-நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 25 – அருளுடைமை

குறள் 241:

அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள

எல்லாச் செல்வத்துலயும் ஒசந்தது அருள் ங்குத செல்வம் தான். மத்த எல்லா செல்வமும் கீழானவங்க கிட்ட கூட இருக்கும்.

குறள் 242:

நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.

நல்ல வழிய தெரிஞ்சிக்கிட்டு அருளோடு வாழணும். பலவழிகள் ல ஆஞ்சு அறிஞ்சு பாத்தாலும் அருளே நம்ம வாழ்க்கைக்கு தொணையா நிக்கும்.

குறள் 243:

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்

அருள் நெறஞ்ச மனசக் கொண்டவங்க அறியாம ங்குத இருட்டு ஒலகத்துல கெடந்து சீரளிய மாட்டாங்க.

குறள் 244:

மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப
தன்னுயி ரஞ்சும் வினை

எல்லா உசிரயும் இரக்கத்தோட காக்குதத தன் கடமயா செய்யுத பெரிய மனுசங்க தன் உசிர பத்தி கவலப் பட மாட்டாங்க.     .

குறள் 245:

அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு
மல்லன்மா ஞாலங் கரி

உள்ளத்துல ஊறுத அருளோட இயக்கத்துனால சங்கடப்படாம கடமய செய்யலாம் ங்குததுக்கு ஒதாரணமா காத்தோட்டத்துனால செழிப்பா இயங்குத இந்த ஒலகத்த சொல்லலாம்.

குறள் 246:

பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்

அருளில்லாம கெட்டத செய்யுதவங்க பொருளயும் தொலச்சி கடமையையும் மறந்தவங்க ஆவாங்க.

குறள் 247:

அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்
கிவ்வுலகம் இல்லாகி யாங்கு

பொருள் இல்லாதவங்களுக்கு பூமில இருக்க வாழ்க்க சந்தோசமா இருக்காதது போல மத்த உசிருங்க கிட்ட பாசமா நேசமா  நடந்துகிடாதவங்களுக்கு மேல் உலகம் சந்தோசமா இருக்காது.  .

குறள் 248:

பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது

பொருள் இல்லாமப் போனவங்க பொறவு சம்பாதிச்சிக்கிடலாம். அருளில்லாம இருக்கவங்க மறுபடி அருள் உள்ளவங்களா ஆகுதது சிரமந்தான்.

குறள் 249:

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்

தெளிஞ்ச புத்தி இல்லாதவன் நூலப் படிச்சு அது சொல்ல வருதத சரியா புரிஞ்சிக்கிடமுடியுமா? அப்டிதான் அருள் இல்லாதவன் அறச்செயல செய்ய நெனைக்குததும்.

குறள் 250:

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேற் செல்லு மிடத்து

அருள் இல்லாதவன் தன்னைய விட எளச்சவனுக்கு தொந்தரவு குடுக்கப்போகுத நேரம் இப்பம் ஒரு பலசாலி முன்ன வந்தா எப்டி பயந்து சாவோம்னு நெனைச்சிக்கிடணும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.