நிலைக்கும் என்றே..!
பெருவை பார்த்தசாரதி
நிலையில்லா உலகினிலே நீடித்து வாழ்வதற்கே..
……….நில்லாமல் பெரும்பொருளீட்ட ஓயாமல் ஓடுவார்.!
நிலையில்லாத உடல்தனையே நித்தம் ஓம்புவார்..
……….நாறுகின்ற மெய்யுடலை நாளும்பேணிக் காப்பார்.!
நிலத்தில் புதையும் பிணத்தை மெய்யெனநினைத்து..
……….நெடுநாட்கள் வாழும்கனவில் தலைகீழாய் நிற்பார்.!
நிலைக்கும் என்றே நினைப்பார்.!எதுவுமிவ்வுலகில்..
……….நிலையிலை! என்பதைறியார் தம்வாழ்வு முடிவுவரை.!
மாறுகின்ற உலகினில் மாற்றமொன்றே நிரந்தரமாம்..
……….மனதினிலிக் கருத்தை இறுத்தியே பழகவேணுமப்பா.!
வீறுகொண்ட இளமைகூட சட்டெனக் கழிந்துவிடுமது..
……….வீணாகமல் வாழ்க்கையில் கடமை யாற்றவேண்டும்.!
வேறுலக்கு வெற்றுடனே போவோமென அறிந்தும்..
……….ஊரையே விலைக்குவாங்க நினைப்பார்கள் மூடர்.!
நீறாகு இவ்வுடலைநம்பி நிலையில்லாது மனம்தாவ..
……….நினையாதீர்..! எதுவுமிவ்வுலகில் நிலைக்கும் என்றே.!
இனத்திலொற்றுமை ஓங்கவே இப்பிறவி எடுத்தோம்..
……….எனுமுணர்வு நிலைக்கவே..இறைவனருள் வேண்டும்.!
மனதிலிவ்வுறுதி யசையாமல் நிலைத்து விட்டால்..
……….மாந்தரில் வேற்றுமை முற்றிலுமென்றும் ஒழிந்துவிடும்.!
குணத்தில் குன்றுபோல் நிலையாகவோங்க…..மனித..
……….குலத்தின் மகத்துவம் அறியுமெண்ணம் வேண்டும்.!
பணத்தினாலும்….ஈட்டும் பொருளினாலும் மட்டுமே..
……….நிலைக்குமென்ற யாக்கை நிலைக்குமொரு பொய்யே.!
மலருக்குத் தெரிகிறதா..? அதன்வாச மதுபோலே..
……….மானுடப்பிறப்பின் தத்துவம் அறியார் மாந்தர்கள்.
பலருக்கும் பற்றுண்டாம் உலகினி லனைத்திலுமே..
……….பாருக்குள்ளே பலவழியில் வாழ நினைப்பார்கள்.!
சிலருக்கு மட்டுமே புரியும் சித்தர்களின் சூட்சுமம்..
……….சிந்தனையில் கொள்வீரேல் உம்சித்தம் தெளிவடைவீர்.!
உலகினில் சிறந்த மானிடப்பிறப்பதன் ரகசியமதை..
……….உணர்வீரெதுவும் நிலைக்காது என்ற.! மெய்யறிவீர்.!
நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::04-09-17
நன்றி:: படம் கூகிள் இமேஜ்