(Peer Reviewed) தென் பொதிகையின் பெண் ஞானியர்கள்: செங்கோட்டை ஆவுடை அக்காளும் தென்காசி ரசூல் பீவியும் – ஓர் ஒப்பீடு

முனைவர் ரமேஷ் தங்கமணி, M.Sc., PhD., SET., DIBT., DMLT., DOA., DDTP., MZSI., MIAES
உதவிப் பேராசிரியர்
முதுகலை மற்றும் ஆராய்ச்சி – உயிர்த்தொழில்நுட்பவியல் துறை, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, படூர்,
கேளம்பாக்கம் – 603103
அலைபேசி: 8056083656
மின்னஞ்சல்: drramesht.bt@gmail.com
முகவுரை
சங்க இலக்கியம் தொடங்கி, பக்தி இலக்கியம்வரை உள்ள பழந்தமிழர் இலக்கியங்களில் பெண்களுடைய பங்களிப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சங்ககாலத்தில் பெண்பாற் புலவர்கள் காதல், பிரிவு, பிரிவின் துயரம், பரத்தமை, பொருளீட்டல், போர் மற்றும் வீரம் போன்றவற்றை மையப்படுத்தியே பாடல்கள் இயற்றினர். பக்தி இலக்கியக் காலத்தைச் சார்ந்த பெண்கவிகளோ தமது பாடல்களில் இறைவன், இறைவன்மீது கொண்ட காதல் மற்றும் முக்தி போன்றவற்றை முன்னிலைப்படுத்தியுள்ளனர். காலமாற்றத்தில் பெண்கவிஞர்களுடைய கற்பனையின் புழங்குவெளி மற்றும் பாடுபொருட்களில் ஏற்பட்ட பெரிய மாற்றம் கூர்ந்து ஆராயத்தக்கது. இத்தகைய மாற்றம் காலச்சூழ்நிலையின் அடிப்படையில் மட்டுமின்றிப் பண்பாட்டுப் படையடுப்பு மற்றும் பெண்கள் மீதான சமூக அடக்குமுறையின் காரணமாகவும் ஏற்பட்டிருக்கலாம். மாற்றத்திற்கான காரணம் எதுவாக இருப்பினும் பக்தி இலக்கியப் பாடல்களில் வெளிப்படும் பெண்கவிகளின் கவித்திறன் மற்றும் இறைத்தன்மையின் மீதான உயர் விருப்பம் போன்றவை போற்றுதலுக்குரியன.
தென்பொதிகையின் சாரலைப் பெறும் சிறு நகரங்களான தென்காசி மற்றும் செங்கோட்டையில் வாழ்ந்த இரு பெண் ஞானியர்கள் செங்கோட்டை ஆவுடை அக்காள் மற்றும் தென்காசி ரசூல் பீவி ஆவர். இவ்விரு ஞானியர்களும் இயற்றிய அத்வைதச் சிந்தனை நிறைந்த கவிப்பாடல்கள் பக்தி இலக்கிய மரபின் தொடர்ச்சியாக விளங்குபவையாகும். பெண் ஞானியர்கள் தத்தமது சமயம், வாழ்வியல் முறை மற்றும் சமூகநிலை போன்றவற்றால் வேறுபட்டாலும் தம்முடைய ஞானப்பாடல்களில் மிளிரும் தத்துவ நோக்கில் ஒன்றுபட்டே விளங்குகின்றனர். இத்தகைய பெண் ஞானியர்களின் காலம், வாழ்வு, குரு பக்தி, தத்துவம், இயற்றிய பாடல்கள் மற்றும் முக்தி போன்றவைகளுக்கு இடையேயான ஒற்றுமை மற்றும் முரண்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
அத்வைதமும் – சூபியிசமும்
பாரதத்தின் தொன்மையான தத்துவ நெறிகளில் ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட அத்வைதமும் ஒன்று. இருமைத்தன்மையற்ற ஒரே நிலை என்பதே அத்வைதம் (அ-இல்லை + த்வைதம்-இரண்டு) என்பதன் பொருள். ஜீவாத்மாவும் (வணங்குபவர்) இறைவனும் (வணக்கத்திற்குரியவர்) வேறல்ல ஒன்றுதான் என்றும் உலகில் உள்ள அனைத்தும் இறைவனின் அம்சமே என்றும் இத்தத்துவம் கூறுகிறது. பெரும்பாலும் சைவர்களால் பின்பற்றப்படும் அத்வைதத் தத்துவமானது இந்துத் தத்துவ மரபில் முதன்மையானதாக விளங்குகிறது.
அரேபியத் தீபகற்பத்தில் உருவான இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கைகளில் தலையாயது “ஓரிறைக் கொள்கையாகும் (அரபி – தவ்ஹீத்)”. வணக்கத்திற்குரியவர் அல்லாஹ் ஒருவனே என்பதே ஓரிறைக் கொள்கையாகும். மதத்தைக் கடைபிடிக்கும் முறையை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய மார்க்கத்தில் உண்டான பல பிரிவுகளில் சூபியிசமும் (அரபி – தசவ்வுப்) ஒன்றாகும். இறைவனைத் தன்னுள்ளும், இறைவனுக்குள் தன்னையும் (அரபி – வஹ்ததுல் வுஜுத்) காணும் உள்ளார்ந்த ஆன்மீகப் பார்வையை சூபித் தத்துவம் கூறுகிறது. உலகில் உள்ள அனைத்திலும் இறைவனைக் காணும் உயர்ந்த ஆன்மீக உணர்வுநிலையே சூபியிசம். அத்வைதமும், சூபியிசமும் பல பரிமாணங்களில் ஒன்றோடொன்று நெருங்கி நிற்கும் தத்துவ நெறிகள் ஆகும். இதனைத் தமிழ் சூபிப்பாடல்களில் காணப்படும் அத்வைத மற்றும் சைவ சமயக் கருத்துக்களின் தாக்கத்தைக் கொண்டு அறியலாம். இவ்விரு பெரும் தத்துவ நெறிகளில் செங்கோட்டை ஆவுடை அக்காள் அத்வைதத்தையும், தென்காசி ரசூல் பீவி அத்வைதம் கலந்த சூபி தத்துவத்தையும் பின்பற்றிப் பாடல்கள் இயற்றினர்.
ஊரும் – உறவும்
செங்கோட்டை ஆவுடை அக்காள் மற்றும் தென்காசி ரசூல் பீவி ஆகிய இருவரையும் அவர்கள் வாழ்ந்த ஊரின் பெயரை முன்னொட்டாக வைத்தே அடையாளப்படுத்துகின்றனர். மேலும் அக்காள் மற்றும் பீவி (உருது: பீவி – மனைவி) என்கின்ற உறவுமுறைச் சார்ந்த சொல்லே இருவருடைய பெயரின் பின்னொட்டாக அமைந்துள்ளது. ஆவுடை என்பது இறைவனையும், ரசூல் என்பது இறைவனின் தூதரையும் குறிக்கும் சொற்களாகும். பெயரில் காணப்படும் இத்தகைய பொருத்தங்களும் முரண்களும் வெகுமக்கள் பார்வையில் ஆர்வமூட்டக் கூடிய வகையில் அமைந்துள்ளன.
காலமும் – கற்பிதமும்
ஆவுடை அக்காள் வாழ்ந்த காலம் பற்றிய முரணான கற்பிதங்களே காணக்கிடைக்கின்றன. இத்தகைய சூழலில் ஆவுடை அக்காள் பற்றி வாய்மொழியாகப் பெறப்பட்ட வாழ்க்கைக் குறிப்புகளை நான்கு பேர் பதிவு செய்துள்ளனர். முதன் முதலில் அக்காளின் வாழ்க்கைக் குறிப்பானது, 1910ஆம் ஆண்டு தஞ்சாவூரைச் சேர்ந்த நா. வைத்தியநாத பாரதி அவர்களால் பதிப்பிக்கப்பட்ட “பிரம்ம மேகம்” எனும் சிறு பாடல் புத்தகத்தில் வெளியிடப்பட்டது. அந்நூலில் அக்காள் அவர்கள் 100 ஆண்டுகளுக்கு முன் (1810) வாழ்ந்தவர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவதாக, ஆய்குடி வெங்கடராம சாஸ்திரிகளால் 1953 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சிறு பாடல் புத்தகத்தில், அக்காள் அவர்கள் 400 ஆண்டுகளுக்கு முன் (1553) வாழ்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாவதாக “ஸ்ரீ ஆவுடையக்காள்” எனும் தலைப்பில் கோமதி ராஜாங்கம் (1954-ல்) எழுதிய கட்டுரையினை 1964 ஆம் ஆண்டு “ஸ்ரீ சங்கர க்ருபா” பத்திரிக்கையில் வெளியிட்டார். அக்கட்டுரையில் அக்காள் அவர்கள் 250 ஆண்டுகளுக்கு முன் (1704) வாழ்ந்தவர் எனக் குறிப்பிடுகின்றார். நான்காவதாக நித்யானந்தகிரி ஸ்வாமிகள் 2002 ஆம் ஆண்டு பதிப்பித்த “செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல் திரட்டு” எனும் நூலின் முன்னுரையில் (ஸமர்ப்பணம்) அக்காள் அவர்கள் 350 ஆண்டுகளுக்கு முன் (1652) வாழ்ந்தவர் எனக் குறிப்பிட்டிருக்கிறார். மேலே கூறப்பட்ட காலக் குறிப்புகளை ஆராயும்போது ஆவுடை அக்காள் அவர்கள் 1553, 1652, 1704, மற்றும் 1810 ஆகிய காலகட்டங்களில் வாழ்ந்திருக்கலாம் என்கின்ற முரண்பட்ட முடிவே கிடைக்கின்றன.
ஆவுடை அவர்கள் வாழ்ந்த காலத்தினைப் பற்றி நிலவும் முரணான கற்பிதங்களைக் களைந்து ஓரளவு சரியான காலகட்டத்தை அறிந்து கொள்வதென்பது, ஆவுடை அவர்களின் மறுவாழ்விற்கு வித்திட்ட ஆன்மீக குருவான திருவிசைநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச தேசிக அய்யாவாளின் வாழ்க்கையை அறிந்து கொண்டதன் மூலம் சாத்தியப்பட்டது. 1635 ஆம் ஆண்டில் மைசூரில் பிறந்த அய்யாவாள், அங்கேயே திருமணம் செய்து தன்னுடைய தந்தையின் மரணம் வரை அங்கு வாழ்ந்து வந்தார். பின்பு ஆன்மீக வாழ்வினை மேற்கொண்ட அய்யாவாள் மைசூரிலிருந்து திருச்சி வந்தடைந்து சிலகாலம் தங்கினார். அதன்பின்பு திருச்சியிலிருந்து (கிட்டத்தட்ட 49 வது வயதிற்கு மேல்) இடம்பெயர்ந்து ஷாஹாஜி II அவர்கள் ஆண்டுகொண்டிருந்த (1684–1712) தஞ்சாவூருக்கு உட்பட்ட திருவிசைநல்லூரில் வந்து தாங்கினார். பல ஆன்மீகத் தலங்களுக்கும் நடைபயணமாகச் சென்று வந்த அய்யாவாள் இறுதியாகத் திருவிசைநல்லூரில் 1720 ஆம் ஆண்டு தனது 85 ஆம் அகவையில் முக்தியடைந்தார் என்பது தகவல். மேலும் அய்யாவாள் அவர்கள் சங்கரமடத்தின் 59 ஆம் பட்டமான ஸ்ரீ பகவன் நாம போதேந்த்ர சரஸ்வதி (1638–1692) அவர்களுக்கும், அத்வைத வேதாந்தியும், கருநாடக இசை வல்லுநருமான சதாசிவப் பிரம்மேந்திரரின் (????–1753) சமகாலத்தவர் என்ற தகவலும் சிலரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கூறிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஆராயும் போது, தன்னுடைய 49 வயதிற்கு மேல் திருவிசைநல்லூர் கிராமத்தில் குடியேறிய அய்யாவாள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டார். அய்யாவாளின் ஆன்மீகப் பயணத்தின் ஒரு பகுதியாக அவர் தென்காசி, குற்றாலம் வழியாக நடைபயணமாக வேணாட்டு அரசர்களின் ஆட்சிக்குப்பட்ட செங்கோட்டைக்கு வருகை புரியும்போது அவர் ஏறக்குறைய 50லிருந்து 75 வயதிற்குட்பட்டவராக (கிட்டத்தட்ட 1685 க்கு மேல்) இருந்திருக்கவே வாய்ப்பு அதிகம். இந்தக் கணிப்பானது, கோமதி ராஜாங்கம் அவர்கள் ஸ்ரீசங்கர க்ருபா பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையில் வயது முதிர்ந்த நிலையில் இருந்த அய்யாவாள் செங்கோட்டைக்கு வருகை தந்தார் எனும் தகவலுக்கு வலுச் சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. மேலும் ஆவுடை அவர்கள் பருவமடைந்த இளம் விதவையாகவே இருந்தபோதுதான் முதன்முதலாக தன்னுடைய ஞான குருவான அய்யாவளைச் சந்தித்ததாக ஆய்குடி வெங்கடராம சாஸ்திரி மற்றும் கோமதி ராஜாங்கம் ஆகிய இருவரும் பதிவு செய்திருக்கிறார்கள். இதன் அடிப்படையில் 50 வயதுக்கு மேற்பட்ட அய்யாவாளை, இளம் கைம்பெண்ணான ஆவுடை அவர்கள் தன்னுடைய 15 மற்றும் 30க்கு உட்பட்ட வயதிற்குள் சந்தித்திருக்கவே வாய்ப்புள்ளது. மேற்கூறிய தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆராயும்பொழுது ஆவுடை அவர்கள் கிட்டத்தட்ட கி.பி. 1655–1695 இடைப்பட்ட காலகட்டத்தில் பிறந்திருக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதலாம்.
ரசூல் பீவி அவர்கள் வாழ்ந்த காலம் மற்றும் வாழ்க்கை வரலாறு பற்றிய முழுமையான தகவல்கள் எதுவும் காணக் கிடைக்கவில்லை. இருப்பினும் ரசூல் பீவி அவர்களைப் பற்றிய சில வரலாற்றுத் தகவல்கள் அவருடைய பாடல்களில் அகச்சான்றாகக் காணக்கிடைக்கிறது. மேலும் ரசூல் பீவி அவர்கள் வாழ்ந்த காலகட்டம் 1910 என்று முனைவர் தாயம்மாள் அறவாணன் அவர்கள் பதிவு செய்துள்ளார். அதேசமயம் 1910 ஆம் ஆண்டு, ரசூல் பீவியினுடைய மகன் முகம்மதப்பா சாஹிப் அவர்கள் தன்னுடைய பெற்றோர்கள் இயற்றிய ஞானப்பாடல்களைத் தொகுத்து பரிமளத்தார் பாடல் எனும் தலைப்பில் நூலாக தென்காசி ராமானுஜம் அச்சுக்கூடத்தில் பதிப்பித்தார் என்றும், ரசூல் பீவி அவர்கள் இயற்றிய ஞானாமிர்த சாகரம் எனும் ஞானப்பாடல்கள் அடங்கிய தொகுப்பானது, பரிமளத்தார் பாடல் என்ற அந்த நூலின் பிற்பகுதியில் இடம் பெற்றுள்ளதாகவும் இரா. முத்துக்குமாரசாமி அவர்கள் எழுதிய சூஃபி இலக்கியப் பதிப்புகளும் உரைகளும் எனும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். மேற்காணும் தகவல்களின் அடிப்படையில் நோக்கும்பொழுது ஞானாமிர்த சாகரம் எனும் நூலினைப் பதிப்பிக்கும்பொழுது முகம்மதப்பா அவர்களின் வயதானது தோராயமாக 20க்கு மேல் 70க்குள் இருக்கக்கூடிய பட்சத்தில் ரசூல் பீவி அவர்கள் 1822க்கு மேல் 1872க்கு உட்பட்ட காலகட்டத்தில் பிறந்திருக்கவே வாய்ப்பு அதிகமாக உள்ளது.
மேற்கண்ட ஆய்வின் வழியாக, ஆவுடை அக்காள் அவர்கள் பதினாறாம் நூற்றாண்டில் வேணாட்டு மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட செங்கோட்டையிலும், ரசூல் பீவி அவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி அல்லது பிரித்தானிய இந்தியப் பேரரசின் ஆட்சிக்குட்பட்ட தென்காசியிலும் பிறந்திருக்கலாம் என்பது புலனாகிறது.
கைம்மை நோன்பும் – காதல் வாழ்வும்
பழமைவாதத்தின் பாசறையாக விளங்கிய பதினாறாம் நூற்றாண்டில், கேரள வேணாட்டு மன்னர்களின் ஆட்சியின்கீழ் இருந்த சிறுநகரமான செங்கோட்டையில் வாழ்ந்த ஓர் அந்தணர் குடும்பத்தில் பிறந்த பெண் ஆவுடை. அறிவார்ந்த சிறுமியான ஆவுடை குழந்தைப் பருவத்திலேயே திருமணமாகிக் கைம்பெண்ணானவர். ஆவுடை அவர்களின் தாயார் தாம் சார்ந்திருந்த சமூக வழக்கத்திற்கு மாறாக ஆவுடை அவர்களுக்கு அடிப்படைக் கல்வி புகட்டியும் கைம்மை நோன்பை ஏற்கவிடாமலும் வளர்த்தார். இருப்பினும் ஆவுடை பருவமடைந்த பின்பு சமூக நெருக்கடியின் காரணமாக தன்னுடைய தலை முடியயை மழித்து கைம்மை நோன்பினை ஏற்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் கைம்பெண்கள் மீதான அடக்குமுறை மற்றும் சமூகக் கட்டுப்பாடுகள் காரணமாக ஆவுடை அவர்கள் உளவியல் ரீதியாகப் பல துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தது.
ரசூல் பீவி அவர்களின் வாழ்க்கை குறித்த தகவல்கள் அவரது பாடல்களில் காணக்கிடக்கின்றன. ரசூலின் பாடலின் வழியாக அவருடைய தந்தையார் நயினார் முகமது என்றும் கணவர் பரிமளத்தார் என்று அழைக்கப்படும் புலவர் ஞானி முகமது காசிம் சாகிபு என்றும், மகன் முகம்மதப்பா சாஹிப் என்றும் அறியமுடிகிறது. ரசூல் பீவி மட்டுமின்றி அவரது கணவரும் ஒரு சூபி ஞானியாகத் திகழ்ந்தார். மேலும் இருவரும் இணைந்தே ஆன்மீகச் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டனர். பீவி தன்னுடைய கணவர் பரிமளத்தாரோடு வாழ்ந்த காதல் வாழ்வினை மரணத்துக்குப் பின்பான மறுமையிலும் தொடரவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவதாகக் கீழ்வரும் பாடலில் பதிவு செய்துள்ளார்;
‘மயில் குயில்போல் கூடினமே மாநிலத்தில் மனமே
மறைந்தாலும் இதுபோலே மண்ணறையில் இருக்க
துயிலுடைந்து எழுந்ததுபோல் துணைமஹூலில் இருக்க
துலக்கும் ரஹ்மான் ஆணை துய்யோன் பரிமளமே’
மேலும் ரசூல் பீவியை புகழ்ந்து அவருடைய மகன் பாடல் இயற்றியதோடு மட்டுமல்லாமல் பீவியினுடைய பாடல்களைப் புத்தகமாகப் பதிப்பித்திருப்பதையும் காணும்பொழுது ரசூல்பீவி அவர்கள் மனநிறைவான காதல் வாழ்க்கையின் வழியே ஆன்மீக வாழ்வினை வாழ்ந்தார் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.
ஆவுடை அக்காள் மற்றும் ரசூல் பீவி ஆகியோருடைய வாழ்வினை ஒப்புநோக்கும்பொழுது கைம்பெண்ணான அக்காளுக்கு ஏற்பட்ட சமூக அழுத்தம் எனும் சிறையில் இருந்து மீள்வதற்கு ஆன்மீக விடுதலையை நோக்கிப் பயணித்ததை உணரலாம். இதற்கு மாறாக ரசூல்பீவி அவர்கள் இல்லற வாழ்க்கை வாழ்ந்து கொண்டே ஆன்மீக மெய்ஞான நிலையை நோக்கிப் பயணித்தார் என்பது புலனாகிறது.
குருவருளும் – திருவருளும்
ஆவுடை அவர்கள் சமூக அடக்குமுறையின் காரணமாக மனமுடைந்திருந்த சமயத்தில், தஞ்சை மராத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட திருவிசைநல்லூர் என்ற கிராமத்தில் இருந்து ஸ்ரீதர வெங்கடேச தேசிக அய்யாவாள் என்கிற மகான் செங்கோட்டைக்கு வருகை புரிந்தார். கைம்பெண்ணான ஆவுடை அவர்கள் சமூக கட்டுப்பாட்டையும் மீறி ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாளை அரிஹர நதிக்கரையில் அமைந்த மண்டபத்தில் சந்தித்து, அவரை தன்னுடைய ஞானகுருவாக ஏற்றார். இதன் காரணமாக சமூக நிந்தைக்கும் ஆளானார். இந்தச் சந்திப்பே ஆவுடை அவர்களின் வாழ்வில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. குருவினுடைய திருவருளால் அத்வைத ஞானமார்க்கத்தைப் பின்பற்றி மெய்ஞானத் தெளிவடைந்து தன்மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டிருந்த சமூக அடக்குமுறையினைத் தகர்த்தெறிந்தார். மேலும் இப்பூவுலகில் தனக்கு ஏற்பட்ட பற்றினை அகற்றி இறைவனோடு தன்னை ஒன்றச் செய்த குருநாதருக்கு தனது நன்றியைக் கீழ்காணும் பாடல் வழியே சமர்பிப்பதன் மூலம் அக்காளுடைய குரு பக்தி புலனாகிறது.
“பாசமகற்றிப் பதிதன்னில் சேர்த்து வைத்த பண்டிதனே! – குருநாதா!
தேசமெங்கும் புகழ் ஸ்ரீ வெங்கடேசுவர தேசிகரே! – குருநாதா!”
அத்வைத மெய் ஞான ஆண்டி, பக்: 10
“குருநாதனைப் பூஜித்தால் தாண்டி உனக்கு நன்மைவரு மென்றாண்டி
கும்பிக்குச் சோறிடு என்றாண்டி – அவன் கூடைக்கு முத்திடு என்றாண்டி”
குரு, பக்: 85
ஒரு ஆன்மீகக் குருவின் ஞான வழிகாட்டுதலின் வழியாகவே ஒரு சூபி தன்னுடைய ஆன்மீக மெய்ஞான நிலையினை அடைய முடியும். மேலும் எவருக்கு ஷைகு (குரு) இல்லையோ அவருக்கு ஷைத்தான்தான் ஷைகு என்பது சூபிக்கள் மத்தியில் வழக்கிலுள்ள பழமொழியாகும். குரு வழங்கக்கூடிய ஆன்மீக அறிவுரைகளும் அங்கீகாரமும் (இஜாஸா) சூபியின் வாழ்வில் தவிர்க்க இயலாத அங்கங்களாகும். இத்தகைய குரு – சீட உறவு எனும் நெடிய உடைபடாத சூபியிச சங்கிலித் தொடரின் இரு கண்ணிகளாக விளங்கியவர்கள்தான் சூபி ஞானி ரசூல் பீவி அவர்களும் அவருடைய ஆன்மீக குருவான ஷெய்கஃப்துல் காதர் ஷாஹன்ஷா அவர்களும் ஆவர். ஆன்மீகக் குருவினுடைய திருவருட் துணையால் பீவி அவர்கள் பல அத்வைத மெய்ஞான ஒளிவீசும் பாடல்களை இயற்றினார்.
அத்வைத மற்றும் சூபி தத்துவ மரபின்படி ஞானவாழ்வுப் பயிற்சி செய்பவர்களுக்கு குருவழிகாட்டுதல் மிகவும் அவசியமானது. ஆவுடை மற்றும் ரசூல் பீவி ஆகிய இருவரும் தத்தமது குருவின் ஞான வழிகாட்டுதலின்படி ஆன்மீக சாதனைகளை மேற்கொண்டனர் என்பதை அவர்களின் பாடல்களின் வழியே அறிய முடிகிறது.
பக்தியும் – பாடலும்
குருவினுடைய திருவருளால் ஆன்மீக சாதனைகளை மேற்கொண்ட ஆவுடை அவர்கள், நடைபயணமாகப் பல புண்ணியத் தலங்களுக்குச் சென்று இறுதியாக, செங்கோட்டை வந்து தங்கினார். செங்கோட்டையில் பல ஆண்டுகள் வாழ்ந்த ஆவுடை அவர்கள் அத்வைதச் சிந்தனை மிளிரும் பல பாடல்களை இயற்றினார். வாய்மொழியாகப் பரவிய ஞானப்பாடல்களில் சேகரிக்கப்பட்டவை சொற்பமே. அவற்றில் சில:
1. வேதாந்த குறவஞ்சி நாடகம்
2. வேதாந்த வித்யா சோபனம்
3. வேதாந்த அம்மானை
4. வேதாந்தப் பள்ளு
5. வேதாந்த ஆண்டி
6. வேதாந்த வண்டு
7. வேதாந்த ஆச்சே போச்சே
8. ப்ரும்ம ஸ்வரூபம்
9. “அன்னே பின்னே” என்னும் வேதாந்த ப்ரத்தியோத்திரகும்மி
10. ப்ரும்ம மேகம்
11. தக்ஷிணாமூர்த்தி படனம்
12. வேதாந்தப் பல்லி
13. பகவத்கீதா ஸாரசங்கிரஹம்
14. வேதாந்தக் கப்பல்
திருநெல்வேலிச் சீமையிலுள்ள அந்தணப் பெண்கள் மத்தியில் ஆவுடை அவர்களின் பாடல்கள் வெகுவாகப் பாடப்பட்டு வந்தன. இதுவரையிலும் ஆவுடை அவர்களை நிந்தனை செய்த சமூகம் அவருடைய ஞானப் பாடல்கள் மற்றும் ஆன்மீகப் பணியின் காரணமாக அவரை ஆவுடை அக்காள் என்று போற்றியழைத்து மரியாதை செலுத்தியது.
ரசூல் பீவி அவர்கள் இயற்றிய ஞானாமிர்த சாகரம் எனும் ஞானப் பாடற் தொகுதியில்:
- காப்பு – கடவுள் வாழ்த்து
- பொருள் வினா விடை
- கண்மணிப்பதிகம்
- பரிமளக் கண்ணி, வெண்பா
- கண்ணிகள்
- மாக்கொடிக்கண்ணி
- வெண்பா
- என் தாய்க் கண்ணி
- முச்சுடாக் கண்ணி
- றகுமான் கண்ணி
- பரமானந்தக்கண்ணி
- பீர்முறாதுக்கண்ணி
- என்னாட்கண்ணி
- குருபரக்கண்ணி
- கண்மணிக்கண்ணி
- வேகுதேகக் கண்ணி
- காணேனோ
- வாழ்வோமே
- காண்பேனே
- ஆகாதோ
- நெஞ்சோடு புலம்பல்
- வெண்பா
- இரட்டை ஆசிரிய விருத்தம்
- காட்சிப்படலம்
- கோட்டைப்படலம்
- விருத்தம்
- சந்தவிருத்தம்
- முகிய்யிதீனே
- பேரின்பத் திறவுகோல் படலம்
- கொச்சகம்
- அம்மானை
- பைத்து அல்லாகூ
- முனா ஜாதது
- இலாஹி என முடியும் தந்நிலையின் ஆனந்தக் கும்மி
- ‘தானே நீ தானல்லா தானே குனறூகல்லா’ ‘தானே றசூலுல்லா தானே இன்ஷானல்லா’ எனும் பாடல்
- கப்பல் சிந்து
- தாய் மகனேசல்
போன்ற தலைப்பில் ஞான ஒளி வீசும் பாடல்கள் அடங்கியுள்ளன.
அக்காளும் பீவியும் தமது ஆன்மீக மெய்யுணர்வின் வெளிப்பாடாக அமைந்த ஞானப் பாடல்களை, அனைத்துத் தரப்பினரும் அறிந்து கொள்ளும் வண்ணம் எளிமையான நாட்டுப்புறப் பாடல் வடிவிலேயே இயற்றினார்கள். எளிமையான கண்ணிகளும், முடுகுகளும், சிந்துகளும், கப்பற்பாடல்களும் எளியவரும் மனனம் செய்யும்படி இருந்ததால், வாய்மொழியாகவே பரவ ஏதுவாய் இருந்தது. அக்காளின் ஞானப் பாடல்களால் ஈர்க்கப்பட்ட அநேகர் அவருடைய சீடர்களாக மாறினர் என்று கோமதி ராஜாங்கம் அவர்கள் பதிவு செய்துள்ளார். இதேபோன்று ரசூல் பீவியினுடைய ஞானப் பாடல்கள் அவருக்கு அநேகம் பிறசமயத்தைச் சார்ந்த சீடர்களைப் பெற்றுத்தந்தது. அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர்கள் பாளையம்கோட்டை எம். சுப்பையா பிள்ளை, தென்காசி பாடலிங்க முதலியார் மற்றும் தென்காசி கிருஷ்ணம்மாள் சந்நியாசி ஆகியோர் ஆவர்.
முழுமையும் – முக்தியும்
ஆவுடை அவர்களின் மரணம் பற்றிய தெளிவான குறிப்புகள் கிடைக்கப் பெறவில்லை. ஆன்மீக முழுமையடைந்த ஆவுடை அவர்கள் ஆடி அமாவாசை தினத்தன்று குற்றாலத்தில் நீராடிவிட்டு, தனது புடவைப்பெட்டியோடு பொதிகை மலைமீது ஏறிச்சென்றவர் பின்பு திரும்பவே இல்லை என்ற செவிவழிச் செய்தியைக் கோமதி ராஜாங்கம் அவர்கள் பதிவுசெய்துள்ளார். அதேசமயம் அனுபோக ரத்னமாலை எனும் இரங்கற்பாடலை, கி.பி. 1720ஆம் ஆண்டில் மறைந்த ஸ்ரீதர அய்யாவாளுக்காக ஆவுடை அவர்கள் இயற்றியுள்ளார். இதனடிப்படையில் நோக்கும்போது ஆவுடை அக்காள் அவர்கள் 1720க்கு பின்னர்தான் இறந்திருக்க வேண்டும் என்பதனை அறிய முடியும்.
ரசூல் பீவி அவர்கள் மரணித்த வருடம் பற்றிய சரியான குறிப்புகள் இல்லை. இருப்பினும், தாயம்மாள் அறவாணன் அவர்களின் கருத்தின்படி ரசூல்பீவி 1910ஆம் ஆண்டுக்குப் பின்புதான் இயற்கை எய்தி இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் ரசூல்பீவி 1910க்கு முன்பே மரணித்து இருக்கக் கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் கருதலாம்.
முடிவுரை
செங்கோட்டை ஆவுடை அக்காள் மற்றும் தென்காசி ரசூல்பீவி ஆகிய இருவரும் தென்பொதிகையின் சாரலின் இருவேறு பகுதியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் வாழ்ந்த காலம், வாழ்க்கை, குரு பக்தி, இயற்றிய பாடல்கள் மற்றும் மரணம் போன்றவற்றில் பல ஒற்றுமை மற்றும் வேற்றுமைகள் காணப்படுகின்றன. ஆவுடை அக்காள் மற்றும் ரசூல் பீவி ஆகிய இருவரும் வாழ்ந்ததற்கான கால இடைவெளி அதிகபட்சமாக 200 ஆண்டுகளேனும் இருக்கலாம். ஆவுடை அவர்களின் பதின்ம வயதிலிருந்து மரணம் வரை தாம் சந்தித்த இன்னல்களையும் அடக்குமுறைகளையும் ஞானவாழ்வினை ஆயுதமாக ஏந்தியே எதிர்கொள்ள வேண்டியதாய் இருந்தது. இதற்கு மாறாக ரசூல்பீவி அவர்கள் கணவனோடு இணைந்து இனிமையான இல்லற மற்றும் ஞானவாழ்வினை மேற்கொண்டார் என்பதும் புலனாகிறது. குருவினுடைய வருகையும் அருளும் ஆவுடை அவர்களின் வாழ்க்கையில் பெரும் மாறுதலையும் ஆறுதலையும் தந்தது. குருவினுடைய அருளுளோடு இணைந்து கணவருடைய ஆன்மீக வழிகாட்டுதலும் ரசூல் பீவி அவர்களை வழி நடத்தியது எனலாம். ஆவுடை அவர்கள் தன்னுடைய பாடல்களில் துயரத்தின் வலியையும், உலக வாழ்வின் உள்ளீடற்ற தன்மையையும், மதசம்பிரதாய எதிர்ப்பினையும் அத்வைத சிந்தனை கலந்து பாடியுள்ளார். ரசூல் அவர்களின் பாடல்களில் இஸ்லாமியச் சிந்தனைகளோடு சைவ சமயச் சொல்லாடல்களும், அத்வைதச் சிந்தனைகளும் விரவிக் காணப்படுகின்றன. மேலும் ரசூல் அவர்களின் பாடல்களில் ஆவுடை அவர்களின் பாடற் கருத்துக்களின் தாக்கம் பரவலாகக் காணப்படுகின்றது. உதாரணமாக, கண்ணிகள், முடுகுகள் மற்றும் கப்பல் சிந்து போன்ற பாடல்களில் இந்த ஒற்றுமையை அறியலாம். இரும்புப் பாதையின் இரு தண்டவாளங்களைப் போன்று இருவரின் மத நம்பிக்கையும் வாழ்வும் இருந்தாலும் அவர்கள் வெளிப்படுத்திய ஞானக் கருத்துக்களும் அதன் சாரமும் ஒன்றே, இறுதியாக அவை சேரும் இடமும் ஒன்றே. மத சகிப்புத்தன்மை அருகிவரும் இக்காலகட்டத்தில் இவ்விரு ஞானியரின் வாழ்வும் ஆன்மீகப் பங்களிப்பும் அனைவரும் படித்து உணர வேண்டியது என்றால் அது மிகையில்லை.
ஆய்வுக்கு உதவிய சான்றுகள்:
- பதிப்பாசிரியர் நித்யானந்த கிரி ஸ்வாமிகள் (2002). செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் (பக்தி, யோக, ஞான, வேதாந்த ஸமரஸ) பாடல் திரட்டு. ஸ்ரீ ஞானானந்த நிகேதன், விழுப்புரம்.
- நாஞ்சில் நன்மொழியோன் (1981). தமிழில் இஸ்லாமிய மெய்ஞான இலக்கியங்கள்: பெண்பாற் சூஃபி தென்காசி ரசூல் பீவி. தொகுப்பாசிரியர் மணவை முஸ்தபா, வெளியீடு: மீரா பவுண்டேஷன், சென்னை. பக். 125–137.
- இரா. முத்துக்குமாரசாமி (1981). தமிழில் இஸ்லாமிய மெய்ஞான இலக்கியங்கள்: சூஃபி இலக்கியப் பதிப்புகளும் உரைகளும். தொகுப்பாசிரியர் மணவை முஸ்தபா, வெளியீடு: மீரா பவுண்டேஷன், சென்னை. பக். 207.
- முனைவர். அ. ஸ்ரீவித்யா (2017). பல்துறை ஆய்வுக் களஞ்சியம் (மகளிர் தினக் கருத்தரங்கம்): செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். பக். 380–382.
- நாஞ்சில் நாடன் (2010). கட்டுரை: செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் (பக்தி, யோக, ஞான, வேதாந்த ஸமரஸ) பாடல் திரட்டு – நூல் அறிமுகம், சொல்வனம் (23-08-2010) – இதழ் 32.
- முனைவர். தாயம்மாள் அறவாணன் (2017). கட்டுரை: இஸ்லாமியப் பெண் ‘ஞானி’கள்! தினமணி (04-03-2017)
- ரா. கணபதி (2018). தெய்வத்தின் குரல்: அத்வைதம்: (முதல் பகுதி) – ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், வானதி பதிப்பகம். பக். 19-27.
- வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன் (2010). சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள். விகடன் பிரசுரம். பக்கம் 18.
- மௌல்வி முஹம்மது அப்துர் ரஹ்மான் ஸாஹிபு (1962). முஸ்லிம் அத்வைத மூலமொழி-துஹ்பத்துல் முர்ஸலா, ஷாஹுல் ஹமீதிய்யா பிரஸ், திருவல்லிக்கேணி, சென்னை.
- ஸ்ரீ பகவன் நாம போதேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் திவ்ய சரித்திரச் சுருக்கம். வெளியீடு: ஸ்ரீ பகவன் நாம போதேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அதிஷ்டானம். கோவிந்தபுரம், ஆடுதுறை.
- Kanchana Natarajan (Translator) (2012). Transgressing boundaries: The songs of Shenkottai Avudai Akkal. Zubaan an Asso. of Kali for Women; 2012 edition, eBook ISBN: 9789383074464.
- Larrie Benton Zacharie (Ed.) (2013). Sridhara Venkatesa Ayyaval, Verpublishing, United States, ISBN10 6139223547 / ISBN13 9786139223541
- Th. Emil Homerin (2014). The Principles of Sufism. New York University Press, New York and London.
இணையச் சுட்டிகள்:
- https://www.britannica.com/place/Kerala/History
- https://www.hindutamil.in/news/spirituals/192752–2.html
- http://www.sriayyaval.org/lsdetail.html
- http://sriayyaval.org/history/sridhara1.htm
- https://serfojimemorialhall.com/maharajah-shahaji-II.html
- https://www.vikatan.com/spiritual/temples/83043-
- https://www.sufimanzil.org/tag/sufism-tamil-books/
- https://www.urdupoint.com/dictionary/urdu-to-english/biwi-meaning-in-english/97417.html
- http://www.mailofislam.com/sufism_tamil.html
கட்டுரை ஆசிரியர்
முனைவர். ரமேஷ் தங்கமணி
ஆய்வறிஞர் மதிப்புரை (Peer Review):
தமிழகத்தின் தென்பகுதியாகிய தென்காசி மற்றும் செங்கோட்டையில் வாழ்ந்த இரு பெண் ஆளுமைகளின் வாழ்வியலை ஒப்பிட்டுச் செய்யப்பட்டுள்ள ஒப்பீட்டாய்வாக இக்கட்டுரை அமைகிறது. இருவர்தம் படைப்புகளில் உள்ள அத்வைத சூபியிசக் கோட்பாட்டு ஒற்றுமையைப் புலப்படுத்தியிருப்பது கட்டுரைக்கு மேலும் வலுச் சேர்க்கிறது. அதைப் போலவே இருவர்தம் கால ஆராய்ச்சியும் தகுந்த சான்றுகளால் நிறுவப் பெற்றுள்ளது.
இம்மையில் போராடிய ஒருவரும் மறுமைக்குப் பேறு வேண்டிய மற்றொருவருமாக குருவருளையும் திருவருளையும் வேண்டிப் பாடிய இருவருடைய வாழ்வியலைப் ஆய்வுக்கு உட்படுத்த ஒப்புமையும் பகுப்புமையுமாக விளங்கும் உத்தி நன்று. பாடல் மேற்கோள்கள், நூல்களின் பட்டியல், மேலும் பல ஆய்வுகளுக்கு வழிகோலும். இருநூறு ஆண்டுக்கால இடைவெளியில் ஒரே பகுதியில் ஒன்றியும் மாறுபட்டுமான வாழ்வியலைக் கொண்டிருந்த இருவர்தம் படைப்புகளும் ஒத்துக் காணப்பட்டுள்ளதை இந்தக் கட்டுரை எடுத்துக் காட்டுகிறது.