முனைவர். ஜ.பிரேமலதா,

தமிழ் இணைப்பேராசிரியர்,

அரசுகலைக்கல்லூரி,

சேலம் -636 007 .

சமூக மரபுரிமை எனப்படுவது நம்முடைய முன்னோர்கள் உருவாக்கித் தந்துள்ள பண்பாட்டில் காணப்படும் பல்வேறு கூறுகளாகும். இலக்கியம், நுண்கலைகள், தொழில்நுட்பஅறிவு, சமயக் கோட்பாடுகள், பழக்கவழக்கங்கள், வாழ்க்கைக் குறிக்கோள்கள் போன்ற யாவும் சமூக மரபுரிமைப்புக்குள் அடங்குவனவாகும். எனவேதான், ‘தமிழை இகழ்ந்தவனைத் தாயே தடுப்பினும் விடேன்’ என்று முழங்கினார் பாரதிதாசன்.

இச்சமூக மரபுரிமையே குழந்தைகளுக்குள் உள்ளடங்கிய பல்வேறு ஆற்றல்கள் வெளிப்பட வாய்ப்பளிக்கிறது. எனவே, சமூகச் சூழலுக்கு ஏற்றவாறு தமிழ்மொழிப்பாடம் கற்பிக்கப்படவேண்டும். தாய் மொழி வழிக்கல்வியில் பல புதுமைகள் கொண்டுவந்து, தற்காலத் தொழில் நுட்பத்திற்கேற்ப கற்கவும், கற்பிக்கவும் செய்ய வேண்டும். கணினி வழி கற்பித்தலை தமிழ் மொழிக்கும் பாலர் பருவத்திலிருந்தே செயல்படுத்தினால் கற்றலிலும் உயர்வு தோன்றும்.

உலகின் தொன்மை மொழிகள் பலவும் தாய்மொழிவழிக் கல்வியையே கொடுத்து வந்துள்ளன. பின்னர் அவை வழக்கொழிந்து பிறமொழித் தாக்கத்தால் கலப்பால் பாதிக்கப்பட்டு வழக்கொழிந்து வந்து கொண்டுள்ளன. எனினும் அவை மீண்டும் தாய்மொழிக்கல்விக்கே திரும்பியுள்ளன. ஆங்கில மொழியே அதற்குச் சிறந்த உதாரணம்.

பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை ஆங்கிலம் கேட்பாரற்று ‘ஒரு வட்டாரமொழி’ என்ற அளவில்தான் அறியப்பட்டு வந்தது. இலத்தீன்தான் சிறந்த மொழி; அறிவு மொழி என்று போற்றப்பட்டது. ஒரு வட்டார மொழியாகக் குறுகிக் கிடந்த ‘ஆங்கிலத்தைத்’ தாய்மொழியாகக் கொண்ட ‘ஜெஃப்ரி சாசர்’ தான் பள்ளி முதல் கல்லூரி வரை திணிக்கப்பட்ட இலத்தீன் மொழிக்கெதிராகப் போர்க்கொடி தூக்கினார். ஆங்கிலம் வட்டார மொழியாக இருந்தாலும், அது ஒரு பகுதி மக்களின் தாய்மொழியானால், தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது என்பதால், ஆங்கிலத்தின் வழியே கல்வி போதிக்கப்பட வேண்டும் என்று போராடினார். இத்தனைக்கும் ஆங்கிலம் ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு இடத்தில் தோன்றிய தனித்த மொழி அல்ல.

சில ஜெர்மானிய மொழிகள், கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்ச், செல்டிக் மொழி உள்ளிட்ட பல மொழிகளின் கலவையினால் உருவான கலப்பட மொழிதான் ஆங்கிலம். இக்கலப்பட மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஜான் வைக்லிப், ஜான் ஹஸ், தாமஸ் லினேகர், வில்லியம் டிண்டேல் போன்ற பலரும் போர்க்கொடி உயர்த்தி போராட்டத்தில் குதித்தனர். இதில் ஜான் ஹஸ், ஜான் ரோஜர்ஸ், தாமஸ் கிரான்மெர் பலரும் இலத்தீனைத் தாய்மொழியாகக் கொண்டவர்களால் உயிரோடு கொளுத்தப்பட்டனர். எனினும், இப்போராட்டம் தொடர்ந்து நடந்ததால் அன்றைய முதலாம் எலிசபெத் ஆங்கில தாய்மொழியாளர்கள், ‘தம் தாய்மொழியாலேயே கல்வி பயிலலாம்’ என 1563ல் அனுமதியளித்தார். 1320ல் தொடங்கிய ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் தாய்மொழிவழிக்கல்வியின் போராட்டம் 1563ல் முடிவுக்கு வந்தது.

இலத்தீன் ஆதிக்கத்தில் கட்டுண்டு கிடந்த ஆங்கிலம், விடுதலைக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கியதும், மைக்கேல் பாரடே (மின்னியல்), ஜார்ஜ் ஸ்டீஃபன்சன் (புகைவண்டி), ஜான் டால்டன் (அணு) ஜோசப் வில்சன் ஸ்வான் (கார்பனிழை மின்விளக்கு) போன்ற அறிவியலாளர்களை உலகிற்குத் தந்தது. அறிவியலுக்குத் தகுதியில்லாத மொழி எனக் கருதப்பட்ட ஆங்கிலம் “தாய்மொழிப் பற்றாளர்களால்” இன்று ‘உலகின் அறிவியல் மொழி’ யாக உயர்ந்துள்ளது. இவர்கள் எல்லாம் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஏழைகளின் பிள்ளைகள்.

தாய்மொழியான ஆங்கிலத்தில் படித்து சிந்தித்ததன் விளைவே இவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு மூல காரணம். ஆங்கிலேயரின் தாய்மொழிப் பற்று தமிழரிடம் இருந்தால், தமிழன் பல கண்டுபிடிப்புகளில் உலகிற்கே முன்னோடியாகத் திகழ்வான். ஏனெனில் பண்டைத் தமிழில் உள்ள அறிவியல் நுட்பங்கள் தமிழரின் அரும்பெரும் சொத்துக்கள். ஏற்கனவே அறிவியல் துறைகளில் கால்பதித்துவிட்ட தமிழன், தாய்மொழிப் பற்றில்லாமையினால் ஆங்கில மறதி நோய் பற்றி அனைத்தையும் மறந்து அறிவியல் கண்டுபிடிப்பை வியப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆங்கிலத்தைப் பின்பற்றுபவர்கள், ஆங்கிலேயரின் தாய்மொழிப் பற்றையும் பின்பற்றினால் தமிழ் வாழும். தமிழரும் வாழ்வர். தமிழ் தமிழரை நம்புகிறது. தமிழர்தான் தமிழை நம்பவில்லை.

தாய்மொழிவழிக்கல்விக்கு முன்னுரிமையும் சிறப்பும் தரப்பட்டால், தமிழிளைஞர்கள் பலரும் பல கலைகளில் சிந்திக்கும் நிலை பெற்றுச் சிறப்புடன் திகழ்வர். இதில் ஒரு தலைமுறை இடர்ப்பட்டு முன்னேறவேண்டியதிருக்கும். கற்பிக்கும் ஆசிரியர் ஆங்கில நூல்களைக் கொண்டே தமிழில் மொழிபெயர்த்து பாடம் நடத்தலாம். மாணவர்களும் புரியாமல் கேட்பதைவிட புரிந்த மொழியில் பாடங்களைக் கேட்டு பலவிதமான சிந்தனைகளைப் பெறலாம். ஒரு சிந்தனையுமின்றி ஆங்கில வழிப்பாடத்தை நெட்டுருப்போட்டு படிப்பதைவிட இது மேலானது. ஒரு சில பொருத்தமான சொற்கள் தமிழில் இல்லாமல் இருக்கலாம். ஒன்றும் புரியாமல் படிப்பதை விட ஒரு சில சொற்கள் புரியாமல் படிப்பது மேலானதல்லவா?

இந்தியா போன்ற பல மொழிகள் உள்ள நாடுகளில் தாய்மொழிவழிக் கல்வி என்பது கானல் நீராகவே உள்ளது. ஒரு மனிதன் சுயமாகச் சிந்திப்பதற்கும், அறிவினை மேம்படுத்திக் கொள்வதற்கும், தொடர்ந்து படிப்பதற்கும் , புதிய கண்டுபிடிப்புகளுக்கும் தாய்மொழியே பெரிதும் துணைபுரிகிறது என்ற கல்வியாளர்களின் கூற்று காற்றில் பறக்கவிடப்பட்டுவிட்டது.

தாய்மொழிப் பற்றற்ற தமிழர்கள் தான் இதற்குக் காரணம். இந்தியைத் தேசிய மொழியாக்க முனையும் மத்திய அரசோ, ஆங்கிலமோ தமிழர்க்கு எதிரியல்ல. தமிழர்தான் தமிழுக்குப் பகைவர்களாக உள்ளனர். ‘இவனா தமிழன் இருக்காது. யானைக்குப் பூனை பிறக்காது’ என மலேசியக் கவிஞர் சீனி நைனா முகம்மது இன்றைய தாய்மொழிப் பற்றற்ற தமிழனைப் பார்த்து சீறுகிறார்.

இலக்கியக் கல்விக்கு தாய்மொழிக் கல்வி என்பது பொருத்தமாக இருக்கும். ஆனால், அறிவியல் கல்விக்கு இது பொருந்தாது என்பவர்கள் அறியாமை நிறைந்தவர்கள். அறிவியல் கல்வி அவரவர் தாய்மொழியில் அமையும்போதே பெறத்தக்க நன்மைகள் பலவாகும் என்பதை உணராமல் அவ்வாறு கூறுகிறார்கள். தாய்மொழிவழிக்கல்வி கற்றல் என்பது சாதாரண உடையணிந்து மிடுக்காக நடப்பது போன்றது. பிறமொழிக்கல்வி என்பது மிடுக்கான பொருத்தமில்லாத உடையணிந்து நடக்க இயலா நிலைக்குப் போவதற்குச் சமமானதாகும்.

மனிதனின் வாழ்நிலை, மனநிலை என்பது இயற்கையாக இருத்தல்வேண்டும். அது தாய்மொழிவழிக்கல்வியால் மட்டுமே சாத்தியம். தமிழகத்தில் 2006 -2007 ஆண்டிற்கு முன்னர் தமிழ்மொழிவழிக் கல்வியை ஒருவர் கற்காமலேயே பட்டம் பெறலாம் என்ற நிலையிருந்தது. 2006 -2007க்குப் பின்னர் பிறமொழி பேசுபவராக இருப்பினும் தமிழ்நாட்டில் கல்வி கற்பின் தமிழில் ஒருபாடமாவது கட்டாயம் படிக்கவேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தற்போது 2015 -2016 ல் 10ம் வகுப்புத் தேர்வை அம்மாணவர்கள் எழுதும் நிலை உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி விழுக்காடு குறைந்துவிடக் கூடாதென்று அரசு, பிறமொழி பேசும் மாணவர்களுக்கு தமிழ் மொழிப்பாடத்திற்கு மட்டும் சிறப்பு கையேட்டைத் தயாரித்துக் கொடுத்துள்ளது. பிரெஞ்சு, இந்தி, சமஸ்கிருதம் என மதிப்பெண்ணுக்காகத் தமிழைப் புறக்கணித்தவர்கள் இனித் தமிழைப் படிப்பார்கள் என நம்பலாம்.

இது ஆங்கிலவழிக்கல்வியின் மோகம் மக்களிடம் குறைந்துவிடவில்லை என்பதையே காட்டுகிறது. ஆங்கிலவழிக்கல்வி முறையே போதும் என்று மக்கள் சிந்திக்கத் தலைப்பட்டு விட்டனர். அதன் மூலமே உலக அறிவினைப் பெற முடியும் என்று நம்புகின்றனர். 2010ல் சமச்சீர் பள்ளிக்கல்வி முறை கொண்டுவரப்பட்டது. முனைவர் எஸ்.முத்துக்குமரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பல்வேறு பரிந்துரைகள் அரசுக்கு வழங்கப்பட்டன. ஒருசில மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டன. அதில் பெரும்பான்மையோரால் புறக்கணிக்கபட்டது தாய்மொழிவழிக்கல்வியும், மெட்ரிக்குலேசன் வாரியக் கலைப்பும்.

பிள்ளைகள் தங்கள் தாய்மொழிவழிக்கல்வி வழியாகவே அனைத்துப் பாடங்களையும் கற்பதே சிறந்தது என்பது சமச்சீர்க் கல்விக் கொள்கைகளில் ஒன்று. எனினும் இம்முறை இன்னும் நடைமுறைக்கு வராமலுள்ளது. அரசின் கல்விக் கொள்கைக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் வருதல் வேண்டும் என்ற நிலைமாறி தனியார் கல்விக் கொள்கைக்கு அரசு வருதல் வேண்டும் என்ற நிலை தோன்றி தற்போது அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி முறை தொடங்கபட்டு வருகிறது. ஆங்கிலக் கல்வியின் மோகத்தால் ஆங்கில வழி கல்வி உள்ள தனியார் கல்விக்கூடத்தில் மாணவர்கள் எண்ணிக்கை மிகுதியாகி 3500 அரசு பள்ளிகளின் எண்ணிக்கை தற்போது 1500 பள்ளிகளாக சுருங்கி உள்ளது.

இன்றைய காலகட்டத்தில் ஒருமொழி அறிவு ஒருவர்க்குப் பயன்தராது. பிறமொழி அறிவும் தேவைதான். உலகின் தலைசிறந்த கவிஞராகப் பாரதி திகழ்ந்ததற்கு அவருடைய பலமொழி அறிவே காரணமாகும். எனினும் தாய்மொழிக்கல்வியை அவர் என்றும் விட்டுக்கொடுத்ததில்லை.

வேறுவேறு பாஷைகள் – கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் –போ போ

என்று தாய்மொழிக்கல்வியைப் புறக்கணிப்பவனைப் பார்த்து கூறுகிறார்.

‘குழந்தைகளின் மன வளர்ச்சிக்குத் தாய்மொழியே சிறந்தது’ என காந்தியடிகள் உள்ளிட்ட பலரும் எடுத்துரைத்தாலும் தமிழர்களை ஆங்கில மோகம் கெட்டியாகப் பிடித்துக்கொண்டுவிட்டது. ‘ஆங்கிலம் உலகப் பொதுமொழி’ என்ற வலுவான எண்ணம்தான் அதற்குக் காரணம். சீனத்திற்கும், ஸ்பானிசிற்கும் அடுத்த நிலையில்தான் ஆங்கிலம் உள்ளது. இங்கிலாந்து அருகிலுள்ள பிரான்சில் ஆங்கிலம் ஒரு மொழியாகவே கருதப்படவில்லை.

.

மக்கள் தாய்மொழியைத் தமிழைப், புறக்கணிப்பதற்கு ஊடகங்கள் பேருதவி (?) புரிகின்றன. தமிழைக் கொச்சையாகப் பிறமொழி கலந்து பேசுவது மிகச்சிறந்த நாகரிகமாகப் பரவுவதற்கு தொலைக்காட்சியின் பங்கு மிகப் பெரியது. பட்டி தொட்டிகளிலெல்லாம் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஊடுருவி, சிற்றூர் மக்களின் தமிழையும் கலப்படமாக்கி வருகின்றன. இதில் வரும் விளம்பரங்களில் மிகத் தாராளமாக ஆங்கிலக் கலப்பு.

தமிழர் வாழ்விலும் தமிழ் இல்லை. பேசும் தமிழிலும் வளமில்லை. பேருந்து நிலையம் என்றால் புரியாது தமிழனுக்கு. பஸ் ஸ்டேண்ட் என்றால் தான் புரியும். இன்றைக்கு காலைவேளை ‘டூத்பேஸ்டில்’ தொடங்கி இரவில் படுக்கும் ‘பெட்’ வரை தமிழன் வாழ்வில் எல்லாம் ஆங்கிலமயம்தான். பேச்சுத் தமிழோ ‘தமிங்கிலீசாக’ வலம் வருகிறது. ஒரு மொழி அழிவதற்கு முதன்மைக் காரணம் மொழிக்கலப்பு தான். இன்றைக்கு அன்றாட சிற்றூர் மக்கள் பேசும் மொழியில் கூடப் பிரிக்க முடியாத அளவிற்குப் பிறமொழி கலப்பு நிறைந்திருக்கிறது. தமிழிலுள்ள எண்ணற்ற சொற்கள் அவை தமிழ்ச்சொற்கள் தானா என்று குழப்பம் தரும் வகையில் விரவியுள்ளன.

உலகிலுள்ள கல்வியாளர்களும் சமூக ஆய்வாளர்களும், உளவியல் நிபுணர்களும் தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது என்கின்றனர் என்றாலும் பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் போதுமானஅளவில் இல்லாமலிருப்பதே மக்கள் தமிழ்மொழியைப் புறக்கணிப்பதற்குக் காரணம். பல துறை சார்ந்த தமிழர்களை ஒன்றிணைத்து மொழிபெயர்த்துத் தர ஒரு குழு அமைக்கலாம். மொழிபெயர்ப்புகளை வெளியிடலாம். தொழில்நுட்ப தகவல்களைத் தாய்மொழியில் தரலாம்; விவாதிக்கலாம்; நுட்பப் பொருளை உணர்ந்து பல கருத்துக்களுக்குப் பின், அனைவரும் ஏற்கும் மொழிபெயர்ப்பு சொல்லை ஒத்த கருத்துடன் ஏற்கலாம்; உலக முழுவதும் உள்ள தமிழர்கள் ஒரு குறிப்பிட்ட சொல்லையே ஒருமனதாகப் பயன்படுத்த பரிந்துரைக்கலாம்; மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல் சார்ந்த மொழிபெயர்ப்பு குழுக்கள் உருவாக்கப்படலாம்.

“தாய்மொழி என்பது தாயின் மொழி-அது
தாயும் நீயும் பேசும் மொழி
ஆயிரம் மொழிகள் நீயறிந்தாலும்
ஆன்மா உணர்மொழி அந்த மொழி”
. . . . . .
தேனாய் இனித்திடக் கேட்ட மொழி உன்
சிந்தையில் விதைகள் போட்ட மொழி
. . . . . .
உன்னுடன் இணைந்தே பிறந்தமொழி-உன்
உள்ளமும் உணர்வும் புரிந்த மொழி
எண்ணியல் என்ன மின்னியல் என்ன
எதையும் பயின்றிடச் சிறந்த மொழி-அது
இறைவன் உனக்கென வரைந்த மொழி”

என்று தாய்மொழிவழிக்கல்வியின் சிறப்பினை மறைந்த மலேசியக் கவிஞர் சி.செ. சீனிநைனா முகம்மது பாடிச் சென்றுள்ளார்.

சிந்தையில் விதைகளை விதைக்கும் மொழி, எண்ணியல் மின்னியல் எதையும் பயின்றிடச் சிறந்த மொழி தாய்மொழியன்றி வேறொன்றில்லை என மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். ‘அணுவைத் துளைத்து எழு கடலைப் புகட்டும்’ ஔவையாரின் அறிவு தாய்வழிக்கல்வியினால் விளைந்தது அன்றோ? சித்த மருத்துவமே சிறந்த மருத்துவம் என்று உலகம் போற்ற தமிழரை தமிழ்வழிக்கல்வியைப் புறக்கணிப்பதுபோல் அதையும் புறக்கணித்து சர்க்கரை நோயினால் மடிந்து வருகின்றார்கள்.

தமிழ் படித்தால் முன்னேற முடியாது என்று நினைப்பவர்களையும்,. தமிழ்ச்சோறு போடுமா என்று கேட்பவர்களையும் நோக்கி பதிலடி கொடுக்கிறார் மலேசிய கவிஞர் பொன்முடி அவர்கள். தமிழ்மொழியால் தான் தமிழன் தாழ்ந்து போனதாகவும், தமிழனைத் தலையெடுக்க விடாமல் தமிழ்தான் செய்து விட்டதாகவும் கருதுவதால் தான் தாய்மொழி வழிக் கல்வியைப் புறக்கணிக்கின்றனர் எனக் கருதுகின்ற கவிஞர்,

”எந்த நாட்டினில் எந்த மொழிதான்
எவர்க்கும் சோற்றை ஏந்தி வந்து
துவையல் கறியுடன் ஊட்டுகின்றது?
உழைப்பும் உறுதியும் உள்ளவன் எவனும்
மொழியில் பழியை ஏற்றுவதில்லை””
எனச் சாடுகிறார்.

கல்லூரிகளில் மொழிபெயர்ப்பு பாடத்தினை வைக்கலாம். மொழிபெயர்ப்பு ஆற்றலையும், அறிவினையும் கல்விநிலையங்களில் முதன்மைப்படுத்தலாம்.

தமிழில் அறிவியல் கருத்துக்களை வெளியிட முடியாதென்பவர்கள் உண்மையறியாதவர்கள். தமிழ் மொழி அறிவியல் மொழி என்பதை பண்டைய இலக்கியங்களை வைத்தே உறுதியாகக் கூறிடமுடியும்.சில சான்றுகள் இதோ……………..

மழைப் பொழிவு பற்றிய அறிவியல் உண்மைகளைப் பண்டைத் தமிழர் மிக முன்பே அறிந்து கொண்டுள்ளனர். கடலில் இருந்து நீரை முகந்து மேகமானது மழையைக் கொண்டு வந்து நிலத்திற்குத் தருகின்றது என்ற அறிவியல் கோட்பாடு அன்றே நிலைப்பட்டுவிட்டது. பட்டினப்பாலையில் ‘வான்முகந்த நீர் மலைப் பொழியவும் மலைப் பொழிந்த நீர் கடற்பரப்பவும் மாரி பெய்யும் பருவம்போல’ (பட்டின:126) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வானம் நீரை மேகமாக முகந்துமலையின் மீது பொழிகின்றது, மலையில் பொழிந்த நீர் கடலில் சென்று சேர்கிறது. இந்த நீர்ச் சுழற்சியை (hydrological cycle) இன்றைய அறிவியல் உலகம் விளக்குகிறது. இதேபோல, ‘மறந்து கடல் முகந்த கமஞ்சூழ் மாமழை பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்’ (நற்றிணை-99) என்ற பாடல் வரிகள் கடல் நீர் ஆவியாகி மேகமாகி பின்னர் மழையாகப் பொழிகிறது.

இப்படியாக மழை பொழியும் அறிவியலைக் கூறுகிறது. அகநானூறு, ‘மாக்கடல் முகந்து மாதிரத்து இருளி …………….. பெயல் பெய்து கழிந்த பூநாறு வைகறை’ என்று கூறுகிறது. இதுவும் கடலில் இருந்த நீர் மேகமாகி மழை பொழியும் அறிவியலைக் கூறுகிறது. ஆனால் மேலைநாட்டு அறிஞர்கள் குறிப்பாகக் கிரேக்க நாட்டு ஞானிகளான ‘தேல்ஸ்’ மற்றும் இன்றைய அறிவியல் உலகம் கொண்டாடும் ‘அரிஸ்டாட்டில்’ போன்றோர் கடலுக்கு அடியில் உள்ள நீரூற்றுதான் எல்லாத் தண்ணீருக்கும் ஆதாரம் என்றும் நிலம் அதை உறிஞ்சி மேலே கொண்டு வந்து ஆறாக ஓட விடுகிறது என்றும் கூறியுள்ளனர். இதுதான் கி.பி 1500 வரை அவர்களுக்கு இருந்த கருத்து.ஆனால் பழந்தமிழர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முக்பிருந்தே இதைக் கண்டு பிடித்துள்ளனர். மேகம் கடல் நீரை பெற்று மழையாகப் பொழிகிறது என்பது அறிவியல் கண்டுபிடிப்பு. இஃது ஒரு நாள் ஆய்வின் முடிவல்ல. பல்லாண்டுகளின் பலன். ஆய்வின் வெளிப்பாடுகள் அல்ல அன்றைய தமிழரின் அறிவின் வெளிப்பாடுகள்.

”ஒன்று அறிவதுவே உற்ற அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனோடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிதுவே அவற்றொடு மனனே
நேரிதில் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே …’ (..தொல் பொருள் மரபியில்:29. )

தொல்காப்பியரின் கொள்கை டார்வின் விஞ்ஞானியின் பரிணாமக் கொள்கையோடு ஒத்துப் போகிறது.

மாற்றுருப்புப் பொருத்துதல்-பழுதுபட்ட ஓருறுப்பை எடுத்துவிட்டு அதற்கு மாற்றாக வேறொரு உறுப்பைப் பொருத்துதல் என்பது இன்றைய மருத்துவ உலகின் சாதனை. ஆனால் பண்டைத்தமிழர் இது போன்ற அறுவை சிகிச்சைகளைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே மேற்கொண்டிருந்தனர். இதனைப் பற்றிய குறிப்பொன்று சிலப்பில் காணப்படுகின்றது.

நாடுவிளங் கொண்புகழ் நடுகதல் வேண்டித்தன்
ஆடு மழைத் தடக்கை யறுத்து முறைசெய்த
பொற்கை நறுந்தார் புனைதேர்ப் பாண்டியன் (சிலம்பு)

இரவு நேரத்தில் மாற்றுடையில் ஊர் நிலவரம் அறிய சென்ற பாண்டியன்,கீரந்தையின் இலக்கக் கதவைத் தான் தட்டியதற்குத் தண்டனையாக, தன் கையைத் தானே துண்டித்துக் கொள்கிறான். அதன்பின் பொன்னாலாகிய கையைச் செய்து வைத்துக் கொண்டான். அன்றிலிருந்து பொற்கைப் பாண்டியன் என அழைக்கப்பட்டான் என்கிறது அச்செய்தி, உறுப்பினை இழந்த ஒருவன் செயற்கை உறுப்பினைப் பொருத்திக்கொண்டு பயன்படுத்தியதை இப்பாடலில் உணரலாம். அறுவைச்சிகிச்சையில் நோயாளி தன் நோயை உணராமலிருக்கச் சுஸ்ருதர் என்ற மருத்துவர் திராட்சை ரசம் பருகச் செய்ததாகச் சரகச் சம்கிதை என்ற நூல் கூறுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியா முழுவதுமே இது போன்ற மருத்துவ முறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.

இரும்பு உலோகங்களான வேல், வாள்’ ஈட்டி போன்ற ஆயுதங்களால் எற்படுகின்ற புண்களில்’ இரும்பின் உலோக நஞ்சு கலப்பதற்கு வாய்ப்புகள் உள. அவ்வாறு கலக்க நேர்ந்தால், உலோக நஞ்சால் (Tetanus Toxoid) உடலுக்குத் தீங்கு நேரிடலாம். அவ்வாறு நேராதிருக்க இக்கால மருத்துவர்கள் தடுப்பூசியைப் பயன்படுத்துவர். பண்டைக்கால மருத்துவர்கள் உலோக நஞ்சை முறிக்கும் மருந்தாகவும், புண் ஆறிய பின் வடு தோன்றாமல் தோலின் நிறம் பழைய நிலைக்கே மாறவும் அத்திப் பால் பயன் படுத்தினர் என்று புறநானூறு குறிப்பிடுகிறது. ‘வடுவின்றி வடிந்த யாக்கையான்,(180) என இதைக்குறிப்பிடுகிறது. மேலும், அறிவியல் உலகின் அறிய சாதனையான அறுவைச் சிகிச்சையினைப் பதிற்றுப்பத்தில்,

“மீன்றேர்கொட்பிற் பனிக்கய மூழ்கிச்
சிரல் பெயர்ந் தன்ன நெடுவெள் ளுசி
நெடுவசி பரந்த உடுவாழ் மார்பின்
அம்புசே ருடம்பினர் சேர்ந்தோ ரல்லது
தும்பை சூடாது மலைந்த மாட்சி” (பதிற்றுப்பத்து 42: 2 – 6)

நீரிலுள்ள மீனைக் கொத்துவதற்காக நீரில் பாய்ந்து, அடுத்த நொடியில் நீரைவிட்டு மேலே பறந்து செல்லும் சிரல் பறவையைப் போல, நெடிய வெள்ளூசி புண்ணுக்குள் நுழைந்து வெளியே வருகிறது என்கிறது. வெள்ளூசி என்பது வெள்ளியால் செய்யப்பட்ட தையல் ஊசியாக இருக்கலாம்.என்று ஐந்தாம் பத்தின் இரண்டாம் பாடலடியில் போரில் வெட்டுண்ட உடலை வெள்ளுசி கொண்டு தைத்த மருத்துவன் செயலை விளக்குகின்றன.

இக்கால மருத்துவத்தில் புண்ணுக்கு மருந்து வைத்துக் கட்டும் போது புண்ணின் மேல் பஞ்சு வைத்துக் கட்டும் முறை, பண்டைய தமிழ் மருத்துவர்கள் மேற்கொண்ட முறையைப் பின்பற்றி அமைந்ததாக இருக்கலாம். அக்காலத்தில் தோன்றிய முறையே தொன்றுதொட்டு தொடர்ந்ததாகவும் இருக்கலாம். அதனை உறுதி செய்யும் விதத்தில்’

“ கதுவாய் போகிய துதிவாய் எஃகமொடு
பஞ்சியும் களையாப் புண்ணர்”

என்னும் புறநானூற்று வரிகள் உறுதி செய்கின்றன.

தமிழகத்தில் கட்டிடக்கலைத் திறம் வாய்ந்த வல்லுநர்கள் பலர் வாழ்ந்தனர். “ஒரு திறம் சாரா அரைநாள் அமயத்து நூலறிபுலவர் நுண்ணிதின் கயிறிட்டுத் தேஎங்கொண்டு தெய்வம் நோக்கிப் பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்பமனை வகுத்து” ( நெடுநல்வாடை, 75- 78வது வரிகள்) என நக்கீரர் விளக்குகிறார். கடலின் போக்கையும், காற்றின் போக்கையும் கொண்டு மிகச் சிறப்பாக கடல் வாணிகத்தை மேற்கொண்ட தமிழனின் மொழியிலா அறிவியல் இல்லை? தமிழனின் கப்பல் கட்டும் தொழிலைக் கண்டு பொறாமைப்பட்டே தமிழரின் கப்பல் வாணிகத்தை கெடுத்த அந்நியர்களின் கதை நாம் அறியாததா? தமிழால் முடியும் என்று ஒவ்வொரு தமிழனும் நினைக்கவேண்டும்.

ஒரு மொழியின் வாழ்வும், வளமும், வளர்ச்சியும் அம்மொழி பேசும் மக்களின் வாழ்வும் வளமும் வளர்ச்சியுமாகும். தன்மான உணர்வு அடிப்படையில் மக்கள் தாய்மொழியாம் தமிழினை வளர்க்க முன்வரவேண்டும். அரசும், கல்வி நிலையங்களும், ஊடகங்களும், பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும். தமிழால் சாதிக்க முடியும் என்ற மக்கள் நம்பினால், தமிழனும் சாதிக்க முடியும். தமிழர் தமிழைப் புறக்கணித்தால் எதிர்காலத்தில் தமிழர்க்கு இருப்பதற்குக் கூட ஒரு நாடு இருக்காது என்பதை புரிந்து செயல்பட வேண்டும்.

ஒருசில தலைமுறைகள் செய்கின்ற தவறுகள் ஒட்டுமொத்த இனத்தின் உரிமைக்கே சாவுமணியடித்து விடுகின்றன. தமிழினத்தின் எதிர்காலமே தாய்மொழிவழிக்கல்வியால் தான் சிறந்து உள்ளது. தமிழ் என்றைக்கும் தமிழரின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்ததில்லை. தாய்மொழி எனப்படுவது ஐம்புலன்களினாலும் உணரக்கூடிய, உணர்வுகளோடு ஊறிய சிந்திக்கத் தூண்டும் மொழியாகும். தாய்மொழியை சிந்தனை மொழி என்றே கூறலாம். சிந்திக்கின்ற மொழியால் பயிற்றுவிக்கப்படும் கல்வி, எண்ணங்களை மேம்படுத்தி, நுணுக்கங்களைப் புரிய வைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு வித்திடுகிறது. தமிழ் உலகாள வேண்டும். அது தமிழர் கல்வியில்தான் உள்ளது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *