(Peer Reviewed) மூழ்கிய சுரையும் மிதந்த அம்மியும்

0

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006. 
மின்னஞ்சல் முகவரி:  egowrisss@gmail.com

முன்னுரை

பழந்தமிழிலக்கிய உலகம் கவிதைகளால் கட்டமைக்கப்பட்டது. அத்தனை கவிதைகளும் ஓலைச் சுவடியிலேயே வரையப்பட்டன. எழுதப்படுவதற்கான ஓலைத்தரம், எழுத்தாணியின் தன்மை, எழுதப்படும் முறை இவையெல்லாம் இற்றை நாள் பேரறிஞரேயாயினும் அத்துறை வல்லாரன்றிப் பிறரால் அவ்வளவு எளிதாக அறிந்துகொள்ள இயலாது. ‘சுவடிப் பதிப்பு’ என்பதே தனிக் கலை, தனித் துறை. இந்தப் பின்புலத்தில் இலக்கண நூலொன்றில் எடுத்துக்காட்டாக எடுத்தாளப்பட்டிருக்கும் ஒரு பாடலின் உண்மை வடிவத்தைக் கண்டு அதனை முழுமையாகச் சுவைக்க வேண்டும் என்பதையே தனது நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது.

ஆய்வுப் பொருள் – கருதுகோள் – நோக்கம்  – பயன்

பழந்தமிழ் இலக்கண நு}ல்களில் எடுத்துக்காட்டாகப் பயன்பட்டிருக்கும் ‘கரையாட கெண்டை’ எனத் தொடங்கும் ஒரு நேரிசை வெண்பாவே ஆய்வுப் பொருளாகக் கொள்ளப்படுகிறது. கவிதையைச் சுவைக்க வேண்டுமானால் அதன் முழுமையான வடிவம் இன்றியமையாத ஒன்று என்பதை நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை இங்கு வடிவமைக்கப்படுகிறது. ஓர் அசையையும் சரியாகப் பதிவிட வேண்டும் என்பதற்காகத் தமிழகத்தையே பதிப்புக் களமாகக் கண்ட அறிஞர்கள் சி.வை.தாமோதரம்பிள்ளை மற்றும் உ.வே.சா முதலியோரின் பங்களிப்புகள் நினைவுகூரப்படுவது பொருத்தமாக இருக்கும். ஆய்வின்றிச் சுவையுண்டு. ஆயின் சுவையின்றி ஆய்வில்லை. எனவே தமிழ்க் கவிதைகளைச் சுவைப்பதில் ரசிகமணி அவர்களின் நுட்பத்தை (சிற்சில நேர்வுகளில் ஏற்றுக்கொள்ள இயலாவிடினும்) நிகழ்காலச் சமுதாயமும் எதிர்வரும் சமுதாயமும் அறிந்துகொள்வதையே பயனாகக் கொண்டு அமைகிறது.

வடிவமும்பொருள்கோளும்

அமிதசாகரர் எழுதிய ‘யாப்பருங்கலக்காரிகை’ என்னும் நூலுக்கு உரையெழுதியவர் குணசாகரர் என்னும் சான்றோர். அவர்

“சுரை யாழ அம்மி மிதப்ப

யானைக்கு நீந்து முயற்கு நிலையென்ப

கானக நாடன் சுனை”1

என்னும் பாடலைச் சிந்தியல் வெண்பாவிற்கும் ‘மொழிமாற்று’ என்னும் பொருள்கோளுக்கும் எடுத்துக்காட்டாக்கி விளக்கியிருக்கிறார். மொழிமாற்றுப் பொருள்கோள் என்பது பாட்டின் ஓரடியில் மாறி நிற்கும் சொற்களைப் புலவனுடைய கருத்துக்கேற்ப நிரல்பட அமைத்துப் பொருள் காண்கிற உரைக் கொள்கையாகும். ‘மொழி’ என்றால் சொல் என்பது பொருள். ‘ஓரெழுத்து ஒருமொழி’ என்றவிடத்து மொழி என்பது சொல்லைக் குறித்தது காண்க. உரைநடையில் சொல்லாக வருவது கவிதையில் அல்லது செய்யுளில் சீராக வரும். எனவே ஒரடியில் ‘மாறிநிற்கும் சீர்களைப் புலவனுடைய கருத்துக்கேற்ப நிரல்பட அமைத்துப் பொருள் காணும் முறைக்கு மொழிமாற்றுப் பொருள்கோள் என்று பெயர். இந்தப் பாட்டில் ‘சுரை’ என்னும் எழுவாய் ‘மிதப்ப’ என்னும் வினையோடும் ‘அம்மி’ என்னும் எழுவாய் ‘ஆழ’ என்னும் வினையோடும் ‘யானை’ என்னும் எழுவாய் ‘நிலை’ என்னும் வினைக்கும் ‘முயல்’ என்னும் எழுவாய் ‘நீந்தும்’ என்னும் வினைக்கும் வரவேண்டும் என உரையாசிரியர் நினைத்து இந்தச் செய்யுளை இந்தப் பொருள்கோளுக்கு உரியதாக மாற்றியிருக்கிறார் எனத் தெரிகிறது.

பொருள்கோளால் வந்த பொருள் மயக்கம்

மேற்கண்டவாறு பொருள் கொண்டால் ‘பாடல் சொல்லவந்த கருத்து’ பாழ்படும் என்பதை உரையாசியர் கவனித்தாரா என்பது அறியக்கூடவில்லை. அக்கால உரையாசிரியர் இதனை ‘ஒரு பொருளாமாறில்லை’ என்பர். அதாவது  ‘ஒன்னும் ஒன்னும் ரெண்டு உன்மேல் ஆசை உண்டு’ என்று எழுதுவது கவிதையாகுமா?  ‘கூந்தல் கறுப்பு குங்குமம் சிவப்பு’ என்பது என்ன கண்டுபிடிப்பு? எனவே ‘சுரை மிதக்கும்’, ‘அம்மி மூழ்கும்’, ‘யானை நிற்கும்’, ‘முயல் நீந்தும் என்றெல்லாம் சீர்களை மாற்றி உரைகாண்பதால் உரைநடைத் தொடராக அமையுமே தவிர கவிதையாகப் பரிணமிக்காது. பொருள்கோள் என்பது கவிதைக்குரியதேயன்றி, உரைநடைக்கு அன்று.

இந்தப் பாடலின் வரலாறு

இந்தப் பாடல் பற்றிய வரலாறு பெரும்பாலும் தமிழாய்வாளர் பலருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் அன்பர் ஒருவர் தமது இணையத்தளப் பதிவில்2 இப்பாடலின் மூலப் பதிவுகளைத் தொகுத்தளித்திருப்பதை நான் காணும் வாய்ப்பு கிட்டியது. ஆய்வு நெறிப்படி மற்றொருவருடைய உழைப்பையும் கருத்தினையும் அவர் பெயராலேயே வெளியிடுவதுதான் பண்பாடு அந்த வகையில் அந்தப் பதிவினை அப்படியே தந்திருக்கிறேன். பொருள் புரிவதற்காகப் பத்திப் பிரித்துத் தந்துள்ளேன்.

 1. இவ்வெண்பா, சிந்தியல் வெண்பாவின் வடிவத்திலேயே, இளம்பூரணராலும், சேனாவரையராலும், நச்சினார்க்கினியராலும், தெய்வச்சிலையாராலும் (தொல். சொல். 400) யாப்பருங்கலவிருத்தி (சூ–95) யாப்பருங்கலக்காரிகை (சூ-43) உரையாசிரியர்களாலும், நன்னூலுக்கு உரைவரைந்த மயிலைநாதர், சங்கரநமச்சிவாயர் (நன்-413) போன்றோராலும் இதே வடிவில் எடுத்தாளப்படுகிறது.3

 

 1. நேமிநாதம், ( சொல் – சூ 68 ), இலக்கணக்கொத்து, (சூ.- 108 )முத்துவீரியம் (சூ- 1280) போன்ற இலக்கண நூல்களும் இந்த மூன்றடியைத்தான் காட்டுகின்றன.4

 

 1. பழைய இலக்கணங்கள் (நேமிநாதம் வரை) இப்பாடலைச் சுண்ணப் பொருள்கோள் என்றும் பின்வந்த இலக்கணங்கள் இதனை மொழிமாற்று என்றும் கொள்கின்றன.5

 

 1. இப்பாடல் “கரையாட கெண்டை“ எனத் தொடங்கும் நேரிசை வெண்பாவாக இருக்க முடியாது என்பதற்கு நேரடிச் சான்றுகள் உள.
  தொல்காப்பியச் செய்யுளியலின் 114ஆம் சூத்திரத்தில் நாலடியின் குறைந்த குறுவெண்பாட்டு, குறள் என்றும் சிந்தியல் என்றும் அழைக்கப்படும் என்று காட்டப்பட்டு, சிந்தியல் வெண்பாவிற்கு எடுத்துக்காட்டாகச், “சுரையாழ அம்மி மிதப்ப“ எனும் இப்பாட்டு கொடுக்கப்படுகிறது. எனவே இப்பாட்டு மூன்றடிதான் என்பது உறுதிப்படுகிறது.6

 

 1. விருத்தியும் (சூ.59) காரிகையும் (சூ. 25) இப்பாடலை இன்னிசைச் சிந்தியல் வெண்பாவிற்குச் சான்று காட்டிச் செல்கின்றன.
  இக்காரணங்களால், “கரையாடக் கெண்டை“ என்னும் அடி, “சுரையாழ“ எனத்தொடங்கும் மூவடிகளை உடைய வெண்பா வடிவம் குறைவுபட்ட வடிவம் எனத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட யாரோ ஒரு பண்டிதர் தம்புலமையைக் காட்ட, முன்சேர்த்த ஒட்டு எனக் கொள்வதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.7

 

மேற்கண்ட பதிவு கட்டுரையாளருடையதன்று. இணையத்தில்8 கண்டவை. அவர்கள் ‘இந்த நூற்றாண்டிலும் ‘சூத்திரம்’ என்றுதான் எழுதுகிறார்கள்9 என்பதையும் ‘நூற்பா’ என்பதை மறந்தும் எழுத மறுக்கிறார்கள் என்பதையும் குறிப்பிடுவது என் கடமை. பழந்தமிழ் உரைகளின் கண்டவாறு எடுத்தோதப்பட்ட இத்தரவுகளின் வன்மை மென்மைகளை அடுத்து ஆராயலாம்.

 

‘‘சுரையாழ’ பாடலின் பதிப்புக் காலம்

மேற்கண்ட பத்தியில் காணப்படும் செய்திகளிலிருந்து ஓர் உண்மையைப் புரிந்துகொள்ளலாம். அதாவது குறிப்பிட்ட அந்தப் பாடல் மூல பாடமாக அமைந்த நூல் எதனையும் மேற்கண்ட அன்பர் காட்டவில்லை. அதாவது அந்தப் பாடலை ஒரே வடிவத்தில் உரையாசிரியர்கள் பலரும் பல உரைகளில்  எடுத்தாண்டிருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறு எதனையும் அச்சான்றுகளால் பெறுவதற்கில்லை.இதில் சிக்கல் என்னவென்றால் மேற்கண்ட உரைகளெல்லாம் ஒன்றிரண்டு நூற்றாண்டுகளின் இடைவெளியில் தோன்றியவையே. மற்றொன்று எல்லாமே சுவடி பார்த்து எழுதியவையே! தற்கால அச்சு வசதிகள் அன்றைக்கு இருக்கவில்லை. தமிழிலக்கிய வரலாறு கண்ட அறிஞர் கா.சு. பிள்ளை அவர்கள் தாம் எழுதிய இலக்கிய வரலாற்றில் ‘உரையாசிரியர் காலம்’ என்பதைத் தனித்த இயலில் ஆராய்ந்திருக்கிறார்10 என்பதையும் அக்காலம் பெரும்பாலும் 13ஆம் நூற்றாண்டே என்பதையும் கருத்திற் கொண்டால் மேற்கண்ட சான்றுகள் ஒன்றுக்கு மேற்பட்ட எந்த ஆய்வுக் கருத்துக்கும் துணை செய்வதாகத் தெரியவில்லை.

இனி இச்சிந்தியல் வெண்பா, சிலர் கருதுவதுபோல் நேரிசை வெண்பாவாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்பார்தம் கருத்தும் இதனையொத்ததே. மூல பாடம் எது அல்லது எந்த நூலில் என்பதை அறியாத வரையிலும் உரையாசிரியர்களின் ஒருமித்த பயன்பாடுதான் சான்றாகக் கொள்ளப்படும். ஆனால் அதற்கு ஆய்வாளர் சொல்லும் கருத்தில் வலிமையிருப்பதாகத் தெரியவில்லை. நான்கடியினும் குறைந்த குறுவெண்பாட்டு என்பதனாலேயே இந்த மூன்றடிதான் முழுமையான வடிவம் என்பது ஏற்குமாறு இல்லை. அந்த உரையாசிரியர் அவருக்குக் கிட்டிய தரவுகளின்படி அதனை அவ்வாறு கருதியிருக்கிறார் எனக் கொள்வதுதான் ஆய்வு நெறி.

இடைச்செருகல் என்பார்தம் கூற்றும் விளக்கமும்

இந்த மூன்றடிச் சிந்தியல் வெண்பாவை யாப்பின் மீது பற்றுக் கொண்ட யாரோ ஒருவர் (“யாரோ ஒரு பண்டிதர் தம்புலமையைக் காட்ட’’ என்பது முன்பே சுட்டப்பெற்றது) ‘கரையாட கெண்டை கயத்தாட மஞ்ஞை’ என ஒரு வரியை எழுதி அதனை நேரிசை வெண்பாவாக்கிவிட்டார்11 என்பது ஒருவர் தம் ஆய்வுக் கருத்து. இருக்கலாம். இத்தனை உரைகளிலும் மூன்றடிகளாக இருந்த இந்தப் பாட்டு எப்போது மாற்றப்பட்டிருக்கலாம் என்ற வினாவிற்கு விடை தேடினால் அது தொன்னூல் என்ற வீிரமாமுனிவரின் பெயரில் வந்த நூல் என்பதை ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

“எனவே இவ்வெண்பா மூன்றடிகளை உடையது என்பது குறைந்தபட்சம் ஆயிரம் ஆண்டுகளாக நிலவும் கருத்து. இதை ஏன் உ.வே.சா நேரிசை வெண்பாவாகக் கருதினார் என்பதும் அதற்கு என்ன அவசியம் நேர்ந்தது என்பதும் தெரியவில்லை.”12

என்று ஒருவர் எழுதுகிறார். ஐயர் அவர்கள் கொண்ட கருத்துத்தான் இந்தக் கட்டுரைக்கு வெளிச்சம் பாய்ச்சியது எனச் சொல்ல வேண்டும். அது பற்றிய விளக்கம் தொடர்கிறது.

ஐயரின் ஐயமும் அகப்பொருள் அமைதியும்

பேரறிஞர் உ.வே.சா.அவர்கள் இந்தப் பாட்டை நேரிசை வெண்பாகக் கொண்டதற்கு முக்கியமான காரணம் தனிச்சொல். இன்னிசை வெண்பா தனிச்சொல் பெற்று வராது.

“ஒன்றும் பலவும் விகற்பொடு தனிச்சொல் இன்றி நடப்பின் இன்னிசை” 13

என்பது காரிகை. எனவே இன்னிசை வெண்பா தனிச்சொல் பெறாது. (பல்வகை இன்னிசை வெண்பாக்களைப் பற்றிய இலக்கண அமைதிகளைக் குணசாகரர் தனது உரையில்தான் குறிப்பிடுகிறாரேயன்றிக் காரிகையில் அவற்றுக்கான இலக்கணம் இல்லை). அடுத்து,

“நேரிசை இன்னிசை போல நடந்து அடி மூன்றின் வந்தால் நேரிசை இன்னிசைச் சிந்தியலாகும்”14

என்பது மற்றொரு கருத்து. இதனால் தனிச்சொல் இல்லாமல் நடக்கும் இன்னிசை வெண்பா அடிகளால் மாறுபட்டு அதாவது நான்கடியின் குறைந்து மூன்றடியாக நடந்தால் அது இன்னிசைச் சிந்தியல் எனப்படும் என்பது பெறப்படும். இது அமிதசாகரர் கூறும் இலக்கணம்.

குணசாகரர் உரையில் முரண்

இந்தப் பாட்டிற்கு இலக்கணம் கூறவந்த உரையாசிரியர், குணசாகரர் பட்டுக் கொள்ளாமல் உரையெழுதியிருக்கிறார். அதாவது,

“பலவிகற்பத்தான் வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பா”15

என எதுகையோடு அமைதியடைகிறார். அவர் ‘வரையனைய’ என்னும் சொல்லை நோக்கினாரா என்பது தெரியவில்லை. மேலும் பதிப்புகளில் ‘வரையனைய’ என்பதைக் கோடிட்டுத் தனிச் சொல்லாகவே காட்டியிருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. இன்னிசை வெண்பாவிற்கோ இன்னிசைச் சிந்தியல் வெண்பாவிற்கோ தனிச்சொல் வருதல் கூடாது என்பது யாப்பிலக்கண விதி. இதில் எந்த யாப்பிலக்கண நூலிலும் மாறுபாடில்லை. ஐயர் ஏன் நேரிசை வெண்பாவாக்க முனைந்தார் என்னும் வினாவை எழுப்பியவர் கூட ஓர் இன்னிசைச் சிந்தியல் வெண்பாவினைத் தனிச்சொல்லின்றி நேரிசை வெண்பாவாக்க முடியாது என்னும் இலக்கணத்தையும் மறந்தார் போலும்!

தனிச்சொல் பற்றிய எண்ணம் எழாத நிலையில் அது நேரிசை வெண்பாவாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் வர வாய்ப்பில்லை. எனில், அது நேரிசை வெண்பாவாகத்தான் இருந்திருக்க வேண்டும் என ஐயர் உள்ளிட்ட சிலர்தம் கருத்தியலுக்குக் காரணம் ‘வரையனைய’ என்னும் தனிச்சொல் ‘சுரையாழ’ என்னும் இரண்டாமடிக்குப் பொருத்தமான தனிச்சொல் எனக் கருதியதும் அதனைக் கோடிட்டுத் தனிச்சொல்போலக் குறித்ததுமே! இனி இவ்விரண்டு சொற்களுக்கும் பொருத்தமான பாட்டின் முதலடியின் முதற்சீரைக் கண்டறிந்ததன் விளைவுதான் ‘கரையாட கெண்டை கயத்தாட மஞ்ஞை’ என்னும் முதலடியாகும்.

இந்த அடியின் வரலாறு நமக்குத் தேவையில்லை. ஐயரே எழுதியதாக இருக்கட்டும். ஔவை துரைசாமிப்பிள்ளை எழுதியதாகவும் இருக்கட்டும்!16 இல்லை அச்சுக் கோப்பவரே எழுதியதாயிருக்கட்டும்.! இங்கே பதியப்படும் அடிப்படை ஆய்வுண்மை மேற்கண்ட மூன்றடிப் பாடலைச் சிந்தியல் வெண்பா எனக் கருதியதுதான் அதன் வடிவம் பொருண்மை சிதைந்து போனதற்குக் காரணம் என்பதே. ‘சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய’ என்னும் தொடரைச் சொல்லிப் பார்த்தாலே ‘வரையனைய’ என்பது தனிச்சொல் என்பது உணரப்படும்! கவிதை செவி நுகர் கனிகள்! கண்காட்சிப் பொருள் அன்று!

‘சிந்தியல் வெண்பாவால்’ வந்த சிதைவு

‘வரையனைய’ என்பதைப் பிரித்துத் தனிச்சொல்லாகக் காட்டியவர்கள் அதனை நேரிசைச் சிந்தியல் எனக் காட்டியிருந்தால் ஐயருக்கு வந்த சிந்தனை அப்போதே பலருக்கும் வந்திருக்கும். ஐயர் அவர்களின் ஆய்வுழைப்பை  அறிந்தவர்கள் அவருக்கு இந்த ஐயம் வந்ததைப் பற்றி வியக்கமாட்டார்கள். அவர் ஒரு மூட்டைப் பதரில் ஒரு ‘மணி’ காண்பதற்கு ஓராண்டு உழைக்கும் உத்தமதானபுரத்துக்காரர். இந்தப் பாடலில் பயின்று வந்துள்ள ‘வரையனைய’ என்னும் தனிச்சொல்லை நோக்காது மூன்றடியாகக் கொண்டதாலேயே உரையாசிரியப் பெருமக்கள் இதனைப் பொதுவான சிந்தியல் வெண்பாவுக்குச் சான்றாக்கினர். பாடலின் உயிர்ப்பினை அறிந்து கொள்ள இயலாத காரணத்தால் வேறு சிலர் மொழிமாற்றுப் பொருள்கோளுக்கு இலக்கியமாக்கினார்.குணசாகரர் வடிவத்தில் அதனைச் சிந்தியல் வெண்பா எனக்குறிப்பட்டவர் பொருள்கோளில் சுண்ண மொழிமாற்றுக்கு எடுத்துக்காட்டாக்கியிருக்கிறார்.(மொழிமாற்று, சுண்ண மொழி மாற்று, அடிமொழி மாற்று, கொண்டு கோட்டுப் பொருள்கோள் ஆகியன பற்றிய ஆய்வு இங்கு முன்னெடுக்கவில்லை).வடிவம், பொருண்மை ஆகிய இரண்டுமே கிட்டிய தரவுகளுக்கேற்பக் கொண்ட முடிவு என்பது இக்கட்டுரையாளர் கருத்து.இனிப் பாடலை ஐயர் அவர்கள் கருத்தின்படி பதிப்பித்தால் எப்படி அமையும்? இப்படி அமையும்!

கரையாட கெண்டை கயத்தாட மஞ்ஞை

“சுரை யாழ அம்மி மிதப்ப – வரையனைய

யானைக்கு நீந்து முயற்கு நிலையென்ப

கானக நாடன் சுனை”

இப்படி அமைந்த இந்தப் பாடல் இப்பொழுது முழுமையான நேரிசை வெண்பாவாக உருப்பெற்றுள்ளது. இதனால் இது பழைய உரைநூல்களில் சிந்தியல் வெண்பா எனக் குறிக்கப்பட்டது தவறு என்பது பொருளன்று. இந்த ஆய்வுக்குக் கட்டுரையாளருக்குக் கிட்டிய சிந்தனை இன்னொருவருக்கு எதிர்காலத்தில் கிட்டினால் இந்த என்னுடைய ஆய்வு முடிவுக்கு வரும்.வேறோரு முடிவு தலையெடுக்கும்.எனவே ஆய்வில் முடிவு என்பது இல்லை.அது ஒரு தொடரோட்டம் என்பதை ஆய்வாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.அவ்வாறின்றி “முன்னோர்கள் எல்லாம் அறியாமையில் இவ்வாறு எழுதினார்கள் பதிப்பித்தார்கள்” என்பதெல்லாம் நம் பாட்டனார்களை நாமே தரங்குறைந்து பேசுவதுபோல என்றாகிவிடும்!. இந்த முழுமையான நேரிசை வெண்பாவின் உள்ளடக்கத்தைப் புரிந்து சுவைப்பதற்கு முன்னால் கவிதைச் சுவை பற்றிய சில கருத்துகளைக் காணலாம்

கவிதையைச் சுவைப்பது எப்படி?

அனுபவத்தின் மொழிபெயர்ப்பே கவிதை. இயற்கை, இறையருள், தத்துவம், நீதி நெறி என எதுவானாலும் படைப்பாளியின் உள்ளத்தில் கரைந்து போன நிலையில் அவன் உள்ளத்திலிருந்து பீரிட்டு வருவதுதான் கவிதை. சொற்கள் பக்குவமாக அமைந்தால் கவிதை செய்யுளாகும். சொற்கள் நெருப்பாக அமைந்தால் செய்யுள் கவிதையாகப் பரிணமிக்கும். இது அறிஞர் மு.வ. அவர்களின் ஆய்வுப் பார்வை.

“தொடுக்கும் கடவுட் பழம் பாடல்

       தொடையின் பயனே! நறைபழுத்த

             துறைதீந் தமிழின் ஒழுகுநறுஞ்

                   சுவையே! அகந்தைக் கிழங்கை அகழ்ந்து

எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு

       ஏற்றும் விளக்கே! வளர் சிமய

             இமயப் பொருப்பில் விளையாடும்

                   இளமென்பிடியே! எறிதரங்கம்

உடுத்தும் புவனம் கடந்து நின்ற

       ஒருவன் திருவுளத்தில் அழகு

             ஒழுக எழுதிப்பார்த்திருக்கும்

                   உயிரோ வியமே! மதுகரம் வாய்

மடுக்கும் குழற்காடேந்தும் இள

       வஞ்சிக் கொடியே! வருகவே!

             மலையத்துவசன் பெற்ற பெரு

                   வாழ்வே!வருக வருகவே!”17 

அம்மையைப் பலவகையில் உருவகம் செய்யும் குமரகுருபரர் பாட்டின் இறுதியடியில் வருகவே என்னும் சொல்லை மும்முறை அடுக்குவதைக் காணலாம். கிடக்கை நிலையிலேயே இந்தப் பாட்டைச் சுவைப்பது சரியே! ஆனால் ஒவ்வொரு உருவகவிளிக்கும் ‘வருகவே!’ என்னும் வியங்கோளை அமைத்துப் பாடிப் பாருங்கள்! (தொடையின் பயனே வருகவே! நறுஞ்சுவையே வருகவே! விளக்கே வருகவே! இளமென் பிடியே வருகவே! உயிரோவியமே வருகவே! வஞ்சிக்கொடியே வருகவே! பெருவாழ்வே வருகவே! என்பதுபோல) உணர்ச்சியின் ஆழம் தெரியும்! குமரகுருபரரோடு அவருடைய இறையனுபவத்தோடு நம்மையும் அறியாமல் ஒன்றுவதை உணரமுடியும். ஐயமிருந்தால் இந்தப் பாடலை தருமபுரம் சுவாமிநாதன் பாடியிருக்கிறார் கேட்டுப் பாருங்கள்!. இன்னொரு சான்று!மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். அதில் இந்த நெறியைப் பின்பற்றியிருப்பதைக் காணலாம்.

“ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!

      உறுதி கொண்ட நெஞ்சினாய் வா! வா! வா!

…………………………………………………………………………………………………………………………………

ஒரு பெருஞ்செயல் செய்வாய் வா! வா! வா!18

பாரதியார் நினைத்திருந்தால் குமரகுருபரரைப் போல எல்லா விளிகளையும் தொகுத்துச் சொல்லி ‘வா’என்னும் ஏவலை அடுக்காக்கியிருக்கலாம் அல்லவா? 32 வரிகளில் 3 வரிகளைத் தவிர மற்ற எல்லா வரிகளிலும் உள்ள விளிகளுக்கான வினையை அந்தந்த வரிகளிலேயே அவர் பதிவு செய்திருப்பதைக் காணலாம். எழுச்சிமிக்க பாரதத்தை வரவேற்கின்ற நிலையில் அவர் வாய்குளிர மனங்குளிர “வா!வா!வா!” என்று வரவேற்கிறார் என்பதாம்.  பாரதி இயற்றமிழ்க் கவிஞர் மட்டுமல்லர். இசைத்தமிழ்ப் பாவலர். அதனால்தான் அவர் தான் எழுதிய பல பாடல்கள் ‘இன்ன மெட்டில்தான் பாடப்படல் வேண்டும்! இன்ன ராகத்தில்தான் இசைக்கப்படல் வேண்டும் என்று பாட்டின் தொடக்கத்திலேயே எச்சரிக்கை செய்துவிடுகிறார். தம் பாட்டை இவர்கள் பாடினால் நம்மவர்கள் என்ன செய்வார்கள் என்று அவருக்குத் தெரியாதா என்ன?

தலைவன் வாக்குறுதியும் தலைவி ஏமாற்றமும்

சங்க இலக்கியத்தின் அகப்பாடல்கள் உளவியல் அடிப்படையில் அமைந்தவை. இயற்கைக் கூறுகளை மறுதலிக்காதவை புறவாழ்க்கையில்   வினைமுற்றி மீளும் காலம்பற்றிய தன்னால்அளிக்கப்படும் வாக்குறுதியை நிறைவேற்ற இயலாத தலைமகனைச் சங்க இலக்கியம் சித்திரித்து உள்ளது. அதனை உணராமல் அவன் கொடுத்த வாக்குறுதியை மட்டுமே நம்பிப் புலம்பும் நங்கையர்களையும் அது காட்டுகிறது.குறுந்தொகையில் ஒரு பாட்டு.கார் காலம் வந்தது.அதற்கு மறுக்க முடியாத சான்றாகக் கொன்றை மலர்கள் மகளிரின் கூந்தலைப் போலப் பூத்துக்குலுங்குகின்றன.இது இயற்கை. இயற்கை பெரும்பாலும் மாறாதது.ஆனால் தலைவன் வரவில்லை.தலைமகன் வரவில்லை எனத் தலைவி வருந்துவாளே என்று தோழி தயங்குகிறாள். அவள் தயக்கத்தைப் போக்க தலைவி சொல்வதாக அந்தப் பாட்டு அமைந்திருக்கிறது.

“வண்டுபடத் ததைந்த கொடியிணர் இடையிடுபு

பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்

கதுப்பிற் தோன்றும் புதுப்பூங் கொன்றை

கானம் காரெனக் கூறினும்

யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே” 19

 

“கொன்றை மரங்களில் புதிதாகப் பூத்துக் கார்காலம் வந்து விட்டது எனக்  கூறினாலும் நான் நம்பமாட்டேன்! ஏனென்றால் என் தலைவன் பொய் பேசமாட்டான்” இந்த அதீத நம்பிக்கை இன்றளவும் நடப்பியலிலும் இருப்பதனாலேயே நீதிமன்றங்களிலே இவ்வளவு வழக்குகள். சமுதாயத்தில் இவ்வளவு கொலைகள்! தற்கொலைகள்! இந்தப் பாட்டு குறுந்தொகையில் வருகிற ஒரு பாட்டென்றால் கலித்தொகையில் ஒருபடி மேலே போய் “என் தலைமகன் பொய் சொல்லவே மாட்டான்.அப்படிச் சொன்னால் அது ‘தண்ணீர் சுடும்’ என்பதுபோலாகும்” என்பதுபோல அமைந்த ஒரு பாட்டு இருக்கிறது.அந்தப் பாட்டைப் பாருங்கள்!

பொய்த்தற்கு உரியனோ?பொய்த்தற்கு உரியனோ?

‘அஞ்சல் ஓம்பு” என்றாரைப் பொய்த்தற்கு உரியனோ?

“குன்றகல் நாடன் வாய்மையில் பொய் தோன்றின்

திங்களுள் தீத் தோன்றியற்று”

 

“வாராது அமைவானோ? வாராது அமைவானோ?

வாராது அமைகுவான் அல்லன் – மலைநாடன்

ஈரத்துள் இன்னவை தோன்றின் நிழற்கயத்து

நீருள் குவளை வெந்தற்று”

 

“துறக்குவன் அல்லன் துறக்குவன் அல்லன்

தொடர்வரை வெற்பன் துறக்குவன் அல்லன்

தொடர்புள் இனையவை தோன்றின் விசும்பில்

சுடருள் இருள் தோன்றி யற்று”20

 

எவ்வளவு பெரிய நம்பிக்கை?

இயற்கையை மறுதலித்து தன் இதயம் கவர்ந்தவனின் சொல்லுக்கு மதிப்பளிக்கும் ஒரு தலைவியை இங்கே காண முடிகிறது. இதுபோன்ற பதிவுகளை நேரடியாகப் பொருள் காண்பதிலும் கொஞ்சம் நுண்ணியத்தைச் செலவழித்தால் ஒரு சமுதாய உண்மையைப் புரிந்துகொள்ள இயலும். இப்படித் தன் தலைவி வருந்துவாளே என்று எண்ணித்தான் வினைமுடித்து மீளும் தலைவன்தன் தேர்ப்பாகனை விரைந்து செல்லுமாறு ஆணையிடும் பாடல்களும் அமைந்துள்ளன என்பதை அறிதல் வேண்டும். இலக்கியம் சமுதாயத்தின் படப்பிடிப்பு. தலைவன் வந்துவிடுவான் என்னும் தலைவி நம்பிக்கையும் அந்த நம்பிக்கையைப் பாழாக்காமல் மீண்ட தலைவனையும் தமிழ்க்கவிதை உலகம் அன்றைக்குப் பதிவு செய்திருப்பதைஅறியமுடிகிறது.

‘சுரையாழ’ பாட்டின் உண்மைப் பொருள்

இப்படியொரு துணைத் தலைப்பு இடுவதனாலேயே இதுதான் உண்மைப் பொருள் என யாரும் கருதிவிட வேண்டாம். கட்டுரையாளரின் வரையறுக்கப்பட்ட புலமை, கிட்டியிருக்கும் தரவுகள், பிற ஆய்வாளர்களின் முடிவுகள், தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் காணப்படும் துறைப்பொருள் அமைதி முதலியனவற்றையெல்லாம் உள்வாங்கித் தற்காலிகமான முறையில் பதிவு செய்யப்படும் இலக்கிய நோக்கு என்றே கருத வேண்டும்.

கரையாட கெண்டை கயத்தாட மஞ்ஞை

“சுரை யாழ அம்மி மிதப்ப –  வரையனைய

யானைக்கு நீந்து முயற்கு நிலையென்ப

கானக நாடன் சுனை”

‘‘வரையனைய’ என்பது தனிச்சொல் என்பது தெளிவாக மேலே விளக்கப்பட்டிருத்தலின் அதன் முன்னடிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அது ஒரு நேரிசை வெண்பா என முன்வைக்கப்படுகிறது.படினும் அது இன்னிசைச் சிந்தியல்வெண்பா என்னும் பழைய தகுதி அப்படியே இருக்கிறது.நம் ஆய்வு இவ்வாறு அமைகிறது. அவ்வளவுதான்! இனி பொருள்கோள் நெறியில் எந்த மாற்றுக்கும் இடமில்லை என்பது மேலே காட்டிய சங்க இலக்கிய அகத்திணை மரபுகளால் நன்கு புலப்படும். அதாவது தலைவன் பொய்சொல்லமாட்டான் எனத் தலைவி நம்புவதும் “இல்லை அவன் பொய் சொல்வான்’ எனத் தோழி கவல்வதும் பாடுபொருளாயிருக்கின்றன.வினைமேற் செல்லும் தலைவன் அல்லது வரைவு நீட்டிக்கும் தலைவன் காலத்தாழ்வாகிய செயல்களுக்கு ஆயிரம் காரணங்களைச் சொல்வது ஓர் இலக்கிய மரபு.அவனை நம்பிப் புலம்புவதும் ஓர் இலக்கிய மரபு.காலம் நீட்டித்த தலைவனைக் குறிப்பாக ஏசுவதுபோலப் பேசுவது தோழிக்கு இயல்பு.இவை அத்தனையும் அகத்திணை இலக்கிய மரபுகள்.அந்த மரபு பற்றியே இந்தப் பாடலும் அமைந்திருக்க வேண்டும். தோழி சொல்கிறாள்,

“நீ என்னவோ தலைவன் தான் தந்த வாக்குறுதியை மீறமாட்டான் என நம்புகிறாய்.அவன் மீறுவது ஒரு புறம் இருக்கட்டும்.தான் சொல்கிறேன்.அவன் மட்டும் வாக்குறுதி மீறித் தலைகீழாக நடப்பான் என்பதன்று.உனக்குத் தெரியாது அவன் மட்டும் தலைகீழ் அல்லன்.அவன் நாட்டு மலைப்பகுதிகளில் உள்ள சுனைகளும் கூடத் தலைகீழானதுதான்.அந்தச் சுனை நீரில் நீந்த வேண்டிய மீன் கரையில் விளையாடும்.கரையில் விளையாடுதற்குரிய மயில் சுனையில் விளையாடும்.மிதக்க வேண்டிய சுரை அமிழ்ந்துவிடும்.அமிழ வேண்டிய அம்மி மிதக்கும்.உருவத்தில் பெரிய யானை நீச்சலடிக்கும்.சிறிய முயல் மூழ்கிவிடும்.அவன் நாட்டுச் சுனையில் அஃறிணைச் சுனையே இவ்வாறெனின் உயர்திணை பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?”

இந்தக் கண்ணழிப்பும் உரைப்போக்கும் துறைப்பகுப்பும் கட்டுரையாளர் முன் வைக்கும் கருத்தியல்.யாரும் கட்டுப்பட வேண்டும் என்பதில்லை.யார்மீதும் திணிப்பதற்காகவும் இல்லை.இனிக் கூடுதல் தகவலாகப் பதிவு செய்யப்படும் கருத்து.

“உரைசான்ற சான்றோர் ஒடுங்கி உறைய

நிரை உள்ளர் அல்லர் நிமிர்ந்து – பெருகல்

வரைதாழ் இலங்கு அருவி வெற்ப அதுவே

சுரையாழ அம்மி மிதப்பு” 21

என்னும் நேரிசை வெண்பா பழமொழி நானூற்றில் வருகிறது. இந்தப் பாட்டில் ‘சுரையாழ அம்மி மிதப்பு’ என்பதைப் பழமொழியாகப் பதிவு செய்திருக்கிறார்கள் இதனால் சுரையாழவும் அம்மி மிதக்கவுமான கருத்தியல் சமுதாயத்தில் நிலவியிருக்கிறது என்பது பெறப்படும். படவே, அது புலவனின் கற்பனையன்று என்பது உறுதி செய்யப்படும்.“சான்றோர் ஒடுக்கமும் அல்லவர் நிமிர்வும்” அம்மியின் மிதப்புக்கும் சுரையின் அமிழ்வுக்கும் ஒப்புமையாகக் கருதப்பட்டிருப்பது தமிழ்க்கவிதை உவமக் கொள்கையின் ஒரு தனி அடையாளம் என்றே கூறலாம். ஒரு செயல் என்பது ஒரு நாகரிகச் சமுதாயத்தின் சிந்தனை.

 

நிறைவுரை

 

‘அணிசெய் கலைகள் ஆயிரம் கற்பினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் கற்கிலார்’ என்பார் மகாகவி. ஏதோ வேண்டுமென்றே முன்னோர்கள் இந்தப் பாட்டுக்குத் தவறான பொருள்கோளைக் கொடுத்துவிட்டார்கள் என்பது போல எண்ணுவதும் பிற சான்றோர்களின் புலமையை ஐயப்படுவதும் பக்குவான ஆய்வு நெறியன்று யாராயினும் தங்களுக்குக் கிட்டிய தரவுகளின் அடிப்படையில்தான் ஆய்வு மேற்கொள்ள இயலும். நூலகங்கள் இல்லாத சுவடிக் காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களின் உழைப்பு எண்ணிப்பார்க்க இயலாதது.‘சுரையாழ அம்மி மிதப்ப’ என்பது ஒரு நாகரிகச் சமுதாயத்தின் வழக்கில் பயன்படும் ஒரு தொடர்.அதனை இலக்கியப் பதிவில் கொண்டுவந்திருக்கும் புலவனின் சதுரப்பாடு பெரிதும் பாராட்டத்தக்கது.வழக்குப் பழமொழி ஒன்றினை அகப்பொருள் அமைதிக்குப் பயன்படுத்தியிருக்கும் புலமைத் திறன் சிந்திக்க வைக்கிறது.பதிப்புலகின் பிதாமகர் சான்றோர் உ.வே.சா.அவர்கள் ‘வரையனைய’ என்பதைத் தனிச்சொல்லாகக் கொண்டிருக்காவிட்டால் இந்தக் கட்டுரையே இல்லை.இன்றைக்கு இந்தப் பாட்டின் உரையமைதி இவ்வளவுதான். நாளை மற்றொருஆய்வாளருக்குக் கிட்டும் தரவுகளின் தன்மையைப் பொருத்து இன்னும் சிறந்த பொருள் கிட்டலாம் என்பதை நினைவூட்டிஇக்கட்டுரை தன்னை நிறைவு செய்து கொள்கிறது.

சான்றெண் விளக்கம்

 1. குணசாகரர் யாப்பருங்கலக்காரிகை உரை காரிகை எண் 28
 2. Uoomaikkanavugal.com கனவுத் தொகுப்பு ‘கானக நாடன் சுனை’
 3. Uoomaikkanavugal.com கனவுத் தொகுப்பு ‘கானக நாடன் சுனை’
 4. Uoomaikkanavugal.com கனவுத் ‘தொகுப்பு கானக நாடன் சுனை’
 5. Uoomaikkanavugal.com கனவுத் தொகுப்பு ‘கானக நாடன் சுனை’
 6. Uoomaikkanavugal.com கனவுத் தொகுப்பு ‘கானக நாடன் சுனை’
 7. Uoomaikkanavugal.com கனவுத் தொகுப்பு ‘கானக நாடன் சுனை’
 8. Uoomaikkanavugal.com கனவுத் தொகுப்பு ‘கானக நாடன் சுனை’
 9. Uoomaikkanavugal.com கனவுத் தொகுப்பு ‘கானக நாடன் சுனை’
 10. பிள்ளை .கா.சு. இலக்கிய  வரலாறு தொகுப்பு 2    ப 370
 11. Uoomaikkanavugal.com கனவுத் தொகுப்பு கானக நாடன் சுனை
 12. Uoomaikkanavugal.com கனவுத் தொகுப்பு கானக நாடன் சுனை
 13. அமிதசாகரர் யாப்பருங்கலக்காரிகை காரிகை எண் 26
 14. மேலது காரிகை எண் 28
 15. குணசாகரர் மேலது உரை    
 16. Uoomaikkanavugal.com கனவுத் தொகுப்பு ‘கானக நாடன் சுனை’
 17. குமரகுருபரர் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் பா.எண். 61
 18. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள் ப 43
 19. ஓதலாந்தையார் குறுந்தொகை பா.எண்.  21
 20. கபிலர் கலித்தொகை குறிஞ்சிக்கலி           பா.எண். 5
 21. முன்றுறையரையனார் பழமொழி நானூறு பா.எண். 125

 

துணைநூற் பட்டியல்

 1. அமிதசாகரர் யாப்பருங்கலக்காரிகை                      

திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

சென்னை – 600001.

முதற்பதிப்பு – 1940

 

 1. ஔவை துரைசாமி பிள்ளை குறுந்தெகை உரை

திருநெல்வேலி தென்னிந்திய சைவ

சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

சென்னை – 600001.

முதற்பதிப்பு – 1940

 

 1. குணசாகரர்                     யாப்பருங்கலக்காரிகை உரை

திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

சென்னை – 600001.

முதற்பதிப்பு – 1940

 

 

 

 1. குமரகுருபரர் மீனாட்சியம்மன் பிள்ளைத் தமிழ்

முல்லை நிலையம்

9, பாரதி முதல் தெரு

தி.நகர். சென்னை – 60017

 

 1. சுப்பிரமணிய பாரதியார், பாரதியார் கவிதைகள்

பூம்புகார் பிரசுரம்

பிரகாசம் சாலை, பிராட்வே

சென்னை – 600 108

 

 1. புலியூர்க் கேசிகன் கலித்தொகை உரை

பாரி நிலையம்

சென்னை – 600001.

ஏழாம் பதிப்பு – 2003

 

 1. முன்றுறையரையனார் பழமொழி நானூறு

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

சென்னை – 600 098

முதற்பதிப்பு– 1957

 

 1. இணையதள முழுமுகவரி ஊமைக்கனவுகள்

கனவுத் தொகுப்பு

                                         UMAIKKANAVUKAL.COM      

                                         UOOMAIKKANAVUKAL.COM

கவிதையின்கழுத்தைஇப்படியும்அறுக்கலாம் – பிப்ரவரி 2திங்கட்கிழமை 2015

‘கானக நாடன் சுனை’ – பிப்ரவரி 5 வியாழக்கிழமை 2015

(கட்டுரையாளர் அறிந்த வகையில் இதுவே முகவரி என அறியப்படுகிறது. கூகுளில் ‘சுரையாழ அம்மி மிதப்ப’ எனத் தமிழில் பதிவிடின் தொடர்புடைய கட்டுரையைக் காணலாம். இந்தப் பதிவும் இதற்கான பின்னூட்டங்களுமே இந்தக் கட்டுரைக்கான காரணக் களமாகும். “கவிதையின் கழுத்தை இப்படியும் அறுக்கலாம்’ என்னும் ஒரு தொடரின் எதிர்மறை விளைவே இக்கட்டுரை)

பின்குறிப்பு: இணையத்தளப் பதிவில் பதிவாளர் பெயரோ பின்னூட்டக்காரர்களின் இயற்பெயரோ பெரும்பான்மை காண இயலவில்லை.


ஆய்வறிஞர் மதிப்புரை (Peer Review):

“மூழ்கிய சுரையும் மிதந்த அம்மியும்” என்னுந் தலைப்பில் அமைந்த  இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன்மதிப்பீடு

 • பழந்தமிழ் இலக்கண உரைகளில் காணப்படும் பாடல்கள் பல, இலக்கியச் சுவைக்கும் இலக்கண விளக்கத்திற்கும் பயன்படுமாறு அமைந்துள்ளன. அவற்றுள் ஒரு பாடலைப் பற்றிய வடிவம் மற்றும் பொருண்மை ஆகியவற்றின் உண்மைகாணும் முயற்சியாக இக்கடடுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.
 • எடுத்துக்கொண்ட பாடல் அகத்துறைச் சார்ந்தது என்பதால், துறை விளக்கத்திற்காகப் பல நூல்களைக் கட்டுரையாளர் காட்டியிருப்பதும் புலனெறி வழக்கத்தை அன்றைய உலகியலோடு ஒப்பிட்டுத் தலைமகன் தலைமகள் இவர்களுடைய உணர்வொற்றுமையை நுட்பமாகப் பதிவு செய்திருப்பதும் சிந்தனைக்குரியன.
 • சங்க இலக்கியப் பாடல்களை  உளவியல் அடிப்படையில் நோக்கி இயற்கையையே மறுதலிக்கும் அளவுக்குத் தம் தலைவன் மீது பற்று வைத்திருக்கும் தலைவியர் பலர்தம் உள்ளங்களைக் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது.
 • மூன்று வரிப் பாடலாகவே இருந்த இதன் மூலத்தைக் கண்டறியும் அறிஞர் உ.வே.சா. அவர்தம் முயற்சியில் கிட்டிய முதலடியே இக்கட்டுரைப் பொருளை முழுமையடையச் செய்கிறது. அவருடைய ஐயத்திற்கான அடிப்படை எது என்பதைக் கண்டறிவதிலும் முந்தைய ஆய்வுகளிலிருந்து கிட்டிய முதல் வரியைத் தயங்காமல் ஏற்றுக்கொண்டு உரைகாண்பதிலும் கட்டுரையாளரின் ஆய்வுப் பக்குவத்தையும் பண்பாட்டையும் காண முடிகிறது.
 • ‘வரையனைய’ என்பது தனிச்சொல் என்பதற்குக் கட்டுரையாளர் முன்வைக்கும் இலக்கண விளக்கங்கள் ஆழமானவை. அதனைத் தனிச்சொல்லாக ஐயர் கருதியதால்தான் அதன் உண்மையான முழுவடிவம் நேரிசை வெண்பாகத்தான் இருக்க முடியும் என்னும் முடிவுக்கு வருகிறார்.
 • கவிதைச் சுவையுணர் திறனை விளக்கக் குமரகுருபரரையும் பாரதியையும் முன் பின்னாக ஒப்பிட்டுக் காட்டியிருப்பது நிறைவு அளிக்கிறது.
 • இவ்வளவு ஆழமான கட்டுரையில் கட்டுரையாளர் ஒன்றினைக் கவனிக்கத் தவறிவிட்டாரோ எனக் கருத வேண்டியதிருக்கிறது.   ‘பொருள்கோள் நெறியில் எந்த மாற்றுக்கும் இடமில்லை’ என்பது அவசரப் பதிவோ?  பாட்டில் இரண்டு மற்றும் மூன்றாவது அடிகள் எழுவாய்த் தொடராக அமைய, முதலடி பெயரெச்சத் தொடராக அமைந்திருப்பதைக் கட்டுரையாளர் கவனித்திருக்க வேண்டும். கவனித்திருந்தால் மற்ற இரண்டு அடிகளைப் போலவே முதலடியையும் எழுவாய்த் தொடராகவே அமைப்பதுதான் மொழிமாற்றுப் பொருள்கோள் என்பதை உணர்ந்திருக்கக் கூடும். ‘கரையாட கெண்டை கயத்தாட  மஞ்ஞை’ என்பது மற்றவிரு அடிகளோடு பொருந்தாமை காண்க. எனவே  அவற்றைக் கெண்டை கரையாட, மஞ்ஞை கயத்தாட எனப் பிற அடிகள்போல எழுவாய்த் தொடராக மாற்றினால் பாட்டின் முதல் மூன்றடிகள் செவ்வையாக அமைந்துவிடுவதைக் காணலாம். காணவே பாட்டில் ஓரடிக்குள் உள்ள சீர்களை மாற்றிப் பொருள் காணும் கொள்கையாகிய மொழிமாற்றுப் பொருள்கோள் இவ்வடியில் அமைந்திருக்கிறது என உரைகாரர் கருதியது சரியே என்பது புலனாகும்.
 • தொடக்கக் காலத்தில் நான்கடியாக இருந்து முதலடியில் காணப்படும் மொழிமாற்றுப் பொருள்கோள் சுட்டப்பட்டுக் காலப்போக்கில் அந்த முதலடி மட்டும் மறைந்த நிலையிலும் எஞ்சிய மூன்றடிப் பாடலை மட்டும் பதிவு செய்து பொருள்கோளை வழக்கம் போல் பதிவு செய்திருக்கலாம். சங்க இலக்கியப் பதிவுகளில் பல பாடல்களில் இடையடிகள் மறைந்து போனதை ஒக்கும் இது.
 • ஆய்வுக் கட்டுரையில் சான்றெண் விளக்கமும் துணைநூற்பட்டியலைப் போலவே நெறிசார்ந்தது என்பது வலியுறுத்தப்படுகிறது.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.