நாவலர் நூற்றாண்டு நற்றமிழுக்குப் பல்லாண்டு!
முனைவர் ஔவை நடராசன்
கருந்தாடியும் செம்மேனியும் காவியம் பேசும் இதழ்களும் கொண்ட கட்டிளங்காளையாக பேரறிஞர் அண்ணாவால் கண்டெடுக்கப்பட்ட நன்மணிதான் நாவலர்.
ஏறுபோல் எழுந்து நின்று இலக்கிய உரைகளை ஆற்றியபோது கேட்டவர் நெஞ்சமெல்லாம் கிளுகிளுத்தது. அண்ணாவால் அருமைத் தம்பி என்று அழைக்கப்பட்டதோடு தலைமை தாங்க வா உன் ஆணைக்கு அடங்கி நடக்கிறோம் என்று அவர் உரையாற்றியது கழக வரலாற்றின் கல்வெட்டு மொழியாகும்.
நாவலர், பாவேந்தரின் பாட்டு வரிகளை மேடை தவறாமல் முடிப்புரையாகச் சொல்வார். பகையைக் கூடத் தன் நகையால் வென்றவர். கலைஞருடைய கலைத்திறமையால் அவர் உலகையே வெல்வார். கலை பெற்ற வெற்றிதான் கலைஞரின் வெற்றி. என் வெற்றி அவரைத் தொடர்ந்ததுதான் என்று பெருமிதத்தோடு பேசியதை நாம் நன்றாக அறிவோம்.
நாவலர் நூற்றாண்டு நற்றமிழ் வளர்க்கும் நூற்றாண்டாக நாளுக்கு நாள் பொலிவு பெற வேண்டும் என்பதுதான் நம் விருப்பமாகும்.
சங்கே முழங்கு என்ற எழுத்துகளைக் காணும்போதுகூட நாவலரின் இடிக்குரல், காதில் இனிப்பை ஊட்டும்.