நாங்குநேரி வாசஸ்ரீ

பாடல் 17

உழையிருந்து நுண்ணிய கூறிக் கருமம்
புரையிருந்த வாறறியான் புக்கான் விளிதல்,
நிரையிருந்து மாண்ட அரங்கினுள் வட்டு,
கரையிருந் தார்க்கெளிய போர்‘.

அரங்கினுள் வட்டு, கரையிருந் தார்க்கெளிய போர்

அமெரிக்காலேந்து என் பேத்தி வரப்போறா. என்ன அவ வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறா. பாட்டி தன் அனைத்து பொக்கை வாய்த் தோழிகளிடமும் சொல்லியாயிற்று.

நாலு நாட்களாக பாட்டியோட அளப்பற தாங்க முடியல. அவ வந்தா என்னவெல்லாம் பண்ணிக்குடுக்கணும்னு லிஸ்ட் வேற.

ஒருவழியாக வந்து சேர்ந்த பேத்தி பாட்டியை விரட்ட ஆரம்பித்தாள்.

இவ்ளோ நாள் என்ன செஞ்சிட்டிருந்தீங்க பாட்டி.

இப்பவாவது சரியாப் பாத்து புடவை சட்டை எல்லாம் எடுத்து வச்சுக்கோங்க. அங்க வாங்கவும் முடியாது. சட்டை தைக்கறதும் கஷ்டம். உங்களோட முக்கிய தேவைகளைச் சொல்லுங்க. பல்செட்டு, மூக்குக் கண்ணாடி. கோபால் பல்பொடி, சந்திரிகா சோப்பு, தலை தோட்டிக்கறதுக்கு குற்றாலத் துண்டு லிஸ்ட் நீண்டுகொண்டே போனது.  அதோடமறக்காம என்னோட முறுக்குக்குத் தேவையான உளுந்துமாவுப் பொட்டலம் இருக்கு. அத எடுத்துக்கணும். அரிசி உங்க ஊர்ல கிடைக்குமில்ல.

இந்தப் பாட்டியத் திருத்த முடியாது பேத்தி சௌம்யா தலையில் அடித்துக்கொண்டாள். உள்ளூரில் அவள் பாட்டிக்கு முறுக்கு ஸ்பெஷலிஸ்ட் னு பட்டம் வேற. இப்ப சொன்னா கேக்கவா போறாங்க. வேற வழியில்லாம எடுத்துவைக்க வேண்டியதுதான். இருந்தாலும் சொல்லிப்பாக்கறேன். பாட்டி அமெரிக்காவுல யாரும் முறுக்க விரும்ப மாட்டாங்க. பல்லு ஒடைஞ்சுபோயிடும்னு பயப்படுவாங்க. யாருக்கு செஞ்சுகுடுக்கப்போறீங்க. இருக்கற பத்து முறுக்கு எனக்குப் போதும். ரெண்டு மாசம் கழிச்சு நீங்க திரும்ப வரும்போது செஞ்சிக்கலாம்.

பாட்டி காதில் போட்டுக்கொண்டதாகத் தெரியவில்லை. உன்னோட அமெரிக்க ப்ரெண்ட் எல்லாம் கூட்டிட்டு வா. நான் சுலபமா கடிக்கறாமாதிரி மொறுமொறுனு தேங்காய் எண்ணெயில பொரிச்சுத்தரேன். ஒருதடவை சாப்பிட்டாங்க அப்பறம் என்ன இந்தியாக்கு திரும்பிப் போகவேண்டாம்னு சொல்லிருவாங்க.

எப்படியோ என்னோட முறுக்குப்பாட்டியக் கூட்டிக்கிட்டு அமெரிக்காவும் வந்தாச்சு. இங்க இருக்கற இந்திய நண்பர்கள்கிட்ட பேசறதுக்கு முன்ன பாட்டியோட முறுக்குக்குத் தடை போட்டுறணும். முடிவோடு பேச ஆரம்பித்தாள் சௌமியா.

பாட்டி முறுக்கு சுத்தறது என்ன பெரிய விசயமா. இப்பல்லாம் எப்படிச் செய்யணும்னு மொபைல்ல வீடியோ பாத்தே தெரிஞ்சுக்கலாம். என்ன அதிசயம் பாட்டி ஒன்றுமே சொல்லவில்லை. அமைதியாகப் போய்விட்டாள்.

அடுத்தநாள் காலை எழுந்த சௌமியாவுக்கு ஆச்சர்யம். பாட்டி முறுக்கு மாவு பிசைந்து ரெடியாக வைத்திருந்தாள். என்னடா தர்மசங்கடம். வந்த ரெண்டாம் நாள்ல அதுக்குள்ள இங்க யார ப்ரெண்ட் புடிச்சிருப்பாங்க. ஒருவேள யாராவது வீட்டுக்கு வரப்போறாங்களோ.

பாட்டி ஆரம்பித்தாள். இங்க யாரும் வரப்போறதில்ல. திருதிருனு முழிக்காத. இப்போ உனக்குதான் முறுக்கு சுத்தற போட்டி. நேத்திக்கு சொன்னையில்ல. யார் வேணும்னாலும் செய்யலாம்னு. இப்போ இந்த மாவ எடுத்து ஒடையாம மூணு வட்டம் முறுக்கு சுத்து.

இதென்ன பெரிய விசயமான்னு உக்காந்த எனக்கு அரை மணி நேரம் ஆகியும் ஒரு முறுக்கு ஒழுங்கா சுத்த முடியல. ஒண்ணு புரி சரியான இடைவெளியில வர மாட்டேங்குது. அப்படியே புரி வந்தாலும் இரண்டாவது சுத்துலயே முறுக்கு விண்டுக்கிட்டு நிக்குது. பொறுமையா பாட்டி திரும்பத் திரும்ப கலைந்த முறுக்கு மாவை எடுத்து மீண்டும் உருட்டி எண்ணை தொட்டு என்னிடம் கொடுக்கிறாள்.

கடைசியில் என்னால முடியல…. அப்டினுஒத்துக்க வேண்டியதாயிற்று. எங்கள் வீட்டு முறுக்கு சாம்பியன் முந்தினநாளே அரைத்துத் துணியில் நீர் வடிவதற்காகக் கட்டி தொங்கவிடப்பட்டதிலிருந்து சிறிது எடுத்துப் பிசைந்து எண்ணெய் தோய்த்து லாவகமாக வெள்ளைத் துணியின்மேல் சுற்றுகிறாள். இப்பொழுது எனக்கு ஒரு பழமொழி ஞாபகத்துக்கு வருகிறது. செய்யறவனுக்குத்தான் அதோட சிரமம் தெரியும். வெளியில நின்னு விமர்சிக்கறது ரொம்ப சுலபம். பழமொழி நானூறுல  அரங்கினுள், வட்டு கரையிருந்தார்க்கு எளிய போர் இதத்தான் சொல்லுது. அரங்குல உக்காந்து பாக்கறவங்களுக்கு உள்ள வட்டாடறது எளிதாத் தோணுமாம். ஆனா உள்ள இருக்கறவனுக்குத்தான் அதப்பத்தின சிரமம்தெரியும்ங்கறது அதோட அர்த்தம். முன்னால படிச்ச ஞாபகம்.

சரி இருந்தாலும் நான் முறுக்குப்பாட்டியின் பேத்தியாச்சே. முயற்சியோட கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறேன். மனதினுள் சொல்லிக்கொண்டே பாட்டியின்முன் உட்கார்ந்தாள் சௌமியா.

பாடல் 18

பொருந்தா தவரைப் பொருதட்டக் கண்ணும்,
இருந்தமையா ராகி இறப்ப வெகுடல்
விரிந்தருவி வீழ்தரும் வெற்ப! அதுவே
அரிந்தரிகால் நீர்ப்படுக்கு மாறு.

அரிந்தரிகால் நீர்ப்படுக்கு மாறு

கைபேசியின் அழைப்பு ஒலி. இப்பொழுதுதான் வீட்லேந்து கடைக்குப் போனான். அதுக்குள்ளயா கூப்புடறான். சாமான்கள ஒழுங்கா லிஸ்ட் போட்டு எழுதிட்டுப் போன்னு சொன்னா கேக்கறதே இல்ல. எல்லாத்துலயும் ஒரு அலட்சியம் இந்தப் பிள்ளைக்கு மனதில் நினைத்துக்கொண்டே வசைபாடுபவதற்காக கைபேசியை எடுத்தேன். என்ன ஆச்சர்யம். இது கடைக்குப்போயிருக்கும் என் பிள்ளை இல்ல. என் ப்ரெண்ட் விசாகாவோட அழைப்பு. பாம்பேய விட்டு வந்து ஒரு வருசம் ஆகியாச்சு. இன்னிக்குக் கூப்பிடலாம் நாளைக்குக் கூப்பிடலாம்னு நெனச்சி நாட்கள் கழிந்ததுதான் மிச்சம். எந்த பழைய ப்ரெண்ட்ஸையும் கூப்பிடவே இல்ல. கடைசியில அங்கு பக்கத்துவீட்டில் குடியிருந்த தமிழ்பேசும் விசாகா கூப்பிட்டே விட்டாள்.

என்ன சுலோசனா சென்னை போனதில எங்கள எல்லாம் மறந்துட்ட போல. என்னதான் உங்க சொந்தக்காரங்க எல்லாம் அங்க இருந்தாலும் ஒருவருசமா உனக்குப் பேச நேரமே கெடைக்கலனு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்.

ஆமா வீடு எங்க. கோயமேடு பஸ்டேண்ட் பக்கமா. அமக்களமான எடம். நல்ல அனுபவிக்கற போல. அங்கே ஒரு வீடு வாங்கிற வேண்டியதுதானே.

சிறிதுநேரம் விசாகாவைப் பேசவிட்டு பின் நான் தொடர்ந்தேன். நல்ல எடம் தான் பொழுது எல்லாம் நல்லாவே போகுது. வீடுகீடு வாங்கறதப்பத்தி யோசிக்கவே முடியாது. இங்க வீடுகள்லநிறைய பிரச்சினை. முக்கியமானது கரையான். கொஞ்ச நாள் துணிமணிகள நகத்தாம வச்சா அதுலயே கரையான் பத்திக்கிது. நல்ல வேள நான் குடியிருக்கிற வீட்ல அவ்வளவா இல்ல. வாசல் கதவுல மட்டும் கரையான் அரிச்சிருக்கு. மூலையில மண்சேத்து வைக்கும். அப்பப்ப அங்க மட்டும் மருந்து அடிச்சு கட்டுப்படுத்தி வச்சிருக்கோம். அக்கம்பக்கத்து வீடுகள்ல எல்லாம் அலமாரிகள் வரை அரிச்சிடுச்சு. மொத்தமா எடுத்துட்டு திரும்ப மரவேலை பண்றாங்க.

நான் நீண்ட நாள் பேசாததால் கோபத்துடன் ஆரம்பித்த விசாகா கரையான் எனக் கேட்டவுடன் அடப்பாவி, நீ நெனைக்கிற மாதிரி கரையான அழிக்கறது அவ்வளவு சுலபம் இல்ல. கட்டுப்படுத்திட்டதா நீ நினைச்சிட்டிருக்க. புதுசா மரவேலை பண்ணிட்டா திரும்ப வராதுனு உங்க அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க நினைக்கிறாங்க. எல்லாமே தப்பு. பெஸ்ட் கன்ட்ரோல் ஆட்களக் கூப்பிட்டு வீடு முழுக்க மருந்து அடிக்க வை. அவங்க சுவரோட அடிப்பக்கத்துல குறிப்பிட்டஇடைவெளி விட்டு சின்னச் சின்ன ஓட்ட போட்டு மருந்து அடைப்பாங்க. அதனால கரையான் பரவாம அழிஞ்சு போகும். போனவாரம் பொதிகை டிவியில பழமொழி பத்தின ஒரு நிகழ்ச்சி பாத்தேன். அதுல அரிந்தரிகால் நீர்ப்படுக்குமாறு னு ஒரு பழமொழிக்கு வயல்ல கதிரை அரிந்து வச்ச அரிதாளையும் விடாம உழுது தண்ணிக்குள்ள அமிழ்த்தி அழுகச்செய்வான் உழவன். அப்டியே உட்டுவச்சா அதுலேந்து வளமில்லாத பயிர் வர ஆரம்பிச்சுடும்னு அர்த்தம் சொன்னாங்க. உண்மைதானே. அரைகுறையா எத உட்டு வச்சாலும் ஆபத்துதான்.

சரிதான் என் தோழி சொன்னத செயல்படுத்திடவேண்டியதுதான். முடிவெடுத்தேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.