(Peer Reviewed) கடிதொடர் இல்லை: தற்காலத் தொடரிலக்கண மீறல்களும் காரணங்களும்

தி. மோகன்ராஜ்
முனைவர் பட்ட ஆய்வாளர்
இலக்கியத்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்

இலக்கணமும் மீறல்களும்

மொழியானது மாறும் தன்மைத்து. கால மாற்றம், சமூக மாற்றம், புறமொழித் தாக்கம் போன்ற பல காரணங்கள் மொழியின் மாற்றத்திற்கு வழிகோலுகின்றன. இவற்றை அகக்காரணங்கள், புறக்காரணங்கள் என்றும் நாம் பிரித்தறியலாம். இரண்டிற்கும் அடிப்படையாகப் பின்வரும் கருத்து அமைகிறது. மொழியானது மக்களின் எண்ணங்களை வெளியிட உதவும் கருவி என்னும் நிலையில், மக்கள் தாம் பேசும் மொழியில் அமைந்துள்ள மொழிக்கூறுகளைப் பயன்படுத்தியே தங்கள் கருத்துகளை வெளியிட முடிகிறது(தெ.பொ.மீ.,1985,ப.21). நுண்ணிய கருத்துகள் தோன்றும் நிலையிலும் புதிய கருத்துகள் ஏற்படும் நிலையிலும் அவற்றைத் தெளிவாக வெளிப்படுத்த இயலாத நிலையில் தம் மொழியில் காணப்படும் சில போதாமைகளைக் காலப்போக்கில் அம்மொழி பேசும் மக்கள் உணர்கின்றனர். அதன் காரணமாக, இரண்டு வகையான மாற்றங்களை மொழியில் புகுத்துகின்றனர். ஒன்று, புதிய மொழிக் கூறுகளை அறிமுகம் செய்வது. தமிழ்மொழியைப் பொறுத்தமட்டில் வான், பான், பாக்குப் போன்ற வினையெச்ச வடிவங்கள் தோன்றியமை இதற்குச் சான்றாகும். மற்றொன்று, ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டிற்கென்று வரையறுக்கப்பட்ட மொழிக்கூறு ஒன்றினை வேறோர் இடத்திற்கும் இட்டு நிரப்புவது. தமிழில் மரியாதை ஒருமைக்குப் பலர்பால் விகுதி பயன்படுகின்றமை இதற்குச் சான்றாகும். இம்மாற்றங்கள் எழுத்து நிலை, சொல்நிலை, தொடர்நிலை, மொழிக் கட்டமைப்பு நிலை என்று மொழியின் அனைத்துக் கூறுகளிலும் காலத்திற்குக் காலம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தமிழ்மொழியின் தோற்றம் உறுதியாக மதிப்பிடமுடியாத தொன்மைத்து. ஆகலின், அதன்கண் காலந்தோறும் மேற்கண்ட பல நிலைகளில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அம்மாற்றங்களை அவ்வக் காலங்களில் தோன்றிய இலக்கணங்கள் விதிகளாக ஏற்கவும் வழுவமைதியாகக் கொள்ளவும் வழுவெனப் புறந்தள்ளவும் என ஏதோவொரு வகையில் அவற்றின் மீது அக்கறை செலுத்தியுள்ளன. இது ஒப்பியல் நோக்கில் தமிழ் இலக்கணங்களை அணுகும்போது புலப்படும் (இராசாராம், 2010, ப. 12). சார்பெழுத்துகள் மூன்று என்று தொல்காப்பியம் இயம்ப அவற்றைப் பத்து என்று நன்னூல் கொண்டது மொழியில் ஏற்பட்ட எழுத்து நிலை மாற்றமாகும். சகரக் கிளவி அகரத்துடன் மொழி முதலாகாது என்று தொல்காப்பியம் வரையறுக்க, நன்னூல் அதனை ஏற்காதது சொல்நிலையில் ஏற்பட்ட மாற்றமாகும். செய்யும், செய்த என்னும் இரண்டு பெயரெச்ச வாய்பாடுகளை மட்டுமே தொல்காப்பியம் சுட்டிய நிலையில் இவற்றுடன் செய்கின்ற என்னும் வடிவத்தையும் நன்னூல் பெயரெச்ச வாய்பாடாகக் கொண்டது தொடரியல் மாற்றமாகும். தன்மை இடத்தை உயர்திணையாகத் தொல்காப்பியம் கொள்ள, நன்னூல் அதனை விரவுத்திணையாகக் கொண்டது மொழிக் கட்டமைப்பு நிலையில் ஏற்பட்ட மாற்றமாகும். இவையே அல்லாமல், மொழியின் அகராதி நிலையில் சொற்கள் அடைந்த மாற்றங்களும் உள. அவற்றைச் சொற்பொருள் மாற்றம் என்று வழங்குவர் (வரதராசன், 2015, ப. 126). இக்கட்டுரை, தற்காலத்தில் தமிழ்மொழியில் வழங்கப்படும் இலக்கண முறைப்படி அமையாத தொடர்களின் அமைப்புகள் சிலவற்றை ஆராய்ந்து அவற்றுக்கான காரணங்களையும் காண முற்பட்டுள்ளது. அவை கீழ்க்காணும் தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளன. இவை தற்காலப் பேச்சு வழக்கிலும் இலக்கியங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆகையால், தற்கால மொழியில் நிகழ்ந்துவரும் மாற்றங்களாகக் கருதப்படும் நிலையில் இவை நம் கவனத்திற்கு உரியவை ஆகின்றன.

 1. உயர்திணைப் பலர்பாலில் பால்வேறுபாடு உணர்த்தல்
 2. முன்னிலை வினையில் உயர்திணைப் பால்வேறுபாடு உணர்த்தல்
 3. குற்றியலுகரச் சிறப்புப் பெயர்களில் உகரம் கெடாமை
 4. உயர்திணைப் பெயர்கள் அஃறிணை ஒன்றன்பால் விகுதி ஏற்றல்
 5. அஃறிணைப் பன்மை வினை விகுதித் திரிபு

1. உயர்திணைப் பலர்பாலில் பால்வேறுபாடு உணர்த்தல்

தமிழில் சொற்களின் மீநிலைப் பகுப்பு, திணைகளின் அடிப்படையில் அமைந்திருப்பது வேறெந்த மொழியிலும் காணப்படாத சிறப்புத் தன்மையாகும். தொல்காப்பியச் சொல்லதிகாரத்தின் முதல் நூற்பா இந்தப் பகுப்பினைச் சுட்டுவது இச்சிறப்புத் தன்மையினை வலியுறுத்துவதாக உள்ளது(தொல்.சொல்.1). எனினும், உயர்திணையில் ஆண்பால் மற்றும் பெண்பால் மட்டுமே வினையில் பால் பிரிப்பினைத் தெளிவாகக் காட்டும். பலர்பாலில் ஆண்களைச் சுட்டும் பலர்பால், பெண்களைச் சுட்டும் பலர்பால், இருவரையும் ஒருங்கு சுட்டும் பலர்பால் என்னும் பிரிவு இல்லை.

வா.1 : அவர்கள் வந்தார்கள்

மேற்கண்ட வாக்கியத்தில் வந்தவர்கள் பலர் என்பது மட்டுமே அறியப்படும் நிலையில் அவர்கள் ஆண்கள் மட்டுமா, பெண்கள் மட்டுமா இருபாலாரும் கலந்த கூட்டமா என்ற வேறுபாடு உணர்த்தப்படவில்லை. இந்நிலையில் இந்த வேறுபாட்டினைக் காட்டுவதற்கு மொழியில் மாற்றம் செய்யப்படுகிறது. ஆண்பால் கூட்டத்தைக் குறிப்பிட விரும்பும் நிலையில்,

வா.2 : அவனுங்க வந்தானுங்க

என்று வழக்கில் பயன்படுத்தப்படுகிறது. வட்டார வழக்குகளில் சிற்சில திரிபுகள் காணப்படினும் அடிப்படை மாற்றம் ஒன்றாகவே உள்ளது. இதன் செம்மையான வடிவம் வா.3 ஆகும்.

வா.3 : அவன்கள் வந்தான்கள்

பெண்பால் கூட்டத்தைக் குறிப்பிட விரும்பும் நிலையில்,

வா.4 : அவளுங்க வந்தாளுங்க

என்னும் வாக்கியம் பயன்படுத்தப்படுகிறது. இதன் செம்மையான வடிவம் வா.5 ஆகும்.

வா.5 : அவள்கள் வந்தாள்கள்

இலக்கணங்களில் இவை வரையறுக்கப்படாத நிலையில் இம்மாற்றம் இலக்கண மீறல் ஆகும். எனினும், கருத்தைத் தெளிவாக வெளிப்படுத்த விரும்பும் நிலையில் தமிழ்ச் சமூகத்தால் இந்த மாற்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான அடிப்படைக் காரணம், பலர்பாலில் ஆண்பால், பெண்பால் வேறுபாடு மொழியமைப்பில் இல்லாதபோது அந்த வேறுபாட்டினைக் காட்டவிரும்பும் எண்ணமே ஆகும். வா.2’உம் வா.4’உம் பலர்பால் வாக்கியங்களாக இருப்பதுடன் அவை ஆண்பால், பெண்பாலைப் பிரித்துக்காட்டுவனவாகவும் அமைந்துள்ளன.

2. முன்னிலை வினையில் உயர்திணைப் பால்வேறுபாடு உணர்த்தல்

முன்னிலைப் பெயர்களும் வினைச்சொற்களும் திணை/பால் பாகுபாடு காட்டுவதில்லை. ஒருமை, பன்மை என்னும் எண் பாகுபாடு மட்டுமே காட்டுவன.  முன்னிலை ஒருமையில் ஆண்பால், பெண்பால் என்ற பாகுபாடு இல்லை. பொது ஒருமையாகவே அது உள்ளது. எனினும், தன்மை இடத்திலிருந்து பேசுவோர், முன்னிலை ஒருமை இடத்திலிருக்கும் கேட்போருடன் கொண்டுள்ள உறவுநிலையை உணர்த்தவும் முன்னிலை ஒருமையில் கேட்போரின் பால் வேறுபாட்டைச் சுட்டவும் விழைகின்றனர். இதன் காரணமாகத் தற்காலத் தமிழில் இலக்கணத்தில் வரையறுக்கப்படாத மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதாவது, முன்னிலை வினைமுற்றுடன் ‘–டா’, ‘-டி’, ‘-ப்பா’, ‘-ம்மா’ போன்ற ஒட்டுகள் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம், கேட்பவர் ஆணா பெண்ணா என்ற பாகுபாடு உணர்த்தப்படுவதுடன் பேசுவோருக்கும் கேட்போருக்கும் இடையிலான உறவுநிலையும் உணர்த்தப்படுகிறது.

நீ கேளுடா / நீ கேளுடி / நீ கேளுப்பா / நீ கேளும்மா போன்ற வாக்கியங்களில் ‘-டா’, ‘-ப்பா’ என்னும் ஒட்டுகள் சேர்வதால், கேட்பவர் ஆண் என்று அறியப்படுவதுடன் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் இடையிலான வயது வேறுபாடு, நெருக்கம், மதிப்பு போன்றனவும் புலப்படுகின்றன. ‘-டி’, ‘-ம்மா’ என்னும் ஒட்டுகள் சேர்வதால் கேட்பவர் பெண் என்று அறியப்படுவதுடன் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் இடையிலான வயது வேறுபாடு, நெருக்கம், மதிப்பு போன்றனவும் புலப்படுகின்றன. இவை முன்னிலை ஒருமையில் நிகழும் மாற்றங்களாகும்.

நீங்க கேளுங்கடா / நீங்க கேளுங்கடி / நீங்க கேளுங்கப்பா / நீங்க கேளுங்கம்மா போன்ற தொடர்களில் முன்னிலைப் பன்மை புலப்படுத்தப்படுவதுடன் கேட்பவர்கள் ஆண்களா பெண்களா என்னும் வேறுபாடும் உணர்த்தப்படுகிறது.

மேற்கண்ட மாற்றம், பேச்சு வழக்கில் மட்டுமன்றி இலக்கியங்களிலும் இடம்பெற்றுள்ளமையைக் காணலாம்.

‘கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே’

என்னும் அடியில் எடு என்னும் முன்னிலை ஒருமை வினைமுற்றுடன் ‘-டா’ ஒட்டுச் சேர்க்கப்பட்டுக் கேட்பவர் ஆண்பால்(தமிழன்) என்பது உணர்த்தப்பட்டுள்ளது.

‘சொல்லடி சிவசக்தி எனைச் சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்’

என்னும் அடியில் சொல் என்னும் முன்னிலை ஒருமை வினைமுற்றுடன் ‘-டி’ ஒட்டுச் சேர்க்கப்பட்டுக் கேட்பவர் பெண்பால் (சிவசக்தி) என்பது உணர்த்தப்பட்டுள்ளது.

‘உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ என்பதும் இந்த மாற்றத்தைப் பெற்றுள்ளது. எனவே, இம்மாற்றம் வழக்கு, செய்யுள் என்று இருநிலைகளிலும் இடம்பெற்றுள்ளதை அறியலாம். மேலும், இந்த ஒட்டுகள் வினைமுற்றுடன் மட்டுமல்லாமல் சில வினாத்தொடர்களில் வினாச்சொல்லுடனும் சேர்ந்து வருகின்றன.

நீ எதுக்குடா போன / நீ எங்கடி பார்த்த / நீ ஏன்ப்பா கொடுத்த / நீ எப்படிம்மா படிச்ச போன்ற வாக்கியங்களில் மேற்கண்ட ஒட்டுகள் வினைமுற்றுடன் அல்லாமல் வினாச்சொல்லான வினையடையுடன் இணைந்து வந்துள்ளன.

இந்நிலையில், முன்னிலையில் பால்வேறுபாடு காட்டும் விகுதிகள் மொழியில் இல்லாத காரணத்தால் அந்த வேறுபாட்டினைக் காட்ட விழையும் நிலையில் இலக்கண மீறலாக மேற்கண்ட ஒட்டுகள் சேர்க்கப்படுகின்றன என்பதை அறியலாம்.

3. குற்றியலுகரச் சிறப்புப் பெயர்களில் உகரம் கெடாமை

குற்றியலுகரச் சொற்கள் உயிரெழுத்தில் தொடங்கும் ஐ, ஆல், ஒடு போன்ற வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது ஈற்றில் நிற்கும் குற்றியலுகரம் கெடும் என்பது இலக்கண விதியாகும் (நன். எழு. 164).

முத்து + ஒடு – முத்தொடு. இதில் ஈற்றில் உள்ள குற்றியலுகரம் கெட்டுள்ளது. ‘முத்தொடு முழாக் கோத்து’ என்பர் இளம்பூரணர் (தொல். சொல். 73). இந்நிலையில், குற்றியலுகரப் பெயர்கள் சிலவிடங்களில் பொதுப் பெயராக(Common Noun) இல்லாமல் சிறப்புப் பெயராகவும் (Proper Noun) வழங்கப்படுகின்றன. அப்பெயர்கள் வாக்கியத்தில் இடம்பெறும்போது, அவை பொதுப் பெயர்களாக உள்ளனவா சிறப்புப் பெயர்களாக உள்ளனவா என்பதை வேறுபடுத்திக் காட்ட இலக்கண மீறலாக மொழியில் ஒரு மாற்றம் நிகழ்த்தப்படுகிறது. குற்றியலுகரப் பெயர் சிறப்புப் பெயராக இருக்கும் நிலையில், அது மேற்கண்ட வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது ஈற்றுக் குற்றியலுகரம் கெடாமல் ஏனைய உயிரீற்றுச் சொற்களைப் போன்று உடம்படுமெய் பெறுகிறது.

நான் முத்தை வாங்கினேன் / நான் முத்துவைப் பார்த்தேன்.

மேற்கண்ட வாக்கியங்களில் முதல் வாக்கியத்தில் உள்ள முத்து என்னும் சொல் பொதுப் பெயராக மணியின் ஒருவகையைக் குறிக்கின்றது. இரண்டாவது வாக்கியத்தில் உள்ள முத்து என்னும் சொல் உயிர்ப்பொருள் ஒன்றின் இடுகுறிப் பெயராக வந்துள்ளது. இதனைச் சிறப்புப் பெயர்(Proper Noun) என்று அழைப்பர். சிறப்புப் பெயர் குற்றியலுகர ஈற்றைக் கொண்டுள்ள போதிலும் இலக்கண மீறலாக அதன் உகரம் கெடாமல் உடம்படுமெய் பெற்று வந்துள்ளதைக் காணலாம். இம்மாற்றம் பொதுப்பெயர், சிறப்புப் பெயர் வேறுபாட்டினைப் புலப்படுத்த உதவுகிறது.

நான் பூங்கொத்தை வாங்கினேன் / நான் இலக்கணக் கொத்துவை வாங்கினேன்.

மேற்கண்ட வாக்கியங்களில் இரண்டாவது வாக்கியத்தில் உள்ள இலக்கணக் கொத்து என்னும் தொகைச்சொல் ஒரு குறிப்பிட்ட இலக்கண நூலினைச் சுட்டும் சிறப்புப் பெயராக வருவதால் இங்கும் இலக்கண மீறல் நிகழ்ந்துள்ளது.

நான் அரசிடம் முறையிட்டேன் / நான் அரசுவிடம் முறையிட்டேன் என்னும்போதும் இந்த வேறுபாட்டை அறியலாம். எனினும், இம்மாற்றம் எல்லாக் குற்றியலுகரப் பெயர்களிலும் நிகழ்வதில்லை என்பதும் குறிப்பிடத்தகுந்தது. கீழ்க்காணும் வாக்கியம் பிழை வாக்கியமாகும்.

*நான் என் தோழி முத்தழகுவைப் பார்த்தேன்

மேற்கண்ட வாக்கியத்தில் முத்தழகு என்பது குற்றியலுகரச் சிறப்புப் பெயராக இருக்கும் நிலையிலும் இலக்கண மீறல் நடைபெறவில்லை. எனவே, இந்த மாற்றம் மேலும் ஆய்விற்குரியது.

4. உயர்திணைப் பெயர்கள் அஃறிணை ஒன்றன்பால் விகுதி ஏற்றல்

இது மொழியில் இயல்பாகக் காணப்படும் மாற்றமாகும். உயர்திணைப் பெயர்கள் (முறைப்பெயர்கள், சிறப்புப் பெயர்கள்) வாக்கியங்களில் இடம்பெறும்போது உயர்திணையில் ஆண்பால், பெண்பால், பலர்பால் விகுதிகளைக் கொண்டு முடியாமல் சில சூழல்களில் அஃறிணை ஒன்றன்பால் விகுதிகொண்டு முடிகின்றன.

மாமா பாட்டு பாடுச்சு (மாமா பாட்டுப் பாடியது)

அப்பா கோவிலுக்குப் போச்சு (அப்பா கோவிலுக்குப் போயிற்று)

அண்ணன்  சாப்பிடுது (அண்ணன் சாப்பிடுகிறது)

மேற்கண்ட வாக்கியங்கள் உயர்திணை முறைப் பெயர்கள் ஆயினும் அவை கொண்டுமுடியும் வினைமுற்றுகள் அஃறிணை ஒன்றன் பாலாக உள்ளன. இவ்வாக்கியங்கள் இலக்கணப்படி திணை வழு வாக்கியங்களாகும். எனினும், இவை மொழி பேசுவோரால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

வெண்ணிலா பாட்டு பாடுச்சு (வெண்ணிலா பாட்டுப் பாடியது)

சுரேஷ் சாப்பிடுது (சுரேஷ் சாப்பிடுகிறது)

மேற்கண்ட வாக்கியங்களில் இடம்பெற்றுள்ள சிறப்புப் பெயர்கள் உயர்திணையைச் சுட்டுவனவாக இருப்பினும் வினைமுற்றுகள் அஃறிணை ஒன்றன் பாலில் உள்ளன. இம்மாற்றத்திற்குக் கீழ்க்காணும் காரணத்தைச் சுட்டலாம்.

பேசுபவர், கேட்பவருடனும் பேசப்படுபவருடனும் கொண்டிருக்கும் உறவுநிலையைப் பொறுத்து இம்மாற்றம் நிகழ்கிறது எனலாம்.

‘அண்ணன் சாப்பிடுது’ என்னும் வாக்கியம் பேசுபவர், கேட்பவருடனும் பேசப்படுபவருடனும் (அண்ணன்) நெருங்கிய உறவு உடையவராக இருக்கும் நிலையை உணர்த்துகிறது. ‘அப்பா கோவிலுக்குப் போச்சு’ என்பதிலும் இதே நிலையை உணரலாம். எனினும், பேசுபவருக்கும் பேசப்படுபவருக்கும் உறவு நெருக்கம் இருந்தாலும் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் இடையில் உறவு நெருக்கம் இல்லாதபோது இம்மாற்றம் நிகழ்வதில்லை.

முன்னிலையாகக் கேட்பவர் பேசுபவருக்கு யாரோ மூன்றாவது மனிதர் என்னும்போது, அண்ணன் சாப்பிடறார்/அப்பா கோவிலுக்குப் போனார் என்றே வாக்கியங்கள் அமைகின்றன. எனவே, இம்மாற்றத்திற்கான காரணம் பேசுபவர், கேட்பவர், பேசப்படுபவர் என்னும் மூவரைப் பொறுத்து அமைகிறது என்பது சிந்தித்தற்குரியது. இம்மாற்றத்திற்குத் தன்மை, முன்னிலை மற்றும் படர்க்கை ஆகிய மூவிடங்களின் உறவுநிலைகள் காரணமாக அமைகின்றன என்றும் விளக்கலாம்.

5. அஃறிணைப் பன்மை வினை விகுதித் திரிபு

அஃறிணைப் பன்மைப் பெயர்கள் அஃறிணைப் பன்மை விகுதிகொண்டு முடியவேண்டும் என்பது இலக்கணமாகும். எனினும், தற்போது அஃறிணைப் பன்மை விகுதி, இலக்கிய வழக்காக அல்லது மேடைப்பேச்சு வழக்காக மட்டும் கருதப்படுகின்ற நிலையில் பேச்சு வழக்கில் பன்மை உணர்த்தும் விகுதி இடம்பெறுவதில்லை. வினைப்பகுதி மற்றும் கால இடைநிலை மட்டும் காட்டும் வினைமுற்றுகளையோ (1), அஃறிணை ஒன்றன்பால் விகுதிகொண்ட வினைமுற்றுகளையோ(2), அஃறிணை ஒன்றன்பால் வினைமுற்றுடன் ‘கள்’விகுதி சேர்ந்த வினைமுற்றுகளையோ(3) அவ்வாக்கியங்கள் கொண்டுள்ளன.

எங்கிட்ட பத்து மாடுங்க இருக்கு

மேற்கண்ட வாக்கியத்தில் வினைமுற்று, வினைப்பகுதி(இரு) மற்றும் கால இடைநிலை மட்டும் பெற்றுப் பன்மை விகுதி இல்லாமல் வந்துள்ளது. அதிலும் காலம் காட்டும் இடைநிலை (கிறு/கின்று) திரிந்துள்ளது.

எங்க ஊர்ல நிறைய ஆறுங்க ஓடுது

மேற்கண்ட வாக்கியத்தில் ஓடுகின்றன என்னும் பலவின்பால் வினைமுற்றுக்குப் பதிலாக ஓடுது என்னும் ஒன்றன்பால் வினைமுற்று இடம்பெற்றுள்ளது.

காட்டுல ஆடுங்க மேயுதுங்க / மேயுதுக

மேற்கண்ட வாக்கியத்தில் ஒன்றன்பால் வினைமுற்றுடன் (மேயுது) ‘கள்’ விகுதி சேர்ந்து பலவின்பால் உணர்த்தப்பட்டுள்ளது.’கள்’ விகுதி திரிபடைந்திருப்பதும் உணரத்தக்கது.

மேற்கண்ட மூன்று வாக்கியங்களும் இலக்கண நிலையில் முறையே இருக்கின்றன என்றும் ஓடுகின்றன என்றும் மேய்கின்றன என்றும் வினைமுற்றுகளைப் பெற்றிருத்தல்வேண்டும். எனினும், அந்த வாக்கியங்களில் உள்ள மற்ற கூறுகள் பேச்சு வழக்கில் இருக்கும் நிலையில், எங்கிட்ட பத்து மாடுங்க இருக்கின்றன என்றும் எங்க ஊர்ல நிறைய ஆறுங்க ஓடுகின்றன என்றும் காட்டுல ஆடுங்க மேய்கின்றன என்றும் கூறும்போது வினைமுற்று மட்டும் இலக்கிய நடை அல்லது மேடைப்பேச்சு நடையில் இருக்க மற்ற கூறுகள் பேச்சு வழக்கில் அமையும் முரண்பாடு தோன்றுகிறது. இந்த முரண்பாட்டைத் தவிர்ப்பதற்கு வினைவிகுதி மேற்கண்டாவாறு மூன்று நிலைகளில் திரிபடைகிறது.

இதுவரை கண்ட தற்காலத் தொடரிலக்கணத்தில் காணப்படும் ஐந்து வகையான இலக்கண மீறல்களையும் அவற்றுக்கான காரணங்களையும்  கீழ்க்காணுமாறு பட்டியலிடலாம்.

வ.எண்

இலக்கண மீறல் காரணம் சான்று
1 உயர்திணைப் பலர்பாலில் பால்வேறுபாடு உணர்த்தல் பலர்பாலில் ஆண்களைச் சுட்டும் பலர்பால், பெண்களைச் சுட்டும் பலர்பால் என்னும் வேறுபாட்டை உணர்த்த விரும்புதல் அவனுங்க வந்தானுங்க / அவளுங்க வந்தாளுங்க
2 முன்னிலை வினையில் உயர்திணைப் பால்வேறுபாடு உணர்த்தல் முன்னிலை வினைகள் ஆண்பால், பெண்பால் பாகுபாடு பெறாத நிலையில் அவ்வேறுபாட்டினை உணர்த்த விரும்புதல் நீ கேளுடா /           நீ கேளுடி
3 குற்றியலுகரச் சிறப்புப் பெயர்களில் உகரம் கெடாமை பொதுப்பெயர் சிறப்புப் பெயர் வேறுபாட்டினை உணர்த்த விரும்புதல் நான் முத்தை வாங்கினேன் /   நான் முத்துவைப் பார்த்தேன்
4 உயர்திணைப் பெயர்கள் அஃறிணை ஒன்றன்பால் விகுதி ஏற்றல் பேசுவோர், கேட்போர், பேசப்படுவோர் ஆகியோருக்கு இடையிலான உறவுநிலையை உணர்த்த விரும்புதல் அப்பா சாப்பிடுது / வெண்ணிலா பாட்டு பாடுது
5 அஃறிணைப் பன்மை வினை விகுதித் திரிபு பேச்சு வழக்கினுள் இலக்கிய வழக்கு அல்லது மேடைப்பேச்சு வழக்கினைத் தவிர்த்தல் எங்கிட்ட பத்து மாடுங்க இருக்கு / எங்க ஊர்ல நிறைய ஆறுங்க ஓடுது / காட்டுல ஆடுங்க மேயுதுங்க

நாம் மேலே குறிப்பிட்டது போன்று, மக்கள் தம் மொழியில் அவ்வப்போது உணரும் போதாமைகளால் மொழியில் சில மாற்றங்களைப் புகுத்துகின்றனர் என்பதை மேற்கண்ட ஐந்து வகையிலான தொடரிலக்கண மீறல்களின் வழியாக அறியமுடிகிறது. இவை இலக்கண மீறல்கள் என்ற போதிலும் கருத்தைத் தெளிவாக உணர்த்த விரும்பும் விழைவே இம்மாற்றங்களுக்குத் தூண்டுகோலாக அமைகிறது. மொழியானது இலக்கண வரம்புடையது என்றாலும் அது கருத்துப் புலப்பாட்டுக் கருவி என்னும் நிலையில் காலத்திற்கு ஏற்பப் புலப்பாட்டுத் தேவைகளால் மக்களால் மாற்றி அமைக்கப்படுகிறது. தற்காலத் தமிழ் மொழிக்கான இலக்கணங்களை வரையறுக்க முற்படும் நிலையில் இவை போன்ற வேறு பிற மாற்றங்களையும் அவற்றுக்கான அக மற்றும் புறக் காரணங்களையும் கண்டறிதல்வேண்டும்.

துணையன்கள்

1. இராசாராம். சு., ‘இலக்கணவியல்: கோட்பாடுகளும் மீக்கோட்பாடுகளும்’, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 2010

2. தெ.பொ.மீ., ‘மாற்றிலக்கணம்’, சர்வோதயா இலக்கியப் பண்ணை, மதுரை, 1985

3. தொல்காப்பியம் சொல்லதிகாரம், இளம்பூரணர் உரை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1988

4. நன்னூல், எழுத்ததிகாரம், ஆறுமுக நாவலர் உரை, முல்லை நிலையம், சென்னை,1994

5. வரதராசன். மு., ‘மொழிநூல்’, பாரி நிலையம், சென்னை, 2015


ஆய்வறிஞர் மதிப்புரை (Peer review):

தமிழ் இலக்கணங்களில் காலந்தோறும் ஏற்பட்ட மாற்றங்களை வரலாற்று நிலையில் விளக்கி, தற்காலப் பேச்சு வழக்கிலும் இலக்கியங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்ற தொடர்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இக்கட்டுரை கவனப்படுத்துகின்றது. குறிப்பாகத் தற்காலத் தொடரிலக்கண மீறல்களை ஐந்து பிரிவுகளாகப் பகுத்து, அவற்றிற்குரிய காரணங்களைச் சான்றுகள் மூலம் கட்டுரையாளர் மிகத் தெளிவாக விளக்குகின்றார். ஆய்வாளருக்குப் பாராட்டுகள். 


பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “(Peer Reviewed) கடிதொடர் இல்லை: தற்காலத் தொடரிலக்கண மீறல்களும் காரணங்களும்

 1. சங்கப்பாடல்களில்,

  முன்னிலை வினையில் உயர்திணைப் பால்வேறுபாடு உணர்த்தல்:
  “ஏடா! நினக்குத் தவறு உண்டோ? நீ வீடு பெற்றாய்”
  “எல்லா நீ
  ஏதிலார் தந்த பூக் கொள்வாய்”
  “ஏடா! குறை உற்று நீ எம் உரையல்”

  உயர்திணைப் பெயர்கள் அஃறிணை ஒன்றன்பால் விகுதி ஏற்றல்:

  “தான் நோக்கி மெல்ல நகும்”

 2. வணக்கம்! கட்டுரையில் முன்னிலை வினை பால்காட்டாது என்னும் விதிதான் குறிப்பிடப்படுகிறது. ‘விளி’ பால் காட்டாது என்பது அன்று. ‘ஏடா’ என்பது விளி. எனவே ‘நின்’ என்னும் முன்னிலையும்’ ‘பெற்றாய்’ என்னும் வினைமுற்றும் பால் காட்டுமா என்பதுதான் வினா? ‘உரையல் என்பது எதிர்மறை’ இதுவும் பால்காட்டாது. ‘ஏடா’ விளியினால் பால் காட்டும். மற்று, இது போன்ற பின்னூட்டங்களுக்குக் கட்டுரையாளர் இயன்றவரை பொருத்தமான விளக்கங்களைத் தந்தால்தான் இத்தகைய கட்டுரைகள் பிறரை, குறிப்பாக ஆய்வு மாணவர்களைக் கவரும்! நன்றி.

 3. மதிப்புடையீர்!
  பின்னூட்டங்களுக்கு நன்றி.
  முதல் பின்னூட்டத்திலுள்ள கருத்துகளை இரண்டு வகைகளாகப் பிரித்துக்கொண்டு விவாதிக்கலாம்.

  1. ஏவல் வடிவம் பால் வேறுபாடு காட்டுதல்.
  2. செய்யும் வாய்பாட்டு வினை உயர்திணை ஒருமை உணர்த்துதல்.

  1. ஏவல் வடிவம் பால் வேறுபாடு காட்டுதல்:

  இதிலும் இரண்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன. பின்னூட்டத்தில் காட்டப்பட்டுள்ள ஏடா, ஏடி போன்ற வடிவங்கள் ஆண், பெண் வேறுபாட்டை உணர்த்தப் பயன்படுகின்றமை ஒரு வகையாகும். இது சிறுபான்மை வழக்காகும். மற்றொரு வகை, மொழி அல்லது இலக்கியப் பயன்பாட்டில் விளிகள் இடம்பெறுகின்றமை. வாழி தோழி! என்றும் பாண! என்றும் வாழியர் ஓரி! என்றும் வெள்ளாங் குருகே! என்றும் இடம்பெறும் விளி வடிவங்களே கேட்போரின் திணை, பாலினை உணர்த்திவிடுகின்றன. கூற்றுகளாக மட்டுமே உள்ள சங்க இலக்கியங்களில் இவ்வாறு வரும் விளிச்சொற்கள், கூற்றைக் கேட்போர் யார் என்று வாசகர் அறிந்துகொள்வதற்குப் பாடலாசிரியர் பயன்படுத்தும் ஒருவகை உத்தியாகவே கொள்ளலாம். எனினும் இந்த ஆய்வுக்கட்டுரையின் ஒரு பகுதி முன்னிலை வினைமுற்றுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து மட்டுமே அக்கறை கொள்கிறது. ஏவல் மூலம் திணை உணர்த்துதல் இலக்கண மீறலில் வாராது என்பதால் இதில் கவனத்திற்கொள்ளப்படவில்லை.

  2. செய்யும் வாய்பாட்டு வினை உயர்திணை ஒருமை உணர்த்துதல்:

  தமிழ் இலக்கணங்களில் செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று விரவுவினையாகவே கருதப்படுகிறது. தற்காலப் பயன்பாட்டில் அது அஃறிணை ஒன்றன் பாலுக்குப் பெரும்பான்மை பயன்படுகின்றது எனினும் இலக்கணப்படி அதனை உயர்திணை ஆண்பால், பெண்பால், அஃறிணை இருபாற்கும் பயன்படுத்தலாம் என்று தொல்காப்பியமும் நன்னூலும் குறிப்பிடுகின்றன. சாத்தன் யாழ் எழூஉம்; சாத்தி சாந்து அரைக்கும் போன்ற சான்றுகளை உயர்திணைக்குச் சான்றுகளாக உரையாசிரியர்கள் காட்டியுள்ளனர். எனவே, ‘தான் நோக்கி மெல்ல நகும்’ என்பது ஏற்புடைய வடிவமே! ‘நகும் என்பது செய்யும் வாய்பாட்டு விரவுவினைதான் என்பதால் இதனை இலக்கண மீறலாகக் கொள்ளவேண்டியதில்லை.

  கட்டுரையை வாசித்துக் கருத்துத் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

  தி.மோகன்ராஜ் (கட்டுரையாளர்)

Leave a Reply

Your email address will not be published.