குறளின் கதிர்களாய்…(311)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்...(311)
பேராண்மை யென்ப தறுகணொன் றுற்றக்கா
லூராண்மை மற்றத னெஃகு.
– திருக்குறள் -773 (படைச்செருக்கு)
புதுக் கவிதையில்...
பகைவரிடம்
இரக்கம் காட்டாமல்
வீரத்துடன்
எதிர்த்து நிற்பது
பேராண்மையாகும்..
அந்தப்
பகைவர்க்குத் தாழ்வொன்று
வருகையில்
இரக்கம் கொண்டு
அவருக்கு உதவிடுதல்,
பேராண்மைக்குச்
சிறப்பு சேர்க்கும்
கூர்மையாகும்…!
குறும்பாவில்...
பகைவரை எதிர்த்தல் பேராண்மை,
பகைவரின் தாழ்வில் இரக்கமுடன் உதவிடுதல்
பேராண்மைக்குச் சிறப்புதரும் கருவி…!
மரபுக் கவிதையில்...
பகைவர் தம்மோ டிரங்காமல்
பலத்தைக் காட்டல் பேராண்மை,
பகைவர் தமக்கோர் தாழ்வுவரின்
பகையை மறந்தே இரக்கத்தால்
வகையாய் உதவி யவர்தமக்கு
வந்த தாழ்வைப் போக்கிடுதல்
மிகையாய்ச் சிறப்பை ஆண்மைக்கே
மேலும் சேர்க்கும் கருவியாமே…!
லிமரைக்கூ..
வீரமுடன் எதிர்கொள்வார் பகை
பேராண்மையாளர், பகைவர் தாழ்வில் உதவுதல்
ஆண்மைக்கு மேன்மைதரு கருவி வகை…!
கிராமிய பாணியில்...
படச்செருக்கு படச்செருக்கு
பெருமமிக்கப் படச்செருக்கு,
பகைவனுக்கொதவும் படச்செருக்கு..
எதிரிக் கிட்ட
எரக்கம் காட்டாம
வீரத்தோட
எதுத்து நிக்கறதுதான்
பேராண்மங்கிறது..
அதுலயும் அந்த
எதிரி துன்பப்படுறபோது
அவனுக்கு ஒதவிசெய்யறது,
அந்தப்
பேராண்மக்கே பெரும சேக்கிற
கருவியாகுமே..
அதுதான்
படச்செருக்கு படச்செருக்கு
பெருமமிக்கப் படச்செருக்கு,
பகைவனுக்கொதவும் படச்செருக்கு..!