Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170909 - Virat swaroop -lr

    “விராட்கோலி போல விதைக்கின்றார் வெற்றி,-
    கராட்டே போஸ்கொடுத்துக் கண்ணன் :-விராட்சொரூபம்-காட்டி
    அருஜ்ஜுனரை ஓட்டுகிறார் தேரில்அவர்,-
    மாட்டைக் கரமேந்தும் மால்”….கிரேசி மோகன் ….!

    Share
  • தாய்மொழிக்கல்வி

     முனைவர். ஜ.பிரேமலதா,

    தமிழ் இணைப்பேராசிரியர்,

    அரசுகலைக்கல்லூரி,

    சேலம் -636 007 .

    சமூக மரபுரிமை எனப்படுவது நம்முடைய முன்னோர்கள் உருவாக்கித் தந்துள்ள பண்பாட்டில் காணப்படும் பல்வேறு கூறுகளாகும். இலக்கியம், நுண்கலைகள், தொழில்நுட்பஅறிவு, சமயக் கோட்பாடுகள், பழக்கவழக்கங்கள், வாழ்க்கைக் குறிக்கோள்கள் போன்ற யாவும் சமூக மரபுரிமைப்புக்குள் அடங்குவனவாகும். எனவேதான், ‘தமிழை இகழ்ந்தவனைத் தாயே தடுப்பினும் விடேன்’ என்று முழங்கினார் பாரதிதாசன்.

    இச்சமூக மரபுரிமையே குழந்தைகளுக்குள் உள்ளடங்கிய பல்வேறு ஆற்றல்கள் வெளிப்பட வாய்ப்பளிக்கிறது. எனவே, சமூகச் சூழலுக்கு ஏற்றவாறு தமிழ்மொழிப்பாடம் கற்பிக்கப்படவேண்டும். தாய் மொழி வழிக்கல்வியில் பல புதுமைகள் கொண்டுவந்து, தற்காலத் தொழில் நுட்பத்திற்கேற்ப கற்கவும், கற்பிக்கவும் செய்ய வேண்டும். கணினி வழி கற்பித்தலை தமிழ் மொழிக்கும் பாலர் பருவத்திலிருந்தே செயல்படுத்தினால் கற்றலிலும் உயர்வு தோன்றும்.

    உலகின் தொன்மை மொழிகள் பலவும் தாய்மொழிவழிக் கல்வியையே கொடுத்து வந்துள்ளன. பின்னர் அவை வழக்கொழிந்து பிறமொழித் தாக்கத்தால் கலப்பால் பாதிக்கப்பட்டு வழக்கொழிந்து வந்து கொண்டுள்ளன. எனினும் அவை மீண்டும் தாய்மொழிக்கல்விக்கே திரும்பியுள்ளன. ஆங்கில மொழியே அதற்குச் சிறந்த உதாரணம்.

    பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை ஆங்கிலம் கேட்பாரற்று ‘ஒரு வட்டாரமொழி’ என்ற அளவில்தான் அறியப்பட்டு வந்தது. இலத்தீன்தான் சிறந்த மொழி; அறிவு மொழி என்று போற்றப்பட்டது. ஒரு வட்டார மொழியாகக் குறுகிக் கிடந்த ‘ஆங்கிலத்தைத்’ தாய்மொழியாகக் கொண்ட ‘ஜெஃப்ரி சாசர்’ தான் பள்ளி முதல் கல்லூரி வரை திணிக்கப்பட்ட இலத்தீன் மொழிக்கெதிராகப் போர்க்கொடி தூக்கினார். ஆங்கிலம் வட்டார மொழியாக இருந்தாலும், அது ஒரு பகுதி மக்களின் தாய்மொழியானால், தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது என்பதால், ஆங்கிலத்தின் வழியே கல்வி போதிக்கப்பட வேண்டும் என்று போராடினார். இத்தனைக்கும் ஆங்கிலம் ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு இடத்தில் தோன்றிய தனித்த மொழி அல்ல.

    சில ஜெர்மானிய மொழிகள், கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்ச், செல்டிக் மொழி உள்ளிட்ட பல மொழிகளின் கலவையினால் உருவான கலப்பட மொழிதான் ஆங்கிலம். இக்கலப்பட மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஜான் வைக்லிப், ஜான் ஹஸ், தாமஸ் லினேகர், வில்லியம் டிண்டேல் போன்ற பலரும் போர்க்கொடி உயர்த்தி போராட்டத்தில் குதித்தனர். இதில் ஜான் ஹஸ், ஜான் ரோஜர்ஸ், தாமஸ் கிரான்மெர் பலரும் இலத்தீனைத் தாய்மொழியாகக் கொண்டவர்களால் உயிரோடு கொளுத்தப்பட்டனர். எனினும், இப்போராட்டம் தொடர்ந்து நடந்ததால் அன்றைய முதலாம் எலிசபெத் ஆங்கில தாய்மொழியாளர்கள், ‘தம் தாய்மொழியாலேயே கல்வி பயிலலாம்’ என 1563ல் அனுமதியளித்தார். 1320ல் தொடங்கிய ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் தாய்மொழிவழிக்கல்வியின் போராட்டம் 1563ல் முடிவுக்கு வந்தது.

    இலத்தீன் ஆதிக்கத்தில் கட்டுண்டு கிடந்த ஆங்கிலம், விடுதலைக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கியதும், மைக்கேல் பாரடே (மின்னியல்), ஜார்ஜ் ஸ்டீஃபன்சன் (புகைவண்டி), ஜான் டால்டன் (அணு) ஜோசப் வில்சன் ஸ்வான் (கார்பனிழை மின்விளக்கு) போன்ற அறிவியலாளர்களை உலகிற்குத் தந்தது. அறிவியலுக்குத் தகுதியில்லாத மொழி எனக் கருதப்பட்ட ஆங்கிலம் “தாய்மொழிப் பற்றாளர்களால்” இன்று ‘உலகின் அறிவியல் மொழி’ யாக உயர்ந்துள்ளது. இவர்கள் எல்லாம் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஏழைகளின் பிள்ளைகள்.

    தாய்மொழியான ஆங்கிலத்தில் படித்து சிந்தித்ததன் விளைவே இவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு மூல காரணம். ஆங்கிலேயரின் தாய்மொழிப் பற்று தமிழரிடம் இருந்தால், தமிழன் பல கண்டுபிடிப்புகளில் உலகிற்கே முன்னோடியாகத் திகழ்வான். ஏனெனில் பண்டைத் தமிழில் உள்ள அறிவியல் நுட்பங்கள் தமிழரின் அரும்பெரும் சொத்துக்கள். ஏற்கனவே அறிவியல் துறைகளில் கால்பதித்துவிட்ட தமிழன், தாய்மொழிப் பற்றில்லாமையினால் ஆங்கில மறதி நோய் பற்றி அனைத்தையும் மறந்து அறிவியல் கண்டுபிடிப்பை வியப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆங்கிலத்தைப் பின்பற்றுபவர்கள், ஆங்கிலேயரின் தாய்மொழிப் பற்றையும் பின்பற்றினால் தமிழ் வாழும். தமிழரும் வாழ்வர். தமிழ் தமிழரை நம்புகிறது. தமிழர்தான் தமிழை நம்பவில்லை.

    தாய்மொழிவழிக்கல்விக்கு முன்னுரிமையும் சிறப்பும் தரப்பட்டால், தமிழிளைஞர்கள் பலரும் பல கலைகளில் சிந்திக்கும் நிலை பெற்றுச் சிறப்புடன் திகழ்வர். இதில் ஒரு தலைமுறை இடர்ப்பட்டு முன்னேறவேண்டியதிருக்கும். கற்பிக்கும் ஆசிரியர் ஆங்கில நூல்களைக் கொண்டே தமிழில் மொழிபெயர்த்து பாடம் நடத்தலாம். மாணவர்களும் புரியாமல் கேட்பதைவிட புரிந்த மொழியில் பாடங்களைக் கேட்டு பலவிதமான சிந்தனைகளைப் பெறலாம். ஒரு சிந்தனையுமின்றி ஆங்கில வழிப்பாடத்தை நெட்டுருப்போட்டு படிப்பதைவிட இது மேலானது. ஒரு சில பொருத்தமான சொற்கள் தமிழில் இல்லாமல் இருக்கலாம். ஒன்றும் புரியாமல் படிப்பதை விட ஒரு சில சொற்கள் புரியாமல் படிப்பது மேலானதல்லவா?

    இந்தியா போன்ற பல மொழிகள் உள்ள நாடுகளில் தாய்மொழிவழிக் கல்வி என்பது கானல் நீராகவே உள்ளது. ஒரு மனிதன் சுயமாகச் சிந்திப்பதற்கும், அறிவினை மேம்படுத்திக் கொள்வதற்கும், தொடர்ந்து படிப்பதற்கும் , புதிய கண்டுபிடிப்புகளுக்கும் தாய்மொழியே பெரிதும் துணைபுரிகிறது என்ற கல்வியாளர்களின் கூற்று காற்றில் பறக்கவிடப்பட்டுவிட்டது.

    தாய்மொழிப் பற்றற்ற தமிழர்கள் தான் இதற்குக் காரணம். இந்தியைத் தேசிய மொழியாக்க முனையும் மத்திய அரசோ, ஆங்கிலமோ தமிழர்க்கு எதிரியல்ல. தமிழர்தான் தமிழுக்குப் பகைவர்களாக உள்ளனர். ‘இவனா தமிழன் இருக்காது. யானைக்குப் பூனை பிறக்காது’ என மலேசியக் கவிஞர் சீனி நைனா முகம்மது இன்றைய தாய்மொழிப் பற்றற்ற தமிழனைப் பார்த்து சீறுகிறார்.

    இலக்கியக் கல்விக்கு தாய்மொழிக் கல்வி என்பது பொருத்தமாக இருக்கும். ஆனால், அறிவியல் கல்விக்கு இது பொருந்தாது என்பவர்கள் அறியாமை நிறைந்தவர்கள். அறிவியல் கல்வி அவரவர் தாய்மொழியில் அமையும்போதே பெறத்தக்க நன்மைகள் பலவாகும் என்பதை உணராமல் அவ்வாறு கூறுகிறார்கள். தாய்மொழிவழிக்கல்வி கற்றல் என்பது சாதாரண உடையணிந்து மிடுக்காக நடப்பது போன்றது. பிறமொழிக்கல்வி என்பது மிடுக்கான பொருத்தமில்லாத உடையணிந்து நடக்க இயலா நிலைக்குப் போவதற்குச் சமமானதாகும்.

    மனிதனின் வாழ்நிலை, மனநிலை என்பது இயற்கையாக இருத்தல்வேண்டும். அது தாய்மொழிவழிக்கல்வியால் மட்டுமே சாத்தியம். தமிழகத்தில் 2006 -2007 ஆண்டிற்கு முன்னர் தமிழ்மொழிவழிக் கல்வியை ஒருவர் கற்காமலேயே பட்டம் பெறலாம் என்ற நிலையிருந்தது. 2006 -2007க்குப் பின்னர் பிறமொழி பேசுபவராக இருப்பினும் தமிழ்நாட்டில் கல்வி கற்பின் தமிழில் ஒருபாடமாவது கட்டாயம் படிக்கவேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தற்போது 2015 -2016 ல் 10ம் வகுப்புத் தேர்வை அம்மாணவர்கள் எழுதும் நிலை உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி விழுக்காடு குறைந்துவிடக் கூடாதென்று அரசு, பிறமொழி பேசும் மாணவர்களுக்கு தமிழ் மொழிப்பாடத்திற்கு மட்டும் சிறப்பு கையேட்டைத் தயாரித்துக் கொடுத்துள்ளது. பிரெஞ்சு, இந்தி, சமஸ்கிருதம் என மதிப்பெண்ணுக்காகத் தமிழைப் புறக்கணித்தவர்கள் இனித் தமிழைப் படிப்பார்கள் என நம்பலாம்.

    இது ஆங்கிலவழிக்கல்வியின் மோகம் மக்களிடம் குறைந்துவிடவில்லை என்பதையே காட்டுகிறது. ஆங்கிலவழிக்கல்வி முறையே போதும் என்று மக்கள் சிந்திக்கத் தலைப்பட்டு விட்டனர். அதன் மூலமே உலக அறிவினைப் பெற முடியும் என்று நம்புகின்றனர். 2010ல் சமச்சீர் பள்ளிக்கல்வி முறை கொண்டுவரப்பட்டது. முனைவர் எஸ்.முத்துக்குமரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பல்வேறு பரிந்துரைகள் அரசுக்கு வழங்கப்பட்டன. ஒருசில மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டன. அதில் பெரும்பான்மையோரால் புறக்கணிக்கபட்டது தாய்மொழிவழிக்கல்வியும், மெட்ரிக்குலேசன் வாரியக் கலைப்பும்.

    பிள்ளைகள் தங்கள் தாய்மொழிவழிக்கல்வி வழியாகவே அனைத்துப் பாடங்களையும் கற்பதே சிறந்தது என்பது சமச்சீர்க் கல்விக் கொள்கைகளில் ஒன்று. எனினும் இம்முறை இன்னும் நடைமுறைக்கு வராமலுள்ளது. அரசின் கல்விக் கொள்கைக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் வருதல் வேண்டும் என்ற நிலைமாறி தனியார் கல்விக் கொள்கைக்கு அரசு வருதல் வேண்டும் என்ற நிலை தோன்றி தற்போது அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி முறை தொடங்கபட்டு வருகிறது. ஆங்கிலக் கல்வியின் மோகத்தால் ஆங்கில வழி கல்வி உள்ள தனியார் கல்விக்கூடத்தில் மாணவர்கள் எண்ணிக்கை மிகுதியாகி 3500 அரசு பள்ளிகளின் எண்ணிக்கை தற்போது 1500 பள்ளிகளாக சுருங்கி உள்ளது.

    இன்றைய காலகட்டத்தில் ஒருமொழி அறிவு ஒருவர்க்குப் பயன்தராது. பிறமொழி அறிவும் தேவைதான். உலகின் தலைசிறந்த கவிஞராகப் பாரதி திகழ்ந்ததற்கு அவருடைய பலமொழி அறிவே காரணமாகும். எனினும் தாய்மொழிக்கல்வியை அவர் என்றும் விட்டுக்கொடுத்ததில்லை.

    வேறுவேறு பாஷைகள் – கற்பாய் நீ
    வீட்டு வார்த்தை கற்கிலாய் –போ போ

    என்று தாய்மொழிக்கல்வியைப் புறக்கணிப்பவனைப் பார்த்து கூறுகிறார்.

    ‘குழந்தைகளின் மன வளர்ச்சிக்குத் தாய்மொழியே சிறந்தது’ என காந்தியடிகள் உள்ளிட்ட பலரும் எடுத்துரைத்தாலும் தமிழர்களை ஆங்கில மோகம் கெட்டியாகப் பிடித்துக்கொண்டுவிட்டது. ‘ஆங்கிலம் உலகப் பொதுமொழி’ என்ற வலுவான எண்ணம்தான் அதற்குக் காரணம். சீனத்திற்கும், ஸ்பானிசிற்கும் அடுத்த நிலையில்தான் ஆங்கிலம் உள்ளது. இங்கிலாந்து அருகிலுள்ள பிரான்சில் ஆங்கிலம் ஒரு மொழியாகவே கருதப்படவில்லை.

    .

    மக்கள் தாய்மொழியைத் தமிழைப், புறக்கணிப்பதற்கு ஊடகங்கள் பேருதவி (?) புரிகின்றன. தமிழைக் கொச்சையாகப் பிறமொழி கலந்து பேசுவது மிகச்சிறந்த நாகரிகமாகப் பரவுவதற்கு தொலைக்காட்சியின் பங்கு மிகப் பெரியது. பட்டி தொட்டிகளிலெல்லாம் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஊடுருவி, சிற்றூர் மக்களின் தமிழையும் கலப்படமாக்கி வருகின்றன. இதில் வரும் விளம்பரங்களில் மிகத் தாராளமாக ஆங்கிலக் கலப்பு.

    தமிழர் வாழ்விலும் தமிழ் இல்லை. பேசும் தமிழிலும் வளமில்லை. பேருந்து நிலையம் என்றால் புரியாது தமிழனுக்கு. பஸ் ஸ்டேண்ட் என்றால் தான் புரியும். இன்றைக்கு காலைவேளை ‘டூத்பேஸ்டில்’ தொடங்கி இரவில் படுக்கும் ‘பெட்’ வரை தமிழன் வாழ்வில் எல்லாம் ஆங்கிலமயம்தான். பேச்சுத் தமிழோ ‘தமிங்கிலீசாக’ வலம் வருகிறது. ஒரு மொழி அழிவதற்கு முதன்மைக் காரணம் மொழிக்கலப்பு தான். இன்றைக்கு அன்றாட சிற்றூர் மக்கள் பேசும் மொழியில் கூடப் பிரிக்க முடியாத அளவிற்குப் பிறமொழி கலப்பு நிறைந்திருக்கிறது. தமிழிலுள்ள எண்ணற்ற சொற்கள் அவை தமிழ்ச்சொற்கள் தானா என்று குழப்பம் தரும் வகையில் விரவியுள்ளன.

    உலகிலுள்ள கல்வியாளர்களும் சமூக ஆய்வாளர்களும், உளவியல் நிபுணர்களும் தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது என்கின்றனர் என்றாலும் பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் போதுமானஅளவில் இல்லாமலிருப்பதே மக்கள் தமிழ்மொழியைப் புறக்கணிப்பதற்குக் காரணம். பல துறை சார்ந்த தமிழர்களை ஒன்றிணைத்து மொழிபெயர்த்துத் தர ஒரு குழு அமைக்கலாம். மொழிபெயர்ப்புகளை வெளியிடலாம். தொழில்நுட்ப தகவல்களைத் தாய்மொழியில் தரலாம்; விவாதிக்கலாம்; நுட்பப் பொருளை உணர்ந்து பல கருத்துக்களுக்குப் பின், அனைவரும் ஏற்கும் மொழிபெயர்ப்பு சொல்லை ஒத்த கருத்துடன் ஏற்கலாம்; உலக முழுவதும் உள்ள தமிழர்கள் ஒரு குறிப்பிட்ட சொல்லையே ஒருமனதாகப் பயன்படுத்த பரிந்துரைக்கலாம்; மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல் சார்ந்த மொழிபெயர்ப்பு குழுக்கள் உருவாக்கப்படலாம்.

    “தாய்மொழி என்பது தாயின் மொழி-அது
    தாயும் நீயும் பேசும் மொழி
    ஆயிரம் மொழிகள் நீயறிந்தாலும்
    ஆன்மா உணர்மொழி அந்த மொழி”
    . . . . . .
    தேனாய் இனித்திடக் கேட்ட மொழி உன்
    சிந்தையில் விதைகள் போட்ட மொழி
    . . . . . .
    உன்னுடன் இணைந்தே பிறந்தமொழி-உன்
    உள்ளமும் உணர்வும் புரிந்த மொழி
    எண்ணியல் என்ன மின்னியல் என்ன
    எதையும் பயின்றிடச் சிறந்த மொழி-அது
    இறைவன் உனக்கென வரைந்த மொழி”

    என்று தாய்மொழிவழிக்கல்வியின் சிறப்பினை மறைந்த மலேசியக் கவிஞர் சி.செ. சீனிநைனா முகம்மது பாடிச் சென்றுள்ளார்.

    சிந்தையில் விதைகளை விதைக்கும் மொழி, எண்ணியல் மின்னியல் எதையும் பயின்றிடச் சிறந்த மொழி தாய்மொழியன்றி வேறொன்றில்லை என மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். ‘அணுவைத் துளைத்து எழு கடலைப் புகட்டும்’ ஔவையாரின் அறிவு தாய்வழிக்கல்வியினால் விளைந்தது அன்றோ? சித்த மருத்துவமே சிறந்த மருத்துவம் என்று உலகம் போற்ற தமிழரை தமிழ்வழிக்கல்வியைப் புறக்கணிப்பதுபோல் அதையும் புறக்கணித்து சர்க்கரை நோயினால் மடிந்து வருகின்றார்கள்.

    தமிழ் படித்தால் முன்னேற முடியாது என்று நினைப்பவர்களையும்,. தமிழ்ச்சோறு போடுமா என்று கேட்பவர்களையும் நோக்கி பதிலடி கொடுக்கிறார் மலேசிய கவிஞர் பொன்முடி அவர்கள். தமிழ்மொழியால் தான் தமிழன் தாழ்ந்து போனதாகவும், தமிழனைத் தலையெடுக்க விடாமல் தமிழ்தான் செய்து விட்டதாகவும் கருதுவதால் தான் தாய்மொழி வழிக் கல்வியைப் புறக்கணிக்கின்றனர் எனக் கருதுகின்ற கவிஞர்,

    “”எந்த நாட்டினில் எந்த மொழிதான்
    எவர்க்கும் சோற்றை ஏந்தி வந்து
    துவையல் கறியுடன் ஊட்டுகின்றது?
    உழைப்பும் உறுதியும் உள்ளவன் எவனும்
    மொழியில் பழியை ஏற்றுவதில்லை””
    எனச் சாடுகிறார்.

    கல்லூரிகளில் மொழிபெயர்ப்பு பாடத்தினை வைக்கலாம். மொழிபெயர்ப்பு ஆற்றலையும், அறிவினையும் கல்விநிலையங்களில் முதன்மைப்படுத்தலாம்.

    தமிழில் அறிவியல் கருத்துக்களை வெளியிட முடியாதென்பவர்கள் உண்மையறியாதவர்கள். தமிழ் மொழி அறிவியல் மொழி என்பதை பண்டைய இலக்கியங்களை வைத்தே உறுதியாகக் கூறிடமுடியும்.சில சான்றுகள் இதோ……………..

    மழைப் பொழிவு பற்றிய அறிவியல் உண்மைகளைப் பண்டைத் தமிழர் மிக முன்பே அறிந்து கொண்டுள்ளனர். கடலில் இருந்து நீரை முகந்து மேகமானது மழையைக் கொண்டு வந்து நிலத்திற்குத் தருகின்றது என்ற அறிவியல் கோட்பாடு அன்றே நிலைப்பட்டுவிட்டது. பட்டினப்பாலையில் ‘வான்முகந்த நீர் மலைப் பொழியவும் மலைப் பொழிந்த நீர் கடற்பரப்பவும் மாரி பெய்யும் பருவம்போல’ (பட்டின:126) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வானம் நீரை மேகமாக முகந்துமலையின் மீது பொழிகின்றது, மலையில் பொழிந்த நீர் கடலில் சென்று சேர்கிறது. இந்த நீர்ச் சுழற்சியை (hydrological cycle) இன்றைய அறிவியல் உலகம் விளக்குகிறது. இதேபோல, ‘மறந்து கடல் முகந்த கமஞ்சூழ் மாமழை பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்’ (நற்றிணை-99) என்ற பாடல் வரிகள் கடல் நீர் ஆவியாகி மேகமாகி பின்னர் மழையாகப் பொழிகிறது.

    இப்படியாக மழை பொழியும் அறிவியலைக் கூறுகிறது. அகநானூறு, ‘மாக்கடல் முகந்து மாதிரத்து இருளி …………….. பெயல் பெய்து கழிந்த பூநாறு வைகறை’ என்று கூறுகிறது. இதுவும் கடலில் இருந்த நீர் மேகமாகி மழை பொழியும் அறிவியலைக் கூறுகிறது. ஆனால் மேலைநாட்டு அறிஞர்கள் குறிப்பாகக் கிரேக்க நாட்டு ஞானிகளான ‘தேல்ஸ்’ மற்றும் இன்றைய அறிவியல் உலகம் கொண்டாடும் ‘அரிஸ்டாட்டில்’ போன்றோர் கடலுக்கு அடியில் உள்ள நீரூற்றுதான் எல்லாத் தண்ணீருக்கும் ஆதாரம் என்றும் நிலம் அதை உறிஞ்சி மேலே கொண்டு வந்து ஆறாக ஓட விடுகிறது என்றும் கூறியுள்ளனர். இதுதான் கி.பி 1500 வரை அவர்களுக்கு இருந்த கருத்து.ஆனால் பழந்தமிழர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முக்பிருந்தே இதைக் கண்டு பிடித்துள்ளனர். மேகம் கடல் நீரை பெற்று மழையாகப் பொழிகிறது என்பது அறிவியல் கண்டுபிடிப்பு. இஃது ஒரு நாள் ஆய்வின் முடிவல்ல. பல்லாண்டுகளின் பலன். ஆய்வின் வெளிப்பாடுகள் அல்ல அன்றைய தமிழரின் அறிவின் வெளிப்பாடுகள்.

    ”ஒன்று அறிவதுவே உற்ற அறிவதுவே
    இரண்டு அறிவதுவே அதனோடு நாவே
    மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
    நான்கு அறிதுவே அவற்றொடு கண்ணே
    ஐந்து அறிதுவே அவற்றொடு செவியே
    ஆறு அறிதுவே அவற்றொடு மனனே
    நேரிதில் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே …’ (..தொல் பொருள் மரபியில்:29. )

    தொல்காப்பியரின் கொள்கை டார்வின் விஞ்ஞானியின் பரிணாமக் கொள்கையோடு ஒத்துப் போகிறது.

    மாற்றுருப்புப் பொருத்துதல்-பழுதுபட்ட ஓருறுப்பை எடுத்துவிட்டு அதற்கு மாற்றாக வேறொரு உறுப்பைப் பொருத்துதல் என்பது இன்றைய மருத்துவ உலகின் சாதனை. ஆனால் பண்டைத்தமிழர் இது போன்ற அறுவை சிகிச்சைகளைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே மேற்கொண்டிருந்தனர். இதனைப் பற்றிய குறிப்பொன்று சிலப்பில் காணப்படுகின்றது.

    நாடுவிளங் கொண்புகழ் நடுகதல் வேண்டித்தன்
    ஆடு மழைத் தடக்கை யறுத்து முறைசெய்த
    பொற்கை நறுந்தார் புனைதேர்ப் பாண்டியன் (சிலம்பு)

    இரவு நேரத்தில் மாற்றுடையில் ஊர் நிலவரம் அறிய சென்ற பாண்டியன்,கீரந்தையின் இலக்கக் கதவைத் தான் தட்டியதற்குத் தண்டனையாக, தன் கையைத் தானே துண்டித்துக் கொள்கிறான். அதன்பின் பொன்னாலாகிய கையைச் செய்து வைத்துக் கொண்டான். அன்றிலிருந்து பொற்கைப் பாண்டியன் என அழைக்கப்பட்டான் என்கிறது அச்செய்தி, உறுப்பினை இழந்த ஒருவன் செயற்கை உறுப்பினைப் பொருத்திக்கொண்டு பயன்படுத்தியதை இப்பாடலில் உணரலாம். அறுவைச்சிகிச்சையில் நோயாளி தன் நோயை உணராமலிருக்கச் சுஸ்ருதர் என்ற மருத்துவர் திராட்சை ரசம் பருகச் செய்ததாகச் சரகச் சம்கிதை என்ற நூல் கூறுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியா முழுவதுமே இது போன்ற மருத்துவ முறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.

    இரும்பு உலோகங்களான வேல், வாள்’ ஈட்டி போன்ற ஆயுதங்களால் எற்படுகின்ற புண்களில்’ இரும்பின் உலோக நஞ்சு கலப்பதற்கு வாய்ப்புகள் உள. அவ்வாறு கலக்க நேர்ந்தால், உலோக நஞ்சால் (Tetanus Toxoid) உடலுக்குத் தீங்கு நேரிடலாம். அவ்வாறு நேராதிருக்க இக்கால மருத்துவர்கள் தடுப்பூசியைப் பயன்படுத்துவர். பண்டைக்கால மருத்துவர்கள் உலோக நஞ்சை முறிக்கும் மருந்தாகவும், புண் ஆறிய பின் வடு தோன்றாமல் தோலின் நிறம் பழைய நிலைக்கே மாறவும் அத்திப் பால் பயன் படுத்தினர் என்று புறநானூறு குறிப்பிடுகிறது. ‘வடுவின்றி வடிந்த யாக்கையான்,(180) என இதைக்குறிப்பிடுகிறது. மேலும், அறிவியல் உலகின் அறிய சாதனையான அறுவைச் சிகிச்சையினைப் பதிற்றுப்பத்தில்,

    “மீன்றேர்கொட்பிற் பனிக்கய மூழ்கிச்
    சிரல் பெயர்ந் தன்ன நெடுவெள் ளுசி
    நெடுவசி பரந்த உடுவாழ் மார்பின்
    அம்புசே ருடம்பினர் சேர்ந்தோ ரல்லது
    தும்பை சூடாது மலைந்த மாட்சி” (பதிற்றுப்பத்து 42: 2 – 6)

    நீரிலுள்ள மீனைக் கொத்துவதற்காக நீரில் பாய்ந்து, அடுத்த நொடியில் நீரைவிட்டு மேலே பறந்து செல்லும் சிரல் பறவையைப் போல, நெடிய வெள்ளூசி புண்ணுக்குள் நுழைந்து வெளியே வருகிறது என்கிறது. வெள்ளூசி என்பது வெள்ளியால் செய்யப்பட்ட தையல் ஊசியாக இருக்கலாம்.என்று ஐந்தாம் பத்தின் இரண்டாம் பாடலடியில் போரில் வெட்டுண்ட உடலை வெள்ளுசி கொண்டு தைத்த மருத்துவன் செயலை விளக்குகின்றன.

    இக்கால மருத்துவத்தில் புண்ணுக்கு மருந்து வைத்துக் கட்டும் போது புண்ணின் மேல் பஞ்சு வைத்துக் கட்டும் முறை, பண்டைய தமிழ் மருத்துவர்கள் மேற்கொண்ட முறையைப் பின்பற்றி அமைந்ததாக இருக்கலாம். அக்காலத்தில் தோன்றிய முறையே தொன்றுதொட்டு தொடர்ந்ததாகவும் இருக்கலாம். அதனை உறுதி செய்யும் விதத்தில்’

    “ கதுவாய் போகிய துதிவாய் எஃகமொடு
    பஞ்சியும் களையாப் புண்ணர்”

    என்னும் புறநானூற்று வரிகள் உறுதி செய்கின்றன.

    தமிழகத்தில் கட்டிடக்கலைத் திறம் வாய்ந்த வல்லுநர்கள் பலர் வாழ்ந்தனர். “ஒரு திறம் சாரா அரைநாள் அமயத்து நூலறிபுலவர் நுண்ணிதின் கயிறிட்டுத் தேஎங்கொண்டு தெய்வம் நோக்கிப் பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்பமனை வகுத்து” ( நெடுநல்வாடை, 75- 78வது வரிகள்) என நக்கீரர் விளக்குகிறார். கடலின் போக்கையும், காற்றின் போக்கையும் கொண்டு மிகச் சிறப்பாக கடல் வாணிகத்தை மேற்கொண்ட தமிழனின் மொழியிலா அறிவியல் இல்லை? தமிழனின் கப்பல் கட்டும் தொழிலைக் கண்டு பொறாமைப்பட்டே தமிழரின் கப்பல் வாணிகத்தை கெடுத்த அந்நியர்களின் கதை நாம் அறியாததா? தமிழால் முடியும் என்று ஒவ்வொரு தமிழனும் நினைக்கவேண்டும்.

    ஒரு மொழியின் வாழ்வும், வளமும், வளர்ச்சியும் அம்மொழி பேசும் மக்களின் வாழ்வும் வளமும் வளர்ச்சியுமாகும். தன்மான உணர்வு அடிப்படையில் மக்கள் தாய்மொழியாம் தமிழினை வளர்க்க முன்வரவேண்டும். அரசும், கல்வி நிலையங்களும், ஊடகங்களும், பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும். தமிழால் சாதிக்க முடியும் என்ற மக்கள் நம்பினால், தமிழனும் சாதிக்க முடியும். தமிழர் தமிழைப் புறக்கணித்தால் எதிர்காலத்தில் தமிழர்க்கு இருப்பதற்குக் கூட ஒரு நாடு இருக்காது என்பதை புரிந்து செயல்பட வேண்டும்.

    ஒருசில தலைமுறைகள் செய்கின்ற தவறுகள் ஒட்டுமொத்த இனத்தின் உரிமைக்கே சாவுமணியடித்து விடுகின்றன. தமிழினத்தின் எதிர்காலமே தாய்மொழிவழிக்கல்வியால் தான் சிறந்து உள்ளது. தமிழ் என்றைக்கும் தமிழரின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்ததில்லை. தாய்மொழி எனப்படுவது ஐம்புலன்களினாலும் உணரக்கூடிய, உணர்வுகளோடு ஊறிய சிந்திக்கத் தூண்டும் மொழியாகும். தாய்மொழியை சிந்தனை மொழி என்றே கூறலாம். சிந்திக்கின்ற மொழியால் பயிற்றுவிக்கப்படும் கல்வி, எண்ணங்களை மேம்படுத்தி, நுணுக்கங்களைப் புரிய வைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு வித்திடுகிறது. தமிழ் உலகாள வேண்டும். அது தமிழர் கல்வியில்தான் உள்ளது.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170905 -Sandipani ashram -Guru dakshina -lr

    ”புஜேந்திரர் மல்லில், நிஜேந்திரர் சொல்லில்,
    கஜேந்திரர் கத்த கருட -விஜயேந்த்ரர்,(விஜேந்திரர்)
    அந்தநாள் ஆதிமூலம், இந்தநாள் கீதைமூலம்,
    வந்தனன் நந்தன் வளர்ப்பு’’….

    ”காட்சியிதில், ஆனை கஜேந்திரரை காத்தருளும்
    மோட்சமது உண்டாம் முதலைக்கும், -ஆட்சி
    அரியா சனத்திலே அம்முதலை சாட்சி:
    பரிவா சனமவர் பார்’’….!

    ”அடிசறுக்கி ஆனை துடிதுடித்த போது
    நொடிக்கணக்கில் வந்தகால நேமி: -வடிவெடுத்து
    ஆவென வாய்பிளந்த பாவத்தின் பற்களுற்றேன்
    ஆவன செய்யவா தேவு”….!
    ”துரியோ தனனும் விருகோ தரனும்(பீமன்)
    சரியில் தவறில் சமமே, -அரியின்
    அரசாட்சி தன்னிலே ஆராய்ச்சி வேண்டாம்,
    ஒருசாட்சி யாய்அறி(ரி) வோ(ஓ)ம்”….

    ”தும்பிக்கை மாலையாய் தோள்தழுவ ஆனைக்கு
    நம்பிக்கை தந்தார் நவனீத -நம்பீசர்:(மயிலையில் இப்படி ஒரு வெண்ணைக் கடையுண்டு….மலரும் நினைவுக்கு மரியாதை)-
    ஆதிமூல மேயென்ற ஆனை கஜேந்திர
    வாதியாச்சு மோட்ச விலங்கு’’….கிரேசி மோகன்….!

     

    Share
  • திருக்கேதீஸ்வரம் கோவிலும், மாந்தோட்டம் துறைமுகமும்

    ஆங்கிலம்: ஸர் கந்தையா வைத்தியநாதன்[1] — தமிழாக்கம்: ஒரு அரிசோனன்

     மொழிபெயர்ப்பாளனின் குறிப்பு:  இலங்கையின் ஐந்து பழமையான ஐந்து சிவன் கோவில்களில் திருக்கேதீஸ்வரம் கோவிலும் ஒன்று.  இது மன்னாருக்கு அருகாமையில் இலங்கை தலைநிலப்பரப்பில் இருக்கிறது.  இக்கோவில் போர்ச்சுகீசியர்களால் பதினாறாம் நூற்றாண்டில் அழிக்கப்பட்டு, இருபதாம் நூற்றாண்டில் அதே இடத்தில் மீண்டும் கட்டப்பட்டது.  இப்பொழுது, இந்திய அரசின் நிதியுதவியுடனும், தமிழ்ச் சிற்பிகளின் கைவண்ணத்துடனும் மீண்டும் பெரிதாகக் கட்டப்பட்டுவருகிறது. கடந்த ஜனவரி மாதம், 2017ல் நான் நேரில் அங்குசென்று புதுப்பிக்கும் பணியைக் கண்டு வந்தேன்.  இக்கட்டுரையின் ஆங்கில மூலம், திருக்கேதீஸ்வர்ம் கோவில் புணர்நிர்மாணச் சங்கத்தால் 2003ல் மற்ற கட்டுரைகளுடன் “திருக்கேதீஸ்வரம் கட்டுரைகள் [Thiruketheeswaram Papers]” என்னும் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும், மொழிபெயர்க்கும்போது, மொழிபெயர்ப்பாளர் தனது நடையில் மொழிபெயர்த்து எழுதுவது மூலத்தின் தனித்தன்மையை வெளிக்கொணராதுபோகும்.  அதைக் கருத்தில்கொண்டு, ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களைத் தேர்ந்தெடுத்து, மூல ஆசிரியர் எவ்வாறு சொல்லியுள்ளாரோ, அதன்   தன்மை குன்றாது, நீட்டவோ, குறைக்கவோ செய்யாது, தமிழ் இலக்கணத்திற்குத் தகுந்தவாறு சொற்றொடர்களை அமைத்துள்ளேன்.  அதன்மூலம் மூலக்கட்டுரையாளரின் நடையும், அவரது கருத்துகளும், உணர்ச்சிகளும் அப்படியே ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குக் கொணரப்பட்டிருக்கின்றன என்றே நம்புகிறேன்.

    இக்கட்டுரை திருக்கேதீஸ்வர ஆலயத்திருப்பணி சபையின் அனுமதியுடன் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது

    ***

    “மொகஞ்சதாரோ, ஹாரப்பாவில் நமக்குக் கிடைத்த வைளிப்பாடுகளின்  கபிடிப்புகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், செம்புக்காலத்திற்கோ[bronzeage], அதற்கும் முன்னதாகவோ வரலாறு உள்ளது சைவசமயம்.  எனவே, அதை உலகத்தின் மிகப் பழமையான வாழும் சமயம் என்றே எண்ணவைக்கிறது”

    — ஸர் ஜான் மார்ஷல்

    சிவபெருமானை ஒப்புயர்வற்றவரென்றும், முழுமையானவரென்றும் வழிபடுதல் மிகவும் பரவியுள்ள பழமையான சமயங்களில் தொன்மையானதாகும்.  அது படைப்பு துவங்கியதிலிருந்தே இருக்கிறது என்று மரபு பறைசாற்றுகிறது.  இமயம் தோன்றி ஆன்மீக மரபின் சின்னமாவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்னதாகவே — மிகப்பெரிய இந்திய-ஆப்பிரிக்கக் கண்டம் பிரிவதற்குமுன்னரே — இலங்கை அதன் ஒருபகுதியாக இருந்தபோதே அங்கு சிவவழிபாடு துவங்கிவிட்டது.

    பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே சிவபெருமானை மகாதேவராக, ஆதிசைவத்தின் ஒரு பெரிய கடவுளாக வழிபட்டதாகவே — சர் ஜான் மார்ஷல் சிந்து சமவெளியிலும், ஜார்ஜ் ஃபெப்ரி மற்றவர்கள் மால்ட்டா, மடகாஸ்கர் மற்றும் கிரீட்டிலும் கண்ட புதைபொருள் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

    மொகஞ்சதாரோவில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று முகமுள்ள கடவுள் முத்திரைகளும் — மும்மூர்த்திக் குறிக்கோள் — பிற்காலப் பிரம்மா, விஷ்ணு, சிவன் பதிப்புருவாக இருக்கக்கூடும்.  பொது ஆண்டுகளுக்கு மூவாயிரம் ஆண்டு முன்னதான மூன்றுமுக சிவபெருமானும் ஒருமுகக் கடவுளின் முந்தைய முத்திரைகளவு முக்கியமானதாகவே இருக்கலாம்.

    சைவக் குருமாரான திருஞானசம்பந்தரும்[2], சுந்தரமூர்த்தி நாயனாரும்[3] திருக்கேதீஸ்வரத்திலுள்ள பெருமானைப் புகழ்ந்து பாடும்போது, பெரிய, சிறந்த துறைமுகமான — மகாவம்சத்தில் மாதிட்டை என்றழைக்கப்படும் — மாந்தோட்டத்தை எண்ணிலடங்காத மரக்கலங்களின் புகலிடம் என்றும், அங்கு மாடமாளிகைகள் நிறைந்திருந்ததாகவும், பூம்பொழில்கள், பழத்தோட்டங்கள், வயல்கல் சூழ்ந்திருந்ததென்றும் வர்ணித்திருக்கின்றனர்.

    மாந்தோட்டத் துறைமுகம் பாலாவி ஆற்றுமுகத்தில் இருந்தது. மலையளவு அலைகள் எழுந்தும் விழுந்தும் ஆர்ப்பரித்தன. ஆற்றின் தென்கரையில் அலைவாய்க்குரடுகளும் [piers] கிடங்குகளும் அமைந்திருந்தன.  இப்பொழுது அக்கிராமம் வங்காலை [வங்கக் கலங்கள் கலக்குமிடம்] என்றழைக்கப்படுகிறது.  வடகரையில் திருக்கேதீஸ்வரம் கோவிலும், அரசுக்கட்டிடங்களும், மாளிகைகளும் இருந்தன.  இது மாளிகைத்திடல் என்று இப்பொழுது அழைக்கபடுகிறது.  பபமொடை [அர்ச்சகர்களுக்கான இடம்], கோவில் குளம் என்றும் கிராமங்கள் உள்ளன. திருக்கேதீஸ்வரம் கோவில் வங்காலையிலிருந்து நான்குமைல் தொலைவிலுள்ளது.  இதிலிருந்து பாலாவி ஆற்றின் முகத்துவாரம் அந்நாளில் எவ்வளவு பெரிதாக இருந்ததென்றும், அதன் முக்கியத்துவத்தையும் உணரலாம்.

    எகிப்து, மெசபடோமியா, பாலஸ்தீனம், கிரேக்க, ரோமானிய நாடுகளிலிருந்து அரபிக்கடல் வழியாக கடல்வழி வணிகம் அக்காலத்தில் நடந்துவந்தது. அந்நாட்டார் தென்மேற்குப் பருவமழைக்குப் பயந்தனர்.  அதன் சீற்றத்திலிருந்து மாந்தோட்டத் துறைமுகம் புகலிடமளித்தது. அதற்குக் காரணம் தெற்கிலுள்ள மன்னார் தீவும், ராமர் அணையும்தான்.  அக்காலத்தில் மன்னார் தீவுக்கும், இலங்கை நிலத்திற்கும் இடையுள்ள நீர்ப்பரப்பு இருபருவமழைகளால் ஏற்படும் கடல் நீரோட்டத்தால் மணல்தட்டாமல், கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாக இருந்தது.

    கப்பல்கள் செல்லுமளவுக்கு ஆழமான மன்னார் கடற்கால் எப்படி சதுப்புநிலமானது, மிகச்சிறந்த மாந்தோட்டத்துறைமுகம் மணல்மேடுற்றது, அலைமோதிய பாலாவியாறு எப்படி ஒரு சிறுவாய்க்காலானது, அதைச் சுற்றியிருந்த நிலப்பகுதி தரிசுநிலமானது என்ற கேள்விகள் எழத்தான் செய்யும்.

    பாலாவி ஒரு வளமிக்க ஆறாக இருந்தபோது, மல்வத்து ஓயாவின் நீர்ப்பெருக்கும், மற்ற இயற்கையான நீரோட்டங்களும் அதில்தான் கலந்தன.  காலப்போக்கில் மல்வத்து ஓயா தனது போக்கைத் தெற்குநோக்கி மதவாச்சிப் பக்கம் திருப்பியது. இது மல்வத்து ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தைப்பற்றி ஆய்வுசெய்த ஒரு ரஷ்யப் பேராசிரியரின் கருத்தும் ஆகும்.  மல்வத்து ஓயாவை ஜயன்ட்ஸ் டாங்கைவிட்டு [Giants Tank] மன்னாருக்குப் பலமைல்கள் தொலைவிலுள்ள அருவியாற்றுக்குத் திருப்பியது ஜீவநதியான பாலாவியாற்றை மழைகாலத்தில்மட்டும் நீர்ப்பெருக்குள்ள மணற்படுகையாக ஆக்கியது. அகலமான பாலாவியின் கழிமுகம் மணல்மேடாகுவது விரைவாக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், மன்னார் தீவுக்குச் செல்ல அமைக்கப்பட்ட சாலைப்பாலமும், ரயில்வே பாலமும் கடல் நீரோட்டத்தை முழுவதும் நிறுத்திவிட்டன.  மாந்தோட்டத்திற்குப் பதிலாகத் தலைமன்னார் இந்தியாவுக்கு அருகாமையான துறைமுகமாக உருப்பெற்றது. பராக்கிரமபாகுவின் காலத்தில் துவங்கி, போர்ச்சுகீசியரின் வருகையும் மாந்தோட்டத் துறைமுகத்தின் சிறப்புகுன்றி, வடக்கிலிருக்கும் கேட்ஸ் துறைமுகம் சிறப்புப்பெற்றது.

    மாந்தோட்டத்தின் பொற்காலத்தில் பதினொன்றாம் நூற்றாண்டுக்கு முன்னதான இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் மட்டுமன்றி, தென்னிந்திய கடல்வணிகர்கள் தங்கள் சரக்குகளை மேற்கேயும், சீனாவுக்கு கொண்டுசெல்லும்போது இடைப்பட்டுத் தங்கிச் செல்லும் துறைமுகமாகவும் விளங்கியது.

    அவ்வமயம் இந்தியாவில் இராமேஸ்வரம் கோவிலுக்கு நிகரான சிறப்புடன் திருக்கேதீஸ்வரம் கோவில் விளங்கியது.  ஆனால் அது இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் செல்லும் படைகளின் வழியைவிட இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் படையெடுத்துவரும் இராணுவத்தின் வழியில் அதிகமாகவே இருந்தது.  அதனால் திருக்கேதீஸ்வரம் உள்ளான அளவுக்கு அதன் தோழமைக்கோவிலான இராமேஸ்வரம் தாக்குதலுக்கு ஆளாகாமல் தப்பித்தது.

    திருக்கேதீஸ்வரத்தின் செழிப்பு வன்னித் தமிழர்களின் ஏற்றத்தாழ்வின்போது அதிகமாகவும், இந்தியத் தீபகற்கத்தின் ஏற்றத்தாழ்வின்போது மறைமுகமாவும் ஏற்றத்தாழ்வடைந்தது.

    சோழர்கள் பொலனருவையிலிருந்து இலங்கையில் ஆட்சிபுரிந்தபோது மாந்தோட்டமும், திருக்கேதீஸ்வரமும் தாற்காலிகமாக அவற்றின் புகழின் உச்சக்கட்டத்தை அடைந்தன. அது ராஜராஜேச்சுரம் என்றுகூட அழைக்கப்பட்டது. அரசியல்நிலை மாறியவுடன் அப்புகழ் உடனேயே மங்கிக் குன்றியது.

    முதலாம் சுந்தரபாண்டியனின் காலத்தில் [பொ.ஆ. 1251-80] அரசச்சலுகைபெற்ற திருக்கேதீஸ்வரம் கோவில் பாண்டியச் சிற்பக்கலையின்படி புதுப்பித்துக் கட்டப்பட்டது[4]. அதற்குச் சான்றுகள் தற்பொழுது கோவிலருகிலுள்ள கற்களின்வாயிலாகவும் கிடைக்கின்றன.

    சடையவர்மன் வீரபாண்டியனின் குடுமியாமலைக் கல்வெட்டுகள் அவன் இலங்கை மன்னனை வென்று திறைபெற்றதாகவும், கோணமலை[திரிகோணமலை]யில் பாண்டியரின் இரட்டைமீன் சின்னத்தைப் பொறித்ததாகவும் கூறுகின்றன.  கடற்படையில் வலிமையுள்ள பாண்டியனான அவன் திருகோணமலைக்குக் கடல்வழியாகச் சென்றிருந்தாலொழிய திருக்கேதீஸ்வரமும் அப்பொழுது அரசனின் கவனத்தைப் பெற்றிருக்கலாம்.

    போர்ச்சுகீசியர்கள் பொ.ஆ 1540ல் இலங்கையின் வடக்குக் கடற்கரைப்பக்கம் வந்தபோது திருக்கேதீஸ்வரம் ஒரு பெரிய இந்துசமய வழிபாட்டுத்தலமாகவே இருந்தது.[5]

    எமர்சன் டெனந்ட் [Emerson Tennent] கொடுத்துள்ள விவரிப்பைக் காண்போம்:

    “போர்ச்சுகீசியர் நெடுங்காலமாக யாழ்ப்பாணத்தை அடையவிரும்பினாலும், அது செழிப்பான தெற்கிலிருக்கும் அவர்களது குடியிருப்பின் பாதுகாப்புக்காக அல்ல; அவர்களது கடல்வணிகத்திற்காகவே.  அப்படியிருந்தும் 1617ல்தான் மலபார் அரசபரம்பரையைப் பதவிநீக்கம்செய்து, அதைத் தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தனர். அதுவரை அவர்களது அரசியலுக்கு மசியாத அப்பகுதி, அப்பொழுது மதமாற்று நடவடிக்கைக்கு உற்சாகமளிக்கும் வாய்ப்பை அளித்தது. 

    “1544ல் அவர்களின் முதல் படையெடுக்கும் முயற்சி தக்காணத்தின் தென்கடற்கரைப் பகுதிகளிலுள்ள இந்துக் கோவில்களைச் சூறையாடப் பொருத்தமாக அமைந்தது. [யாழ்ப்பாண]தீபகற்பத்தின் அரசரை அழைத்து, போர்ச்சுகலுக்குத் திறைசெலுத்தும் நாடாக ஆகாவிட்டால் [போர்ச்சுகலின்] கொள்ளைக்காரக் கடற்படைத் தாக்குதலை எதிர்நோக்கவேண்டும் என்ற எச்சரிக்கை இடப்பட்டது.  அரசர் முன்னதைத் தேர்ந்தெடுத்து ஆண்டுக்கு நாலாயிரம் டக்கெட்டுகள் திறைசெலுத்த ஒப்புக்கொண்டார்.  அந்த ஆண்டிலேயே செயின்ட் ஃபிரான்சிஸ் சேவியரின் கட்டளைப்படி ரோமன் கத்தோலிக்க மதப்பிரசாரகர்களால் ஏராளமானவர் மன்னாரில் மதமாற்றம் செய்தனர். யாழ்ப்பாணப்பட்டினத்தின் அரசர் சமயமாற்றத்தை

    வேரறுக்கவேண்டி புதிதாக மதம்மாறிய அறுநூறுபேருக்கு மரணதண்டனை கொடுத்தார்.  ஆயினும், இந்தத் துன்மார்க்கம் அவரது அரண்மனையையே அடைந்தது.  அவரது மூத்தமகன் மதம் மாறினான்.  எனவே, அதன் விளைவாக, அவனுக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது.  அவரது இரண்டாம் மகன் தந்தையின் தாளாத சினத்திலிருந்து தப்பிக்க கோவாவுக்கு ஓடினான்.

    “இந்தக் கடுமையான நடவடிக்கைளுக்கு எதிராக மெதுவாக, பாதுகாப்பாக,  ஆனால் தீவிரமாகப் பழிவாங்குமாறு மூன்றாம் போப் ஜான் [போர்ச்சுகலின்] இந்திய வைஸ்ராயுக்கு உத்தரவிட்டார்.  உடனே, மன்னாரில் கிறித்தவர்களின்மீது அடக்குமுறை அடுத்தடுத்து நிகழ்வதாகவும், கோவாவுக்கு ஓடிவந்த அண்ணனின் அரசுரிமையை யாழ்ப்பாண அரசர் பறித்துக்கொண்டதாகவும் உள்ள இரண்டு முறையீடுகளின்படி நடவடிக்கையெடுக்கவேண்டி, இந்திய வைஸ்ராய் டான் கான்ஸ்டன்டீன் தெ பிரகான்சா [Don Constantine de Braganza] யாழ்ப்பாணத்திற்கு எதிராக மற்றொரு கடற்படையை 1560ல் அனுப்பினார். தெ கோட்டோ [De Couto] தனது இந்திய வரலாற்றின் எழுபதாவது பத்தாண்டில் இந்த புனிதப்போரைப்பற்றி பகட்டான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்: 

    “வைஸ்ராயுடன் கப்பலில் பயணித்த கொச்சி பிஷப் தரையிறங்கியவுடன் ஒரு  வழிபாட்டிடத்தை நிறுவி, நகரின்மீது தாக்குதலைத் துவங்குவதற்காகப் படையெடுத்துவந்த இராணுவத்தின் முன்னிலையில் தொழுகைநடத்தி, போரில்   விழுவோருக்கு முழுமையான சலுகைகளையும், சிலுவைக்காக உயிர்துறப்போருக்கு முழுபாவமன்னிப்பும் வழங்கினார். 

    “தாக்குதல் வெற்றியடைந்தாலும் முடிவு மோசமாக இருந்தது.  பல பிரபுக்கள்   எதிரிகளின் பீரங்கிகளால் கொல்லப்பட்டனர்.   நகரம் வீழ்ந்தது, அரண்மனை எரிக்கப்பட்டது. அரசரும், அவரைச் சேர்ந்தவரும் வெற்றிகொண்டோருடன் உடன்படிக்கை செய்துகொள்ளவைக்கப்பட்டனர்.  கண்டியிலிருந்தும், கோட்டாவிலிருந்தும் ஆறாம் புவனேகாவின் மருமகனும், தர்மபாலாவின் தந்தையுமான திரிபுல பந்தாவால் கொண்டுவரப்பட்ட பொக்கிஷத்தின் மறைவிடத்தைத் தெரிவிக்கவேன்டுமென்றும், அதற்கும் மேலாக, எண்பதாயிரம் குருசேடோ பணமும் தரவேண்டுமென்றும், மன்னார் தீவை போர்ச்சுகீசியருக்கு விட்டுத்தரவண்டுமென்பதும் என்பதே அந்த உடன்படிக்கை.  உடனே மன்னார் தீவு ஆக்கிரமிக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டது.

    “சிங்கள அரசர்களுக்கு உதவியாக போர்ச்சுகீசியருக்கு எதிராகச் செயல்பட்டதற்காக யாழ்ப்பாண அரசரைத் தண்டிக்கவேண்டி, 1591லும், 1604லும், கோவாவிலிருந்து புதிய படையெடுப்புகள் மேற்கொள்ளப்பப்பட்டன.  ஆனால், ஒவ்வொரு தடவையும் பயமுறுத்தல் அபாயத்தைத் தடுக்க வலிமையற்றவர் தானாகச் சரணடைந்தனர். ஆயினும், ஏற்கனவே யாழ்ப்பாணப் பகுதியைப் போர்ச்சுகலின்கீழ் கொண்டுவரும் திட்டமிருந்தாலும், அதை நிறைவேற்றத் தகுந்த தருணத்திற்காக அச்செயல் ஒத்திப்போடப்பட்டுவந்தது.

    “1617ல் கான்ஸ்டன்டைன் தெ சா நொரனாவின் [Constantine de Saa Norana] தலைமையில் ஒரு படை யாழ்ப்பாணத்தை முன்புசொல்லப்பட்ட ஒருமுகப்பட்ட காட்டுமிராண்டித்தனத்துடன் தாக்கிக் கைப்பற்றியது.  அரசர் கைதுசெய்யப்பட்டு கோவாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டு கொல்லப்பட்டார். மலபார் இளவரசர்களில் கடைசியான அவரது மருமான் அவரது அரசுரிமையை விட்டுக்கொடுத்துவிட்டி ஃபிரான்சிஸ்கன் கான்வென்ட்டில் சேர்ந்தார்.  அவரது சொத்துரிமை போர்ச்சுகலின் ஆட்சிப்பகுதியாக முறைப்படி இணைக்கப்பட்டது.”

    எமர்சன் டெனன்ட்டால் தனிப்பட்ட முறையில் குறிப்பிடப்படாதிருந்தாலும், இந்த வரலாற்றுச் சூறாவழிச் சுழல் நிகழ்ச்சிகளான போர்ச்சுகீசியரியன் காலத்தில் திருக்கேதீஸ்வரம் ஒரு முக்கியமான பங்கை வகித்தது.

    தென்னகத்தின்[தக்காணம்] செல்வச்செழிப்புள்ள இந்துக்கோவில்களைச் சூறையாடிக் கொள்ளையடிப்பதைக் குறிக்கோளாகக்கொண்ட போர்ச்சுகீசியருக்கு இந்துமாக்கடலின் அக்கரையிலுள்ள கன்னியாகுமரி, திருச்செந்தூரைவிட, திருக்கேதீஸ்வரம் எளிதான இரையாகவே அமைந்ததால், அவர்கள் அதில் வெற்றிபெற்றனர்.  சேதுப்பாலம் மற்றும் இராமேஸ்வரம் கோவிலின் அறங்காவலரான இராமநாதபுரம் சேதுபதியின் வலிமையான பாதுகாப்பே அங்கு அவர்களின் தோல்விக்குக் காரணமாக இருக்கலாம்.

    மன்னார்த்தீவு மக்களின் சமயமாற்றம் துவங்குவதற்குமுன்னரே திருக்கேதீஸ்வரம் கோவிலின் சூறையாடல் நிகழ்ந்துமுடிந்தது.  அதைப் பெயர்த்தெடுக்கப்பட்ட கற்களே மன்னார் கோட்டையைக் கட்டப் பின்னர் உறுதுணையாகவிருந்தன.  இதைப் பழிவாங்க யாழ்ப்பாண மன்னர் எடுத்துக்கொண்ட வலுக்குறைந்த முயற்சிகளே படுகொலையாக பூதக்கண்ணாடிகொண்டு காட்டப்பட்டன.

    இதில் நாம் கருத்தில்கொள்ளவேண்டியது என்னவென்றால், திருக்கேதீஸ்வரத்தின் வீழ்ச்சியுடன் இலங்கையின் தமிழ் அரசுக்குச் சாவுமணி அடிக்கப்பட்டு, தமிழ்மக்கள் தங்கள் சுதந்திரத்தை இழந்தனர்.

    [திரிகோணமலையில் குடிகொண்டுள்ள] கோணேஸ்வரரின் பக்தனான இலங்கேஸ்வரன் இராவணனும் அவனது மாமனார் மயனும் திருக்கேதீஸ்வரத்தின் தொன்மையான கோவிலைக் கட்டினார்கள் என்பது மரபு. இலங்கையிலிருந்து அயோத்திக்குத் திரும்பிச்செல்லும் வழியில் இராமேஸ்வரத்தில் சிவனுக்குக் கோவில்கட்டி வழிபட்ட இராமர், திருக்கேதீஸ்வரத்திலும் சிவபெருமானை வழிபட்டதாகப் புகழப்படுகிறது.

    மகாபாரதத்தின் நாயகனும், கிருஷ்ணனின் உறவினனும், சீடனுமான அருச்சுனன் தெற்கே தீர்த்தயாத்திரை மேற்கொண்டபோது திருக்கேதீஸ்வரத்திற்கும் வருகைதந்தான் என்பது ஐதிகம்.  இந்த யாத்திரையின்போதுதான் அவன் மாந்தோட்டத்தையடுத்த பகுதியை ஆண்டுவந்த நாக இளவரசியான அல்லி அரசாணியைச் சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது.  மன்னார்த்தீவை அடுத்து இலங்கை நிலப்பரப்பில் காணப்படும் இடிபாடுகள் அல்லியின் கோட்டையென்று குறிப்பிடப்படுகின்றன.

    பொது ஆண்டுகளுக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பவுத்த இலக்கியங்கள் இவ்விடத்தை மஹாதித்த என்கின்றன. மரபையொட்டிச் சில கற்றறிவாளர் குறிப்பிடுவதைப்போல இராமர், அகத்தியர், அருச்சுனன் ஆகியோர் மாந்தோட்டத் துறைமுகத்தின்மூலம் கடலைக் கடந்து இலங்கைக்கு வந்தார்களென்றால், இளவரசன் விஜயனும்[6] அதேவழியில்தான் வந்திருக்கவேண்டும்.  அப்படியிருந்தால், விஜயனோடு வந்த உபதீசன் என்ற அந்தணப் பூசாரி வழிபாடு நடத்திய அங்கிருந்த சிவன்கோவில் திருக்கேதீஸ்வரத்தைத்தவிர வேறெதுவாகவும் இருக்கமுடியாது.

    யாழ்ப்பாணத்து டச்சு கவர்னருக்காக 1736ல் யாழ்ப்பாணக் கவிஞர் மயில்வாகனப் புலவரால் தயாரான [எழுதப்பட்ட] வரலாற்று மரபுகளின் பதிவான யாழ்ப்பாண வைபவ மாலை கூறுகிறது:

    “பொது ஆண்டுக்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கைக் கடற்கரையிலிறங்கிய இளவரசன் விஜயன், பல்லாண்டுகளாகச் சிதிலமடைந்து கிடந்த    திருக்கேதீஸ்வரம் கோவிலைக் கட்ட ஏற்பாடுசெய்தான்.”

    ஒன்பது-பத்தாம் நூற்றாண்டுகளில் இலங்கையில் மக்கள் குடியிருந்த பகுதிகளில் தமிழர்களின் மேலாண்மையை விவரிக்கும் ராஜ ரத்தினாகர என்ற சிங்கள நூல், சைவசமய முதல்வர்களின் காலத்திய மாந்தோட்டச் செழிப்பை ஒட்டியதாகவே உள்ளது.

    திருக்கேதீஸ்வரம் கோவிலை மீட்டெடுக்கும் [புணருத்தாரணம்] பணியின் முதல் முயற்சி மாபெரும் இந்துசமயச் சீர்திருத்தவாதியான ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரால் செய்யப்பட்டது. ஆயினும், அக்காலத்துச் சைவர்களின் அக்கறையின்மையாலும், கிறிஸ்தவர்களின் எதிர்ப்பாலும் அவரது முயற்சி உடனே வெற்றியை எதிர்கொள்ளவில்லை.

    அவர் காலமடைந்து பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, திருக்கேதீஸ்வரம் கோவிலின் தொன்மைப் புகழைப்பற்றி நிலையான பதிவைத் தனது அலுவலக அறிக்கையில் எழுதியிருந்த ஸர் வில்லியம் ட்வைமனால் 13, டிசம்பர் 1893ல் யாழ்ப்பாணச் சைவர்களால், யாழ்ப்பாணக் கச்சேரியில் [அரசு அலுவலகம்] நடத்திய ஏலத்தில், நாற்பது ஏக்கர் காட்டுநிலம் யாழ்ப்பாணச் சைவர்களால் வாங்கப்பட்டபோது அவரது கனவு நிறைவேறியது.

    எந்தவொரு புதுப்பிக்கும் வேலையும் செய்யப்படும்முன்பு இந்தப் பண்டைய கோவில் இருந்த நிலத்தின் நிலைபற்றிய பதிவு நவம்பர் 7, 1887ல் “திருக்கேதீஸ்வரம், மஹாதிட்ட, மாதோட்டம் அல்லது மாந்தொட்டை[7],” என்ற தலைப்பில் டபில்யூ. ஜே. பொவாக்கே [W. J. Boake] சமர்ப்பித்த கட்டுரையிலிருந்து திரட்டிக்கொள்ளலாம்.

    “செதுக்கப்பட்ட சிலைகளின் சில துண்டுகள், உடைந்த ஓடுகள், செங்கல்கள், மட்பாண்டச் சில்லுகள் தவிர வேறெதுவும் இப்புராதன நகரின் நிலப்பகுதிக்குமேல் காணப்படவில்லை.  இந்நிலம் மட்டுமீறிப் பெரிதாக வளர்ந்த, அடர்த்தி குறைந்த, தாழ்ந்த காடாகிவிட்டிருக்கிறது; சில தனக்கா, பவொப்பா மரங்கள்தாம் பெரிதாக வளர்ந்துள்ளன.  பழைய தெருக்கள் இருந்ததற்கான அடையாளமும், இரண்டு–மூன்று கிணறுகளும் காணப்படுகின்றன.  அங்கிருந்த குன்றின் மையத்திற்குப் பக்கத்தில் ஏதோ ஒரு இடத்திலிருந்த எந்தவொரு செங்கல்கட்டிடத்தின் அடித்தளத்தின்மேல் நகரின் பெரும்பகுதி நின்றது என்று நம்பினேனோ, அவை அரண்மனை என்று குறிப்பிடப்பட்டன; கோவிலின் வாசல் கிணற்றுக்கு அருகாமையில் இருந்ததென்று சொல்லப்பட்டது.”

    [கட்டுரை சமர்ப்பித்தபோது] கூட்டத்திற்கு வந்திருந்த பி. இராமநாதன் [பிற்காலத்தில் ஸர் பொன்னம்பலம்] இந்த அறிக்கையின் ஒருபகுதிக்கு மறுப்பு தெரிவித்ததுடன், இவ்விடத்தின் இந்துசமய நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்கும் ஒரு கருத்தையும் சேர்த்தார்.  மேலும், பழைய கட்டிடங்களின் இடம் உலகியல் சார்ந்த [secular] நகரின் பகுதியல்லவென்றும், கோவிலின் உடமையென்றும், அந்தப் பகுதியின் மக்கள் கோவிலின் அதிகாரிகள், பக்தர்கள், பணியாளர்கள் என்றும் சொன்னார்.  அப்பகுதியின் ஒரு குறிப்பிடத்தக்க தனித்தன்மை —  பொவாக்கேவும், முந்தைய பிரித்தானியப் பார்வையாளர்களும் கவனிக்கத்தவறியவை, கோட்டையென்று சொல்லப்பட்டதைச் சுற்றியிருந்த இரட்டை அகழிகள் — வெளித்தடுப்பு அரணாகக் கடல்நீரையும், உட்பாதுகாப்பாக நன்நீரையும் உள்ளடக்கி, செல்வச்செழிப்பான கோவிலின் உடமைகளுக்கு வலுவான பாதுகாப்பாக அமைந்தன என்று இப்பொழுது தெளிவாகிறது.

    கோவில்நிலத்திலிருந்த சோழர்கிணறு, போர்ச்சுகீசியர் காலத்துக்குமுன் வழிபாட்டிலிருந்த சிவலிங்கம், உட்கார்ந்திருக்கும் நந்தி, அப்போது மண்மூடியிருந்த கோவில் அடித்தளத்தின் அருகிலுள்ள பிள்ளையார் திருவுருவங்கள் வாய்ப்பளித்த தடயங்களிலிருந்து தரைமட்டமாக்கப்பட்ட தலைமைக் கோவிலின் மூலமனை ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்டது.

    இலங்கை இந்துக்களின் வேண்டுதலின்படி காசியிலிருந்து புகழ்பெற்ற சிவலிங்கம் ஒன்று திருக்கேதீஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்யவேண்டிக் கொடுக்கப்பட்டதாகவும், அதுவே தற்பொழுது ஆதிமூலமாக வழிபடப்பட்டுவருவதாகவும் இராமேஸ்வரத்திலுள்ள பதிவுகள் சான்றாக உள்ளன.

    பண்டைய [கோவில் இருந்த] மிகச்சரியான நிலத்தில் ஒரு சிறிய கோவில் கட்டப்பட்டு, 1903, ஜூன் 28ம் தேதியில் பிராணப்பிரதிஷ்டை [உயிரூட்டல்] செய்யப்பட்டது[8].

    தற்போதைய சுவாமி மற்றும் அம்பாளின் சன்னதிகள் முதல் உலகப் பெரும்போருக்குப் பின்னர் மன்னாரில் பணியாற்றிய இந்துப் பொது அலுவலர்களின் [public servants] தூண்டுதலால் மிகவும் பகட்டான அளவில் கட்டப்பட்டன. அவைகளும் காலப்போக்கில் சிதிலமடைந்தன.  அக்டோபர் 19, 1948ல் இந்துக்களால் கொழும்பில் ஒரு கூட்டத்தில் துவக்கப்பட்ட திருக்கேதீஸ்வரம் கோவில் மறுநிர்மாணிப்புச் சங்கத்தின் [Thiruketheeswaram Temple Restoration Society] ஆதரவின்கீழ் புதுப்பிக்கப்பட்டு ஆகஸ்ட் 1952ல் குடமுழுக்கும் [கும்பாபிஷேகம்] செய்விக்கப்பட்டது.

    இது தற்போதைக்கு மையச்சன்னதிகளில் பூசைகளும், வழிபாடுகளும் தடையின்றித் தொடர உதவும்போது, ஒன்பது பிரகார சன்னதிகள், ராஜகோபுரம், திருமதில், மற்ற பக்கமண்டபங்களின் புதுப்பிப்புப்பணிகள் நடந்தன.

    தென்னிந்தியாவில் கிட்டும் மிகச்சிறந்த சமய, [ஆகம]சிலைக்கலை வல்லுனர்களின் திறமையால் புதுக்கோவிலின் வரைபடமும், நில அமைப்புத் திட்டமும் மரபுசார்ந்த வழியில் உருவாக்கப்பட்டன. வெளிப்பிரகாரத்தின் வடகிழக்குச் சுற்றுக்கட்டில் ஒரு உத்சவ மண்டபம் [வசந்த மண்டபம்] உடனிருக்கும், வெளிச்சுவற்றால் சூழப்பட்ட மற்ற கட்டிடங்களுக்கு நடுவில் இருக்கும்.  மாபெரும் பக்தர்திரளுக்கு இடங்கொடுக்கும்வகையில் வெளிச்சுவருக்கு வெளியே சுற்றிலும் அகலமான பகுதியில் இரதவீதி அமைந்திருக்கும்.  அதைச் சுற்றியுள்ள நிலங்களில் குறுக்குநெடுக்கான வீதிகள் பூங்காக்கள், பொழில்கள், தோப்புகள், மடங்கள், சத்திரங்கள், அர்ச்சகர், அடியார்கள், கோவில் பணியாளர்களுக்கான வீடுகள் இவற்றுக்கு ஏற்பாடளிக்கும்வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

    திட்ட அமைப்பில் குருகுலம், சமய மேற்படிப்புக்கான கல்லூரி, சாதுக்களுக்கான ஓய்விடம் இவற்றிற்கும் திட்த்தில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.  குருகுலம் ஏற்கனவே உருவாகியிருக்கிறது.  கோவிலுக்குச் செல்லும் வழியில் அநாதை இல்லத்திற்கான இடவசதியுடன் மகளிர் நல்வாழ்வு மையம் ஒன்று கட்டப்பட்டுவருகிறது.

    நினைவுக்கெட்டாத பழங்காலத்தில் நம்மை வந்தடைந்த புராதனமான சிவலிங்கம், இலங்கைமீது ஐரோப்பியப் படையெடுப்புகளால் சிலகாலம் தலைமறைவாகியபின்னர், மேற்குப் பிரகாரத்தில் சிறப்பாகக் கட்டப்பட்ட மண்டபத்தில் இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வந்திருந்த மாபெரும் இந்துசமயப் பிரதிநிதிக் கூட்டத்தின் முன்பு அக்டோபர் 31, 1960, திங்கட்கிழமை காலை பத்துமணிக்கு தகுந்த சடங்குகளுடன் அரியணையேற்றப்பட்டது.

    இந்தக் கும்பாபிஷேகத்தின் வாய்ப்பைப் பயன்படுத்தி விநாயகர், சுப்பிரமணியர், நந்தீஸ்வரர் இவர்கள் உட்பிரகாரத்திலுள்ள தத்தம் சன்னதிகளில் நிறுவப்பட்டனர்.நினைவுக்கெட்டாத பழங்காலத்தில் நம்மை வந்தடைந்த புராதனமான சிவலிங்கம், இலங்கைமீது ஐரோப்பியப் படையெடுப்புகளால் சிலகாலம் தலைமறைவாகியபின்னர், மேற்குப் பிரகாரத்தில் சிறப்பாகக் கட்டப்பட்ட மண்டபத்தில் இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வந்திருந்த மாபெரும் இந்துசமயப் பிரதிநிதிக் கூட்டத்தின் முன்பு அக்டோபர் 31, 1960, திங்கட்கிழமை காலை பத்துமணிக்கு தகுந்த சடங்குகளுடன் அரியணையேற்றப்பட்டது.

    ‘ஈ’ என்னும் இசைத்தொனிக்கு துல்லியமாச் சுரம்கூட்டிய, தூய தாமிரம்-காரீயக் கலப்பு உலோகத்தில் லண்டனில் நன்கு அறியப்பட்ட வார்ப்பகத்தில் வார்த்த, நான்கடி விட்டமுள்ள கோவில்மணி ஒன்று ஏற்கனவே கடல்வழியாகத் திருக்கேதீஸ்வர்த்திற்கு வந்துகொண்டிருக்கிறது.  அதன் எடை ஒரு டன், மூன்று குவார்ட்டர்கள், ஐம்பதுக்கு, ஐம்பதுக்கு ஐம்பது அங்குல வடிவமைந்தது.  அதன் மொத்த எடை இரண்டு டன் ஆகிறது.  தகுந்த மணிக்கூண்டும் கட்டப்பட்டுவருகிறது.

    1960ன் திருவெம்பாவுக்காக கடல்மட்டத்திற்கு எழுபத்தைந்தடி உயரத்திலிருந்து மன்னார் மாவட்டத்தில் பலமைல்கள் வட்டாரத்திலிருக்கும் இந்துக்களை திருப்பள்ளியெழுச்சி பாடித்தொழுவதற்காக அழைத்தெழுப்யும் என நம்பப்படுகிறது.

    பத்துவருட இருப்பை நிறைவேற்றிய திருக்கேதீஸ்வரம் கோவில் புனரமைப்புச் சங்கம் அதிகமாகச்  என்பதை கோவிலுக்கு வருகைதந்தால்மட்டுமே ஒரு இந்து அடியாரால் உணரவியலும்.  யாத்திரிகர்களின் வசதிக்குத் தேவையானதை நிறைவேற்றும் பல மடங்களுக்கும், கோவிலின் வாயிற்படிக்கு நேராக வருவதற்கு நல்ல வண்டிவரக்கூடிய தார்ரோடும் உள்ளது. பாலாவி ஆற்றில் புனித நீராடுவதற்காக சிமிண்ட் படிகளுல்ல குளிக்கும் துறையும், அருகாமையில் மற்ற நோக்கத்திற்காக குழாய்த் தண்ணீர் வசதியும் உள்ளன.  அடியார்களின் அனைத்து அன்றாடத் தேவைகளை எதிர்கொள்ள மின்வசதி, தொலைபேசி இணைப்புள்ள துணை அஞ்சல் அலுவலகம், கடைகள், மன்னாரிலிருந்து அடிக்கடி பஸ் சேவை உள்ளன.

    அவரது சமயத்தின், பண்பாட்டின், மொழியின், இந்நாட்டில் நிலைத்துநிற்கும் சின்னமான திருக்கேதீஸ்வரத்திற்குத் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது வருகைதருவது இலங்கையிலுள்ள ஒவ்வொரு இந்துவின் தலையாய கடமையாகும்.

    “தொண்டர் நாள்தொறுந் துதிசெய் அருள்செய்கே தீச்சர மதுதானே!”

    ***

    இக்கட்டுரை பிரதிலிபி வலையத்தில் ஆங்கில-தமிழ் மொழியாக்கப் போட்டியில் வெளிவந்திருக்கிறது.

    ***

    [1] இக்கட்டுரை சிலோன் பல்கலைக் கழகத்தில் இந்து சமயப் பகுதிக்காக எழுதப்பட்டது.

    [2]  பண்டு நால்வருக் கறமுறைத் தருளிப்பல் லுலகினி லுயிர்வாழ்க்கை

    கண்ட நாதனார் கடலிடங் கைதொழக் காதலித் துறைகோயில்

    வண்டு பண் செயு மாமலர் போழில்மஞ்ஞை நட்முடு மாதோட்டந்

    தொண்டர் நாடொறுந் துதிசெய வருள்செய்கே தேச்சர் மதுதானே.

    — திருஞானசம்பந்தர்

    [3]  மூவரென விருவரென முக்கண்ணுடை மூர்த்தி

    மாவின்கனி தூங்கும்பொழின் மாதோட்டநன் நகரிற்

    பாவம்வினை யறுப்பார் பயில் பாலாவியின் கரைமேல்

    தேவன்னெனை யாள்வான்றிருக் கேதீசரத் தானே.

    — சுந்தரமூர்த்தி நாயனார்

    [4] சிதம்பரம் கோவில் கல்வெட்டுகளும் இதைத் தெரிவிக்கின்றன.

    [5] பொது ஆண்டு 1505ல் லொரென்சா த அல்மெய்டா [Lorenza de Almeyda] காலி[Galle]க்கு வந்தார்.  ஜூடாசின் மூன்றாவது வைஸ்ராயான லோப்பெஸ்  சுவாரெஸ் [Lopez Suarez] 1517ல் கொழும்புக்குப் படையெடுத்து வந்தார்.  லோப்பே தே பிரிட்டோ [Lope de Brito] 1520ல் மன்னாருக்கு அருகிலுள்ள அர்ரிபூ முத்துக்குளிக்கும் கரைக்கு வந்தார்.

    [6] பவுத்தநூல்களான மகாவம்சமும், தீபவம்சமும் விஜயனை இலங்கையின் முதல் அரசனாகக் குறிப்பிடுகின்றன.

    [7] Royal Asiatic Society Journal, Volume No. 35

    [8] திருவிழா விபரங்களுக்கு அத்தேதிய “யாழ்ப்பாண இந்து இசைப்பெட்டி”ச்  [Jaffna Hindu Organ] செய்தித்தாளைப் பார்க்கவும்.

    Share
  • எமது வாழ்வில் கோவில் – பகுதி I

     

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா, B.A (Hons ) Dip. in ( Edu) Dip. In ( Soci ) M.Phil ( Edu ) SLEAS

    முன்னாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்              

     

    “கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று நமது முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.   இவ்வாறு கோவிலை இவர்கள் முதன்மைப் படுத்தியதற்குக் காரணம் என்ன? கோவில் இல்லா விட்டால் வாழவே முடியாதா ? கோவில் என்பது வாழ்க்கையில் கட்டாயமான ஒன்றா ? இப்படிப் பல வினாக்கள் நம்முள் பலருக்கு எழுந்த வண்ணம் இருக்கின்றன. இந்த வினாவானது அன்று தொடங்கி   இன்றுவரை மக்கள் மத்தியில் இருந்துகொண்டே இருக்கிறது. இப்படி எழுகின்ற மனங்களுக்குத் தெளிவு பிறக்கும் நோக்கில் சில கருத்துக்களை முன்வைக்கு முகமாகவே இச்சிந்தனை  இங்கு உருவாகி வந்திருக்கிறது.

     வாழ்க்கை என்பது மனிதனுக்குக் கிடைத்த பெரும்பேறு என்று தான் எண்ண வேண்டும். மனிதன் விலங்குகள் போல வாழ்ந்துவிட முடியாது.

    ஏனென்றால் சிந்தித்துச் செயலாற்றும் வாய்ப்பு மனிதனுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது. சிந்திக்கும் ஆற்றலே மனிதனை உயர்வு உடையவன்   ஆகக்காட்ட  முயல்கிறது எனலாம். விலங்குகளோடு ஒன்றாகவே காட்டில் வாழ்ந்த மனிதன் இப்பொழுது இல்லை. மனிதனது வாழ்வானது ஓங்கி உயர்ந்து வந்து நிற்கிறது. அப்படி வந்து நிற்கும் நிலையிலும் மனிதன் மனத்தில் ஒருபக்கம் விலங்கு குணமும் இயல்பும் ஒழிந்து கொண்டுதான் இருக்கிறது. அதனால் மனிதன் மனம் போனபடி வாழ முற்படுகின்றான். எப்படியும் வாழலாம் என்று வாழ்ந்து வாழ்வினையே தொலைத்தும் இழந்தும் விடுகின்றான்.

    இந்த நிலையில் ” இப்படித்தான் வாழவேண்டும் ” என்னும் நெறி முறையினை மனிதனுக்கு வழங்கி நிற்பது கோவில்களும் சமயங் களுமே ஆகும். இதனால்தான் ” கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ” என்று எமது முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்

    எனக் கொள்ள முடிகிறதல்லவா ?

    (தொடரும்)

    Share
  • போராட்டம்

    எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா

     

     

    மொழிகாக்கப் போராட்டம்

    இனம்காக்கப் போராட்டம்

    மதம்காக்கப் போராட்டம்

    மன்னருக்கும் போராட்டம்

    ஏழைக்கும் போராட்டம்

    கோழைக்கும் போராட்டம்

    இவ்வுலகில் போராட்டம்

    எத்தனையோ நடக்கிறது !

     

     

    இல்லாமை காரணமாய்

    எடுக்கின்றார் போராட்டம்

    வல்லமையை நிலைநிறுத்த

    வகைவகையாய் போராட்டம்

    வாழவெண்ணி நடத்துகிறார்

    வாழ்வெல்லாம் போராட்டம்

    நீளமாய் தொடர்கிறது

    நீள்புவியில் போராட்டம் !

     

     

    முதலாளி போராட்டம்

    முதல்பெருக வைப்பதற்கு

    தொழிலாளி போராட்டம்

    தோல்வியின்றி வாழ்வதற்கு

    அரசியலார் போராட்டம்

    ஆட்சியிலே அமர்வதற்கு

    அவர்மனதில் போராட்டம்

    அதிகசொத்துச் சேர்ப்பதற்கு !

     

    மாணவர்கள் போராட்டம்

    மதிப்பெண்கள் பெறுவதில்

    பெற்றவர்கள் போராட்டம்

    பிள்ளைகளை உயர்த்துவதில்

    ஆசிரியர் போராட்டம்

    ஊதியத்தைப் பெருக்குவதில்

    ஆளுகின்றார் போராட்டம்

    அனைத்தையுமே பதுக்குவதில் !

     

    மதுவொழிக்கப் போராட்டம்

    நடக்கின்ற தொருபக்கம்

    மதுக்கடைகள் திறப்பதற்கு

    வருகின்றார் ஒருபக்கம்

    குடிநீரே இல்லயென்று

    குடிகள்செய்வார் போராட்டம்

    குடித்துவிட்டு பலபேர்கள்

    குழப்பிடுவார் நாட்டினிலே !

     

    பார்க்கின்ற இடமெல்லாம்

    பலநிலையில் போராட்டம்

    போராட்டம் என்பதற்கே

    அர்த்தமின்றிப் போகிறது

    மனட்சாட்சி தனைநிறுத்த

    போராட்டம் தேவயன்றோ

    மனமெல்லாம் மாறிவிட்டால்

    போராட்டம் ஓடிவிடும் !

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (247)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள்.

    ஏற்கனவே வாழ்க்கைச் சிக்கல்களுக்குள் சிக்கி வாழ்வோடு கடுமையாக போராடிக் கொண்டிருக்கும் தென்கிழக்காசிய நாட்டு பகுதிகள் பலவற்றில் வாடும் மக்களை இயற்கையன்னை அடைமழை எனும் ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருக்கிறாள். அதேநேரம் வசதிகளுடன் வாழும் மேலைத்தேசமான அமெரிக்க நாட்டின் பல பகுதிகளை இதுவரை கண்டிராத சூறாவளியினால் சிதைத்துக் கொண்டிருக்கிறாள். ஆம், இயற்கையன்னை மனிதன் தன் சுயலாபத்திற்காக இயற்கையைச் சீரழிப்பது கண்டு சீற்றம் கொண்டிருப்பது போல உலகின் பல பகுதிகளிலும் இயர்கையன்னையின் ஆவேசக்கோலம் நர்த்தனமாடிக் கொண்டிருக்கிறது. உலகில் மனிதராகப் பிறந்த எம் அனைவருக்கும் எமது இறுதி முடிவு எதுவெனத் தெரிகிறது. இது ஓர் ஓட்டப் போட்டியே! அதன் இறுதிக் கயிற்றை யார் முதலில் தொடுகிறார்கள் என்பதுதான் யாருக்கும் தெரியாத மர்மமாக அமைந்துள்ளது. அது யாருக்கும் தெரியாமல் இருக்கும் காரணத்தினால் தான் மனிதர்களில் பெரும்பான்மையோர் இன்றும் மனிதத் தன்மையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    “அரிது, அரிது மானிடராகப் பிறப்பது அரிது ” என்றாள் தமிழ் மூதாட்டி. இத்தகைய அரிய பிறப்பெடுத்த நாமே , மற்றைய அரிய பிறப்புக்கைளை மதம், பணம், பொருள், காமம், காணி எனும் பல பேராசைகளின் காரணமாகச் சர்வசாதாரணமாக அழித்துக் கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காணக்கூடியதாக இருக்கிறது. பிறப்பு என்பது யாரையும் கேட்டு நடப்பதல்ல. ஆணும்,பெண்ணும் அனுபவிக்கும் இல்லற சுகத்தின் பலனாக அவர்களுக்கு அளிக்கப்படும் அன்புப்பரிசு என்பது அதற்கான ஒரு தூய விளக்கமாக இருந்தது. ஆனால் இன்றைய நாகரிக உலகத்திலே இல்லற வாழ்க்கை என்பதன் அடையாளமே மாறிப்போய்விட்டிருக்கிறது. அதுவும் குறிப்பாக மேலைத்தேசங்களில் வாழ்வோர் எப்படியும் வாழலாம் எனும் ஒரு கருத்துக்குள் தம்மைப்புதைத்து வாழ்வது போலத் தென்படுகிறது. ஆனால் அதே மேலைத்தேசங்களில் தமது பழைய கலாசார, சமயக் கோட்பாடுகளை வாழ்வின் நெறிமுறைகளாக வகுத்து வாழ்வோர் இல்லையென்று கூறி விட முடியாது. வேறு நாட்டினைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் தம்நாடுகளில் குடியேறி அங்கு அவர்களது கலாசாரங்களைப் பரவவிட்டு எங்கே தமது கலாசாரக் கோட்பாடுகளை அழித்து விடுவார்களோ எனும் அச்சம் பல மேலைத்தேச நாடுகளின் மக்கள் மனங்களில் ஊசலாடுவதின் காரணமே இங்கிலாந்தின்”ப்ரெக்ஸிட்” தேர்தல் முடிவு.

    அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி ட்ரம்ப் என்பதுவே இன்றைய யதார்த்தமாகத் தென்படுகிறது. ஹிட்லர் எனும் சர்வாதிகாரியின் கொடுங்கோல் ஆட்சியின் பின்னால் அத்தகைய ஒரு நிலை உலகில் வந்துவிடக்கூடாது எனும் காரணத்தினால் மேலைத்தேசங்கள் பலவும் சுதந்திர நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது என்பது உண்மையே. அடுக்கடுக்காய் வந்த அரசாங்கங்கள் நிறவெறி, மதவெறி, இனவெறி என்பன தலைதூக்கி விடக்கூடாது என்பதற்காக பல சட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவந்தன. அடிப்படையில் இவையனைத்தும் அந்தந்த நாடுகளில் குடியேறி வாழும் வேற்று நாட்டினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலேயே அமைந்திருந்தன. ஆனால் அவைகளின் அதியுச்ச நிலையாக அந்த நாட்டின் மக்கள் தமது மனத்தில் நிலவும் கருத்துக்களை வெளியிடுவதைத் தடுக்கும் வகையிலேயே அமைந்திருந்தன. காலப்போக்கில் வேற்று நாட்டினரின் குடியேற்றம் கட்டுமீறிச் சென்றதாலும், மேலைத்தேச நாடுகளின் பொருளாதாரம் நிலைகுலைந்து போனதாலும் ஒரு விகாரநிலை உருவெடுத்தது. இந்நிலையால் பொதுவாக மிகவும் மிதமான கொள்கைகளைக் கொண்ட பல மேலைத்தேச மக்கள் மனங்களில் கடுமையான வேற்றினத்தவருக்கெதிரான கொள்கைகள் வலுப்பெற்றன. அதன் பிரதிபலிப்பே இன்றைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் இங்கிலாந்தின் “பிரெக்ஸிட்” எனும் சிக்கலும் என்பதே உண்மை.

    இந்தப் பின்னணியில்தான் இப்போது இங்கிலாந்தில் ஒரு புதிய கடுமைப் போக்கைக் கொண்ட ஒரு தலைமை கன்சர்வேடிவ் கட்சிக்குள் உருவாகிறதோ எனும் கேள்வி எழுந்துள்ளது. இங்கிலாந்தின் தற்போதைய பிரதமரும், கன்சர்வேடிவ் கட்சியின் தலைவியுமான தெரேசா மே அவர்களின் அரசியல் எதிர்காலம் மிகவும் குறைந்ததாகவே காணப்படுக்கிறது. அவரைத் தொடர்ந்து யார் கன்சர்வேடிவ் கட்சியை வழிநடத்தப் போக்கிறார்கள் என்றொரு கேள்வி எழுகிறது. இங்கேதான் “ஜேக்கப் ரீஸ் மொஹ் ( Jacob Rees-Mogg) என்பவர் பிரசன்னமாகிறார். ஆக்ஸ்வேர்ட் பல்கலைகழகத்தில் பட்டாதாரியான இவர் இங்கிலாந்தின் பொருளாதார நிறுவனங்களில் பணிபுரிந்தவராவார். 1997ஆம் ஆண்டு தொடங்கி தேர்தல்களில் முயன்று 2010ஆம் ஆண்டு கன்சர்வேடிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகியவர். தீவிரமான கத்தோலிக்கரான இவர் மதக்கோட்பாடுகளுக்கு முதன்மை அளிப்பவர். ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதித்துவத்துக்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வந்தவர். இன்றைய இங்கிலாந்து மக்களின் அரசியல் உணர்வு இத்தகைய கடுமையான கொள்கைகளை உடைய தலைவர்கள்பால் திரும்புமா ? எனும் கேள்வி இங்கிலாந்து அரசியல் அவதானிகளிடமும் எழுகிறது.

    இந்தச் சூழலில் தான் இவர் சமீபத்தில் தான் கருக்கலைப்பு மற்றும் ஓரினத் திருமணங்கள் ஆகியவற்றுக்கு முற்றிலும் எதிரானவர் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். கத்தோலிக்க மதத்தில் இவையிரண்டும் முற்றாகத் தடை செய்யப்பட்டிருக்கின்றது. இருப்பினும் இங்கிலாந்தின் சட்டநிலைப்பாடுகள் இவையிரண்டையும் ஆதரிக்கும் வகையிலேயே அமைந்திருக்கின்றன. அவர் சார்ந்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சி பழமைவாய்ந்த கொள்கைகளையும், கிறீஸ்துவ மதக் கோட்பாடுகளையும் முக்கியமாகக் கொண்டிருந்தாலும் இந்த இரண்டு அம்சங்களிலும் அவருக்கு எதிரான நிலையையே பெரும்பான்மையான கன்சர்வேடிவ் பாரளுமன்ற அங்கத்தினர்கள் கொண்டிருக்கிறார்கள். திடீரென இவர் இத்தகைய தனது தீவிரக் கொள்கைகளை வெளியிட்டிருப்பது சந்தேகங்களுடன் கூடிய சர்ச்சையை அரசியல் வட்டாரங்களில் கிளப்பி விட்டிருக்கின்றன. இவர் தனது கொள்கைகளைச் சமூக வலைத்தளமான ட்வீட்டர் மூலமாக வெளியிட்டிருந்தார். இன்றைய மேலைத்தேச அரசியல் சூழலில் ட்ரம்ப் உட்பட பல தீவிர வலதுசாரப் போக்குடைய தலைவர்கள் தமது பிரசாரங்களுக்கு வழமையான ஊடங்களான பத்திரிகை,வானொலி, தொலைக்காட்சி என்பனவற்றை விடுத்துச் சமூக வலைதளங்களை உபயோகிக்கும் நிலையேற்பட்டுள்ளது.அமெரிக்காவில் ட்ரம்ப் அவர்களுக்கு ஏற்பட்ட திடீர்ச் செல்வாக்குப் போல இவர் தனக்கும் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் செயற்பட்டு, கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைமைப் பதவிக்கு வலைவீசுகிறாரா? என்பதுவே தற்போதைய சர்ச்சை ஆகும்.

    அதுமட்டுமல்ல… பொதுவாகக் கருக்கலைப்புக்கு எதிரானவன் என்று சொல்லியிருந்தால் கூடப் பரவாயில்லை இவரோ கற்பழிப்பு மற்றும் முறைகேடான உறவுகளின் மூலம் தோன்றிய கரு என எதுவாக இருப்பினும் அனைத்தையும் கலைப்பதற்கு எதிரானவன் என்று கூறியிருப்பதுதான் தன்னை ட்ரம்ப் வகையிலான ஒரு தீவிர வலதுசாரத் தலைவன் என்று முன்னிலைப்படுத்த முனையும் செயலா? என்பதுவே கேள்வியாகிறது.

    இதன் எதிரொலிகள் அரசியல் அரங்குகளில் மட்டுமல்ல பல பெண்களின் பதுகாப்புக்கான அமைப்புக்களையும் மிகவும் ஆவேசத்துக்குள்ளாக்கியிருக்கின்றன.  பல வானொலி கருத்தாடு களங்களில் பலமாக இவர் பற்றிய விவாதங்கள் கடந்த சில தினங்களாக நிகழ்ந்தவண்ணமிருக்கின்றன.

    ஒருவேளை இவைகள்தாம் இயற்கையன்னையின் சீற்றத்துக்குக் காரணமோ?

    என்னதான் நடக்கும் பொறுத்திருந்துதான் பார்ப்போமே!

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

     

    Share
  • ஈரோடு – கேஏஎஸ் நகரில் வாசகர் வட்டத் தொடக்கவிழா…

    Makkal Sinthanai Peravai,
    A – 47, Sampath Nagar,
    Erode – 638011.
    Ph No : 0424  – 2269186.

    *********************************************************************************************************************

    ஈரோடு – கேஏஎஸ் நகரில் வாசகர் வட்டத் தொடக்கவிழா…

    *********************************************************************************************************************

    5

    மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் மாநிலமெங்கும் வாசகர் வட்டங்கள் தொடங்கப்படுகின்றன.

    1_Small

    இதன் ஒரு பகுதியாக ஈரோடு, பூந்துறை ரோடு 46 புதூர் கேஏஎஸ் நகர் பகுதியில் மக்கள் சிந்தனைப் பேரவையின் வாசகர் வட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா 03.09.2017 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு இவ்வாசகர் வட்டத்தின் தலைவர் திரு கே.கே.ஏ. ஹாஜி சையது அகமது அலி அவர்கள் தலைமையேற்றார். இவர் கே.ஏ.எஸ் நகர் என்ற புதிய நகரையே உருவாக்கிய 82 வயதுப் பெரியவராவார். இவர் ‘ நகரத்தந்தை ’ என்றே இந்நகர் மக்களால் அழைக்கப்படுகிறார். இவர் இப்பகுதியில் இவரது சொந்தப் பொறுப்பில் ஒரு தனியார் நூலகத்தைத் தொடங்கி அதில் ஏராளமான நூல்களை ஈரோடு புத்தகத் திருவிழாவில் வாங்கி மக்கள் பயன்பாட்டிற்காக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    2_Small

    மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் திரு த. ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வாசகர் வட்டத்தைத் தொடக்கிவைத்து உரை நிகழ்த்தினார். இவர் தனது உரையில் வாசகர் வட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் வாசிப்புப் பழக்கத்தின் நன்மைகள் குறித்தும் விளக்கிப் பேசினார். தமிழகத்தில் எங்கெல்லாம் தொடர்பும் வாய்ப்பும் உள்ளதோ அங்கெல்லாம் இதுபோன்ற வாசகர் வட்டங்கள் தொடங்க பேரவை முழுமூச்சாகச் செயல்பட்டு வருவதாக தனது உரையில் அழுத்தமாகக் குறிப்பிட்டார் பேரவைத் தலைவர்.

    3_Small

    முன்னதாக வாசகர் வட்டச் செயலாளர் அரிமா எஸ். கார்த்திகேயன் வரவேற்புரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் திரு என். தமிழ்செல்வன் நன்றி கூறினார். காசிபாளையம் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் திரு கே. துரைராஜ் வாழ்த்துரை வழங்கினார்.

    4_Small

    இப்பகுதியில் வசிக்கும் வாசகர் வட்ட உறுப்பினர்கள் மட்டுமல்லாது ஈரோடு நகரின் மிகமுக்கியப் பிரமுகர்கள் பலரும் பார்வையாளர்களாக இந்நிகழ்வில் பங்கேற்றது இக்கூட்டத்திற்குச் சிறப்புச் சேர்த்த அம்சமாகும்.

    படக்குறிப்பு :

    1. மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் வாசகர் வட்டத்தைத் தொடக்கி வைத்துச் சிறப்புரையாற்றுதல்…
    1. திரளாகப் பங்கேற்ற பார்வையாளர்கள்…
    1. குடும்பங்களுடன் பங்கேற்றோர்…
    1. ஆர்வமிக்க வாசகர் வட்டத் தலைவர் திரு கே.கே.ஏ ஹாஜி சையது அகமது அலி அவர்களுக்கு செயலாளர் திரு எஸ். கார்த்திகேயன் சால்வை அணிவித்தல்…
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    விவேகானந்தரின் பூர்வாஸ்ரமப் பெயர் ‘’நரேன் என்னும் நரேந்திரர்’’…..பரமஹம்ஸரின் பூர்வாஸ்ரமப் பெயர் ‘’கதாதரர்’’(கண்ணன்)….கேசவ் உன் ஓவியத்தில் பரமஹம்ஸம் தனதம்ஸமான கண்ணனைக் கட்டித் தழுவி ஞானம் பெறுகிறது….

    170907 - Paramahamsa- 24x32 cms -watercolor-lr

    நெற்றியில் தொட்டு நரேனுக்குள் ஞானத்தை
    பற்றிட வைத்த பரமஹம்ஸா -வெற்றிடமென்
    நெஞ்சில் எழுந்தருளி அஞ்சற்க என்றிடுவீர்
    தஞ்சமென்றும் நின்னிரு தாள்….கிரேசி மோகன்….!

    Share
  • சித்ரா -2 (காதலின் புதியதொரு பரிமாணம்)

    Chitra-pic

     மூலம்: வங்கமொழி: ரவீந்திரநாத் தாகூர்;

    ஆங்கில வடிவின் தமிழாக்கம்: மீனாட்சி பாலகணேஷ்

                                  *****************

    தொடர்ச்சி: காட்சி-2

     அர்ஜுனன்: நான் ஏரிக்கரையில் கண்டது கனவா அல்லது நிஜமா? அந்தப் புல்தரையிலமர்ந்து நான் கடந்த காலத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, கானகத்தின் அடர்ந்த இருளிலிருந்து மெல்ல ஒரு அழகிய பெண்ணுருவம் வெளிப்பட்டது; வந்து நீர்க்கரையில் வெண்ணிறக்கல்லின் மீது நின்றது. அவளுடைய வெண்மையான பாதங்களின் கீழ் இருந்த பூமியின் இதயம் ஆனந்தத்தால் விம்முவது போலிருந்தது.

              கீழ்த்திசையில் காணும் மலைச்சிகரங்களின் பனி உருகி விடியலின் தங்கநிற மூடுபனித்திரையாகி வழிவதுபோல அவளுடைய உடலை மறைத்த துகில்கள் கரைந்தோடிடக் கண்டேன். கண்ணாடி போல ஒளிர்ந்த ஏரியின் நீரினை நோக்கிக் குனிந்து தனது முகத்தின் பிரதிபலிப்பை அவள் பார்த்தாள். ஆச்சரியத்தில் பிரமித்து அசையாது நின்றாள்; பின் புன்னகையோடு, அலட்சியமாகத் தன் கூந்தலைத் தளர்த்தி தன் காலடியில் பூமியில் தழைய விட்டாள். தனது ஆடையைத் தளர்த்தி, குறைகளின்றிப் படைக்கப்பட்ட தனது மார்பகங்களையும் கரங்களையும் பார்த்துக்கொண்டாள்; முறையாகத் தழுவியபடி சிலிர்த்தாள். தலையைக் குனிந்து பார்த்தபோதில் பூவிரிந்தது போன்ற இளமையின் இனிய வடிவையும் தோலின் இளஞ்சிவப்பு வண்ணத்தையும் கண்டாள். ஆச்சரியமான மகிழ்வில் அவள் ஜொலித்தாள். காலையில் கண்களை விரிக்கும் அழகிய வெண்தாமரைமலர் கழுத்தை வளைத்துத் தனது நிழலை நீரில் கண்டால், நாள்முழுதும் அதனையே நோக்கிக் கொண்டிருப்பாளா என்ன? அவளுடைய இதழ்களிலிருந்து அந்தப்புன்னகை மறைந்தபின்பு மெல்லிய ஒரு சோகம் அவள் கண்களில் குடியேறியது. தனது கூந்தலை முடிந்து கொண்டவள், ஆடையைத் தனது தோள்களின் மீது சரிசெய்து கொண்டாள். மெல்லியதொரு பெருமூச்சுடன் அழகான ஒரு மாலைப்பொழுது இரவினுள் கரைவது போல் சென்று மறைந்தாள். மிகவும் உயர்வானதொரு எழுச்சியின் நிறைவு ஒரு மின்னலைப்போல் தோன்றிப்பின் திடீரென மறைவதுபோல இருந்தது…. ஆ! அது யார் கதவைத் தள்ளித் திறக்கமுயல்வது?

              [சித்ரா ஒரு பெண்ணின் ஆடைகளில் உள்ளே வருகிறாள்]

              ஆ! அவள்தான். என் நெஞ்சே! அமைதியாக இரு!……… மாதரசியே, என்னைக்கண்டு அஞ்ச வேண்டாம்! நான் ஒரு க்ஷத்திரியன்.

     சித்ரா: மதிப்பிற்குரிய ஐயா, தாங்கள் எனது விருந்தினர். நான் இந்தக் கோவிலில் வாழ்கிறேன்.  தங்களுக்கு எந்தவிதத்தில் விருந்தோம்புவதென அறிய இயலவில்லையே!

    அர்ஜுனன்: அழகிய மாதே! உன்னைக்காணும் பெரும்பேறே உயர்வான விருந்தோம்பலுக்குச் சமமானதாகும். நீ தவறாக எடுத்துக் கொள்ளாவிடில், உன்னை ஒரு கேள்விகேட்க விரும்புகிறேன்.

     சித்ரா: அதற்கு நான் அனுமதி அளிக்கிறேன்.

     அர்ஜுனன்: உனது பேரழகினை மனிதர்கள் காணவியலாமல் இந்தத் தனிமைக் கோவிலில் அடைபட்டுக் கிடக்கச் செய்துள்ள கொடூரமான சபதங்கள் எதுவாகும் என நான் அறிந்து கொள்ளலாமா?

     சித்ரா: எனது உள்ளத்தில் ஒரு ரகசியமான விருப்பம் உள்ளது. அது நிறைவேறுவதற்காக நான் சிவபெருமானுக்கு தினம் பூசைகள் செய்து வருகிறேன்.

     அர்ஜுனன்: ஓ! உலகமே உன்னை விரும்புபவளாகிய நீயும் விரும்பும் பொருள் ஒன்று உள்ளதோ? சூரியன் தனது நெருப்புக் கால்களைப் பதிக்கும்  கிழக்கெல்லையிலுள்ள மலையிலிருந்து அச்சூரியன் மறையும் பூமிவரை நான் பயணப்பட்டிருக்கிறேன். உலகிலுள்ள அத்தனை மதிப்புள்ள, அழகான, பெருமைவாய்ந்த அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். நீ தேடுவது எதனை அல்லது யாரை எனக் கூறினாயாயின், அந்த அறிவு அனைத்தையும் உனக்குத் தருவேன். நீ விரும்பும் பொருளை அடையலாம்.

     சித்ரா: நான் தேடுபவரை அனைவரும் அறிவார்கள்.

    அர்ஜுனன்: கட்டாயமாக! உனது இதயத்தைக் கவர்ந்து கொண்டுள்ள அந்தக் கடவுள்களுக்கும் விருப்பமானவன் யார்?

    சித்ரா: மிகவும் உயர்வான அரசகுலத்தைச் சார்ந்த அவர், வீரர்களிலேயே மிகவும் சிறந்தவரும் ஆவார்.

    அர்ஜுனன்: மாதே! உனது உயர்வான அழகை, பொய்யான கீர்த்தியின் சன்னிதியில் படையலிடாதே! சூரியன் உதிக்கும் முன்பெழும் காலைப்பனிபோல் தவறான புகழாரங்கள் ஒருவரிடமிருந்து ஒருவரைச் சென்றடைகின்றன. அரசவம்சங்களிலேயே மிகவும் உயர்வான வம்சத்தைச் சேர்ந்த அந்த மாபெரும் வீரன் யாரென எனக்குக் கூறுவாய்! 

    சித்ரா: தவசியே! மற்றவர்களின் புகழைக் கண்டு நீ பொறாமைப்படுகிறாய்!  உலகிலேயே குரு அரசவம்சமானது மிகவும் புகழ்வாய்ந்ததென்று உனக்குத் தெரியாததா?

    அர்ஜுனன்: குரு வம்சமா?!

    சித்ரா: அத்துணை புகழ்வாய்ந்த அரச வம்சத்தின் பெயரை நீ அறியாயோ!

    அர்ஜுனன்: உனது வாய்மொழியாக நான் அதைக்கேட்க விழைகிறேன்.

    சித்ரா: உலகையே வென்ற ஆற்றல் படைத்த அர்ஜுனனே அவர். உலகின் அத்தனை மனிதர்களின் வாயிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தப் பெயரை நான் எனது கன்னியுள்ளத்தில் பத்திரமாக ஒளித்து வைத்துள்ளேன். தவசியே! நீர் ஏன் சிறிது கலக்கத்துடன் காணப்படுகிறீர்? அப்பெயர் என்ன வஞ்சனையில் ஒளிருவது தானா? உண்மையைக் கூறுங்கள், அப்படியாயின் எனது உள்ளச்சிறையை உடைத்து அந்தப் பொய்யான ரத்தினத்தை மண்ணில் எறிய நான் தயங்க மாட்டேன்.

    அர்ஜுனன்: பெண்ணே! அவனுடைய வீரமும் தீரமும் பொய்யாகவோ, உண்மையாகவோ இருந்துவிட்டுப் போகட்டும்; தயவுசெய்து உனது உள்ளத்திலிருந்து அவனை வெளியேற்றி விடாதே! ஏனெனில் அவன் இப்போது உனதடியில் மண்டியிட்டுக் கிடக்கிறான்.

    சித்ரா: தாங்களா? அர்ஜுனரா?

    அர்ஜுனன்: ஆம். நானே அவன், உன்வீட்டு வாயிலில் காதலில் வாடி நிற்பவன் நானே!

    சித்ரா: அப்போது, அர்ஜுனன் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பிரம்மசரிய விரதம் பூண்டுள்ளார் என்பது உண்மையல்லவா?

    அர்ஜுனன்: இரவின் தெளிவற்ற தன்மையை நிலவொளி கரைத்துவிடுவதனைப்போல் நீ எனது சபதத்தைக் குலைத்துவிட்டாய்!

    சித்ரா: ஓ! உங்களுக்கு வெட்கமாக இல்லையா? தங்கள் சபதம் பொய்க்குமாறு செய்ய என்னிடம் எதனைக் கண்டீர்கள்? தங்களது நேர்மையையே விலையாகக் கொடுக்கத் தயங்காத நீங்கள் இந்தக் கரிய கண்களில், பால்போலும் கரங்களில், யாரைக் கண்டீர்கள்? எனது உண்மை வடிவையல்ல என நானறிவேன். இது ஆண் பெண்ணுக்குச் செலுத்தும் உயர்வான மதிப்பான பொருளல்ல; நிச்சயமாக இது காதலும் அன்று. இந்தப் பலஹீனமான வேடம், இந்த உடல், இவையனைத்தும் ஒருவரை, உள்ளிருக்கும் அழிவற்ற ஆன்மாவைக் காண முடியாதபடிக் குருடாக்கிவிடுகின்றன. ஆம்! அர்ஜுனா! உமது புகழ்வாய்ந்த வீரம்செறிந்த ஆண்மை பொய்மையானது என இப்போது நானறிகிறேன்.

     அர்ஜுனன்: ஆ! புகழும், வீரத்தால் விளையும் பெருமிதமும் எத்தனை நிலையற்றதென நான் இப்போதுதான் உணர்கிறேன். எல்லாமே ஒரு கனவு போலுள்ளது. நீ ஒருத்தியே முழுமையானவள்; பூரணமானவள்; நீயே உலகின் முதன்மையான செல்வம்; வறுமையின் முடிவு; முயற்சிகளின் நோக்கு, நீ ஒருத்தியேதான்! மற்று உள்ள அனைத்தையும் காலம் செல்லச்செல்ல மட்டுமே உணர இயலும். உன்னை ஒருமுறை கண்ணால் காண்பது மட்டுமே முழுமையின் நிறைவை இப்போதும் எப்போதும் அளிக்கும்.

     சித்ரா: அந்தோ! அர்ஜுனா! அது நானல்ல, நானல்ல! அது கடவுளின் வஞ்சனை! சென்றுவிடு, எனது வீராதிவீரனே! பொய்மையை வேண்டிக் கேட்காதே! உனது பரந்த இதயத்தை ஒரு மாயத்தோற்றத்திற்குக் காணிக்கையாக்காதே! சென்றுவிடு!

                                                      [தொடரும்]

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    -கிரேசி மோகன்

    170906 - Antaryami - Dialogue with Arjuna -lr

    ’’பகவான் உவாச!”

    ‘’அந்தர்(உள்ளே)யாம் நானுன் அருகிருந்தும், பின்னாடி
     பந்தர்(ஹிந்தி) அரனார்(மாருதி ருத்ராம்ஸம்) பலமிருந்தும் – உந்தன்
    மனச்சோர்(வு) எதுவோ! மகனேகேள் , சாகும்(மனித இனம்)
    இனத்தோர்மேல் ஏனிந்த ஈர்ப்பு!”

     

     

     

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 1

    -மேகலா இராமமூர்த்தி

    மனிதன் ஒரு சமூக விலங்கு. தனித்து வாழ்வதினும் பிறரோடு இணைந்தும் இயைந்தும் வாழ்வதிலேயே அவன் வெற்றி அடங்கியிருக்கின்றது. சமூக அறம் இருவகைப்பட்டது. ஒன்று இல்லறம்; மற்றது துறவறம். ஆசைகளையும் தேவைகளையும் துறந்து பற்றற்ற நிலையில் வாழும் துறவென்னும் அறம் எல்லார்க்கும் எளிதில் வாய்ப்பதன்று; ஆனால் ஆணும் பெண்ணும் கணவனும் மனைவியாய் இணைந்து வாழும் இல்லறம் சாமானியர் பின்பற்றுதற்கு எளிது; அதனால் பலராலும் விரும்பப்படுவது.

    இறந்தோர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார் இவர்களோடு தம்மையும் பேணும் பணி இல்லறத்தார்க்கு உரியதாய் வகுக்கப்பட்டுள்ளதால் பற்றற்று வாழும் துறவறத்தினும் அனைவர்மீதும் பற்றுக்கொண்டு வாழும் இல்லறமே சிறந்தது என்பது வள்ளுவப் பெரியாரின் துணிபு.

    தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
    ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
    (குறள்: 43)

    ஆன்றோர் போற்றும் இந்த இனிய இல்லறத்தைத் தொடங்கிவைப்பது ஒத்த தலைவனுக்கும் தலைவிக்குமிடையே நிகழும் மணவினையே ஆகும். அத் திருமணம் தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துப்பழகியபின் நிகழும் காதல் மணமாகவும் இருக்கலாம்; பெற்றோர் கூட்டுவிக்கின்ற கடிமணமாகவும் இருக்கலாம்.

    இவ்விரு மணங்களில் குமுகத்தில் மிகுதி எது என்று ஆராய்ந்தால் தமர் என்று சொல்லப்படும் பெற்றோரும் உற்றாரும் கூட்டுவிக்கும் மணங்களே மிகுதி என்று சொல்லலாம். எனினும், நாடக வழக்கிலும், பாடல்சான்ற புலனெறி வழக்கிலும் படிப்போர்க்குச் சுவைகூட்டுதற்பொருட்டு காதல் மணங்களே ’அன்பின் ஐந்திணை’ எனும் பெயரில் நம் புலவர் பெருமக்களால் விதந்தோதப்பட்டுள்ளன.

    தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் சந்தித்து, மனங்கலந்து பின் அவர்கள் மணவுறவில் கலப்பதையே கவிஞர்தம் கவியுள்ளம் உள்ளியது என்பதற்கு நம் சங்கப் புலவர்கள் வடித்துத் தந்துள்ள அகத்திணைப் பாடல்களே அங்கை நெல்லியாய்ச் சான்றுபகர்கின்றன. சங்கப் புலவர்களின் மொத்த எண்ணிக்கை 473 என்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் அகம் பாடிய புலவர்களின் எண்ணிக்கை மட்டுமே 373. அகத்திணைப் பாடல்கள்பால் தம் அகத்தினை நற்றமிழ்ப் புலவர்கள் நனிசெலுத்தினர் என்பது இதன்வாயிலாய்த் தெற்றெனப் புலப்படுகின்றது!

    ”உலகின் பிறநாட்டாரெல்லாம் காதலை வெறும் ஆண்பெண் உறவு என்றே (மலினமாய்) நினைத்திருந்த வேளையில், அதனையும் தாண்டிய உள்ளத்து உணர்வு அது என்பதைத் தமிழர்தாம் அடையாளம் கண்டிருக்கின்றனர். அஃது ஒருவித மனநிலை என்பதே அவர்கள் துணிபு.” என்று கூறும் தமிழறிஞர் அ.ச.ஞானசம்பந்தன்,

    ”புறத்தை ஒரு மரம் என்று கொண்டால் அகமாகிய இல்லற வாழ்வே அதன் வேர்கள். வேர்கள் வெளியில் தெரியாமல் இருக்கலாம்; ஆனால் அவையின்றி மரமேயில்லை. அதுபோல் குடும்பம் நன்றாக அமைந்தால்தான் சமூகம் நன்றாய் அமையும்” என்று அகத்தின் பெருமையைச் சகத்துக்கு அறைகின்றார்.

    மானுடக் காதலையே பெரிதுவக்கும் நம் சங்கத்தமிழ் நூல்கள் பாடல்களின் அடியெல்லையின் அடிப்படையில் அவற்றை எட்டுத்தொகையாகவும் பத்துப் பாட்டாகவும் பகுத்தன.

    ”நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
    ஒத்த பதிற்றுப்பத்து ஓங்குபரிபாடல் கற்றறிந்தார்
    ஏத்தும் கலியொடு அகம்புறமென்று
    இத்திறத்த எட்டுத் தொகை”
    என்பது எட்டுத்தொகைக்கான பட்டியல்.

    இதில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, என அகத்தை மட்டுமே பாடிய நூல்கள் ஐந்து. புறநானூறும் பதிற்றுப்பத்தும் புறச்செய்திகளைப் பேசுவன. பரிபாடல் அகமும் புறமும் விரவியது.

    எட்டுத்தொகை நூல்களுள் உரையாசிரியர்களால் அதிகம் எடுத்தாளப்பட்டுள்ள பெருமைக்குரிய நூல் குறுந்தொகையே. நான்கடி சிற்றெல்லையும் எட்டடி பேரெல்லையும் கொண்ட குறுந்தொகை 205 புலவர் பெருமக்களால் பாடப்பெற்ற சிறப்புக்குரியது. இந்நூல், காதலையும் அதுசார்ந்த வாழ்க்கை நிகழ்வுகளையும் மையப்படுத்திய நூலாயினும், மக்கள் வாழ்வோடு இரண்டறக் கலந்திருந்த இயற்கை குறித்த செய்திகளுக்கும் இதில் பஞ்சமில்லை.

    Beauty Waterfallநிவந்தோங்கிய மலைகள், அதிலிருந்து வீழும் வெண்துகில் நிகர்த்த அருவிகள், மரங்களில் தூங்கும் தேனிறால்கள், பாய்ந்துசெல்லும் காட்டாறுகள், பிளிறிச்செல்லும் பெருங்களிறுகள், வேட்டையாடும் வேங்கைகள், மருண்டு நோக்கும் மான்கூட்டங்கள், மனமயக்கும் மஞ்ஞைகள், கருங்கண் தாக்கலைகள், காமர் மந்திகள், அவற்றின் கல்லா வன்பறழ்கள், சித்தம் மயக்கும் புத்தம்புது மலர்கள், தினைக்கதிர் தின்னவரும் கிளிகள், கிழங்குகளை அகழ்ந்தெடுக்கும் காட்டுப் பன்றிகள் எனக் குறுந்தொகை நம் கண்முன் விரிக்கும் காட்சிகள் கவினார் உலகுக்கு நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்வன.

    இயற்கை வளத்தையும் தாவர சங்கமத்தையும் இழந்து நாம் வறிஞராய் இன்று நிற்கும் பேரவலம் குறுந்தொகையைப் படிப்போர் உள்ளத்தில் பொங்கியெழுவது தவிர்க்கவியலாதது. எனினும், இப்பாடல்கள் வழியேனும் அவற்றை மீட்டும் நினைவுகூர்வது சற்றே ஆறுதலளிப்பதாகும்.

    பழந்தமிழரின் காதல் வாழ்வையும், விழுமியங்களையும், இயற்கையோடு அவர்கட்கிருந்த அகலாப் பெரும்பிணைப்பையும், இன்னபிற செய்திகளையும் நறுந்தேனாய் இனிக்கும் குறுந்தொகைவழிச் சுவைப்போம் சிறிது; புறப்படுங்கள்!

    [தொடரும்]

     

     

     

    Share
  • திருமந்திரத்தில்  சில சிந்தனைத் துளிகள் 25

    க. பாலசுப்பிரமணியன்

    திருமூலர்-1

    அந்தரத்திலும் அப்பாலும் அவனே

    ஒருமுறை ஒரு துறவி ஒரு கிராமத்தின் வழியாக இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு சிறுவன் கையில் ஒரு மெழுகுவத்தியை ஏற்றிக்கொண்டு ஒரு கோவிலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான். அந்தத் துறவி அந்தச் சிறுவனை நிறுத்தி வினவினார்: “சிறுவனே, இந்த மெழுகுவத்தியில் இருக்கும் ஒளி எங்கிருந்து வருகின்றது?

    உடனே அந்தச் சிறுவன் அவரைப் பார்த்து ஒரு புன்முறுவல் செய்துவிட்டு வாயினால் ஊதி அந்த மெழுகுவத்தியை அணைத்தான். பின்பு அந்தத் துறவியைப் பார்த்து “இந்த ஒளி எங்கே சென்றது?” என திருப்பிக்கேட்டான். அந்தத் துறவி பதிலளிக்க முடியாது திகைத்து நின்றார். உடனே அந்தச் சிறுவன் “இந்த ஒளி எங்கிருந்து வந்ததோ அந்த இடத்துக்கே அது சென்றுவிட்டது.” என பதிலளித்தான். அந்தத் துறவி உடனே அவன் கால்களில் விழுந்து “நீ எனக்கு குருவானாய். ஒரு மிகப் பெரிய தத்துவத்தை எவ்வளவு எளிதாக எனக்கு விளக்கிவிட்டாய்” என்றுரைத்தார்.

    இந்த அழகிய தத்துவத்தை விளக்கும் வண்ணம் திருமூலர் இறைவனின் ஒன்றுபட்ட  தன்மையை கீழ்கண்ட பாடலில் வெளிப்படுத்துகின்றார்

    தானே படைத்திடுந் தானே அளித்திடுந்

    தானே துடைத்திடுந் தானே மறைத்துடுந்

    தானே இவை செய்து தான்முத்தி தந்திடுந்

    தானே வியாபித் தலைவனு மாமே.

    அருள் வடிவாக நின்று எல்லாச் செயல்களுக்கும் பொறுப்பேற்று நம்மை ஆட்கொள்ளும் இறைவனின் அன்பினை வார்த்தைகளில் வடிக்கவும் முடியுமோ ?

    இந்தக் கருத்தின் உண்மையை விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது கம்பனின் பாடல்:

    உலகம் யாவையும் தாமுளவாக்கலும்,

    நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா,

    அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்!

    அன்னவர்க்கே சரண் நாங்களே”

    அந்த ஒருவனே பல வண்ணங்களில் பல வடிவங்களில் பலவிதமாகத் தோன்றும் பொழுது அவனை நாம் எப்படி வர்ணிக்க முடியும் ? அந்த பலவித வடிவங்களும் நமக்கு எப்படிப்பட்ட ஆனந்தத்தைக் கொடுக்கும்? இந்த அனுபவத்தை எடுத்துரைக்கும் வண்ணம் மாணிக்க வாசகர் பாடுகின்றார்:

    துண்டப் பிறையான் மறையான பெருந்துறையான்

    கொண்ட புரிநூலான் கோலா மா ஊர்தியான்

    கண்டம் கரியான் செம் மேனியான் வெள் நீற்றான்

    அண்டம் முதல் ஆயினான் அந்தம் இலா ஆனந்தம்

    பண்டைப் பரிசே பழ அடியார்க்கு ஈந்தருளும்

    அண்டம் வியப்பு உறுமா படும் காண் அம்மானாய்

    வள்ளலாரோ இந்த ஆனந்தத்தை வலியுறுத்தும் வண்ணம் பாடுகின்றார்

    அந்தரமாய் அப்பாலாய் அதற்கப் பாலாய்

    அப்பாலுக் கப்பாலாய் அமர்ந்த தேவே.”

    இத்தனை வடிவங்களிலும் இடங்களிலும் இருப்பவன் நம் கண்ணுக்குப் புலப்படாமல் “மரத்துள் மறைந்த மாமத யானையாக” இருக்கையில் அவனை வெறும் கற்சிலைகளிழும்  ஐம்பொன் சிலைகளில் மட்டும் காணமுடியுமா? இந்த ஐயத்தை விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது பட்டினத்தாரின் கீழ்கண்ட பாடல்:

    சொல்லிலுஞ் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும்

    அல்லினு மாசற்ற வாகாயந் தன்னிலு மாய்ந்துவிட்டோர்

    இல்லுலு மென்ப ரிடத்துலு மீசை னிருக்குமிடங்

    கல்லினுஞ் செம்பிலு மோவிருப் பானெங்கள் கண்ணுதலே.

    கல்லிலும் செம்பிலும் காணக்கிடைக்காத இறைவன் நம் உள்ளில் இருப்பதை எப்படி உணர முடியும்? இதற்க்கு ஒரே வழி நம்மிடம் உறைந்து கிடைக்கும் ஆணவ மலத்தை அடியோடு நீக்குவதே. அந்த ஆணவமலம் அகலும் பொழுது எல்லாம் அவன் செயல் என்ற உணர்வு மட்டுமின்றி “நான்”, “தான்” என்ற நினைப்பு நீங்கி உள்ளில் உலா வரும் உத்தமனை உண்மையின் உருவை தரிசிக்கவும் அனுபவிக்கவும் முடியும் இதை விளக்கும் வண்ணம் திருமூலர் கூறுகின்றார்

    நானன்றுந் தானென்றும் நாடினேன் நாடலும்

    நானென்றுந் தானென் றிரண்டிலை யென்பது

    நானென்ற ஞான முதல்வனே நல்கினான்

    நானென்று நானும் நினைப்பொழிந் தேனே.

    இத்தனை சக்திவாய்ந்த அருளின் வடிவான ஒளிப்பிழம்பை உள்ளும் புறமும் பறந்து விரிந்து நின்று ஆளுகின்ற அமரனை நாம் எப்படிப் போற்றுவது? வார்தைகளாலா, பூசைகளாலா அல்லது நமது செயல்களாலா? அது எப்படி இருந்தால் என்ன? எல்லாமே அவன் கொடுத்தது. எனவே அவனால் ஏற்றுக்கொள்ளக்கூடியது .

    அப்பர் பெருமான் கூறியபடி “வாழ்த்த வாயும், நினைக்க மடநெஞ்சும்  தாழ்த்த சென்னியும் தந்த தலைவன்” அதில் எதன் மூலமாக அவனைப் போற்றினாலும் வாங்கிக்கொள்ளாமல் மறுக்கவாபோகிறான்?

    தொடருவோம்

    Share
  • வெற்று வார்த்தையில் பற்றி எரியுமா?

    இரா.சந்தோஷ் குமார்

     

    கோழையாக உணர்கிறேன்.
    வெட்கப்பட்டு கொள்கிறேன்.

    புரட்சி என்றெல்லாம்
    எழுதுவது எதுவும் வீரம் தான்.
    எழுதுவது மட்டுமே வீரமல்ல.

    ஒவ்வொரு கொடுமைக்கும்
    ஒவ்வொரு உரிமை மறுப்புக்களுக்கும்
    உண்மையில் மனம் வெம்பி எழுதினாலும்
    பொய்யாக கூட..
    போலியாக கூட
    செஃல்பி எடுத்து விளம்பரமாக கூட
    அநீதி என சாலை மறியல் செய்ததில்லை.
    அநியாயத்தின் கண்களில்
    குரல் விரல் நீட்டி குத்தும்
    ஒரு அறப்போராட்டத்தில் பங்கேற்றதில்லை.
    மெரீனாக் கடற்கரைக்கு
    காற்று வாங்க சென்றிருக்கிறேன்
    காதலைப் பெற சென்றிருக்கிறேன்.
    கவிதை எழுத சென்றிருக்கிறேன்
    ஒரு முறை கூட
    போராட்டமென சென்றதில்லை.

    ஆனாலும் எழுதுகிறேன்
    வீர தீர மானம் தன்மானம்
    சுயமரியாதை சமூகநீதி என
    ஏதோ புலம்புகிறேன்.

    காக்கிச் சட்டைக்காரர்களின்
    அதிகார தாக்குதலை
    ஒரு முறை சுவைத்தால் போதும்..
    தாக்குதலே ஒரு போதையென
    ஒராயிரம் போராட்டத்திற்கு
    முன் நிற்கும் தலைமை தைரியம் வருமாம்.

    ஆனால் ஏனோ காகித புலி

    களத்தில் நின்ற சரித்திரமில்லை.!

    சே குவேராவை வாசித்தவனுக்கு
    பாரதியை பாரதிதாசனை நேசித்தவனுக்கு
    வீதியில் இறங்கி போராடும்
    அஞ்சாமை இல்லை எனும் போது
    நான் கோழையாகிறேன்
    எழுதுவதால்
    வெட்கப்படுகிறேன்.

    புரட்சி என்றெழுதினால் மட்டுமே
    பற்றி எரியாது காகிதம் தானே ?

     

     

    Share
  • நிலைக்கும் என்றே..!

     பெருவை பார்த்தசாரதி

    நிலையாமை

     

     

     

     

     

     

     

     

     

     

    நிலையில்லா உலகினிலே நீடித்து வாழ்வதற்கே..

    ……….நில்லாமல் பெரும்பொருளீட்ட ஓயாமல் ஓடுவார்.!

    நிலையில்லாத உடல்தனையே நித்தம் ஓம்புவார்..

    ……….நாறுகின்ற மெய்யுடலை நாளும்பேணிக் காப்பார்.!

    நிலத்தில் புதையும் பிணத்தை மெய்யெனநினைத்து..

    ……….நெடுநாட்கள் வாழும்கனவில் தலைகீழாய் நிற்பார்.!

    நிலைக்கும் என்றே நினைப்பார்.!எதுவுமிவ்வுலகில்..

    ……….நிலையிலை! என்பதைறியார் தம்வாழ்வு முடிவுவரை.!

     

     

    மாறுகின்ற உலகினில் மாற்றமொன்றே நிரந்தரமாம்..

    ……….மனதினிலிக் கருத்தை இறுத்தியே பழகவேணுமப்பா.!

    வீறுகொண்ட இளமைகூட சட்டெனக் கழிந்துவிடுமது..

    ……….வீணாகமல் வாழ்க்கையில் கடமை யாற்றவேண்டும்.!

    வேறுலக்கு வெற்றுடனே போவோமென அறிந்தும்..

    ……….ஊரையே விலைக்குவாங்க நினைப்பார்கள் மூடர்.!

    நீறாகு இவ்வுடலைநம்பி நிலையில்லாது மனம்தாவ..

    ……….நினையாதீர்..! எதுவுமிவ்வுலகில் நிலைக்கும் என்றே.!

     

     

    இனத்திலொற்றுமை ஓங்கவே இப்பிறவி எடுத்தோம்..

    ……….எனுமுணர்வு நிலைக்கவே..இறைவனருள் வேண்டும்.!

    மனதிலிவ்வுறுதி யசையாமல் நிலைத்து விட்டால்..

    ……….மாந்தரில் வேற்றுமை முற்றிலுமென்றும் ஒழிந்துவிடும்.!

    குணத்தில் குன்றுபோல் நிலையாகவோங்க…..மனித..

    ……….குலத்தின் மகத்துவம் அறியுமெண்ணம் வேண்டும்.!

    பணத்தினாலும்….ஈட்டும் பொருளினாலும் மட்டுமே..

    ……….நிலைக்குமென்ற யாக்கை நிலைக்குமொரு பொய்யே.!

     

     

    மலருக்குத் தெரிகிறதா..? அதன்வாச மதுபோலே..

    ……….மானுடப்பிறப்பின் தத்துவம் அறியார் மாந்தர்கள்.

    பலருக்கும் பற்றுண்டாம் உலகினி லனைத்திலுமே..

    ……….பாருக்குள்ளே பலவழியில் வாழ நினைப்பார்கள்.!

    சிலருக்கு மட்டுமே புரியும் சித்தர்களின் சூட்சுமம்..

    ……….சிந்தனையில் கொள்வீரேல் உம்சித்தம் தெளிவடைவீர்.!

    உலகினில் சிறந்த மானிடப்பிறப்பதன் ரகசியமதை..

    ……….உணர்வீரெதுவும் நிலைக்காது என்ற.! மெய்யறிவீர்.!

     

     

    நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::04-09-17

     

    நன்றி:: படம் கூகிள் இமேஜ்

     

     

    Share