சித்ரா -2 (காதலின் புதியதொரு பரிமாணம்)

Chitra-pic

 மூலம்: வங்கமொழி: ரவீந்திரநாத் தாகூர்;

ஆங்கில வடிவின் தமிழாக்கம்: மீனாட்சி பாலகணேஷ்

                              *****************

தொடர்ச்சி: காட்சி-2

 அர்ஜுனன்: நான் ஏரிக்கரையில் கண்டது கனவா அல்லது நிஜமா? அந்தப் புல்தரையிலமர்ந்து நான் கடந்த காலத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, கானகத்தின் அடர்ந்த இருளிலிருந்து மெல்ல ஒரு அழகிய பெண்ணுருவம் வெளிப்பட்டது; வந்து நீர்க்கரையில் வெண்ணிறக்கல்லின் மீது நின்றது. அவளுடைய வெண்மையான பாதங்களின் கீழ் இருந்த பூமியின் இதயம் ஆனந்தத்தால் விம்முவது போலிருந்தது.

          கீழ்த்திசையில் காணும் மலைச்சிகரங்களின் பனி உருகி விடியலின் தங்கநிற மூடுபனித்திரையாகி வழிவதுபோல அவளுடைய உடலை மறைத்த துகில்கள் கரைந்தோடிடக் கண்டேன். கண்ணாடி போல ஒளிர்ந்த ஏரியின் நீரினை நோக்கிக் குனிந்து தனது முகத்தின் பிரதிபலிப்பை அவள் பார்த்தாள். ஆச்சரியத்தில் பிரமித்து அசையாது நின்றாள்; பின் புன்னகையோடு, அலட்சியமாகத் தன் கூந்தலைத் தளர்த்தி தன் காலடியில் பூமியில் தழைய விட்டாள். தனது ஆடையைத் தளர்த்தி, குறைகளின்றிப் படைக்கப்பட்ட தனது மார்பகங்களையும் கரங்களையும் பார்த்துக்கொண்டாள்; முறையாகத் தழுவியபடி சிலிர்த்தாள். தலையைக் குனிந்து பார்த்தபோதில் பூவிரிந்தது போன்ற இளமையின் இனிய வடிவையும் தோலின் இளஞ்சிவப்பு வண்ணத்தையும் கண்டாள். ஆச்சரியமான மகிழ்வில் அவள் ஜொலித்தாள். காலையில் கண்களை விரிக்கும் அழகிய வெண்தாமரைமலர் கழுத்தை வளைத்துத் தனது நிழலை நீரில் கண்டால், நாள்முழுதும் அதனையே நோக்கிக் கொண்டிருப்பாளா என்ன? அவளுடைய இதழ்களிலிருந்து அந்தப்புன்னகை மறைந்தபின்பு மெல்லிய ஒரு சோகம் அவள் கண்களில் குடியேறியது. தனது கூந்தலை முடிந்து கொண்டவள், ஆடையைத் தனது தோள்களின் மீது சரிசெய்து கொண்டாள். மெல்லியதொரு பெருமூச்சுடன் அழகான ஒரு மாலைப்பொழுது இரவினுள் கரைவது போல் சென்று மறைந்தாள். மிகவும் உயர்வானதொரு எழுச்சியின் நிறைவு ஒரு மின்னலைப்போல் தோன்றிப்பின் திடீரென மறைவதுபோல இருந்தது…. ஆ! அது யார் கதவைத் தள்ளித் திறக்கமுயல்வது?

          [சித்ரா ஒரு பெண்ணின் ஆடைகளில் உள்ளே வருகிறாள்]

          ஆ! அவள்தான். என் நெஞ்சே! அமைதியாக இரு!……… மாதரசியே, என்னைக்கண்டு அஞ்ச வேண்டாம்! நான் ஒரு க்ஷத்திரியன்.

 சித்ரா: மதிப்பிற்குரிய ஐயா, தாங்கள் எனது விருந்தினர். நான் இந்தக் கோவிலில் வாழ்கிறேன்.  தங்களுக்கு எந்தவிதத்தில் விருந்தோம்புவதென அறிய இயலவில்லையே!

அர்ஜுனன்: அழகிய மாதே! உன்னைக்காணும் பெரும்பேறே உயர்வான விருந்தோம்பலுக்குச் சமமானதாகும். நீ தவறாக எடுத்துக் கொள்ளாவிடில், உன்னை ஒரு கேள்விகேட்க விரும்புகிறேன்.

 சித்ரா: அதற்கு நான் அனுமதி அளிக்கிறேன்.

 அர்ஜுனன்: உனது பேரழகினை மனிதர்கள் காணவியலாமல் இந்தத் தனிமைக் கோவிலில் அடைபட்டுக் கிடக்கச் செய்துள்ள கொடூரமான சபதங்கள் எதுவாகும் என நான் அறிந்து கொள்ளலாமா?

 சித்ரா: எனது உள்ளத்தில் ஒரு ரகசியமான விருப்பம் உள்ளது. அது நிறைவேறுவதற்காக நான் சிவபெருமானுக்கு தினம் பூசைகள் செய்து வருகிறேன்.

 அர்ஜுனன்: ஓ! உலகமே உன்னை விரும்புபவளாகிய நீயும் விரும்பும் பொருள் ஒன்று உள்ளதோ? சூரியன் தனது நெருப்புக் கால்களைப் பதிக்கும்  கிழக்கெல்லையிலுள்ள மலையிலிருந்து அச்சூரியன் மறையும் பூமிவரை நான் பயணப்பட்டிருக்கிறேன். உலகிலுள்ள அத்தனை மதிப்புள்ள, அழகான, பெருமைவாய்ந்த அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். நீ தேடுவது எதனை அல்லது யாரை எனக் கூறினாயாயின், அந்த அறிவு அனைத்தையும் உனக்குத் தருவேன். நீ விரும்பும் பொருளை அடையலாம்.

 சித்ரா: நான் தேடுபவரை அனைவரும் அறிவார்கள்.

அர்ஜுனன்: கட்டாயமாக! உனது இதயத்தைக் கவர்ந்து கொண்டுள்ள அந்தக் கடவுள்களுக்கும் விருப்பமானவன் யார்?

சித்ரா: மிகவும் உயர்வான அரசகுலத்தைச் சார்ந்த அவர், வீரர்களிலேயே மிகவும் சிறந்தவரும் ஆவார்.

அர்ஜுனன்: மாதே! உனது உயர்வான அழகை, பொய்யான கீர்த்தியின் சன்னிதியில் படையலிடாதே! சூரியன் உதிக்கும் முன்பெழும் காலைப்பனிபோல் தவறான புகழாரங்கள் ஒருவரிடமிருந்து ஒருவரைச் சென்றடைகின்றன. அரசவம்சங்களிலேயே மிகவும் உயர்வான வம்சத்தைச் சேர்ந்த அந்த மாபெரும் வீரன் யாரென எனக்குக் கூறுவாய்! 

சித்ரா: தவசியே! மற்றவர்களின் புகழைக் கண்டு நீ பொறாமைப்படுகிறாய்!  உலகிலேயே குரு அரசவம்சமானது மிகவும் புகழ்வாய்ந்ததென்று உனக்குத் தெரியாததா?

அர்ஜுனன்: குரு வம்சமா?!

சித்ரா: அத்துணை புகழ்வாய்ந்த அரச வம்சத்தின் பெயரை நீ அறியாயோ!

அர்ஜுனன்: உனது வாய்மொழியாக நான் அதைக்கேட்க விழைகிறேன்.

சித்ரா: உலகையே வென்ற ஆற்றல் படைத்த அர்ஜுனனே அவர். உலகின் அத்தனை மனிதர்களின் வாயிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தப் பெயரை நான் எனது கன்னியுள்ளத்தில் பத்திரமாக ஒளித்து வைத்துள்ளேன். தவசியே! நீர் ஏன் சிறிது கலக்கத்துடன் காணப்படுகிறீர்? அப்பெயர் என்ன வஞ்சனையில் ஒளிருவது தானா? உண்மையைக் கூறுங்கள், அப்படியாயின் எனது உள்ளச்சிறையை உடைத்து அந்தப் பொய்யான ரத்தினத்தை மண்ணில் எறிய நான் தயங்க மாட்டேன்.

அர்ஜுனன்: பெண்ணே! அவனுடைய வீரமும் தீரமும் பொய்யாகவோ, உண்மையாகவோ இருந்துவிட்டுப் போகட்டும்; தயவுசெய்து உனது உள்ளத்திலிருந்து அவனை வெளியேற்றி விடாதே! ஏனெனில் அவன் இப்போது உனதடியில் மண்டியிட்டுக் கிடக்கிறான்.

சித்ரா: தாங்களா? அர்ஜுனரா?

அர்ஜுனன்: ஆம். நானே அவன், உன்வீட்டு வாயிலில் காதலில் வாடி நிற்பவன் நானே!

சித்ரா: அப்போது, அர்ஜுனன் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பிரம்மசரிய விரதம் பூண்டுள்ளார் என்பது உண்மையல்லவா?

அர்ஜுனன்: இரவின் தெளிவற்ற தன்மையை நிலவொளி கரைத்துவிடுவதனைப்போல் நீ எனது சபதத்தைக் குலைத்துவிட்டாய்!

சித்ரா: ஓ! உங்களுக்கு வெட்கமாக இல்லையா? தங்கள் சபதம் பொய்க்குமாறு செய்ய என்னிடம் எதனைக் கண்டீர்கள்? தங்களது நேர்மையையே விலையாகக் கொடுக்கத் தயங்காத நீங்கள் இந்தக் கரிய கண்களில், பால்போலும் கரங்களில், யாரைக் கண்டீர்கள்? எனது உண்மை வடிவையல்ல என நானறிவேன். இது ஆண் பெண்ணுக்குச் செலுத்தும் உயர்வான மதிப்பான பொருளல்ல; நிச்சயமாக இது காதலும் அன்று. இந்தப் பலஹீனமான வேடம், இந்த உடல், இவையனைத்தும் ஒருவரை, உள்ளிருக்கும் அழிவற்ற ஆன்மாவைக் காண முடியாதபடிக் குருடாக்கிவிடுகின்றன. ஆம்! அர்ஜுனா! உமது புகழ்வாய்ந்த வீரம்செறிந்த ஆண்மை பொய்மையானது என இப்போது நானறிகிறேன்.

 அர்ஜுனன்: ஆ! புகழும், வீரத்தால் விளையும் பெருமிதமும் எத்தனை நிலையற்றதென நான் இப்போதுதான் உணர்கிறேன். எல்லாமே ஒரு கனவு போலுள்ளது. நீ ஒருத்தியே முழுமையானவள்; பூரணமானவள்; நீயே உலகின் முதன்மையான செல்வம்; வறுமையின் முடிவு; முயற்சிகளின் நோக்கு, நீ ஒருத்தியேதான்! மற்று உள்ள அனைத்தையும் காலம் செல்லச்செல்ல மட்டுமே உணர இயலும். உன்னை ஒருமுறை கண்ணால் காண்பது மட்டுமே முழுமையின் நிறைவை இப்போதும் எப்போதும் அளிக்கும்.

 சித்ரா: அந்தோ! அர்ஜுனா! அது நானல்ல, நானல்ல! அது கடவுளின் வஞ்சனை! சென்றுவிடு, எனது வீராதிவீரனே! பொய்மையை வேண்டிக் கேட்காதே! உனது பரந்த இதயத்தை ஒரு மாயத்தோற்றத்திற்குக் காணிக்கையாக்காதே! சென்றுவிடு!

                                                  [தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.