Author: admin

  • ஆய்வுலகில் காகிதச் சுவடிகளின் முதன்மை

    ஆய்வுலகில் காகிதச் சுவடிகளின் முதன்மை

    முனைவர்  த. ஆதித்தன்
    இணைப்பேராசிரியர்
    அரிய கையெழுத்துச் சுவடித் துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம்
    தஞ்சாவூர்

    சுவடி என்னும் சொல்லினைக் கேட்டவுடன் அனைவர் மனத்திலும் எழுவது ஓலைச் சுவடிகளே. அச்சு இயந்திரத்தின் வருகைக்கு முன்னர் இன்றைய அச்சுப் புத்தகங்கள் போன்று காணப்பட்டவை பனையோலைப் புத்தகங்களே ஆகும். அவையே ஓலைச் சுவடிகள் எனப்படுகின்றன. இதனை, “காகிதமும் எழுதுகோலும்  வழக்கத்திற்கு வராத காலத்திலே ஓலை நறுக்குகளில் எழுத்தாணி கொண்டு எழுதப்பட்ட சுவடிகளே நூல்களாக இருந்து வந்தன”1 என்று மா.சு. சம்பந்தன் கூறுவதன் மூலம் அறியலாம். காகிதப் பயன்பாடு பெருகியதற்குப் பின்பு அவற்றில் எழுதத் தொடங்கினர். அவ்வாறு கையினால் காகிதங்களில் எழுதப்படுவனவற்றைக் கையெழுத்துச் சுவடி, கையெழுத்துப்படி, காகிதச் சுவடி போன்ற பெயர்களால் அழைக்கின்றனர்.

    இந்தக் காகிதச் சுவடிகள் தமிழ் இலக்கண, இலக்கிய ஆய்வுகளிலும், வரலாற்று ஆய்வுகளிலும் பெறும் முதன்மையினை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

    தொல்காப்பியச் சுவடிப் பதிப்பு

    தமிழில் கிடைக்கப்பெறுகின்ற நூல்களுள் மிகவும் தொன்மையானது தொல்காப்பியம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலாக இருந்தாலும் இதன் அச்சு நூல் பதிப்புகள், பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் இருந்தே கிடைக்கப்பெறுகின்றன. “பொது ஆண்டு 1847இல் தான் அச்சில் தொல்காப்பியம் ஏறியது என்பார் ச.வே. சுப்பிரமணியன். முதன் முதலாக மழவை மகாலிங்கையர், ஆகஸ்டு 1847இல் நச்சினார்க்கினியத்தை வெளியிட்டார். வரலாற்றில் தொல்காப்பியம் முதன்முதலில் அச்சில் வந்தது இப்பதிப்பு வழியாகத்தான்”2 என்று குறிப்பிடுவதன் மூலம் இதனை அறியலாம். அதே வேளை மு. சண்முகம்பிள்ளை, மா.சு. சம்பந்தன் ஆகியோர், மழவை மகாலிங்கையர் பதிப்பு 1848இல் தான் வெளிவந்துள்ளது என்கின்றனர். தொடர்ந்து 1858இல் எஸ். சாமுவேல் பிள்ளை என்பவரால் தொல்காப்பிய நன்னூல் என்னும் தலைப்பில் தொல்காப்பியம் முழுவதும் அச்சேற்றப்பட்டுள்ளது.

    “1885இல் சி.வை. தாமோதரம்பிள்ளை பதிப்பித்த  தொல்காப்பியம் – பொருளதிகாரம் பதிப்புரையில் தமக்குக் கிடைத்த பிரதிகளைச் சொல்லும் பொழுது புரசபாக்கம் ஸ்ரீ சாமுவேற் பண்டிதரவர்கள் தமது சொந்தக் கையினாலேயே எழுதி வைத்திருந்த பிரதி ஒன்றும்”3 என்று குறிப்பிடுவதில் இருந்து சாமுவேல் பிள்ளை பதிப்புப் பணிக்குக் காகிதச் சுவடியினைப் பயன்படுத்தியுள்ளது புலனாகிறது. இந்தக் காகிதச் சுவடியினை சி.வை.தாமோதரம்பிள்ளையும் தமது பதிப்பிற்குப் பயன்படுத்தியுள்ளதும் தெரியவருகிறது.

    1933இல் வ.உ.சிதம்பரம்பிள்ளை பதிப்பித்த தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்பினை அடுத்த நிலையில் குறிப்பிடலாம். இப்பதிப்பிற்குக் காகிதச் சுவடிகள் மூன்றினை அவர் பயன்படுத்தியுள்ளதும் தெரிய வருகிறது. “1933இல் வெளியிட்டுள்ள பகுதிகளுக்குத் த.மு. சொர்ணம்பிள்ளை கடிதப் பிரதியும், தி.நா. சுப்பிரமணிய ஐயரிடமிருந்து கிடைத்த கடிதப் பிரதியும், எஸ். வையாபுரிப்பிள்ளை 1912இல் தி.த.கனகசுந்தரம் பிள்ளை ஏட்டுப் பிரதியைப் பார்த்து எழுதிய கைப்பிரதியும் பயன்பட்டன”4 என்னும் வ.உ.சி.யின் கூற்றில் காகிதச் சுவடி என்பதற்கு கடிதப்பிரதி, கைப்பிரதி என்னும் சொல்லாட்சிகளைப் பயன்படுத்தியுள்ளதையும் இதன் மூலம் அறிய முடிகிறது. மேலும் வ.உ.சி.யின் இக்கூற்று மூலம் அவரின் பதிப்பிற்குத் துணைநின்ற காகிதச் சுவடிகள் மூன்றும் ந.மு. சொர்ணம்பிள்ளை, தி.நா.சுப்பிரமணிய ஐயர், எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆகியோரிடம் இருந்து பெறப்பட்டுள்ளன என்பதையும் அறிந்துகொள்ள முடிகின்றது.

    குறுந்தொகைச் சுவடிப் பதிப்பு

    குறுந்தொகையினை அச்சு நூலாகக் கொண்டு வந்தவர்களில் முதன்மை பெறுபவர் சௌரிப்பெருமாள் அரங்கன் ஆவார். இதனை அவர் பதிப்பித்தது, பொது ஆண்டு 1915இல் ஆகும். தொடர்ந்து 1920இல் நமச்சிவாய முதலியாரும், 1930இல் இராமரத்தின ஐயரும், 1933இல் சோ. அருணாசல தேசிகரும், குறுந்தொகையைப் பதிப்பித்துள்ளனர். அடுத்து 1937இல் உ.வே.சா அவர்களின் தொடக்கக் காலக் குறுந்தொகைப் பதிப்புகளில் சிறப்பான இடம், உ.வே.சாவின் பதிப்பிற்கு உண்டு. பிற நூல்களுக்கெல்லாம் அரும்பத உரை, மேற்கோள் ஒப்புமைப் பகுதி போன்றவற்றை எழுதிப் பதிப்பித்த அவர், குறுந்தொகைக்குத் தாமே முற்றிலும் புதிய உரை எழுதிப் பதிப்பித்துள்ளார். உ.வே.சா. அவர்கள், தமது குறுந்தொகைப் பதிப்பு முகவுரையில், “அப்பால் நான் ஏட்டுச் சுவடிகள் தேடிய இடங்களில் அடியிற் காட்டியபடி வேறு ஒன்பது பிரதிகள் கிடைத்தன. அவற்றில் சில பூர்த்தியாகாது  இருந்தன; சில குறையாக இருந்தன.

    1. திருநெல்வேலி ஸ்ரீ அம்பலவாண கவிராயரவர்கள் ஏட்டுப்பிரதி
    2. மந்தித் தோப்பு மடத்திற் கிடைத்த ஏட்டுப்பிரதி
    3. செங்கோல் மடத்திற் கண்ட குறையான ஏட்டுப்பிரதி
    4. திருமயிலை வித்துவான் ஸ்ரீ சண்முகம் பிள்ளையவர்கள் கடிதப்பிரதி
    5. சோடசாவதானம் ஸ்ரீசுப்பராய செட்டியாரவர்கள் ஏட்டுப்பிரதி
    6. தொழுவூர் ஸ்ரீ வேலாயுத முதலியாரவர்கள் ஏட்டுப்பிரதி
    7. சென்னை இராசாங்கத்துக் கையெழுத்துப் புத்தகச் சாலை ஏட்டுப்பிரதி
    8. புதுக்கோட்டை ஸ்ரீ ராதாகிருஷ்ணையரவர்கள் கடிதப்பிரதி
    9. திருக்கோணமலை ஸ்ரீ தி.த. கனகசுந்தரம் பிள்ளையவர்கள் கடிதப்பிரதி

    இவற்றில் சிலவற்றைப் பார்த்துக்கொண்டு உரியவர்களிடம் கொடுத்துவிட்டேன்”5 என்கிறார். இவற்றுள் கடிதப்பிரதி எனக் குறிப்பிடப் பெற்றுள்ள மூன்றும் காகிதச் சுவடிகளாகும். இதன்மூலம் உ.வே.சா. தமது நூற்பதிப்பிற்குக் காகிதச் சுவடிகளைப் பயன்படுத்தியுள்ளார் என்பது உறுதியாகிறது. இதேபோன்று தொடக்கக் காலப் பதிப்பாசிரியர்கள் பலரும் பதிப்பாய்வுக்குக் காகிதச் சுவடிகளைத் தகுந்த ஆதாரங்களாகக் கொண்டுள்ளனர் என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது.

    வரலாற்று ஆவணங்கள்

    தாள் சுவடிகளில் வரலாற்று ஆவணங்களும் அதிகமாகக் காணப்படுகின்றன. குறிப்பாக ஐரோப்பிய வணிகர்களின் பண்டக சாலைக் குறிப்பேடுகள், இயேசு சபையினரின் கடிதங்கள், அரசவை ஆவணங்கள் போன்றன பலவும் காகிதச் சுவடிகளாகக் கிடைக்கப்பெறுகின்றன.

    உதாரணமாக மோடி ஆவணங்களைக் குறிப்பிடலாம். பதினேழு, பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தஞ்சாவூர்ப் பகுதியை ஆண்ட மராத்திய மன்னர்கள், அரண்மனை சார்ந்த ஆவணங்களை மோடி என்னும் குறியீட்டு மொழியில் எழுதி வைத்துள்ளனர். மோடி எழுத்துரு தேவநாகரி எழுத்துருவைச் சிதைத்து உருவாக்கப்பட்டதாகும். அரசாங்கக் கடிதங்கள், ஆவணங்கள் மட்டுமன்றி அரண்மனை சார்ந்த வரவு செலவு கணக்குகள் போன்றவையும் இம்மோடி எழுத்துருவிலேயே எழுதப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. இவை காகிதச் சுவடிகளாகும்.  இதனை, “18, 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த  மராட்டிய அரசர்கள் ஆட்சி செய்த தஞ்சைப் பகுதியில் வாழ்ந்த குடிமக்களின் வரலாற்றை அறிவதற்குரிய மோடி ஆவணங்கள் காகிதத்தில் உள்ளமையால் அவற்றைப் போற்றிப் பேணுதல் நம் கடமையாகும்”6 என கே.எம். வேங்கடராமையா  கூறுவதன் மூலம் அறியலாம்.

    இதேபோன்று இலண்டன் – இந்திய அலுவலக ஆவணங்களும் வரலாற்றாய்வுக்கு முக்கிய பங்களிப்பினைச் செய்வனவாகும். ஐரோப்பியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவைப் படம் பிடித்துக் காட்டுவனவாக  அவை திகழ்கின்றன. ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி, இந்திய ஆட்சியாளர்கள், இலண்டன் நிர்வாகம் ஆகியவற்றிற்கு இடையேயான கடிதப் போக்குவரத்துகள், ஆங்கிலேய அதிகாரிகளின் அறிக்கைகள் போன்றவை இதில் சிறப்பிடம் பெறுகின்றன. இவை அனைத்தும் இலண்டனிலுள்ள நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. இந்தக் காகிதச் சுவடிகளை முறையாக ஆய்வு செய்தால் இந்திய வரலாற்றில் இதுவரை சொல்லப்படாத, வெளிப்படுத்தப்படாத அரிய தகவல்கள் பலவும் கிடைக்கக்கூடும். இதேபோன்று ஏராளமான அரிய தாள் சுவடிகள் காணக் கிடைக்கின்றன. இவை அனைத்தும் ஆய்வுக்குரிய முதன்மைச் சான்றாதாரங்களாகும்.

    ஆய்வுலகில் கல்வெட்டுகள், செப்பேடுகள், தொல்பொருள்கள், நாணயங்கள், ஓலைச் சுவடிகள் போன்றவை எத்தகைய சான்றாதாரங்களாகத் திகழ்கின்றனவோ அவற்றிற்கு இணையான முதன்மையினை உடையனவாகக் காகிதச் சுவடிகளும் திகழ்கின்றன.

    தமிழின் செவ்வியல் நூல்கள் பலவும் சிறப்பாகப் பதிப்பிக்கப்பட, பல்வேறு வகைகளில் காகிதச் சுவடிகள் துணைநின்றுள்ளன. இலக்கிய ஆய்வுக்கு மட்டுமின்றி வரலாற்று ஆய்விலும் காகிதச் சுவடிகள் பெரும் பங்களிப்பினைத் தருவனவாகும். மேலும் காகிதச் சுவடிகளை நுண்ணிய முறையில் ஆய்வுகளுக்கு உட்படுத்தினால் புதிய பல வரலாற்று முடிவுகளும் கிடைக்கக் கூடும்.

    சான்றெண் விளக்கம்

    1. சம்பந்தன், மா.சு.., அச்சும்பதிப்பும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1997, ப.92.
    2. சுப்பிரமணியன், ச.வே., தொல்காப்பியப் பதிப்புகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1992, ப.10.
    3. சரவணன், ப., தாமோதரம், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 2017, ப.126.
    4. சுப்பிரமணியன். ச.வே., தொல்காப்பியப் பதிப்புகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1992, ப.91.
    5. சரவணன், ப., சாமிநாதம், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 2014, ப.219.
    6. வேங்கடராமையா, கே.எம்., தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2015, ப.4.

    Share
  • பரிமேலழகர் உரைத் திறன் – 2

    பரிமேலழகர் உரைத் திறன் – 2

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    புழுவைத் தேடுவதா வெயிலின் வேலை?  

    முன்னுரை

    உரைகாண்பதில் இரண்டு வகை உண்டு. செய்யுளில் உள்ள சொற்களுக்கு மட்டும் உரைசொல்லி முடிப்பது. சொன்னவனின் உள்ளத்தை அவன் சொற்களாலேயே அறிய முயல்வது. பரிமேலழகர் திருவள்ளுவரின் உள்ளம் அறிய முயன்றவர். திருக்குறள் முழுமையும் கற்றுணர ஒரு பிறவி போதாது என்பர் சான்றோர். அதற்கான பரிமேலழகர் உரையும் அத்தகையதே. திருக்குறள் காலங்கடந்து நிலைபெற்றிருப்பதற்கு என்ன காரணமோ அதே காரணந்தான் பரிமேலழகர் உரை நிலைபெற்றிருப்பதற்கும். திருவள்ளுவர் வாழ்வியலுக்கு நூலெழுதியவர் என்றால் அந்த நூல் நிலைபெற தம் ஆழமான அகன்ற புலமையால் ‘உரைமாளிகை’ அமைத்துத் தந்தவர் பரிமேலழகர் எனலாம். அன்னாருடைய ஆழமான புலமை வெளிப்படும் பல இடங்களில் ஓரிடத்தை இவ்விரண்டாவது கட்டுரை சுருக்கமாக ஆராய்கிறது.

    திறனறியப்படும் குறளும் உரையும்

    திருக்குறளில் எட்டாவது அதிகாரமாகிய அன்புடைமை என்னும் அதிகாரத்தின் ஏழாவது குறட்பாவாக இருப்பது இது.

    “என்பிலதனை வெயில் போலக் காயுமே
    அன்பி லதனை அறம்”  77

    சொல்லுக்குச் சொல் பொருள் கூறி விளக்குவது சொற்பொருள் விளக்கம். வடமொழியில் பதசாரம் என்பர். பதம் என்றால் சொல். சாரம் என்றால் பொருள். பேச்சில் சாரமில்லையே என்பது உலக வழக்கு. “சாரமற்ற வார்த்தை நாம் சரிதை சொல்லுகின்றோம்” என்பார் பாரதியார். பரிமேலழகர் பதசாரம் சொல்லுவதை ஓர் உரைநெறியாகப் பின்பற்றவில்லை. கருத்திற்கு இசைய பொருளமைதியை முன்னர்க் கூறிப் பின் அதற்கான விளக்கத்தை விளக்கவுரையில் கூறுவார். இந்த விளக்கம் எதிர்வரும் கட்டுரைகளுக்கும் பொருந்தும். இவ்வாறு கூறுவதற்குப் பொழிப்பு அல்லது பொழிப்புரை என்று பெயர்.

    • என்பு இலதனை வெயில் போலக் காயுமே –- என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற்போலக் காயும்
    • அன்பிலதனை அறம் — அன்பில்லாத உயிரை அறக்கடவுள்

    இது மேற்கண்ட பாடலுக்குப் பரிமேலழகர் தந்திருக்கும் பொழிப்புரை.

    உரைநடைப் பாங்கில் (PROSE ORDER) பரிமேலழகர் பொழிப்புரை

    மேற்கண்ட பொழிப்புரையை எல்லார்க்கும் புரிதல் வேண்டி எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என்னுமாறு உரைநடையில் இப்படி அமைக்கலாம்.

     வெயில் என்பு இல்லாத உடம்பை காய்ந்தாற்போல
    அறக்கடவுள் அன்பில்லாத உயிரைக் காயும்

    குறட்பாவில் சொல்லப்படாது பொழிப்புரையில் காணப்படும் சொற்கள் மூன்று. ‘என்பிலது’ எனக் குறட்பாவில் இருக்க, பொழிப்பில் ‘உடம்பு’ என இருக்கிறது. ‘அன்பிலது’ எனக் குறட்பாவில் இருக்க, ‘உயிரை’ என இருக்கிறது. ‘அறம்’ என இருக்க, ‘அறக்கடவுள்’ என இருக்கிறது. பின்னால் அவர் எழுதப்போகும் விளக்கவுரை பொழிப்புரையிலிருந்தே தொடங்கிவிடுவதைக் காணமுடிகிறது.

    விளக்கவுரை

    பரிமேலழகர் தரும் இத்தகைய விளக்கங்கள் குறிப்பிட்ட குறட்பாவிற்கு அவரே எழுதிய பொழிப்புரைகளுக்கானவை. அதனால்தான் அவருடைய விளக்கவுரை பொழிப்புரையிலேயே தொடங்கிவிடுகிறது எனக் குறிக்கப்பட்டது.

    “என்பிலது’ என்றதனான் ‘உடம்பு’ என்பதூஉம், ‘அன்பிலது’ என்றதனான் உயிர் என்பதூஉம் பெற்றாம், வெறுப்பின்றி எங்கும் ஒரு தன்மைத்து ஆகிய வெயிலின் முன் என்பில்லது தன் இயல்பால் சென்று கெடுமாறு போல, அத்தன்மைத்து ஆகிய அறத்தின் முன் அன்பில்லது தன் இயல்பால் கெடும் என்பதாம். அதனைக் ‘காயும்’ என வெயில் அறங்களின் மேல் ஏற்றினார். அவற்றிற்கும் அவ்வியல்பு உண்மையின். இவ்வாறு “அல்லவை செய்தாற்கு அறம் கூற்றம்” (நான்மணிக்கடிகை 83)  எனப் பிறரும் கூறினார்.

    மேற்கண்ட பகுதி மேற்காணும் குறட்பாவிற்குப் பரிமேலழகர் எழுதிய பொழிப்புக்கு அவரே தந்திருக்கும் விளக்கவுரை.

    பரிமேலழகர் உரையாழம்

    • குறட்பாவில் ‘என்பிலது’ என்றே இருக்க பரிமேலழகர் ‘உடம்பு’ என உரை கண்டதற்கான காரணத்தைச் சொல்கிறார். எலும்பு உடலுக்குள்ளேதான் இருக்கும். தனியாக எலும்பு செயல்படாது. இருக்கவும் இயலாது. எனவே ‘எலும்பு இல்லாதது’ என்பதனான் உடம்பு என்பதாக உணர்ந்து எழுதுகிறார்.  ‘என்பு தோல் போர்த்த உடம்பு’ எனப் பின்னும் கூறுவார் வள்ளுவர்.
    • அதுபோலவே ‘அன்பிலது’ என்றே இருக்க பரிமேலழகர் ‘உயிர்’ என உரைகண்டதற்கான காரணத்தைச் சொல்கிறார். உயிருக்குத்தான் அன்பு. உடம்பு அன்பு காட்டாது. அன்பு உயிர்ப்பண்பு. எனவே உயிரது பண்பாகிய அன்பில்லாதது எனத் திருக்குறள் குறிப்பதால் வள்ளுவர் குறிக்க எண்ணியது ‘உயிர்’ என்பதாக உணர்ந்து எழுதுகிறார்.
    • எலும்பு உடம்போடு தொடர்புடையது. அன்பு உயிரோடு தொடர்புடையது. ஒருத்தி திலகம் இல்லாமல் வந்தாள் என்றால் ‘நெற்றியில்’ என்பது பெறப்படும் அல்லவா? ஒருவன் ‘செருப்பில்லாமல் வந்தான்’ என்றால் காலில் என்பது பெறப்படுமல்லவா?. அவைபோல!
    • இந்தப் பாட்டில் அமைந்துள்ள ‘வெயில் என்பிலதனைக் காயும்’ என்னும் தொடரில் ‘வெயில்’ எழுவாயாகவும் ‘என்பிலது’ செயப்படுபொருளாகவும் ‘காயும்’ என்பது வினைமுற்றாகவும் அமைகிறது. அப்படி அமைந்தால் என்ன பொருளாகும் என்றால் எலும்பில்லாத ‘உடம்பு இருக்கும் இடம் தேடிச் சென்று வெயில் அதனைக் காயும்’ என்பது போல என்றாகிவிடும். வெயில் தானாக நடந்து சென்று எலும்பில்லாத உடம்பினைத் (புழுவை) தேடுமா? வெயில் இருக்கும் இடம் தேடித்தான் புழுவந்து மடியும். அதுவும் தேடாது. சாவதற்கு அதற்கு விருப்பமா என்ன? தானாக வந்து வீழ்ந்து மடியும்.
    • அதுபோலவே அன்பில்லாத உயிர்களை அறக்கடவுள் தேடிச் சென்று அழிக்காது. அன்பில்லாத உயிர்கள் அறவலைப்பட்டு அழியும்.
    • இவ்வாறு இவர் உரைகாண்பதற்கான காரணத்தை மிகத் துல்லியமாகப் பதிவுசெய்திருப்பதைக் காணலாம். வெயிலுக்கும் அறத்திற்குமான பொதுப்பண்பைச் சுட்டுகிறார். அது என்ன பொதுப்பண்பு? “வெறுப்பின்றி எங்கும் ஒரு தன்மைத்து ஆகிய வெயில்” என உவமத்தின் பண்பை விளக்கியவர் ‘அத்தன்மைத்தாய’ என்னும் சுட்டினால் அறத்தினை விளக்குவதைக் காணலாம். எனவே வெயிலோ அறமோ தானாகச் சென்று எதனையும் யாரையும் அழிக்காது. அவையிருக்கும் இடம் நாடிவந்து பிற அழியும். காரணம் அவ்வாறு வந்து வீழ்வது அவற்றுக்கு இயல்பு. அவை வீழ்வதற்குக் காரணம் வெப்பமும் அறக்கடவுளும். வெப்பத்திற்கு இரண்டு இயல்புகள். ஒன்று வெளிச்சம்! இரண்டு வெப்பம்!. வெப்பம் இல்லாத வெளிச்சம் உலகில் கிடையாது. வெளிச்சத்தை நாடி வரும் எலும்பில்லாத புழு வெப்பம் தாங்காது மடியும் என்பது கருத்து. (இக்கட்டுரையில் ‘என்பிலது’ என்பதற்குப் ‘புழு’ என உரைகண்டவர் கட்டுரையாளர் ‘என்பில்லாதது’ அதுவேயாதலின்)
    • வெப்பமும் அறமும் செயல்படவில்லை என்றால் எலும்பு இல்லாத உடம்பு மடிவதற்கும் அன்பில்லாத உயிர்கள் மடிவதற்கும் அவற்றை எப்படிக் காரணமாக்க முடியும் என்றால் பின்னிரண்டும் மடிவதாகிய உண்மையைக் கொண்டு அறியலாம். அவை மடிவதற்கு இவை காரணம். அதனால்தான் அதனைக் “காயும் என வெயில் அறங்களின் மேல் ஏற்றினார் என்று எழுதுகிறார்.
    • அறமாகிய பண்பினைக் ‘அறக்கடவுள்’ என்று எழுதுகிறார். அவ்வாறு தான் எழுதியமைக்குச் சான்று காட்டுகிறார். அறமாகிய பண்பைக் கூற்றுவனாக உருவகம் செய்வது இலக்கிய மரபு என்பதற்காகக்,

    “கல்லா ஒருவற்குத் தம்வாயில் சொல் கூற்றம்!
    மெல்லிலை வாழைக்குத்தான் ஈன்ற காய் கூற்றம்
    அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம், கூற்றமே
    இல்லிருந்து தீதொழுகு வாள்”

    என்னும் நாண்மணிக்கடிகைப் பாடலை எடுத்துக்காட்டித் தம் உரைக்கு வலு சேர்க்கிறார் பரிமேலழகர்.

    பரிமேலழகரின் உரை அருமை

    ‘வலை வீசி மீன் பிடித்தல்’ என்பது ஒன்று. ‘விரித்த வலையில் மீன்கள் வந்து விழுவது’ என்பது மற்றொன்று. இது உலகியல். முன்னது சென்று பிடித்தல். பின்னது வந்து விழுதல். குறட்பா வெயில் அறத்தைக் காய்வதாகவும் அறக்கடவுள் உயிரைக் காய்வதாகவும் சொல்கிறது. இது சென்றுபிடிப்பதைப் போல் உள்ளது. பரிமேலழகர் தம் நுண்ணியத்தால் (இயல்பல்லாத) அதனை மாற்றுகிறார். வெயிலும் அறமும் விருப்பு வெறுப்பு அறியாதது. ஒரே தன்மையாய் இயங்கும். அவற்றின் அந்த நடுநிலை வலைப்பரப்பில் என்பிலதும் அன்பிலதும் வந்து வீழ்ந்து மடிவதுதான் உண்மை. இந்த உண்மையைக் கண்டறிந்து கூறியவர் பரிமேலழகர்.

    சரி. வெயிலிருக்கும் இடந்தேடி வந்து வீழ்வது என்பிலதாகிய அஃறிணைக்கு வேண்டுமானால் சரியாயிருக்கலாம். மனிதனாகிய உயர்திணைக்குப் பொருந்துமா? பொருந்தும். எப்படி? தன் மனைவி கண்ணகியோடு உயிர்பிழைக்கச் சென்ற கோவலன் எந்தத் தவறும் செய்யாமல் மதுரையில் கொலை செய்யப்படுகிறான். சிலப்பதிகாரக் காப்பியத்தில் பரவலாக வலியுறுத்தப்படுகிற ஊழ் அல்லது விதியை இளங்கோவடிகள் இங்கேயும் காட்டுகிறார். ஆனால் எப்படிக் காட்டுகிறார் தெரியுமா? விதி புகாரில் பிறந்த கோவலனுக்கு மதுரையில் வலைவிரித்துக் காத்திருந்ததாம்! இவன் சென்று அதில் மாட்டிக் கொண்டானாம்! அடிகள் எழுதுகிறார்.

    “தீவினை முதிர் வலைச் சென்று பட்டிருந்த
    கோவலன் தன்னைக் குறுகினன்” (2705 -2706)

    இந்தச் ‘சென்றுபடுதலைத்தான்’ திருவள்ளுவர் என்பிலதனுக்கும் அன்பிலதனுக்கும் வினையாக்கி அந்த வினையை வெயில் மேல் ஏற்றிக் கூறுகிறார்.

    நிறைவுரை

    திருவள்ளுவர் உவமத்திலும் பொருளிலும் வெயிலின் வினை, அறக்கடவுள் வினை எனக் கூறியவற்றைப் பரிமேலழகர் ஒட்டுமொத்தமாக ‘விதியின் வினை’ என மாற்றிக் காட்டுகிறார். இதுவே இந்தப் பாட்டுக்கான அவருடைய உரையில் காணப்படும் நுண்ணியமாகும்.

    (தொடரும்)

    Share
  • (Peer Reviewed) கடிதொடர் இல்லை: தற்காலத் தொடரிலக்கண மீறல்களும் காரணங்களும்

    (Peer Reviewed) கடிதொடர் இல்லை: தற்காலத் தொடரிலக்கண மீறல்களும் காரணங்களும்

    தி. மோகன்ராஜ்
    முனைவர் பட்ட ஆய்வாளர்
    இலக்கியத்துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம்
    தஞ்சாவூர்

    இலக்கணமும் மீறல்களும்

    மொழியானது மாறும் தன்மைத்து. கால மாற்றம், சமூக மாற்றம், புறமொழித் தாக்கம் போன்ற பல காரணங்கள் மொழியின் மாற்றத்திற்கு வழிகோலுகின்றன. இவற்றை அகக்காரணங்கள், புறக்காரணங்கள் என்றும் நாம் பிரித்தறியலாம். இரண்டிற்கும் அடிப்படையாகப் பின்வரும் கருத்து அமைகிறது. மொழியானது மக்களின் எண்ணங்களை வெளியிட உதவும் கருவி என்னும் நிலையில், மக்கள் தாம் பேசும் மொழியில் அமைந்துள்ள மொழிக்கூறுகளைப் பயன்படுத்தியே தங்கள் கருத்துகளை வெளியிட முடிகிறது(தெ.பொ.மீ.,1985,ப.21). நுண்ணிய கருத்துகள் தோன்றும் நிலையிலும் புதிய கருத்துகள் ஏற்படும் நிலையிலும் அவற்றைத் தெளிவாக வெளிப்படுத்த இயலாத நிலையில் தம் மொழியில் காணப்படும் சில போதாமைகளைக் காலப்போக்கில் அம்மொழி பேசும் மக்கள் உணர்கின்றனர். அதன் காரணமாக, இரண்டு வகையான மாற்றங்களை மொழியில் புகுத்துகின்றனர். ஒன்று, புதிய மொழிக் கூறுகளை அறிமுகம் செய்வது. தமிழ்மொழியைப் பொறுத்தமட்டில் வான், பான், பாக்குப் போன்ற வினையெச்ச வடிவங்கள் தோன்றியமை இதற்குச் சான்றாகும். மற்றொன்று, ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டிற்கென்று வரையறுக்கப்பட்ட மொழிக்கூறு ஒன்றினை வேறோர் இடத்திற்கும் இட்டு நிரப்புவது. தமிழில் மரியாதை ஒருமைக்குப் பலர்பால் விகுதி பயன்படுகின்றமை இதற்குச் சான்றாகும். இம்மாற்றங்கள் எழுத்து நிலை, சொல்நிலை, தொடர்நிலை, மொழிக் கட்டமைப்பு நிலை என்று மொழியின் அனைத்துக் கூறுகளிலும் காலத்திற்குக் காலம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

    தமிழ்மொழியின் தோற்றம் உறுதியாக மதிப்பிடமுடியாத தொன்மைத்து. ஆகலின், அதன்கண் காலந்தோறும் மேற்கண்ட பல நிலைகளில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அம்மாற்றங்களை அவ்வக் காலங்களில் தோன்றிய இலக்கணங்கள் விதிகளாக ஏற்கவும் வழுவமைதியாகக் கொள்ளவும் வழுவெனப் புறந்தள்ளவும் என ஏதோவொரு வகையில் அவற்றின் மீது அக்கறை செலுத்தியுள்ளன. இது ஒப்பியல் நோக்கில் தமிழ் இலக்கணங்களை அணுகும்போது புலப்படும் (இராசாராம், 2010, ப. 12). சார்பெழுத்துகள் மூன்று என்று தொல்காப்பியம் இயம்ப அவற்றைப் பத்து என்று நன்னூல் கொண்டது மொழியில் ஏற்பட்ட எழுத்து நிலை மாற்றமாகும். சகரக் கிளவி அகரத்துடன் மொழி முதலாகாது என்று தொல்காப்பியம் வரையறுக்க, நன்னூல் அதனை ஏற்காதது சொல்நிலையில் ஏற்பட்ட மாற்றமாகும். செய்யும், செய்த என்னும் இரண்டு பெயரெச்ச வாய்பாடுகளை மட்டுமே தொல்காப்பியம் சுட்டிய நிலையில் இவற்றுடன் செய்கின்ற என்னும் வடிவத்தையும் நன்னூல் பெயரெச்ச வாய்பாடாகக் கொண்டது தொடரியல் மாற்றமாகும். தன்மை இடத்தை உயர்திணையாகத் தொல்காப்பியம் கொள்ள, நன்னூல் அதனை விரவுத்திணையாகக் கொண்டது மொழிக் கட்டமைப்பு நிலையில் ஏற்பட்ட மாற்றமாகும். இவையே அல்லாமல், மொழியின் அகராதி நிலையில் சொற்கள் அடைந்த மாற்றங்களும் உள. அவற்றைச் சொற்பொருள் மாற்றம் என்று வழங்குவர் (வரதராசன், 2015, ப. 126). இக்கட்டுரை, தற்காலத்தில் தமிழ்மொழியில் வழங்கப்படும் இலக்கண முறைப்படி அமையாத தொடர்களின் அமைப்புகள் சிலவற்றை ஆராய்ந்து அவற்றுக்கான காரணங்களையும் காண முற்பட்டுள்ளது. அவை கீழ்க்காணும் தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளன. இவை தற்காலப் பேச்சு வழக்கிலும் இலக்கியங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆகையால், தற்கால மொழியில் நிகழ்ந்துவரும் மாற்றங்களாகக் கருதப்படும் நிலையில் இவை நம் கவனத்திற்கு உரியவை ஆகின்றன.

    1. உயர்திணைப் பலர்பாலில் பால்வேறுபாடு உணர்த்தல்
    2. முன்னிலை வினையில் உயர்திணைப் பால்வேறுபாடு உணர்த்தல்
    3. குற்றியலுகரச் சிறப்புப் பெயர்களில் உகரம் கெடாமை
    4. உயர்திணைப் பெயர்கள் அஃறிணை ஒன்றன்பால் விகுதி ஏற்றல்
    5. அஃறிணைப் பன்மை வினை விகுதித் திரிபு

    1. உயர்திணைப் பலர்பாலில் பால்வேறுபாடு உணர்த்தல்

    தமிழில் சொற்களின் மீநிலைப் பகுப்பு, திணைகளின் அடிப்படையில் அமைந்திருப்பது வேறெந்த மொழியிலும் காணப்படாத சிறப்புத் தன்மையாகும். தொல்காப்பியச் சொல்லதிகாரத்தின் முதல் நூற்பா இந்தப் பகுப்பினைச் சுட்டுவது இச்சிறப்புத் தன்மையினை வலியுறுத்துவதாக உள்ளது(தொல்.சொல்.1). எனினும், உயர்திணையில் ஆண்பால் மற்றும் பெண்பால் மட்டுமே வினையில் பால் பிரிப்பினைத் தெளிவாகக் காட்டும். பலர்பாலில் ஆண்களைச் சுட்டும் பலர்பால், பெண்களைச் சுட்டும் பலர்பால், இருவரையும் ஒருங்கு சுட்டும் பலர்பால் என்னும் பிரிவு இல்லை.

    வா.1 : அவர்கள் வந்தார்கள்

    மேற்கண்ட வாக்கியத்தில் வந்தவர்கள் பலர் என்பது மட்டுமே அறியப்படும் நிலையில் அவர்கள் ஆண்கள் மட்டுமா, பெண்கள் மட்டுமா இருபாலாரும் கலந்த கூட்டமா என்ற வேறுபாடு உணர்த்தப்படவில்லை. இந்நிலையில் இந்த வேறுபாட்டினைக் காட்டுவதற்கு மொழியில் மாற்றம் செய்யப்படுகிறது. ஆண்பால் கூட்டத்தைக் குறிப்பிட விரும்பும் நிலையில்,

    வா.2 : அவனுங்க வந்தானுங்க

    என்று வழக்கில் பயன்படுத்தப்படுகிறது. வட்டார வழக்குகளில் சிற்சில திரிபுகள் காணப்படினும் அடிப்படை மாற்றம் ஒன்றாகவே உள்ளது. இதன் செம்மையான வடிவம் வா.3 ஆகும்.

    வா.3 : அவன்கள் வந்தான்கள்

    பெண்பால் கூட்டத்தைக் குறிப்பிட விரும்பும் நிலையில்,

    வா.4 : அவளுங்க வந்தாளுங்க

    என்னும் வாக்கியம் பயன்படுத்தப்படுகிறது. இதன் செம்மையான வடிவம் வா.5 ஆகும்.

    வா.5 : அவள்கள் வந்தாள்கள்

    இலக்கணங்களில் இவை வரையறுக்கப்படாத நிலையில் இம்மாற்றம் இலக்கண மீறல் ஆகும். எனினும், கருத்தைத் தெளிவாக வெளிப்படுத்த விரும்பும் நிலையில் தமிழ்ச் சமூகத்தால் இந்த மாற்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான அடிப்படைக் காரணம், பலர்பாலில் ஆண்பால், பெண்பால் வேறுபாடு மொழியமைப்பில் இல்லாதபோது அந்த வேறுபாட்டினைக் காட்டவிரும்பும் எண்ணமே ஆகும். வா.2’உம் வா.4’உம் பலர்பால் வாக்கியங்களாக இருப்பதுடன் அவை ஆண்பால், பெண்பாலைப் பிரித்துக்காட்டுவனவாகவும் அமைந்துள்ளன.

    2. முன்னிலை வினையில் உயர்திணைப் பால்வேறுபாடு உணர்த்தல்

    முன்னிலைப் பெயர்களும் வினைச்சொற்களும் திணை/பால் பாகுபாடு காட்டுவதில்லை. ஒருமை, பன்மை என்னும் எண் பாகுபாடு மட்டுமே காட்டுவன.  முன்னிலை ஒருமையில் ஆண்பால், பெண்பால் என்ற பாகுபாடு இல்லை. பொது ஒருமையாகவே அது உள்ளது. எனினும், தன்மை இடத்திலிருந்து பேசுவோர், முன்னிலை ஒருமை இடத்திலிருக்கும் கேட்போருடன் கொண்டுள்ள உறவுநிலையை உணர்த்தவும் முன்னிலை ஒருமையில் கேட்போரின் பால் வேறுபாட்டைச் சுட்டவும் விழைகின்றனர். இதன் காரணமாகத் தற்காலத் தமிழில் இலக்கணத்தில் வரையறுக்கப்படாத மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதாவது, முன்னிலை வினைமுற்றுடன் ‘–டா’, ‘-டி’, ‘-ப்பா’, ‘-ம்மா’ போன்ற ஒட்டுகள் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம், கேட்பவர் ஆணா பெண்ணா என்ற பாகுபாடு உணர்த்தப்படுவதுடன் பேசுவோருக்கும் கேட்போருக்கும் இடையிலான உறவுநிலையும் உணர்த்தப்படுகிறது.

    நீ கேளுடா / நீ கேளுடி / நீ கேளுப்பா / நீ கேளும்மா போன்ற வாக்கியங்களில் ‘-டா’, ‘-ப்பா’ என்னும் ஒட்டுகள் சேர்வதால், கேட்பவர் ஆண் என்று அறியப்படுவதுடன் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் இடையிலான வயது வேறுபாடு, நெருக்கம், மதிப்பு போன்றனவும் புலப்படுகின்றன. ‘-டி’, ‘-ம்மா’ என்னும் ஒட்டுகள் சேர்வதால் கேட்பவர் பெண் என்று அறியப்படுவதுடன் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் இடையிலான வயது வேறுபாடு, நெருக்கம், மதிப்பு போன்றனவும் புலப்படுகின்றன. இவை முன்னிலை ஒருமையில் நிகழும் மாற்றங்களாகும்.

    நீங்க கேளுங்கடா / நீங்க கேளுங்கடி / நீங்க கேளுங்கப்பா / நீங்க கேளுங்கம்மா போன்ற தொடர்களில் முன்னிலைப் பன்மை புலப்படுத்தப்படுவதுடன் கேட்பவர்கள் ஆண்களா பெண்களா என்னும் வேறுபாடும் உணர்த்தப்படுகிறது.

    மேற்கண்ட மாற்றம், பேச்சு வழக்கில் மட்டுமன்றி இலக்கியங்களிலும் இடம்பெற்றுள்ளமையைக் காணலாம்.

    ‘கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே’

    என்னும் அடியில் எடு என்னும் முன்னிலை ஒருமை வினைமுற்றுடன் ‘-டா’ ஒட்டுச் சேர்க்கப்பட்டுக் கேட்பவர் ஆண்பால்(தமிழன்) என்பது உணர்த்தப்பட்டுள்ளது.

    ‘சொல்லடி சிவசக்தி எனைச் சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்’

    என்னும் அடியில் சொல் என்னும் முன்னிலை ஒருமை வினைமுற்றுடன் ‘-டி’ ஒட்டுச் சேர்க்கப்பட்டுக் கேட்பவர் பெண்பால் (சிவசக்தி) என்பது உணர்த்தப்பட்டுள்ளது.

    ‘உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ என்பதும் இந்த மாற்றத்தைப் பெற்றுள்ளது. எனவே, இம்மாற்றம் வழக்கு, செய்யுள் என்று இருநிலைகளிலும் இடம்பெற்றுள்ளதை அறியலாம். மேலும், இந்த ஒட்டுகள் வினைமுற்றுடன் மட்டுமல்லாமல் சில வினாத்தொடர்களில் வினாச்சொல்லுடனும் சேர்ந்து வருகின்றன.

    நீ எதுக்குடா போன / நீ எங்கடி பார்த்த / நீ ஏன்ப்பா கொடுத்த / நீ எப்படிம்மா படிச்ச போன்ற வாக்கியங்களில் மேற்கண்ட ஒட்டுகள் வினைமுற்றுடன் அல்லாமல் வினாச்சொல்லான வினையடையுடன் இணைந்து வந்துள்ளன.

    இந்நிலையில், முன்னிலையில் பால்வேறுபாடு காட்டும் விகுதிகள் மொழியில் இல்லாத காரணத்தால் அந்த வேறுபாட்டினைக் காட்ட விழையும் நிலையில் இலக்கண மீறலாக மேற்கண்ட ஒட்டுகள் சேர்க்கப்படுகின்றன என்பதை அறியலாம்.

    3. குற்றியலுகரச் சிறப்புப் பெயர்களில் உகரம் கெடாமை

    குற்றியலுகரச் சொற்கள் உயிரெழுத்தில் தொடங்கும் ஐ, ஆல், ஒடு போன்ற வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது ஈற்றில் நிற்கும் குற்றியலுகரம் கெடும் என்பது இலக்கண விதியாகும் (நன். எழு. 164).

    முத்து + ஒடு – முத்தொடு. இதில் ஈற்றில் உள்ள குற்றியலுகரம் கெட்டுள்ளது. ‘முத்தொடு முழாக் கோத்து’ என்பர் இளம்பூரணர் (தொல். சொல். 73). இந்நிலையில், குற்றியலுகரப் பெயர்கள் சிலவிடங்களில் பொதுப் பெயராக(Common Noun) இல்லாமல் சிறப்புப் பெயராகவும் (Proper Noun) வழங்கப்படுகின்றன. அப்பெயர்கள் வாக்கியத்தில் இடம்பெறும்போது, அவை பொதுப் பெயர்களாக உள்ளனவா சிறப்புப் பெயர்களாக உள்ளனவா என்பதை வேறுபடுத்திக் காட்ட இலக்கண மீறலாக மொழியில் ஒரு மாற்றம் நிகழ்த்தப்படுகிறது. குற்றியலுகரப் பெயர் சிறப்புப் பெயராக இருக்கும் நிலையில், அது மேற்கண்ட வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது ஈற்றுக் குற்றியலுகரம் கெடாமல் ஏனைய உயிரீற்றுச் சொற்களைப் போன்று உடம்படுமெய் பெறுகிறது.

    நான் முத்தை வாங்கினேன் / நான் முத்துவைப் பார்த்தேன்.

    மேற்கண்ட வாக்கியங்களில் முதல் வாக்கியத்தில் உள்ள முத்து என்னும் சொல் பொதுப் பெயராக மணியின் ஒருவகையைக் குறிக்கின்றது. இரண்டாவது வாக்கியத்தில் உள்ள முத்து என்னும் சொல் உயிர்ப்பொருள் ஒன்றின் இடுகுறிப் பெயராக வந்துள்ளது. இதனைச் சிறப்புப் பெயர்(Proper Noun) என்று அழைப்பர். சிறப்புப் பெயர் குற்றியலுகர ஈற்றைக் கொண்டுள்ள போதிலும் இலக்கண மீறலாக அதன் உகரம் கெடாமல் உடம்படுமெய் பெற்று வந்துள்ளதைக் காணலாம். இம்மாற்றம் பொதுப்பெயர், சிறப்புப் பெயர் வேறுபாட்டினைப் புலப்படுத்த உதவுகிறது.

    நான் பூங்கொத்தை வாங்கினேன் / நான் இலக்கணக் கொத்துவை வாங்கினேன்.

    மேற்கண்ட வாக்கியங்களில் இரண்டாவது வாக்கியத்தில் உள்ள இலக்கணக் கொத்து என்னும் தொகைச்சொல் ஒரு குறிப்பிட்ட இலக்கண நூலினைச் சுட்டும் சிறப்புப் பெயராக வருவதால் இங்கும் இலக்கண மீறல் நிகழ்ந்துள்ளது.

    நான் அரசிடம் முறையிட்டேன் / நான் அரசுவிடம் முறையிட்டேன் என்னும்போதும் இந்த வேறுபாட்டை அறியலாம். எனினும், இம்மாற்றம் எல்லாக் குற்றியலுகரப் பெயர்களிலும் நிகழ்வதில்லை என்பதும் குறிப்பிடத்தகுந்தது. கீழ்க்காணும் வாக்கியம் பிழை வாக்கியமாகும்.

    *நான் என் தோழி முத்தழகுவைப் பார்த்தேன்

    மேற்கண்ட வாக்கியத்தில் முத்தழகு என்பது குற்றியலுகரச் சிறப்புப் பெயராக இருக்கும் நிலையிலும் இலக்கண மீறல் நடைபெறவில்லை. எனவே, இந்த மாற்றம் மேலும் ஆய்விற்குரியது.

    4. உயர்திணைப் பெயர்கள் அஃறிணை ஒன்றன்பால் விகுதி ஏற்றல்

    இது மொழியில் இயல்பாகக் காணப்படும் மாற்றமாகும். உயர்திணைப் பெயர்கள் (முறைப்பெயர்கள், சிறப்புப் பெயர்கள்) வாக்கியங்களில் இடம்பெறும்போது உயர்திணையில் ஆண்பால், பெண்பால், பலர்பால் விகுதிகளைக் கொண்டு முடியாமல் சில சூழல்களில் அஃறிணை ஒன்றன்பால் விகுதிகொண்டு முடிகின்றன.

    மாமா பாட்டு பாடுச்சு (மாமா பாட்டுப் பாடியது)

    அப்பா கோவிலுக்குப் போச்சு (அப்பா கோவிலுக்குப் போயிற்று)

    அண்ணன்  சாப்பிடுது (அண்ணன் சாப்பிடுகிறது)

    மேற்கண்ட வாக்கியங்கள் உயர்திணை முறைப் பெயர்கள் ஆயினும் அவை கொண்டுமுடியும் வினைமுற்றுகள் அஃறிணை ஒன்றன் பாலாக உள்ளன. இவ்வாக்கியங்கள் இலக்கணப்படி திணை வழு வாக்கியங்களாகும். எனினும், இவை மொழி பேசுவோரால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

    வெண்ணிலா பாட்டு பாடுச்சு (வெண்ணிலா பாட்டுப் பாடியது)

    சுரேஷ் சாப்பிடுது (சுரேஷ் சாப்பிடுகிறது)

    மேற்கண்ட வாக்கியங்களில் இடம்பெற்றுள்ள சிறப்புப் பெயர்கள் உயர்திணையைச் சுட்டுவனவாக இருப்பினும் வினைமுற்றுகள் அஃறிணை ஒன்றன் பாலில் உள்ளன. இம்மாற்றத்திற்குக் கீழ்க்காணும் காரணத்தைச் சுட்டலாம்.

    பேசுபவர், கேட்பவருடனும் பேசப்படுபவருடனும் கொண்டிருக்கும் உறவுநிலையைப் பொறுத்து இம்மாற்றம் நிகழ்கிறது எனலாம்.

    ‘அண்ணன் சாப்பிடுது’ என்னும் வாக்கியம் பேசுபவர், கேட்பவருடனும் பேசப்படுபவருடனும் (அண்ணன்) நெருங்கிய உறவு உடையவராக இருக்கும் நிலையை உணர்த்துகிறது. ‘அப்பா கோவிலுக்குப் போச்சு’ என்பதிலும் இதே நிலையை உணரலாம். எனினும், பேசுபவருக்கும் பேசப்படுபவருக்கும் உறவு நெருக்கம் இருந்தாலும் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் இடையில் உறவு நெருக்கம் இல்லாதபோது இம்மாற்றம் நிகழ்வதில்லை.

    முன்னிலையாகக் கேட்பவர் பேசுபவருக்கு யாரோ மூன்றாவது மனிதர் என்னும்போது, அண்ணன் சாப்பிடறார்/அப்பா கோவிலுக்குப் போனார் என்றே வாக்கியங்கள் அமைகின்றன. எனவே, இம்மாற்றத்திற்கான காரணம் பேசுபவர், கேட்பவர், பேசப்படுபவர் என்னும் மூவரைப் பொறுத்து அமைகிறது என்பது சிந்தித்தற்குரியது. இம்மாற்றத்திற்குத் தன்மை, முன்னிலை மற்றும் படர்க்கை ஆகிய மூவிடங்களின் உறவுநிலைகள் காரணமாக அமைகின்றன என்றும் விளக்கலாம்.

    5. அஃறிணைப் பன்மை வினை விகுதித் திரிபு

    அஃறிணைப் பன்மைப் பெயர்கள் அஃறிணைப் பன்மை விகுதிகொண்டு முடியவேண்டும் என்பது இலக்கணமாகும். எனினும், தற்போது அஃறிணைப் பன்மை விகுதி, இலக்கிய வழக்காக அல்லது மேடைப்பேச்சு வழக்காக மட்டும் கருதப்படுகின்ற நிலையில் பேச்சு வழக்கில் பன்மை உணர்த்தும் விகுதி இடம்பெறுவதில்லை. வினைப்பகுதி மற்றும் கால இடைநிலை மட்டும் காட்டும் வினைமுற்றுகளையோ (1), அஃறிணை ஒன்றன்பால் விகுதிகொண்ட வினைமுற்றுகளையோ(2), அஃறிணை ஒன்றன்பால் வினைமுற்றுடன் ‘கள்’விகுதி சேர்ந்த வினைமுற்றுகளையோ(3) அவ்வாக்கியங்கள் கொண்டுள்ளன.

    எங்கிட்ட பத்து மாடுங்க இருக்கு

    மேற்கண்ட வாக்கியத்தில் வினைமுற்று, வினைப்பகுதி(இரு) மற்றும் கால இடைநிலை மட்டும் பெற்றுப் பன்மை விகுதி இல்லாமல் வந்துள்ளது. அதிலும் காலம் காட்டும் இடைநிலை (கிறு/கின்று) திரிந்துள்ளது.

    எங்க ஊர்ல நிறைய ஆறுங்க ஓடுது

    மேற்கண்ட வாக்கியத்தில் ஓடுகின்றன என்னும் பலவின்பால் வினைமுற்றுக்குப் பதிலாக ஓடுது என்னும் ஒன்றன்பால் வினைமுற்று இடம்பெற்றுள்ளது.

    காட்டுல ஆடுங்க மேயுதுங்க / மேயுதுக

    மேற்கண்ட வாக்கியத்தில் ஒன்றன்பால் வினைமுற்றுடன் (மேயுது) ‘கள்’ விகுதி சேர்ந்து பலவின்பால் உணர்த்தப்பட்டுள்ளது.’கள்’ விகுதி திரிபடைந்திருப்பதும் உணரத்தக்கது.

    மேற்கண்ட மூன்று வாக்கியங்களும் இலக்கண நிலையில் முறையே இருக்கின்றன என்றும் ஓடுகின்றன என்றும் மேய்கின்றன என்றும் வினைமுற்றுகளைப் பெற்றிருத்தல்வேண்டும். எனினும், அந்த வாக்கியங்களில் உள்ள மற்ற கூறுகள் பேச்சு வழக்கில் இருக்கும் நிலையில், எங்கிட்ட பத்து மாடுங்க இருக்கின்றன என்றும் எங்க ஊர்ல நிறைய ஆறுங்க ஓடுகின்றன என்றும் காட்டுல ஆடுங்க மேய்கின்றன என்றும் கூறும்போது வினைமுற்று மட்டும் இலக்கிய நடை அல்லது மேடைப்பேச்சு நடையில் இருக்க மற்ற கூறுகள் பேச்சு வழக்கில் அமையும் முரண்பாடு தோன்றுகிறது. இந்த முரண்பாட்டைத் தவிர்ப்பதற்கு வினைவிகுதி மேற்கண்டாவாறு மூன்று நிலைகளில் திரிபடைகிறது.

    இதுவரை கண்ட தற்காலத் தொடரிலக்கணத்தில் காணப்படும் ஐந்து வகையான இலக்கண மீறல்களையும் அவற்றுக்கான காரணங்களையும்  கீழ்க்காணுமாறு பட்டியலிடலாம்.

    வ.எண்

    இலக்கண மீறல் காரணம் சான்று
    1 உயர்திணைப் பலர்பாலில் பால்வேறுபாடு உணர்த்தல் பலர்பாலில் ஆண்களைச் சுட்டும் பலர்பால், பெண்களைச் சுட்டும் பலர்பால் என்னும் வேறுபாட்டை உணர்த்த விரும்புதல் அவனுங்க வந்தானுங்க / அவளுங்க வந்தாளுங்க
    2 முன்னிலை வினையில் உயர்திணைப் பால்வேறுபாடு உணர்த்தல் முன்னிலை வினைகள் ஆண்பால், பெண்பால் பாகுபாடு பெறாத நிலையில் அவ்வேறுபாட்டினை உணர்த்த விரும்புதல் நீ கேளுடா /           நீ கேளுடி
    3 குற்றியலுகரச் சிறப்புப் பெயர்களில் உகரம் கெடாமை பொதுப்பெயர் சிறப்புப் பெயர் வேறுபாட்டினை உணர்த்த விரும்புதல் நான் முத்தை வாங்கினேன் /   நான் முத்துவைப் பார்த்தேன்
    4 உயர்திணைப் பெயர்கள் அஃறிணை ஒன்றன்பால் விகுதி ஏற்றல் பேசுவோர், கேட்போர், பேசப்படுவோர் ஆகியோருக்கு இடையிலான உறவுநிலையை உணர்த்த விரும்புதல் அப்பா சாப்பிடுது / வெண்ணிலா பாட்டு பாடுது
    5 அஃறிணைப் பன்மை வினை விகுதித் திரிபு பேச்சு வழக்கினுள் இலக்கிய வழக்கு அல்லது மேடைப்பேச்சு வழக்கினைத் தவிர்த்தல் எங்கிட்ட பத்து மாடுங்க இருக்கு / எங்க ஊர்ல நிறைய ஆறுங்க ஓடுது / காட்டுல ஆடுங்க மேயுதுங்க

    நாம் மேலே குறிப்பிட்டது போன்று, மக்கள் தம் மொழியில் அவ்வப்போது உணரும் போதாமைகளால் மொழியில் சில மாற்றங்களைப் புகுத்துகின்றனர் என்பதை மேற்கண்ட ஐந்து வகையிலான தொடரிலக்கண மீறல்களின் வழியாக அறியமுடிகிறது. இவை இலக்கண மீறல்கள் என்ற போதிலும் கருத்தைத் தெளிவாக உணர்த்த விரும்பும் விழைவே இம்மாற்றங்களுக்குத் தூண்டுகோலாக அமைகிறது. மொழியானது இலக்கண வரம்புடையது என்றாலும் அது கருத்துப் புலப்பாட்டுக் கருவி என்னும் நிலையில் காலத்திற்கு ஏற்பப் புலப்பாட்டுத் தேவைகளால் மக்களால் மாற்றி அமைக்கப்படுகிறது. தற்காலத் தமிழ் மொழிக்கான இலக்கணங்களை வரையறுக்க முற்படும் நிலையில் இவை போன்ற வேறு பிற மாற்றங்களையும் அவற்றுக்கான அக மற்றும் புறக் காரணங்களையும் கண்டறிதல்வேண்டும்.

    துணையன்கள்

    1. இராசாராம். சு., ‘இலக்கணவியல்: கோட்பாடுகளும் மீக்கோட்பாடுகளும்’, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 2010

    2. தெ.பொ.மீ., ‘மாற்றிலக்கணம்’, சர்வோதயா இலக்கியப் பண்ணை, மதுரை, 1985

    3. தொல்காப்பியம் சொல்லதிகாரம், இளம்பூரணர் உரை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1988

    4. நன்னூல், எழுத்ததிகாரம், ஆறுமுக நாவலர் உரை, முல்லை நிலையம், சென்னை,1994

    5. வரதராசன். மு., ‘மொழிநூல்’, பாரி நிலையம், சென்னை, 2015


    ஆய்வறிஞர் மதிப்புரை (Peer review):

    தமிழ் இலக்கணங்களில் காலந்தோறும் ஏற்பட்ட மாற்றங்களை வரலாற்று நிலையில் விளக்கி, தற்காலப் பேச்சு வழக்கிலும் இலக்கியங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்ற தொடர்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இக்கட்டுரை கவனப்படுத்துகின்றது. குறிப்பாகத் தற்காலத் தொடரிலக்கண மீறல்களை ஐந்து பிரிவுகளாகப் பகுத்து, அவற்றிற்குரிய காரணங்களைச் சான்றுகள் மூலம் கட்டுரையாளர் மிகத் தெளிவாக விளக்குகின்றார். ஆய்வாளருக்குப் பாராட்டுகள். 


    Share
  • பஞ்சபூதேஸ்வரி நீலாயதாக்ஷி

    பஞ்சபூதேஸ்வரி நீலாயதாக்ஷி

    நாகை ராமஸ்வாமி

    பஞ்சாஷத் பீடரூபிணீ பஞ்சபூதேஸ்வரி நீலாயதாக்ஷி
    பஞ்சாக்க்ஷரன் நாயகி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி ஶ்ரீலலிதே

    வானின் வண்ண நிலவு வெட்கியது நின்னழகில்
    ஆதவனும் தயங்கினான் நின்னருட் பிரகாசமதில்

    நெஞ்சமதில் வாசமிட்டு நீரூற்றாய்க் குளிரவைக்கும்
    பஞ்சபூதமும் தஞ்சமடையும் கருணாகடாக்ஷி காமாக்ஷி

    கார்கொண்டு நீர்பொழிந்து தாகம் தீர்த்தாய் உன்
    பேர்சொல்லி நின்புகழ் பாடச் செய்தாய்

    ஆதியாய் பராசக்தியாய் அண்டமெலாம் சக்திதந்தாய்
    பாதியிலும் பேர்பெற்றுப் பாரெங்கும் போற்றவைத்தாய்

    உயிர்க்காற்றில் உன்நாமம் சொல்லவைத்தாய்
    பயிர்வளர்த்து உணவாக்கிப் பசிதீர்த்தாய்

    புவியதனில் பிறந்தோர் புண்ணியம்கிட்ட
    புவனேஸ்வரி புகலிடமேது நின்னடி நிழலன்றி

    பஞ்சவக்த்ராஸ்தி ஸம்ஸ்திதா பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
    பஞ்சாஷத் பீடரூபிணீ பஞ்சபூதேஸ்வரி நீலாயதாக்ஷி
    வஞ்சகனும் நலமுற வாழவைப்பாய் வேண்டினமே

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-33

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-33

    தி. இரா. மீனா

    இலத்தேய சோமய்யா

    ’இலத்தேய சோமய்யன’ என்பது இவரது முத்திரையாகும்.

    “காயகம் எதுவாக இருப்பினும் தன்காயகமெனக் கருதி
    குரு இலிங்கம் ஜங்கமத்தின்  முன்வைத்து
    பிரசாதம் அர்ப்பணித்து. மிஞ்சியதை எடுத்து
    நோயால் வருந்தி, வலியால் கதறி
    மூச்சு நின்றால் இறந்து போ, இதற்கேன் கடவுளின் உதவி,
    பாபு இலத்தேய சோமனே?“

    வசனபண்டாரி சாந்தராசா

    இவர் கல்யாண் நகரத்தைச் சேர்ந்த சரணர்கள் இயற்றிய வசனங்க ளைத் தொகுத்து வைத்த வசன நூல் காப்பகத்தின் [வசன பண்டாரா] மேற்பார்வையாளராக இருந்தவர். வசனங்களை எழுதிக் கொள்வதும், சேகரிப்பதும், பாதுகாப்பதும் இவரது காயகமாக இருக்க வேண்டும். அந்தணராக இருந்த இவர் பசவேசரின் தொடர்பிற்குப் பிறகு சரணரானார் என்று கூறப்படுகிறது. ’அலோக்கனாத சூன்ய கல்லினொளகாத’ இவரது முத்திரையாகும்.

    “மலத்தை அப்புறப்படுத்தலாமே தவிர
    மும்மலங்கள் அல்லாததை அகற்றுவதா ஐயனே?
    பேசமுடியுமேயன்றி சிவனை அறிய முடியுமா ஐயனே?
    பணியாற்ற முடியுமேயன்றி பகைவருடன் சேரமுடியுமா ஐயனே?
    போர் வகையைப் பேசமுடியுமேயன்றி போரிட முடியுமா ஐயனே?
    சொல் சேர்த்துப் பாடம் சொல்பவர் சிவனை அறிவாரோ?
    இச்சொல்லின் சொல்லுக்கஞ்சி
    அலோகநாத சூன்ய கல்லொளகே ஆனேன் கேளாய்”

    வீரகொல்லாளா

    இவர் இயற்பெயர் காட்டகூட்ட. இவரின் காயகம் ஆடு மேய்ப்பது. ’வீர பீரேஸ்வர’ இவரது முத்திரையாகும்.

     “கல் இலிங்கமல்ல, உளியின் முனையில் உடைந்தது
    மரம் கடவுளல்ல, தீயில் கருகியது
    மண் கடவுளல்ல, நீரில் கரைந்தது.
    இத்தனையும் அறிகின்ற அறிவு கடவுளல்ல
    ஐம்பொறிகளுட்பட்டு ஆற்றலிழந்தது
    எஞ்சிய மகாலிங்கம் யாதெனில்
    கண்டவர்களோடு கொண்டாடாமல்
    கொண்ட ஒழுக்கத்தில் மற்றொன்றுடன் இணையாமல்
    நம்பிக்கை பெற்று நிற்பதால் நிஜலிங்கமன்றி
    மற்றது மற்றதை அறியா நிலையில் நின்றவனே
    சர்வாங்கலிங்கன் வீரபீரேஸ்வரலிங்கத்துக்கு ஆட்பட்டவன்

    வேதமூர்த்தி சங்கண்ணா

    ’லலாம பீம சங்கமேஸ்வர இலிங்க’ இவரது முத்திரையாகும்.

    “பொழுதறிந்து குரலெழுப்பும் சேவலுக்கு எத்தகைய அறிவது?
    இனிப்பின் இடமறியும் எறும்புக்கு எத்தகைய அறிவது?
    தானுண்ணாமல் குட்டியைக்காக்கும் பன்றிக்கு எத்தகையஅறிவது?
    இத்தகு உயிரின் வித்தைகள் எல்லாம் ஞானத்துள் அடங்கும்
    அறிந்து நடப்பவன் வேதம் அறிந்தவனாவான்
    அறிந்து நடப்பவன் சாத்திரத்திற்கு உறவாவான்
    அறிந்து நடப்பவன் புராண நற்பேற்றினன்
    அறிந்து நடப்பவன் ஆகமங்களின் செல்வன்
    ஐந்தெழுத்து ஆறெழுத்திற்கு இதுவே நிலையாம்
    உலகின் மூலமானவனை அறிந்து
    சோஹம் கோஹம் அறிந்து [தானெனும் செருக்கு
    அவ்வுண்மையை மகாலிங்க உடலென உறுதி செய்து
    பேசி நடக்க முடிந்தவனே வேதமறிந்தவன் காணாய்
    லலாம பீமசங்கமேஸ்வர இலிங்கமான அடியான்“

    வைத்திய சங்கண்ணா

    ’மருள சங்கர பிரிய சித்தராமேஸ்வரா’ இவரது முத்திரையாகும்.

    “வாழைக்கு விளைச்சல் ஒன்றே; பக்தனுக்குப் பேச்சொன்றே
    பற்றற்று மீண்டும் பற்றினால் செத்த நாயின் நாற்றமது
    நித்தியக் கடன் தவறி, மீண்டும் நற்செயலாற்றி
    தீவழி நடந்து மீண்டும் செல்வம் கொடுத்து
    உயர்பக்தரிடம் தவறு திருத்திக் கொண்டேனெனும்
    அந்தணரைக் கண்டால்
    மருளசங்கர பிரியன் சித்தராமேஸ்வரன்
    இலிங்கமானாலும் சேர விரும்ப மாட்டான்“

    சங்கர தாசிம்மையா

    ’நிஜகுரு சங்கரதேவ’ இவரது முத்திரையாகும்.

    “சாதுவான மான், காகம், குயில் போலிருக்க வேண்டாமோ?
    வீணே அலைந்து திரியும் நீசரின் மாசினைப் பாராய்
    பகலிரவென அலைபவரைக் கண்டு அருவருப்பானேன்
    அறிந்தால் சரணர், மறந்தால் மனிதர்
    குப்பைக் கூளங்களை ஊர்தோறும் சுமந்து விற்கின்ற
    காவி உடுத்தியவரை விரும்பான் நிஜகுரு சங்கரதேவன்“

    சிவநாகமய்யா

    ’நாகப்பிரிய சென்ன ராமேஸ்வரன்’ இவரது முத்திரையாகும்.

    “உடலில் இலிங்கமிருக்க ஈனரோடிணையக் கூடாது
    உடலில் இலிங்கமணிந்த பிறகு
    இலிங்க முதன்மையோடு செயல்பட வேண்டுமேயன்றி
    அங்கத்தை முதன்மையாக்கக் கூடாது
    இலிங்கமொடு உறவாகி அங்கத்தை முன்னிலைப்படுத்துவோர்
    இலிங்கத்துக்கு தூரமய்யா நாகப்பிரிய சென்னராமெஸ்வரனே.”

        [தொடரும்]

    Share
  • பரிமேலழகர் உரைத் திறன் – 1

    பரிமேலழகர் உரைத் திறன் – 1

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    விலங்குகளும் வித்தகரும் ஒன்றா?

    முன்னுரை

    காலத்தால் முற்பட்டிருப்பது எப்படி பெருமையோ அப்படியே காலத்தால் பிற்பட்டிருப்பதுமாகும். தடந்தெரியாத் தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர் தடங்காட்டினார் என்றால் பின்னாலே வந்த நச்சினார்க்கினியர் அத்தடத்தைச் செப்பனிடும் வாய்ப்பினைப் பெற்றார். பெறவே அப்படிச் செப்பனிடுவதற்குரிய பன்னூல் அறிவு பெறும் வாய்ப்பும் அவருக்குக் கிட்டியது. அதனால் தொல்காப்பியம், பத்துப்பாட்டு முதலிய நூல்கள்மேல் கூடுதல் ஒளி பாய்ந்தது. திருக்குறள் உரையாசிரியர்கள் பதின்மரில் இறுதியானவர் பரிமேலழகர். அதனால் தன்னுடைய முன்னோடிகள் எழுதிய ஒன்பது உரைகளையும் நோக்கியறியும் அரிய வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. அவருக்குக் கிட்டிய அந்த வாய்ப்பு ஏனையோருக்குக் கிட்டவில்லை. அது இயற்கை நியதி. கிட்டிய அந்த வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்தி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இன்றைக்கும் நிமிர்ந்து நிற்கும் குன்றா(க) உரையெழுதினார் பரிமேலழகர். அன்னாருடைய உரையருமையைத் துளித் துளியாகப் பதிவிடுவது நலம் பயக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் இந்தத் தொடர் வடிவமைக்கப்படுகிறது.

    விளக்கத்திற்குரிய குறட்பாவும் அதிகாரப் பொருண்மையும்

    திருவள்ளுவர் மெய்யுணர்தலை அறத்துப்பால் துறவறவியலிலும் அறிவுடைமையைப் பொருட்பால் அரசியலிலும் வைத்த காரணம் பற்றிய ஆய்வு பின்னாளில் தொடரும். ‘கல்லாமை’ என்னும் அதிகாரத்தில் இறுதிக் குறட்பாவாக அமைந்த,

    “விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
    கற்றாரோடு ஏனை யவர்” 1

    என்னும் குறட்பாவின் உரை அருமையே இக்கட்டுரையில் விளக்கப்படுகிறது. பரிமேலழகரின் குறளுரையருமையைப் புரிந்து கொள்வதற்கு முன்னால் அதிகாரம் ‘கல்லாமை’ என்னும் பெயர் தாங்கியது என்பதை நோக்க வேண்டும். ‘கல்லாமை’ என்பது ‘கற்றலைச் செய்யாமை’ என்னும் தொழிலைக் குறித்தது. ஆனால் அவ்வதிகாரத்தில் அமைந்துள்ள பத்துக் குறட்பாக்களும் கல்லாமையாகிய தொழிலைப் பற்றிப் பேசாது கல்லாமையினால் வரும் இழிவை, அதாவது கல்வியில்லாதவன் சமுதாயத்தில் படும் மானக்கேடுகளையும் துன்பங்களையும் குறிப்பனவாகவே அமைந்துள்ளன. சுருங்கச் சொன்னால் அதிகாரத் தலைப்பு தொழிலைக் குறிப்பதாக அமைய அதிகாரப் பொருண்மையோ அதனால்வரும் இழிவுகளைத் தொகுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது. அதாவது கல்லாமை கற்றலைச் செய்யாமையான் வரும் இழிவு என ஆகுபெயராய் நின்றது. குறட்பாக்களை முற்றோதிய பரிமேலழகர் இந்த நுட்பத்தைப் புரிந்து கொண்டு,

    “அஃதாவது (கல்லாமை) கற்றலைச் செய்யாமை என்றது, அதனின் ஆய இழிபினை” 2

    என்று சொல் விளக்கம் தருகிறார். அதிகாரத்தின் சொற்பொருள் விளக்கத்திலேயே பரிமேலழகரின் ‘உரைத்தாண்டவம்’ தொடங்கிவிடுவதைக் காணலாம்.

    பரிமேலழகரின் உரை விளக்கம்

    இந்தக் குறட்பாவைப் பரிமேலழகர் வழக்கம் போல் சீர்பிரித்து உரை கூறியிருக்கிறார். “விலங்கொடு மக்கள் அனையர்” என்னும் தொடருக்கு “விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையவர்” (அத்துணை தீமையுடையவர்) “இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர்” என்னும் தொடருக்கு விளங்கிய நூலைக்கற்றாரோடு நோக்கக் கல்லாதவர்”3 என்னுமாறு அவருடைய சீர் பிரிப்பும் பொழிப்புரையும் அமைந்திருக்கிறது. பரிமேலழகர் தம் உரைப்பகுதியில் யாண்டும் பதவுரை கூறும் வழக்கமிலர் என்பது ஈண்டுக் குறிக்கத்தக்கது.

    கட்டுரையாளர் விளக்கம்

    மேற்கண்ட பத்தியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் உரைப்பகுதியில் அடைப்புக்கள் கொடுக்கப்பட்டிருப்பது பரிமேலழகர் தாம் கொண்ட கருத்திற்கேற்ப வருவித்துக் கொண்ட தொடர். இதற்கான தொடர் குறட்பாவில் இல்லை. பாட்டில் உவமங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கான கருத்தியலைத்தான் பரிமேலழகர் இப்படிப் பதிவிட்டிருக்கிறார்.

    குறட்பாவின் அமைப்புச் சிக்கல்

    குறட்பாவில் விலங்கொடு மக்களை ஒப்பிட்டிருக்கும் முதற்பகுதிக்கு இணையாகக் ‘கற்றாரோடு ஏனையவர்’ என்னும் மறுபகுதி தரப்பட்டுள்ளது. குறட்பாவில் உள்ள இவ்வண்ணமே நிரல்படுத்தினால் ‘விலங்கொடு’ என்பதற்கு ‘கற்றாரோடு’ என்பதும் ‘மக்கள்’ என்பதற்கு ‘ஏனையவர்’ (கல்லாதவர்) என்பதும் பொருத்தமாக்க வேண்டியதிருக்கும். அப்படி அமைத்தால் பாட்டின் பொருள் இப்படி அமைந்துவிடும்.

    “விலங்கொடு மக்கள் இணையாவார். (அதுபோலக்) கற்றவர் கல்லாதவரோடு இணையாவார்” என்று அமைந்து ‘கற்றவர் விலங்குகள்’ என்றும் ‘கல்லாதவர் மக்கள்’ என்றும் பொருள்படும்”

    இப்படி அமைந்தால் அதிகாரப் பொருண்மையாகிய கல்லாமையது இழிவு சுட்டாததோடு முரண்பட்ட பொருளையும் தந்துவிடும் என்பதை அறியலாம்.

    நிரல் நிறை – பொருள்கோளா? செய்யுளணியா?

    நிரல்நிறை, சுண்ணம், அடிமறி, மொழிமாற்று என்னும் நான்குவகைப் பொருள்கோளை மட்டும் தொல்காப்பியம்,

    “அவற்றுள் நிரல்நிறை தானே
    வினையினும் பெயரினும் நினையத்தோன்றி
    சொல்வேறு நிலைஇப் பொருள் வேறு நிலையல்” 4

    என்னும் நூற்பாவில் ஆராய்ந்திருக்கிறது. செய்யுள் தொடர்பான இந்த ஆராய்ச்சி சொல்லதிகார எச்சவியலில் நிகழ்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இனி, இதற்கு அடுத்த நிலையில் ஆற்றுநீர், மொழிமாற்று, நிரல்நிறை, விற்பூட்டு, தாப்பிசை, அளைமறிபாப்பு, கொண்டு கூட்டு, அடிமறி மாற்று எனப் பொருள்கோளை எட்டாக ஆராய்ந்திருக்கும் நன்னூலார் ‘நிரல்’ என்பதைப்,

    “பெயரும் வினையுமாம் சொல்லையும் பொருளையும்
    வேறு நிரல்நிறீஇ முறையினும் எதிரினும்
    நேரும் பொருள்கோள் நிரனிறை நெறியே” 5

    என்னும் நூற்பாவில் ஆராய்ந்திருக்கிறது. இந்த நூற்பாவில் தான் ‘எதிர்நிரல் நிறை’ என்னும் தொடர் பயின்று வந்துள்ளது. இந்த எதிர்நிரல் நிறையணியை (கட்டுரைப் பொருள் விளக்கத்திற்கு மட்டுமாதலின் நேர்நிரல்நிறை விளக்கம் கட்டுரையாளரால் தவிர்க்கப்படுகிறது) விளக்க வந்த சங்கர நமசிவாயர்,

    “ஆடவர்கள் எவ்வாறு அகன்றொழிவார்? வெஃகாவும்
    பாடகமும் ஊரகமும்  பஞ்சரமா – நீடியமால்
    நின்றான் இருந்தான் கிடந்தான் இதுவன்றோ
    மன்றுஆர் மதிற்கச்சி மாண்பு? 6

    என்னும் வெண்பாவை எடுத்துக் காட்டியிருக்கிறார். இந்த வெண்பாவில் வெஃகா, பாடகம், ஊரகம் என்னும் மூன்று பெயர்களும் நின்றான் இருந்தான் கிடந்தான் என முறைமாறி நிற்க, இவற்றை பெயர்ப்பயனிலைகளும் வினைப் பயனிலைகளுமாய் நின்ற எதிர் நிரல் நிறை என எழுதுகிறார். 7 வெஃகாவில் கிடந்தான், பாடகத்தில் இருந்தான், ஊரகத்தில் நின்றான் என்னும் பொருத்தத்தை இதே வெண்பாவை எடுத்துக்காட்டி உரையெழுதும் தண்டியலங்கார உரையாசிரியர் சுப்ரமணிய தேசிகர் ‘நிரலே நிறுத்தி மாற்றிப் பொருள் கொள்வது’ என எழுதியமைகிறார். தண்டியலங்காரத்தில் ‘எதிர் நிரல்நிறை’ அல்லது ‘மயக்க நிரல்நிறை’ என்னும் சொல்லாட்சிகள் பயிலப்பட்டிருப்பதாக அறியக் கூடவில்லை. இன்றியமையாக் கருத்து என்னவெனின் நன்னூலில் பொருள்கோள். தண்டியலங்காரத்தில் பொருளணி.

    யாப்பருங்கலக் காரிகை நூலாசிரியர், ‘பொருள்கோள்’ என ஒருசொல் உரைத்து ஒழிய, உரையாசிரியர் குணசாகரரோ “நிரல்நிறை மொழி மாற்றம், சுண்ணமொழி மாற்றம், அடிமொழி மாற்றம், பூட்டுவிற் பொருள்கோள், புனல்யாற்றுப் பொருள்கோள், அளைமறி பாப்புப் பொருள்கோள், தாப்பிசைப் பொருள்கோள், கொண்டு கூட்டுப் பொருள்கோள் என எட்டு வகையாக ஆராயப்படும் என உரையெழுதி,

    “நிரனிறை இரண்டு வகைப்படும் பெயர் நிரல் நிறை, வினை நிரல்நிறையும் என” 8

    அதன் வகைகளைப் பதிவு செய்திருக்கிறார். காரிகையாசிரியர் தொல்காப்பியம், நன்னூல் ஆகிய நூல்களைப்போல இதுபற்றி ஏதும் கூறவில்லை. நிரல்நிறை அணிகளுக்கு எடுத்துக்காட்டுக்களைக் காட்டும் குணசாகரர்,

    “இனி முறை நிரல் நிறை, எதிர் நிரல் நிறை, மயக்க நிரல்நிறை, மிகையெண் நிரல்நிறை, குறையெண் நிரல் நிறை என்று கொள்வாரும் உளர்” 9

    என்றும் கூறுகிறார். இங்கே இவர் காட்டிய இத்தனை நிரல் நிறைகளுக்கும் பொதுவாக இரண்டு பாடல்களை மட்டும் காட்டியதோடு பொருள்கோளைப் பற்றிய குணசாகர் தனது விளக்கத்தை முடித்துக் கொள்கிறார்.

    அணியிலக்கணம் ஆராயும் வடமொழிச் சார்பு நூலான தண்டியலங்காரத்தில் நிரல்நிறை என்பது செய்யுளுக்கான பொருளணியாகவே கொள்ளப்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது.

    “நிரல்நிறுத்து இயற்றுதல் நிரல் நிறை யணியே” 10

    என்னும் அணியிலக்கண நூற்பாவிற்கு உரையெழுதிய தேசிகர்,

    “சொல்லையும் பொருளையும் நேரே நிறுத்தி நேரே பொருள் கொள்வது நிரல் நிறையணி என்னும் அலங்காரமாம். நிரல் நிறுத்துதல் என்னாது ‘இயற்றுதல்’ என்றமையின் மொழிமாற்றிப் பொருள் கொள்வதூஉம் கொள்க” 11

    என்று நூற்பாவிற்கு உரையெழுதி அவ்விரண்டற்கும் பின்வரும் நேரிசை வெண்பாக்களை எடுத்துக் காட்டியிருக்கிறார்.

    “காரிகை மென்மொழியால் நோக்கால் கதிர்முலையால் வார்புருவத்தால் இடையால் வாய்த்தளிரால் – நேர் தொலைந்த
    கொல்லி வடிநெடுவேல் கோங்கரும்பு விற்கரும்பு
    வல்லி கவிர்மென் மலர்” 12

    என்னும் வெண்பாவில் மென்மொழி, நோக்கு, கதிர்முலை, புருவம், இடை, வாய் எனப் பொருட்களை முன்னர் நிறுத்தி, அவற்றுக்கு நிரலாகக் கொல்லிப்பண், நெடுவேல், கோங்கரும்பு, கரும்புவில், கொடி, மலர் என உவமங்களைப் பின்னர் நிறுத்தி, நேர் நிரல் நிறை என விளக்கம் தருகிறார்.13 அதாவது பொருளின் நிரலுக்கு ஏற்ப (வரிசைக்கு ஏற்ப) உவமங்களின் நிரலும் அமைவதால் இது நேர் நிரல் நிறை அணி என்று பெயராம். இனி,

    “ஆடவர்கள் எவ்வாறு அகன்றொழிவார்? வெஃகாவும்
    பாடகமும் ஊரகமும்  பஞ்சரமா – நீடியமால்
    நின்றான் இருந்தான் கிடந்தான் இதுவன்றோ
    மன்றுஆர் மதிற்கச்சி மாண்பு?”14

    என்னும் (சங்கர நமசிவாயர் காட்டிய அதே) வெண்பாவில் வெஃகா, பாடகம், ஊரகம் என்னும் காஞ்சித் திருப்பதிகளில் வீற்றிருக்கும் பெருமாளின்  கோலங்கள் நின்றான், இருந்தான், கிடந்தான் எனக் கூறப்பட்டுள்ளன. இது முந்தைய திருப்பதிகளில் எழுந்தருளியிருக்கும் கோலங்களுக்கு முரணானது. இவை வெஃகாவில் கிடந்தான், பாடகத்தில் இருந்தான், ஊரகத்தில் நின்றான் என இருந்திருக்க வேண்டும். இவ்வாறு சொற்களை மாற்றி நிரலாக வைத்துப் பொருள் காண்பதற்கு ‘மொழிமாற்றிப் பொருள் கொள்வது’ என உரையாசிரியர் தேசிகர் எழுதுகிறார்.

    தண்டியலங்கார உரை மயக்கம்

    தண்டியலங்காரம் அணியிலக்கணம் கூறும் நூல் என்பது தெரியும். தலைப்பிலும் பொழிப்புரையிலும் அணி, அலங்காரம் என்னும் சொற்கள் பயின்று வந்துள்ளன. சொற்களை மாற்றி உரைகாண்கையில், ‘மொழிமாற்றிப்பொருள் கொள்வதூஉம் கொள்க’ 15 என்னும் குறிப்போடு அமைந்துவிடுகிறதேயன்றி அதற்கொரு அணிப்பெயர் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. இதனால் தண்டியலங்காரத்தைப் பொருத்தவரையில் ‘நிரல்நிறை’ என்பது ஓர் அணிவகை எனவும் அது நிரலாகவும் மாறுபட்டும் அமையும் என்பதுமாகிய இரண்டு கருத்துக்கள் பெறப்படுகின்றன. மயக்க நிரல்நிறை அணி பற்றிய அல்லது பொருள்கோள் பற்றிய எந்தக் கருத்தினையும் தண்டியலங்காரத்தினின்றும் பெற இயலவில்லை.

    நிரல்நிறை அணி பற்றிய சில வரையறைகள்

    தொல்காப்பியம், நன்னூல், காரிகை, தண்டியலங்காரம் ஆகிய நூல்களிலிருந்து கிட்டிய மேற்கண்ட தரவுகளால் பொருள்கோள் அல்லது அணி பற்றிய பின்வரும் கருத்துக்கள் வரையறுக்கப்படுகின்றன.

    • தொல்காப்பியம் நான்குவகைப் பொருள்கோளை மட்டும் ஆராய்கிறது. அணியிலக்கண ஆராய்ச்சி அங்கே இல்லை.
    • நன்னூல் ஒன்பது வகையாகப் பொருள்கோளை ஆராய்ந்திருக்கிறது.
    • காரிகையாசிரியர் ‘பொருள்கோள்’ என ஒரு சொல்லை மட்டும் குறித்து அணி பற்றி ஏதும் கூறாத நிலையில் உரையாசிரியர் குணசாகரர் ‘பொருள்கோள்’ என்பதற்கான விளக்கத்தை எட்டு வகையில் ஆராய்ந்திருக்கிறார்.
    • தண்டியலங்காரத்தில் பொருள்கோளைப் பற்றி ஏதுமில்லை. உரையாசிரியர் நிரல் நிறையணியை இரண்டாகப் பகுத்தாராய்ந்திருப்பதோடு அது நிறைவடைகிறது.
    • மயக்க நிரல்நிறை என்பது பற்றிய குறிப்போ விளக்கமோ மேற்கண்ட எந்த நூல்களிலும் எந்தப் பகுதியிலும் ஆராயப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

    இவற்றிலிருந்து ‘நிரல் நிறை’ என்பது பெரும்பாலும் பொருள்கோள்களில் ஒன்று என்பதும் அதனை அணியாகவும் அணியிலக்கணமுடையார் வரித்துக் கொள்கிறார்கள் என்பதும் மயக்க நிரல்நிறை பற்றிய எந்தக் குறிப்பையோ விளக்கத்தையோ இந்த நூல்களில் இருந்து பெறவியலவில்லை என்பதும் பெறப்படுகின்றன.

    நிரல் நிறை அணி – திருவள்ளுவரும் அழகரும்

    பழந்தமிழ் இலக்கணம் வல்லார்க்கு அணியிலக்கணம் உடன்பாடன்று என்பதும் தொல்காப்பியம் அணியிலக்கணம் பற்றி ஏதும் கூறவில்லை என்பதும் உவமத்தையும் அது பொருட்பகுதியாகவே கருதியிருக்கிறது என்பதும் உரையாசிரியர்களில் சேனாவரையரே அவ்விலக்கணச் சுவையுடையார் என்பதும்  ஆய்வறிஞர்களால் கண்டு வெளிப்படுத்தப்பட்ட ஆய்வு முடிவுகளாகும்.  திருக்குறளுக்கும் இக்கொள்கை பொருந்தும். அணியிலக்கணப் பயன்பாடு பல்கிப் பெருகிய பிற்காலத்தைச் சார்ந்த உரையாசிரியர்கள் பழந்தமிழ் நூல்களை அணியழகோடு நோக்கி உரையெழுதுவதை ஓர் உரைநெறியாகக் கொண்டதன் காரணமாகப் பரிமேலழகரின் உரைகளில் அணியிலக்கணக் குறிப்புக்கள் விரவியுள்ளன. அந்த வகையில்,

    “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது” 16

    என்னும் குறட்பாவிற்கு,

    “ஒருவன் இல்வாழ்க்கை தன் துணைவிமேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்துண்டல் ஆகிய அறத்தினையும்  உடைத்தாயின் அவ்வுடைமை அதற்குப் பண்பும் பயனும் ஆகும்…….நிரல் நிறை. இல்லாட்கும் கணவற்கும் நெஞ்சு ஒன்றாகாவழி இல்லறம் கடைபோகாமையின் அன்புடைமை பண்பாயிற்று. அறனுடைமை பயனாயிற்று.” 17

    என விளக்கம் தருகிறார். இந்த விளக்கத்தில் அன்பும் அறனுமாகிய பண்புகள் எதனுடைய உடைமையெனின் அது இல்லறத்தின் உடைமை என்பது பரிமேலழகரின் நுண்ணியம். இதனை ‘இல்லறம் கடைபோகாமையின்’ என்னும் சொல்லால் குறித்தமை நோக்குக. இந்த விளக்கத்தில் பரிமேலழகர் ‘நிரல் நிறை’ எனக் குறிப்பதோடு அமைந்துவிடுகிறாரேயன்றி ‘அணி’ என்னும் சொல்லைத் தவிர்த்துவிடுகிறார். இந்த நெறி பல குறட்பாக்களின் இவர் உரைகளில் பரவலாகக் காணப்படுகின்ற ஒன்றாகும். “இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை” 18 “இனமென்னும் ஏமப்புணை’ என்ற ஏகதேச உருவகத்தால்” 19 என்பன காண்க. இதனால் அவர் ‘அணி’ என்னும் சொல் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்துவிடுகிறார் என்பது பொருளன்று. வேறு சில இடங்களில் முழுமையாக ‘அலங்காரம்’20 என்றே கூறுவதையும் காண முடிகிறது.

    பரிமேலழகர் காட்டும் மயக்க நிரல்நிறை

    ‘குறட்பாவின் அமைப்புச் சிக்கல்’ என இக்கட்டுரையில்  தொடக்கப்பகுதியில் முன்னெடுத்த கருத்துக்களின் மேல் கற்பார் கவனம் ஈர்க்கப்படுகிறது.

    “விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
    கற்றாரோடு ஏனை யவர்” 21

    என்பது குறட்பா. இந்தக் குறட்பா,

    “விலங்கொடு மக்கள் அனையர்
    கல்லாதவரோடு கற்றவர்”

    என்னுமாறு அமைந்திருந்தால் சிக்கல் எழுந்திருக்காது. முதலடியின் பொருண்மைக்கும் அடுத்த அடியின் பொருண்மைக்கும் முரண் நிலவுவதும் முன்பே சுட்டப்பட்டது.

    “விலங்கொடு மக்கள் அனையர்” என்னும் தொடருக்கு “விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையவர்”  (அத்துணை தீமையுடையவர்) “இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர்” என்னும் தொடருக்கு விளங்கிய நூலைக்கற்றாரோடு நோக்கக் கல்லாதவர்”

    என்னுமாறு அவருடைய சீர் பிரிப்பும் பொழிப்புரையும் அமைந்திருக்கிறது. இந்தப் பொழிப்புரையில்தான் அவர் ‘மயக்க நிரல்நிறை’ என்பது பற்றிச் சிந்தித்திருக்கிறார். முறையாக நின்றால் நிரல். முறைமாறி நின்றால் மயக்க நிரல். பாட்டின் அமைப்பு எங்கே மயக்கம் நிலவுகிறது? கருத்தில்! அது பற்றி இரண்டாது பத்தியில் ஆராயப்பட்டுள்ளது. எனவே அந்த மயக்கத்தை ஒரு புதிய கோணத்தில் கண்டு நீக்குகிறார் பரிமேலழகர். எது அந்தப் புதிய கோணம் என்றால், “தீயதை நோக்க நல்லதன் நன்மை எவ்வளவு உயர்ந்ததோ நல்லதை நோக்கத் தீயதன் தீமை அத்தனை தாழ்ந்தது! இந்த உயர்வும் தாழ்வும் ‘அத்தனை’ என்னும் அளவு சார்ந்தது. இப்போது பரிமேலழகர் உரையை நோக்கினால் ‘மயக்கநிரல்நிறை’ என்பதை எவ்வளவு நுட்பமாக விளக்கியிருக்கிறார் என்பது புரியக் கூடும்.

    “விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையவர்”  (அத்துணை தீமையுடையவர்) “இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர்”22

    எனவே மயக்கம் பொருள்களின் ஒப்பீட்டில் இல்லை. நன்மை, தீமை என்னும் அளவில் இருக்கிறது. முதல் ஒப்பீடு நன்மை. பின்னதில் அந்த ஒப்பீட்டு அளவு தீமை. இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால்,

    “விலங்கை நோக்க மக்கள் எவ்வளவு நல்லவர்களோ அவ்வளவு நல்லவர்கள் படித்தவர்களை நோக்கப் படிக்காதவர்கள்! என்னும் கருத்தியலை (குறள் நிரலில் இப்படித்தான் ஐயம் எழும்) பரிமேலழகர் மடைமாற்றம் செய்கிறார் “இல்லை இல்லை! அவ்வளவு நல்லவர்கள் இல்லை அவ்வளவு தீயவர்கள்! என்று. இப்போது புரிகிறதா?

    எனவே மயக்க நிரல் நிறை என்றால் பொருள் மயக்கத்திற்குக் காரணமான நிரல்நிறை எனக் கருத முடியும்.

    நுண்ணியத்தின் மறுவடிவம் பரிமேலழகர்

    இந்தக் குறட்பாவிற்குத் தாம் எழுதிய பொழிப்புரைக்குச் சிறப்புரை எழுதுகிறார் பரிமேலழகர். நிதானம், பொறுப்பு, கூரிய நோக்கு, இலக்கண இலக்கியப் புலமை அத்தனையும் அந்த விளக்கத்தில் பொதிந்திருப்பதைக் காணலாம். அவர் விளக்கவுரை இப்படி அமைந்திருக்கிறது.

    “இலங்கு நூல் சாதிப்பெயர். விளங்குதல் – மேம்படுதல். விலங்கின் மக்கட்கு ஏற்றமாய உணர்வு மிகுதி காணப்படுவது கற்றார் கண்ணே யாகலின், கல்லாதாரும் அவரும் ஒத்த பிறப்பினர் அல்லர் என்பதாம். மயக்க நிரல் நிரை. இதனால் அவர் மக்கட் பிறப்பால் பயன் எய்தாமை கூறப்பட்டது” 23

    விளக்கவுரையில் ஒளிந்திருக்கும் பரிமேலழகரின் உரையாளுமை

    • குறட்பாவில் ‘மக்கள்’ என்பது பன்மையாக, ‘விலங்கு’ என்னும் ஒருமைப் பயன்பாடு ஏலாதாதலின் அதற்கேற்ப ‘விலங்கு’ என்பதைச் சாதியொருமை என்கிறார். ‘விலங்குகளோடு மக்கள்’ என இருக்க வேண்டுமாம்.
    • ‘கற்றார்’ என்பது பன்மையாயிருக்க ‘நூல்’ என்னும் ஒருமைப் பயன்பாடு ஏலாதாதலின் அதற்கேற்ப ‘நூல்’ என்பதைச் சாதியொருமை என்கிறார். ‘நூற்களைக் கற்றார்’ என இருக்க வேண்டுமாம்.
    • மக்களாகிய பிறப்பே அதற்குரிய சிறப்பாகிவிடாது. மக்களாகிய சுட்டு நிகழ்வதற்குரிய காரணத்தைக் கொண்டால் மட்டுமே அவர் மக்கள் எனக் கருதப்படுவர். “மக்களாகிய சுட்டு யாதன் கண் நிகழும் அது மக்கட்சுட்டு” 24 எனச் சேனாவரையர் எழுதும் உரைப் பகுதியைக் கவனத்திற் கொண்டால் ‘மக்கட்கு ஏற்றமாய உணர்வு மிகுதி காணப்படுவது கற்றார் கண்ணேயாதலின்” என்னும் பரிமேலழகர் உரையின் சிறப்பு அறியலாம்.
    • கற்றல் நிகழ்ந்தாலேயொழிய மானுடத்தால் பயனில்லை என்பார் (கற்றலின் பேரெல்லை பிற உயிர்களின் மேல் அன்பாதலின்) “இதனால் அவர் மக்கட் பிறப்பால் பயன் எய்தாமை கூறப்பட்டது” என்றார்.
    • நூல்களுக்கு இருக்க வேண்டிய அழகுகள் பத்து. அவை “சுருங்கச் சொல்லல் விளங்கவைத்தல்” 25 என்னும் தொடக்கத்தன. அத்தகைய அழகுடைய நூற்களையே பயில வேண்டும் என்பார் ‘விளங்குதல்’ என்னும் சொல்லுக்கு மேம்படுதல் என உரைகாண்கிறார். ‘இலங்குநூல்’ என்பதற்கு ‘விளங்கிய நூல்’ எனச் சொற்பொருள் (பதசாரம்) எழுதி ‘விளங்குதல்’ என்பதற்கு ‘மேம்படுதல்’ என உரைகாணும் நுண்ணியம் காண்க. மேம்பாடு நூலுக்கென்று உணர்க.

    நிறைவுரை

    ஏற்ற தரவுகளைக் கொண்டு இதுகாறும் செய்யப்பட்ட ஆய்விலிருந்து ‘நிரல்நிறை’ பற்றிய இலக்கணம் ஒரு தெளிவற்ற நிலையிலேயே இருந்து வருகிறது என்பதும் அது பெரும்பாலும் பொருள்கோள் வகையில் ஒன்றாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது என்பதும் அப்பொருள்கோளும் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு ஆசிரியன்மார்களால் ஒவ்வொரு வகையான எண்ணிக்கையில் ஆராயப்பட்டு வந்துள்ளது என்பதும் நிரல் நிறை என்பது பெயர் நிரல்நிறை, வினை நிரல்நிறை என்னும் இரண்டான பகுப்பிற்கும் ‘நேர்நிரல்நிறை, எதிர் நிரல்நிறை’ என்னும் வரையறைக்கும் ஆளாகியிருக்கிறது என்பதும் மயக்க நிரல்நிறை பற்றிய எந்தக் குறிப்பும் எந்த இலக்கண நூலிலும் தெளிவாக இல்லாத சூழலில் அது பற்றிய நுண்ணிய சிந்தனை பரிமேலழகருக்கு அமைந்திருந்தது என்பதும் அந்த நுண்ணியத்தாலேயே ஆய்வுக்குரிய ‘விலங்கொடு மக்கள் அனையர்’ என்னும் குறட்பாவின் பொருள் துலக்கம் பெறுகிறது என்பதும்” ஓரளவு புலனாகலாம். பரிமேலழகர் உரையை மறுக்கின்ற வல்லாளர் பலர் உளர். ஆய்வுக்குரிய இந்தக் குறட்பாவின் நுண்ணியத்தை உணர்வார் பரிமேலழகரின் உரைப்பேராற்றலை உணரலாம்.

    (தொடரும்)

    சான்றெண் விளக்கம்

    1. திருவள்ளுவர்                           திருக்குறள்                                                      கு.எண். 410
    2. பரிமேலழகர்                            மேலது உரை
    3. மேலது
    4. தொல்காப்பியர்                     தொல்காப்பியம் எச்சவியல்            நூ.எண். 887
    5. பவணந்தியார்                         நன்னூல்                                                               நூ.எண். 414
    6. சங்கர நமசிவாயர்               மேலது உரை
    7. மேலது
    8. குணசாகரர்                                 யாப்பருங்கலக்காரிகை உரை      கா.எண். 58
    9. மேலது
    10. தண்டி                                                 தண்டியலங்காரம்                                       நூ.எண். 67
    11. சுப்பிரமணிய தேசிகர்      மேலது உரை
    12. மேலது
    13. மேலது
    14. மேலது
    15. மேலது
    16. திருவள்ளுவர்                                திருக்குறள்                                                             கு.எண். 45
    17. பரிமேலழகர்                                 மேலது உரை
    18. மேலது                                                                                                                                                கு.எண். 1
    19. மேலது                                                                                                                                                கு.எண். 306
    20. மேலது                                                                                                                                                கு.எண். 475
    21. திருவள்ளுவர்                               திருக்குறள்                                                                கு.எண். 410
    22. பரிமேலழகர்                                 மேலது உரை
    23. மேலது
    24. சேனாவரையர்                           தொல்.சொல். உரை                                          நூ.எண். 1
    25. பவணந்தியார்                             நன்னூல்                                                                        நூ.எண். 13

    துணைநூற் பட்டியல்

    1. அமிதசாகரர் யாப்பருங்கலக்காரிகை
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ
    சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1940

    2. குணசாகரர் (உ.ஆ.) யாப்பருங்கலக்காரிகை
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1940

    3. சுப்பிரமணிய தேசிகர் தண்டியலங்காரம் உரை
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1963

    4. தண்டி தண்டியலங்காரம்
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1963

    5. திருவள்ளுவர் திருக்குறள் – பரிமேலழகர் உரை
    வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள் எழுதிய குறிப்புரையுடன்
    உமா பதிப்பகம், சென்னை – 600 001
    முதற்பதிப்பு – 2009

    6. தொல்காப்பியர் தொல்காப்பியம்
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1940

    7. பரிமேலழகர் (உ.ஆ.) திருக்குறள் உரை
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1940

    8. பவணந்தியார் நன்னூல்
    உலகத் தமிழாராயச்சி நிறுவனம்
    தரமணி, சென்னை
    முதற்பதிப்பு – 1999

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 6 (ஏவலிளையர்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 6 (ஏவலிளையர்)

    ச.கண்மணி கணேசன்,
    முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர் (ப.நி.),
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    ஏவல் இளையர் என்னும் குழுப்பாத்திரம் அகஇலக்கியச் சிறுபாத்திரங்களுள் ஒருமை விகுதி பெறும் தனிப்பாத்திரமாக இடம்பெறுவதில்லை. அகஇலக்கியம் மட்டுமின்றிப் புறஇலக்கியத்திலும் இப்பாத்திரம் பற்றிய குறிப்புகளைக் காண இயல்கிறது.

    இருவேறுபொருள் தரும் ‘இளைய-’ எனும் சொல்தொகுதி

    தொகைநூல்களில் இளையர் என்னும் சொல் இரண்டு பொருட் பரிமாணங்களுக்கு உரியதாகக் காணப்படுகிறது. வயதில் மூத்தவரோடு உறழ்ந்து சுட்டப்படும் ‘இளையர்’, ‘இளமையை’, ‘இளையோர்’ ஆகிய பெயர்ச்சொற்கள் உள்ளன (பெரும்.- 268; பொருநர்.- 187; சிறு.- 232; புறம்.- 213, 254; பரி.- 6- அடி- 27; 10; நற்.- 111, 207; அகம்.- 30, 348; குறுந்.- 61, 246; ஐங்.- 198; கலித்.- 83). உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியை;

    “இளையோன் சிறுவன்” (பொருநர்.-அடி- 130)

    என்று குறிப்பிடுகிறார் புலவர். அகப்பாடல் தலைவனும் தன் இளமை காரணமாக இளையோன் என்று அழைக்கப்படுவது உண்டு (அகம்.- 203). வயதால் இளைய பெண்பாலினரைச் சுட்டும் ‘இளையள்’, ‘இளையோள்’ ஆகிய சொற்கள் அக இலக்கியத் தலைவியைக் குறிப்பதாகப் பயின்று வருகின்றன (நற்.- 143, 201; ஐங்.- 256; குறுந்.- 119; அகம்.- 193, 314, 319; ). பரத்தையைச் சுட்டும் ‘இளையோள்’ என்ற சொல்லும் உளது (நற்.- 320). புறநானூற்றுத் தலைவரின் மனைவியரும் ‘இளையோய்’ என்றும் ‘இளையோள்’ என்றும் அழைக்கப்படுகின்றனர் (பா.- 144, 340, 350). ‘இளையோர்’ என்னும் சொல் தலைவியையும் அவளது தோழியர் கூட்டத்தையும் ஒருங்கே குறிப்பதாக அமைந்துள்ளது (நற்.- 68; அகம்.- 90, 254, 370). குறிஞ்சிப்பாட்டின் தலைவன்; தலைவியையும், தோழியையும் ஒருங்கு ‘இளையீர்’ என்று அழைக்கிறான் (அடி- 141).

    இத்தரவுகளினின்று மாறுபட்டு ஏவலர்களைக் குறிக்கும் ‘இளையர்’ மட்டுமே இங்கு கட்டுரைப்பொருள்  ஆகின்றனர் .

    புறப்பாடல்களில் ஏவல் இளையர்

    பாணர் குழுவில் இளையர் என்றே அழைக்கப்படும் ஏவலர் இருந்தனர் (சிறு.- 33; பதிற்.- 40, 41, 48, 51). வையைப் புதுப்புனலில் ஆட எழுந்த கூட்டத்திற்குள் முண்டியடித்துச் செல்ல இயலாத ஏவலரே அப்பாட்டில்

    “சேரி இளையர் செலவரு நிலையர்” (பரி.- 6- அடி- 38)

    என்று விதந்து சொல்லப்படுகின்றனர்.

    வீரரைக் குறிக்கும் ‘இளையர்’, ‘இளையோர்’ என்ற பயன்பாடும் உள்ளன. (புறம்.- 57, 150,  242, 253, 254, 263, 286, 353; பதிற்.- 54, 71). அவ்வாறு அழைக்கப்பட்ட காரணம் அவர்கள் தலைவருக்கு அடங்க வேண்டியவராய் இருந்தமை எனலாம். அதனால்தான்

    “ஏவல் வியங்கொண்டு இளையரொடு எழுதரும்” (பதிற்.- 54)

    என்று பாடப்பட்டுள்ளது.

    “யான் கண்டனையர் என்இளையரும் வேந்தனும்” (புறம்.- 191)

    என்ற பிசிராந்தையார் கூற்றில் இளையர் ஏவலரையே குறிக்கிறது.

    அகப்பாடல்களில் இளையர்

    “ஏவல் இளையர்” (அகம்.- 342; நற்.- 389)

    என்ற தொடரில் இளையர் ஏவலுக்கு உரியவர் என்ற செய்தி வெளிப்படை.

    பலதிறத்தினராகிய இளையர்

    இளையர் வேந்தரிடமும், வேளிரிடமும், திணைமாந்தரிடமும் பணியாற்றினர். ஆறலைக்கள்வரும் இளையராக மறவர் தலைவருடன் சேர்ந்து பணியாற்றினர். ஊராட்சியில் பணியமர்த்தப்பட்ட காவலரும் இளையரே.

    “ஏவல் இளையர் தலைவன்” (அகம்.- 342)

    எனப் பாண்டியனும் அவனிடம் பணியாற்றிய ஏவலரும் சுட்டப்  படுகின்றனர்.

    சோழவேந்தன் அழிசி ஏவலர் கூட்டத்தை உடையவன் ஆதலால்;

    “நிரைய ஒள்வாள் இளையர் பெருமகன்” (குறுந்.- 258)

    என்று சுட்டிப் பாடுகிறார் புலவர்.

    “வல்வில் இளையர் பெருமகன் நள்ளி” (அகம்.- 152)

    என வேளிர்குலத் தோன்றலாகிய நள்ளியும் அவனது ஏவலரும் பாடலில் இடம்பெறுகின்றனர்.

    வேட்டையைத் தவிர வேறேதும் தெரியாததால் புல்லியின் ஏவலர் கல்லா இளையர் என்று அழைக்கப்பட்டனர்.

    “கல்லா இளையர் பெருமகன் புல்லி” (அகம்.- 83)

    எனக் குறிப்பிடப்படுவது காண்க.  மழை பொய்த்த மூங்கில் காட்டுவழியாகச் செல்லும் வணிகச்சாத்துகளைக் கொன்று; கொள்ளையில் ஈடுபடும் கொடுமையான வாழ்க்கை உடைய பாலைநிலத்து மறவரை இளையர் என்றும்; அவரது தலைவரை;

    “வல்வில் இளையர் தலைவர்” (அகம்.- 245)

    என்றும் பாடியுள்ளமை காண்க. அணிகலன்கள் இல்லையெனினும் வழிச்செல்வோரைக் கொன்று பறவைகளுக்கு இரையாக்கும்;

    “கல்லா இளையர் கலித்த கவலை” (அகம்.- 375)

    என்ற பாடலடியிலும் ஆறலைக் கள்வர் இளையர் என்றே அழைக்கப்  படுகின்றனர்.

    இரவுக்குறியின் ஏதத்தை எடுத்துரைக்கும் தலைவி;

    “துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்
    இலங்குவேல் இளையர் துஞ்சின்” (அகம்.- 122)

    நாய் குரைக்கும் என்கிறாள். தூங்காத ஊர்காவலரை வேலேந்திய இளையராகக் காட்டுகிறது இப்பாடல்.

    இளையரும் ஆயுதமும் 

    இளையர் ஆயுதமேந்தியவராகவே அகப்பாடல்களில் சித்தரிக்கப்படுகின்றனர்.

    “வெல்வேல் இளையர்” (அகம்.- 64, 104),

    “ஒள்வாள் இளையர்” (குறுந்.- 258),

    “வல்வில் இளையர்” (குறுந்.- 275; அகம். – 152, 245),

    “இலங்குவேல் இளையர்” (அகம்.- 122),

    “திருந்துவேல் இளையர்” (அகம்.- 345)

    என; ஆயுதத் தொடர்போடு அவர்களது பணி இருந்தது என்பதை நிறுவுதற்கேற்ற தொடர்கள் பலவாக உள்ளன.

    இளையரின் பணி

    தலைவர்களிடம் மெய்க் காப்பாளராய்ப் பணியாற்றி; அவருடன் வெட்சிப் போரிலும், கரந்தைப் போரிலும் ஈடுபட்டனர் இளையர்.  காட்டகச் சிறுகுடியினர் ஏவல் இளையராய்த் தலைவருடன் வேட்டைக்குச் சென்றனர்.

    “……………………..பொறாஅர்
    விண்பெறக் கலித்த திண்பிடி ஒள்வாட்
    புனிற்றான் தரவின் இளையர் பெருமகன்
    தொகுபோர்ச் சோழன் ” (அகம்.- 338)

    எனும் பாடலடிகளில் சோழனுக்காக அவனது இளையர் பொறுக்க மாட்டாதவராய்ப் பகைப்புலத்தினின்று ஆநிரைகளைக் கவர்ந்து வந்தமை விளக்கம் பெறுகிறது. எனவே அவர்கள் வெட்சி வீரர்கள்.

    தலைவன் சென்றிருக்கும் காட்டுவழி பற்றிக் கவலும் தலைவி; பெண்யானை துயில்வது போல் தோற்றமளிக்கும் சிறுகுன்றுகளின் மருங்கில்; நடப்பட்டவை போலக் காட்சியளிக்கும் இயற்கையான நெடுங்கற்களின் பரந்த இடத்தில்; நிரை கவர்ந்த வெட்சி வீரருடன் நடந்த போரில்  வீரமரணமடைந்தவர்களின் பெயர்களை எழுதி; மணமிகுந்த அரைத்த மஞ்சளைப் பூசி வழிபட்டு; சிவந்த கரந்தைப் பூக்களைத் தம் அம்புகளால் அறுத்தெடுத்த ஆத்தி நார்களில் கட்டிக் கண்ணியாக அணிந்து; வண்டுகள் ரீங்காரத்துடன் மொய்க்கக்; கழலணிந்து; நிரைமீட்கும்

    “இளையர் பதிபெயரும் அரும்சுரம்” (அகம்.- 269)

    என்கிறாள். எனவே இங்கு சுட்டப்படும் இளையர் கரந்தைவீரர் ஆகின்றனர்.

    இரவுக்குறியின் ஏதத்தைச்  சிறைப்புறமாக நின்ற தலைமகனுக்குச் சொல்லுவாளாய்த் தலைவி; பெண்பன்றி தன் குட்டிகளை வேட்டுவரிடம்  இருந்து காத்துச் சென்றமையை;

    “இளையர் எய்துதல் மயக்கி கிளையொடு” (அகம்.- 248)

    போனது என்கிறாள். இதனால் இங்கு இளையர் வேட்டுவர் என்பது தெளிவு. வேட்டுவர் எழுப்பிய ஆரவாரத்தில் மிரண்டு காட்டிலிருந்து ஒதுங்கிய ஆமான்கன்று; சிறுகுடியுள் நுழைந்து; அங்கிருந்த இளையரால் பேணப்பட;  அவரோடு கலந்துவிட்டது என்று சொல்லும் பாடலில்;

    “இளையர் ஓம்ப மரீஇ அவண் நயந்து” (குறுந்.- 322)

    உறைந்தது என்பதால் இளையர் வேட்டுவச் சிறுகுடியினர் எனப்பெற்றோம். இனிய பலாச் சுளைகளில் விளைந்த தேனைப் பருகிச்; சீழ்க்கை ஒலியுடன் செல்லும் அம்பினைச் செலுத்தும் ஏவலருடன் சேர்ந்து முள்ளம்பன்றியை வீழ்த்தும் வேட்டுவனை;

    “வீளை அம்பின் இளையரொடு மாந்தி” (அகம்.- 182)

    எனக் காட்சிப்படுத்துகிறது பாடல். இவ்இளையர் வேட்டுவனின் ஏவலர் ஆவர். இவ்வாறு வேட்டுவனுக்கு அமைந்த ஏவலர் பற்றி நற். 389ம் பாடலும் கூறுகிறது.

    அகப்பாடல் துறைகளும் இளையரும்

    முதன்முதலில் தலைவியைச் சந்திக்கும் போதும், குறியிடத்தில் அவளைச் சந்திக்கச் செல்லும் போதும், வரைதல் வேண்டித் தலைவியின் தமரைப் பார்க்கச் செல்லும் போதும், கற்புக் காலத்தில் வேந்தர்க்காக வினைவயிற் பிரிந்து செல்லும் போதும், பொருள் வயிற்பிரியும் போதும் தலைவனுடன் இளையர் செல்வதுண்டு. தலைவியின் அன்பு கிடைக்கப்  பெறாத தலைவன் மடலேறித் தன் வேட்கையை ஊரார்க்குப் புலப்படுத்தும் முன்னர் தன் இளையரிடம் புலம்பித் தெரிவிப்பதுண்டு.

    தலைவி ஆயத்துடன் வண்டல்மனை இளைத்து ஆடிக் கொண்டு இருந்த போது தேரில் வந்த தலைவன்; ஏவலருடன் தேரைத் தூர நிறுத்தி விட்டுத் தலைவியின் அருகே வந்து அம்மனையைப் பாராட்டி; அவள் பதில் சொல்லாதிருக்க மீண்டு சென்றான்.

    “கொடுஞ்சி நெடுந்தேர் இளையரொடு நீக்கி” (அகம்.- 250)

    அவன் தலைவியுடன் சொல்லாடியமை நோக்கத்தக்கது.

    குறியிடத்துத் தலைவியைக் காணவரும் போது;

    “கவர்பரி நெடுந்தேர் மணியும் இசைக்கும்
    பெயர்பட இயங்கிய இளையரும் ஒலிப்பர்” (நற்.- 307)

    எனத் தலைவனின் தேர்மணி ஓசையுடன்; ஏவலரின் கலகலப்பான பேச்சொலியும் கேட்பது பற்றித் தலைவியிடம் உரைக்கிறாள் தோழி.

    தலைவியைப் பெண்கேட்டு வரும் தலைவன் ஆரவாரம் செய்யும் ஏவலரோடு தேரேறிப் பகலில் வந்துள்ளான்; அதனால் இனி ஊராரின் வாயிலிருந்து அலர் எழாது என்பதை;

    “ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல்வாய்” (அகம்.- 160)

    என்று தொடர்கிறாள் தோழி.

    வினைவயிற் பிரிந்த தலைவனுக்காகக் காத்திருக்கும் தலைவியிடம்;

    “நின் பல்லிருங் கதுப்பின்
    குவளையொடு தொடுத்த நறுவீ முல்லை
    தளையவிழ் அலரித் தண்ணறுங் கோதை
    இளையரும் சூடி வந்தனர் நமரும்
    விரியுளை நன்மா கடைஇப்
    பரியாது வருவர் இப்பனிபடு நாளே” (நற்.- 367)

    என்று தோழி இளையர் முதலில் வந்து சேர்ந்து விட்டதை உரைக்கிறாள். குவளையும், முல்லையும், அலரியும் விரவி நீ சூடியிருப்பது போலவே ஏவலரும் சூடிக்கொண்டு வந்துவிட்டனர் ஆதலால்; இனித் தலைவன் வந்துசேர்வது ஒருதலை என்பது பொருள். இது போன்ற சூழலில் ஏவலிளையர் இடம் பெறும் பாடல்கள் பல உள (அகம்.- 104; குறுந்.- 275)

    பொருளுக்காகப் பிரிந்து செல்லும் தலைவனுடன் ஏவலரும் செல்வதைத்;

    “……………………………………..தம்மொடு
    திருந்துவேல் இளையர் சுரும்புண மலைமார்” (அகம்.- 345)

    என்று எடுத்துக்கூறுகிறாள் தலைவி. ஏவலர் தம் தலையில் தரித்துக் கொள்ள ஏதுவாக நுணாமரக் கொம்புகள் தளிர்க்கும்படி மழை பெய்து குளிர்ச்சி நிலவட்டும் என்பது அவளது எண்ண வெளிப்பாடு.

    மடலேறி வெற்றிகரமாகத் தலைவியை மணந்த தலைவன் தானுற்ற காதல்நோய் பற்றிப் பின்னர் உரைக்கும் போது;

    “இளையாரும் ஏதிலவரும் உளைய யான்
    உற்றது உசாவும் துணை” (கலித். – 138)

    என்றிருந்த தன் நிலையை எடுத்துரைக்கிறான். தன் மனவுளைச்சலை இளையரிடம் எடுத்துச் சொல்லி ஆற்ற முற்பட்டமை இப்பாடலடியில் புலனாகிறது.

    தலைவன் இளையரை ஏவும் முறை

    வினைமுடித்து மீளும் தலைவன் உடன்வரும் இளையரை மூன்று நிலைகளில் ஏவுகின்றான். தனக்கு முன்னரே சென்று தலைவியிடம் தன் வருகையை உணர்த்த விரைந்து செல்லச் சொல்வதுண்டு.

    “ஏகுமின் என்ற இளையர் வல்லே ” (நற்.- 42)

    விரைந்து சென்று தலைவிக்குத் தலைவன் வருகையை  அறிவித்ததால்; அவள் தன் கூந்தலைப் புனைந்து; ஒப்பனை செய்து கொண்டு காத்து  இருந்தாள் என்று முன்னர் நடந்ததை நினைவு கூரும் தலைவன் மீண்டும் அதுபோலவே ஏவலரை முன்னனுப்ப முடிவு செய்கிறான்.

     தானும் தன் இளையரும் ஒருங்கு இணைந்து ஊர் திரும்புவதும் உண்டு. “இளையர் ஏகுவனர் பரிப்ப வளைஎனக்” (நற்.- 161) காட்டுவழியில் தம் வீரர் ஆங்காங்குத் தங்கிச் செல்லத் தலைவனும் அவருடன் சேர்ந்தே வந்தான் .

    ‘இளையர் தேருக்கு முன்னர் ஓடிச் செல்ல வேண்டியிருப்பதால்; அவர்கள் இடையிடையே காலாற அமர்ந்து இளைப்பாறி வரட்டும். நீ தேரை விரைந்து செலுத்து; நாம் முன்னர் சென்று சேர்வோம்’ எனத் தலைவன் தான் முதலில் தலைவியிடம் சேர முனைவதும் உண்டு.

    “விரைபரி வருந்திய வீங்குசெலல் இளையர்
    அரைசெறி கச்சை யாப்பு அழித்து அசைஇ” (நற்.- 21)

    என்ற பாடல் வரிகள் வேகமாக ஓடிவந்த ஏவலர் தம் அரைக்கச்சையை நெகிழ்த்துவிட்டு மூச்சிரைக்க ஓய்வெடுக்க முனைவதைக் காட்சிப்படுத்துகிறது.

    ஏவல் இளையர் பாத்திரத்தின் பயன்பாடு தலைவனின் பெருந்தன்மையையும், நாகரிக மேம்பாட்டினையும் புலப்படுத்தவும், அவனுக்குத் தலைவிமேல் இருந்த காதலின் மிகுதியைப் புரியவைக்கவும் இளையர் பாத்திரம் கருவியாகப் பயன்பட்டுள்ளது.

    தலைவியைச் சந்திக்கும் போதெல்லாம் தேரையும் ஏவலரையும் சேய்மையில் நிறுத்திவிட்டு வரும் தலைவனின் பண்பைத் தோழி பாராட்டுகிறாள்.

    “கடுந்தேர் இளையரொடு நீக்கி நின்ற” (அகம்.- 310)

    நாகரிகம் அவனது பாத்திரப்படைப்பை உயர்த்திக் காட்டுகிறது. உடன்போக ஊக்கும் தோழி; பிற்றைநாளில் உனக்கு மனைவியான  இவளோடு; ஏவலரும் குதிரையும் ஒருங்கே எம் இல் வந்து விருந்துண்டு செல்க என்கிறாள் (அகம்.- 300). அங்ஙனம் விருந்துண்ணுங்கால் ஏவலரை முதலில் உண்ணவைத்து அதன் பின்னர் அவன் விருந்துண்பான் என்று கற்பனை செய்து கூறுகிறாள்.

    “இளையர் அருந்த பின்றை நீயும்” (அகம்.- 394)

    விருந்தயரலாம் என்பது  தோழியின் கூற்றாயினும் தலைவனின் பெருந்தன்மை அறிந்து அவள் பேசுவதாகக் கொள்வதில் தவறில்லை.

    தலைவிமேல் அவனுக்கு இருந்த வேட்கையால் தான்; காட்டுவழியில் தேருக்கு முன்னால் ஓடிச்செல்லும் ஏவல் இளையரைக் கண்டு இரக்கம் மேலோங்கினும்;

    “இளையர் ஏகுவனர் பரிய விரிஉளை”க்  (அகம்.- 375)

    குதிரையின் கடிவாளத்தைத் தேர்ப்பாகன் வலிந்து பிடித்துச் செலுத்த விரைகிறான்.

    முடிவுரை

    இளையர் எப்போதும் ஆயுதமேந்தி வேந்தரிடமும், வேளிரிடமும், திணைமாந்தரிடமும் பணியாற்றினர். ஆறலைக்கள்வரும் இளையராக மறவர் தலைவருடன் சேர்ந்து பணியாற்றினர். ஊராட்சியில் பணிசெய்த காவலரும் இளையரே. தலைவர்க்கு உறுதுணையாய் வெட்சிப்போரிலும், கரந்தைப்போரிலும் ஈடுபட்டனர் இளையர். காட்டகச் சிறுகுடியினர் ஏவல் இளையராய்த் தலைவருடன் வேட்டைக்குச் சென்றனர்.

    முதன்முதலில் தலைவியைச் சந்திக்கும் போதும், குறியிடத்தில் அவளைச் சந்திக்கச் செல்லும் போதும், வரைதல் வேண்டித் தலைவியின் தமரைப் பார்க்கச் செல்லும் போதும், கற்புக் காலத்தில் வேந்தர்க்காக வினைவயிற் பிரிந்து செல்லும் போதும், பொருள் வயிற்பிரியும் போதும் தலைவனுடன் இளையர் செல்வதுண்டு. தலைவியின் அன்பு கிடைக்கப் பெறாத தலைவன் மடலேறித் தன் வேட்கையை ஊரார்க்குப் புலப்படுத்தும் முன்னர் தன் இளையரிடம் புலம்பித் தெரிவிப்பதுண்டு. வினைமுடித்து மீளும் தலைவன் இளையரைத் தனக்கு முன்னரோ; தன்னுடன் சேர்ந்தோ அல்லது தனக்குப் பின்னரோ வரச்சொல்லி ஏவுவதுண்டு. தலைவனின் பெருந்தன்மையையும், நாகரிக மேம்பாட்டினையும் புலப்படுத்தவும், அவனுக்குத் தலைவிமேல் இருந்த காதலின் மிகுதியைப் புரியவைக்கவும் இளையர் பாத்திரம் கருவியாகப் பயன்பட்டுள்ளது

    ஏவல் இளையர் என்னும் குழுப்பாத்திரம் ஒருமை விகுதிபெற்றுத் தனிப்பாத்திரமாக இடம்பெறுவதில்லை. புறஇலக்கியத்திலும் இப்பாத்திரம் பற்றிய குறிப்புகளைக் காண இயல்கிறது. தலைவனின் முழுமையான பாத்திரப்படைப்புக்கு ஏவல்இளையர் எனும் பாத்திரம் இன்றியமையாதது.

    Share
  • (Peer Reviewed) தென் பொதிகையின் பெண் ஞானியர்கள்: செங்கோட்டை ஆவுடை அக்காளும் தென்காசி ரசூல் பீவியும் – ஓர் ஒப்பீடு

    (Peer Reviewed) தென் பொதிகையின் பெண் ஞானியர்கள்: செங்கோட்டை ஆவுடை அக்காளும் தென்காசி ரசூல் பீவியும் – ஓர் ஒப்பீடு

    முனைவர் ரமேஷ் தங்கமணி, M.Sc., PhD., SET., DIBT., DMLT., DOA., DDTP., MZSI., MIAES
    உதவிப் பேராசிரியர்
    முதுகலை மற்றும் ஆராய்ச்சி – உயிர்த்தொழில்நுட்பவியல் துறை, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, படூர்,
    கேளம்பாக்கம் – 603103
    அலைபேசி: 8056083656
    மின்னஞ்சல்: drramesht.bt@gmail.com

    முகவுரை

    சங்க இலக்கியம் தொடங்கி, பக்தி இலக்கியம்வரை உள்ள பழந்தமிழர் இலக்கியங்களில் பெண்களுடைய பங்களிப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சங்ககாலத்தில் பெண்பாற் புலவர்கள் காதல், பிரிவு, பிரிவின் துயரம், பரத்தமை, பொருளீட்டல், போர் மற்றும் வீரம் போன்றவற்றை மையப்படுத்தியே பாடல்கள் இயற்றினர். பக்தி இலக்கியக் காலத்தைச் சார்ந்த பெண்கவிகளோ தமது பாடல்களில் இறைவன், இறைவன்மீது கொண்ட காதல் மற்றும் முக்தி போன்றவற்றை முன்னிலைப்படுத்தியுள்ளனர். காலமாற்றத்தில் பெண்கவிஞர்களுடைய கற்பனையின் புழங்குவெளி மற்றும் பாடுபொருட்களில் ஏற்பட்ட பெரிய மாற்றம் கூர்ந்து ஆராயத்தக்கது. இத்தகைய மாற்றம் காலச்சூழ்நிலையின் அடிப்படையில் மட்டுமின்றிப் பண்பாட்டுப் படையடுப்பு மற்றும் பெண்கள் மீதான சமூக அடக்குமுறையின் காரணமாகவும் ஏற்பட்டிருக்கலாம். மாற்றத்திற்கான காரணம் எதுவாக இருப்பினும் பக்தி இலக்கியப் பாடல்களில் வெளிப்படும் பெண்கவிகளின் கவித்திறன் மற்றும் இறைத்தன்மையின் மீதான உயர் விருப்பம் போன்றவை போற்றுதலுக்குரியன.

    தென்பொதிகையின் சாரலைப் பெறும் சிறு நகரங்களான தென்காசி மற்றும் செங்கோட்டையில் வாழ்ந்த இரு பெண் ஞானியர்கள் செங்கோட்டை ஆவுடை அக்காள் மற்றும் தென்காசி ரசூல் பீவி ஆவர். இவ்விரு ஞானியர்களும் இயற்றிய அத்வைதச் சிந்தனை நிறைந்த கவிப்பாடல்கள் பக்தி இலக்கிய மரபின் தொடர்ச்சியாக விளங்குபவையாகும். பெண் ஞானியர்கள் தத்தமது சமயம், வாழ்வியல் முறை மற்றும் சமூகநிலை போன்றவற்றால் வேறுபட்டாலும் தம்முடைய ஞானப்பாடல்களில் மிளிரும் தத்துவ நோக்கில் ஒன்றுபட்டே விளங்குகின்றனர். இத்தகைய பெண் ஞானியர்களின் காலம், வாழ்வு, குரு பக்தி, தத்துவம், இயற்றிய பாடல்கள் மற்றும் முக்தி போன்றவைகளுக்கு இடையேயான ஒற்றுமை மற்றும் முரண்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

    அத்வைதமும் சூபியிசமும்

    பாரதத்தின் தொன்மையான தத்துவ நெறிகளில் ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட அத்வைதமும் ஒன்று. இருமைத்தன்மையற்ற ஒரே நிலை என்பதே அத்வைதம் (அ-இல்லை + த்வைதம்-இரண்டு) என்பதன் பொருள். ஜீவாத்மாவும் (வணங்குபவர்) இறைவனும் (வணக்கத்திற்குரியவர்) வேறல்ல ஒன்றுதான் என்றும் உலகில் உள்ள அனைத்தும் இறைவனின் அம்சமே என்றும் இத்தத்துவம் கூறுகிறது. பெரும்பாலும் சைவர்களால் பின்பற்றப்படும் அத்வைதத் தத்துவமானது இந்துத் தத்துவ மரபில் முதன்மையானதாக விளங்குகிறது.

    அரேபியத் தீபகற்பத்தில் உருவான இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கைகளில் தலையாயது “ஓரிறைக் கொள்கையாகும் (அரபி – தவ்ஹீத்)”. வணக்கத்திற்குரியவர் அல்லாஹ் ஒருவனே என்பதே ஓரிறைக் கொள்கையாகும். மதத்தைக் கடைபிடிக்கும் முறையை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய மார்க்கத்தில் உண்டான பல பிரிவுகளில் சூபியிசமும் (அரபி – தசவ்வுப்) ஒன்றாகும். இறைவனைத் தன்னுள்ளும், இறைவனுக்குள் தன்னையும் (அரபி – வஹ்ததுல் வுஜுத்) காணும் உள்ளார்ந்த ஆன்மீகப் பார்வையை சூபித் தத்துவம் கூறுகிறது. உலகில் உள்ள அனைத்திலும் இறைவனைக் காணும் உயர்ந்த ஆன்மீக உணர்வுநிலையே சூபியிசம். அத்வைதமும், சூபியிசமும் பல பரிமாணங்களில் ஒன்றோடொன்று நெருங்கி நிற்கும் தத்துவ நெறிகள் ஆகும். இதனைத் தமிழ் சூபிப்பாடல்களில் காணப்படும் அத்வைத மற்றும் சைவ சமயக் கருத்துக்களின் தாக்கத்தைக் கொண்டு அறியலாம். இவ்விரு பெரும் தத்துவ நெறிகளில் செங்கோட்டை ஆவுடை அக்காள் அத்வைதத்தையும், தென்காசி ரசூல் பீவி அத்வைதம் கலந்த சூபி தத்துவத்தையும் பின்பற்றிப் பாடல்கள் இயற்றினர்.

    ஊரும் உறவும்

    செங்கோட்டை ஆவுடை அக்காள் மற்றும் தென்காசி ரசூல் பீவி ஆகிய இருவரையும் அவர்கள் வாழ்ந்த ஊரின் பெயரை முன்னொட்டாக வைத்தே அடையாளப்படுத்துகின்றனர். மேலும் அக்காள் மற்றும் பீவி (உருது: பீவி – மனைவி) என்கின்ற உறவுமுறைச் சார்ந்த சொல்லே இருவருடைய பெயரின் பின்னொட்டாக அமைந்துள்ளது. ஆவுடை என்பது இறைவனையும், ரசூல் என்பது இறைவனின் தூதரையும் குறிக்கும் சொற்களாகும். பெயரில் காணப்படும் இத்தகைய பொருத்தங்களும் முரண்களும் வெகுமக்கள் பார்வையில் ஆர்வமூட்டக் கூடிய வகையில் அமைந்துள்ளன.

    காலமும் கற்பிதமும்

    ஆவுடை அக்காள் வாழ்ந்த காலம் பற்றிய முரணான கற்பிதங்களே காணக்கிடைக்கின்றன. இத்தகைய சூழலில் ஆவுடை அக்காள் பற்றி வாய்மொழியாகப் பெறப்பட்ட வாழ்க்கைக் குறிப்புகளை நான்கு பேர் பதிவு செய்துள்ளனர். முதன் முதலில் அக்காளின் வாழ்க்கைக் குறிப்பானது, 1910ஆம் ஆண்டு தஞ்சாவூரைச் சேர்ந்த நா. வைத்தியநாத பாரதி அவர்களால் பதிப்பிக்கப்பட்ட “பிரம்ம மேகம்” எனும் சிறு பாடல் புத்தகத்தில் வெளியிடப்பட்டது. அந்நூலில் அக்காள் அவர்கள் 100 ஆண்டுகளுக்கு முன் (1810) வாழ்ந்தவர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவதாக, ஆய்குடி வெங்கடராம சாஸ்திரிகளால் 1953 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சிறு பாடல் புத்தகத்தில், அக்காள் அவர்கள் 400 ஆண்டுகளுக்கு முன் (1553) வாழ்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாவதாக “ஸ்ரீ ஆவுடையக்காள்” எனும் தலைப்பில் கோமதி ராஜாங்கம் (1954-ல்) எழுதிய கட்டுரையினை 1964 ஆம் ஆண்டு “ஸ்ரீ சங்கர க்ருபா” பத்திரிக்கையில் வெளியிட்டார். அக்கட்டுரையில் அக்காள் அவர்கள் 250 ஆண்டுகளுக்கு முன் (1704) வாழ்ந்தவர் எனக் குறிப்பிடுகின்றார். நான்காவதாக நித்யானந்தகிரி ஸ்வாமிகள் 2002 ஆம் ஆண்டு பதிப்பித்த “செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல் திரட்டு” எனும் நூலின் முன்னுரையில் (ஸமர்ப்பணம்) அக்காள் அவர்கள் 350 ஆண்டுகளுக்கு முன் (1652) வாழ்ந்தவர் எனக் குறிப்பிட்டிருக்கிறார். மேலே கூறப்பட்ட காலக் குறிப்புகளை ஆராயும்போது ஆவுடை அக்காள் அவர்கள் 1553, 1652, 1704, மற்றும் 1810 ஆகிய காலகட்டங்களில் வாழ்ந்திருக்கலாம் என்கின்ற முரண்பட்ட முடிவே கிடைக்கின்றன.

    ஆவுடை அவர்கள் வாழ்ந்த காலத்தினைப் பற்றி நிலவும் முரணான கற்பிதங்களைக் களைந்து ஓரளவு சரியான காலகட்டத்தை அறிந்து கொள்வதென்பது, ஆவுடை அவர்களின் மறுவாழ்விற்கு வித்திட்ட ஆன்மீக குருவான திருவிசைநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச தேசிக அய்யாவாளின் வாழ்க்கையை அறிந்து கொண்டதன் மூலம் சாத்தியப்பட்டது. 1635 ஆம் ஆண்டில் மைசூரில் பிறந்த அய்யாவாள், அங்கேயே திருமணம் செய்து தன்னுடைய தந்தையின் மரணம் வரை அங்கு வாழ்ந்து வந்தார். பின்பு ஆன்மீக வாழ்வினை மேற்கொண்ட அய்யாவாள் மைசூரிலிருந்து திருச்சி வந்தடைந்து சிலகாலம் தங்கினார். அதன்பின்பு திருச்சியிலிருந்து (கிட்டத்தட்ட 49 வது வயதிற்கு மேல்) இடம்பெயர்ந்து ஷாஹாஜி II அவர்கள் ஆண்டுகொண்டிருந்த (1684–1712) தஞ்சாவூருக்கு உட்பட்ட திருவிசைநல்லூரில் வந்து தாங்கினார். பல ஆன்மீகத் தலங்களுக்கும் நடைபயணமாகச் சென்று வந்த அய்யாவாள் இறுதியாகத் திருவிசைநல்லூரில் 1720 ஆம் ஆண்டு தனது 85 ஆம் அகவையில் முக்தியடைந்தார் என்பது தகவல். மேலும் அய்யாவாள் அவர்கள் சங்கரமடத்தின் 59 ஆம் பட்டமான ஸ்ரீ பகவன் நாம போதேந்த்ர சரஸ்வதி (1638–1692) அவர்களுக்கும், அத்வைத வேதாந்தியும், கருநாடக இசை வல்லுநருமான சதாசிவப் பிரம்மேந்திரரின் (????–1753) சமகாலத்தவர் என்ற தகவலும் சிலரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேற்கூறிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஆராயும் போது, தன்னுடைய 49 வயதிற்கு மேல் திருவிசைநல்லூர் கிராமத்தில் குடியேறிய அய்யாவாள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டார். அய்யாவாளின் ஆன்மீகப் பயணத்தின் ஒரு பகுதியாக அவர் தென்காசி, குற்றாலம் வழியாக நடைபயணமாக வேணாட்டு அரசர்களின் ஆட்சிக்குப்பட்ட செங்கோட்டைக்கு வருகை புரியும்போது அவர் ஏறக்குறைய 50லிருந்து 75 வயதிற்குட்பட்டவராக (கிட்டத்தட்ட 1685 க்கு மேல்) இருந்திருக்கவே வாய்ப்பு அதிகம். இந்தக் கணிப்பானது, கோமதி ராஜாங்கம் அவர்கள் ஸ்ரீசங்கர க்ருபா பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையில் வயது முதிர்ந்த நிலையில் இருந்த அய்யாவாள் செங்கோட்டைக்கு வருகை தந்தார் எனும் தகவலுக்கு வலுச் சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. மேலும் ஆவுடை அவர்கள் பருவமடைந்த இளம் விதவையாகவே இருந்தபோதுதான் முதன்முதலாக தன்னுடைய ஞான குருவான அய்யாவளைச் சந்தித்ததாக ஆய்குடி வெங்கடராம சாஸ்திரி மற்றும் கோமதி ராஜாங்கம் ஆகிய இருவரும் பதிவு செய்திருக்கிறார்கள். இதன் அடிப்படையில் 50 வயதுக்கு மேற்பட்ட அய்யாவாளை, இளம் கைம்பெண்ணான ஆவுடை அவர்கள் தன்னுடைய 15 மற்றும் 30க்கு உட்பட்ட வயதிற்குள் சந்தித்திருக்கவே வாய்ப்புள்ளது. மேற்கூறிய தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆராயும்பொழுது ஆவுடை அவர்கள் கிட்டத்தட்ட கி.பி. 1655–1695 இடைப்பட்ட காலகட்டத்தில் பிறந்திருக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதலாம்.

    ரசூல் பீவி அவர்கள் வாழ்ந்த காலம் மற்றும் வாழ்க்கை வரலாறு பற்றிய முழுமையான தகவல்கள் எதுவும் காணக் கிடைக்கவில்லை. இருப்பினும் ரசூல் பீவி அவர்களைப் பற்றிய சில வரலாற்றுத் தகவல்கள் அவருடைய பாடல்களில் அகச்சான்றாகக் காணக்கிடைக்கிறது. மேலும் ரசூல் பீவி அவர்கள் வாழ்ந்த காலகட்டம் 1910 என்று முனைவர் தாயம்மாள் அறவாணன் அவர்கள் பதிவு செய்துள்ளார். அதேசமயம் 1910 ஆம் ஆண்டு, ரசூல் பீவியினுடைய மகன் முகம்மதப்பா சாஹிப் அவர்கள் தன்னுடைய பெற்றோர்கள் இயற்றிய ஞானப்பாடல்களைத் தொகுத்து பரிமளத்தார் பாடல் எனும் தலைப்பில் நூலாக தென்காசி ராமானுஜம் அச்சுக்கூடத்தில் பதிப்பித்தார் என்றும், ரசூல் பீவி அவர்கள் இயற்றிய ஞானாமிர்த சாகரம் எனும் ஞானப்பாடல்கள் அடங்கிய தொகுப்பானது, பரிமளத்தார் பாடல் என்ற அந்த நூலின் பிற்பகுதியில் இடம் பெற்றுள்ளதாகவும் இரா. முத்துக்குமாரசாமி அவர்கள் எழுதிய சூஃபி இலக்கியப் பதிப்புகளும் உரைகளும் எனும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். மேற்காணும் தகவல்களின் அடிப்படையில் நோக்கும்பொழுது ஞானாமிர்த சாகரம் எனும் நூலினைப் பதிப்பிக்கும்பொழுது முகம்மதப்பா அவர்களின் வயதானது தோராயமாக 20க்கு மேல் 70க்குள் இருக்கக்கூடிய பட்சத்தில் ரசூல் பீவி அவர்கள் 1822க்கு மேல் 1872க்கு உட்பட்ட காலகட்டத்தில் பிறந்திருக்கவே வாய்ப்பு அதிகமாக உள்ளது.

    மேற்கண்ட ஆய்வின் வழியாக, ஆவுடை அக்காள் அவர்கள் பதினாறாம் நூற்றாண்டில் வேணாட்டு மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட செங்கோட்டையிலும், ரசூல் பீவி அவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி அல்லது பிரித்தானிய இந்தியப் பேரரசின் ஆட்சிக்குட்பட்ட தென்காசியிலும் பிறந்திருக்கலாம் என்பது புலனாகிறது.

    கைம்மை நோன்பும் காதல் வாழ்வும்

    பழமைவாதத்தின் பாசறையாக விளங்கிய பதினாறாம் நூற்றாண்டில், கேரள வேணாட்டு மன்னர்களின் ஆட்சியின்கீழ் இருந்த சிறுநகரமான செங்கோட்டையில் வாழ்ந்த ஓர் அந்தணர் குடும்பத்தில் பிறந்த பெண் ஆவுடை. அறிவார்ந்த சிறுமியான ஆவுடை குழந்தைப் பருவத்திலேயே திருமணமாகிக் கைம்பெண்ணானவர். ஆவுடை அவர்களின் தாயார் தாம் சார்ந்திருந்த சமூக வழக்கத்திற்கு மாறாக ஆவுடை அவர்களுக்கு அடிப்படைக் கல்வி புகட்டியும் கைம்மை நோன்பை ஏற்கவிடாமலும் வளர்த்தார். இருப்பினும் ஆவுடை பருவமடைந்த பின்பு சமூக நெருக்கடியின் காரணமாக தன்னுடைய தலை முடியயை மழித்து கைம்மை நோன்பினை ஏற்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் கைம்பெண்கள் மீதான அடக்குமுறை மற்றும் சமூகக் கட்டுப்பாடுகள் காரணமாக ஆவுடை அவர்கள் உளவியல் ரீதியாகப் பல துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தது.

    ரசூல் பீவி அவர்களின் வாழ்க்கை குறித்த தகவல்கள் அவரது பாடல்களில் காணக்கிடக்கின்றன. ரசூலின் பாடலின் வழியாக அவருடைய தந்தையார் நயினார் முகமது என்றும் கணவர் பரிமளத்தார் என்று அழைக்கப்படும் புலவர் ஞானி முகமது காசிம் சாகிபு என்றும், மகன் முகம்மதப்பா சாஹிப் என்றும் அறியமுடிகிறது. ரசூல் பீவி மட்டுமின்றி அவரது கணவரும் ஒரு சூபி ஞானியாகத் திகழ்ந்தார். மேலும் இருவரும் இணைந்தே ஆன்மீகச் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டனர். பீவி தன்னுடைய கணவர் பரிமளத்தாரோடு வாழ்ந்த காதல் வாழ்வினை மரணத்துக்குப் பின்பான மறுமையிலும் தொடரவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவதாகக் கீழ்வரும் பாடலில் பதிவு செய்துள்ளார்;

    ‘மயில் குயில்போல் கூடினமே மாநிலத்தில் மனமே
    மறைந்தாலும் இதுபோலே மண்ணறையில் இருக்க
    துயிலுடைந்து எழுந்ததுபோல் துணைமஹூலில் இருக்க
    துலக்கும் ரஹ்மான் ஆணை துய்யோன் பரிமளமே’

    மேலும் ரசூல் பீவியை புகழ்ந்து அவருடைய மகன் பாடல் இயற்றியதோடு மட்டுமல்லாமல் பீவியினுடைய பாடல்களைப் புத்தகமாகப் பதிப்பித்திருப்பதையும் காணும்பொழுது ரசூல்பீவி அவர்கள் மனநிறைவான காதல் வாழ்க்கையின் வழியே ஆன்மீக வாழ்வினை வாழ்ந்தார் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

    ஆவுடை அக்காள் மற்றும் ரசூல் பீவி ஆகியோருடைய வாழ்வினை ஒப்புநோக்கும்பொழுது கைம்பெண்ணான அக்காளுக்கு ஏற்பட்ட சமூக அழுத்தம் எனும் சிறையில் இருந்து மீள்வதற்கு ஆன்மீக விடுதலையை நோக்கிப் பயணித்ததை உணரலாம். இதற்கு மாறாக ரசூல்பீவி அவர்கள் இல்லற வாழ்க்கை வாழ்ந்து கொண்டே ஆன்மீக மெய்ஞான நிலையை நோக்கிப் பயணித்தார் என்பது புலனாகிறது.

    குருவருளும் திருவருளும்

    ஆவுடை அவர்கள் சமூக அடக்குமுறையின் காரணமாக மனமுடைந்திருந்த சமயத்தில், தஞ்சை மராத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட திருவிசைநல்லூர் என்ற கிராமத்தில் இருந்து ஸ்ரீதர வெங்கடேச தேசிக அய்யாவாள் என்கிற மகான் செங்கோட்டைக்கு வருகை புரிந்தார். கைம்பெண்ணான ஆவுடை அவர்கள் சமூக கட்டுப்பாட்டையும் மீறி ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாளை அரிஹர நதிக்கரையில் அமைந்த மண்டபத்தில் சந்தித்து, அவரை தன்னுடைய ஞானகுருவாக ஏற்றார். இதன் காரணமாக சமூக நிந்தைக்கும் ஆளானார். இந்தச் சந்திப்பே ஆவுடை அவர்களின் வாழ்வில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. குருவினுடைய திருவருளால் அத்வைத ஞானமார்க்கத்தைப் பின்பற்றி மெய்ஞானத் தெளிவடைந்து தன்மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டிருந்த சமூக அடக்குமுறையினைத் தகர்த்தெறிந்தார். மேலும் இப்பூவுலகில் தனக்கு ஏற்பட்ட பற்றினை அகற்றி இறைவனோடு தன்னை ஒன்றச் செய்த குருநாதருக்கு தனது நன்றியைக் கீழ்காணும் பாடல் வழியே சமர்பிப்பதன் மூலம் அக்காளுடைய குரு பக்தி புலனாகிறது.

    “பாசமகற்றிப் பதிதன்னில் சேர்த்து வைத்த பண்டிதனே! – குருநாதா!
    தேசமெங்கும் புகழ் ஸ்ரீ வெங்கடேசுவர தேசிகரே! – குருநாதா!”

    அத்வைத மெய் ஞான ஆண்டி, பக்: 10

    “குருநாதனைப் பூஜித்தால் தாண்டி உனக்கு நன்மைவரு மென்றாண்டி
    கும்பிக்குச் சோறிடு என்றாண்டி – அவன் கூடைக்கு முத்திடு என்றாண்டி”

    குரு, பக்: 85

    ஒரு ஆன்மீகக் குருவின் ஞான வழிகாட்டுதலின் வழியாகவே ஒரு சூபி தன்னுடைய ஆன்மீக மெய்ஞான நிலையினை அடைய முடியும். மேலும் எவருக்கு ஷைகு (குரு) இல்லையோ அவருக்கு ஷைத்தான்தான் ஷைகு என்பது சூபிக்கள் மத்தியில் வழக்கிலுள்ள பழமொழியாகும். குரு வழங்கக்கூடிய ஆன்மீக அறிவுரைகளும் அங்கீகாரமும் (இஜாஸா) சூபியின் வாழ்வில் தவிர்க்க இயலாத அங்கங்களாகும். இத்தகைய குரு – சீட உறவு எனும் நெடிய உடைபடாத சூபியிச சங்கிலித் தொடரின் இரு கண்ணிகளாக விளங்கியவர்கள்தான் சூபி ஞானி ரசூல் பீவி அவர்களும் அவருடைய ஆன்மீக குருவான ஷெய்கஃப்துல் காதர் ஷாஹன்ஷா அவர்களும் ஆவர். ஆன்மீகக் குருவினுடைய திருவருட் துணையால் பீவி அவர்கள் பல அத்வைத மெய்ஞான ஒளிவீசும் பாடல்களை இயற்றினார்.

    அத்வைத மற்றும் சூபி தத்துவ மரபின்படி ஞானவாழ்வுப் பயிற்சி செய்பவர்களுக்கு குருவழிகாட்டுதல் மிகவும் அவசியமானது. ஆவுடை மற்றும் ரசூல் பீவி ஆகிய இருவரும் தத்தமது குருவின் ஞான வழிகாட்டுதலின்படி ஆன்மீக சாதனைகளை மேற்கொண்டனர் என்பதை அவர்களின் பாடல்களின் வழியே அறிய முடிகிறது.

    பக்தியும் பாடலும்

    குருவினுடைய திருவருளால் ஆன்மீக சாதனைகளை மேற்கொண்ட ஆவுடை அவர்கள், நடைபயணமாகப் பல புண்ணியத் தலங்களுக்குச் சென்று இறுதியாக, செங்கோட்டை வந்து தங்கினார். செங்கோட்டையில் பல ஆண்டுகள் வாழ்ந்த ஆவுடை அவர்கள் அத்வைதச் சிந்தனை மிளிரும் பல பாடல்களை இயற்றினார். வாய்மொழியாகப் பரவிய ஞானப்பாடல்களில் சேகரிக்கப்பட்டவை சொற்பமே. அவற்றில் சில:

    1. வேதாந்த குறவஞ்சி நாடகம்

    2. வேதாந்த வித்யா சோபனம்

    3. வேதாந்த அம்மானை

    4. வேதாந்தப் பள்ளு

    5. வேதாந்த ஆண்டி

    6. வேதாந்த வண்டு

    7. வேதாந்த ஆச்சே போச்சே

    8. ப்ரும்ம ஸ்வரூபம்

    9. “அன்னே பின்னே” என்னும் வேதாந்த ப்ரத்தியோத்திரகும்மி

    10. ப்ரும்ம மேகம்

    11. தக்ஷிணாமூர்த்தி படனம்

    12. வேதாந்தப் பல்லி

    13. பகவத்கீதா ஸாரசங்கிரஹம்

    14. வேதாந்தக் கப்பல்

    திருநெல்வேலிச் சீமையிலுள்ள அந்தணப் பெண்கள் மத்தியில் ஆவுடை அவர்களின் பாடல்கள் வெகுவாகப் பாடப்பட்டு வந்தன. இதுவரையிலும் ஆவுடை அவர்களை நிந்தனை செய்த சமூகம் அவருடைய ஞானப் பாடல்கள் மற்றும் ஆன்மீகப் பணியின் காரணமாக அவரை ஆவுடை அக்காள் என்று போற்றியழைத்து மரியாதை செலுத்தியது.

    ரசூல் பீவி அவர்கள் இயற்றிய ஞானாமிர்த சாகரம் எனும் ஞானப் பாடற் தொகுதியில்:

    1. காப்பு – கடவுள் வாழ்த்து
    2. பொருள் வினா விடை
    3. கண்மணிப்பதிகம்
    4. பரிமளக் கண்ணி, வெண்பா
    5. கண்ணிகள்
    6. மாக்கொடிக்கண்ணி
    7. வெண்பா
    8. என் தாய்க் கண்ணி
    9. முச்சுடாக் கண்ணி
    10. றகுமான் கண்ணி
    11. பரமானந்தக்கண்ணி
    12. பீர்முறாதுக்கண்ணி
    13. என்னாட்கண்ணி
    14. குருபரக்கண்ணி
    15. கண்மணிக்கண்ணி
    16. வேகுதேகக் கண்ணி
    17. காணேனோ
    18. வாழ்வோமே
    19. காண்பேனே
    20. ஆகாதோ
    21. நெஞ்சோடு புலம்பல்
    22. வெண்பா
    23. இரட்டை ஆசிரிய விருத்தம்
    24. காட்சிப்படலம்
    25. கோட்டைப்படலம்
    26. விருத்தம்
    27. சந்தவிருத்தம்
    28. முகிய்யிதீனே
    29. பேரின்பத் திறவுகோல் படலம்
    30. கொச்சகம்
    31. அம்மானை
    32. பைத்து அல்லாகூ
    33. முனா ஜாதது
    34. இலாஹி என முடியும் தந்நிலையின் ஆனந்தக் கும்மி
    35. ‘தானே நீ தானல்லா தானே குனறூகல்லா’ ‘தானே றசூலுல்லா தானே இன்ஷானல்லா’ எனும் பாடல்
    36. கப்பல் சிந்து
    37. தாய் மகனேசல்

    போன்ற தலைப்பில் ஞான ஒளி வீசும் பாடல்கள் அடங்கியுள்ளன.

    அக்காளும் பீவியும் தமது ஆன்மீக மெய்யுணர்வின் வெளிப்பாடாக அமைந்த ஞானப் பாடல்களை, அனைத்துத் தரப்பினரும் அறிந்து கொள்ளும் வண்ணம் எளிமையான நாட்டுப்புறப் பாடல் வடிவிலேயே இயற்றினார்கள். எளிமையான கண்ணிகளும், முடுகுகளும், சிந்துகளும், கப்பற்பாடல்களும் எளியவரும் மனனம் செய்யும்படி இருந்ததால், வாய்மொழியாகவே பரவ ஏதுவாய் இருந்தது. அக்காளின் ஞானப் பாடல்களால் ஈர்க்கப்பட்ட அநேகர் அவருடைய சீடர்களாக மாறினர் என்று கோமதி ராஜாங்கம் அவர்கள் பதிவு செய்துள்ளார். இதேபோன்று ரசூல் பீவியினுடைய ஞானப் பாடல்கள் அவருக்கு அநேகம் பிறசமயத்தைச் சார்ந்த சீடர்களைப் பெற்றுத்தந்தது. அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர்கள் பாளையம்கோட்டை எம். சுப்பையா பிள்ளை, தென்காசி பாடலிங்க முதலியார் மற்றும் தென்காசி கிருஷ்ணம்மாள் சந்நியாசி ஆகியோர் ஆவர்.

    முழுமையும் முக்தியும்

    ஆவுடை அவர்களின் மரணம் பற்றிய தெளிவான குறிப்புகள் கிடைக்கப் பெறவில்லை. ஆன்மீக முழுமையடைந்த ஆவுடை அவர்கள் ஆடி அமாவாசை தினத்தன்று குற்றாலத்தில் நீராடிவிட்டு, தனது புடவைப்பெட்டியோடு பொதிகை மலைமீது ஏறிச்சென்றவர் பின்பு திரும்பவே இல்லை என்ற செவிவழிச் செய்தியைக் கோமதி ராஜாங்கம் அவர்கள் பதிவுசெய்துள்ளார். அதேசமயம் அனுபோக ரத்னமாலை எனும் இரங்கற்பாடலை, கி.பி. 1720ஆம் ஆண்டில் மறைந்த ஸ்ரீதர அய்யாவாளுக்காக ஆவுடை அவர்கள் இயற்றியுள்ளார். இதனடிப்படையில் நோக்கும்போது ஆவுடை அக்காள் அவர்கள் 1720க்கு பின்னர்தான் இறந்திருக்க வேண்டும் என்பதனை  அறிய முடியும்.

    ரசூல் பீவி அவர்கள் மரணித்த வருடம் பற்றிய சரியான குறிப்புகள் இல்லை. இருப்பினும், தாயம்மாள் அறவாணன் அவர்களின் கருத்தின்படி ரசூல்பீவி 1910ஆம் ஆண்டுக்குப் பின்புதான் இயற்கை எய்தி இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் ரசூல்பீவி 1910க்கு முன்பே மரணித்து இருக்கக் கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் கருதலாம்.

    முடிவுரை

    செங்கோட்டை ஆவுடை அக்காள் மற்றும் தென்காசி ரசூல்பீவி ஆகிய இருவரும் தென்பொதிகையின் சாரலின் இருவேறு பகுதியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் வாழ்ந்த காலம், வாழ்க்கை, குரு பக்தி, இயற்றிய பாடல்கள் மற்றும் மரணம் போன்றவற்றில் பல ஒற்றுமை மற்றும் வேற்றுமைகள் காணப்படுகின்றன. ஆவுடை அக்காள் மற்றும் ரசூல் பீவி ஆகிய இருவரும் வாழ்ந்ததற்கான கால இடைவெளி அதிகபட்சமாக 200 ஆண்டுகளேனும் இருக்கலாம். ஆவுடை அவர்களின் பதின்ம வயதிலிருந்து மரணம் வரை தாம் சந்தித்த இன்னல்களையும் அடக்குமுறைகளையும் ஞானவாழ்வினை ஆயுதமாக ஏந்தியே எதிர்கொள்ள வேண்டியதாய் இருந்தது. இதற்கு மாறாக ரசூல்பீவி அவர்கள் கணவனோடு இணைந்து இனிமையான இல்லற மற்றும் ஞானவாழ்வினை மேற்கொண்டார் என்பதும் புலனாகிறது. குருவினுடைய வருகையும் அருளும் ஆவுடை அவர்களின் வாழ்க்கையில் பெரும் மாறுதலையும் ஆறுதலையும் தந்தது. குருவினுடைய அருளுளோடு இணைந்து கணவருடைய ஆன்மீக வழிகாட்டுதலும் ரசூல் பீவி அவர்களை வழி நடத்தியது எனலாம். ஆவுடை அவர்கள் தன்னுடைய பாடல்களில் துயரத்தின் வலியையும், உலக வாழ்வின் உள்ளீடற்ற தன்மையையும், மதசம்பிரதாய எதிர்ப்பினையும் அத்வைத சிந்தனை கலந்து பாடியுள்ளார். ரசூல் அவர்களின் பாடல்களில் இஸ்லாமியச் சிந்தனைகளோடு சைவ சமயச் சொல்லாடல்களும், அத்வைதச் சிந்தனைகளும் விரவிக் காணப்படுகின்றன. மேலும் ரசூல் அவர்களின் பாடல்களில் ஆவுடை அவர்களின் பாடற் கருத்துக்களின் தாக்கம் பரவலாகக் காணப்படுகின்றது. உதாரணமாக, கண்ணிகள், முடுகுகள் மற்றும் கப்பல் சிந்து போன்ற பாடல்களில் இந்த ஒற்றுமையை அறியலாம். இரும்புப் பாதையின் இரு தண்டவாளங்களைப் போன்று இருவரின் மத நம்பிக்கையும் வாழ்வும் இருந்தாலும் அவர்கள் வெளிப்படுத்திய ஞானக் கருத்துக்களும் அதன் சாரமும் ஒன்றே, இறுதியாக அவை சேரும் இடமும் ஒன்றே. மத சகிப்புத்தன்மை அருகிவரும் இக்காலகட்டத்தில் இவ்விரு ஞானியரின் வாழ்வும் ஆன்மீகப் பங்களிப்பும் அனைவரும் படித்து உணர வேண்டியது என்றால் அது மிகையில்லை.

    ஆய்வுக்கு உதவிய சான்றுகள்:

    1. பதிப்பாசிரியர் நித்யானந்த கிரி ஸ்வாமிகள் (2002). செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் (பக்தி, யோக, ஞான, வேதாந்த ஸமரஸ) பாடல் திரட்டு. ஸ்ரீ ஞானானந்த நிகேதன், விழுப்புரம்.
    2. நாஞ்சில் நன்மொழியோன் (1981). தமிழில் இஸ்லாமிய மெய்ஞான இலக்கியங்கள்: பெண்பாற் சூஃபி தென்காசி ரசூல் பீவி. தொகுப்பாசிரியர் மணவை முஸ்தபா, வெளியீடு: மீரா பவுண்டேஷன், சென்னை. பக். 125–137.
    3. இரா. முத்துக்குமாரசாமி (1981). தமிழில் இஸ்லாமிய மெய்ஞான இலக்கியங்கள்: சூஃபி இலக்கியப் பதிப்புகளும் உரைகளும். தொகுப்பாசிரியர் மணவை முஸ்தபா, வெளியீடு: மீரா பவுண்டேஷன், சென்னை. பக். 207.
    4. முனைவர். அ. ஸ்ரீவித்யா (2017). பல்துறை ஆய்வுக் களஞ்சியம் (மகளிர் தினக் கருத்தரங்கம்): செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். பக். 380–382.
    5. நாஞ்சில் நாடன் (2010). கட்டுரை: செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் (பக்தி, யோக, ஞான, வேதாந்த ஸமரஸ) பாடல் திரட்டு – நூல் அறிமுகம், சொல்வனம் (23-08-2010) – இதழ் 32.
    6. முனைவர். தாயம்மாள் அறவாணன் (2017). கட்டுரை: இஸ்லாமியப் பெண் ‘ஞானி’கள்! தினமணி (04-03-2017)
    7. ரா. கணபதி (2018). தெய்வத்தின் குரல்: அத்வைதம்: (முதல் பகுதி) – ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், வானதி பதிப்பகம். பக். 19-27.
    8. வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன் (2010). சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள். விகடன் பிரசுரம். பக்கம் 18.
    9. மௌல்வி முஹம்மது அப்துர் ரஹ்மான் ஸாஹிபு (1962). முஸ்லிம் அத்வைத மூலமொழி-துஹ்பத்துல் முர்ஸலா, ஷாஹுல் ஹமீதிய்யா பிரஸ், திருவல்லிக்கேணி, சென்னை.
    10. ஸ்ரீ பகவன் நாம போதேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் திவ்ய சரித்திரச் சுருக்கம். வெளியீடு: ஸ்ரீ பகவன் நாம போதேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அதிஷ்டானம். கோவிந்தபுரம், ஆடுதுறை.
    11. Kanchana Natarajan (Translator) (2012). Transgressing boundaries: The songs of Shenkottai Avudai Akkal. Zubaan an Asso. of Kali for Women; 2012 edition, eBook ISBN: 9789383074464.
    12. Larrie Benton Zacharie (Ed.) (2013). Sridhara Venkatesa Ayyaval, Verpublishing, United States, ISBN10 6139223547 / ISBN13 9786139223541
    13. Th. Emil Homerin (2014). The Principles of Sufism. New York University Press, New York and London.

    இணையச் சுட்டிகள்:

    1. https://www.britannica.com/place/Kerala/History
    2. https://www.hindutamil.in/news/spirituals/192752–2.html
    3. http://www.sriayyaval.org/lsdetail.html
    4. http://sriayyaval.org/history/sridhara1.htm
    5. https://serfojimemorialhall.com/maharajah-shahaji-II.html
    6. https://www.vikatan.com/spiritual/temples/83043-
    7. https://www.sufimanzil.org/tag/sufism-tamil-books/
    8. https://www.urdupoint.com/dictionary/urdu-to-english/biwi-meaning-in-english/97417.html
    9. http://www.mailofislam.com/sufism_tamil.html

    கட்டுரை ஆசிரியர் 

    முனைவர். ரமேஷ் தங்கமணி


    ஆய்வறிஞர் மதிப்புரை (Peer Review):

    தமிழகத்தின் தென்பகுதியாகிய தென்காசி மற்றும் செங்கோட்டையில் வாழ்ந்த இரு பெண் ஆளுமைகளின் வாழ்வியலை ஒப்பிட்டுச் செய்யப்பட்டுள்ள ஒப்பீட்டாய்வாக இக்கட்டுரை அமைகிறது. இருவர்தம் படைப்புகளில் உள்ள அத்வைத சூபியிசக் கோட்பாட்டு ஒற்றுமையைப் புலப்படுத்தியிருப்பது கட்டுரைக்கு மேலும் வலுச் சேர்க்கிறது. அதைப் போலவே இருவர்தம் கால ஆராய்ச்சியும் தகுந்த சான்றுகளால் நிறுவப் பெற்றுள்ளது.

    இம்மையில் போராடிய ஒருவரும் மறுமைக்குப் பேறு வேண்டிய மற்றொருவருமாக குருவருளையும் திருவருளையும் வேண்டிப் பாடிய இருவருடைய வாழ்வியலைப் ஆய்வுக்கு உட்படுத்த ஒப்புமையும் பகுப்புமையுமாக விளங்கும் உத்தி நன்று. பாடல் மேற்கோள்கள், நூல்களின் பட்டியல், மேலும் பல ஆய்வுகளுக்கு வழிகோலும். இருநூறு ஆண்டுக்கால இடைவெளியில் ஒரே பகுதியில் ஒன்றியும் மாறுபட்டுமான வாழ்வியலைக் கொண்டிருந்த இருவர்தம் படைப்புகளும் ஒத்துக் காணப்பட்டுள்ளதை இந்தக் கட்டுரை எடுத்துக் காட்டுகிறது.


    Share
  • வைரமுத்து பிறந்தநாள் – ஒரு வரலாற்றுப் பிழை

    வைரமுத்து பிறந்தநாள் – ஒரு வரலாற்றுப் பிழை

    வித்வான், முனைவர் ச.சுப்பிரமணியன்

    இரண்டு நாள்களாக நன்கு சிந்தனை செய்து இந்தப் பதிவினை இடுகிறேன். ஆனால் வருத்தத்தோடு இடுகிறேன்!

    தமிழன் வரலாற்றைப் பதிவு  செய்யத் தெரியாதவன் என்பது நீண்ட  நெடுங்காலமாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு. சரி!

    வைரமுத்து பிறந்தநாள் என்று கட்டற்ற தகவல் களஞ்சியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் நாள்  13/07/1953

    இதனைவிட ஓர் அகச்சான்று, அவர் எழுதிப் பதிப்பித்த கவிதை நூல்களுள் ஒன்றான ‘இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல’  என்ற நூலின் இறுதிக் கவிதைத் தலைப்பு ‘உயில்’

    அந்த உயிலில்

    “என் கல்லறையில்
    தோற்றம் எழுதுங்கள்!
    13/07/1953”

    இது அவர் கைப்பட எழுதிய வரிகள்!

    காவ்யா சண்முகசுந்தரம் 2013-இல் வைரமுத்து அவர்களுடைய 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு பணியைச் செய்தார்.

    அந்தப் பணி என்னவென்றால், தமிழகப் பல்கலைக்கழகங்களில் வைரமுத்து அவர்களுடைய படைப்புகளைப் பற்றிய ‘ஆய்வியல்நிறைஞர்’, முனைவர் ஆகிய பட்டங்களுக்காகப் பணிந்தளிக்கப்பட்ட ஆய்வேடுகளில் இருந்து அறுபது சிறந்த கட்டுரைகளைத் (இயல் பகுதிகளை) தொகுத்து “வைரமுத்து ஒரு பல்கலைக்கழகம்” என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளார். அந்தத் தொகுப்பில் என்னுடைய மேற்கண்ட இரண்டு பட்டங்களின் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

    இந்தச் சான்றுகளால் வைரமுத்தின் பிறந்தநாள் 13/07/1953 என்பது உறுதிப்படுகிறது!.

    அப்படியென்றால் 13/07/2020 அன்று அவருக்கு அகவை என்ன?

    நிறைவான அகவையைச் சொல்ல வேண்டுமானால் 67 என்று சொல்லியிருக்க வேண்டும்.

    தொடங்குகின்ற அகவையைச் சொல்ல வேண்டுமானால் (இதுதான் முறை) 68 என்று சொல்லியிருக்க வேண்டும்.

    இரண்டுமில்லாமல் 66 என்றே அத்தனை ஊடகங்களிலும் “வைரமுத்து 66’ என்றே லோகோ போட்டுக் காட்டினார்கள்.

    ஸ்டாலின், ‘அவருக்கு வயது 66, அவர் கவிதைக்கு வயது 16’ என்றும் கூறியிருந்தார்.

    இன்றைக்குத் தமிழகச் சமுதாயச் சூழலில் இதுபோன்ற பதிவுகள் எந்த மனிதரின் தனிமனித வாழ்விலும் எந்த வளர்நிலை மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதை நான் நன்கு அறிவேன்.

    இருந்தாலும் நாடறிந்த கவிஞர் ஒருவரின் பிறந்தநாள் பற்றிய தெளிவான பதிவைக்கூட நாம் செய்ய இயலாதபோது நம் முன்னோர்களைக் குறைசொல்வது என்ன நியாயம்?

    செய்வன திருந்தச்செய்! இது எல்லாருக்கும் பொருந்தும், வைரமுத்து உட்பட!

    Share
  • “கந்தர்  சஷ்டி கவசம்” விவகாரம் பற்றி நடிகர் ராஜ்கிரண்

    “கந்தர் சஷ்டி கவசம்” விவகாரம் பற்றி நடிகர் ராஜ்கிரண்

    நடிகர் ராஜ்கிரண்

    ஒவ்வொரு மனிதனுக்கும்,
    எந்த வகையிலேனும்,
    தனக்குப் பாதுகாப்பு தேடிக்கொள்ள
    உரிமை இருக்கிறது.

    அது, அவனது சுதந்திரம்.

    முருகப் பெருமானை நம்புவோர்க்கு,
    “கந்தர் சஷ்டி கவசம்” என்பது,
    “ஒரு பாதுகாப்பு அரண்”.

    இதை ஆழ்ந்து படித்தால்,
    அறிவியல்பூர்வமான,
    மனோதத்துவரீதியான
    ஆத்ம பலன்கள் இருக்கின்றன…

    இறைவனை நம்பாதோர்க்கு,
    “நம்பாமை” என்பது,
    அவர்களின் சுதந்திரம்.

    நம்பிக்கை கொண்டோர்க்கு,
    “நம்புதல்” என்பது,
    அவர்களின் சுதந்திரம்.

    இதில், அவரவர் எல்லையோடு
    அவரவர் நின்றுகொள்வது தான்,
    மேன்மையானது.

    தேவையில்லாமல் மற்றவர் எல்லைக்குள்
    புகுந்து, விமர்சனம் செய்வதென்பது,
    மிகவும் கீழ்மையானது…

    இந்த கொடிய கொரோனா காலக்கட்டத்தில்,
    நோயோடும், நோய் பயத்தோடும்,
    பொருளாதாரச் சீர்கேட்டோடும்,
    உண்ண உணவின்றி
    கோடிக்கணக்கான நம் மக்கள்
    தவித்துக்கொண்டிருக்கும் சூழலில்,

    இப்படி ஒரு பிரச்சினைக்குத் தீ மூட்டுவதில்,
    யாருக்கோ, ஏதோ, உள்நோக்கம்
    இருப்பதாகவே நினைக்கத் தோன்றுகிறது…

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 5 (ஊரார்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 5 (ஊரார்)

    ச. கண்மணி கணேசன்,
    முதல்வர்& தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி. 

    முன்னுரை

    பெயரிலேயே பன்மை விகுதி கொண்ட ‘ஊரார்’ என்னும் குழுப்பாத்திரம் பலவிடங்களில் ‘ஊர்’ என்னும் இடவாகு பெயரால் குறிக்கப்படுகிறது. கூற்று நிகழ்த்தும் உரிமை இல்லாத இப்பாத்திரத்தைப் பற்றித் தலைமைப்பாத்திரங்களும் துணைப்பாத்திரங்களும் சொல்வது என்ன? இக் குழுப்பாத்திரத்துள் யாரெல்லாம் அடங்குவர்? இப்பாத்திரத்தின் செயல் என்ன? பயன் என்ன? இப்பாத்திரம் என்னென்ன பேசியதாகச் சொல்லப் படுகிறது? அப்பேச்சின் நோக்கம், தன்மை, விளைவு, பெறுமதி முதலியன குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

    ‘ஊரார்’ ஒரு பாற்பொதுச் சொல்

    ஊரார் என்பது ஆண், பெண் இருபாலரையும் பொதுப்படக் குறிக்கும்  பலர்பாலுக்குரிய சொல் ஆகும். பெண்களை மட்டும் வேறுபிரித்துச் சுட்டும் இடங்களில் அது விதந்து கூறப்பட்டுள்ளது.

    புறத்தொழுக்கத்தில் நின்று பின் தலைவியிடம் மீண்டுவரும் தலைவனுக்கு வாயில் மறுக்கும் தோழி;

    “ஊர் முழுதும் நுவலு நிற்காணிய சென்மே” (அகம்.- 176)

    என்கிறாள். இங்கே ‘ஊர் முழுதும்’ என்று அழுத்தம் கொடுப்பது குறிப்பிடத்தக்கது. ஆண்கள், பெண்கள் ஆகிய அனைவரும் காணும்படிச்   செல்வாயாக என்ற பொருளே ஏற்புடைத்தாகிறது.

    “அழிதக மாஅந்தளிர் கொண்ட போழ்தினான் இவ்வூரார்
    தாஅந் தளிர் சூடித் தந்நலம் பாடுப
    யாஅந் தளிர்க்கும் இடைச் சென்றார் மீள்தரின்
    யாஅம் தளிர்க்குவேம் மன்” (கலித்.- 143)

    என்ற பாடலில் ‘இவ்வூரார்’ பெண்களை மட்டுமே குறிக்கிறது. ஏனெனில் யாமரம் தளிர்த்திருக்கும் காட்டுவழிச் சென்றவராகிய தலைவர் மீண்டு வரும்போது நான் பசலை நோய் நீங்கி உடல் நலம் பெறுவேன் என்ற தலைவி; தன் நிலையைப் பிரியாத ஊரார் நிலையுடன் ஒப்பிட்டு உரைக்கிறாள். இதனால் இங்கு ஊரார் பெண்களே ஆகின்றனர். இங்ஙனம்  பெண்டிரைத் தனித்துக் கூறும் பிற பாடல்களும் உள (அகம்.- 95; நற்.- 223)

    ஊரார் பற்றிய விமர்சனம்

    ஊரார் பேதைமை உடையவர்; ஆரவாரத்துடன் புறம் பேசுபவர்; இரக்கம் இல்லாதவர்; புரியும் திறனற்றவர்; பிறழப் புரிந்து கொள்பவர் என்றெல்லாம் சாடப்படுகின்றனர். அன்பிற்குரிய ஊர் என்று அங்கதச் சுவையுடன்  போற்றப்படுவதும் உண்டு.   .

    தலைவனின் ஊரை ஏத்தித் தலைவி பாடினாளாக; ஊரார் குறை கூறுகின்றனர். அவர்கள் அறிவில்லாதவர்கள் என்னும் பொருள்பட;

    “அழிவது எவன்கொல் இப்பேதை ஊர்க்கே” (குறுந்.- 89)

    என்கிறாள் தோழி.

    “……………………………..யான் ஒழிந்து இருத்தல்
    நகுதற்கு ஒன்று இவ் அழுங்கல் ஊர்க்கே” (கலித்.- 23)

    என்ற பாடற்பகுதியில்; தலைவனைத் தான் பிரிந்து இருக்கும் போது ஊரார் அவளது ஆற்றாமையைக் கண்டு நகுவது மட்டுமின்றி; ஆரவாரத்துடன் கூடிக் கூடிப் பேசுவர் என்று கருத்துரைக்கிறாள் தலைவி. பிற பாத்திரங்கள் வாயிலாகவும் ‘அழுங்கல் ஊரே’ என்னும் தொடர் இடம் பெறும் பாடல்கள் ஏராளம் (நற்.- 63, 203, குறுந்.- 140, 214, 351, 372; ஐங்.- 181; அகம்.- 70, 180, 400)

    “…………………………..என் நெஞ்சநோய்
    கண்டும் கண்ணோடாது இவ்வூர்….
    ………………………………இக்காமம்
    உணர்ந்தும் உணராது இவ்வூர்” (கலித்.- 140)

    என்று தனக்கு இரங்காத ஊர்மக்கள் குறித்துப் பேசுகிறான் தலைவன்.

    அவனது கூற்றில் காமஉணர்வைப் புரிந்து கொள்ளாதவராகவும் ஊரார்  விமர்சிக்கப் படுகின்றனர்.

    ஊரார் பேச்சு ‘எக்கேடும் கெட்டுப் போகட்டும்’ என்று புறந்தள்ளத் தக்கது என்ற போக்கில் உடன்போகத் துணியும் தலைவி;

    “அலர் சுமந்து ஒழிக இவ்வழுங்கல் ஊரே” (நற்.- 149)

    என ஊரை விட்டே ஒதுங்குகிறாள்.

    வினைவயிற் பிரிந்த தலைவன் குறித்த காலத்தில் மீண்டு வராத வழித்; ‘தன் துன்பத்தைப் பற்றிக் கவலும் ஊரார் தன் தலைவன் சென்ற காட்டுவழி பற்றிக் கவலை கொள்ளவில்லையே’ எனத் தலைவி  புலம்பும்  போது அவர் பிறழப் புரிந்து கொள்பவராக பேசப்படுகிறார்.

    “ஈங்கு யான் தாங்கிய எவ்வம்
    யாங்கு அறிந்தன்று இவ் அழுங்கல் ஊரே” (குறுந்.- 140)

    என்பது தலைவியின் மனக்குறை.

    தலைமக்கள் களவொழுக்கம் என்ற ஒருசெய்தி பற்றிப் பேசும்போது; ஒன்றிற்கு மேற்பட்ட பல கோணங்களில் ஊராரின் அலர் கிளைத்துப் பெரிதாகப் பரவுவதால் அங்கதச் சுவையுடன் “மையல் ஊர்” என்று நையாண்டி செய்கிறாள் தோழி (குறுந்.- 374).

    ஊரார் பேசுவதைச் சுட்டும் பாத்திரங்கள்

    களவுக்காலத் தலைவன், தலைவி, தோழி, கற்புக்காலத் தலைவி,  தோழி, காமக்கிழத்தி எனப் பலரும்; தம்முள்ளும் கண்டோருடனும் ஊரார் பேசியதை எடுத்துச் சொல்கின்றனர்.

    களவுக் காலம்

    தலைவன் கூற்றில் ஊரார்

    தலைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்லும் தலைவன் காட்டு வழிநடை வருத்தம் குறித்துப் பேசும்போது; அவளது ஊரார் எழுப்பிய பேரலர் குறித்த தன் கருத்தைப் புலப்படுத்துகிறான். அவர்கள் செல்லும் வழியானது மேகம் இல்லாது வெளிறித் தோன்றும் ஆகாயத்தினின்று மழை பெய்யாது வறண்டிருப்பினும்; ஆலமர நிழல் குளுமையாய் அயர்ச்சியைப் போக்கும் பெருமை உடையது. ‘நீ இதுவரை காம்பு இற்ற புன்னை மலர்கள் மிகுதியாக உதிர்ந்து தேன்மணம் வீசும் கழிக்கரைச் சோலை மணலில் நடந்து பழகியவள் ஆனாலும்; மிகுந்த அச்சம் தரும்

     “இம்மென் பேரலர் நும்மூர்” (நற்.- 76)

    இக்காட்டில் இல்லை. எனவே கல்லில் நடந்து சிவந்த பாதங்கள் நோய் நீங்க ஓய்வெடுத்துச் செல்லலாம்’ என்கிறான். இப்பாடலில் ‘ஊர்’ இடவாகு பெயராய் ஊர்மக்களைக் குறிக்கிறது.

    காமமிகுதியால் மடலேற முடிவுசெய்த தலைவன் கண்டோரிடம்;

    “………………………………………இக்காமம்
    அறிந்தும் அறியாது இவ்வூர்” (கலித்.- 140)

    என்று ஊர்மக்கள் குறித்துப் பேசுகிறான்.

    தலைவி கூற்றில் ஊரார்

    திருமணத்திற்குரிய பொருள் தேடச்சென்ற தலைவன் என் நெஞ்சில் மட்டும் வருகிறானே அன்றி நேரில் வரவில்லை; அத்துன்பத்தினால்    இறப்பதற்கும் அச்சமாக உள்ளது. அதற்கும் மேலாக;

    “பிரியா நண்பினர் இருவரும் என்னும்
    அலர் அதற்கு அஞ்சினன் கொல்லோ பலருடன்
    துஞ்சு ஊர்” (குறுந்.- 302);

    என்று தோழியிடம் ஊர்மக்கள் எல்லாம் தூற்றிவிட்டுத் தூங்குவதால் ஏற்பட்ட அச்சமிகுதியைத் தலைவி  ஆற்றாமையோடு புலப்படுத்துகிறாள்.

    தோழி கூற்றில் ஊரார்

    சிறைப்புறமாக நின்ற தலைவன் கேட்கப் பேசும் தோழி தலைவியது உடற்கூறு மாற்றங்களைக் கூறி வரைவு கடாவுகிறாள்.

    “ஊரலர் தூற்றும் கௌவையும் நாணிட்டு
    உரையவர்க்கு உரையாம் ஆயினும்” (நற்.- 263);

    அடக்கமாட்டாமல் வழிகின்ற கண்ணீர் அவள் நிலைமையை அவனுக்குப் புரியவைத்து விடும் என்கிறாள். நாணத்தால் பேச இயலாதவற்றுள்  ஊரார் சுமத்தும் பழிச்சொல்லும் அடங்குகிறது. தோழி ஊரார் பேசுவதைச் சுட்டும் பிற பாடல்களும் உள (கலித்- 124; அகம்.- 132, 282)

    கற்புக்காலம் 

    தலைவி கூற்றில் ஊரார்

    வினைவயிற் பிரிந்த தலைவன் நீட்டித்த வழி மனமழிந்த தலைவி;

    “கன்மிசை மயிலாலக் கறங்கி ஊரலர் தூற்”றுவதைக் (கலி.- 27) குறித்த காலத்தில் அவன் திரும்பி வராமையின் விளைவு என்கிறாள்.

    தோழி கூற்றில் ஊரார்

    களவுக்காலத்தில் அலர் தூற்றியவரைப் பற்றித் தோழி; திருமணத்திற்குப் பின்னர் தலைவன் மலர் சூடி வருவதைக் கண்டு  முற்றிலும் மாறுபட்டவராய் நாம் வியக்கும்படிப்;

    “புதுவதாகின்று அம்ம…
    ………………..நம் அழுங்கல் ஊரே” (அகம்.- 400) என்கிறாள்.

    காமக்கிழத்தி கூற்றில் ஊரார்

    ஊர்மக்கள் எல்லாம் பேசும்படி உன்னோடு சேர்ந்து நீர் விளையாட என்ன செய்ய வேண்டும் என்பதைப்;

    “பேரூர் அலரெழ நீரலைக்கலங்கி
    நின்னொடு தண்புனல் ஆடுதும்” (ஐங்.- 77)

    எனத் தொடங்கி ‘உன் இல்லக்கிழத்தியிடம் செல்லாதே என்னுடன் மட்டுமே வா’ என்று தலைவனிடம் பிணை இடுகிறாள் காமக்கிழத்தி.

    ஊரார் செயல்கள் 

    ஊரார் களவொழுக்கத்தையும், புறத்தொழுக்கத்தையும் பழி கூறுபவராகவும்; அதை அம்பலாக்கித் தம்முள் கமுக்கமாகப் பேசுபவராகவும், வாய்விட்டு வெளிப்படையாக எல்லோரும் தெரிந்து கொள்ளும்படி அலர் தூற்றுபவராகவும் காட்சிப்படுத்தப்படுகின்றனர்.  வினைவயிற் பிரிந்த தலைவன் மீளாதவழி தலைவியை  எண்ணி வருந்துபவராகவும், அவளது காமம் மிகைப்படும் போது எள்ளி நகையாடுபவராகவும்; தலைவனின் புறத்தொழுக்கத்தைக் கண்டு சிரிப்பவராகவும், சாடுபவராகவும் புனைந்துரைக்கப்படுகின்றனர்.

    ஏறு தழுவி வெற்றி பெற்ற  தலைவனையும் தன்னையும் சேர்த்து ஊரார் முன்னரே அலர் தூற்றினர் என்பதை;

    “………………………….பொதுவனோடு எண்ணி
    அலர் செய்து விட்டது இவ்வூர்” (கலித்.- 105)

    எனவும்; இனி திருமணத்திற்குத் தடை இல்லை என்பதால் அது பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை எனவும் கூறுகிறாள். இங்ஙனமே தம் களவு வெளிப்பட்டதைத் தலைவி எடுத்துச் சொல்லும் பிற பாடல்களும் உள (ஐங்.- 113; குறுந்.- 262).

     பிரிவால் மெலிந்த தன் நிலை கண்டு ஆற்றாத தோழியிடம் தலைவி

    “………………………பன்னாள்
    இவ்வூர் அம்பல் எவனோ” (அகம்.- 249);

    எனத் தலைவனோடு தான் கொண்ட களவை ஊரார் கமுக்கமாகப் பேசியதைச் சுட்டித் தனது தற்போதைய இரங்கத்தக்க நிலையையும் கூறி வருந்துகிறாள்.

    வினைவயிற் பிரிந்த தலைவன் சென்ற நெறி எறும்பின் வளைகளைப் போன்ற குறிய பல சுனைகளை உடையது. கொல்லனது உலையில் உள்ள பட்டடைக்கல் போன்ற வெம்மையான பாறைகளை உடையது. வளைந்த வில்லை உடைய வேடர் அக்கல்லில் தம் அம்புகளைத் தீட்டிக் கூர்மை ஆக்குவர். கவர்த்த வழிகளை உடையது.

    “எறும்பி அளையில் குறும்பல் சுனைய
    உலைக்கல் அன்ன பாறை ஏறிக்
    கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்
    கவலைத்து என்ப அவர் சென்ற ஆறே
    அதுமற்று அவலம் கொள்ளாது
    நொதுமற் கவலும் இவ் அழுங்கல் ஊரே” (குறுந்.- 12)

    அப்பாலை வழியின் ஏதத்தைப் பற்றிக் கவலையுறாமல் தனது தனிமைத் துன்பத்தை எண்ணிக் கவல்கின்றனரே என்பதைத் தலைவி இப்பாடலில் விளக்குகிறாள்.  தன் காமக்கிழத்தியிடம்  தனது பரத்தமையை ஒளித்துப் பேசிய தலைவனைப் பார்த்து அவள்; ஊர்மக்கள் சிரித்துச் சாடுவதை

    “ஊரவர் உடன்நகத் திரிதரும்
    தேர் ஏமுற்றன்று” (கலித்.- 74);

    என்கிறாள். அவனைப் பரத்தையரிடம் தேரில் கொண்டு சேர்க்கும் தேர்ப்பாகன் பித்தேறி இருக்கிறானோ எனக் கேட்பதற்குப் பதிலாக தேர்பித்தேறி இருக்கிறதோ எனக் கேட்டுச் சினத்தை வெளிப்படுத்துகிறாள்.

    தன் கணவனின் புறத்தொழுக்கத்தை அறிந்து ஊரார் பழி தூற்றுவதைத் தலைவி அவனிடமே;

    “ஊரவர் கௌவை உளைந்தீயாய்” (கலித்.- 95);

    எனக் கேட்கிறாள்.

    ஊரார் பேச்சின் விளைவுகள்

    ஊரார் பேச்சினால் மகிழ்ச்சி, பழி, பெருமை, நாணம் கைவிடல் எனப் பலதரப்பட்ட விளைவுகளைப் பாடல்களில் தெரிந்தெடுக்க இயல்கிறது.

    தமரும் சுற்றத்தாரும் சேர்ந்து செய்ய வேண்டிய வதுவையை ஊராரின் அலர் செய்து விட்டது எனத் தலைவி மகிழ்ந்து கூறுவதாக;

    “………….. நெடுந்தகை திறத்து இவ்வூர்
    இனையள் என்று எடுத்து ஓதற்கு….
    ….நம் வதுவையுள் தமர் செய்வது இன்று ஈங்கே
    தான் நயந்து இருந்தது இவ்வூராயின்” (கலித்.- 76)

    என்னும் பாடற்பகுதி அமைகிறது. அவனுக்கும் அவளுக்கும் இடையில் இருந்த உறவு பற்றிய ஊராரின் பேச்சு தலைவி தலைவனைச் சேர உதவியது என்கிறாள். இது போல் அம்பலின்  விளைவு திருமணம் நடக்க ஏதுவாகும் மகிழ்ச்சி எனும் பொருள்பட அமையும் பாடல்களும் உள (குறுந். – 51).

    மடலேறத் துணியும் தலைவன் அச்செய்கை தலைவிக்குப் பழியேற்படுத்தும் என்பதை;

    “……………………………………………முன்னின்று
    அவள் பழி நுவலும் இவ்வூர்” (குறுந்.- 173)

    என ஊராரின் மேலேயே ஏற்றிக் கூறுகிறான். இங்கு ஊரார் பேச்சு தலைவி மேல் பழி சுமத்தும் என்று முன்மொழிகிறான் தலைவன்.

    ஏறு தழுவித் தன் வீரத்தையும், வலிமையையும் நிலைநாட்டிய தலைவனை எண்ணிப் பார்க்கும் தலைவிக்கு;

    “கொல்லேறு கொண்டான் இவள் கேள்வன் என்று ஊரார் சொல்லும் சொல்” (கலித்.- 106)

    அளவிலாப் பெருமையைத் தோற்றுவித்தது. இங்கு ஊரார் பேச்சின் விளைவு பெருமை ஆகும்.

    ஊரலரைத் தாங்கவியலாமல் உடன்போகத் துணியும் தலைவி;

    “சேணும் எம்மொடு வந்த
    நாணும் விட்டேம் அலர்க இவ்வூரே” (நற்.- 15)

    எனக் காலம்காலமாகத் தாங்கி வந்த நாணத்தை விட்டொழிக்கிறாள்.

    ஊரார் பேச்சின் தன்மை

    ஊரலரின் தன்மை காய்ந்த தட்டையில் தீப் பரவுவது போன்றது; தூக்கணாங்குருவியின் கூடு போன்றது; ஒரோவழி அறத்திற்கு முரண்பட்டு நின்றதையும் தோழி சுட்டிக்காட்டத் தவறவில்லை.

    பிரிந்து சென்ற கணவன் காலம் கடந்தும் மீண்டு வரவில்லை என்ற ஊராரின் அங்கலாய்ப்பு தட்டை தீப்பற்றி எரிவது போல் பரவியது.

    “விட்டுச் சென்றனர் காதலர்
    தட்டைத் தீயின் ஊரலர் எழவே” (ஐங்.- 340)

    என்கிறாள் தலைவி. இங்கு அலர் பரவும் வேகம் தீயின் வேகத்தோடு உவமிக்கப்படுகிறது.

    தூக்கணங்குருவியின் கூடு எவ்வளவு நுட்பத்துடனும் திறனுடனும் கட்டப்படுகிறதோ அதே நுட்பத்துடனும் திறனுடனும் ஊரார் அலர் அமைந்துள்ளது என்கிறாள் தோழி.

    “முடங்கல் இறைய தூக்கணங் குரீஇ….
    கூடினும் மயங்கிய மையல் ஊரே” (குறுந்.- 374)

    என்னுமிடத்து உயர்ந்த பனைமரத்தில் தொங்கும் பலதிறப்பட்ட வினைத்திறன் மிகுந்த வியப்புக்குரிய கூடு; ஒருவழிப்படாது பல உத்திகளின் விளைவாகப் பின்னப்பட்டு இருத்தலான்; பல்லாற்றானும் மயங்கி அலர் தூற்றும் ஊருக்கு உவமை ஆயிற்று எனலாம். அறத்தொடு நிற்கும் தோழி ஊரார் பேசுவதையே துணைக்கு அழைக்கிறாள். வேற்று வரைவின் போது;

    “பூக்கெழு துறைவனை என்னை என்னும் யாமே இவ்வூர்
    பிறிதொன்றாகக் கூறும்” (ஐங்.- 110)

    எனும் போது; ஊராரின் பேச்சு தலைவிக்கு உரிய தலைவன் யாரென்று சரியாகச் சொல்லவில்லை எனத் தாயிடம் கூறிச் சரியான தலைவன் யாரென்று புரியவைக்கிறாள். இங்கு ஊரார் பேச்சு அறத்தோடு முரண்பட்டிருக்கிறது.

    ஊரார் எனும் சிறுபாத்திரத்தின் பயன்கள்

    சிறப்பான காலப்பின்புலத்தைத் தோற்றுவிக்கவும், பொருத்தமான முழுமையான விளக்கங்களுக்காக உவமைகளைப் படைக்கவும், முரண் அழகைச் சேர்த்துப் புனையவும், ஊடலை வெளிப்படுத்தி வெறுப்பைக் காட்டவும்  ஊரார் என்னும் சிறுபாத்திரம் பயன் கொள்ளப்படுகிறது.

    “கழுது கால்கிளர ஊர் மடிந்தன்றே” (நற்.- 255)

    என விளக்கம் பெறும் இரவுக்குறிக்கு; ‘ஊரார் அனைவரும் தூங்க பேய் நடமாடும்பொழுது’ என்பது சிறப்பான காலப் பின்புலத்தைத் தோற்றுகிறது.

    “ஏழூர்ப் பொதுவினைக்கு ஓரூர் யாத்த
    உலைவாங்கு மிதிதோல் போலத்
    தலைவரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சே” (குறுந்.- 172)

    என்ற உவமையில் விளக்கம் பெறுவது தலைவியின் மனநிலை. ஏழு ஊர்களில் உள்ள மக்களின் தேவைகளையும் ஓரூரில் உள்ள கொல்லன் ஊதுலை நிறைவு செய்யுங்கால்; அந்த உலைக்குரிய தோலாலான காற்றுத் துருத்தி எவ்வளவு மிகுதியாக மிதிபடுமோ; அவ்வளவு மிகுதியாக என் மனம் துன்புறுகிறது என்கிறாள் தலைவி. இங்கு பொருத்தமான விளக்கத்திற்கு ஊரார் உவமையாகப்  பயன்பட்டுள்ளனர்.

    தலைவன்  தலைவியைச் சந்திக்க இரவுக்குறியே ஏற்றது என்பதை

    “கொன்னூர் துஞ்சினும் யாம் துஞ்சலமே” (குறுந்.- 138)

    எனக்கூறும் தோழி ஊர் மக்களின் தூக்கத்தையே ஏற்ற சூழல் ஆக்குகிறாள்.

    இப்படி  ஊரார் தூங்கத் தாம் தூங்காமை பற்றிய கூற்றுகள் பாடல் புனைவுக்கு முரண் தொடையாய் அமைந்து அழகு சேர்க்கின்றன. புறத்தொழுக்கத்தில் தோய்ந்த தலைவன் மேல் ஊடல் கொண்ட காமக்கிழத்தி அவனை வசைபாடுங்கால் சுடுசொல் கூற; ‘பரத்தையரின் எயிறு அழுந்திய உன்  இதழை’

    “…………………………………………..ஊரவர்
    ஆடைகொண்டு ஒலிக்கு நின் புலைத்தி காட்டென்றாளோ”

    (கலித்.- 72); என இகழ்ந்து பேசுகிறாள். இங்கு வெறுப்பைக் காட்ட ஊரார் ஆடையைத் துவைக்கும் புலைத்தியை எடுத்தாள்கிறாள்.

    ஊரார் உறக்கமும் விழிப்புணர்வும் தன் காதல்நோய் மிகுதியால் தூங்காத தலைவி கூற்றில் தூங்கும் ஊர் சாடப்படுகிறது.

    “………………………………………………………என்
    உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே” (குறுந்.- 28);

    என்பது ஆற்றாத தலைவி கூற்று.

    “……………………………..ஊர்துஞ்சு யாமத்”தில்  (நற்.- 262);

    அவள் துன்புறுவாள் என்று எண்ணிப் பிரிவைத் தள்ளிப்போடும் தலைவன் கூற்றில் ஊரின் தூக்கம் தலைவியின் துன்பத்தைத் தெளிவாக உணரவைக்கும் பின்புலமாகிறது.

    இற்செறிப்பின் போது இரவில் கேட்கும் பறவை ஒலி கூடத் தன்  தலைவன் தேர் ஓசையோ என்று பயந்து புலம்பும் தலைவி

    “ஊர்மடி கங்குலும் துயில் மறந்ததுவே” (நற்.- 287);

    என ஊரார் தூங்கும் போதும் தான் விழித்திருந்த சோகத்தை நொந்து உரைக்கிறாள். ஆனால் இப்படித் துயில்வதாகச் சொல்லும் ஊரார் களவொழுக்கத்தை முளையிலேயே அடையாளம் கண்டுவிடுவதையும் இதே பாத்திரங்கள் உரைக்கின்றன.

    இரவுக்குறியில் தலைவியைச் சந்தித்து விடியுமுன் சென்ற தலைவனின் கால் தடம் புலருமுன் ஊரார் அலர் தொடங்கி விட்டமையை;

    “புலர் பதம் கொள்ளா அளவை
    அலர் எழுந்தன்று இவ்அழுங்கல் ஊரே” (குறுந்.- 372) எனத் தோழி உரைக்கிறாள்.

    களவு  தொடங்கியவுடன் கௌவை, அம்பல், அலர் என்று மூன்று நிலைகளில் சொல்லாற்றிய ஊராரைப் பார்க்கிறோம்.

    “யாமத்து அலர்வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றிப்
    புரையில் தீமொழி பயிற்றிய உரை எடுத்து
    ஆனாக் கௌவைத்தாகத்
    தான் என் இழந்தது இவ் அழுங்கல் ஊரே” (நற்.- 36)

    தோழி தலைவன் இரவுக்குறியில் சிறைப்புறமாக நிற்க; அவனைத் திருமணத்திற்குத் தூண்டுவாளாய்ப் பேசும்போது; ஊராரால் தலைவிக்கு ஏற்படும் இன்னல்கள் இவை என்று வரிசைப்படுத்துகிறாள். எதை இழந்ததால் ஊரார் இப்படிப் பேசுகின்றனர் என்று வினவுகிறாள்.

    ஊரார் பேச்சின் நோக்கம்

    ஊராரின் பேச்சு எதை நோக்கி அமைகிறது என்று முடிபாக அறிவதே அப்பாத்திரத்தின் பெறுமதியைக் காட்டக்கூடியதாக அமையும். அது ஒரு பெண்ணின் களவொழுக்கம் அதே ஆணுடன் திருமணத்தில் முடிய வேண்டும் என்ற கொள்கையை நிலைநாட்டும் நோக்கோடு அமைந்துள்ளது. களவொழ்க்கத்தில் ஈடுபடுபவரை ஊரார் வெறுக்கவும் இல்லை. இல்லறத்திற்கு ஊறு நேர்வதை ஊரார் விரும்பவும் இல்லை.

    களவை இனம்காணும் ஊராரைக் காட்டிப் பேசுகின்றாள் தலைவி.

    “எல்லி வந்தன்றோ தேர் எனச் சொல்லி
    அலர் எழுந்தன்று இவ்வூரே” (நற்.- 191). அதிகாலையில் தேர் வந்த ஒரு காரணம் காட்டி ஊராரின் அலர் மிகுந்தது என்பது தோழியிடம்  தலைவியின் புலம்பலாகும்.

    களவு திருமணத்தில் முடிந்தவுடன் அமைதியுறும் ஊராரைப் பற்றித் தோழியும்;

    “இனியது கேட்டு இன்புறுக இவ்வூரே….
    ….ஆய்நுதற் கிழவனும் அவனே” (குறுந்.- 34);

    என்று தலைவியிடம் கூறுகிறாள். இனி தாயர் வசையும், தந்தை மறுப்பும், தனிமைத் துயரும் இல்லை  என்பதோடு; ஊராருக்குத் தலைவி அதே களவுக்காலத் தலைவனை மணக்கப் போகிறாள் என்பது மிகுந்த இன்பம் கலந்த நிறைவைக்கொடுத்தது என்பது நோக்கத்தக்கது. வினைமுடித்து மீளாத தலைவனை எண்ணிக்  காமமிகுதியால் ஒரு பெண் பெருந்திணைக் குரல் கொடுத்தால் ஊரார் அவளைப் பார்த்துச் சிரித்துத் தூற்றுகின்றனர். அதனால் தான் பாதிக்கப்பட்ட தலைவி;

    “நகான்மின்…………………நுமக்கு எவன் போலுமோ ஊரீர்”

    (கலித்.- 145) என்று சண்டை போடுபவள் போல் பேசுகிறாள். அந்தச் சண்டையில் இரு தரப்பினருக்கும் இருந்த புரிந்துணர்வே வெளிப்படுகிறது.

    உடன்போன தலைவியின் மேல் மிகுந்த அன்பு ஊராருக்கு உள்ளது. அதனால் தான்;

    “சுரநனி இனிய ஆகுகஎன்று
    நினைத்தொறும் கலிழும் என்னினும்
    மிகப் பெரிது புலம்பின்று தோழி நம் ஊரே” (ஐங்.- 398);

    என உடன்போக்கிற்குப் பிறகு தலைவியைச் சந்திக்கும் தோழி ஊராரின் பாசம் பற்றிப் பேசுகிறாள். ‘நான் அழுததை விட ஊரார் மிகுதியாக அழுதனர்’ என்று தோழியே சான்றளிக்கிறாள்.

    வினைவயிற் பிரிந்தவன் வரத் தாமதமானாலும் தலைவி மேல் இரக்கம் கொண்டு தலைவனைப் பழிக்கின்றனர். அதனால் தான்;

    “அவர் திறத்து இரங்கும் நம்மினும்
    நம்திறத்து இரங்கும் இவ் அழுங்கல் ஊரே” (குறுந்.- 289);

    எனத் தலைவி அரற்றுகிறாள். இனிய இல்லறத்திற்கு ஊறு நிகழ்வதை எக்காரணத்தானும் ஊரார் சகிப்பதில்லை என்பதற்கு இக்கூற்று ஆதாரமாகிறது.

    ஊராரின் இந்நோக்கத்தை நன்கறிந்ததால் தான் தலைவன் தான் தலைவியைக் கூடியதை; அவளது மார்பில் தொய்யில் எழுதியதைத்  தயக்கமின்றி அரசவையில் சொல்லத் துணிகிறான்.

    “………………………………..எழுதிய
    தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்
    முறையுடை அரசன் செங்கோல் அவையத்து
    யான் தற்கடவின் யாங்காவது கொல்
    பெரிதும் பேதை மன்ற
    அளிதோ தானே இவ் அழுங்கல் ஊரே” (குறுந்.- 276)

    எனப் பெற்றோரையும் ஊராரையும் பேதையர் என்கிறான்.

    முடிவுரை

    ஊரார் என்பது ஆண், பெண் இருபாலரையும் பொதுப்படக் குறிக்கும்  பலர்பாலுக்குரிய சொல் ஆகும். பெண்களை மட்டும் வேறுபிரித்துச் சுட்டும் இடங்களில் அது விதந்து கூறப்பட்டுள்ளது. ஊரார் பேதைமை உடையவர்; ஆரவாரத்துடன் புறம்பேசுபவர்; இரக்கமில்லாதவர்; புரியும் திறனற்றவர்; பிறழப் புரிந்து கொள்பவர் என்றெல்லாம் சாடப்படுகின்றனர். அன்பிற்குரிய ஊர் என்று நையாண்டி செய்யப்படுவதும் உண்டு. களவுக்காலத் தலைவன், தலைவி, தோழி, கற்புக்காலத் தலைவி,  தோழி, காமக்கிழத்தி எனப் பலரும்; தம்முள்ளும் கண்டோருடனும் ஊரார் பேசியதை எடுத்துச் சொல்கின்றனர்.

    ஊரார் களவொழுக்கத்தையும், புறத்தொழுக்கத்தையும் பழி கூறுபவராகவும்; அதை அம்பலாக்கித் தம்முள் கமுக்கமாகப் பேசுபவராகவும், வாய்விட்டு வெளிப்படையாக எல்லோரும் தெரிந்து கொள்ளும்படி அலர் தூற்றுபவராகவும் காட்சிப்படுத்தப்படுகின்றனர்.  வினைவயிற் பிரிந்த தலைவன் மீளாதவழி தலைவியை  எண்ணி வருந்துபவராகவும், அவளது காமம் மிகைப்படும் போது எள்ளி நகையாடுபவராகவும்; தலைவனின் புறத்தொழுக்கத்தைக் கண்டு சிரிப்பவராகவும், சாடுபவராகவும் புனைந்துரைக்கப்படுகின்றனர். ஊரார் பேச்சினால் மகிழ்ச்சி, பழி, பெருமை, நாணம் கைவிடல் எனப் பலதரப்பட்ட விளைவுகள் ஏற்படுகின்றன. ஊரார் பேச்சின் தன்மை காய்ந்த தட்டையில் தீப்பரவுவது போன்றது; தூக்கணங்குருவிக்கூடு போன்றது. சிறப்பான காலப்பின்புலத்தைத் தோற்றுவிக்கவும், பொருத்தமான முழுமையான விளக்கங்களுக்காக உவமைகளைப் படைக்கவும், முரண் அழகைச் சேர்த்துப் புனையவும், ஊடலை வெளிப்படுத்தி வெறுப்பைக் காட்டவும்  ஊரார் என்னும் சிறுபாத்திரம் பயன் கொள்ளப்படுகிறது. துயில்வதாகச் சொல்லப்படினும் ஊரார் களவொழுக்கத்தை முளையிலேயே அடையாளம் கண்டுவிடுகின்றனர். ஊராரின் பேச்சு ஒரு பெண்ணின் களவொழுக்கம்; அதே ஆணுடன் திருமணத்தில் முடிய வேண்டும் என்ற கொள்கையை நிலைநாட்டும் நோக்கோடு அமைந்துள்ளது.

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-32

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-32

    தி.இரா.மீனா

    மோளிகே  மாரய்யா

    காஷ்மீர நாட்டு மன்னன்.இயற்பெயர் மகாதேவ பூபாலன். மனைவி கங்காதேவி. பசவேசரின் பெருமைகளைக் கேட்டு அரசாட்சியைத் துறந்து இருவரும் கல்யாண் வருகின்றனர். இவர்கள் மாரய்யா–மகாதேவி  என்ற பெயரில் விறகுக் கட்டு விற்கும் காயகம் மேற் கொண்டு சரணர்களாக வாழ்கின்றனர். ’நிக்களங்க மல்லிகார்ஜூன’ எனபது இவரது முத்திரையாகும்.

    1.  “ நீரின்றேல் தாமரையை யாரறிவார்?
    நீரின்றேல் பாலினை யாரறிவார்?
    என்னையன்றி உன்னை யாரறிவார்?
    உனக்கு நான், எனக்கு நீ
    உனக்கும் எனக்கும் வேறொரு உறவுண்டோ?
    நிக்களங்க மல்லிகார்ஜுனனே”

    2. “ஈர விறகை நெருப்பில் வைத்தால்
    இயல்பாய்த் தீப்பற்றுமோ உலர்கட்டை போல
    இதுபோல காமுகர்க்குக் கிடைப்பானா
    சத்தியத்தின் சிவனும் நிக்களங்க மல்லிகார்ஜூனனே“

    3. “ஞானம் அறியும் வரை அர்ச்சனை வேண்டும்
    புண்ணியம் அறியும்வரை பூசை வேண்டும்
    தன்னையறியும்வரை விரதம் வேண்டும்
    காலம் கடமை ஞானம் உணர்வென
    தானுள்ள வரையில் வழிபட வேண்டும்
    தன்னை மறந்து கடவுளை நினைத்த பின்னர்
    நிர்வாணம் அடைவோருக்கு எப்போதும் பயமில்லை
    நிக்களங்க மல்லிகார்ஜூனனே“

    4. “ஆகமமறிய வரவு செலவறிய வேண்டும்
    சாத்திரமறிய மரணமறிய வேண்டும்
    புராணமறிய போக்கிரி நட்பு நீங்கவேண்டும்
    இதையறிந்து சித்தம் தெளிவில்லாமல் நன்மையில்லை
    நிக்களங்க மல்லிகார்ஜூனனே“

    5. “முன்னோர் வசனம் பார்த்துச் சொல்வதில் என்னபயன்
    தன்போல வசனமில்லை; வசனம்போல் தானில்லை
    சொல்லில் அத்வைதம் பேசிச் செயலில் இழிந்தால்
    சரணர் புகழ்வாரோ ?சொல்லும் செயலும் மாசுபடின்
    குரு.இலிங்கம், ஜங்கமம்,பாசோதகம் ,பிரசாத
    திருநீறுஉருத்திராட்சம்,உயர் ஐந்தெழுத்து அவருக்கில்லை
    வெற்றுப் பேச்சில் பிரம்மம் பேசுபவரைப் புகழ்வதில்லை
    நிக்களங்க மல்லிகார்ஜூனன்“

    6. “கல்மண் மரத்தில் கடவுள் உண்டென
    எவ்விடத்தும் பேசுகின்ற மனிதர்களே கேளுங்கள்
    அவற்றை அங்கங்கே வைத்த ஆற்றலின் அடையாளமன்றி
    புலன் கடந்தவன் அறியான்
    மனவடிவம் எங்குள்ளதோ அங்கிருப்பான்
    நிக்களங்க மல்லிகார்ஜூனன்“

    7. “நிலம் தலையாரியினுடையதெனில் கள்வன் நுழைவானோ?
    சர்வலிங்கமுடையவனுக்கு அர்ப்பணமற்றதுண்டோ?
    நிக்களங்க மல்லிகார்ஜூனனே.”

    இராயசதா மஞ்சண்ணனின் புண்ணியஸ்திரி ராயம்மா

    இவர் பசவேசருக்கு மிக நெருங்கியவரும், வசனகாரருமான ‘இராயசதா மஞ்சண்ணரின் மனைவி.’ அமுகேஸ்வரலிங்க’ என்பது இவரது முத்தி ரையாகும். அமுகே இராயம்மாவின் இயற்பெயராகவும் அது இருப்பது குறிப்பிடத்தக்கது.

    “பயிற்சிக் கூடத்திலின்றி போர்க்களத்தில் கோலிருக்குமா?
    விரதம்சடங்குகள் இல்லறத்தானுக்கன்றி பக்தனுக்குண்டோ?
    விரதம் தவறி உடலெடுத்த தீயோனுக்கு முக்தியில்லை
    அமுகேஸ்வர இலிங்கத்தில்“

    இராயசதா மஞ்சண்ணா

    இவர் பசவேசரின் கடிதப் போக்குவரத்தில் உதவியவர். இராயம்மா இவரது மனைவி. ’ஜாம்பேஸ்வரா’ இவரது முத்திரையாகும்.

    1. “ஆயுதமுனை தாக்குமுன்னால் தடுத்து விட்டால்
    ஆயுதமென்ன செய்யும்?
    நாகம் தீண்டுமுன்னர் பிடித்து விட்டால்
    நஞ்சென்ன செய்யும்?
    மனம் கெடுமுன்னர் பரதத்துவத்தில் திளைத்து விட்டால்
    ஐம்புலன்கள் என்ன செய்யும் ஜாம்பேஸ்வரனே“

    2. “எழுதி அழித்தால் அவ்வெழுத்து நன்றல்ல என்பேன்
    அறிந்து மறந்தால் அறிவு குறையுடையதென்பேன்
    செத்த பின்பு சமுத்திரமும் ஒன்றே, கையளவு நீரும் ஒன்றே
    ஜாம்பேஸ்வரனே“

    ரேவண சித்தய்யாவின் புண்ணிய ஸ்திரி ரேக்கம்மா

    இவர் ரேவண சித்தய்யாவின் மனைவி.பூமாலை கட்டிச் சிவனுக்குத் தரும் காயகம் இவருடையதாகும். ’ ஸ்ரீகுரு சித்தேஸ்வர’ இவரது முத்திரையாகும்.

    1. “இலிங்கத்துக்குப் புறம்பானவன் ஒழுக்கமற்றவன்
    பற்றுறுதியற்றவன் குருலிங்கம் ஜங்கமரைக் கொன்றவன்
    புனித நீர் பிரசாதம் பழிப்பவன்
    திருநீறு உருத்திராட்சம் இகழ்பவரைக் கண்டால்
    ஆற்றலிருப்பின் கொல்வது  இன்றேல்
    கண்ணும் காதும் மூடிச் சிவநாமம் செபிப்பது
    இயலாதெனில் இடம்விட்டு ஒதுங்குதல்
    இதுவும் ஆகாதெனில் கொடிய நரகில் வீழ்த்துவான்
    ஸ்ரீகுரு சித்தேஸ்வரன்“

     [தொடரும்]

    Share
  • (Peer Reviewed) மூழ்கிய சுரையும் மிதந்த அம்மியும்

    (Peer Reviewed) மூழ்கிய சுரையும் மிதந்த அம்மியும்

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி:  egowrisss@gmail.com

    முன்னுரை

    பழந்தமிழிலக்கிய உலகம் கவிதைகளால் கட்டமைக்கப்பட்டது. அத்தனை கவிதைகளும் ஓலைச் சுவடியிலேயே வரையப்பட்டன. எழுதப்படுவதற்கான ஓலைத்தரம், எழுத்தாணியின் தன்மை, எழுதப்படும் முறை இவையெல்லாம் இற்றை நாள் பேரறிஞரேயாயினும் அத்துறை வல்லாரன்றிப் பிறரால் அவ்வளவு எளிதாக அறிந்துகொள்ள இயலாது. ‘சுவடிப் பதிப்பு’ என்பதே தனிக் கலை, தனித் துறை. இந்தப் பின்புலத்தில் இலக்கண நூலொன்றில் எடுத்துக்காட்டாக எடுத்தாளப்பட்டிருக்கும் ஒரு பாடலின் உண்மை வடிவத்தைக் கண்டு அதனை முழுமையாகச் சுவைக்க வேண்டும் என்பதையே தனது நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது.

    ஆய்வுப் பொருள் – கருதுகோள் – நோக்கம்  – பயன்

    பழந்தமிழ் இலக்கண நு}ல்களில் எடுத்துக்காட்டாகப் பயன்பட்டிருக்கும் ‘கரையாட கெண்டை’ எனத் தொடங்கும் ஒரு நேரிசை வெண்பாவே ஆய்வுப் பொருளாகக் கொள்ளப்படுகிறது. கவிதையைச் சுவைக்க வேண்டுமானால் அதன் முழுமையான வடிவம் இன்றியமையாத ஒன்று என்பதை நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை இங்கு வடிவமைக்கப்படுகிறது. ஓர் அசையையும் சரியாகப் பதிவிட வேண்டும் என்பதற்காகத் தமிழகத்தையே பதிப்புக் களமாகக் கண்ட அறிஞர்கள் சி.வை.தாமோதரம்பிள்ளை மற்றும் உ.வே.சா முதலியோரின் பங்களிப்புகள் நினைவுகூரப்படுவது பொருத்தமாக இருக்கும். ஆய்வின்றிச் சுவையுண்டு. ஆயின் சுவையின்றி ஆய்வில்லை. எனவே தமிழ்க் கவிதைகளைச் சுவைப்பதில் ரசிகமணி அவர்களின் நுட்பத்தை (சிற்சில நேர்வுகளில் ஏற்றுக்கொள்ள இயலாவிடினும்) நிகழ்காலச் சமுதாயமும் எதிர்வரும் சமுதாயமும் அறிந்துகொள்வதையே பயனாகக் கொண்டு அமைகிறது.

    வடிவமும்பொருள்கோளும்

    அமிதசாகரர் எழுதிய ‘யாப்பருங்கலக்காரிகை’ என்னும் நூலுக்கு உரையெழுதியவர் குணசாகரர் என்னும் சான்றோர். அவர்

    “சுரை யாழ அம்மி மிதப்ப

    யானைக்கு நீந்து முயற்கு நிலையென்ப

    கானக நாடன் சுனை”1

    என்னும் பாடலைச் சிந்தியல் வெண்பாவிற்கும் ‘மொழிமாற்று’ என்னும் பொருள்கோளுக்கும் எடுத்துக்காட்டாக்கி விளக்கியிருக்கிறார். மொழிமாற்றுப் பொருள்கோள் என்பது பாட்டின் ஓரடியில் மாறி நிற்கும் சொற்களைப் புலவனுடைய கருத்துக்கேற்ப நிரல்பட அமைத்துப் பொருள் காண்கிற உரைக் கொள்கையாகும். ‘மொழி’ என்றால் சொல் என்பது பொருள். ‘ஓரெழுத்து ஒருமொழி’ என்றவிடத்து மொழி என்பது சொல்லைக் குறித்தது காண்க. உரைநடையில் சொல்லாக வருவது கவிதையில் அல்லது செய்யுளில் சீராக வரும். எனவே ஒரடியில் ‘மாறிநிற்கும் சீர்களைப் புலவனுடைய கருத்துக்கேற்ப நிரல்பட அமைத்துப் பொருள் காணும் முறைக்கு மொழிமாற்றுப் பொருள்கோள் என்று பெயர். இந்தப் பாட்டில் ‘சுரை’ என்னும் எழுவாய் ‘மிதப்ப’ என்னும் வினையோடும் ‘அம்மி’ என்னும் எழுவாய் ‘ஆழ’ என்னும் வினையோடும் ‘யானை’ என்னும் எழுவாய் ‘நிலை’ என்னும் வினைக்கும் ‘முயல்’ என்னும் எழுவாய் ‘நீந்தும்’ என்னும் வினைக்கும் வரவேண்டும் என உரையாசிரியர் நினைத்து இந்தச் செய்யுளை இந்தப் பொருள்கோளுக்கு உரியதாக மாற்றியிருக்கிறார் எனத் தெரிகிறது.

    பொருள்கோளால் வந்த பொருள் மயக்கம்

    மேற்கண்டவாறு பொருள் கொண்டால் ‘பாடல் சொல்லவந்த கருத்து’ பாழ்படும் என்பதை உரையாசியர் கவனித்தாரா என்பது அறியக்கூடவில்லை. அக்கால உரையாசிரியர் இதனை ‘ஒரு பொருளாமாறில்லை’ என்பர். அதாவது  ‘ஒன்னும் ஒன்னும் ரெண்டு உன்மேல் ஆசை உண்டு’ என்று எழுதுவது கவிதையாகுமா?  ‘கூந்தல் கறுப்பு குங்குமம் சிவப்பு’ என்பது என்ன கண்டுபிடிப்பு? எனவே ‘சுரை மிதக்கும்’, ‘அம்மி மூழ்கும்’, ‘யானை நிற்கும்’, ‘முயல் நீந்தும் என்றெல்லாம் சீர்களை மாற்றி உரைகாண்பதால் உரைநடைத் தொடராக அமையுமே தவிர கவிதையாகப் பரிணமிக்காது. பொருள்கோள் என்பது கவிதைக்குரியதேயன்றி, உரைநடைக்கு அன்று.

    இந்தப் பாடலின் வரலாறு

    இந்தப் பாடல் பற்றிய வரலாறு பெரும்பாலும் தமிழாய்வாளர் பலருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் அன்பர் ஒருவர் தமது இணையத்தளப் பதிவில்2 இப்பாடலின் மூலப் பதிவுகளைத் தொகுத்தளித்திருப்பதை நான் காணும் வாய்ப்பு கிட்டியது. ஆய்வு நெறிப்படி மற்றொருவருடைய உழைப்பையும் கருத்தினையும் அவர் பெயராலேயே வெளியிடுவதுதான் பண்பாடு அந்த வகையில் அந்தப் பதிவினை அப்படியே தந்திருக்கிறேன். பொருள் புரிவதற்காகப் பத்திப் பிரித்துத் தந்துள்ளேன்.

    1. இவ்வெண்பா, சிந்தியல் வெண்பாவின் வடிவத்திலேயே, இளம்பூரணராலும், சேனாவரையராலும், நச்சினார்க்கினியராலும், தெய்வச்சிலையாராலும் (தொல். சொல். 400) யாப்பருங்கலவிருத்தி (சூ–95) யாப்பருங்கலக்காரிகை (சூ-43) உரையாசிரியர்களாலும், நன்னூலுக்கு உரைவரைந்த மயிலைநாதர், சங்கரநமச்சிவாயர் (நன்-413) போன்றோராலும் இதே வடிவில் எடுத்தாளப்படுகிறது.3

     

    1. நேமிநாதம், ( சொல் – சூ 68 ), இலக்கணக்கொத்து, (சூ.- 108 )முத்துவீரியம் (சூ- 1280) போன்ற இலக்கண நூல்களும் இந்த மூன்றடியைத்தான் காட்டுகின்றன.4

     

    1. பழைய இலக்கணங்கள் (நேமிநாதம் வரை) இப்பாடலைச் சுண்ணப் பொருள்கோள் என்றும் பின்வந்த இலக்கணங்கள் இதனை மொழிமாற்று என்றும் கொள்கின்றன.5

     

    1. இப்பாடல் “கரையாட கெண்டை“ எனத் தொடங்கும் நேரிசை வெண்பாவாக இருக்க முடியாது என்பதற்கு நேரடிச் சான்றுகள் உள.
      தொல்காப்பியச் செய்யுளியலின் 114ஆம் சூத்திரத்தில் நாலடியின் குறைந்த குறுவெண்பாட்டு, குறள் என்றும் சிந்தியல் என்றும் அழைக்கப்படும் என்று காட்டப்பட்டு, சிந்தியல் வெண்பாவிற்கு எடுத்துக்காட்டாகச், “சுரையாழ அம்மி மிதப்ப“ எனும் இப்பாட்டு கொடுக்கப்படுகிறது. எனவே இப்பாட்டு மூன்றடிதான் என்பது உறுதிப்படுகிறது.6

     

    1. விருத்தியும் (சூ.59) காரிகையும் (சூ. 25) இப்பாடலை இன்னிசைச் சிந்தியல் வெண்பாவிற்குச் சான்று காட்டிச் செல்கின்றன.
      இக்காரணங்களால், “கரையாடக் கெண்டை“ என்னும் அடி, “சுரையாழ“ எனத்தொடங்கும் மூவடிகளை உடைய வெண்பா வடிவம் குறைவுபட்ட வடிவம் எனத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட யாரோ ஒரு பண்டிதர் தம்புலமையைக் காட்ட, முன்சேர்த்த ஒட்டு எனக் கொள்வதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.7

     

    மேற்கண்ட பதிவு கட்டுரையாளருடையதன்று. இணையத்தில்8 கண்டவை. அவர்கள் ‘இந்த நூற்றாண்டிலும் ‘சூத்திரம்’ என்றுதான் எழுதுகிறார்கள்9 என்பதையும் ‘நூற்பா’ என்பதை மறந்தும் எழுத மறுக்கிறார்கள் என்பதையும் குறிப்பிடுவது என் கடமை. பழந்தமிழ் உரைகளின் கண்டவாறு எடுத்தோதப்பட்ட இத்தரவுகளின் வன்மை மென்மைகளை அடுத்து ஆராயலாம்.

     

    ‘‘சுரையாழ’ பாடலின் பதிப்புக் காலம்

    மேற்கண்ட பத்தியில் காணப்படும் செய்திகளிலிருந்து ஓர் உண்மையைப் புரிந்துகொள்ளலாம். அதாவது குறிப்பிட்ட அந்தப் பாடல் மூல பாடமாக அமைந்த நூல் எதனையும் மேற்கண்ட அன்பர் காட்டவில்லை. அதாவது அந்தப் பாடலை ஒரே வடிவத்தில் உரையாசிரியர்கள் பலரும் பல உரைகளில்  எடுத்தாண்டிருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறு எதனையும் அச்சான்றுகளால் பெறுவதற்கில்லை.இதில் சிக்கல் என்னவென்றால் மேற்கண்ட உரைகளெல்லாம் ஒன்றிரண்டு நூற்றாண்டுகளின் இடைவெளியில் தோன்றியவையே. மற்றொன்று எல்லாமே சுவடி பார்த்து எழுதியவையே! தற்கால அச்சு வசதிகள் அன்றைக்கு இருக்கவில்லை. தமிழிலக்கிய வரலாறு கண்ட அறிஞர் கா.சு. பிள்ளை அவர்கள் தாம் எழுதிய இலக்கிய வரலாற்றில் ‘உரையாசிரியர் காலம்’ என்பதைத் தனித்த இயலில் ஆராய்ந்திருக்கிறார்10 என்பதையும் அக்காலம் பெரும்பாலும் 13ஆம் நூற்றாண்டே என்பதையும் கருத்திற் கொண்டால் மேற்கண்ட சான்றுகள் ஒன்றுக்கு மேற்பட்ட எந்த ஆய்வுக் கருத்துக்கும் துணை செய்வதாகத் தெரியவில்லை.

    இனி இச்சிந்தியல் வெண்பா, சிலர் கருதுவதுபோல் நேரிசை வெண்பாவாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்பார்தம் கருத்தும் இதனையொத்ததே. மூல பாடம் எது அல்லது எந்த நூலில் என்பதை அறியாத வரையிலும் உரையாசிரியர்களின் ஒருமித்த பயன்பாடுதான் சான்றாகக் கொள்ளப்படும். ஆனால் அதற்கு ஆய்வாளர் சொல்லும் கருத்தில் வலிமையிருப்பதாகத் தெரியவில்லை. நான்கடியினும் குறைந்த குறுவெண்பாட்டு என்பதனாலேயே இந்த மூன்றடிதான் முழுமையான வடிவம் என்பது ஏற்குமாறு இல்லை. அந்த உரையாசிரியர் அவருக்குக் கிட்டிய தரவுகளின்படி அதனை அவ்வாறு கருதியிருக்கிறார் எனக் கொள்வதுதான் ஆய்வு நெறி.

    இடைச்செருகல் என்பார்தம் கூற்றும் விளக்கமும்

    இந்த மூன்றடிச் சிந்தியல் வெண்பாவை யாப்பின் மீது பற்றுக் கொண்ட யாரோ ஒருவர் (“யாரோ ஒரு பண்டிதர் தம்புலமையைக் காட்ட’’ என்பது முன்பே சுட்டப்பெற்றது) ‘கரையாட கெண்டை கயத்தாட மஞ்ஞை’ என ஒரு வரியை எழுதி அதனை நேரிசை வெண்பாவாக்கிவிட்டார்11 என்பது ஒருவர் தம் ஆய்வுக் கருத்து. இருக்கலாம். இத்தனை உரைகளிலும் மூன்றடிகளாக இருந்த இந்தப் பாட்டு எப்போது மாற்றப்பட்டிருக்கலாம் என்ற வினாவிற்கு விடை தேடினால் அது தொன்னூல் என்ற வீிரமாமுனிவரின் பெயரில் வந்த நூல் என்பதை ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

    “எனவே இவ்வெண்பா மூன்றடிகளை உடையது என்பது குறைந்தபட்சம் ஆயிரம் ஆண்டுகளாக நிலவும் கருத்து. இதை ஏன் உ.வே.சா நேரிசை வெண்பாவாகக் கருதினார் என்பதும் அதற்கு என்ன அவசியம் நேர்ந்தது என்பதும் தெரியவில்லை.”12

    என்று ஒருவர் எழுதுகிறார். ஐயர் அவர்கள் கொண்ட கருத்துத்தான் இந்தக் கட்டுரைக்கு வெளிச்சம் பாய்ச்சியது எனச் சொல்ல வேண்டும். அது பற்றிய விளக்கம் தொடர்கிறது.

    ஐயரின் ஐயமும் அகப்பொருள் அமைதியும்

    பேரறிஞர் உ.வே.சா.அவர்கள் இந்தப் பாட்டை நேரிசை வெண்பாகக் கொண்டதற்கு முக்கியமான காரணம் தனிச்சொல். இன்னிசை வெண்பா தனிச்சொல் பெற்று வராது.

    “ஒன்றும் பலவும் விகற்பொடு தனிச்சொல் இன்றி நடப்பின் இன்னிசை” 13

    என்பது காரிகை. எனவே இன்னிசை வெண்பா தனிச்சொல் பெறாது. (பல்வகை இன்னிசை வெண்பாக்களைப் பற்றிய இலக்கண அமைதிகளைக் குணசாகரர் தனது உரையில்தான் குறிப்பிடுகிறாரேயன்றிக் காரிகையில் அவற்றுக்கான இலக்கணம் இல்லை). அடுத்து,

    “நேரிசை இன்னிசை போல நடந்து அடி மூன்றின் வந்தால் நேரிசை இன்னிசைச் சிந்தியலாகும்”14

    என்பது மற்றொரு கருத்து. இதனால் தனிச்சொல் இல்லாமல் நடக்கும் இன்னிசை வெண்பா அடிகளால் மாறுபட்டு அதாவது நான்கடியின் குறைந்து மூன்றடியாக நடந்தால் அது இன்னிசைச் சிந்தியல் எனப்படும் என்பது பெறப்படும். இது அமிதசாகரர் கூறும் இலக்கணம்.

    குணசாகரர் உரையில் முரண்

    இந்தப் பாட்டிற்கு இலக்கணம் கூறவந்த உரையாசிரியர், குணசாகரர் பட்டுக் கொள்ளாமல் உரையெழுதியிருக்கிறார். அதாவது,

    “பலவிகற்பத்தான் வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பா”15

    என எதுகையோடு அமைதியடைகிறார். அவர் ‘வரையனைய’ என்னும் சொல்லை நோக்கினாரா என்பது தெரியவில்லை. மேலும் பதிப்புகளில் ‘வரையனைய’ என்பதைக் கோடிட்டுத் தனிச் சொல்லாகவே காட்டியிருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. இன்னிசை வெண்பாவிற்கோ இன்னிசைச் சிந்தியல் வெண்பாவிற்கோ தனிச்சொல் வருதல் கூடாது என்பது யாப்பிலக்கண விதி. இதில் எந்த யாப்பிலக்கண நூலிலும் மாறுபாடில்லை. ஐயர் ஏன் நேரிசை வெண்பாவாக்க முனைந்தார் என்னும் வினாவை எழுப்பியவர் கூட ஓர் இன்னிசைச் சிந்தியல் வெண்பாவினைத் தனிச்சொல்லின்றி நேரிசை வெண்பாவாக்க முடியாது என்னும் இலக்கணத்தையும் மறந்தார் போலும்!

    தனிச்சொல் பற்றிய எண்ணம் எழாத நிலையில் அது நேரிசை வெண்பாவாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் வர வாய்ப்பில்லை. எனில், அது நேரிசை வெண்பாவாகத்தான் இருந்திருக்க வேண்டும் என ஐயர் உள்ளிட்ட சிலர்தம் கருத்தியலுக்குக் காரணம் ‘வரையனைய’ என்னும் தனிச்சொல் ‘சுரையாழ’ என்னும் இரண்டாமடிக்குப் பொருத்தமான தனிச்சொல் எனக் கருதியதும் அதனைக் கோடிட்டுத் தனிச்சொல்போலக் குறித்ததுமே! இனி இவ்விரண்டு சொற்களுக்கும் பொருத்தமான பாட்டின் முதலடியின் முதற்சீரைக் கண்டறிந்ததன் விளைவுதான் ‘கரையாட கெண்டை கயத்தாட மஞ்ஞை’ என்னும் முதலடியாகும்.

    இந்த அடியின் வரலாறு நமக்குத் தேவையில்லை. ஐயரே எழுதியதாக இருக்கட்டும். ஔவை துரைசாமிப்பிள்ளை எழுதியதாகவும் இருக்கட்டும்!16 இல்லை அச்சுக் கோப்பவரே எழுதியதாயிருக்கட்டும்.! இங்கே பதியப்படும் அடிப்படை ஆய்வுண்மை மேற்கண்ட மூன்றடிப் பாடலைச் சிந்தியல் வெண்பா எனக் கருதியதுதான் அதன் வடிவம் பொருண்மை சிதைந்து போனதற்குக் காரணம் என்பதே. ‘சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய’ என்னும் தொடரைச் சொல்லிப் பார்த்தாலே ‘வரையனைய’ என்பது தனிச்சொல் என்பது உணரப்படும்! கவிதை செவி நுகர் கனிகள்! கண்காட்சிப் பொருள் அன்று!

    ‘சிந்தியல் வெண்பாவால்’ வந்த சிதைவு

    ‘வரையனைய’ என்பதைப் பிரித்துத் தனிச்சொல்லாகக் காட்டியவர்கள் அதனை நேரிசைச் சிந்தியல் எனக் காட்டியிருந்தால் ஐயருக்கு வந்த சிந்தனை அப்போதே பலருக்கும் வந்திருக்கும். ஐயர் அவர்களின் ஆய்வுழைப்பை  அறிந்தவர்கள் அவருக்கு இந்த ஐயம் வந்ததைப் பற்றி வியக்கமாட்டார்கள். அவர் ஒரு மூட்டைப் பதரில் ஒரு ‘மணி’ காண்பதற்கு ஓராண்டு உழைக்கும் உத்தமதானபுரத்துக்காரர். இந்தப் பாடலில் பயின்று வந்துள்ள ‘வரையனைய’ என்னும் தனிச்சொல்லை நோக்காது மூன்றடியாகக் கொண்டதாலேயே உரையாசிரியப் பெருமக்கள் இதனைப் பொதுவான சிந்தியல் வெண்பாவுக்குச் சான்றாக்கினர். பாடலின் உயிர்ப்பினை அறிந்து கொள்ள இயலாத காரணத்தால் வேறு சிலர் மொழிமாற்றுப் பொருள்கோளுக்கு இலக்கியமாக்கினார்.குணசாகரர் வடிவத்தில் அதனைச் சிந்தியல் வெண்பா எனக்குறிப்பட்டவர் பொருள்கோளில் சுண்ண மொழிமாற்றுக்கு எடுத்துக்காட்டாக்கியிருக்கிறார்.(மொழிமாற்று, சுண்ண மொழி மாற்று, அடிமொழி மாற்று, கொண்டு கோட்டுப் பொருள்கோள் ஆகியன பற்றிய ஆய்வு இங்கு முன்னெடுக்கவில்லை).வடிவம், பொருண்மை ஆகிய இரண்டுமே கிட்டிய தரவுகளுக்கேற்பக் கொண்ட முடிவு என்பது இக்கட்டுரையாளர் கருத்து.இனிப் பாடலை ஐயர் அவர்கள் கருத்தின்படி பதிப்பித்தால் எப்படி அமையும்? இப்படி அமையும்!

    கரையாட கெண்டை கயத்தாட மஞ்ஞை

    “சுரை யாழ அம்மி மிதப்ப – வரையனைய

    யானைக்கு நீந்து முயற்கு நிலையென்ப

    கானக நாடன் சுனை”

    இப்படி அமைந்த இந்தப் பாடல் இப்பொழுது முழுமையான நேரிசை வெண்பாவாக உருப்பெற்றுள்ளது. இதனால் இது பழைய உரைநூல்களில் சிந்தியல் வெண்பா எனக் குறிக்கப்பட்டது தவறு என்பது பொருளன்று. இந்த ஆய்வுக்குக் கட்டுரையாளருக்குக் கிட்டிய சிந்தனை இன்னொருவருக்கு எதிர்காலத்தில் கிட்டினால் இந்த என்னுடைய ஆய்வு முடிவுக்கு வரும்.வேறோரு முடிவு தலையெடுக்கும்.எனவே ஆய்வில் முடிவு என்பது இல்லை.அது ஒரு தொடரோட்டம் என்பதை ஆய்வாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.அவ்வாறின்றி “முன்னோர்கள் எல்லாம் அறியாமையில் இவ்வாறு எழுதினார்கள் பதிப்பித்தார்கள்” என்பதெல்லாம் நம் பாட்டனார்களை நாமே தரங்குறைந்து பேசுவதுபோல என்றாகிவிடும்!. இந்த முழுமையான நேரிசை வெண்பாவின் உள்ளடக்கத்தைப் புரிந்து சுவைப்பதற்கு முன்னால் கவிதைச் சுவை பற்றிய சில கருத்துகளைக் காணலாம்

    கவிதையைச் சுவைப்பது எப்படி?

    அனுபவத்தின் மொழிபெயர்ப்பே கவிதை. இயற்கை, இறையருள், தத்துவம், நீதி நெறி என எதுவானாலும் படைப்பாளியின் உள்ளத்தில் கரைந்து போன நிலையில் அவன் உள்ளத்திலிருந்து பீரிட்டு வருவதுதான் கவிதை. சொற்கள் பக்குவமாக அமைந்தால் கவிதை செய்யுளாகும். சொற்கள் நெருப்பாக அமைந்தால் செய்யுள் கவிதையாகப் பரிணமிக்கும். இது அறிஞர் மு.வ. அவர்களின் ஆய்வுப் பார்வை.

    “தொடுக்கும் கடவுட் பழம் பாடல்

           தொடையின் பயனே! நறைபழுத்த

                 துறைதீந் தமிழின் ஒழுகுநறுஞ்

                       சுவையே! அகந்தைக் கிழங்கை அகழ்ந்து

    எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு

           ஏற்றும் விளக்கே! வளர் சிமய

                 இமயப் பொருப்பில் விளையாடும்

                       இளமென்பிடியே! எறிதரங்கம்

    உடுத்தும் புவனம் கடந்து நின்ற

           ஒருவன் திருவுளத்தில் அழகு

                 ஒழுக எழுதிப்பார்த்திருக்கும்

                       உயிரோ வியமே! மதுகரம் வாய்

    மடுக்கும் குழற்காடேந்தும் இள

           வஞ்சிக் கொடியே! வருகவே!

                 மலையத்துவசன் பெற்ற பெரு

                       வாழ்வே!வருக வருகவே!”17 

    அம்மையைப் பலவகையில் உருவகம் செய்யும் குமரகுருபரர் பாட்டின் இறுதியடியில் வருகவே என்னும் சொல்லை மும்முறை அடுக்குவதைக் காணலாம். கிடக்கை நிலையிலேயே இந்தப் பாட்டைச் சுவைப்பது சரியே! ஆனால் ஒவ்வொரு உருவகவிளிக்கும் ‘வருகவே!’ என்னும் வியங்கோளை அமைத்துப் பாடிப் பாருங்கள்! (தொடையின் பயனே வருகவே! நறுஞ்சுவையே வருகவே! விளக்கே வருகவே! இளமென் பிடியே வருகவே! உயிரோவியமே வருகவே! வஞ்சிக்கொடியே வருகவே! பெருவாழ்வே வருகவே! என்பதுபோல) உணர்ச்சியின் ஆழம் தெரியும்! குமரகுருபரரோடு அவருடைய இறையனுபவத்தோடு நம்மையும் அறியாமல் ஒன்றுவதை உணரமுடியும். ஐயமிருந்தால் இந்தப் பாடலை தருமபுரம் சுவாமிநாதன் பாடியிருக்கிறார் கேட்டுப் பாருங்கள்!. இன்னொரு சான்று!மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். அதில் இந்த நெறியைப் பின்பற்றியிருப்பதைக் காணலாம்.

    “ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!

          உறுதி கொண்ட நெஞ்சினாய் வா! வா! வா!

    …………………………………………………………………………………………………………………………………

    ஒரு பெருஞ்செயல் செய்வாய் வா! வா! வா!18

    பாரதியார் நினைத்திருந்தால் குமரகுருபரரைப் போல எல்லா விளிகளையும் தொகுத்துச் சொல்லி ‘வா’என்னும் ஏவலை அடுக்காக்கியிருக்கலாம் அல்லவா? 32 வரிகளில் 3 வரிகளைத் தவிர மற்ற எல்லா வரிகளிலும் உள்ள விளிகளுக்கான வினையை அந்தந்த வரிகளிலேயே அவர் பதிவு செய்திருப்பதைக் காணலாம். எழுச்சிமிக்க பாரதத்தை வரவேற்கின்ற நிலையில் அவர் வாய்குளிர மனங்குளிர “வா!வா!வா!” என்று வரவேற்கிறார் என்பதாம்.  பாரதி இயற்றமிழ்க் கவிஞர் மட்டுமல்லர். இசைத்தமிழ்ப் பாவலர். அதனால்தான் அவர் தான் எழுதிய பல பாடல்கள் ‘இன்ன மெட்டில்தான் பாடப்படல் வேண்டும்! இன்ன ராகத்தில்தான் இசைக்கப்படல் வேண்டும் என்று பாட்டின் தொடக்கத்திலேயே எச்சரிக்கை செய்துவிடுகிறார். தம் பாட்டை இவர்கள் பாடினால் நம்மவர்கள் என்ன செய்வார்கள் என்று அவருக்குத் தெரியாதா என்ன?

    தலைவன் வாக்குறுதியும் தலைவி ஏமாற்றமும்

    சங்க இலக்கியத்தின் அகப்பாடல்கள் உளவியல் அடிப்படையில் அமைந்தவை. இயற்கைக் கூறுகளை மறுதலிக்காதவை புறவாழ்க்கையில்   வினைமுற்றி மீளும் காலம்பற்றிய தன்னால்அளிக்கப்படும் வாக்குறுதியை நிறைவேற்ற இயலாத தலைமகனைச் சங்க இலக்கியம் சித்திரித்து உள்ளது. அதனை உணராமல் அவன் கொடுத்த வாக்குறுதியை மட்டுமே நம்பிப் புலம்பும் நங்கையர்களையும் அது காட்டுகிறது.குறுந்தொகையில் ஒரு பாட்டு.கார் காலம் வந்தது.அதற்கு மறுக்க முடியாத சான்றாகக் கொன்றை மலர்கள் மகளிரின் கூந்தலைப் போலப் பூத்துக்குலுங்குகின்றன.இது இயற்கை. இயற்கை பெரும்பாலும் மாறாதது.ஆனால் தலைவன் வரவில்லை.தலைமகன் வரவில்லை எனத் தலைவி வருந்துவாளே என்று தோழி தயங்குகிறாள். அவள் தயக்கத்தைப் போக்க தலைவி சொல்வதாக அந்தப் பாட்டு அமைந்திருக்கிறது.

    “வண்டுபடத் ததைந்த கொடியிணர் இடையிடுபு

    பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்

    கதுப்பிற் தோன்றும் புதுப்பூங் கொன்றை

    கானம் காரெனக் கூறினும்

    யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே” 19

     

    “கொன்றை மரங்களில் புதிதாகப் பூத்துக் கார்காலம் வந்து விட்டது எனக்  கூறினாலும் நான் நம்பமாட்டேன்! ஏனென்றால் என் தலைவன் பொய் பேசமாட்டான்” இந்த அதீத நம்பிக்கை இன்றளவும் நடப்பியலிலும் இருப்பதனாலேயே நீதிமன்றங்களிலே இவ்வளவு வழக்குகள். சமுதாயத்தில் இவ்வளவு கொலைகள்! தற்கொலைகள்! இந்தப் பாட்டு குறுந்தொகையில் வருகிற ஒரு பாட்டென்றால் கலித்தொகையில் ஒருபடி மேலே போய் “என் தலைமகன் பொய் சொல்லவே மாட்டான்.அப்படிச் சொன்னால் அது ‘தண்ணீர் சுடும்’ என்பதுபோலாகும்” என்பதுபோல அமைந்த ஒரு பாட்டு இருக்கிறது.அந்தப் பாட்டைப் பாருங்கள்!

    பொய்த்தற்கு உரியனோ?பொய்த்தற்கு உரியனோ?

    ‘அஞ்சல் ஓம்பு” என்றாரைப் பொய்த்தற்கு உரியனோ?

    “குன்றகல் நாடன் வாய்மையில் பொய் தோன்றின்

    திங்களுள் தீத் தோன்றியற்று”

     

    “வாராது அமைவானோ? வாராது அமைவானோ?

    வாராது அமைகுவான் அல்லன் – மலைநாடன்

    ஈரத்துள் இன்னவை தோன்றின் நிழற்கயத்து

    நீருள் குவளை வெந்தற்று”

     

    “துறக்குவன் அல்லன் துறக்குவன் அல்லன்

    தொடர்வரை வெற்பன் துறக்குவன் அல்லன்

    தொடர்புள் இனையவை தோன்றின் விசும்பில்

    சுடருள் இருள் தோன்றி யற்று”20

     

    எவ்வளவு பெரிய நம்பிக்கை?

    இயற்கையை மறுதலித்து தன் இதயம் கவர்ந்தவனின் சொல்லுக்கு மதிப்பளிக்கும் ஒரு தலைவியை இங்கே காண முடிகிறது. இதுபோன்ற பதிவுகளை நேரடியாகப் பொருள் காண்பதிலும் கொஞ்சம் நுண்ணியத்தைச் செலவழித்தால் ஒரு சமுதாய உண்மையைப் புரிந்துகொள்ள இயலும். இப்படித் தன் தலைவி வருந்துவாளே என்று எண்ணித்தான் வினைமுடித்து மீளும் தலைவன்தன் தேர்ப்பாகனை விரைந்து செல்லுமாறு ஆணையிடும் பாடல்களும் அமைந்துள்ளன என்பதை அறிதல் வேண்டும். இலக்கியம் சமுதாயத்தின் படப்பிடிப்பு. தலைவன் வந்துவிடுவான் என்னும் தலைவி நம்பிக்கையும் அந்த நம்பிக்கையைப் பாழாக்காமல் மீண்ட தலைவனையும் தமிழ்க்கவிதை உலகம் அன்றைக்குப் பதிவு செய்திருப்பதைஅறியமுடிகிறது.

    ‘சுரையாழ’ பாட்டின் உண்மைப் பொருள்

    இப்படியொரு துணைத் தலைப்பு இடுவதனாலேயே இதுதான் உண்மைப் பொருள் என யாரும் கருதிவிட வேண்டாம். கட்டுரையாளரின் வரையறுக்கப்பட்ட புலமை, கிட்டியிருக்கும் தரவுகள், பிற ஆய்வாளர்களின் முடிவுகள், தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் காணப்படும் துறைப்பொருள் அமைதி முதலியனவற்றையெல்லாம் உள்வாங்கித் தற்காலிகமான முறையில் பதிவு செய்யப்படும் இலக்கிய நோக்கு என்றே கருத வேண்டும்.

    கரையாட கெண்டை கயத்தாட மஞ்ஞை

    “சுரை யாழ அம்மி மிதப்ப –  வரையனைய

    யானைக்கு நீந்து முயற்கு நிலையென்ப

    கானக நாடன் சுனை”

    ‘‘வரையனைய’ என்பது தனிச்சொல் என்பது தெளிவாக மேலே விளக்கப்பட்டிருத்தலின் அதன் முன்னடிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அது ஒரு நேரிசை வெண்பா என முன்வைக்கப்படுகிறது.படினும் அது இன்னிசைச் சிந்தியல்வெண்பா என்னும் பழைய தகுதி அப்படியே இருக்கிறது.நம் ஆய்வு இவ்வாறு அமைகிறது. அவ்வளவுதான்! இனி பொருள்கோள் நெறியில் எந்த மாற்றுக்கும் இடமில்லை என்பது மேலே காட்டிய சங்க இலக்கிய அகத்திணை மரபுகளால் நன்கு புலப்படும். அதாவது தலைவன் பொய்சொல்லமாட்டான் எனத் தலைவி நம்புவதும் “இல்லை அவன் பொய் சொல்வான்’ எனத் தோழி கவல்வதும் பாடுபொருளாயிருக்கின்றன.வினைமேற் செல்லும் தலைவன் அல்லது வரைவு நீட்டிக்கும் தலைவன் காலத்தாழ்வாகிய செயல்களுக்கு ஆயிரம் காரணங்களைச் சொல்வது ஓர் இலக்கிய மரபு.அவனை நம்பிப் புலம்புவதும் ஓர் இலக்கிய மரபு.காலம் நீட்டித்த தலைவனைக் குறிப்பாக ஏசுவதுபோலப் பேசுவது தோழிக்கு இயல்பு.இவை அத்தனையும் அகத்திணை இலக்கிய மரபுகள்.அந்த மரபு பற்றியே இந்தப் பாடலும் அமைந்திருக்க வேண்டும். தோழி சொல்கிறாள்,

    “நீ என்னவோ தலைவன் தான் தந்த வாக்குறுதியை மீறமாட்டான் என நம்புகிறாய்.அவன் மீறுவது ஒரு புறம் இருக்கட்டும்.தான் சொல்கிறேன்.அவன் மட்டும் வாக்குறுதி மீறித் தலைகீழாக நடப்பான் என்பதன்று.உனக்குத் தெரியாது அவன் மட்டும் தலைகீழ் அல்லன்.அவன் நாட்டு மலைப்பகுதிகளில் உள்ள சுனைகளும் கூடத் தலைகீழானதுதான்.அந்தச் சுனை நீரில் நீந்த வேண்டிய மீன் கரையில் விளையாடும்.கரையில் விளையாடுதற்குரிய மயில் சுனையில் விளையாடும்.மிதக்க வேண்டிய சுரை அமிழ்ந்துவிடும்.அமிழ வேண்டிய அம்மி மிதக்கும்.உருவத்தில் பெரிய யானை நீச்சலடிக்கும்.சிறிய முயல் மூழ்கிவிடும்.அவன் நாட்டுச் சுனையில் அஃறிணைச் சுனையே இவ்வாறெனின் உயர்திணை பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?”

    இந்தக் கண்ணழிப்பும் உரைப்போக்கும் துறைப்பகுப்பும் கட்டுரையாளர் முன் வைக்கும் கருத்தியல்.யாரும் கட்டுப்பட வேண்டும் என்பதில்லை.யார்மீதும் திணிப்பதற்காகவும் இல்லை.இனிக் கூடுதல் தகவலாகப் பதிவு செய்யப்படும் கருத்து.

    “உரைசான்ற சான்றோர் ஒடுங்கி உறைய

    நிரை உள்ளர் அல்லர் நிமிர்ந்து – பெருகல்

    வரைதாழ் இலங்கு அருவி வெற்ப அதுவே

    சுரையாழ அம்மி மிதப்பு” 21

    என்னும் நேரிசை வெண்பா பழமொழி நானூற்றில் வருகிறது. இந்தப் பாட்டில் ‘சுரையாழ அம்மி மிதப்பு’ என்பதைப் பழமொழியாகப் பதிவு செய்திருக்கிறார்கள் இதனால் சுரையாழவும் அம்மி மிதக்கவுமான கருத்தியல் சமுதாயத்தில் நிலவியிருக்கிறது என்பது பெறப்படும். படவே, அது புலவனின் கற்பனையன்று என்பது உறுதி செய்யப்படும்.“சான்றோர் ஒடுக்கமும் அல்லவர் நிமிர்வும்” அம்மியின் மிதப்புக்கும் சுரையின் அமிழ்வுக்கும் ஒப்புமையாகக் கருதப்பட்டிருப்பது தமிழ்க்கவிதை உவமக் கொள்கையின் ஒரு தனி அடையாளம் என்றே கூறலாம். ஒரு செயல் என்பது ஒரு நாகரிகச் சமுதாயத்தின் சிந்தனை.

     

    நிறைவுரை

     

    ‘அணிசெய் கலைகள் ஆயிரம் கற்பினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் கற்கிலார்’ என்பார் மகாகவி. ஏதோ வேண்டுமென்றே முன்னோர்கள் இந்தப் பாட்டுக்குத் தவறான பொருள்கோளைக் கொடுத்துவிட்டார்கள் என்பது போல எண்ணுவதும் பிற சான்றோர்களின் புலமையை ஐயப்படுவதும் பக்குவான ஆய்வு நெறியன்று யாராயினும் தங்களுக்குக் கிட்டிய தரவுகளின் அடிப்படையில்தான் ஆய்வு மேற்கொள்ள இயலும். நூலகங்கள் இல்லாத சுவடிக் காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களின் உழைப்பு எண்ணிப்பார்க்க இயலாதது.‘சுரையாழ அம்மி மிதப்ப’ என்பது ஒரு நாகரிகச் சமுதாயத்தின் வழக்கில் பயன்படும் ஒரு தொடர்.அதனை இலக்கியப் பதிவில் கொண்டுவந்திருக்கும் புலவனின் சதுரப்பாடு பெரிதும் பாராட்டத்தக்கது.வழக்குப் பழமொழி ஒன்றினை அகப்பொருள் அமைதிக்குப் பயன்படுத்தியிருக்கும் புலமைத் திறன் சிந்திக்க வைக்கிறது.பதிப்புலகின் பிதாமகர் சான்றோர் உ.வே.சா.அவர்கள் ‘வரையனைய’ என்பதைத் தனிச்சொல்லாகக் கொண்டிருக்காவிட்டால் இந்தக் கட்டுரையே இல்லை.இன்றைக்கு இந்தப் பாட்டின் உரையமைதி இவ்வளவுதான். நாளை மற்றொருஆய்வாளருக்குக் கிட்டும் தரவுகளின் தன்மையைப் பொருத்து இன்னும் சிறந்த பொருள் கிட்டலாம் என்பதை நினைவூட்டிஇக்கட்டுரை தன்னை நிறைவு செய்து கொள்கிறது.

    சான்றெண் விளக்கம்

    1. குணசாகரர் யாப்பருங்கலக்காரிகை உரை காரிகை எண் 28
    2. Uoomaikkanavugal.com கனவுத் தொகுப்பு ‘கானக நாடன் சுனை’
    3. Uoomaikkanavugal.com கனவுத் தொகுப்பு ‘கானக நாடன் சுனை’
    4. Uoomaikkanavugal.com கனவுத் ‘தொகுப்பு கானக நாடன் சுனை’
    5. Uoomaikkanavugal.com கனவுத் தொகுப்பு ‘கானக நாடன் சுனை’
    6. Uoomaikkanavugal.com கனவுத் தொகுப்பு ‘கானக நாடன் சுனை’
    7. Uoomaikkanavugal.com கனவுத் தொகுப்பு ‘கானக நாடன் சுனை’
    8. Uoomaikkanavugal.com கனவுத் தொகுப்பு ‘கானக நாடன் சுனை’
    9. Uoomaikkanavugal.com கனவுத் தொகுப்பு ‘கானக நாடன் சுனை’
    10. பிள்ளை .கா.சு. இலக்கிய  வரலாறு தொகுப்பு 2    ப 370
    11. Uoomaikkanavugal.com கனவுத் தொகுப்பு கானக நாடன் சுனை
    12. Uoomaikkanavugal.com கனவுத் தொகுப்பு கானக நாடன் சுனை
    13. அமிதசாகரர் யாப்பருங்கலக்காரிகை காரிகை எண் 26
    14. மேலது காரிகை எண் 28
    15. குணசாகரர் மேலது உரை    
    16. Uoomaikkanavugal.com கனவுத் தொகுப்பு ‘கானக நாடன் சுனை’
    17. குமரகுருபரர் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் பா.எண். 61
    18. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள் ப 43
    19. ஓதலாந்தையார் குறுந்தொகை பா.எண்.  21
    20. கபிலர் கலித்தொகை குறிஞ்சிக்கலி           பா.எண். 5
    21. முன்றுறையரையனார் பழமொழி நானூறு பா.எண். 125

     

    துணைநூற் பட்டியல்

    1. அமிதசாகரர் யாப்பருங்கலக்காரிகை                      

    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

    சென்னை – 600001.

    முதற்பதிப்பு – 1940

     

    1. ஔவை துரைசாமி பிள்ளை குறுந்தெகை உரை

    திருநெல்வேலி தென்னிந்திய சைவ

    சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

    சென்னை – 600001.

    முதற்பதிப்பு – 1940

     

    1. குணசாகரர்                     யாப்பருங்கலக்காரிகை உரை

    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

    சென்னை – 600001.

    முதற்பதிப்பு – 1940

     

     

     

    1. குமரகுருபரர் மீனாட்சியம்மன் பிள்ளைத் தமிழ்

    முல்லை நிலையம்

    9, பாரதி முதல் தெரு

    தி.நகர். சென்னை – 60017

     

    1. சுப்பிரமணிய பாரதியார், பாரதியார் கவிதைகள்

    பூம்புகார் பிரசுரம்

    பிரகாசம் சாலை, பிராட்வே

    சென்னை – 600 108

     

    1. புலியூர்க் கேசிகன் கலித்தொகை உரை

    பாரி நிலையம்

    சென்னை – 600001.

    ஏழாம் பதிப்பு – 2003

     

    1. முன்றுறையரையனார் பழமொழி நானூறு

    நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

    சென்னை – 600 098

    முதற்பதிப்பு– 1957

     

    1. இணையதள முழுமுகவரி ஊமைக்கனவுகள்

    கனவுத் தொகுப்பு

                                             UMAIKKANAVUKAL.COM      

                                             UOOMAIKKANAVUKAL.COM

    கவிதையின்கழுத்தைஇப்படியும்அறுக்கலாம் – பிப்ரவரி 2திங்கட்கிழமை 2015

    ‘கானக நாடன் சுனை’ – பிப்ரவரி 5 வியாழக்கிழமை 2015

    (கட்டுரையாளர் அறிந்த வகையில் இதுவே முகவரி என அறியப்படுகிறது. கூகுளில் ‘சுரையாழ அம்மி மிதப்ப’ எனத் தமிழில் பதிவிடின் தொடர்புடைய கட்டுரையைக் காணலாம். இந்தப் பதிவும் இதற்கான பின்னூட்டங்களுமே இந்தக் கட்டுரைக்கான காரணக் களமாகும். “கவிதையின் கழுத்தை இப்படியும் அறுக்கலாம்’ என்னும் ஒரு தொடரின் எதிர்மறை விளைவே இக்கட்டுரை)

    பின்குறிப்பு: இணையத்தளப் பதிவில் பதிவாளர் பெயரோ பின்னூட்டக்காரர்களின் இயற்பெயரோ பெரும்பான்மை காண இயலவில்லை.


    ஆய்வறிஞர் மதிப்புரை (Peer Review):

    “மூழ்கிய சுரையும் மிதந்த அம்மியும்” என்னுந் தலைப்பில் அமைந்த  இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன்மதிப்பீடு

    • பழந்தமிழ் இலக்கண உரைகளில் காணப்படும் பாடல்கள் பல, இலக்கியச் சுவைக்கும் இலக்கண விளக்கத்திற்கும் பயன்படுமாறு அமைந்துள்ளன. அவற்றுள் ஒரு பாடலைப் பற்றிய வடிவம் மற்றும் பொருண்மை ஆகியவற்றின் உண்மைகாணும் முயற்சியாக இக்கடடுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • எடுத்துக்கொண்ட பாடல் அகத்துறைச் சார்ந்தது என்பதால், துறை விளக்கத்திற்காகப் பல நூல்களைக் கட்டுரையாளர் காட்டியிருப்பதும் புலனெறி வழக்கத்தை அன்றைய உலகியலோடு ஒப்பிட்டுத் தலைமகன் தலைமகள் இவர்களுடைய உணர்வொற்றுமையை நுட்பமாகப் பதிவு செய்திருப்பதும் சிந்தனைக்குரியன.
    • சங்க இலக்கியப் பாடல்களை  உளவியல் அடிப்படையில் நோக்கி இயற்கையையே மறுதலிக்கும் அளவுக்குத் தம் தலைவன் மீது பற்று வைத்திருக்கும் தலைவியர் பலர்தம் உள்ளங்களைக் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது.
    • மூன்று வரிப் பாடலாகவே இருந்த இதன் மூலத்தைக் கண்டறியும் அறிஞர் உ.வே.சா. அவர்தம் முயற்சியில் கிட்டிய முதலடியே இக்கட்டுரைப் பொருளை முழுமையடையச் செய்கிறது. அவருடைய ஐயத்திற்கான அடிப்படை எது என்பதைக் கண்டறிவதிலும் முந்தைய ஆய்வுகளிலிருந்து கிட்டிய முதல் வரியைத் தயங்காமல் ஏற்றுக்கொண்டு உரைகாண்பதிலும் கட்டுரையாளரின் ஆய்வுப் பக்குவத்தையும் பண்பாட்டையும் காண முடிகிறது.
    • ‘வரையனைய’ என்பது தனிச்சொல் என்பதற்குக் கட்டுரையாளர் முன்வைக்கும் இலக்கண விளக்கங்கள் ஆழமானவை. அதனைத் தனிச்சொல்லாக ஐயர் கருதியதால்தான் அதன் உண்மையான முழுவடிவம் நேரிசை வெண்பாகத்தான் இருக்க முடியும் என்னும் முடிவுக்கு வருகிறார்.
    • கவிதைச் சுவையுணர் திறனை விளக்கக் குமரகுருபரரையும் பாரதியையும் முன் பின்னாக ஒப்பிட்டுக் காட்டியிருப்பது நிறைவு அளிக்கிறது.
    • இவ்வளவு ஆழமான கட்டுரையில் கட்டுரையாளர் ஒன்றினைக் கவனிக்கத் தவறிவிட்டாரோ எனக் கருத வேண்டியதிருக்கிறது.   ‘பொருள்கோள் நெறியில் எந்த மாற்றுக்கும் இடமில்லை’ என்பது அவசரப் பதிவோ?  பாட்டில் இரண்டு மற்றும் மூன்றாவது அடிகள் எழுவாய்த் தொடராக அமைய, முதலடி பெயரெச்சத் தொடராக அமைந்திருப்பதைக் கட்டுரையாளர் கவனித்திருக்க வேண்டும். கவனித்திருந்தால் மற்ற இரண்டு அடிகளைப் போலவே முதலடியையும் எழுவாய்த் தொடராகவே அமைப்பதுதான் மொழிமாற்றுப் பொருள்கோள் என்பதை உணர்ந்திருக்கக் கூடும். ‘கரையாட கெண்டை கயத்தாட  மஞ்ஞை’ என்பது மற்றவிரு அடிகளோடு பொருந்தாமை காண்க. எனவே  அவற்றைக் கெண்டை கரையாட, மஞ்ஞை கயத்தாட எனப் பிற அடிகள்போல எழுவாய்த் தொடராக மாற்றினால் பாட்டின் முதல் மூன்றடிகள் செவ்வையாக அமைந்துவிடுவதைக் காணலாம். காணவே பாட்டில் ஓரடிக்குள் உள்ள சீர்களை மாற்றிப் பொருள் காணும் கொள்கையாகிய மொழிமாற்றுப் பொருள்கோள் இவ்வடியில் அமைந்திருக்கிறது என உரைகாரர் கருதியது சரியே என்பது புலனாகும்.
    • தொடக்கக் காலத்தில் நான்கடியாக இருந்து முதலடியில் காணப்படும் மொழிமாற்றுப் பொருள்கோள் சுட்டப்பட்டுக் காலப்போக்கில் அந்த முதலடி மட்டும் மறைந்த நிலையிலும் எஞ்சிய மூன்றடிப் பாடலை மட்டும் பதிவு செய்து பொருள்கோளை வழக்கம் போல் பதிவு செய்திருக்கலாம். சங்க இலக்கியப் பதிவுகளில் பல பாடல்களில் இடையடிகள் மறைந்து போனதை ஒக்கும் இது.
    • ஆய்வுக் கட்டுரையில் சான்றெண் விளக்கமும் துணைநூற்பட்டியலைப் போலவே நெறிசார்ந்தது என்பது வலியுறுத்தப்படுகிறது.

     

    Share
  • நார்மன் ராபர்ட் போக்சன்

    நார்மன் ராபர்ட் போக்சன்

    வெ. சுப்ரமணியன்

    நேற்று விண்மீன்களின் பொலிவு குறித்த ஒரு காணொலி தயாரித்துக் கொண்டிருந்தேன். அப்போது விண்மீன்களின் தோற்றப் பொலிவெண் (Apparent magnitude) குறித்த தற்போது நடைமுறையில் பயன்படுத்தப்படும் எண் மதிப்பு அளவீட்டு முறையை (magnitude scale) உருவாக்கிய  நார்மன் ராபர்ட் போக்சன் (Norman Robert Pogson) சென்னையில் வாழ்ந்து மறைந்த ஆங்கிலேயர் என்ற விபரம், அவரைப் பற்றி இன்னும் அதிகமான விவரங்களை அறிந்துகொள்ள என்னைத் தூண்டியது. அதனால் இணையத்தளத்தில் அவர் குறித்துத் தேடிய போது ஆங்கிலத்தில் கிடைத்த தகவல்களைத் திரட்டித் தமிழில் தருகிறேன்.

    நார்மன் ராபர்ட் போக்சன் (Norman Robert Pogson) இங்கிலாந்தில் நாட்டிங்காம் (Nottingham) என்ற இடத்தில் 1829ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தை ஜார்ஜ் ஓவன் போக்சன் (George Owen Pogson) உள்ளாடைகள், சரிகை விற்பனையாளராகவும் மற்றும் தரகு முகவராகவும் தொழில் செய்துகொண்டிருந்தார். தங்களது பெரிய குடும்பத்தின் வருமானத்திற்கு உதவியாக இருக்கவும், தந்தையின் தொழிலைக் கவனிக்கவும் வேண்டி போக்சன் வணிகவியல் கற்கவே அனுப்பப்பட்டார். ஆனால் போக்சனின் மனமோ அறிவியலையும் கணிதத்தையும் நாடியது. அவரது கணிதத்தின் மீதான ஆர்வத்திற்கு அவரது தாயார் மேரி ஆன் (Mary Ann) ஆதரவாக இருந்து ஊக்கப்படுத்தினார்.

    படம்: நார்மன் ராபர்ட் போக்சன் (1829 – 1891) (Picture Courtesy : Indian Institute of Astrophysics – archives)

    போக்சனின் தொடக்க காலக் கல்வி ஒன்றும் முறையானதாக இல்லை. தனது பதினாறாவது வயதில் கணிதம் போதிக்கும் எண்ணத்தில் பள்ளிப் படிப்பை விட்டுவிட்டார். தனது பதினெட்டாம் வயதில் ராயல் வானியல் சங்கத்தின் (Royal Astronomical Society) ஜான் ரஸ்ஸல் ஹிண்ட் (John Russell Hind) உதவியுடன் வால்மீன்கள் (Comets) இரண்டின் சுற்றுப்பாதையைக் கணக்கிட்டார். இதன் பின்னர் 1846ஆம் ஆண்டில் ஜார்ஜ் பிஷப் வானியல் ஆய்வுக் கூடம் (George Bishop Observatory) மூலம் வானியலுக்கு அறிமுகமானார். வால்மீன்கள் குறித்த ஆய்வுகளில் இவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. ஐசிஸ் (Isis) என்ற சிறு கோள் (Asteroid) குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். இதற்கிடையில் அவரது இருபதாவது வயதில் 1849ஆம் ஆண்டில் லண்டனில் எலிசபெத் ஜேன் ஆம்ப்ரோஸைத் (Elizabeth Jane Ambrose) திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்குப் பதினொரு குழந்தைகள் பிறந்தன.

    1852ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்டின்  ராட்கிளிஃப் வானியல் ஆய்வுக் கூடத்தில் (Radcliffe Observatory) உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். இங்கு அவருக்கு ஐஸிஸ் (Isis) என்ற சிறுகோளைக் கண்டுபிடித்தமைக்காக லாலாண்ட் பதக்கம் (Lalande medal) வழங்கப்பட்டது. ஆக்ஸ்போர்டில் பணியாற்றிய காலத்தில் வழக்கமான ஆய்வுப் பணிகளுடன் பொலிவுமாறு விண்மீன்கள் (variable stars) குறித்தும் ஆய்வுகள் செய்தார். 1854ஆம் ஆண்டில் ஜார்ஜ் ஏர்ரி (George Airy)யின் புவியின் அடர்த்தி காணும் சோதனைகளில் பங்கு கொண்டு உதவினார்.

    1859ஆம் ஆண்டில் ஜான் லீ (John Lee)க்குச் சொந்தமான ஹார்ட்வெல் வானியல் ஆய்வுக் கூடத்தின் (Hartwell observatory) இயக்குநராகப் பொறுப்பேற்றார். 1859 முதல் 1860 வரையில் பொலிவுமாறு விண்மீன்கள் (variable stars) மற்றும் சிறு கோள்கள் (asteroids) குறித்த 14 ஆய்வுக் கட்டுரைகளை ராயல் வானியல் ஆய்வுச் சங்கத்தின் மாதாந்திர அறிவிப்புகளில் (Monthly notices of Royal Astronomical Society) வெளியிட்டார். 1860ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் அரசாங்க வானியலாராகப் பணிபுரியும் பொருட்டு  சர் சார்லஸ் உட் (Sir. Charles wood) இவரை நியமனம் செய்தார்.

    1861ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த போக்சன், சென்னை வானியல் ஆய்வுக்கூடத்தில் (Madras Observatory) பணிபுரியும் போது 67 ஏசியா (67 Asia) உள்ளிட்ட ஐந்து சிறு கோள்களையும், ஏழு பொலிவுமாறு விண்மீன்களையும்  அடுத்த ஏழு ஆண்டுகளில் தன் இடைவிடா உழைப்பால் கண்டு பிடித்தார்.

    படம்: சென்னை வானியல் நிலையம்

    சென்னையில் அமைந்த முதல் வானியல் ஆய்வு நிலையத்தின் எச்சங்களாக இன்றைக்கு மீதம் இருப்பது மேலே படத்தில் உள்ள பதினைந்து அடி உயரத் தூண் மட்டுமே.

    https://www.thehindu.com/news/cities/chennai/the-origins-of-the-weatherman-in-madras/article5045891.ece
    (Photo credit : M. Vedhan)

    அடுத்து தொடர்ந்து வரும் பதிவுகளில் இது குறித்து விரிவாகக் காண்போம்.

    படம் : 1880 ஆம் ஆண்டில் சென்னை வானியல் ஆய்வு நிலையம்  (Madras observatory – 1880) 
    (நன்றி: ru:Погсон, Норман Роберт – http://prints.iiap.res.in/handle/2248/714)

    1831 முதல் 1842 வரை பணிபுரிந்த T.G. டெய்லர் (T.G.Taylor) 1831ஆம் ஆண்டில் துவங்கி 1835ஆம் ஆண்டில் வெளியிட்ட (Taylor’s Madras catalogue) டெய்லரின் மெட்ராஸ் அட்டவணை என்ற 11,015 விண்மீன்கள் குறித்த தகவல்களைக் கொண்ட அட்டவணையைக் கையில் எடுத்துக் கொண்ட போக்சன், 1887ஆம் ஆண்டு வரையில் தொடர்ந்து 51,101 பதிவுகளை அதில் தன் பங்காகப் பதிவு செய்தார். 1891ஆம் ஆண்டில் போக்சனின் இறப்புக்குப் பின் இந்த அட்டவணையை  ஆர்தர் டவுனிங் (Arthur downing)  சீரமைத்து 1901ஆம் ஆண்டில் வெளியிட்டார். தாய்நாட்டை விட்டு இந்தியாவில் தனித்திருந்த போதிலும்,

    அவர் தன் வாழ்நாளில் 134 விண்மீன்கள், 106 பொலிவுமாறு விண்மீன்கள், 21 பொலிவுமாறு விண்மீனாக இருக்க வாய்ப்புள்ள விண்மீன்கள் மற்றும் 7 சூப்பர் நோவா சாத்தியங்களைக் கண்டறிந்துள்ளார்

    1868ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் நாள் சூரிய கிரகணத்தை முன்னிட்டு, சிறப்புப் பயணமாகப் போக்சன், மசூலிப்பட்டினத்திற்குச் சென்றார். அப்போது மேற்கொண்ட சூரிய நிறமாலை ஆய்வுகளின் போது புதிய நிறமாலை வரியைக் கண்டதைக் குறித்து  பதிவு செய்திருந்தார். இந்த வரி, ஹீலியம் தனிமத்தைச் சேர்ந்தது. அதே நேரத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜூல்ஸ் ஜான்சென் (Jules Janssen) குண்டூரில் மேற்கொண்ட நிறமாலை ஆய்வுகளின்  பின்னரே ஹீலியம் (Helium) தனிமம்  இருப்பது முதன் முதலாகத் தெரிய வந்தது . புதிய தனிமம் சூரியனில் இருப்பதால் சூரியன் (Helios) என்ற பொருள் படும் ஹீலியம் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த நிகழ்வுகளுக்குப் பின்  அடுத்த ஆண்டில் அதாவது 1869இல் அவரது மனைவி ஜேன் ஆம்ப்ரோஸ் காலமானார் .

    வானியலில் அவரது மிக முக்கியமான பங்களிப்பு என்பது “போக்சன் விகிதம்” (Pogson’s ratio) என்பதுதான்.  ஹிப்பார்கஸ் (Hipparchus) விண்மீன்களின் தோற்றப் பொலிவில் (Apparent magnitude) ஏற்படுத்திய ஆறு படிநிலை அளவுகளில் இவர் செய்த மாற்றம் தான் அது. அதாவது முதல் படிநிலை அளவில் (First magnitude) உள்ள விண்மீனின் தோற்றப் பொலிவு 1 என்றால் ஆறாவது படிநிலையில் (Sixth magnitude) உள்ள விண்மீனின் தோற்றப் பொலிவு 1/100  என்பதே. அதாவது 5√100 அல்லது (100)1/5 = 2.521 மடங்குகளாக முதல் படிநிலையிலிருந்து ஒவ்வொரு படியாக நேர்த் திசையில் செல்ல, பொலிவு குறையும்.  அதுவே எதிர்க்குறித் திசையில் செல்ல மதிப்பு அதிகரிக்கும். அடுத்தடுத்த எந்த இரு படிநிலைகளுக்கும் உள்ள விகிதம் மாறாத மதிப்புடையது அது 5√100 = (100)1/5 = 2.521. இது எதிர் லாகிரிதத் தன்மை (reverse logarithmic) கொண்டது. அதாவது படிநிலை எண் (magnitude) கூட, பொலிவு (Brightness) மதிப்பு குறையும் .

    m1 : m6 = 1: 1/100.

    m1- m2 = 2.5 log(L1/L2)

    இதில் m என்பது விண்மீனின் படி நிலை அளவீடு (Apparent magnitude). L என்பது சார்பிலாப் பொலிவு.

    1868, 1871 ஆகிய ஆண்டுகளில் நிகழ்ந்த இந்தியச் சூரிய கிரகணப் பயணங்களில் பங்கு கொண்டார். 1872ஆம் ஆண்டு நவம்பர் 30 அன்று எர்ன்ஸ்ட் ப்ரீட்ரிக் வில்ஹெல்ம் கிளிங்கர்பியூஸ் (Ernst Friedrich Wilhelm Klinkerfues) என்னும் ஜெர்மானிய வானியலாளரிடமிருந்து போக்சனுக்கு ஒரு தந்தி கிடைத்தது. அதில், “பீலா (Biela) 27ஆம் தேதி பூமியைத் தொட்டது. தீட்டா செண்டூரிக்கு அருகில் தேடுங்கள்” என்று தகவல் இருந்தது.  குறிப்பிட்ட பீலா, ஒரு வால்மீன். துரதிர்ஷ்டவசமாக மெட்ராஸில் வானம் மேகமூட்டமாக இருந்தது வானம் தெளிவடையும் போது  டிசம்பர் 2ஆம் தேதி ஆகி விட்டது. அப்போது அவர் ஒரு பொருளைக் கண்டார் அதனை X/1872X1 எனப் பதிவுசெய்தார்.  இது பீலாவின் வால்மீனின் மறு வருகை என்று அவர் நம்பினார்.  ஆனால் பின்னர் அது வேறு ஒரு வான்பொருளாகக் கண்டறியப்பட்டது. அதுவே பின்னாளில் “போக்சனின் வால்மீன்” (Pogson’s Comet) என்று அழைக்கப்படுகிறது.

    மனைவி ஜேன் ஆம்ப்ரோஸ் 1869ஆம் ஆண்டில் இறந்த பின்னர் பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் 1883ஆம் ஆண்டு போக்சன் தனது ஐம்பத்து நான்காவது வயதில் மெட்ராஸில் அதாவது சென்னையில் பிரிட்டிஷ் படைப்பிரிவை சேர்ந்த சார்லஸ் டபிள்யூ. சிபிலியின் (Charles W. Sibley) மகளான எடித் லூயிசா ஸ்டாப்ஃபோர்டு சிபிலி (Edith Louisa Stopford Sibley) என்ற முப்பத்து மூன்று வயது விதவையைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு மேலும் மூன்று குழந்தைகள் பிறந்தனர். ஃபிரடெரிக் வேரி (Frederick Vere), எடித் வேரா (Edith Vera) மற்றும் எடித் கிளாடிஸ்(Edith Gladys).  இதில் எடித் வேரா குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டார். 1885ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி போக்சனால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வேரா (Vera) என்ற சிறுகோள், அவரது இரண்டாவது மனைவி எடித்தின் பரிந்துரையின் பேரில் பெயரிடப்பட்டது.

    நீண்ட காலமாக போக்சனின் உதவியாளராகப் பணியாற்றிய சிந்தாமணி ரகுநாதாச்சாரி பணியிலிருந்து ஓய்வு பெற்றதும், இங்கிலாந்தில் இருந்தவாறு அவருடன் கூட்டுப் பணியாற்றுபவர்களுடனும், இந்தியாவின் அப்போதைய ஆட்சியாளர்களிடமும் பிரச்சனைகள் அதிகரித்ததும், மற்றும்  ஒரு காலக்கட்டத்தில் அவருக்கு மிக ஆதரவாகச் செயல்பட்ட  ஜார்ஜ் ஏர்ரி (George Airy) ஆதரவளிக்காமல் செயல்பட்டதும் மன ரீதியாக அவரைப் பெரிதும் பாதித்தது. அரசாங்கத்திடம் உதவி கோரிய அவரது விண்ணப்பங்களை ஜார்ஜ் ஏர்ரி நிராகரித்தது மட்டுமல்லாமல் அவர் மீண்டும் இங்கிலாந்து திரும்ப வேண்டிச் செய்திருந்த விண்ணப்பத்தையும் நிராகரித்தார். மனமுடைந்து போன போக்சனின் உடல்நிலை மோசமானது. 1891ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் நாள் காலமானார். அவரது உடல், சென்னை, புனித ஜார்ஜின் கதீட்ரலில் (St. George’s Cathedral),  நல்லடக்கம் செய்யப்பட்டது. மெட்ராஸில் அதாவது சென்னையில் முப்பது ஆண்டுகள் பணிபுரிந்த போக்சன் பணிக்காலத்தில் ஒரு நாள் கூட விடுப்பு எடுத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. போக்சனின் இறப்பிற்குப் பின்னர் இங்கிலாந்துக்குச் சென்று விம்பிள்டனில் வாழ்க்கையைக் கழித்த அவரது மனைவி எடித் 1946ஆம் ஆண்டு காலமானார்.

    இவரது நினைவைப் போற்றும் வகையில் சிறுகோள் 1830 போக்சன் (Asteroid 1830 Pogson), நிலாவின் போக்சன் குழிப்பள்ளம் (Pogson Crater in Moon), சிறுகோள் 42 ஐஸிஸ் (Asteroid 42 Isis) இவரது மகள் எலிசபத் ஐஸிஸ் போக்சன் நினைவாகவும் பெயரிடப்பட்டுள்ளது.

    42 ஐஸிஸ் (42 Isis) – 23 மே 1856

    43 அரியட்னே (43 Ariadne) – 15 ஏப்ரல் 1857

    46 ஹெஸ்தியா (46 Hestia) – 16 ஆகஸ்ட் 1857

    67 ஆசியா (67 Asia) – 17 ஏப்ரல் 1861

    89 சப்போ (80 Sappho) – 2 மே 1864

    87 சில்வியா (87 Sylvia) – 16  மே 1866

    107 கமீலா (107 Camilla) – 17 நவம்பர் 1868

    245 வேரா (245 Vera) – 6 பிப்ரவரி 1885  ஆகியன அவரது கண்டுபிடிப்புகளில் முக்கியமானவை.

    போக்சனின் மகள் எலிசபெத் ஐசிஸ் போக்சன் (Elizabeth  Isis Pogson) 1873 முதல் 1881 வரை மெட்ராஸ் வானியல் ஆய்வகத்தில் (Madras Observatory), தம் தந்தையின் உதவியாளராகப் பணியாற்றினார். பின்னர் மெட்ராஸின் வானிலை நிருபராக மாறினார். 1886ஆம் ஆண்டில் ராயல் வானியல் சங்கத்தில் (Royal Astronomical Society) அங்கத்தினராக அவரைச் சேர்த்துக்கொள்ள அவர் பெயர் முன்மொழியப்பட்டது. ஆனால் சங்கத்தின் சில சட்ட விதிமுறைகள் பெண்களை உறுப்பினர்களாகச் சேர்க்க அனுமதிக்கவில்லை. முப்பத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு சட்ட விதிகள் மாற்றம் செய்த பின்னர், எலிசபெத் ஐசிஸ் போக்சனை 1920ஆம் ஆண்டில் இணைத்துக்கொண்டு கௌரவப் படுத்தியது.

    Share
  • நாவலர் நூற்றாண்டு நற்றமிழுக்குப் பல்லாண்டு!

    நாவலர் நூற்றாண்டு நற்றமிழுக்குப் பல்லாண்டு!

    முனைவர் ஔவை நடராசன்  

    கருந்தாடியும் செம்மேனியும் காவியம் பேசும் இதழ்களும் கொண்ட கட்டிளங்காளையாக பேரறிஞர் அண்ணாவால் கண்டெடுக்கப்பட்ட நன்மணிதான் நாவலர்.

    ஏறுபோல் எழுந்து நின்று இலக்கிய உரைகளை ஆற்றியபோது கேட்டவர் நெஞ்சமெல்லாம் கிளுகிளுத்தது.  அண்ணாவால் அருமைத் தம்பி என்று அழைக்கப்பட்டதோடு தலைமை தாங்க வா உன் ஆணைக்கு அடங்கி நடக்கிறோம் என்று அவர் உரையாற்றியது கழக வரலாற்றின் கல்வெட்டு மொழியாகும்.

    நாவலர், பாவேந்தரின் பாட்டு வரிகளை மேடை தவறாமல் முடிப்புரையாகச் சொல்வார். பகையைக் கூடத் தன் நகையால் வென்றவர். கலைஞருடைய கலைத்திறமையால் அவர் உலகையே வெல்வார். கலை பெற்ற வெற்றிதான் கலைஞரின் வெற்றி. என் வெற்றி அவரைத் தொடர்ந்ததுதான் என்று பெருமிதத்தோடு பேசியதை நாம் நன்றாக அறிவோம்.

    நாவலர் நூற்றாண்டு நற்றமிழ் வளர்க்கும் நூற்றாண்டாக நாளுக்கு நாள் பொலிவு பெற வேண்டும் என்பதுதான் நம் விருப்பமாகும்.

    சங்கே முழங்கு என்ற எழுத்துகளைக் காணும்போதுகூட நாவலரின் இடிக்குரல், காதில் இனிப்பை ஊட்டும்.

    Share