விளைநிலம்
-சீர்காழி உ செல்வராஜு
ஆழ்மனமெனும் நிலத்தினிலே – நல்
எண்ணமெனும் விதைவிதைப்பின்
நறுமணக்கும் தூரமெங்கும்
நன்மை செய்தே பெயரெடுக்கும்!
அரைகுறையாய் மேலோட்ட
அறிவாற்றல் அடித்துச் செல்லும்
உவர்ப்பு நிலம்போல் பயனற்று
உழைத்த பலனை கெடுத்துவிடும்!
செயல்களை உரங்கள்போலச்
செவ்வனே இட்டு வந்தால்
செழிப்பாய்க் கனிதந்து
செந்தமிழ்போல் இனித்திடுமே!
சுயமான சிந்தனையும்
சுயமான முயற்சியுமே
நன்மை தரும் விளைநிலம்போல்
நற்பண்புகளாய் மகசூல் தரும்!
நல்லதொரு சூழலிலே
நம்குழந்தைகளை வளர்த்து வந்தால்
நல்ல குடிமக்களாக
நானிலத்தில் விளங்கிடுவர்!