பழமொழி கூறும் பாடம்
– தேமொழி.
பழமொழி: சீர்ந்தது செய்யாதார் இல்
சுற்றத்தார் நட்டார் எனச்சென் றொருவரை
அற்றத்தால் தேறா அறிவுடையார் – கொற்றப்புள்
ஊர்ந்துலகம் தாவின அண்ணலே யாயினும்
சீர்ந்தது செய்யாதா ரில்.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
சுற்றத்தார், நட்டார், எனச் சென்று, ஒருவரை
அற்றத்தால் தேறார், அறிவுடையார்;-கொற்றப் புள்
ஊர்ந்து, உலகம் தாவின அண்ணலே ஆயினும்,
சீர்ந்தது செய்யாதார் இல்.
பொருள் விளக்கம்:
சுற்றத்தார், நட்புடையவர் என்ற எண்ணத்தில் அவர்கள் எவரிடத்திலும் தாம் மறைமுகமாகச் செய்வதை வெளிப்படுத்தாதவரே அறிவுடையவர்கள். (அவ்வாறு நம் செயல் பிறருக்குத் தெரிந்துவிட்டால்) வெற்றியுடைய பறவையின் மீதமர்ந்து உலகில் உலாவரும் தலைவனே ஆனாலும் தனக்கு பலனளிக்கும் காரியத்தை செய்யாது விடமாட்டார்.
பழமொழி சொல்லும் பாடம்: தனக்குப் பலனளிக்கும் செயலை யாராக இருந்தாலும் செய்ய எண்ணுவர், அதனால் செயல் வெற்றியுடன் நிறைவுறும்வரை பிறர் அறிய தமது செயல்களை அறிவில் சிறந்தோர் வெளிப்படுத்த மாட்டார்கள்.
இதனை வள்ளுவரின் குறள் ஒன்றும் குறிப்பிடுகிறது…
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும். (குறள்: 663)
இக்குறளின் கருத்து, செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும். இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும்.
தனக்கு ஆதாயம் என்றால் ஒரு செயலையும் பழிபாவம் அஞ்சாது கடவுளும் செய்ய விரும்புவார் என்பதை அறிவோம். அதனால் பிறர் நம் செயலை அறிவது நம் செயலுக்கு இடையூறாக அமையலாம் என்பது இப்பழமொழிச் செய்யுள் குறிக்கும் அறிவுரை. உரைநூல்கள் பொதுவாக, இச்செய்யுளில் வெற்றியையுடைய கருடனில் பறந்து, தாவி உலகளந்த திருமாலே ஆனாலும் தனக்கு பலன் என்றால் பழிபாவம் பாராமல் எதையும் செய்வார் என்று குறிப்பிடுகிறது. இது வாலியை மறைந்திருந்து அழித்து, சுக்ரீவனுக்கு உதவி வானரக் கூட்டத்தை தனது செயலுக்குப் பயன்படுத்திய இராம கதையைக் குறிப்பதாகவும் பொருள் கொள்ளலாம். மாறாக மாம்பழத்தை அடைய விரும்பி மயில் மேல் பறந்து உலகைச் சுற்றி வந்த முருகனையும் குறிக்க வாய்ப்பிருந்தாலும், இக்கோணத்தைக் குறிப்பிட்ட உரை ஏதும் உள்ளதாகத் தெரியவில்லை.