Author: admin

  • (Peer Reviewed) தவத்தால் வாழ்க்கை பிரகாசிக்கும்

    (Peer Reviewed) தவத்தால் வாழ்க்கை பிரகாசிக்கும்

    க.ரங்கநாதன்,      

    முனைவர் பட்ட ஆய்வர்

    யோகமும் மனித மாண்பும் துறை

    பாரதியார் பல்கலைக்கழகம்

    கோவை

    முனைவர் பெ.சுந்தரமூர்த்தி

    நெறியாளர்

    யோகமும் மனித மாண்பும் துறை

    விஷன் ஸ்கை ஆராய்ச்சி மையம்

    ஆழியாறு, பொள்ளாச்சி

    சுருக்கம்:

    உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல நோக்கங்களை தமக்குள் அமைத்துக் கொள்கின்றனர். தனது இலக்கிற்கு ஏற்ப செயல்பாடுகளை வகுத்துக் கொள்வதுதான் சிறப்பான வாழ்க்கையாகும். பலருக்கு செல்வத்தைச் சேமித்துக் கொள்வதாக அமைகின்றது. சிலருக்குக் கல்வியில் ஆர்வம் கொண்டு கற்றுணர்ந்து தேர்ந்து படைப்பாளியாவது நோக்கமாகின்றது. வெகுசிலருக்கே தவம் பயின்று ஆன்மீகத்தில் முன்னேறுவது ஆர்வமாகின்றது. அனைத்து மதங்களிலும், தன்னை அறிந்து இயற்கையின் பேரறிவை உணர்ந்துகொள்ள யோகப் பயிற்சிகள் அவசியமாகின்றன.

    (கலைச் சொற்கள்: அன்னமயகோசம் – மனம் உணவைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பது,     பிரத்தியாகாரா   – பற்றற்ற மனநிலை, தாரணா     -ஒருநிலைப்படுத்துதல்,         ஏழு ஆதாரங்கள் – மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம்,  விசுக்தி, ஆக்கினை, துரியம், மானோமனநிலை – புலன் வயப்பட்ட மனநிலை)

    முன்னுரை:

    தவம் என்பது மனத்திற்கான பயிற்சி ஆகும். நீண்ட காலமாக மனித குலம் மனத்திற்கு முறையான பயிற்சிகளைக் கொடுத்து மனத்தைச் செம்மையாக்கி வருகிறது. முற்காலத்தில் குருகுலத்தில் மாணாக்கர்களுக்கு சுவாசப் பயிற்சிகளோடு தியானம் கற்றுத் தரப்பட்டது. ஆதிகாலத்தில் மகளிர் தவமுறைகளை கற்றுக்கொள்ள ஊக்குவிக்கப்படவில்லை. தற்காலத்தில் வேதாத்திரி மகரிஷி அவர்களால் தீட்சை முறையில் மகளிருக்கும் கற்றுத் தரப்படுகின்றன.

    அன்னமய கோசத்திலே மனம் சுழன்று வாழ்ந்து வரும் மக்கள், புலன் இச்சைக்கு உட்பட்டு, வேண்டாத அறுகுணங்களில் மூழ்கி விடுகின்றனர். அதனால் ஏற்படும் பிராராப்த வினைகளிலிருந்து மீட்டுக்கொள்ள தவங்களை மேற்கொள்வது அவசியமாகிறது. ஆசானின் உயிராற்றலையும் தன் உயிராற்றலோடு இணைத்துக்கொண்டு தவப்பயிற்சிகள் அளிக்கப்பட்டன. யோகியர் பிரத்தியாகார மற்றும் தாரணா பயிற்சிகளுடன் உயர்ந்து சமாதி நிலையை அடைந்தனர்.

    மனத்தை ஓரிடத்தில் நிலை நிறுத்துவதே தவம் எனப்படுகின்றது. தவம் மற்றும் அதைச் சார்ந்த யோகப் பயிற்சிகளுக்கு மனமே பயிற்சிக் கூடமாகவும், விளை நிலமாகவும் அமைகின்றது. விளக்குச் சுடரின் மீதோ ஒரு புள்ளியின் மீதோ தனது பார்வையைச் செலுத்துவதே ஒருமைப்படுத்துதல் ஆகும். உடலையும் உயிரையும், உயிரையும் மனத்தையும், மனத்தையும் அறிவையும், அறிவையும் பேரறிவோடும் இணைத்து லயமாவது தியானத்தின் சிறப்பம்சங்களாகும். ஒரு தியான ஆசனத்தில் அமர்ந்து இரு கண்களும் மூடிய நிலையில் சுவாசத்தை ஒழுங்குபடுத்தி நிலைத்து நிற்பதே தவத்தின் முக்கிய அம்சமாகும்.

    “யோகத்தைப் பயில, தனிமையான இடத்திற்குச் சென்று நிலத்தில் தர்ப்பைப் புல்லைப் பரப்பி அதனை மென்மையான துணியால் மறைக்க வேண்டும். இந்த ஆசனம் புனிதமான இடத்தில் அமைந்திருக்க வேண்டும். பின்னர் இதன்மேல் ஸ்திரமாக அமரந்து மனம், புலன்கள் மற்றும் செயல்களைக் கட்டுப்படுத்தி மனத்தை ஒருமுகப்படுத்தி இதயத்தைத் தூய்மைப்படுத்த, யோகியானவர் யோகத்தைப் பயில வேண்டும்.”

                      “பகவத் கீதை அத்தியாயம் ஆறு – தியானயோகம் பதங்கள் 11-12”;

    உடலில் உள்ள ஏழு ஆதாரங்களும் தியானத்தால் இணைக்கப்படுகின்றன. இதனால் ஏழு நாளமில்லாச் சுரப்பிகளுக்கும் உயிராற்றல் அதிகப்படுத்தப்பட்டு சுரப்பிகளின் பணி ஊக்கவிக்கப்படுகின்றன. வேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் மன அலைச் சூழலை உணர்ச்சி அலை என்றும் அல்லது பீட்டா அலை எனவும் அது குறைந்து வரும்போது அமைதி அலை, நுண்ணலை, அறிதுயில் அலை எனவும்   ஆங்கிலத்தில் ஆல்பா அலை, தீட்டா அலை, டெல்டா அலை எனவும் அழைக்கப்படுகின்றன.

    1 பீட்டா அலை உணர்ச்சி அலை 40-14 சுற்றுகள் :வினாடி
    2 ஆல்பா அலை அமைதி அலை 13-8 Rw;Wfs; :வினாடி
    3 தீட்டா அலை நுண்ணலை 7-4 Rw;Wfs:வினாடி
    4 டெல்டா அலை அறிதுயில் அலை 3-1 சுற்றுகள் :வினாடி

    ஆழ்ந்து தவம் செய்கின்ற போது மனம் 3-1 சுற்றுகள்ஃவினாடி என்ற அளவிற்கு குறைந்து அறிதுயில் அலைக்கு வருகின்ற போது மனிதனின் சிற்றறிவு, பேரறிவோடு இணைகின்றது. பிறவித் தொடராக வந்த சஞ்சித கர்மமும் மூன்று வயதுக்குப் பின் நாம் செய்த வினைகளான பிராராப்த கர்மமும் ஒன்று சேர்ந்து உருவாக்கிய புகுவினையான ஆகாமிய கர்மமும் மறைந்து, பிறவி சுழற்சியிலிருந்து விடுதலை கிட்டுகிறது.

    “தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது

    வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

    போய பிழையும் புகுதருவா நின்றனவும்

    தீயினில் தூசாகும் செப்பலோ ரொம்பாவாய்”.

                                        -ஆண்டாள் பாசுரம். பாடல்-5 – டி.ஜி.ராமையா, மாருதி வெளியீடு.

    கருமைய களங்கங்கள் அழிக்கப்பட்டு, நான் யார்? எனும் வினாவிற்கு இறைவனே தானாக இருப்பது உணரப்படுகிறது.

    சுவாசத்தை மனத்தோடு ஒன்றிணைத்து, சாதனம் செய்யும் போது தவமானது வெற்றி அடைகின்றது. பிராணன் எனப்படும் மூச்சுக்குக் காற்றை ஒழுங்குபடுத்திச் செய்யும் பயிற்சிக்கு பிராணாயாமம் எனப்படுகின்றது. உடல், புலன்கள், மனம், மூச்சுக்காற்று ஆகியவற்றை ஒன்றிணைத்துச் செய்யும் தியானமானது சிறப்பானதாக அமைகின்றது.

    நாடி சுத்தி  எனும் பிராணாயாமப் பயற்சியில் இடநாசி, வலநாசி இரண்டையும் ஒருங்கே இயக்கி நுரையீரலைத் தூய்மைப்படுத்துவதன் மூலம் இதயத்தின் செயலாற்றல் அதிகப்படுத்தப்படுகிறது. இரு நாடிகளையும் தூய்மைப்படுத்துவதால் சுழுமுனை எனும் நாடி சக்கரங்களின் வழியாக மேலேறி துரியம் சென்று தவத்தினைத் திறம்படச் செய்வற்குப் பேருதவியாக உள்ளது. உடலில் புத்துணர்ச்சி மேலோங்கி நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது. மனம் எச்செயலைச் செய்தாலும் அதற்கு நுட்பம் நிலைத்திருக்கிறது.

    முக்குணங்களில் ரஜோ, தாமச குணங்களின் வீரியம் குறைகின்றது. எந்த உயிருக்கும் துன்பம் தராத செயல்களைச் செய்து, துன்பப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்யும் மனநிலையைப் பெறமுடிகின்றது. மானோ மனநிலையில் தோன்றுகின்ற ஆறு தீய குணங்களும் படிப்படியாகக் குறைகின்றன.

    தீய குணங்கள் நல்ல குணங்கள்
    பேராசை                 (காமம்) நிறைமனம்
    கடும்பற்று                (லோபம்) ஈகை
    முறையற்ற பால்கவர்ச்சி      (மோகம்) கற்பு நெறி
    உயர்வு தாழ்வு மனப்பான்மை  (மதம்) நேர்நிறை உணர்வு
    வஞ்சம் (மாச்சரியம்) மன்னிப்பு

    தவத்தால் நல் வாழ்விற்குத் தேவையான ஆறு நற்குணங்கள் மானுடத்தில் மாற்றி   அமைக்கப்படுகின்றன மற்றும் அறநெறி வாழ்க்கை மேற்கொள்ள முடிகின்றது. குடும்பத்தில் அன்பும் கருணையும் ஓங்கி இன்புற்று வாழ முடிகின்றது.

    வேதாத்திரி மகரிஷியின் பஞ்சபூத நவகிரக தவம்:

    அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம். அண்டத்தில் உள்ள பஞ்சபூதங்களே நம் உடலிலும் இயற்கையால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    நிலம் எலும்பு
    நீர் இரத்தம்
    நெருப்பு உடல்சூடு
    நிலம் காற்று, மூச்சு
    ஆகாயம் உயிர்

    பஞ்ச பூதங்களின் விகிதாச்சாரம் மாறும்போது உடலின் பஞ்ச பூதத்தன்மைகளும் மாறுபடுகின்றன. இதனால் உடலில் இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம் மற்றும் காற்றோட்ட உயர்வு தாழ்வுகளால் நோய்கள் வரக் காரணமாகின்றன.

    பிரபஞ்சத்திலுள்ள கோடானு கோடி நட்சத்திரங்கள் மற்றும் கோள்கள், ஒன்றை ஒன்று மோதிக்கொள்ளாமல் தங்களது பாதைகளில் உலவிக்கொண்டிருகின்றன. இவற்றின் காந்த அலைகள் பூமியில் வாழும் உயிரினங்களோடு தொடர்பு கொண்டிருகின்றன. சூரிய குடும்பத்திலிருந்து வரும் காந்த அலைகள், மனிதனின் உடலோடும் உயிரோடும் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளன. ஒன்பது கோள்களோடு நட்புறவு கொள்வதனால் உடலில் உள்ள சிற்றறைகளும் உறுப்புகளும் பலம் பெறுகின்றன. மேலும் மன அமைதி, மன மகிழ்ச்சி, மனவலம், தைரியம், உயர் நட்பு ஆகியன பெற, நவகிரக தவம் துணை புரிகிறது.

    நவகிரகங்களின் உடல் தொடர்பு:

    சூரியன்          –           எலும்பு

    புதன்               –           தோல்

    வெள்ளி          –           வித்து சக்தி

    சந்திரன்          –           இரத்தம்

    செவ்வாய்      –           மஜ்ஜை

    வியாழன்       –           மூளைச்செல்

    சனி                 –           நரம்பு

    இராகு,கேது  –           ஓஜஸ்

    முடிவுரை:   

    எட்டு வித அங்கங்கள் கொண்ட அஷ்டாங்க யோகத்தால் மனித இனம் நன்மையே பெறுகின்றது. தவப் பயிற்சிகளை மேற்கொள்ள அமைதியான மனநிலை தேவைப்படுகின்றது. உள்ளதை உணர்ந்து, அல்லதை விடுத்து, நல்லதைச் செய்து வாழ, தவங்கள் மிகவும் துணைபுரிகின்றன. துன்பத்தில் உழலும் மக்கள் தவப்பயிற்சிகள் செய்வதால் அமைதி, பேரின்பம் பெற்று வாழ்க்கை பிரகாசமாகும்.

    மேற்கோள் நூல்கள்:

    1)         உயிர் வளமும் மனவளமும்: யோகமும் மனிதமாண்பும், முதுகலைப்பட்டம் முதலாம் ஆண்டு, தாள் – 33, வேதாத்திரி உள்ளுணர்வுக் கல்வி நிலையம், ஆழியாறு 11ஆம் பதிப்பு, மே – 2018

    2)         மனவளக் கலை தொகுப்பு – 1, வேதாத்திரி மகரிஷி 30ஆம் பதிப்பு – சூன் – 2007

    3)         பகவத் கீதை, உண்மையுருவில், சுவாமி.பிரபுதாதர் இரண்டாம் வெளியீடு.

    4)         திருப்பாவை – திருவெம்பாவை – டி.ஜி.ராமையா, மாருதி வெளியீடு.

    =========================================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    தவத்தால் வாழ்க்கை பிரகாசிக்கும் என்னும் கட்டுரை, தவத்தின் மேன்மையினையும் சிறப்பினையும் எடுத்துரைக்கின்றது. உடல், மனம், ஆன்மா ஆகியவற்றை ஒழுங்குபடுத்த, தவம் என்பது எவ்வாறு பயன்படுகிறது என்பதைச் சான்றுகளுடன் எடுத்துரைக்கிறது. கட்டுரையில் ஒரு தொடர்ச்சி இல்லை. ஆய்வின் முடிவுகளுக்கும் கட்டுரையின் கருத்துகளுக்கும்  நெருக்கமான தொடர்பு இருக்கவேண்டும். மேற்கோள்கள் பல ஆய்வுக் கட்டுரையில் இடம்பெற வேண்டும். கட்டுரை ஆய்வுக் கட்டுரையாக மாறவேண்டும் எனில் இவற்றைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

    =========================================================================

    Share
  • சேக்கிழார் பா நயம் (32)

    -திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி

    திருத்தொண்டர் புராணத்துக்குத், திருத்தொண்டத்  தொகை   முதல் நூல்; திருத்தொண்டர் திருவந்தாதி   வழிநூல்!  இவ்வாறு சேக்கிழார்    இறைத் தொண்டர்  பலரின் வரலாற்றைக் கூறினாலும் , சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளின்  வரலாற்றின்  வழியிலேயே  ஏனையோர் அருள்   வரலாறுகளையும் கூறுகிறார். அவ்வகையில் இந்நூலின் கதைத்தலைவர்  சுந்தரமூர்த்தியே ஆவார்! கைலையில்  தொடங்கித்  தென்னாட்டில்  தொடர்ந்து மீண்டும் கைலையிலேயே நிறைவுறும்  சுந்தரரின்  அருள்வரலாற்றின் இடையே  அறுபத்துமூவர் அருள்வரலாறும்   அமைந்துள்ளன!

    அவ்வரலாறுகளில்  தம்  திருமுறைகளாகிய தோத்திரங்களால்  சமயத்தொண்டு   புரிந்த, தேவார மூவரின்  வாழ்க்கையுடன்  அவர்கள் அருளிய வாக்கினையும் அப்படியே எடுத்துக்கொண்டு  நூலியற்றும் சேக்கிழார் பெருமானின்  சிறப்பு  போற்றுதற்கு உரியது!   சுந்தரமூர்த்தி  சுவாமிகளின் முதல் திருப்பாடலை இந்நூலில்,  அப்பாடலின் யாப்புமுறையை  அப்படியே மேற்கொண்டு தம் புராணத்தில் அமைத்து விடுகிறார்! சுந்தரரை  அற்புதப் பழ ஆவணம் காட்டித்  தடுத்தாட்  கொண்டார்  பெருமான்! அவருடன் திருவெண்ணெய்  நல்லூர் திருக்கோயிலாகிய  திருவருட்டுறைக்குள்  சென்ற சுந்தரரை நோக்கி இறைவனே , ‘’ நம்மைப் பாடுவாய்!’’ என்று அருளினார்!

    தம்மை அடிமுடி தேடி அலைந்த  திருமாலும் பிரமனும்  காணா  மலையாக உயர்ந்த இறைவனின்  திருப்பாதங்களில் தம் உள்ளத்தை ஊன்றிச் சிந்தித்து வணங்கினார் சுந்தரர்!   அவரை நமச்சிவாய   என்றும்,  சிவாயநம  என்றும் ஐந்தெழுத்து மந்திரத்தால் அனைவரும் வழிபட்டாலும் அந்த ஐந்தெழுத்தின் பொருளையும் பெருமையையுயும்  அளவிட்டுக் கூறுதல் எத்தகையோருக்கும்   அரிது!  அத்தகைய  பெருமானின்  திருப்பாதங்களைச்    சிந்தித்துத்  தம் கரங்களைக்  கூப்பி  நின்றார் சுந்தரர்!  

    நம் நீண்ட வாழ்க்கையின் பயனாக  நாம் அடையும்  ஊதியம் யாது என்பதை யாவரும் அறிந்து கொள்ள வேண்டும். தம்மிடம் உள்ளவற்றை பிறருக்கு  ஈதலால்  இவ்வுலகில் புகழ் உண்டாகும். இவ்வாறு ஈந்து புகழ் பெற்றால் பிறவிப் பயனாகிய திருவடிப்பேறு  கிட்டும். இதனைத்  திருக்குறள்,

    ‘’ஈதல்  இசைபட வாழ்தல்  அதுவல்ல

    ஊதியம்  இல்லை  உயிர்க்கு!’’

    என்று கூறுகிறது! இத்தகைய  வாழ்க்கையின் ஊதியத்தை அறியாமல்  மையல் மானுடமாய்  மயங்கினார்  சுந்தரர்! அதனால், இறைவனிடம்  ‘’எளியேன்   முன்னே , ஒரு முதிய   வேதியனாக   எழுந்தருளி, வாழ்க்கைப்   பணியையும், அதன்  ஊதியத்தையும்  எளியேனுக்கு  உணர்த்தினாய்! குற்றமேதும்  அற்ற நற்பண்பே உருவமான தேவா! எளியேனைப் பாடு  என்றாயே,  நின் குணங்களாகிய பெருங்கடலை எவ்வாறு அறிந்துகொள்வது? அதன்  தனிச்   சிறப்புகளை  எவ்வாறு  ஆராய்ந்தறிந்து  கொள்வது?அவற்றை  எவ்வாறு, எதனைச்  சிறப்பித்துப் பாடுவது? ‘’

    அதனைக் கேட்டருளிய  பெருமான், ‘’ முன்பு   அந்தணர்கள்  சூழ்ந்த அவையில் என்னைப் ‘’பித்தனோ? ‘’ என்றாயே!  இப்போது  பித்தன் என்றே என்னை  அழைத்துப்  பாடு!’’ என்றார். உடனே  அந்தத்  திருவார்த்தையையே  மந்திரமாகக்  கொண்டு சுந்தரர்  பாடத்  தொடங்கினார்.

    கொத்துக்களால் ஆன  மலர்களை அணிந்து  கொண்டு , இறைவனின் இடப் பாகத்தில்  இணைந்து காட்சி தரும் அன்னை பார்வதியுடன் , நமக்குப்  பெற்ற தாயினும் இனியவர்  சிவபிரான்! என்பதை ,

    ‘’கொத்தார்  மலர்க்  குழலாள்  ஒரு கூறாய் அடியவர்பால்

    மெய்த்தாயினும் இனியானை ‘’

    என்று சேக்கிழார் பாடுகிறார்! இங்கே சுந்தரருக்குப்  பழைய நினைவு வருகிறது.

    முன்பு கைலையில்  மலர்த்தொண்டு  புரிந்தமையும், அப்போது அன்னைக்கு அணுக்கராய்  விளங்கிய  பெண்டிர்  செய்த  தொண்டால், அன்னையின்  கூந்தலில்  மலர்க்கொத்துக்கள் அமைந்தமையும்  சுந்தரர் நினைவுக்கு  வருகின்றன. ஆதலால் அந்தத்  தாயினும் இனியானாகத்  தம்மைத்  தடுத்தாட்  கொண்ட பெருமானை , உலகெல்லாம்  போற்றத்தக்க  நாவலூரராகிய  சுந்தரர்,     ‘’பித்தா’’ என்றழைத்தார்! இச்சொல்  உலகியலில்  பெற்ற  மனம்  பித்து ,‘’பிள்ளை  மனம்  கல்லு ‘’  என்ற பழமொழியை நினைவூட்டுகிறது. அது கருதியே சேக்கிழார் ‘’ மெய்த் தாயினும் இனியானை ‘’ என்று இறைவனின் தாயுள்ளத்தை எண்ணிப் பாடுகிறார்! ‘பித்தா’ என்று தொடக்கிச்  சுந்தரர்  பாடிய திருப் பதிகம்,  மிகவும் பெரும் புகழ் பெற்றது!  

    பண்ணிலக்கணம்  பதினொன்றில், மருதத்தின் வகையாகிய  இந்தளத்தில்  முறையான  தாளத்துடன்  ஒத்திசைய, இசையை  உலகிற்களித்த  இறைவன் மகிழும்படி , தமக்கு ஒப்பாரில்லாத  சுந்தரர் , ‘’பித்தா பிறைசூடி’’ எனத் தொடங்கிப்   பாடலுற்றார். இறைவர் பித்தனல்லர், அவர் பிறையின் குறையை நீக்கிச்  சூடியவர்! ஆகவே  சுந்தரரின்  குறையை நீக்கி  நிறைசெய்யும் தாய் போன்றவர் இறைவன் என்கிறார். இதனைச் சேக்கிழார் ,

    ‘’’கொத்தார் மலர்க் குழலாள் ஒரு கூறாய் அடியவர் பால்

      மெய்த் தாயினும் இனியானை ‘’

    என்று பாடுகிறார். மேலும் பத்துப் பாடல்களைக் குறிக்கும்  இப்பதிகம்   பெரியபுராணத்தில் முதன்முதலாக  இடம் பெற்றது! இப்பதிகமுறையைத் தமிழில் முதன்முதலில்   அறிமுகப்  படுத்தியவர் , மூத்த திருப்பதிகம்  பாடிய  காரைக்கால்  அம்மையார் ஆவார்! அவர் பாடிய பண் இந்தளமாகும்; சுந்தரர் பாடிய பண்ணும் இந்தளமாகும்! ஆகவே இப்பதிகம்  சைவ உலகில் பெருமதிப்புப்  பெற்றதாயிற்று!   ஆகவே  இவ்வுலக மெல்லாம் சிவநெறியை உணர்ந்து  உய்வடைந்தது! இதனைச் சேக்கிழார்,

    “பித்தா பிறை சூடி எனப் பெரிதாம் திருப் பதிகம்

    இத்தாரணி முதலாம் உலகு எல்லாம் உய்ய எடுத்தார்.’’

    என்று பாடினார்! இனி முழுப்பாடபாலையும்  பயில்வோம்!

    ‘’கொத்தார் மலர்க் குழலாள் ஒரு கூறாய் அடியவர் பால்

    மெய்த் தாயினும் இனியானை அவ்வியன் நாவலர் பெருமான்

    “பித்தா பிறை சூடி எனப் பெரிதாம் திருப் பதிகம்

    இத்தாரணி முதலாம் உலகு எல்லாம் உய்ய எடுத்தார்.’’

    இப்பாடலில்  இறைவனின் தாயினும் இனிய தன்மை, சுந்தரர் இயல் நாவலர் பெருமான் என்று போற்றப்பெற்ற  நிலை, உலகத்தார்  எல்லாருக்கும் இறை வழிபாட்டுக்கு உரிய சாதனத்தை அறிமுகப்படுத்திய அழகு ஆகியவை  நமக்குப்  புலப்படுகின்றன! இன்னும் இப்பாடலின் சிறப்பைச் சான்றோர்கள்  மேலும் விரிவாக உரைப்பர்.

    Share
  • உள்ளீடுகள்

    -சேஷத்ரி பாஸ்கர்

    கண்களற்ற காற்று காதோரம்
    தோற்று போய் திரும்பும்அலைகள்
    தகரடப்பாவில் தலையை விட்ட பாட்டி
    இன்னொரு முறை அலையை தொலைத்தாள் .
    அரைத்து போட்ட மின்னும் மணல்தூள் 
    எங்கோ வறுபடும் நிலக்கடலை .
    பிரமிப்பான தருணத்தை நழுவும் மனிதன்
    கடலுக்காகவே பிறந்தது போல் நிலா
    எப்போதும் அவசரமான நண்டுகள் .
    காலம் கடப்பதேன் கவலையில் மனம்.

    புதைமணல் வாழ்விலும் இதமான உள்ளிறக்கம்

    Share
  • (Peer Reviewed) சித்தர் பாடல்கள் – வேதாத்திரி மகரிஷி பாடல்கள்: ஓர் ஒப்பீடு

    (Peer Reviewed) சித்தர் பாடல்கள் – வேதாத்திரி மகரிஷி பாடல்கள்: ஓர் ஒப்பீடு

    .பரமசிவன்
    முனைவர் பட்ட ஆய்வாளர்
    யோகமும் மனித மாண்பும் துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம்
    தஞ்சாவூர்
    முனைவர் ரமேஷ்
    ஆய்வு நெறியாளர்
    விஷன் ஆராய்ச்சி மையம்
    ஆழியாறு
    பொள்ளாச்சி

    முன்னுரை:

    தமிழ்நாட்டில் சித்தர் பாடல்கள், மெய்ப்பொருள் நாட்டம் உடையோர்க்கு ஓர் உந்து சக்தியாக விளங்கி வந்துள்ளன. சித்தர் நூல்களில் உள்ள கவிதைகளின் உண்மைப் பொருளைத் தெளிவாகப் புரிந்துகொள்வதில் சிரமம் இருந்துகொண்டுதான் உள்ளது. வள்ளலார் அருளைப் பெற்ற அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள், சமீப காலத்தில் வாழ்ந்த மகான். அவர் ஞானக் களஞ்சியம் என்னும் கவிதைத் தொகுப்பினை அளித்துள்ளார்கள். அதில் மிக எளிமையான மெய்விளக்கமளிக்கும் ஞானப் பாடல்கள் உள்ளன. சித்தர் பாடல்களோடு வேதாத்திரி மகரிஷி அவர்களது பாடல்களை ஒப்பாய்வு செய்வதுவே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

    அறிவாற்றலால் உயர்ந்த நிலையில் வாழ்ந்த சித்தர்கள் பலர், தமிழ்நாட்டில் இருந்துள்ளார்கள். அவர்களில் ஒரு பகுதியினரைச் சித்தர்கள் எனக் குறிப்பிடுகின்றனர். சித்தர்கள் எழுதிய ஓலைச்சுவடிகள் இன்றும் உள்ளன. அவற்றில் வைத்தியம், ஜோதிடம், மந்திரம், ரசவாதம், கற்பசாதனைகள், மூச்சுப் பயிற்சிகள், இறவாமல் சமாதி நிலை அடைதல் போன்ற பல்வேறு உயர்ந்த விஷயங்கள் பேசப்பட்டுள்ளன. பொதுவாகப் பதினெண் சித்தர்கள் என்று குறிப்பிடுவது மரபு ஆயினும் நூல்களில் கூறப்பட்டுள்ளவர்களது பெயர்களை எல்லாம் தொகுத்துப் பார்த்தால் சுமார் 40-க்கு மேற்பட்டவர்கள் உள்ளதாகத் தெரிகிறது. சித்தர்கள் அனிமா, மகிமா, இலகிமா, சரிமா, பிராப்தி, வசித்துவம், பரகாமியம், ஈசத்துவம் என்றும் அட்டமா சித்திகளை பெற்றவர்கள் என்றும் கூறப்படுகிறது.

    தமிழ்நாட்டில் அவ்வப்போது மகான்கள் தோன்றி, சித்தர்களது கருத்துகளின் அடிப்படையில் மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கை முறையை கற்றுக் கொடுத்துள்ளனர். அருட்பெருஞ்சோதி வள்ளலார் அவர்களைத் தொடர்ந்து இன்று தமிழகமெங்கும் மக்கள் கடைப்பிடிக்கும் மனவளக்கலையை வழங்கியவர், வேதாத்திரி மகரிஷி அவர்கள். சென்னைக்கு அருகில் கூடுவாஞ்சேரியில் ஓர் எளிய நெசவாளர் குடும்பத்தில் 1911-ஆம் ஆண்டு பிறந்தார்கள். ஆன்மீகச் சாதனைகளை, அவர்களுக்கு வைத்தியம் கற்றுத் தந்த கிருஷ்ணராவ் பூபதி அவர்களிடம் ஆரம்பத்தில் கற்று, பின்னர் பரஞ்சோதி மகான் அவர்களிடமும் கற்றுச் சாதனை புரியும் காலத்தில், வள்ளலார் அவர்களது அருளும் கிட்டியது. திருவள்ளுவர், திருமூலர், தாயுமானவர், வள்ளலார் ஆகியோரது பாடல்களை வழிகாட்டுதலாகக் கொண்டு மனவளக்கலை என்னும் பெயரில் இக்கால மக்களுக்கு ஏற்ற வகையில் எளிய உடற்பயிற்சிகள், எளிய
    முறை காயகல்ப பயிற்சி, அகத்தவப் பயிற்சி, அகத்தாய்வுப் பயிற்சிகள், பிரம்ம ஞான
    விளக்கப் பயிற்சி எனக் கல்வியாக, பயிற்சிகளாக வடிவமைத்துள்ளார்கள். இவை அனைத்தையும் மக்களுக்குக் கொண்டு செல்ல, உலக சமுதாய சேவா சங்கம் என்ற அமைப்பினை 1958-ஆம் ஆண்டு ஆரம்பித்தார்கள் .

    சித்தர் பாடல்களும் வேதாத்திரி மகரிஷி பாடல்களும்:

    சித்தர்கள் தங்களது உடலை மிகவும் போற்றிப் பாதுகாத்தார்கள். கற்பசாதனைகளை மேற்கொண்டு நீண்ட காலம் வாழ்ந்தார்கள். யோகப் பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகள்; மூலிகைகள், உபரசங்கள், உலோகங்கள், பாசனங்கள் இவற்றால் ஆன மருந்துகள் என்பனவற்றைத் துணையாகக் கொண்டு தாங்கள் விரும்பும் வரை பூமியில் வாழ்ந்த பின் சமாதி என்ற நிலையில் வாழ்வை நிறைவு செய்தார்கள். அவர்களது சமாதிகள் கோயில்களாக உள்ளன.

    உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
    திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவும் மாட்டார்
    உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
    உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே                                  – திருமந்திரம் 724

    வேதாத்திரி மகரிஷி அவர்களும் உடல் நலம் பேணுதலை முக்கியமாகக் கற்பித்து வந்தார். அவர்களுக்குச் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம் ஆகியவை தெரியும். தாம் கற்ற மருத்துவ அறிவைக் கொண்டு நோய் வராமல் தடுக்கவும் வந்த நோயைக் குணமாக்க உதவும் விதத்திலும் எளிய முறையிலான உடற்பயிற்சித் தொடர் ஒன்றினை வடிவமைத்தார்கள். அதனைப் பலரும் கற்றுப் பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் நமது உடலில் ரசம், ரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம் என எழு தாதுக்கள் உள்ளன. ஏழாவது தாதுவாகிய விந்துவே உடலில் உயிர் இருந்து இயங்குவதற்கு அடிப்படை. அதனைப் போற்றிப் பாதுகாப்பதன் மூலம் நீண்ட காலம் வாழலாம், நோய்களை குணப்படுத்திக் கொள்ளலாம் என்ற கருத்தின் அடிப்படையில் சாதாரண மக்களும் கற்றுப் பயன்படுத்தும் வகையில் எளிய முறையில் காயகல்ப பயிற்சி ஒன்றினை உருவாக்கிக் கற்றுக் கொடுத்துள்ளார்.

    சுக்கிலத்தை மேலேற்றி மனதை வைத்துத்
    துரிய நிலை நின்று தவம் ஆற்றும் யோகம்
    சுக்கிலத்துத் தவம் குதத்துப் பயிற்சி கூட்டி
    தூக்கம், போகம், உணவு முன்னம் செய்ய
    சுக்கிலமே கெட்டியாம் ஆண்மை ஓங்கும்
    தொல்லை தரும் நோய் வகைபோம் இளமை காக்கும்
    சுக்கிலத் தோடுயிர் சிவ காந்தம் மிக்கும்
    சூட்சுமமாம் இக்கலையே காயகல்பம்                                 -ஞானக் களஞ்சியம் 518

    மேற்கண்ட பயிற்சி இன்று உலகம் முழுவதும் மனவளக்கலை மன்றங்களில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இலட்சக்கணக்கானோர் கற்றுப் பயன்பெற்று வருகின்றனர்.

    சித்தர்களின் வழி, அறிவுப் பூர்வமானது. அவர்கள் காலத்தில் நிலவிய பல்வேறு அடிப்படையற்ற மூட நம்பிக்கைகளை அவர்கள் சாடியுள்ளதை அவர்கள் பாடலில் காணலாம். குறிப்பாக, அறிவுக்குப் பொருந்தாத இறை வழிபாட்டினை அவர்கள் மாற்ற விரும்பியதைச் சிவவாக்கியரின் பிரபலமான பாடல்கள் உணர்த்தும்.

    என்னிலே இருந்ததொன்றை நானறிந்ததில்லையே
    என்னிலே இருந்ததொன்றை நானறிந்து கண்ட பின்
    என்னிலே இருந்ததொன்றை யாவர் காண வல்லீரோ
    என்னிலே இருந்து யானுணர்ந்து கொண்டேனே                         – ஞானக் கோவை

    என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் பாடியுள்ளார்.

    எங்கும் நிறைவாக இருக்கின்றார் கடவுளென்பீர்
    இங்கு நம் உடல் உள்ளத்துறைந்தும் இருப்பாரன்றோ
    அங்கங்கே போய்த் தேடி அலைவானேன் அவர்க்காக
    தங்க நம் உயிர்க்குயிராம் தவநிலையில் அவரே நாம்                -ஞானக் களஞ்சியம் 1168

    என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ளார் .

    சித்தர்கள் மனத்திற்கே மிகவும் முக்கியத்துவம் அளித்தார்கள். மனிதனின் உயர்வு
    அவரின் மனத்தின் உயர்வைப் பொறுத்தது தான் என்று உறுதியிட்டுக் கூறினார்கள்.

    மனமது செம்மையானால் மந்திரஞ்செபிக்க வேண்டா
    மனமது செம்மையானால் வாயுவை யுயர்த்த வேண்டா
    மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
    மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே

                                                                                      – அகஸ்தியர் ஞானம்-2 ஞானக் கோவை

    வேதாத்திரி மகரிஷி அவர்கள், தாம் வகுத்துள்ள பயிற்சிக்கு மனவளக்கலை என்றே
    பெயர் வைத்து உள்ளார்கள். அவர்கள் தமது பாடலில்

    மனம் புலன் உணர்வினில் மயங்கிட மாயை ஆம்
    மனம் உயிர் வெளியினில் மருவித் தோய்ந்திட
    மனம் விரிந்தறிவெறும் மாபதம் எய்திடும்
    மனம் அறிவாகிய மனிதனும் தெய்வமே                              ஞானமும் வாழ்வும் 301-303

    என மனத்தை உயர்த்துவதன் மூலமே மனிதன் தெய்வ நிலைக்கு உயர முடியும் என்று
    கூறியுள்ளார்.

    முடிவுரை:

    மேற்கண்ட கவிதைகள், ஓரளவு நேரடியாகப் பொருள் விளங்குபவையே. இவற்றைக் காணும்போது சித்தர்கள் பாடல்களில் கூறியுள்ள கருத்துகள் இக்காலத்திற்கு ஏற்ப வேதாத்திரி மகரிஷி அவர்களின் பாடல்களிலும் உள்ளது எனத் தெளிவு பெறலாம்.

    துணை நூல்கள்:

    1. சித்தர் பெரிய ஞானக் கோவையென விளங்கும் சித்தர் பாடல்கள் – பிரேமா பிரசுரம்
    -2014
    2. வேதாத்திரி மகரிஷி , ஞானமும் வாழ்வும் – வேதாத்திரி பதிப்பகம், 2004
    3. வேதாத்திரி மகரிஷி , ஞானக்களஞ்சியம் I & II வேதாத்திரி பதிப்பகம், 2000

    ==================================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review)

    சித்தர் பாடல்களோடு வேதாத்திரி மகரிஷி அவர்களின் பாடல்களை ஒப்பிட்டு எழுதப்பட்ட இக் கட்டுரை, சித்தர்கள் கூறிய உடல், மனம் ஆகிய சிந்தனைகளோடு வேதாத்திரி மகரிஷியின் சிந்தனைகள் எவ்வாறு பொருந்திச் செல்கின்றன என்பதை எடுத்துரைப்பதாக அமைகிறது. விரிவாகப் பலநிலைகளில் ஆராயப்பட வேண்டிய கருத்துகளை இக்கட்டுரை உள்ளடக்கி இருந்தாலும் பக்க வரையறைக்காக சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. இருவேறு காலங்களில் வாழ்ந்த மனிதர்களின் சிந்தனைகள் எவ்வாறு ஒத்துப் போகின்றன என்பதை எடுத்துரைக்கும் விதமாக எழுதப்பட்ட இக்கட்டுரை, ஆய்வுக் கட்டுரையாக விரியும் நிலையில் பயனுள்ளதாக அமையும். முடிவுரையில் ஆய்வின் முடிவுகள்  தொகுத்துச் சொல்லப்பட்டிருக்கலாம்.

    Share
  • ஆசுகவி விருந்து

    -சியாமளா ராஜசேகர்

    சென்ற வாரம் ( 23:03:2019) பைந்தமிழ்ச் சோலையில் வேறெங்கும் சுவைத்தறியா விருந்து சுடச்சுட பரிமாறப் பட்டது. அவ்விருந்தின் சுவை என்றும் நெஞ்சத்தை விட்டு  அகலாது. அப்படி என்ன விருந்து என்கிறீர்களா ? செந்தமிழ் விருந்து ! தமிழிலக்கிய வரலாற்றில் முதன்முறையாக ஒரு சாதனை விருந்து …..ஆசுகவி விருந்து ! ஒருமணி நேரத்தில் 100 பாடல்கள் அந்தாதியில் . நேரலையாக …!! அந்த அற்புதப் படையலைப்  பரிமாறியவர்கள் யார் தெரியுமா ?? பைந்தமிழ்ச் சோலை நிறுவனரும் , பைந்தமிழ்ப் பேராசானுமாகிய மரபு மாமணி பாவலர்  மா. வரதராசன் அவர்களுடன் பன்முகத்திறன் கொண்ட பைந்தமிழ்செம்மல் , ஆசுகவி விவேக் பாரதியும் ! இருவரும் இணைந்து சிந்தைக்கினிய விருந்தளித்தனர். இதில் மற்றொரு சிறப்பும் உள்ளது.
    ஆசானுடன் மாணாக்கன் இணைந்து களமிறங்கியது …பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.

    இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து சோலைக் குயில்கள் அனைவருமே உற்சாகத்தில் மிதந்தனர். விருந்து சுவைக்கப் பசியோடு காத்திருந்தனர். இளங்கன்று பயமறியாதே! சோலையின் இளங்குயிலும் “பார்க்கத்தானே போறீங்க இந்தக் கவிஞர்களோட ஆட்டத்த!!!” என்று சவால் விட்டது. வெண்டளையானியன்ற தாழிசை அந்தாதியில் ” இறைமை ” யைப் பாடுபொருளாகக் கொண்டு சரியாக  இரவு ஒன்பது மணிக்கு விருந்து சமைக்க கவிஞர்கள் இருவரும் தயாராய் இருக்க , பைந்தமிழ்ச் செம்மல் அழகர்  சண்முகம் அவர்கள் “உலகம்” என்ற முதற்சொல்லைச் சரியாக இரவு 8.55 மணிக்குக் கொடுத்தார். கம்பராமாயணத்தின் முதற்பாடலின் முதற்சொல்லைக் கொடுத்துப் பச்சைக் கொடிகாட்ட கவித்தேர் தமிழன்னையின் ஆசியோடு புறப்பட்டது.

    “உலகம் முழுமைக்கும் ஒன்றாய் விளங்கும்
    தலைவன் திருப்பாதந் தான்பெறுதல் எக்காலம் ?” என்று விவேக் தொடங்க

    “பெறுதலைத் தானீக்கிப் பேரானந்த தத்தில்
    உறுதலை யான்பெற் றுருப்படுவ தெக்காலம் ?” என்று பாவலர் தொடர

    களைகட்டத் தொடங்கியது பைந்தமிழ்ச் சோலை . 30 நொடிகளுக்கொரு பாடல் சோலையில் மலர்ந்து மணம் பரப்பியது. அதன்  நறுமணத்தை நுகர நூற்றுக்கணக்கானோர் சோலையில் கூடினர். எல்லோர் விழிகளும் இமைகொட்டாமல் அலைபேசியையும் . கணினியையுமே மொய்த்துக் கொண்டிருந்தன. என்ன வேகம் ! என்ன வேகம் ! . இடைவெளியின்றித் துள்ளி வந்தன பாக்கள் இருவரிடமிருந்தும் ! ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை என்று மெய்ப்பித்துக் கொண்டிருந்தனர் குருவும் சீடனும் !! சோலைக் கவிஞர்கள் நுட்பமாய் ஆய்ந்துகொண்டிருந்தனர் அவசரத்தில் எங்கேனும் பிழை தென்படுகின்றதா என்று ! ஆனால் ஏமாற்றம்தான் மிச்சம் .

    நேரம் செல்லச் செல்ல ஆட்டத்தைக் கண்டுகளிக்க , விருந்தைச் சுவைக்க மேலும் பலர் கூடினர். சோலையே திருவிழாக் கோலம் பூண்டது. சுவைஞர்களின் விழி சோர்ந்தபோதும் சமைக்கும் கவிஞர்களின் விரல்கள் சற்றும் சோர்ந்திடவில்லை. .

    சொல்லழகும், பொருளழகும் …அடடா ! அந்தச் சொக்கனே சொக்கியிருப்பான் இவர்தம் பாக்களில் ! புயலெனச் சுழன்று நிமிடத்திற்கு இரண்டு பாக்கள் பறந்து வந்தாலும் சித்தர்களின் வாக்கினைப் போல் தெள்ளத் தெளிவாய்த், தெவிட்டாத் தெள்ளமுதாய் அமைந்திருந்தது சிறப்பு !! உலகம் என்ற சொல்லில் தொடங்கி அதே சொற்கொண்டு முடித்து மண்டலவந்தாதியாய் அமைந்தது மற்றுமோர் சிறப்பு.

    காட்டாக சில பாடல்கள் தருகிறேன் ….. நான் சுவைத்த அற்புத விருந்தை எல்லோரும் சுவைக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் ….!!! இப்பாடல்களில் அமைந்துள்ள எதுகை, மோனை அழகும், கவித்துவமும் நெக்குருகச் செய்யும். ,முழுதும் இவ்வாறே அமையப்பெற்றுள்ளது.  இருப்பினும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் .என்பதுபோல் மும்மூன்று பாக்கள் கொடுத்துள்ளேன்.

    1. மேலிருக்கும் நாயகனின் மேன்மை நினைத்திந்தத்
    தோலிருக்கும் பொய்ச்சிறையைத் தூரவிடல் எக்காலம்?….. விவேக் பாரதி

    விடலாய் வினைமிகுத்து மேதினியில் பற்றுகுத்துப்
    படலாய்ப் பரமனைப் பாவுதலு மெக்காலம்? ….. பாவலர்

    2. இட்டாரைத் தேடி இருட்குழிக்குள் வீழாமல்
    பட்டாங்கில் ஈசனைப் பாடுவது மெக்காலம்…. பாவலர்

    பாடும் மொழியனைத்தும் பாரா இறைகொடுத்த
    கூடல் எனச்சொல்லிக் கும்பிடுதல் எக்காலம்?….. விவேக் பாரதி

    3. நீக்கலும் யாவையும் நீக்கலாச் சோதியன்
    நோக்கினில் வீழ்ந்து நுரைத்திருப்ப தெக்காலம்?….. பாவலர்

    நுரையாய் விழிமறைக்கும் நூதனக் காமம்
    விரைந்தோட என்னுள்ளம் வீச்சுறுதல் எக்காலம்? ….. விவேக் பாரதி

    வாழ்வின் நிலையாமையையும் , இறையருளின் மேன்மையையும் மிகச் சிறப்பாய்க் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்தததைப் பலரும் பாராட்டினார்கள் . இந்தச் சாதனை தமிழிலக்கிய உலக வரலாற்றில் பதிவாகிப் பலருக்கும் உந்துசக்தியாய் அமையும். இந்த மின்னல் வேக விளையாட்டில் இருவருமே மாபெரும் வெற்றியாளர்கள் ! இதுகுறித்து பைந்தமிழ்ச்சோலை நிறுவுனர் பாவலர் மா வரதராசன்,

    பத்திரக்கிரியாரின் மெய்ஞானப்புலம்பலை அடியொற்றி, அதேயாப்பில் ஆனால் அந்தாதியாக இச்சாதனையை யாம் செய்துமுடித்தோம். எவ்விதமோவெனின், ஒன்றரை மணிநேரத்தில் நூறுபாடல்களென, நாற்பது நொடிக்குள் ஒரு பாடல் என்ற வேகத்தில், வெண்ட டையோடும், அந்தாதியோடும், பேரின்பப் பொருளினின்றும் சற்றும் விலகாமல், பொருண்மைச்சிறப்புடனும் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. எம் சோலையாலன்றி வேறியார்க்கும் இச்சாதனை வய்க்குமோ என்பது ஐயமே.! எல்லாம்வல்ல பரம்பொருளும் எந்தமிழ்த்தாயின் அருளுமே இதற்கு அணியமாயிற்றென்பது கண்கூடு” என்கிறார்.

    இந்த வெற்றிக் கூட்டணி தம் ஆட்டத்தை இன்றோடு நிறுத்தவில்லை . வாராவாரம் சனிக்கிழமைகளில் தொடரவிருக்கிறது.

    இப்படிப்பட்ட அற்புத விருந்தைச் சுவைக்க …..”பைந்தமிழ்ச் சோலைக்கு” வாருங்கள் !!

    Share
  • ராஜதுரோக தண்டனை குறித்த கல்வெட்டுகள்

    – சேஷாத்ரி ஸ்ரீதரன்


    உடையார்குடி ஆனந்தீஸ்வரர் கோயில் 

    ராஜதுரோக தண்டனை

    துரோகம் என்றால் நம்பிக்கை குலைய நடத்தல், நம்பினோர்க்கு இரண்டகம் செய்தல் எனப் பொருள்.  இது பல்வேறு வகைத்து. இராஜதுரோகம் என்பது அவற்றில் முகாமையானது. இது பற்றி சில கல்வெட்டுகள் அறியக் கிடக்கின்றன. பொதுவாகப் பகை மன்னன் சதிக்கு உடன்பட்டு அவனுக்கு உத்தாரமாக (supportive) தனது மன்னனை வேவுபார்த்தல், உளவு பார்த்தல், அவன் ஆள்கள் தங்க இடம் அளித்தல், உதவுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவது இராஜதுரோகம் ஆகும். இதற்கு பழங்காலத்தில் பிற குற்றங்களை விட கடுமையான தண்டனை தரப்பட்டது. இராஜதுரோகி ஆக அறிவிக்கப்பட்ட ஒருவர், அவர் சார்ந்தவர் நிலமும், வீடும், உடைமையும் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்பட்டு அப்பணம் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது. பெரும்பாலும் இராஜ துரோகிகள் கூடா நட்பு, பதவி செல்வத்திற்கு ஆசைப்பட்டும் அவ்வாறு நடந்து கொண்டனர். குறிப்பாக, அதிகமாக வேளான் என்ற அரசகுடியாரும், பிராமணரும் இந்த தண்டனைக்கு ஆட்பட்டது தெரிகின்றது. நான்கு அகவை முதல் இலவச உண்டு உறைவிடமான வேதபாட சாலையில் கல்வி, சரஸ்வதி பண்டாரம் என்ற நூல் நிலையம், கோவிலில் வேலை அதற்கு நிவந்தமாக விளை நிலம், குடியிருக்க இலவச வீடு, கோயிலில் ஆதுர சாலைகள் இப்படி உயிர்த்துள்ள நாள் வரையில் வேறு எவருக்கும் கிட்டாத பல வசதிகளை மன்னரிடம் இருந்து மானியமாகப் பெற்ற போதும் சில பிராமணர்கள் குறுகிய நோக்கில் அரச அதிகாரிப் பதவிகளைப் பெறுவதற்காக இப்படி நரித்தனமாக நடந்துகொண்டது வரலாற்றில் பதிவாகி உள்ளது. அதைப் பதிந்தவரும் பிராமணரே. கீழே இதற்கு சான்றாக மூன்று கல்வெட்டுகளைப் பார்க்கலாம்.

    உடையார்குடி ஆனந்தீஸ்வரர் கோயில் கருவறை மேற்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் இராசராசனின் 2 ஆம் ஆண்டு கல்வெட்டு.

    “ஸ்வஸ்தி ஸ்ரீ கோ ராஜகேசரிவர்மர்க்கு யாண்டு 2 ஆவது வடகரை பிரமதேயம் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி பெருமக்களுக்கு சக்கரவர்த்தி ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்……………………………………….. தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிடும் இவர் பிரமாணிமார், பெற்றாளும் இ……………………ராமத்தம் பேரப்பன் மாரிடும் இவர்கள் மக்களிடம் இவர்களுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிடும் தாயோடுடப் பிறந்த மாமன் மாமன்மாரிடும் இவர்கள் உடபிறந்த பெண்களை வேட்டாரினவும் இவர்கள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முடமை)யும் நம் ஆணைக்குரியவாறு கோட்டயூர் பிரம்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டனையும் பெறத் தந்தோம். தாங்களும், இவர்கள் கண்காணியோடும் இவர்கள் சொன்னவாறு நம் ஆணைக்குரியவாறு குடியோடு குடிபெறும் விலைக்கு விற்றுத்தலத்திடுக. இவை குருகாடிக்கிழான் எழுத்து என்று இப்பரிசுவர இ ஸ்ரீமுகத்தின் மேற்பட்ட மலையனூரான் ஆன பாப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும் இவன் மகனும் இவன்றாய் பெரிய நங்கைச்சாணியும் இம்மூவரிதும் ஆன நிலம் ஸ்ரீ வீரநாராயன சதுர்வேதி மங்கலத்து மிப்பிடாகை தேவமங்கலம் ஆன பட்டில நிலம் ஸ்ரீவீரநாராயண சதுர்வேதி மங்கலத்து சபையார் பக்கல் வெண்ணையூர் நாட்டு வெண்ணையூருடையான் நக்கன் அரவணையானான பல்லவ முத்தரைய மகன் பரதனான வியாழகஜமல்லப் பல்லவரையனேன். இந்நிலம் பழம்படி இரண்டே முக்காலே ஒருமாவும் அகமனை ஆறும் ஆக இந்நிலமும் இம்மனையும் நூற்றொருபத்தி ருகழஞ்சு பொன் குடுத்து விலைகொண் டிவ்வூர் திருவனந்தீஸ்வரத்து பட்டாரகர் கோயிலிலே இவ்வாட்டை மேஷநாயற்று நாயற்றுக்கிழமை பெற்ற புரட்டாசி ஞான்று சந்திராதித்தவர் ஆழ்வார் கோயில் முன்பு மூவாயிரத்தரு நூற்றுவனான நிலையம்பலத்து தண்ணீர் அட்டும் பிராமணன் ஒருவனுக்கு நிச தம் படி நாழி நெல்லும் ஆட்டைவட்டம் ஒரு காகம் நிசதம் பதினைவர் பிராமணர் உண்பதற்கு ஆக பதினாறு இவறுள் ஐவர் சிவயோகிகள் உண்ணவும் வைத்தேன் அரையன் பரதன் ஆன வியாழகஜமல்ல பல்லவரையனேன். இதர்மம் ரஷிகின்ற மகாசபையார் ஸ்ரீபாதங்கள் என் தலை மேலன”

     பெருங்குறி பெருமக்கள் –   மதிப்புடைய வெகுமக்கள்; ஸ்ரீ முகம் – திருமுகம், அரசாணை;  பிரமாணிமார் – பிராமணர் மனைவியர்; பெற்றாளும் – தாயும், குடியோடு குடிபெறும் விலை – சாதாரண மக்கள் பெறும் விலை; பிடாகை – உள்அமைந்த சிறுகிராமம்; அகமனை – குடியிருக்கும் சொந்தமனை.

    விளக்கம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் உள்ள உடையார்குடியில் ஆனத்தீஸ்வரர் கோயில் கருவறை மேற்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் இராசராசனின் 2 ஆம் ஆண்டு ஆட்சியில் கி.பி.987 வெண்ணையூர் நாட்டு வெண்ணையூருடையானான நக்கன் அரவணையானான பல்லவ முத்தரைய மகன் பரதனான வியாழகஜமல்லப் பல்லவரையன்  6 சொந்த வீடுகளையும், இரண்டுவேலி 16 மா நிலத்தையும் 112 பொற்காசுகளுக்கு வாங்கி கோயிலுக்கு விட்டான். அதைக் கொண்டு வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து திருக்கோயிலில் தண்ணீர் சொரியும் மூவாயிரத்தரு நூற்றுவன் என்ற நிலையம்பலத்து தண்ணீர் அட்டும் பிராமணன் ஒருவனுக்கு நிசதம் படி நாழி நெல்லும் ஆட்டை வட்டம் ஒரு காகம். அதே நேரம் நிசதம் 15 பிராமணர் உண்பதற்கும் ஆக பதினாறு 16 பிராமணர்களுக்கு, இவருள் ஐவர் சிவயோகிகள் உண்ணவும் வேண்டும் என்று கொடுத்தான் அரையன் பரதன் ஆன வியாழகஜமல்ல பல்லவரையன். இத்தர்மம் காக்கின்ற மகாசபையார் திருப்பாதங்கள் என் தலை மேலன என்று குறித்தான்.

    இவன் வாங்கிய 6 வீடும் நிலமும் இரண்டாம் ஆதித்தகரிகாலரை கி.பி. 965 ல் வஞ்சகமாகக் கொன்ற வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பிராமணர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சோமன், இவன் தம்பி இரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன். இவன் தம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழபிரமாதிராஜன். இவர்தம் தம்பி மலையனூரன் பஞ்சவன் பிரமாதிராஜன் ஆகிய நான்கு பேர்களும் சேர்ந்து இரண்டாம் ஆதித்த கரிகாலனை வஞ்சகமாக கொலை செய்த இராசதுரோகிகள் ஆவர். இவர்ளுக்கு தண்டனை வழங்கப்பட்ட செய்தி இராசராசனின் 2 ஆம் ஆண்டு ஆட்சியில் (கி.பி.987) பதிவாகி உள்ளது. தண்டனை வழங்கப்பட்டபோது இராசதுரோகிகள் நால்வரது பிள்ளைகள், மனைவியர், பெற்ற தாய், பேரப்பன்மார் இவர்களுக்கு பெண்கொடுத்த மாமனார்களும், தாயுடன் பிறந்த மாமன்மார்களும், இவருடன் பிறந்த பெண் மக்களும் இனி பிராமணர் அல்லாத வேற்றவர், வேற்று சாதியார். இவர் தம் பிள்ளைகளும் வேற்றுசாதியார் என சமூகம் கருத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இவர்களது உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆணைப்படி கோட்டையூர் பிரம்ம ஸ்ரீராஜன், புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டன் ஆகியோர் பொறுப்பில் விடப்பட்டது. இந்த இருவரும் இவர்கள் கண்காணியோடும் இவர்கள் சொன்னவாறு ஆணைப்படி குடியோடு குடிபெறும் விலைக்கு விற்றுத் கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என்று குருகாடிக்கிழான் ஆணைஓலை தந்தான். ஏனென்றால் இந்த ஆணைஓலையில் மேற்படி குறித்த இராஜதுரொகிகளின் தம்பி மலையனூரான் ஆன பாப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும், இவன் மகனும், இவன் தாய் பெரிய நங்கைச் சாணியும் ஆகிய இம்மூவருடைய நிலம் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பிடாகையான தேவமங்கலத்தில் அமைந்த பட்டில நிலம் தான் அந்த இரண்டுவேலி 16 மா நிலம் என்பது.

    இவர்களில் மற்றவர் உடைமைகள் எந்தெந்த ஊர்களில் இருந்தனவோஅங்கும் இதே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்பதுதெளிவு. இந்த கல்வெட்டு வியாழகஜமல்லப் பல்லவரையன்  தொடர்பானது என்பதால் இந்த அளவு செய்தி மட்டுமே கல்வெட்டில் அறியத் தரப்பட்டது. இது இராஜ துரோகிகளின் நேரடியான தண்டனைக் கல்வெட்டு அன்று. அதனால் இரண்டாம் ஆதித்ய சோழன் எங்கு? எவ்வாறு? எப்போது? எப்படிக் கொல்லப்பட்டான் என்ற செய்தி இக்கல்வெட்டில் இடம்பெறவில்லை. இப்படி இராஜதுரோக தண்டணைக்கு உள்ளானவருக்கு ஊரார் உதவிட, ஒத்துழைக்க முன்வரமாட்டார் மாறாக ஒத்துழைக்க அஞ்சுவார். இவர்கள் தம் தண்டனைக் குற்றம் யாது என்று பிறரால் அறியப்படாதவாறு வேற்றூர் சென்று அக்ஞாத வாசம் செய்தால் அன்றி ஊராரால் ஒதுக்கப்பட்டு வாழ்வதற்கே இடர்படுவர், மிடிமைப்படுவர் என்பதை உணரமுடிகின்றது. இதனால் ஒன்றும் அறியாத அப்பாவியான உறவினர் படும் துன்பம் தான் வேதனையானது.

    பார்வை நூல்: EP, IND Vol XXI, PP 165-170

    கொங்கின் கடத்தூர் பகுதியில் உள்ள திருமருதுடையார் கோயில் 17 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீவிக்கிரமசோழ தேவற்கு யாண்டு 29 தாவது விக்கிரம சோழத் திருபுவன சிங்க
    2. னேன் கடற்றூர் ஆளுடையார் திருமருதுடையார் எனக்கு பிரமேகம் தீற்தமையில் இந்நாயனா _ _ _
    3. ரை திருவோத்த சாமத்துக்கு நாள் ஒன்றுக்கு அரிசி குறுணிக்கு நான் நீர்வார்த்து விட்ட நிலமாவ
    4. ன (கரை)வழிநாட்டுக் கண்ணாடிப்பூத்தூர் வடகரையில் உதயாதிச்ச தேவர் துரோகியாய் வடகொங்(கு)
    5. ப் போனமையில் அவர்நிலம் ஆறுகலமும் எனக்கும் என் தம்பி சோழசிங்கதேவற்கும் இவ்விருவ
    6. ற் _ _ _ _ இது காணியாகத் திருவிள்ளம் செய்து திருமுகம் தந்(த)மையில் இதில் என்னொரு பாதி மன்றாட்டு வி
    7. கலமும் இந்நாயனாற்குத் திருவத்த சாமப்படிக்கு நீர்வாத்துக் குடுத்து இந்நில முக்கலத்துக்கும்  _ _ _
    8. வது வடகரையில் பூலுவப்பற்றி விதை ஆறுகலத்தில் என்னொருபாதி விதை முக்கல(த்துக்கெ)
    9. ல்லையாவது இக்கிழைக்கு வடக்கும் உதையாதித்த தேவர் நிலத்துக்கு மேக்கும் அதியமான் _ _ _
    10. சோழீஸ்வரமுடையார் தேவதானத்துக்கு கிழக்கும் அழகாண்டார் செய்க்குத்  தெற்கும் இந்நாள் _ _ _
    11. ட்ட நெல்விதை இரு கலமும் வீரசோழீஸ்வருமுடையார் தேவதானத்துக்கு வடக்கும் மே
    12. னத்துக்குக் கிழக்கும் அழகாண்டார் செய்க்கு மேற்கு இந்நிலத்துக்குப் பாய்கிற கவருக்கு தெற்
    13. ல்லைக்குட்டபட நெல் விதை(க்) கலமும்  முக்குறுணியில் நெல் விதை கலமும் ஆக நெ
    14. ல் விதை முக்கலமும் இறையிலி முற்றூட்டாக எனக்கும என் மக்கள் மக்களுக்கும் விலையொற்றி
    15. ன ஸீதனத்துக்குரித்தாவுதாக நாயனார் திருமகம் திருவிள்ளம் செய்(த)படியே ஆளுடை
    16. மருதுடையாற்கு கல்வெட்டிக் குடுத்தேன் விக்கிரம சோழதிரிபுவன சிங்க தேவனேன்  (தி)
    17. ருபுவன சிங்கதேவன் எழுத்து. இவை கோத்தப்பச் சோழன் எழுத்து. இது பன்மாஹேஸ்வர ரக்ஷை.

    முற்றூட்டு – முழு விளைச்சல்,  முழுவருவாய்; நாயனார் – மன்னர்.

    விளக்கம்: பண்டு கொங்கு வறண்ட பகுதிகளை உடைய பகுதி வட கொங்கு எனவும், வளமையான பகுதிகளை உடைய நாடு தென்கொங்கு எனவும் இரு பகுதிகளாக இருந்தது. அவற்றை இரு வேறு ஆட்சியாளர்கள் ஆண்டுள்ளனர். இக்கல்வெட்டு கடத்தூர் பகுதியில் உள்ள திருமருதுடையார் கோயிலில் மகாமண்டப நுழைவு வாயிலின் கிழக்கு சுவரில் வெட்டப்பட்டு உள்ளது. கொங்கு சோழன் மூன்றாம் விக்கிரம சோழனின் 29 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1302) விக்கிரம சோழ திரிபுவன சிங்கனான எனக்கு திருமருதுடை இறைவர் நோய் தீர்த்து வைத்ததால் இவ்இறைவர்க்கு சாமத்து பூசையின் போது குறுணி அரிசிந் தரத் தீர்மானித்து அதற்கான நிலத்தை நீர்வார்த்து தானமாகக் கொடுத்தேன். நான் தரும் நிலமானது முன்பு கரைவழி நாட்டு கண்ணாடிப்பூத்தூர் வடகரையில் வாழ்ந்திருந்த அரச அதிகாரப் பொறுப்பாளர் உதயாதிச்ச தேவர் அரச துரோகியாகி வடகொங்குப் போனமையால் (அவர் உடைமைகள், சொத்துக்கள், நிலங்கள் மன்னனால் பறிமுதல் செய்யப்பட்டு கோயில் பண்டாரத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது. இச்செய்தி இக்கல்வெட்டில் பொறிக்கப்படவில்லை).  அவருடைய ஆறுகல நிலம் எனக்கும் என் தம்பி சோழசிங்க தேவர்க்கும் காணியாக்க மன்னன் ஆணயிட்டுத் திருஉள்ளம் தந்தபடியால் என் பங்கான மூன்று கல நிலத்தையும் அதில் விதைப்பதற்கான நெல் ஆறு கலத்தில் என் பங்கு மூன்று கலமும் இறைவர்க்குத் தந்தேன். இந்த மூன்று கல நிலம் வடக்கில் உதையாதித்த தேவர் நிலத்துக்கும், மேற்கில் அதியமான் நிலத்துக்கும், சோழீஸ்வரமுடையார் தேவதானத்துக்கு கிழக்கும்.  அழகாண்டார் செய்க்குத் தெற்கும் அமைந்துள்ளது.  நெல்விதை இரு கலமும் வீரசோழீஸ்வருமுடையார் தேவதானத்துக்கு வடக்கிலும், மேனத்துக்குக் கிழக்கிலும், அழகாண்டார் செய்க்கு மேற்கிலும் இந்நிலத்துக்குப் பாய்கிற கவருக்கு தெற்கெல்லைக்குட்டபட நெல் விதைக் கலமும் முக்குறுணியில் நெல் விதை ஒரு கலமும் ஆக நெல் விதை முக்கலமும் இறையிலி முற்றூட்டாக கொடுத்தேன். எனக்குப் பின் என் மக்கள் அவர்க்கு பின் அவரது மக்களுக்கும் (பேரர்களுக்கும்) விலையொற்றின சிதனத்துக்குரித்தாவதாக, இதாவது பரிசாவதாக என்று கூறி மன்னர் ஆணையிட்டு திருஉள்ளமும் செய்தபடியே ஆளுடைமருதுடையாக்கு கல்வெட்டிக் கொடுத்தேன் விக்கிரம சோழதிரிபுவன சிங்க தேவனாகிய நான். இது திரிபுவன சிங்கதேவன் எழுத்து. இவை கோத்தப்பச் சோழன் எழுத்து என்று கையொப்பமிட்டு கொடுத்தனர்.

    விக்கிரம சோழசிங்க தேவன் அரச குடியினர் என்பது புலனாகின்றது. இந்நிலத்தை அண்ணன் தம்பிமார் விலைகொடுத்து வாங்காமல் மன்னனிடம்இருந்து நேரடியாக மானியாமாகப் பெற்றுள்ளனர் இல்லாவிட்டால் காணியாக்குவதற்கு மன்னனின் ஆணையைப் பெற வேண்டிய தேவை வந்திருக்காது.  மன்னனுக்கு ஏதோ வகையில் உறவினராக இருத்தல் வேண்டும்.  விக்கிரம சோழதிரிபுவன சிங்கர் தம் பங்கான மூன்று கல நிலத்தையும் அதில் விதைக்க மூன்று கல விதை நெல்லையும் கோயிலுக்குக் காணியாகக் கொடுத்தார்.

    பார்வை நூல்:கொங்குநாட்டுக் கல்வெட்டுக்கள், கோயம்பத்தூர் மாவட்டம், 2001, பக்.131-132, மா.கணேசன் & இரா. ஜெகதீசன்

    திருப்பூர் தாராபுரம் வட்டம் பிரம்மியம் என்ற ஊரின் திருவலஞ்சுழி கோயில் கருவறை தெற்கு சுவர் 9  வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ கோஇராஜயிராஜ ஸ்ரீவீரசோழ தேவற்குத் திருவெழுத்திட்டுச் செல்லாநின்ற திருநல்லி யாண்டு அஞ்சாவதின் எதிராம் யாண்டு தென்கரை நாட்டு ப்ரஹ்மதேயம் ஸ்ரீ வீரசங்காத சதுர்வேதி மங்கலத்து ப்ரஹ்மணன் காமாக்கா
    2. ணிசோமாசி சோமாசி ராஜத்ரோஹம் பண்ணிப் போனமையில் அவன் பூமியானது பெருமாள் கொண்டருள பொருமாள் சாமந்தரில் பெரியாந் சோழனான வீரசோழ கங்கவன் பெருமாள் பண்டாரத்துக்கு
    3. நகரக்கல் துளை முப்பது பொன் வைச்சுப் பொன்னை குடுத்து நிலமறக் கொண்டு இவ்வூர்த் திருவலஞ்சுழி பரமேஸ்வரர்க்குத் திருப்பதியப்புறமாக வைச்ச நிலம் அன்னசு[ர]ப்போயிற் கிடக்காணியும், பள்ளப்போயிற் கிடகாணியு
    4. ம், பனையோடு செய்யிற் பாதியும், பெரிய செய்பனையோடு செய்யடைய அரைக் காணியும், அதிராத்தி வாக்காலில் வடக்கடையந் காணியும், கொங்க தோட்டத்தில் பாதியும், கோவிலார் தோட்டத்தில் பாதியு
    5. ம், வடவூரந் தோட்டத்திற் பாதியும், திருநாராயண விளாகத்திற் பாதியும், இன்நிலத்தால் வந்த வீடுகூறும் மடுகூறும் ஸ்வத்தியும் பரத்தியும் மற்றுமிப்பேர்பட்டிதும் இத்தேவர்க்குத் திருப்பதியப்புறமாவதாகவும் இ
    6. ன்னிலத்துக்கு அரையே யரைக்காப் பெயரை மாகாணிப் பங்குக்கு இறையிழிச்சு இவ்வூர் ஸபையார் பக்கற் குடுத்தப் பொன் நகரக்கல் துளை பத்து. இப்பொன் பத்துங்கைக் கொண்டு இறைவரி எச்சோறும் ஊர்ப்
    7. படுகுடிமையும் மற்றமெப்பேர்பட்டதும் இறுத்து முன்பு தேவதான முழுகற்படி உழுது ஊர் நஞ்சைமேல் வாரந்தேவர்க்குக் குடுக்கக்கடவோமானோம் ஸபையோம். இப்பரிசு இன்னிலந் திருப்பதியப்புற
    8. மாக சந்திராதித்தவற் செல்லக் கல்வெட்டிக் குடுத்தேன் வீரசோழ காங்கயனேன். இத்தம்மம் ரக்ஷிப்பான் ஸ்ரீபாதமென் தலைமேலின இத்தம்மம் அழிவுநினைப்பான் வழிஏழெச்சமறுவான். இது  பன்மாஹே
    9. ஸ்வர ரக்ஷை.

    திருவெழுத்திட்டு – முடிசூடி; பெருமாள் – மன்னன், சாமந்தர் – படைத்தலைவர் அமைச்சர்; நிலமற – ஒரு நிலம் கூட மிச்சமில்லாமல்; திருப்பதியப்புறம் – திருப்பாடல் பாடுதற்கு கொடையாக; இறையிழிச்சு – வரிநீங்கி; எச்சோறு பொது ஊழியர்க்கு பகலில் தரும் சொறு;  ஊர்ப்படுகுடிமை – ஊர்வரி;  வழிஏழெச்சமறுவான் – ஏழுதலைமுறை அற்றுப்போவான்.

    விளக்கம்: கொங்கு சோழன் இரண்டாம் வீரசோழனின் 6 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1106) தென்கரை நாட்டு பிரமதேயமாம் ஸ்ரீ வீரசங்காத சதுர்வேதி மங்கலத்து பிராமணன் காமாக்காணி சோமாசி சோமாசி இராஜதுரோகம் பண்ணிப் போனமையால் (இன்னது என்று குறிக்கவில்லை) அவனது நிலத்தையும் உடைமையையும் மன்னர் பறிமுதல் செய்தார். அதனை மன்னனின் படைத்தலைவர் சோழனான வீரசோழ காங்கவன் பெருமாள் பண்டாரத்துக்கு நகரக்கல் துளை முப்பது பொன் கொடுத்து நிலம் ஏதும் மிச்சம் விடாமல் பிராமணனின் 10 இடத்தில்அமைந்த நிலம், தோட்டம்,  வீடு ஆகியவற்றை வாங்கி அவற்றை திருவலஞ்சுழி பரமேசுவரர்க்குத் திருப்பதியப்புறமாகக் கொடுத்தான். அதோடு அரையே அரைக்கால் மாகாணிப் பங்குக்கு வரிநீக்கி திருவலஞ்சுழி சபையாரிடம் அவன் கொடுத்தப் பொன் நகரக்கல் துளை பத்து. இப்பரிசு திருப்பதியப்புறமாக சந்திராதித்தவர் வரை செல்லவதாக கல்வெட்டிக் கொடுத்தான் வீரசோழ காங்கயன். இத்தர்மம் காப்பான் திருப்பாதமென் தலைமேல் என்றும், இத்தர்மம் அழியநினைப்பான் ஏழுதலைமுறை அற்றுப்போவான் என்றும் சாவித்தான்.

    சோழனான வீரசோழ காங்கவன் பெருமாள் மன்னனுக்கு அமைச்சராய் படைத்தலைவராய் இருப்பது அவரது உறவினர் என்பதால் ஆகலாம். இதைப் பெயரைக் கொண்டு  அறியமுடிகின்றது. மேலுள்ள மூன்று  கல்வெட்டுகளிலும் பறிமுதல் செய்த இராஜதுரோகிகளின் நில, உடைமைகளை உள்ளூரார் எவருமே வாங்க முன் வராததால் அவற்றை அரசதிகார பொறுப்பில் உள்ளவர்களே வாங்கிக் கொண்டு  கோவிலுக்கு நன்கொடையாகத் தந்து விடுகின்றனர். ஏனெனில் உள்ளூரார்க்கு ஏற்பட்ட அச்சமும், அவரிடம் பெரிதாக பணமும் இல்லாமல் இருக்கலாம் என்ற இரண்டு காரணங்கள் தாம். அதேநேரம் வெளியூரார் வந்து வாங்கிப் போட்டு நிலத்தையும் வீட்டையும் பயன்படுத்த முடியாது ஏனென்றால் அவர்கள் அந்த ஊருக்கே குடிபெயர்ந்தாக வேண்டி நிலை.

    பார்வை நூல்: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை – 8, 2012, பக். 160-161.

    https://veludharan.blogspot.com/2017/09/sri-soundranayaki-samedha-sri.html

    Share
  • நூல் அறிமுகம் – அந்த ஆறு நாட்கள்!

    வல்லமை வாசகர்களுக்கு,

    ஆரூர்பாஸ்கரின் அன்பு வணக்கங்கள்!

    அந்த ஆறு நாட்கள்”  எனும் எனது மூன்றாவது புதினம் (நாவல்)  அமேசான் கிண்டிலில் இந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியானது.  வெளியான நாள்முதல் வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த நூலை வல்லமை  வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சி!

    நாவல் குறித்து நான் எழுதுவதைவிட, சிங்கப்பூர் எழுத்தாளர் திரு. சித்தூராஜ் பொன்ராஜ் (Sithuraj Ponraj) முகநூலில் எழுதிய வாசிப்பனுபவத்தை உங்களுடன் பகிர்வது சரியாக இருக்குமென நினைக்கிறேன்.

    “…Gripping tale என்பார்கள். தொடக்கத்திலிருந்தே வாசகனை அங்கும் இங்கும் அசையாதபடி கட்டிப் போடும் கதை. ஆரூர் பாஸ்கர் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தை 2017ல் அடித்து நொறுக்கிய மிக உக்கிரமான இர்மா புயலைச் சுற்றி அப்படிப்பட்ட ஒரு நாவலைப் பின்னியிருக்கிறார்.

    சகல வல்லமைகளும் வசதிகளும் பொருந்திய வல்லரசு இயற்கைக்கு முன்னால் எதுவும் செய்ய முடியாமல் நிற்கும் நிதர்சனத்தைப் பரணி என்ற மின்சாரக் கம்பெனியில் வேலை பார்க்கும் இந்திய ஊழியரின் கண்களின் வழியே காட்டியிருக்கிறார். அதே இயலாமையைக் காட்டும் விதத்தில் பரணியின் கையில் பணமிருந்தும் புயலுக்கு முந்திய நாள்களில் அவருக்குச் சேமித்து வைப்பதற்காக குடிநீர் வாங்குவதும் பெட்ரோல் வாங்குவதும்கூட சிரமமாக இருக்கிறது. வழக்கமாக மிகுந்த ஒழுங்கோடும், பரஸ்பர மரியாதையோடும் காரியங்களைச் செய்யும் அமெரிக்கர்களிடையே இந்த இயலாமை ஏற்படுத்தும் நுணுக்கமான மாறுதல்கள். ஆரூர் பாஸ்கர் அற்புதம் செய்து இருக்கிறார்.

    இயற்கை பேரிடர் போருக்கு ஒப்பானதுதான். இர்மா புயல் தாக்கத்தை மட்டும் சொல்லாமல் அது வரும் முன்பான நாள்களில் நாவலை பாஸ்கர் தொடங்கியது சிறப்பானது. போரும் பேரிடரும் வரும் முன்பு மனிதர்களிடையே ஏற்படும் வெற்று நம்பிக்கைகளையும், ஆயத்தங்களையும், மனப் போராட்டங்களையும் எடுத்துக் காட்ட இது உதவி இருக்கிறது. அது மட்டுமல்லாமல், இந்த விவரிப்புகளின் மூலமும், அமெரிக்காவை முன்னர் தாக்கிய புயல்களைப் பற்றி இடையிடையே சொல்லியும் பாஸ்கர் அமெரிக்க வாழ்வின் சவால்களை, அரசியலை, கறுப்பர்களுக்கு இழைத்த அநீதியை, அமெரிக்காவில் வேலை செய்யும் இந்தியர்களின் சந்தோஷங்களை, மன சஞ்சலங்களை, நட்பை ஒரு சேர அள்ளித் தந்திருக்கிறார். இதற்கு மிக உதவியாய் இருப்பவை நாவல் முழுவதும் பரவிக் கிடக்கும் தினசரி அமெரிக்க வாழ்வைப் பற்றிய மிக இயல்பான விவரங்கள். இதில் புயலால் அதிகம் பாதிப்படையக் கூடிய மின்சாரக் கட்டமைப்பு ஊழியரைக் கதாநாயகன் ஆக்கியிருப்பது புத்திசாலித்தனம் – அதிக தகவல்களைப் போகிற போக்கில் கொடுக்க முடிகிறது. புயலைப் படிக்கத் தொடங்கித் தற்கால அமெரிக்காவைப் பற்றி முழுமையாக படித்த அனுபவம். அழகான நடை. 

    வாசகர்களுடனான இது போன்ற உரையாடல்கள் உற்சாகமளிக்கின்றன. தொடர்ந்து வாசித்து ஆதரவளிக்கும் அனைத்து வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    *****

    புதின ஆசிரியரைப் பற்றி…

    அமெரிக்காவின் ஃப்ளாரிடா (Florida) மாகாணத்தில் வசிக்கும் திரு. ஆரூர்பாஸ்கர் மென்பொருள் துறையில் பணிபுரிகிறார்.  தனது சொந்த ஊரான ஆரூரை (திருவாரூர்) தனது பெயருடன் சேர்த்து ’ஆரூர் பாஸ்கர்’ எனும் புனைபெயரில் எழுதிவருகிறார்.

    “சிறகுகள் கல்வி அறக்கட்டளை” எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நடத்திவரும் இவர், கவிஞர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர்.

    இவருடைய நூல்கள்: என் ஜன்னல் வழிப்பார்வையில் (கவிதை), பங்களா கொட்டா, வனநாயகன் – மலேசிய நாட்கள், அந்த ஆறு நாட்கள் (புதினங்கள்).

    *****
    இணையதளம்: http://aarurbass.blogspot.com/
    முகநூல்: https://www.facebook.com/aarurbass
    மின்னஞ்சல்: aarurbass@gmail.com
    அமெசான் கிண்டில் முகவரி (இந்தியா):
    https://amzn.to/2UYBi4d
    அமெசான்
     கிண்டில் முகவரி (அமெரிக்கா):
    https://amzn.to/2K1IoEr

    Share
  • சைக்கிளும் வலியும்

    -சேஷாத்ரி பாஸ்கர்

    எனக்கு சைக்கிள் கற்று கொடுத்தவன் என்னை விட வயது ரெண்டு சின்னவன். அவன் எங்கு கற்று கொண்டான் என தெரியாது . மந்தவெளி பக்கம் ஒரு மைதானம் . சுமார் ஒரு வாரம் இருக்கும் . அவன் என்ன சொன்னளாலும் கேட்பேன். வாடகை நான் தான் தர வேண்டும். ஒரு மணி நேரத்தில் பெரும்பாலும் அவன்தான் ஒட்டுவான். கேள்வி கேட்க முடியாது. என்னை மதித்து யார் எனக்கு கற்று கொடுப்பார்? வாடகை வண்டியே தர மாட்டான். சுதர்சன் அவன் பெயர். முதுகில் குத்தி கொண்டே வருவான்.  வலி ஒரு பக்கம். இதில் அவஸ்தையில் எங்கே எதை கற்று கொள்வது. மற்றவர்க்கு ஒரு வாரம் என்றால் எனக்கு ஒரு மாதம். மர மண்டை அப்பவே! ‘நேர பார்’ என்பான்.  பெடல் செய்ய மறந்து விடுவேன். பெடல் செய்யும் போது பிரேக்கை பிடித்துக் கொள்வேன். வண்டி நகராத . அவனுக்கு குத்த வசதி. நல்ல அந்த மைதானம் அளவுக்கு முதுகும் இருக்கும். அசட்டுத்தனம். காந்தியே வந்தாலும் ரெண்டு போடுவார். நான் நின்ற இடத்தில சர்ரென வந்து ப்ரேக் போடுவான். அவ்வளவு எக்ஸ்பெர்டாம். நான் மயங்கி போய் நிற்பேன். அப்படி நடிக்கவாவது செய்யனும். என் பக்கம் வண்டி வந்தது . மணி என்ன எனக் கேட்டேன். நாலு ஆக பத்து நிமிஷம் என்றான். இன்னும் பத்து நிமிஷம்… .அதற்குள் நான் கற்று கொண்டு, முதுகில் வாங்கி கொண்டு. பேசாம குரங்கு பெடல் போதுமா? அடுத்த சுற்று ஆரம்பம். இந்த முறை பின்னால் வந்தவன் மறைந்து போனான். அது தெரியாத வரை எதோ ஓட்டினேன். அவன் இல்லை என்றவுடன். உடல் தளர்ந்தது. ஒரு நிமிஷத்தில் கைக்குள் வேர்வை. போ போ என்றான். குரல் கேட்டது. திரும்ப தைர்யம் இல்லை. வண்டியை போட்டுக் கொண்டு விழுந்தேன். ஹான்ட்ல் பார் வளைந்தது. அவனை காணோம். வண்டியைத் தள்ளி கொண்டு கடைக்குச் சென்றேன். இனி வண்டி தர மாட்டேன் என்றார். முட்டி வலியில் கை சதை பிய்ந்ததில் எதுவும் ஏறவில்லை. பைசா பாக்கிக்கு வீட்டுக்கு ஆள் அனுப்புவேன் என்றார். நான் சட்டை செய்யவில்லை. வீட்டுக்கு வந்து சைபால் தேடினேன். அதை திறப்பதற்குள் வலி ஆறிவிடும் போல் அவ்வளவு கெட்டி பாக்கிங். அப்பா குரல் கேட்டது. அய்யா ..வாசல்ல சைக்கிளில் காய் பை இருக்கு ..எடுத்துண்டு வா. சைக்கிளைப் பார்த்தேன். வலி மறைந்தது!

    Share
  • வெறுப்பின் வெப்பப்பூவின் உயிர் கேட்கும் தருணம்

    -கவிஞர் பூராம்

    கந்தகத்தின்  நெடி
    மூளையில் ஆணியாக
    அறையப்பட்டுவிட்டது!

    எத்திசையில் இருந்து
    தோட்டாக்கள் இதயம்
    பிளக்குமென்ற பயத்தின் உச்சத்தில்
    புத்தகத்தின் பக்கங்கள்
    வெறுமையில் திருப்பப்படுகின்றன!

    யாருமற்ற பேருந்து நி்ன்று
    சென்றாலும்
    நிற்பதற்கே இடமில்லா பேருந்து
    கடந்து சென்றாலும்
    நடுங்கி தளர்கிறது பெண்ணுடல்!

    பேரன்பின் வசந்த காலம்
    என்று வருமோவென
    இருந்து கிடக்கிறது
    ஆன்மாவின் ஒரு துளி.

    Share
  • கிழக்கு கோதாவரி பீமேசுவரர் கோயில் தமிழ்க் கல்வெட்டுகள்

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    ஆந்திர மாநிலம் கோதாவரியின் கிழக்குக் கரையில் அமைந்த திரக்ஷாரமம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் காகிநாடாவிற்கு 28 கி.மீ. தொலைவில்அமைந்துள்ளது. இங்குள்ள பீமேசுவரர் கோயிலில் முதற் குலோத்துங்க சோழன் காலத்தே சிங்கள மன்னர் நல்கிய கொடை பற்றிய இரு தமிழ்க் கல்வெட்டுகள் இங்கு விளக்கப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் தென்சுவரில்  4 & 5 தூண்களுக்கு இடையே கீழிருந்து இடமாக 2 ஆம் கற்பலகையில் பொறிக்கப்பட்டு உள்ளன. இவை(S.I.I. IV ல் எண் 1246) உள்ளன. இக்கோவிலில் 400 மேற்பட்ட கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. இக்கால் இக்கோவில் நடுவண் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதன்காரணமாக உள்ளே புல்தரையும் தோட்டமும் அமைந்து நல்ல முறையில் பேணப்பட்டு வருகின்றது.

    கல்வெட்டுப் பாடம்:

    1. ஸ்வஸ்திஸ்ரீ கொலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு 43 _ _ _ _
    2. க தேவர்  பொன் கொண்டருளி சிங்களப்பிடாரர்க்கு வலிச _ _ _ _
    3. பரிசாவது இது இறையிலி தவிர்வதாகவும்  அந்தராயம் உட்பட்ட இறை த(விர்)
    4. வ(தா)கவும் மஹேஸ்வர மடத்திலே முப்பது கலம் உண்பதாகவும் தம்முடை
    5. ய திருக்கையாலே எழுத்திட்டுத் தந்தது. இதுக்குப் (பதினைம்ப
    6. தப்) பதினைம் பலத்தால் பதினைஞ்சு கலமும் பத்துப் பசுவும்
    7. இரண்டு அடிமையும் சத்தராயவர்கம் நிற்கக்  கடவதாக. இத்தன்ம
    8. ம் அழிவு பண்ணுவான் தங்கள் அம்மைய்க்கு த் தானே மின்னாளன். இத்த
    9. மம் நட(ப்பி)த்தான் ஸ்ரீபாதம் இரண்டும் சிங்களப்பிடாரனேன் த
    10. லை மேலன லிகிதம். தாகரேமிசுராசாரி அயன வீரராஜேந்த்ர சோழ ஆ
    11. சார்ய:

    சொற்பொருள்: 

    இறையிலி தவிர்வதாக – வரிச்சலுகை நீங்கியதாக; இறை தவிர்வதாக – வரி நீங்குவதாக; நிற்க –இருக்க;  மின்னாளன்- பாலுறவில் துணைவன்; அயன – ஆயினவர், ஆனவர், ஆகியவர்; தெலுங்கில் அய்ன.

    கல்வெட்டு விளக்கம்:

    முதற் குலோத்துங்க சோழனின் 43 ஆம் ஆண்டு ஆட்சியின் (கி.பி. 1113) போது நிலதானம் செய்து (கல்வெட்டு சிதைந்துள்ளதால் தெளிவாக பொருள் கொள்ள இயலவில்லை) சிங்களப்பிடாரர் இறையிலி நீங்குவதாகவும் அந்தராயமான உள்நாட்டு வரி தவிர்வதாகவும் சொல்லியதோடு மகேசுவர மடத்தில் உண்பதற்கு முப்பது கலம் அளவிற்கு நெல்லை அளிக்கத் தம் கையாலே கையொப்பமிட்டுத் தந்தார். பதினைம்பலத்தால் அளந்து பதினைந்து கலம் நெல்லும் 10 பசுவும்  2 அடிமையும் சந்திராதித்தவர் உள்ள வரை செல்வதாக விட்டார். இந்தக் கொடையை அழிப்பவன் தன் அன்னைக்குத் தானே கலவித்துணைவன் ஆகுவன். இந்தக் கொடையைத் தடையின்றி நடப்பிப்பான் கால் இரண்டும் சிங்களப்பிடாரன் தலைமேல் எனக் கூறி மடல் எழுதினான்.  இதை கல்வெட்டாய் பொறித்தவன் அயன வீர்ராஜேந்திர சோழ ஆசாரி எனபவன்.

    பொதுவாக இறையிலி தருவார்கள் ஆனால் இங்கு அது நீங்கப்பட்டு இறை தண்டப்படவேண்டும் என்பது போல் இருப்பது குழப்பம் அளிக்கின்றது. தவறான சொல்லாட்சியாகத் தெரிகின்றது. எழுத்து சிதையாமல் இருந்திருந்தால் தெளிவான விடை கிட்டிருக்கும். இதில் 2 அடிமையும், 10 பசுவும் தரப்பட்டது விளக்கு எரிப்பதற்காகவா? கல்வெட்டில் செய்தி முழுமையாக, சரியாக, தெளிவாக இல்லாமல் உள்ளது.

    கல்வெட்டுப் பாடம்:

    1. (ஸ்வஸ்திஸ்ரீ) கொலோத்துங்க சோழ (தேவர்)கு யாண்டு 4(9 ஆவ)
    2. து நாள் 70 கங்கைகொண்ட சோழ வளநாட்டு குட்டவாடி நாட்டுப் பெரிய
    3. தாக்கரம்பை பீமீஸ்வரம் உடைய ம(ஹாதேவர்க்கு சூர்)(ய்)ய கிராண நிமி(ர்)த்தத்து வீ
    4. ழத்து விக்கிரம (பாஹு)க்கள் பிரதானி உய்யவந்தான் திருவண்ணாமலையன் வி
    5. ஜயபாஹு மாசாத்து
    6. நாயன் _ _ _ _ கோதாவிரிக் கீழ்கரைக் கொண்டிகரு
    7. டு தாக்கரம்பை ந(ரே)ந்த்ர ஈசுரம் உடைய மஹாதேவர் கோயில் சமீபம் தீர்
    8. த்தக் கரையில் மேற்படியான் பிரதிஷ்டித்த பன் மாஹேஸ்வரன் மடத்தில் உ
    9. ண்ணக் கடவ  தபஸ்யர் பதினை(ய்)வரும் இவர்களுக்கு அமுது செய்யக் க
    10. லம் பதினைஞ்சும் சட்டுவம் ஒன்றும் ஆக உருப்பதினாரினால் நிறை நூ
    11. ற்று முப்பத்தேழு பல வரையும் பெண்ணாடினம் ஒன்றும் குட்டாவாடி நா
    12. ட்டு ஊருள்இடப்பள்ளி அளம் வளையிற் சுற்று முப்பது வட்டி நிலமும் நகர
    13. மும் _ _ _ _ தோட்டமும்  _ _ _ _ _ த செல்கையுட்பட அந்தராயமும்
    14. _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

    பகுதி 2

    1. ப் பத்தரத்தத்தம் சந்தித்தவர் செய்யவும் உண்ணவு
    2. ம் மடம் அழிவு செய்யும் திருக்காளத்தி உடையான் ஆன பலவிளக்குப்
    3. பரிசாரர் வசம் இட்டோம்// ஸ _ _ _ அ ஸம் நை பஹுபிர் வஸுதா
    4. தத்தா ப

     சொற்பொருள்:

    தாக்கரம்பை – இடப்பெயரான திரக்ஷாரமம் தமிழில் இப்படி குறிக்கப்பட்டுகின்றது; பிரதானி – முதன்மை அரசலுவலர்; தபஸ்யர் – சிவயோகியர்; சட்டுவம் – கரண்டி; பெண்ணாடினம் – பெண் ஆடு; அளம் – உப்பளம்; வளை – சூழ்ந்த இடம்; பத்திரதத்தம் – ஓலைஆவணம் தருதல்; சந்தித்தவர் – சந்திராதித்தவர் வரை

    கல்வெட்டு விளக்கம்:

    முதற் குலோத்துங்க சோழனின் 49 ஆம் ஆண்டு ஆட்சியின் (கி.பி. 1119) போது கிழக்கு கோதாவரியான கங்கைகொண்ட சோழவளநாட்டில் குட்டவாடி நாட்டில் உள்ள பெரிய தாக்கரம்பை ஊரில் கோயில் கொண்ட பீமேசுவரர்க்கு சூரியகிரகணம் காரணமாக ஈழத்து விக்கிரமபாகுவின் முதன்மை அரசலுவலர் உய்யவந்தான் திருவண்ணாமலையான் விஜயபாகு மாசாத்து நாயன் என்பான் கோதாவரியன் கிழக்குக்கரையில் கொண்டிக்கருடு தாக்கரம்பை நரேந்திரேசுவரம் இறைவர்க்கு அண்மையில் ஆற்றங்கரையில் மேற்படியானவர் நிறுத்திய பன்மாகேசுவரர் மடத்தில் பதினைந்து சிவயோகிகள் உண்பதற்கு பதினைந்து கலம் நெல்லும் கரண்டி ஒன்றும் ஆக பதினாறு பேருக்கு 137 பலம் வரையும், பெண் ஆடு ஒன்றும், குட்டவாடியில் இடப்பள்ளியில் உப்பளம் சூழ்ந்த இடத்தில் சுற்றியுள்ள 30 வடி நிலமும், நகரமும், தோட்டமும் எல்லா வரியும்நீக்கிக் கொடுத்தார். இந்த தருமம் சந்திராதித்தவர் வரை செல்க எனவும் இவற்றையும் மடத்தையும் அழிப்பவன் பாவத்திற்கு உட்படுவான் என்றும் குறிக்கவருவதை புரிந்து கொள்ள முடிகின்றது. பலவிளக்கு பரிசாரகர் வசம் ஒப்படைக்கப்பட்டது.  13 ஆம் வரிக்கு பின் கல்வெட்டு சிதைந்துள்ளது. அதனால் பொருளை சரியாக விளக்க முடியவில்லை. பகுதி இரண்டு வேறு ஒரு கல்வெட்டு செய்தி ஆகலாம். பகுதி 2 முழுமையாக செய்திகளைக் கொண்டிருக்கவில்லை. அது வேறு ஒரு கல்வெட்டுச் செய்தி ஆகலாம்.

    விக்கிரமபாகு ஈழத்தில் பொலன்நறுவையை கி.பி. 1111 – 11132 வரை ஆண்ட சிங்கள மன்னன். இவனது முதன்மை அலுவலர் வழங்கிய கொடைகளைப் பார்க்கும் போது இவன் சார்பாகவே அவன் வழங்கியது என்று தெரிகின்றது. பீமேசுவரமும் நரேந்திரீசுரமும் ஒரே ஊரில் அமைந்த இரு வேறு கோவில்கள் போலும். மேல் இரண்டு கல்வெட்டும் சிங்கள ஆட்சியாளர் தொடர்புடையது என்பது தெளிவு. ஒரு கோவிலுக்கு யார் விரும்பினாலும் பொருளாக எவ்வளவு வேண்டுமானாலும் தானம் செய்யலாம் ஆனால் வேறு ஆட்சியாளர் ஆளும் நிலவரம்பில் சென்று இன்னொரு ஆட்சியாளர் அந்தராயம் உள்ளிட்ட வரிவிலக்கு தரமுடியுமா? அந்த அதிகாரம் எப்படி வந்தது?  என்பதே எனது விளங்காப் புதிராக உள்ளது.

    பார்வை நூல்: Ephigraphica Andhrica Vol I

    https://eastgodavari.nic.in/tourism/temples/lord-bhimeswara-swami-temple-draksharama/

    https://www.google.com/maps/uv?hl=en&pb=!1s0x3a378d12c6558be3:0x8d61e2b9749eca81!2m22!2m2!1i80!2i80!3m1!2i20!16m16!1b1!2m2!1m1!1e1!2m2!1m1!1e3!2m2!1m1!1e5!2m2!1m1!1e4!2m2!1m1!1e6!3m1!7e115!4shttps://lh5.googleusercontent.com/p/AF1QipPqjALou3VymtBTTA38DtNp4ujtaLQzv2UlUBuT%3Dw213-h160-k-no!5sdraksharamam+bhimeswara+photos+-+Google+Search&imagekey=!1e10!2sAF1QipPqjALou3VymtBTTA38DtNp4ujtaLQzv2UlUBuT&sa=X&ved=2ahUKEwiEhqei2JnhAhULuo8KHdVgBIwQoiowFHoECA0QBg

    Share
  • சேக்கிழார் பா நயம் – 31

    – திருச்சி   புலவர் இரா. இராமமூர்த்தி

    இறைவன்   திருவருள்  நிகழ்ச்சிகள்  உலகில்  நிகழும்போது,  இயற்கையாகவே இசைக்கருவிகள்  ஆர்த்து ஒலிக்கும். திருஞான  சம்பந்தர்  அவதரித்த    நேரத்தில்,

    மங்கல முழக்காகிய தோற்கருவியும் , தாளமாகிய கஞ்சுகக்கருவியும், சங்கு, படகம், தாரை முதலான காற்றுக் கருவிகளும்  இசைப்பார்  இல்லாமல்  தாமாகவே   வானில்  எழுந்து  ஒலித்தன! இதனை,

     ‘சங்கபட கங்கருவி தாரைமுதலான, எங்கணுமி யற்றுபவரின்றியு மியம்பும்,
     மங்கல முழக்கொலி’’ 

    என்று  சேக்கிழார் பாடுவார்.   முன்னரே  , ’மாதவம் புரி  தென்திசை  வாழ்ந்திடத்  தீதிலாத்திருத்  தொண்டத்தொகைதர   வந்த  சுந்தரரைத்  தடுத்தாட்கொண்ட போது,  இயற்கையாகவே  பூமியிலுள்ள  இசைக்கருவிகள் ஐந்தும்  முழங்கின! அதன் ஓசை வானுலகை எட்டியது!  அப்போது வானவர்கள்  பூமாரி பொழிந்தனர்; வேதங்களின் ஓசை  எங்கும்நிறைந்தது!  -. பூவுலகினின்று போந்த ஓசையைந்தும் விசும்பு சென்று நிறைய, அதற்குப் பிரதியாய் விண்ணினின்று போந்த பூமாரி மேதினி நிறைந்த தென்ற அழகு காண்க) இதனைச் சேக்கிழார்,

    ‘’எண்ணிய வோசை யைந்தும் விசும்பிடை நிறைய வெங்கும்
     விண்ணவர் பொழிபூ  மாரி மேதினி நிறைந்துவிம்ம,
    மண்ணவர் மகிழ்ச்சிபொங்க  மறைகளும் முழங்கியார்ப்ப’’

    எனப்பாடுகிறார். இவை  இரண்டும்   சிறந்த நிகழ்ச்சிக்கான அடையாளங்க ளாகும்! அடுத்து இறைவன்  சுந்தரரை நோக்கிக்   கூறும்பாடல் நயம்மிக்கதாகும்!

    இறைவன்  தாமே சுந்தரர்  செயல்களை நோக்கிச் , சுந்தரருக்கு ‘வன்றொண்டன் ‘ என்ற திருப்பெயரை  இட்டருளினார்! ‘’அந்தப் பெயரை நாமிட்டதால், நீயே  உனக்கு உரியதாய்ப்  பெற்றுக்கொண்டாய்!’’  என்கிறார்! இதனை இறைவன் ,

    ‘’மற்றுநீ  வன்மை பேசி  வன்றொண்டன்  என்னும் நாமம்  பெற்றனை!’’

    எனக் கூறினார்! சுந்தரர் இறைவனைப் ‘’ பித்தனோ, மறையோன் ?’’ என்றும், தம் சாதி பெருமை தந்த  வலிமையை வாதத்தில் ஏற்றியும்   கூறியதை , ‘’வன்மை பேசி ‘’ என்ற தொடரால்  குறிப்பிடுகிறார்!  அதனால்  சுந்தரர் எடுத்துக்கொண்ட  உரிமையைப் பாராட்டி, ‘’வன்றொண்டன்‘ என்ற திருப்பெயரைப் பெற்று  விட்டாய்!’’ என்று கூறினார்! இவ்வாறு இறைவனால் தரப்பெற்ற  பெயரைச் சுந்தரர்  விருப்புடன் ஏற்றுக் கொண்டார்! அதனால்  தம் சொற்றமிழ்ப் பாடல்களில்  பல இடங்களிலும் எடுத்துக் போற்றியுள்ளார்!

    ‘’அடியேனைத்  தாமாட்கொண்டநாட் சபைமுன், வன்மைகள் பேசிட வன்றொண்ட னென்பதோர்  வாழ்வு தந்தார்………’’ (நம்பிகள் தேவாரம் – திருநாவலூர் – 2) முதலியவை காண்க. இதுபோலவே நம்பிகள் சரித நிகழ்ச்சிகள் பெரும்பாலும் அவரது தேவாரத்திருவாக்குக்களாகிய அகச்சான்றுகளாலே மிகத் தேற்றமாய்  விளங்குதல் காணத் தக்கதாம். சுந்தரருடைய  பிள்ளைத் திருநாமம்  ‘ஆரூர்நம்பி’  என்பதாகும் . ‘’வன்றொண்டன்’’ என்பதுதீட்சாநாமம்.

    பெண்ணும்  ஆணுமாய், உடலழகை ஐம்புலன்களால் துய்க்கும்  நிலை எளிய மானிட வாழ்க்கை. ஆனால் இறைவனின்  பேரழகை  அறுவகைப் புலன்களாலும் ஆரத்  துய்ப்பது அடியார்களின் வாழ்க்கை.

    ‘’மாசில் வீணையும்  மாலை மதியமும்
     வீசு   தென்றலும்  வீங்கிள  வேனிலும்
     மூசு  வண்டறை  பொய்கையும் போன்றதே
     ஈசன் எந்தை இணையடி நீழலே ‘’

    என்பது , சுண்ணாம்புக் காளவாயில், அப்பரின் உடல் , வெந்து நொந்தபோது, அந்நீற்றறை  மாசில் வீணை ஓலியாய் செவிக்கும், மாலை மதியமாய் கண்ணுக்கும், வீசுதென்றலாய்  உடலுக்கும், வீங்கிளவேனில்  கனிகளாய் நாவுக்கும்,  மூசுவண்டுகள்  ஒலிக்கும் பொய்கை மணமாய் மூக்குக்கும் இன்பம் தந்ததோடு , உள்ளத்தில்  ஏற்பட்ட நிரதிசய இன்பமாய் மனத்துக்கும்  பேரின்பமாகி  ஆறத்  துய்க்க  வைத்தது!  ஆகையால்  பக்தியுணர்வே  பேரின்பம்!  இந்த இன்பத்தைத்  தாமும் துய்த்துப்  பிறரும் துய்க்க வைப்பது அடியாரின் அனுபவங்களை  விளக்கும் பாடலாகும். அவ்வாறு அடியார் இறைவனைப் போற்றிப் பாடுவதே இறைவழிபாடாகும்.

    ‘’இங்குத் தொண்டுசெய்யும் பலவகை வழிபாடுகளையும்உட்கொண்ட பொதுப் பெயராய்நின்றது. ‘அருச்சனை வயலுளன்பு வித்திட்டு’ (திருவண்டப் பகுதி) என்ற திருவாசகம் காண்க. அன்பிலிருந்து ஊறிப்பெருகியதும் அதனாலே சிறப்பின் மிகுந்ததும் ஆகிய பாட்டு என இவற்றைப் பாட்டுக்கு அடைமொழியாக்கி உரைக்க. என்னை வலிய ஆட்கொண்டது மன்றுளீர் செயல் என்று தெளிந்த நம்பிகளுக்குத் தம்முடைய பணியாவது இன்னதென்று காட்டியவாறு. அன்பு மிகுதியினாலே தாமே மேல் எழுந்து வழியும் பாட்டே சிறந்ததாய் இறைவன் மகிழ்ந்து அருளுவன் என்க.’’ என்பது    சிவக்கவிமணியார்   விளக்கம்.

    இறைவனே நான்மறையையும் அருளினார் அந்நான்மறைகளை நாள் தோறும் ஓதிய   ஞானியரே, நான்மறையின் பொருளுணர்ந்து மகிழ்வர். எளிய வாழ்க்கை உடைய மானிடருக்கு,   இனிய  தமிழால் கூறும்   எல்லாமே  பொருளின்பம்தரும். இந்த இன்பத்தை எல்லாரும்    துய்க்கும்  போது, அவர்களின்  ஆன்ம  நாயகனாய் உயிரெங்கும் உள்ளவனாகிய  ஆண்டவனும்  இன்பம்  அடைவான் போலும்!  இதனை,

    கோழை மிடறாக   கவி கோளும்  இலவாக  இசை  கூடும் வகையால்
    ஏழை  அடியார்  அவர்கள்  யாவை  சொன்ன  சொல்மகிழும்  ஈசன் ‘’

    என்று திருஞானசம்பந்தர் அருளுகின்றார்!இதே இன்பத்தைத்   தோத்திரங்களின்    பொருள் உணரும்  பாமரரும் அடைகிறார்கள். இதனை மிக விளக்கமாக, நால்வர் நான்மணி  மாலை  கூறுகின்றது!

    ‘’உமையம்மை  உடனாய முக்கண்ணனாகிய அனைத்துக்கும் காரணன்  ஆகிய  சிவபிரான்  அருளிய  வேதமோ, இறைவனின்  பழம்பெருமையை  எடுத்துரைக்கும்  திருவாதவூரராகிய  மாணிக்க வாசகர்  திருவாய் மலர்ந்து அருளிய  திருவாசகம் என்னும் தேனோ, எது சிறந்தது? ‘’ எனக் கேட்பீராயின் அதற்கு விடை கூறுகிறேன்!  ‘’வேதம் ஓதினால் பாமரர்கள்  அதைக் கேட்டு  விழிகளில் கண்ணீர் பெருகி , உள்ளம் உருக மாட்டார்கள்! ஆனால் மாணிக்க வாசகரின்  திருவாசகப் பாடலை ஒரே ஒருமுறை  ஓதக்கேட்டால், கல் போன்ற  வன்மையான  மனமும்  கரைந்து உருகும்;   கண்களிலிருந்து மணற்கேணியில்  ஊறிப்பெருகும் நீர்போலக்  கண்ணீர்  பெருகும்; உடல் சிலிர்க்கும்; மனம் பதைக்கும்; அப்பாடலின் பொருள் உணர்ந்து அப்பாட்டுக்கு  உரிய இறைவனின் அடியார்களாக , எளிய பாமரரும்  ஆவார்கள்! மற்ற எவரும் இதே நிலையை அடைவார்கள்! இதனை  சிவப்பிரகாசர் ,

    ‘’விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கட்
    காரணன் உரையெனும் ஆரண மொழியோ
    ஆதிசீர் பரவும் வாதவூர் அண்ணல்
    மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ
    யாதோ சிறந்த தென்குவீ ராயின்
    வேதம் ஓதின் விழிநீர்ப் பெருக்கி
    நெஞ்சநெக் குருகி நிற்பவர்க் காண்கிலேம்
    திருவா சகமிங் கொருகால் ஓதிற்
    கருங்கல் மனமுங் கரைந்துகக் கண்கள்
    தொடுமணற் கேணியிற் சுரந்துநீர்ப் பாய
    மெய்மயிர் பொடிப்ப விதிர்வதிர்ப் பெய்தி
    அன்பர் ஆகுநர் அன்றி
    மன்பதை உலகில் மற்றையர் இலரே.’’

    என்பது  அப்பாடல்!   இறைவன்  தமிழ்ப் பாட்டின் சிறப்பை உணர்ந்து, தாம் ஓதும் வேதத்தைத்  தமிழில் ஆக்கி,  ஒலிக்கச்  செய்து அதனைக் கேட்க  விரும்பினார்! இவை  அனைத்தையும் சேர்த்து,

    மற்றுநீ  வன்மை பேசி  வன்றொண்டன்  என்னும் நாமம்
    பெற்றனை! நமக்கும்  அன்பின்  பெருகிய  சிறப்பின் மிக்க 
     அர்ச்சனை  பாட்டேயாகும். ஆதலால்  மண்மேல் நம்மைச் ’
    ’சொற்றமிழ்  பாடுக  என்றார்,  தூமறை பாடும் வாயார்! ‘’

    என்று சேக்கிழார்  சுவாமிகள்  அருளுகின்றார்!  இந்தப்பாடல், அடியார்களின்  வழிபாட்டு முறையையும்,  சிறந்த சொற்களையும்  பொருளுணர்ச்சியையும் உடைய தமிழ்ப்  பாடலின்  பெருமையையும், எளிமையையும், உள்ளம் உருக்கும் பக்தி  நெறியையும் என்றும்,   பாராயணம்  செய்யத்தக்க  அருமையையும்,  இது  சிவபிரானுக்கே  விருப்பம் உடையது  என்பதையும் எடுத்துக் காட்டுகிறது!

    Share
  • திருவிடைமருதூரில் சோழர் காலத்தில் சாக்கைக் கூத்து நாடகம் பற்றிய கல்வெட்டு

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    முத்தமிழில் ஒன்று நாடகத் தமிழ். இந்த நாடகக் கலை கூத்துவடிவில் சோழர் கால ஆட்சியில் கோவில்களில் நடத்தப்பெறுதற்கு வேண்டிய கொடையை நல்கி நல்லாதரவு தந்து வளர்த்ததற்கு சான்றாக உள்ளவையே கீழ் உள்ள கல்வெட்டுகள். இவை இரண்டும் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கேசுவரர் கோவில் மண்டப வடக்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ளன.

    1. இரண்டாம் ஆதித்ய கரிகாலனின் ஆட்சியில் சாக்கைக் கூத்தனுக்கு பசிக்கு கூலியாக ஒரு வேலி நிலம்.

    கல்வெட்டுப் பாடம்:

    ஸ்வஸ்திஸ்ரீ பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி பந்மற்கு யாண்டு 4 ஆவது திருவிடைமருதில் ஸ்ரீ மூலஸ்தானத்தில் பெருமானடிகளுக்கு ஆரியக் கூத்தாட ஸ்ரீ காரியம் ஆராய்கின்ற சிற்றிங்கண் உடையான் கோயில் மயிலை ஆன பராந்தக மூவேந்த வேளாரும் திரைமூர் நாடுடையாரும் திருவிடைமருதில் நகரத்தாரும் தேவகந்மிகளும் நாடக சாலையிலேயிருந்து கித்திமறைக்காடன் ஆன திருவெள்ளறை சாக்கைக்கு நிவந்தஞ் செய்து குடுக்க என்று ஏவலால் இத்தேவர் தேவதானம் விளங்குடி நிலத்தில் பறைச்சேரி பத்து உள்பட நிலம் வேலியும் இவ்வாண்டின் எதிராமாண்டு முதல் இந்நிலங்கொண்டு தைப்பூசத் திருநாளிலே ஒரு கூத்தாடுவதாகவும், திருத்தம் ஆடின பிற்றை நாள் துடங்கி மூன்று கூத்தாடுவதாகவும்,  வைகாசித் திருவாதிரையின் பிற்றைநாள் தொடங்கி மூன்று கூத்தாடுவதாகவும் ஆக இந்தக் கூத்து ஏழு அங்கமும் ஆடுவதாகவும் பண்டாரத்தே பதினாற்கல நெல்லு கொற்றுப் பெறுவதாகவும் இந்நெல்லும் விலை அடைப்படி நெல்லும் கொற்றும் இரட்டி அவ்வவ் வாட்டையாடுகவும். இப்பரிசு கித்திமறைகாடனால் திருவெள்ளறை சாக்கைக்குச் சந்திராதி _ _ _ _ _

    சொற்பொருள்:  
    காரியம் ஆராய்கின்ற – கருத்தாலோசிக்கும், consultant; சிற்றிங்கண் – தணிக்கை செய்கிற. முதுகண் என்பதற்கு எதிர்ச்சொல் ஆகுமோ; கோயில் மயிலை –     ; தேவகன்மிகள் – இறைப்பணியாளர்; நிவந்தம் – கோயிற்பணி செலவு; ஏவல் – மேலிடத்துக் கட்டளை; எதிராமாண்டு – ; திருத்தம் – பத்தாம் நாள் நடைபெறும் தீர்த்தவாரி; கொற்றும் – உணவு; கூத்து – ஆடி நடிப்பது.

    கல்வெட்டு விளக்கம்:  

    இரண்டாம் ஆதித்ய கரிகாலனின் 4 ஆம்ஆண்டு ஆட்சியில் (கி.பி. 968) திருவிடைமருதூர் மூலவருக்கு ஆரியக் கூத்தாடுவற்கான திருப்பணி பற்றி கருத்தாலோசனை செய்கின்ற தணிக்கை செய்கின்ற அதிகாரியான பராந்தக மூவேந்த வேளாரும், திரைமூர் நாட்டவரும், திருவிடைமருதூர் நகரத்தாரும், இறைபணியாளர்களும், நாகடசபையில் கூத்தாடும் திருவெள்ளறை சாக்கையான கித்திமறைக்காடன் என்பானும் இவனுக்கு பணிக்கூலி கொடுக்க மேலிடக் கட்டளையால் ஒன்று கூடி ஆலோசித்து விளங்குடியில் இவ்இறைவர்க்கு உள்ள தேவதான நிலத்தில் பறைச்சேறிபற்று உள்பட ஒரு வேலி நிலத்தை  கோயிற்பணி கூலியாக ஏற்றுக் கொண்டு எதிர்வரும் ஆண்டு முதல், இதாவது, ஐந்தாம் ஆட்சி ஆண்டு முதல் தைப்பூசத்தன்று ஒரு கூத்தாடவும், தீர்த்தவாரி கழிந்து வரும் பின் மூன்று நாளும், வைகாசித் திருவாதிரைக்கு பின் மூன்று நாளும் ஆக இந்தக் கூத்து ஏழு அங்கங்கள் ஆடவேண்டும். கோயில் அலுவலகத்தில் 16 கலம் நெல், உணவு பெற்றுக் கொள்ளவும் இசைவு தரப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் கூத்து நடத்த 16 கல நெல்லும், விலை அடைப்படி நெல்லும், உணவும் இரட்டிப்பாக பெற்றுக் கொள்ளலாம். இந்த வெகுமதிப் பரிசு திருவெள்ளறை சாக்கையருக்கு கித்தமறைக்காடனால் சந்திராதித்தர் வரை தொடர்வதாக என்று குறிக்கப்பட்டுள்ளது.

    திருவிடைமருதூர் கோவிலில் நாடகசபை ஒன்று இருந்ததையும் அதில் மூலவருக்காக ஆண்டுதோறும் கூத்து நடைபெற ஏற்பாடு ஆனது பற்றியும் அறியமுடிகின்றது. சாக்கை கூத்து ஆடியவர்கள் பறையர்கள் என்பதால் கித்தமறைக்காடனுக்கு பறைச்சேரியில் உள்ள பற்று ஒதுக்கப்படுகின்றது. அதைக் கொண்டு அவர் பறையர் என்பதையும் அறிய முடிகின்றது. புராணத்தில் பக்த நந்தனார் தீண்டாமைக்கு ஆட்பட்டு கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டார். ஆனால் இங்கோ கித்திமறைக்காடன் என்ற பறையர் கோயிலில் அமைந்த நாடக சபையில் கூத்து நிகழ்த்துகிறார். இவ்விரண்டு செய்திக்கும் எத்தனை முறண். இது சோழர் காலத்தில் தீண்டாமை இல்லை என்பதற்கு சான்று. எவரும் தாழ்த்தி ஒடுக்கப்கவில்லை என்பதற்கு சான்று. இதனால் இரண்டாயிரம் ஆண்டு ஒடுக்குமறை என்பது பொய்யன்றோ?

    2. முதற் பராந்தகன் காலத்தில் உடுக்கை அடிப்போனுக்கு பணிக்கூலியாக நிலம்.

    கல்வெட்டுப் பாடம்:

    ஸ்வஸ்திஸ்ரீ மதுரைகொண்ட கோப்பரகேசரி பந்மற்கு யாண்டு 17 ஆவது திருவிடைமருதூருடையாருக்கு ஸ்ரீ காரியம் ஆராய்கின்ற குறும்பில் வாஸுதேவனார் ஆராய்ச்சியில் திரைமூர் ஸபையாரும் _ _ _ _ _ த _ _ _ ரல் நகரத்தாரும் திருக்கோயிலுடையார்களும் பதிபாத மூலத்தாரும் நாடக சாலையிலிருந்து திருவிடைமருதூருடையார்க்குத் திருஓலக்கத்து மூன்றுஸந்தியும் உடுக்கை வாசிப்பான் ஒருவனுக்கு விளங்குடி தேவர் நிலத்தில் நிவந்தமாகச் செய்த நிலம் முக்கால்.

    சொற்பொருள்:  
    ஆராய்ச்சி – கருத்தாலோசனை, consult; பதிபாத –  சிவன்கோயில் பூசகர்; திருஓலக்கம் – நாயனம், நாதஸ்வரம்.

    கல்வெட்டு விளக்கம்:  

    முதற் பராந்தகனின் 17 ஆம் ஆண்டு ஆட்சியின் (கி.பி. 924) போது திருவிடைமருதூர் ஈசன் கோயிலில் கருத்தாலோசனை செய்கின்ற குறும்பில்லைச் சேர்ந்த வாசுதேவன் நடத்தின கருத்தாலோசணை கூட்டத்தில் பங்கெடுத்த திரைமூர் கருவறை பட்டர்களும், நகரத்தவரும், திருக்கோயில் பணியாளர்களும், சிவன்கோயில் பூசகரும் கூடி நாடக சபையில் இருந்து திருவிடைமருதூருடைய ஈசர்க்கு நாதாவரம் வாசிக்கின்ற போது மூன்று கால பூசனையின் போது உடுக்கை அடிப்பவனுக்கு விளங்குடியில் உள்ள தேவதான நிலத்தில் தானமாகக் கொடுத்த நிலம் முக்கால் பங்கு வேலி.

    கூத்து, நாடகம் முதலியவை கோவிலகளில் இராசராசனுக்கு முன்பே பல்லவர் காலத்திலேயே தொடங்கி விட்டன போலும்.  உடுக்கை அடிப்பவர் பறையர் என்பதால் விளங்குடியில் அவருக்கு நிலக் கொடை வழங்கப்பட்டது.

    பார்வை நூல்: திருவிடைமருதூர் கல்வெட்டுகள், வெளியீடு 1960, ஸ்ரீ மகாலிங்க சுவாமி தேவாதானம்.

    இந்த மகாலிங்க சுவாமி தேவஸ்தானம், திருப்பதி தேவஸ்தானம் போல ஆங்காங்கே உள்ள திருக்கோயில் நிருவாகத்தார் தமது கோயில் கல்வெட்டுகளை அச்சில் ஏற்றி இருந்தால் தமக்கு இப்போது எவ்வளவோ கல்வெட்டுகள் ஆராயக்கிட்டி இருக்கும்.

    Share
  • தேடி அலைந்த பாதியில் கிடைத்த மீதி

    -கவிஞர் பூராம் 

    அதிகமாகி விட்டது வயது
    பாா்க்காதே அதையெல்லாம்!

    உடம்பு இப்படி நடுங்குகிறது
    மறைக்க முடியவில்லை
    அவளுக்குத் தெரிந்தால்
    எனது வீரமெலாம் போச்சு!

    பயந்து ஒளிந்து அவளது
    அழகு உதட்டைப் பாா்த்தேன்
    அனுமதித்தால் ஒரு முத்தம்
    எதற்கு கஞ்சத்தனம்
    அவளது விருப்பம் வரை!

    ஓடி எங்காவது ஒளிந்துகொள்
    அவளுக்குத் தெரிந்துவிட்டது
    மனதில் நீ எண்ணிய
    முத்தம்,
    கடந்து சென்றாள் என்னையும்
    எனது எண்ணத்தையும்!

    மூன்று ஆண்டுகள் அறிமுகம்
    எனக்கும் அவளுக்கும்
    பேசுவதற்குச் சொற்களைத்
    தேடிக்கொண்டிருக்கிறேன்

    ஒவ்வொரு முறையும்
    சென்றுகொண்டு இருக்கிறாள்
    ஏமாற்றத்துடன்!

    பேராசையின் பெருவிருப்போடு
    அவளோடு கலந்த பாா்வை
    உதடுகளில் ஈரம் இன்னும்
    மறையவில்லை
    நடுங்கும் உடலோடு நான்!

    போய்க்கொண்டு இருக்கிறாள்
    காத்திருக்காமல் எனது மனதையும்
    அழைத்துக்கொண்டு!

     

    Share
  • (Peer Reviewed) சங்க இலக்கியத்தில் மணச் சடங்குகள்

    முனைவர் க. இராஜா
    இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
    ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    காட்டேரி, ஊத்தங்கரை, கிருட்டிணகிரி (மா.)

    சங்க இலக்கியத்தில் மணச் சடங்குகள்

    சடங்கு நிகழ்த்தப்படும் இடம், காலம், சூழல், தேவை, நோக்கம் போன்ற காரணங்களை முன்வைத்து அவற்றின் தன்மைகள் வேறுபடுகின்றன. சடங்குகள் செயல், நிகழ்த்துதல், நனவு, தன்னார்வம், கருவி, பகுத்தறிவு, கூட்டுத்தன்மை, சமூகம், சமூக உறவுகள், புனைவு, குறியீடு, வெளிப்பாடு, நடத்தை, அழகியல், புனிதம் ஆகியவற்றோடு தொடர்புடையதாக அமைகின்றது.

    சடங்குகள் வாழ்க்கை வட்டச் சடங்குகள், வளமைச் சடங்குகள், வழிபாட்டுச் சடங்குகள், திருவிழாச் சடங்குகள், மந்திரச் சடங்குகள், பிற சடங்குகள் என வகைப்படுத்தப்படுகின்றன. அவற்றுள் நிச்சயதார்த்தம், சிலம்பு கழித்தல், மணநாள் குறித்தல் போன்றன வாழ்க்கை வட்டச் சடங்குகளாகும். மணநாளில் நிகழும் சடங்குகள் மணச் சடங்குகள் எனப்படும்.

    ‘மணம்’ என்ற சொல் நிறைந்த பொருளுடையது. மணம் என்பதன் வேர்ச்சொல் மண், மண்ணின் நலன்களைப் பெருமளவில் நுகர்வதற்கு வாய்ப்பளிப்பது ஆகும். எனவேதான் நல்லறமாக இல்லறத்தை மண வாழ்க்கை என்றனர் (நாஞ்சில் ஆனந்தன், சங்க இலக்கியத்தில் மனித உரிமைகள், பக்.27-28).

    திருமணமும் அதற்குரிய சடங்குகளும் சமுதாயத்தில் எக்காலத்தில் தோன்றி வளம் பெற்றன என்பதை அறுதியிட்டுக் கூற முடியவில்லை. இருப்பினும் திருமணச் சடங்கு என்பது பொய்யிலிருந்து, வழுவிலிருந்து சமுதாயத்தைக் காப்பாற்றியது என்பதை,

                                  பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

                                  ஐயர் யாத்தனர் கரணம் என்ப                     (தொல். கற்.4)

    என்னும் தொல்காப்பியப் பொருளதிகாரச் சூத்திரம் மூலம் அறிய முடிகிறது. தொல்காப்பியம், மணத்தைக் கரணம் என்று குறிப்பிடுகின்றது. தொல்காப்பியர் காலத்தில் திருமணம் செய்யும் முறை நடைமுறையில் இருந்தது என்பது இதனால் விளங்கும்.

    திருமணச் சடங்குகள் இனச் செழிப்பை வேண்டிச் செய்யப்படும் சடங்குக் கூறுகளை மிகுதியாகப் பெற்றுள்ளன. “இச்சடங்கின்போது, முளைப்பாலிகைகள், கும்பம் (விளைந்த தானியப் பயிர்களை நீர் நிரம்பிய இடத்தில் வைத்தல்) முதலியவற்றை மணமக்களுக்கு முன் வைக்கும் வழக்கம் கள்ளர், பள்ளர், பறையர் இனங்களுக்கிடையே காணப்படுகிறது முளைத்த நெல், கம்பு போன்ற தானிய விதைகளை மணமக்களின் மேல் தூவும் மரபும் நிலவுகிறது” (தே. ஞானசேகரன், மனித வாழ்வில் மந்திர சடங்குகள், ப.24).

    வேளாண்மையில் நேரடியாகப் பங்குபெறும் சமுதாயத்தினரிடம் இச்சடங்கு முறைகள் வேரூன்றிக் காணப்படுகின்றன. “கண்ணகி கோவலன் திருமணத்தில், பெண்கள் முளைப்பாலிகைகளைக் கையிலேந்தி, முளைத்த விதைத் தானியங்களை மக்களின் மேல் தூவி வாழ்த்துக் கூறுவதை இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்” (தே. ஞானசேகரன், மனித வாழ்வில் மந்திர சடங்குகள், ப.25).

    முளைப்பாலிகைகளிலும், தானிய விதைகளிலும் பயிர்கள் எவ்வாறு செழித்து வளர்கிறதோ அதேபோன்று மணமகளும் விரைவில் குழந்தைப் பேற்றை அடைந்து, மானிடச் செழிப்பைப் பெருக்க வேண்டும் என்ற வளமைச் சடங்கின் சாயலாக இல்வாழ்வியல் சடங்கு அமைந்துள்ளது.

    மணமக்களுக்குக் கட்டப்படும் தாலியைத் திருமணத்தில் கலந்துகொள்ளும் அனைத்துப் பெரியோர்களும் குறிப்பாகப் பெண்களும் தொட்டு வணங்குவர். இச்சடங்கு முடிந்த பின்புதான் மணமகன், மணமகளுக்குத் தாலி கட்டுவார். தாலியைத் தொட்டு வணங்குகின்ற அனைத்துப் பெண்களின் வளமை ஆற்றலும் மணமகளுக்குச் சென்று சேரும் என்ற நம்பிக்கைக் கூறுகள் இதில் காணப்படுகின்றன.

    நிச்சயதார்த்தம்

    சங்க காலத்தில் திருமணத்தை வதுவை, வரைவு, மணம், மன்றல் எனக் குறிப்பிட்டனர். திருமணத்தின் முதல் சடங்காகக் கொடுப்போர், கொள்வோர் ஆகியோரின் பரிமாற்றம், மன நிம்மதி ஆகியவை அமைகின்றன. இதனை,

                                 கற்பெனப் படுவது கரணமொடு புணர

                                 கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியை

                                 கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே (தொல். கற்.1)

    என்னும் நூற்பா விளக்குகிறது. மணமகளின் வீட்டார், தம் மகளைத் திருமணம் செய்ய எண்ணியதன் பின்னர் மனம் உவந்து மணமகனுக்கு வதுவை செய்து தரவேண்டும் என்பதை,

                                  யானுங் காதலென் யாயும்நனி வெய்யள்

                                  எந்தையுங் கொடீஇயர் வேண்டும்                    (குறுந்.51)

    என்னும் குறுந்தொகை அடிகள் விளக்குகின்றன. இப்பாடலில் தலைவி ஒருத்தியை அவள் விரும்பிய தலைவனுக்குத் தந்தையும் தாயும் திருமணம் செய்து கொடுக்க முன்வருகின்றனர்.

    திருமணம் நடைபெறும் முன்னர் நிச்சயதார்த்தம் என்னும் முறைமையும் நடைபெற்றது. இந்நிச்சயதார்த்தம் என்பது கொடுப்போர், கொள்வோர் இருவரின் எண்ணங்களையும் உறுதி செய்துகொள்ளுதல் என்னும் மரபாகும். சங்க காலத் திருமணங்கள் பெரும்பான்மையாகக் கொடுப்போர், கொள்வோர் சம்மதத்துடன் நடைபெற்றவை என்பதை அறிய முடிகிறது.

    திருமணம் நிச்சயிக்கப் பெண் கேட்டு வரும் தலைவன் வீட்டாரைத் தலைவி வீட்டார் வரவேற்று உபசரிக்கும் பண்பு அக்காலத்தில் இருந்தே நிலைபெற்று வருகிறது. அதனை,

                                   தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதலவர்

                                   நன்றுநன் றென்று மாக்களோ

                                   டின்றுபெரி தென்னு மாங்கன தவையே                   (மேலது, ப.146)

    என்னும் குறுந்தொகைப் பாடலடிகள் விளக்குகின்றன.

    சிலம்பு கழித்தல்

    திருமணம் ஆகாத பெண்கள், காலில் சிலம்பு அணியும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. திருமணத்தின்பொழுது காலில் உள்ள அச்சிலம்பினைச் சடங்கு நிமித்தமாகக் கழற்றுவது மரபாக இருந்தது. இம்மரபு மணமகளின் வாழ்வில் பூப்புச் சடங்கினைப் போன்று ஒரு புனிதத் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. இதனைச் ‘சிலம்பு கழி நோன்பு’ என்று கூறுவர்.

    “திருமணத்திற்கு முன்பு இளமை தொட்டே தலைவி அணிந்திருந்த காற்சிலம்பைக் கழற்றுதலை மரபாகக் கொண்ட செய்தி தெரிகின்றது. இதனை ஒரு விழாவாகவே   பெற்றோர் கொண்டாடினர் எனலாம்” (அ. தட்சிணாமூர்த்தி, தமிழர் நாகரிகமும் பண்பாடும், ப.78).

    தலைவனும் தலைவியும் உடன்போக்கின்போது தலைவியின் காலில் அணிந்துள்ள சிலம்பைக் காணும் கண்டோர்கள், இவர்களின் நிலையை நினைத்து அச்சமுறுகின்றனர். இவள் காலில் சிலம்பணிந்துள்ளாள். அதனால் இன்னும் திருமணம் முடியவில்லை என்பதைத் தெரிந்து, எப்படித் தனியே வாழப் போகிறாள் என்று ஐயம் கொள்கின்றனர். இதனை,

                                   வில்லோன் காலன கழலே தொடியோள்

                                    மெல்லடி மேலவுஞ் சிலம்பே                                  (குறுந்.7)

    என்னும் அடிகளால் அறியமுடிகின்றது. இங்ஙனம் இளமை வாழ்வு கழிய ஆடவர் வீரக்கழல் அணிந்து போர்ப் பயிற்சி முதலியன பெறுதலும் பெண்கள் சிலம்பு அணிதலும் அதனை கழித்தலும் சடங்குகளாகப் பின்பற்றப்பட்டன.

    மணநாள்

    அக்காலத்தில் திருமணம் நல்ல நாளும் நேரமும் கணிக்கப்பட்டே நடைபெற்றது. வேங்கை மலர்கள் மலரும் இளவேனிற் காலமே மணத்திற்குரிய காலமாகக் கருதப்பட்டது. இதனை,

                                   வேங்கை தந்த வெற்பணி நன்னாள்                   (நற்.336)

    என்றும், ‘நன்னாள் வேங்கை, ‘கணிவாய் வேங்கை’ என்றும் குறிப்பிடுகின்றது நற்றிணை. சந்திரன் உரோகிணியைக் கூடிய நாள் திருமணத்திற்குச் சிறந்த நாளாகக் கருதப்பட்டது. இதனை அகநானூறு (அகம்.86, 136), சிலப்பதிகாரம் (சிலம்பு.50-53) வாயிலாக அறிய முடிகிறது.

    பரத்தையிற் பிரிந்த தலைமகன் விடுத்த தூதைக் கண்டு ஒரு தலைவி பேசும் பேச்சிலிருந்து மணக்காலத்தில் தீ வேட்டனர் என்பதை அறிய முடிகின்றது. தலைவனுடைய தூதுவனைக் கண்ட தலைவி, அவன் என்னை மணந்த காலத்தில் இருந்த அன்புடைய நிலையில் சிறிதும் மாறாமல் நாம் இருக்கின்றோம். நாங்கள் மணந்த காலத்தில் நெய் பெய்த தீ முன்னர் எப்படி விருப்பத்துடன் இருந்தோமோ அதேபோன்று இப்பொழுதும் நான் இருக்கின்றேன் என்று பேசுகிறாள்.

                                     நெய்பெய் தீயி னெதிர்கொண்டு

                                     தான்மணந் தனையமென விடுகந் தூதே                  (குறுந்.106)

    மணக்காலத்து நிலைமையில் தான் உள்ளமையைக் கூறி, நெய்பெய் தீயின் எதிர்கொள்வோம் என்பதால் இது மனைவியின் பகுதியாக அமைந்த எரிவேட்டல் எனப்படுகிறது.

                                        தெறல்அருங் கடவுள் முன்னர் தேற்றி

                                        மெல் இறைமுன்கை பற்றிய சொல் இறந்து

                                        ஆர்வ நெஞ்சம் தலைத்தலைச் சிறப்ப நின்

                                         மார்பு தருகல்லாய்                                                              (அகம்.396)

    என வரும் அகநானூற்றுத் தலைவியின் பேச்சை நோக்கும்போது, தீக்கடவுள் முன்னர் நின்று, என்றும் பிரியாமல் இருப்பதாக உறுதி உரைத்து ஏற்றுக்கொள்வதாகத் தலைவியின் கையைப் பற்றுதல் அக்கால வழக்கம் என்பது தெரியவருகிறது.

    மணக்கும் பொழுது தீயில் நெய் பெய்து யாகம் வளர்ப்பது, பண்டைக் காலமுறை. தீயில் நெய் பெய்யப்பட்டபோது அத்தீயானது மேல்நோக்கி எழுந்து நெய்யை ஏற்றுக்கொண்டு தான் அவியாது நிற்றலைப்போலத் தலைவன் தலைவியை ஏற்றுக்கொண்டு செம்மையடைய வேண்டுதல் என்பது வழக்கு.

    நெருப்பு என்பது தூய்மையானது. மங்களம் சார்ந்தது. எண்ணெய் நிலையிலிருந்து தீ என்னும் நிலைக்கு வேள்வி மாற்றம் அடைவதைப் போல ஆண், பெண் இருவரையும் அந்நிலையிலிருந்து கணவன் மனைவி என்னும் நிலைக்கு மாற்றம் செய்கிறது.

    சங்க காலத்தில் மணமுரசு ஒலித்தலைப் பற்றி,

                        படுமண முழவொடு பரூஉப்பணை இமிழ,
                        வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று           (அகம்.7-8)

    என்று அகநானூறு உறுதி செய்கிறது. சங்க காலத்தைவிட அதனை அடுத்த சங்கம் மருவிய சிலப்பதிகாரக் காலத்தில் பல்வேறு இசைக் கருவிகள் முழங்கப்பட்டன.

    தமிழகத்தில் திருமணம் எனத் தாம் எழுதிய கட்டுரையில் எஸ். வையாபுரிப்பிள்ளை, “பாணிக் கிரகணம், ஓமம், தீ வலம் வருதல், சப்தபதி முதலியன சங்க காலத்தில் நிகழ்ந்தன அல்ல. புரோகிதர்கள் மந்திரம் ஓதுதலும் மணவினையில் இல்லை என்றே கூறலாம். தாலி கட்டும் சடங்கும் காணப்படவில்லை” (மு. சண்முகம் பிள்ளை, சங்கத் தமிழரின் வழிபாடுகளும் சடங்குகளும், ப.264) என்று எழுதியுள்ளார். எனினும் குறுந்தொகைப் பாடலில் (குறுந்.106) யாகம் வளர்த்துத் தீயின் முன்னர் திருமணம் நடைபெற்றது என்ற செய்தியால் தீ வலம் வருதல் அக்காலத்தில் இருந்திருக்க வாய்ப்புண்டு என்பதைத் தெரியப்படுத்துகிறது. அவர் சுட்டிய சடங்குகளில் மற்ற சடங்குகள் ஏதும் சங்க காலத்தில் இல்லை என்பது உறுதியாகிறது.

    திருமணம் நிகழ்வதற்கு முன்னதாக நிச்சயதார்த்தம் நிகழ்த்தப்பெறுதல் வழக்கத்தில் இருந்துள்ளது. ஆண், பெண் இருவரும் சிலம்பு அணியும் வழக்கம் இருந்தாலும் மணநாள் அன்று பெண்ணுக்குச் சிலம்பு கழித்தலைச் சங்க காலத்தில் காண முடிகின்றது. அதனைச் சிலம்பு கழி நோன்பு என்று வழங்குகிறோம். அவை தவிர ஒரு சிறந்த நாளை மணநாளாகக் குறித்து, அன்று சில சடங்குகள் நிகழ்த்தி மணம் முடித்துத் தரும் வழக்கம் சங்க காலத்தில் இருந்தமையை அறிய முடிகின்றது.

    பயன்பட்ட நூல்கள்

    1. ஆனந்தன். நாஞ்சில். 1999. சங்க இலக்கியத்தில் மனித உரிமைகள், திருச்சிராப்பள்ளி: கண்மணி பதிப்பகம்.
    2. இளம்பூரணர் (உ.ஆ). 2011. தொல்காப்பியம் பொருளதிகாரம், சென்னை: சாரதா பதிப்பகம்.
    3. சண்முகம்பிள்ளை. மு. 2003. சங்கத் தமிழரின் வழிபாடுகளும் சடங்குகளும், சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
    4. சாமிநாதையர். உ.வே. 2000. குறுந்தொகை மூலமும் உரையும், சென்னை: உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம்.
    5. ஞானசேகரன். தே. 1990. நாட்டார் சமயம், சென்னை: கிரியா பப்ளிகேஷன்ஸ்.
    6. தட்சிணாமூர்த்தி. ஆ. 2005. தமிழர் நாகரிகமும் பண்பாடும், சென்னை: யாழ் வெளியீடு.
    7. நாகராசன். வி. 2004. குறுந்தொகை (தொகுதி 1,2), சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
    8. பாலசுப்பிரமணியன். கு.வெ. (உ.ஆ). 2004. நற்றிணை, சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
    9. விசுவநாதன். அ (உ.ஆ). 2007. கலித்தொகை, சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
    10. வேங்கடசாமி நாட்டார். ந.மு. 1884. சிலப்பதிகாரம், சென்னை: திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், (பி) லிமிடெட்.
    11. ஜெயபால். இரா (உ.ஆ). 2004. அகநானூறு (தொகுதி 1,2), சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.

    =========================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    தமிழரின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்தது, சடங்கு. இச்சடங்கு, மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை பல நிலைகளில் நிகழ்த்தப்படுகின்றது. இவற்றைப் பண்டைய இலக்கண, இலக்கியங்கள் மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளன. ‘சங்க இலக்கியத்தில் மணச் சடங்குகள்’ என்னும் இக்கட்டுரை, தமிழரின் திருமணம் சார்ந்து மேற்கொள்ளப்படும் சடங்குகளை முறையாக அறிமுகம் செய்கின்றது. தொல்காப்பியத்தின் நூற்பாவையும், குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு முதலிய சங்கச் செய்யுட்களையும் ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரை நகர்கின்றது. சங்க காலத்தில் திருமணத்திற்கு முன் நிகழும் நிச்சயதார்த்தம், வதுவைச் சடங்கு, சிலம்பு கழித்தல், மணநாள் பார்த்தல் உள்ளிட்ட சடங்குகளைப் பண்டைய தமிழர்கள் எவ்வாறு மேற்கொண்டனர் என்பதைச் சங்கப் பாடல்களின் சான்றுகளோடு கட்டுரையாளர் விளக்கிச் செல்வது பாராட்டத்தக்கது.

    =========================================================

    Share
  • என்ன செய்து கிழித்தேன்?

    -மரபுமாமணி பாவலர் மா. வரதராசன்

    (மரபுமாமணி பாவலர் மா. வரதராசன் அவர்களது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட கவிதை.)

    நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்?
    நல்லோர்கள் போற்றுவித மென்ன செய்தேன்?
    நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்?
    நற்றமிழைப் பரப்புவழி என்ன செய்தேன்?
    நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்?
    நற்கவியை எளிதாக்க என்ன செய்தேன்?
    நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்?
    நல்லாசான் என்றென்னைப் புகழா தீர்கள்!

    நாடிப்போய்த் தமிழ்கற்க வேண்டி நின்றேன்
    நற்புலவர் பலபேரைக் கெஞ்சி நின்றேன்
    தேடிப்போய்த் திரிந்தேன்யான் நல்லா சானைத்
    தேள்கொட்டும் ஏளனத்தைப் பரிசாய்ப் பெற்றேன்
    ஈடில்லை படிப்பில்லை என்று சொல்லி
    இளக்காரம் செய்தார்கள் பொறுத்துக் கொண்டேன்
    வாடிநின்றேன் என்தொழிலைச் சொல்லிச் சொல்லி
    வாயாரச் சிரித்தார்கள் மருண்டு நின்றேன்.!

    நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்?
    நல்லாசான் என்றென்னைப் புகழா தீர்கள்.

    ஆனாலும் என்தேடல் முடிய வில்லை
    அரங்கத்தில் ‘ஓலமிட்ட ‘கவிதை கேட்டேன்
    மானாக நான்துள்ளி உள்ளே செல்வேன்
    மதிக்காமல் ஓரத்தே ஒதுக்கு வார்கள்.
    போனால்தான் என்னென்று மானம் விட்டுப்
    போய்க்கேட்பேன் சொல்லாமல் துரத்து வார்கள்
    ஆனாலும் என்தேடல் முடிய வில்லை
    அருந்தமிழக் காதலதும் குறைய வில்லை.!

    நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்?
    நல்லாசான் என்றென்னைப் புகழா தீர்கள்.

    என்னென்ன வோசெய்தேன் மரபைக் கற்க
    இயலாமல் ஏமாற்றம் எதிரில் நிற்கத்
    தன்கையே தனக்குதவி என்று ணர்ந்து
    தமிழ்த்தாயே துணையென்று துணிந்து விட்டேன்
    மண்ணுக்குள் ஒளிந்திருக்கும் வளங்கள் போலே
    வரமாகும் அறிவையெலாம் வகைப்ப டுத்தித்
    தன்னுள்ளே வைத்திருக்கும் நூல கத்தில்
    தமிழ்மரபு கவிகற்க நுழைந்தே னய்யா!

    நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்?
    நல்லாசான் என்றென்னைப் புகழா தீர்கள்.

    எதைத்தேடிப் படிப்பதெனக் குழப்ப மாங்கே
    இருந்தவற்றுள் இலக்கணத்து நூலை யெல்லாம்
    கதைபோலப் படித்துவிட எண்ணி விட்டேன்
    கண்ணயர்ந்து தூங்கியதே பலநா ளாகும்.
    விதைப்பந்தின் உள்ளிருக்கும் மரத்தைப் போல
    வியன்றமிழை என்னுள்ளில் விதைத்த தாலே
    அதைத்தடுக்கும் தடையெல்லாம் உடைந்த தையா
    அணுவணுவாய் இலக்கணமும் புரிந்த தையா.!

    நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்?
    நல்லாசான் என்றென்னைப் புகழா தீர்கள்.

    புரிந்தவுடன் படிப்பதூஉம் எளிதா யிற்று
    புதைந்திருந்த நுட்பங்கள் விதிக ளெல்லாம்
    எரிவிளக்கி னொளிபட்ட இருளைப் போல
    இலக்கணமும் இனிக்கின்ற கரும்பா யிற்று
    விரிந்தகன்ற தமிழ்க்கடலின் கரையில் நின்று
    விருப்போடு கால்வைத்தேன் ஈர மண்ணில்.
    சுரிதகமாய்ச் சுழன்றுவரும் அலையில் இன்னும்
    துணிவோடு நீந்துவிதம் அறிந்தே னில்லை.

    நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்
    நல்லாசான் என்றென்னைப் புகழா தீர்கள்

    இலக்கணத்தைக் கற்பதற்குப் பட்ட பாட்டை
    இனியாரும் படவேண்டா எனுமெண் ணத்தில்
    தலங்கண்டேன் களங்கண்டேன் முகநூல் வந்தேன்
    தமிழ்ச்சோலை நிறுவியதில் கரைந்து போனேன்
    பலவிடத்து மிருந்தபுதுக் கவிஞ ரெல்லாம்
    பைந்தமிழச் சோலையினில் நுழைய லானார்
    கலக்கத்தை யூட்டாமல் அனைவ ருக்கும்
    கனிதமிழின் மரபுகளைச் செறிவாய்த் தந்தேன்!

    நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்
    நல்லாசான் என்றென்னைப் புகழா தீர்கள்

    கற்றவரில் பல்லோரும் செம்மை யானார்
    கற்றோரும் போற்றுகின்ற ‘செம்ம லானார் ‘.
    உற்றபுகழ் கூடியதால் அவர்கள் என்னை
    உயரத்தில் வைத்தார்கள் ‘குருவென் றார்கள்.
    நற்றமிழத் தாயவளின் தயையா லிந்த
    நன்னிலையை நானடைந்தேன் வேறொன் றில்லை
    மற்றபடி நானிதற்குப் பட்ட பாடு
    மறவாதே மண்ணுக்குள் போகு மட்டும்.!

    நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்
    நல்லாசான் என்றென்னைப் புகழா தீர்கள்

    உயிருக்குள் கலந்துவிட்ட கவிஞர் பெற்றேன்
    உணர்வோடு கலந்துவிட்ட கவிஞர் பெற்றேன்
    உயிரேநான் என்கின்ற கவிஞர் பெற்றேன்
    ஓரிறையாய் எனைப்போற்றும் கவிஞர் பெற்றேன்
    பயிருக்கு மழைபோல வாடும் நேரம்
    பரிந்தென்னைக் காக்கின்ற கவிஞர் பெற்றேன்
    தயிர்க்குடத்தில் துளிநஞ்சாய்க் கவிஞ ரென்று
    சழக்கர்சில் லோரையும் உறவாய்ப் பெற்றேன்!

    நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்?
    நல்லாசான் என்றென்னைப் புகழா தீர்கள்.

    அரைகுறையாய்க் கற்றவர்கள் ஆசா னாகி
    அழிக்கின்றார் அருந்தமிழின் மரபின் சீரை
    விரைவாகப் புகழ்கூட வேண்டு மென்ற
    வேட்கையன்றி வேறெந்தக் குறியு மில்லை
    துருப்பிடித்துக் காதறுந்த ஊசி கொண்டு
    துணிதைக்க முயல்கின்றார் துயர மன்றோ?
    எருவாகிக் கருவாகி வாழ்வோர் தானே
    எல்லோரும் போற்றுகின்ற ஆசா னாவார்?!

    நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்?
    நல்லாசான் என்றென்னைப் புகழா தீர்கள்.

    நீண்டதொரு பயணத்தில் செல்கின் றேன்நான்
    நினைவினிலே தமிழன்றி வேறொன் றில்லை
    ஆண்டமொழி யழியாமல் உலகை யாள
    அயராம லுழைக்கின்றேன் அதுவ ரைக்கும்
    சீண்டாதீர் சிக்கலுக்குள் இழுத்தல் வேண்டா
    சிறியவனைச் செயலாற்ற விடுங்க ளென்று
    மீண்டுமுங்கள் பதம்பணிந்து வேண்டு கின்றேன்
    வியன்றமிழின் தொண்டாற்ற விடுவீர் என்னை!

    Share