Author: தேமொழி

  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: தோஒம் உடைய தொடங்குவார்க்கு இல்லையே, தா அம் தர வாரா நோய்

     

    ஆஅம் எனக்கெளி தென்றுலகம் ஆண்டவன்
    மேஎந் துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான்
    தோஓ முடைய தொடங்குவார்க் கில்லையே
    தாஅம் தரவாரா நோய்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    ஆஅம் எனக்கு எளிது என்று உலகம் ஆண்டவன்,
    மேஎந் துணை அறியான், மிக்கு நீர் பெய்து, இழந்தான்;-
    தோஒம் உடைய தொடங்குவார்க்கு இல்லையே,
    தா அம் தர வாரா நோய்.

    பொருள் விளக்கம்:
    ஆம் இச்செயல் எனக்கு எளிது என்று உலகை ஆண்ட மாவலி மன்னன், தனக்குத் துணையாக நின்று ‘மூன்றடி நிலத்தை கொடையாகக் கொடுக்க வேண்டாம்’ என்று குரு சுக்கிரன் கூறிய அறிவுரையை மதிக்காது, செருக்குடன் வாமனனுக்கு நீர் ஊற்றித் தாரை வார்த்துக் கொடுத்து அனைத்தையும் இழந்தான். (அது போல) தவறான காரியங்களை செய்யத் தொடங்குபவருக்கு, தமக்குத் தாமே வரவழைத்துக் கொள்ளும் துன்பம் போன்று வேறொன்று இல்லை.

    பழமொழி சொல்லும் பாடம்: ஆராயாது தவறான காரியங்களைச் செய்யத் தொடங்குபவர் தனக்குத் தானே கேடு விளைவித்துக் கொள்வார். இக்கருத்து மாவலி மன்னனின் செயல் பற்றிய புராணக் கதை கொண்டு விளக்கப்படுகிறது. இதனை வள்ளுவர்,

    கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
    முடிந்தாலும் பீழை தரும். (குறள்: 658)

    ஆகாதவை என விலக்கப்பட்டச் செயல்களை விலக்கிவிடாமல் மேற்கொண்டு தொடர்ந்து செய்பவர்களுக்கு அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும் என்று கூறுகிறார்.

    “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற கணியன் பூங்குன்றனார் கூற்றை இன்றும் மறவாதவர் இல்லை. இக்காலத்தில் “சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது” என தமக்குத் தாமே துன்பத்தை வரவழைத்துக் கொள்ளும் செயல் பரவலாக அறியப்படுகிறது. இப்பழமொழியை ஒத்த ஆங்கிலப் பழமொழிகள் “Shoot oneself in the foot”, “A man may cause his own dog to bite him” ஆகியன.

    “தோஒம் உடைய தொடங்குவார்க்கு இல்லையே, தா அம் தர வாரா நோய்” என்பது பழமொழி என்று கூறும் உரை நூல்களும் உள்ளன. “ஆஅம் எனக்கெளி தென்றுலகம் ஆண்டவன் மேஎந் துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான்” என்ற மாவலியின் செயலை பழமொழியாக மா. இராசமாணிக்கனார் தனது உரையில் காட்டுகிறார்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஜூன் 8, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு செல்வி ராதிகா கண்ணன் அவர்கள்

    Radhika Kannan

    அன்பு, அக்கறை, ஆதரவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நாம் வாழும் சமுதாயத்தில் ஒருவருக்கொருவர் உதவி வாழவேண்டும் என்ற கொள்கையை உடையவர் செல்வி ராதிகா கண்ணன். இந்த ஆண்டு அமெரிக்காவின் பெர்க்லியிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் (University of California, Berkeley) பொருளாதாரத்தை முதன்மைப் பாடமாகவும், இயற்கைவளம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை சிறப்புப் பாடமாகவும் படித்து பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர் பட்டதாரி ராதிகா. இவர் இந்த ஆண்டு பட்டம்பெறும் மாணவர்களில் பல்கலைக்கழத்தின் தலைசிறந்த இளங்கலைப் பட்டதாரி (the most distinguished graduating senior on campus) என்று தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசும், பதக்கமும், பட்டமளிப்பு விழாவில் சிறப்புரையாற்றும் மிகப்பெரிய கவுரவத்தையும் பெற்றார். இத்தகுதி வெறும் முதன்மை மதிப்பெண் பெறுவதற்காக மட்டுமே வழங்கப்படுவதல்ல. கல்வியில் மிகச் சிறந்து விளங்குவதுடன், திறமைசாலியாகவும், சமூக அக்கறை கொண்ட ஒருவரே இந்தச் சிறப்பைப் பெறுவார். இந்த ஆண்டு ராதிகா உட்பட மேலும் இரண்டு மாணவரும், இரண்டு மாணவியரும் இந்த சிறப்பிற்காகப் பல்கலைக் கழகத்தின் சிறப்பு விருதுப் போட்டியில் இடம் பிடித்திருந்தார்கள். இவரைப் பரிந்துரைத்த ஆசிரியர்கள் யாவருமே இவர் அறிவாளி மட்டுமல்ல, திறமையும் மனஉறுதியும் கொண்டவர், தான் வாழும் சமுதாயத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர விரும்புபவர், பிறர் நலனில் அக்கறை கொண்டு உதவும் குணம் நிறைந்தவர் என்று பாராட்டி எழுதியிருந்தார்கள். எனவே, அவர்களின் பரிந்துரைக்கேற்ப பல்கலைக்கழகத்தின் சிறந்த பட்டதாரி என்று ராதிகாவே தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது பட்டமளிப்புவிழா சிறப்புரையில் கல்வியில் வெற்றி பெறுவதில் மட்டும் மகிழ்ச்சி கிட்டிவிடாது.படித்து முடித்து பட்டம் பெறும் பொழுது அடையும் மகிழ்ச்சியை விடவும் சமுதாயத்தில் ஒருவருக்கொருவர் உதவி வாழ்வதே மகிழ்ச்சி தருவது என்று உரையைத் துவக்கிய ராதிகா, பட்டம் பெறும் நாம் நமது சமூகத்தின் வளர்ச்சிக்கு, சமுதாயத்திற்கு உதவும் அமைப்புகளை உருவாக்க வேண்டும், நாம் வாழும் சமுதாயத்திற்கு நமது கடமையை எப்படிச் செய்வது என்பதைப் பற்றி சிந்திப்போம் என்று குறிப்பிட்டு சொற்பொழிவை நிறைவு செய்தார். இவரது சாதனையைப் பாராட்டி இவ்வார வல்லமையாளராக செல்வி ராதிகா கண்ணன் அவர்களை அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம். இவரை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் அறிவியல் எழுத்தாளரும் கவிஞருமான திரு. ஜெயபாரதன் அவர்கள், அவருக்கும் வல்லமைக் குழுவினரின் நன்றிகள் உரித்தாகிறது.

    இருபத்தியொரு வயதாகும் ராதிகா கண்ணன் மும்பையில் பிறந்த தமிழ்மக்கள். மென்பொருள் துறையில் ஒரு தொழிலதிபரான திரு. கண்ணனுக்கும், ஆசிரியையான தாய் கீதாஞ்சலிக்கும் இவர் ஒரே மகள், இவரது மூன்று வயதிலேயே குடும்பம் சிங்கப்பூருக்குக் குடி பெயர்ந்தது. பிறகு குறைந்தது ஆறுமுறையாவது இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் மாறி மாறி குடி பெயரும் சூழ்நிலை இவர் குடும்பத்திற்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ஒவ்வொருமுறையும் புதிய பள்ளி, புதிய நண்பர்கள், வாழும் சூழ்நிலை என இவர் எதிர்கொண்ட மாற்றங்கள் இவரை சூழ்நிலைக்கேற்ப விரைவில் தன்னை மாற்றிக் கொண்டு வாழும் முறைக்குப் பழக்கப்படுத்தியது. ராதிகா தனது தாயைப் போலவே பாரத நாட்டியமும் கற்றார். தாயும் மகளும் ஒரே நடன ஆசிரியரிடம் பயின்றவர்கள்.

    Radhika Kannan2

    இவரது கலை ஆர்வம், கல்வியில் சாதனைகள், பலதுறைகளிலும் பங்களிப்பு, சமூக அக்கறை என யாவற்றுக்கும் காரணம் இவரது அன்னையே. இவர் தாயை தனது தோழி போன்று உணரும் உறவின் நெருக்கம் கொண்டவர். ராதிகாவும் அவரது அன்னையும் கலந்தாலோசித்து ராதிகாவின் ஆர்வம் திறமைகளின் அடிப்படையில் இவரது எதிர்காலத் திட்டத்தை வகுத்தனர். பொருளாதாரம், சூழலியலின் பொருளாதாரக் கொள்கைகள், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு சட்டம் பயிலுதல் என்று திட்டமிடப்பட்ட பாதையைக் காட்டினார் தாய் கீதாஞ்சலி. பள்ளிக்கல்வியைத் தவிர பல்வேறு திறமைகளையும் வளர்த்துக் கொள்ள முக்கியத்துவம் அளிக்கவும் இவரது அன்னையால் ராதிகா ஊக்குவிக்கப்பட்டார்.

    பள்ளியில் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு, முதன்மை மதிப்பெண்கள், ஐக்கியநாடுகளின் சபையில் மாதிரி பயிற்சியில் ஈடுபாடு, என ராதிகாவும் பலதுறைகளில் தனது திறமையை வளர்த்துக் கொண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இரண்டாம் ஆண்டு டிசம்பரில் தேர்வுகள் எழுதும் பொழுது இவரது அன்னை தனக்கு ஃப்ளு போன்ற காய்ச்சலினால் உடல்நலக் குறைவு என தொலைபேசியில் தெரிவித்தார். கவலையுடன் உடனே வரவா எனக் கேட்ட இவரிடம் தேர்வு முடித்துவிட்டு கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வரச் சொல்லியிருக்கிறார். ஒரு புதன் கிழமை பேசியவர், என்ன உடல்நலக்குறைவு என்று கண்டறியும் முன்னர் மூன்று நாட்களுக்குள், ராதிகா ஞாயிறன்று சென்னை சென்று சேர்வதற்குள் 45 வயதில் எதிர்பாராதவிதமாக கீதாஞ்சலி இறந்துவிட்டார். பயணத்தில் வழியில் இணைப்பு விமானத்திற்காக ஆர்ம்ஸ்டர்டாம் விமானநிலையத்தில் காத்திருந்த பொழுது, நண்பர் ஒருவர் அனுப்பிய இரங்கல் செய்தியின் மூலம் தாய் மறைந்த செய்தி அறிந்து இடிந்து போனார். திரும்பி அமெரிக்கா வர ஆர்வமற்று போனவரை குடும்பத்தினர் வற்புறுத்தி படிப்பைத் தொடர அனுப்பி வைத்தார்கள். ஆசிரியர்களும், உடன் பயிலும் மாணவர்களும் இவர் நிலையில் அக்கறைகொண்டு மிகவும் உதவிசெய்துள்ளார்கள்.

    தனது தாய் மறைந்த துயரத்தில் இருந்து மீண்டுவர ஒரேவழி தனது தாய் வகுத்துக் கொடுத்த பாதையில் பயணிப்பதுதான் என்ற உறுதி கொண்டு கல்வியில் சிறந்த மாணவியாகவே தொடர்ந்து பயின்று வெற்றி பெற்றுள்ளார். தான் பங்கு பெற்ற சங்கங்களின் வளர்ச்சியில் அக்கறைகாட்டி பிற மாணவர்களை அவற்றிற்கு அறிமுகப்படுத்துவதும், தானே ஒரு முன்மாதிரியாகவும் விளங்கி அவர்களை ராதிகா வழிநடத்துவதும் இவரது ஆசிரியர்களைக் கவர்ந்தது. தனது பாடத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் தட்பவெப்ப நிலைக்கும் பொருளாதாரத்திற்கும் உள்ள தொடர்பை ஆராய முற்பட்டார். தென்னிந்திய உழவர்கள் பருவமழைக்கேற்ப தக்க பயிர்களை பயிரிடத் தவறுகிறார்கள். அதனால் இயற்கைக்கு ஏற்ப பயிரிடாத காலங்களில் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என்று கட்டுரையை சமர்ப்பித்தார். இக்கட்டுரை இவரது ஆசிரியரால் பொருளாதாரத்தில் முனைவர் ஆய்விற்கான சிறந்த ஆய்வுக் கருத்தினைக் கொண்டது என்று பாராட்டப்பட்டது. தனது தாயின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் வெற்றிகரமாக படிப்பைமுடித்த ராதிகா, தனது அன்னையைப் போற்றும் எண்ணத்தில் அவரது அன்னையின் நீலவண்ண சேலையை பட்டமளிப்பு நாளன்று அணிந்து பட்டமும் பெற்றுள்ளார்.

    Radhika Kannan graduating

    தனது குறிக்கோளைத் தொடரும் இவர் அடுத்து ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உலகின் சுற்றுச்சூழல் கொள்கைகள் பற்றிய முதுகலைப் படிப்பும், பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான சட்டங்கள் பற்றிய சட்டக்கல்வியும் பயில திட்டமிட்டுள்ளார். நாடுகளின் நிலையான தன்னிறைவு வளர்ச்சிக்கு பொருளாதாரம், சுற்றுச்சூழல், சமூகநிலை ஆகிய மூன்றையும் ஒன்றாக நோக்கி கொள்கைகள் வகுக்கவேண்டும் என்பதை நாட்டின் நலம் கருதுவோர் அறிவர். ராதிகாவும் அதே சமூக அக்கறை கொண்டு சமூகத்திற்கு தனது பங்கையாற்ற தனது பயிற்சியையும் கல்வியையும் முன்னெடுத்துச் செல்வது பாராட்டிற்குரியது. ராதிகா ஆக்கப்பூர்வமாக சமூகத்திற்கு பங்களிக்கும் தகுதிகளைப் பெற்றிருக்கிறார் என்பதை பெர்க்லி பல்கலைக்கழகமும் கண்டுணர்ந்து அவரைப் பாராட்டியுள்ள வேளையில் வல்லமைக் குழுவினரும் ராதிகாவை வல்லமையாளர் என்று பாராட்டி மகிழ்கிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    குறிப்பு:
    தகவல்களும் படங்களும் கலிஃபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தின் கீழ்காணும் தளங்களில் இருந்தும், பல்கலையகழகத்தின் பட்டமளிப்பு விழா காணொளியில் இருந்தும் சேகரிக்கப்பட்டன.
    http://www.dailycal.org/2015/05/07/university-medal-winner-announced/
    http://newscenter.berkeley.edu/2015/05/04/medalist2015/
    https://www.youtube.com/watch?v=aB0Ku9J6jHg
    &
    https://www.linkedin.com/pub/radhika-kannan/93/aa0/b70
    http://abc7news.com/news/radhika-kannan-wins-uc-medal-as-top-graduating-senior/699929/

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: சீர்ந்தது செய்யாதார் இல்

     

    சுற்றத்தார் நட்டார் எனச்சென் றொருவரை
    அற்றத்தால் தேறா அறிவுடையார் – கொற்றப்புள்
    ஊர்ந்துலகம் தாவின அண்ணலே யாயினும்
    சீர்ந்தது செய்யாதா ரில்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    சுற்றத்தார், நட்டார், எனச் சென்று, ஒருவரை
    அற்றத்தால் தேறார், அறிவுடையார்;-கொற்றப் புள்
    ஊர்ந்து, உலகம் தாவின அண்ணலே ஆயினும்,
    சீர்ந்தது செய்யாதார் இல்.

    பொருள் விளக்கம்:
    சுற்றத்தார், நட்புடையவர் என்ற எண்ணத்தில் அவர்கள் எவரிடத்திலும் தாம் மறைமுகமாகச் செய்வதை வெளிப்படுத்தாதவரே அறிவுடையவர்கள். (அவ்வாறு நம் செயல் பிறருக்குத் தெரிந்துவிட்டால்) வெற்றியுடைய பறவையின் மீதமர்ந்து உலகில் உலாவரும் தலைவனே ஆனாலும் தனக்கு பலனளிக்கும் காரியத்தை செய்யாது விடமாட்டார்.

    பழமொழி சொல்லும் பாடம்: தனக்குப் பலனளிக்கும் செயலை யாராக இருந்தாலும் செய்ய எண்ணுவர், அதனால் செயல் வெற்றியுடன் நிறைவுறும்வரை பிறர் அறிய தமது செயல்களை அறிவில் சிறந்தோர் வெளிப்படுத்த மாட்டார்கள்.

    இதனை வள்ளுவரின் குறள் ஒன்றும் குறிப்பிடுகிறது…

    கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
    எற்றா விழுமந் தரும். (குறள்: 663)

    இக்குறளின் கருத்து, செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும். இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும்.

    தனக்கு ஆதாயம் என்றால் ஒரு  செயலையும் பழிபாவம் அஞ்சாது  கடவுளும் செய்ய விரும்புவார் என்பதை அறிவோம். அதனால் பிறர் நம் செயலை அறிவது நம் செயலுக்கு இடையூறாக அமையலாம்  என்பது இப்பழமொழிச் செய்யுள் குறிக்கும் அறிவுரை. உரைநூல்கள் பொதுவாக, இச்செய்யுளில் வெற்றியையுடைய கருடனில் பறந்து, தாவி உலகளந்த திருமாலே ஆனாலும் தனக்கு பலன் என்றால் பழிபாவம் பாராமல் எதையும் செய்வார் என்று குறிப்பிடுகிறது. இது வாலியை மறைந்திருந்து அழித்து, சுக்ரீவனுக்கு உதவி வானரக் கூட்டத்தை தனது செயலுக்குப் பயன்படுத்திய இராம கதையைக் குறிப்பதாகவும் பொருள் கொள்ளலாம். மாறாக மாம்பழத்தை அடைய விரும்பி மயில் மேல் பறந்து உலகைச் சுற்றி வந்த முருகனையும் குறிக்க வாய்ப்பிருந்தாலும், இக்கோணத்தைக் குறிப்பிட்ட உரை ஏதும் உள்ளதாகத் தெரியவில்லை.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: வெந்நீரில் தண்ணீர் தெளித்து

     

    செந்நீரார் போன்று சிதைய மதிப்பார்க்கும்
    பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும்
    அந்நீ ரவரவர்க்குத் தக்காங் கொழுகுபவே
    வெந்நீரிற் றண்ணீர் தெளித்து.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    செந்நீரார் போன்று சிதைய மதிப்பார்க்கும்
    பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும்
    அந் நீர் அவரவர்க்கு தக்கு ஆங்கு ஒழுகுபவே
    வெந்நீரில் தண்ணீர் தெளித்து

    பொருள் விளக்கம்:
    செம்மையான பண்பு உள்ளவரைப் போன்று தமது காரியத்தை சிதைக்க எண்ணுபவரிடமும் (அன்பு காட்டியும்), பொய்யாகப் பொருட்படுத்தாத  பண்பு கொண்டவர் போல செயலை தக்கவாறு முடிப்பவரிடமும், அவரவருக்கேற்ற பண்பினை அவரவரது இயல்புக்குத் தக்கவாறு கையாள்வது, வெந்நீரில் குளிர்நீர் கலந்து அளாவி பதமாகப் பயன்படுத்துவதைப் போன்றது.

    பழமொழி சொல்லும் பாடம்: வெந்நீரில் குளிர்நீர் அளாவி பக்குவமாகப் பயன்படுத்துதல் போல, அவரவர் இயல்பிற்குத் தக்கவாறு செயல்பட்டு தனது செயலை நிறைவேற்றிக் கொள்வார் தமது காரியத்திலேயே கண்ணாயிருப்பவர்.

    ஆடிக்கறக்கும் மாட்டை ஆடியும், பாடிக் கறக்கும் மாட்டைப் பாடியும் கறக்க வேண்டும் என்று பரவலாக இக்காலத்தில் வழங்கப்பெறும் பழமொழி கூறுவதும் இக்கருத்தையே வள்ளுவரும் இதனைப் பின்வருமாறு கூறுகிறார்.

    நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
    பண்பறிந் தாற்றாக் கடை. (குறள்: 469)

    அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செயல்படாவிட்டால், நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும் என்று வள்ளுவர் அறிவுறுத்துகிறார். தமது காரியத்தை முடிக்க உதவ இயலாதவரிடம் அக்கறை செலுத்தி அவரை ஊக்கப்படுத்துவது தேவையானது. தனது கடமையை உணர்ந்து செயலாற்றுபவரை தொல்லை செய்யாது அக்கறையின்றி விட்டுவிடுவது அவரது பொறுப்புணர்வை அதிகப்படுத்தும். தன் மேல் வைத்துள்ள நம்பிக்கையை பாழாக்கக் கூடாது என்று அவர் கடினமாகக் காரியமாற்றுவார். அவரவர் செயலாற்றும் இயல்பை உணர்ந்து அதற்கேற்றவாறு நடப்பது அவரவரையும் அவரது பண்பிற்கு ஏற்றவாறு ஊக்கப்படுத்தும் முறையாகும்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஜூன் 1, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு வரலாற்றாய்வாளர் இரா. கலைக்கோவன் அவர்கள்

    கலைக்கோவன் profile

     

    கள ஆய்வுகளில் அறியப்படும் உண்மைகளின் அடிப்படையில் வரலாற்றை உருவாக்கும் நோக்குடன் “தமிழறிஞரும் வரலாற்றறிஞருமான முனைவர் மா. இராசமாணிக்கனார்” பெயரில் முனைவர் இரா. கலைக்கோவனால் திருச்சிராப்பள்ளியில் 1982 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆய்வு அமைப்பே டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம். நிறுவனரான இவரே வரலாற்றாய்வு மையத்தின் இயக்குநரும் ஆவார். நடப்புலகில் பொது அங்கீகாரமோ புகழோ கிடைக்க வழியில்லாத வரலாற்றாய்வுத் துறையில் 33 ஆண்டுகள் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும் வரலாற்றாய்வு மையத்தின் இயக்குநரான முனைவர் இரா. கலைக்கோவன் அவர்களுக்கும் இப்பணி வாழ்வாதாரம் அல்ல. தொழில்முறையில் இவர் ஒரு கண் மருத்துவர். இவரது முயற்சி ஆல் போல வளர்ந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கல்வெட்டு ஆய்வுகள், ஐம்பதிற்கும் மேற்பட்ட புத்தக வெளியீடுகள், 25 “வரலாறு” ஆய்விதழ்கள், 119 வரலாறு.காம் மின்னிதழ் பதிப்புகள், 1356 வரலாற்றுக் கட்டுரைகள் எனப் பல எல்லைகளைக் கடந்துள்ளனர் வரலாற்றாய்வு மையத்தினர். இச்சாதனைகளை நினைவுகூரும் விதத்தில் டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் பணிகளை முன்னிறுத்திக் கௌரவிக்கும் இதழாக தற்பொழுது வெளிவந்திருக்கும் மையத்தின் இம்மாதத்தின் திங்களிதழ் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றின் பால் கொண்ட  ஆர்வம் காரணமாக 25 ஆவது “வரலாறு” ஆய்விதழ் வெளியாகும் வரை வரலாற்றாய்வு மையத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றுள்ள முனைவர் இரா. கலைக்கோவன் அவர்களை இவ்வார வல்லமையாளராக அறிவித்துப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    வரலாறு

    1. பதிவு செய்யப்படாத கல்வெட்டுகளைக் கண்டறிந்து பதிப்பித்தல்
    2. தமிழ்நாட்டுக் கலை வரலாற்றை முழுமையுற உருவாக்கல்
    3. ஆய்வாளர்களுக்குப் பயன்படும் வகையில் புதிய தரவுகளை வழங்கும் ஆண்டு ஆய்விதழ் வெளியிடல்
    4. களஆய்வில் நம்பிக்கையுடைய இளம் ஆய்வாளர்களை வழிநடத்தல்
    5. உலகளாவிய தமிழர்களுக்கு இலக்கியம், வரலாறு குறித்த ஆர்வத்தையும் ஆய்வு நோக்கையும் விதைத்தல்
    6. கோயில்கள் வரலாற்றுக் களங்கள் என்பதால் அது குறித்த விழிப்புணர்வைச் சமுதாயத்தில் பரவச் செய்தல்
    ஆகியவை வரலாற்றாய்வு மையத்தின் குறிக்கோள்கள்.

    திருச்சி, ஸ்ரீரங்கம் கோவில் கருடாழ்வார் சன்னிதியில், கருவூலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்த நிலையில், உண்மையை அறிவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் இடம்பெற்ற முனைவர் இரா.கலைக்கோவன், மூன்று நாள் அங்கு தங்கியிருந்து ஆராய்ச்சி செய்தார்.

    இவர் பங்கேற்ற பற்பல களஆய்வுப்பணி தொடர்பான செய்திகள் மாதம் ஒருமுறையாவது நாளிதழ்களில் இடம் பெறத் தவறுவதில்லை … சமீபத்தில் வெளியான செய்திகள் சில …

    செவந்திலிங்கபுரத்தில் அரியவகை ஐய்யனார் சிற்பம் கண்டெடுப்பு – ஏப்ரல் 23, 2015, தினமணி

    கலைக்கோவன்  கல்வெட்டு - தினமணி

    முசிறி அருகே வெள்ளூரில் சுந்தரபாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு – ஜனவரி 21, 2015, தி ஹிந்து தமிழ் பதிப்பு

    கலைக்கோவன்  கல்வெட்டு - தி ஹிந்து

                       கலைக்கோவன் கள ஆய்வு 8கலைக்கோவன் கள ஆய்வு 7

    கலைக்கோவன் கள ஆய்வு 32கலைக்கோவன் கள ஆய்வு 2

    கலைக்கோவன் கள ஆய்வு 4கலைக்கோவன் கள ஆய்வு

                      கலைக்கோவன் கள ஆய்வு 6கலைக்கோவன் கள ஆய்வு 5

    அரசு ஆதரவு, நல்ல பொருளாதாரப் பின்புலமுள்ள பெரிய பல்கலைக்கழகங்களும் நிறுவனங்களும் சாதித்ததைக் காட்டிலும், பெரிய அளவில் பொருளாதாரப் பின்புலம் ஏதும் இல்லாமல் தன்னார்வ ஊழியர்கள் மற்றும் ஆர்வலர்கள் உதவியுடன் கடந்த முப்பத்து மூன்றாண்டுகளில் வரலாற்றாய்வு மையம் சாதித்துள்ள வரலாற்றுப் பணி குறிப்பிடத் தக்கது. மையத்தின் ஒரு முக்கிய ஆய்வாளருமான 67 வயதாகும் முனைவர் இரா.கலைக்கோவன் அவர்களின் இப்பணியைப் பாராட்டி, சென்ற ஏப்ரல் (2015) மாதத்தில் கும்பகோணம் ரோட்டரி கிராண்ட் நிறுவனம் “வாழ்நாள் சாதனையாளர்” விருது அளித்து முனைவர் இரா.கலைக்கோவன் அவர்களைக் கௌரவப்படுத்தியுள்ளது.

    கலைக்கோவன்

    ஏற்புரையில் முனைவர் இரா.கலைக்கோவன், ‘கோரிக்கைகளுக்காக மட்டும் கோயில்களை அணுக வேண்டாம்!’ என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார். தமிழர் அனைவரும் இவ்வேண்டுகோளை சிரமேற்கொண்டால் தமிழகத் தொல்பொருள் ஆய்வும், தமிழக வரலாற்று ஆய்வும் நல்ல உயர்ந்த நிலையை அடைந்து தமிழகத்திற்கு பெருமைகள் பல சேர்க்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

    இந்த வேண்டுகோளை இவர் பலகாலமாக தமிழக மக்களிடம் முன்வைத்துவருகிறார். “வரலாறு” ஆய்விதழின் எட்டாம் இதழில் அவர் கீழ் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

    “குடமுழுக்கு, திருப்பணி என்ற சொற்களைக் கேட்டாலே அஞ்சுமளவிற்குத் திருக்கோயில்கள் இவற்றால் சீரழிக்கப்படுவது கண்கூடு. எவ்வளவோ எடுத்துரைத்தும் பொறுப்பில் உள்ளவர்கள் கருத்தில் கொள்ளாமலிருப்பது ஏனென்று தெரியவில்லை. இந்தக் கொடுமைகளை எப்படித் தடுப்பதென்றும் விளங்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ள ஆய்வாளர்கள்தான் இதற்கொரு முடிவுகட்டவேண்டும். மக்களுக்குக் கல்வெட்டுகள், சிற்பங்கள் ஆகியவற்றின் முக்கியத் துவத்தை விளங்க உரைப்பதுடன், எக்காரணம் கொண்டும், அவை குடமுழுக்குக் கோலாகலங்களின் பூச்சுகளுக்கும், சிதைவுகளுக்கும் ஆளாகாது காப்பாற்றிடல் வேண்டும். ஆங்காங்கே உள்ள ஆய்வமைப்புகளும் இப்பணியில் முழுமூச்சாய் ஈடுபடுவது அவசியமாகும். இன்றொரு விதி செய்யத் தவறினோமாயின், இனி எந்நாளும் கல்வெட்டுகளைக் கோயில்களில் காண்பது குதிரைக்கொம்புதான். வாருங்கள் தோழர்களே, கையிணைப்போம். இந்த நாட்டின் வரலாற்றை அழிவினின்று காப்போம்.”

    வரலாற்றாய்வு மையத்தின் போற்றத்தக்க மற்றொரு கோணம், பொறியியல் வல்லுநர்களையும் கணிப்பொறி வல்லுநர்களையும் கட்டுமானத் தொழிலதிபர்களையும் அரசாங்க அதிகாரிகளையும் வரலாற்று மாணவர்களாக மாற்றி தமிழக வரலாறு, கல்வெட்டு, களப்பணி ஆகியவற்றில் ஆர்வம் கொள்ளச் செய்து பலரை வரலாற்று ஆய்வாளர்களாகவும் அறிஞர்களாகவும் மாற்றி வருவதே. தமிழறிஞரும் வரலாற்றறிஞருமான முனைவர் மா. இராசமாணிக்கனார் பெயரில் ஆய்வு மையம் அமைத்து தமிழக வரலாற்றிற்கு இன்றியமையாத வகையில் ஆய்வுத்தொண்டுகள் பல ஆற்றி வரும் மையத்தின் இயக்குநர் மருத்துவர் இரா. கலைக்கோவன் அவர்கள் தமிழறிஞர் மா. இராசமாணிக்கனார் அவர்களின் மைந்தர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
    என்நோற்றான் கொல்எனும் சொல்.

    என்ற குறள் காட்டும் நெறியினைப் பின்பற்றி, தமது தந்தையாரின் வரலாற்று ஆய்வுப்பணியை முன்னெடுத்துச் செல்லும் மருத்துவர் இரா. கலைக்கோவன் அவர்களின் பணிகளை வாழ்த்திப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் பெருமை கொள்கிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    தொடர்புக்கு:
    http://www.varalaaru.com
    https://www.facebook.com/varalaarumagazine
    varalaaru.editor@gmail.com

    நன்றி:
    படங்களும் தகவல்களும் www.varalaaru.com தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டன.
    கல்வெட்டு செய்தி, சிற்பம் படங்களை தந்துதவியவை ‘தினமணி’ மற்றும் ‘தி இந்து தமிழ்’ நாளிதழ்கள்

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: தமக்கு மருத்துவர் தாம்

     

    எமக்குத் துணையாவார் வேண்டுமென் றெண்ணித்
    தமக்குந் துணையாவார்த் தாந்தெரிதல் வேண்டா
    பிறர்க்குப் பிறர்செய்வ துண்டோமற் றில்லை
    தமக்கு மருத்துவர் தாம்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    எமக்கு துணையாவார் வேண்டும் என்று எண்ணி
    தமக்கு துணையாவார் தாம் தெரிதல் வேண்டா
    பிறர்க்கு பிறர் செய்வது உண்டோ மற்றில்லை
    தமக்கு மருத்துவர் தாம்

    பொருள் விளக்கம்:
    துன்பப்படும்பொழுது எனக்குத் துணையாக இருந்து உதவுபவர் தேவை என்று கருதி, தனக்குத் துணையாக இருந்து உதவக்கூடியவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை. பிறர் ஒருவருக்கு பிறிதொருவர் செய்யக்கூடும் என்று நம்பியிருக்கத் தக்கது ஏதுமில்லை. நமக்கு ஏற்படக்கூடிய நோயை நாமே நமக்கு மருத்துவர் போல இருந்து காத்துக்கொள்ள வேண்டும் (என்பதைப் போன்று பிறர் உதவியை எதிர்பார்க்காது செயல்பட வேண்டும்).

    பழமொழி சொல்லும் பாடம்: நமக்கு வரும் நோயைத் தவிர்க்கக் கூடிய மருத்துவர் நாமே என்பது போல, தன் கையே தனக்கு உதவி என்று உணர்ந்து, நமக்கேற்ற நன்மைகளை நாமே தேடிக்கொண்டு அடுத்தவரை எதிர்பார்க்காது வாழும் வாழ்க்கையே சிறந்தது.

    தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி தரும். (குறள்: 619)

    தெய்வமே ஒருவருக்கு உதவ முடியாது கைவிட்டாலும், ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியை அவர் நிச்சயம் அடையமுடியும் என்று வள்ளுவர் அறிவுறுத்துவதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே …

    அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
    பெருமை முயற்சி தரும். (குறள்: 611)

    நம்மால் இதைச் செய்யமுடியாது என்ற மனத் தளர்வைக் கைவிட்டு, முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமைந்துவிடும்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

    பழமொழி: கண்டது காரணம் ஆம்

     

    பேருலையுள் பெய்த அரிசியைவெந்தமை
    ஓர்மூழை யாலே உணர்ந்தாங்கு – யார்கண்ணும்
    கண்டதனால் காண்டலே வேண்டுமாம் யார்கண்ணும்
    கண்டது காரணமாம் ஆறு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    பேர் உலையுள் பெய்த அரிசியை வெந்தமை
    ஓர் மூழையாலே உணர்ந்த ஆங்கு யார்கண்ணும்
    கண்டதனால் காண்டலே வேண்டுமாம் யாதற்கும்
    கண்டது காரணம் ஆமாறு

    பொருள் விளக்கம்:
    கொதிக்கும் பெரிய உலையினில் இட்ட அரிசி வெந்து சோறாயிற்றா என அறிய ஓர் அகப்பைச் சோற்றினை மட்டுமே சோதித்து அறிவது போல, யாரிடமும் காணும் செயல்பாடுகளைக் கொண்டே அவரைப் பற்றி நாம் அறிந்திராத குணநலன்கள் என்னவாக இருக்குமென்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.

    பழமொழி சொல்லும் பாடம்: ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறைக் கொண்டு பதத்தை அறிவது போல, ஒருவருடைய செயல்களைக் கொண்டு அவரது பண்புகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
    மாறாநீர் வையக் கணி. (குறள்: 701)

    ஒருவர் சொல்லாமலே அவருடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவர் உலகத்திற்கே அணியாவார் என்று வள்ளுவர் குறிப்பறியும் திறன் கொண்டவரை உலகத்திற்கே அணியாவார் என்று பாராட்டுகிறார். பிறரது இயல்பை குறிப்பாலறிதல் அறிவுடமையாகும்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    மே 25, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு சமூகப் போராளி மாணவி நந்தினி அவர்கள்

    miss.nandhini.anandhan

    மக்களை பேரழிவிற்கு இட்டுச் செல்லும் மதுவை ஒழிப்பதற்காகத் தொடர்ந்து போராடிவருபவர்  சமூகப் போராளி, மதுரை சட்டக் கல்லூரிமாணவி நந்தினி ஆனந்தன் அவர்கள். தனது தொடர் போராட்டத்தின் ஒருபகுதியாக… தமிழக அரசு “டாஸ்மாக்” மதுக்கடைகள் வழியாக மதுவிற்பனையில் ஈடுபடுவதைக் கண்டிக்கும் நோக்கில் இவர் போராட்டங்கள் நடத்தி வருவது தமிழகம் அறிந்த நிகழ்வுகள். மாண்புமிகு முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் மீண்டும் பதவி ஏற்கும் நாளான சென்ற வாரம் மே 23 அன்று தனது போராட்டத்தின் தொடர்ச்சியாக சென்னை தலைமைச் செயலகம் முன் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட நந்தினி திட்டமிட்டிருந்தார். இவரது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை அடிப்படையில் இவரைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு நந்தினியையும், அவருடன் போராட்டத்தில் ஈடுபட இருந்த அவரது தந்தை ஆனந்தனையும் மதுரை மாநகரக் காவல் துறையினர் மே 22 ஆம் நாள் கைது செய்தார்கள். முதல்வரின் பதவியேற்பிற்குப் பிறகு காவல்துறையினர் இவர்களை விடுதலை செய்துள்ளனர். நாளிதழ்கள் அறிவித்த இச்செய்தியை நந்தினியும் தனது ஃபேஸ்புக் தளத்திலும் பதிவு செய்துள்ளார். சென்றவாரக் கைது உட்பட மது ஒழிப்பு போராட்டத்திற்காக இவர் இதுநாள் வரை 27 முறைகள் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமூகநலனில் அக்கறை கொண்டு தளராது தனது போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வரும் திருமிகு நந்தினி ஆனந்தன் அவர்களின் முயற்சியைப் பாராட்டும் வகையில் அவரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    nandhini.anandhan

    நந்தினியின் போராட்டங்களுக்கு உந்துதலாகவும், அவருக்கு ஆதரவாகவும் இருப்பவர் தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறையில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றி, தற்பொழுது விருப்ப ஓய்வு பெற்றுள்ள இவரது தந்தை. மதுரை புதூர் காந்திபுரத்தைச் சேர்ந்த இவரது தந்தை திருவாளர் ஆனந்தன் அவர்கள் தனது மகளின் போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்துவருகிறார். சட்டக்கல்லூரி இறுதியாண்டு மாணவியான நந்தினியுடனும், தந்தை ஆனந்தனுடனும், இவரது சகோதரி நிரஞ்சனாவும் போராட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்.

    nandhini.anandhan2

    கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக; மதுரை சட்டக்கல்லூரி, சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்றம், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பத்தூர், சேலம், ஏற்காடு, பெருந்துறை உள்ளிட்ட பல இடங்களில் டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் மதுவுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தியதற்காகவும் நந்தினி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை தலைமை அலுவலகம், முதல்வரின் இல்லம் , முதல்வரின் கொடநாடு ஓய்வில்லம் எனப் பிற இடங்களில் உண்ணாவிரதப்போராட்டம் இருக்க முயன்ற பொழுது முன்னெச்சரிக்கையாகவும் அரசால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    நந்தினி2

    குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தனது கண்முன்னர் அழியும் குடும்பங்களின் துயரைப் பொறுக்க முடியாத நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நூறு குழந்தைகளுடன் முதல்வரைச் சந்தித்து நியாயம் கேட்க முயன்றதில் துவங்கியது நந்தினியின் போராட்டம். இந்திய குற்றவியல் சட்டம் 328 பிரிவின் கீழ் அரசே மதுவிற்பது சட்டவிரோதமான செயல் என்பது நந்தினி முன்வைக்கும் வாதம்.

    Central Government Act – Section 328 in The Indian Penal Code: 328. Causing hurt by means of poison, etc., with intent to commit an offense.—Whoever administers to or causes to be taken by any person any poison or any stupefying, intoxicating or unwholesome drug, or other thing with intent to cause hurt to such person, or with intent to commit or to facilitate the commission of an offense or knowing it to be likely that he will thereby cause hurt, shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine. [Source: http://www.indianpenalcode.in/ipc-328/]

    “போதைப் பொருள்களைத் தவறு எனத் தெரிந்தே விற்பது சட்டப்படி குற்றம். அதற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்று நன்றாகத் தெரிந்து கொண்டே மதுவை அரசு விற்பது சட்டத்தை மீறிய செயல் இல்லையா? கள்ளச் சாராயம் காய்ச்சுவது குற்றமென்றால் உரிமம் பெற்று டாஸ்மாக் நடத்துவது சரியானதுதானா? அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 47 இன் படி மதுவிலக்கை மாநில அரசு அமல்படுத்த வேண்டும்” என்பது நந்தினி அரசிற்கு வைத்த கோரிக்கை.

    சட்டப்படி அரசின்மீது நடவடிக்கை எடுத்தால் நீதி கிடைக்க ஆண்டுகள் பல ஆகலாம் என்ற நாட்டின் நடைமுறை நிலமையாலும், பள்ளி மாணவர்களும் தற்காலத்தில் குடிக்கு அடிமையாவதும், குடிப்பழக்கம் உள்ள குடும்பங்களில் தற்கொலைகள் அதிகரிக்கும் நிலையும் இவரை போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் ஆகியவற்றின் வழியாக நீதி கேட்கும் முறையைத் தேர்ந்தெடுக்கச் செய்துள்ளது. இவரது போராட்டங்களுக்கு இவரது கல்லூரி நண்பர்களும், மாணவர் சமுதாயமும், அரசியல்வாதிகள் சிலரும், பொதுமக்களும், பத்திரிக்கைகளும் ஆதரவு தெரிவித்து வந்துள்ளனர்.

    nandhini.anandhan1a

    சென்ற வெள்ளியன்று நந்தினியின் கருப்புக்கொடி போராட்டத்தை முறியடிக்கும் விதமாகக் காவல்துறையினர் இவரைக் கைது செய்து, பின்னர் மறுநாள் விடுதலை செய்த பிறகு நந்தினி தனது ஃபேஸ்புக் சமூகவலைத்தளத்தின் மூலம் கீழ் காணும் செய்தியை தமிழக அரசின் பார்வைக்கு அனுப்பியுள்ளார்.

    “ஐந்தாவது முறையாக தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ள ஜெயலலிதா அவர்களே,
    “ஒரு அரசமைப்பு எவ்வளவு உயர்ந்ததாக இருந்தபோதிலும் அதைச் செயல்படுத்துபவர்கள் மோசமானவர்களாக இருந்தால் அந்த அரசமைப்பும் மோசமாகிவிடும்”- என அரசியல்சாசன சிற்பி அண்ணல் அம்பேத்கர் சொன்னது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ நிச்சயமாக உங்களுக்கும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கும் 100% பொருந்தும். நீங்கள் இருவரும்தானே தமிழக மக்களைத் திட்டமிட்டு குடிக்கு அடிமைப்படுத்தி, பல லட்சம் குடும்பங்களை நாசப்படுத்திய குற்றவாளிகள். ஆம், நீங்கள் இருவரும் கொடிய குற்றவாளிகள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. பாலில் கலப்படம் செய்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை தரவேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. பாலில் கலப்படம் செய்தாலே ஆயுள் தண்டனை என்றால், மது என்னும் கொடிய விஷத்தை விற்று ஏராளமான மக்களைப் படுகொலை செய்யும் உங்களுக்கு என்ன தண்டனை தருவது? தூக்குதண்டனை கூடப் போதாது. அதையும் தாண்டி புதிதாக ஏதாவது தண்டனையை சட்டத்தில் சேர்க்க வேண்டும். சட்டத்தில் இருந்து தப்புவது உங்களுக்குக் கைவந்த கலையாக இருக்கலாம். ஆனால் கடவுளின் தீர்ப்பிலிருந்து உங்களால் என்றுமே தப்பிக்க முடியாது. மதுவிற்பனை அதிகரிக்க, அதிகரிக்க உங்களது பாவக்கணக்கும் அதிகரிப்பதை மறந்துவிடாதீர்கள். நிச்சயமாக, ஒருநாள் இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். நீதிக்காக மன்னனையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்த மண் இது. நீதியும் நியாயமும் இங்கு இன்னும் உயிரோடுதான் இருக்கிறது..அநீதிக்கு எதிரான போர்க்குரல் இம்மண்ணிலிருந்து ஒலித்துக்கொண்டுதான் இருக்கும். யாராலும் இதனைத் தடுக்க முடியாது.ஆ.நந்தினி சட்டக்கல்லூரி மாணவி,மதுரை.”

    [Source: https://www.facebook.com/photo.php?fbid=1711403399087192&set=a.1415621265332075.1073741828.100006526451390&type=1&theater]

    சமூக நலன் கருதி அயராது போராடும் நந்தினியின் முயற்சியைப் பாராட்டி அவரது மதுஒழிப்புப் போராட்டத்தில் வெற்றிபெற வல்லமைக் குழுவினர்களின் சார்பில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

    நன்றி: செய்திகள் படங்கள் இணையத்தளங்களின் உதவியால் கிடைத்தவை

    நந்தினையத் தொடர்பு கொள்ள:
    https://www.facebook.com/nandhini.anandhan.35?

    தொலைபேசி தொடர்புக்கு: 97507 24220

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: எண்ணி உயிர்கொள்வான் வேண்டித் திரியினும் உண்ணுந்துணைக் காக்கும் கூற்று

     

    கண்ணுள் மணியேபோல் காதலால் நட்டாரும்
    எண்ணுந் துணையிற் பிறராகி நிற்பரால்
    எண்ணி உயிர்கொள்வான் வேண்டித் திரியினும்
    உண்ணுந் துணைக்காக்கும் கூற்று

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    கண்ணுள் மணியேபோல் காதலால் நட்டாரும்
    எண்ணுந் துணையில் பிறர் ஆகி நிற்பரால்
    எண்ணி உயிர் கொள்வான் வேண்டி திரியினும்
    உண்ணும் துணை காக்கும் கூற்று

    பொருள் விளக்கம்:
    கண்ணின் அருமையான கருமணியைப் போன்று, நட்பாக அன்பு செலுத்தும் தன்னலம் நிரம்பியக் காரியவாதிகள், தனது காரியம் நிறைவேறியது என்று நினைக்கும் பொழுதே தமது போலியான நட்பை விலக்கிப் பிரிந்துவிடுவர். (இத்தகையோர் செயலானது) தக்க தருணத்தில் உயிரை நீக்கிவிடும் விருப்பத்துடன் பின்தொடர்ந்து, நீக்க வேண்டிய உரிய நேரம் வரும் வரை உயிரை விட்டுவைத்திருக்கும் காலனின் செயல் போன்றது.

    பழமொழி சொல்லும் பாடம்: தன்னலம் கருதி நட்புப் பாராட்டுவோரின் நட்பு உண்மையானதன்று, தங்கள் எண்ணம் நிறைவேறும் வரை நட்பு செலுத்துவதாக நடித்து, தாம் விரும்பிய பலன் கிடைத்ததும் விலகிவிடுவர்.

    தன்னலவாதிகளின் நட்பைப் பற்றி…

    சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
    நேரா நிரந்தவர் நட்பு. (குறள்: 821)

    மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோலத் தோன்றினாலும் இரும்பைத் துண்டாக்க பயன்படும் தாங்கு பலகை போல இருக்கும் பட்டடைக் கல்லுக்கு ஒப்பாகும் என்று இத்தகையோர் நட்பை விளக்குகிறார் வள்ளுவர்.

    மேலும்,

    உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை
    பெறினும் இழப்பினும் என். (குறள்: 812)

    தமக்குப் பயனிருந்தால் நட்புக் கொண்டும், பயன் இல்லை என்றால் நட்பை விலக்கியும் விடுகின்றவர்களின் நட்பு, இருந்தால் என்ன? இழந்தால்தான் என்ன? என்று வள்ளுவர் எழுப்பும் கேள்வியும் சிந்திக்கத்தக்கது. தன்னலவாதியாக இத்தகைய நட்புக் காட்டும் மக்களை விலைமகளிருடனும், கள்வருடனும் ஒப்பிடுகிறார்,

    உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
    கொள்வாரும் கள்வரும் நேர். (குறள்: 813)
    என்ற குறளில் வள்ளுவர்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

    பழமொழி: ஒட்டிய காதல் உமையாள் ஒருபாலாக் கட்டங்கம் வெல்கொடி கொண்டானும் கொண்டானே

     

    ஒட்டிய காதல் உமையாள் ஒருபாலாக்
    கட்டங்கம் வெல்கொடி கொண்டானும் கொண்டானே
    விட்டாங் ககலா முழுமெய்யும் கொள்பவே
    நட்டாரை ஒட்டி யுழி

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    ஒட்டிய காதல் உமையாள் ஒரு பாலா
    கட்டங்கம் வெல் கொடி கொண்டானும் கொண்டானே
    விட்டு ஆங்கு அகலா முழு மெய்யும் கொள்பவே
    நட்டாரை ஒட்டியுழி

    பொருள் விளக்கம்:
    மனமொத்த அன்பு கொண்ட உமையவளை தன்னுடைய ஒரு பகுதியாக, கட்வங்கத்தடி கொண்டு பகையழித்து வெற்றிக்கொடி நாட்டும் சிவனும் கொண்டான். (அதுபோல,) தனது உடலை விட்டு நீங்காது உடலுடன் முற்றுமாக இணைந்துவிட்டவரைப் போன்றே தனது நட்புக்குரியவரைக் கருதி அன்புடையவர் நட்பு பாராட்டுவர்.

    பழமொழி சொல்லும் பாடம்: அன்புடையவரின் நட்பின் திறமானது, தான் வேறு நண்பர் வேறென்ற எண்ணம் இல்லாததாக, நண்பரது வாழ்வின் இன்பதுன்பங்களை தன்னுடையதாகவேக் கருதும் சிறந்த நட்பாக இருக்கும்.

    உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு (குறள்: 788)

    நழுவும் ஆடையைத் தடுத்து மானம் காக்க உதவும் கை போல, நண்பருக்கு வந்த துன்பத்தை தனதாகக் கருதி உதவச் செல்வதே நட்பென வள்ளுவர் கூறிய நட்பின் திறம் இப்பழமொழி கூறும் கருத்துடன் பொருந்துகின்றது.

     

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    மே 18, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு இளம் அறிவாளி விசாலினி அவர்கள்

     

    k visalini

     

    ஐந்து உலக சாதனைகளை நிகழ்த்திய ஒரு இந்திய மாணவி. உலகிலேயே மிகவும் அறிவாளி இந்த  பதின்ம வயது தமிழ்ப்பெண்; அவரது நுண்ணறிவுத் திறன் புள்ளிகள் (Intelligence Quotient /IQ ) 225. உலக கருத்தரங்கங்களில் சிறப்புரையாற்ற தமது பத்து வயதிலேயே அழைக்கப்பட்டவர்; கூகுள், டெட் எக்ஸ் (TEDx) போன்ற உலகப் புகழ் பெற்ற தொழில் நுட்ப நிறுவனங்களின் இளவயது சிறப்புரையாளர் இவர் என்று நீளும் சாதனைப் பட்டியலுக்கு உரியவரான பதினைந்து வயது செல்வி விசாலினியை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் பெருமை கொள்கிறோம். விசாலினியை வல்லமைக் குழுவினருக்குப் பரிந்துரைத்தவர் வல்லமை வாசகரான திரு. தேவ்ராஜ் அவர்கள். அவருக்கு எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வார இறுதியில் (மே 23, 2015) தனது இனிய பதினாறு வயதில் அடியெடுத்து வைக்கும் செல்வி விசாலினிக்கு வல்லமைக் குழுவினர்களின் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

    k visalini-b

    திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை “ஐ.ஐ.பி.இ. லக்ஷ்மி ராமன் மெட்ரிக்குலேஷன்” உயர்நிலைப்பள்ளி மாணவி விசாலினியின் பெற்றோர்கள் கல்யாண குமாரசாமி, சேது ராகமாலிகா. மின்னியலாளராகத் தொழில் புரியும் தந்தைக்கும், திருநெல்வேலியின், ‘ஆல் இந்தியா ரேடியோ’ வானொலியின் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றும் தாய்க்கும் பிறந்த ஒரேமகள். இவர் பிறந்த பொழுது பேச்சு வர தாமதமானபொழுது, வானொலியில் பேசும் தாய்க்கு பேச்சு வராத குழந்தையா என இவர் தாயிடமே வியந்து கேட்டவர்கள் உண்டு. மருத்துவர்கள் ஆலோசனையின்படி ராகமாலிகா இவருடன் தொடர்ந்து பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தார். தனது பதவி உயர்வுகளுக்கான தேர்வுகளுக்குப் படிக்கும் பொழுது, தனது மகளை தன்னுடன் இருக்கச் செய்து பாடங்களை உரக்கப் படிக்கும் வழக்கத்தையும் மேற்கொண்டார். இடைவிடாத தாயின் முயற்சியினால் மகள் திடீரென ஒருநாள் பேசத் தொடங்கினார். அதுமட்டுமின்றி படிப்பில் மிகவும் சூட்டிகையாகவும் விளங்கி ஆண்டுக்கு இரண்டு வகுப்புகள் என இரட்டை தேர்ச்சிகள் பெற்று பிறரைவிட வேகமாக முன்னேறத் துவங்கினார்.

    எட்டாம் வகுப்பு தேறிய இளவயது மாணவன் ஒருவன் பொறியியல் கல்லூரியில் படிக்க அனுமதிக்கப்பட்டான் என்ற செய்தியைப் படித்த பெற்றோர்கள் விசாலினியையும் அவ்வாறு சேர்க்க இயலுமா என்று தகவல் சேகரித்த பொழுது, சிஸ்கோ நிறுவனத்தின் “சி சி என் ஏ” (CCNA – Cisco Certified Network Associate)தொழில் நுட்பத் தேர்வு எழுதிய சான்றுகள் கொண்டு வருமாறு அறிவுரை கிடைத்தது. பொறியியல் பட்டதாரிகள் மட்டுமே எழுதும் கடினமான சிஸ்கோ கணினித் தேர்வினை தனது 10 வயதில் எழுதிய விசாலினி, 90 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்று இளம்வயதிலேயே இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர் என்ற உலக சாதனையைப் படைத்தார். இவருக்கும் முன்னர் பாகிஸ்தான் மாணவன் ஒருவர் தனது 12 வயதில் செய்த சாதனையை இவர் முறியடித்தார். இது போன்றே மைக்ரோசாஃப்ட்டின் “எம் சி பி” (Microsoft Certified Professional – MCP) தேர்விலும் மற்றொரு பாகிஸ்தான் மாணவியின் சாதனையை முறியடித்தார். இவரது சாதனை கின்னஸ்ஸின் சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடிப்பதற்கு, ‘சாதனையாளருக்குக் குறைந்தது வயது 14 இருக்க வேண்டும்’ என்ற விதிகளின் படி, விசாலினி தனது 14 வயது வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

    k visalini-c

    விசாலினி சிஸ்கோ தேர்வு சாதனைக்குப் பிறகு தினமலர் நாளிதழுக்கு அளித்த நேர்காணல் காணொளியை இங்கு காணலாம் (Dinamalar Interview about cisco examination – https://www.youtube.com/watch?v=jtsAwzNHF5c). விசாலினிக்கு எதையும் புரிந்து கொள்ளும் அறிவுத்திறனும், கற்றதை மறக்காத நினைவுத் திறனும் அதிகம் என்பதுதான் இதற்குக் காரணம் என இவரது தாய் கூறியுள்ளார். தொடர்ந்து, பிரிட்டிஷ் கவுன்சில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஐ.டி.பி., ஆஸ்திரேலியா மற்றும் இ.எஸ்.ஓ.பி., தேர்வு மையங்கள் இணைந்து உலக அளவில் நடத்தும், ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வையும் பதினொரு வயதில் தேர்ச்சி பெற்று அதிலும் உலக சாதனையைப் படைத்தார். இதிலும் மற்றொரு பாகிஸ்தான் மாணவியின் சாதனையை முறியடித்தார். மேலும் நெதர்லாந்து நாட்டின் இ.எக்ஸ்.ஐ.என் – கிளவுடு கம்ப்யூட்டிங் தேர்விலும் 1,000 க்கு 1,000 மதிப்பெண் பெற்று, விசாலினி உலக சாதனை படைத்துள்ளார்.

    இவரது சாதனைகளுக்குப் பிறகு இவருக்கு நுண்ணறிவுத் திறன் சோதனை இரு வேறு இடங்களில் நடத்தப்பட்டது. மதுரை மனோவியல் மருத்துவர் நம்மாழ்வார், “பென்னட் காமத்’ என்ற அறிவியல் முறையிலான சோதனையைச் செய்தார். அச்சோதனையில் விசாலினி 11 வயதிலேயே  225 புள்ளிகள் பெற்றார். புனேயில் உள்ள மற்றொரு நிறுவனம் செய்த சோதனையின் மூலமும் இவரது நுண்ணறிவுத்திறன் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. பெரும்பாலோரின் நுண்ணறிவுத் திறன் 90 முதல் 110 புள்ளிகளுக்குள் இருக்கும். இவரது நுண்ணறிவுத் திறனால், ‘உலகின் இளம் அறிவாளி’ என்ற சாதனையையும் செய்தார்.

    k visalini-a

    இரட்டைத் தேர்ச்சிகள் பெற்றதால் தன்னைவிட மூத்த மாணவர்களுடன் விசாலினி படிக்க நேரிட்டது. பள்ளிகள் இவரை ஏற்றுக்கொள்ளத் தயங்கின, ஒரு கல்வியாண்டில் மூன்று பள்ளிகள் இவரைப் புறக்கணித்து பெற்றோர்கள் இவரை, தகுந்த பள்ளியில் சேர்க்க அலையவும் நேர்ந்தது. மங்களூரிலுள்ள என் ஐ டி யும், திருவில்லிப்புத்தூர் பொறியியல் கல்லூரி ஒன்றும் விசாலினியை தங்கள் கல்லூரியில் சேருமாறு அழைத்திருந்தும் விசாலியின் பெற்றோர் தற்பொழுது இவரை கல்லூரிக்கு அனுப்பும் எண்ணத்தைக் கைவிட்டு கல்லூரி வயதை எட்டியவுடன் அனுப்பத் திட்டமிட்டுள்ளார்கள்.

    டாக்டர் அப்துல் கலாம் போன்ற பல பெரியோர்களாலும் அறிஞர்களாலும் பாராட்டப் பட்டவர் விசாலினி. சில பொறியியல் கல்லூரிகளில் பாடம் நடத்தும் வாய்ப்பும், பல்கலைக் கழக கருத்தரங்குகளில், தலைமை விருந்தினராக உரையாற்றவும் இவர் தொடர்ந்து அழைக்கப்பட்டு வருகிறார். இந்த மாதம் (மே 2015) டெல்லியில் கூகுள் நிறுவனம் நடத்திய இந்தியக் கல்வி பற்றியக் கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றவும், கர்நாடகா மாநிலத்தில் நடந்த கணினி தொலைத்தொடர்பு உலகக் கருத்தரங்கில் தலைமை விருந்தினராக தலைமையுரை ஆற்றவும் இவருக்கு வாய்ப்பு கிடைத்ததை, இவரே வடிவமைத்த இவரது இணையதளச் செய்தி (http://www.kvisalini.com/) அறிவிக்கிறது.

    உலக சாதனைகள் …
    1. The Highest IQ in the World: 225
    2. The Youngest CCNA World Record Holder (Cisco Certified Network Associate): 90%
    3. The Youngest IELTS World Record Holder (International English Language Testing System): Band 6
    4. The Youngest Exin Cloud Computing World Record Holder: 100%
    5. The Youngest CCSA World Record Holder (Checkpoint Certified Security Administrator): 71%

    இந்த உலக சாதனைகள் வரிசையில் மேலும் பல சாதனைகளை இணைக்கவும், எதிர்காலத்தில் இவர் விரும்புவது போல கணினி நிறுவனம் ஒன்றைத் துவக்கவும், வாழ்க்கையில் மேலும் வெற்றிகள் பல பெறவும் வல்லமைக் குழுவினர் இவரை வாழ்த்தி விசாலினிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    விசாலினி குறித்த தகவல்கள் பெற்ற தளங்கள்:
    http://www.kvisalini.com/
    http://www.theweekendleader.com/Success/822/beyond-her-years.html
    http://chittarkottai.com/

    தொடர்பு கொள்ள:
    விசாலினியின் மின்னஞ்சல் முகவரி: goldengirlvisalini@gmail.com

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

    பழமொழி:  திங்களை நாய்குரைத் தற்று

     

    நெறியால் உணராது நீர்மையும் இன்றி
    சிறியார் எளியரால் என்று – பெரியாரைத்
    தங்கணேர் வைத்துத் தகவல்ல கூறுதல்
    திங்களை நாய்குரைத் தற்று.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    நெறியால் உணராது நீர்மையும் இன்றி
    சிறியார் எளியரால் என்று பெரியாரை
    தங்கள் நேர் வைத்து தகவு அல்ல கூறுதல்
    திங்களை நாய் குரைத்து அற்று

    பொருள் விளக்கம்:
    உலகநெறிமுறை வழி அறிந்து கொள்ளாது, தகுதியும் இல்லாத அறிவற்ற சிறியோர், எளிமையாகத் தோற்றமளிக்கும் அறிவுடைய பெரியோரை தங்களையும்விடத் தாழ்மையானவர் எனக் கருதிக்கொண்டு, தங்கள் முன் அவர்களை இருக்கச் செய்து தகுதியற்ற சொற்களைக் கூறுவது, தண்ணொளி வீசும் நிலவை நாய் இளக்காரமாக நினைத்து அதனை நோக்கிக் குரைப்பதைப் போன்ற செய்கையாகும்.

    பழமொழி சொல்லும் பாடம்: பெரியோரை எளியோராக நினைத்து தகுதியற்ற வார்த்தைகளைச் சொல்லும் கீழோரால் பெரியோர் புகழ் மங்குவதைவிட, அவ்வாறு பேசும் சிறியோரது அறியாமையையே வெளிப்படும்.

    நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
    பண்பின் தலைப்பிரியாச் சொல். (குறள்: 97)

    பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொற்கள், அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும் என வள்ளுவர் குறிப்பதை உணர்பவர், தனது தகுதியைத் தாழ்த்திவிடும் தகாத சொற்களை உரைக்க விரும்பமாட்டார்கள்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

    பழமொழி:  இனநலம் நன்குடையவாயினும் என்றும்மனநலம் ஆகாவாம் கீழ்

     

    மிக்குப் பெருகி மிகுபுனல் பாய்ந்தாலும்
    உப்பொழிதல் செல்லா ஒலிகடல்போல் – மிக்க
    இனநலம் நன்குடைய வாயினும் என்றும்
    மனநலம் ஆகாவாம் கீழ்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    மிக்கு பெருகி மிகு புனல் பாய்ந்தாலும்
    உப்பு ஒழிதல் செல்லா ஒலி கடல் போல் மிக்க
    இன நலம் நன்கு உடையஆயினும் என்றும்
    மன நலம் ஆகாவாம் கீழ்

    பொருள் விளக்கம்:
    மிகுந்த வெள்ளப்பெருக்கெடுத்து மிகுதியான அளவில் ஆற்றின் நன்னீர் கடலில் கலந்தாலும், தனது உப்பின் தன்மை நீங்காது ஆர்ப்பரிக்கும் கடலினைப் போல, மிகுந்த பண்பு நிறைந்தோருடன் இணைந்து பழகி வாழும் சூழ்நிலையிலும், என்றுமே தனது மனதின் கயமைத்தனத்தை கைவிடாது இருப்பார்கள் கீழ்த்தரமான குணத்தைக் கொண்ட மக்கள்.

    பழமொழி சொல்லும் பாடம்: பண்பு நிறைந்தோரோடு சேர்ந்து வாழும் வாய்ப்பினைப் பெற்றிருந்தாலும், பண்பற்றோர் தமது குணத்தை உயர்த்திக் கொள்ளாது தங்கள் இயல்பிலேயே சிறுமைக் குணத்துடன் இருப்பார்கள்.

    பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
    ஆகுதல் மாணார்க் கரிது. (குறள்: 823)

    அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராக வாழாமல் பண்பற்றவர்கள் தனது சிறுமைக் குணத்தைக் கைவிடாதவர்களாக இருப்பார்கள் என்று வள்ளுவம் குறிப்பதும் இதனையே.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    மே 11, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு நீதிபதி ராஜ ராஜேஸ்வரி அவர்கள்

     

    RajaRajeswari profile

     

    சென்னை நகரின் ஆழ்வார்பேட்டையில், ஒரு கலைக் குடும்பத்தில் பிறந்து பரதநாட்டியம் குச்சுப்புடி நடனங்களை கண்ணாகக் கருதி பயிற்சி பெற்று வளர்ந்த தமிழ்ப் பெண்மணி ராஜ ராஜேஸ்வரி, தற்பொழுது அமெரிக்காவின் நியூ யார்க் நகரின் குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பொறுப்பேற்று உள்ளார். சென்ற மாதம் நியூ யார்க் நகரின் நகராட்சித் தலைவர் ‘பில் டி பிளேசியோ’ (New York City – Mayor, Bill de Blasio) அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தபொழுது, நீதிபதி ராஜ ராஜேஸ்வரி அவர்கள் மக்கள் நலத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர், தனது பன்மொழித் திறமையையும், கலாச்சாரப் பின்புலம் அளித்த அனுபவத்தையும் செவ்வனே பயன்படுத்தி நீதித்துறைக்கு பெருமை சேர்த்தவர் எனப் பாராட்டுரையும் வழங்கியுள்ளார். நியூ யார்க் நகரின் முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, தெற்காசிய பெண் நீதிபதி என்ற புகழை தமிழகத்திற்குத் தேடித்தந்த நீதிபதி ராஜ ராஜேஸ்வரி அவர்களை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் பெருமை கொள்கிறோம்.

    நீதிபதி ராஜ ராஜேஸ்வரி முன்னர் ரிச்மாண்ட் கவுண்டி (மாவட்டம்) அரசுத் தரப்பு வழக்கறிஞராக 16 ஆண்டுகள் பணி புரிந்தவர். அப்பணியில் குற்றவியல், போதைப்பொருள் தடுப்பு, உச்சநீதிமன்ற வழக்குகள், பாலியல் குற்றங்கள், குடும்ப வன்முறை வழக்குகள் என நீதித்துறையின் பல பிரிவுகளிலும் பணிபுரிந்தவர் என்ற சிறப்பினைக் கொண்டவர்.

    தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, சிங்களம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் சரளமாகப் பேசுகிற ஆற்றல் வாய்ந்தவர் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி. அயல்நாட்டில் இருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயரும் குடும்பங்களில், குறிப்பாக தெற்காசிய நாடுகளான இந்தியா, இலங்கையில் இருந்து குடிபெயர்ந்தோர் குடும்பங்களில் குடும்ப வன்முறைகளும், சிறுவர்கள் மேல் வன்முறையும் அதிகம் நிகழ்வதையும், அவை அக்குடும்பப் பெண்களால், குடும்பத்தின் நலன் என்ற நோக்கில் வெளிவராது மறைக்கப்படுவதையும் தனது பணிக்காலத்தில் கண்டுணர்ந்தவர்.

    பெண்களும் குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுவது கண்டு மிகவும் வருந்தும் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி, குடிபெயர்ந்தோர் குடும்பங்களுக்கும், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நீதிகிடைப்பதில் தன்னால் உதவமுடியும் என்று கருதுகிறார். பாதிக்கப்படுபவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பது முக்கியத்துவம் கொண்டது, அதற்காகத் தொடர்ந்து பாடுபடுவேன் என்று பதவியேற்ற பின்னர் பத்திரிக்கைகளுக்குக் கொடுத்த நேர்காணல்களில் குறிப்பிட்டுள்ளார்.

    அநீதியாக, செய்யாத குற்றத்திற்காக ஒருவர் தண்டனை பெற்று, பின்னர் உண்மை தெரிந்து அவர் விடுவிக்கப்படும் செய்திகள் தெரியும் பொழுதெல்லாம் அது குறித்து மிகுந்த வேதனை அடைவேன் என்று கூறும் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி, அமெரிக்காவின் நீதித்துறை மிகச்சிறப்பானது என்று கூறவியலாது சிற்சில குற்றங்குறைகள் இருப்பினும், விரைவில் வழக்குகள் கையாளப்பட்டு நீதி வழங்கப்படுவது மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒன்று என்கிறார். ஒருவரது இனம், மதம், மொழி அடிப்படையில் யாரும் புறக்கணிக்கப்படாது நீதிபெறவேண்டும் என்று எடுக்கப்படும் முயற்சிகளால் உலகில் மிகச்சிறந்த நீதித்துறையைக் கொண்டது அமெரிக்கா என்பது இவர் கருத்து. குடிபுகும் அயல்நாட்டினருக்கு அமெரிக்கா ஒரு சிறந்தநாடு, முயன்று உழைத்து, தொடர்ந்து தங்கள் திறமையை வளர்த்துக் கொள்பவர்களுக்கு முன்னேறும் வாய்ப்பு இங்கு மறுக்கப்படுவதில்லை.

    டெல்லியில் நடந்த வன்புணர்வு போன்ற நிகழ்வுகள் நமது இந்தியச் சமுதாயத்தில் ஊறிப்போய்விட்ட பெண்களுக்கு எதிரான அநீதிகள், இவற்றை நாம் தடுக்காவிட்டால் நமது திறமைகள் முழுவதும் இந்த அநீதியின் காரணமாக வெளிவராது போகும். இது போன்ற கொடூரமான உயிரிழப்பு என்று ஒன்று நடக்காதவரை பெண்களுக்கு ஏற்படும் துன்பங்களைப் பற்றி யாரும் அக்கறை கொள்வதுமில்லை. பெண்களோ குழந்தைகளோ தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளை அடுத்தவர் கவனத்திற்குக் கொண்டுவரவும் தயக்கம் காட்டுவார்கள், அவர்கள் சொல்வதை யாரும் பொருட்படுத்தப்போவதில்லை என்பதுடன் சொன்னால் சமூகத்தில் இகழ்ச்சியுடன் தாம் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதுமே அவர்களது நிலை என்கிறார் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி. தனது அன்னை தமக்கு நாட்டியத்தில் ஆர்வத்தை ஊட்டுவித்தது போலவே, ஒரே ஒருவராவது அக்கறையுடன் முயற்சி எடுத்தால் நாம் வாழும் உலகம் மேலும் சிறந்த இடமாக மாறும் என்ற நம்பிக்கையையும் எனக்குக் கொடுத்துள்ளார் என்கிறார் இவர்.

    நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்த பத்மா, கிருஷ்ணன் ஆகியோருக்கு ஒரே மகளாகப் பிறந்தவர் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி. அவரது இளமைப் பருவம் செல்வச் செழிப்புடன் இல்லாவிட்டாலும் இனிமையான அமைதி நிறைந்த கலைக்குடும்ப வாழ்க்கையாக அமைந்ததில் மனநிறைவு உள்ளவர். நாட்டிய ஆசிரியையான  தனது தாயைப் போல நடனத்தில் சிறந்து விளங்கி, பத்து வயதிலேயே பிறருக்கும் கற்பிக்கும் திறனையும் கொண்டிருந்தார் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி. நிதி திரட்ட உதவியாகப் பல நாட்டிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றவர். கலாஷேத்திராவின் மாணவியான இவர் தனது தாயுடன் உலகின் பலநாடுகளுக்கும் சென்று நாட்டிய நிகழ்ச்சிகளை செய்து வந்தவர்.

    அமெரிக்காவில் நாட்டிய நிகழ்ச்சிக்காக 1988ம் ஆண்டு வந்தவரை அமெரிக்காவில், பெண்களை பேதமுடன் பார்க்கும் மனப்பான்மை குறைவாக இருக்கும் நாகரிகம் இவரை மிகவும் கவர்ந்தது. அறிவாற்றல் மிக்க தனது தோழியர் சிலர் இளவயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டு அவர்கள் திறமை புறக்கணிக்கப்பட்டதை எதிர்கொண்டவர் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி. தனது 16 வயதில் அமெரிக்காவிற்கு வந்தவர் சட்டம் பயின்று, அரசுத் தரப்பு வழக்கறிஞராகப் பணிபுரிந்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு நியூ யார்க் நகரின் குற்றவியல் நீதிபதி பொறுப்பேற்கும் வகையில் உயர்ந்துள்ளார்.

    இன்றும்,  தனது 43 வயதிலும், இந்திய சமூக நிகழ்ச்சிகளிலும், கோவில் நிகழ்ச்சிகளிலும் தனது குழுவினருடன் நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தும் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி தனது நடனக் குழுவிற்கு தமது 18 வயதில் விபத்து ஒன்றிற்குப் பறிகொடுத்த தனது அன்னையின் நினைவாக “பத்மாலயா நாட்டியப் பள்ளி” என்ற பெயர் சூட்டியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோய்க்குப் பலியான தனது தந்தைக்குக் கொடுத்த வாக்கின்படி, தந்தையின் கனவை நிறைவேற்றும் வகையில் தற்பொழுது நீதிபதியாகவும் பொறுப்பேற்றுள்ளார்.

    RajaRajeswari2

    பதவியேற்புரையாக நகராட்சி தலைவரிடம் நன்றி நவின்ற பொழுது, இப்பதவி எனது அமெரிக்கக் கனவு நிறைவு பெற்றதை மட்டும் காட்டவில்லை, தொலைதூர நாடுகளில் வசிக்கும், வாழ்க்கையில் முன்னிலையை அடைய விரும்பும் இளம்பெண்களுக்கு, தானும் முயன்றால் தனது சமூகத்தில் ஒரு சிறப்பிடத்தைப் பெறலாம் என நம்பிக்கையளிக்கும் ஒரு முன்மாதிரியாக நான் விளங்க வாய்ப்பளித்துள்ளது என்று கூறினார். இந்தியாவில் இருந்து வந்தவர் என்ற முறையில் இந்தப் பெருமை கிடைத்ததற்குத் தான் மிகவும் கடமைப்பட்டுள்ளதாகவும், நீதிபதியாக நியமிக்கப்பட்டது அவருக்கு பெருமையும் பணிவையும் ஒருங்கே வழங்கியது என்றும், தான் கற்பனையும் செய்யத் துணியாத பெருமை தனக்குக் கிடைத்தது ஒரு கனவினைப் போன்றிருப்பதாகவும் கூறினார்.

    தனது விடாமுயற்சியால் மிக உயர்ந்த பதவியைப்பெற்று, பாதிக்கப்பட்டோருக்கு தனது பணியின் மூலம் நீதிகிடைக்க வழி செய்வதிலும், அயல்நாட்டில் வாழும் மற்ற இந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும், பெண்களுக்கும் முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட விரும்பும் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி அவர்களை மேலும் வெற்றிகள் பல அடைய வாழ்த்திப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

     

    குறிப்பு:
    தகவல்களும் படங்களும் பல இணையதளங்கள் வழங்கிய பதிவுகளின் தொகுப்பு. தகவல்களும் படங்களும் தந்துதவிய  தளங்களுக்கு நன்றி.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி:  புல்லின்றி மேயினும் ஏற்றுக்கன்று ஏறாய் விடும்

     

    ஈட்டிய ஒண்பொருள் இன்றெனினும் ஒப்புர(வு)
    ஆற்றும் மனைப்பிறந்த சான்றவன் – ஆற்றவும்
    போற்றப் படாதாகிப் புல்லின்றி மேயினும்
    ஏற்றுக்கன்(று) ஏறாய் விடும்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    ஈட்டிய ஒண் பொருள் இன்று எனினும் ஒப்புரவு
    ஆற்றும் மனை பிறந்த சான்றவன் ஆற்றவும்
    போற்ற படாதாகி புல் இன்றி மேயினும்
    ஏற்று கன்று ஏறு ஆய்விடும்

    பொருள் விளக்கம்:
    தான் உழைத்துச் சேகரித்த மிகுந்த செல்வம் இல்லாது போன வறுமையிலும், உலக நடைமுறையை மதித்து வாழும் குடியில் பிறந்த சான்றோர் தனது சான்றாண்மையைக் கைவிடார். (அவர் கொண்ட இப்பண்பானது) மிகவும் கருத்துடன் போற்றி வளர்க்கப்படாது, பசும்புல்லும் உண்ண வழியின்றி எதையோ மேய்ந்து வளர்ந்தாலும் நல்ல எருதிற்குப் பிறந்த கன்று நல்லதொரு காளையாக வளர்ந்துவிடுவது போன்ற பண்பிற்கு ஒப்பானது.

    பழமொழி சொல்லும் பாடம்: பண்பு நிறைந்த குடும்பத்தில் பிறந்தோர், வாழ்வில் வறுமை சூழ்ந்தாலும் உலக நடைமுறைகளை மதித்து அதற்கேற்ப வாழும் சான்றாண்மை உடையவராகவே இருப்பார்கள்.

    இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
    கடனறி காட்சி யவர். (குறள்: 218)

    என்ற குறளும்; தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராத கடமையுணர்ந்தவர் சான்றோர் எனக் கூறுவதை இங்கு நாம் ஒப்பிடலாம்.

    Share