இந்த வார வல்லமையாளர்!
மே 18, 2015
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு இளம் அறிவாளி விசாலினி அவர்கள்
ஐந்து உலக சாதனைகளை நிகழ்த்திய ஒரு இந்திய மாணவி. உலகிலேயே மிகவும் அறிவாளி இந்த பதின்ம வயது தமிழ்ப்பெண்; அவரது நுண்ணறிவுத் திறன் புள்ளிகள் (Intelligence Quotient /IQ ) 225. உலக கருத்தரங்கங்களில் சிறப்புரையாற்ற தமது பத்து வயதிலேயே அழைக்கப்பட்டவர்; கூகுள், டெட் எக்ஸ் (TEDx) போன்ற உலகப் புகழ் பெற்ற தொழில் நுட்ப நிறுவனங்களின் இளவயது சிறப்புரையாளர் இவர் என்று நீளும் சாதனைப் பட்டியலுக்கு உரியவரான பதினைந்து வயது செல்வி விசாலினியை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் பெருமை கொள்கிறோம். விசாலினியை வல்லமைக் குழுவினருக்குப் பரிந்துரைத்தவர் வல்லமை வாசகரான திரு. தேவ்ராஜ் அவர்கள். அவருக்கு எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வார இறுதியில் (மே 23, 2015) தனது இனிய பதினாறு வயதில் அடியெடுத்து வைக்கும் செல்வி விசாலினிக்கு வல்லமைக் குழுவினர்களின் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை “ஐ.ஐ.பி.இ. லக்ஷ்மி ராமன் மெட்ரிக்குலேஷன்” உயர்நிலைப்பள்ளி மாணவி விசாலினியின் பெற்றோர்கள் கல்யாண குமாரசாமி, சேது ராகமாலிகா. மின்னியலாளராகத் தொழில் புரியும் தந்தைக்கும், திருநெல்வேலியின், ‘ஆல் இந்தியா ரேடியோ’ வானொலியின் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றும் தாய்க்கும் பிறந்த ஒரேமகள். இவர் பிறந்த பொழுது பேச்சு வர தாமதமானபொழுது, வானொலியில் பேசும் தாய்க்கு பேச்சு வராத குழந்தையா என இவர் தாயிடமே வியந்து கேட்டவர்கள் உண்டு. மருத்துவர்கள் ஆலோசனையின்படி ராகமாலிகா இவருடன் தொடர்ந்து பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தார். தனது பதவி உயர்வுகளுக்கான தேர்வுகளுக்குப் படிக்கும் பொழுது, தனது மகளை தன்னுடன் இருக்கச் செய்து பாடங்களை உரக்கப் படிக்கும் வழக்கத்தையும் மேற்கொண்டார். இடைவிடாத தாயின் முயற்சியினால் மகள் திடீரென ஒருநாள் பேசத் தொடங்கினார். அதுமட்டுமின்றி படிப்பில் மிகவும் சூட்டிகையாகவும் விளங்கி ஆண்டுக்கு இரண்டு வகுப்புகள் என இரட்டை தேர்ச்சிகள் பெற்று பிறரைவிட வேகமாக முன்னேறத் துவங்கினார்.
எட்டாம் வகுப்பு தேறிய இளவயது மாணவன் ஒருவன் பொறியியல் கல்லூரியில் படிக்க அனுமதிக்கப்பட்டான் என்ற செய்தியைப் படித்த பெற்றோர்கள் விசாலினியையும் அவ்வாறு சேர்க்க இயலுமா என்று தகவல் சேகரித்த பொழுது, சிஸ்கோ நிறுவனத்தின் “சி சி என் ஏ” (CCNA – Cisco Certified Network Associate)தொழில் நுட்பத் தேர்வு எழுதிய சான்றுகள் கொண்டு வருமாறு அறிவுரை கிடைத்தது. பொறியியல் பட்டதாரிகள் மட்டுமே எழுதும் கடினமான சிஸ்கோ கணினித் தேர்வினை தனது 10 வயதில் எழுதிய விசாலினி, 90 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்று இளம்வயதிலேயே இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர் என்ற உலக சாதனையைப் படைத்தார். இவருக்கும் முன்னர் பாகிஸ்தான் மாணவன் ஒருவர் தனது 12 வயதில் செய்த சாதனையை இவர் முறியடித்தார். இது போன்றே மைக்ரோசாஃப்ட்டின் “எம் சி பி” (Microsoft Certified Professional – MCP) தேர்விலும் மற்றொரு பாகிஸ்தான் மாணவியின் சாதனையை முறியடித்தார். இவரது சாதனை கின்னஸ்ஸின் சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடிப்பதற்கு, ‘சாதனையாளருக்குக் குறைந்தது வயது 14 இருக்க வேண்டும்’ என்ற விதிகளின் படி, விசாலினி தனது 14 வயது வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
விசாலினி சிஸ்கோ தேர்வு சாதனைக்குப் பிறகு தினமலர் நாளிதழுக்கு அளித்த நேர்காணல் காணொளியை இங்கு காணலாம் (Dinamalar Interview about cisco examination – https://www.youtube.com/watch?v=jtsAwzNHF5c). விசாலினிக்கு எதையும் புரிந்து கொள்ளும் அறிவுத்திறனும், கற்றதை மறக்காத நினைவுத் திறனும் அதிகம் என்பதுதான் இதற்குக் காரணம் என இவரது தாய் கூறியுள்ளார். தொடர்ந்து, பிரிட்டிஷ் கவுன்சில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஐ.டி.பி., ஆஸ்திரேலியா மற்றும் இ.எஸ்.ஓ.பி., தேர்வு மையங்கள் இணைந்து உலக அளவில் நடத்தும், ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வையும் பதினொரு வயதில் தேர்ச்சி பெற்று அதிலும் உலக சாதனையைப் படைத்தார். இதிலும் மற்றொரு பாகிஸ்தான் மாணவியின் சாதனையை முறியடித்தார். மேலும் நெதர்லாந்து நாட்டின் இ.எக்ஸ்.ஐ.என் – கிளவுடு கம்ப்யூட்டிங் தேர்விலும் 1,000 க்கு 1,000 மதிப்பெண் பெற்று, விசாலினி உலக சாதனை படைத்துள்ளார்.
இவரது சாதனைகளுக்குப் பிறகு இவருக்கு நுண்ணறிவுத் திறன் சோதனை இரு வேறு இடங்களில் நடத்தப்பட்டது. மதுரை மனோவியல் மருத்துவர் நம்மாழ்வார், “பென்னட் காமத்’ என்ற அறிவியல் முறையிலான சோதனையைச் செய்தார். அச்சோதனையில் விசாலினி 11 வயதிலேயே 225 புள்ளிகள் பெற்றார். புனேயில் உள்ள மற்றொரு நிறுவனம் செய்த சோதனையின் மூலமும் இவரது நுண்ணறிவுத்திறன் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. பெரும்பாலோரின் நுண்ணறிவுத் திறன் 90 முதல் 110 புள்ளிகளுக்குள் இருக்கும். இவரது நுண்ணறிவுத் திறனால், ‘உலகின் இளம் அறிவாளி’ என்ற சாதனையையும் செய்தார்.
இரட்டைத் தேர்ச்சிகள் பெற்றதால் தன்னைவிட மூத்த மாணவர்களுடன் விசாலினி படிக்க நேரிட்டது. பள்ளிகள் இவரை ஏற்றுக்கொள்ளத் தயங்கின, ஒரு கல்வியாண்டில் மூன்று பள்ளிகள் இவரைப் புறக்கணித்து பெற்றோர்கள் இவரை, தகுந்த பள்ளியில் சேர்க்க அலையவும் நேர்ந்தது. மங்களூரிலுள்ள என் ஐ டி யும், திருவில்லிப்புத்தூர் பொறியியல் கல்லூரி ஒன்றும் விசாலினியை தங்கள் கல்லூரியில் சேருமாறு அழைத்திருந்தும் விசாலியின் பெற்றோர் தற்பொழுது இவரை கல்லூரிக்கு அனுப்பும் எண்ணத்தைக் கைவிட்டு கல்லூரி வயதை எட்டியவுடன் அனுப்பத் திட்டமிட்டுள்ளார்கள்.
டாக்டர் அப்துல் கலாம் போன்ற பல பெரியோர்களாலும் அறிஞர்களாலும் பாராட்டப் பட்டவர் விசாலினி. சில பொறியியல் கல்லூரிகளில் பாடம் நடத்தும் வாய்ப்பும், பல்கலைக் கழக கருத்தரங்குகளில், தலைமை விருந்தினராக உரையாற்றவும் இவர் தொடர்ந்து அழைக்கப்பட்டு வருகிறார். இந்த மாதம் (மே 2015) டெல்லியில் கூகுள் நிறுவனம் நடத்திய இந்தியக் கல்வி பற்றியக் கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றவும், கர்நாடகா மாநிலத்தில் நடந்த கணினி தொலைத்தொடர்பு உலகக் கருத்தரங்கில் தலைமை விருந்தினராக தலைமையுரை ஆற்றவும் இவருக்கு வாய்ப்பு கிடைத்ததை, இவரே வடிவமைத்த இவரது இணையதளச் செய்தி (http://www.kvisalini.com/) அறிவிக்கிறது.
உலக சாதனைகள் …
1. The Highest IQ in the World: 225
2. The Youngest CCNA World Record Holder (Cisco Certified Network Associate): 90%
3. The Youngest IELTS World Record Holder (International English Language Testing System): Band 6
4. The Youngest Exin Cloud Computing World Record Holder: 100%
5. The Youngest CCSA World Record Holder (Checkpoint Certified Security Administrator): 71%
இந்த உலக சாதனைகள் வரிசையில் மேலும் பல சாதனைகளை இணைக்கவும், எதிர்காலத்தில் இவர் விரும்புவது போல கணினி நிறுவனம் ஒன்றைத் துவக்கவும், வாழ்க்கையில் மேலும் வெற்றிகள் பல பெறவும் வல்லமைக் குழுவினர் இவரை வாழ்த்தி விசாலினிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]
விசாலினி குறித்த தகவல்கள் பெற்ற தளங்கள்:
http://www.kvisalini.com/
http://www.theweekendleader.com/Success/822/beyond-her-years.html
http://chittarkottai.com/
தொடர்பு கொள்ள:
விசாலினியின் மின்னஞ்சல் முகவரி: goldengirlvisalini@gmail.com
அன்பு நிறை விசாலினி அவர்களே
வயதுகள்
எலும்பையும் சதையையும்
வெறுமே பொட்டலம் கட்ட
வருவதில்லை.
ஞானத்தை விஞ்ஞானத்தை
நூறு பல்கலைக்கழகங்களாய்
சுருட்டித்தரவும் வருவதுண்டு.
உன் “பதினாறு”
எங்களுக்கோ
“ஆயிரம் பிறைகள்” சுடர்ந்து வழியும்
அரிய நிலவு.
வாழி! வாழி!! நீடுழி வாழி!
அன்புடன் ருத்ரா
அன்புடன் ருத்ரா
அன்பின் விசாலினி அவர்களே
உங்கள் “பதினாறு”என்று தான் இருக்கவேண்டும்.முற்றிய வயதுகள் வழுக்கிய வெளிப்பாடே “உன்” ஆனது.பிழைக்கு வருந்துகிறேன்.
அன்புடன் ருத்ரா
ஞானச் சிறுமி
விசாலினிக்கு வாழ்த்து.
நீ தனித்த சிறுமி இல்லை !
உன் தீவு சிறியது !
உங்கள் படகு சிறியது !
உன் பயணம் நீள்வது,
இசை ஞானி தாத்தா
பித்தோவன்
உன் சோதரன் !
கணித மேதை ராமானுஜன்
உன் அண்ணன் !
கூரிய
உங்கள் மூளை
நினைவுச் சிப்புகள்
நூறு கெகா பைட்டுக்கு மேல் !
கணினி சிப்ஸ்
மதிப்பென்ன வென்று
மயங்குகிறது
மைக்ரோ ஸாஃப்ட் !
சி. ஜெயபாரதன்