Blog

  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 78

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 78

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள்

    78. படைச் செருக்கு

    குறள் 771:

    என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
    முன்னின்று கல்நின் றவர்

    போர்க்களத்துல ஒரு வீரன் சொல்லுதான். எங்க தலைவர எதித்து நில்லாதீக. நின்னவனெல்லாம் செத்து இப்பம் நடுகல்லா நட்டமா நிக்கான்.

    குறள் 772:

    கான முயலெய்த அம்பினில் யானை
    பிழைத்தவேல் ஏந்தல் இனிது

    காட்டுல ஓடுத முயல் மேல குறி தப்பாம எய்து கொன்ன அம்ப கையில வைக்கதவிட, வெட்ட வெளில நிக்க யான மேல குறி தப்பி வீசின வேலக் கையில பிடிக்கது ஒசந்தது.

    குறள் 773:

    பேராண்மை என்ப தறுகனொன் றுற்றக்கால்
    ஊராண்மை மற்றதன் எஃகு

    பகையாளிக்கு பயப்படாம இருக்க வீரத்த ஆண்மை ங்குதோம். அந்தப் பகையாளிக்கு துன்பம் வருதப்போ ஒதவுதத ஆண்மையின் உச்சம் ங்குதோம்.

    குறள் 774:

    கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
    மெய்வேல் பறியா நகும்

    போர்க்களத்துல கையில வச்சிருந்த வேலை யானை மேல எறிஞ்சு தொரத்தி உட்டுப்போட்டு இன்னொரு வேலத் தேடிக்கிட்டு வாரவன், தன் நெஞ்சுமேல பாஞ்ச வேலப் பாத்து சந்தோசப்பட்டு அதப் புடுங்கி சண்டபோடுவான்.

    குறள் 775:

    விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
    ஓட்டன்றோ வன்க ணவர்க்கு

    எதிருல இருக்க பகையாளிய கோவமா பாத்துக்கிட்டிருக்குத கண்ணு அவன் வேல எறிஞ்ச சமயம் இமைச்சிதுனா அது தோத்துப் போகல்ல செய்யும்.

    குறள் 776:

    விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
    வைக்குந்தன் நாளை எடுத்து

    ஒரு வீரன் தான் வாழ்ந்த நாளக் கணக்குபோட்டுப் பாத்து, போரால தன் ஒடம்புல தழும்பு விழாத நாளயெல்லாம் வீணான நாள்னு வெறுத்து ஒதுக்கிப்போடுவான்.

    குறள் 777:

    சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
    கழல்யாப்புக் காரிகை நீர்த்து

    உசிரப்பத்திக் கவலப்படாம தன்னயச் சுத்தி பரவி இருக்க புகழ மட்டுமே விரும்புத வீரன் காலுல கட்டுத வீரக்கழல் தனி பெரும கொண்டது.

    குறள் 778:

    உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன்
    செறினுஞ்சீர் குன்றல் இலர்

    போர்க்களத்துல உசிரப்பத்தி கவலப்படாம சண்டபோடுத வீர மறவன், ராசா கோவப்பட்டு வேண்டாம்னு தடுத்தாலும் தன் வீரத்துல கொறைய மாட்டான்.

    குறள் 779:

    இழைத்த திகவாமைச் சாவாரை யாரே
    பிழைத்த தொறுக்கிற் பவர்

    சபதம் செஞ்சதுக்குத் தக்கன போர்ல சாவுததுக்கு துணிஞ்ச வீரன யாராச்சும் எளக்காரமா பேச முடியுமா?

    குறள் 780:

    புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்கா
    டிரந்துகோட் டக்க துடைத்து

    தன்னய நல்ல மொறையில பாத்துக்கிட்ட தலைவன் தனக்காக கண்ணீர் உடுததுகணக்கா சாவு வந்துச்சின்னா அந்தச் சாவுத வாய்ப்பு கேட்டுப்பெறுத அளவுக்கு சிறப்பானது.

    (அடுத்தாப்லையும் வரும்…) 

    Share
  • குறளின் கதிர்களாய்…(275)

    செண்பக ஜெகதீசன்

    நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்  யாதொன்றும் கண்பா டரிது
    -திருக்குறள் -1049 (நல்குரவு)

    புதுக் கவிதையில்…

    அனைத்தையும் எரித்துவிடும்
    அணைக்கவியலா நெருப்பினிலும்,
    அதற்கான மருந்து மந்திரங்கள்
    துணையுடன்
    அமைதியாய்த் தூங்கிடலாம்..
    வாழ்வில்
    வறுமை வந்தக்கால்,
    வழியே இல்லை
    மன அமைதியுடன்
    உறங்கிடவே…!

    —————————————————————————-

    குறும்பாவில்…

    எரியும் நெருப்பிலும்
    ஏதோ வகையில் தூங்கமுடிந்தாலும்,
    முடியாது வறுமையில்…!

    —————————————————————————-

    மரபுக் கவிதையில்…

    எல்லாம் எரிக்கும் நெருப்பதுதான்
    எரிந்திடும் போதே அதன்மேலே
    வல்லமை மிக்கோர் மருந்துமாய
    வழியது கொண்டே தூங்கிடலாம்,
    எல்லாம் இழந்து வாழ்வினிலே
    எதுவு மில்லா வறுமைவந்தால்,
    சொல்ல முடியாச் சோதனையாய்ச்
    சொற்பமும் தூங்க முடியாதே…!

    —————————————————————————-

    லிமரைக்கூ…

    நெருப்பினிலும் தூக்கமது வரும்,
    நடைமுறை வாழ்வில் வரும் வறுமை
    தூக்கமிலாத் துன்பமே தரும்…!
    —————————————————————————-

    கிராமிய பாணியில்…

    கொடியது கொடியது
    வறும கொடியது,
    வாட்டி வதைக்கும்
    வறும கொடியது..
    எரியிற நெருப்புல படுத்தாலும்
    எப்புடியாவது தூக்கம் வந்து
    எடஞ்சலு இல்லாமத் தூங்கிடலாம்,
    கேடுகெட்ட வறும வந்தா
    வாழ்க்கயில
    கொஞ்சங்கூடத் தூக்கம் வராதே..
    தெரிஞ்சிக்கோ
    கொடியது கொடியது
    வறும கொடியது,
    வாட்டி வதைக்கும்
    வறும கொடியது…!

    (தொடரும்…………

    Share
  • வெனிஸ் நகருக்குள் கடல் புகுந்தது

    வெனிஸ் நகருக்குள் கடல் புகுந்தது

    சி. ஜெயபாரதன், கனடா
    கடல் புகு வெனிஸ் நகரில் கடல் அலை உயர்ந்து முடக்கமானது.
     
    [Venis Lagoon City Flooded in Italy]
    Venice the Lagoon City of Italy
    [November 14, 2019]
     
    +++++++++++++++
     
     
     
    ++++++++++++++++
    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. Canada
    +++++++++++++++++++++
    Map of Venetian Lagoon, Metropolitan City of Venice, Italy
    Low Level Lagoon City Venice in Italy
    ++++++++++++++++++++
     
    ++++++++++++++++++++++
    கடல் நுழைந்த தாழ்தரை நகரம் வெனிஸ்
    [Lagoon City Venice]
     
    +++++++++++++++++
    கடல் புகு தாழ்தரை வெனிஸ் நகரம் கடல் அலை உயர்ந்து முடங்கியது.
    50 ஆண்டுகட்குப் பிறகு கடல் மட்டம் உயர்ந்து வெனிஸ் நகர மக்கள் நவம்பர் 14, 2019 இல் மீண்டும்  பெருந்துயர் உற்றார்.  சுற்றுலா சென்ற உலக மாந்தரும் துயர் உற்றார்.  தொல்லை அடைந்தார்.  இத்தாலிய அரசாங்கம் அபாய நிலையை அறிவித்து, 20 மில்லியன் ஈரோ [21.7 மில்லியன் டாலர்] நிதி ஒதுக்கி உதவி செய்ய முற்பட்டது.  நீர் மட்ட அளவு, கடல் மட்டத்துக்கு 1.87 மீட்டர் [6 அடி] மேல் உயர்ந்து, 1966 வெள்ளத்துக்குச் [1.94 மீட்டர்(6 அடி 4 அங்குலம் )] சற்று குறைந்து, வெனிஸ் நகரின் மக்கள் நடமாட்டத்துக்கும், நகர் இயக்க நிறுவகங்களுக்கும் பெரு முடக்கம் நேர்ந்தது.  கடந்த 1200 ஆண்டுகளில், இந்த கடல்நீர் ஏற்றம் ஆறாவது தடவையாகக் கருதப்படுகிறது.  மின்சார விநியோகம் தடைப்பட்டது. நகரின் 70% பரப்பளவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.  வெனிஸின் ஜனத்தொகை : 53,000.  குளிர் காலத்தில் கடல் அலை உயரம் 1.4 மீட்டர் [4.5 அடி] எழுகிறது.
     
    பேரளவு கடல் வெள்ளம் வெனிஸ் நகருக்குள் நவம்பர் 13, 2019 இல்  புகுந்திடக் காரணங்கள் என்ன ?
    1. முழுநிலவு தோன்றி, உச்ச அலை மிகுந்து, தென்திசைக் காற்றின் வேகம் பெருகியது.
    2. பூகோளச் சூடேற்றக் காரணத்தால், கடல்நீர் மட்டம் உயர்வது, உயர்ந்து வருவது.  கடல்நீர் உஷ்ணம் ஏறுவது.
    3.  மோசஸ் பாதுகாப்புக் கடல் சுவர்கள் [MOSES PROJECT] கட்டத் தாமதமானது.  மோசஸ் தடுப்புச் சுவர்கள் 2021ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
    4. கடல் மட்டம் தொடர்ந்து ஏறி வருகிறது.  வெனிஸ் நகரின் ஒரு பகுதி கடலுக்குள் மூழ்கி [Sinking] வருகிறது.
    5.  கடல் அடித்தட்டு நகர்ச்சியால் [Shifting Tectonic Plates] வெனிஸ் கடற்கரை மெதுவாகத் தாழ்ந்து போய், கடல் வெள்ளம் மிகுதி யாய் நகருக்குள் நுழைகிறது.
    6. வெனிஸ் நகரத்தில் கடல் அலை உயர்ச்சி வெள்ளம்  [High Tide Flooding ] ஆண்டுக்கு நான்கு தடவை வருகிறது.
    +++++++++++++
    யுகப்போர் 
    ஆகாவென் றெழுந்தது  யுகப்போர் !   
    பூகோளம்  சூடேறும் !   
    பேரளவு வெள்ளம் ஓடும் ! 
    பேய்மழைப் பூதம்
    வாய் பிளக்கும் !
    கடல் உயரம் எழும் !
    கடல் உஷ்ணம் ஏறும் ! 
    வீடுகள் மூழ்கின !
    வீதிகள் நதியாயின !
    பாதைகள் மறைந்தன !
    பாலங்கள் முறிந்தன !
    நாடு, நகரம், வீடு யாவும் 
    ஓடும்  ஆற்றில் 
    ஓடங்கள் ஆயின !
    சீர்வளச் செல்வம் யாவும்
    நீரோட்  டத்தால்
    பாழ்பட்டுப் போயின !
    இயற்கையும் மனித 
    செயற்கையும்  சேர்ந்து  அழித்தன !
    பெரு நிதி வேண்டும் 
    திரும்பிப் பெற.
    மனிதர்
    விழித்துக் கொண்டார் !
    யுகப் போரை
    தகர்க்க 
    ஒன்று சேர்ந்தார் !  மனத்தில்
    உறுதி கொண்டார்.
    +++++++++++++++
    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    கேரளாவிலே அசுரப் பேய்மழை

    image.png
    image.png
     
    image.png
     
    image.png
    a flooded school
    people on a Kerala rooftop waiting to be rescued
    ++++++++++++++++++++++++++++++
    ++++++++++++++++++
    Share
  • புலமைக் காய்ச்சலும் பாய்ச்சலும்

    புலமைக் காய்ச்சலும் பாய்ச்சலும்

    கௌசி, ஜெர்மனி

    உலகத்தில் போட்டி இல்லாத வாழ்க்கை எங்குமே இல்லை. உணவுக்காக மிருகங்கள் போட்டி போட்டுக் கொள்ளுகின்றன. புகழுக்காகவும் பெருமைக்காகவும் மனிதர்கள் போட்டி போட்டுக் கொள்ளுகின்றார்கள். போட்டி என்பது ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அது பொறாமையாக மாறும் போது மனங்களுக்கிடையில் பிரிவுகளை ஏற்படுத்துகின்றது. அறிவும், ஆய்வுகளும் மனங்களின் வேற்றுமைகளை மாற்றிவிடும். காலம் ஒரு நாள் மாற்றும் என்பது கோட்பாடு. ஆனால் இக்கலைஞர்கள், எழுத்தாளர்கள் மத்தியில் மட்டும் இக்கோட்பாடு பிழைக்கின்றதே! புகழுக்காகப் போட்டியும் பொறாமையும், வித்துவச் செருக்கினால் போட்டி, அன்று பொன்னுக்கும் பொருளுக்கும் பொய்யுரைத்தல் என்று இலக்கிய உலகம் எழுத்தாளர்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறதே.

    எழுத்தாளர்களிடம் போட்டி என்பது இன்று நேற்று வந்ததல்ல. அன்றும் இருந்திருக்கின்றது. அக்காலத்திலும் புலவர்களிடையே போட்டியும் பொறாமையும் இழையோடிக் காணப்பட்டன. ஒளவையும் கம்பரும், ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும் ஒருவருக்கொருவர் போட்டியாக வாழ்ந்துள்ளார்கள். திறமைகள் போட்டியிடுவது ஆரோக்கியம். ஆனால், திறமையுடன் போட்டியிட தயக்கம் தேவையல்லவா! சங்ககாலத்திலே வாழ்ந்த சீத்தலைச் சாத்தனார் என்னும் ஒரு புலவர் தான் எழுதும் பாடல்களிலே அல்லது பிறருடைய பாடல்களிலே குற்றங்களைக் கண்டுவிட்டால் தன்னுடைய எழுத்தாணியால் தன்னுடைய தலையில் குத்திக் கொள்ளுவாராம். இதனால், தலையில் ஆங்காங்கே சீழ் பிடித்திருக்கும். சீழ்தலை சாத்தனார் என்பது மருவி சீத்தலை சாத்தனார் என்று அவர் பெயர் வழங்கப்பட்டது. பிறர் தவறுகளைச் சுட்டிக்காட்டும் போது அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அல்லது சொல்ல முடியாத இடத்தில் நமக்கு நாமே தலையில் அடித்து என்ன கருமம்டா என்று சொல்வோமே அதுபோலவேதான் சீத்தலைச் சாத்தனார், எழுத்தாணியால் தன்னுடைய தலையில் குத்தித் தமிழிலில் காணும் தவறுக்குத் தனக்குத் தண்டனை கொடுக்கின்றார். இங்கு தவறு விடுபவர்கள் குற்றத்தால் கூனிக்குறுகிப் போகின்றனர்.

    கம்பரும் ஒளவையும் சிறந்த போட்டியாளர்கள். ஒருமுறை ஒளவையார் குலோத்துங்க சோழன் அவைக்குச் செல்கின்றார். அவர் தமிழ் கேட்க ஆசை கொண்ட அரசன் அவரை பாராட்டி உபசரித்தான். இதைப் பொறுக்காத கம்பரும் தற்காலத்திலே அவரை மட்டும் ஏன் புகழ்கின்றார்கள். அவரிடம் என்ன இருக்கின்றது அவரை விட நாம் எவ்வளவு மேலானவர்கள் என்று புளுங்குபவர்களைப் போலவே கம்பரும் ‘நான் சொல்லுகின்ற ஒரு அடியிலே உள்ள பொருள் என்னவென்று கண்டு ஒரு பாடல் பாடவேண்டும்‘‘ என்று ஒளவையாரிடம் கேட்கின்றார். குலோத்துங்கன் சோழத்து ஆஸ்தான கவி அல்லவா கம்பர். ஒளவையும் அவர் வேண்டுகோளுக்குச் சம்மதிக்க

    ‘ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ‘‘

    என்று வரி கொடுத்தார். அதாவது ஒரு தண்டிலே 4 இலைகள் கொண்டுள்ள ஆரைக்கீரையைப் பொருளாகக் கொண்டு பாடினார். அடீ என்ற வார்த்தை ஒளவையை நாகரிகம் அற்ற முறையில் விளிப்பதாக ஒளவைக்குப் படுகின்றது. அந்தளவில் பொறாமை கம்பர் மனதுக்குள் இருந்தது. உடனே ஆத்திரம் கொண்ட ஒளவையும்

    ‘எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
    மட்டிற் பெரியம்மை வாகனமே முட்டமேற்
    கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
    ஆரையடா சொன்னா யடா’

    என்று பாடினார். எட்டு என்றால் தமிழ் எண் அ வைக் குறிக்கும். கால் (1/4) என்பது தமிழ் எண் வ என்று குறிக்கும். என்வே எட்டேகால் இலட்சணமே என்றால், அவலட்சணமே.

    எமனேறும் பரி எருமை என்பது யாவரும் அறிந்ததே

    பெரியம்மை என்பது மூதேவி. அவரின் வாகனம் கழுதை

    கூரையில்லா வீடு குட்டிச்சுவராகும்.

    இராமனின் தூதுவன் குரங்கு

    ஆரையடா சொன்னாயடா என்றால் ஆரைக்கீரையை நீ சொல்லியிருக்கின்றாய் என்று பாடினார். கம்பரும் வெட்கித்துப் போகின்றார். இதைக் கம்பருக்குச் சுடும் வண்ணம் சிலேடையாக தன்னை அடீ என்றாய் யாரையடா நீ என்று பாடி முடித்தார்.

    அவலட்சணமே, எருமையே, மூதேவியே, குட்டிச்சுவரே, குரங்கே ஆரைக்கீரையை நீ சொல்லியிருக்கின்றாய் என்று அவர் பாடிய ஒருவரிப் பாடலின் பொருளை அறிந்து உடனே பாடினார்.(ஒளவையார் தனிப்பாடல்கள் – புலியூர்க்கேசிகன்)

    குட்டு வாங்கினாலும், மோதிரக் கையால் வாங்க வேண்டும் என்னும் பழமொழி சொல்வார்கள். இங்கு போட்டி கூட ஆரோக்கியமாகவே பட்டது. கம்பருக்குச் சுட்டது. தமிழார்வலர்களுக்கு இனித்தது. இவ்வாறு போட்டி போடவும் தகுதி வேண்டுமல்லவா?

    தரமான படைப்பாளிக்குத் தலைக்கனம் இருப்பது இயற்கை. ஆனால், இது தவறு என்று வாதிடுவோரும் உண்டு. இங்கு இருவரைப் பார்ப்போம். ஒருவர் கம்பர் தலையில் கனம் மிக்கவர். மற்றையவர் கம்பர் காலத்து ஒளவையார். கூழுக்குப் பாடி என்று கம்பரால் அழைக்கப்படுபவர். ஒரு சமயம் சிலம்பி என்னும் ஒரு விலைமகள் கம்பனிடம் ஒரு கவி புனைந்து தரும்படிக் கேட்டாளாம். ஆயிரம் பொன் தந்தால் கவி கிடைக்கும் என்று கம்பர் கூறினார். என்னிடம் ஆயிரம் பொன் இல்லை ஐந்நூறு பொன்னே உள்ளன என்று சிலம்பி கூறியிருக்கின்றாள். இப்பொன்னைப் பெற்றுக் கொண்ட கம்பர்

    தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே
    மண்ணாவ துஞ்சோழ மண்டலமே

    என ஒரு வெண்பாவை அரைவாசியாகப் பாடிவிட்டு ஐந்நூறுக்கு இது சரியாகிவிட்டது என்று அவ்வெண்பாவை முடிக்காமல் சென்றுவிட்டார். இப்பரத்தை அப்பாடலைக் கொண்டு அடுத்தநாள் ஒளவையாரை கண்டபோது இப்பாடலை முடித்துத் தாருங்கள் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டாள். ஒளவையும்

    தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே
    மண்ணாவ துஞ்சோழ மண்டலமே பெண்ணாவாள்.
    அம்பொற் சிலம்பி யரவிந்தத் தாளணியும்
    செம்பொற் சிலம்பே சிலம்பு. (ஒளவையார் தனிப்பாடல்கள் – புலியூர்க்கேசிகன்)

    எனப் பாடி முடித்துப் பழங்கஞ்சி வாங்கிக் குடித்துவிட்டுச் சென்றாராம். இங்கு கம்பர் பணத்தையே குறிக்கோளாகக் கொண்டு அச்சிலம்பியை உதாசீனப்படுத்தினார். ஒரு பெண்ணின் ஆசையை பெரிதாகக் கருதிய ஒளவையார் கம்பருக்குப் போட்டியாக அவள் ஆசையைத் தீர்த்து வைத்தார். இச்சம்பவம் நம் மத்தியில் நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. கவிச்சக்கரவர்த்திக்குத் தலைக்கனம் வருவது இயற்கையானால், தற்போது தகுதியற்றோருக்குக் கூடத் தலைக்கனம் வருவதை நாம் கண்கூடாகக் காணக்கூடியதாக இருக்கின்றது.

    ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும், குலோத்துங்க சோழ மன்னனும் தனித்தனிப் பல்லக்கில் வீதி உலா வந்து கொண்டிருந்தார்கள். முன்னால் ஒட்டக்கூத்தர் வருகின்றார். நடுவில் மன்னனும், பின்னால் புகழேந்திப்புலவரும் பல்லக்கில் வருகின்றார்கள். இச்சமயம் ஒளவையார் அவர்கள் வரும் வழியிலுள்ள ஒரு திண்ணையில் இரு கால்களையும் நீட்டிக் கொண்டு அமர்ந்திருக்கின்றார். பல்லக்குகளைக் கண்ட ஒளவையார் முதலில் ஒட்டக்கூத்தர் வரும்போது இரண்டு கால்களையும் நீட்டியபடி அமர்ந்திருக்கின்றார். மன்னன் பல்லக்கு வரும்போது ஒரு காலை மடக்குகின்றார். புகழேந்திப் புலவர் வரும்போது இரண்டு கால்களையும் மடக்குகின்றார். மன்னன் ஒளவையாரிடம் ஏன் இப்படி ஒட்டக்கூத்தரை அவமானம் செய்தீர்கள் என்று கேட்க, மரியாதை செய்யும் அளவிற்கு ஒட்டக்கூத்தர் ஒன்றும் அறிவாளியில்லை என்று கூற, மன்னனும் நிரூபித்துக் காட்டும்படிக் கேட்கின்றார்ர். அதற்கு ஒளவையும் 3 முறை மதி வரும்படி பாடல் பாடவேண்டும் என்று கேட்கின்றார். அதற்கு

    ஒட்டக்கூத்தரும்

    ‘வெள்ளத்து அடங்காச் சின வாளை
    வேலிக் கமுகின் மீதேறி
    துள்ளி முகிலைக் கிழித்து மழை
    துளியோடு இறங்கும் சோணாடா!
    கள்ளக் குறும்பர் குலம் அறுத்த
    கண்டா! அண்டர் கோபாலா!
    பிள்ளை மதி கண்ட எம்பேதை
    பெரிய மதியும் இழந்தாளே‘‘

    அதாவது வெள்ளத்துக்கு அடங்காத வாளைமீன்கள் துள்ளி மேலெழுந்து கமுகு மரத்தின் மேலேறி, அங்கிருந்து துள்ளி முகிலேக் கிழித்து அந்த மேகம் பொழியும் மழையுடன் மீண்டும் பூமிக்கு வரும் நாட்டையுடைய சோழ மன்னனே! பகைவர் கூட்டத்தை அழிக்கும் வாளுக்குரியவனே என்று பாட

    “ஒட்டா ஒரு மதி கெட்டாய் என்று அவரின் பாடலில் ஒரு மதி இழந்திருப்பதைச் சுட்டிக் காட்டி அவருடைய ஆணவத்தை அடக்கினாள். ஆனால், புகழேந்தியோ

    ‘பங்கப் பழனத்து உழும் உழவர்
    பலவின் கனியைப் பறித்தொன்று
    சங்கிட்டு எறியக் குரங் கிளநீர்
    தனைக் கொண்டு எறியும் தமிழ்நாடா
    கொங்கார்க் கமரர் பதியளித்த
    கோவே! ராஜ குல திலகா!
    வெங்கட் பிறைக்கும் கரும் பிறைக்கும்
    மெலிந்த பிறைக்கும் விழி வேலே!

    என்று பாடினார். குரங்குகள் பலாக்கனியை உண்கின்றன என்று வயலிலே உழுகின்ற உழவர்கள் சங்குகளை எடுத்து குரங்குகளை நோக்கி எறிய குரங்குகளும் இளநீர்க்காய்களை பறித்தெறியும் தமிழ்நாட்டவனே! கொங்கு நாட்டு மன்னனை வென்று தேவலோகம் செல்ல வைத்த இராஜகுல திலகா! வெண்மையான பிறைச்சந்திரன் ஒளியாலும், கரும்பை வில்லாகக் கொண்ட மன்மதன் அம்பினாலும் உடல் தளிர்ச்சியுற்று வேல் போன்ற கண்களையுடைய இப்பெண் கண்ணீர் சிந்துகின்றாள் என்று 3 மதியும் வரும் வண்ணம் பாடலைப் பாடி ஒளவையார் புகழைப் பெற்றார். அக்காலத்தில் புலவர்கள் பிறர் தவறுகளைச் சுட்டிக்காட்டி ஆணவத்தை அடக்கிய செயல்கள் இப்பாடலின் மூலம் புலப்படுகின்றது.

    பொன்னையும் பொருளையும் மன்னர்கள் அள்ளி வழங்குவதற்காக, அவர்கள் புகழை மிகைப்படுத்திப் புலவர்கள் பாடியிருப்பது யாவரும் அறிந்ததே. இந்நிகழ்வு இன்று மட்டுமல்ல அன்றும் பணத்துக்காக தம் பெருமைகளை நிலைநாட்டிக் கொண்ட புலவர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள்.

    ஒரு இடத்தில் இரட்டையர்கள் பாடுகின்றார்கள்

    குன்றுங் குழியுங் குறுகி வழிநடந்து
    சென்று திரிவதென்றுந் தீராதோ – ஒன்றுங்
    கொடாதானைக் கோவென்றுங் காவென்றுங் கூறின்
    இடாதோ நமக்கிவ் விடர்.

    பரிசில்கள் யாதொன்றும் வழங்காத மன்னனை யாம் புகழ்ந்து பாடியதனாலேயே இவ்வாறான நிலைமை எமக்கு ஏற்பட்டது என்று பாடினார்கள். இவ்வாறே ஒளவையாரும் ஒரு இடத்தில்

    ‘கல்லாத ஒருவனையான் கற்றாய் என்றேன்
    காடேறித் திரிவானை நாடா என்றேன்
    பொல்லாத ஒருவனையான் நல்லாய் என்றேன்
    போர்முகத்துக் கோழையையான் புலியே றென்றேன்
    மல்லாரும் புயமென்றேன் தேம்பற் றோளை
    வழங்காத கையணையான் வள்ளல் என்றேன்
    இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றான்
    யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே!

    என்று பாடியுள்ளார். இவ்வாறு பரிசில்கள் பெறுவதற்காக மன்னர்களைப் பலவாறாகப் புகழ்ந்து பாடிப் பொன்னையும் பொருளையும் பெற்றுக் கொண்டு சென்ற புலவர்கள் பாடிய பாடல்கள் அக்காலச் சூழலை எடுத்துக் காட்டும் கண்ணாடி என எப்படி நாம் எடுத்துரைப்பது. இக்காலத்திலும் தமது புகழுக்காக தகுதியற்றோரைப் புகழும் வழக்கம் இருக்கின்றது அல்லவா?

    இக்காலத்திலும் எழுத்தாளர்களிடையே போட்டியும் பொறாமையும், எழுத்துக்களிடையே காணப்படும் தவறுகளைச் சுட்டிக் காட்டமாட்டாமல் புகழ்வதும், தமிழின் இலக்கண மரபுகளுக்கு பங்கம் ஏற்படும் எழுத்துக்களைக் கண்டுகொள்ளாமல் தமிழாராய்வாளர் வாய் மூடியிருப்பதுவும் தமது பாராட்டுக்களுக்கும், புகழுக்கும் பங்கம் வந்துவிடும் என்னும் சுயநலமே ஆகும். இச்செயலும் அக்காலப் புலவர்கள் பொன்னுக்கும் பொருளுக்கும் தூற்றிப் பாட வேண்டிய இடங்களில் போற்றிப் பாடிய செயலுக்கு ஒப்பாக அமைகின்றன. தவறுகளைச் சுட்டிக்காட்டும் தைரியம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். அப்போதுதான் எழுத்துக்களில் தூய்மையைக் கொண்டுவர முடியும். இதற்குப் பொறாமை என்ற அர்த்தமில்லை. செயலிலே நல்ல உணர்வுகள் விதைக்கப்படும். சுட்டிக்காட்டும் தவறுகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் மக்களிடம் ஏற்பட வேண்டும். மெய்மைக்கு இடமளிக்க நாமும் மெய்யாய் வாழவேண்டும். போட்டியும் ஆரோக்கியமாக அமைய வேண்டும்.

    Share
  • அந்தரம்

    அந்தரம்

    பாஸ்கர் சேஷாத்ரி
     
    ஒவ்வொரு முறை காற்றடிக்கையில் ஒரு துடிப்பு .
    இப்போது எதிர்த் திசையில்
    படபடப்பு அதிகம் ..
    ஒவ்வொரு தாக்குக்கும் ஓர் எதிர்மறை சப்தம் .
    எத்தனை நாள் சிறைப்பிடிப்பு ?
    விடுதலை வேட்கை என்ன பெரிய சுகம்?
    ஆதாரம் ஏதுமில்லை -அவஸ்தைகள் அந்தரத்தில் .
    யாருடைய கனவோ ஆகாசம் நோக்கி .
    ஆனாலும் இம்முறை காற்றால் விடுதலை .
    மெல்ல தவழ்ந்து , தவழ்ந்து .. என்ன சுதந்திரம் .
    ஆனாலும் துக்கம் என் மனத்தின் ஓரத்தில் .
    இலக்கிலா வாழ்வு பரம சுகம்
    நானும் நூல் அறுந்த காற்றாடியாய் அலைகிறேன் …
    Share
  • டுண்டிடு  டுண்டிடு  (சிறுவர் பாடல்)

    டுண்டிடு  டுண்டிடு  (சிறுவர் பாடல்)

    அண்ணாகண்ணன்
     
    டுண்டிடு டுண்டிடு டுண்டிடு டுண்டிடு
     
    கண்டிடு கண்டிடு கண்டிடு கண்டிடு
    கொண்டிடு கொண்டிடு கொண்டிடு கொண்டிடு
    விண்டிடு விண்டிடு விண்டிடு விண்டிடு
    உண்டிடு உண்டிடு உண்டிடு உண்டிடு
     
    ஒன்றிடு ஒன்றிடு ஒன்றிடு ஒன்றிடு
    நின்றிடு நின்றிடு நின்றிடு நின்றிடு
    சென்றிடு சென்றிடு சென்றிடு சென்றிடு
    வென்றிடு வென்றிடு வென்றிடு வென்றிடு
     
    முன்னெடு முன்னெடு முன்னெடு முன்னெடு
    பண்ணிடு பண்ணிடு பண்ணிடு பண்ணிடு
    மின்னிடு மின்னிடு மின்னிடு மின்னிடு
    பின்னிடு பின்னிடு பின்னிடு பின்னிடு
    Share
  • எழுத்து -12

    எழுத்து -12

    வேதா இலங்காதிலகம், டென்மார்க்

    குகையுள் தவழ்ந்து தேடுதல் போலவும்
    தொகையான கூழாங்கற்கள் பதமாக நதியால்
    சிகை தழுவுதலாகவும் அறிவு பதமாகிறது.
    பகையின்றி எழுத்து அறிவு புடமாகிறது (தூய்மை)
    கீழடி எழுத்து தமிழ் எழுத்தா!
    கேளடி என்று பல கேள்விகள்
    தாழடியாக இதற்கு வாய்ப்பு இல்லை
    மேலடி தான் இதன் முடிவாகும்.

    கிறிஸ்துவிற்கு முன் ஆறாம் நூற்றாண்டில்
    கிரமமான எழுத்தறிவு பெற்றனராம் மக்கள்.
    கீழடி ஆய்வு இதை நிரூபிக்கிறதாம்.
    கிரியாஊக்கி தானே இது தமிழனுக்கு!
    விரிந்த பிரபஞ்சத்தின் ஆதி எழுத்து
    விகசிக்கும் தமிழ் என்பது மகுடமேற்றும்
    வியந்திடும் பண்பேற்றும் நிலை தானே!
    விலாசமிகு தமிழ் விசுவரூபமாய் உயரட்டும்!

    பாலும் பலாப் பழமும் பாகும் தேனும்
    மேலும் கலந்த நீதியெழுத்துகளை ஒளவை
    உலகிற்கு, சிறுவருக்கும் அள்ளித் தெளித்த
    புலவர் பெண்ணான பிறவி அறிவாளர்.
    மெய்யுலகைக் கட்டி எழுப்பிய அறிவம்மை
    மதிப்புடைய அமைதிப் பெயர் ஒளவை
    மனப்பாடம் பண்ணிய நீதியெழுத்தின் தலைவி
    தனம் அவர் தடுமாறா எழுத்துகள்.

    Share
  • மாறுமோ இந்த நிலை?

    சக்தி சக்திதாசன்

    வருமாவராதா? வருமாவராதா? எனும் கேள்வி இங்கிலாந்து மக்கள் அனைவரின் மனங்களிலும் இழையோடிக்கொண்டிருந்ததுஅக்கேள்வியின் விடை பீரிட்டுக்கொண்டு வெளிவந்துவிட்டது.

    எதை நான் சொல்ல வருகிறேன் என்று எண்ணுகிறீர்களாகடந்த மூன்றரை வருடங்களாக இங்கிலாந்து அரசியல் களத்தில் நர்த்தனமாடிக் கொண்டிருந்த பிரெக்ஸிட்” எனும் பூதாகரமான பிரச்சனையின் தீர்வு ஒரு பொதுத்தேர்தலினால்தான் தீர்க்கப்பட முடியும் எனும் நிலையை எட்டிய பின்பு அந்தப் பொதுத்தேர்தல் வருமாவராதாஎனும் கேள்வியே ஊசலாடிக் கொண்டிருந்தது.

    புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட போரிஸ் ஜான்சன், இந்த பிரெக்ஸிட் எனும் பிரச்சனையை அக்டோபர் மாதம் 31ஆம் திகதி முடித்து விடுவேன் என்று சூளுரைத்தே பதவியேற்றார்ஆனால் காலம் செய்த சதியோஇல்லை அவரது போதாத காலமோ, பலவிதமான சாணக்கிய நகர்வுகளை மேற்கொண்டும் அவரால் அவரது வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை.

    பாராளுமன்றத்தில் அரசுக் கட்டிலில் அமர்ந்திருந்த அவரது கட்சி, ஒரு சிறுபான்மை அரசமைத்த நிலையில், அறுதிப் பெரும்பான்மை இழந்த ஒரு நிலையில் முடமாகி நின்றமையே அவரது இந்தத் தோல்விக்குக் காரணம்.

    ஏற்கெனவே வட அயர்லாந்துக் கட்சிப் பிரதிநிதிகளின் ஆதரவுடன் அரசு நடத்திக்கொண்டிருந்த போரிஸ் ஜான்சன் ஆண்டவன் சோதனையோயார் கொடுத்த போதனையோ” தான் கொண்டு வந்த பிரேரணைக்கு எதிராக வாக்களித்தார்கள் அதாவது எதிர்க்கட்சியுடன் இணைந்து செயலாற்றினார்கள் எனும் குற்றச்சாட்டில், இதுவரை கண்டிராத வகையில், தமது கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர்களைத் தமது கட்சியிலிருந்து விலக்கினார்.

    விளைவு!

    ஏற்கெனவே பெரும்பான்மை இழந்திருந்த அவரது கட்சியின் பலம், மேலும் குன்றியதுநொண்டி நொண்டி நடந்துகொண்டிருந்த அவரது அரசு, முடமாகி நின்றது. .

    பிரதமர் போரிஸ் ஜான்சனும் அவரது சகாக்களும் தமது நிலையை மீள்பரிசீலித்துக் கொண்டார்கள். நாட்டில், பிரெக்ஸிட்டுக்கான ஆதரவு  50%க்கும் அதிகமாகவே இருக்கிறது என்று பொதுக் கருத்துக் கணிப்புகள் கூறினஎதிர்க் கட்சியான லேபர் கட்சி வெற்றியீட்டிய தொகுதிகளில் பல, பிரெக்ஸிட்டை ஆதரிக்கும் ஒரு நிலை, இங்கிலாந்து வட மாகாணங்களில் இருப்பதை அவர்கள் இனங்கண்டு கொண்டார்கள்.

    இதற்கு ஏதுவாக, பிரெக்ஸிட் குறித்த, எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் நிலைப்பாடு தெளிவற்றே இருக்கிறதுமற்றொரு முக்கிய கட்சியான லிபரல் டெமகிரட்ஸ், பிரெக்ஸிட்டை முற்று முழுதாக எதிர்க்கிறார்கள். அனைத்துக்கும் மத்தியில் பிரெக்ஸிட்டுக்கு முழு ஆதரவான ஒரேயொரு கொள்கையை முன்வைத்து பிரெக்ஸிட் எனும் கட்சியை ஆரம்பித்து பலமான ஆதரவு பெற்று வருகிறார் நைஜல் வெராஜ் எனும், இங்கிலாந்துக்கான ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற அங்கத்தினர்களுள் ஒருவர்.

    இவையனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்க்கையில், பொதுத்தேர்தல் ஒன்றின் மூலம் அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு அவருக்கிருப்பதாகப் போரிஸ் ஜான்சனும் அவரின் ஆதரவாளர்களும் நம்புகிறார்கள்இவற்றுக்கெல்லாம் முடிசூடிக் கொண்டாற்போல் அவர் திருத்தியமைத்துக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான உடன்படிக்கை, அவரது கட்சியில் கணிசமான ஆதரவினைப் பெற்றிருக்கிறதுஅதன் அடிப்படையில் இவ்வுடன்படிக்கை, பொதுமக்களிடையேயும் கணிசமான ஆதரவினைப் பெறும் எனும் நம்பிக்கையும் அவர்களுக்குத் துணை நிற்கிறது.

    பொதுத்தேர்தல் ஒன்றிற்கு இத்தனை சாதகமான காரணிகள் இருக்கும்போது, அவரால் ஏன் இதுவரை ஒரு பொதுத்தேர்தலை அறிவிக்க முடியவில்லைஇங்கேதான் அவருக்கு ஒரு சிக்கல் இருந்ததுமுன்னால் பிரதமர் டேவிட் கமரன்லிபரல் டெமகிரட்ஸ் கட்சியுடன் இணைந்து கூட்டரசாங்கம் அமைத்த போது அவ்வரசு விரைவில் கவிழ்ந்துவிடக்கூடாது என்பதில் இரு கட்சிகளும் குறியாக இருந்ததனால் ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஆட்சியைக் கலைப்பதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருக்க வேண்டும் என்றொரு சட்டத்தை இயற்றினார்கள்.

    எதிர்க்கட்சிகளின் ஆதரவு இன்றிப் பாரளுமன்றத்தை அரசு தன்னிச்சையாக கலைக்க முடியாத நிலையிருந்ததுஎதிர்க்கட்சிகளின் பிரதான நோக்கமே ஆட்சியைக் கவிழ்த்து தாம் ஆட்சியமைப்பதுதானே அப்படி இருக்கையில் ஏன் அவரது இந்தத் திட்டத்தை எதிர்க்கட்சிகள் தமக்குச் சாதகமாக்கிக்கொள்ள முன்வரவில்லை ?

    இங்கேதான் மீண்டும் பிரெக்ஸிட், பிரச்சனையாக உருவெடுக்கிறதுசாணக்கியத் தந்திரங்களில் ஊறிப் போனவர், போரிஸ் ஜான்சன். அவரை நம்பி அரசைக் கவிழ்த்துப் பொதுத்தேர்தலுக்கு உடன்பட்டுவிட்டால், இந்தத் தேர்தல் அமளியைப் பயன்படுத்தி, அக்டோபர் 31ஆம் திகதி வெளியேற வேண்டும் எனும் காலக்கெடுவினைத் தமக்குச் சாதகமாக்கி உடன்படிக்கையற்ற ஒரு பிரெக்ஸிட்டை அமல்படுத்தி விடுவார் என்பது எதிர்க்கட்சிகளின் வாதம்.

    அதற்காக, எதிர்க்கட்சிகள் ஒரு நிபந்தனையை முன்வைத்தன.

    தாம் பொதுத்தேர்தலுக்கு உடன்படுவதானால் அக்டோபர் 31ஆம் திகதி விலகும் காலக் கெடுவினை நீட்டிப்பதற்கான ஆதரவினை ஐரோப்பிய ஒன்றியத்திடம் பெற வேண்டும் எனும் நிபந்தனையே அது.

    பத்தும் பலதும் பண்ணிப் பார்த்தும் எதுவும் பலனளிக்காத பட்சத்தில் தான் எதை உயிர் போனாலும் நிறைவேற்றமாட்டேன் என்று சூளுரைத்தாரோ அதனை நிறைவேற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார், போரிஸ் ஜான்சன். “எனதருமை நாட்டு மக்களே, உங்கள் ஆணையின்படி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியத்தை வெளியேற்றுவதை அக்டோபர் 31ஆம் தேதி நிறைவேற்றத் தீர்மானித்த என்னைப் பாராளுமன்ற ஜனநாயகம் எனும் மந்திரக் கயிற்றால் கட்டிப்போட்டு இக்காலக்கெடுவை 2020 ஐனவரி 31 வரை நீட்டிக்க வைத்துவிட்டார்கள் எதிர்க்கட்சியினர்” என்று அறிவித்தார்ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்ஒன்று இக்கட்டான பிரெக்ஸிட் சிக்கலைக் கொஞ்சம் தள்ளி வைத்ததுஇரண்டு அதற்கான பழியை எதிர்க்கட்சியினர் மீது சுமத்தியது.

    அக்டோபர் 31ஆம் திகதி உடன்படிக்கையற்ற ஒரு பிரெக்ஸிட்டுக்கான சந்தர்ப்பம் முற்றாகத் தவிர்க்கப்பட்ட சூழலில், பொதுத் தேர்தலுக்குத் தமது ஆதரவினை எதிர்க்கட்சியினர் அளிக்க முன்வந்தனர்இந்த ஆதரவினை அளிக்க பிரதான எதிர்க்கட்சியான லேபர் கட்சி பலவந்தப்படுத்தப்பட்டது என்றே கூறவேண்டும்ஏனெனில் மற்றைய எதிர்க்கட்சிகளான ஸ்காட்லாந்து தேசிய முன்னணிலிபரல் டெமகிரட்ஸ் மற்றும் சில இதர சிறு எதிர்க்கட்சிகள் என்பன ஒன்றிணைந்து பொதுத் தேர்தலை ஆதரித்ததுவே லேபர் கட்சியின் மனமாற்றத்தைப் பலவந்தப்படுத்தியது.

    விளைவாக, பல வருடங்களின் பின்னால் முதன்முறையாக ஐக்கிய இராச்சியத்தில் டிசம்பர் மாதத்தில் பொதுத்தேர்தல் நடக்கவுள்ளது. . ஆமாம் 2019 டிசம்பர் மாதம் 12ஆம் திகதி இப்பொதுத்தேர்தல் நடக்கவிருக்கிறதுஐக்கிய இராச்சியத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஓர் அதிமுக்கிய பொதுத்தேர்தல் இதுவென்றே அரசியல் அவதானிகள் பலரும் இதை நோக்குகின்றனர்.

    அடுத்து வரும் கட்டுரையில் இப்பொதுத்தேர்தலின் தன்மைகளையும் கட்சிகளின் நிலையையும் விரிவாகப் பார்க்கவுள்ளோம்.

    நடக்கப் போகும் இந்தப் பொதுத்தேர்தலினால் மாறுமோ இந்த நிலை?

    சக்தி சக்திதாசன்

    லண்டன்

    14.11.2019

    Share
  • படக்கவிதைப் போட்டி – 232

    படக்கவிதைப் போட்டி – 232

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    கீதாமதி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (17.11.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    அண்ணனின் அரவணைப்பில் தன் அச்சத்தைத் துச்சமெனத் தொலைக்க முயலும் சிறுமியாகத் தெரிகின்றாள் இவள். அண்ணனின் முகத்திலோ யாமிருக்க பயமேன் எனும்படியான மந்தகாசப் புன்னகை மந்தார மலராய் இதழ் விரித்திருக்கின்றது.

    கவியுள்ளம் ஊற்றெடுக்கக் கனிமழலை ஒன்றின் வசீகரக் காட்சியே போதுமானது; இங்கோ இருவர்! எனவே பஞ்சமின்றிக் கவிபாடக் கவிநெஞ்சங்களை அன்புபாராட்டி அழைக்கின்றேன்!

    *****

    ”இச்சிறுமி, அன்னையையும் தந்தையையும் அண்ணன் உருவில் கண்டாள்; அவன் அரவணைப்பில் அமைதி கொண்டாள் ” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அம்மையப்பனாய்…

    அன்னை தந்தை சேர்ந்தேதான்
    அண்ணன் உருவம் ஆனதுவோ,
    அன்பைக் கொடுப்பதில் அன்னையாக
    ஆசையாய் வளர்ப்பதில் தந்தையாக,
    என்றும் காப்பான் நன்றாக
    என்னும் உறுதி தங்கைக்கே,
    இன்னும் என்ன பயமென்றே
    இறுக்கிப் பிடித்தாள் அண்ணனையே…!

    *****

    ”உயரப் பறக்கும் பட்டத்திற்கு உதவிடும் வாலாய், நூலாய் உதவிடுவேன் உனக்கு நான்; உயரப்பறந்திடவே எனை நம்பிக்கையோடு பற்றிக்கொள்!” என்று பொன்மொழி உதிர்க்கும் உயர்ந்த சிறுவனைக் காண்கிறோம் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜின் கவிதையில்.

    அன்பே ஆருயிரே!

    மொட்டு விட்ட மலரே!
    இருள் சூழ்ந்திருக்கக் கண்டு பயந்தாயோ?
    இருளெனச் சூழ்ந்திருக்கும்
    இன்னல்கள் கண்டு பயந்தாயோ?
    வெளிச்சம் தரும் விளக்காய் நான்
    அணையாமல் என்னைக் காக்கும்
    உதவும் கரங்களாய் நீ!

    அஞ்சாதே, அச்சம் தவிர், நெஞ்சம் நிமிர்
    இரவென்று இருள் சூழ்ந்த வானம்
    வெளிச்சம் எனும் விடியல் வந்து
    நீலமாய் நிறம் மாறும்
    உறங்கி இருக்கும் இயற்கை கூட
    விழித்தெழும் விடியலாய்
    வெளிச்சம் வந்ததும்!

    குஞ்சுகளை இறகுகளில் மறைத்துக்
    காத்து நிற்கும் தாய்ப் பறவை!
    இறகுகளாய் நான் இருப்பேன்
    உன் இறகுகளை விரித்துப் பறக்க முயன்றிடு
    அந்த வானம் உனக்கு வசப்படும்!

    உயரப் பறக்கும் பட்டத்திற்கு
    உதவிடும் வாலாய் நூலாய்
    உதவிடுவேன் உனக்கு நான்
    உயரப்பறந்திடவே
    நம்பிக்கையோடு பற்றிக்கொள்!
    உன்னை ஏற்றிவிடும் ஏணியாய்
    நான் இருப்பேன்!

    அம்மை அப்பன் இன்றி
    இங்கு யாரும் பிறப்பதில்லை!
    உதவிக்கரம் நீட்டும் உருவங்களில்
    அண்ணனாய், தந்தையாய், தாயாய்,
    தோழனாய், தோழியாய், துணையாய்
    அன்பைப் பொழியும் உறவுகளைக் கண்டால்
    அனாதைகள் அழிந்து
    அன்பும் பாசமும் பொழியும்
    உள்ளங்களால் இவ்வுலகம் நிறைந்திடுமே!
    உறவாய் மாறி உள்ளங்கள் போற்றிடுமே!

    *****

    சிறுமிக்கு அன்னையாய் அத்தனாய் அத்தனையுமாய் நிற்கும் சிறுவனின் மனமுதிர்ச்சியை அழகிய கவிதைகளில் வார்த்தெடுத்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது…

    பிஞ்சு (நெ)நஞ்சு!

    கனியமுதுக் குழந்தையென்றால்
    கள்ளமில்லாப் புன்சிரிப்பும்
    வெள்ளைத் தும்பைப்பூ மனதும்
    கண்முன்னே நின்றதொரு காலமம்மா – அது
    கனவாகப் போனதிந்த காலமம்மா!

    வஞ்சமில்லாப் பிஞ்சு நெஞ்சில்
    சூதானமாய் இருக்கச் சொல்லி
    நஞ்சதனைக் கலந்திட்டோம்
    வெம்பியிங்கு நிற்க வைத்தோம்

    வெள்ளாவியில் விதைநெல்லால் பொங்கல் வைத்தோம்!

    இன்ப துன்பமெல்லாமே
    இரு நொடியில் மறந்துவிடும்!
    கள்ளமில்லா நெஞ்சதனில்
    தந்திரத்தைப் புகுத்திவிட்டோம்!
    நம்பிக்கையின்மையை நிலைக்கவிட்டோம்!

    பஞ்சு போன்ற நெஞ்சதனைப்
    போட்டி பல போடச் சொல்லி
    ஊடகச் சோதியிலே
    எரிபானையாக்கி விட்டோம்!

    ஏய்த்துப் பிழைப்பதைக் கற்க வைத்தோம்!

    அறிவு வளர்க்கும்
    கல்வியதைக் கற்பிக்காமல்
    வெற்று வெற்றியே குறிக்கோளாய்
    முற்றிப்போகச் செய்துவிட்டோம்!
    முளைக்குருத்தை முட்செடியாய் ஆக்கிவிட்டோம்!

    பெற்றோர் தம் பேராசையால்
    பிஞ்சினிலே பழுத்து
    சுயநல ஆழ்துளையில் வீழ்ந்து
    மறைந்ததுவே அவர்தம் குழந்தைத்தனம் – இதில்
    வெற்றுக் கொண்டாட்டமே மழலையர் தினம்!

    ”வஞ்சமில்லாப் பிஞ்சுநெஞ்சில் நாம் நஞ்சதனைக் கலந்து விட்டோம்; வெள்ளாவியில் விதைநெல்லால் பொங்கல் வைத்தோம்! ஊடகச் சோதியிலே மழலையின் நெஞ்சதனை எரிபானை யாக்கிவிட்டோம்!” என்று  இன்றைய பெற்றோரின் நிர்ப்பந்தத்தால் குழந்தைத்தனத்தைத் தொலைத்து, பிஞ்சிலேயே பழுத்து வெம்பிப்போகும் மழலையருக்காக வேதனைப்படுகின்ற இக்கவிதையின் ஆசிரியர் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • சேக்கிழார் பா நயம் – 55

    சேக்கிழார் பா நயம் – 55

    -திருச்சி புலவர் இராமமூர்த்தி
    —————————————————-

    திருவாரூர்த் திருக்கோயிலில் பரவையாரைக் கண்டு காதல் கொண்ட சுந்தரர், அப்பரவையார் விரைந்து தம்மில்லம் சார்ந்தபின் அவரைத் தேடினார். தம்முள்ளத்தைக் கொள்ளை கொண்ட பரவையாரை மீண்டும் காண விரும்பினார். முன் யாவரோடும் உரை இயம்பாதிருந்த நம்பிகள், தனிமையாகக் காதல் மேன்மேற் படர்ந்து பெருகியபோது அக்காதலைத் துன்பமயமாக்கும் பொருள்களை நோக்கி, இயம்பும் உரைகளைக் கூறுகின்றார். காதற்றுன்பமிகுதியால் இவ்வாறு தனிமையில் இயம்புவது இயல்பு. அது அத்துன்ப மிகுதிப் பாட்டைக் காட்டும். இதனைத் தொல்காப்பியம், களவியலில்,

    ‘’காட்சி ஆசையின் களம் புக்குக் கலங்கி
    வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதினும்’’

    என்று கூறும். அதன்படி மன்மதன் தம் முன் வந்து நின்று மலரம்புகளை எய்து தம் காமத்தைத் தூண்டுவதை உணர்ந்து வேட்கையால் மயங்கிச் செய்வதறியாது நின்றார். தாம் சிவபெருமானின் நெருங்கிய தோழர் என்பதை உணர்ந்தும், மன்மதன் மலரம்புகளைத் தொடுக்கலாமோ? என்றெல்லாம் கலங்கினார்.

    முன்பு முருகப்பிரான் திருவவதாரம் நிகழ , சிவபிரான் யோகத்திலிருந்த போது, மன்மதன் அவர் முன் நின்று மலரம்புகளை எய்தான். அப்போதே இறைவனின் நெற்றியிலிருந்த ஒற்றைக் கண்ணால் மன்மதன் எரிந்து, உருவழிந்தான். அத்தகைய சிவபெருமானுடன் தோழமை கொண்ட சுந்தரர், ஆரூரில் பரவையார் மேல் காதல் கொண்டதை அவரே வியந்து கொள்கிறார். அதனால்தான், சிவபெருமான் திருவருளையே சிந்தித்துக் கொண்டிருந்த தமக்குக் காதல் உண்டானது எவ்வாறு ? என்றெண்ணிய அவர் அக்காதலை ‘’அற்புதமோ, சிவனருளோ,’’ என்றெல்லாம் சிந்தித்தார். இப்போது மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்த சிவபெருமான் தோழராகிய என் கண்முன் மன்மதன் தோன்றியதும், அவன் வில்லை எடுத்ததும், மலரம்புகளைத் தொடுத்ததும், நிகழக்கூடியவை அல்லவே. எரிந்ததன் பின் அவன் மீண்டும் தன் உருவத்தை அடைய மாட்டான் என்று சுந்தரர் எண்ணி யிருந்தார். ஆனால் திருவாரூரில் பரவையார் மேல் கொண்ட காமத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அவர் முன் வந்து, நின்று கரும்பு வில்லுடனும், ஐந்து மலர்களாகிய அம்புகளுடனும் மன்மதன் தோன்றினான். வெந்த காமன் பின்னர் உயிர் பெற்றா னாயினும் உருவிலனேயாவன். ஆனால் இவன் அவ்வாறன்றி உருவத்துடன் கூடினன் அதாவது, செயல் மிகுதியால் உருத் தோன்றுதல். என் முன்னால் வரவுங்கூடாத இவன் என் முன்னரும் வரவல்லவனாகி விட்டானே! அவ்வாறு என் முன் வருதலே பெருங் காரியம்; என் முன். வருதலேயன்றி என்மேல் அம்புகளையும் எய்கிறானே! ‘’ என்கிறார் சுந்தரர்! இதனைச் சேக்கிழார்,

    ‘’வெந்த காமன் வெளியே உருச்செய்து
    வந்து என்முன் நின்று வாளி தொடுப்பதே ‘’

    என்று பாடுகிறார். மன்மதன் எரிந்தபின் சிவனடியார் முன் காமனும், காலனும் தோன்ற மாட்டார்கள் என்றே உலகம் கருதியது! ஆனால், திருவாரூரில் சுந்தரரின் காதல், மன்மதன் செயலால் படர்ந்து வளர்ந்தது.

    ‘’சுற்றும் அமரர் சுரபதி நின்திருப் பாதம் அல்லால்
    பற்று ஒற்ற இலோம்என்று பரவையுள் நஞ்சை உண்டான்
    செற்றங்கு அநங்கனைத் தீவிழித்தான் தில்லை அம்பலவன்
    நெற்றியில் கண்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே!’’

    என்று, சிவனடியார் முன் மன்மதன் தோன்றாத சிறப்புக் குறித்து அப்பரடிகளே பாடியுள்ளார். அச்சிவபிரானின் நெற்றிக் கண்ணின் ‘எரிதழல்’ அடியார்கள் முன் குளிர்ச்சி செய்து காக்கும். இக்கண்ணின் தழலுக்கு எரிக்காது குளிர்ச்சி செய்து காக்கும் குணமுமிருத்தலின் அதனின்றும் பிரித்து வேறு தன்மையைக் கொண்ட தழல் என்றார். அடுக்களையின்கீழ் வைத்த தழல் பாகம் செய்தும்,, கூரையில் வைத்த தழல் வீட்டை எரித்தும் தொழில் செய்தல்போலக் காண்க.. ஆனாலும் தீ சுடும் என்று கூறும் பொருளியல்புக்கும் மாறுபாடிலாமையுங் காண்க. இதனைச் சேக்கிழார் ,

    ‘’தம் திருக்கண் எரிதழலில் பட்டு’’ என்ற தொடரால் குறித்தார். மேலும் சுந்தரர், ‘’எமது தலைவனாருடைய திருவருளும் இவ்வாறாவதொன்றோ? திருவருளின் முன் வரவும், நிற்கவும், வாளிதொடுக்கவும் மாட்டாதவன் மதனன்! அவன் தம்பிரான் தம்மையே தோழனாகத் தந்த திருவருள் நிரம்பிய என்முன் வந்து நின்று வாளி தொடுப்பதாயினன். அவனன்றி ஓர் அணுவு மசையாதாதலின் இதுவும் அவர் திருவருளின் ஒரு வண்ணமோ? எந்தையுடைய ஆரருளோ? இதனை,

    எந்தையார் அருள் இவ் வண்ணமோ?” என்பார்.
    என்று சேக்கிழார் பாடுகிறார். இனி, நாம்முழுப்பாடலையும் பயில்வோம்.

    “தந்திருக் கண் எரிதழலிற் பட்டு
    வெந்த காமன் வெளியே உருச் செய்து
    வந்து என் முன் நின்று வாளி தொடுப்பதே
    எந்தையார் அருள் இவ் வண்ணமோ?” என்பார்.

    என்பது பாட்டு! சிவனடியார் ஒரு பெண்ணைக் கண்டு காதல் கொள்ளுவதும், அது குறித்துச் சிந்திப்பதும் , மேலும் அக்காதல் நிறைவேறச் சிவபெருமானே அருள வேண்டும் என்று சுந்தரர் வேண்டுவதும் , முன்பு திருக்கயிலையில் நிச்சயிக்கப் பெற்ற சிவசங்கல்பமே என்பதை நமக்கு இப்பாடல் உணர்த்துகிறது.

    Share
  • போர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)

    போர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)

    -சி. ஜெயபாரதன், கனடா.

    மூலம் ஆங்கிலம் : ஜான் மெக்ரே
    (கனடா போர்த் தளபதி)
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    போர்த் தளங்களில் அணி அணியாய்ப்
    பூத்துக் கிடக்கும்,
    எண்ணிலா
    செந்நிறப் பாப்பி மலர்கள்
    சிலுவைகளுக்கு இடையே!
    நெஞ்சை உலுக்கும் காட்சி!
    மேலே பாடிப் பறக்கும் குயில்கள்
    பயம் ஏதுமின்றி,
    கீழே பீரங்கிச் சத்தம் மெதுவாய்க்
    கேட்டுக் குறையும்!

    செத்துப் போனது நாங்கள்!
    சில நாட்களுக்கு முன்பு பூமியில்
    சீராய் வசித்தவர் நாங்கள்!
    காலைப் பொழுதை உணர்ந்தோம்!
    மாலைப் பொழுதில் மங்கிச்
    செங்கதிர் மறைவதைக் கண்டோம்.
    நேசித்தோம்,
    நேசிக்கப் பட்டோம் நாங்கள்!
    இப்போது
    போர்த்தளப் புழுதியில்
    வீழ்ந்து கிடக்கிறோம்!

    பகைவரோடு
    எம் போரைத் தொடர்வீர் !
    தளரும் எமது கைகள்
    தருவது
    உமது கைக்கு
    எரியும் தீப்பந்தங்கள்!
    ஏந்திக் கொண்டு தாக்குவீர்.
    இறந்தவர் நம்பிக்கை
    நிறைவேறாது போனால் ,
    உறக்கம் வாராதெமக்கு!
    போர்த் தளம் யாவும்
    எண்ணிலா
    செந்நிறப் பாப்பி மலர்கள்
    செழித்துக் குலுங்கினும்!

    Share
  • சட்டை

    சட்டை

    -சேஷாத்ரி பாஸ்கர்

    ”இப்ப இந்த செலவு தேவையா?”
    மகன் பதில் சொல்லவில்லை

    ”இரண்டாயிரம் பெரிய தொகை என்பதே உனக்கு உறைக்கவில்லையா?”

    ”அப்பா ப்ளீஸ்! சில சுதந்திரம் எனக்கும் வேண்டும்”

    ”நான் தப்பு சொல்லலே. ஆனாலும் கொஞ்சம் யோசி ஒரு சொக்காய் இரண்டாயிரமா? என் கடைசி மாச சம்பளம் இதை விட கம்மி.”

    ”அதைத்தான் சொல்றேன்! அது அந்தக் காலம்! இப்ப என்ன மாதிரி யோசி. இது மொத மாச சம்பளம். நான் ஆசையாய் வாங்கினேன்.”

    ”சாரி. யூ ஆர் லாவிஷ்”

    ”அம்மா இருந்தால் சந்தோஷப்பட்டு இருப்பா”

    ”ஒரு தகப்பன் மனசை நீ புரிஞ்சுக்கல. அப்புறம் உன் இஷ்டம்.”

    ”தப்பு! நீ தான் மகனோட மனசை தெரிஞ்சிக்கல.”

    ”கோபப்படாமல் இதை ஒரு தப்பாய் பார்த்து விட்டு மன்னித்து விடு. ஆனால் என் செயலில் இருக்கும் மனசைப் பார்.”

    ”உன் அகலக்கால் எனக்கு பயமாய் இருக்கு”

    ”தப்பாய் சொல்றப்பா! விசாலமா யோசிச்சு பாரு”

    ”நீ லட்ச ரூபாய் சம்பாதிச்சா கூட, இதைத்தான் சொல்வேன்”

    தலைக்கவசம் அணிந்து கொண்டே சொன்னான்.
    ”அப்பா! இன்னும் ஒன்னு சொல்றேன். உன் கோபம் அதிகமாகும்.”

    ”சொல்லு. என்ன பேண்ட் மூவாயிரமா?”

    ”இல்ல! இந்தச் சட்டை உனக்கு தாம்பா!”

    Share
  • மெய் வாழ்க்கை

    மெய் வாழ்க்கை

    -ராதா விஸ்வநாதன் 

    வாழ்க்கையே முடிந்து விட்டது
    வாழ்வது எப்படி என்ற தேடலில்!
    வாழ்ந்தவரை வழி கேட்டேன்
    வந்தது பதில் வாழ்ந்து பாரென!

    குழந்தையின் முகத்தில் தேட
    குறைகளைக் காணாதே எங்கும்
    நிறைதனை எதிலும் பாரடா
    நிம்மதி உன் காலடியிலே என்றது

    சாதித்தவர்களைக் கேட்டேன்
    சாதிப்பதற்கு எல்லையே இல்லை!
    சாதிக்க வேண்டியது என்ன என்று
    சோதித்துப் பார் உனை என்றனர்!

    மனத்தைச் சோதனைக் கூடமாக்கி
    எண்ணங்களை வேள்வித் தீயிலிட்டு
    என்னையே இழந்ததும் புரிந்தது,
    தன்னை இழப்பதே பூரணம் என்று!

    பூரணத்தில் நிற்பவன் மெய்ஞானி
    புரிந்தவனைத் தேடுபவன் மெய்யன்பன்
    புரிந்ததைக் காட்டுபவர் நல்லாசான்–அப்
    புரிதலில் வாழ்தலே மெய் வாழ்க்கை!!

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 77

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 77

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் 

    77.படை மாட்சி

    குறள் 761:

    உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்
    வெறுக்கையுள் எல்லாம் தலை

    எல்லா  வகைப்படையும் கொண்டு எடஞ்சலுக்கு அசராம செயிக்க ஒதவுத படை ராசாவோட செல்வங்கள் எல்லாத்திலயும் ஒசந்தது.

    குறள் 762:

    உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
    தொல்படைக் கல்லால் அரிது

    போர்ல சேதம் ஏற்பட்டு பலம் கொறைஞ்சாலும் எந்தவித எடஞ்சலுக்கும் பயப்படாதநெஞ்சுறுதி பழம்பெருமை கொண்ட படைக்கு இல்லாம வேற எதுக்கு இருக்க முடியும். .

    குறள் 763:

    ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை 
    நாகம் உயிர்ப்பக் கெடும்

    எலிகள் கூட்டமா சேந்து பகையக் காட்டினாலும் பாம்பு மூச்சு விட்டுச்சுன்னா அதுங்க கெட்டழிஞ்சு போவும். 

    குறள் 764:

    அழிவின் றறைபோகா தாகி வழிவந்த
    வன்க ணதுவே படை

    எந்த நெலமயிலயும் அழிஞ்சு போவாம பகையாளியோட சதிக்கு தொணை போவாம பரம்பரையாவே பயமில்லாம உறுதியா இருக்கதுதான் படை. 

    குறள் 765:

    கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
    ஆற்ற லதுவே படை

    உசிர எடுக்குத சாவே முன்ன வந்தாலும் பயப்படாம ஒண்ணாநின்னு எதித்து நிக்குத சக்தி உள்ளதே படை. 

    குறள் 766:

    மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
    எனநான்கே ஏமம் படைக்கு

    வீரம், மானம், நல்லவழில நடக்குதது, தலைவனோட நம்பிக்கையப் பெறுதது இந்த நாலும் படையைப் பாதுகாக்குத பண்புகள் ஆவும்.  

    குறள் 767:

    தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
    போர்தாங்கும் தன்மை அறிந்து

    சண்டயத் தடுக்குத மொறையத் தெரிஞ்சுக்கிட்டு மொதல்ல வருத படைய செயிச்சி பின்னால வருதவங்க தாக்காதமாரி தடுக்குதது படை.

    குறள் 768:

    அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
    படைத்தகையால் பாடு பெறும்

    சண்டபோடுத வீரமும் எதித்து நிக்குத பலமும் இல்லன்னா கூட அது தன் அழகான அணிவகுப்பால் பெரும பெத்துக்கிடும். 

    குறள் 769:

    சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
    இல்லாயின் வெல்லும் படை

    தன் அளவுல கொறஞ்சு சிறிசாப் போவுதது, தலைவன வெறுக்குதது, வறுமை இது ஏதும் இல்லன்னா படை செயிச்சிக்கிடும். 

    குறள் 770:

    நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
    தலைமக்கள் இல்வழி இல்

    நெறைய நாள் நெலச்சு நிக்குத வீரர்கள் ரொம்ப பேர் இருந்தாலும் தலைவன் இல்லன்னா அந்தப் படை நெலச்சி நிக்காது.

    (அடுத்தாப்லையும் வரும்…) 

    Share