ஜூன் 8, 2015

இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு செல்வி ராதிகா கண்ணன் அவர்கள்

Radhika Kannan

அன்பு, அக்கறை, ஆதரவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நாம் வாழும் சமுதாயத்தில் ஒருவருக்கொருவர் உதவி வாழவேண்டும் என்ற கொள்கையை உடையவர் செல்வி ராதிகா கண்ணன். இந்த ஆண்டு அமெரிக்காவின் பெர்க்லியிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் (University of California, Berkeley) பொருளாதாரத்தை முதன்மைப் பாடமாகவும், இயற்கைவளம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை சிறப்புப் பாடமாகவும் படித்து பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர் பட்டதாரி ராதிகா. இவர் இந்த ஆண்டு பட்டம்பெறும் மாணவர்களில் பல்கலைக்கழத்தின் தலைசிறந்த இளங்கலைப் பட்டதாரி (the most distinguished graduating senior on campus) என்று தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசும், பதக்கமும், பட்டமளிப்பு விழாவில் சிறப்புரையாற்றும் மிகப்பெரிய கவுரவத்தையும் பெற்றார். இத்தகுதி வெறும் முதன்மை மதிப்பெண் பெறுவதற்காக மட்டுமே வழங்கப்படுவதல்ல. கல்வியில் மிகச் சிறந்து விளங்குவதுடன், திறமைசாலியாகவும், சமூக அக்கறை கொண்ட ஒருவரே இந்தச் சிறப்பைப் பெறுவார். இந்த ஆண்டு ராதிகா உட்பட மேலும் இரண்டு மாணவரும், இரண்டு மாணவியரும் இந்த சிறப்பிற்காகப் பல்கலைக் கழகத்தின் சிறப்பு விருதுப் போட்டியில் இடம் பிடித்திருந்தார்கள். இவரைப் பரிந்துரைத்த ஆசிரியர்கள் யாவருமே இவர் அறிவாளி மட்டுமல்ல, திறமையும் மனஉறுதியும் கொண்டவர், தான் வாழும் சமுதாயத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர விரும்புபவர், பிறர் நலனில் அக்கறை கொண்டு உதவும் குணம் நிறைந்தவர் என்று பாராட்டி எழுதியிருந்தார்கள். எனவே, அவர்களின் பரிந்துரைக்கேற்ப பல்கலைக்கழகத்தின் சிறந்த பட்டதாரி என்று ராதிகாவே தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது பட்டமளிப்புவிழா சிறப்புரையில் கல்வியில் வெற்றி பெறுவதில் மட்டும் மகிழ்ச்சி கிட்டிவிடாது.படித்து முடித்து பட்டம் பெறும் பொழுது அடையும் மகிழ்ச்சியை விடவும் சமுதாயத்தில் ஒருவருக்கொருவர் உதவி வாழ்வதே மகிழ்ச்சி தருவது என்று உரையைத் துவக்கிய ராதிகா, பட்டம் பெறும் நாம் நமது சமூகத்தின் வளர்ச்சிக்கு, சமுதாயத்திற்கு உதவும் அமைப்புகளை உருவாக்க வேண்டும், நாம் வாழும் சமுதாயத்திற்கு நமது கடமையை எப்படிச் செய்வது என்பதைப் பற்றி சிந்திப்போம் என்று குறிப்பிட்டு சொற்பொழிவை நிறைவு செய்தார். இவரது சாதனையைப் பாராட்டி இவ்வார வல்லமையாளராக செல்வி ராதிகா கண்ணன் அவர்களை அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம். இவரை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் அறிவியல் எழுத்தாளரும் கவிஞருமான திரு. ஜெயபாரதன் அவர்கள், அவருக்கும் வல்லமைக் குழுவினரின் நன்றிகள் உரித்தாகிறது.

இருபத்தியொரு வயதாகும் ராதிகா கண்ணன் மும்பையில் பிறந்த தமிழ்மக்கள். மென்பொருள் துறையில் ஒரு தொழிலதிபரான திரு. கண்ணனுக்கும், ஆசிரியையான தாய் கீதாஞ்சலிக்கும் இவர் ஒரே மகள், இவரது மூன்று வயதிலேயே குடும்பம் சிங்கப்பூருக்குக் குடி பெயர்ந்தது. பிறகு குறைந்தது ஆறுமுறையாவது இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் மாறி மாறி குடி பெயரும் சூழ்நிலை இவர் குடும்பத்திற்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ஒவ்வொருமுறையும் புதிய பள்ளி, புதிய நண்பர்கள், வாழும் சூழ்நிலை என இவர் எதிர்கொண்ட மாற்றங்கள் இவரை சூழ்நிலைக்கேற்ப விரைவில் தன்னை மாற்றிக் கொண்டு வாழும் முறைக்குப் பழக்கப்படுத்தியது. ராதிகா தனது தாயைப் போலவே பாரத நாட்டியமும் கற்றார். தாயும் மகளும் ஒரே நடன ஆசிரியரிடம் பயின்றவர்கள்.

Radhika Kannan2

இவரது கலை ஆர்வம், கல்வியில் சாதனைகள், பலதுறைகளிலும் பங்களிப்பு, சமூக அக்கறை என யாவற்றுக்கும் காரணம் இவரது அன்னையே. இவர் தாயை தனது தோழி போன்று உணரும் உறவின் நெருக்கம் கொண்டவர். ராதிகாவும் அவரது அன்னையும் கலந்தாலோசித்து ராதிகாவின் ஆர்வம் திறமைகளின் அடிப்படையில் இவரது எதிர்காலத் திட்டத்தை வகுத்தனர். பொருளாதாரம், சூழலியலின் பொருளாதாரக் கொள்கைகள், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு சட்டம் பயிலுதல் என்று திட்டமிடப்பட்ட பாதையைக் காட்டினார் தாய் கீதாஞ்சலி. பள்ளிக்கல்வியைத் தவிர பல்வேறு திறமைகளையும் வளர்த்துக் கொள்ள முக்கியத்துவம் அளிக்கவும் இவரது அன்னையால் ராதிகா ஊக்குவிக்கப்பட்டார்.

பள்ளியில் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு, முதன்மை மதிப்பெண்கள், ஐக்கியநாடுகளின் சபையில் மாதிரி பயிற்சியில் ஈடுபாடு, என ராதிகாவும் பலதுறைகளில் தனது திறமையை வளர்த்துக் கொண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இரண்டாம் ஆண்டு டிசம்பரில் தேர்வுகள் எழுதும் பொழுது இவரது அன்னை தனக்கு ஃப்ளு போன்ற காய்ச்சலினால் உடல்நலக் குறைவு என தொலைபேசியில் தெரிவித்தார். கவலையுடன் உடனே வரவா எனக் கேட்ட இவரிடம் தேர்வு முடித்துவிட்டு கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வரச் சொல்லியிருக்கிறார். ஒரு புதன் கிழமை பேசியவர், என்ன உடல்நலக்குறைவு என்று கண்டறியும் முன்னர் மூன்று நாட்களுக்குள், ராதிகா ஞாயிறன்று சென்னை சென்று சேர்வதற்குள் 45 வயதில் எதிர்பாராதவிதமாக கீதாஞ்சலி இறந்துவிட்டார். பயணத்தில் வழியில் இணைப்பு விமானத்திற்காக ஆர்ம்ஸ்டர்டாம் விமானநிலையத்தில் காத்திருந்த பொழுது, நண்பர் ஒருவர் அனுப்பிய இரங்கல் செய்தியின் மூலம் தாய் மறைந்த செய்தி அறிந்து இடிந்து போனார். திரும்பி அமெரிக்கா வர ஆர்வமற்று போனவரை குடும்பத்தினர் வற்புறுத்தி படிப்பைத் தொடர அனுப்பி வைத்தார்கள். ஆசிரியர்களும், உடன் பயிலும் மாணவர்களும் இவர் நிலையில் அக்கறைகொண்டு மிகவும் உதவிசெய்துள்ளார்கள்.

தனது தாய் மறைந்த துயரத்தில் இருந்து மீண்டுவர ஒரேவழி தனது தாய் வகுத்துக் கொடுத்த பாதையில் பயணிப்பதுதான் என்ற உறுதி கொண்டு கல்வியில் சிறந்த மாணவியாகவே தொடர்ந்து பயின்று வெற்றி பெற்றுள்ளார். தான் பங்கு பெற்ற சங்கங்களின் வளர்ச்சியில் அக்கறைகாட்டி பிற மாணவர்களை அவற்றிற்கு அறிமுகப்படுத்துவதும், தானே ஒரு முன்மாதிரியாகவும் விளங்கி அவர்களை ராதிகா வழிநடத்துவதும் இவரது ஆசிரியர்களைக் கவர்ந்தது. தனது பாடத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் தட்பவெப்ப நிலைக்கும் பொருளாதாரத்திற்கும் உள்ள தொடர்பை ஆராய முற்பட்டார். தென்னிந்திய உழவர்கள் பருவமழைக்கேற்ப தக்க பயிர்களை பயிரிடத் தவறுகிறார்கள். அதனால் இயற்கைக்கு ஏற்ப பயிரிடாத காலங்களில் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என்று கட்டுரையை சமர்ப்பித்தார். இக்கட்டுரை இவரது ஆசிரியரால் பொருளாதாரத்தில் முனைவர் ஆய்விற்கான சிறந்த ஆய்வுக் கருத்தினைக் கொண்டது என்று பாராட்டப்பட்டது. தனது தாயின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் வெற்றிகரமாக படிப்பைமுடித்த ராதிகா, தனது அன்னையைப் போற்றும் எண்ணத்தில் அவரது அன்னையின் நீலவண்ண சேலையை பட்டமளிப்பு நாளன்று அணிந்து பட்டமும் பெற்றுள்ளார்.

Radhika Kannan graduating

தனது குறிக்கோளைத் தொடரும் இவர் அடுத்து ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உலகின் சுற்றுச்சூழல் கொள்கைகள் பற்றிய முதுகலைப் படிப்பும், பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான சட்டங்கள் பற்றிய சட்டக்கல்வியும் பயில திட்டமிட்டுள்ளார். நாடுகளின் நிலையான தன்னிறைவு வளர்ச்சிக்கு பொருளாதாரம், சுற்றுச்சூழல், சமூகநிலை ஆகிய மூன்றையும் ஒன்றாக நோக்கி கொள்கைகள் வகுக்கவேண்டும் என்பதை நாட்டின் நலம் கருதுவோர் அறிவர். ராதிகாவும் அதே சமூக அக்கறை கொண்டு சமூகத்திற்கு தனது பங்கையாற்ற தனது பயிற்சியையும் கல்வியையும் முன்னெடுத்துச் செல்வது பாராட்டிற்குரியது. ராதிகா ஆக்கப்பூர்வமாக சமூகத்திற்கு பங்களிக்கும் தகுதிகளைப் பெற்றிருக்கிறார் என்பதை பெர்க்லி பல்கலைக்கழகமும் கண்டுணர்ந்து அவரைப் பாராட்டியுள்ள வேளையில் வல்லமைக் குழுவினரும் ராதிகாவை வல்லமையாளர் என்று பாராட்டி மகிழ்கிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

குறிப்பு:
தகவல்களும் படங்களும் கலிஃபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தின் கீழ்காணும் தளங்களில் இருந்தும், பல்கலையகழகத்தின் பட்டமளிப்பு விழா காணொளியில் இருந்தும் சேகரிக்கப்பட்டன.
http://www.dailycal.org/2015/05/07/university-medal-winner-announced/
http://newscenter.berkeley.edu/2015/05/04/medalist2015/
https://www.youtube.com/watch?v=aB0Ku9J6jHg
&
https://www.linkedin.com/pub/radhika-kannan/93/aa0/b70
http://abc7news.com/news/radhika-kannan-wins-uc-medal-as-top-graduating-senior/699929/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.