிறார்.  அந்த பாதிப்பார்வையே தலைவனுக்குக் காதலை ஏற்படுத்தி விருந்து படைக்கிறது.  அந்த பாதிக்கண் பார்வையிலேயே காதல் வலைவீசி, காதல் சிறையில் தலைவனை அடைத்துவிட்டாளாம் அந்த தலைவி,
“பாதிக்கண்ணை மூடித்திறந்து
பார்க்கும் பார்வை காதல்விருந்து !
…………………………..
சின்னக் கண்ணில் என்னை அடைத்தாள் !”……………………………….. (இது சத்தியம்)
மற்றும்,
“பாதிகண்களை மூடித்திறந்து பார்ப்பதில் இன்பம்” ……………… (எங்கள் தங்கராஜா)
என்பன போன்ற பல புதுப்புது பரிமாணங்களை, இந்த இருபதாம் நூற்றாண்டில் நம் கண்ணுள்ளே கோடிட்டுக் காட்டியவர் கவியரசு கண்ணதாசன்.

இக்கருத்தை வள்ளுவபெருமான்,
“குறிக்கொண்டு நோக்காமை அல்லால், ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்”………………………………………………………….. (குறள் – 1095)
என்பதன் மூலம், தலைவன், தன் மீது குறிப்பாய் இருப்பதைப் பிறர் அறியுமாறு பார்க்காமல் விடுத்து, நான் மட்டும் அறிந்து கொள்ளுமாறு கடைக்கண்ணைச் சிறிதே மூடி, இமைகளை படபடவென இமைத்து நகைப்பாள், என்கிறான். இதில் நகும் என்ற வார்த்தை, அவளாக நினைப்பதாகப் பொருள் கூறாது.  ஒரு கண் சிறக்கணி ஆவதால், உதடு நகுகிறது.  அதற்குக் காரணம் தலை சற்றே சாய்ந்துள்ளதாம்.  அது, சரசக்கலையில் ஒரு வகையாம்!

“பாயுது பாயுது கண்ணம்மா
பதுங்குது பதுங்குது பொன்னம்மா,
சாயுது சாயுது தலையம்மா
சரசத்திலே ஒரு வகையம்மா!
பொண்ணாப் பொறந்தவ நானம்மா
ஆசை வராதா சொல்லம்மா?” …………………………………………………………….. (மணியோசை)

இங்கு தலைவி, நான் பெண் என்பதால், ஆசைவரக் கூடாதா?  என்று வினாவும் எழுப்புகிறாள்.  காதலில் சரசத்தின் விளைவால், தலை “சற்றே” சாய்தலையும் குறிப்பிடுகிறார்.
“தங்கச்சி சின்னப்பொண்ணு
தலை என்ன சாயுது!” ………………………………………………………………………….. (கறுப்புப் பணம்)
என்றும்,
“காற்று வந்தால் தலை சாயும்?
நாணல்
காதல் வந்தால் தலை சாயும்?
நாணம்!” ……………………………………………………………………………………… (காத்திருந்த கண்கள்)
இவ்வரிகளிலிருந்து, காதல் வரும்போது, கண்ணியர்க்கு நாணமும் உடன் வந்து விடுகிறதென்றும் நாணம் வருவதென்பது காதலில் தலை சாய்வதின் தொடர்ச்சி என்றும் தலைவியின் தவிப்புகளைப் பல பரிமாணங்களில் காட்டிய கவிஞர் கண்ணதாசன் நாணத்தில் தலை சற்றே சரிவதாகக் காட்டி அது காதலின் வெளிப்பாடு என்கிறார்.

காதல் என்பதை சரிவரப்புரிந்து கொள்ள முதிர்ச்சி இல்லாத நிலையில்,  இச்சமூகம் இருந்த போதும், உலகம் என்ன சொல்லும் என்பதைப் பற்றி கவலையே படாமல், தன் உள்ளம் சொல்வதையே வெளிப்படுத்திய உண்மைக் கவிஞன் என்பது மறுக்க இயலா உண்மை!

குடும்பம்:
ஒரு குடும்பத் தலைவர், குடும்பத் தலைவி என்றால் இருவரும் கருத்து வேறுபாடு இல்லாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து குடும்பம் நடத்தினால் அது ஒரு பல்கலைக்கழகத்திற்கு சமம்.
“நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
அன்புமணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க” …………………………….. (தங்கப்பதக்கம்)
என்று திரையிசைப் பாடலில் கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்.

இதையே வள்ளுவப் பெருந்தகை,
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”………………………………………………………………………………..(குறள் – 45)
என்று வலியுறுத்துகிறார்.  இதற்கு மாறாக நடந்தால் குடும்பம் என்பது இன்பத்திலிருந்து மருவி கொடுந்துன்பமாக மாறிவிடும் என்கிறார்.

மழலைச் செல்வம்:
“குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்”…………………………………………………………………….(குறள் – 66)
தம் குழந்தைகளின் மழலைச் சொல் பெற்றோர்க்கு குழல், யாழ் இரண்டின் இசையை விட மிகுந்த இன்பம் பயப்பதாகும்.  குழந்தைப் பேற்றால் மகிழ்ந்தோர் தன் மனம் மகிழுமாறெல்லாம் உருவகப்படுத்தி மகிழ்வர், அவ்வாறே கவிஞரும் மகிழ்கிறார்.

கவிஞன் என்பவன் வெள்ளை உள்ளமும் உயரிய பண்புகளும் கொண்டவனாவான்.  மக்களின் கண்களுக்கு தெரிகின்ற பொருள்கள் கவிஞரின் கண்களுக்குப் பாடுபொருளாக மாறி, கண்களுக்குத் தனிப்பட்ட உணர்ச்சியைத் தூண்டிக் கவிபாட வைக்கும்.
“மீட்டாத வீணை இது வீசிவரும் தென்றல்
வாடாத முல்லை இது பாடிவரும் தேனீ
தெவிட்டாத இனிமை இது திகட்டாத புதுமை
பளிங்கான பதுமை இது பழகாத இளமை”.……………………………. (தென்றல் வீசும்)
எனக் கவிஞர் பெண் குழந்தையை உருவகித்துள்ள திறம் புலப்படுகிறது.

“முத்தான முத்தல்லவோ
முதிர்ந்து வந்து முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ
கடவுள் தந்த பொருளல்லவோ!” ………………………………………..(நெஞ்சில் ஓர் ஆலயம்)
எனவும் குறிப்பிடுகிறார்.  கவிஞருக்கு தாய்மை என்ற உணர்வில், தாலாட்டு என்ற முத்துப் பிறக்கின்றது.
கவியரசரின் நல்ல சொல்லாட்சியோடு தகுந்த வடிவில் கற்பனை மிளிர்ந்திடப் பிறந்தமையால் இன்றும் அவர் படைப்புகள் புகழ் பூத்துத் திகழ்கின்றன.

கவியரசர் கண்ணதாசன் ஒரு மாபெரும் கவிஞன்.  பண்டிதத் தமிழைப் பாமரர்களுக்கும் சாசனம் செய்தவர்.  தற்போது நாம் வாழும் காலத்தில் கம்பனுக்கு அடுத்தபடியாக கவியரசர் கண்ணதாசன் போன்று மக்கள் மனதை ஈர்த்த கவிஞர் பூவுலகில் நாம் கண்டதில்லை.  எமக்குத் தொழில் கவிதையென்று பாடிய பாரதிபோல்
“இசைப்பாடலிலே என் உயிர்துடிப்பு, நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு”
என்று கவியரசர் கண்ணதாசன் தன்னைப்பற்றிக் கூறியுள்ளார்.  கண்ணதாசனின் உயிர் துடிப்பையும், அவர் கவிதை அழகின் சிரிப்பையும் நாள்தோறும் தமிழ் கூறும் நல்லுலகெங்கும், பட்டித் தொட்டிகளில், கற்றவர் கல்லாதவர் பேதமின்றி அவர் பாடலை கேட்டு மயங்குவதில் இருந்தே நாம் தெரிந்துக்கொள்ளலாம்.

(தொடரும் …)

படம் உதவி நக்கீரன் இணையதளம்: http://www.nakkheeran.in/users/frmGallery.aspx?G=41226&GS=4&GV=1972

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *