ஆட்டுக்குட்டி
-ராதா மரியரத்தினம்
நிறைந்த பசியெனக்கு
அங்கொன்று இங்கொன்றாய்
நுனிப் புல் மேய்கிறேன்
வயிறு நிறையவில்லை
சிறிது நேரம் இரை மீட்கலாம் என
அமர்கிறேன் ஒரு மரத்தடியில்
அமர்ந்தது என்ன மரம்
எனத் தெரியாத நிலையில்
சட்டென்று முதுகில் விழுகிறது
அரச மரத்தின் சருகு ஒன்று
”எத்தனை ஞானிகளைக் கண்டேன்
வா! உனக்கு ஞானத்தைப் போதிக்கிறேன்” என்றது
இந்த அகண்ட பிரபஞ்சத்தில்
ஏதுமறியா ஆட்டுக் குட்டியாய் நான்
கூட்டத்தின் பின்னே செல்பவன் நான்
பரிணாம வளர்ச்சியில் கூர்ப்பின் மூலம்
இந்த ஆட்டுக் குட்டியின் உருவம் மாறிவிடப் போகிறதா என்ன?
எனக்கு என்ன ஞானம் உண்டோ
அது எனக்கு இருக்கிறதா என்று
நினவுகளை அசை போட்டது ஆட்டுக் குட்டி
பச்சயத்திலுள்ள மூலக் கூறுகள் பற்றியோ
இல்லை இலையில் பச்சயம் உண்டு என்றோ
அறிந்திருக்கத் தேவையில்லை
ஞானம் என்பது அவரவர் இலக்கு, தேவை
ஆற்றலைப் பொறுத்ததோ…
அசை போட்ட நினைவுகளுடன்
தூங்கிவிட்ட ஆட்டுக் குட்டிக்கு
கையில் அரிவாளுடன்
மாலை அணிந்த பூசாரி
கனவில் வர
விழித்தது ஆட்டுக் குட்டி
அதற்கு ஞானம் பிறந்து விட்டது!
வல்லமை இதழ் ஆசிரியருக்கும் குழுமத்திற்கும் என் மனமார்ந்த நன்றி