Author: admin

  • மோட்டார் சைக்கிள் எண் 4474 (சிறுகதை)

    ஜெ. ஜெயகுமார்
    சென்னை

    “இன்றும் மற்றுமொரு நாளே” என்பதால் காலை எட்டு மணி அளவில் காந்தி ரோட்டில் மக்கள் கார்களிலும், இரு சக்கர வாகனங்களிலும் எதிர் காலக் கனவுகளைச் சுமந்து கொண்டிருந்த  எதிர்காலத் தலைமுறைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு பள்ளிக்கும் பின் பணியிடத்திற்கும் அரக்க பரக்க விரைந்து கொண்டிருந்தனர்.

    எழுபது வயது விஜய் வழக்கம்போல் திரு.வி.க. பூங்காவில் நடைப் பயிற்சியில் இருந்தார், விரைவில் தன் வாழ்க்கையில் ஒரு கொலை வழக்கு நுழையும் என்பதையறியாமல்.

    மனிதர்களை அவதானிப்பது விஜய்க்கு ஒரு தலையாய கடமை, ஒவ்வொரு மனிதர்க்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதால். அப்படித்தான் அந்த முப்பத்தி ஐந்து வயது ஜோடி நடைப்பயிற்சி செய்வதை கவனித்துக் கொண்டிருந்தார். அது ஒரு இயல்பான திருமண தம்பதி போல் தெரியவில்லை. கணவன், மனைவி என்றால் அவர்களுக்குள்ளே ஒரு சகஜத்தன்மை, அன்னியோன்யம், சற்றே சோம்பல் கலந்த டுகெதர்நெஸ், அதீத இனிப்பு சாப்பிட்டு திகட்டிப் போன அலுப்பு கலந்த நிறையுணர்வு, எல்லாம் இருக்கும். பொதுவெளியில் மிகவும் ஒட்டியும் இருக்க மாட்டார்கள்; எட்டியும் இருக்க மாட்டார்கள்.

    அந்த ஜோடியின்  நடவடிக்கை செய்தித் தாளில் வரும் கள்ளக்காதல் ஜோடியின் ஆரம்ப நிலையாக அவருக்கு புலப்பட்டது. லோஹிப் சாரீயுடன் பாதி முதுகு தெரியும் ரவிக்கையணிந்த அந்தப் பெண்ணை  நெருங்கியும் விலக்கியும் நடந்து கொண்டிருந்தார் அந்த மனிதர். அவரிடம் ஓவர்-என்துசியாசம் எனப்படும் என்டார்பின் எனர்ஜி சுரந்து கொண்டேயிருந்தது.

    அவர் கண்களில் “அடைந்தால் மகாதேவி; அடையாவிட்டால் மரணதேவி” காமம்;

    அவள் அதை சில நேரங்களில் ஏற்றும் மறுத்தும் விரும்பியும் விலகியும் அவரோடு நடந்து கொண்டிருந்தாள் அளவளாவியபடியே.

    வாக்கிங் முடிந்தபின் இருவரும் பூங்காவிற்கு வெளியே வந்து அவரவர் டூவீலர்களை எடுத்துக்கொண்டு ஆளுக்கொரு திசையில் சென்று நகர வாழ்க்கையில் கலந்து விட்டனர்.

    அவர்களின்  கூடாநட்பு தினமும் நெருக்கமாகிக் கொண்டே இருந்ததை விஜய்யின் கண்கள் கணித்தன. இது எங்கே கொண்டு போய் விடுமோ என்று கவலைப் பட்டாலும் விஜய் கண்காணிப்பதை நிறுத்தவில்லை.

    இப்போதெல்லாம் அந்த ஜோடி விதவிதமான விலை உயர்ந்த ஆடைகளில் வாக்கிங் வந்து போய்க் கொண்டிருந்தனர். ஒரு முறை நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த விஜய்யை அவர்கள் ஓவர் டேக் செய்து  கடந்த போது அவர்கள் அணிந்து இருந்த பெர்ஃப்யூம் ஆளைத் தாக்கியது. தூக்கியது.

    திடீரென்று ஒரு நாள் அவர்கள் வாக்கிங்  வருவது நின்று போனது. ஒருக்கால் அவர்கள் வீட்டில் தெரிந்து விட்டதோ, என்று நினைத்த விஜய் வழக்கம்போல் வாக்கிங் வந்து சென்று கொண்டிருந்தார்.

    சில நாட்கள் சென்று வழக்கம்போல் வீட்டிலிருந்து பூங்காவிற்கு நடந்து கொண்டிருந்தபோது திடீரென்று அந்த ஜோடி “உமா ஸ்டோர்ஸ்” தாண்டி தெருக்கோடியில் இருக்கும் “பாரதி பூங்கா”வை நோக்கி அவன் இடுப்பில் இவள் கை அணைத்திருக்க கூந்தல் முதுகில் இல்லாமல் முன்னே இருக்க  முக்கால் முதுகும் தெரியும் வண்ணம் ஒரு மோட்டார் சைக்கிளில்  விரைந்து கொண்டிருப்பதைப் பார்த்து திடுக்கிட்டார் விஜய்.

    அந்த வண்டியின் ரிஜிஸ்டிரேசன் நம்பர் 4474. கல்லூரியில் படிக்கும்போது அவர் அட்மிஷன் நம்பர் அந்த நம்பர் தான் என்பதால் அது ஏனோ நினைவில் பதிந்தது. பின் தொடர்ந்து சென்ற அவர் அந்த ஜோடி இப்போதெல்லாம்  பாரதி பூங்காவிற்கு வருவதை இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து கண்காணித்துத்  தெரிந்து கொண்டார்.

    “கர்மம்! கர்மம்! எக்கேடு கெட்டோ தொலையட்டும்” என்று அவர் திரு. வி. க. பூங்காவில் வாக்கிங் செல்வதைத் தொடர்ந்தார்.

    அங்கு தினமும் ஒரு ஆட்டோ வந்து நிற்பதையும் அந்த ஆட்டோ டிரைவர் சிரத்தையில்லாமல் வாக்கிங் என்ற பெயரில் கடமைக்கு சில அடிகள் நடப்பதையும் பூங்காவுக்குள் வந்து செல்லும் மனிதர்களை அந்த டிரைவர் உற்று கவனிப்பதையும் யாரோ ஒருவரின் வரவை எதிர்பார்த்து வரவில்லை என்பதால் பொறுமை இழப்பதையும் விஜய் அவதானித்தார். போதாக்குறைக்கு அந்த ஆட்டோ டிரைவர் அவ்வப்போது மொபைல் ஃபோனி”ல் பேசுவதையும் பேசிய சில நிமிடங்களில் டிரைவர் அங்கிருந்து கிளம்பி செல்வதையும்  விஜய் கவனித்தார்.

    தினம் பூங்காவிற்கு ஆட்டோ டிரைவர் வருகை, கவனிப்பு, கண்காணிப்பு, ஃபோன் பேச்சு என்று சில நாட்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததை ஏராளமான துப்பறியும் நாவல்களை வாசித்திருந்த விஜய் கவனிக்கத் தவறவில்லை.

    ஒரு நாள் வாக்கிங் முடிந்து அசதியுடன் இருந்த விஜய் ஆசுவாசப்படுத்திக்கொள்ள பார்க் பெஞ்ச்சில்  அமர்ந்திருந்தார். போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த ஆட்டோ டிரைவரும் அவர் அருகே வந்து உட்கார்ந்தார்.

    பக்கத்தில் இருப்பது கிழவன் தானே என்று ஆட்டோ டிரைவர் அசால்ட்டாக

    போனில் “அண்ணே! அவங்க ரெண்டு பெரும் இங்க வரலைண்ணே! நானும் நீங்க சொல்றீங்களேன்னு தினம் இங்க வந்து வாட்ச் பண்ணிக்கிட்டுத் தான் இருக்கேன்; எனக்கு என்னமோ அவங்க இரண்டு பெரும் வேறு இடத்துக்கு போய்ட்டாங்களோன்னு  தோணுது அண்ணே!” என்று பேசிக் கொண்டிருந்தார்.

    விஜய்க்கு எப்பவுமே வாய் ஜாஸ்தி. அவர் மனைவி கீதா விஜய்யை அவ்வப்போது “ உங்களுக்கு வாய் கிழியறது; “தவளையும் தன் வாயால் கெடும்” என்பது போல் “போற இடத்தில் எல்லாம் பாலிட்டிக்ஸ் அது இதுன்னு வாயைக் கொடுத்து உங்களை கெடுத்துக்காதீங்கோ; காலம் கெட்டுக் கிடக்கு;” என்று அவ்வப்போது அபாய மணி அடிப்பதுண்டு;

    மனுஷன் கேட்டானா?

    டேவிட் பல்டாக்ஸி, டான் பிரவுன், ஜான் க்ரிஷாம், டாம்  க்லான்சி  என்றெல்லாம் ஏகப்பட்ட எழுத்தாளர்களின்  நாவல்களை வாசித்திருந்த விஜய்யின் மனம் ஆட்டோ டிரைவரின் ஃபோன் பேச்சால் குறுகுறுத்தது

    “ஓஹோ! இந்த ஆட்டோ டிரைவர் டெய்லி அவா ரெண்டுபேரையும் வாட்ச் பண்ணாத்தான் வரார் போல் இருக்கு; ஆளை  வச்சு நோட்டம் பாக்கறாப் போல இருக்கு”  என்று முடிவுக்கு வந்தார் விஜய்.

    ஆட்டோ டிரைவர் “தினம் இங்க வரவேண்டியது; வேவு பாக்க வேண்டியது; ஒரு பைசாவுக்கு பிரயோஜனம் இல்ல; நம்ம பொழைப்புதான் வீணாப் போவுது என்று விஜய் காதில் பட அலுத்துக்  கொண்டார்.

    விஜய்யின் வாய்க்குள் இருந்த தவளை துள்ளிக் குதித்தது.

    “என்ன சார் ஏதாவது பிரச்சனையா? என்று ஆட்டோவை வினவினார் விஜய்.

    விஜய் எல்லோரையும் சார் என்று அழைப்பதுதான் வழக்கம்; மனிதர்களோடு பழகும்போது மரியாதை கொடுத்துப் பழக வேண்டும் என்று நினைப்பவர். மரியாதை கொடுப்பது என்பது இலவசம்தானே? காசா; பணமா? மரியாதை கொடுத்து மரியாதை பெறுவது இருவருக்கும் பரவசம்தானே?

    ஆட்டோ டிரைவர், “அதை  ஏன் சார் கேக்குறீங்க; எங்க முதலாளி சம்சாரம் யாரோடோயோ சுத்துறாங்கலாம்; ”கண்டு பிடிங்கடா” ன்னு எங்களுக்கு உத்தரவு போட்டு இருக்கார்; இருக்கற வேலை  பத்தாதுன்னு இது வேற எக்ஸ்ட்ரா தொல்லை’ என்று அலுத்துக்  கொண்டே மொபைல் ஃபோனை திறந்தபோது உள்ளே ஒரு பெண்மணியின் போட்டோ தெரிந்தது அருகிலிருந்த விஜய்க்கு.

    விஜய்யின் “ஷெர்லாக் ஹோம்” கண்கள் அந்த போட்டோவைப் பார்த்து திடுக்கிட்டு “இந்த அம்மா இப்பல்லாம் பாரதி பூங்காவுக்கு தினம் வர்ராங்க” என்றார் மிகப் பெரிய குற்றவாளியை கண்டு பிடித்த திருப்திப் புன்னகையுடன்.

    அறுதிப் பெரும்பான்மை அரசு அமைக்க ஆறு நாட்களாக ஆறு “எம்.எல்.ஏ”க்களுக்காக அலைந்து கொண்டிருந்து இறுதித் தருணத்தில் ஆறும் கிடைத்த  அரசியல்வாதியின் மகிழ்ச்சியை மிஞ்சும் வண்ணம் அந்த ஆட்டோ டிரைவர் ஆனந்த அதிர்ச்சியில் கிழவனுக்கு தாங்க்ஸ் சொல்லி விட்டு வெளியே ஓடி ஆட்டோவைக் கிளப்பினார் ஆம்புலன்ஸ் வேகத்தில்.

    நாட்கள் நகர்ந்தன. இப்போது அந்த ஆட்டோ டிரைவர் பூங்காவிற்கு வருவதில்லை. ஒருக்கால் நல்லபடியாகப் பேசி சுமூகமாகப் பிரச்சனையை தீர்த்துக் கொண்டுவிட்டார்கள் போலிருக்கிறது என்று விஜய் திருப்தி பட்டுக் கொண்டார்.

    வாக்கிங் சென்று  வந்த விஜய் ஒரு நாள் “ஷாலிமார் நியூஸ்” பார்த்துக் கொண்டிருந்தபோது “விருகம்பாக்கத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி  மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி தூக்கி வீசப்பட்டு  மரணம்”. இருவரும் கணவன் மனைவி இல்லையென்பதால்  இது விபத்தா , கொலையா என்று போலீஸ் புலன் விசாரணை’ என்ற செய்தியுடன் வந்த வீடியோவைப் பார்த்த  விஜய் ஸ்தம்பித்து சாய்ந்து விட்டார் சோபாவில். வீடியோவில் உருக்குலைந்து கிடந்த அந்த மோட்டார் சைக்கிள் எண்  4474. பெண்ணின்முகம் ஆட்டோ டிரைவரின்  போனில் பார்த்த அதே முகம்.

    அன்றிரவு தூக்கம் வரவில்லை விஜய்க்கு. மனைவி கீதாவிடம் சொன்னால் கொன்று  கூறு போட்டு விடுவாள் என்ற பயம் வேறு.

    எவ்வளவோ எடக்கு மடக்கான இடங்களில் எக்குத் தப்பான பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு தன் புத்திசாலித்தனத்தால் தப்பியவர் விஜய்.

    “டேய் ஆட்டோ! நீ நினைக்கறமாதிரி நான் முட்டாள் கிழவன் இல்லைடா“

    என்று நினைத்துக் கொண்டே படுத்திருந்த  மனிதர்  கடந்த சில நாட்களில் பூங்காவில் நிகழ்ந்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.

    துப்பறியும் பொறி தட்டி தன் மொபைல் ஃபோனின் போட்டோக்களைத் தேடினார். தேடியது கிடைத்ததால்  நிம்மதி கலந்த மகிழ்ச்சியுடன் மீண்டும் உறங்கினார்.

    போலீஸ் அவர் வீட்டுக் கதவை தட்டும் முன் அவரே மறுநாள் காலை விருகம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன் சென்று “நடந்தது என்ன” என்பதையெல்லாம் விவரித்தார்.

    போலீஸ் அதிகாரியிடம் ஆதாரத்தையும் காட்டினார்.

    அது ஒரு போட்டோ. தன் நீண்ட நாள் நண்பன் ராஜாராமனுடன் பூங்கா வாசலில் எடுத்துக் கொண்ட செல்ஃபி. அவர்களுக்குப்  பின்னே பளிச்சென்று ரிஜிஸ்டிரேசன் நம்பர் தெரிந்த அந்த ஆட்டோவும் அருகில் அந்த ஆட்டோ டிரைவரும்.

    Share
  • மீண்டும் இணையவழிக் கல்வி

    மீண்டும் இணையவழிக் கல்வி

    முனைவர் திரிவேணி சுப்ரமணியம்
    தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி
    கோயம்புத்தூர் – 641014
    மின்னஞ்சல்: venitamil@srcw.ac.in

    “கல்வியைவிடப் பரிசுத்தமான ஒரு பொருளை மனிதன் எங்குமே கண்டறிய இயலாது” – பிளேட்டோ

    தொன்மை காலந்தொட்டுக் கற்றலின் நோக்கமும் வடிவமும் மாறினாலும் கூடக் கல்வியின் முக்கியத்துவமும் மேன்மையும் போற்றப்பட்டு வந்திருக்கிறது. இந்தியக் கல்விமுறையானது மேம்பட்ட ஒன்றாக உலக நாடுகளால் மதிக்கப்பட்டிருந்தது. உலகின் பல நாடுகளில் இருந்தும் மாணவர்கள் வந்து பயிலும் இடமாக நாளந்தா பல்கலைக்கழகம் இருந்தது. கணிதவியல், இலக்கணம், தத்துவம், மனையியல், உளவியல் முதலியவை இந்தியக் கல்வியின் தலைசிறந்த கொடைகளாகக் கருதப்பட்டன. பாரம்பரியக் கல்விமுறையில் இந்தியாவில் உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் கல்வி கற்றலின் முக்கிய அம்சமாகக் கருதப்பட்டன. அதன் மூலம் பலதரப்பட்ட அனுபவங்கள் கிடைக்கும் என்பதால் பயணங்கள் அப்போதைய கல்வியில் முதன்மை இடம் பெற்றிருந்தன.

    ஆரம்பக் கல்வி, உயர் கல்வி எனக் கற்றல் இரண்டாகப் பகுக்கப்பட்டிருந்தது. கல்வியின் எந்த நிலையிலும் அனுபவங்களும் செயல்வழிக் கற்றலும் முதன்மையானதாக வலியுறுத்தப்பட்டது. கல்வித்துறையில் உலகின் மிகப் பழமையான நாடான இந்தியா தற்போது மிகப் புதுமைக் கூறுகளைத் தன்னகத்தே ஏற்றுக்கொள்ளும் நாடாக விளங்குகிறது.

    கொரோனா பரவல் காரணமாக மக்கள் வாழ்வில் பல இடர்ப்பாடுகள் இருந்தபோதிலும் தடைகளைக் கடந்து மாணவர்களைச் சென்றடைய இணையவழிக் கல்வி உதவியது. தற்பொழுது போர் காரணமாக எழுந்திருக்கும் எரிபொர்ள் தட்டுப்பாடென்னும் பெரும் இடர்ப்பாடு மீண்டும் உலகை ஐந்து வருடங்கள் பின்னோக்கித் திருப்புகிறது. மீண்டும் இணைய வழிக் கல்வியை நோக்கித் திரும்புவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஆரம்பத்தில் இணையவழிக் கல்வியை நடைமுறைப்படுத்துவது குறித்த கருதுகோள்கள் அதற்கு முன்னரே இருந்தாலும் நடைமுறையில் சாத்தியமற்ற, கற்பனைக்கெட்டாத ஒன்றாகவே கருதப்பட்டது. ஆனால் பெருந்தொற்றுக் காலம், உலகைப் பல்லாயிரம் மைல்கள் தூரத்தை ஒரே தாவலில் கடந்து செல்லத் தள்ளியிருக்கிறது. தற்போது இணையவழிக் கற்றல் நடைமுறைக்கு வந்துவிட்ட சூழலில் இணையவழிக் கற்றலில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாயினும் நன்மைகளும் அதிகம் என்பதை உணர்ந்து இணையவழிக் கற்றலைப் பயனுள்ளதாக்கிக் கொள்ள மாணவர்கள் முழுமுனைப்போடு செயல்பட வேண்டும். முழுமையாக இல்லாவிடினும் இணையவழிக் கற்றலை இனி எப்போதும் கைவிடாதிருப்பது கூடுதல் நன்மையாக அமையும்.

    யாதும் ஊரே

    இணையம் உலகிற்குக் கிடைத்த பெரும் கொடை. இதனால் இன்று எந்த ஊரிலிருந்தும் கல்வி, பணி என மக்கள் தங்களது வாழ்வைத் தொடரலாம். இணையமும் அலைபேசியும் பல்கிப் பெருகிவிட்ட தற்காலத்தில் அவற்றை சில தவறுகளுக்காகவும் குறைகளுக்காகவும் முடக்குவதைவிட, ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்தக் கற்றுத்தரலாம். நகரமயமாக்கல், கிராமங்கள் மனிதர்களற்றுப் போதல் போன்ற சமூகக் குறைகளை இணையவழிக் கற்றலும் வேலைவாய்ப்பும் நிவர்த்தி செய்துள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மை.

    தீதும் நன்றும் பிறர் தர வாரா

    இணையவழிக் கற்றலின் காரணமாகக் கல்வியை, அறிவைப் பெற விரும்பும் ஒருவர் தான் விரும்பிய துறையில் திறனடையலாம். வயது வேறுபாடு, இடம், சூழல் போன்ற எந்தத் தடைகளும் அதற்குக் கிடையாது. SWAYAM, NPTEL போன்ற இணையதளங்கள் மட்டுமல்லாது தற்போது குறிப்பிட்ட துறைசார் ஆர்வலர்களால் யூடியூப் கற்றலும் சாத்தியமாகி உள்ளது. இதனால் கற்க விரும்பும் ஒருவர் தான் விரும்பிய துறைகளை, விரும்பிய நேரத்தில் கற்கலாம்.

    நோதலும் தணிதலும்

    இணையவழிக் கற்றலில் சைபர் க்ரைம், தவறான வழிகாட்டுதல், உடல் மற்றும் மனநலச் சீர்கேடுகள் போன்றவை குறித்த அறிவு புகட்டலும் வழிகாட்டுதல்களும் அவற்றைச் சரியாகக் கையாளத் தேவையான பயிற்சிகளை வழங்குவதும் அத்தியாவசியமானது. இதுவும் ஒருவகைக் கற்றலேயாகும்.

    கல்வியின் முக்கியக் கூறுகள்

    கற்றவர் – கற்பிப்பவர் – சமூகம் என்ற அமைப்புடையது கல்வி. இம்மூன்று தளங்களிலும் இணையவழிக் கல்வி நன்மை பயக்கக் கூடியதாகும். கற்பவருக்குச் சுதந்திரமும் ஈடுபாடும் தரவல்லதாக ஒலி- ஒளி அமைப்பு, வீடியோக்களுடன் கூடிய இணைய வழிக் கல்வி ஈர்க்கிறது.

    கற்பித்தலில் நன்மைகள்

    கற்பித்தலில் மூன்று படிநிலைகள் உள்ளன.

    1. கற்பித்தல்
    2. மதிப்பீடு
    3. திறன் மேம்பாடு

    கற்பித்தலில் பலவித நன்மை தரும் செயல்பாடுகளை உள்ளடக்கியதாக இணையவழிக் கற்றல் அமைகிறது. யூடியூப் வீடியோ, படக்கதை, உருக்காட்சிப் பயன்பாடு, படக்கோப்புகள் எனப் பல வகைகளைக் குறிப்பிடலாம்.

    மதிப்பீட்டுக்கு உதவும் இணைய வழித் தளங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. Quizizzes.com, Kahoot.com, google forms போன்றவை வினாக்களை மாற்றித் தருவது, உடனடி மதிப்பீடு, மதிப்பீட்டில் துல்லியம் எனப் பல பயன்களோடு கூடுதலாக மாணவர் ஆர்வத்தைத் தூண்டும் அம்சங்களோடும் அமைந்துள்ளன.

    திறன் மேம்பாடு

    ஒளிப்படங்களை உருவாக்குதல், ஒலி – ஒளிக் கோப்புகளை உள்ளீடு செய்தல் போன்ற செயல்களால் ஒவ்வொரு பாடத்துக்கும் பாட்டு, கதை, உரையாடல் எனச் சுவையான கோப்புகளை உருவாக்க முடியும். அரசுப் பள்ளிகளில் பாடத்திட்டம் இவ்வாறாக வடிவமைக்கப்பட்ட பிறகு மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதே இதன் நன்மைக்குச் சான்றாகும். கல்லூரிகளில் அல்லது உயர் வகுப்புகளில் பயிலும் மாணவச் செல்வங்களுக்கு இத்தகைய கோப்புகளையும் வீடியோக்களையும் அவர்களே உருவாக்க வழிகாட்டும் போது அவர்களுக்குக் கற்றல் இனிமையானதாக அமையும்.

    மீம்ஸ் உருவாக்கமும் காணொளிகளை உருவாக்குவதும் தற்போது மிகப் பிரபலமாகி வருகிறது. பாடம் சார்ந்த மீம்ஸ்களையும் காணொளிகளையும் இசைக்கொர்ப்பு மற்றும் பாடல்களுடன் சேர்த்து மாணவர்களே உருவாக்கினால்  கற்றலில் ஈடுபாடு அதிகமாகும். அவர்களது படைப்பாற்றல் மற்றும் கற்பனைத் திறனும் மேற்கூறிய செயல்பாடுகளால் மேம்படும்.

    மனிதமும் கல்வியும் உலகம் முழுமைக்கும் பொதுவானது. அவற்றை எத்தகைய கால இடர்களுக்கும் பலியாக்காமல் காப்பது மனிதர்களாகிய நம் கடமை. நம் தலைமுறையானது பெருந்தொற்று மற்றும் போர்கள் எனப் பல கடினமான சவால்களைக் கண்டும் கடந்தும் வருகிறது. இவற்றால் கிடைக்கும் அனுபவங்களும் மிக வல்லமைமிக்கதாக இருக்கும். எதிர்கால மக்களுக்குப் பொறுப்புள்ளவர்களாகச் சில கடமைகளை மேற்கொள்வதும் சிலவற்றை அத்தியாவசியமானது என இனங்கண்டு கடைபிடிக்க வேண்டியதும் நம் கடமை என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    கல்வி என்பது உயிரும் உடலும் மனமும் இணைந்த மனிதர்களுக்கானது. அதை உயிரற்ற சுவர்களுக்குள் சம்பிரதாயமான சடங்காக மாற்றாமல் ஆர்வமும் ஈடுபாடும் உள்ளதாக, செயல்வழிக் கற்றலாக மாற்றும் போது அறிவானது மாணவர்களின் உள்ளத்தில் இருந்து மலரக் கூடியதாக அமையும். தன்னம்பிக்கையும் சுய சார்பும் பழக்கமாகும். அவர்களின் படைப்பாற்றலையும் சுய சிந்தனையும் மழுங்கடிக்கப்படாமலிருக்க இணையவழிக் கற்றல் பெரிதும் உதவும்.

    விழுந்த இடத்திலேயே வாழ்வதற்கான வல்லமை பெற்று வருவது தானே மனிதனின் மாண்பு. தனக்கான வாழ்வு தேடி வரும் ஒரு விதை போல மனித இனமும் முழு உலகுக்கும் விஸ்வரூபம் எடுத்து எழுந்து நின்று எல்லைகள் கடந்து அறிவால் ஆள இணையவழிக் கற்றலைப் பரவலாக்குவோம்.

    Share
  • எரிமலை (சிறுகதை)

    ஜெ. ஜெயகுமார்
    சென்னை

    காந்தி ரோடு, திரு.வி.க. பூங்காவில் வழக்கம்போல் உடற்பயிற்சி செய்து கொண்டு சுற்றிலும் உள்ள மனிதர்களை வழக்கம்போல் அவதானித்துக் கொண்டிருந்தார் எழுபது வயது விஜய்.

    சாத்வீகம் ததும்பும் ஒரு மனிதனின் கோர முகத்தை அன்று பார்க்கப் போகிறோம் என்பதையறியாமல்.

    ரிடையர்ட் ஆகியும் இன்னும் இன்றும் அதே வாத்தியாரம்மா தோரணையில் பேசும், நடக்கும் முன்னாள் ஆசிரியை; “ஆறுமாசம் அமெரிக்கா ஆறுமாசம் இந்தியா” என்று காலம் தள்ளும் அறுபது வயது அருண்குமார்; கையில் ஒரு பையுடன் தவறாது நூலகம் வந்து பத்திரிக்கைகள் வாசிக்கும் வளையாத முழங்காலில் பேண்டேஜ் போட்ட முத்துசாமி; என்று மனிதரில் எத்தனையோ நிறங்கள்;

    வலது பக்கம் “ஷியாமளா  டவர்ஸ்” அடுக்குமாடி வீடுகளில் இருந்து பரபரப்புடன் “பைக்”கில்  பறக்கும் இன்போசிஸ் இளைஞன்; வெய்யில், புழுதி மற்றும் காமக் கண்களிருந்து தப்பிக்க தீவிரவாதி போல உடலெல்லாம் உடையால் மறைத்துக்கொண்டு அவசரகதியில் “ஆக்டிவா” வில் அதிரடியாகக் கிளம்பும் மத்தியதரக் குடும்பப் பெண்மணி; என்று மனிதர்களின் வாழ்க்கைத் தேடல்களை கவனித்துக் கொண்டிருந்தார் விஜய் உடற் பயிற்சியுடன்.

    அரக்கு நிற “ஹ்யூண்டாய்” கார்  அபார்ட்மெண்ட் பார்க்கிங்கிலிருந்து  வீதிக்கு  வந்தவுடன், நெற்றியில் பளிச்சிடும் விபூதியுடன் இரண்டு பையன்கள் துள்ளிக் குதித்து ஏறிக் கொண்டவுடன் அவர்களது தந்தை அவர்களை ஸ்கூல்லில் டிராப் செய்துவிட்டு எங்கேயோ இருக்கும் அவரது அலுவலகம் செல்வது விஜய் அன்றாடம் கவனிக்கும் ஒரு நிகழ்வு.

    பூஜை முடித்த கையோடு பளபளக்கும் சந்தனம் குங்குமம்,அணிந்த அந்த நடுத்தர வயது எக்ஸிக்யூடிவ் அப்பாவின் நெற்றியில் விபூதியை விஞ்சும் கவலை ரேகைகள். இளைய மகன் வந்து காரின் முன்பக்கம் வழக்கம்போல் “பிராம்ப்ட்”டாக உட்கார்ந்து கொண்டாலும் பெரிய வகுப்பு படிக்கும் மூத்த பையன் இன்று லேட்.

    இவர்களை பள்ளியில் விட்டு விட்டு  ஆக்ஸிஜன் இல்லா ஆற்காடு ரோடு டிராஃபிக்கில் தட்டுதடுமாறி மேடு பள்ளங்களில் ஊர்ந்து சரியான நேரத்திற்கு அலுவலகம் செல்ல வேண்டுமே என்ற “கூகிள் மேப்” கவலை அவர் முகத்தில்.

    நேரம் ஆக ஆக, வெயிட்டிங் எரிமலை வெடிக்கத்  தயாரானது.

    அன்றைய தினம் ஸ்கூல் யூனிஃபார்ம் ஒயிட் & ஒயிட் டிரஸ் கோடு என்பதாலோ என்னவோ  மூத்த மகன் ஒரு ஒயிட் சாக்ஸ் கிடைத்து, இன்னொரு சாக்ஸ் கண்டுபிடித்து போட்டுக் கொண்டு வருவதற்கு நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. (அந்தக் காலத்தில் “சங்கர்லால் வந்து விட்டார்” நாவல் ஆசிரியர் தமிழ்வாணன்  “சாக்ஸ்”சை  நடையன் என்று  மொழி பெயர்த்திருப்பார்.)

    “ஆஹா! இந்நேரம் பசங்களை டிராப் செய்து விட்டு போரூர் ஜங்ஷன் தாண்டியிருக்கலாமே” என்று ஆபிசர் அப்பா கோபத்தின் எவரெஸ்ட்டில் ஏறிக் கொண்டிருந்தார்.

    ஒரு வழியாக மூத்த பையன் காரில் ஏறி பின்பக்க கதவை சாத்துவதற்குள், அவனுக்கு லட்சார்ச்சனை!’ விடலைப் பையனான அவன் எடக்கு மடக்காக ஏதோ பதிலளிக்க எரிமலை இன்னும் விஸ்வரூபம் எடுத்து, டிரைவர் இருக்கைக்கு கீழே இருந்த ஒரு ரப்பர் செருப்பை எடுத்து பின் சீட்டில் அமர்ந்திருந்த மூத்தவனை  நோக்கி அடிக்க முயன்றார் ஆபிசர் அப்பா.

    பையன் லாவகமாக பின் சீட்டில் இங்கும் அங்கும் நகர்ந்து தப்பித்துக் கொள்ள அவருடைய காலணி ஆதிக்கம் பலவீனம் அடைய ஆரம்பித்தது.

    காருக்குள் நடப்பதை பொறுக்க முடியாமல் பார்க்கில் இருந்த விஜய் “ சார்! சார்! என்று அந்த ஆபிசர் அப்பாவை நோக்கி கத்தினார். “யாரோ தன்னைக் கூப்பிடுகிறார்கள்” என்று உணர்ந்த அந்த ஆபிசர் ஓங்கிய செருப்புடன் டிரைவர் இருக்கையிலிருந்து சத்தம் வந்த திசையில் திரும்பியபோது விஜய்,

    அவரை நோக்கி, சார்! சார்! வாட் இஸ் திஸ்?” “கோ ஹாப்பிலி”

    “சந்தோஷமா போய்ட்டு வாங்கோ” என்று கூக்குரலிட்டார்.

    சுதாரித்துக் கொண்ட அந்த ஆபிசர் செருப்பை காருக்குள் கீழே போட்டு விட்டு காரைக் கிளப்பிக் கொண்டு குற்ற உணர்வுடன் புறப்பட்டபோது

    மூத்த  பையனின் கண்களில் புண்பட்ட அவனுடைய இதயம் தெரிந்தது.

    “அவன்  மீது ஏன் இந்த வெறித்தனமான கோபம்? ஒரு வேளை அவன் நன்றாகப் படிக்கவில்லையோ? இல்லை, நேரமே வாழ்க்கை என்னும் நெருக்கடியால் வந்த வன்மமா? ஒரு நடுத்தர வர்க்கத்தின் அன்றாட நகர வாழ்க்கை  இவ்வளவு அலைச்சல், உளைச்சல், உணர்ச்சி கொந்தளிப்பு  நிறைந்ததாக ஆகி விட்டதே“ என்று கவலையுடன் வீடு திரும்பினார் விஜய்.

    காரை ஓட்டுபவர்கள் “ரோட் ரேஜ் “ என்ற கோபத்  தணலில் மாட்டிக்கொண்டு நிதானம் தவறுவது உண்டு. அது போலத்தான் இந்த மனிதரின் கார் கோபமா? இது போன்ற விநாடித் தருணங்களில்தான் கொலை கூட நடக்கிறது போலும்  என்றெல்லாம் விஜய்யின் மனம் அலை பாய்ந்தது.

    மறு நாள் அதே விஜய்; அதே பார்க்; அதே நேரம்; அதே அரக்கு காரில் குழைத்து விபூதி அணிந்த அதே மூவர், இன்னொரு நாள் வாழ்க்கையோடு முட்டி மோதிப்  போராடி ஜெயிக்க.

    கண்டும் காணாமலும் விஜய் உடற் பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

    காரில்  இருந்த ஆபிசர் அப்பா, கண்ணாடியைத் தாழ்த்தி “சார்! சார்! என்று விஜய்யை கூவி அழைத்தார்.

    “சாரி சார்! நேத்திக்கி ஒரு நிமிஷம் நான் மிருகம் ஆயிட்டேன்! “ஐ லாஸ்ட் மைசெல்ஃப்”; நல்ல வேளை! நீங்க என்னை பழைய நிலைக்கு கொண்டு வந்துட்டீங்க! டெர்ரிபிலி சாரி சார்! “எக்ஸ்க்யூஸ் மீ; தாங்க்ஸ் சார் “என்று விஜய்யிடம் சொல்லிக் கொண்டே காரைக் கிளப்பினார்.

    இப்போது அந்த மூவரும் பழைய அன்யோன்ய நிலமைக்கு வந்து விட்டிருந்தனர்.

    விஜய், “இட்ஸ் ஓகே; அவன் மூத்த பையன் சார்; அவனை இப்ப நீங்க நன்னா பாத்துண்டாத்தான் பிற்காலத்திலே நீங்க என்  வயசுல இருக்கும்போது உங்களை அவன் நன்னா பாத்துப்பான்; வாழ்க்கைங்கறது ஒரு நாள் இல்ல; ஒரு வருஷம் இல்ல, ஒரு ஜன்மம் சார்! எல்லோருக்குமே  “தொட்டிலில் இருந்து காலில்லாக் கட்டில் வரைதான் வாழ்க்கை” ன்னு கவிஞர் சுரதா சொல்லியிருக்கார் சார்!

    “சீயர்ஃபுல்லா போட்டு வாங்கோ! டைம்  ஆறது; ஆல் த பெஸ்ட்”; என்று விடை கொடுத்து விட்டு அவசரமாக திரும்பிக் கொண்டார் விஜய்.

    அந்த ஆபிசர் அவ்வளவு தூரத்தில் இருந்தும் விஜய்யின் கண்களின் ஈரத்தைக் கவனிக்கத் தவறவில்லை அவருடைய கண்களே  ஈரமாக இருந்தபோதிலும்!

    Share
  • இறகைச் சுமக்கும் காற்று

    திரிவேணி சுப்ரமணியம்
    கோயம்புத்தூர்

    பறவையின் எல்லை –
    கூண்டு கிடையாது
    பரந்த வானம்.
    சிறு இறகைச் சுமக்கும்
    காற்றென சுமந்து
    செல்கிறோம் வாழ்வை.
    நீரில் விழும் கல்
    பிம்பத்தை சலனப்படுத்துகிறது.
    நம் பிம்பங்களின் மீதும்
    கொட்டப்படுகிறது விமர்சனக்கல்.
    மனவலியின் சாயல்
    படிந்து படிந்து இறகின்
    சுமைதாங்காமல்
    தள்ளாடுகிறது காற்று.

    Share
  • ஒப்பீட்டு நோக்கில் மகாகவிகளின் பாடுபொருட்கள்

    முனைவர் த. ராதிகா லட்சுமி
    இணைப்பேராசிரியர்-தமிழ்த்துறை,
    நல்லமுத்துக் கவுண்டா் மகாலிங்கம் கல்லூரி,
    பொள்ளாச்சி

    இந்திய இலக்கிய வரலாற்றில் ஒரே காலக்கட்டத்தில் சுப்பிரமணிய பாரதியார், இரவீந்திரநாத தாகூர் என்ற இரு மகாகவிகள் கவியாட்சி புரிந்தார்கள். தமிழ்நாட்டின் எட்டயபுரத்தில் பிறந்து ‘நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்’ என்ற கொள்கையோடு கவிஞனாக வாழ்ந்தவர் சுப்பிரமணிய பாரதியார். இவர் நாமகளின் திருவருளால் சொல்வளத்தில் சிறந்தாரே தவிர திருமகளின் திருவருள் கிடைக்காததால் வாழ்நாள் முழுவதும் வறுமையில் வாடி தவித்தார்.  வங்காளத்தின் ஜெஸ்சூரில் பிறந்து நோபல் பரிசு பெற்றவர் இரவீந்திரநாத தாகூர். திருமகளின் செல்வத்துடன் நாமகளின் சொல்வளமும் ஒருங்கே பெற்றவர். தாகூரின் குடும்பம் சர்வதேச அளவில் கலையுலகத் தொடர்புடையது. தாகூர் பலமுறை வெளிநாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார்.

    பாரதி, தாகூரின் படைப்புகளில் தேசப்பற்று, பிரபஞ்ச சக்தி, தெய்வம் எங்கே?, இறைவேண்டல், ஒளி குறித்த வருணனை, பெண் முன்னேற்றம் யந்திரங்களின் வளர்ச்சி, மற்றும் காலனை மதித்தலும், மிதித்தலும் போன்ற சிந்தனைக் களங்களை ஒப்பீட்டு நோக்கில் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    தேசப்பற்று:

    சுப்பிரமணிய பாரதியார் மானிடத்தேவைகள் அனைத்திலும் மிக முக்கியமான சுதந்திரத்திற்காக அதிகமாகப் போராடுகிறார். இதற்காக போற்றுவதற்குரிய சுதந்திரதேவியின் பாதத்தில் எத்தகைய தியாகத்தைப் புரியவும் தயாராக இருக்கிறார். ‘நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை’ என வருத்தமுற்றப் பாட்டிலும் ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் சுதந்திர தாகத்தை உருவேற்ற முயலுகிறார்.

    ‘தேவி! நின்னொளி பெறாத
    தேயமோர் தேய மாமோ?
    ஆவியங் குண்டோ? செம்மை
    அறிவுண்டோ? ஆக்க முண்டோ?
    காவிய நூல்கள் ஞானக்
    கலைகள் வேதங்க ளுண்டோ?
    பாவிய ரன்றோ நிந்தன்
    பாலனம் படைத்தி லாதார்? ‘

    ‘சுதந்திர தேவியின் துதி’ என்ற பாடலில் தேசம், உயிர், அறிவு, ஆக்கம், காவியநூல்கள், கலைகள் என அனைத்தும் வேண்டுமென்றால் சுதந்திரம் வேண்டும் என்று தேசபக்தியை ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் விதைக்க முற்படுகிறார். ‘அச்சமில்லை! அச்சமில்லை!’ என்று அச்சத்தை நீக்கும் தாரக மந்திரத்தை முழங்குகிறார். ‘ஜெயமுண்டு பயமில்லை மனமே! இந்த ஜன்மத்திலே விடுதலையுண்டு’ என நம்பிக்கையை மனதில் துளிர்விடச் செய்கிறார்.

    அச்சமின்றி தலைநிமிர்ந்து நிற்கும் இதயம், அறிவு வளர்ச்சிக்கான பூரணவிடுதலை, குடும்பத்தின் குறுகிய தடைகளால் குலையாத உலகின் ஒருமைப்பாடு, மெய்ந்நெறிகளின் அடிப்படையில் உருவாகும் வாய்ச்சொற்கள், விடாமுயற்சியுடன் பூரணத்துவத்தை நோக்கி செல்லுதல், தெளிந்த அறிவோட்டம், பாழடைந்த பழக்கத்தால் வறண்ட பாலையை நோக்காத, வழிதவறாத பயணம் என்பதுடன்

    ‘நோக்கம் விரியவும்
    ஆக்கவினை புரியவும்
    இதயத்தை எங்கே
    வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த
    விடுதலைச் சுவர்க்க பூமியில்
    எந்தன் பிதாவே!
    விழித்தெழுக
    என் தேசம்’

    என்று தன் தேசம் குறித்த தன்னுடைய எதிர்பார்ப்பை இரவீந்திரநாத தாகூர். கீதாஞ்சலியில் பதிவுசெய்துள்ளார். விடுதலையான பூமி சுவர்க்க பூமியாக அதாவது மகிழ்ச்சியின் குறியீடாக அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு இதயமும் ஆக்கப்பூர்வமாக, தனித்துவமாக, அச்சமின்றி ஒருமைப்பாட்டுடன் செயல்படவேண்டும் என்ற விருப்பத்தை வலியுறுத்துகிறார்.

    பிரபஞ்ச சக்தி:

    பாரதியார் பிரபஞ்சத்தைச் சக்தியின் வடிவமாக நோக்கியவர். துன்பமில்லா நிலை, தூக்கமில்லாத கண்விழிப்பு, அன்பு கனிந்த கனிவு, இன்பமுதிர்வு, முக்திநிலையின் முடிவு, சொல்லில் விளங்கும் சுடர், தெய்வத்தை எண்ணும் நினைவு, பாட்டினில் வந்த களிப்பு, வாழ்வைப் பெருக்கும் மதி, மாநிலம் காக்கும் மதி, ஊழ்வினை நீக்கும் உயர்வு, உள்ளத்தில் ஒளிரும் விளக்கே சக்தி என்று சக்தியின் வடிவங்களை மனக்கண்ணில் நிறுத்துகிறார். இச்சக்தியிடமே பாரதியார் காணிநிலம் வேண்டும் என்றும், மோகத்தைக் கொன்றுவிடு என்றும் தன் வேட்கைகளை முறையிடுகிறார்.

    ‘விசையுறு பந்தினைப்போல் – உள்ளம்
    வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்…
    அசைவறு மதிகேட்டேன் இவை
    அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?’

    என்று வினா தொடுக்கும் அளவிற்கு பாரதி பிரபஞ்ச சக்தியிடம் நெருக்கமானப் பிணைப்பைக் கொண்டிருக்கிறார். இவ்வுலகத்தை இயக்கும் சக்தியின் மேல் பாரதிக்கு இருந்த நிலைப்பாடு புலனாகின்றது.

    இயற்கையையும், ஐம்பூதங்களையும் சக்தியாக காணும் பாரதியார் ஓரிடத்தில் இவை அனைத்தும் மாயைகளோ? என்று தளர்ந்து போனதை ‘நிற்பதுவே நடப்பதுவே’ பாடலில் காணமுடிகிறது. சொற்பனங்களாக, தோற்ற மயக்கங்களாக, அற்பமான மாயைகளாக, கானல்நீராக, காட்சிப்பிழைகளாக, கண்முன் உள்ள காட்சிகள் மறைந்து தோன்றுவது ஏன்? என உலகை நோக்கி வினவுகிறார்.

    ‘காண்பதுவே உறுதி கண்டோம்
    காண்பதல்லால் உறுதி இல்லை
    காண்பது சக்தியாம் இந்தக்காட்சி நித்தியமாhம்’

    என்ற இறுதியடிகளின் வாயிலாக உலகின் இயக்கமாக சக்தியைக் காண்பது உறுதி என பாரதியார் கூறுவது திண்ணம்.

    இரவீந்திரநாத் தாகூர் இருபத்தைந்தாவது வயது வரை கங்கைக்கரையில் உள்ள படகு வீட்டில் தனிமையோடு வாழ்ந்தவர் என்பதால் இயற்கைக்கூறுகளே அவருக்கு துணையாக இருந்திருக்கின்றன. தனிமையில் அவர் கனவுகளுக்கு உயிர் கொடுத்ததன் விளைவாகவே கீதாஞ்சலி தோன்றியதாக தாகூர் குறிப்பிடுகிறார்.

    ‘சூரியன் மறையும் மாலை நேரங்களில் தனிமையில் அமர்ந்து நிழல்களைப் போல தோற்றமளிக்கும் மரங்களைக் கவனிப்பேன். மதிய நேரத்தின் அமைதியான தருணங்களில் குழந்தைகளின் கூச்சல் தொலைவில் இருந்து மெதுவாக எனக்கு கேட்கும். எனக்கு இந்த குழந்தைகளின் மகிழ்ச்சிக் குரல்களும், பாடல்களும் மரங்களை நினைவூட்டும். ஏனெனில் இந்த மரங்களும் அந்த மகிழ்ச்சியான பாடல்களைப் போன்று பூமியின் இதயத்தில் இருந்து ஏக்கங்கள் மற்றும் மகிழ்ச்சியின் மொத்த வெளிப்பாட்டின் குறியீடுகளாகிய நாமும் நம் ஏக்கக் குரல்களை விண்ணுக்கு அனுப்புகிறோம். இதை நான் என் இதயத்தின் அடித்தளத்தில் உணர்ந்ததால் கீதாஞ்சலி என்ற கவிதை நூலை எழுதினேன்.’

    என்ற தாகூரின் உரை அவர் இயற்கையை உள்வாங்கிய விதத்தை வெளிப்படுத்துகிறது. தனிமையில் இருந்தபடி இயற்கையை ரசித்து. அனுபவித்து, உண்டு அவற்றில் தன் பிரம்மச் சக்தியைக் கீதங்களின் வாயிலாக நிரப்பி கீதாஞ்சலியை உலகுக்கு அளித்துள்ளார்.

    காற்றினிலே வருமென் கீதம், வானத்து விண்மீன், புல்லின் இலை, புல்லாங்குழலின் ஓசை, அகண்ட கடல், ஆனந்தப்பறவை, நித்திய ஒளி, மெல்லிசை போன்ற சொற்களின் மூலம் தாகூர் இயற்கையின் ஆற்றலையே கடவுளாகக் காண்கிறார். அதன் வாயிலாக உலகை அறிய முற்படுகிறார். அதனால் சக்தியை நோக்கி வினாக்களைத் தொடுக்காதவராக அன்பு, கருணை, ரசனை என இன்பங்களை அமைதியாக உட்கொண்டவராக திகழ்வதைக் காணமுடிகிறது.

    தெய்வம் எங்கே? :

    பக்தியையும். மனிதாபிமானத்தையும் இணைத்து நோக்கிய பார்வையால் இரு மகாகவிகளுமே உழைப்பவர்களிடத்தில் தெய்வத்தின் திருவுருவைக் காணமுற்படுகின்றனர்.

    ‘இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே!
    யந்தி ரங்கள் வகுத்திடு வீரே
    கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே
    கடலில் மூழ்கிநன் முத்தெடுப் பீரே!
    அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
    ஆயி ரந்தொழில் செய்திடு வீரே!
    பெரும்பு கழ்நுமக் கேயிசைக் கின்றேன்
    பிரம தேவன் கலையிங்கு நீரே!’

    என்று பாரதியார் பிரமதேவனின் கலையாக தொழில் செய்பவர்கள் இருப்பதாக பாடுகிறார். தாகூர் ‘இறைவன் எங்கிருக்கிறான்’ என்ற பாடலில் துதி பாடி, சுலோகம் கூறி. ருத்திராட்சம், ஜெபமாலை உருட்டி, கோயிலில் சென்று காரிருளில் இறைவனைத் தேடாதே! இறைவன் அங்கில்லை!

    ‘மெய்வருந்தி
    இறுகிப் போன வயலை
    உழவன் எங்கே
    உழுது கொண்டு இருக்கிறானோ,
    வேர்வை சிந்தி
    நடைபாதை போடுபவன்
    எங்கே கல்லுடைத்து வருகிறானோ
    அங்கே உள்ளான் இறைவன்!
    வெட்ட வெயிலிலும்
    கொட்டும் மழையிலும்
    தூசி படிந்த ஆடையுடன்,
    உழைப்பாளி
    கூடவே குடியுள்ளான் இறைவன்!’

    தியானத்தை விடுத்து, நறுமணப்புகைகளைப் புறக்கணித்து விட்டு வியர்வையைச் சிந்திடும் உழைப்பாளியிடம் இணைந்து நில்! என்று பாடுகிறார். உழைப்பவர்களின் உருவில் தெய்வத்தைக் காணும் போக்கில் இருகவிகளிடமும் வேறுபாடு உண்டு. பாரதியார் உழைப்பாளர்களைச் சிருஷ்டி கர்த்தாக்களாக காண தாகூர் உழைப்பாளர்களை மனிதாபிமானத்தோடு அணுகுவதைக் காணமுடிகிறது

    இறைவேண்டல்:

    இரு மகாகவிகளுமே இறைவனை நேசித்தவர்கள். ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்கள். தாகூர், நெஞ்சில் உதிக்கும் தாழ்வான எண்ணங்களை வேரோடு அழிப்பாயாக! இன்பதுன்பத்தைத் தாங்கும் பொறுமையை அளிப்பாயாக! நற்பலன்களைத் தரும் பணிகளைச் செய்வேனாகுக! வழியோரை என்றும் மறக்காமல், நெறியற்ற மூர்க்கரை வணங்காதிருக்கும் வைராக்கியத்தைத் தந்திடுவாயாக! தெய்வமிடும் பணிக்கு நான் பாசமோடு உழைக்கும் சக்தியைத் தருவாயாக!

    ‘தினச் சச்சரவிலிருந்து விடுபட்டு
    மனம் அப்பால் சென்று
    எனது உள்ளம் உயர்ந்து சிந்திக்க
    மனத்தெளிவைத் தந்திடு!’

    என இறைவனிடம் வேண்டுவதில் தன் மனிதப்பண்பை மேம்படுத்த விரும்புவதை நோக்கமுடிகிறது. ஆனால் பாரதியோ,

              ‘எண்ணிய முடிதல் வேண்டும்
    நல்லனவே எண்ணல் வேண்டும்
    திண்ணிய நெஞ்சம் வேண்டும்
    தெளிந்த நல்லறிவு வேண்டும்’

    என்பதில் எண்ணங்களின் தோற்றுவாய், உழைப்பு, விடாமுயற்சி, வைராக்கியம், நற்சிந்தனைக்கான நல்லறிவு போன்றவற்றை நல்கும்படி இறைவனிடம் இறைஞ்சுகிறார். இங்கு இருமகாகவிகளின் எண்ணவோட்டங்கள் ஒரே அலையில் பயணிப்பதைக் கண்கூடாக அறியமுடிகிறது.

    ஒளி குறித்த வருணனை:

    ‘ஒளியே நீ யார்?
    ஞாயிறின் மகளா?
    அன்று நீ ஞாயிற்றின் உயிர். அதன் தெய்வம்’

    ஞாயிற்றின் வடிவம் என்பது ஒரு உடல். ஓளியாகிய நீ தான் உயிர்? உன் தோற்றம் எப்போது?

    உன்னை யார் படைத்தார்? நீ அறிவின் மகளா? உறங்கிக் கிடக்கும் தெளிவா? உனக்கும், வானவெளிக்குமான பழக்கம் எத்தனை காலம்? எத்தகைய அன்பு? எவ்வாறு வானவெளியில் இரண்டறக் கலக்கிறாய். உன்னைப் படைத்த விந்தைக்கரிய மோஹினியைத் தொழுகிறோம் என பாரதியார் ஒளியைக் கண்டு வியப்படைந்து வினாக்களைத் தொடுக்கிறார். இறுதியில் சக்தியே ஒளியைப் படைத்ததாகக் குறிப்பிட்டு தலைவணங்குகிறார். ஓளியின் அழகைத் தாகூர் ஒளியின் நர்த்தனமாக உவமித்துப் பாடுகிறார்.

    ‘மின்னொளியே!
    என்னரும் ஒளியே!
    உள்ளத்துக் கினிய ஒளியே!
    விழிகள் முத்தமிடும் ஒளியே!
    உலகை மூழ்கடிக்கும் ஒளியே!
    நர்த்தனம் ஆடும் ஒளிக்கதிர்கள்
    என் கண்மணியே!

    வானத்தின் வெடிச்சிரிப்பே மின்னல், பட்டுப்பூச்சிகள் ஒளிக்கடலில் மிதக்கும் படகுகள், ஒளியலையில் அல்லியும், மல்லியும் ஊர்திகள், முகிலில் பொன்னிறக்கதிர்கள் என ஒளியை வருணிக்கிறார். உள்ளத்தின் களிப்பு ஆகாயக் கங்கையால் வெள்ளமாய் பெருக்கெடுக்கிறது என ஆனந்தத் தாண்டவமிடும் ஒளியின் அழகைக் குறிப்பிடுவதில் இருமகாகவிகளின் உள்ளமும் ஒளிக்கு அடிமையாகியிருப்பதை அறியமுடிகிறது.

    பெண் முன்னேற்றம்:

    ‘பெண்டாட்டி தனையடிமைப் படுத்த வேண்டிப்
    பெண் குலத்தை முழுதடிமைப் படுத்தலாமா?’

    என்று கேட்டதுடன் பெண்ணடிமையுற்றிருப்பதால் இந்திய மக்களும் அடிமையுற்றிருப்பதில் வியப்பில்லை. வீட்டிலுள்ள பழக்கமே நாட்டில் இருப்பது இயல்பு. அதனால் வீட்டில் பெண்களின் அடிமை நிலை மாறவேண்டும் என்று பாரதியார் ‘தாய் மாண்பு’ என்னும் கவிதையில் பாடியுள்ளார்.

    ‘சமூகத்தில் தாங்களே முக்கியமானவர்கள், தங்கள் ஆதிக்கமே ஓங்கியிருக்க வேண்டும் என்று ஆண்கள் எண்ணி வந்தது … பெண்கள் அறியாமையிருளிலும், குருட்டு நம்பிக்கையிலும் ஆழ்ந்திருக்கும் வரை நம் இஷ்டம் போல் ஆடலாம். பெண்களுக்கு இடங் கொடுத்தால் நாம் நிம்மதியாக இருக்க முடியாதே என்பதே அவர்கள் கருத்து”

    என தாகூர் கூறியதில் ஆண்கள் தங்கள் சுயநலத்திற்காக பெண்களை அடிமைப்படுத்தும் நிலையைச் சுட்டுகிறார். இருவருமே பெண்களை மதிக்கவேண்டும் என்ற கருத்தையே வலியுறுத்துகின்றனர். தாகூர் தன் பெரிய தமக்கை முதல்முதலாக பல்லக்கில் ஏறி பள்ளிக்குச் சென்றபோது பெரியமனிதர்கள் தங்களுக்கு தலைகுனிவு ஏற்பட்டதாக கருதியதைத் தாகூர் குறிப்பிடுகிறார். பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் என புதுமைப்பெண்ணிற்குரிய வரையறையாக பாரதியாரும் பெண்கல்வியை முன்னிறுத்துகிறார். இதன்வாயிலாக பெண்குல விடுதலையே மானிடகுல விடுதலை என்பதை இரு மகாகவிகளும் உணர்ந்து செயல்பட்டதை அறியமுடிகிறது.

    யந்திரங்களின் வளர்ச்சி:

    இன்றைய உலகின் தவிர்க்க முடியாத இயக்கச் சாதனங்களாக தொழில் வளர்ச்சியையும், எந்திரங்களையும் குறிப்பிடலாம். யந்திரத்தின் வருகையைப் பற்றி பாரதியும் தாகூரும் வெவ்வேறு அணுகுமுறைகளைக் கொண்டிருக்கின்றனர். சுப்பிரமணிய பாரதியார் ‘கைத்தொழில் போற்று’ என்றும் ‘கூடித்தொழில் செய்’ என்றும் புதிய ஆத்திச்சூடியில் இயற்றியுள்ளார். ‘பாரததேசம்’ என்ற பாடலிலே பல தொழில்கள் குறித்துப் பாடுகிறார்.

    ‘ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்,
    ஆலைகள் வைப்போம், கல்விச் சாலைகள் வைப்போம்…
    வானையளப் போம், கடல் மீனையளப்போம்
    சந்திர மண் டலத்தியல் கண்டு தெளிவோம்’

    குடைகள், உழுபடைகள், இரும்பாணிகள், வண்டிகள், கப்பல்கள்   செய்வோம் என்று தொழிலுக்கு வந்தனை செய்கிறார். இன்று சந்திர மண்டலத்தில் விண்கலம் ஏவிவிடுதலை எதிர்நோக்கி அன்றே பாடியுள்ளார். புதிய இந்தியாவிலே கைத்தொழிலின் வளர்ச்சி, தொழில் செய்ய யந்திரங்கள் , அவற்றை இயக்கும் மனிதர்களின் அறிவு வளர்ச்சி சிறக்கவேண்டும் என ஆசைப்பட்டார். மேலும் எதிர்காலத்தை நோக்கி குறி சொல்லும் விதத்திலே

    ‘குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
    நல்லகாலம் வருகுது நல்லகாலம் வருகுது…
    தொழில் பெருகுது தொழிலாளி வாழ்வான்
    சாத்திரம் வளருது: சூத்திரம் தெரியுது:
    யந்திரம்; பெருகுது: தந்திரம் பெருகுது’

    என புதிய கோணங்கி பாடலில் தொழில் வளர்ச்சியையும், தொழிலாளியையும், யந்;திரங்களையும் குறித்து பேரானந்தத்தோடு பாடுவதை உணரமுடிகிறது. 1916 ஆம் ஆண்டு பாரதியார் எழுதிய ‘புதிய உயிர்’ என்ற கட்டுரையிலே உலகம் மேன்மையுற கைத்தொழில்கள் பெருகவேண்டும், இவற்றில் சாத்தியமில்லை என்றுரைப்பதில் பயனில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ‘ஜப்பான் தொழிற்கல்வி’ என்ற கட்டுரையிலே நம் இந்தியப் பிள்ளைகளை ஜப்பானிற்கு அனுப்பி பலவிதமான தொழில்களும், சாஸ்திரங்களும் கற்றுக் கொள்ளும்படி செய்யவேண்டும். மேலும் கைத்தொழில் வளர்ச்சிக்காக உழைப்போரும் உண்மையான தேசபக்தரே என குறிப்பிட்டிருப்பதில் பாரதியின் தேசபக்தியை அறியமுடிகிறது.

    யந்திரங்களை அணுகிய விதத்தில் பாரதிக்கு நேர்முரணான கருத்தைத் தாகூர் கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் அவர் நிகழ்த்திய ‘இந்தியாவில் தேசியம்’ என்ற சொற்பொழிவில் பின்வருமாறு கூறுகிறார்.

    ‘இன்று உலகில் காணப்படும் பெரிய கைத்தொழில் ஸ்தாபனங்களிலே எனக்கு நம்பிக்கையில்லை, அவை குருபமாக இருப்பதே சிருஷ்டியமைப்புக்கு முரணாக இருக்கின்றன என்பதைக் காட்டுகிறது. இயற்கையின் மகத்தான சக்தியானது பயங்கரத்தில் தோற்றமளிப்பதில்லை. அழகிலேயே காட்சி தருகிறது. யந்திர நாகரிகமானது இன்பத்தைப் பலியிட்டுப் பணத்தைத் திரட்டுகிறது. தான் நிறுவும் (யந்திர) கருவிகளுக்கு அதிகபட்ச இடமளிப்பதற்காக மனிதன் தனது மனிதப்பண்பைக் குறைந்தபட்ச அளவு ஒடுக்கிக் கொள்கிறான். மனித உணர்ச்சிகள் யந்திரங்களை இலகுவில் ஏற்க மறுப்பதால் – யந்திரங்களின் பாதையை மறிப்பதால் – அந்த நல்லுணர்ச்சிகளை ஏளனம் பண்ணுகிறான் மனிதன்’

    என்பதில் இயற்கையின் மடியிலே பிறந்து வளர்ந்த தாகூர் இயற்கைக்கு முரணான யந்திரங்களையும், புகை கக்கும் ஆலைகளையும் விரும்பாதது இயல்பே. எனினும் வறுமையில் வாடும் மக்களின் வளர்ச்சிக்காக சிந்திக்காமல் யந்திரங்களை வேண்டாம் என்று கூறியது ஆச்சரியத்தையே அளிக்கிறது.

    பாரதியார் ஜப்பான் நாட்டின் தொழில் வளர்ச்சி குறித்து நூல்களில் படித்தும், பிறர் சொல்ல கேள்விப்பட்டதையும் கொண்டு நம் இந்திய இளைஞர்கள் ஜப்பான் சென்று தொழில்நுட்பத்திறமை பெறவேண்டும் என்றார். ஆனால் தாகூரோ பல முறை ஜப்பானுக்கு சென்று அக்காட்சிகளையே நேரிலே கண்டவர். அதனால் ஜப்பான் நவீன மயமானதில் மானுடச்செல்வங்கள் அழிந்ததாக குறிப்பிடுகிறார். இரு மகாகவிகளின் இவ்வேறுபட்ட   சிந்தனைக்குக் காரணத்தை நுணுக்கமாக கவனித்தால் இருவரும் வளர்ந்த சூழல் மாறுபாட்டைக் குறிப்பிடலாம். பாரதியார் நாட்டின் வளர்ச்சிக்கு யந்திரங்களின் இன்றிமையாமையைக் கருத்தில் கொண்டு பாடியதில் அவருடைய இந்திய தேசியப்பற்றை அறியமுடிகிறது. ‘மனிதன் மனிதனே யந்திரம் யந்திரமே என்றுமே இணையமுடியாது’ என்ற கருத்துடைய தாகூர் நாட்டைவிட மனிதகுலப் பண்புகளையும், இயற்கையையும் நேசித்ததை அறியமுடிகிறது. யந்திரங்கள் உலகில் ஒருசிலரிடம் மட்டுமே இருந்து போட்டி, பொறாமைகளை உருவாக்கி மனிதனை அழிப்பதைக் கண்கூடாகக் கண்ட தாகூர் யந்திரங்களை நிராகரிக்க பாரதியார் சமத்துவம், வேலைக்குத் தகுந்த கூலி என்றதோடு யந்திரங்களை வரவேற்றதில் இருமகாகவிகளின் உள்ளுணர்வும் புலனாகின்றது.

    காலனை விரும்புதலும், எதிர்த்தலும்:

    மரணம் என்பது ஒவ்வொரு உயிர்களுக்கும் ஏற்படக்கூடியது. தவிர்க்கமுடியாதது என பாரதியார் பல பாடல்களில் குறிப்பிட்டிருப்பினும்,

    ‘பார் மீது நான்சாகா திருப்பேன் காண்பீர்
    சாவினை வேண்டேன் தவிர்ப்பாய் போற்றி’

    என்பதில் பாரதியார் மரணபயத்தைத் தவிர்க்க விரும்புபவராகவும், சாகாவரத்தைத் தெய்வத்திடம் கேட்பவராகவும் காணப்படுகிறார். இதன் பொருட்டே பாரதியார் தமது இறுதியாண்டுகளின் போது மரணம் என்ற சிந்தனையில் உழன்று அலைக்கழிக்கப்பட்ட காலத்தில் ‘காலனுக்கு உரைத்தல்’ என்ற பாடலில்,

    ‘காலா உன்னைச் சிறுபுல்லென மதிக்கிறேன் – என்றன்
    காலருகே வாடா! சற்றே உன்னை மதிக்கிறேன்’

    என்று காலனின் மீது வெகுண்டெழுகிறார். ஆனால் தாகூரோ மரணதேவனை வரவேற்கிறார். இறைவனின் பணியாளான மரணதேவன் கடல்கடந்து என் வீட்டிற்கு வர காரிருள் சூழ்ந்த இரவில், நெஞ்சில் அகத்தடன் கையில் தீபமேந்தி வாசலைத் திறக்கிறேன்.

              ‘வரவேற்கிறேன் நான்
    சிரம் தாழ்த்தி
    மரணதேவனை!’

    நான் கரங்களைக் குவித்து, இதயத்தை அர்ப்பணிக்க மரணதேவன் ஒருநாள் இறைவனின் கட்டளையை நிறைவேற்றி செல்வான். என் தனி ஆன்மா மட்டும் இறைவனுக்கு இறுதிக்கொடை என தாகூர் ‘மரணதேவனுக்கு வரவேற்பு’ பாடல் பாடியுள்ளார். ஒவ்வொரு நாளும் மரணதேவனின் வருகைக்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருப்பதாக ‘மரணதேவனுக்கு மணமாலை’ கவிதையில் குறிப்பிட்டுள்ளார். இங்கு இளம்வயதில் உயிரினைத் தொலைக்க முற்பட்ட சுப்பிரமணிய பாரதியார் காலனை மிதிக்க, முதுமைப்பருவத்தில் உயிரினைத் துறக்க முற்பட்ட தாகூர் மரணதேவனை வரவேற்று பரிசினையும் நல்குவதில் இரு மகாகவிகளின் இறப்பு குறித்த எண்ணங்கள் புலப்படுகின்றது.

    தொகுப்புரை:

    சமகால கவிஞர்களான பாரதியும், தாகூரும் ஒவ்வொரு இந்தியரிடத்தும் தேசப்பற்றை உருவாக்கவும், மனித மனதின் எண்ணங்களில் தெளிவை ஏற்படுத்தவும் விழைந்தனர். பிரபஞ்ச சக்தியிடம் பாரதி உரிமையுடன் வினாக்களைத் தொடுக்க தாகூர் இயற்கையை அமைதியுடன் உட்கொள்வராய் திகழ்கிறார். இருவருமே தெய்வத்தை உழைப்பாளரிடத்தில் வெவ்வேறு கோணங்களில் நோக்குகின்றனர். மனித குலப்பண்புகளை மேம்படுத்த இறைவனிடம் வேண்டுவதிலும், இயற்கையை ரசிப்பதிலும், பெண் முன்னேற்றத்திலும் ஒத்த சிந்தனையே கொண்டுள்ளனர். யந்திரங்களின் வளர்ச்சியை நாட்டின் முன்னேற்றப் பார்வையில் பாரதி நோக்க, தாகூரோ மானிடகுலப்பண்புகளை அழிப்பதாக கருதுகிறார். வாழ்க்கையை வாழ்ந்து முடித்த தாகூர் முதுமைப்பருவத்தில் காலனை வரவேற்க, தன் விருப்பங்கள் நிறைவேறாத பாரதியார் காலனை மிதிக்க எண்ணுகிறார்.

    பாரதியார் உலக அரங்குக்குள் போக வாய்ப்பேதும் கிட்டாத. வறுமையில் வாடினும் மிடுக்கான தமிழகக் கவிஞனாக வாழ்ந்து மறைந்தான். தாகூர் வங்காளத்தில் பிரபு வம்சத்தில் பிறந்து, பல வெளிநாடுகளுக்கு செல்கின்ற வாய்ப்புகள் பெற்றவர். ஆங்கிலமொழி பாண்டித்தியமும், வெளிநாட்டு மக்களின் தொடர்பும் நட்புறவும் பெற்றிருந்ததால் உலக அரங்கில் தன் கீதங்களை எடுத்து செல்லும் வல்லமை கிட்டியது. அதனால் நோபல் பரிசு வெல்லும் வாய்ப்பும் பெற்றார். பாரதியின் பாடல்கள் எழுச்சி மிக்கதாக, கோபத்துடன் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்குக் காரணம் அவர் வாழ்ந்த சூழலேயாகும். தாகூரின் பாடல்கள் கனிவுடன் மென்மையான இறகுகளால் வருடுவதைப் போன்றிருப்பதற்கு காரணமாக அவருடைய தனிமையையும், பொருளாதார நிறைவையும் குறிப்பிடலாம். இரு மகாகவிகளுமே தன்னம்பிக்கையுடன் உலகை எதிர்நோக்கி வழிகாட்டுபவராக திகழ்ந்தனர் என்பதில் ஐயமில்லை. நோபல் பரிசு பெற்ற வங்கக்கவிஞரான தாகூருக்கு சற்றும் சளைத்தவரல்ல நம் தமிழகக்கவிஞர் பாரதியார் என்பது திண்ணம்.

    துணைநூல்கள்:

          1.பாரதியார் கவிதைகள் – ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

    1. பாரதியார் கட்டுரைகள் – பாரதி புத்தக நிலையம்
    2. கீதாஞ்சலி – இரவீந்திரநாத தாகூர் மொழிபெயர்ப்பு – ஜெயபரதன்
    3. ரவிந்திரர் கட்டுரைத்திரட்டு – தமிழாக்கம்- த.நா.குமாரஸ்வாமி
    4. பாரதி என்றென்றும் – தொகுப்பாசிரியர் பொன்னீலன்
    5. இலக்கியக் கோட்பாடுகள் நோக்கில் பாரதி படைப்புக்கள் – பதிப்பாசிரியர்கள் முனைவர்அ.பிச்சை, முனைவர் பா. ஆனந்தகுமார்
    6. மகாகவி பாரதி பற்றி சோவியத் அறிஞர்கள் – பதிப்பு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
    7. இரு மகாகவிகள் – க.கைலாசபதி
    8. மகாகவி பாரதியார் – வ.ரா

    Share
  • முகமும் முதுகும்

    முகமும் முதுகும்

    முனைவர் கு. வளர்மதி,
    உதவிப்பேராசிரியர்,
    இளங்கலைத் தமிழ்த்துறை,
    தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,
    சிவகாசி.

    “அணுக்கமான அன்புகள்
    அந்நியமாக்கிய அலைபேசிகள்!
    அன்றாடம் அலுவலகத்தில்,
    முகம்பார்க்க அகம்இல்லை.
    வணக்கமும் சிரிப்பும்
    நற்பண்பின் அடையாளம்!
    கரம்குவித்து வாய்திறந்து
    சொல்லவேண்டிய வணக்கம்,
    புலனக்குழுவில் மட்டுமே!
    அலைபேசியில் அலைந்தமனம்,
    முகம்பார்த்து சிரிக்கமறந்தது.
    நேரேபார்த்து வணங்கமறுத்தது!
    பண்பற்ற மனிதவாழ்வில்
    பண்பாடு சீர்குலைந்தது.
    அலைபேசியில் மணிக்கணக்கில்
    உரையாடி மகிழ்கின்றோம்.
    அருகிலிருப்போரிடம் அரைமணிநேரம்கூட
    உறவாடத் தயங்குகின்றோம்!
    தயக்கத்தின் காரணமென்ன?
    பேசநேரம் இல்லையோ?
    அப்படியொன்றும் வேலையில்லை.
    உள்ளுர அன்பிருந்தும்,
    வார்த்தைகள் இல்லையே…
    முகம்பார்த்துப் பேசவிடாமல்,
    தடுப்பதுஎது? ஏன்இப்படி?
    உள்ளிருக்கும் ஆணவமே,
    அனைத்திற்கும் காரணம்!

    நிஜத்தைவிட்டு நிழலைத்தேடி…
    பாதைதெரியாமல் செல்லும்பயணத்தில்…
    நீபெரிதா? நான்பெரிதா?
    ஏன்இந்தப் போராட்டம்?
    ஆணவத்தை அகற்றுவோம்.
    முகம் பார்ப்போம்,
    நித்தம் பேசுவோம்,
    நிஜமாகச் சிரிப்போம்!

    கவலைகள் மறப்போம்,
    நிலையில்லா வாழ்வில்…
    உறவுகளுக்கே முதலிடம்!
    முதுகுபார்க்கும் அலைபேசிபேச்சுக்கு,
    வைப்போம் முற்றுப்புள்ளி.
    முகம்பார்த்து நேரில்பேசி,
    தொடர்வோம்… வாழ்க்கைப்படகு!”

    Share
  • வானவில் ரவியின் உன்னோடு நான் காட்டும் உள்ளக்கிடக்கை

    வானவில் ரவியின் உன்னோடு நான் காட்டும் உள்ளக்கிடக்கை

    முனைவர் கி. ராம்கணேஷ்
    உதவிப்பேராசிரியர் – தமிழ்த்துறை,
    பி. எஸ். ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
    கோயம்புத்தூர் – 641 014

    முன்னுரை

    உலகில் வாழும் உயிரினங்களின் வாழ்க்கை ஏதேனும் ஒரு தேடலை மையமாகக் கொண்டே செல்கிறது. தேடலுக்கான ஒவ்வொரு முயற்சியும் ஆழ்மனதின் அடியில் சிறு விதையாக விழுந்து பின்னர் விருட்சமாகி விழுதாகி நிலைபெறுகிறது. பாரதியின் வாழ்க்கையும் விடியலுக்குப் பகலவனாய் பல்வேறு கருத்துக்களை கருவாகச் சுமந்து பிரசவித்திருக்கிறது. கவிஞர் ரவியின் படைப்பும் பாரதியின் தீட்சண்யமான பார்வையோடு நம்மைப் பயணிக்க வைக்கிறது. கவிதையின் ஒவ்வொரு வார்த்தையும் அணுவைத்துளைத்து கடலைப் புகுத்துவதாய், மிகச்சிறந்த சொல்லாடல்களால் எட்டாத தொலைவில் இருக்கும் பலவற்றை நம்மிடையே ஈர்த்து வந்து பேசவைக்கிறது. இயற்றமிழும் நாடகத்தமிழும் எண்ணிலா அனுபவத்தைக் கொண்டு விளங்குகிறது. அவ்வகையில் கவிஞர் வானவில் ரவியின் ‘உன்னோடு நான்’ படைப்பை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

    சொர்க்கத்தைக் காட்டுகிறேன்

    “அறம், பொருள், இன்பம், வீடடைதல் நூற்பயன்” என்பது தமிழ்ச்சமூகம் கண்ட மெய்ந்நெறியாகும். வீடடைதல் சொர்க்கத்தை அடைதல் எனச் சொல்லப்படுகிறது. நான்காவது நிலையாகிய வீட்டின்பத்தை அடைதலே மாந்தருக்குரிய இறுதி நிலையாகக் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட வீடுபேற்றினை அடைவதற்கு கவிஞர் ரவி தன்னுடைய கவிதையின் வாயிலாக நல்லதொரு வழியைக் காட்டிச் செல்கிறார். சிற்றின்ப நிலையினின்று நீங்கி பேரின்ப நிலையை அடைவதற்கான் வழிமுறைகள் கவிதையில் வெளிப்படுகின்றது. கவிதை எழுதினால் மட்டும் போதாது. அதை ரசிக்க ரசிகனோ, ரசிகையோ கட்டாயம் இருக்க வேண்டும். அப்படியில்லையென்றால் கவிதை முமுமைபெறாது என்பதை ரசிகனிடம் பகிரங்கமாக வெளிப்படுத்துகிறார் கவிஞரிடம் ரசிகன் அனுபவச்சூழலில் பங்கேற்க அனுமதி கேட்கிறான். அதற்குக் கவிஞர், “அனுமதியா? உனக்கா? நீ இல்லாமல் எந்தக் கவிதையும் முழுமை பெறாது ரசிகா! என் கவிதைகளை முழுமை செய்ய வந்த முழுநிலவே என்று வரவேற்கிறேன்” என்கிறார். அனுபவத்தை ரசிகன் அடைய தன்னுடைய சொற்களோடு பயணிக்கும்படி வேண்டுகோள் விடுக்கிறார் கவிஞர்.

    “என்
    சொற்களுக்குள் ஏறிக்கொள்
    சொர்க்கத்தைக் காட்டுகிறேன் – என்
    கற்பனைப் புரவியை உன்
    கண்களில் பூட்டுகிறேன்”

    என்ற  வார்த்தைகளில் தன்னோடு பயணிக்க வேண்டுமென்றால் சொற்களுக்குள் ஏறிக்கொள்ள வேண்டும் என்கிறார் கவிஞர். சொற்கள் புரிந்தால்தான் அதனுடைய பொருள்கள் புலப்படும். கவிஞர் தான் பெற்ற அனுபவத்தை ரசிகனுக்கு புலப்படுத்த முடியும். கவிதையும் ரசிகனும் துலாக்கோலின் இரண்டு தட்டுகள் போன்று என்பதை உணர்ந்ததன் வெளிப்பாடாகவே மேற்கண்ட கவிதையின் பொருளை உய்த்துணர முடிகின்றது.

    உலகில் படைப்பது மட்டுமே இயற்கை, கவிஞரின் வேலை. அதனை அனுபவிப்பதும் பயனடைவதும் ரசிகரின் வேலை. கற்பனை என்ற ஒற்றைச்சொல் உண்மையை மேலும் பட்டைதீட்டும் மகத்தானதொரு பணியை செவ்வனே செய்கிறது. கண்ணில் கண்டதையும் காணாததையும் ஒப்பனை செய்து முன்னிறுத்துகிறது. சொற்களுக்குள் மூழ்கி அதனோடு பயணித்தால் ரசிகனால் பரவசநிலையினை அடைய முடியும். “ நீ எதை  நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்” என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கு ரசிகனின் மனநிலையைச் சான்றாகக் காட்டலாம்.

    மனிதர்கள் எல்லாமும் உடனே கிடைக்க வேண்டும் என்ற மனநிலையை உடையவர்களாக இருக்கின்றனர். பெரும்பாலானவர்களுக்கு இஃது சாத்தியமில்லை. பல துன்பங்களைக் கடந்த பின்னரே இன்பஊற்றை அறிய முடியும். இதைப் புரிந்து உணர்ந்தவர்கள் வெகுசிலரே. கவிஞர் இக்கருத்தை பின்வரும் வரிகளில்,

    “அதோ! அந்தக்
    கானல் நீரைக் கடந்து சென்றால்
    கற்பகச்சோலை வரும்”

    என இயல்பாக எடுத்துரைத்துள்ளார்.

    கவிஞனின் மனைவி

    கவிஞன் இறந்தாலும் அவனது கவிதை சாகாவரம் பெற்ற சிறப்பினை உடையது. காலங்கள் பல கடந்தாலும் உணர்வோடு ஒன்றி இருப்பது. கவிஞனது உடலுக்கு அழிவுண்டு. அவனது ஆன்மா கவிதையின் ஒவ்வொரு எழுத்திலும் சுவாசித்துக் கொண்டிருக்கிறது. கவிதை உலகில் அழிவென்ற பேச்சுக்கே இடமில்லை. தன்னால் நேரில் பார்க்க முடியாத, உணரமுடியாத ஒன்றை கவிதையின் மூலமாக உயிர்ப்படையச் செய்யும் ஆற்றல் தலைசிறந்த கவிஞனுக்கு உண்டு. இக்கருத்தை கவியரசர் கண்ணதாசனின் கவிதை வழியாக கவிஞர் ரவியால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

    “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
    நிலையிலும் எனக்கு மரணமில்லை”

    – கவியரசர் கண்ணதாசன்.

    கவிஞன் இறந்துவிட்டான். அவனது உற்றார், உறவினர் அனைவரும் கதறித்துடிக்கின்றனர். அவனது பிணத்திற்குச் சடங்குகள் செய்யவும்,  அவனது உடலை எடுத்துச் செல்லவும் தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து கொண்டிருக்கின்றன. இழவு வீட்டிற்கு தொடர்பில்லாதவள் போல் பெண்ணொருத்தி அமர்ந்திருக்கிறாள். அவளிடமிருந்து ஒருதுளிக்கண்ணீர் கூட புலப்படவில்லை. இத்தனைக்கும் அவள் வேறு யாருமில்லை. கவிஞனின் மனைவி. அவள் கவிஞனின் கவிதைகளில் அவனை உயிர்ப்புடையவனாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். சலனமில்லாமல் கவிதைகளோடு வாழ்ந்துகொண்டிருக்கிறாள். அங்கிருப்பவர்கள் பிணத்தை அப்புறப்படுத்த வழி கேட்கின்றனர்.

    “புதைப்பதா எரிப்பதா
    அழுகிப் போகும் சடலத்தைத்தான்
    அப்புறப் படுத்த வழிகேட்கின்றார்
    அவள் மட்டும் அழவே இல்லை
    காரணம் அவளந்தக் கவிஞனின் மனைவியாம்”

    கவிஞனின் மனைவி அவன் இறந்ததாகக் கருதவில்லை என்பதைக் கவிதை பறைசாற்றியுள்ளது.

    சமுதாய உணர்வு

    கவிதைகள் வெறும் ரசனைக்கானது மட்டுமல்ல; வாழ்க்கைக்கானது, சமுதாயத்துக்கானது என்பதை நன்முறையில் கவிஞர். ரவி எடுத்துரைக்கிறார். “ சமுதாய உணர்வில்லாத கவிதைகள் உயிரற்றவை” என்ற பொதுவுடைமைத் தோழர் ஒருவர் சொன்ன கருத்தை மனதில் வைத்துக் கவிதையைப் புனைந்துள்ளார்.

    “சோத்துப் பஞ்சம் தனியுடைமை
    சாதி என்னும் பழங்கொடுமை
    பாத்துப் பாத்துப் புளிச்சுப் போச்சு
    பாடங்கேட்டுச் சலிச்சுப் போச்சு”

    பிறப்பில் உயர்வு தாழ்வு கருதுதல் தவறு. பிறப்பில் உயர்வு தாழ்வு கருதுதல் நமது நாட்டிற்கே சிறப்பாக உண்டு என்பதைச் சான்றோர்கள் பல இடங்களில் காட்டியுள்ளனர். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற உலகப் பொதுமறையை சிந்தித்துப் பார்ப்பவர்கள் குறைந்து விட்டனர். பஞ்சம், சாதி போன்ற பெருங்கொடுமைகள் சமுதாய வேர்களைச் செல்லரித்துப் போகச்செய்யும் சாபக்கேடுகள் இத்தகைய கொடுமைகளை கவிஞர் தம் கவிதை வழி  சாடியுள்ளார். “சாத்திரங்கள் பல பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்” என்ற திருநாவுக்கரசர் கருத்திற்கு ஒப்பானதாகக் கவிஞரின் கவிதை அமைந்துள்ளது. “எல்லோரும் ஓர் குலம்; எல்லோரும் ஓர் இனம்” என்ற பாரதியின் கருத்தில் ஆழங்கால் பட்டவரான கவிஞரின் மனதில் ஏற்பட்ட துயரநிலையைக் கவிதை புலப்படுத்துகிறது.

    “சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
    சொல்லிய வண்ணம் செயல்”

    என்ற வள்ளுவரின் கருத்தை மெய்ப்பிப்பது போல சாதியை ஒழிக்கிறேன்; பஞ்சத்தை போக்குகிறேன் என்ற சொற்கள் வலம் வருகின்றன. சொல்லியபடி நடப்பதில்லை. அந்த சலிப்புணர்வை கவிஞரின் வரிகள் வலிகளாய் உணர்த்துகின்றன.

    கவிதை என்னும் கலங்கரைவிளக்கம்

    கவிதை என்னும் நீருற்று, அருவியாய் கொட்டி ஆர்ப்பரிக்கும் தன்மை கொண்டது. மண்ணிலிருந்த வண்ணமே எட்டாத உயரத்தைத் தொடும் வல்லமை வாய்ந்தது. மனித மனத்தின் மகிழ்;ச்சியையும் ரணங்களையும் வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. எப்படிப்பட்ட கருப்பொருளையும் கண்ணிவைத்துப் பிடிக்கும் ஆற்றல் கொண்டது. கண்கள் உறங்கிய போதும் உறங்காத தன்மை கொண்டது. மிகப் பெரிய சுதந்திரப்போராட்டத்தில் பாரதியின் மனதில் அக்கினிக்குஞ்சாய் விழுந்து நாடெல்லாம் பரவியது. அப்படிப்பட்ட கவிதையின் சிறப்பை கவிஞர் நன்முறையில் புனைந்துள்ளார்.

    “மனிதனை தெய்வமாக்கும் மகத்துவம்! நெஞ்சில்
    புனிதமே உயிர்க்க வைக்கும் புண்ணியம் கவிதை! உள்ளத்
    தனிமையைத் தகர்த்து வாசல் அமைப்பதும் கவிதையன்றோ
    இனியுமேன் தயங்கு கின்றாய் எழுந்துவா கவிதை சொல்வோம்”

    பூமிக்குள் இருக்கும் விதை போன்றது கவிதை. “விதைத்தவன் உறங்கலாம்; விதை உறங்காது” என்பதைப் போல உறங்காத தன்மை கொண்டது. கவிஞன் உறங்கவேண்டும் என்று நினைத்தாலும் கவிதை உறங்காது என்பதைக் கவிஞர் தெளிவுபட எடுத்துரைக்கிறார். உள்ளத்தில் இருக்கும் தனிமையை  விரட்டி வாசல் வைப்பது போன்றது என்ற வரி மகத்துவம் கொண்டது. காலமென்னும் கடலில் தத்தளிக்கும் மனமான படகுகளுக்கு கலங்கரை விளக்கமாய் கவிதை இலங்குகிறது.

    “உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்
    வாக்கினிலே ஒளி உண்டாகும்”

    என்பார் பாரதி. உள்ளத்தின் உண்மை  கவிதை வாயிலாக உலகை நல்வழிப்படுத்தும் தன்மை கொண்டது. வோர்ட்ஸ்வொர்த் கூறுவது போன்று “ஆற்றல் நிரம்பிய சொற்கள் தாமாகப் பொங்கி வழிவதுதான் கவிதை” என்பதற்கிணங்க கவிஞர் ரவியின் கவிதை அவரது உள்ளக்கிடக்கையை வெளிக்காட்டுகிறது. “பணியுமாம் பெருமை” என்ற வள்ளுவத்தின் மெய்ம்மையை கவிஞர் ரவி நூலின் வரவேற்புரையில், “ தன்னைத் தானே ரசித்துக் கொள்வதற்காக என்னைக் கருவியாக்கி அன்னை பெய்த அமரவரிகளின் அணிவகுப்பை ‘என் கவிதைகள்’ என்று அழைக்கவும் கூசுகிறேன்” எனக் கூறுவதிலிருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது.

    சமுதாய அவலம்

    காலங்கள் பல கடந்தும் விஞ்ஞான வளர்ச்சியடைந்தும் இன்னும் மனித மனங்கள் பல மூடப்பழக்கவழக்கங்களைக் கைக்கொண்டிருக்கின்றன. பெண்ணடிமை, ஜாதகம் போன்ற செயல்பாடுகளால் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். செவ்வாய் தோஷம், கைம்பெண் போன்ற கொடுமைகள் சமூகத்தில் தலைவிரித்தாடுகின்றன.

    “பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
    பேணி வளர்த்திடும் ஈசன்
    மண்ணுக்குள்ளே சில மூடர் – நல்ல
    மாதர் அறிவைக் கெடுத்தார்”

    எனப் பாடியுள்ளார் நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலாவான பாரதியார். மூடர்கள் பெண்ணுக்கான அறிவை மட்டும் கெடுக்கவில்லை, வாழ்க்கையையும் கெடுத்துள்ளனர் என்பதை பாரதியின் மனத்தின் அடிநாதம் போல கவிஞர் ரவி தம் கவிதையில் குறிப்பிட்டுக் காட்டிள்ளார். உமா என்ற பெண்ணின் வாழ்க்கையில் நடந்த கொடுமையை,

    “நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும்
    நேர்மை முகப்பொலிவும்
    செவ்வாய் தோஷம் அவளுக்குத் தந்த
    சீர்வரிசை யன்றோ”

    என்ற வரிகளின் வாயிலாக எள்ளி நகையாடுகிறார்.

    “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
    நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்”

    என்ற பாரதியின் பெண்ணாளுமை நிலையை சமூகம் உணர்ந்து கொள்ளவில்லை என்பதை செவ்வாய்தோஷம் என்ற  ஒற்றை வார்த்தையின் வாயிலாக கவிஞர் உணர்த்தியுள்ளார். கடைசியாக பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியை “ ஆண்மையற்ற சமுதாயத்தின் அவலப்பெருமூச்சு” எனக் குறிப்பிடுகிறார்.

    “எண்ணெய்க்கு பதில் அமிலம் ஊற்றி
    தீபம் ஏற்றுவதா”

    என்ற கவிதைவரிகளில் சிறப்பானதொரு உவமையைக் கையாண்டு ரணமான மனநிலையை மனக்கண் முன்னே  நிலைபெறச்செய்கிறார்.

    பாரதிக்காக அழக்கூடாதா!

    மனித வாழ்க்கையில் துன்பத்தை வெளிப்படுத்தி, ஆறுதல் தேட அழுகை சிறந்த கருவியாகப் பயன்படுகிறது. மனிதனின் முதல் மொழி அழுகை எனக் கூறினாலும் சாலப் பொருந்தும். தாய் கற்றுக் கொடுக்கும் தாய்மொழிக்கும் முன்னதாக, பிறந்த குழந்தை தன் உணர்வை வெளிப்படுத்த மூலமாக அழுகை விளங்குகிறது. அன்பின் வெளிப்பாடாகவும் அழுகை வெளிப்படுகிறது. பாரதி என்னும் வைரம் மண்ணுக்குள் புதைந்த தருணம் கவிஞர் ரவியின் மனதில் நிழலாடுகிறது.

    “அவனுக்காகக் கொஞ்சம் அழக்கூடாதா
    புதைமண லில்சில விதைகள் தூவப்
    புறப்பட் டானே
    போகும் வழியி லெல்லாம் நெஞ்சு
    மிதிபட் டானே…”

    இந்தியா சுதந்திரம் பெறவும், மக்களின் வாழ்க்கை நல்ல முறையில் அமையவும் பல இன்னல்களை அனுபவித்த பாரதியின் இறப்புக்காக கவிஞரின் மனம் பதைக்கிறது.

    விரக்தியெனும் வேதனை

    வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, துன்பம் என்ற இரண்டு முனைகளைக் கொண்ட படகு போன்றது. பகலும் இரவும் போல மாறி வரும் இயல்பு கொண்டது. பருவ வயதில் பல்வேறு சிந்தனைகள் ஆட்டிப்படைக்கின்றன. பொருளாதாரம் என்ற நிலையைக் கடந்து இளமைப்பருவத்துக்கேயுரிய பல்வேறு உணர்வுகள் மனதை பல வழிகளில் செலுத்தி விடுகின்றது. இளமையில் காதல் என்னும் பட்டாம்பூச்சி சிறகடிக்கும் நேரத்தில் பல்வேறு எண்ணங்கள் உள்ளத்தில் ஏற்படுகின்றன என்பதை கவிஞர் ரவி தனக்கேயுரிய இரசனையோடு கவிதையில் கொடுத்திருக்கிறார்.

    “உள்ளக் கதவை மெல்லத் திறந்துநான்
    உற்றுப் பார்க்கிறேன்
    உருத்தெரி யாமல் நான்தான் அங்கே
    உதிர்ந்து கிடக்கிறேன்”

    மனதைத் திறந்து பார்த்தால் மட்டுமே நம்முடைய உரு உதிர்ந்து கிடப்பதை உணர முடியும். காதல் வரும் போது ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்படும் உணர்வு அலாதியானது. காதலாகிய காற்று வரும் போது சிலநேரங்களில் படபடக்கும், சிலநேரங்களில் மனம் சிலிர்க்கும். காதல் விலகும் போது மரணமாகிய பெருவலி மூச்சைப் பிடிக்கும். வாழ்க்கையே வெறுத்து விடும். “ வாழ்வாவது மாயமிது ; மண்ணாவது திண்ணம்” என்ற சுந்தரமூர்த்தி நாயனாரின் மனநிலைக்கு உள்ளம் வந்து விடுகிறது.

    “வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
    வாசல் தோறும் வேதனை இருக்கும்
    வந்த துன்பம் எதுவென்றாலும்
    வாடி நின்றால் ஓடுவதில்லை”

    என்ற  கவிஞர் கண்ணதாசன் வரிகளை காதல் உள்ளம் ஏற்பதில்லை. விரக்தியும் நம்பி;க்கையும் மாறி மாறி வந்து நிற்கும். இத்துடன் வாழ்க்கை முடிந்து விட்டது என்ற மனநிலை ஏற்பட்டு விடும். அதைக் கவிஞர் ரவி,

    “தூள்தூ ளான பாறைத் துகள்களாய்த்
    துடி துடிக்கிறேன்
    நாள்ஒவ் வொன்றும் நானே பலவாய்ப்
    பிரிந்து தேய்கிறேன்”

    என்ற வரிகளில் குறிப்பிடுகிறார். வாழ்வே மாயம் என்ற நிலையை காதல் வலி உணர்த்துகிறது.

    ஞாபகத்தை சுமக்க வேண்டுமா?

    ஞாபகம் என்பது மிகச்சிறந்த சக்தியாகவே பெரும்பாலானவர்களால் சொல்லப்படுகிறது. ஆனால், ஞாபகமானது துன்பத்தை நினைவிற்குக் கொண்டு வருவதில் முதலிடம் வகிக்கிறது. மறதி என்பது சாபம் அல்ல; வரம் என்பதை காதலித்துத் தோற்றவர்களிடம் கேட்டுப் பார்த்தால் புலனாகும். வாழ்வின் பல்வேறு சூழல்களில் துன்பமான ஞாபகங்கள் எதிர்காலச் சிந்தனைச் சிறகுகளை வெட்டி வீசிவிடுகின்றன.

    “காதல் என்ற கானகத்தில்
    கால்க டுக்க ஓடினேன்
    வார்த்தை நூறு கோத்து வைர
    மாலை என்று சூடினேன்”

    என்ற வரிகளின் வாயிலாக காதலால் ஏற்பட்ட வலியினை கவிஞர் ரவி புலனுணர்வின் வழி வெளிப்படுத்துகிறது. காதல் வெற்றியென்றால், அதைப் போன்ற சொர்க்கம் இல்லை ; தோல்வியென்றால் அதைப் போன்ற பாழ் நரகம் இல்லை எனக் கூறிவிடலாம்.

    மகாகவி பாரதியாரும் காதலினால் ஏற்பட்ட வலியை,

    “காதல் காதல் காதல்
    காதல் போயின்
    சாதல் சாதல் சாதல்”

    இவ்விதம் குறிப்பிட்டுச் சென்றிருக்கிறார்.

    காதலைப் பற்றி வேறொரிடத்தில்,

    “விழிகளாலே பாலமிட்டு நம்
    உணர்வுக ளைப் பரி மாறிக் கொள்வோம்
    சொற்க ளாலே முத்த மிட்டுச்
    சொப்ப னத்தேர் ஏறிச் செல்வோம்”

    என்ற வரிகளில் காதல் உணர்வைப் போன்றது; உயிரைப் போன்றது எனத் தெளிவுபடுத்துகிறார்.

    எதிர்காலத்தை நோக்கி

    இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்று காலங்கள் சொல்லப்பட்டாலும் ஒரு கவிஞனின் பார்வை எதிர்காலத்தை நோக்கியதாக இருக்கும். ஏதிர்காலத்தைப் படைக்கும் படைப்பாளனாக கவிஞன் விளங்குகிறான். மகாகவி பாரதியாரின் கவிதைகளில் இதனைக் காணலாம்.

    “ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
    ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று”

    என்ற உன்னத வரிகள் சுதந்திரம் பெறுவதற்கு முன்பே பாடப்பட்ட கவிஞரின் சிந்தனை. பாரதி மறைந்து விட்டாலும்  அவரது சிந்தனை நிலைத்துவிட்டது; நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து விட்டது. பாரதியின் மேற்கண்ட பாடல் இந்தியா முழுவதும் ஒலித்தது. கவிஞன் எதிர்காலத்தைக் கணிக்கும் காலக்கணிதன் என்பதை உய்த்துணர முடிகிறது.

    கவிஞர் ரவியின் சிந்தனையிலும் எதிர்காலச் சிந்தனையை அறியமுடிகிறது. கவிஞர் ரசிகனிடத்தில் பேசுமிடத்தில் , “ இன்றைய புவிக்காலத்திலிருந்து பல ஆண்டுகள் முன்னேறி எதிர்காலத்துக்கு வந்து விட்டோம்” எனக் கூறுவதிலிருந்து அறிய முடிகிறது. எதிர்காலம் என்பது நம் தேவையை, எதிர்பார்ப்பை நிறைவேற்றச் செய்கின்ற ஓரிடமாக  அமைகிறது. கற்பனையும் சில நேரங்களில் எதிர்காலத்தை உருவாக்குகிறது.

    “ நெருங்கி விட்டான் நிமிர்கிறேன் – அட
    எத்தனை முறையிவனைச் சந்தித் துள்ளேன்
    எத்தனை முறையிவன்
    என்னைத் தேடி வந்துள்ளான்
    என்னைக் கூட்டிச் சென்றுள்ளான்
    ஒருமுறை கூடப் பேசிய தில்லை
    ஊர்பேர் எதையும் கூறியதில்லை”

    என்ற வரிகளில் கவிஞர் ரவியுடன் முகம் தெரியாத ஒரு மனிதர் பயணிப்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. கவிஞருக்கென ஓருலகம் உண்டு. அங்கு கவிஞரே முடிசூடா மன்னர் என்பதை கவிதைகளில் காண முடிகிறது.

    முடிவுரை

    கவிஞன் என்பவன் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவன். எதிர்காலத்தை படைக்கும் வல்லமை கொண்டவன் என்பதைக் கவிஞர் ரவியின் வரிகளின் வாயிலாக உய்த்துணர முடிகிறது. கவிதையின் நோக்கம் இரசிப்புத் தன்மையை மட்டும் எதிர்நோக்கியதல்ல. அஃது தேவையை ஒட்டியது என்பதைக் கவிஞர் பலவிடங்களில் பறை சாற்றியுள்ளார்.

    குறிப்புதவி நூல்கள்

    1. திருக்குறள்
    2. பாரதியார் கவிதைகள்
    3. தேவாரம்
    4. கண்ணதாசன் கவிதைகள்

    Share
  • பெண் கவிஞர்களின் கவிதைகளில் சமூகப் பிரச்சனைகள்

    முனைவர் ரா. திவ்யா
    உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை,
    என்.ஜி.எம்.கல்லூரி,பொள்ளாச்சி.
    dhivyaudhithr@gmail.com

    முன்னுரை

    ஒரு மொழியின் செல்வாக்கை அம்மொழியின் இலக்கிய வளத்தால் அறியலாம். பல்வேறு காலங்களில் காலத்தின் தேவைக்கேற்ப இலக்கியங்கள் தோன்றின. அவ்விலக்கியங்களில் ஒன்றான கவிதை நடைமுறையில் அரசியல், பொருளாதாரம், கல்வி, திருமணம், உடல் மொழி, தாய்மை, உழைப்பு மக்களின் வாழ்வியல் போன்ற உண்மைகளை வெளிப்படுத்துகிறது. பெண் என்றாலே அவள் தாயின் கருவறையிலிருந்து கல்லறை செல்லும் வரை பிறர் சுமைகள் மற்றும் எண்ணற்ற பிரச்சனைகளையும் சந்திப்பவளாகவே திகழ்கின்றாள், மேலும் பிரச்சனைகளை கவிதைகளில் பார்ப்பதோடு உலகத்தில் பெண்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் பெண் கவிஞர்கள் தங்கள் கவிதையில் முன் வைக்கின்றனர். இதனை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    பெண்ணின் வாழ்க்கை என்பது காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ற மாறுபட்டு இருந்துள்ளன. பெண்ணின் அறிவிற்கும் அவரது விருப்பத்திற்கும் ஏற்றவாறு வாழ்க்கை அமையும் கவிதை தனக்கான இடத்தை கட்டமைக்கிறது.  நிதர்சனங்களை பேசி வருகிறது கவிதை இன்பம் மட்டுமல்ல ரத்தமும் சதையுமாக நம்மோடு கலந்திருக்கும் ஒன்றென உருமாறி விட்டது.  இவ்வாறு மாற்றத்தை தன் கவிதைகளில் ஏற்படுத்தியவர்களின் பெண்ணிய கவிஞர்களின் பங்கானது முக்கிய இடத்தை வைக்கிறது .

    பெண்கல்வி

    தமிழ்ச் சமுதாயத்தில் ஆண்கள் கற்கத் தடையில்லை. பெண்கள் கற்பதில் வீட்டிலும், வெளியிலும் தடையேற்படுகிறது. வரதட்சணை அதிகமாகக் கொடுக்க வேண்டுமெனவும் கருதிப் படிப்பைப் பாதியிலே நிறுத்தி விடுகின்றனர். கிராமத்தில் உள்ளவர்கள் கையெழுத்துப் போடுவதற்கும். கடிதம் எழுதுவதற்கும், ஊர்ப்பெயரை அறிந்து பேருந்தில் பயணம் செய்வதற்கும் போதுமான அளவு படித்தால் போதும் என்ற குறுகிய மனநிலையில் இருக்கின்றனர் இத்தகைய குறுகிய எண்ணம் கொண்ட பெற்றோர்களின் செயலை கவிதையின் காண முடிகிறது.

    “அப்பா மேலே படிக்கவேணும் என்றேன்
    தப்பாப் பேசாதே மாப்பிள்ளை பார்த்தாச்சு என்றார்
    அம்மா வகுப்பிலே நான் தான் முதல் என்றேன்.
    சும்மா இரு சமையல் தெரியுமா என்றான்
    அண்ணனாவ கைகொடுப்பான் என்றால்
    வண்ணக் கனவில் மூழ்கியிருந்தான்
    அடுத்தது அவன் முறையாயிற்றே”    (தாமரை-ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்)

    பெண்கள் பிறக்கும் பொழுதே அவர்களின் திருமண வயதைப் பெற்றோர்களே நிர்ணயித்து விடுகின்றனர்.

    “அம்மா நான் மிக நலம்
    அடிக்கடி வர வேண்டாம்
    அழுவதை நான் நிறுத்திவிட்டேன்
    அடுத்தமுறை அங்கே
    வரும்போது
    ஒரு சிநேகிதியை அழைத்து
    வருவேன்…
    முடிந்தால் அவளையும்
    மகளே என்று விளி…”    (தாமரை-ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்)

    படிப்பிற்காக விடுதியில் தங்கியிருக்கின்ற நிலையில் அம்மா அப்பாவின் பிரிவினை தாங்கியிருக்க முடியாத சூழலில்  யாழ்ப்பாணத்துக்கார பெண் கூறிய கதைகளில் நான் அழுவதை நிறுத்தி விட்டேன் என்று கூறியிருக்கின்ற கதை மற்ற பெண்கள் படிப்பின் சூழலைக் கண்டு வேதனையை கவிதை வெளிப்படுத்துகிறது. ஒரு புறம் படிக்கும் சூழல் பெண்களை பாதிக்கும் நிலையினை  காணமுடிகிறது.

    திருமணம்

    ஆணும், பெண்ணும் இணைந்து ஒருமித்து வாழும் நிகழ்ச்சியே திருமணமாகும். ஆனால் திருமணம் என்ற நிகழ்வானது இன்றைய குழலில் குடும்பம் என்ற அமைப்பின் பொருளாதாரத்தைச் சார்ந்தது ஆகும். கைப்பிடிக்க வேண்டிய கணவனே, பெண்ணைப் பொருளீட்டும் கருவியாகப் பார்ப்பதை காணலாம்.

    ‘மூக்கும் முழியும் சுமார் தானாம்
    எனக்கு முத்தும் வைரமுமாய்
    மூக்குத்தி நேர் செய்து விடுவோம்
    கணக்கு அப்பாவின் வங்கி இருப்பு
    முழுதும் துடைத்தாயிற்று ஸ்கூட்டர்
    கேட்ட வாயை அடைத்தாயிற்று”

                        (தாமரை ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்)

    ஆண் தன் தேவைகளைத் தீர்த்துக் கொள்ளக் கிடைத்த வாயிலாகவே பெண்ணைக் கருதும் நிலை வெளிப்படுகிறது. இன்றை நிலையில் திருமணம் தன் தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஆண் தேடிக்கொள்ளும் பண முதலீடாக நினைக்கின்ற அவல நிலை சமுதாயத்தில் அரங்கேறிக்கொண்டே  இருக்கிறது.

    “அப்பா சொன்னாரென
    பள்ளிக்குச் சென்றேன்
    தலைசிவினேன், சில
    நண்பர்களைத் தவிர்த்தேன்
    சட்டைபோட்டுக் கொண்டேன்,
    பல்துலக்கினேன், வழிபட்டேன்,
    கல்யாணம் கட்டிக்கொண்டேன்
    காத்திருக்கிறேன்
    என் முறை வருமென்று… ” (கனிமொழி – கருவறை வாசனை)

    கற்பதில் வேகமாகக் நிறுத்தி செல்தற்கும் பயணம் குறுகிய பெண்கள் தன் வாழ்க்கைத் துணையைத் தானே தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லாமல் இருப்பதும், பெற்றோர்களின் விருப்பத்திற்காக மனதிற்குப் பிடிக்காத வரை திருமணம் செய்து கொள்ளுதலும், தானே தன் வாழ்க்கை முறைகளையும், பழக்க வழக்கங்களையும் அமைத்துக் கொள்ள முடியாத அடிமை நிலையில் ஏற்படும் சிக்கலான வாழ்க்கையையும் உரிமையற்ற நிலையையும் இக்கவிதை வெளிப்படுத்துகிறது.

    கற்புநிலை

    ஆண்வர்க்கம் போலியான கதைகளைக் கற்புக்குச் சொல்லி வந்ததம் தான் இன்னும் கற்பில் சிறந்தவர்கள் யார் என்னும் கேள்வி தேட வந்து கொண்டிருக்கிறது.

    “கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா?
    நூறாண்டுகள் ஓடியும்
    மக்களுக்கு சந்தேகம் தீரவில்லை”

                                                      (தாமரை – ஒரு சுதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்

    என்று கவிஞர் சமுதாய மக்களின் அறியாமையைக் காட்டுகிறார்.  பாலியல் ரிதியான கொடுமைகளையும், தீராத ரணங்களையும், உணர்வு சார்ந்த நிலையில் வெளிப்படுத்துகின்றனர். ஆணாதிக்கம் பெண் உடலில் மறைக்கப்பட்ட இடங்களின் அசைவுகளைக் கண்களால் இமைக்காமல் பார்க்கின்றனர்.

    “உடலின் அசைவுகளில்
    மறைக்கப்பட்ட பகுதிகளில்
    இமைகளே யற்று
    பதியும் கண்கள்” (சல்மா – பச்சை தேவதை)

    ஏதும் அறியாச் சிறுமியைப் பாலியல் வன்முறை செய்வதைச் சுட்டுவதாக இக்கவிதை அமைகிறது. தங்கள் விடுதலையை விட்டுக் கொடுக்கவும், தங்கள் தேவைகளை அடக்கிக் கொள்ளவும், தங்கள் உணர்வுகளை மறைத்துக் கொள்ளவும், எல்லாவற்றிலும் தங்களைப்  பழகியவர்கள் இந்தியப் பெண்கள். எனவே அவர்கள் தனி உரிமை என்பது தங்களுக்குத் தேவையில்லை என்று ஒரு தவறான தத்துவத்தின் கீழ் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கவிஞர் பிரேமா,

    “வளர வேண்டிய வேர்கள்
    வரையறுக்கப்பட்ட தொட்டியில்
    இந்தியப் பெண்கள்” (இரா.பிரேமா 2000) எனும் கவிதையில் இந்தியப் பெண்களின் அவலமான நிலையினை சித்தரிக்கிறார்.

    தாய்மை

    ஒரு பெண் தாய்மையில் தான் முழுமையடைகிறாள். இது பெண்ணின் உரிமை எனவும், தாய், சேய் உறவு என்பது பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்திற்கிடையிலும் இயற்கையாக அமைந்த உயிரியல் அம்சமாகும்

    “எனக்குள் இருந்த குமிழ்
    இன்று
    எல்லாம் நிறைந்த பிரபஞ்சம்”  (மாலதிமைத்ரி – சங்கராபரணி)

    வளமைச் சமூகத்தின் குறியீடாக அமைந்தது தாய்மை இந்த யதார்த்தத்தைப் பதிவு செய்துள்ள கவிஞர்கள், கரு சுமப்பது பெண்களால் மட்டுமே இயலக்கூடிய அற்புதமான ஒரு நிகழ்வாகும். ஆனால் இன்றை தாய்மை என்பது சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது என்பதை உணரலாம்.

    “குன்றும் சரிவுமாய் உருமாறி வரும்
    என் நிலத்தின் பிரசவத் தழும்புகள்” (சுகிர்தராணி -இரவு மிருகம்)

    அகழ்ந்தெடுத்த இடத்திலெல்லாம்  பெண்ணை, பிள்ளைப் பெற்றுத்தரும் இயத்திரமாக மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிற ஆண்கள் நிறைய பேர் பத்து மாதக் காலம் அவர்கள் படுகிற அவஸ்தைகளையும், துயரங்களையும் பெரும்பான்மையோர் மனதளவில் கூட உணர்வதில்லை.

    உழைக்கும் பெண்களின் நிலை

    பெண்கள் வீட்டில் இருப்பதால் அவர்களின் அன்றாடத் தேவைகளை நிறைவு செய்ய கணவனை எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது. இதைச் காரணமாக வைத்து பெண்களை அடிமைப்படுத்துகின்றனர் என்று ஒரு காலத்தில் கூறினார்கள். ஆனால் இன்று கல்வி கற்று பாதிக்கு மேல் பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர். அவ்வாறு வேலைக்குச் சென்றாலும் தங்களுடைய அன்றாடத் தேவைகளை நிறைவு செய்யக் கணவனிடமும் மாமனார், மாமியாரிடமும் கேட்சு வேண்டியிருக்கிறது இதனை கவிஞர்

    “அலுத்துக் களைத்து
    உள்ளே நுழைந்தால்
    அதட்டல் அவர்தான்”

                   (தாமரை – ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்)

    என்று மனைவியைத் திட்டும் கணவனின் செயலை சுட்டிக் காட்டுகிறார்.

    ஆணாதிக்கச் சமூகம்

    சில ஆண்கள் மனைவியை விட்டுவிட்டு, வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து உல்லாசமாக வாழ்வர். மனைவியோ கைம்பெண்ணாக வாழ்வாள் குழந்தைகளை வளர்க்க முடியாமல் பெண்கள் அல்லல்படுவர் பிற பெண்ணுடன் தொடர்புடைய தந்தை தங்களுடன் இருந்த செயலை அங்கதச் சுவையுடன் கவிஞர் குறிப்பிடுகிறார்.

    “அந்த மாலை நாள் இரவை
    எங்களால் மறக்கவே முடியவில்லை
    அன்று தான் அப்பா எங்களுடன் இருந்தார்
    அம்சவேணி வீட்டுக்குப் போகாமல்”

                                                                (தாமரை – ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்)

    பெண்களின் எதிர்வினை

    பெண்கள் இன்று விழிப்புணர்வு பெற்றுவிட்டனர் அடிமைத்தனத்திலிருந்து ஓரளவு மீண்டு வந்துள்ளனர். நீ அன்பு செய்தால் நான் அன்பு செய்வேன். நீ கொலை செய்யத் துணிந்தால் நாள் அமைதியாக இருக்க மாட்டேன் என்று பெண்கள் எதிர்க்கின்றனர்.

    தொகுப்புரை

    ஆணாதிக்கச் சமூகம் உருவாக்கிய மரபை, கட்டுப்பாட்டை அடக்கு முறையை மீறி, சுய உணர்வோடு யதார்த்தமாக, பெண்ணின் பிரச்சனைகள் அவளின் சிக்கல்களை மட்டுமே அதிகமாக மையப்படுத்தி கவிதைப் புனைந்துள்ளனர் பெண் கவிஞர்கள் உரிமையை நிலை நாட்டுதல் விழிப்புணர்வூட்டல், ஊக்கப்படுத்துதல், வேட்கையை வெளிப்படுத்துதல் பெண்ணின் எதிர்வினைகள் போன்ற நிலைகளிலும் பெண்ணியக் கருத்துக்களோடு கவிதை வெளிப்படுத்துகிறது. பெண்மையின் வலிமை, சமூகக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான எதிர்ப்பு, உடல் சார்ந்த அரசியல், தன்னுணர்வு மற்றும் சம உரிமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு வெளிப்படுகின்றன.

    துணைநூற்பட்டியல்

    1. கவிஞர் தாமரை      –   ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்  குமரன் பதிப்பகம், சென்னை-17 பதிப்பு ஆண்டு: 1999
    2. கவிஞர் கனிமொழி – கருவறை வாசனை, வ.உ.சி பதிப்பகம், சென்னை. பதிப்பு-2004
    3. கவிஞர் சல்மா – பச்சைத் தேவதை, காலச்சுவடு பதிப்பகம்
    4. மாலதி மைத்ரி  – சங்கராபரணி, காலச்சுவடு பதிப்பகம் . ஆண்டு 2013

    Share
  • பதவி மோகம்

    முனைவர் கு. வளர்மதி,
    உதவிப்பேராசிரியர்,
    இளங்கலைத் தமிழ்த்துறை,
    தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,
    சிவகாசி.

    “மனிதனை ஆட்டிப் படைக்கும்
    அமைதியான ஆயுதம் ‘பதவி’
    நிரந்தரமில்லா மனித வாழ்வில்
    நாற்காலி மட்டும் நிரந்தரமா?
    பதவிமோகத்தில் பேசும் மனிதன்,
    பகைக்கு மட்டுமே சொந்தக்காரன்!
    எத்தனையோ தலைவர்கள் உலகிலே;
    வந்தார்கள், சென்றார்கள், பெயர்பெற்றார்கள்!
    ஆணவத்தில் அதிகாரத்தில் தத்தளித்த
    மனிதர்கள் போனார்கள், பெயர்தொியாமல்…!
    சகமனிதனை மனிதனாகப் பார்!
    பதவிவெறியில் மாக்களாக நடத்தாதே;
    காலமாற்றத்தில் எதுவும் நிரந்தரமில்லை!”

    Share
  • பெண்மை போற்றுக

    முனைவர் கு. வளர்மதி,
    உதவிப்பேராசிரியர்,
    இளங்கலைத் தமிழ்த்துறை,
    தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,
    சிவகாசி.

    “அந்நியருக்கு அடிமைப்பட்ட தேசத்துக்கு விடுதலை
    ஆணுக்கு அடிமைப்பட்ட பெண்ணுக்கும் விடுதலை!
    மாதவம் புரிந்து மங்கையராகப் பிறப்பு
    ஆணுக்குப்பெண் சரிநிகர் சமமென வாழ்வு
    கணவனுடன் உடன்கட்டை ஏறிடாத இறப்பு!

    தந்தையை கணவரை மகனையென – ஆணினத்தைச்
    சார்ந்தே வாழும் சார்புவாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.
    வெளிநாட்டில் படிப்பு வேலையென தனித்தியங்கும்
    சொந்தக்காலில் நிற்கும் வாழ்க்கைக்குத் தொடக்கப்புள்ளி…
    எட்டாக்கனியான பட்டங்களும் பதவிகளும் எட்டின
    பேச்சுரிமைமுதல் சொத்துரிமைவரை அனைத்தும் வசப்பட்டன.

    வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்பது அக்காலம்
    நாட்டுக்குள்ளே பெண்ணை ஏற்றிவைப்பது இக்காலம்!
    அரியணையில் வீற்றிருக்கும் அதியன்போன்ற மன்னனுக்கு
    அறிவுரைநல்கும் ஔவையெனும் அமைச்சராக ஒருகாலம்,
    அறிவார்ந்த கருத்துக்களுடன் அரியணையில் வீற்றிருந்து,
    சிங்கப்பெண்ணாக வலம்வரும் பெண்ணினமே தற்காலம்!
    மண்ணில் மட்டுமல்ல, விண்ணிலும் பெண்ணென…
    மகத்தான சாதனைகளின் கொள்கலனான சக்தியை
    மாபெரும் பெண்மையை வணங்கிப் போற்றுவோம்!”

    Share
  • விவசாயி

    விவசாயி

    முனைவர் கு. வளர்மதி,
    உதவிப்பேராசிரியர்,
    இளங்கலைத் தமிழ்த்துறை,
    தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,
    சிவகாசி.

    “விடியுமுன் குளியல்
    குளக்கரை குளிர்நீரில்;
    மானம் மரியாதைக்கு
    வேட்டியும் துண்டுமே!
    நெற்றிநிறை திருநீறு
    அதிகாலை சூரியவழிபாடு!
    தேவாமிர்தமாக வயிறுகுளிர
    பழையசோற்றுத் தண்ணீர்!

    உச்சிவெயிலையும் பொருட்படுத்தாத
    உன்னதமான உழைப்பு!
    கால்வயிற்றுக் கஞ்சிக்காக
    அயராது உழைத்தும்
    வயிற்றிலே சுருக்கங்கள்,
    கண்ணிலே ஏக்கங்கள்!
    பண்டிகை நாட்களிலும்
    பட்டாடை உடுத்தியதில்லை,
    விடுமுறை நாட்களிலும்
    ஏர்பிடிக்க மறந்ததில்லை!

    பெற்றபிள்ளையின் கல்விக்காக
    காய்த்துப்போன கரங்கள்!
    கண்ணாடி பார்க்காத அழகு,
    கள்ளங்கபடமற்ற புன்னகை!
    நெற்றிவியர்வை நிலத்தில்சிந்தி,
    விதைவிதைத்து, பயிர்காத்து,
    அறுவடைசெய்யும் விவசாயிக்கு
    அரிசிச்சோறு கிடைப்பதில்லை!
    உழைப்பிற்கேற்ற ஊதியமில்லை,
    உழும்நிலம் சொந்தமில்லை!
    தனக்கென வாழ்ந்ததில்லை,
    பஞ்சுமெத்தையில் உறங்கியதில்லை!

    வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி
    வளர்த்தபிள்ளைக்குத் தெரிவதில்லை
    விவசாயத்தின் அருமை!
    விதவிதமான பலகாரங்கள்
    பேரன்பேத்தியின் வாய்ருசிக்கு
    கடன்வாங்கியும் செய்ததுண்டு!

    ஊரார்உண்ண நெல்விளைவித்த
    விவசாயியின் விவசாயக்கடனை
    அடைத்திடயாரும் முன்வரவில்லை,
    அரசாங்கமும் தள்ளுபடிசெய்யவில்லை!
    மனம்உடைந்த கடைசிவிவசாயியின்
    பரிதாபநிலையோ தற்கொலை!”

    Share
  • இல்லங்களில் அழகாய் இன்ப தீபம் ஒளிருதே

    மா. நந்தினி
    சேலம்

    இல்லங்களில் எண்ணங்களால் விளக்கு ஏற்றுவது
    வாழ்க்கையை உயர்த்தும் என்பதே நிதர்சனமானவை
    அகல் விளக்கில் பஞ்சு திரி போட்டு
    நெய் ஊற்றி விளக்கேற்றும் போது
    நாம் நினைத்ததை இறைவன் நிச்சயம்
    ஒரு நாள்
    நிறைவேற்றித் தருவார்.
    தீப ஒளியில் தெய்வீகத்தை உணர்ந்தால்
    உடலும்,
    மனமும் அமைதி அடையும்
    கார்த்திகை தீபம் ஏற்றும் போது
    இறைவனின் அருளை பரிபூரணமாக
    பெறலாம்!!

    Share
  • கவிதைகள்

    மு. பிரபு
    191/2, புதிய தெரு
    ரூசா வழி
    மேல்காவனூர் கிராமம் & அஞ்சல்
    கே.வி. குப்பம் தாலுக்கா
    வேலூர் மாவட்டம். 632 209. 

    1. ஈரத்துணி

    தொடர் மழை
    தொடரமுடியாத
    தொழிலாளர்கள் பணி,

    ஈரத்துணி
    அவர்கள்
    தலையில் மட்டுமில்லை
    வயிற்றிலும் கூட..

    2. தொடர் மழை 

    தேங்கி நிற்கும்
    தண்ணிர்
    வடியவில்லை,

    வாழ்க்கைக்கு பாதையின்றி
    கண்ணீர் வடிக்கும்
    நடைப்பாதை வியாபாரி.

    3. மழைக்காலம்

    அடுப்பு பற்றவைக்க
    முடியாமல்
    செங்கல்
    சூளைக்காரர்.

    வயிற்று பசியை
    அணைக்க முடியாமல்
    தவிக்கும்
    செங்கல் சூளை
    தொழிலாளி.

    4. விவசாயமுமில்லை

    விலைகளும்
    குறையவில்லை
    நிரந்தர வேலையுமில்லை
    வேலைக்கு ஏற்ற
    ஊதியமுமில்லை
    ஆனாலும்
    மறைமுக வரிகளால்
    சுமைதாங்கிகளாய்
    ஏழைகள்.

    5. செயலிகளில் 

    வாசிக்கப்படும் புத்தகங்கள்
    பாசிக்கு உணவாகும்
    நூலக புத்தகங்கள்.

    Share
  • சமிக்கை

    த. ஆதித்தன்

    இரைச்சல்களுக்குள்
    பொதிந்து கிடக்கின்றன
    சமிக்கைகள்.

    தேர்ந்தெடுக்கும் திறன்
    அபரித ஆற்றலாய்
    மறுபடிகட்டிற்கு
    தேர்ந்தெடுத்தல்
    இங்கு
    உரிமையாய்…

    தேர்ந்தெடுப்பின் விளைவு
    சிலவற்றிற்கு, ம்…
    பலவற்றிற்குக் கூட
    மறுதலிப்பு பதிலாய்…
    தம் திறன்
    தேர்ந்தெடுப்பில்
    தொலைகையில்
    இயலாமையின் பிடியில்…

    கொண்டாடுங்கள்
    புறக்கணிப்பை
    ம்… அங்கு
    தேர்ந்தெடுப்பின்
    பூரணத்துவம்

    பிரம்மமாய்!
    பெரும் ஏகாந்தம்
    பரந்துபட்ட வெளியாய்
    தேர்ந்தெடுப்பின் களம்.

    இலக்கு வெளிப்பட
    தப்பிச் சென்றிடு
    சலசலப்பில்….

    ஒதுங்கி நிற்பது
    நாம்
    தொலைந்திட, தொலைத்திட அன்று…
    கண்டறிதலின்
    சூட்சமம் அது.
    சமிக்கைகளைக் கண்டறியும்
    வாய்ப்பாடு.
    ஆய்ந்தறிந்து புலப்படுத்தும்
    வித்தையல்ல,
    இயந்திர ஓட்டத்தில்…
    ஒதுங்கி நிற்றல்
    சமிக்கை அறிதலின்
    அத்தியாவசிய தந்திரமாய்…

    Share
  • சங்க இலக்கியத்தில் அணிகலன்கள்

    முனைவர் மூ. சிந்து
    இணைப் பேராசிரியர்
    தமிழ்த்துறை
    டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி ( தன்னாட்சி)
    காளப்பட்டி ரோடு
    கோயம்புத்தூர் – 641048

    முன்னுரை

    மனிதர்கள் தன்னை அடையாளம் காட்ட விழைவது இயற்கையாகும். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய பொருளாதாரம் மற்றும் சூழலுக்கேற்ப உணவு, உடை, அணிகலன், ஆகியவற்றில் ஒப்பனைகளை ஏற்படுத்திக் கொள்வதை அவசியமாகக் கருதுகின்றனர்

    ”ஆடையில்லா மனிதன் அரை மனிதன்” “ஆள் பாதி ஆடை பாதி” என்பது நம் தமிழர் வழக்கு. ஆடைகளில் தன்னிறைவைக் கண்ட மனிதர்கள், அணிகலன்களை பூட்டி தங்களை அழகுபடுத்திக் கொள்கின்ற நிலைப்பாட்டினை இன்று ஆண், பெண் இருபாலர்களிடையேயும் காணமுடிகிறது.

    இன்றைய மகளிரைப் போன்றே சங்ககாலத்துப் பெண்களும் ஆடை அலங்காரங்கள், அணிகலன்கள், ஒப்பனைகள் முதலியவற்றில் மிகுந்த நாட்டம் கொண்டவர்களாகவும், விரும்பி அதனை அணிந்துகொள்ளும் குணம்  உடையவர்களாக இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

    அணிகலன்கள்

    அணி என்பது அழகு எனப் பொருள்படும். மகளிர் தன்னை அழகுப்படுத்தவும், அழகுக்கு மேலும் அழகு சேர்க்கவும் அணிகலன்களைப் பயன்படுத்தினர். நூலுக்கு அணி செய்வது போல ஒரு பெண்ணுக்கு  அணி செய்ய அணிகலன்கள் இன்றியமையாதாகும்.

    மலர்அணிகலன்கள்
    ‘ஆம்பல் வன்னித் தொடிக்கை மகளிர்’       (புறம். 63:12)

    பவளவளை செறிந்தாட் கண்பணித்தான் பச்சைக்
    குவளைப் பசுந்தண்டு கொண்டு’                   (பரி. 11:101-102)

    ஆம்பல், குவளை முதலியவற்றின் தண்டுகளால் மகளிர் வளையல் செய்து அணிந்ததை அறியமுடிகிறது.

    ‘கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சி’                   (குறுந். 80:1)

    என்றும்

    “பரூஉப்பகை ஆம்பல் குருஉத்தொடை நீவிச்
    சுரும்பிமீர் ஆய்மலர் வேய்ந்த”                      (அகம். 136:27-28)

    எனும் பாடல் வரிகளில் ஆம்பல் மலர்களால் ஆன மாலையைக் கழுத்தில் அணிந்து கொண்டதையும், கூந்தலில் சூடியதையும் தெரிவிக்கிறது. மேலும் தாவரங்களினின்று உருவாக்கிய அணிகளைத் தவிர உலோகங்களால் செய்யப்பட்ட அணிகலன்களையும் சங்கப் பெண்டிர் அணிந்திருந்தமையை அறியமுடிகிறது.

    செயற்கை அணிகலன்கள்

    வணிகத் தொடர்புகளாலும், உலோகக் கண்டுபிடிப்புகளாலும்,  செயற்கை அணிகலன்கள் புழக்கத்தில்  வந்தன.

    “அணி, பூண், பணி, இழை, கலன், நகை, குழை, தொடி, வளை முதலிய சொற்கள் அணிகலன்களைக் குறித்து வழங்கப்படுவனவாக அமைந்துள்ளன” என்று வெ.வரதாராசன் அவர்கள் தமிழரின் ஒப்பனைக் கலைத்திறன் என்ற நூலில் கையாண்டுள்ளார்.

    சங்ககால மகளிர் தலையணி, நுதலணி, காதணி, கபத்தணி, தோளணி, மார்பணி, கையணி, விரலணி, இடையணி, காலணி எனும் பலவகை அணிகலன்களை உடலுறுப்புகளில் அணிந்தனர் என்பதையும் அறியமுடிகிறது.

    மகளிர் தன்னை அழகுபடுத்த அணிகளையும், அணிகளை அழகுப்படுத்த அதில் விதவிதமான இரத்தினங்களையும், கற்களையும், முத்து பவளங்களையும் பதித்து அணிந்து கொண்ட செய்திகளையும் சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது.

    “கைவல் வினைவன் தையுரு சொரிந்த
    சுரிதக உருவு”                                                        (நற். 86: 5-6)

    கைத்தொழிலில் வல்லவன் இரத்தினக் கற்கள் பதியப்பெற்று செய்த பொன்னாலாகிய சுரிதகம் என்னும் அணியை அணிந்த பெண்டிரைப்  பற்றி பூதன்தேவனார் மருதத்திணைப் பாடலில் எடுத்துரைத்துள்ளார்.

    “எறிமகர வலயம் அணிதிகழ் நுதலியர்”  (பரி.10-77)

    மகரலயம் எனும் நுதலணியைப் பற்றிப் (நெற்றியணி) பரிபாடல் கூறுகிறது.

    காதணிகள்

    புராணக் காலத்தில் ஒலைகளான அணிகளன்களும், சங்க காலத்தில் பூக்களால் ஆகிய அணிகலன்களும், உலோக அணிகளும் அணியப்பெற்றமையை அறியமுடிகிறது. பொன்குழை ஒண்குழை, கனங்குழை, சிறுகுழை, மகரக்குழை, கொடுங்குழை, தோடு ஆகியவற்றை காதணிகளாக சங்கப் பெண்டிர் அணிந்திருந்தனர்.

    “ஞாயலியர் மென்காதிற் புல்லிகைச் சாமனா”   (கலி. 96.11)

    புல்லிகை எனும் அணியும் காதணியையே குறிக்கும் என்பதை அறிய முடிகிறது.

    “கோழி பொறிந்த கொடுங்காற் கனங்குழை
     பொற்கார் புதல்வர் புரவியின் றுருட்டு
     முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும்”                (ப.பாலை. 23-25)

    காவிரிப் பூம்பட்டினத்துத் தாய்மார்கள் கோழிகளை விரட்ட காதில் அணிந்த குழையைத் தூக்கி எறிந்ததைப் பட்டினப்பாலை பாடல் வழி அறியலாகிறது.

    கழுத்து அணிகலன்கள்

    கழுத்து அணிகலன்கள் என்பது கழுத்தில் அணியப்படுவது. இது தாலி, மாலை, அல்லது மதாணி (தொங்கல்) போன்ற பல்வேறு வடிவங்களில், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களால் அமைந்ததாகும்.

    பொன்னாலாகிய காசுகளைக் கோர்த்து இழைக்கப்பெற்ற காசு மாலையைக் கழுத்தில் அணிந்ததையும்

    புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர்ப்
    பொலங்கல ஒருகா சேய்க்கும்                                              (குறு. 67:4)

    பொன்னொடு புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி             (அகம். 7:17-18)

    பொன்னொடு புலிப்பல் கோக்கப் பெற்ற தாலி அணிந்ததையும் அறிய முடிகிறது.

    கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்
    பந்தர்ப் பெயர்க்கும் பன்மாண் ஏந்தெழில்                         (பதி. 67:1-2)

    அரசர்கள் ஏகவடம் என்னும் முத்து மாலைகளை அணிந்தார்கள். செல்வர் வீட்டுப் பெண்களும் அரசகுமாரிகளும், இராணிகளும் முத்துமாலைகளை அணிந்தார்கள். உரோம தேசத்து மகளிர் தமிழ்நாட்டு முத்துக்களைப் பெரிதும் மதித்தனர் என்ற செய்தியை மயிலை சீனி வேங்கடசாமியின் பழங்காலத் தமிழர் வாணிகம் என்ற நூலின் மூலம் அறியமுடிகிறது.

    தோள் அணிகலன்கள்

    ‘தொடி’ என்பது பழந்தமிழில் பெண்கள் அணியும் கைவளை அல்லது தோள்வளையைக் குறிக்கும் ஒரு அணிகலன் சொல் ஆகும். இது சங்கு, பொன் அல்லது பிற உலோகங்களால் செய்யப்படலாம். இலக்கியங்களில் இது பெரும்பாலும் ‘ஒள் தொடி’ (ஒளிமிக்க வளையல்) எனப் பெண்களின் அழகுக்கும் மென்மைக்கும் அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது.

    “ஒண்தொடி நெகிழ” (அகம். 265:9)

    “தொடிதோள் இலர்க”  (அகம். 269:1)

    எனும் ‘தொடி’ என்னும் அணிகலன் அணியப் பெற்றமையை அறியமுடிகிறது.

    மார்பணிகலன்கள்

    மார்பணி என்பது பொதுவாக மார்பில் அணியும் அணிகலன் (மதாணி, பூண்) அல்லது கவசத்தைக் குறிக்கும். இது ஒருவகை மார்புப் புண், தண்டனையாக மார்பில் தைக்கப்படுவதாகும்.

    வயங்கு கதிர் வயிரமோடு உறழ்ந்து, பூண் சுடர்வர,
    எழுமுடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து,                  (ப.ப 16:16,)

    பூண் அணிந்து எழிலிய வனைந்துவரல் இள முலை,
    மாண் வரி அல்குல், மலர்ந்த நோக்கின்,                    (ப.ப 65:6)

    என்ற வரிகள் அரசியர்  மார்பணி அணிந்தைமையை எடுத்துரைக்கிறது.

    பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை              (அகம். 16:9)

    மன்னர்கள் மார்பணி அணிந்ததும், பரத்தையர்களாலும் அணியப் பெற்றதையும்  அகநானூறு  பாடல் வழி அறியமுடிகிறது.

    கை அணிகலன்கள்

    தமிழர் பண்பாட்டில் கை அணிகலன்கள் பாரம்பரியம் மற்றும் அழகைக் குறிக்கின்றன. வளையல், காப்பு, கைகளில் அணியப்படும் ஆபரணங்கள். இவை தங்கம், வெள்ளி, மற்றும் சங்கு போன்ற பொருட்களால் செய்யப்படுகின்றன.

    கைகளில் வளையல்கள் அணிவது சங்ககாலந் தொட்டே மங்கலமாகக் கருதப்பட்டது.

    “வல்லோன் வாளரம் ரு கோனோர் எல்வளை”              (நற்.78:8-9)

    வளையல்கள், கொடிகள், பூக்கள், வரிகள் ஆகிய தொழில்நுட்பத்தோடு செய்யப் பெற்றதைக் காணமுடிகிறது.

    “அணிவளை முன்கை ஆயிழை மடந்தெ                          (அகம் 361:4)
    “சின்னிரை வால்வளைக் குறுமகள்”                                               (குறுந் 189.6)

    “வளைக்கை விறலி
    வல்லோள் வானரம் பொருத
    கோணேர் எல்வளை அகன்தொடி செறித்த முன்கை”              (நற்.77:8-10)

    ஆகிய வரிகளின்றும் மகளிர் அனைவரும் (கணவனை இழந்தோர் தவிர வளையல்கள் அணிந்திருந்ததை அறியமுடிகிறது.

    பாண்டியன் நெடுஞ்செழியனின் மனைவி பாண்டிமா தேவி வலம்புரிச்சங்கு வளையல்களோடு பொன் வளையல்களையும் அணிந்திருந்ததை நெடுநல்வாடை கூறுகிறது.

    “பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை
    வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து”                   (நெடுநல். 141-142)

    திருமணத்தின் போது கொடுக்கப்படும் பரிசப் பொருட்களில் ஒன்றாக தமிழகத்தில் சங்கு வளையல்கள் இருந்துள்ளதை அறியமுடிகிறது.

    இடுப்பு அணிகலன்கள்

    “மேகலை” என்பது பெண்கள் தங்கள் இடுப்பில் அணியும் ஒரு வகை அணிகலன் அல்லது ஒட்டியாணம் ஆகும். இது இடையணி என்றும் அழைக்கப்படுகிறது,

    வகையமை மேகலை”                                                  (பரி.22:30)

    என்ற பரிபாடலும்

    “நேர்மணி நேர்முக்காழப் பல்பல கண்டிகைத்
    தார்மணி பூண்ட தமனிய மேகலை”                                    (கலி.96:10-15)

    என்ற கலித்தொகையும்

    “பொலம்பசும் பாண்டிய காசுநிரை அல்குல்”                   (ஐங்.310.1)

     என்று ஐங்குநூறும் இடுப்பில் அணியும் அணிகலன்களைக் கூறுகின்றன.

    “…. தெண்நீர்
    முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்தூற்று”             (நற்.110.45)

    தெளிந்த ஒளியுடைய முத்துக்களை உள்ளே பரலாக இட்டுச் செய்த பொற்சிலம்பை அணிந்த சிறு பெண்ணைப் பற்றி அறியமுடிகிறது.

    சிலம்பில் அணிகலன்கள்

    சிலம்பு பற்றிக் கூறும் சிலப்பதிகாரத்தில் மாதவி  அணிந்த அணிகலன்களாக விரலணி (கான்மோதிரம்), பரியகம் (கார்சவடி) நூபுரம் (சிலம்பு) பாடகம், சதங்கை. அரியகம் (பாதசாலம்) குறங்குசெறி (கவான்செறி. விரிசிகை, கண்டிகை (மாணிக்கவளை), கே தோள்வளை, சூடகம், கைவளை (பொன்வணா) பரியகம், (பாசித்தாமணி, கைச்சரி), வால்வளை (சங்கவளை, வெள்ளிவளை), பவழவளை, வாளைப் பகுவாய் மோதிரம், மணி மோதிரம், மரகத் தாள் செறி(மரகதக் கடைசெறி) சங்கிலி மறத்தொடரி. நுண்ஞாண் ஆரம், கயிற்கடை, யொகுழுகிய கோவை (பின்றாலி), இந்திர நீலக் கடிப்பிணை (நீலக்குதம்பை) தெய்வ வுத்தி (திருத்தேவி), வலம்புரி, தொய்யகம் (தலைப்பானை, பூரப்பாளை), புல்லகம் (தென்பல்லியும் வடபல்லியும்) என 27 வகை அணிகள் அணிந்திருந்ததாகச் சிலப்பதிகாரக் கடலாடுகாதை கூறுகின்றது. இவற்றுள் அடங்காத வேறு சில அணிகளும்  அக்காலத்திருந்தன. அவற்றுள் ஒன்று ஆடை அல்லது சூடாமணி, பெண்டிர் அரைப்பட்டிகை மட்டும் மேகலை, காஞ்சி, கலாபம், பருமம், விரிசிகை என ஐந்து வகையாக இருந்தமையையும் சிலப்பதிகாரம் வழி அறியமுடிகிறது.

    முடிவுரை

    • சங்ககாலப் பெண்டிர் இயற்கையானப் பொருட்களைக் கொண்டு அணிகலன்களாக அணிந்தனர்.
    • காலம் செல்லச் செல்ல வாணிகமும், தொழில் நுட்பமும் வளர்ச்சியடைந்த நிலையில் முத்து, பவளம், மாணிக்கம், மணி போன்ற பொருட்களைக் கொண்டு அழகுபடுத்தி அணிகலன்களை உருவாக்கினர்.
    • சிறந்த வகை அணிகலன்களை சங்ககால மக்கள் அணிந்திருந்தனர் என்பதை உணர முடிகிறது.
    • அணிகலன்கள் சங்ககால மக்களின் வாழ்க்கையோடு எல்லா நிலைகளிலும் இருந்தமையை தெளிவுற அறியமுடிகிறது.

    துணை நின்ற நூல்கள்

    1. சங்க இலக்கியத் தொகுப்பு – வர்த்தமானன் பதிப்பகம்.

    Share