பழமொழி கூறும் பாடம்

தேமொழி.

 

பழமொழி: தோஒம் உடைய தொடங்குவார்க்கு இல்லையே, தா அம் தர வாரா நோய்

 

ஆஅம் எனக்கெளி தென்றுலகம் ஆண்டவன்
மேஎந் துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான்
தோஓ முடைய தொடங்குவார்க் கில்லையே
தாஅம் தரவாரா நோய்.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
ஆஅம் எனக்கு எளிது என்று உலகம் ஆண்டவன்,
மேஎந் துணை அறியான், மிக்கு நீர் பெய்து, இழந்தான்;-
தோஒம் உடைய தொடங்குவார்க்கு இல்லையே,
தா அம் தர வாரா நோய்.

பொருள் விளக்கம்:
ஆம் இச்செயல் எனக்கு எளிது என்று உலகை ஆண்ட மாவலி மன்னன், தனக்குத் துணையாக நின்று ‘மூன்றடி நிலத்தை கொடையாகக் கொடுக்க வேண்டாம்’ என்று குரு சுக்கிரன் கூறிய அறிவுரையை மதிக்காது, செருக்குடன் வாமனனுக்கு நீர் ஊற்றித் தாரை வார்த்துக் கொடுத்து அனைத்தையும் இழந்தான். (அது போல) தவறான காரியங்களை செய்யத் தொடங்குபவருக்கு, தமக்குத் தாமே வரவழைத்துக் கொள்ளும் துன்பம் போன்று வேறொன்று இல்லை.

பழமொழி சொல்லும் பாடம்: ஆராயாது தவறான காரியங்களைச் செய்யத் தொடங்குபவர் தனக்குத் தானே கேடு விளைவித்துக் கொள்வார். இக்கருத்து மாவலி மன்னனின் செயல் பற்றிய புராணக் கதை கொண்டு விளக்கப்படுகிறது. இதனை வள்ளுவர்,

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும். (குறள்: 658)

ஆகாதவை என விலக்கப்பட்டச் செயல்களை விலக்கிவிடாமல் மேற்கொண்டு தொடர்ந்து செய்பவர்களுக்கு அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும் என்று கூறுகிறார்.

“தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற கணியன் பூங்குன்றனார் கூற்றை இன்றும் மறவாதவர் இல்லை. இக்காலத்தில் “சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது” என தமக்குத் தாமே துன்பத்தை வரவழைத்துக் கொள்ளும் செயல் பரவலாக அறியப்படுகிறது. இப்பழமொழியை ஒத்த ஆங்கிலப் பழமொழிகள் “Shoot oneself in the foot”, “A man may cause his own dog to bite him” ஆகியன.

“தோஒம் உடைய தொடங்குவார்க்கு இல்லையே, தா அம் தர வாரா நோய்” என்பது பழமொழி என்று கூறும் உரை நூல்களும் உள்ளன. “ஆஅம் எனக்கெளி தென்றுலகம் ஆண்டவன் மேஎந் துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான்” என்ற மாவலியின் செயலை பழமொழியாக மா. இராசமாணிக்கனார் தனது உரையில் காட்டுகிறார்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க