ராஜதுரோக தண்டனை குறித்த கல்வெட்டுகள்

1

– சேஷாத்ரி ஸ்ரீதரன்


உடையார்குடி ஆனந்தீஸ்வரர் கோயில் 

ராஜதுரோக தண்டனை

துரோகம் என்றால் நம்பிக்கை குலைய நடத்தல், நம்பினோர்க்கு இரண்டகம் செய்தல் எனப் பொருள்.  இது பல்வேறு வகைத்து. இராஜதுரோகம் என்பது அவற்றில் முகாமையானது. இது பற்றி சில கல்வெட்டுகள் அறியக் கிடக்கின்றன. பொதுவாகப் பகை மன்னன் சதிக்கு உடன்பட்டு அவனுக்கு உத்தாரமாக (supportive) தனது மன்னனை வேவுபார்த்தல், உளவு பார்த்தல், அவன் ஆள்கள் தங்க இடம் அளித்தல், உதவுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவது இராஜதுரோகம் ஆகும். இதற்கு பழங்காலத்தில் பிற குற்றங்களை விட கடுமையான தண்டனை தரப்பட்டது. இராஜதுரோகி ஆக அறிவிக்கப்பட்ட ஒருவர், அவர் சார்ந்தவர் நிலமும், வீடும், உடைமையும் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்பட்டு அப்பணம் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது. பெரும்பாலும் இராஜ துரோகிகள் கூடா நட்பு, பதவி செல்வத்திற்கு ஆசைப்பட்டும் அவ்வாறு நடந்து கொண்டனர். குறிப்பாக, அதிகமாக வேளான் என்ற அரசகுடியாரும், பிராமணரும் இந்த தண்டனைக்கு ஆட்பட்டது தெரிகின்றது. நான்கு அகவை முதல் இலவச உண்டு உறைவிடமான வேதபாட சாலையில் கல்வி, சரஸ்வதி பண்டாரம் என்ற நூல் நிலையம், கோவிலில் வேலை அதற்கு நிவந்தமாக விளை நிலம், குடியிருக்க இலவச வீடு, கோயிலில் ஆதுர சாலைகள் இப்படி உயிர்த்துள்ள நாள் வரையில் வேறு எவருக்கும் கிட்டாத பல வசதிகளை மன்னரிடம் இருந்து மானியமாகப் பெற்ற போதும் சில பிராமணர்கள் குறுகிய நோக்கில் அரச அதிகாரிப் பதவிகளைப் பெறுவதற்காக இப்படி நரித்தனமாக நடந்துகொண்டது வரலாற்றில் பதிவாகி உள்ளது. அதைப் பதிந்தவரும் பிராமணரே. கீழே இதற்கு சான்றாக மூன்று கல்வெட்டுகளைப் பார்க்கலாம்.

உடையார்குடி ஆனந்தீஸ்வரர் கோயில் கருவறை மேற்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் இராசராசனின் 2 ஆம் ஆண்டு கல்வெட்டு.

“ஸ்வஸ்தி ஸ்ரீ கோ ராஜகேசரிவர்மர்க்கு யாண்டு 2 ஆவது வடகரை பிரமதேயம் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி பெருமக்களுக்கு சக்கரவர்த்தி ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்……………………………………….. தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிடும் இவர் பிரமாணிமார், பெற்றாளும் இ……………………ராமத்தம் பேரப்பன் மாரிடும் இவர்கள் மக்களிடம் இவர்களுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிடும் தாயோடுடப் பிறந்த மாமன் மாமன்மாரிடும் இவர்கள் உடபிறந்த பெண்களை வேட்டாரினவும் இவர்கள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முடமை)யும் நம் ஆணைக்குரியவாறு கோட்டயூர் பிரம்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டனையும் பெறத் தந்தோம். தாங்களும், இவர்கள் கண்காணியோடும் இவர்கள் சொன்னவாறு நம் ஆணைக்குரியவாறு குடியோடு குடிபெறும் விலைக்கு விற்றுத்தலத்திடுக. இவை குருகாடிக்கிழான் எழுத்து என்று இப்பரிசுவர இ ஸ்ரீமுகத்தின் மேற்பட்ட மலையனூரான் ஆன பாப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும் இவன் மகனும் இவன்றாய் பெரிய நங்கைச்சாணியும் இம்மூவரிதும் ஆன நிலம் ஸ்ரீ வீரநாராயன சதுர்வேதி மங்கலத்து மிப்பிடாகை தேவமங்கலம் ஆன பட்டில நிலம் ஸ்ரீவீரநாராயண சதுர்வேதி மங்கலத்து சபையார் பக்கல் வெண்ணையூர் நாட்டு வெண்ணையூருடையான் நக்கன் அரவணையானான பல்லவ முத்தரைய மகன் பரதனான வியாழகஜமல்லப் பல்லவரையனேன். இந்நிலம் பழம்படி இரண்டே முக்காலே ஒருமாவும் அகமனை ஆறும் ஆக இந்நிலமும் இம்மனையும் நூற்றொருபத்தி ருகழஞ்சு பொன் குடுத்து விலைகொண் டிவ்வூர் திருவனந்தீஸ்வரத்து பட்டாரகர் கோயிலிலே இவ்வாட்டை மேஷநாயற்று நாயற்றுக்கிழமை பெற்ற புரட்டாசி ஞான்று சந்திராதித்தவர் ஆழ்வார் கோயில் முன்பு மூவாயிரத்தரு நூற்றுவனான நிலையம்பலத்து தண்ணீர் அட்டும் பிராமணன் ஒருவனுக்கு நிச தம் படி நாழி நெல்லும் ஆட்டைவட்டம் ஒரு காகம் நிசதம் பதினைவர் பிராமணர் உண்பதற்கு ஆக பதினாறு இவறுள் ஐவர் சிவயோகிகள் உண்ணவும் வைத்தேன் அரையன் பரதன் ஆன வியாழகஜமல்ல பல்லவரையனேன். இதர்மம் ரஷிகின்ற மகாசபையார் ஸ்ரீபாதங்கள் என் தலை மேலன”

 பெருங்குறி பெருமக்கள் –   மதிப்புடைய வெகுமக்கள்; ஸ்ரீ முகம் – திருமுகம், அரசாணை;  பிரமாணிமார் – பிராமணர் மனைவியர்; பெற்றாளும் – தாயும், குடியோடு குடிபெறும் விலை – சாதாரண மக்கள் பெறும் விலை; பிடாகை – உள்அமைந்த சிறுகிராமம்; அகமனை – குடியிருக்கும் சொந்தமனை.

விளக்கம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் உள்ள உடையார்குடியில் ஆனத்தீஸ்வரர் கோயில் கருவறை மேற்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் இராசராசனின் 2 ஆம் ஆண்டு ஆட்சியில் கி.பி.987 வெண்ணையூர் நாட்டு வெண்ணையூருடையானான நக்கன் அரவணையானான பல்லவ முத்தரைய மகன் பரதனான வியாழகஜமல்லப் பல்லவரையன்  6 சொந்த வீடுகளையும், இரண்டுவேலி 16 மா நிலத்தையும் 112 பொற்காசுகளுக்கு வாங்கி கோயிலுக்கு விட்டான். அதைக் கொண்டு வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து திருக்கோயிலில் தண்ணீர் சொரியும் மூவாயிரத்தரு நூற்றுவன் என்ற நிலையம்பலத்து தண்ணீர் அட்டும் பிராமணன் ஒருவனுக்கு நிசதம் படி நாழி நெல்லும் ஆட்டை வட்டம் ஒரு காகம். அதே நேரம் நிசதம் 15 பிராமணர் உண்பதற்கும் ஆக பதினாறு 16 பிராமணர்களுக்கு, இவருள் ஐவர் சிவயோகிகள் உண்ணவும் வேண்டும் என்று கொடுத்தான் அரையன் பரதன் ஆன வியாழகஜமல்ல பல்லவரையன். இத்தர்மம் காக்கின்ற மகாசபையார் திருப்பாதங்கள் என் தலை மேலன என்று குறித்தான்.

இவன் வாங்கிய 6 வீடும் நிலமும் இரண்டாம் ஆதித்தகரிகாலரை கி.பி. 965 ல் வஞ்சகமாகக் கொன்ற வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பிராமணர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சோமன், இவன் தம்பி இரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன். இவன் தம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழபிரமாதிராஜன். இவர்தம் தம்பி மலையனூரன் பஞ்சவன் பிரமாதிராஜன் ஆகிய நான்கு பேர்களும் சேர்ந்து இரண்டாம் ஆதித்த கரிகாலனை வஞ்சகமாக கொலை செய்த இராசதுரோகிகள் ஆவர். இவர்ளுக்கு தண்டனை வழங்கப்பட்ட செய்தி இராசராசனின் 2 ஆம் ஆண்டு ஆட்சியில் (கி.பி.987) பதிவாகி உள்ளது. தண்டனை வழங்கப்பட்டபோது இராசதுரோகிகள் நால்வரது பிள்ளைகள், மனைவியர், பெற்ற தாய், பேரப்பன்மார் இவர்களுக்கு பெண்கொடுத்த மாமனார்களும், தாயுடன் பிறந்த மாமன்மார்களும், இவருடன் பிறந்த பெண் மக்களும் இனி பிராமணர் அல்லாத வேற்றவர், வேற்று சாதியார். இவர் தம் பிள்ளைகளும் வேற்றுசாதியார் என சமூகம் கருத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இவர்களது உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆணைப்படி கோட்டையூர் பிரம்ம ஸ்ரீராஜன், புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டன் ஆகியோர் பொறுப்பில் விடப்பட்டது. இந்த இருவரும் இவர்கள் கண்காணியோடும் இவர்கள் சொன்னவாறு ஆணைப்படி குடியோடு குடிபெறும் விலைக்கு விற்றுத் கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என்று குருகாடிக்கிழான் ஆணைஓலை தந்தான். ஏனென்றால் இந்த ஆணைஓலையில் மேற்படி குறித்த இராஜதுரொகிகளின் தம்பி மலையனூரான் ஆன பாப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும், இவன் மகனும், இவன் தாய் பெரிய நங்கைச் சாணியும் ஆகிய இம்மூவருடைய நிலம் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பிடாகையான தேவமங்கலத்தில் அமைந்த பட்டில நிலம் தான் அந்த இரண்டுவேலி 16 மா நிலம் என்பது.

இவர்களில் மற்றவர் உடைமைகள் எந்தெந்த ஊர்களில் இருந்தனவோஅங்கும் இதே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்பதுதெளிவு. இந்த கல்வெட்டு வியாழகஜமல்லப் பல்லவரையன்  தொடர்பானது என்பதால் இந்த அளவு செய்தி மட்டுமே கல்வெட்டில் அறியத் தரப்பட்டது. இது இராஜ துரோகிகளின் நேரடியான தண்டனைக் கல்வெட்டு அன்று. அதனால் இரண்டாம் ஆதித்ய சோழன் எங்கு? எவ்வாறு? எப்போது? எப்படிக் கொல்லப்பட்டான் என்ற செய்தி இக்கல்வெட்டில் இடம்பெறவில்லை. இப்படி இராஜதுரோக தண்டணைக்கு உள்ளானவருக்கு ஊரார் உதவிட, ஒத்துழைக்க முன்வரமாட்டார் மாறாக ஒத்துழைக்க அஞ்சுவார். இவர்கள் தம் தண்டனைக் குற்றம் யாது என்று பிறரால் அறியப்படாதவாறு வேற்றூர் சென்று அக்ஞாத வாசம் செய்தால் அன்றி ஊராரால் ஒதுக்கப்பட்டு வாழ்வதற்கே இடர்படுவர், மிடிமைப்படுவர் என்பதை உணரமுடிகின்றது. இதனால் ஒன்றும் அறியாத அப்பாவியான உறவினர் படும் துன்பம் தான் வேதனையானது.

பார்வை நூல்: EP, IND Vol XXI, PP 165-170

கொங்கின் கடத்தூர் பகுதியில் உள்ள திருமருதுடையார் கோயில் 17 வரிக் கல்வெட்டு.

  1. ஸ்வஸ்திஸ்ரீவிக்கிரமசோழ தேவற்கு யாண்டு 29 தாவது விக்கிரம சோழத் திருபுவன சிங்க
  2. னேன் கடற்றூர் ஆளுடையார் திருமருதுடையார் எனக்கு பிரமேகம் தீற்தமையில் இந்நாயனா _ _ _
  3. ரை திருவோத்த சாமத்துக்கு நாள் ஒன்றுக்கு அரிசி குறுணிக்கு நான் நீர்வார்த்து விட்ட நிலமாவ
  4. ன (கரை)வழிநாட்டுக் கண்ணாடிப்பூத்தூர் வடகரையில் உதயாதிச்ச தேவர் துரோகியாய் வடகொங்(கு)
  5. ப் போனமையில் அவர்நிலம் ஆறுகலமும் எனக்கும் என் தம்பி சோழசிங்கதேவற்கும் இவ்விருவ
  6. ற் _ _ _ _ இது காணியாகத் திருவிள்ளம் செய்து திருமுகம் தந்(த)மையில் இதில் என்னொரு பாதி மன்றாட்டு வி
  7. கலமும் இந்நாயனாற்குத் திருவத்த சாமப்படிக்கு நீர்வாத்துக் குடுத்து இந்நில முக்கலத்துக்கும்  _ _ _
  8. வது வடகரையில் பூலுவப்பற்றி விதை ஆறுகலத்தில் என்னொருபாதி விதை முக்கல(த்துக்கெ)
  9. ல்லையாவது இக்கிழைக்கு வடக்கும் உதையாதித்த தேவர் நிலத்துக்கு மேக்கும் அதியமான் _ _ _
  10. சோழீஸ்வரமுடையார் தேவதானத்துக்கு கிழக்கும் அழகாண்டார் செய்க்குத்  தெற்கும் இந்நாள் _ _ _
  11. ட்ட நெல்விதை இரு கலமும் வீரசோழீஸ்வருமுடையார் தேவதானத்துக்கு வடக்கும் மே
  12. னத்துக்குக் கிழக்கும் அழகாண்டார் செய்க்கு மேற்கு இந்நிலத்துக்குப் பாய்கிற கவருக்கு தெற்
  13. ல்லைக்குட்டபட நெல் விதை(க்) கலமும்  முக்குறுணியில் நெல் விதை கலமும் ஆக நெ
  14. ல் விதை முக்கலமும் இறையிலி முற்றூட்டாக எனக்கும என் மக்கள் மக்களுக்கும் விலையொற்றி
  15. ன ஸீதனத்துக்குரித்தாவுதாக நாயனார் திருமகம் திருவிள்ளம் செய்(த)படியே ஆளுடை
  16. மருதுடையாற்கு கல்வெட்டிக் குடுத்தேன் விக்கிரம சோழதிரிபுவன சிங்க தேவனேன்  (தி)
  17. ருபுவன சிங்கதேவன் எழுத்து. இவை கோத்தப்பச் சோழன் எழுத்து. இது பன்மாஹேஸ்வர ரக்ஷை.

முற்றூட்டு – முழு விளைச்சல்,  முழுவருவாய்; நாயனார் – மன்னர்.

விளக்கம்: பண்டு கொங்கு வறண்ட பகுதிகளை உடைய பகுதி வட கொங்கு எனவும், வளமையான பகுதிகளை உடைய நாடு தென்கொங்கு எனவும் இரு பகுதிகளாக இருந்தது. அவற்றை இரு வேறு ஆட்சியாளர்கள் ஆண்டுள்ளனர். இக்கல்வெட்டு கடத்தூர் பகுதியில் உள்ள திருமருதுடையார் கோயிலில் மகாமண்டப நுழைவு வாயிலின் கிழக்கு சுவரில் வெட்டப்பட்டு உள்ளது. கொங்கு சோழன் மூன்றாம் விக்கிரம சோழனின் 29 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1302) விக்கிரம சோழ திரிபுவன சிங்கனான எனக்கு திருமருதுடை இறைவர் நோய் தீர்த்து வைத்ததால் இவ்இறைவர்க்கு சாமத்து பூசையின் போது குறுணி அரிசிந் தரத் தீர்மானித்து அதற்கான நிலத்தை நீர்வார்த்து தானமாகக் கொடுத்தேன். நான் தரும் நிலமானது முன்பு கரைவழி நாட்டு கண்ணாடிப்பூத்தூர் வடகரையில் வாழ்ந்திருந்த அரச அதிகாரப் பொறுப்பாளர் உதயாதிச்ச தேவர் அரச துரோகியாகி வடகொங்குப் போனமையால் (அவர் உடைமைகள், சொத்துக்கள், நிலங்கள் மன்னனால் பறிமுதல் செய்யப்பட்டு கோயில் பண்டாரத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது. இச்செய்தி இக்கல்வெட்டில் பொறிக்கப்படவில்லை).  அவருடைய ஆறுகல நிலம் எனக்கும் என் தம்பி சோழசிங்க தேவர்க்கும் காணியாக்க மன்னன் ஆணயிட்டுத் திருஉள்ளம் தந்தபடியால் என் பங்கான மூன்று கல நிலத்தையும் அதில் விதைப்பதற்கான நெல் ஆறு கலத்தில் என் பங்கு மூன்று கலமும் இறைவர்க்குத் தந்தேன். இந்த மூன்று கல நிலம் வடக்கில் உதையாதித்த தேவர் நிலத்துக்கும், மேற்கில் அதியமான் நிலத்துக்கும், சோழீஸ்வரமுடையார் தேவதானத்துக்கு கிழக்கும்.  அழகாண்டார் செய்க்குத் தெற்கும் அமைந்துள்ளது.  நெல்விதை இரு கலமும் வீரசோழீஸ்வருமுடையார் தேவதானத்துக்கு வடக்கிலும், மேனத்துக்குக் கிழக்கிலும், அழகாண்டார் செய்க்கு மேற்கிலும் இந்நிலத்துக்குப் பாய்கிற கவருக்கு தெற்கெல்லைக்குட்டபட நெல் விதைக் கலமும் முக்குறுணியில் நெல் விதை ஒரு கலமும் ஆக நெல் விதை முக்கலமும் இறையிலி முற்றூட்டாக கொடுத்தேன். எனக்குப் பின் என் மக்கள் அவர்க்கு பின் அவரது மக்களுக்கும் (பேரர்களுக்கும்) விலையொற்றின சிதனத்துக்குரித்தாவதாக, இதாவது பரிசாவதாக என்று கூறி மன்னர் ஆணையிட்டு திருஉள்ளமும் செய்தபடியே ஆளுடைமருதுடையாக்கு கல்வெட்டிக் கொடுத்தேன் விக்கிரம சோழதிரிபுவன சிங்க தேவனாகிய நான். இது திரிபுவன சிங்கதேவன் எழுத்து. இவை கோத்தப்பச் சோழன் எழுத்து என்று கையொப்பமிட்டு கொடுத்தனர்.

விக்கிரம சோழசிங்க தேவன் அரச குடியினர் என்பது புலனாகின்றது. இந்நிலத்தை அண்ணன் தம்பிமார் விலைகொடுத்து வாங்காமல் மன்னனிடம்இருந்து நேரடியாக மானியாமாகப் பெற்றுள்ளனர் இல்லாவிட்டால் காணியாக்குவதற்கு மன்னனின் ஆணையைப் பெற வேண்டிய தேவை வந்திருக்காது.  மன்னனுக்கு ஏதோ வகையில் உறவினராக இருத்தல் வேண்டும்.  விக்கிரம சோழதிரிபுவன சிங்கர் தம் பங்கான மூன்று கல நிலத்தையும் அதில் விதைக்க மூன்று கல விதை நெல்லையும் கோயிலுக்குக் காணியாகக் கொடுத்தார்.

பார்வை நூல்:கொங்குநாட்டுக் கல்வெட்டுக்கள், கோயம்பத்தூர் மாவட்டம், 2001, பக்.131-132, மா.கணேசன் & இரா. ஜெகதீசன்

திருப்பூர் தாராபுரம் வட்டம் பிரம்மியம் என்ற ஊரின் திருவலஞ்சுழி கோயில் கருவறை தெற்கு சுவர் 9  வரிக் கல்வெட்டு.

  1. ஸ்வஸ்திஸ்ரீ கோஇராஜயிராஜ ஸ்ரீவீரசோழ தேவற்குத் திருவெழுத்திட்டுச் செல்லாநின்ற திருநல்லி யாண்டு அஞ்சாவதின் எதிராம் யாண்டு தென்கரை நாட்டு ப்ரஹ்மதேயம் ஸ்ரீ வீரசங்காத சதுர்வேதி மங்கலத்து ப்ரஹ்மணன் காமாக்கா
  2. ணிசோமாசி சோமாசி ராஜத்ரோஹம் பண்ணிப் போனமையில் அவன் பூமியானது பெருமாள் கொண்டருள பொருமாள் சாமந்தரில் பெரியாந் சோழனான வீரசோழ கங்கவன் பெருமாள் பண்டாரத்துக்கு
  3. நகரக்கல் துளை முப்பது பொன் வைச்சுப் பொன்னை குடுத்து நிலமறக் கொண்டு இவ்வூர்த் திருவலஞ்சுழி பரமேஸ்வரர்க்குத் திருப்பதியப்புறமாக வைச்ச நிலம் அன்னசு[ர]ப்போயிற் கிடக்காணியும், பள்ளப்போயிற் கிடகாணியு
  4. ம், பனையோடு செய்யிற் பாதியும், பெரிய செய்பனையோடு செய்யடைய அரைக் காணியும், அதிராத்தி வாக்காலில் வடக்கடையந் காணியும், கொங்க தோட்டத்தில் பாதியும், கோவிலார் தோட்டத்தில் பாதியு
  5. ம், வடவூரந் தோட்டத்திற் பாதியும், திருநாராயண விளாகத்திற் பாதியும், இன்நிலத்தால் வந்த வீடுகூறும் மடுகூறும் ஸ்வத்தியும் பரத்தியும் மற்றுமிப்பேர்பட்டிதும் இத்தேவர்க்குத் திருப்பதியப்புறமாவதாகவும் இ
  6. ன்னிலத்துக்கு அரையே யரைக்காப் பெயரை மாகாணிப் பங்குக்கு இறையிழிச்சு இவ்வூர் ஸபையார் பக்கற் குடுத்தப் பொன் நகரக்கல் துளை பத்து. இப்பொன் பத்துங்கைக் கொண்டு இறைவரி எச்சோறும் ஊர்ப்
  7. படுகுடிமையும் மற்றமெப்பேர்பட்டதும் இறுத்து முன்பு தேவதான முழுகற்படி உழுது ஊர் நஞ்சைமேல் வாரந்தேவர்க்குக் குடுக்கக்கடவோமானோம் ஸபையோம். இப்பரிசு இன்னிலந் திருப்பதியப்புற
  8. மாக சந்திராதித்தவற் செல்லக் கல்வெட்டிக் குடுத்தேன் வீரசோழ காங்கயனேன். இத்தம்மம் ரக்ஷிப்பான் ஸ்ரீபாதமென் தலைமேலின இத்தம்மம் அழிவுநினைப்பான் வழிஏழெச்சமறுவான். இது  பன்மாஹே
  9. ஸ்வர ரக்ஷை.

திருவெழுத்திட்டு – முடிசூடி; பெருமாள் – மன்னன், சாமந்தர் – படைத்தலைவர் அமைச்சர்; நிலமற – ஒரு நிலம் கூட மிச்சமில்லாமல்; திருப்பதியப்புறம் – திருப்பாடல் பாடுதற்கு கொடையாக; இறையிழிச்சு – வரிநீங்கி; எச்சோறு பொது ஊழியர்க்கு பகலில் தரும் சொறு;  ஊர்ப்படுகுடிமை – ஊர்வரி;  வழிஏழெச்சமறுவான் – ஏழுதலைமுறை அற்றுப்போவான்.

விளக்கம்: கொங்கு சோழன் இரண்டாம் வீரசோழனின் 6 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1106) தென்கரை நாட்டு பிரமதேயமாம் ஸ்ரீ வீரசங்காத சதுர்வேதி மங்கலத்து பிராமணன் காமாக்காணி சோமாசி சோமாசி இராஜதுரோகம் பண்ணிப் போனமையால் (இன்னது என்று குறிக்கவில்லை) அவனது நிலத்தையும் உடைமையையும் மன்னர் பறிமுதல் செய்தார். அதனை மன்னனின் படைத்தலைவர் சோழனான வீரசோழ காங்கவன் பெருமாள் பண்டாரத்துக்கு நகரக்கல் துளை முப்பது பொன் கொடுத்து நிலம் ஏதும் மிச்சம் விடாமல் பிராமணனின் 10 இடத்தில்அமைந்த நிலம், தோட்டம்,  வீடு ஆகியவற்றை வாங்கி அவற்றை திருவலஞ்சுழி பரமேசுவரர்க்குத் திருப்பதியப்புறமாகக் கொடுத்தான். அதோடு அரையே அரைக்கால் மாகாணிப் பங்குக்கு வரிநீக்கி திருவலஞ்சுழி சபையாரிடம் அவன் கொடுத்தப் பொன் நகரக்கல் துளை பத்து. இப்பரிசு திருப்பதியப்புறமாக சந்திராதித்தவர் வரை செல்லவதாக கல்வெட்டிக் கொடுத்தான் வீரசோழ காங்கயன். இத்தர்மம் காப்பான் திருப்பாதமென் தலைமேல் என்றும், இத்தர்மம் அழியநினைப்பான் ஏழுதலைமுறை அற்றுப்போவான் என்றும் சாவித்தான்.

சோழனான வீரசோழ காங்கவன் பெருமாள் மன்னனுக்கு அமைச்சராய் படைத்தலைவராய் இருப்பது அவரது உறவினர் என்பதால் ஆகலாம். இதைப் பெயரைக் கொண்டு  அறியமுடிகின்றது. மேலுள்ள மூன்று  கல்வெட்டுகளிலும் பறிமுதல் செய்த இராஜதுரோகிகளின் நில, உடைமைகளை உள்ளூரார் எவருமே வாங்க முன் வராததால் அவற்றை அரசதிகார பொறுப்பில் உள்ளவர்களே வாங்கிக் கொண்டு  கோவிலுக்கு நன்கொடையாகத் தந்து விடுகின்றனர். ஏனெனில் உள்ளூரார்க்கு ஏற்பட்ட அச்சமும், அவரிடம் பெரிதாக பணமும் இல்லாமல் இருக்கலாம் என்ற இரண்டு காரணங்கள் தாம். அதேநேரம் வெளியூரார் வந்து வாங்கிப் போட்டு நிலத்தையும் வீட்டையும் பயன்படுத்த முடியாது ஏனென்றால் அவர்கள் அந்த ஊருக்கே குடிபெயர்ந்தாக வேண்டி நிலை.

பார்வை நூல்: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை – 8, 2012, பக். 160-161.

https://veludharan.blogspot.com/2017/09/sri-soundranayaki-samedha-sri.html

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ராஜதுரோக தண்டனை குறித்த கல்வெட்டுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.