குறளின் கதிர்களாய்…(310)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்...(310)
மனமாணா வுட்பகை தோன்றி னினமாணா
ஏதம் பலவுந் தரும்.
– திருக்குறள் – 884 (உட்பகை)
புதுக் கவிதையில்...
புறத்தில்
நட்புக்கொண்டதுபோல் நடித்து
அகத்தில் நட்பிலா
உட்பகை கொண்டோர் நட்பு
அரசனுக்குக் கிடைத்தால்,
அவனுக்குத் தன்
சுற்றம் சேரா வகைக்குக்
குற்றங்கள்
பலவற்றைத் தந்திடுமே…!
குறும்பாவில்...
நட்புடன் புறத்தே நடித்து,
உட்பகை அகத்திலுளோர் நட்பு அரசனுக்குச்
குற்றம்தரும் சுற்றம்சேரா வகையிலே…!
மரபுக் கவிதையில்...
புறத்தே நட்பது உள்ளதுபோல்
பொய்யாய் நடித்தே அகத்தினிலே
மறைத்த உட்பகை கொண்டோரை
மன்னன் நட்பாய்க் கொண்டாலே,
சிறந்த சுற்ற மதனுடனே
சேரா வகையி லவனுக்கே
நிறைய வந்திடும் குற்றங்கள்
நிம்மதி தன்னைக் கெடுத்திடுமே…!
லிமரைக்கூ..
நட்புபோல் நடிப்பர் முன்னே,
உட்பகை உளம்கொண்டோர் நட்புடை வேந்தன்
கெட்டிடக் குற்றம்வரும் பின்னே…!
கிராமிய பாணியில்...
தெரிஞ்சக்கோ தெரிஞ்சிக்கோ
உட்பகயத் தெரிஞ்சிக்கோ,
ஒறவழிக்கும்
உட்பகய அறிஞ்சிக்கோ..
உட்பகய உள்ளவச்சி
நட்புபோல நடிப்பவங்கிட்ட
ஒறவு வச்சா,
நாடாளுற ராசாண்ணாலும்
அவனுக்கு
ஒறவோட சேரமுடியாம
குத்தங் கொறயெல்லாம்
கூட வந்துடுமே..
அதால
தெரிஞ்சக்கோ தெரிஞ்சிக்கோ
உட்பகயத் தெரிஞ்சிக்கோ,
ஒறவழிக்கும்
உட்பகய அறிஞ்சிக்கோ…!