கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 4

-மேகலா இராமமூர்த்தி

காட்டில் தவமியற்றும் முனிவர்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகவும் தீங்கிழைக்கும் கொடியவளாகவும் இருந்துவந்தாள் தாடகை எனும் அரக்கி. அவளை அழித்துத் தாம் செய்யவிருக்கும் தவ வேள்வியைக் காத்தற்பொருட்டே தயரதனின் அனுமதியோடு இராம இலக்குவர்களைக் காட்டிற்கு அழைத்துவந்திருந்தார் விசுவாமித்திர முனிவர்.

தாடகையின் வரலாற்றை விரிவாக அவர் இராமனுக்கு எடுத்துரைத்துக்கொண்டிருந்தபோதே அவள் அப்பகுதியில் தோன்றினாள். கோபத்தால் நெறித்த புருவத்தோடும், தீ உகுக்கும் கண்களோடும் அவர்கள் மூவரையும் நோக்கிய அவள், தன் கையிலிருந்த சூலத்தால் அவர்களைக் குறிபார்த்தபடி உங்களை ஒழித்துக்கட்டி விடுகின்றேன் என்று கர்ஜித்தாள். அப்போது, பெண்ணான அவளோடு போர்புரிவது போர்நெறிக்குப் புறம்பானது என்றெண்ணிய இராமன் அவளைத் தாக்குவதற்குத் தயங்கிநின்றான்.  

அவன் உளக்குறிப்பை உணர்ந்த விசுவாமித்திரர், ”இராமா! உலகிலுள்ள அத்தனை தீமைகளையும் ஒன்றுவிடாமல் செய்துவரும் இவள், முனிவர்களாகிய எங்களைச் சாரமற்ற சக்கை எனக்கருதியே உண்ணாமல் விட்டுவைத்திருக்கின்றாள். அஃது ஒன்றுதான் குறை! இக்கொடியவளை என்னவென்று எண்ணுவது? பெண்ணென்றா இவளை எண்ணுகிறாய்? இவள் பெண்ணே அல்லள்! என்று சொல்லித் தாடகையைக் கொல்லுமாறு இராமனை ஏவுகின்றார்.

தீது என்றுள்ளவை யாவையும் செய்து எமைக்
கோது என்று உண்டிலள்
 இத்தனையே குறை
யாது என்று எண்ணுவது இக் கொடியாளையும்
மாது என்று எண்ணுவதோ மணிப் பூணினாய்.
(கம்ப: தாடகை வதைப் படலம் – 397)

அதைக்கேட்ட இராமன், “ஆசானாகிய நீர் சொல்வதைச் செய்வது என் கடன்” என்றுரைத்துத் தாடகைமீது தாக்குதல் நடத்தத் தொடங்குகின்றான். தாடகைக்கும் இராமனுக்கும் கடும்போர் நடக்கின்றது. இறுதியில் தாடகை வீழ்ந்துபடுகின்றாள்.

அதைத்தொடர்ந்து சித்தாஸ்ரமம் என்ற இடத்தில் விசுவாமித்திரர் தம் வேள்வியைத் தொடங்குகின்றார். மீண்டும் அரக்கர்களால் ஏற்பட்ட தொல்லைகளை இராமன் முறியடிக்க, தம்முடைய ஆறுநாள் வேள்வியை ஊறின்றி வெற்றிகரமாய் முடித்துவிட்டு இராம இலக்குவர்களோடு புறப்படுகின்றார் விசுவாமித்திரர். அவர்கள் விதேக நாட்டை நோக்கித் தம் பயணத்தைத் தொடர்ந்தனர் இப்போது.

வழியில் ஒரு பெரிய கருங்கல்லைக் கண்டனர் மூவரும். காகுத்தனான இராமனின் கால் துகள் அக்கல்லின்மீது பட, தன் கணவரான கௌதம முனிவரின் சாபத்தால், ஆங்கே கல்லாய்க் கிடந்த அகலிகை மீண்டும் தன் முந்தைய நல்லுருவம் பெற்றுப் பெண்ணாய் எழுந்தாள். அவளின் வரலாற்றை இராமனுக்கு விளக்கிய விசுவாமித்திர முனிவர், இராமனின் கைத்திறத்தையும் கால்திறத்தையும் எண்ணிவியந்து,

“மழைவண்ணத்து அண்ணலே! நீ இவ்வுலகிலே பிறந்து தீயவரை அழித்து நல்லவர்களைப் பாதுகாப்பது என்ற நிலை ஏற்பட்டபிறகு, இவ்வுலகிலுள்ள உயிர்களுக்கெல்லாம் துன்பம்நீங்கிக் கடைத்தேறும் வழியே அல்லாது, துயர் வருமோ? வனத்தில், கருநிறத்தையுடைய தாடகை என்னும் அரக்கியோடு நீ செய்த போரில் உன் கையின் திறத்தினை (வில்லாற்றல்) கண்டேன்; இந்த இடத்தில் உன் திருவடியின் திறத்தினை (அகலிகையை உயிர்ப்பித்தது) கண்டேன்” என்கிறார்.  

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
   இனி இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்று ஓர்
   துயர் வண்ணம் உறுவது உண்டோ
மை வண்ணத்து அரக்கி போரில்
   மழை வண்ணத்து அண்ணலே உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்
   கால் வண்ணம் இங்குக் கண்டேன். (கம்ப: அகலிகைப் படலம் – 559)

இந்தப் பாடலின் சொன்னயத்தில் சொக்கிய கவியரசு கண்ணதாசன், ஓர் திரைப்படப் பாடலில் வண்ணம் வண்ணம் என்று வரிசையாக வரும் வண்ணம் சொற்களை அமைத்தார். அப்பாடல்தான்,

”பால்வண்ணம் பருவம்கண்டு
வேல்வண்ணம் விழிகள்கண்டு
மான்வண்ணம் நான்கண்டு வாடுகிறேன்!

கண்வண்ணம் அங்கே கண்டேன்
கைவண்ணம் இங்கே கண்டேன்
பெண்வண்ணம் நோய்கொண்டு வாடுகிறேன்”
என்று செல்லும் ’பாசம்’ தமிழ்த்திரைப்படப் பாடல்!

விசுவாமித்திர முனிவரோடு இராம இலக்குவர்களின் நடைப்பயணம் தொடர்ந்தது. மிதிலை நகரத்துக்கு அருகில் அவர்கள் வந்துபோது, அங்கே மதிலில் தொங்கவிடப்பட்டிருந்த கொடிகள் காற்றில் அசைந்துகொண்டிருந்தன. அதைக்கண்ட கம்பநாடர் அதன்மீது ஓர் அழகிய கற்பனையைப் படரவிட்டார். அஃது ஓர் அருமையான பாடலாய் மலர்ந்தது!

மையறு மலரின் நீங்கி
   யான்செய் மா தவத்தின் வந்து
செய்யவள் இருந்தாள் என்று
   செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக்
   கடிநகர் கமலச் செங் கண்
ஐயனை ஒல்லை வா என்று
   அழைப்பது போன்றது அம்மா. (கம்ப: மிதிலைக் காட்சிப் படலம் –  564)

”காற்றில் மிதிலையின் கொடிகள் அசைவது, குற்றமற்ற தாமரை மலரைவிட்டு நான் புரிந்த மாதவத்தால் என்னிடம் பிறந்துள்ளாள் திருமகள்; அவளை மணந்துகொள்ள விரைந்துவா என்று அழகிய கொடிகளெனும் கைகளை அசைத்து மிதிலா நகரம் கமலச்செங்கண் ஐயனாகிய இராமனை அழைப்பது போலிருந்தது” என்கிறார் கம்பர்.

இவ்வாறு கவிஞர்கள் தம் சொந்தக் கருத்தை இயற்கை நிகழ்வுகளின்மீது ஏற்றியுரைப்பதற்குத் ’தற்குறிப்பேற்ற அணி’ என்று பெயர்.

ஈதொத்த சிந்தனையை நாம் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்திலும் காணலாம். கோவலனும் கண்ணகியும் மதுரைக்குள் நுழையுமுன் மதுரை மதிலின்மீதிருந்த கொடிகள், இங்கே வராதீர்கள் என்பதுபோல் கைகளை மறித்துக் காட்டி அவர்களைத் தடுத்தன என்பார் இளங்கோவடிகள்.

போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல்என் பனபோல் மறித்துக்கை காட்ட…
(சிலப்: 13: 189-190) 

இளங்கோவின் சிந்தனைத் தாக்கமாகக் கம்பரின் இந்தக் கற்பனையை நாம் கருதலாம்.

நெடுங்காலம் கோசல நாட்டுமக்களுக்கு நல்லாட்சி நல்கிய தயரத மன்னன், தன் முதுமை காரணமாகத் தளர்வுறுகின்றான். ஆதலால் அரசாட்சியெனும் சுமையைத் தன் மூத்த மகன் இராமனின் தோளில் இறக்கிவைத்து இளைப்பாற எண்ணியவன், அதுகுறித்து ஆலோசிப்பதற்காகத் தன் அமைச்சர்களை வரவழைத்தான். அவர்களிடம் தன் உளக்கருத்தை வெளியிடுமுன் வாழ்க்கையின் இயல்புகுறித்த தன் எண்ணத்தைப் புலப்படுத்தும் வகையில்,

“இப்பிறப்பிலே எவர்க்கும் சாவு உண்டு எனும் உண்மையை மறத்தலைவிடக் மனிதர்கட்குக் கெடுதல் தருவது வேறில்லை. (ஆசைகளை) துறத்தல் எனும் மிதவையே உதவிசெய்யாவிட்டால் பிறப்பு எனும் பெரிய கடலினின்று தப்புதல் இயலுமோ?” என்று அவர்களைப் பார்த்து வினவுகின்றான்.

இறப்பு எனும் மெய்ம்மையை
    இம்மை யாவர்க்கும்
மறப்பு எனும் அதனின்மேல் கேடு
    மற்று உண்டோ
துறப்பு எனும் தெப்பமே
    துணை செய்யாவிடின்
பிறப்பு எனும் பெருங் கடல்
     பிழைக்கல் ஆகுமோ.  (கம்ப: அரசியற் படலம் – 1419)

”பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.”
(10)

என்று வள்ளுவர் விளம்பியதைப் போலவே பிறப்பு எனும் பெருங்கடல் என ஈண்டு கம்பரும் மொழிந்திருக்கக் காண்கின்றோம்.

மனிதர்களின் யாக்கை, உயிர், இளமை, செல்வம் ஆகிய நான்கும் நிலையாத் தன்மை உடையன என்பது தமிழ் நூல்கள் நமக்குணர்த்தும் உண்மையாகும். இங்கே தயரதனும் மானுட வாழ்வின் நிலையாமையை உணர்ந்தவனாக, ”இறப்பதற்கு முன்பே பற்றறுப்பதே பிறப்பறுப்பதற்கான உற்றவழி; ஆதலால் அயோத்தி அரசாட்சியை இராமனுக்கு அளித்துவிட்டு அறியாமையால் வரும் இப்பிறவி நோயை நீக்குதற்பொருட்டுத் தவம் மேற்கொள்ளுதற்காக நான் கானகம் செல்ல விழைகின்றேன்; இதுகுறித்து நும் கருத்து யாது?” என்று அமைச்சர் பெருமக்களை வினவினான்.

தயரதனின் கருத்துக்கு அமைச்சர்கள் இசைவு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து தயரதனின் ஆசானும் குலகுருவுமான வசிட்டர், இராமன் முடிபுனைதல் குறித்த, தம் எண்ணத்தை உரைக்கலானார்…

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

  1. கம்பராமாயணம் – கோவை கம்பன்  அறநிலை விளக்க உரைக்குழு.
  2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
  3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

 

 

Leave a Reply

Your email address will not be published.