அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 5 (ஊரார்)

0

ச. கண்மணி கணேசன்,
முதல்வர்& தமிழ்த்துறைத் தலைவர்,
ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி. 

முன்னுரை

பெயரிலேயே பன்மை விகுதி கொண்ட ‘ஊரார்’ என்னும் குழுப்பாத்திரம் பலவிடங்களில் ‘ஊர்’ என்னும் இடவாகு பெயரால் குறிக்கப்படுகிறது. கூற்று நிகழ்த்தும் உரிமை இல்லாத இப்பாத்திரத்தைப் பற்றித் தலைமைப்பாத்திரங்களும் துணைப்பாத்திரங்களும் சொல்வது என்ன? இக் குழுப்பாத்திரத்துள் யாரெல்லாம் அடங்குவர்? இப்பாத்திரத்தின் செயல் என்ன? பயன் என்ன? இப்பாத்திரம் என்னென்ன பேசியதாகச் சொல்லப் படுகிறது? அப்பேச்சின் நோக்கம், தன்மை, விளைவு, பெறுமதி முதலியன குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

‘ஊரார்’ ஒரு பாற்பொதுச் சொல்

ஊரார் என்பது ஆண், பெண் இருபாலரையும் பொதுப்படக் குறிக்கும்  பலர்பாலுக்குரிய சொல் ஆகும். பெண்களை மட்டும் வேறுபிரித்துச் சுட்டும் இடங்களில் அது விதந்து கூறப்பட்டுள்ளது.

புறத்தொழுக்கத்தில் நின்று பின் தலைவியிடம் மீண்டுவரும் தலைவனுக்கு வாயில் மறுக்கும் தோழி;

“ஊர் முழுதும் நுவலு நிற்காணிய சென்மே” (அகம்.- 176)

என்கிறாள். இங்கே ‘ஊர் முழுதும்’ என்று அழுத்தம் கொடுப்பது குறிப்பிடத்தக்கது. ஆண்கள், பெண்கள் ஆகிய அனைவரும் காணும்படிச்   செல்வாயாக என்ற பொருளே ஏற்புடைத்தாகிறது.

“அழிதக மாஅந்தளிர் கொண்ட போழ்தினான் இவ்வூரார்
தாஅந் தளிர் சூடித் தந்நலம் பாடுப
யாஅந் தளிர்க்கும் இடைச் சென்றார் மீள்தரின்
யாஅம் தளிர்க்குவேம் மன்” (கலித்.- 143)

என்ற பாடலில் ‘இவ்வூரார்’ பெண்களை மட்டுமே குறிக்கிறது. ஏனெனில் யாமரம் தளிர்த்திருக்கும் காட்டுவழிச் சென்றவராகிய தலைவர் மீண்டு வரும்போது நான் பசலை நோய் நீங்கி உடல் நலம் பெறுவேன் என்ற தலைவி; தன் நிலையைப் பிரியாத ஊரார் நிலையுடன் ஒப்பிட்டு உரைக்கிறாள். இதனால் இங்கு ஊரார் பெண்களே ஆகின்றனர். இங்ஙனம்  பெண்டிரைத் தனித்துக் கூறும் பிற பாடல்களும் உள (அகம்.- 95; நற்.- 223)

ஊரார் பற்றிய விமர்சனம்

ஊரார் பேதைமை உடையவர்; ஆரவாரத்துடன் புறம் பேசுபவர்; இரக்கம் இல்லாதவர்; புரியும் திறனற்றவர்; பிறழப் புரிந்து கொள்பவர் என்றெல்லாம் சாடப்படுகின்றனர். அன்பிற்குரிய ஊர் என்று அங்கதச் சுவையுடன்  போற்றப்படுவதும் உண்டு.   .

தலைவனின் ஊரை ஏத்தித் தலைவி பாடினாளாக; ஊரார் குறை கூறுகின்றனர். அவர்கள் அறிவில்லாதவர்கள் என்னும் பொருள்பட;

“அழிவது எவன்கொல் இப்பேதை ஊர்க்கே” (குறுந்.- 89)

என்கிறாள் தோழி.

“……………………………..யான் ஒழிந்து இருத்தல்
நகுதற்கு ஒன்று இவ் அழுங்கல் ஊர்க்கே” (கலித்.- 23)

என்ற பாடற்பகுதியில்; தலைவனைத் தான் பிரிந்து இருக்கும் போது ஊரார் அவளது ஆற்றாமையைக் கண்டு நகுவது மட்டுமின்றி; ஆரவாரத்துடன் கூடிக் கூடிப் பேசுவர் என்று கருத்துரைக்கிறாள் தலைவி. பிற பாத்திரங்கள் வாயிலாகவும் ‘அழுங்கல் ஊரே’ என்னும் தொடர் இடம் பெறும் பாடல்கள் ஏராளம் (நற்.- 63, 203, குறுந்.- 140, 214, 351, 372; ஐங்.- 181; அகம்.- 70, 180, 400)

“…………………………..என் நெஞ்சநோய்
கண்டும் கண்ணோடாது இவ்வூர்….
………………………………இக்காமம்
உணர்ந்தும் உணராது இவ்வூர்” (கலித்.- 140)

என்று தனக்கு இரங்காத ஊர்மக்கள் குறித்துப் பேசுகிறான் தலைவன்.

அவனது கூற்றில் காமஉணர்வைப் புரிந்து கொள்ளாதவராகவும் ஊரார்  விமர்சிக்கப் படுகின்றனர்.

ஊரார் பேச்சு ‘எக்கேடும் கெட்டுப் போகட்டும்’ என்று புறந்தள்ளத் தக்கது என்ற போக்கில் உடன்போகத் துணியும் தலைவி;

“அலர் சுமந்து ஒழிக இவ்வழுங்கல் ஊரே” (நற்.- 149)

என ஊரை விட்டே ஒதுங்குகிறாள்.

வினைவயிற் பிரிந்த தலைவன் குறித்த காலத்தில் மீண்டு வராத வழித்; ‘தன் துன்பத்தைப் பற்றிக் கவலும் ஊரார் தன் தலைவன் சென்ற காட்டுவழி பற்றிக் கவலை கொள்ளவில்லையே’ எனத் தலைவி  புலம்பும்  போது அவர் பிறழப் புரிந்து கொள்பவராக பேசப்படுகிறார்.

“ஈங்கு யான் தாங்கிய எவ்வம்
யாங்கு அறிந்தன்று இவ் அழுங்கல் ஊரே” (குறுந்.- 140)

என்பது தலைவியின் மனக்குறை.

தலைமக்கள் களவொழுக்கம் என்ற ஒருசெய்தி பற்றிப் பேசும்போது; ஒன்றிற்கு மேற்பட்ட பல கோணங்களில் ஊராரின் அலர் கிளைத்துப் பெரிதாகப் பரவுவதால் அங்கதச் சுவையுடன் “மையல் ஊர்” என்று நையாண்டி செய்கிறாள் தோழி (குறுந்.- 374).

ஊரார் பேசுவதைச் சுட்டும் பாத்திரங்கள்

களவுக்காலத் தலைவன், தலைவி, தோழி, கற்புக்காலத் தலைவி,  தோழி, காமக்கிழத்தி எனப் பலரும்; தம்முள்ளும் கண்டோருடனும் ஊரார் பேசியதை எடுத்துச் சொல்கின்றனர்.

களவுக் காலம்

தலைவன் கூற்றில் ஊரார்

தலைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்லும் தலைவன் காட்டு வழிநடை வருத்தம் குறித்துப் பேசும்போது; அவளது ஊரார் எழுப்பிய பேரலர் குறித்த தன் கருத்தைப் புலப்படுத்துகிறான். அவர்கள் செல்லும் வழியானது மேகம் இல்லாது வெளிறித் தோன்றும் ஆகாயத்தினின்று மழை பெய்யாது வறண்டிருப்பினும்; ஆலமர நிழல் குளுமையாய் அயர்ச்சியைப் போக்கும் பெருமை உடையது. ‘நீ இதுவரை காம்பு இற்ற புன்னை மலர்கள் மிகுதியாக உதிர்ந்து தேன்மணம் வீசும் கழிக்கரைச் சோலை மணலில் நடந்து பழகியவள் ஆனாலும்; மிகுந்த அச்சம் தரும்

 “இம்மென் பேரலர் நும்மூர்” (நற்.- 76)

இக்காட்டில் இல்லை. எனவே கல்லில் நடந்து சிவந்த பாதங்கள் நோய் நீங்க ஓய்வெடுத்துச் செல்லலாம்’ என்கிறான். இப்பாடலில் ‘ஊர்’ இடவாகு பெயராய் ஊர்மக்களைக் குறிக்கிறது.

காமமிகுதியால் மடலேற முடிவுசெய்த தலைவன் கண்டோரிடம்;

“………………………………………இக்காமம்
அறிந்தும் அறியாது இவ்வூர்” (கலித்.- 140)

என்று ஊர்மக்கள் குறித்துப் பேசுகிறான்.

தலைவி கூற்றில் ஊரார்

திருமணத்திற்குரிய பொருள் தேடச்சென்ற தலைவன் என் நெஞ்சில் மட்டும் வருகிறானே அன்றி நேரில் வரவில்லை; அத்துன்பத்தினால்    இறப்பதற்கும் அச்சமாக உள்ளது. அதற்கும் மேலாக;

“பிரியா நண்பினர் இருவரும் என்னும்
அலர் அதற்கு அஞ்சினன் கொல்லோ பலருடன்
துஞ்சு ஊர்” (குறுந்.- 302);

என்று தோழியிடம் ஊர்மக்கள் எல்லாம் தூற்றிவிட்டுத் தூங்குவதால் ஏற்பட்ட அச்சமிகுதியைத் தலைவி  ஆற்றாமையோடு புலப்படுத்துகிறாள்.

தோழி கூற்றில் ஊரார்

சிறைப்புறமாக நின்ற தலைவன் கேட்கப் பேசும் தோழி தலைவியது உடற்கூறு மாற்றங்களைக் கூறி வரைவு கடாவுகிறாள்.

“ஊரலர் தூற்றும் கௌவையும் நாணிட்டு
உரையவர்க்கு உரையாம் ஆயினும்” (நற்.- 263);

அடக்கமாட்டாமல் வழிகின்ற கண்ணீர் அவள் நிலைமையை அவனுக்குப் புரியவைத்து விடும் என்கிறாள். நாணத்தால் பேச இயலாதவற்றுள்  ஊரார் சுமத்தும் பழிச்சொல்லும் அடங்குகிறது. தோழி ஊரார் பேசுவதைச் சுட்டும் பிற பாடல்களும் உள (கலித்- 124; அகம்.- 132, 282)

கற்புக்காலம் 

தலைவி கூற்றில் ஊரார்

வினைவயிற் பிரிந்த தலைவன் நீட்டித்த வழி மனமழிந்த தலைவி;

“கன்மிசை மயிலாலக் கறங்கி ஊரலர் தூற்”றுவதைக் (கலி.- 27) குறித்த காலத்தில் அவன் திரும்பி வராமையின் விளைவு என்கிறாள்.

தோழி கூற்றில் ஊரார்

களவுக்காலத்தில் அலர் தூற்றியவரைப் பற்றித் தோழி; திருமணத்திற்குப் பின்னர் தலைவன் மலர் சூடி வருவதைக் கண்டு  முற்றிலும் மாறுபட்டவராய் நாம் வியக்கும்படிப்;

“புதுவதாகின்று அம்ம…
………………..நம் அழுங்கல் ஊரே” (அகம்.- 400) என்கிறாள்.

காமக்கிழத்தி கூற்றில் ஊரார்

ஊர்மக்கள் எல்லாம் பேசும்படி உன்னோடு சேர்ந்து நீர் விளையாட என்ன செய்ய வேண்டும் என்பதைப்;

“பேரூர் அலரெழ நீரலைக்கலங்கி
நின்னொடு தண்புனல் ஆடுதும்” (ஐங்.- 77)

எனத் தொடங்கி ‘உன் இல்லக்கிழத்தியிடம் செல்லாதே என்னுடன் மட்டுமே வா’ என்று தலைவனிடம் பிணை இடுகிறாள் காமக்கிழத்தி.

ஊரார் செயல்கள் 

ஊரார் களவொழுக்கத்தையும், புறத்தொழுக்கத்தையும் பழி கூறுபவராகவும்; அதை அம்பலாக்கித் தம்முள் கமுக்கமாகப் பேசுபவராகவும், வாய்விட்டு வெளிப்படையாக எல்லோரும் தெரிந்து கொள்ளும்படி அலர் தூற்றுபவராகவும் காட்சிப்படுத்தப்படுகின்றனர்.  வினைவயிற் பிரிந்த தலைவன் மீளாதவழி தலைவியை  எண்ணி வருந்துபவராகவும், அவளது காமம் மிகைப்படும் போது எள்ளி நகையாடுபவராகவும்; தலைவனின் புறத்தொழுக்கத்தைக் கண்டு சிரிப்பவராகவும், சாடுபவராகவும் புனைந்துரைக்கப்படுகின்றனர்.

ஏறு தழுவி வெற்றி பெற்ற  தலைவனையும் தன்னையும் சேர்த்து ஊரார் முன்னரே அலர் தூற்றினர் என்பதை;

“………………………….பொதுவனோடு எண்ணி
அலர் செய்து விட்டது இவ்வூர்” (கலித்.- 105)

எனவும்; இனி திருமணத்திற்குத் தடை இல்லை என்பதால் அது பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை எனவும் கூறுகிறாள். இங்ஙனமே தம் களவு வெளிப்பட்டதைத் தலைவி எடுத்துச் சொல்லும் பிற பாடல்களும் உள (ஐங்.- 113; குறுந்.- 262).

 பிரிவால் மெலிந்த தன் நிலை கண்டு ஆற்றாத தோழியிடம் தலைவி

“………………………பன்னாள்
இவ்வூர் அம்பல் எவனோ” (அகம்.- 249);

எனத் தலைவனோடு தான் கொண்ட களவை ஊரார் கமுக்கமாகப் பேசியதைச் சுட்டித் தனது தற்போதைய இரங்கத்தக்க நிலையையும் கூறி வருந்துகிறாள்.

வினைவயிற் பிரிந்த தலைவன் சென்ற நெறி எறும்பின் வளைகளைப் போன்ற குறிய பல சுனைகளை உடையது. கொல்லனது உலையில் உள்ள பட்டடைக்கல் போன்ற வெம்மையான பாறைகளை உடையது. வளைந்த வில்லை உடைய வேடர் அக்கல்லில் தம் அம்புகளைத் தீட்டிக் கூர்மை ஆக்குவர். கவர்த்த வழிகளை உடையது.

“எறும்பி அளையில் குறும்பல் சுனைய
உலைக்கல் அன்ன பாறை ஏறிக்
கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத்து என்ப அவர் சென்ற ஆறே
அதுமற்று அவலம் கொள்ளாது
நொதுமற் கவலும் இவ் அழுங்கல் ஊரே” (குறுந்.- 12)

அப்பாலை வழியின் ஏதத்தைப் பற்றிக் கவலையுறாமல் தனது தனிமைத் துன்பத்தை எண்ணிக் கவல்கின்றனரே என்பதைத் தலைவி இப்பாடலில் விளக்குகிறாள்.  தன் காமக்கிழத்தியிடம்  தனது பரத்தமையை ஒளித்துப் பேசிய தலைவனைப் பார்த்து அவள்; ஊர்மக்கள் சிரித்துச் சாடுவதை

“ஊரவர் உடன்நகத் திரிதரும்
தேர் ஏமுற்றன்று” (கலித்.- 74);

என்கிறாள். அவனைப் பரத்தையரிடம் தேரில் கொண்டு சேர்க்கும் தேர்ப்பாகன் பித்தேறி இருக்கிறானோ எனக் கேட்பதற்குப் பதிலாக தேர்பித்தேறி இருக்கிறதோ எனக் கேட்டுச் சினத்தை வெளிப்படுத்துகிறாள்.

தன் கணவனின் புறத்தொழுக்கத்தை அறிந்து ஊரார் பழி தூற்றுவதைத் தலைவி அவனிடமே;

“ஊரவர் கௌவை உளைந்தீயாய்” (கலித்.- 95);

எனக் கேட்கிறாள்.

ஊரார் பேச்சின் விளைவுகள்

ஊரார் பேச்சினால் மகிழ்ச்சி, பழி, பெருமை, நாணம் கைவிடல் எனப் பலதரப்பட்ட விளைவுகளைப் பாடல்களில் தெரிந்தெடுக்க இயல்கிறது.

தமரும் சுற்றத்தாரும் சேர்ந்து செய்ய வேண்டிய வதுவையை ஊராரின் அலர் செய்து விட்டது எனத் தலைவி மகிழ்ந்து கூறுவதாக;

“………….. நெடுந்தகை திறத்து இவ்வூர்
இனையள் என்று எடுத்து ஓதற்கு….
….நம் வதுவையுள் தமர் செய்வது இன்று ஈங்கே
தான் நயந்து இருந்தது இவ்வூராயின்” (கலித்.- 76)

என்னும் பாடற்பகுதி அமைகிறது. அவனுக்கும் அவளுக்கும் இடையில் இருந்த உறவு பற்றிய ஊராரின் பேச்சு தலைவி தலைவனைச் சேர உதவியது என்கிறாள். இது போல் அம்பலின்  விளைவு திருமணம் நடக்க ஏதுவாகும் மகிழ்ச்சி எனும் பொருள்பட அமையும் பாடல்களும் உள (குறுந். – 51).

மடலேறத் துணியும் தலைவன் அச்செய்கை தலைவிக்குப் பழியேற்படுத்தும் என்பதை;

“……………………………………………முன்னின்று
அவள் பழி நுவலும் இவ்வூர்” (குறுந்.- 173)

என ஊராரின் மேலேயே ஏற்றிக் கூறுகிறான். இங்கு ஊரார் பேச்சு தலைவி மேல் பழி சுமத்தும் என்று முன்மொழிகிறான் தலைவன்.

ஏறு தழுவித் தன் வீரத்தையும், வலிமையையும் நிலைநாட்டிய தலைவனை எண்ணிப் பார்க்கும் தலைவிக்கு;

“கொல்லேறு கொண்டான் இவள் கேள்வன் என்று ஊரார் சொல்லும் சொல்” (கலித்.- 106)

அளவிலாப் பெருமையைத் தோற்றுவித்தது. இங்கு ஊரார் பேச்சின் விளைவு பெருமை ஆகும்.

ஊரலரைத் தாங்கவியலாமல் உடன்போகத் துணியும் தலைவி;

“சேணும் எம்மொடு வந்த
நாணும் விட்டேம் அலர்க இவ்வூரே” (நற்.- 15)

எனக் காலம்காலமாகத் தாங்கி வந்த நாணத்தை விட்டொழிக்கிறாள்.

ஊரார் பேச்சின் தன்மை

ஊரலரின் தன்மை காய்ந்த தட்டையில் தீப் பரவுவது போன்றது; தூக்கணாங்குருவியின் கூடு போன்றது; ஒரோவழி அறத்திற்கு முரண்பட்டு நின்றதையும் தோழி சுட்டிக்காட்டத் தவறவில்லை.

பிரிந்து சென்ற கணவன் காலம் கடந்தும் மீண்டு வரவில்லை என்ற ஊராரின் அங்கலாய்ப்பு தட்டை தீப்பற்றி எரிவது போல் பரவியது.

“விட்டுச் சென்றனர் காதலர்
தட்டைத் தீயின் ஊரலர் எழவே” (ஐங்.- 340)

என்கிறாள் தலைவி. இங்கு அலர் பரவும் வேகம் தீயின் வேகத்தோடு உவமிக்கப்படுகிறது.

தூக்கணங்குருவியின் கூடு எவ்வளவு நுட்பத்துடனும் திறனுடனும் கட்டப்படுகிறதோ அதே நுட்பத்துடனும் திறனுடனும் ஊரார் அலர் அமைந்துள்ளது என்கிறாள் தோழி.

“முடங்கல் இறைய தூக்கணங் குரீஇ….
கூடினும் மயங்கிய மையல் ஊரே” (குறுந்.- 374)

என்னுமிடத்து உயர்ந்த பனைமரத்தில் தொங்கும் பலதிறப்பட்ட வினைத்திறன் மிகுந்த வியப்புக்குரிய கூடு; ஒருவழிப்படாது பல உத்திகளின் விளைவாகப் பின்னப்பட்டு இருத்தலான்; பல்லாற்றானும் மயங்கி அலர் தூற்றும் ஊருக்கு உவமை ஆயிற்று எனலாம். அறத்தொடு நிற்கும் தோழி ஊரார் பேசுவதையே துணைக்கு அழைக்கிறாள். வேற்று வரைவின் போது;

“பூக்கெழு துறைவனை என்னை என்னும் யாமே இவ்வூர்
பிறிதொன்றாகக் கூறும்” (ஐங்.- 110)

எனும் போது; ஊராரின் பேச்சு தலைவிக்கு உரிய தலைவன் யாரென்று சரியாகச் சொல்லவில்லை எனத் தாயிடம் கூறிச் சரியான தலைவன் யாரென்று புரியவைக்கிறாள். இங்கு ஊரார் பேச்சு அறத்தோடு முரண்பட்டிருக்கிறது.

ஊரார் எனும் சிறுபாத்திரத்தின் பயன்கள்

சிறப்பான காலப்பின்புலத்தைத் தோற்றுவிக்கவும், பொருத்தமான முழுமையான விளக்கங்களுக்காக உவமைகளைப் படைக்கவும், முரண் அழகைச் சேர்த்துப் புனையவும், ஊடலை வெளிப்படுத்தி வெறுப்பைக் காட்டவும்  ஊரார் என்னும் சிறுபாத்திரம் பயன் கொள்ளப்படுகிறது.

“கழுது கால்கிளர ஊர் மடிந்தன்றே” (நற்.- 255)

என விளக்கம் பெறும் இரவுக்குறிக்கு; ‘ஊரார் அனைவரும் தூங்க பேய் நடமாடும்பொழுது’ என்பது சிறப்பான காலப் பின்புலத்தைத் தோற்றுகிறது.

“ஏழூர்ப் பொதுவினைக்கு ஓரூர் யாத்த
உலைவாங்கு மிதிதோல் போலத்
தலைவரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சே” (குறுந்.- 172)

என்ற உவமையில் விளக்கம் பெறுவது தலைவியின் மனநிலை. ஏழு ஊர்களில் உள்ள மக்களின் தேவைகளையும் ஓரூரில் உள்ள கொல்லன் ஊதுலை நிறைவு செய்யுங்கால்; அந்த உலைக்குரிய தோலாலான காற்றுத் துருத்தி எவ்வளவு மிகுதியாக மிதிபடுமோ; அவ்வளவு மிகுதியாக என் மனம் துன்புறுகிறது என்கிறாள் தலைவி. இங்கு பொருத்தமான விளக்கத்திற்கு ஊரார் உவமையாகப்  பயன்பட்டுள்ளனர்.

தலைவன்  தலைவியைச் சந்திக்க இரவுக்குறியே ஏற்றது என்பதை

“கொன்னூர் துஞ்சினும் யாம் துஞ்சலமே” (குறுந்.- 138)

எனக்கூறும் தோழி ஊர் மக்களின் தூக்கத்தையே ஏற்ற சூழல் ஆக்குகிறாள்.

இப்படி  ஊரார் தூங்கத் தாம் தூங்காமை பற்றிய கூற்றுகள் பாடல் புனைவுக்கு முரண் தொடையாய் அமைந்து அழகு சேர்க்கின்றன. புறத்தொழுக்கத்தில் தோய்ந்த தலைவன் மேல் ஊடல் கொண்ட காமக்கிழத்தி அவனை வசைபாடுங்கால் சுடுசொல் கூற; ‘பரத்தையரின் எயிறு அழுந்திய உன்  இதழை’

“…………………………………………..ஊரவர்
ஆடைகொண்டு ஒலிக்கு நின் புலைத்தி காட்டென்றாளோ”

(கலித்.- 72); என இகழ்ந்து பேசுகிறாள். இங்கு வெறுப்பைக் காட்ட ஊரார் ஆடையைத் துவைக்கும் புலைத்தியை எடுத்தாள்கிறாள்.

ஊரார் உறக்கமும் விழிப்புணர்வும் தன் காதல்நோய் மிகுதியால் தூங்காத தலைவி கூற்றில் தூங்கும் ஊர் சாடப்படுகிறது.

“………………………………………………………என்
உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே” (குறுந்.- 28);

என்பது ஆற்றாத தலைவி கூற்று.

“……………………………..ஊர்துஞ்சு யாமத்”தில்  (நற்.- 262);

அவள் துன்புறுவாள் என்று எண்ணிப் பிரிவைத் தள்ளிப்போடும் தலைவன் கூற்றில் ஊரின் தூக்கம் தலைவியின் துன்பத்தைத் தெளிவாக உணரவைக்கும் பின்புலமாகிறது.

இற்செறிப்பின் போது இரவில் கேட்கும் பறவை ஒலி கூடத் தன்  தலைவன் தேர் ஓசையோ என்று பயந்து புலம்பும் தலைவி

“ஊர்மடி கங்குலும் துயில் மறந்ததுவே” (நற்.- 287);

என ஊரார் தூங்கும் போதும் தான் விழித்திருந்த சோகத்தை நொந்து உரைக்கிறாள். ஆனால் இப்படித் துயில்வதாகச் சொல்லும் ஊரார் களவொழுக்கத்தை முளையிலேயே அடையாளம் கண்டுவிடுவதையும் இதே பாத்திரங்கள் உரைக்கின்றன.

இரவுக்குறியில் தலைவியைச் சந்தித்து விடியுமுன் சென்ற தலைவனின் கால் தடம் புலருமுன் ஊரார் அலர் தொடங்கி விட்டமையை;

“புலர் பதம் கொள்ளா அளவை
அலர் எழுந்தன்று இவ்அழுங்கல் ஊரே” (குறுந்.- 372) எனத் தோழி உரைக்கிறாள்.

களவு  தொடங்கியவுடன் கௌவை, அம்பல், அலர் என்று மூன்று நிலைகளில் சொல்லாற்றிய ஊராரைப் பார்க்கிறோம்.

“யாமத்து அலர்வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றிப்
புரையில் தீமொழி பயிற்றிய உரை எடுத்து
ஆனாக் கௌவைத்தாகத்
தான் என் இழந்தது இவ் அழுங்கல் ஊரே” (நற்.- 36)

தோழி தலைவன் இரவுக்குறியில் சிறைப்புறமாக நிற்க; அவனைத் திருமணத்திற்குத் தூண்டுவாளாய்ப் பேசும்போது; ஊராரால் தலைவிக்கு ஏற்படும் இன்னல்கள் இவை என்று வரிசைப்படுத்துகிறாள். எதை இழந்ததால் ஊரார் இப்படிப் பேசுகின்றனர் என்று வினவுகிறாள்.

ஊரார் பேச்சின் நோக்கம்

ஊராரின் பேச்சு எதை நோக்கி அமைகிறது என்று முடிபாக அறிவதே அப்பாத்திரத்தின் பெறுமதியைக் காட்டக்கூடியதாக அமையும். அது ஒரு பெண்ணின் களவொழுக்கம் அதே ஆணுடன் திருமணத்தில் முடிய வேண்டும் என்ற கொள்கையை நிலைநாட்டும் நோக்கோடு அமைந்துள்ளது. களவொழ்க்கத்தில் ஈடுபடுபவரை ஊரார் வெறுக்கவும் இல்லை. இல்லறத்திற்கு ஊறு நேர்வதை ஊரார் விரும்பவும் இல்லை.

களவை இனம்காணும் ஊராரைக் காட்டிப் பேசுகின்றாள் தலைவி.

“எல்லி வந்தன்றோ தேர் எனச் சொல்லி
அலர் எழுந்தன்று இவ்வூரே” (நற்.- 191). அதிகாலையில் தேர் வந்த ஒரு காரணம் காட்டி ஊராரின் அலர் மிகுந்தது என்பது தோழியிடம்  தலைவியின் புலம்பலாகும்.

களவு திருமணத்தில் முடிந்தவுடன் அமைதியுறும் ஊராரைப் பற்றித் தோழியும்;

“இனியது கேட்டு இன்புறுக இவ்வூரே….
….ஆய்நுதற் கிழவனும் அவனே” (குறுந்.- 34);

என்று தலைவியிடம் கூறுகிறாள். இனி தாயர் வசையும், தந்தை மறுப்பும், தனிமைத் துயரும் இல்லை  என்பதோடு; ஊராருக்குத் தலைவி அதே களவுக்காலத் தலைவனை மணக்கப் போகிறாள் என்பது மிகுந்த இன்பம் கலந்த நிறைவைக்கொடுத்தது என்பது நோக்கத்தக்கது. வினைமுடித்து மீளாத தலைவனை எண்ணிக்  காமமிகுதியால் ஒரு பெண் பெருந்திணைக் குரல் கொடுத்தால் ஊரார் அவளைப் பார்த்துச் சிரித்துத் தூற்றுகின்றனர். அதனால் தான் பாதிக்கப்பட்ட தலைவி;

“நகான்மின்…………………நுமக்கு எவன் போலுமோ ஊரீர்”

(கலித்.- 145) என்று சண்டை போடுபவள் போல் பேசுகிறாள். அந்தச் சண்டையில் இரு தரப்பினருக்கும் இருந்த புரிந்துணர்வே வெளிப்படுகிறது.

உடன்போன தலைவியின் மேல் மிகுந்த அன்பு ஊராருக்கு உள்ளது. அதனால் தான்;

“சுரநனி இனிய ஆகுகஎன்று
நினைத்தொறும் கலிழும் என்னினும்
மிகப் பெரிது புலம்பின்று தோழி நம் ஊரே” (ஐங்.- 398);

என உடன்போக்கிற்குப் பிறகு தலைவியைச் சந்திக்கும் தோழி ஊராரின் பாசம் பற்றிப் பேசுகிறாள். ‘நான் அழுததை விட ஊரார் மிகுதியாக அழுதனர்’ என்று தோழியே சான்றளிக்கிறாள்.

வினைவயிற் பிரிந்தவன் வரத் தாமதமானாலும் தலைவி மேல் இரக்கம் கொண்டு தலைவனைப் பழிக்கின்றனர். அதனால் தான்;

“அவர் திறத்து இரங்கும் நம்மினும்
நம்திறத்து இரங்கும் இவ் அழுங்கல் ஊரே” (குறுந்.- 289);

எனத் தலைவி அரற்றுகிறாள். இனிய இல்லறத்திற்கு ஊறு நிகழ்வதை எக்காரணத்தானும் ஊரார் சகிப்பதில்லை என்பதற்கு இக்கூற்று ஆதாரமாகிறது.

ஊராரின் இந்நோக்கத்தை நன்கறிந்ததால் தான் தலைவன் தான் தலைவியைக் கூடியதை; அவளது மார்பில் தொய்யில் எழுதியதைத்  தயக்கமின்றி அரசவையில் சொல்லத் துணிகிறான்.

“………………………………..எழுதிய
தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்
முறையுடை அரசன் செங்கோல் அவையத்து
யான் தற்கடவின் யாங்காவது கொல்
பெரிதும் பேதை மன்ற
அளிதோ தானே இவ் அழுங்கல் ஊரே” (குறுந்.- 276)

எனப் பெற்றோரையும் ஊராரையும் பேதையர் என்கிறான்.

முடிவுரை

ஊரார் என்பது ஆண், பெண் இருபாலரையும் பொதுப்படக் குறிக்கும்  பலர்பாலுக்குரிய சொல் ஆகும். பெண்களை மட்டும் வேறுபிரித்துச் சுட்டும் இடங்களில் அது விதந்து கூறப்பட்டுள்ளது. ஊரார் பேதைமை உடையவர்; ஆரவாரத்துடன் புறம்பேசுபவர்; இரக்கமில்லாதவர்; புரியும் திறனற்றவர்; பிறழப் புரிந்து கொள்பவர் என்றெல்லாம் சாடப்படுகின்றனர். அன்பிற்குரிய ஊர் என்று நையாண்டி செய்யப்படுவதும் உண்டு. களவுக்காலத் தலைவன், தலைவி, தோழி, கற்புக்காலத் தலைவி,  தோழி, காமக்கிழத்தி எனப் பலரும்; தம்முள்ளும் கண்டோருடனும் ஊரார் பேசியதை எடுத்துச் சொல்கின்றனர்.

ஊரார் களவொழுக்கத்தையும், புறத்தொழுக்கத்தையும் பழி கூறுபவராகவும்; அதை அம்பலாக்கித் தம்முள் கமுக்கமாகப் பேசுபவராகவும், வாய்விட்டு வெளிப்படையாக எல்லோரும் தெரிந்து கொள்ளும்படி அலர் தூற்றுபவராகவும் காட்சிப்படுத்தப்படுகின்றனர்.  வினைவயிற் பிரிந்த தலைவன் மீளாதவழி தலைவியை  எண்ணி வருந்துபவராகவும், அவளது காமம் மிகைப்படும் போது எள்ளி நகையாடுபவராகவும்; தலைவனின் புறத்தொழுக்கத்தைக் கண்டு சிரிப்பவராகவும், சாடுபவராகவும் புனைந்துரைக்கப்படுகின்றனர். ஊரார் பேச்சினால் மகிழ்ச்சி, பழி, பெருமை, நாணம் கைவிடல் எனப் பலதரப்பட்ட விளைவுகள் ஏற்படுகின்றன. ஊரார் பேச்சின் தன்மை காய்ந்த தட்டையில் தீப்பரவுவது போன்றது; தூக்கணங்குருவிக்கூடு போன்றது. சிறப்பான காலப்பின்புலத்தைத் தோற்றுவிக்கவும், பொருத்தமான முழுமையான விளக்கங்களுக்காக உவமைகளைப் படைக்கவும், முரண் அழகைச் சேர்த்துப் புனையவும், ஊடலை வெளிப்படுத்தி வெறுப்பைக் காட்டவும்  ஊரார் என்னும் சிறுபாத்திரம் பயன் கொள்ளப்படுகிறது. துயில்வதாகச் சொல்லப்படினும் ஊரார் களவொழுக்கத்தை முளையிலேயே அடையாளம் கண்டுவிடுகின்றனர். ஊராரின் பேச்சு ஒரு பெண்ணின் களவொழுக்கம்; அதே ஆணுடன் திருமணத்தில் முடிய வேண்டும் என்ற கொள்கையை நிலைநாட்டும் நோக்கோடு அமைந்துள்ளது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *