இலக்கியம்கட்டுரைகள்

ஆய்வுலகில் காகிதச் சுவடிகளின் முதன்மை

முனைவர்  த. ஆதித்தன்
இணைப்பேராசிரியர்
அரிய கையெழுத்துச் சுவடித் துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்

சுவடி என்னும் சொல்லினைக் கேட்டவுடன் அனைவர் மனத்திலும் எழுவது ஓலைச் சுவடிகளே. அச்சு இயந்திரத்தின் வருகைக்கு முன்னர் இன்றைய அச்சுப் புத்தகங்கள் போன்று காணப்பட்டவை பனையோலைப் புத்தகங்களே ஆகும். அவையே ஓலைச் சுவடிகள் எனப்படுகின்றன. இதனை, “காகிதமும் எழுதுகோலும்  வழக்கத்திற்கு வராத காலத்திலே ஓலை நறுக்குகளில் எழுத்தாணி கொண்டு எழுதப்பட்ட சுவடிகளே நூல்களாக இருந்து வந்தன”1 என்று மா.சு. சம்பந்தன் கூறுவதன் மூலம் அறியலாம். காகிதப் பயன்பாடு பெருகியதற்குப் பின்பு அவற்றில் எழுதத் தொடங்கினர். அவ்வாறு கையினால் காகிதங்களில் எழுதப்படுவனவற்றைக் கையெழுத்துச் சுவடி, கையெழுத்துப்படி, காகிதச் சுவடி போன்ற பெயர்களால் அழைக்கின்றனர்.

இந்தக் காகிதச் சுவடிகள் தமிழ் இலக்கண, இலக்கிய ஆய்வுகளிலும், வரலாற்று ஆய்வுகளிலும் பெறும் முதன்மையினை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

தொல்காப்பியச் சுவடிப் பதிப்பு

தமிழில் கிடைக்கப்பெறுகின்ற நூல்களுள் மிகவும் தொன்மையானது தொல்காப்பியம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலாக இருந்தாலும் இதன் அச்சு நூல் பதிப்புகள், பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் இருந்தே கிடைக்கப்பெறுகின்றன. “பொது ஆண்டு 1847இல் தான் அச்சில் தொல்காப்பியம் ஏறியது என்பார் ச.வே. சுப்பிரமணியன். முதன் முதலாக மழவை மகாலிங்கையர், ஆகஸ்டு 1847இல் நச்சினார்க்கினியத்தை வெளியிட்டார். வரலாற்றில் தொல்காப்பியம் முதன்முதலில் அச்சில் வந்தது இப்பதிப்பு வழியாகத்தான்”2 என்று குறிப்பிடுவதன் மூலம் இதனை அறியலாம். அதே வேளை மு. சண்முகம்பிள்ளை, மா.சு. சம்பந்தன் ஆகியோர், மழவை மகாலிங்கையர் பதிப்பு 1848இல் தான் வெளிவந்துள்ளது என்கின்றனர். தொடர்ந்து 1858இல் எஸ். சாமுவேல் பிள்ளை என்பவரால் தொல்காப்பிய நன்னூல் என்னும் தலைப்பில் தொல்காப்பியம் முழுவதும் அச்சேற்றப்பட்டுள்ளது.

“1885இல் சி.வை. தாமோதரம்பிள்ளை பதிப்பித்த  தொல்காப்பியம் – பொருளதிகாரம் பதிப்புரையில் தமக்குக் கிடைத்த பிரதிகளைச் சொல்லும் பொழுது புரசபாக்கம் ஸ்ரீ சாமுவேற் பண்டிதரவர்கள் தமது சொந்தக் கையினாலேயே எழுதி வைத்திருந்த பிரதி ஒன்றும்”3 என்று குறிப்பிடுவதில் இருந்து சாமுவேல் பிள்ளை பதிப்புப் பணிக்குக் காகிதச் சுவடியினைப் பயன்படுத்தியுள்ளது புலனாகிறது. இந்தக் காகிதச் சுவடியினை சி.வை.தாமோதரம்பிள்ளையும் தமது பதிப்பிற்குப் பயன்படுத்தியுள்ளதும் தெரியவருகிறது.

1933இல் வ.உ.சிதம்பரம்பிள்ளை பதிப்பித்த தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்பினை அடுத்த நிலையில் குறிப்பிடலாம். இப்பதிப்பிற்குக் காகிதச் சுவடிகள் மூன்றினை அவர் பயன்படுத்தியுள்ளதும் தெரிய வருகிறது. “1933இல் வெளியிட்டுள்ள பகுதிகளுக்குத் த.மு. சொர்ணம்பிள்ளை கடிதப் பிரதியும், தி.நா. சுப்பிரமணிய ஐயரிடமிருந்து கிடைத்த கடிதப் பிரதியும், எஸ். வையாபுரிப்பிள்ளை 1912இல் தி.த.கனகசுந்தரம் பிள்ளை ஏட்டுப் பிரதியைப் பார்த்து எழுதிய கைப்பிரதியும் பயன்பட்டன”4 என்னும் வ.உ.சி.யின் கூற்றில் காகிதச் சுவடி என்பதற்கு கடிதப்பிரதி, கைப்பிரதி என்னும் சொல்லாட்சிகளைப் பயன்படுத்தியுள்ளதையும் இதன் மூலம் அறிய முடிகிறது. மேலும் வ.உ.சி.யின் இக்கூற்று மூலம் அவரின் பதிப்பிற்குத் துணைநின்ற காகிதச் சுவடிகள் மூன்றும் ந.மு. சொர்ணம்பிள்ளை, தி.நா.சுப்பிரமணிய ஐயர், எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆகியோரிடம் இருந்து பெறப்பட்டுள்ளன என்பதையும் அறிந்துகொள்ள முடிகின்றது.

குறுந்தொகைச் சுவடிப் பதிப்பு

குறுந்தொகையினை அச்சு நூலாகக் கொண்டு வந்தவர்களில் முதன்மை பெறுபவர் சௌரிப்பெருமாள் அரங்கன் ஆவார். இதனை அவர் பதிப்பித்தது, பொது ஆண்டு 1915இல் ஆகும். தொடர்ந்து 1920இல் நமச்சிவாய முதலியாரும், 1930இல் இராமரத்தின ஐயரும், 1933இல் சோ. அருணாசல தேசிகரும், குறுந்தொகையைப் பதிப்பித்துள்ளனர். அடுத்து 1937இல் உ.வே.சா அவர்களின் தொடக்கக் காலக் குறுந்தொகைப் பதிப்புகளில் சிறப்பான இடம், உ.வே.சாவின் பதிப்பிற்கு உண்டு. பிற நூல்களுக்கெல்லாம் அரும்பத உரை, மேற்கோள் ஒப்புமைப் பகுதி போன்றவற்றை எழுதிப் பதிப்பித்த அவர், குறுந்தொகைக்குத் தாமே முற்றிலும் புதிய உரை எழுதிப் பதிப்பித்துள்ளார். உ.வே.சா. அவர்கள், தமது குறுந்தொகைப் பதிப்பு முகவுரையில், “அப்பால் நான் ஏட்டுச் சுவடிகள் தேடிய இடங்களில் அடியிற் காட்டியபடி வேறு ஒன்பது பிரதிகள் கிடைத்தன. அவற்றில் சில பூர்த்தியாகாது  இருந்தன; சில குறையாக இருந்தன.

 1. திருநெல்வேலி ஸ்ரீ அம்பலவாண கவிராயரவர்கள் ஏட்டுப்பிரதி
 2. மந்தித் தோப்பு மடத்திற் கிடைத்த ஏட்டுப்பிரதி
 3. செங்கோல் மடத்திற் கண்ட குறையான ஏட்டுப்பிரதி
 4. திருமயிலை வித்துவான் ஸ்ரீ சண்முகம் பிள்ளையவர்கள் கடிதப்பிரதி
 5. சோடசாவதானம் ஸ்ரீசுப்பராய செட்டியாரவர்கள் ஏட்டுப்பிரதி
 6. தொழுவூர் ஸ்ரீ வேலாயுத முதலியாரவர்கள் ஏட்டுப்பிரதி
 7. சென்னை இராசாங்கத்துக் கையெழுத்துப் புத்தகச் சாலை ஏட்டுப்பிரதி
 8. புதுக்கோட்டை ஸ்ரீ ராதாகிருஷ்ணையரவர்கள் கடிதப்பிரதி
 9. திருக்கோணமலை ஸ்ரீ தி.த. கனகசுந்தரம் பிள்ளையவர்கள் கடிதப்பிரதி

இவற்றில் சிலவற்றைப் பார்த்துக்கொண்டு உரியவர்களிடம் கொடுத்துவிட்டேன்”5 என்கிறார். இவற்றுள் கடிதப்பிரதி எனக் குறிப்பிடப் பெற்றுள்ள மூன்றும் காகிதச் சுவடிகளாகும். இதன்மூலம் உ.வே.சா. தமது நூற்பதிப்பிற்குக் காகிதச் சுவடிகளைப் பயன்படுத்தியுள்ளார் என்பது உறுதியாகிறது. இதேபோன்று தொடக்கக் காலப் பதிப்பாசிரியர்கள் பலரும் பதிப்பாய்வுக்குக் காகிதச் சுவடிகளைத் தகுந்த ஆதாரங்களாகக் கொண்டுள்ளனர் என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது.

வரலாற்று ஆவணங்கள்

தாள் சுவடிகளில் வரலாற்று ஆவணங்களும் அதிகமாகக் காணப்படுகின்றன. குறிப்பாக ஐரோப்பிய வணிகர்களின் பண்டக சாலைக் குறிப்பேடுகள், இயேசு சபையினரின் கடிதங்கள், அரசவை ஆவணங்கள் போன்றன பலவும் காகிதச் சுவடிகளாகக் கிடைக்கப்பெறுகின்றன.

உதாரணமாக மோடி ஆவணங்களைக் குறிப்பிடலாம். பதினேழு, பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தஞ்சாவூர்ப் பகுதியை ஆண்ட மராத்திய மன்னர்கள், அரண்மனை சார்ந்த ஆவணங்களை மோடி என்னும் குறியீட்டு மொழியில் எழுதி வைத்துள்ளனர். மோடி எழுத்துரு தேவநாகரி எழுத்துருவைச் சிதைத்து உருவாக்கப்பட்டதாகும். அரசாங்கக் கடிதங்கள், ஆவணங்கள் மட்டுமன்றி அரண்மனை சார்ந்த வரவு செலவு கணக்குகள் போன்றவையும் இம்மோடி எழுத்துருவிலேயே எழுதப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. இவை காகிதச் சுவடிகளாகும்.  இதனை, “18, 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த  மராட்டிய அரசர்கள் ஆட்சி செய்த தஞ்சைப் பகுதியில் வாழ்ந்த குடிமக்களின் வரலாற்றை அறிவதற்குரிய மோடி ஆவணங்கள் காகிதத்தில் உள்ளமையால் அவற்றைப் போற்றிப் பேணுதல் நம் கடமையாகும்”6 என கே.எம். வேங்கடராமையா  கூறுவதன் மூலம் அறியலாம்.

இதேபோன்று இலண்டன் – இந்திய அலுவலக ஆவணங்களும் வரலாற்றாய்வுக்கு முக்கிய பங்களிப்பினைச் செய்வனவாகும். ஐரோப்பியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவைப் படம் பிடித்துக் காட்டுவனவாக  அவை திகழ்கின்றன. ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி, இந்திய ஆட்சியாளர்கள், இலண்டன் நிர்வாகம் ஆகியவற்றிற்கு இடையேயான கடிதப் போக்குவரத்துகள், ஆங்கிலேய அதிகாரிகளின் அறிக்கைகள் போன்றவை இதில் சிறப்பிடம் பெறுகின்றன. இவை அனைத்தும் இலண்டனிலுள்ள நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. இந்தக் காகிதச் சுவடிகளை முறையாக ஆய்வு செய்தால் இந்திய வரலாற்றில் இதுவரை சொல்லப்படாத, வெளிப்படுத்தப்படாத அரிய தகவல்கள் பலவும் கிடைக்கக்கூடும். இதேபோன்று ஏராளமான அரிய தாள் சுவடிகள் காணக் கிடைக்கின்றன. இவை அனைத்தும் ஆய்வுக்குரிய முதன்மைச் சான்றாதாரங்களாகும்.

ஆய்வுலகில் கல்வெட்டுகள், செப்பேடுகள், தொல்பொருள்கள், நாணயங்கள், ஓலைச் சுவடிகள் போன்றவை எத்தகைய சான்றாதாரங்களாகத் திகழ்கின்றனவோ அவற்றிற்கு இணையான முதன்மையினை உடையனவாகக் காகிதச் சுவடிகளும் திகழ்கின்றன.

தமிழின் செவ்வியல் நூல்கள் பலவும் சிறப்பாகப் பதிப்பிக்கப்பட, பல்வேறு வகைகளில் காகிதச் சுவடிகள் துணைநின்றுள்ளன. இலக்கிய ஆய்வுக்கு மட்டுமின்றி வரலாற்று ஆய்விலும் காகிதச் சுவடிகள் பெரும் பங்களிப்பினைத் தருவனவாகும். மேலும் காகிதச் சுவடிகளை நுண்ணிய முறையில் ஆய்வுகளுக்கு உட்படுத்தினால் புதிய பல வரலாற்று முடிவுகளும் கிடைக்கக் கூடும்.

சான்றெண் விளக்கம்

 1. சம்பந்தன், மா.சு.., அச்சும்பதிப்பும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1997, ப.92.
 2. சுப்பிரமணியன், ச.வே., தொல்காப்பியப் பதிப்புகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1992, ப.10.
 3. சரவணன், ப., தாமோதரம், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 2017, ப.126.
 4. சுப்பிரமணியன். ச.வே., தொல்காப்பியப் பதிப்புகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1992, ப.91.
 5. சரவணன், ப., சாமிநாதம், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 2014, ப.219.
 6. வேங்கடராமையா, கே.எம்., தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2015, ப.4.

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க