சேக்கிழார் பா நயம் – 31
– திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி
இறைவன் திருவருள் நிகழ்ச்சிகள் உலகில் நிகழும்போது, இயற்கையாகவே இசைக்கருவிகள் ஆர்த்து ஒலிக்கும். திருஞான சம்பந்தர் அவதரித்த நேரத்தில்,
மங்கல முழக்காகிய தோற்கருவியும் , தாளமாகிய கஞ்சுகக்கருவியும், சங்கு, படகம், தாரை முதலான காற்றுக் கருவிகளும் இசைப்பார் இல்லாமல் தாமாகவே வானில் எழுந்து ஒலித்தன! இதனை,
‘சங்கபட கங்கருவி தாரைமுதலான, எங்கணுமி யற்றுபவரின்றியு மியம்பும்,
மங்கல முழக்கொலி’’
என்று சேக்கிழார் பாடுவார். முன்னரே , ’மாதவம் புரி தென்திசை வாழ்ந்திடத் தீதிலாத்திருத் தொண்டத்தொகைதர வந்த சுந்தரரைத் தடுத்தாட்கொண்ட போது, இயற்கையாகவே பூமியிலுள்ள இசைக்கருவிகள் ஐந்தும் முழங்கின! அதன் ஓசை வானுலகை எட்டியது! அப்போது வானவர்கள் பூமாரி பொழிந்தனர்; வேதங்களின் ஓசை எங்கும்நிறைந்தது! -. பூவுலகினின்று போந்த ஓசையைந்தும் விசும்பு சென்று நிறைய, அதற்குப் பிரதியாய் விண்ணினின்று போந்த பூமாரி மேதினி நிறைந்த தென்ற அழகு காண்க) இதனைச் சேக்கிழார்,
‘’எண்ணிய வோசை யைந்தும் விசும்பிடை நிறைய வெங்கும்
விண்ணவர் பொழிபூ மாரி மேதினி நிறைந்துவிம்ம,
மண்ணவர் மகிழ்ச்சிபொங்க மறைகளும் முழங்கியார்ப்ப’’
எனப்பாடுகிறார். இவை இரண்டும் சிறந்த நிகழ்ச்சிக்கான அடையாளங்க ளாகும்! அடுத்து இறைவன் சுந்தரரை நோக்கிக் கூறும்பாடல் நயம்மிக்கதாகும்!
இறைவன் தாமே சுந்தரர் செயல்களை நோக்கிச் , சுந்தரருக்கு ‘வன்றொண்டன் ‘ என்ற திருப்பெயரை இட்டருளினார்! ‘’அந்தப் பெயரை நாமிட்டதால், நீயே உனக்கு உரியதாய்ப் பெற்றுக்கொண்டாய்!’’ என்கிறார்! இதனை இறைவன் ,
‘’மற்றுநீ வன்மை பேசி வன்றொண்டன் என்னும் நாமம் பெற்றனை!’’
எனக் கூறினார்! சுந்தரர் இறைவனைப் ‘’ பித்தனோ, மறையோன் ?’’ என்றும், தம் சாதி பெருமை தந்த வலிமையை வாதத்தில் ஏற்றியும் கூறியதை , ‘’வன்மை பேசி ‘’ என்ற தொடரால் குறிப்பிடுகிறார்! அதனால் சுந்தரர் எடுத்துக்கொண்ட உரிமையைப் பாராட்டி, ‘’வன்றொண்டன்‘ என்ற திருப்பெயரைப் பெற்று விட்டாய்!’’ என்று கூறினார்! இவ்வாறு இறைவனால் தரப்பெற்ற பெயரைச் சுந்தரர் விருப்புடன் ஏற்றுக் கொண்டார்! அதனால் தம் சொற்றமிழ்ப் பாடல்களில் பல இடங்களிலும் எடுத்துக் போற்றியுள்ளார்!
‘’அடியேனைத் தாமாட்கொண்டநாட் சபைமுன், வன்மைகள் பேசிட வன்றொண்ட னென்பதோர் வாழ்வு தந்தார்………’’ (நம்பிகள் தேவாரம் – திருநாவலூர் – 2) முதலியவை காண்க. இதுபோலவே நம்பிகள் சரித நிகழ்ச்சிகள் பெரும்பாலும் அவரது தேவாரத்திருவாக்குக்களாகிய அகச்சான்றுகளாலே மிகத் தேற்றமாய் விளங்குதல் காணத் தக்கதாம். சுந்தரருடைய பிள்ளைத் திருநாமம் ‘ஆரூர்நம்பி’ என்பதாகும் . ‘’வன்றொண்டன்’’ என்பதுதீட்சாநாமம்.
பெண்ணும் ஆணுமாய், உடலழகை ஐம்புலன்களால் துய்க்கும் நிலை எளிய மானிட வாழ்க்கை. ஆனால் இறைவனின் பேரழகை அறுவகைப் புலன்களாலும் ஆரத் துய்ப்பது அடியார்களின் வாழ்க்கை.
‘’மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே ‘’
என்பது , சுண்ணாம்புக் காளவாயில், அப்பரின் உடல் , வெந்து நொந்தபோது, அந்நீற்றறை மாசில் வீணை ஓலியாய் செவிக்கும், மாலை மதியமாய் கண்ணுக்கும், வீசுதென்றலாய் உடலுக்கும், வீங்கிளவேனில் கனிகளாய் நாவுக்கும், மூசுவண்டுகள் ஒலிக்கும் பொய்கை மணமாய் மூக்குக்கும் இன்பம் தந்ததோடு , உள்ளத்தில் ஏற்பட்ட நிரதிசய இன்பமாய் மனத்துக்கும் பேரின்பமாகி ஆறத் துய்க்க வைத்தது! ஆகையால் பக்தியுணர்வே பேரின்பம்! இந்த இன்பத்தைத் தாமும் துய்த்துப் பிறரும் துய்க்க வைப்பது அடியாரின் அனுபவங்களை விளக்கும் பாடலாகும். அவ்வாறு அடியார் இறைவனைப் போற்றிப் பாடுவதே இறைவழிபாடாகும்.
‘’இங்குத் தொண்டுசெய்யும் பலவகை வழிபாடுகளையும்உட்கொண்ட பொதுப் பெயராய்நின்றது. ‘அருச்சனை வயலுளன்பு வித்திட்டு’ (திருவண்டப் பகுதி) என்ற திருவாசகம் காண்க. அன்பிலிருந்து ஊறிப்பெருகியதும் அதனாலே சிறப்பின் மிகுந்ததும் ஆகிய பாட்டு என இவற்றைப் பாட்டுக்கு அடைமொழியாக்கி உரைக்க. என்னை வலிய ஆட்கொண்டது மன்றுளீர் செயல் என்று தெளிந்த நம்பிகளுக்குத் தம்முடைய பணியாவது இன்னதென்று காட்டியவாறு. அன்பு மிகுதியினாலே தாமே மேல் எழுந்து வழியும் பாட்டே சிறந்ததாய் இறைவன் மகிழ்ந்து அருளுவன் என்க.’’ என்பது சிவக்கவிமணியார் விளக்கம்.
இறைவனே நான்மறையையும் அருளினார் அந்நான்மறைகளை நாள் தோறும் ஓதிய ஞானியரே, நான்மறையின் பொருளுணர்ந்து மகிழ்வர். எளிய வாழ்க்கை உடைய மானிடருக்கு, இனிய தமிழால் கூறும் எல்லாமே பொருளின்பம்தரும். இந்த இன்பத்தை எல்லாரும் துய்க்கும் போது, அவர்களின் ஆன்ம நாயகனாய் உயிரெங்கும் உள்ளவனாகிய ஆண்டவனும் இன்பம் அடைவான் போலும்! இதனை,
கோழை மிடறாக கவி கோளும் இலவாக இசை கூடும் வகையால்
ஏழை அடியார் அவர்கள் யாவை சொன்ன சொல்மகிழும் ஈசன் ‘’
என்று திருஞானசம்பந்தர் அருளுகின்றார்!இதே இன்பத்தைத் தோத்திரங்களின் பொருள் உணரும் பாமரரும் அடைகிறார்கள். இதனை மிக விளக்கமாக, நால்வர் நான்மணி மாலை கூறுகின்றது!
‘’உமையம்மை உடனாய முக்கண்ணனாகிய அனைத்துக்கும் காரணன் ஆகிய சிவபிரான் அருளிய வேதமோ, இறைவனின் பழம்பெருமையை எடுத்துரைக்கும் திருவாதவூரராகிய மாணிக்க வாசகர் திருவாய் மலர்ந்து அருளிய திருவாசகம் என்னும் தேனோ, எது சிறந்தது? ‘’ எனக் கேட்பீராயின் அதற்கு விடை கூறுகிறேன்! ‘’வேதம் ஓதினால் பாமரர்கள் அதைக் கேட்டு விழிகளில் கண்ணீர் பெருகி , உள்ளம் உருக மாட்டார்கள்! ஆனால் மாணிக்க வாசகரின் திருவாசகப் பாடலை ஒரே ஒருமுறை ஓதக்கேட்டால், கல் போன்ற வன்மையான மனமும் கரைந்து உருகும்; கண்களிலிருந்து மணற்கேணியில் ஊறிப்பெருகும் நீர்போலக் கண்ணீர் பெருகும்; உடல் சிலிர்க்கும்; மனம் பதைக்கும்; அப்பாடலின் பொருள் உணர்ந்து அப்பாட்டுக்கு உரிய இறைவனின் அடியார்களாக , எளிய பாமரரும் ஆவார்கள்! மற்ற எவரும் இதே நிலையை அடைவார்கள்! இதனை சிவப்பிரகாசர் ,
‘’விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கட்
காரணன் உரையெனும் ஆரண மொழியோ
ஆதிசீர் பரவும் வாதவூர் அண்ணல்
மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ
யாதோ சிறந்த தென்குவீ ராயின்
வேதம் ஓதின் விழிநீர்ப் பெருக்கி
நெஞ்சநெக் குருகி நிற்பவர்க் காண்கிலேம்
திருவா சகமிங் கொருகால் ஓதிற்
கருங்கல் மனமுங் கரைந்துகக் கண்கள்
தொடுமணற் கேணியிற் சுரந்துநீர்ப் பாய
மெய்மயிர் பொடிப்ப விதிர்வதிர்ப் பெய்தி
அன்பர் ஆகுநர் அன்றி
மன்பதை உலகில் மற்றையர் இலரே.’’
என்பது அப்பாடல்! இறைவன் தமிழ்ப் பாட்டின் சிறப்பை உணர்ந்து, தாம் ஓதும் வேதத்தைத் தமிழில் ஆக்கி, ஒலிக்கச் செய்து அதனைக் கேட்க விரும்பினார்! இவை அனைத்தையும் சேர்த்து,
மற்றுநீ வன்மை பேசி வன்றொண்டன் என்னும் நாமம்
பெற்றனை! நமக்கும் அன்பின் பெருகிய சிறப்பின் மிக்க
அர்ச்சனை பாட்டேயாகும். ஆதலால் மண்மேல் நம்மைச் ’
’சொற்றமிழ் பாடுக என்றார், தூமறை பாடும் வாயார்! ‘’
என்று சேக்கிழார் சுவாமிகள் அருளுகின்றார்! இந்தப்பாடல், அடியார்களின் வழிபாட்டு முறையையும், சிறந்த சொற்களையும் பொருளுணர்ச்சியையும் உடைய தமிழ்ப் பாடலின் பெருமையையும், எளிமையையும், உள்ளம் உருக்கும் பக்தி நெறியையும் என்றும், பாராயணம் செய்யத்தக்க அருமையையும், இது சிவபிரானுக்கே விருப்பம் உடையது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது!