Author: மேகலா இராமமூர்த்தி

  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 40

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 40

    -மேகலா இராமமூர்த்தி

    அசோகவனத்தில் சீதையைக் கண்டுபேசி இராமனிடம் காட்டுவதற்கு அடையாளமாய் அவளிடம் சூடாமணியைப் பெற்றுக்கொண்ட அனுமன், ”இலங்கைக்கு வந்தோம் திரும்பினோம் என்று வறிதே திரும்புதல் முறையன்று; அரக்கர் சிலரின் கதையையேனும் முடித்துவிட்டு இயன்றால் இராவணனையும் சந்தித்துவிட்டுச் செல்வதே நல்லது” என்று எண்ணமிட்டான். ”அதற்குச் செய்யவேண்டியது யாது?” என்று சிந்தித்தபோது எழிலார் பொழிலான இந்த அசோகவனத்தை அழித்தால் தன் எண்ணம் ஈடேறும் எனும் யோசனை அவன் சிந்தையில் உதித்தது.

    அதன்படித் தன் அழிப்பு வேலையைத் துரிதமாய்த் தொடங்கினான் அவன். அதன் விளைவாய்க் கிளைகளும், மலர்க்கொடிகளும், குயிற்குலம் விரும்பும் தளிர்கள் நிறைந்த இடங்களும், மென்மலர்களைக் கொண்ட நுழைவாயிலும், வாசமிகு புதர்களும், பொன்னிறங்கொண்ட தேன்மழையும், வண்டுகளும் மயில்களும் அழிந்துபோயின.

    குழையும் கொம்பும் கொடியும் குயிற்குலம்
    விழையும் தண்தளிர்ச் சூழலும் மென்மலர்ப்
    புழையும் வாசப்பொதும்பும் பொலன்கொள் தேன்
    மழையும் வண்டும் மயிலும் மடிந்தவே.
    (கம்ப: பொழில் இறுத்த படலம் -5564)

    வனத்திலிருந்த அனைத்து மரங்களையும் முறித்த மாருதி, சீதையின் அருகிலிருந்த மரத்துக்கு ஏதம் ஏதும் செய்யவில்லை. அசோகவனம் முற்றிலும் அழிந்துபோனதையும் மேருமலை போன்ற குரங்கொன்று அந்தக் கோரத் திருவிளையாடலை நிகழ்த்தியிருப்பதையும் கண்டு அஞ்சிய அரக்கியர் சீதையிடம் சென்று, ”நங்கையே! இவன் யாரென்று நீ அறிவாயோ?” என்று வினவினர்.

    அவளோ சாமர்த்தியமாக, “தீயவர்கள் செய்கின்ற தீமைகளெல்லாம் தீயவர்களுக்குத்தான் தெரியும்; என்னைப் போன்ற தூயவர்களுக்குத் தெரியுமா? இங்கு நடப்பவையெல்லாம் அரக்கர்களாகிய உங்களின் சூழ்ச்சியாகும். முன்பு காட்டில் மாரீசன் மாயமான் உருவில்வர, அஃது அரக்கர் செய்த மாயச் செயலால் வந்தது என்று இலக்குவன் எடுத்துச் சொல்லியும் அதனை மெய்யான மானென்று அறிவுமயக்கத்தால் எண்ணி அதன்பால் நான் விருப்பம் கொண்டேன்” என்றாள் சீதை.

    தீயவர் தீயசெய்தல் தீயவர் தெரியின் அல்லால்
    தூயவர் துணிதல்உண்டே நும்முடைச் சூழல்எல்லாம்
    ஆயமான் எய்த அம்மான் இளையவன் அரக்கர்செய்த
    மாயம்என்று உரைக்கவேயும் மெய்என மையல் கொண்டேன்.
    (கம்ப: பொழில் இறுத்த படலம் – 5584)

    தன் துன்பத்திற்கெல்லாம் அந்த மாயமான் மீது கொண்ட மையல் அல்லவா காரணம் என்பதைத் தூயவள் சீதை கணப்போதும் மறக்கவில்லை. சீதையின் பதிலால் குழப்பமடைந்த அரக்கியர் வயிற்றில் அடித்துக்கொண்டு அங்குமிங்கும் தடுமாறி ஓடினார்கள்.

    அனுமனின் அழிப்புப் படலமோ இடையீடின்றித் தொடர்ந்துகொண்டிருந்தது. வனத்தருகே ஓமங்கள் வேள்விகள் செய்வதற்காக, இராவணனது கட்டளையின் பேரில் பிரம்மதேவனால், அமைக்கப்பட்டிருந்த பசும்பொன்னாலான மண்டபத்தைப் பெயர்த்தெடுத்து இலங்கை நகர்மீது வீசினான். அதனால் வானளாவிய மாடங்களும் கூடங்களும் மண்ணோடு மண்ணாயின.

    இந்தச் செய்தியைக் காவலர்கள் இராவணனிடம் உரைத்தனர். அதுகேட்டு, ”குரங்கொன்று நம் சோலையை அழித்தது; சொர்ண மண்டபத்தைச் சிதைத்தது என்றுரைக்கும் உங்கள் வீரம் நன்று” என்று எள்ளி நகையாடினான் அவன். அப்போது அண்டங்களும் அரக்கியர் வயிற்றில் வளரும் கருவாகிய பிண்டங்களும் கலங்கும்படி அனுமன் போ(பே)ராரவாரம் எழுப்பியது இராவணனின் இருபது செவிகளிலும் விழுந்தது.

    அவன் முகத்தில் புன்முறுவலும் மனத்தில் பொறாமையும் ஒருங்கே எழ, ஆற்றல்வாய்ந்த கிங்கரர்களை அழைத்து, ”நீங்கள் வான்வழியையும் தடுத்து அக்குரங்கை அப்புறம் செல்லாதவாறு, கொல்லாது எளிதாகப் பிடித்துக்கொண்டு வாருங்கள்” என்றான்.

    புல்லியமுறுவல் தோன்றப் பொறாமையும் சிறிதுபொங்க
    எல்லைஇல் ஆற்றல் மாக்கள் எண்இறந்தாரை ஏவி
    வல்லையின் அகலாவண்ணம் வானையும் வழியை
     மாற்றிக்
    கொல்லலிர் குரங்கை நொய்தின் பற்றுதிர் கொணர்திர் என்றான்
    . (கம்ப: கிங்கரர் வதைப் படலம் – 5598)

    இராவணனின் ஆணையை ஏற்ற அவர்கள், ”தேவர்களைப் பொருதுவென்ற நாம் கேவலம் ஒரு குரங்கை எதிர்க்கச் செல்வதா?” எனும் அவமானத்தோடும் வெட்கத்தால் வருந்தும் மனத்தோடும், தோமரம், தண்டு, வேல் உள்ளிட்ட பல்வேறு படைக்கலங்களோடு அனுமனைத் தேடிச் சென்றனர்.

    அனுமனைக் கண்டதும் ”இவன்தான்” என்று சுட்டிக் காட்டியவாறு அவன்மீது பல்வேறு ஆயுதங்களையும் எறிந்தனர். ஆயுதங்கள் ஏதுமின்றி இருந்த அனுமனோ தன்னருகில் உயர்ந்து வளர்ந்திருந்த மரத்தை வேரோடு பிடுங்கியெடுத்து அதனால் அந்த அரக்கர்களை ஓங்கி அடித்தான். எதிர்த்தவர்கள் மண்டை உடைந்து மாண்டனர்; இன்னும் சிலரின் கை கால்களைப் பிய்த்து எறிந்தான் அந்த வானர வீரன்.

    அனுமனிடம் போரிட்டுத் தம் உயிரைத் தோற்றனர் கிங்கரர் அனைவரும்; ஆயினும், ஒருவரும் உயிரோடு தோற்றோடவில்லை. அவ்வகையில் அவர்களின் போர்வீரம் பெரிதும் பாராட்டத்தக்கது என்று போற்றுகின்றார் கம்பநாடர்.  

    இவற்றையெல்லாம் ஒருபக்கமாக நின்று கண்டுகொண்டிருந்த பொழிற்காவலர்கள், நடந்ததைச் சொல்லும்பொருட்டு இராவணனிடம் ஓடிச்சென்று நடுக்கத்தோடு நின்றனர். அவர்களின் நடுக்கத்தைக் கண்டபோதே தன்னுடைய வீரர்கள் போரில் தோற்றுவிட்டனர் என்பதை உணர்ந்த இராவணன், தன்னருகில் நின்றிருந்த சம்புமாலி என்ற பெருவீரனை அடுத்து அனுப்பினான் அனுமனைப் பிணித்துப் பிடித்துவர.

    குதிரை யானை தேர் காலாள் எனும் நாற்படைகளும் பின்வரப் போருக்குச் சென்றான் சம்புமாலி. இப்படைகளைக் கண்ட அனுமன் உற்சாகத்தோடு தோள்தட்டி ஆரவாரித்தான்.

    சம்புமாலிக்குத் துணையாகச் சேனைகள் இருந்தன. ஆனால் அனுமனுக்கு, ஆழிப்படை ஏந்திய திருமாலின் திருநாமம் நெய்ஊற்றி எரிக்கின்ற விளக்கின் சுடர்போன்ற, அவனுடைய ஒளிபொருந்திய நெற்றியே முன்னணிச் சேனையாகவும், அவன் உடலில் நெருங்கி வளர்ந்துள்ள மயிர்க்கூட்டங்களே படைவீரர்களாகவும், வலிமையும் கூர்மையும் பொருந்திய நகங்கள் எனும் வாள்கள் கொண்ட கைகளே இருபக்கச் சேனைகளாகவும், தெய்வத்தன்மை பொருந்திய வாலே அணிவகுப்பின் பின்னணிச் சேனையாகவும் அமைய தான் ஒருவனே ஒழு முழுச்சேனையாக (one man army) நின்றான் என்கிறார் கம்பர்.

    ஐயனும் அமைந்து நின்றான் ஆழியான் அளவின் நாமம்
    நெய்சுடர் விளக்கின் தோன்றும் நெற்றியே நெற்றியாக
    மொய்ம் மயிர்ச்சேனை பொங்க முரண்அயில் உகிர்வாள் மொய்த்த
    கைகளே கைகள்ஆக கடைக்கூழை திருவால் ஆக.
    (கம்ப: சம்புமாலி வதைப் படலம் – 5678)

    அனுமனுக்கும் சம்புமாலியின் சேனைகட்கும் கடும்போர் நடந்தது. அச்சேனையைத் துவைத்தழித்த அனுமன், பூத்தமரம்போல் உடலெங்கும் புண்களால் பொலிந்தான். சம்புமாலி மட்டும் தனித்து நிற்பதைக் கண்ட அனுமன் அவன்பால் இரக்கம் கொண்டு, “உன் சேனைகள் அனைத்தையும் தோற்றுவிட்டாய்; என்னோடு நீ போரிட்டால் உன் உயிரையும் தோற்க நேரிடும்; திரும்பிப் போய்விடு!” என்றான்.

    தனித்து நின்ற இராவணனுக்கு, பின்னாளில், ”இன்றுபோய்ப் போர்க்கு நாளை வா!” என்று அருள்செய்த இராமனைப்போல் இராமதூதனான அனுமனும் தனித்து நின்ற சம்புமாலிபால் அருள்நெஞ்சினனாய் நடந்துகொள்வதை ஈண்டுக் காண்கிறோம்.

    மா(ன)வீரனான சம்புமாலி அனுமன் தன்மீது காட்டிய அனுதாபம் கண்டு கோபத்தோடு நகைத்துவிட்டு அவனை எதிர்த்துப் போரிட்டான்.  இறுதியில் சம்புமாலியின் கையிலிருந்த வில்லைப் பிடுங்கி அதனை அவன் கழுத்தில் மாட்டியிழுத்து அவன் தலையை மண்ணில் வீழ்த்தினான் அனுமன்.

    சம்புமாலியும் எமபுரி சென்றதை அறிந்த இராவணன் சினம்பொங்கத் தானே அனுமனை எதிர்க்க ஆயத்தமானான்.

    அப்போது அவனைத் தடுத்த அவனுடைய சேனைத் தலைவர்கள் ஐவர், ”ஐய! சிலந்திப் பூச்சியைப் பிடித்துத் தின்னும் ஒரு குரங்கை எதிர்க்க உம்மைப்போல் ஒரு மாவீரன் செல்வதா? வலிகுன்றியவர்களையே நீர் இதுவரை அனுமனை எதிர்க்க அனுப்பியமையால் அவர்கள் இறந்துபட்டனர்; இப்போது நாங்கள் செல்கிறோம்; வெற்றியோடு திரும்புவோம்” என்று சாற்றியது இராவணனின் மனத்தை மாற்றியது. அவர்கள் போருக்குச் செல்ல இசைந்தான்.

    பெரும்படையுடன் அவ் ஐவரும் போருக்கெழுந்தனர்; அனுமனை அணுகினர். அரக்கர் படையை நோட்டம்விட்ட அனுமன், ” இன்று பகலுக்குள் இவர் கதையை முடிப்பேன்” என்றெண்ணியபடி தன் தோள்களை நோக்கிக்கொண்டான் கம்பீரத்தோடு.

    ”இந்தப் புன்தலைக் குரங்கா விண்ணவர் புகழை வேரோடழித்த வல்அரக்கரை முறுக்கி அழித்தது?” என்று நம்பமுடியாமல் ஐயத்தோடு அனுமனைப் பார்த்தனர் படையிலிருந்த நிருதர் பலர்.

    புன்தலைக் குரங்குஇது போலுமால் அமர்
    வென்றது விண்ணவர் புகழை வேரொடும்
    தின்றவல் அரக்கரைத் திருகித் தின்றதால்
    என்றனர் அயிர்த்தனர் நிருதர் எண்ணிலார்.
    (கம்ப: பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம் – 5736)

    அனுமன் பேருருவம் எடுத்தான்; அடுத்து, அருகிலிருந்த இரும்புத்தூணை பெயர்த்தெடுத்தான். மீண்டும் ஆங்கே ஒரு பெரும்போர் நிகழ்ந்தது. முடிவில் அந்தப் பஞ்சவரையும், காண்போர் நெஞ்சம் பதறும்படி, ஒவ்வொருவராய்த் தாக்கி அழித்தான் குறைவற்ற ஊக்கமுடையவனான அஞ்சனை தோன்றல்.

    சேனைத் தலைவர்கள் மாண்ட செய்தி நிருதர்கோன் இராவணனின் செவிகளை எட்டியது. அவனிடம் மூண்ட சினத்தீயால் பொசுங்கியது அவன் அணிந்திருந்த மணங்கமழ் மலர்மாலை. தானே மீண்டும் போருக்குப் புறப்பட எத்தனித்தவனை இடையிட்டுத் தடுத்துத் தன்னைப் போருக்கு அனுப்பும்படி இறைஞ்சினான் ஒரு வீரன்!

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 39

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 39

    -மேகலா இராமமூர்த்தி

    ”இராமதூதன் நான்” என்று தன்னைச் சீதையிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு இராமனின் திருவாழியை அனுமன் காட்டவும், அதனைக் கண்டு இழந்த உயிரை மீண்டும் பெற்றாற்போல் மகிழ்ந்த சீதை, ”இன்றுபோல் என்றும் வாழ்க”வென அனுமனை வாழ்த்தினாள். ”இராமனும் இளவலும் யாங்குளர்? நீ அவர்களை அறிந்தது எவ்வாறு?” என்று அனுமனை வினவினாள்.

    அவனும் சீதை இராவணனால் கடத்திக்கொண்டு போகப்பட்ட நிகழ்வு தொடங்கி இராமனுக்கும் சுக்கிரீவனும் நட்பு ஏற்பட்டமை, இராமன் வாலியை வீழ்த்திச் சுக்கிரீவனுக்கு அரசளித்தமை, மாரிக்காலம் முடிந்தபின் சீதையைத் தேடுதற்குப் படையோடு வருக என்று இராமன் சுக்கீரிவனைப் பணித்தமை, சுக்கிரீவன் வழிகாட்டுதலின்படித் தென்திசையில் தேடிக்கொண்டு வந்த தான் சீதையைக் கண்டமை ஆகிய அனைத்தையும் விரித்துரைத்தான்.

    அவற்றைச் செவிமடுத்த சீதை, “நீ இப்பெருங்கடலைக் கடந்து இலங்கையை அடைந்தது எப்படி?” என்று அனுமனை வியப்போடு வினவ,

    ”அன்னையே! உன் ஒப்பற்ற தலைவனின் தூய திருவடிகளில் மனத்தை ஒன்றுபடுத்திப் பேரறிவடைந்த ஞானியர், ஓய்வில்லாத மாயை எனும் பெருங்கடலைக் கடப்பதுபோல் அடியேன் இக் கருங்கடலைக் கால்களால் கடந்துவந்தேன்” என்றான் அனுமன். கால் என்பதைக் காற்று எனக்கொண்டால் காற்றின் துணையோடு வான்வழியே இக்கருங்கடலைத் தாண்டி வந்தேன் என்றும் பொருள் கொள்ளலாம்.

    சுருங்குஇடை உன்ஒரு துணைவன் தூயதாள்
    ஒருங்குடை உணர்வினோர் ஓய்வுஇல் மாயையின்
    பெருங்கடல் கடந்தனர் பெயரும் பெற்றிபோல்
    கருங்கடல் கடந்தனென் காலினால் என்றான்.
    (கம்ப: உருக்காட்டு படலம் – 5432)

    பிறவி எனும் பெருங்கடலைக் கடக்க இறைவனின் திருவடிகளே துணைசெய்வன என்று திருக்குறளும் சாற்றியிருப்பது நினைவுகூர்தலுக்கு உரியது.

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்.
    (குறள்: 10)

    அவன் பதிலால் மேலும் வியப்படைந்த முத்துநகை முறுவலாள் சீதை, “இத்துணைச் சிறிய யாக்கையை உடைய நீ, பெருங்கடலைக் கடந்தது தவத்தின் பயனாலா? சித்தியினாலா?” என்று கேட்டாள்.

    ”இரண்டும் இல்லை” என்று மறுத்த அஞ்சனை மைந்தன், தன் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் பேருருவெடுத்து (விசுவரூபம்) வானளாவ உயர்ந்து நின்றான். அப்போது எட்டுத் திசைகளின் எல்லையிலும் எல்லா உலகங்களிலும் இடம்விட்டுப் பெயராத உயிர்க்கூட்டங்கள் எல்லாம் அனுமனைப் பார்த்தன; அனுமனும் மேலுலகம் எனப்படுவதில் வாழும் எல்லாத் தேவர்களையும் தன் தாமரைக் கண்களால் கண்டான்.

    எண்திசை மருங்கினும் உலகம் யாவினும்
    தண்டல்இல் உயிர்எலாம் தன்னை நோக்கின
    அண்டம் என்றதின் உறைஅமரர் யாரையும்
    கண்டனன் தானும்தன் கமலக் கண்களால்.
    (கம்ப: உருக்காட்டு படலம் – 5439)

    அனுமன் எல்லா இடங்களிலும் நிறைந்திருந்தமையால் உயிர்கள்
    அவனைக் கண்டன. உயர்ந்து இருந்தமையால் அவன் தேவரைக் கண்டான்.
    இதனால் அவன் தோற்றத்தின் பெருக்கமும் உயரமும் பேசப்பட்டன.

    உலகெலாம் அளந்துநின்ற அனுமனின் பேருருத் தோற்றத்தையும் ஆற்றலையும் கண்கூடாய்க் கண்ட சீதை நனிமகிழ்வெய்தி, தனக்கு இச் சிறைவாழ்விலிருந்து விடுதலை கிடைத்துவிடும் எனும் நம்பிக்கை கொண்டவளாய் அவன் உருவத்தைச் சுருக்கிக் கொள்ளப் பணித்தாள்.

    அவ்வாறே தன் உருவைப் பழையபடிச் சுருக்கிக்கொண்ட அனுமனைப் பார்த்து, “இந்த ஒரு கடலென்ன, ஏழு கடல்களைக் கடக்கும் வல்லமை பெற்றவன் நீ” என்று புகழ்ந்துரைத்த சீதை, ”நீ இராமனுக்கு உற்றதோர் நற்றுணை ஆவாய்!” என்றாள். அவள் திருவடிகளை வணங்கிய அனுமன், ”தாயே! எண்ணிறந்த வானர வீரர்கள் இராமனுக்குப் பணிசெய்யக் காத்துக்கிடக்கிறார்கள். அவர்களுள் நானும் ஒரு பணியாளன். ஏவும் கூவும் பணிகளைச் செய்வேன்” என்று அடக்கத்துடன் மறுமொழி அளித்தான்.

    திருமகளை ஒத்த சீதை அரக்கியரிடை இருந்து படும் இன்னல்களையும் அவளின் இரங்கத்தக்க நிலையையும் சிந்தித்துப்பார்த்த அனுமன், இவளை நான் என் முதுகில் சுமந்துசென்று இராமனிடம் ஒப்படைப்பதே இப்பெண்ணரசியின் துயரத்தை உடனடியாய் மாற்றுதற்கு ஏற்றவழி எனும் எண்ணங்கொண்டான்.

    தன் கருத்தைச் சீதைக்குத் தெரிவிக்க விரும்பியவன், “அன்னையே நான் சொல்வதைக் கோபியாமல் கேட்பீராக! என் தோள்மீது ஏறிக்கொள்ளுங்கள்! கண்ணிமைக்கும் நேரத்தில் உங்களை அண்ணல் இராமனிடம் கொண்டு சேர்ப்பேன்; நான் தங்களைச் சுமந்துசெல்வதை அறிந்து அரக்கர்கள் பின்தொடர்வரேல் அவர்களைச் சிதைத்து என் சீற்றத்தைத் தணித்துக் கொள்வேன். தங்களின் துன்பநிலை கண்டும் அதற்குக் கழுவாய் தேடாமல் வெறுங்கையுடன் பெயரேன்!” என்றவன், ”இமைப்பதற்குள் இந்த இலங்கையை உருக்கியழித்து, இராவணனையும் அவனுடைய நிருதர் கூட்டத்தையும் ஒழித்துவிட்டு வா என்று நீங்கள் செப்பினாலும் அப்படியே செய்கின்றேன்” என்றான் தீர்மானமாக.

    ”நீ சொல்லும் யோசனை இராமனின் வில்லுக்குக் களங்கமுண்டாக்கக் கூடியது. அத்தோடு, இராவணன் என்னை வஞ்சகமாய்க் கவர்ந்துவந்ததுபோல் நீயும் அவனுக்குத் தெரியாமல் என்னை வஞ்சகமாய்த் தூக்கிச் செல்லக் கருதுதல் முறையன்று. வஞ்சத்தை வஞ்சத்தால் வெல்வதென்பது சான்றோர்க்கு அழகன்று” என்று அந்த யோசனையை ஏற்கமறுத்த சீதை,

    ”துன்பத்தைத் தரக்கூடிய இந்த இலங்கைவாழ் விலங்கு போல்வாரை மட்டுமல்லாது, எல்லையில்லாமல் இருக்கக்கூடிய அனைத்து உலகங்களையும் என் சொல்லினாலேயே சுட்டெரித்துவிடுவேன்; அது, தூயவனாகிய இராமனின் வில்லுக்கு மாசு என்பதனாலேயே அவ்வெண்ணத்தைச் செயற்படுத்தாது வீசினேன்” என்றாள்.

    அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ
    எல்லைநீத்த உலகங்கள் யாவும் என்
    சொல்லினால் சுடுவேன் அது தூயவன்
    வில்லின் ஆற்றற்கு மாசுஎன்று வீசினேன்.
    (கம்ப: சூடாமணிப் படலம் – 5470)

    அசோகவனச் சிறைவாசத்திலிருந்து தன்னைப் பிறர் துணையின்றித் தானே விடுவித்துக்கொள்ளக் கூடிய ஆற்றலைச் சீதை பெற்றிருந்தும், அதனைப் பயன்படுத்தாமல், தன் கணவன் இராமன் தன்னைவந்து மீட்கவேண்டும்; அவனே வெற்றிவீரனாய்த் திகழவேண்டும் என்று சீதை கருதியிருந்தமையை இதன்மூலம் நாம் தெளிவாய்த் தெரிந்துகொள்கின்றோம்.

    சீதையின் இவ்வெண்ணங்கள் பெண்ணடிமைத்தனத்துக்கே உரம் சேர்ப்பனவாய் இருக்கின்றன. கணவனைச் சார்ந்திருப்பதும் அவன் புகழுக்குப் பாடுபடுவதுமே மனைவியின் மாண்பு என விதிவகுத்துப் பெண்களைச் செயல்திறன் முடக்கப்பட்ட கோழைகளாய் வைத்திருந்த அன்றைய ஆணாதிக்கச் சமூகத்தை ஒரு பண்பட்ட நாகரிகச் சமூகமாய்க் கருதமுடியவில்லை.

    அன்றைய இலக்கியப் படைப்புகளில் வெளிப்பட்ட சிந்தனைகள்தாம் இவ்வாறிருந்தனவென்றால் இன்றும்கூடப் பெரும்பான்மையான இலக்கியப் படைப்புகளும் வெள்ளித்திரைப் படைப்புகளும் (திரைப்படங்கள்) நாயகனை தகுதிக்குமீறி உயர்த்திப் பிடிப்பனவாகவும், நாயகியரை அவன் உதவியின்றித் தம் துன்பங்களிலிருந்து விடுபட இயலாதவர்களாகவுமே சித்திரிப்பது, காலங்கள் மாறினும் ஆணாதிக்கச் சிந்தனைப் போக்கிலிருந்து நாம் இன்னமும் விடுபடவில்லை என்பதன் வெளிப்பாடுகளே!

    சீதையின் மொழிகளை நன்று என்று நவின்ற அனுமன், ”நான் இராமனிடம் தங்கள் சார்பாய்க் கூறவேண்டியது யாது?” என்று கேட்டான் அவளிடம்.

    ”ஒருமாத கால எல்லையில் என்னுடைய தவம் நிறைவேறுகின்ற படியால் அதற்குள் இராமன் இங்கு வந்திலனேல் புதிய நீர்ப்பெருக்கை உடைய கங்கையாற்றங்கரையில் தன்னுடைய சிவந்த கரங்களால் எனக்கும் இறுதிச் சடங்கைச் செய்யச் சொல்!” என்றாள் சீதை விரக்தியோடு!

    திங்கள் ஒன்றின் என் செய்தவம் தீர்ந்ததால்
    இங்குவந்திலனே எனின் யாணர் நீர்க்
    கங்கையாற்றங்கரை அடியேற்கும் தன்
    செங் கையால்கடன் செய்க என்று செப்புவாய்.
    (கம்ப: சூடாமணிப் படலம் – 5484)

    தன் கருத்துக்களைத் தொடர்ந்து வெளிப்படுத்திய சீதை, ”மிதிலையில் என்னைக் கரம்பற்றி உடனுறை காலத்தில், இந்தப் பிறவியில் இன்னொரு பெண்ணைச் சிந்தையாலும் தொடமாட்டேன் என்று இராமன் எனக்குரைத்த உறுதிமொழியை அவர் செவியில் இரகசியமாய்ச் செப்புக” என்றாள்.

    வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்
    இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச்
    சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்
    தந்த வார்த்தைதிருச் செவி சாற்றுவாய்.
    (கம்ப: சூடாமணிப் படலம் – 5486)

    சீதை சொன்னவற்றைக் கவனத்தோடு கேட்ட அனுமன், ”அன்னையே! நீங்கள் ஒரு மாதம் வரைக்கும் இந்த இலங்கையில் துன்பத்துடன் காத்திருக்க வேண்டியதில்லை. நான் விரைவில் இராமனைப் பார்ப்பதுதான் எஞ்சியுள்ள செயல். அதன்பிறகு(ம்) ஆண்தகையான அவன் இங்குவர நல்லகாலம் பார்த்துக்கொண்டிருப்பானா? ஒரு கணமும் பொறுத்திரான்!” என்றான் உறுதிபட.

    ஈண்டு ஒருதிங்கள் இவ்இடரி்ன் வைகுதல்
    வேண்டுவது அன்றுயான் விரைவின் வீரனைக்
    காண்டலே குறைபினும் காலம் வேண்டுமோ
    ஆண்தகை இனிஒரு பொழுதும் ஆற்றுமோ.
    (கம்ப: சூடாமணிப் படலம் – 5518)

    புறப்படுவதற்கு நல்ல காலம் பார்ப்பதை ‘மீன மேஷம் பார்த்தல்’ என்பர் கிராமப்புறங்களில்; அவ்வாறு பார்த்துக்கொண்டிருக்க மாட்டான் இராமன்; சீதை இருக்குமிடம் தெரிந்தவுடனே புறப்பட்டுவிடுவான் அவளை மீட்க என்பது அனுமன் சீதைக்குத் தெரிவிக்கும் செய்தி.

    அதனைக் கேட்டு உவந்த சீதை, மேலும் சில செய்திகளை இராமனிடம் சொல்லுமாறு அனுமனிடம் கூறியபின், தன் ஆடையில் முடிந்து வைத்திருந்த, சூரியனைவிட அதிகமாய்ச் சுடர்விடும், சூளாமணியை (தலையணி/நெற்றிச்சுட்டி) தன் மலர்க்கையால் எடுத்து அதனை அனுமனிடம் அடையாளமாய்க் கொடுத்தாள். அதனை வாங்கித் தன் ஆடையில் பத்திரமாய் முடிந்த அனுமன், அழுத கண்களோடு அவளைத் தொழுது புறப்பட்டான்.

    திரும்பி நடக்கும்வழியில் சில சிந்தனைகள் அனுமனுக்குள் எழுந்தன. ”இந்த இலங்கை நகரை அழித்து நிருதர்களை ஒழிக்காமல் போவேனேல் நான் இராமனின் அடியவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையுண்டா?”

    ”இந்த அசோக வனம் மிக்க அழகுடையதாயும் இராவணனின் விருப்பத்துக்கு உகந்ததாயும் இருக்கின்றது. இதனை நான் அழித்தால் அரக்கர்கள் என்னோடு போருக்கு வருவார்கள்; அவர்களை நான் கொன்றால் இராவணன் என்னோடு போருக்கு வருவான்; அவ்வாறு வருவானேல் அவன் கதையை முடித்துவிட்டு மகிழ்வோடு செல்வேன்” என்று எண்ணமிட்டான்.

    நினைத்ததைச் செயற்படுத்தும் வண்ணம், அவ்வெழிலார் பொழிலை அழிக்கத் தொடங்கினான்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • தமிழகம் கண்ட திறன்மிகு எழுத்தாளர்

    தமிழகம் கண்ட திறன்மிகு எழுத்தாளர்

    -மேகலா இராமமூர்த்தி

    தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்களை நாம் வரிசைப்படுத்தினால் அதில் குறிப்பிடத்தக்கதோர் இடத்தைப் பெறுபவர் வல்லிக்கண்ணன் அவர்கள். கதை, கவிதை, கட்டுரை, நாடகம், திறனாய்வு என்று இலக்கியத்தின் பல வகைமைகளிலும் சுவடுபதித்த வல்லிக்கண்ணன், கட்டுரையாளராகத் தனிமுத்திரை பதித்த சாதனையாளராவார்.

    திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டத்திலுள்ள திசையன்விளை எனும் ஊரில் நவம்பர் 12, 1920இல் சுப்பிரமணியப் பிள்ளை, மகமாயி அம்மாள் இணையருக்கு மகனாய்ப் பிறந்தவர் ரா.சு. கிருஷ்ணசாமி எனும் இயற்பெயர்கொண்ட வல்லிக்கண்ணன்.

    பின்னாளில் அவர் எழுத்தாளராக மாறியபின் தமக்கொரு புனைபெயர் சூட்டிக்கொள்ள விழைந்து, தம் முன்னோர்களின் பூர்வீகமான இராஜவல்லிபுரத்திலுள்ள ’வல்லி’யையும், தம் பெயரான கிருஷ்ணசாமி என்பதன் தமிழாக்கமான ’கண்ணனை’யும் இணைத்து வல்லிக்கண்ணன் ஆனார்.

    சிறு பத்திரிகைகளுடனான அறிமுகம் வல்லிக்கண்ணனுக்குச் சிறுவயதிலேயே கிடைத்துவிட்டது. பரலி சு. நெல்லையப்பரின் லோகோபகாரி எனும் சிற்றிதழும், சங்கு சுப்பிரமணியம் என்பவர் நடத்திய சுதந்திரச் சங்கு எனும் பத்திரிகையும், காந்தி, மணிக்கொடி போன்ற இதழ்களும் அவருக்குப் பள்ளி நாட்களிலேயே படிக்கக் கிடைத்தன. அதனால் இளம்பருவத்திலேயே சிற்றிதழ்களின் காதலன் ஆனார் வல்லிக்கண்ணன்.

    படிப்பதில் இருந்த ஆர்வம் எழுதுவதிலும் அவருக்கு ஏற்பட்டது. எனவே, தாமும் கதைகள் கட்டுரைகள் என்று எழுதத் தொடங்கினார். அவ்வாறு பதினாறு வயதில் தொடங்கிய அவரின் எழுத்துப்பணி அவர் வாழ்வின் இறுதிவரைச் சலிப்பின்றித் தொடர்ந்தது.

    பள்ளியிறுதிப் படிப்புக்குப் பின் அரசுவேலையில் சேர்ந்த வல்லிக்கண்ணன், தம்முடைய ஓய்வுநேரத்தை படிப்பதிலும் எழுதுவதிலும் செலவழித்துவந்தார். அதனால், பணியிடத்தில் மேலதிகாரியின் அதிருப்திக்கு ஆளானார். ஒருகட்டத்தில் அரசுப்பணி தம் எழுத்துப்பணிக்கு இடையூறாக இருக்கும் என்பதை உணர்ந்து அதனைத் துறந்து முழுநேர எழுத்தாளரானார்.

    சினிமா உலகம், நவசக்தி, கிராம ஊழியன் உள்ளிட்ட சிறு பத்திரிகைகள் பலவற்றில் வல்லிக்கண்ணனின் தொடக்ககாலப் படைப்புகள் வெளிவந்தன. திருமகள், சினிமா உலகம், நவசக்தி, கிராம ஊழியன் முதலிய பத்திரிகைகளில் ஆசிரியராகவும் பணிபுரிந்த அனுபவம் அவருக்கு உண்டு.

    புகழ்பெற்ற குடந்தை எழுத்தாளரான தி. ஜானகிராமனின் முதல் நாவலான ‘அமிர்தம்’ கிராம ஊழியன் பத்திரிகையில் வல்லிக்கண்ணன் பணிபுரிந்துகொண்டிருந்தபோதுதான் வெளிவந்தது.

    பாரதி பரம்பரையில் வந்த கவிஞர்களுள் தலைசிறந்தவரான பாவேந்தர் பாரதிதாசனின் கவியாளுமையை விளக்கும் வகையில், ’பாரதிதாசனின் உவமை நயம்’ என்ற கட்டுரைத் தொடரை கிராம ஊழியன் இதழில் எழுதினார் வல்லிக்கண்ணன். பாவேந்தரே அக்கட்டுரைகளைப் படித்துவிட்டு வல்லிக்கண்ணனைப் பாராட்டியிருக்கின்றார்.

    வல்லிக்கண்ணன் என்ற பெயரே அல்லாமல் நையாண்டி பாரதி, கோரநாதன், மிவாஸ்கி, வேதாந்தி, பிள்ளையார், தத்துவதரிசி, அவதாரம் எனப் பல புனைபெயர்களிலும் அவர் எழுதியுள்ளார். எனினும், வல்லிக்கண்ணன் என்ற பெயரே அவருக்கு நிலைத்தது.

    ஈட்டிமுனை, கோவில்களை மூடுங்கள், எப்படி உருப்படும்?, கொடு கல்தா போன்ற சமூக விழிப்புணர்வூட்டும் கட்டுரை நூல்களை கோரநாதன் என்ற பெயரில் அறச்சீற்றங் கொண்ட இளைஞனாக எழுதியவர் வல்லிக்கண்ணன்.

    ’எப்படி உருப்படும்?’ என்ற நூலில் சினிமா உலகின் இயல்பையும் அது சமூகத்தைச் சீரழிக்கும் விதத்தையும் கண்டு உள்ளங் குமுறி,

    ”இன்றைய பட முதலாளிகளுக்குக் கலை வளரவேண்டும், நாட்டுக்கு நல்லன புரியவேண்டும், மக்களின் பண்பாட்டை உயர்த்த வேண்டும் என்பதெல்லாம் நோக்கமல்ல. இவர்களுக்கு வேண்டியது பணம், படாடோப வாழ்க்கை. செலவுசெய்கிற பணத்தைவிட அதிகமான லாபம் வருகிறது; அத்தோடு ரகரகமான உருப்படிகளை, நட்சத்திரங்களை இஷ்டம்போல் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற வெறி நினைப்பு, மன அரிப்பு முதலியவைகளால் உந்தப்பட்டு சினிமாத் தொழிலில் ஈடுபட்ட முதலாளிகளே அதிகம் காணப்படுகின்றார்கள்.” என்று சினிமா எனும் மாய உலகின் நடப்புகளை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றார்.

    மிவாஸ்கி என்ற புனைபெயரில் வல்லிக்கண்ணன் எழுதிய ’அடியுங்கள் சாவுமணி’ என்ற நூலில்,

    ”புதுயுகம் பிறக்கவேண்டுமா?
    அடியுங்கள் சாவுமணி மக்களின் அறியாமைக்கு!
    மக்களை அடிமைகளாக்க முயல்கின்ற சுரண்டும் கும்பலுக்கு!
    மக்களின் மிருக வெறிக்கு!
    மக்களின் கண்மூடிப் பழக்கங்களுக்கு!” என்கிறார் ஆவேசமாக.

    இரஷிய இலக்கிய மேதையான மேக்ஸிம் கார்க்கியின் (Maxim Gorky) கட்டுரைகள் சிலவற்றையும், அவரின் சிறுகதைகள் சிலவற்றையும், இரஷிய இலக்கியத்தின் மற்றொரு மகத்தான ஆளுமையான லியோ டால்ஸ்டாயின் கதைகள் சிலவற்றையும் தமிழில் மொழியாக்கம் செய்துள்ள வல்லிக்கண்ணன், இந்தியப் பயண இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் இராகுல் சாங்கிருத்தியாயன், தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

    இவையல்லாமல், பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை, எழுத்தாளர்களும் பத்திரிகைகளும், வாசகர்கள் – விமர்சகர்கள், சரஸ்வதி காலம், தமிழ்ப் பத்திரிகைகள் அன்றும் இன்றும், ஊர்வலம்போன பெரிய மனுஷி, மத்தாப்பு சுந்தரி, கேட்பாரில்லை, அமர வேதனை, ஆண் சிங்கம், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார் வல்லிக்கண்ணன்.

    ‘ஊர்வலம் போன பெரிய மனுஷி’ என்ற வல்லிக்கண்ணனின் சிறுகதை பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்புக்குரியது.

    ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற அவருடைய நூலுக்கு1978-இல் சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது. இந்நூலைத் தாம் எழுத நேர்ந்ததன் காரணத்தை விளக்கவரும் வல்லிக்கண்ணன்,

    “புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் எனும் தலைப்பிலான கட்டுரைகள் வரலாற்று நோக்கில் எழுதப்பட்டவையாகும். தீபம் இலக்கிய ஏட்டில் ’சரஸ்வதி காலம்’ பற்றிய கட்டுரைத் தொடரை நான் எழுதி முடித்திருந்த நேரம், அடுத்ததாக இலக்கியக் கட்டுரைத் தொடர் ஒன்றை நான் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் தீபம் இதழின் ஆசிரியர் நா. பார்த்தசாரதி.

    அதே சந்தர்ப்பத்தில் எனக்குக் கடிதம் எழுதிய இலங்கை எழுத்தாளர் கலாநிதி க. கைலாசபதி அவர்கள், ”புதுக்கவிதை பற்றி ஏதேதோ விவாதங்கள் நடைபெறுகின்றனவே; அதன் வரலாறு உங்களுக்குத்தான் நன்றாகத் தெரியுமே; நீங்கள் ஏன் அவ்வரலாற்றை எழுதக்கூடாது?” என்று கேட்டிருந்தார். கவிஞர் மீராவும் புதுக்கவிதைகளின் தோற்றம் அவற்றின் வளர்ச்சி குறித்து நான் எழுதவேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார்.

    இவ்வாறு நண்பர்கள் பலர் கேட்கவே, புதுக்கவிதையின் வரலாற்றை 1972 நவம்பர் முதல் 1975 மே முடிய தீபம் இதழில் கட்டுரைத் தொடர்களாக எழுதினேன்.

    இது புதுக்கவிதையின் வரலாறுதான்; புதுக்கவிதைகள் குறித்தோ, கவிஞர்கள் குறித்தோ எழுதப்பட்ட விமர்சனமோ ஆய்வுரையோ அன்று. புதுக்கவிதைகளின் வரலாறு ஆண்டுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டு இதில் எழுதப்பெற்றுள்ளது. போகிற போக்கில் ஆங்காங்கே சிற்சில இடங்களில் எனது அபிப்ராயங்களையும் மேலோட்டமாகக் குறிப்பிட்டிருக்கின்றேன்” என்கிறார்.

    இக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு பின்னர் நூலாக வெளிவந்தது.

    பாலாஜி பிக்சர்ஸ் தயாரிப்பில் 1950ஆம் ஆண்டு வெளிவந்த ‘லைலா மஜ்னு’ என்ற படத்திற்கு வசனம் எழுதுமாறு வல்லிக்கண்ணனை அவரின் நண்பர் ஒருவர் மிகவும் வற்புறுத்தவே, அப்படத்தின் சில காட்சிகளுக்கு வசனம் எழுதியிருக்கின்றார் வல்லிக்கண்ணன். அதன்பிறகும் சில திரைப்படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஆனால், இலக்கியத்துறையில் ஈடுபடுவதிலேயே ஆர்வங் கொண்டிருந்த வல்லிக்கண்ணன் சினிமாத் துறையில் தன்னைத் தொலைக்க விரும்பாததால் அவ்வாய்ப்புகளை ஏற்கவில்லை.

    திறனாய்வாளராகவும் திகழ்ந்த வல்லிக்கண்ணன், படைப்பாளிகளைப் பாராட்டுகின்ற நேரிய அணுகுமுறையையே அதிகம் கடைப்பிடித்தார்; அதுவே அவரின் குறையாகவும் பலரால் விமர்சிக்கப்பட்டது. ”வல்லிக்கண்ணன் படைப்பாளிகளைத் தேவைக்கு அதிகமாகப் புகழ்கின்றார்; படைப்புகளின் குற்றங்குறைகளைச் சுட்டிக்காட்டுவதில்லை” என்ற குற்றச்சாட்டு அவர்மீது வைக்கப்பட்டது.

    அதற்கான பதிலை ஒரு நேர்காணலில் அளித்த வல்லிக்கண்ணன்,

    ”பாராட்ட வேண்டியதைப் பாராட்டாமல் தவறவிட்டதாலே, பல நல்ல காரியங்கள் வளராமலே போய்விட்டன’’ என்று மகாகவி பாரதியே சொல்லியிருக்கிறார். பொதுவாக, பாராட்ட வேண்டியதை பாராட்டுகிற மனநிலை நம்மவர்களிடம் இல்லை. வளர விரும்புகிறவர்களைப் பாராட்டத்தான் வேண்டும். பாராட்டு அவர்களுக்கு மகிழ்ச்சியையும், மேலும் உழைக்க உற்சாகத்தையும் வளர்வதற்கான ஊக்கத்தையும் அளிக்கும்.” என்றிருக்கின்றார்.

    உண்மையில் மிகவும் அரிதான, வியக்கத்தக்க பெருந்தன்மை இது!

    ‘வல்லிக்கண்ணன் சிறப்புச் சிறுகதைகள்’ என்ற அவருடைய நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களின் சிறுகதைப் பிரிவில் பரிசு பெற்றுள்ளது.

    ‘வாழ்க்கைச் சுவடுகள்’ என்ற தன்வரலாற்று நூலில் தம் வாழ்வின் சுவையான அனுபவங்களைப் பதிவுசெய்திருக்கின்றார் வல்லிக்கண்ணன். இந்நூல் ஓர் அரிய வரலாற்று ஆவணமாய்த் திகழ்கின்றது.

    தம் வாழ்வின் இறுதிவரை திருமணமே செய்துகொள்ளாத வல்லிக்கண்ணன், சென்னையிலும் நெல்லை இராஜவல்லிபுரத்திலுமாக மாறி மாறி வசித்துவந்தார். அவர் இராஜவல்லிபுரத்தில் தங்கியிருக்கும் காலத்தில் அவரைக் கண்டு அளவளாவிச் செல்வதற்காக அந்நாளைய இலக்கிய இளவல்களான வண்ணதாசன், வண்ணநிலவன், நம்பிராஜன், கலாப்பிரியா போன்றவர்களும், கி.ராஜநாராயணன் (கி.ரா), தீப. நடராஜன் (இரசிகமணி டி.கே.சியின் பேரன்), தஞ்சை பிரகாஷ் போன்றோரும் அடிக்கடி வந்து சென்றிருக்கின்றார்கள்.

    பல எழுத்தாளர்களுக்குப் பெயர்சூட்டிய பெருமையும் வல்லிக்கண்ணனுக்கு உண்டு. வண்ணநிலவனுக்கும் வண்ணதாசனுக்கும் அப்பெயர்களைச் சூட்டியவர் வல்லிக்கண்ணனே ஆவார்!

    ”வல்லிக்கண்ணனின் முத்து விழாவின்போது அவருக்குக் கவிஞர், நாவலாசிரியர், சிறுகதை ஆசிரியர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர் என்று பல கிரீடங்கள் சூட்டப்பட்டன. இந்த கிரீடங்கள் அனைத்திலும் கட்டுரையாளர் என்ற கிரீடமே அவர் தலைக்கேற்ற அளவில் பொருத்தமாய்ச் செய்யப்பட்ட சரியான கிரீடமாகும்” என்று குறிப்பிடும் அமுதசுரபி இதழின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள்,

    ”மிக நேர்த்தியான வடிவமைப்பு, பிசிறில்லாத தெளிந்த நடை, திடீரென உரத்த குரலில் பேசாமல் கட்டுரை முழுவதையும் ஒரே தொனியில் பேசச் செய்திடும் ஆற்றல், கடும் உழைப்பைத் தந்து நம்பகமான தகவல்களைத் திரட்டித் தரும் பொறுப்புணர்ச்சி இவையெல்லாம் வல்லிக்கண்ணனுடைய  கட்டுரைகளின் பொதுத்தன்மைகள்” என்று பாராட்டுகின்றார்.

    ஆடம்பரம் என்ற சொல்லையே அறியாதவராய் மிக எளிமையாய் வாழ்ந்து காட்டியவர் வல்லிக்கண்ணன். ”ஒல்லிக்கண்ணன்” என்று அவருடைய எழுத்தாள நண்பர்கள் வேடிக்கையாய்க் குறிப்பிடும் அளவுக்கு மெலிந்த தேகம் படைத்தவர்; ஆனால், அழுத்தமான நெஞ்சுறுதி உடையவர்.

    இலக்கியத்துக்கே தம்மை முழுமையாக அர்ப்பணித்து எழுத்தையும் எழுதுகோலையுமே தெய்வங்களாய்க் கருதிவாழ்ந்த வல்லிக்கண்ணன், 2006-ஆம் ஆண்டு தம்முடைய 85ஆம் அகவையில் நிமோனியா காய்ச்சலால் மறைந்தார்.

    தற்காலக் கவிதை இலக்கியத்தின் வரலாற்றைத் தம் எழுத்துக்களால் நிலைநிறுத்திய வல்லிக்கண்ணனும் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்பார் சிறந்ததோர் தமிழ் ஆளுமையாய்!

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    https://ta.wikipedia.org/wiki/வல்லிக்கண்ணன்
    http://www.geotamil.com/pathivukal/vallikkannan_a.htm
    https://www.hindutamil.in/news/blogs/63933-10-2.html
    http://tamilonline.com/thendral/article.aspx?aid=3121

     

    Share
  • தமிழ் இலக்கணத் தாத்தா! 

    தமிழ் இலக்கணத் தாத்தா! 

    -மேகலா இராமமூர்த்தி

    பழந்தமிழ் ஏடுகளைத் தேடி ஊர் ஊராய் அலைந்து அவற்றைத் திரட்டிப் பதிப்பித்தவரும் தென்னிந்திய கலைச்செல்வரும், தாம் செய்த அரிய தமிழ்ப் பணிகளுக்காகத் ’தமிழ்த் தாத்தா’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான டாக்டர் உ.வே.சா.வைத் தமிழ்கூறு நல்லுலகம் நன்கறியும்.

    ஆனால், தமிழ் இலக்கிய நூல்களைப் பதிப்பதில் ஆர்வங்காட்டிய தமிழ்த் தாத்தாவைப் போலவே தமிழ் இலக்கண நூல்களைப் பதிப்பிப்பதில் ஆர்வங் காட்டி, அவற்றைப் பிழையறப் பதிப்பித்தவரும் தமிழ் இலக்கணத்தில் தேர்ந்த புலமைபெற்று விளங்கியமையால் ’தமிழ் இலக்கணத் தாத்தா’ என அன்று பாராட்டப்பெற்றவருமான மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையை இன்றைய தமிழர் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அத் தமிழ்ச்சான்றோரைத் தமிழர்க்கு மீள் அறிமுகம் செய்துவைத்தல் நலம் என நினைக்கின்றேன்.

    1896ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31ஆம் நாள் மேட்டுப்பாளையம் வீராசாமிப் பிள்ளை, பாக்கியம் அம்மையார் இணையருக்கு மகனாய்ப் பிறந்தவர் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளையவர்கள். இவரின் உடன்பிறப்புக்கள் மொத்தம் ஏழு பேராவர். சொந்த ஊர் சென்னை சைதாப்பேட்டைக்கு மேற்கில் அமைந்திருந்த சிற்றூரான மேட்டுப்பாளையமாக இருந்தபோதிலும், குழந்தைகளின் கல்விக்காகச் சைதாப்பேட்டையில் குடிபுகுந்தார் வேணுகோபாலப் பிள்ளையின் தந்தையார் வீராசாமிப் பிள்ளை.

    வேணுகோபாலருக்கு ஐந்து வயது நிரம்பியதும் அங்கிருந்த ஆசிரியப் பயிற்சிப்பள்ளியைச் சேர்ந்த மாதிரிப் பள்ளியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு ஓராண்டுக் காலம் கல்விபயின்றார் அவர்.

    அப்போது வறுமை மேகம் வேணுகோபாலப் பிள்ளையின் குடும்பத்தைச் சூழவே, மாதிரிப் பள்ளியிலிருந்து விலக்கப்பட்டுத் திண்ணைப் பள்ளிக்கூடமொன்றில் சேர்க்கப்பட்டார்.

    இன்னல்கள் ஒன்றன்பின் ஒன்றாக அக் குடும்பத்தை முற்றுகையிடவே சைதாப்பேட்டையில் தாம் வாழ்ந்துவந்த 40,000 உரூபாய் மதிப்புள்ள வீட்டை 2000 உரூபாய்க்கு விற்றுவிட்டுப் பல்லவபுரத்திற்கு (பல்லாவரம்) குடும்பத்தோடு குடிபெயர்ந்தார் வேணுகோபாலப் பிள்ளையின் தந்தையார். பின்னர் அங்கிருந்து புரசைப்பாக்கத்திற்கு (புரசைவாக்கம்) குடிபெயர்ந்தது அக்குடும்பம். இவ்வாறு தொடர்ந்து வீடு மாறவேண்டிய சூழல் ஏற்பட்டதால் வேணுகோபாலப் பிள்ளையில் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது.

    கல்வியில் ஆர்வமிருந்தும் கற்க இயலாத குடும்பச் சூழலால் வேப்பேரியிலுள்ள அச்சகத்தில் பணியிலமர்ந்தார் வேணுகோபாலப் பிள்ளை. காலை எட்டு மணிமுதல் மாலை 5 மணிவரை அப்பணியில் உழைத்த அவர், அறிஞர்கள் சிலர் இணைந்து நடத்திய இரவுப்பள்ளியில் சேர்ந்து ஓய்வுநேரத்தைக் கல்வி கற்பதில் கழிக்கலானார்.

    வேணுகோபாலப் பிள்ளைக்கு ஆங்கிலம் தமிழ் ஆகியவற்றைப் பயிற்றுவித்த வழக்கறிஞர் டி.என். சேஷாசலம் ஐயரவர்கள், வேணுகோபாலரின் தணியாத தமிழார்வம் கண்டு, தக்கார் ஒருவரிடம் அவர் தனியே தமிழ்பயிலுதல் நன்று என்று அவருக்கு அறிவுறுத்தினார்.

    வேணுகோபாலப் பிள்ளைக்கு ஆங்கிலம் பயிற்றுவித்த ஆசிரியர்களுள் சென்னைக் கல்வித்துறைத் துணை இயக்குநராகப் பணியாற்றிய திரு. வி.ஆர். அரங்கநாத முதலியார், திரு.கே. மாசிலாமணி முதலியார், வழக்கறிஞர் திரு. எம். தாமோதர நாயுடு, திரு. மோகனரங்கம் பிள்ளை ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

    என்ன இது இம் மனிதர்களுக்குப் பின்னால் ஐயர், முதலியார், நாயுடு, பிள்ளை என்று ஒரே சாதிப் பெயர்களாக இருக்கிறதே என்று எண்ணுகிறீர்களா?

    பெயர்களுக்குப் பின்னால் சாதி அடையாளங்கள் இருந்தாலும் பேதம் ஏதுமின்றித் தமிழர்கள் தமிழால் ஒன்றிணைந்திருந்த காலம் அது. இப்போதோ பெயரளவில் சாதியை ஒழித்திருக்கின்றோமே தவிர அது முன்னைக் காட்டிலும் கூர்மையடைந்து பேதங்களையும் சமூகத்தில் அளவற்ற சேதங்களைவும் விளைவித்து வருகின்றது என்பதுதான் நடைமுறை உண்மை.

    வேணுகோபாலப் பிள்ளையின் வரலாற்றுக்குத் திரும்புவோம்!

    சேஷாசலம் ஐயரின் அறிவுரையை ஏற்ற வேணுகோபாலப் பிள்ளை, அந்நாளில் தமிழிலக்கண இலக்கியங்களில் வல்லுநராகவும் நல்லாசிரியராகவும் விளங்கிய சென்னையைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் கோவிந்தராச முதலியாரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை முறைப்படிக் கற்றார்.

    பின்னாளில் தமிழ்ப் பெரும்புலவராக விளங்கிய மங்கலங்கிழார், தமிழ்ப் பேரறிஞர் மதுரை முதலியார், அருச்சுன முதலியார் ஆகியோரும் அப்போது வேணுகோபாலரோடு உடன்பயின்ற மாணாக்கர் ஆவர். இப்பெருமக்களுடன் இறுதிவரை இடையறா நட்பு பூண்டிருந்தார் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை.

    1920ஆம் ஆண்டுமுதல் 1923ஆம் ஆண்டுவரை சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் உதவித் தமிழாசிரியராய்ப் பணியாற்றினார் வேணுகோபாலப் பிள்ளை. அப்போது அவரைச் சந்தித்த புரசைப்பாக்கம் லூத்தரன் மிஷன் பெப்ரீஷியஸ் நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு. எம். ஏ. வேதநாயகம் அவர்கள், தம் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராய்ப் பணியாற்றுமாறு வேணுகோபாலருக்கு வேண்டுகோள் விடுக்கவே, அதனையேற்று அப்பள்ளியில் தமிழாசிரியர் பொறுப்பில் அமர்ந்தார். பின்னர் அப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக வளர்ச்சியடைந்தது.

    அக்காலக்கட்டத்தில், சென்னைப் பல்கலைக்கழகம் நடத்திய வித்துவான் தேர்வில் வெற்றிபெற்றுப் பட்டதாரியானார் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை.

    வேணுகோபாலப் பிள்ளை பணியாற்றிய லூத்தரன் பள்ளியின் மேற்பார்வையாளர்களாக ஜெர்மானியப் பாதிரியார்கள் இருந்தனர். அவர்களுக்குத் தமிழிலும் நல்ல புலமை இருந்தது. அவர்களின் நட்பால் வேணுகோபாலருக்குப் பள்ளியில் இருந்த மதிப்பும் செல்வாக்கும் மேலும் உயர்ந்தன. வேறெந்தப் பள்ளியிலும் தமிழாசிரியருக்கு அத்தகைய செல்வாக்கு கிடைத்திராது எனலாம்.

    ஜெர்மனியிலிருந்து சென்னை வந்த அந்நாட்டு அறிஞர் சிலரும் அவர்தம் மனைவிமாரும் வேணுகோபாலப் பிள்ளையிடம் தமிழ் பயின்றனர். இப்பள்ளியோடு தொடர்புடைய பாதிரியார்களால் சென்னையிலுள்ள கீழ்ப்பாக்கத்தில் குருகுல் கல்லூரி ஒன்றும் நடத்தப்பெற்று வந்தது. அக்கல்லூரியில் கிறித்தவமதத் தொண்டில் ஈடுபடுவதற்குப் பயிற்சிபெறுவோர்க்குச் சைவ வைணவ சமய நூல்கள் சிலவற்றைப் பயிற்றுவிக்கும் ஆசிரியராகவும் வேணுகோபாலர் விளங்கினார். 1938ஆம் ஆண்டு தம் ஆசிரியத் தொழிலைவிட்டு நீங்கினார் அவர்.

    பின்னர், பதிப்புப் பணியிலும் எழுத்துப் பணியிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாணாக்கர்கட்கென்று பல நூல்களை எழுதினார். அந்நூல்களின் வழியே பல்லாயிரக்கணக்கான தமிழ் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அறிமுகமானார் வேணுகோபாலப் பிள்ளை. அவர் எழுதிய நூல்களைப் பல இதழ்களும் மதிப்புரை வழங்கிப் பாராட்டின. அவ்வாறு அவர் எழுதிய நூல்களுள் ஒன்று அரிச்சந்திர புராணச் சுருக்கம் என்பதாகும்.

    உரைநடையில் அமைந்த அந்நூல் குறித்துத் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் 1938ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 8ஆம் நாள் ’நவசக்தி’ இதழில் வெளியிட்ட மதிப்புரையின் ஒரு பகுதி இது…

    ”……தீந்தமிழ்ச் சொற்களாலும் சொற்றொடர்களாலும் அமைந்துள்ள உரைநடையைக் கொண்ட கதைச் சுருக்கம், ஒரு பூங்காவெனப் பொலிகிறது. அதனிடைத் தென்றற் காலும் வீசுகிறது. திரு. வேணுகோபாலர் தமிழில் தமிழூர்தல் வெள்ளிடைமலை. தமிழறிஞர் வேணுகோபாலரின் பிழையற்ற உரைநடை, தற்போது கறைபட்டுள்ள தமிழுலகைத் தூய்மை செய்யும் பெற்றி வாய்ந்ததென்று சுருங்கக் கூறலாம்.”

    தமிழ்நூல்கள் அளவில் சிறியவையாயினும் பெரியவையாயினும் அவை பிழையின்றித் திருத்தமாக வெளிவரவேண்டும் என்பதைத் தம் வாழ்வின் குறிக்கோளாய்க் கொண்டிருந்தார் வேணுகோபாலப் பிள்ளை. பதிப்புத்துறையின் நுட்பங்களையெல்லாம் ஆங்கில நூல்கள் வாயிலாகக் கற்றுத்தேர்ந்த அவர், பதிப்பித்த நூல்களின் விவரம் வருமாறு:

    இறையனார் அகப்பொருளுரை
    தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – நச்சினார்க்கினியர் உரை
    யாப்பருங்கல விருத்தியுரை
    யாப்பருங்கலக் காரிகை
    விசாகப் பெருமாள் தமிழிலக்கணம்
    தஞ்சைவாணன் கோவை – விளக்கக் குறிப்புரை முதலியன.

    வேணுகோபாலப் பிள்ளையைப் பதிப்பாசிரியராகக் கொண்டு பாரி நிலையம் வெளியிட்ட யாப்பருங்கலக் காரிகையின் துணையோடுதான் நமக்கு முந்தைய தலைமுறை யாப்பு பழகியது என்பது கருதத்தக்கது.

    மேற்கண்ட இலக்கண நூல்களேயல்லாமல்,

    அட்டப்பிரபந்தம் – விளக்கக் குறிப்புரை
    நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
    நளவெண்பா
    நீதிநூல்கள்
    பதினெண் சித்தர் ஞானக் கோவை
    விநோத ரச மஞ்சரி

    திருவாய்மொழி ஈட்டு வியாக்கியானம் – 10 பகுதிகள்

    உள்ளிட்ட இலக்கிய நூல்களையும் பதிப்பித்து, பதிப்புத் துறையில் ஆழமாய்க் கால்பதித்த வேணுகோபாலர், சிறந்த சொற்பொழிவாளராகவும் பரிமளித்தார்.

    அவற்றுள் 1931ஆம் ஆண்டு, சென்னை லயோலா கல்லூரியின் மாணவர் தமிழ்க்கழக ஆண்டுவிழாவில் அவர் நிகழ்த்திய சொற்பொழிவும், 1948ஆம் ஆண்டு மன்னார்குடியில் நடைபெற்ற தமிழ்த் திருநாளில் அறிஞர் அண்ணாவுடன் இணைந்து ஆற்றிய சொற்பொழிவும் குறிப்பிடத்தக்கன.

    சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1966ஆம் ஆண்டு ஏப்ரல் 4, 5 தேதிகளில் ’தமிழ் அன்றும் இன்றும்’ எனும் தலைப்பில் வேணுகோபாலப் பிள்ளை ஆற்றிய சொற்பொழிவு நூலாகவும் வெளிவந்துள்ளது.

    தமிழ்நூல்களில் காணப்பெறும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கற்பனைகளை இந்நூலில் நமக்கு அடையாளம் காட்டுகின்றார் வேணுகோபாலப் பிள்ளை. அவ்வகையில், குறுந்தொகையிலுள்ள ’கொங்குதேர் வாழ்க்கை’ எனத் தொடங்கும் பாடலை எழுதியவர் இறையனார் எனும் பெயரிய மானுடப் புலவரேயன்றிக் கண்ணுதற் கடவுளான சிவனார் இல்லை என்று விளக்கும் வேணுகோபாலர், சமண முனிவர்கள், தாம் பாண்டி நாட்டைவிட்டுப் போவதற்குமுன் ஆளுக்கொரு வெண்பாவை எழுதித் தம் ஆசனத்தின்கீழ் வைத்துவிட்டுச் சென்றதாகவும், அவற்றை வையை ஆற்றில் பாண்டிய மன்னன் எறியச் சொல்ல, அவற்றில் எதிரேறி வந்த நானூறு பாடல்களின் தொகுப்பே நாலடி நானூறு என்பதும் பொருந்தாக் கருத்தே என்கிறார்.

    வேணுகோபாலப் பிள்ளையின் சொந்த வாழ்க்கையைப் பற்றிச் சொல்வதானால் ஜானகி அம்மையார் என்ற பெண்மணியை மணந்து மூன்று புதல்வர்களைப் பெற்றார். அப்புதல்வர்களுள் ஒருவர் குழந்தைப் பருவத்திலேயே வருந்தத்தக்க வகையில் இறந்துபோனார்.

    சென்னையில் வசித்துவந்த வேணுகோபாலப்பிள்ளையின் குடும்பம், இரண்டாம் உலகப் போர் காலத்தில் அங்கு ஏற்பட்ட குழப்பங்களால் சென்னையைவிட்டுக் காஞ்சிபுரத்துக்குக் குடிபெயர நேர்ந்தது. அக்காலத்தில் வித்துவான் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த தமிழ் மாணாக்கர் பலருக்கு மாலை நேரங்களில் வகுப்பெடுத்தார் வேணுகோபாலப் பிள்ளை.

    தமிழ்படிக்க விரும்பும் மாணவர்கள் தம் பொருளாதாரச் சூழலால் அவ்வாய்ப்பை இழந்துவிடக் கூடாது எனக் கருதிய அவர், “தாம் பெற்ற தமிழ்க்கல்வி பெறுக இவ்வையகம்” எனும் உயரிய நோக்கோடு மாலை நேரத்தில் இலவசமாகவே மாணவர்களுக்குத் தமிழ் வகுப்புக்களை நடத்தினார். அவரிடம் தமிழ் பயின்ற மாணவர்கள் பலர் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றார்கள்.

    தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களேயன்றிச் செக்கோஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த தமிழறிஞரான கமில் சுவலபில் அவர்களும் வேணுகோபாலப் பிள்ளையிடம் தமிழ்பயின்ற அனுபவம் உடையவராவார். தமிழகச் சித்தர்கள் குறித்து தாம் எழுதிய “The Poets of the Powers” என்னும் நூலில் தம் ஆசிரியர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையின் புகைப்படத்தை வெளியிட்டு “எனது குரு” என்று சுவெலபில் குறிப்பிட்டிருப்பது அவரது நன்றியறிதலையும் வேணுகோபாலப் பிள்ளைபால் அவர் கொண்டிருந்த அளவற்ற அன்பினையும் புலப்படுத்துகின்றது.

    காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சமணரான ஜீவபந்து ஸ்ரீபாலர் என்பவர் வேணுகோபாலப் பிள்ளையிடம் தமிழ்ப் பெருங்காப்பியமான சீவக சிந்தாமணி குறித்துச் சொற்பொழிவாற்ற வேண்டினார். அவ்வேண்டுகோளை ஏற்று ஜைனத் தமிழ்க் கழகத்தின் சார்பில் ஞாயிறுதோறும் சீவக சிந்தாமணிச் சொற்பொழிவை மூன்றாண்டுகள் நிகழ்த்தி முடித்தார் வேணுகோபாலர். இப்பெருந்தொண்டினைப் பாராட்ட விழா எடுத்தனர் ஜைனத் தமிழ்க் கழகத்தார்.

    அவ்விழாவில் சிந்தாமணிச் சொற்பொழிவு நினைவுமலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. வேணுகோபாலப் பிள்ளைக்குப் புத்தாடைகளும் விலைமதிப்பு மிக்க பார்க்கர் பேனாவும் பரிசளிக்கப்பட்டன.

    அந்நினைவு மலருக்கு நன்மொழி எனும் பெயரில் பொன்மொழிக் கட்டுரை ஒன்றை நல்கிய தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள்,

    ”வகுப்பை நடாத்திய மகாவித்துவான்
    மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை அவர்களுக்கு
    என் வாழ்த்து உரியதாகுக! அவரைச்
    சிந்தாமணிச் செல்வர் வேணுகோபாலப் பிள்ளை
    எனத் தமிழ்நாடு இனி வழங்குவதாக!”

    என்று தம் கட்டுரையில் குறிப்பிட்டதை ஏற்று அவரைச் ’சிந்தாமணிச் செல்வர்’ என்று அழைத்து மகிழ்ந்தது தமிழ்கூறு நல்லுலகு.

    அரசு இலக்கண இலக்கியப் பாடநூல்களின் தலைமைப் பதிப்பாசிரியர்; சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி திருத்தக் குழுவின் தலைமைப் பதிப்பாசிரியர்; தமிழகப் புலவர் குழுவின் தலைவர்; அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கம்பராமாயணப் பதிப்புக் குழு உறுப்பினர் எனப் பல பெரும் பொறுப்புகளை ஏற்று, அவற்றைத் திறம்படச் செய்த செயல்வீராகவும் திகழ்ந்தார் வேணுகோபாலப்பிள்ளை.

    காஞ்சியில் நடைபெற்ற அன்னாரின் மணிவிழாவில் தமிழவேள் பி.டி. ராஜன் அவர்கள் மீனாட்சி கருணையைப் பொன்னாடையாகப் போர்த்துகின்றேன் எனக்கூறி வேணுகோபாலப் பிள்ளைக்குப் பொன்னாடை அணிவித்தார். விழாவுக்கு வந்திருந்த தமிழறிஞர்கள் அவரை ’மகா வித்துவான்’ எனப் போற்றினர்.

    காஞ்சி அன்னை தமிழிலக்கிய மன்றத்தினர், அருந்தமிழ் வளர்த்த பெருந்தகையாம் வேணுகோபாலப் பிள்ளைக்கு ’தமிழ் இலக்கணத் தாத்தா’ என்று பட்டமளித்துச் சிறப்பித்தனர். மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தார் அவருக்குப் ‘பேரவைச் செம்மல்’ பட்டம் வழங்கிக் கௌரவித்தனர்.

    1967-இல் சென்னை தொல்காப்பியர் சங்கத்தின் சார்பில் நடந்த விழாவில் வேணுகோபாலப் பிள்ளைக்குச் ‘செந்தமிழ்க் களஞ்சியம்’ என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார், அன்றைய தமிழக முதல்வர் அண்ணா. 

    நற்றமிழ் அறிஞராய், நல்லாசிரியராய், சிறந்த சொற்பொழிவாளராய், தமிழ் இலக்கண இலக்கியங்களில் தேர்ந்த புலமையாளராய் விளங்கி, ஒல்லும் வகையிலெல்லாம் தமிழ்த்தொண்டாற்றித் தமிழன்னையைச் சிறக்கச் செய்த மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையை மறவாது போற்றுவோம்!

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை நூற்றாண்டு விழா மலர் – தமிழ்வளர்ச்சித் துறை வெளியீடு.
    2. https://www.hindutamil.in/news/literature/513791-venugopala-pillai.html

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 38

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 38

    -மேகலா இராமமூர்த்தி

    அசோக வனம் என்றால் சோகமில்லா இன்பத்தை நல்கக்கூடிய சோலை என்று பொருள். ஆனால் அங்குச் சிறையிருந்த செல்வியான சீதையோ அதற்கு நேர்மாறாய்ச் சோகத்தின் மொத்த வடிவினளாய்க் காட்சியளித்தாள்.

    தன் தனிமைத் துயர் எப்போது தீரும், அருமைக் கணவனைச் சேரும்நாள் எப்போது வாய்க்கும் என்று எண்ணியெண்ணி வேதனை நெருப்பில் வெந்துகொண்டிருந்தாள்.  

    ஆழநீர்க் கங்கையில் ஓடம் விட்டுக்கொண்டிருந்த எளிய வேடனான குகனிடத்தில் என் இளவலாகிய இலக்குவன் நினக்குத் தம்பி; நீ என் சோதரன்; என் மனைவி சீதை உனக்குக் கொழுந்தி (மைத்துனி) என்று சொன்ன இராமனின் சகோதர பாசத்தை, தொடர்பற்றவனிடம்கூடக் காட்டிய நேசத்தை எண்ணியவள், தன்பால் அவன் பராமுகமாகயிருப்பது ஏன் என்று நினைந்து கலங்கினாள்.  

    ஆழ நீர்க்கங்கை அம்பி கடாவிய
    ஏழை வேடனுக்கு எம்பி நின் தம்பி நீ
    தோழன் மங்கைகொழுந்தி எனச் சொன்ன
    வாழி நண்பினை உன்னி மயங்குவாள்.
    (கம்ப: காட்சிப் படலம் – 5198)

    ஏதேதோ நினைந்து அலமந்துகொண்டிருந்த சீதையைச் சுற்றிலும் அரக்கியர் பலர் காவலிருந்தனர். அப்போது நள்ளிரவு நேரமாதலால், கொடூரமும் துர்க்குணமுமே இயல்புகளாகக் கொண்டிருந்த அவர்கள் துயிலில் ஆழ்ந்திருந்தனர். அவ் அரக்கியர் கூட்டத்தில் நற்பண்புகள் கொண்டவளும் வீடணனின் மகளுமாகிய திரிசடை மட்டும் நன்மொழிகளைச் சொல்லிச் சீதைக்கு ஆறுதல் அளித்துவந்தாள்.

    அமர்ந்திருந்த சீதையின் இடக்கண் அவ்வேளையில் துடிக்கவே, ”அஃது உணர்த்துவது என்ன?” என்று திரிசடையிடம் கவலையோடு வினவினாள் சீதை. அவளைப் பரிவோடு நோக்கிய திரிசடை, ”இது மங்கலச் சகுனம். நீ உன் கணவனை அடையப் போவது சத்தியம். கவலை நீக்கு!” என்று சீதையைத் தேற்றினாள். தொடர்ந்தவள்…”நீ துயிலுவதே இல்லை; அதனால் உனக்குக் கனவுகள் தோன்றுவதில்லை; நான் துயிலுவதால் குற்றமற்ற கனவுகள் சிலவற்றைக் கண்டேன்; அவற்றைக் கேள்” என்று சொல்லித் தன் கனவுகளை வி(வ)ரித்துரைக்கலானாள்…

    ”குற்றமிலாக் கற்புடையவளே! சிறந்த வேலினை ஏந்தியவனாகிய இராவணன் தன் அழகிய பத்துத் தலைகளிலும் எண்ணெய் பூசிக்கொண்டு சிவந்த ஆடையை அணிந்தவனாய்க் கழுதைகளும் பேய்களும் பூட்டப்பெற்ற, சென்றுசேரும் எல்லையை அறியாத, திண்ணிய தேரிலேறித் தென்திசை அடைவதைக் கண்டேன்” என்றாள் திரிசடை சீதையிடம்.

    எண்ணெய்பொன் முடிதொறும் இழுகி ஈறுஇலாத்
    திண்நெடுங் கழுதைபேய் பூண்ட தேரின்மேல்
    அண்ணல் அவ்இராவணன் அரத்த ஆடையன்
    நண்ணினன் தென்புலம் நவைஇல் கற்பினாய்.
    (கம்ப – காட்சிப் படலம் – 5215)

    கனவில் செவ்வாடை, எண்ணெய்ப் பூச்சு, தேரில் செல்லுதல், தென்
    திசையில் போதல் முதலியன தோன்றுதல் கேட்டுக்கு அறிகுறி என்பது மக்களின் நம்பிக்கை. வால்மீகத்தில் திரிசடை தான்கண்ட கனவுகளை மற்ற அரக்கியரிடம் கூறுவதாய் அமைத்திருப்பார் வால்மீகி. கம்பர், அவள் நேரடியாகச் சீதையிடமே சொல்லுவதாய் அமைத்துள்ளார்.

    இராவணனுக்கும் அவன் நாட்டுக்கும் மனைவியர்க்கும் பல அமங்கலங்கள் நேருவதாய்த் தன் கனவில் தோன்றிய காட்சிகளைச் சீதையிடம் சொன்ன திரிசடை இறுதியாக, நெடுந்தூரம் வெளிச்சம் தரும் ஆயிரம் விளக்குகள் மாட்டிய அடுக்கு தீபமொன்றை ஏந்திய செந்நிறப் பெண்ணொருத்தி, இராவணன் இல்லிலிருந்து நீங்கி வீடணன் இல்லத்தில் நுழைவதைத் தான் கனவில் கண்டுகொண்டிருந்தபோது சீதை தன்னை எழுப்பிவிட்டதாகச் சொல்லவே, அதைக்கேட்ட சீதை, ”சரி நீ மீண்டும் துயில்கொண்டு அக்காட்சியில் தோன்றிய நங்கை யாரெனக் கண்டுபிடி” என்றாள்.

    ஆயிரம் திருவிளக்கு அமைய மாட்டிய
    சேயொளி விளக்கம்ஒன்று ஏந்திச் செய்யவள்
    நாயகன் திருமனை நின்று நண்ணுதல்
    மேயினள் வீடணன் கோயில் மென்சொலாய்.
    (கம்ப – காட்சிப் படலம் – 5227)

    விளக்கோடு பெண்ணொருத்தி இராவணன் மனை நீங்கி வீடணனை அடைகின்றாள் என்ற கனவினுக்கு, இராச்சியலட்சுமி இராவணனை நீங்கி வீடணனுக்குச் சொந்தமாவதாய்ப் பொருள்கொள்ளலாம்.

    நீண்ட நேரமாக நாம் கவனிக்கத் தவறிய அனுமனை மீண்டும் கவனிப்போம். சீதையைத் தேடிக்கொண்டு அசோக வனத்துக்குள் நுழைந்த அவன், இப்போது சீதையின் சமீபத்தை அடைந்திருந்தான். செறிந்து வளர்ந்திருந்த மரங்களுக்குப் பின் மறைந்திருந்து தவக்கோலத்தில் அமர்ந்திருந்த சீதையைக் கண்டான்.

    துயிலில் ஆழ்ந்திருந்த அரக்கியர் அனைவரும் இப்போது துயில்கலைந்து, சூலம் மழு முதலிய ஆயுதங்களைக் கையில் எடுத்துக்கொண்டு அச்சந் தரத்தக்க பயங்கரத் தோற்றத்தோடு சீதையைச் சுற்றி அமர்ந்தனர்.

    சீதையைக் கண்ட மகிழ்வில் உவகைத் தேன் உண்டவனாய், ”அறம் அழியவில்லை; யானும் அழியேன்; இராமன் தேவியைத் தேடிய நான் இதோ கண்டுகொண்டேன் அவளை” என்று மகிழ்ச்சியில் அங்குமிங்கும் துள்ளினான் அனுமன்.  

    அவளின் தூய திருக்கோலம் அவனை வியக்க வைத்தது. மனத் தவம் புரியும் கற்புடை மகளிர்க்கு, உடலை வருத்தித் தவம் செய்யும் முனிவரும் ஒப்பாகார் என்ற முடிவுக்கு வந்தான் அவன்.

    அவ்வேளையில் சீதையிருந்த இடத்துக்கு அரம்பையர் புடைசூழ வந்தான் இராவணன். அவளருகில் வந்துநின்ற அவன், தனக்கு நேரும் பழிகுறித்து அஞ்சாதவனாய், ”மூவுலகத்தாரையும் அரசாளும் கொற்றமுடைய என்னை உன் அடிமையாய் ஏற்றுக்கொண்டு அருள்வாயாக!” என வேண்டித் தன் சிரங்களின்மேல் குவித்த கரத்தினனாய்ப் பூமியில் வீழ்ந்து வணங்கினான் அவளை.

    குடிமை மூன்று உலகும் செயும் கொற்றத்து என்
    அடிமை கோடி அருளுதியால் எனா
    முடியின் மீதுமுகிழ்ந்து உயர் கையினன்
    படியின்மேல் விழுந்தான் பழி பார்க்கலான்.  
    (கம்ப – காட்சிப் படலம் – 5289)

    இராவணனின் செய்கையும் பேச்சுக்களும் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியைக் காதில் நுழைத்ததுபோல் சீதையை வருத்தின. அவனைத் துரும்பென மதித்த அவள், ”கல்லைப்போல் உறுதியான மகளிரின் மனம் கற்பைவிடச் சிறந்ததாய் எதனையும் கொண்டதில்லை. நீ பேசுகின்ற மொழிகள் நற்குடியில் பிறந்த மாதர்க்கு ஏற்புடையன அல்லாத கொடுஞ்சொற்கள். தவறான வழியில் நடக்கும் உன்னை இடித்துத் திருத்தும் நல்லமைச்சர்களை நீ பெறவில்லை; நீ கருதியதற்குத் துணைபோகும் அவர்கள் உன்னை அழிப்பவர்களே!” என்று சினந்து கூறிவிட்டு, இராமனுக்குத் தெரியாமல் தன்னைத் தூக்கிவந்த அவன் ஈனச் செயலை இகழ்ந்துரைத்தாள்.

    அவள் மொழிகளைக் கேட்ட இராவணன் சீற்றத்தின் உச்சிக்குச் சென்று அவளைக் கொல்ல முற்பட்டான். அவள்மீது கொண்ட கழிகாமம் அப்போது கிளர்ந்தெழவே, சீற்றமும் காமமும் ஒன்றையொன்று எதிர்த்துப் போரிடத் தொடங்கின. இரண்டுக்கும் இடையில் சிக்கிக்கொண்ட இராவணன் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனான்.

    இவற்றையெல்லாம் ஒரு மரக்கிளையில் அமர்ந்தபடி கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த அனுமன் கோபம் கொண்டு, இந்த இராவணனின் பத்துத் தலைகளையும் மோதி நொறுக்கி, இலங்கையைக் கடலில் அமிழ்த்திவிட்டுத் தேவியை நானே மகிழ்வோடு சுமந்துசென்று இராமனிடம் சேர்ப்பேன் என்று சிந்தித்தவனாய்த் தன் கரங்களைப் பிசைந்தபடி அதற்கேற்ற தக்க தருணத்தை எதிர்நோக்கியிருந்தான்.

    தனியன் நின்றனன் தலைபத்தும் கடிதுஉகத் தாக்கி
    பனியின் வேலையில் இலங்கையைக் கீழ்உறப்
     பாய்ச்சிப்
    புனித மாதவத்து அணங்கினைச் சுமந்தனென் போவென்
    இனிதின் என்பது நினைந்துதன் கரம்பிசைந் திருந்தான்.  (
    கம்ப – காட்சிப் படலம் – 5315)

    சினந்தணிந்த இராவணன் மீண்டும் சீதையிடம் ஏதேதோ பொருத்தமில்லா வார்த்தைகளைப் பேசிவிட்டு, அருகிருந்த அரக்கியரைப் பார்த்து, ”வெவ்வேறு உபாயங்களைக் கையாண்டு சீதையை எனக்கு வசப்படுமாறு செய்யுங்கள்; இல்லையேல் உம் உயிருக்கு நான் நஞ்சாவேன்!” என்று எச்சரித்துவிட்டு அங்கிருந்து அகன்றான்.

    தன்னால் முடியாததைத் தன்னிடம் பணிசெய்யும் அரக்கியர் முடிப்பர் என்று கருதியமை இராவணனின் அறியாமையைப் புலப்படுத்துவதாய் உள்ளது. ஆசை, அறிவை அழித்துவிடும் என்பதை இதன்மூலம் நாம் அறியமுடிகின்றது.

    இராவணன் மொழிகளைக் கேட்ட அரக்கியர் அஞ்சி வஞ்சியாம் சீதையை மிரட்டத் தொடங்கவே, அவள் கலக்கமுற்றாள். அப்போது திரிசடை சீதையைப் பார்த்து, ”அம்மா! நான் கண்ட கனவுகளைத்தான் உன்னிடம் சொன்னேனே! நீ அஞ்சத் தேவையில்லை இனி!” என்று அவளைத் தேற்றிவிட்டு அக்கனவுகள் குறித்து அரக்கியரிடமும் கூறி இராவணனின் அழிவுக்காலம் நெருங்கிவிட்டது என்பதை விளக்கவே, அவ் அரக்கியர் சீதையை அச்சுறுத்துவதை நிறுத்திவிட்டு அமைதியாயினர்.

    தான் சீதையிடம் தனித்துப் பேச அதுவே சரியான நேரம் என்று கணித்த அனுமன், ஒரு மந்திர வித்தை செய்து விழித்திருந்த அரக்கியரை மீண்டும் துயிலில் ஆழ்த்தினான். எளிதில் துஞ்சாத அரக்கியர் துஞ்சுதல் கண்டாள் சீதை. அவளின் ஆற்றொணாத் துயரம் தனிமையில் அதிகரித்தது. நீண்ட இரவும் கதிர்போல் காயும் மதியும் அவளை வாட்டின.

    ”இராமனைக் காணவேண்டும் எனும் விருப்பத்தில்தான் இவ்வளவு நாட்களும் பொறுமையோடிருந்து என் உயிரைப் போற்றினேன். எனினும், அரக்கர் நகரில் நெடுநாள் சிறையிருந்த என்னைப் புனிதனான இராமன் ஏற்றுக்கொள்வானா?” என்று தனக்குள் வினவிக்கொண்ட சீதை, மாசுற்ற நான் இருத்தலினும் இறத்தலே அறம் என்று எண்ணியவளாய் அங்கிருந்து எழுந்து அருகிலிருந்த குருக்கத்தி (மாதவி) சோலையை அடைந்தாள். அங்குள்ள கொடி ஒன்றை எடுத்துத் தன் கழுத்தை இறுக்கி அவள் சுருக்குப் போட்டுக்கொள்ள முயன்றாள். [வால்மீகி இராமாயணத்தில் சீதை தன் சடையால் கழுத்தை இறுக்கித் தற்கொலை செய்ய முயன்றதாகப் பேசப்பெறும்].

    அதுகண்ட அனுமன், சீதையின் உட்கிடையை உணர்ந்து துணுக்கமுற்றான். அவள் திருமேனியைத் தீண்டி அத் தற்கொலை முயற்சியிலிருந்து அவளை விலக்க அவனுக்கு அச்சமாக இருந்ததனால், ”தேவர்கள் தலைவனான இராமபிரானின் அருள்பெற்ற தூதன் நான்” என்று கூறித் தொழுதபடியே, மரத்திலிருந்து குதித்து, மயிலனைய சீதைமுன் தோன்றினான்.

    கண்டனன் அனுமனும் கருத்தும் எண்ணினான்
    கொண்டனன் துணுக்கம்மெய் தீண்டக் கூசுவான்
    அண்டர் நாயகன் அருள் தூதன்யான் எனா
    தொண்டைவாய் மயிலினைத் தொழுது
     தோன்றினான். (கம்ப: உருக்காட்டு படலம் – 5357)

    தன்னை ஐயத்தோடு நோக்கிய சீதையிடம், ”தாயே! இராமனின் ஆணைப்படி உம்மைத் தேடிக் கண்டுபிடிக்கப் புறப்பட்டோர் பலர். அவர்களுள் உம்மைச் சந்திக்கும் பாக்கியம் பெற்றவனானேன் நான். அம்மையே…நான் இராமதூதன்தான்! என்னை ஐயுறாதீர்! உம்மிடம் காட்டுதற்கு இராமன் தந்த அடையாளப் பொருள் உளது; அப்பெருமான் சொல்லியனுப்பிய செய்திகளும் உள” என்றான்.

    அவனுடைய பணிவான தோற்றத்தையும் பக்குவமான மொழிகளையும் கண்ட பிராட்டி, இவன் தன்னை ஏமாற்றும் நோக்கத்தோடு மாய வடிவெடுத்து வந்த அரக்கன் அல்லன் எனத் தெளிந்து, ”வீரனே நீ யார்?” என்று வினவினாள்.

    தான் அஞ்சனை மைந்தன் அனுமன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவன், தன்னுடைய வரலாற்றையும், இராமனுக்கும் கிட்கிந்தையிலுள்ள சுக்கிரீவனுக்கும் நட்பு ஏற்பட்ட வரலாற்றையும், சீதையைத் தேடி நாலாபுறமும் வானர சேனைகள் சென்றிருப்பதனையும், சுக்கிரீவனின் வழிகாட்டுதலின்பேரில் தென்திசையில் தேடிவந்த குழுவில் தான் இடம்பெற்றதையும், வாலி மைந்தன் அங்கதன் தன்னை இலங்கைக்கு அனுப்பியதையும் எடுத்துரைத்தான்.

    அனுமன் சொன்ன செய்திகளைச் செவிமடுத்த சீதை, ”இராமனின் அங்க அடையாளங்களை உன்னால் உரைக்க முடியுமா?” என்று கேட்கவே, இராமனின் திருமேனியழகை அடிமுதல் முடியீறாய் வருணித்த அனுமன், இராமன் சீதையிடம் காட்டச்சொல்லிக் கொடுத்த அவன் பெயர் பொறித்த திருவாழியை (மோதிரம்) நீட்டினான்.

    அதைக் கண்ணுற்ற சீதை, உடலைவிட்டு நீங்கிய உயிர் மீண்டும் அதனை அடைந்ததுபோல் இன்பக் கடலில் மிதந்தாள்; மணியிழந்த நாகம் மீண்டும் அதனைப் பெற்றதுபோல் மகிழ்ச்சியுற்றாள். உவகைக் கலுழ்ச்சியால் மலர்விழிகள் கண்ணீர் முத்துக்களைச் சொரிய, அனுமனை நன்றியோடு நோக்கியவள்,

    ”மூங்கில்போன்ற தோளையுடைய வீரனே! துணையில்லாத என் துன்பத்தைப் போக்கிய வள்ளலே…நீ வாழ்க! நான் களங்கமற்ற மனமுடையவள் என்பது உண்மையானால், ஒரு யுகத்தை ஒருபகலாய்க் கருதும், பதினான்கு உலகங்களும் அழியும் பிரளய காலத்தும் நீ அழியாது இருப்பாயாக!” என்று அவனை வாழ்த்தினாள்.

    பாழிய பணைத்தோள் வீர துணைஇலேன் பரிவு தீர்த்த
    வாழிய வள்ளலேயான் மறுஇலா மனத்தேன்
     என்னின்
    ஊழிஓர் பகலாய்ஓதும் யாண்டுஎலாம் உலகம் ஏழும்
    ஏழும் வீவுற்றஞான்றும் இன்றுஎன இருத்தி என்றாள்.
    (கம்ப – உருக்காட்டு படலம் – 5407)

    உணர்ச்சிவயப்பட்ட நிலையில் மானுட வேடம் கலைந்து தெய்வ ஆவேசம் உற்றவளாய்ச் சீதை வழங்கிய வரமாய் இது திகழ்கின்றது.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • இந்தியாவின் ஏவுகணை நாயகன்

    இந்தியாவின் ஏவுகணை நாயகன்

    -மேகலா இராமமூர்த்தி

    ஆர்ப்பரிக்கும் இயல்புகொண்ட கடலும் அமைதியாய்த் தவழும் அதிசயபுரியாம் இராமேசுவரத்தில், எளிய இசுலாமியக் குடும்பத்தைச் சேர்ந்த ஜைனுலாப்தீன் ஆஷியம்மா இணையருக்கு  மகனாய் அக்டோபர் 15, 1931இல் பிறந்தவர் அவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம் (Avul Pakir Jainulabdeen Abdul Kalam) எனும் இயற்பெயர்கொண்ட  ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்கள்.

    இராமேசுவரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தமது பள்ளிப்படிப்பைத் தொடங்கிய அவர் குடும்பத்தின் வறிய சூழல் காரணமாய்ப் பள்ளி நேரம் தவிர்த்த பிறநேரங்களில் செய்தித்தாள் விநியோகிக்கும் பணியையும் மேற்கொண்டுவந்தார்.

    பள்ளிக் கல்விக்குப் பின் திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரியில் (St. Joseph’s College) சேர்ந்து 1954ஆம் ஆண்டு இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். எனினும் இயற்பியல் துறையில் அவருக்கு அதிக நாட்டமிருக்கவில்லை. பின்பு 1955இல் சென்னையிலுள்ள எம்.ஐ.டியில் விண்வெளிப் பொறியியல் (aerospace engineering) படிப்பில் சேர்ந்தார்; 1960இல் அத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்று, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான DRDOவில் (The Defense Research and Development Organisation) வானூர்தியில் மேம்பாடு செய்யும் (Aeronautical Development Establishment) பிரிவில் முதன்மை அறிவியலாளராய்ப் பணியில் சேர்ந்தார். இந்திய இராணுவத்துக்காகச் சிறிய ஹெலிகாப்டர் வகையைச் சேர்ந்த கவிகை ஊர்தியை (hovercraft) அப்போது வடிவமைத்துக் கொடுத்து தம் பணியைத் தொடங்கினார் கலாம் .

    புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளரான டாக்டர் விக்ரம் சாராபாய் (Dr. Vikram Ambalal Sarabhai) தலைமையின் கீழ், கேரளாவில் உருவாக்கப்பட்ட இராக்கெட் ஏவு மையத்தில் (Equatorial Rocket Launching Station) விண்வெளி ஆய்வுக்காக அமைக்கப்பட்ட இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிக் குழுவிலும் (INCOSPAR) உறுப்பினராய்க் கலாம் இருந்தார்.

    1963இலிருந்து 1971 வரையிலான அந்தக் காலக்கட்டத்தில் டாக்டர் சாராபாயோடு தாம் பணிபுரிந்த காலத்தை ஓர் அற்புதமான அனுபவம் என்று குறிப்பிடும் கலாம், அது குறித்து விவரிக்கும்போது…

    ”திருவனந்தபுரம் விண்வெளி மையத்தில் ஓர் இளம் பொறியாளராகக் கலவைப் பொருட்கள் தொழில்நுட்பம் (composite technology), வெடிபொருள்களை உருவாக்கும் முறைகள் (explosive systems), இராக்கெட் தொழில்நுட்ப முறைகள் (rocket engineering systems) என்று எனக்கான பணி இலக்குகளில் ஈடுபட்டிருந்த நான், டாக்டர் விக்ரம் சாராபாயிடமிருந்து அபாரமான ஆற்றலை உள்வாங்கிக்கொண்டேன். தொழில்நுட்பக் களத்தில் பிஞ்சுக்குழந்தையாக இந்தியா தத்தித் தவழ்ந்துகொண்டிருந்த அச்சமயத்தில், சொந்தமாகவே செயற்கைக்கோள் ஏவுகலங்களை (rockets) தயாரிப்பது பற்றிக் கனவுகண்டவர் டாக்டர் விக்ரம் சாராபாய். அந்த அளவுக்கு இந்திய அறிவியல் சமுதாயத்தின்மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது” என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிடுகின்றார்.

    1969ஆம் ஆண்டு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (ISRO) மாற்றப்பட்ட கலாம், அங்கு இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் செலுத்தி வாகனம் (SLV-3) திட்டத்தின் இயக்குநர் ஆனார். இந்த வாகனம், உரோகிணி செயற்கைக்கோளைப் புவிச்சுற்றின் அருகே 1980ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெற்றிகரமாய் ஏவியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் கலாம் பணிபுரிந்த காலத்தில் அவர் நிகழ்த்திய மிகப்பெரிய சாதனையாக இது கருதப்பட்டது.

    அவருடைய இந்தச் சாதனையைப் பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷண் விருதினை 1981இல் அளித்துப் பெருமைப்படுத்தியது.

    1974இல் மேற்கொள்ளப்பட்ட இந்தியாவின் முதல்அணு ஆயுதச் சோதனையான புன்னகைக்கும் புத்தர் (Smiling Buddha) திட்டத்தைக் காண்பதற்காக ராஜா ராமண்ணா எனும் இயற்பியல் அறிஞரால் DRDOவின் பிரதிநிதியாக அழைக்கப்பட்டார் கலாம்.

    அக்னி ஏவுகணை, கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையான ப்ரித்வி போன்றவற்றை உருவாக்கும் திட்டங்களில் அப்துல் கலாம் தலைமைப் பங்கு வகித்தார்.  அதனால் ‘இந்திய ஏவுகணையின் தந்தை’ என்ற சிறப்பை அவர் பெற்றார். எனினும் இவற்றுக்கான பொருட்செலவு, காலவிரயம் குறித்து  அப்போது சில விமர்சனங்களும் எழவே செய்தன.

    1990ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருதையும் இந்திய அரசு அவருக்கு வழங்கிக் கௌரவித்தது.

    1992ஆம் ஆண்டு ஜூலை முதல் 1999ஆம் ஆண்டு டிசம்பர் வரை பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான DRDOவின் செயலாளராகவும் திகழ்ந்தார் அப்துல் கலாம். 1998 மே மாதத்தில் நிகழ்ந்த பொக்ரான் (Pokhran-II) அணுகுண்டுச் சோதனைகளில் அரசியல் ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் கலாமின் பங்களிப்பு இருந்தது. அதன் முதன்மைத் திட்ட ஒருங்கிணைப்பாளராக இயற்பியல் அறிஞர் ஆர். சிதம்பரத்தோடு இணைந்து பணியாற்றினார் அவர். நாட்டின் உயர்மட்ட அணு அறிவியலாளராக ஊடகங்களால் அப்போது அடையாளப்படுத்தப்பட்டார் டாக்டர் கலாம். எனினும் அந்தத் திட்டத்தின்மீதும் சில விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அவற்றைக் கலாமும், சிதம்பரமும் திட்டவட்டமாக மறுத்தனர்.

    1998ஆம் ஆண்டு இதயவியல் நிபுணர் சோம ராஜு (B. Somaraju) என்பவரோடு இணைந்து இதய இரத்தக் குழாய்களில் பொருத்துவதற்கான கொரோனரி ஸ்டெண்ட் ஒன்றைக் கலாம் உருவாக்கினார். அது கலாம்-ராஜு ஸ்டெண்ட் (Kalam-Raju Stent) என்று அழைக்கப்பட்டது. இவ்விருவரும் இணைந்து 2012ஆம் ஆண்டு, காலநிலை மாறுபாடுகளால் பழுதடையாத கைக்கணினி (tablet) ஒன்றைக் கிராமப்புறங்களின் மருத்துவப் பயன்பாட்டுக்காக உருவாக்கினர்; அதன்பெயர் கலாம்-ராஜு கைக்கணினி (Kalam-Raju Tablet) என்பதாகும்.

    2002ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11ஆவது குடியரசு தலைவராக 2002 ஜூலை 25ஆம் நாள் பதவியேற்றார் கலாம்.

    திரு. ஆர். வெங்கட்ராமனுக்குப் பிறகுத் தமிழர் ஒருவர் குடியரசுத் தலைவர் ஆகிறார் என்ற வகையில் தமிழர்களுக்கு அது பெருமிதத்தைத் தந்தது.

    அதற்கு முன்னதாகவே கலாம் அவர்கள் மத்திய அரசால் பாரத் ரத்னா விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டிருந்தார். சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், ஜாகிர் ஹுசைன் எனும் இரு இந்தியக் குடியரசுத் தலைவர்களைத் தொடர்ந்து, இந்தியாவின் மிக உயரிய விருதான ’பாரத் ரத்னா’ விருதை வென்ற மூன்றாவது குடியரசுத் தலைவர் கலாமே ஆவார். அத்தோடு, குடியரசுத் தலைவர் பதவியை ஏற்ற முதல் அறிவியலாளர் எனும் பெருமையும் அவரையே சாரும். 2007ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகள் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த கலாமை “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவரும் அன்போடு அழைத்தனர்.

    2007ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு சில காரணங்களால் அந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பாமல் விலகினார். ஆனால் அதன் பின்னரும் கல்விசார்ந்த தம் பணிகளுக்கு அவர் ஓய்வளிக்கவில்லை.

    ஷில்லாங்க், அகமதாபாத், இந்தோர் ஆகிய இடங்களிலுள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் (Indian Institute of Management) வருகைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். திருவனந்தபுரத்திலுள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேந்தராகவும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் விண்வெளிப் பொறியியல்துறைப் பேராசிரியராகவும், மேலும் பல கல்விக்கழகங்களில் சிறப்புநிலைப் பேராசிரியராகவும் பணிபுரிந்த பெருமைக்குரியவர் டாக்டர் கலாம்.

    இவ்வாறு இந்திய இளைஞர்களோடு தொடர்ச்சியாக உரையாடுவது, அவர்களுக்குப் பாடம் நடத்துவது போன்றவற்றில் இறுதிவரை தணியாத தாகமும் விருப்பமும் கொண்டவராகவே விளங்கினார் அவர்.

    ‘அக்கினிச் சிறகுகள்’ என்ற பெயரில் தமிழிலும், Wings of Fire என்ற பெயரில் ஆங்கிலத்திலும் வெளியான அவருடைய தன்வரலாற்று நூலானது (Autobiography) இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை அளிக்கும் நூலாக இன்றும் விளங்கிவருகின்றது. இவையல்லாமல் இந்தியா 2020, எழுச்சி தீபங்கள், எனது வானின் ஞானச் சுடர்கள், ஊக்கமூட்டும் யோசனைகள் போன்ற பல நூல்களைப் படைத்துள்ளார் கலாம்.

    இளைஞர்களே எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள். அவர்கள், ஜே.ஆர்.டி. டாட்டா, விக்ரம் சாராபாய், சதீஷ் தவான் போன்றோரை ஒத்த அறிவாற்றலும், தொலைநோக்குச் சிந்தனையும் கொண்டோராய் இருத்தல் அவசியம் என்று தம்முடைய ‘எழுச்சி தீபங்கள்’ என்ற நூலில் குறிப்பிடும் கலாம், தொழில்நுட்பத்தில் நாம் தொலைநோக்கோடு முன்னேறுகின்ற அதேவேளையில், நம் ஆன்மிக முன்னேற்றத்தையும் விட்டுவிடலாகாது என்று அழுத்தமாகக் கூறுவது ஆன்மிகத்தையும் அறிவியலையும் பிரித்து எண்ணாமல் இரண்டையும் தம் வாழ்வின் இரு கண்களாக அவர் கருதியமையை நமக்குப் புலப்படுத்துகின்றது.

    இந்தியா 2020 என்ற நூலில் இந்தியா அறிவிலே வல்லரசு நாடாகவும், வளர்ந்த நாடாகவும், 2020ஆம் ஆண்டிற்குள் மாறுவதற்குரிய மாதிரித் திட்டத்தை அவர் தெரிவித்திருந்தார்.

    வாழ்வில் உயர இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டியது மிக அவசியம் என அப்துல் கலாம் வலியுறுத்தினார். மைசூரில் நடந்த விழாவொன்றில் அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வோர் இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவப் பயிற்சி அளிக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களுக்கு ஒழுக்கம் ஒரு பாடமாக இல்லாமல், வாழ்க்கை முறையாகவே மாறும்” என்று குறிப்பிட்டார்.

    அப்துல் கலாம் அவர்களின் பேச்சிலும் எழுத்திலும் மிளிர்ந்த அனுபவம் செறிந்த பொன்மொழிகள் பல. அவை இன்றைய இளைஞர்களும் அறிந்து பயன்கொள்ளத் தக்கவை.

    சான்றுகளாகச் சில…

    • கனவென்பது நம் உறக்கத்தில் வருவதன்று; நம்மை உறங்கவிடாமல் செய்வது!
    • யாருக்காகவும் உங்களுடைய தனித்தன்மையை மாற்றிக்கொள்ளாதீர்கள்; ஏனெனில், இவ்வுலகிற்கான உங்கள் பங்களிப்பை உங்களைவிடவும் திறம்பட வேறுயாரும் செய்துவிடமுடியாது.
    • உங்கள் கைரேகையைப் பார்த்து உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்காதீர்கள்! ஏனென்றால் கையே இல்லாதவனுக்குக் கூட எதிர்காலம் உண்டு.

    அனைவருக்கும் பிடித்த அவரின் பொன்மொழி ஒன்று இருக்கிறது, அதுதான்…“உன் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்; ஆனால் உன் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும்” என்பது.

    தம் வாழ்க்கையில் திருமணமே செய்துகொள்ளாமல் மிகுந்த கட்டுப்பாட்டோடு வாழ்ந்த கலாம் அவர்கள், சாதி மதம் இனம் மொழி போன்ற வேறுபாடுகளையெல்லாம் கடந்த உன்னத மனிதராய்த் திகழ்ந்தார். இராமாயணம் பைபிள் பகவத்கீதை குரான் என்று அனைத்து நூல்களையும் மதக் காழ்ப்பின்றிப் படித்துப் பின்பற்றும் பக்குவம் அவரிடமிருந்தது.

    மென்மையான மனமும் மேன்மையான குணங்களும் கொண்டிருந்த அவருக்கு நுண்கலைகளிலும் நல்ல ஈடுபாடிருந்தது. வீணை இசைப்பதிலும் அவர் தேர்ச்சிபெற்றிருந்தார்.

    2015ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் நாள் மேகாலயா மாநிலத் தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (IIM) மாணவர்களிடையே அவர் ஆர்வத்தோடு உரையாற்றிக் கொண்டிருந்த மாலை வேளையில் திடீரென்று மயங்கிவிழுந்தார். அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானார்.

    கலாம் அவர்களின் பிறந்தநாளான அக்டோபர் 15, இளைஞர்களின் எழுச்சி நாளாகத் தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும்; அதற்கு வலுவூட்டும் வகையில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது’ ஒவ்வோராண்டும் சுதந்தர தினத்தன்று வழங்கப்படும் என்று 2015ஆம் ஆண்டு அறிவித்தார் அப்போதைய தமிழக முதல்வரான ஜெ. ஜெயலலிதா அவர்கள்.

    அப்துல் கலாம் குறிப்பிட்டதுபோல அவர் பிறப்பு ஒரு சம்பவமாக இருந்தபோதிலும் இறக்கும்போது ஒருசரித்திர நாயகனாகத்தான் அவர் இறந்தார்.

    எளிய குடும்பத்தில் பிறந்து, அறிவியல் கல்வியால் சிறந்து, ஏவுகணை நாயகனாய் உயர்ந்து, குடியரசுத் தலைவராய்ச் சிகரம் தொட்டவர் டாக்டர் அப்துல் கலாம். அவருடைய அறிவுரைகளையும் வாழ்வியல் முறைகளையும் அறிந்து பின்பற்றினால் நாமும் நம் வாழ்வில் வெற்றிச் சிகரத்தை எட்டிப் பிடிக்கலாம்.

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. https://en.wikipedia.org/wiki/A._P._J._Abdul_Kalam
    2. https://ta.wikipedia.org/wiki/ஆ._ப._ஜெ._அப்துல்_கலாம்
    3. http://www.abdulkalam.com/kalam/theme/jsp/oath/oath.jsp

     

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 37

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 37

    -மேகலா இராமமூர்த்தி

    கும்பகருணன் இல்லத்தில் நுழைந்த அனுமன் அவனை இராவணனோ என்று ஐயுற்றுப் பின்னர் இவனுக்குத் தலை ஒருபதும் புயங்கள் இருபதும் இன்மையின் இவன் இராவணன் அல்லன் எனத்தெளிந்து தேடுதலைத் தொடர்ந்தான். அடுத்து அவன் நுழைந்தது வீடணனின் இல்லத்தில்.

    உறங்கும் வீடணனைக் காண்கின்றான் அனுமன். அவ் இல்லத்தின் எண்ண அதிர்வுகளும் அலைகளும் அங்கு உறைபவன் நல்லவன்; அறத்தின்வழிப் பட்டவன் எனும் உணர்வை அனுமனுக்குள் ஏற்படுத்துகின்றன.

    கருநிற அரக்கர்கள் நடுவில் வெண்ணிறங்கொண்டு வெளிப்படையாக வாழ்தல் கடினம் என்பதனால் அவர்களின் கருநிற வடிவத்தை அடைந்து, பவளத்தால் செய்யப்பட்ட கூடத்தில் பசுந்தேன் சிதறுகின்ற கற்பகப் பந்தலின்கீழ் பளிங்கால் அமைந்த மேடையில் மறைந்து வாழுகின்ற தருமம் போன்ற வீடணனை உற்றுநோக்கினான் அனுமன்.

    பளிக்கு வேதிகைப் பவளத்தின் கூடத்துப் பசுந்தேன்
    துளிக்கும் கற்பகப் பந்தரில் கருநிறத் தோர்பால்
    வெளித்து வைகுதல்அரிதுஎன அவர்உரு மேவி
    ஒளித்துவாழ்கின்ற தருமம் அன்னான்தனை உற்றான்.
    (கம்ப: ஊர்தேடு படலம் – 5077)

    அனுமன் வீடணனை அருகில்சென்று கண்டபோது, அவன் குற்றமற்ற நல்மனத்தினன்; உயர் குணத்தினன் எனும் உணர்வடைந்தான். ‘கள்ளி வயிற்றில் அகில் பிறப்பதுபோல’த் தீமையே நிறைந்துள்ள இலங்கையில் இப்படி ஓர் உயர்ந்தவனா என வியந்தபடி அங்கிருந்து அகன்றான்.

    பல்வேறு மாளிகைகளைக் கடந்த அனுமன், ஆயுதம் ஏந்திய தடக்கையர், தம் பற்கள் வெளிப்பட மூதுரைகளையும் விடுகதைகளையும் பேசிக் கொண்டிருப்பவர்கள், வலிமையோடு காவல் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் எனப் பலரையும் தாண்டிச்சென்று இந்திரனைச் சிறைவைத்தவனான இந்திரசித்தனின் அரண்மனைக்குள் நுழைந்தான்.

    ஆங்கே அழகிய மகளிர் குழாத்திடை உறங்கிக் கொண்டிருக்கின்ற இந்திரசித்தனைக் கண்டான்.

    அவனுடைய தோற்றத்தைக் கண்ட அஞ்சனை மைந்தன், குகையில் உறங்கும் கொடுஞ்சிங்கம் போன்ற இவன், வளைந்த ஒளிமிகு பற்களையுடைய அரக்கனோ? மழுப்படை ஏந்திய சிவனின் மகனான முருகனோ? எவனோ என அறியாதிருக்கின்றேன். இளைய வீரனான இலக்குவனும் அடைக்கலமென வந்தோரை ஏந்திக் காக்கும் இராமபிரானும் மன உளைச்சல் அடையும்படி இவ்வீரனோடு நெடுநாள் போர் நிகழப் போகின்றது என உய்த்துணர்ந்தான்.

    வளையும் வாள்எயிற்று அரக்கனோ கணிச்சியான் மகனோ
    அளையில் வாள்அரி அனையவன் யாவனோ அறியேன்
    இளைய வீரனும் ஏந்தலும் இருவரும் பலநாள்
    உளைய உள்ளபோர் இவனொடும் உளது என உணர்ந்தான்.
    (கம்ப: ஊர்தேடு படலம் – 5082)

    இவனைத் துணையாகக் கொண்ட இராவணன் மூவுலகங்களையும் வென்றது அருஞ்செயல் இல்லை என்று எண்ணியவாறே அவ்விடம்விட்டு நீங்கினான்.

    அடுத்து இராவணனின் காதற் கிழத்தியர் இல்லங்களிலெல்லாம் நுழைந்து தேடிக்கொண்டு சென்ற அனுமன், அவன் பட்டத்தரசியான மண்டோதரியின் மனையை அடைந்தான். மற்ற மாளிகைகளினும் அழகினும் சிறப்பினும் மேம்பட்டு அது திகழ்வதைக் கண்டு சீதாப் பிராட்டியை இராவணன் சிறை வைத்திருக்கும் மாளிகை இதுவோ என்று சிந்தித்தான்.

    அரம்பையும் உருப்பசியும் ஏனைய தேவமாதரும் மண்டோதரியின் தளிர்புரை பாதங்களை வருடிவிட, அவள் துயில்கொண்டிருக்கும் நிலையை மறைந்திருந்து கண்டான் அனுமன்.

    எரிகின்ற மாணிக்க விளக்குகளின் ஒளியைக் குன்றச் செய்யும் பேரொளியோடும் எழிலோடும் திகழ்ந்த மண்டோதரியின் தோற்றத்தைக் கண்ணுற்றதும் அவள் சீதாப் பிராட்டியோ எனும் ஐயம் அனுமனுக்கு ஏற்பட்டுவிட்டது. அந்த எண்ணத் தீயானது அவன் உடலை வாட்டியது.

    அத்துன்பத்தைத் தாளமாட்டாத அனுமன், எலும்புகளால் கட்டப்பட்ட சிறந்த உடம்பினால் பெறும் பயனை இவள் இழந்துவிட்டாள்; இது கிடக்கட்டும்! இங்கே துயிலும் பெண், அன்பாகிய பிணிப்பைக் குடிப்பிறப்போடு சேர்த்து நீக்கித் தனக்குரிய தெய்வக் கற்பு நீங்கிய சீதை என்பது மட்டும் உறுதியானால், இராமனின் புகழும் பொலிவும், நானும், இந்த இலங்கை மாநகரும், இங்குள்ள இராக்கதர்களும் இன்றைய நாளில் அழிவோம் என்று கருதி வருந்தலானான்.

    எற்புவான் தொடர் யாக்கையால் பெறும்பயன்
         இழந்தனள் இதுநிற்க
    அற்பு வான்தளை இற்பிறப்பு அதனொடும்
         இகந்துதன்அருந் தெய்வக்
    கற்பு நீங்கிய கனங்குழை இவள்எனின்
         காகுத்தன் புகழோடும்
    பொற்பும் யானும்இவ் இலங்கையும் அரக்கரும்
         பொன்றுதும்இன்று என்றான். (கம்ப: ஊர்தேடு படலம் – 5141)

    கும்பன், வீடணன், இந்திரசித்தன் ஆகியோரைக் கண்ட மாத்திரத்தில் அவர்களின் அங்க அடையாளங்களையும் அவ் இல்லங்களின் இயல்பையும் வைத்தே அவர்களைத் துல்லியமாய் எடைபோட்ட அனுமன் மண்டோதரியைக் கண்டதும் இவள் சீதையோ என்று ஐயுற்றது ஏன்? அத்தகைய குழப்பம் அவனுக்கு நேர்ந்தது எப்படி என்று சிந்தித்தால் அதற்கு நாம் இராமனைத்தான், ஒருவகையில், பொறுப்பாளியாக்க முடியும்.

    ஏனெனில், அவன் தன் மனைவியின் அழகை அனுமனிடம் அடையாளத்தின் பொருட்டுப் பாதாதிகேசம் வருணித்திருந்தபடியால் அவளையொத்த அங்க அழகுகள் பொருந்திய ஒருத்தியைக் கண்டதும் அவள் சீதைதானோ என்ற ஐயம் அனுமனுக்கு ஏற்படுவது இயல்புதானே?

    எனினும் அவ் ஐயம் அனுமனுக்கு நெடுநேரம் நீடிக்கவில்லை. சில கணங்களிலேயே சிந்தை தெளிந்தவனாய், இவள் சீதையையாய் இருக்க வாய்ப்பில்லை. இவளின் உடலில் சில நல்ல இலக்கணங்கள் உளவெனினும் இவள் மானுடப் பெண்ணினும் சற்று மாறுபட்டவளாய்க் காட்சியளிக்கின்றாள். இவள் உடலின் அடையாளம் இவளுக்கு விரைவில் எல்லையில்லாத் துன்பம் வரப்போகின்றது என்பதை அறிவிப்பதாய் இருக்கின்றது என்றெண்ணினான்.

    தான் கண்டவள் சீதையில்லை என்ற மனத் தெளிவினால் ஏற்பட்ட மகிழ்ச்சியோடு மண்டோதரியின் மாளிகையை நீங்கிச் சென்ற மாருதி, அடுத்து பிரம்மாண்டமான பெரிய அரண்மனை ஒன்றைக் கண்டான். அதுதான் இலங்கைவேந்தன் இராவணனின் இருப்பிடம்.

    அதனுள்ளே அனுமன் நுழைந்ததும் இலங்கையின் பல இடங்களில் அதிர்வு ஏற்பட்டது; திசைகள் துடித்தன; நீர் நிரம்பிய மங்கலக் கலசங்கள் சிதறின. இவ்வாறு அங்குத் தோன்றிய தீக்குறிகளைக் கண்ட அனுமன், அப்பெரிய நகரின் செல்வம் அழியப் போகின்றது என்பதைத் தன் மதிநுட்பத்தால் உணர்ந்து அதற்கு நெகிழ்ந்து நின்றான். ”எக்குலத்தவராய் இருந்தால்தான் என்ன? எல்லார்க்கும் நல்வினை தீவினைகளின் பயன் ஒன்றுபோலத்தான் இருக்கும். ஊழைவிட வலிமை உடையது எது?” என்று சிந்திக்கலானான்.

    புக்குநின்று தன்புலன் கொடு நோக்கினன்
         பொருவருந் திருவுள்ளம்
    நெக்குநின்றனன் நீங்கும் அந்தோ இந்த
         நெடுநகர்த்திரு என்னா
    எக்குலங்களின் யாவரே யாயினும்
         இருவினை எல்லார்க்கும்
    ஒக்கும் ஊழ்முறைஅல்லது வலியது ஒன்று
         இல் என உணர்வுற்றான். (கம்ப: ஊர்தேடு படலம் – 5146)

    ”ஊழிற் பெருவலி யாவுள?” (380) எனும் பேராசான் வள்ளுவரின் குறள் கருத்தை அனுமன்மூலம் வெளிப்படுத்தியுள்ள கம்பர், பிறர் கேட்டை நினைந்து வருந்தியமையால் அனுமனைப் பொருவருந் திருவுள்ளம் கொண்டவன் (ஒப்பிலா நன்மனத்தினன்) என்கிறார் விதந்து.

    பொன்மயமான அம்மாளிகையில் நித்திரையில் ஆழ்ந்திருந்தான் நிருதர்கோன் இராவணன். இருள் என்று சொல்லப்படும் பொருள் அழியும்படி அவன் கிரீடங்களிலிருந்த மணிகள் இளவெயில்போல் ஒளிவீச, இரணியனைக் கொன்ற நரசிங்கம் பல தலைகளோடு துயில்வதுபோன்ற தன்மையோடு காட்சியளித்தான் அவன்.

    கருப்பூரம் முதலிய கலவைகளைப் பெற்ற சந்தனப் பூச்சின்மேல் தவழுகின்ற, குளிர்ந்த தமிழ்மொழியுடன் பிறந்த, இளந்தென்றல் காற்றால் கொடுமையான காம நெருப்பானது வெளிப்பட்டு, இரு மடங்கு துருத்தியைப் போல் பெருமூச்சு அதிகமாக, காந்தள் மெல்விரலாள் சானகியின்பால் மனம் முதலான புலன்கள் விரைந்தோட, பாம்புகள் (ஐம்புலன்கள்) நீங்கிய புற்றைப்போல் நெகிழ்ந்த தன்இதயம் சூனியம் பட்டவனாய்க் கிடந்தான் இராவணன்.

    சாந்துஅளாவிய கலவைமேல் தவழ்வுறு
         தண்தமிழ்ப் பசுந்தென்றல்
    ஏந்து காமவெங்கனல் உயிர்த்து இருமடி
        துருத்தியின் உயிர்ப்புஏற
    காந்தள்மெல்விரல் சனகிமேல் மனம்முதல்
         கரணங்கள் கடிதுஓடப்
    பாந்தள்நீங்கிய முழைஎன குழைவுறு
         நெஞ்சுபாழ்பட் டானை. (கம்ப: ஊர்தேடு படலம் – 5151)

    உறங்கும் வேளையிலும் சீதையின் நினைவால் ஏற்பட்ட மன உளைவால் இராவணனுக்கு அமைதியில்லை; நிம்மதியான நித்திரை இல்லை என்பதைப் பல பாடல்களில் ஈண்டு விளக்குகின்றார் கவிச்சக்கரவர்த்தி.

    இராவணனைக் கண்டதும் ஏற்பட்ட சினத்தால் அவனை நானே கொன்றுவிடுகின்றேன் என்று கைகளை நெறித்துப் பற்களைக் கடித்தான் அனுமன். சிந்தித்துப் பார்த்தவன் அது தவறு என்ற முடிவுக்கு வந்தவனாய், இன்றைய தினத்தில் இராவணனனோடு போர் செய்யவேண்டும் எனும் பெருஞ்சீற்றம் என்னுள்ளேயே அடங்கிக் கிடக்கட்டும். கற்றை மலர்க்குழலாளைச் சிறைவைத்த முள்ளனைய இராவணனை ஒரு குரங்கு போரில் முடித்தது எனும் நிலை ஏற்பட்டால் அஃது இராமனின் வெற்றிதரும்  வில்லாற்றலுக்குத் தாழ்ச்சி உண்டாக்கும் என்றுணர்ந்து சீற்றம் தணிந்தான்.

    இற்றைப் போர்ப் பெருஞ்சீற்றம்
         என்னோடும் முடிந்திடுக
    கற்றைப் பூங் குழலாளைச்
         சிறைவைத்த கண்டகனை
    முற்றப் போர்முடித்தது ஒரு
         குரங்குஎன்றால் முனைவீரன்
    கொற்றப்போர்ச் சிலைத் தொழிற்குக்
         குறைவுஉண்டாம் எனக்குறைந்தான். (கம்ப: ஊர்தேடு படலம் – 5164)

    உணர்ச்சிவெள்ளம் மீதூரும் போதெல்லாம் அதனைத் தன் அறிவின் துணையால் அணைபோட்டு வெல்லும் அனுமனின் செயல்முறை இன்றைய மாந்தர்க்கும் தேவைப்படும் உயர்ந்த பண்பாகும்.

    இராவணனின் அரண்மனையைவிட்டு வெளியில் வந்த அனுமனின் உள்ளத்தில் இலங்கை முழுவதும் தேடியும் சீதை சிறையிருக்கும் இடத்தை அறிய முடியவில்லையே என்ற கலக்கம் எழுந்தது.

    அப்போது தேன்மலர்கள் நிறைந்த சோலை ஒன்று அருகே இருப்பதைக் கண்ணுற்றான் அவன். அதனுள் சென்று தேடலாம் என்ற முடிவுக்கு வந்தான். அதுவே அசோக வனமாகும்!

    இங்கே பிராட்டியைக் கண்டால் எனை வாட்டிக்கொண்டிருக்கும் உளத்துயர் நீங்கும் என்று எண்ணியவனாய்ச் சோலைக்குள் நுழைந்தான் அனுமன்.

    இப்போது நீண்ட நாட்களாக நாம் காப்பியத்தில் சந்திக்காமலிருந்த சீதையை அனுமனுக்கு முன்னதாகவே நாம் சந்திக்கக்கூடிய நல்வாய்ப்பை நல்குகின்றார் கம்ப நாடர்.

    நாமும் சீதையைச் சந்திக்கும் பேராவலோடு அருகில் சென்றால் அங்கே அந்தப் பெண்ணரசி இருக்கும் நிலை நம்மைக் கண்கலங்க வைக்கின்றது.

    தான் உடுத்திய ஆடையை மாற்றாது, நீராடாது, புகைபடிந்த ஓவியமென அந்தப் பாவை, கொடிய அரக்கியர் சூழ, அங்கே அமர்ந்திருந்தாள். அவள் உள்ளக் கடலோ ஏதேதோ எண்ண அலைகளால் தத்தளித்துக் கொண்டிருந்தது.

    தன்னை இராவணன் கடத்திக்கொண்டு போனபோது அதனைக் கண்டவனான சடாயு உயிர்நீத்து விட்டபடியால் தன்னிலையை இராம இலக்குவருக்கு விளக்குவார் யாருமிலர். எனவே, இப்பிறப்பில் தான் மீண்டும் அவர்களைக் காணப் போவதில்லை என்றெண்ணி வாடினாள் அவள்.

    இராமனைத் தேடிச்செல்ல மறுத்த இலக்குவனைக் கொடுஞ்சொற்களால் தான் நிந்தித்ததை அறிந்த இராமன் தன்னை அறிவில்லாதவள் என்று கருதித் துறந்துவிட்டானா? என் தீவினையின் விளைவா இது? என்றெண்ணிக் குமைந்தாள்.

    ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல எண்ணவோட்டங்கள் சீதைக்குள் எழுந்து அவளை வாட்டமுறச் செய்தன.

    தான் அமர்ந்திருக்கும் இடம் கறையானால் அரிக்கப்பெற்றுப் புற்றுத் தோன்றினும் அவ்விடத்தை விட்டு எழாத சீதை, ”ஐயோ மெல்லிய இலைக்கறி உணவை எவர் பரிமாற இராமன் உண்பான் என்று சிந்தித்துத் துன்புறுவாள்; அவனை நாடி விருந்தினர் வந்தால், அவர்களை வரவேற்று உணவு பரிமாற நான் அருகில் இல்லாததால், எத்தகைய துன்பம் அடைவானோ என்று நினைத்து ஏக்கமுறுவாள்; யானே வரவழைத்துக்கொண்ட இந்த நோய்க்கு மருந்தும் உண்டோ என்றுகூறிச் சோர்வடைவாள்.

    அருந்தும் மெல்அடகு ஆர்இட அருந்தும் என்று அழுங்கும்
    விருந்து கண்டபோது என்உறுமோ என்று விம்மும்
    மருந்தும் உண்டுகொல் யான்கொண்ட நோய்க்கு என்று மயங்கும்
    இருந்த மா நிலம்செல் அரித்து எழவும் ஆண்டு எழாதாள்.
    (கம்ப: காட்சிப் படலம் – 5190)

    விருந்தினரைப் பேண இராமனின் அருகில் தான் இல்லையே என்று சீதை வருந்துவதாய்க் காட்டுவதன்மூலம் ஓர் ஆடவன் பெண்ணை மணப்பதன் முதன்மைப் பயன் விருந்தோம்பலே என்பதை அனைவர்க்கும் அறியத் தருகின்றார், தமிழர் பண்பைப் போற்றுவதில் என்றும் பிறக்கிடாத, கம்பர்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை

    1.கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2.கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3.கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4.கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • நவீன அரசியலுக்கு வழிகாட்டிய சிந்தனையாளர் – நிக்கலோ மாக்கியவெல்லி

    நவீன அரசியலுக்கு வழிகாட்டிய சிந்தனையாளர் – நிக்கலோ மாக்கியவெல்லி

    -மேகலா இராமமூர்த்தி

    துணிச்சலான அரசியல் சிந்தனைகளை வெளியிட்டதற்காக அன்றைய அரசியல் உலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியவர் இத்தாலியைச் சேர்ந்த நிக்கலோ மாக்கியவெல்லி (Niccolo Machiavelli).

    மாக்கியவெல்லி என்ற பெயரைக் கேட்டவுடன் அரசியல்வாதிகளும் முடிமன்னர்களும் ஏதோ பேய் பிசாசுகளைக் கண்டவர்களைப்போல் அன்று அரண்டு போனதுண்டு. கிறித்தவ மதகுருமார்கள் மாக்கியவெல்லியைப் ‘பிசாசு’ என்று அழைத்ததும் உண்டு. மேனாட்டு மத நூல்களில் பிசாசுக்கு ’நிக்’ என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    மாக்கியவெல்லியின் முதல் பெயரான நிக்கலோ என்பதிலிருந்து தான், அந்தப் பழைய பிசாசு தனக்கு ‘நிக்’ என்ற புதிய பெயரை எடுத்துச் சூட்டிக் கொண்டது என்று வெறுப்புக் கலந்த வேடிக்கையுடன் அவரைப் பற்றி அன்று பேசியோர் உண்டு. மாக்கியவெல்லியனிசம் என்றாலே அரசியல் அயோக்கியத்தனம் என்றும் அரசியல் கொடுமை என்றும் பொருள் கூறுவோரும் உண்டு.

    மாக்கியவெல்லி இவ்வளவு பழிப்புக்கு ஆளாகும்படி என்ன செய்தார் என்று ஆராய்ந்து பார்த்தால், தம் மனத்தில் தோன்றிய கருத்துக்களை ஒளிவு மறைவில்லாமல் சொன்னார்; அவ்வளவுதான்! ”யதார்த்தவாதி வெகுஜன விரோதியாக இருப்பதில் வியப்பில்லைதானே?”

    ”மன்னர்கள் கொடுங்கோலர்களாக இருக்கவேண்டும் எனச் சொன்னார் மாக்கியவெல்லி” என்று கூறுகின்ற பலர் அவர் எந்தச் சூழ்நிலையில் அவ்வாறு இருக்கச் சொன்னார் என்பதனைக் குறிப்பிடுவதில்லை. ஓர் அரசு நிலைப்பதற்காக அதற்கு எதிராகச் சதி செய்கின்ற ஒரு சிலரைக் கொல்ல வேண்டிய தேவையிருந்தால் அவ்வாறு கொல்வது தவறன்று என்று குறிப்பிடுகின்றார் மாக்கியவெல்லி.

    ”கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
    களைகட் டதனொடு நேர்”
    (550) என்று நம் பேராசான் வள்ளுவர் கூறியிருப்பதை மாக்கியவெல்லியின் கருத்தோடு நாம் பொருத்திப் பார்க்கலாம்.

    மக்களுக்கு நன்மை செய்வதற்காக அல்லது மக்கள் நலமாக வாழக் கூடியபடி ஓர் அரசை நிலை நிறுத்துவதற்காக ஓர் அரசன் தொடக்க காலத்தில் நிலைமைக்குத் தகுந்தாற்போல் கொடுஞ்செயல்கள் புரிவதில் பிழையில்லை என்பதே மாக்கியவெல்லியின் கருத்தாக இருந்திருக்கின்றது.

    அரசியல் அறிஞராகவும், அரச தந்திரியாகவும் விளங்கிய நிக்கோலோ மாக்கியவெல்லி நாடகாசிரியர், இசைக் கலைஞர் எனும் வேறுபல திறன்களும் கொண்டவராய்த் திகழ்ந்திருக்கின்றார். 1469-ஆம் ஆண்டு மே மாதம் 3-ஆம் நாளன்று பெர்னார்டோ (Bernardo) மாக்கியவெல்லி என்பவருக்கு மகனாக இத்தாலியிலுள்ள பிளாரன்ஸ் நகரிலே பிறந்தவர் நிக்கோலோ மாக்கியவெல்லி. இவர் பிறந்தபோது பிளாரன்சில் குடியாட்சி நடைபெற்று வந்தது.

    1494-ஆம் ஆண்டு தம்முடைய இருபத்தைந்தாவது வயதில் அரசியலில் ஈடுபடத் தொடங்கினார் மாக்கியவெல்லி. பொதுவாழ்வில் புகுந்த நான்கே ஆண்டுகளில் அவர் குடியரசு அரசாங்கத்தின் செயலர் (Secretary) ஆகவும், இரண்டாவது ஆலோசனைத் தலைவராகவும் ஆனார். இப்பதவிகளில் பதினைந்து ஆண்டுகள் அவர் நிலைத்திருந்தார்.

    இதற்கிடையில் இத்தாலியில் உள்ள சிறிய அரச சபைகளுக்கும் ஐரோப்பாவில் உள்ள பல அரசுகளின் தலைநகரங்களுக்கும் பிளாரன்ஸ் அரசாங்கத்தின் தூதராகச் சென்றார் அவர். அவருடைய சாதுரியமான செயல்திறனால் பிளாரன்ஸ் குடியாட்சி பல நன்மைகளைப் பெற்றது. அவரும், பல நாடுகளுக்கும் பயணங்கள் சென்றுவந்த அனுபவத்தின் பயனாய் அரசியல் குறித்தும் ஐரோப்பிய நாடுகள் குறித்தும் நன்கு அறிந்துகொண்டார்.

    1503-ஆம் ஆண்டு இத்தாலிய அரசியல்வாதியான சீசர் போர்ஜியாவிடம் (Cèsare Borgia) தூதுசென்று திரும்பியபின்னர், தம்முடைய ஆர்வத்தை இராணுவத் துறையில் செலுத்த ஆரம்பித்தார் மாக்கியவெல்லி. இராணுவத் துறையில் அறிவையும் அனுபவத்தையும் வளர்த்துக் கொண்டபிறகு, 1506ஆம் ஆண்டு அவருக்குப் புதிய பதவியொன்றும் வழங்கப்பட்டது. பிளாரன்ஸ் அரசாங்கத்திற்கென்று மக்கள்படை ஒன்றை ஏற்படுத்துவதற்காக உண்டாக்கப்பட்ட சிறப்புப் பிரிவிற்கு அவர் செயலராக நியமிக்கப்பட்டார். புகழின் உச்சிக்கு மாக்கியவெல்லி சென்ற காலமது. அதே சமயத்தில் அவருக்கு எதிரிகளும் உருவானார்கள்.

    1512-ஆம் ஆண்டு பிளாரன்சில் குடியாட்சி அகற்றப்பட்டு பழைய அரச வம்சத்தினரான மெடிசி குடும்பத்தை (Medici family) சேர்ந்தவர்களின் ஆதிக்கத்திற்கு பிளாரன்ஸ் மீண்டும் உட்பட்டபோது, மாக்கியவெல்லி தம் பதவியினின்றும் நீக்கப்பட்டார்.

    மெடிசி குடும்பத்தினருக்கு எதிராய், அவர்களுடைய ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு அப்போது ஒரு சதி நடந்தது. அந்தச் சதியில் கலந்து கொண்டவர்களின் பட்டியலில் மாக்கியவெல்லியின் பெயரையும் சேர்த்துவிட்டார்கள் அவருக்கு வேண்டாதவர்கள். அதனை உண்மையென்று நம்பிய மெடிசி அரச குடும்பத்தினர், மாக்கியவெல்லியைப் பிடித்து 1513-ஆம் ஆண்டு விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் அவர் குற்றமற்றவரென்று உணர்ந்து விடுவித்தார்கள். ஆனபோதும் மீண்டும் அரசியல் பணியில் அவரை அமர்த்தவில்லை.

    மாக்கியவெல்லியின் வாழ்வில் துன்பங்களின் சாயை மெல்லப் படர ஆரம்பித்தது. அவர்பட்ட துன்பங்களைத் தம்முடைய நண்பரும் உரோம் நகரத்தின் தூதருமான பிரான்செஸ்கோ வெட்டோரி (Francesco Vettori) என்பவருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக நாம் அறிந்துகொள்ள முடிகின்றது.

    அக்கடிதத்தில் தம்முடைய நாள் எவ்வாறு தொடங்கி எவ்வாறு கழிகின்றது என்பதை உணர்வுபூர்வமாய் விளக்கியிருக்கின்றார் மாக்கியவெல்லி. அதன் ஒரு பகுதியிது…

    “சூரியன் உதிக்கும்பொழுதே நான் எழுந்துவிடுவேன். எனக்குச் சொந்தமான சிறு காட்டுக்குப் போவேன். அங்கேயுள்ள மரங்களை வெட்டும்படி ஏற்பாடு செய்திருக்கின்றேன். அங்கு மரம் வெட்டுபவர்களோடு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, நீரோடைப் பக்கமாய்ப் போவேன். அங்கிருந்து தோப்புப் பக்கமாகச் செல்வேன். என்னுடைய மேல் சட்டைக்கு அடியில் நான் வழக்கமாகக் கொண்டு செல்லக்கூடிய கவிதை நூலை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பிப்பேன். பெரும்பாலும் அவை மகா கவிகள் தாந்தே (Dante), பெட்ரார்க் (Petrarch) ஆகியோரின் நூல்களாகவோ, கவிஞர் டிபுல்லஸ் (Tibullus), ஓவிட் (Ovid) ஆகியோரின் நூல்களாகவோ இருக்கும். அவர்களுடைய ஆசைக் கனவுகளையும், காதல் கதைகளையும் படித்து, அவற்றை என் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே நீரோடைப் பக்கமாக உலவிக் கொண்டிருப்பேன்.

    மாலைக்காலம் வந்தவுடன் வீட்டிற்குத் திரும்பிச்சென்று என் படிக்கும் அறைக்குள் நுழைவேன். அப்படி நுழையுமுன், நான் தினமும் பகலில் உடுத்திக் கொண்டிருக்கும் அழுக்கும் புழுதியும் நிறைந்த ஆடைகளைக் களைந்துவிட்டு, அரசாங்க உடைகளை அணிந்துகொண்டு, முன்னோர்களான அந்தப் பெரியோர்களின் புத்தக சாலைக்குள் நுழைவேன். அங்கே அவர்கள் என்னை அன்போடு வரவேற்பார்கள். எனக்கே சொந்தமான உணவுகளை நான் அவ்விடத்தில் உண்பேன். எவற்றை உட்கொள்ளுவதற்காக நான் பிறந்திருக்கின்றேனோ அவற்றை நான் உண்பேன்.

    பிறகு ஊக்கத்துடன் நான் அவர்களோடு உரையாடுவேன். அவர்களுடைய செயல்களுக்கெல்லாம் காரணம் என்னவென்று கேட்பேன். அவர்கள் எனக்கு மரியாதை காட்டி விருப்பத்தோடு என் வினாக்களுக்குப் பதிலளிப்பார்கள்; அந்த நான்கு மணி நேரமும் என் மனக் கவலைகளையெல்லாம் நான் மறந்திருப்பேன். அந்த நேரத்தில் நான் என் வறுமையைக் கண்டு அஞ்சமாட்டேன்; சாவும் என்னைப் பயமுறுத்தாது. நான் அவர்களோடு முழுக்க முழுக்க ஒன்றி விடுவேன்.” என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

    தாம் பழங்காலத்து அறிஞர்களின் நூல்களைப் படிப்பதையும் அவற்றிலுள்ள கருத்துக்களைச் சுவைப்பதையுந்தான் மாக்கியவெல்லி, இப்படிக் கற்பனையாகத் தம் நண்பருக்கு எழுதியிருக்கின்றார்.

    இக்கடிதம் அவருடைய வறுமையின் ஆரம்ப காலத்தில் அவர் தம் நண்பருக்கு எழுதியது. வறுமையின் உச்சக் கட்டத்தில் அவர் எழுதியுள்ள கடிதத்தில், “என் தொண்டின் பெருமையை அறியக் கூடியவர் யாரும் இல்லையே! நான் எதற்காவது பயன்படுவேன் என்று நினைக்கக் கூடியவர் எவரும் இல்லையே!” என்று தம் கடிதங்களில் வேதனையோடு விளம்பியுள்ளார்.

    வரும்படிக்கு வழியில்லாமல் வறுமையில் உழன்றுகொண்டிருந்த அந்தக் காலத்தில்தான் மூன்று பெரிய நூல்களை எழுதி முடித்தார் மாக்கியவெல்லி. அவை: லிவியின் புத்தகங்களைப் பற்றிய ஆராய்ச்சி (The Discourses on the First ten of Titus Livy), அரசன் (The Prince), மற்றும் போர்க் கலை (The Art of War) என்பன.

    ‘லிவியின் புத்தகங்களைப் பற்றிய ஆராய்ச்சி’ என்ற நூலில் உரோம் நகரத்தின் புகழ்பெற்ற வரலாற்றறிஞரான டைடஸ் லிவியின் முதல் பத்துப் புத்தகங்களை ஆராய்ச்சி செய்திருக்கின்றார் மாக்கியவெல்லி.

    இந்த நூலில் உரோமானியரின் ஆட்சிமுறையைப் பல இடங்களில் போற்றுகின்றார் அவர். தம் காலத்தவர்கள், வரலாறு படிக்காத காரணத்தினால்தான், புகழ்வாய்ந்த அந்தக் காலத்துப் பேரரசர்கள், பெரியோர்களின் பாதையை விட்டு விலகி நடக்கிறார்கள் என்றும், அதனால்தான் சமூகத்திற்குப் பல கேடுகள் ஏற்பட்டனவென்றும் சுட்டிக் காட்டுகின்றார்.

    ’போர்க் கலை’ என்ற தலைப்பில் ஏழு புத்தகங்கள் எழுதியிருக்கின்றார் மாக்கியவெல்லி.  அவற்றில் போருக்குச் செல்லுகின்ற அரசர்களும், அரசாங்க அதிகாரிகளும் கையாளவேண்டிய தந்திரங்கள், சாமர்த்தியங்கள், கொள்கைகள் ஆகியவை விளக்கி உரைக்கப்பெற்றுள்ளன.

    மாக்கியவெல்லியின் நூல்களில் அவருக்குப் பெரும் புகழையும், கடுமையான விமர்சனங்களையும் ஒருங்கே பெற்றுத்தந்த நூல் ’அரசன்.’

    அரசன் என்ற நூலில் முடியரசுகளைப் பற்றி ஆராய்கின்றார் மாக்கியவெல்லி. அரசறிவியல் என்று சொல்லக்கூடிய முறையில் அரசியலைப் பற்றிய புதுமையான சிந்தனைகளை முதன்முதலில் இந்த நூலில் அவர் வெளிப்படுத்தியிருக்கின்றார். அவருக்கு முன்பு அரசியல் குறித்து இப்படிச் சிந்தித்தவர்கள் யாரும் கிடையாது என்றுதான் சொல்லவேண்டும். எப்பாடுபட்டேனும் அரசியலில் வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தை இந்நூலில் விதைத்திருக்கின்றார் அவர்.

    அவற்றிலிருந்து சில கருத்துக்கள்…

    ”ஓர் அரசன் போரைப் பற்றியும், அதற்கு வேண்டிய படையமைப்பைப் பற்றியும், அந்த அமைப்பின் ஒழுங்கைப் பற்றியும் தவிர வேறு எதையும் குறிக்கோளாகக் கொள்ளவோ, நினைக்கவோ கூடாது. ஏனெனில், ஆதிக்கஞ் செலுத்தக்கூடிய ஒருவனுக்குத் தேவையான கலை போர்க்கலை ஒன்றுதான்!

    போர்களற்ற காலத்திலும்கூட அரசன் போர்ப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். செயல் மூலமாகவும், படிப்பின் மூலமாகவும் அதை அதிகப்படுத்திக் கொள்ளலாம். செயல் மூலமாகப் பயிற்சியை நடாத்துவதற்கு, அவன் தன் படை வீரர்களைத் தினமும் பயிற்சிபெறச் செய்தும், ஒழுங்கு முறையுடன் இருக்கச் செய்தும் வருவதோடு அடிக்கடி வேட்டைக்குச் சென்று தன் உடலைக் கடின உழைப்பில் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.

    அரசன் வேட்டைக்குச் செல்வதால் நாட்டையும், நாட்டில் உள்ள காடு மலைகளின் அமைப்பையும் பற்றிய அறிவைப் பெறுகின்றான். இவ்வாறு ஒரு நாட்டின் அமைப்பைப் பற்றிய இயற்கையறிவைப் பெற்ற ஒருவன்தான் புதிதாகக் காணக்கூடிய வேறொரு நாட்டின் இயற்கையமைப்பைப் பற்றியும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். நாட்டின் இயற்கையமைப்பு பற்றிய அறிவு நிரம்பிய அரசன், தன் எதிரியை எவ்வாறு கண்டுபிடிப்பது, எவ்வாறு களம் அமைப்பது, படை நடத்துவது, போர்த்திட்டம் வகுப்பது, கோட்டையைப் பிடிப்பது என்பன போன்ற விஷயங்களையும் நன்றாகத் தெரிந்து செயலாற்றுவான்.

    ஓர் அரசன் நல்ல குணங்கள் எல்லாவற்றையும் உடையவனாயிருப்பது போற்றுதலுக்குரியதுதான். ஆனால், மனித இயற்கை அவை எல்லாவற்றையும் கடைப்பிடிக்க அனுமதிப்பதில்லை. எனவே முன்யோசனையுள்ள அரசன் தன்மீது எவ்விதமான பழிச்சொல்லும் ஏற்படாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். தேவைக்குத் தக்கபடி நல்லவனாகவும் கெட்டவனாகவும் நடந்து கொள்ளவும் அவன் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    ஒவ்வோர் அரசனும் தான் கொடுங்கோலனாக மதிக்கப்படுவதைவிட அருளுடையவனாக நினைக்கப்படுவதையே விரும்ப வேண்டும். ஆயினும், அவனுடைய அருளுடைமையைத் தவறான முறையில் பயன்படுத்தாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.”

    இவ்வாறு, ஓர் அரசன் வெற்றிகரமாக ஆட்சிசெய்வதற்கு வேண்டிய பல யோசனைகளும் உத்திகளும் இந்நூலில் பேசப்படுகின்றன.

    அரசியல் வெற்றிக்காகச் சூழ்ச்சிகளையும், நேர்மையற்ற முறைகளையும் கொடுமைகளையும்…ஏன் கொலைகளையும் கூடச் செய்யலாம் என்று மாக்கியவெல்லி இந்நூலில் குறிப்பிடுவது ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லையென்றாலும், வீழ்ச்சியடைய விரும்பாத ஓர் அரசன் அவற்றைக் கையாளுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற சூழ்நிலைக்கு ஆட்படுகின்றபோது அவை(யும்) ஏற்றுக்கொள்ளத்தக்கவையாகவே இருக்கின்றன.

    இந்த நூலைப் படிக்கின்றபோது, வரலாற்று நூலைப் படிப்பதுபோன்ற சுவையற்ற உணர்வோ,  ஆராய்ச்சி நூலைப் படிப்பது போன்ற அலுப்போ ஏற்படுவதில்லை. மாறாகத் துப்பறியும் கதையைப் படிப்பதுபோன்ற விறுவிறுப்போடு செய்திகளைத் தந்திருக்கின்றார் மாக்கியவெல்லி.

    நிலைத்த நல்லரசு ஏற்பட்டு மக்கள் மகிழ்வோடு வாழ வேண்டும் எனும் நோக்கத்தை மையமாக வைத்துத்தான் மாக்கியவெல்லி ’அரசன்’ என்ற நூலை எழுதினார். ஆனால் அரசாங்கத்திற்கு வழிகாட்டும் நூலாக அமைவதற்குப் பதிலாக அது கொடுங்கோலர்களுக்குத் துணைபோகும் நூலாகக் கருதப்பட்டது வருந்தத்தக்கதே!

    1527-ஆம் ஆண்டு பிளாரென்ஸ் நகரம் மீண்டும் முடியாட்சியிலிருந்து விடுபட்டுக் குடியாட்சிக்கு மாறியது. ஆனால் மாக்கியவெல்லியின் வாழ்வில் அது மலர்ச்சியைத் தரவில்லை. குடியாட்சியினர் அவருக்கு எந்தப் பதவியையும் அளிக்கவில்லை. அதே ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் நாள் வயிற்றுவலியின் காரணமாய்த் தம் உலக வாழ்வை நீத்தார் அரசியல் அறிஞரான மாக்கியவெல்லி.

    உலகிற்குப் புதிய அரசியல் சித்தாந்தங்களை விட்டுச்சென்ற அவர் தம் குடும்பத்துக்கு விட்டுச்சென்றதென்னவோ கொடிய வறுமையை மட்டுமே. எனினும், நவீன அரசறிவியலை மேற்குலகுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடிகள் வரிசையில் நிக்கலோ மாக்கியவெல்லியின் பெயர் என்றும் அழியாது நிலைத்திருக்கும்.

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. https://en.wikipedia.org/wiki/Niccol%C3%B2_Machiavelli

    2. https://www.history.com/this-day-in-history/niccolo-machiavelli-born

    3. https://www.encyclopedia.com/people/social-sciences-and-law/political-science-biographies/niccolo-machiavelli.

    4. https://courses.washington.edu/hsteu401/Letter%20%20to%20Vettori.pdf

     

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 36

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 36

    -மேகலா இராமமூர்த்தி

    சுக்கிரீவனின் படைகளின் அளவையும் படைத்தலைவர்களைப் பற்றியும் அவனிடம் கேட்டறிந்த இராமன், இனி அடுத்துச் செய்யவேண்டியது குறித்துச் சிந்திப்போம் என்றான். அதை ஏற்றுக்கொண்ட சுக்கிரீவன், அனுமனைப் பார்த்து, ”சீதையைக் கடத்திச் சென்ற இராவணனின் இலங்காபுரி தென்திசையில் இருப்பதாய் என் அறிவு சொல்கின்றது. அனுமனே! வலிமை வாய்ந்த அத்திசைக்குச் சென்று அங்குள்ள அரக்கரை வென்று புகழ்பெறுவதற்கு உனையன்றி வேறொருவன் வேண்டுமோ?” என்று அனுமனைப் புகழ்ந்தான்.

    தென் திசைக்கண்
          இராவணன் சேண் நகர்
    என்று இசைக்கின்றது என்
          அறிவு இன்னணம்
    வன் திசைக்கு இனி
          மாருதி நீ அலால்
    வென்று இசைக்கு உரியார்
          பிறர் வேண்டுமோ. (கம்ப: நாடவிட்ட படலம் – 4559)

    ”தாரையின் மைந்தனான அங்கதனும், கரடிகளின் அரசனான சாம்பவானும் நின்னோடு வரட்டும். இரண்டு வெள்ளம் சேனைகளோடு நீங்கள் புறப்படுங்கள்” என்று அனுமனிடம் கூறிய சுக்கிரீவன், விந்த மலை, நருமதை ஆறு, வடபெண்ணை, கோதாவரி என்று அவர்கள் கடந்துசெல்ல வேண்டிய வழிகளையும் விரித்துரைத்து, ”தென்திசையின்கண் தமிழ்நாடான பாண்டிய நாட்டிலுள்ள அகன்ற பொதிய மலையிலே நிலைபெற்ற அகத்திய முனிவனது தமிழ்ச்சங்கத்தைச் சேர்வீர்களாயின், அப்பொதிய மலை  அம்முனிவன் என்றும் வாழும் உறைவிடம் ஆனபடியால் அதனை வணங்கி அப்பால் செல்லுங்கள். பொன் நிரம்பிய நீர் பெருகுகின்ற பொருநை நதியை (தாமிரபரணி) கடந்துசென்றால் யானைக் கன்றுகள் வாழும் பெரிய தாழ்வரைகளையுடைய மயேந்திர மலையையும் தென்கடலையும் காண்பீர்கள்” என்றான்.  

    தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு
         முனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல்
    என்றும் அவன் உறைவிடம் ஆம் ஆதலினால்
          அம்மலையை இறைஞ்சி ஏகி
    பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும்
          திரு நதி பின்பு ஒழிய நாகக்
    கன்று வளர் தடஞ் சாரல் மயேந்திர மா
          நெடு வரையும், கடலும் காண்டிர். (கம்ப: நாடவிட்ட படலம் – 4583)

    ”அந்த இடத்தை (மயேந்திர மலை) தாண்டிச்சென்று அப்பகுதிக்கு அப்புறத்திலும் இப்புறத்திலும் ஒரு திங்கள் முழுவதும் அலைந்து திரிந்து தேடிச் சீதையைக் கண்டுபிடித்து வாருங்கள்; விரைந்து புறப்படுங்கள்!” என்று கட்டளையிட்டான் சுக்கிரீவன்.

    அப்போது இராமன் அனுமனை அருகழைத்து, கருணையொடு நோக்கி, ”நீதி நூல்களில் வலவனே! சீதையைக் காண்பாயாகில், இவள்தான் சீதை எனத் தெளியும்பொருட்டு அவளுடைய அங்க அடையாளங்களைக் கூறுகின்றேன் கேட்பாயாக” என்று அவனைத் தனியிடத்திற்கு அழைத்துச் சென்று சீதையின் அடி தொட்டு முடிவரை விவரிக்கின்றான்.

    அனுமனால்தான் சீதையைக் கண்டுபிடிக்க முடியும் எனும் நம்பிக்கை சுக்கிரீவனுக்கும் இராமனுக்கும் அழுத்தமாய் இருந்ததையே இப்பாடல்களால் நாம் அறிகின்றோம்.

    எனினும், இப்பகுதியில் சீதையின் அங்க அடையாளங்கள் குறித்து அந்நிய ஆடவனும், மாணியுமான அனுமனிடம் இராமன் வருணிப்பது வரம்புகடந்த வகையில் அமைந்திருப்பது சற்று நெருடலாகவே உள்ளது. இந்த வருணனைகளைக் கொஞ்சம் குறைத்திருந்தால் காப்பியத்தின் சிறப்பு மேலும் கூடியிருக்கும்.

    சீதையின் உடல் வருணனைகளை விலாவாரியாக விளம்பிமுடித்த இராமன், இராமனிடமிருந்துதான் அனுமன் வருகின்றான் என்று சீதை நம்பும்பொருட்டு வேறுசில செய்திகளையும் அவனிடம் சொல்லுகின்றான்.

    ”வளமிகு அயோத்திநகர் நீங்கிச் சந்திரனைத் தீண்டுகின்ற நெடிதுயர்ந்த அதன் மதிலின் அழகிய வாயிலைக் கடக்குமுன்னே எல்லையில்லாக் கொடிய காடு எதுவோ? என்று கேட்டாள் சீதை; அதை அவளிடம் நினைவுபடுத்து!” என்றான் இராமன்.  

    மல்லல் மா நகர் துறந்து
          ஏகும் நாள் மதி தொடும்
    கல்லின் மா மதிள்
          மணிக் கடை கடந்திடுதல்முன்
    எல்லை தீர்வு அரிய வெங்
         கானம் யாதோ எனச்
    சொல்லினள் அஃது எலாம்
          உணர நீ சொல்லுவாய். (கம்ப: நாடவிட்ட படலம் – 4624)

    அரண்மனையைத் தாண்டி வெளியில் எங்கும் சென்றவள் இல்லை சீதை. அதனால்தான் அயோத்தி மதிலின் வாயிலைக் கடப்பதற்குமுன், காடு அருகிலிருக்கும் என்று எண்ணிக்கொண்டு, காடு எங்கே என்று இராமனைப் பார்த்துக் கேட்டாள்.

    இதே போன்றதொரு காட்சியைச் சிலப்பதிகாரத்திலும் நாம் காணலாம். வண்ணச் சீறடிகளை மண்மகளுக்குக்கூடக் காட்டாமல் வீட்டிலேயே அடைந்துகிடந்த கண்ணகி, கோவலனோடு மதுரைக்குப் புறப்பட்டபோது புகார் நகர எல்லையிலேயே, ”மதுரை மூதூர் யாது?” (மதுரை எங்கே?) என்று கேட்டதன் எதிரொலியாகவே சீதையின் இவ்வினா அமைந்திருக்கின்றது. சிலம்பில் கம்பருக்கிருந்த காதலும் ஈடுபாடும் இராமகாதையில் ஆங்காங்கே பொருத்தமாய் வெளிப்படுகின்றன.

    சீதையைப் பற்றிய அடையாளங்களையும் அவளுரைத்த மொழிகளையும் அனுமனுக்குச் சொன்ன இராமன், அழகிய இரத்தினங்கள் பதிக்கப்பட்ட தன் மோதிரத்தையும் (கணையாழி) சீதைக்கு அடையாளமாய்க் காட்டுமாறு அனுமனிடம் தர, அதனைப் பெற்றுக்கொண்ட அனுமன் அங்கிருந்து புறப்பட்டான் ஏனைய வானர வீரர்களோடு.

    தொண்டு எனும் குணத்திற்கோர் ஒப்பற்ற இலக்கணமாய் அனுமனைத் தம் காப்பியத்தில் படைத்திருக்கின்றார் கம்பர். அங்கதனும் சாம்பவானும் துணைவர, அனைத்து இடங்களிலும் சீதையைத் தேடிக்கொண்டும் வீரச்செயல்கள் புரிந்துகொண்டும் செல்கின்றான் அனுமன். பல இடங்களில் தேடியும் சீதையைக் காணாமையால் சோர்வோடு தென்கடலை ஒட்டிய மயேந்திரமலைக்கு வருகின்றனர் வானர சேனையர்.

    அப்போது அப்பகுதியில் வாழ்ந்துவந்த கழுகரசன் சடாயுவின் அண்ணனான சம்பாதியின் வாயிலாய்ச் சீதை இராவணனால் தூக்கிச் செல்லப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருப்பதை அறிகின்றனர்.

    இலங்கைக்குச் செல்லவேண்டுமானால் நீண்டு பரந்த கடலைத் தாண்டவேண்டும். அந்த அரிய செயலைச் செய்யப்போவது யார் எனும் வினா அங்கே எழுந்தபோது, தன் பெருமையும் திறனும் அறியா அனுமனுக்கு அவன் பெருமையை எடுத்துரைக்கின்றான் சாம்பவான்.

    ஓர் உயிர் கீழ்நிலைக்குச் செல்லாமல் மேல்நிலைக்கு உயரவேண்டுமானால் அதற்கான அடிப்படைத் தேவை புலனொழுக்கம். அந்தப் புலனடக்கம் முழுதாய்க் கைவரப் பெற்றவன் அனுமன். அவனுடைய சாற்றரும் ஆற்றலைப் பதினொரு பாடல்களில் அவனுக்கு நினைவூட்டிய சாம்பவான், அனுமன் குறித்த மிக நுட்பமான கருத்தைப் பேசுகின்றான்.

    ”நீர் நீதிநெறியில் நிலைபெற்றுள்ளீர்; வாய்மை பொருந்தியுள்ளீர்; மகளிர் இன்பத்தை மனத்தாலும் எண்ணாது வளர்ந்துள்ளீர்; வேதங்களையெல்லாம் அவற்றின் பொருளொடு ஓதி உணர்ந்துள்ளீர்; ஊழியையும் கடந்த நெடிய ஆயுளை உடையீர்; உலகங்களைப் படைக்கின்ற முதற் கடவுளாம் பிரமதேவனே நீரென்று யாவரும் சொல்லும் அளவிற்கான சிறப்புடையீர்” என்று புகழ்கின்றான்.

    நீதியில் நின்றீர் வாய்மை அமைந்தீர் நினைவாலும்
    மாதர் நலம் பேணாது வளர்ந்தீர் மறையெலாம்
    ஓதி உணர்ந்தீர் ஊழி கடந்தீர் உலகு ஈனும்
    ஆதி அயன்தானே என யாரும் அறைகின்றீர்.
    (கம்ப: மயேந்திரப் படலம் – 4725)

    மதுவிலும் மாதர் இன்பத்திலும் வரம்பின்றிப் பொழுதைக் கழிக்கும் தன்மையுடைய இலங்கையில் ஒரு பெண்ணைத் தேடிச் செல்கின்றவன் புலனடக்கம் உடையவனாய் இருத்தல் அவசியம். அத்தகு உயர்குணம் நிரம்பப் பெற்றவன் அனுமன் என்பதையே “நினைவாலும் மாதர் நலம் பேணாது வளர்ந்தீர்” எனும் தொடர் நமக்கு உணர்த்துகின்றது. அனுமன் பண்புகளுள் உச்சமான உயர்பண்பும் அதுதான்!

    சாம்பவானின் மொழிகளால் ஊக்கம்பெற்ற அனுமன், நூறு யோசனை தூரம் நீண்டுள்ள கடலைத் தாண்டிச் சென்று இலங்கையில் சீதையைத் தேட ஒப்புக்கொள்கின்றான்.

    அனுமன் கடலைத் தாவிக் கடப்பதிலிருந்து தொடங்குகின்றது, கிட்கிந்தா காண்டத்திற்கு அடுத்து அமைந்துள்ள, சுந்தர காண்டம். இக்காண்டம் முழுமையும் நீக்கமற நிறைந்திருப்பவன் அனுமனே. அவனைப் பற்றிய சிறப்பான முன்னுரையாக அமைகின்றது சாம்பவானின் மொழிகள்.

    கம்பராமாயணத்தின் ஒவ்வொரு காண்டமும் காப்பியக் கதை எந்தப் பகுதியில் நடக்கின்றதோ அல்லது எதனை அடிப்படையாக வைத்து நடக்கின்றதோ அதையொட்டியதாகவே பெயர்பெற்றிருக்க, ஐந்தாவது காண்டமான ’சுந்தர காண்டம்’ மட்டும் இந்தப் பொதுவிதிக்கு மாறுபட்ட வகையில் பெயர் பெற்றிருப்பது ஆழ்ந்த ஆராய்ச்சிக்குரியதாய் அமைந்திருக்கின்றது.

    இக்காண்டத்தில் வீர சௌந்தரியம், பக்தி சௌந்தரியம், புலனடக்கம் எனும் சௌந்தரியம் ஆகியவை மிளிரும் சுந்தரனாகக் காட்சியளிக்கின்றான் அனுமன். காப்பியத் தலைவியான சீதையும் இக்காண்டத்தில் மீண்டும் கதைக்குள் வருகின்றாள். அவளின் தவவொழுக்க சௌந்தரியமும் காண்டத்துக்கு அழகூட்டுகின்றது. எனவே, இக்காண்டம் சுந்தர காண்டம் எனும் பெயர் பெறுவதற்கு அனுமனும் சீதையும் காரணமாகின்றனர் என்பது கம்பனில் தோய்ந்தவர்கள் ஆய்ந்துகண்ட முடிபாகும்.

    தன் ஆற்றலையெல்லாம் ஒன்றுதிரட்டிய அனுமன், பேருருக் கொண்டவனாய் (விசுவரூபம்) தன்னை மாற்றிக்கொண்டு, மயேந்திர மலையின் மீதிருந்து தாவிக் கடலின்மேல் பறக்கத் தொடங்குகின்றான். அப்போது கடலில் பல இடையூறுகளைச் சந்திக்கும் அவன், அவற்றை வெற்றிகரமாய் முறியடித்து இலங்கையிலுள்ள பவள மலையில் இறங்குகின்றான்.

    சொர்க்கத்தையே நரகம் எனச் சொல்லத் தகும் வகையில் அமைந்திருக்கும் பொன்னகரமாம் இலங்கையின் வனப்பு கண்டு வியப்படைகின்றான். சந்திர மண்டலத்தை முட்டும் மாடி வீடுகளும் அவற்றின் ஒளியும் அவனை வாய்பிளக்க வைக்கின்றன.

    ”இராவணன் கோபிப்பான் என்பதனால் இலங்கையின் மேலே செல்ல மாட்டான் கதிரவன்” என்று புகன்ற புலவோரின் கருத்து அனுமனின் நினைவுக்கு அப்போது வருகின்றது. பிறரால் பற்றமுடியாத இலங்கை மதில்களின் ஒளியைக் கண்டால் தன் கண்கள் கூசுமே என்று அஞ்சியே அங்கிருந்து அகன்று செல்லுகின்றான் பகலவன் என்பதை அவர்கள் அறியவில்லை என எண்ணுகின்றது அவன் உள்ளம்.

    முன்னம் யாவரும் இராவணன் முனியும் என்று எண்ணி
    பொன்னின் மாநகர் மீச்செலான்கதிர் எனப்புகல்வார்
    கன்னி ஆரையின் ஒளியினில் கண்வழுக்குறுதல்
    உன்னிநாள் தொறும் விலங்கினன் போதலை
     உணரார். (கம்ப: ஊர்தேடு படலம் – 4962)

    இருட்டும்வரை ஊரை நோட்டம் விட்டபடி மலைமேல் காத்திருந்த அனுமன், இருட்டியதும் தன் உருவத்தைச் சுருக்கிக்கொண்டு மெல்ல ஊருக்குள் நுழைந்தான். அவனை எதிர்த்துத் தடுத்த இலங்கையின் காவல்தெய்வமான இலங்காதேவியைத் தாக்கித் தோல்வியுறச் செய்துவிட்டுச் சீதையைத் தேடும் பணியைத் தொடங்கினான்.

    ஒவ்வொரு வீடாய்ப் புகுந்து தேடிக்கொண்டு போனவன், இராவணன் இளவலாகிய கும்பகருணன் வீட்டையடைந்தான். அங்கே அமளிமிசை ஆதிசேடனைப் போலவும், கடலினைபோலவும், பேரிருள் போலவும் தன் பிரம்மாண்ட உருவத்தால் காட்சிதந்து உறங்கிக் கிடந்த கும்பகருணனைக் கண்டு இவன் இராவணனோ என்று ஐயுற்றுச் சினந்தான்.

    கும்பகருணனை இன்னும் சற்று நெருங்கிச்சென்று பார்த்து, இவனுக்குப் பத்துத் தலைகளுமில்லை; இருபது திண்புயங்களுமில்லை; ஆதலால் இவன் இராவணன் இல்லை என்று தெளிந்து, பெருகிவரும் வடவைத் தீயையொத்த தன் சினத்தை அறிவென்னும் கடல் நீரினால் அவித்தான் அனுமன்.

    குறுகிநோக்கி மற்று அவன்தலை ஒருபதும் குறித்த
    இறுகு திண்புயம் இருபதும் இவற்குஇலை என்னா
    மறுகிஏறிய முனிவுஎனும் வடவைவெங் கனலை
    அறிவு எனும்பெரும் பரவைஅம் புனலினால்
     அவித்தான். (கம்ப: ஊர்தேடு படலம் – 5072)

    மாட மாளிகைகள், மகளிரின் ஆடரங்குகள், கடவுளர் கோயில்கள், பட்டி மண்டபங்கள் எனப் பல இடங்களிலும் தன் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்த அனுமன் அடுத்து நுழைந்தது வீடணனின் இல்லத்தில்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • மாதவியின் மாண்பமை மடல்!

    -மேகலா இராமமூர்த்தி

    இந்திர விழாவின் இறுதிநாள் அது! புகார் நகரக் கடலில் மகிழ்ச்சியாய் நீராடிவிட்டுக் கடற்கரையில் இன்பப்பொழுது போக்கிக் கொண்டிருந்தனர் மக்கள். அவ்வாறே தாமும் பொழுதை இன்பமாய்க் கழிக்கவிரும்பிய கோவலனும் மாதவியும் ஏவலரும் தோழியரும் உடன்வரக் கடற்கரைச் சோலைக்குச் சென்று ஆங்கே ஓர் புன்னை மர நிழலில் விதானம் அமைத்து வெண்கால் கட்டிலில் அமர்ந்தனர். மாதவி தன்னிடமிருந்த யாழைக் கோவலனிடம் நீட்ட, அவன் அதில் சுதி கூட்டி, யாழ் மீட்டிக் கானல்வரிப் பாடல்களைப் பாடினான்.

    ஆடவரின் குற்றங்களைப் பெரிதுபடுத்தாதிருத்தல் மகளிரின் கடமை எனும் பொருள்பட அவன் பாடல்கள் அமைந்திருந்தன. அத்தோடு, தானொரு நெய்தல் நில மங்கையிடம் மையல் கொண்டது போன்ற உட்குறிப்புள்ள பாடல்களையும் பாடினான்.

    அடுத்து மாதவியின் முறை வந்தது. அவள் கோவலனின் கருத்தை மறுத்துரைக்கும் வகையில், ஆண்களின் நற்செயல்களே பெண்களுக்குப் பெருமை தருவன எனும் பொருளமையப் பாடினாள். அத்தோடு, தானும் ஓர் ஆடவனிடம் உள்ளத்தைப் பறிகொடுத்திருப்பது போன்ற குறிப்புத்தோன்ற அவள் பாட, கோவலனுக்குக் கோபம் வந்துவிடுகின்றது. ”பொழுதாயிற்றுப் புறப்படுவோம்!” என்று சொல்லிவிட்டு அவள் எழுவதற்கு முன்பாகவே ஏவலர் பின்தொடர எழுந்து போய்விடுகின்றான் அங்கிருந்து.

    இவ்விடத்தில் கானல்வரிப் பாடல்கள் குறித்தொரு செய்தியைச் சொல்ல விழைகின்றேன். கோவலனும் அவனைத் தொடர்ந்து மாதவி மடந்தையும் பாடிய கானல்வரிப் பாடல்கள் அருமையான இசைத்தமிழ்ப் பாடல்களாகும். இவற்றிற்குப் பண், தாளம் போன்றவையும் உள. எனவே, இப்பாடல்களை இசையரங்குகளில் இசைவாணர்கள் பாடிக்காட்டி இவற்றின் சிறப்பையும் சொல்நயத்தையும் தமிழ்மக்களுக்கு உணர்த்துதல் வேண்டும்.

    இனி நாம் விட்ட இடத்திலிருந்து தொடர்வோம்…

    தான் கிளம்புவதற்கு முன்பாகவே விரைந்து சென்றுவிட்ட கோவலன் செயலால் மாதவி வருத்தமுற்றாலும், அதனைத் தன் தோழியரிடம் காட்டிக்கொள்ளாமல் வீட்டுக்குச் சென்றாள். கோவலன் வீடுவந்து சேராதது அவளுக்கு வேதனையளிக்கவே, தாழை மடலொன்றை எடுத்து, ”இளவேனிலரசனும் அவனுக்குத் துணையாய் வரும் திங்கட்செல்வனும் அளிக்கும் வாட்டத்திலிருந்து என்னை மீட்டெடுக்க வாரீர்! இல்லையேல் அவ்வரசன் தன் மலர்வாளியால் என்னுயிரைக் கொள்வன்!” என்று கோவலனுக்கு மடல் தீட்டினாள். அதனைத் தோழி வசந்தமாலையிடம் கொடுத்துக் கோவலனிடம் காட்டி அவனைக் கூட்டிவரச் சொன்னாள். மாதவி கோவலனுக்கு வரைந்த முதல் மடல் இது!

    கூலங்கள் விற்கும் கடைத்தெருவில் கோவலனைக் கண்டுபிடித்த வசந்தமாலை, அம்மடலை அவனிடம் நீட்ட, அப்போது மாதவிபால் மிகுந்த சினத்தோடும் சீற்றத்தோடும் இருந்த கோவலன், ”அந்த ஆடல்மகளின் நடிப்பை இனியும் நான் நம்பத் தயாரில்லை” என்று காட்டமாய்ச் சொல்லி அம்மடலை ஏற்க மறுத்துவிட்டான். வருத்தத்தோடு திரும்பிவந்த  வசந்தமாலை அதனை மாதவியிடம் தெரிவித்தாள்.

    அதனைக் கேட்ட மாதவி, மாலை வரவில்லையாயினும் நாளைக் காலை எப்படியும் அவர் வந்துவிடுவார்; நாம் காண்போம் என்று அவளிடம் சொன்னாள் நம்பிக்கையோடு.

    மாலை வாரா ராயினும் மாணிழை
    காலைகாண் குவம்”
    (சிலப்: வேனிற் காதை – 115-116)

    ஆனால் யாழிசைமீது வந்தமர்ந்து கோவலனையும் மாதவியையும் பிரித்த ஊழ்வினையானது மீண்டும் அவ்விருவரும் சந்திக்கக்கூடிய வாய்ப்பில்லாமல் செய்துவிட்டது.

    மாதவியை நீங்கிய கோவலன், கண்ணகி மனைக்குச் சென்று அவளையும் அழைத்துக்கொண்டு மதுரைக்குப் புறப்படுகின்றான். அப்பயணத்தின் நோக்கம், அவள் சிலம்புகளை விற்று அப்பொருள்கொண்டு வாணிகஞ்செய்து தான் இழந்த பொருள்களை மீட்டெடுத்தலாகும். வழிநடைப் பயணத்தில் கௌந்தியடிகள் எனும் சமணப் பெண்துறவியார் அவர்களுக்குத் துணை ஆகின்றார். முதுவேனிற் காலத்தின் மூர்க்கமான வெப்பத்தை எதிர்கொண்டு, கடும்பயணம் மேற்கொள்கின்றனர் மூவரும்.

    மதுரைக்கு அணித்தே வந்துவிட்ட அவர்கள், வேலிசூழ்ந்த ஓரிடத்தில் இளைப்பாறுகின்றனர். அப்போது அவர்களை அங்கே விட்டுவிட்டுத் தான்மட்டும் அருகிலிருந்த நீர்நிலைக்குச் செல்கின்றான் கோவலன். அவனைக் கண்டான் மாதவியிடமிருந்து வந்திருந்த தூதுவனான கோசிகன் என்ற அந்தணன். வெயிலில் வாடிவதங்கி உருமாறிப் போயிருந்த கோவலனைக் கோசிகனுக்கு அடையாளம் தெரியவில்லை.

    அவன் கோவலன் தானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பிய அவன், ஒரு யுக்தி செய்தான். அங்கே அருகிலிருந்த பந்தலில் வாடிக்கிடந்த மாதவி (குருக்கத்தி) கொடியைப் பார்த்து, “கோவலன் பிரிவால் வருந்தி வாடிய மாதவிபோல் நீயும் வேனிலால் வாட்டமுற்றிருக்கிறாயோ மாதவி?” என்று கோவலன் காதில் விழுமாறு அக்கொடியிடம் அவன் கேட்கவே, அதைக் காதில்வாங்கிய கோவலன், ”நீ சொன்னதன் பொருள் என்ன?” என்று கோசிகன் அருகில்வந்து கேட்கவும், ”ஆகா! கண்டேன் கோவலனை” என்று தெளிந்த கோசிகன், கோவலன் புகாரைவிட்டு நீங்கியதால் அவன் பெற்றோரும் சுற்றத்தாரும் படும் துன்பத்தையும், மாதவியடைந்த மாளாத் துயரத்தையும் தெரிவித்தான். ஏவலர்கள் பல இடங்களில் கோவலனைத் தேடி அலைவதையும், இராமனைப் பிரிந்த அயோத்திபோல் புகார் நகரமக்கள் வருந்தியிருக்கும் அவலத்தையும் எடுத்துரைத்தான். அதன்பின்னர், மாதவி அவனுக்கு எழுதிய மடலை அவனிடம் நீட்டினான்.

    இது மாதவி கோவலனுக்கு எழுதிய இரண்டாவது மடல். இம்முறை கோவலன் அதனை மறுக்காமல் வாங்கிக்கொண்டான். மாதவியைப் பிரிந்து நீண்ட நாட்கள் ஆனபடியால் அவள் மீதிருந்த கோபம் அவனுக்குத் தணிந்திருந்தது. மடலிலிருந்து வீசிய அவள் கூந்தலின் நெய்வாசம் அவனைப் பழைய நினைவுகளுக்குள் மூழ்கவைத்தது. மடலைப் பிரித்துப் படித்தான்…

    ”அடிகளே! உங்கள் திருவடிகளில் நான் வீழ்ந்து வணங்குகின்றேன். குழப்பத்தோடு நான் எழுதுகின்ற இந்தப் புன்மொழிகளை தாங்கள் மனத்திலே கொள்ளவேண்டும். பெற்றோரைப் பேணும் பெரும்பணியைக் கைவிட்டதோடல்லாமல், நற்குடியிலே பிறந்த மனையாட்டியோடு, பூம்புகாரில் யாரும் அறியாவண்ணம், இரவிலே புறப்பட்டுப் போகும்வண்ணம் நிகழ்ந்த தவறு என்ன? அதனை அறியமுடியாமல், அத்தவறு என்னுடையதாக இருக்குமோ? பிறருடையதோ? என ஐயுற்று என் நெஞ்சம் கையற்றுக் கலங்கி நிற்கின்றது. ஒருவேளை, தவறு என்னுடையதாய் இருக்குமானால் அதனைத் தாங்கள் பொருட்படுத்தாது விடுதல் வேண்டும். மயக்கந் தீர்ந்த காட்சியுடைய மெய்யறிவாளரே, உம்மைப் போற்றுகின்றேன்!”

    ”அடிகள் முன்னர் யான்அடி வீழ்ந்தேன்
    வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்
    குரவர்பணி அன்றியும் குலப்பிறப் பாட்டியோடு
    இரவிடைக் கழிதற்கு என் பிழைப்பு அறியாது
    கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்
    பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி”
    (சிலப்: புறஞ்சேரியிறுத்த காதை – 87-92)  

    இம்மடலைப் படித்ததும் மாதவி குற்றமற்றவள்; அவளைப் பற்றித் தவறாக எண்ண வைத்தது தன் தீவினையே என்று தெளிந்தான் கோவலன். இம்மடல், தன் தந்தைக்குக் கொடுத்தனுப்புவதற்கும் பொருத்தமான செய்திகளைக் கொண்ட பொற்புடைய மடல் என்று முடிவுசெய்தவன், மாதவியின் மடலையே தன் தந்தைக்குத் தான் எழுதிய மடலாக அவரிடம் சேர்ப்பித்து அவரைத் தேற்றுமாறுக் கோசிகனிடம் கொடுத்தனுப்புகின்றான் என்கின்றது சிலம்பு.

    மாதவியின் இந்த மடல் அவளின் மாண்பை மட்டுமல்லாது தேர்ந்த சொற்களில் மடல் புனையும் அவளின் திறனையும் நமக்குத் தெற்றெனப் புலப்படுத்துகின்றது அல்லவா? 

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தது:

    சிலப்பதிகாரம் மூலமும் நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதிய உரையும்.

    படம் விக்கிபீடியாவிலிருந்து எடுத்தது.

     

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 35

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 35

    -மேகலா இராமமூர்த்தி

    மாரிக்காலம் முடிவுற்றும் சுக்கிரீவனின் படைகள் இராமனுக்கு உதவியாய் வந்துசேரவில்லை. சுக்கிரீவனின் இந்த நன்றிகொன்ற செயலை எண்ணிச் சினந்த இராமன், அவன் தவற்றைச் சுட்டிக்காட்டுமாறு இளவல் இலக்குவனைக் கிட்கிந்தைக்கு அனுப்பினான்.

    தமையனின் ஆணையையேற்று விரைந்து கிட்கிந்தை மலைக்குச் சென்ற இலக்குவன் அதன் உச்சியில் நின்ற தோற்றம் மலையின்மீது பொன்னிறமானதோர் ஆண்சிங்கம் நிற்பதைப் போன்றிருந்தது.

    சீற்றத்தொடு சீயமென இலக்குவன் குன்றின் உச்சியில் நிற்பதைக் கண்ட வானரர்கள், காலனைக் கண்டவர்கள்போல் கதிகலங்கி, அங்கதனை அடைந்து இலக்குவன் கிட்கிந்தைக்கு வந்துகொண்டிருக்கும் செய்தியை அறிவித்தார்கள்.

    அங்கதன் மறைவாக நின்று இலக்குவனின் கோப முகக்குறியைக் கண்டுகொண்டான். விரைந்து தன் சிறிய தாதையான சுக்கிரீவனிடம் சென்றான். விசுவகர்மாவின் மகனான நளன் எனும் வானரன் உருவாக்கிய அரண்மனையில் பஞ்சணையின்மீது இளமகளிர் தன் பாதம் வருட இன்துயிலில் ஆழ்ந்திருந்தான் சுக்கிரீவன்.

    அங்குவந்த அங்கதன் பதற்றத்துடன், ”எந்தையே…நான் சொல்வதைக் கேள்! இராமனின் இளவல் இலக்குவன் தன் மனத்திலுள்ள பெருங்கோபத்தை முகம் எடுத்துக்காட்ட, யாரும் தடுக்கவியலா வேகத்தொடு கிட்கிந்தைக்கு வந்து சேர்ந்துள்ளான். அதுகுறித்து உன்னுடைய உள்ளக் கருத்து என்ன?” என்று கேட்டான்.

    எந்தை கேள் அவ்
          இராமற்கு இளையவன்
    சிந்தையுள் நெடுஞ்
          சீற்றம் திரு முகம்
    தந்து அளிப்ப தடுப்ப
          அரும் வேகத்தன்
    வந்தனன் உன் மனக்
          கருத்து யாது என்றான். (கம்ப: கிட்கிந்தைப் படலம் – 4397)

    ஆனால், கள்ளருந்திய களிப்பிலும், இளமங்கையர் அருகிருந்து செய்யும் பணிவிடையிலும் மயங்கிக் கிடந்த சுக்கிரீவனிடமிருந்து எந்த விடையும் கிடைக்கவில்லை அங்கதனுக்கு.

    வாலி கணித்தபடியே சுக்கிரீவன் பூவியல் நறவம் மாந்திப் புந்தி வேறுற்றவனாகவும், கொடுத்த வாக்கை மறந்த பொறுப்பற்றவனாகவும் நடந்துகொண்டமைக்கு இந்தக் காட்சி நல்ல சாட்சி!

    சுக்கிரீவனின் நிலையைக்கண்ட அங்கதன், இனி இவனிடம் யோசனை கேட்டுப் பயனில்லை என்பதையுணர்ந்து அறிவிற் சிறந்த அனுமனைத் தேடிச்சென்று அவனையும் திறல்மிகு வீரர்களையும் அழைத்துக்கொண்டு தன் தாய் தாரை தங்கியிருக்கும் மாளிகைக்கு வந்தான்.

    இலக்குவனின் வருகை பற்றி அவளுக்கு அறிவித்து, மேலே நாம் செய்ய வேண்டியது என்ன என்று அவளை வினவினான் அங்கதன். சுக்கிரீவனின் நன்றியற்ற செயலால் ஏற்கனவே வெறுப்படைந்திருந்த தாரை, ”இராமன் சொன்ன கெடுவுக்குள் படைதிரட்டிக்கொண்டு செல்லுங்கள் என்று நான் பன்முறை சொல்லியும் நீங்கள் கேட்கவில்லை; இப்போது அதன் விளைவைச் சந்திக்கின்றீர்கள்; வாலியைக் கொன்று அரசாட்சியை உங்களுக்கு (சுக்கிரீவனுக்கு) அளித்த பேராற்றல் உடைய அவர்கள் உங்கள் அலட்சியச் செயலைப் பொறுத்துக்கொண்டிருப்பார்களா? அவர்கள் உங்களோடு போருக்கு வந்தால் நீங்கள் மாளவேண்டியதுதான்” என்றாள் கோபத்தோடு.

    அந்த நேரத்தில் இலக்குவன் எளிதில் நகருக்குள் நுழையாதபடி வானரர்கள் நகரின் வாயிற்கதவைத் தாழிட்டுப் பாறைகளை வைத்து அடைத்தனர். இலக்குவன் உள்ளேவந்தால் அவனை நையப் புடைப்போம் என எண்ணிக் கையில் பெரும் மரங்களையும் பாறைகளையும் வைத்துக்கொண்டு தயாராக நின்றனர்.

    தன்னிடமிருந்து தப்புவதற்காக வானரர்கள் செய்த வேடிக்கையான செயல்களைக் கண்டு எள்ளலோடு நகைத்த இலக்குவன், தன் தாமரைபுரை தாளினால் அவ்வாயிற் கதவினை மிக எளிதாகத் தள்ளினான். அதனால், பெரும் பாறைகளால் முட்டுக்கொடுக்கப்பட்ட வாயிற்கதவோடு மதிலும் சேர்ந்து சிதைந்துபோனது. இந்நிகழ்வு, தெய்வத்தின் திருவடிபட்ட அளவில் தீர்த்தற்கரிய தீவினைகளும் அழிந்துபோவதை ஒத்திருந்தது என்கின்றார் கம்பர்.

    காவல் மா மதிலும் கதவும் கடி
    மேவும் வாயில் அடுக்கிய வெற்பொடும்
    தேவு சேவடி தீண்டலும் தீண்ட அரும்
    பாவம் ஆம் என பற்று அழிந்து இற்றவால்.
    (கம்ப – கிட்கிந்தைப் படலம் – 4409)

    அரணைத் திரணமாய் மதித்து இலக்குவன் தள்ளியது கண்டு உயிரச்சம் கொண்ட வானரர்கள், கிட்கிந்தை மலையைவிட்டு விரைந்தோடிக் கானடைந்ததால் விண்மீனிலா வானம்போல் வெறுமையாய்க் காட்சியளித்தது கிட்கிந்தை.

    நிலைமையின் விபரீதத்தை அறிந்த தாரை, மகளிர்குழாத்தோடும் சென்று இலக்குவன் வரும் வழியில் நின்றாள். சினத்தோடு சீறி வந்துகொண்டிருந்த இலக்குவன், மகளிர்குழாம் எதிர்நிற்பது கண்டு வேகந்தணிந்து அவர்களை நேர்நோக்க நாணித் தலைகவிழ்ந்துகொண்டான். அவன் தன் வில்லினை நிலத்தில் ஊன்றி, வானர மகளிரை நிமிர்ந்துநோக்கத் தயங்கிநின்ற அக்காட்சியானது, ”மாமியர் கூட்டத்தினிடையே நாணிநின்ற மருமகனை ஒத்திருந்தது” என்று நகைச்சுவை தோன்றக் கூறுகின்றார் கவிவலாரான கம்பர்.

    இலக்குவனின் அருகில்வந்த தாரை, ”ஐய! நீ சீற்றதோடு வருவதுகண்ட வானரர்கள் நீ வந்த காரணம் அறியாது உன்னைக் கண்டு அஞ்சுகின்றனர். இராமனின் திருவடிகளை நீங்காதவனாகிய நீ இங்குவந்த காரணத்தை எமக்கு அறியத்தருவாய்” என்று அன்போடு வினவினாள்.

    பகலில் தோன்றிய நிலவுபோல் வந்துநின்ற தாரையைச் சற்றே நிமிர்ந்து நோக்கினான் இலக்குவன். மங்கல அணிகளற்று, கூந்தலில் மலர்களற்று, உடலை ஆடையால் முழுவதும் போர்த்துக்கொண்டு நின்ற அவளின் கைம்மைக் கோலம் தயரதனைப் பிரிந்த தம் தாயரின் கோலத்தை அவனுக்கு நினைவூட்டவே, அதனைக் காண ஆற்றாது அவன் நயனங்கள் பனித்தன; நெஞ்சம் வேதனையில் ஆழ்ந்தது.

    மனத்தைத் தேற்றிக்கொண்டு தாரையை நோக்கிய இலக்குவன், ”சுக்கிரீவன் படைகளோடு சீதையைத் தேட உதவிக்கு வருவேன் என்று சொல்லியிருந்தான்; ஆனால் சொன்னதை மறந்துவிட்டான்; அவன் நிலையை அறிந்துவர அண்ணனிட்ட கட்டளையை ஏற்று இங்கு வந்தேன்! அதுகுறித்து விளம்புக!” என்றான்.

    சமயோசித அறிவு நிரம்பிய தாரை, ”செம்மையான உள்ளத்தோடு சுக்கிரீவனின் பெரும்பகையை மாற்றி (வாலியை அழித்தமை), அவனுக்கு அரசாட்சியை அளித்திருக்கின்றீர்கள். நீர் செய்த பேருதவியைச் சுக்கிரீவனும் அவனுடைய கூட்டத்தாரும் சிறுமையாய்க் கருதிப் புறக்கணிப்பரேல் இப்பிறவியிலேயே வறுமையடைந்து செல்வத்தோடு புகழும் அழிந்து, மறுமையிலும் நற்கதி பெறாது நரகெய்துவர்” என்று பதிலிறுத்தாள்.

    செம்மை சேர் உள்ளத்தீர்கள் செய்த
          பேர் உதவி தீரா
    வெம்மை சேர் பகையும்
          மாற்றி அரசு வீற்றிருக்கவீட்டீர்
    உம்மையே இகழ்வர் என்னின்
          எளிமையாய் ஒழிவது ஒன்றோ
    இம்மையே வறுமை எய்தி
         இருமையும் இழப்பர் அன்றே.  (கம்ப: கிட்கிந்தைப் படலம் – 4431)

    இராமன் சுக்கிரீவனுக்குச் செய்த உதவியின் சிறப்பு குறித்துத் தாரை சொன்ன சொற்கள், அமுத தாரையென இலக்குவனின் காதில் விழுந்தன; அவன் சினம் தணிந்தான். அதுதான் இலக்குவனைச் சந்திக்கச் சரியான சமயம் என்றுணர்ந்த மாருதி, மெல்ல இலக்குவனின் அருகில் வந்தான்.

    வந்தவன் இலக்குவனின் அடிபணிய, அவனை நோக்கிய இலக்குவன், ”கேள்வி ஞானத்தில் வரம்பில்லாதவனாகிய நீயும் முன்பு நடந்தவற்றையெல்லாம் மறந்துவிட்டாய் அல்லவா?” என்று மாருதியைப் பார்த்து ஏமாற்றத்தோடு வினவ, அதனை உடனே மறுத்த மாருதி,

    ”ஐயனே! அன்புமிகு தாயையும் தந்தையையும் குருவையும் தெய்வத்தின் இடத்திலுள்ள அந்தணர்களையும் பசுக்களையும் குழந்தைகளையும் பாவையரையும் கொலை செய்தவர்க்கும் அந்தப் பாவங்களைப் போக்குதற்குரிய கழுவாய் உண்டு. ஆனால், காலத்தினாற் செய்த அழியாத பேருதவியை மறந்தவர்க்கு அப்பாவத்திலிருந்து மீளும் வழி ஒன்றேனும் உண்டோ? இல்லை!” என்றான்.

    சிதைவு அகல் காதல் தாயை
          தந்தையை குருவை தெய்வப்
    பதவி அந்தணரை ஆவை
          பாலரை பாவைமாரை
    வதை புரிகுநர்க்கும் உண்டாம் மாற்றல்
          ஆம் ஆற்றல் மாயா
    உதவி கொன்றார்க்கு ஒன்றானும்
          ஒழிக்கலாம் உபாயம் உண்டோ. (கம்ப: கிட்கிந்தைப் படலம் – 4435)

    எத்தகைய நன்மையை மறந்தவர்க்கும் அப்பாவத்திலிருந்து தப்பிப் பிழைக்கும் வழியுண்டு; ஆனால் காலத்தினாற் செய்த நன்மையை மறந்தவர்க்கு அப்பாவத்திலிருந்து விடுபட வழியே இல்லை என்பதுதானே வள்ளுவரின் வாய்மொழியும்?

    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
    (110)

    வள்ளுவரின் இக்கருத்தை விரிவான சான்றுகளோடு விளக்குகின்றது சங்கப் புலவர் ஆலத்தூர்கிழாரின் புறநானூற்றுப் பாடல்.

    ”பசுவின் முலையறுத்த தீவினையாளர்களுக்கும், சிறந்த அணிகலன்களை அணிந்த மகளிரின் கருவைச் சிதைத்தவர்களுக்கும், பெற்றோர்களுக்குத் தவறிழைத்தவர்களுக்கும்கூட அவர்கள் செய்த கொடுந் தீவினைகளிலிருந்து விடுபடக் கழுவாய் (பரிகாரம்) உண்டு. ஆனால், உலகமே தலைகீழாய்ப் பெயர்ந்தாலும் ஒருவன் செய்த நன்மையைப் போற்றாது புதைத்தோர்க்கு அப்பாவத்திலிருந்து விடுபட வழியில்லை என்று அறநூல் தெரிவிக்கின்றது” என்பது அப்பாடல் நமக்குத் தரும் செய்தி.

    ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்
    மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
    குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
    வழுவாய் மருங்கின் கழுவாயும் உளஎன
    நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்

    செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்என
    அறம் பாடிற்றே ஆயிழை கணவ…”
      (புறம்: 34)

    ஈண்டு அறம் பாடிற்று என்று புலவர் குறிப்பிடுவது திருக்குறளைத்தான் என்பது தி.வை.சதாசிவ பண்டாரத்தார் உள்ளிட்ட பல இலக்கிய ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

    ஆலத்தூர்கிழாருடைய பாடலின் பிரதிபலிப்பாகவே, மாருதியின் வாக்காக அமைந்த, மேற்கண்ட கம்பரின் பாடலும் விளங்குவது கண்கூடு. சங்கப் பாடல்களில் கம்பருக்கிருந்த பற்றையும் பயிற்சியையும் இது தெற்றெனப் புலப்படுத்துகின்றது.

    தொடர்ந்து இலக்குவனிடம் பேசிய மாருதி, ”ஆண் தகையே! வானர அரசனாகிய சுக்கிரீவன் உம் ஆணையை மறக்கவில்லை. வலிமையுள்ள வானரப் படைகளைத் திரட்டிச் சேர்ப்பதற்கு எல்லாத் திசைகளிலும் அவன் தூதர்களை அனுப்பியுள்ளான். அவ்வானர வீரர்கள் வருவதை எதிர்பார்த்துக் காத்திருப்பதால் சற்றுக் காலதாமதம் ஆகிவிட்டது. நீங்கள் அளித்த அரசச் செல்வத்தையும் அதனைப் பெற்றுவக்கும் சுக்கிரீவனையும் நாம் காணச் செல்வோம் வாருங்கள்!” என்று பணிவோடு தெரிவிக்கவும் இலக்குவனின் கோபம் அடங்கியது.

    மாருதியோடு இலக்குவன் சென்றான். வழியில் வாலி மைந்தனான அங்கதன் எதிர்வந்து இலக்குவனை வணங்கவே, ”என் வரவினை உன் தந்தைக்குத் தெரிவி” என்றான் இலக்குவன்.

    அங்கதன் சுக்கிரீவனின் அரண்மனைக்கு மீண்டும் சென்று அவனைத் துயிலெழுப்பினான். மெல்லக் கண்விழித்த சுக்கிரீவனிடம், சொல்லிய காலக்கெடு முடிந்தபின்னும் வானரர்கள் சேனையொடு இராமனைக் காணச் செல்லாததால் இலக்குவன் சீற்றத்தோடு கிட்கிந்தைக்கு வந்திருப்பதையும், சேனை திரட்டச் சுக்கிரீவன் தூதர்களை அனுப்பியிருப்பதால்தான் காலதாமதம் ஆகிறது என்று கூறி தாரையும் அனுமனும் நிலைமையைச் சமாளித்து இலக்குவனின் சினத்தீயைத் தணித்திருப்பதையும் தெரிவித்தான்.

    அதனைக்கேட்ட சுக்கிரீவன், நறவின் பிடியில் தான் சிக்கியதால் நேர்ந்த அவலமே இது என்று தன்பால் கழிவிரக்கம் கொண்டான். இனி நறவைத் தொடுவதில்லை எனச் சூளுரைத்து, “இலக்குவனை நீயே இங்கு அழைத்து வருக!” என்று அங்கதனை அனுப்பிவிட்டு இலக்குவனை வரவேற்கும் வகையில் தன் அரண்மனைத் தலைவாயிலில் சுற்றஞ்சூழ வந்துநின்றான்.

    இலக்குவன் அங்கே வர, அரச குலத்தவரை வரவேற்பதற்குரிய முறைப்படி அவனை வரவேற்ற சுக்கிரீவன், இலக்குவனை அரண்மனைக்குள் அழைத்துச்சென்று உணவுண்ணும்படி உபசரிக்க, ”சீதையின் இருப்பிடத்தை நீ காட்டுவதே எங்களுக்கு அமுதம் ஊட்டுவதற்கு ஒப்பாகும்” எனவுரைத்து இலக்குவன் உணவுண்ண மறுத்துவிட்டான்.

    ”சுக்கிரீவன் அதுகண்டு மனம் வருந்தி, ”நம் சேனைகளையெல்லாம் திரட்டிக்கொண்டு நீ இராமனிடம் விரைவில் வந்துசேர்” என்று மாருதியிடம் கூறிவிட்டு இலக்குவனோடு சென்று இராமனைச் சந்தித்தான்; உரிய காலத்தில் படையுடன் வராததற்குத் தன் வருத்தத்தைத் தெரிவித்தான்.     

    மறுநாள் காலை வெள்ளம்போல் வானர சேனைகள் நாலா பக்கமிருந்தும் வந்து குவிந்தன. அதனைக் கண்ட இராமன் இலக்குவனிடம், ”கடலினைக் கண்டோம் என்று சொல்பவர் யாரும் அதனை முழுமையாய்க் கண்டவர் இல்லை; அஃதொப்ப இந்த வலிமைமிகு சேனையின் உடலை (அதன் நடுப்பகுதியை) மட்டுமே நாமும் காணமுடிகின்றது; இதன் முடிவைக் காண இயலவில்லை” என்றான் வியந்து!

    அடல்கொண்டு ஓங்கிய சேனைக்கு
          நாமும் நம் அறிவால்
    உடல் கண்டோம் இனி முடிவு
          உள காணுமாறு உளதோ
    மடல் கொண்டு ஓங்கிய அலங்கலாய்
         மண்ணிடை மாக்கள்
    கடல் கண்டோம் என்பர் யாவரே
          முடிவு உறக் கண்டார். (கம்ப: தானைகாண் படலம் – 4547)

    அதனை ஆமோதித்த இளவல் இலக்குவன், ”ஆம், எதனையும் எளிதில் முடிக்கவல்ல இந்தச் சேனையின் துணையால் அறம் வெல்லும் பாவம் தோற்கும்” என்றான் அழுத்தமாக.

    [தொடரும்]

    *****

    1. கம்பராமாயணம் – கோவைக் கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • தமிழகம் கண்ட தலைசிறந்த வரலாற்றறிஞர்

    தமிழகம் கண்ட தலைசிறந்த வரலாற்றறிஞர்

    -மேகலா இராமமூர்த்தி

    தமிழக வரலாற்றின்மீது புத்தொளி பாய்ச்சி, இருண்டுகிடந்த பகுதிகளை வெளிச்சப்படுத்திய ஆராய்ச்சியாளர்களுள் குறிப்பிடத்தக்கவர், கும்பகோணத்துக்கு  அருகிலுள்ள திருப்புறம்பயத்தில் 1892ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் நாள், வைத்தியலிங்கம் மீனாட்சி இணையருக்கு மகனாய்ப் பிறந்த சதாசிவ பண்டாரத்தார்.

    தொடக்கக் கல்வியையும் நடுநிலைக் கல்வியையும் திருப்புறம்பயத்திலும் புளியஞ்சேரியிலும் பயின்றார் பண்டாரத்தார். இயல்பிலேயே தமக்கிருந்த தமிழ் ஈடுபாட்டின் காரணமாய்த் தமிழ் இலக்கண இலக்கியங்களைத் தாமே முயன்று கற்று நல்ல புலமை பெற்றார். உயர்நிலைப் பள்ளியில் பயிலும்போது, நற்றிணை உள்ளிட்ட சங்க நூல்களுக்குச் சிறந்த உரைவரைந்த பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், வலம்புரி சு. பாலசுப்பிரமணியப் பிள்ளை போன்ற தமிழறிஞர்களின் தொடர்பு சதாசிவ பண்டாரத்தார்க்குக் கிட்டியது. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், தமிழ் இலக்கியத்தில் மட்டுமன்றித் தமிழ்க் கல்வெட்டுத்துறையிலும் மிகுந்த புலமையும் ஈடுபாடும் கொண்டவர் என்பது குறிக்கத்தக்கது. அவரோடு ஏற்பட்ட பழக்கத்தால் பண்டாரத்தார்க்கு இலக்கியத்திலும் கல்வெட்டுத்துறையிலும் நல்ல ஈடுபாடு ஏற்பட்டது.

    குடந்தை வாணாதுறை உயர்நிலைப் பள்ளியில் 1917ஆம் ஆண்டு தலைமைத் தமிழாசிரியராய்ப் பொறுப்பேற்ற சதாசிவ பண்டாரத்தார், அங்கே 25 ஆண்டுகள் பணிபுரிந்து மாணாக்கர்களுக்கு நற்றமிழறிவை ஊட்டி வந்தார். அதன்பின்னர், அண்ணாமலைப் பல்கலைக்கழக நிறுவனர் அரசர் அண்ணாமலையாரின் அழைப்பிற்கிணங்க, அண்ணாமலைப் பல்கலைக்கழத் தமிழாராய்ச்சித் துறையில் 1942 முதல் பணியாற்றத் தொடங்கினார். அப்பணி 1960 வரை நீடித்தது.

    அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலத்தே ஆங்கு ஆராய்ச்சித்துறைத் தலைவராயிருந்த சிதம்பரநாதன் செட்டியாரின் விருப்பத்திற்கிணங்கத் தமிழிலக்கிய வரலாற்றை எழுதும் பெரும்பணியை மேற்கொண்டு கி.பி. 250 முதல் கி.பி. 600 வரையிலான காலக்கட்டத்தில் எழுந்த தமிழ்நூல்கள் குறித்து ஆராய்ந்து எழுதியுள்ளார் பண்டாரத்தார்.

    தமிழிலக்கிய வரலாற்றைத் தொடர்ந்து விரிவாக எழுதவேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாகவும், தமிழிலக்கிய வரலாறு கல்லூரி மாணவர்களுக்கு ஒரு பாடமாக அப்போது இருந்தமையாலும் கி.பி. 13, 14, 15ஆம் நூற்றாண்டுகளில் படைக்கப்பட்ட தமிழிலக்கியங்களின் வரலாற்றையும் தாம் ஆய்ந்து எழுதியதாய்த் தம் நூற்பதிப்பின் முன்னுரையில் குறிப்பிடுகின்றார் பண்டாரத்தார்.

    மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான ’செந்தமிழ்’, கரந்தைத் தமிழ்ச்சங்க வெளியீடான ’தமிழ்ப்பொழில்’ ஆகிய இரண்டு திங்களிதழ்களிலும் சதாசிவ பண்டாரத்தாரின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் தொடர்ந்து இடம்பெற்றுவந்தன. ’பாண்டியர் வரலாறு’ என்ற நூல் முதலில் செந்தமிழிலும், தமிழ்ப்பொழிலிலும் தொடர்கட்டுரைகளாக வெளிவந்து பின் நூல்வடிவம் பெற்றதாகும்.

    சதாசிவ பண்டாரத்தாரின் இலக்கிய ஆராய்ச்சி நூலின் வாயிலாய் நாம் அறியும் அரிய செய்திகள் பல. அவற்றில் சிலவற்றை ஈண்டுக் குறிப்பிட விரும்புகிறேன்.

    பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகத் திருக்குறள் இடம்பெற்றிருந்தபோதிலும் இந்நூல் கடைச்சங்க காலத்தின் இறுதிக்குச் சில நூற்றாண்டுகள் முன்பு எழுதப்பட்டிருக்கவேண்டும். ஏனெனில், திருக்குறள் கருத்துக்கள் பல சங்க நூல்களில் காணக் கிடைக்கின்றன.

    ”பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
    நாகரிகம் வேண்டு பவர்”
    என்ற குறள் கருத்து,

    முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்” என்று நற்றிணையில் இடம்பெற்றிருப்பதையும்,

    ”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்ந்நன்றி கொன்ற மகற்கு”
    என்ற வள்ளுவர் வாய்மொழி,

    ஆலத்தூர்கிழாரின் புறநானூற்றுப் பாடலில்,

    ”செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென அறம் பாடிற்றே
    ஆயிழை கணவ”
    என்று வந்திருப்பதையும் சுட்டிக்காட்டித் திருக்குறள் கடைச்சங்க கால நூலே என்று உறுதிபடத் தெரிவிக்கின்றார் பண்டாரத்தார்.

    இவ்வாறே பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் இணைக்கப்பட்டுள்ள மற்றொரு நூலான நாலடியார், 8ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பது சதாசிவ பண்டாரத்தாரின் கருத்தாகும்.  முத்தரையர் என்ற பட்டத்தோடு ஆட்சிபுரிந்த குறுநில மன்னர்களின் சிறப்பை நாலடியாரின் 200 மற்றும் 296ஆம் பாடல்கள் குறிப்பிடுகின்றன. முத்தரையர் பற்றிய குறிப்புகளை நாம் 8ஆம் நூற்றாண்டில்தான் அறியமுடிகின்றது; எனவே நாலடியார் 8ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகவே இருக்கமுடியும் என்பதைக் கல்வெட்டுச் சான்றுகளோடு நிறுவுகின்றார் அவர்.

    திருமூலர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் ஆறாம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலும் வாழ்ந்தவர் என்பதையும் சான்றுகளுடன் மெய்ப்பிக்கின்றார் சதாசிவ பண்டாரத்தார். தில்லையம்பலத்தையும் பொன்னம்பலத்தையும் புகழ்ந்து பாடியுள்ளார் திருமூலர். தில்லையம்பலத்தில் ஆடவல்லானுக்குப் பொன்கூரை வேய்ந்த பல்லவ வேந்தன் சிம்மவர்மன், கி.பி. ஐந்தாம் நூற்றாண்டினன். ஆதலால், இவனுடைய காலமே திருமூலர் காலமாகும். சைவ சித்தாந்தம் என்ற வடசொல்லை முதலில் தமிழில் பயன்படுத்தியவர் திருமூலரே ஆவார் என்று குறிப்பிடும் பண்டாரத்தார், பின்னர் இச்சொல்லைச் சமயக் குரவர்கள் தம் பாடல்களில் கையாண்டனர் என்கிறார்.

    கடைச்சங்கத்தின் அழிவு எவ்வாறு நேர்ந்தது என்பதை ஆராய்ந்து சதாசிவ பண்டாரத்தார் முன்வைக்கும் கருத்துக்களாவன:

    மதுரை மாநகரில் நடைபெற்றுவந்த கடைச்சங்கம் கி.பி. 3ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அழிந்தமைக்குக் காரணம், பாண்டிய நாட்டில் ஏற்பட்ட பஞ்சம்தான் என்று இறையனார் அகப்பொருளுரையும், மணிமேகலைக் காப்பியத்தின் வரிகளும் தெரிவிக்கின்றன. அப்பஞ்சத்தினாலேயே பாண்டி நாட்டுப் புலவர்கள் வேறு நாடுகளுக்குச் சென்று உயிர்வாழ நேர்ந்தது என்கின்றது இறையனார் அகப்பொருளுரை. ஆனால் பஞ்சம் ஏற்பட்டதால்தான் கடைச்சங்கம் வீழ்ச்சியுற்றது எனும் கருத்து ஏற்றுக்கொள்ளத்தக்கதாய் இல்லை. கி.பி. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாண்டிய நாடு வலிகுன்றிக் களப்பிரர் ஆட்சிக்கு உட்பட்டது. அதேவேளை தொண்டைநாடு பல்லவர் ஆளுகைக்கு உட்பட்டது.

    இவ்வாறு தமிழகம் தமிழரல்லாத அயலார் ஆட்சிக்கு உட்பட்டதால் தமிழும் தமிழ் மக்களும் பாதிப்புக்கும் வீழ்ச்சிக்கும் பல வகைகளில் ஆளாயினர். களப்பிரர் எழுச்சி, பாண்டிய நாட்டில் பல மாறுதல்களை உண்டுபண்ணிவிட்டது.  அவர்களுடைய பாலி மொழியும் பிராகிருத மொழியும் அரியேணையேறி ஆட்சிசெய்யத் தொடங்கின. இதன்விளைவாய்த் தமிழ்மொழி, தமிழ்க்கலைகள், தமிழர் நாகரிகம் ஆகியவை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தமையை வேள்விக்குடிச் செப்பேடுகள் வாயிலாய் நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. எனவே கி.பி. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட களப்பிரர் எழுச்சியாலேயே கடைச்சங்கம் அழிந்தது என்பதில் சிறிதும் ஐயமில்லை என்பது சதாசிவ பண்டாரத்தார் ஆய்ந்துகண்ட முடிபாகும்.  [களப்பிரர் காலத்தை இருண்ட காலமென்று இயம்புவது பொருந்தாது; அது பொற்காலமே என்பதை நிறுவ நாம் அக்காலத்திய அறநூல்களைச் சான்றுகாட்டினாலும், புதிய பாவினங்கள் தோன்றின என்று தாழிசையையும் விருத்தத்தையும் பட்டியலிட்டாலும், களப்பிரர் கால நூல்கள், கருத்துச் செறிவிலோ மொழிவளத்திலோ, சங்க நூல்களுக்கு இணையாகாத எளிய நூல்களாகவே இருப்பது கண்கூடு. இஃது அக்காலத்தில் நிலவிய தமிழிலக்கிய வறட்சியைத் துலக்கமாய்ப் புலப்படுத்தவே செய்கின்றது.]

    பண்டாரத்தாரின் குறிப்பிடத்தக்க நூலான பாண்டியர் வரலாறு கல்வெட்டுகள், செப்பேடுகள், தமிழிலக்கிய நூல்கள், பிற ஆராய்ச்சி நூல்கள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். கடைச்சங்க காலத்திற்கு முன்னர்த் தொடங்கி, கி.பி. 17ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் பாண்டிய நாட்டில் ஆட்சிபுரிந்த மன்னர்களின் வரலாற்றை அறிந்துகொள்ள இந்நூல் உதவுகின்றது. பாண்டிய நாட்டை ஆட்சிபுரிந்த மன்னர்களின் பெயர்கள், ஆட்சிக் காலம், ஆட்சி எல்லை, அரசியல் நிலை, மெய்க்கீர்த்தி என அனைத்தும் தெளிவாய்ப் வகுத்தும் பகுத்தும் இந்நூலில் உரைக்கப்பெற்றுள்ளன.

    தமிழகத்தைப் பொறுத்தவரை, சோழர்களுக்கென்று தனித்த பீடும் பெருமையும் உண்டு. காவிரி புரக்கும் சோழநாட்டின் வற்றாப் பெருவளத்தைச் சங்கப்பாடல்கள் பலவும் வாயூறிப் பேசுகின்றன.

    பல்லவர்களைத் தொடர்ந்து தமிழகத்தில் கி.பி. 9ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஆட்சியமைத்தவர்கள் பிற்காலச் சோழர்கள். இவர்களின் வரலாற்றை நீலகண்ட சாஸ்திரியார், சதாசிவ பண்டாரத்தார், மு. அருணாசலம் ஆகியோர் ஆராய்ந்து எழுதியிருக்கின்றனர்.

    பிற்காலச் சோழர்களின் ஆட்சியை நிறுவிய விசயாலயச் சோழன் காலம் தொடங்கிச் சோழர்களின் ஆட்சி முடிவுக்கு வந்த மூன்றாம் இராசேந்திர சோழனின் காலம் வரையிலான சோழர்களின் ஆட்சிமுறை, அரசர்கள் மேற்கொண்ட அரும்பணிகள், அவர்களிடம் அரசியல் அதிகாரிகளாய்ப் பணியாற்றியோர், அவ் அரசர்கள் ஈடுபட்ட போர்கள், சூட்டிக்கொண்ட விருதுப்பெயர்கள் என அனைத்தையும் தம்முடைய ’பிற்காலச் சோழர் சரித்திரம்’ என்ற நூலில் தக்க சான்றுகளோடு விளக்கியுள்ளார் சதாசிவ பண்டாரத்தார். இதற்காக, சோழர் காலத்தைச் சேர்ந்த சுமார் 8,000 கல்வெட்டுகளை ஊர் ஊராய்த் தேடிச்சென்று படித்தார்; அந்தத் தரவுகளின் அடிப்படையில் சோழர் சரித்திரத்தைத் தமிழில் எழுதி முடித்தார் என்று அறிகின்றோம். மூன்று தொகுதிகளாக எழுதப்பட்ட இந்நூலை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.

    இந்நூலில் சோழர் ஆட்சிமுறை, சோழர்காலச் சமுதாயம் பற்றிப் பண்டாரத்தார் குறிப்பிட்டிருக்கும் சுவையான செய்திகளில் சில நம் கவனத்திற்கு…

    சோழமன்னர்கள் தங்கள் ஆட்சியிலிருந்த பகுதிகளை மண்டலங்களாகவும் வளநாடுகளாகவும் கூற்றங்களாகவும் பிரித்து ஆட்சிபுரிந்து வந்தனர். அரசியல் நிர்வாகத்திற்குத் துணைபுரிந்தவர்கள் ’உடன்கூட்டத்ததிகாரிகள்’ என்று அழைக்கப்பட்டனர். சோழ மன்னர்களின் ஆட்சி சிறப்பாக அமைந்ததற்குக் காரணம், ஊராட்சி மன்றங்களின் தன்னலமற்ற தொண்டேயாகும். ஊராட்சிகளை நடாத்துதற்கு நான்கு விதமான சபைகள் அன்று இருந்தன. அவை கிராம சபை, தேவதானத்துச் சபை, ஊர்ச் சபை, நகர சபை ஆகியன.

    தங்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடுகளின் விளைநிலங்களைக் கோல்கொண்டு அளந்து வரிவிதித்தனர் சோழ மன்னர்கள். நிலங்களை இவ்வாறு அளவிட்டு நிலவரி விதித்ததுபோல் மக்கட்தொகையினை அளவிட்டு அறிவதில் அவர்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை எனத் தெரிகின்றது.

    வேந்தர்கள், குறுநில மன்னர்கள், செல்வந்தர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரைக் கொண்டிருந்தபோதினும், பொதுமக்கள் ஒருவனுக்கு ஒருத்தியாகவே வாழ்ந்துவந்தனர். உடன்கட்டை ஏறும் வழக்கமும்கூட உயர்குடியினரிடம் குறிப்பாக அரசர்குடிப் பெண்டிரிடம் இருந்ததே தவிர அது சமூக வழக்கமாய்ப் பின்பற்றப்படவில்லை என்று தெரிவிக்கின்றார் பண்டாரத்தார்.

    பண்டாரத்தாரின் மற்றொரு வரலாற்று நூல், ’முதற்குலோத்துங்க சோழன்’ என்பதாகும். இந்நூலைப் பாராட்டிய தமிழ்த்தாத்தா உ.வே.சா., பின்வருமாறு குறிப்பிடுகின்றார்…

    ”கும்பகோணம் வாணாதுறை ஹைஸ்கூல் தமிழ்ப்பண்டிதர் சிரஞ்சீவி சதாசிவ பண்டாரத்தார் இயற்றிய முதற்குலோத்துங்க சோழன் சரித்திரத்தை முற்றும் படித்துப் பார்த்தேன். இயற்றியவர் நெடுங்காலமாகச் சிலாசாசனங்கள், சங்கச் செய்யுட்கள் முதலியவற்றை ஆராய்ந்தவரென்பதை இது புலப்படுத்துகின்றது. தமிழ்மொழி இக்காலத்தில் பல துறைகளிலும் வளர்ச்சியுற்று வருகின்றதென்பதற்கு இந்நூலாசிரியரது கல்வி முறையையே ஓர் இலக்காகக் கூறலாம். தமிழ் அரசர்களுடைய சரித்திரங்களை அறிந்துகொள்வது இன்றியமையாதது ஆகையால், எளிய நடையில் நன்றாக முறைப்படுத்தி எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம் பொதுவாக யாவருக்கும், சிறப்பாகப் பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கும் மிகப் பயன்படுமென்று எண்ணுகின்றேன்” என்கிறார்.

    அறிஞர் சதாசிவ பண்டாரத்தாரின் அயராத உழைப்பாலேயே நம் தமிழ்நாட்டு வரலாறு நன்கு விளக்கமுற்றது. இலக்கியங்களில் விளக்கம்பெறாத இடங்களையும், இலக்கியங்களின் காலத்தையும் அவர் கல்வெட்டுகளின் துணைகொண்டு விளக்கிக் காட்டினார். தமிழ்மொழியின்பால் அவருக்குக்கிருந்த ஈடுபாடு அவருடைய ஆராய்ச்சிகளில் தென்பட்டதென்றாலும் அவருடைய ஆராய்ச்சி நேர்மையை அது சற்றும் குலைத்துவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சதாசிவ பண்டாரத்தாரின் ஆராய்ச்சிப் பணிகளைச் சிறப்பிக்கும் வகையில், பேராசிரியர் கார்மேகக் கோனார், பண்டாரத்தார்க்கு ’ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்னும் பட்டத்தை மார்ச் 29, 1956இல் வழங்கினார்.

    தம் வாழ்க்கையை முற்றாக ஆராய்ச்சிக்கும் எழுத்துக்குமே அளித்துவிட்ட சதாசிவ பண்டாரத்தார், 1960ஆம் ஆண்டுத் தொடக்கத்தில், தம்முடைய 67ஆம் அகவையில் சிதம்பரத்திலுள்ள அண்ணாமலை நகரில் காலமானார்.  

    கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு அமைந்திருக்க வேண்டிய வரலாற்றறிவு, ஆராய்ச்சித்திறன் ஆகியவற்றோடு தமிழ்ப் புலமையும், ஆங்கிலப் பயிற்சியும், இடையறா முயற்சியும் கொண்டவராய்த் திகழ்ந்து,  காய்தல் உவத்தலின்றி உண்மைகளை மட்டுமே வரலாறாக ஆவணப்படுத்தியிருக்கும் சதாசிவ பண்டாரத்தார் போன்ற பேரறிஞர்களைத் தமிழக இளைஞர்களுக்கு இன்று யாரென்றே தெரியவில்லை என்பதுதான் வருந்தத்தக்க உண்மைநிலை!

    இந்த அவலம் இனியும் நீடித்தல் கூடாது. நம் தமிழக வரலாற்றை – தமிழ்க்குடியின் பெருமையை அரிதின் முயன்று வெளிப்படுத்திய சதாசிவ பண்டாரத்தாரின் ஆராய்ச்சிப் பணிகள் வெளிச்சம் பெறவேண்டும். கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களின் பாடத்திட்டத்தில் அவருடைய வரலாற்று நூல்கள் இடம்பெற வேண்டும். பண்டாரத்தாரின் சொந்த ஊரான திருப்புறம்பயத்தில் அவருக்கோர் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும். இச்செயல்கள் பண்டாரத்தாரின் மெய்வருத்தம் பாராப் பேருழைப்புக்கும் ஆராய்ச்சிப் பணிகளுக்கும் நாம் காட்டும் சிறிய கைம்மாறாய் அமையும்.

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார் – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, செனை – 600 113

    2. http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=880

    3. https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2017/dec/31/வரலாற்றுப்-பேரறிஞர்-திவை-சதாசிவப்-பண்டாரத்தார்-2836124.html

    4. https://www.hindutamil.in/news/blogs/231349-10-2.html

     

     

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 34

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 34

    -மேகலா இராமமூர்த்தி

    அரசியலறிவும் அதுசார்ந்த அனுபவங்களும் நிரம்பப் பெற்றவனான இராமன், கிட்கிந்தையின் புதிய அரசனாக முடிசூட்டிக்கொண்ட சுக்கிரீவனிடம் நல்லாட்சி நடத்துதற்கு ஓர் அரசனுக்குத் தேவையான பண்புநலன்கள் யாவை என்பவற்றை 11 பாடல்களில் விளக்கியுரைப்பதாக அமைத்துள்ளார் கம்பநாடர்.

    ”சுக்கிரீவா! இந்த உலகம் எப்படிப்பட்டது தெரியுமா? ஓரிடத்தில் புகை உண்டெனில் ஆங்கே கிளர்ந்தெழும் நெருப்புண்டு என்று ஊகித்தறியும் சிறப்பறிவைக் கொண்டது. ஆதலால், அரசனாகப் பொறுப்பேற்பவனுக்கு நூலில்வல்லாரின் சூழ்ச்சித்திறனும் வேண்டற்பாலது. பகையுடையோரிடத்தும், பயன்கொள்ளும் வகையில், அவர்களின் இயல்பறிந்து பண்போடு நடக்கவும் மலர்ந்த முகத்தினனாய் இன்சொற்கள் பேசவும் ஓர் அரசன் அறிந்திருக்க வேண்டும்.” என்றான் இராமன்.

    புகை உடைத்து என்னின் உண்டுபொங்கு
          அனல் அங்கு என்று உன்னும்
    மிகை உடைத்து உலகம்
         நூலோர் வினையமும் வேண்டற்பாற்றே
    பகையுடைச் சிந்தையார்க்கும் பயன்
          உறு பண்பின் தீரா
    நகையுடை முகத்தை ஆகி இன்
          உரை நல்கு நாவால். (கம்ப: அரசியற் படலம் – 4227)

    மனத்தில் உள்ள பகைமையை பகைவர்களிடம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் சூழ்ச்சித் திறத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்று அறத்தின் நாயகனான இராமனே குறிப்பிடுவதன்மூலம் எல்லாக் காலத்திலும் சூழ்நிலைக்கேற்ற வகையில் சமயோசிதமாக நடந்துகொள்ளும் அறிவு அரசர்களுக்குத் தேவைப்பட்டிருக்கின்றது என்பதனை நாம் உய்த்துணரமுடிகின்றது.

    வள்ளுவரும்,  பகைவர் நண்பராகும் காலம் வரும்போது முகத்தளவில் நட்புக்கொண்டு அகத்தில் நட்புநீங்கி வாய்ப்புக் கிடைத்தபோது அதனையும் விட்டுவிடவேண்டும் என்று கூறியிருப்பதை உன்னுக.

    பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
    அகநட்பு ஒரீஇ விடல்.
    (குறள் – 830)

    ”குடிமக்களைத் தாய்போல் பேணிக் காப்பாய்! அதேசமயம் நாட்டிற்குத் தீமைவந்து சேருமாயின் அத்தீச்செயல்களில் ஈடுபடுவோரை அறத்தின் எல்லை கடவாது தண்டிப்பாய்!” என்று அறிவுறுத்திய இராமன், அடுத்து மிக முக்கியமானதொரு கருத்தைத் தன் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் சுக்கிரீவனுக்கு உரைக்கின்றான்.

    ”திரண்ட தோள்களை உடையவனே! நம்மைவிட உருவிலும் திருவிலும் வலுவிலும் சிறியர் என்றெண்ணி யாரையும் இகழ்ந்து துன்பம் செய்துவிடாதே! இந்த நன்னெறியைக் கடைப்பிடியாது யான் (சிறுவயதில்) ஓர் தீமைசெய்த காரணத்தினால் பகையுணர்ச்சி நீண்டு, குறுகிய உடலையுடைய கூனி என்பவளால் வறுமைகள் எய்திக் கொடிய துன்பக்கடலில் வீழ்ந்தேன்!” என்றான்.

    சிறியர் என்று இகழ்ந்து நோவு
          செய்வன செய்யல் மற்று இந்
    நெறி இகழ்ந்து யான் ஓர் தீமை
          இழைத்தலால் உணர்ச்சி நீண்டு
    குறியது ஆம் மேனி ஆயக்
          கூனியால் குவவுத் தோளாய்
    வெறியன எய்தி நொய்தின் வெந்
          துயர்க் கடலின் வீழ்ந்தேன். (கம்ப: அரசியற் படலம் – 4230)

    ‘பண்டை நாள் இராகவன் பாணிவில் உமிழ் உண்டை உண்டதனைத் தன் உள்ளத்து உள்ளுவாள்’ என்ற காப்பிய அடிகள் இந்நிகழ்ச்சியை விளக்கும்.

    தொடர்ந்து மேலும் சில அறவுரைகளைச் சுக்கிரீவனுக்குச் சாற்றிய இராமன், “அரசர்க்கென்று நூல்கள் வகுத்துச்சொன்ன முறைப்படி ஆட்சிநடத்து! மாரிக்காலம் கழிந்தபின் வாரிதிபோன்ற உன் பெருஞ்சேனையுடன் என்னைக் காண வா! இப்போது கிட்கிந்தைக்குப் போய் வா!” என்று விடைகொடுத்தான்.

    சீதையைத் தேடுதற்கு மழைக்காலம் வசதியற்றதாய் இருக்குமாதலின்
    ‘மாரிக்காலம் கழிந்தபின் வா’ என்றான் இராமன்.

    இராமனுக்கு முடிசூட்டத் தயரதன் ஏற்பாடுசெய்த வேளையில், தயரதனின் ஆசானான, வசிட்டர் இராமனுக்கு ஒரு நல்லரசன் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்று உபதேசித்ததை இந்த அறவுரைகளோடு நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அரசப் பதவிக்கு வருபவன் என்னதான் கல்வி கேள்விகளிலும் வீரத்திலும் சிறந்தவனாய் விளங்கினாலும் அவன் பதவியில் அமர்வதற்குமுன்பு அறிவிற்சிறந்த பெரியோர் அவனுக்கு நல்லறிவு கொளுத்தும் நோக்கில் நயமான அறவுரைகளை அந்நாளில் புகன்றிருப்பது வரவேற்பிற்குரிய அணுகுமுறையாகவே இருக்கின்றது.

    சீதையைத் தேடுதற்கேற்ற காலம் வரும்வரை இராமலக்குவர்கள் தம்மோடு கிட்கிந்தைக்குவந்து தங்கியிருக்கவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொண்டு இராமனின் அடியிணைகளில் வீழ்ந்து வணங்கினான் சுக்கிரீவன்.

    அதனை முறுவலோடு மறுத்த இராமன், ”தவ வாழ்க்கை மேற்கொள்ள வேண்டிய நாங்கள் உன்னோடுவந்து அரண்மனையில் தங்குதல் பொருந்தாது; நாங்கள் அங்குவந்தால் எம்மை உபசரிக்கவே உனக்கு நேரம் சரியாக இருக்கும்; நீ நல்லாட்சி நடத்தத் தவறிவிடுவாய். அதுமட்டுமன்று! நீ சொல்வதுபோல் நான் உன்னோடுவந்தால் தன் தேவி அரக்கனின் காவலில் அல்லலுற்றிருக்க, இராமன் தன் நண்பர்களோடு இன்பப் பொழுதுபோக்கினான் என்று உலகம் என்னை ஏசாதா? பழிபோட்டுப் பேசாதா? அப்பழியானது என்றும் நிலைத்திருக்குமே!

    சுக்கிரீவா! இல்லற நெறியைக் கைவிடாதவர்களுடைய இயல்பினைக் கைவிட்டும், போரில் வில்லறம் துறந்தும் வாழ்பவனாகிய எனக்கு நண்பர்களோடு இனிதாய் இருத்தல் மேன்மையை நல்கா அற்பச் செயலாகும். ஆதலால், நான் செய்திருக்கும் குற்றங்கள் நீங்குமாறு ஒவ்வொரு நாளும் தவம்செய்யப் போகின்றேன்” என்றான் தாமரைக் கண்ணனான இராமன்.

    இல்லறம் துறந்திலாதோர் இயற்கையை
          இழந்தும் போரின்
    வில் அறம் துறந்தும் வாழ்வேற்கு
          இன்னன மேன்மை இல்லாச்
    சில் அறம் புரிந்து
          நின்ற தீமைகள் தீருமாறு
    நல் அறம் தொடர்ந்த நோன்பின்
          நவை அற நோற்பல் நாளும். (கம்ப: அரசியற் படலம் – 4241)

    கைபிடித்த மனைவியைக் காத்தல் இல்லறக் கடமையாகும்; தான் மனைவியைப் பாதுகாவாது விட்டமை குறித்து, ‘இல்லறம் துறந்திலாதோர் இயற்கையை இழந்தும்’ எனவும், வாலியை மறைந்துநின்று கொன்றது குறித்து, ‘வில்லறம் துறந்தும் வாழ்வேற்கு’ எனவும் இப்பாடலில் இராமன் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம்.  

     அதன்பின்னர் இராமனைத் தன்னோடு வரும்படிச் சுக்கிரீவன் வற்புறுத்தவில்லை; அவனை வணங்கி விடைபெற்றான்.

    அடுத்து, தன்னை வணங்கிய அங்கதனை அருகழைத்து, ”ஒழுக்கத்தில் சிறந்தவனே! சுக்கிரீவனை உன் சிறிய தந்தை என்று எண்ணாதே! தந்தையாகவே எண்ணி அவன் சொற்படி நட” என்று அறிவுறுத்தி அனுப்பினான் இராமன்.

    சுக்கிரீவனும் அங்கதனும் போனபின், அங்கே நின்றுகொண்டிருந்த அனுமனிடம், ”பேரெழில் வீரனே! நீ சுக்கிரீவனுக்கு வேண்டுவன ஆற்றி அவனோடு இரு!” என்று இராமன் உரைக்க, அதனை ஏற்கத் தயங்கிய அனுமன்,

    “ஐய! நாயேனாகிய நான் உம்முடனேயே இருந்து உமக்குக் குற்றேவல் செய்து வருவேன்” என்று மொழியவே, அதனை ஏற்கமறுத்த இராமன், “அரசர்க்குரிய பண்புநலன்கள் நிரம்பிய ஒப்பற்ற மன்னன் ஒருவன் பாதுகாத்ததும், கடையெல்லை இல்லாததும், எல்லாச் செல்வ வளங்களும் நிறைந்ததுமான அரசாட்சியை வேறோர் அரசன் வலியக் கைப்பற்றிக் கொண்டால் அந்நாட்டில் நன்மைகளேயன்றித் தீமைகளும் (புதிய மன்னனை எதிர்த்துப் புரட்சி முதலியவை) தோன்றக்கூடும். அத்தகு சூழலில் உன்னைப்போல் பொறுமையும் அறிவும் நிறைந்தவர்களாலேயே இவ்வரசு நிலைபெறும். ஆகலின், அறத்தின் வடிவான நீ, சுக்கிரீவனுக்குத் துணையாய் அங்கிருப்பதே நல்லது” என்றுரைத்தான்.

    நிரம்பினான் ஒருவன் காத்த நிறை
          அரசு இறுதி நின்ற
    வரம்பு இலாததனை மற்று ஓர்
          தலைமகன் வலிதின் கொண்டால்
    அரும்புவ நலனும் தீங்கும்
          ஆகலின் ஐய நின்போல்
    பெரும் பொறை அறிவினோரால்
          நிலையினைப் பெறுவது அம்மா. (கம்ப: அரசியற் படலம் – 4247)

    ”தங்கள் கட்டளை அதுவாகில் அவ்வாறே செய்கிறேன்” என்ற மாருதி இராமனை வணங்கிவிட்டுக் கிட்கிந்தை நோக்கிச் சென்றான்.

    நிரம்பினான் ஒருவன் காத்த நிறையரசு” என்பது இங்கே வாலியின்
    ஆட்சிக்கு இராமன் தரும் நற்சான்றுப் பத்திரமாகும்.

    அனைவரும் கிட்கிந்தைக்குச் சென்றபிறகு, இராமனும் இலக்குவனும் அருகிலிருந்த பிரசிரவண மலை எனும் மலைக்குச் சென்று தவ வாழ்க்கை மேற்கொள்ளலாயினர்.

    மாரிக்காலமும் அதைத்தொடர்ந்து வந்த கூதிர்காலமும் ஒருவாறு கடக்க, அதுவரை ஒடுங்கிக் கிடந்த அன்னங்கள் பொன்னனைய சீதையை நாம் தேடிச்செல்வோம் என்று புறப்பட்டதுபோல் திசைகள்தோறும் பறக்கத் தொடங்கின.

    கல்வியில் சிறந்த கணக்காயர் (ஆசிரியர்) பாடத்தைச் சொல்லச் சொல்லக் கூடவே ஆரவாரத்தோடு அதனைத் திருப்பிச்சொல்லும் மாணாக்கர்போல், விடாது கத்திக்கொண்டிருந்த தவளைகளும் தம்சொல் செல்லுபடியாகும் இடத்திலன்றிப் பிற இடங்களில் ஒரு சொல்லையும் சொல்லாத நல்லறிவுடையவர்கள்போல் நாவடங்கின.

    கல்வியின் திகழ்
          கணக்காயர் கம்பலைப்
    பல் விதச் சிறார் எனப்
          பகர்வ பல் அரி
    செல் இடத்து அல்லது
          ஒன்று உரைத்தல்செய்கலா
    நல் அறிவாளரின்
          அவிந்த நா எலாம்.  (கம்ப: கார்காலப் படலம் – 4367)

    இந்தச் செய்யுளின் கருத்து வால்மீகி இராமாயணத்திலும், துளசிதாசர் இராமாயணத்திலும் காணக் கிடைக்கின்றது.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவைக் கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

     

    Share
  • தனித்தமிழ் வளர்த்த தகைசால் அறிஞர்!

    தனித்தமிழ் வளர்த்த தகைசால் அறிஞர்!

    -மேகலா இராமமூர்த்தி

    தமிழொடு ஆங்கிலத்திலும் வடநூற்கடலிலும் கரை கண்டவர்; பன்மொழிகள் பயின்றாலும் நன்மொழியாம் தமிழே தமக்கு உயிரென்னும் கொள்கை கொண்டவர்; பிறமொழிக் கலப்பின்றித் தூயதமிழில் தமிழர் அனைவரும் பேசவும் எழுதவும் வேண்டும் என நனிவிரும்பித் தனித்தமிழ் இயக்கம் தோற்றுவித்தவர்; சைவ சமயத்தின்பால் ஆழ்ந்த பற்றுள்ளம் கொண்டு பழந்தமிழர் சமயம் சைவமே எனத் தம் நூல்வழி நிறுவியர்; இத்துணைச் சிறப்புகளுக்குரியவர் மறைமலையடிகள் எனும் சான்றோர் பெருந்தகை.

    1876ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 15ஆம் நாள், நாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள காடம்பாடியில் சொக்கநாதப் பிள்ளைக்கும் சின்னம்மையாருக்கும் மகனாய்ப் பிறந்தவர் அவர். பல்லாண்டுகள் மக்கட்பேறில்லாமல், திருக்கழுக்குன்றத்து இறைவன் அருளால் பிறந்தவராக மறைமலையடிகளாரை அவர் பெற்றோர் கருதியமையால், அவருக்கு அத்தலத்து இறைவனின் திருப்பெயரான வேதாசலம் என்பதைச் சூட்டி மகிழ்ந்தனர்.

    நாகையிலிருந்த வெஸ்லியன் தொண்டு நிறுவனக் கல்லூரியைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளியில் நான்காம் படிவம் வரை கல்வி பயின்றார் மறைமலையடிகள். அப்போது எதிர்பாராதவிதமாகத் தம் தந்தையை இழந்த அவரால் பள்ளிப்படிப்பைத் தொடர இயலவில்லை. ஆகையால், நாகையில் ஓலைச்சுவடிகள் விற்பனை செய்துவந்தவரும், அத்தோடு தமிழ் கற்பிக்கும் பணியையும் ஆற்றிவந்தவருமான வெ. நாராயணசாமிப்பிள்ளை என்பவரிடம் தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள் முதலிய இலக்கண நூல்களையும், தர்க்க நூல்களையும் முறையாகக் கற்றுத்தேர்ந்தார். அடிகளாருக்குத் தமிழ் பயிற்றுவித்த நாராணசாமிப்பிள்ளையவர்கள், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் முறையாகத் தமிழ் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘சைவ சித்தாந்த சண்டமாருதம்’ என்று புகழ்பெற்றிருந்த சோமசுந்தர நாயகரிடம் சைவ சித்தாந்தம் கற்றார் மறைமலையடிகள்.

    வெஸ்லியன் பள்ளியில் படித்தமையால் நல்ல ஆங்கிலப் புலமையும், வடமொழிப் புலமையும் அடிகளாருக்கு இருந்தது. பின்பு, தாமாகவே முயன்று அவ்விருமொழிப் புலமையையும் நன்கு வளர்த்துக்கொண்டார் அவர்.

    1898இல், சென்னை கிறித்தவக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றுவதற்காக அக்கல்லூரியில் பணிபுரிந்துகொண்டிருந்த பரிதிமாற்கலைஞரைச் சந்தித்தார் மறைமலையடிகள். அப்போது பரிதியார், ‘‘குற்றியலுகரத்துக்கு எடுத்துக்காட்டு சொல்லுங்கள்’’ என்று மறைமலையடிகளிடம் வினவ, ‘‘அஃது எனக்குத் தெரியாது’’ என்றார் அடிகள். ‘‘நீங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டீர்கள்’’ என்றார் பரிதிமாற்கலைஞர். ‘‘தெரியாது என்று சொல்பவரை எப்படித் தெரிவு செய்யலாம்?’’ என்று மற்ற உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தபோது, ‘‘அஃது என்பது ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்; எனக்கு என்பது வன்தொடர்க் குற்றியலுகரம். தெரியாது என்பது உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்’’ என்று பதிலளித்தார் பரிதிமாற்கலைஞர். அடிகளின் தமிழ்ப்புலமைக்கு இது தக்கதோர் எடுத்துக்காட்டு.

    கிறித்தவக் கல்லூரியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, இளங்கலைத் தமிழ் படித்துவந்த மாணாக்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க, 1903ஆம் ஆண்டு, பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான ’முல்லைப்பாட்டுக்கு’ எளிய ஆராய்ச்சியுரை ஒன்றையெழுதி வெளியிட்டார் அடிகள்.

    அதில் பாட்டினியல்பு பற்றி அவர் கூறும் அரிய கருத்துக்கள் சிலவற்றைக் காண்போம்.

    “உலக இயற்கையில் கண் முதலான புலன்களுக்கு விளங்கித் தோன்றும் அழகையெல்லாம் தன்னகத்தே நெருங்கப் பொதிந்துவைத்துப் பின் அவற்றை நம் அறிவினிடத்தே புலப்படும் வண்ணந் தோற்றுவித்து, பொருள் நிகழ்ச்சியோடு மாறுபடுதல் இல்லா இனிய ஓசையுடன் இசைந்து நடைபெறும் இயல்பினை உடையதுதான் பாட்டென்று அறிதல் வேண்டும். இன்னும் எங்கெங்கு நம் அறிவைத் தம்வயப்படுத்துகின்ற பேரழகும் பேரொளியும் பெருந்தன்மையும் விளங்கித் தோன்றுகின்றனவோ அங்கெல்லாம் பாட்டு உண்டென்றே அறிதல் வேண்டும்.

    மக்கள் அறிவு என்கின்ற தித்திப்பான அரிய அமிழ்தம் பலவகையான குற்றங்களொடுங் கலப்புற்றுத் தூயதன்றாய்ப் போக, நல்லிசைப் புலவன் தன் பேரறிவினால் அதனைத் தெளிய வடித்து அதன் இன்சுவையினை மிகுதிப்படுத்தி நாமெல்லாம் அதனைப் பருகிப் பெரியதோர் ஆறுதலடையக் கொடுப்பன்; அங்ஙனங் கொடுக்கப்படுந் தூய இனிய அறிவின் விளக்கம் பாட்டென்றே அறிதல் வேண்டும். இக்கருத்துப் பற்றியே மில்டன் எனும் ஆங்கிலமொழிவல்ல நல்லிசைப்புலவரும், ’பாட்டென்பது மக்கள் மன அறிவினின்றும் வடித்து இறக்கப்பட்ட தூய அமிழ்தமாம்’ என உரை கூறினார்” என்று பாட்டு குறித்து அருமையாய் விளக்குகின்றார் அடிகள்.

    இவ்வாறே 1906ஆம் ஆண்டு, கிறித்தவக் கல்லூரியில் பயின்ற தமிழ் இளங்கலை மாணாக்கர்களுக்குப் பட்டினப்பாலை எனும் சங்கநூல் பாடப்பகுதியில் வைக்கப்பெற்றது. அவர்கள் அதற்கும் ஓர் எளிய ஆராய்ச்சியுரையை அடிகள் இயற்றித்தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கவே, அந்நூலுக்கும் பொருட்செறிவுமிக்க ஆராய்ச்சியுரை ஒன்றைப் படைத்தளித்திருக்கின்றார் மறைமலையடிகள்.

    அதில் பட்டினப்பாலையின் அமைப்பையும் அதன் ஆசிரியர் சிறப்பையும் விளக்கவரும் அவர்…

    ”இப்பட்டினப்பாலை முழுவதூஉம் முந்நூற்றோர் அடிகளான் அமைக்கப்பட்டிருக்கின்றது. இவற்றுள் இருநூற்றுத் தொண்ணூற்றேழு  அடிகளில் புறப்பொருள் விரிவும், ஏனைய நான்கடிகளில் மாத்திரம் அகப்பொருட் சுருக்கமும் சொல்லப்பட்டிருக்கின்றன. இவ்வாறே, திருமுருகாற்றுப்படை முதலிய செய்யுட்களினும் புறப்பொருட் சிறப்பே பெரும்பான்மையால் கூறிவைத்து, ஏனை அகவுணர்வின் திறனெல்லாம் மிகச் சுருங்கவே சொல்லப்பட்டன. புறத்தே விரிந்த அறிவெல்லாம் முறைமுறையே சுருக்கப்பட்டு அகத்தே செல்வுழி, அஃதொன்றின் மாத்திரமே உறைந்து நிற்றலின், புறப்பொருள்வழி வைத்து விளக்கப்படும் அகப்பொருளெல்லாம் மிகச் சுருக்கிக் கூறுதலே மன இயற்கைக்கு இயைந்ததாம். இந்நுட்பம் செவ்விதின் அறிந்த உருத்திரங்கண்ணனாரது அறிவின் மாட்சி அளவிடற்பாற்றன்று.” என்று வியக்கின்றார்.

    கிறித்தவக் கல்லூரியில் அடிகளாரிடம் நேரடியாகப் பயிலக்கூடிய பேறுபெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், இரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார், பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை, தணிகைமணி வ.சு.செங்கல்வராயப் பிள்ளை முதலியோர்.

    செய்யுள், புதினம், நாடகம், கட்டுரை, மொழிபெயர்ப்பு, ஆராய்ச்சி எனப் பல்துறைகளிலும் அளவற்ற நூல்களை அடிகள் படைத்துள்ளார். திருவொற்றியூர் முருகன் மும்மணிக்கோவை, சோமசுந்தரக் காஞ்சியாக்கம் முதலியன அவர் இயற்றிய செய்யுள் நூல்களாகும். சிந்தனைக் கட்டுரைகள், அறிவுரைக் கொத்து, சிறுவர்க்கான செந்தமிழ், முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர், இந்தி பொது மொழியா? போன்றவை அவரின் கட்டுரை நூல்கள். குமுதவல்லி நாகநாட்டரசி, கோகிலாம்பாள் கடிதங்கள் முதலியன அவருடைய புதின நூல்கள். வடமொழியில் காளிதாசர் படைத்த சாகுந்தலத்தைத் தமிழில் மொழிபெயர்த்து சாகுந்தல நாடகம் என்று அதற்குப் பெயரிட்டுள்ளார். அம்பிகாபதி அமராவதி என்ற நாடக நூலையும் இயற்றியுள்ளார்.

    மறைமலையடிகளின் ஆராய்ச்சி நூல்களை இலக்கிய ஆராய்ச்சி, கால வரலாற்று ஆராய்ச்சி, வாழ்வியல் ஆராய்ச்சி என்ற மூன்று பிரிவுகளில் அடக்கலாம். பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும், மாணிக்கவாசகர் வரலாறும் காலமும், முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர், சோமசுந்தர நாயகர் வரலாறு முதலியன கால வரலாற்றை உணர்த்தும் ஆய்வு நூல்களாகும். பொருந்தும் உணவும் பொருந்தா உணவும், வேளாளர் நாகரிகம், மக்கள் நூறாண்டு வாழ்வது எப்படி? என்பன வாழ்வியல் ஆய்வு நூல்களாக விளங்குகின்றன.

    வாழ்வியல் ஆராய்ச்சி நூல்களுள் சைவ சித்தாந்த ஞானபோதம், சாதி வேற்றுமையும் போலிச் சைவரும், கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவமாகா, பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம், தமிழர் மதம் முதலியன சமயத் தொடர்புடைய நூல்களாகும். வாழ்வியல் ஆய்வு நூல்களிலே, மரணத்தின்பின் மனிதர் நிலை, யோகநித்திரை அல்லது அறிதுயில், தொலைவிலுணர்தல் என்னும் மறைபொருளுணர்ச்சி, மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி முதலிய நான்கு நூல்களும் மறைபொருளியலை உணர்த்தும் நூல்கள் ஆகும்.

    1911-ஆம் ஆண்டு தம்முடைய தமிழாசிரியர் பணியிலிருந்து விலகிய அடிகள், சைவ சித்தாந்தப் பணிகளிலும் நூல்கள் எழுதுவதிலும் தம்மை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்டார். இல்லறத்திலிருந்து துறவுபூண்டு காவியுடுத்து சுவாமி வேதாசலம் ஆனார்.

    1916ஆம் ஆண்டு ஒருநாள் தம்முடைய வீட்டுத் தோட்டத்தில் மகள் நீலாம்பிகையுடன் உலவிக்கொண்டிருந்த அடிகள், இராமலிங்க வள்ளலார் அருளிச்செய்த அருட்பாவிலிருந்து,

    ”பெற்ற தாய்தனை மக மறந்தாலும்
    பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
    உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
    உயிரை மேவிய உடல் மறந்தாலும்
    கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
    கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
    நற்றவத்தவர் உள்ளிருந் தோங்கும்
    நமச்சி வாயத்தை நான் மறவேனே.”
    என்ற பாடலைப் பாடச்சொல்லிக் கேட்டின்புற்றார்.

    பிறகு தம் மகளிடம், “இப்பாட்டில் உள்ள ‘தேகம்’ என்ற வடசொல்லுக்கு மாற்றாக அவ்விடத்தில் ’யாக்கை’ என்ற தமிழ்ச்சொல் இருக்குமானால் செய்யுளின் ஓசையின்பம் இன்னும் சிறக்கும்” என்றார். அதுகேட்ட நீலாம்பிகையார் தந்தையிடம், “நாம் இனி அயல்மொழிச் சொற்களை அறவே நீக்கித் தனித்தமிழிலேயே பேசுதல் வேண்டும்; அதற்கான முயற்சிகளைக் கைவிடாது செய்தல் வேண்டும்” என்று ஆர்வத்துடன் கூறியிருக்கின்றார்.

    அத்தோடு, சுவாமி வேதாசலம் என்ற பெயரைத் தம் தந்தையார் தனித்தமிழில் மாற்றிவைத்துக்கொள்ள வேண்டும் என்றும் மகளார் வேண்டுகோள் விடுக்கவே, அதனையேற்றுத் தம் பெயரை மறைமலையடிகள் என்று மாற்றிவைத்துக் கொண்டார் அடிகள். அதுமுதல் மறைமலையார் தனித்தமிழிலேயே எழுதலானார். தனித்தமிழில் சொற்கள் கிடைக்காதபோது புதியசொற்களைத் தமிழில் உண்டாக்கி எழுதினார். 

    ஞானசாகரம் என்ற தம் திங்கள் வெளியீட்டிற்கு அறிவுக்கடல் என்றும், தாம் ஆரம்பித்து நடாத்திவந்த சமரச சன்மார்க்க நிலையத்திற்குப் பொதுநிலைக் கழகம் என்றும் பெயர்மாற்றம் செய்தார். பின்னர் 1916ஆம் ஆண்டு தனித்தமிழ் இயக்கம் அமைத்துத் தமிழ் வளர்த்தமையால் ’தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை’ என்ற பெருமையைப் பெற்றார்.

    அடிகளாரின் தனித்தமிழ் இயக்கம் ஆங்கிலம் மற்றும் வடமொழிபால் அவர்கொண்ட வெறுப்பால் தோன்றிய இயக்கமன்று; தமிழ்மீது அவர்கொண்ட தணியாத காதலால் மலர்ந்த இயக்கமாகும் என்பது எண்ணத்தக்கது.

    ‘‘எல்லா உறுப்புகளும் அமைந்த அழகான ஓர் உடம்பில், அந்த உறுப்புக்களை வெட்டி எறிந்துவிட்டு, மண்ணாலும், மரத்தாலும் செயற்கையாக அந்த உறுப்புகளைப்போல் செய்து அவற்றை அதற்கண் ஒட்டவைத்துப் பார்ப்பதற்கு ஒப்பாய் இருக்கின்றது, தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்களைச் சேர்ப்பது’’ என்று தேவையற்ற பிறமொழிக் கலப்பைக் கண்டிக்கின்றார் அடிகள்.

    மறைமலையடிகளின் தனித்தமிழ்த் தாக்கத்தால் தமிழகத்தில் ‘அக்ராசனர்’ தலைவரானார்; ‘மகாஜனங்கள்’ பொதுமக்கள் ஆயினர்; ‘பிரேரணை’ தீர்மானமாயிற்று; ‘நமஸ்காரம்’ வணக்கமாயிற்று. அறிஞர் அண்ணா, இம்மண்ணுக்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியதும், தமிழ்நாட்டுத் தலைநகரத்திற்கு கலைஞர் கருணாநிதி ‘சென்னை’ என்று பெயர் சூட்டியதும் மறைமலையடிகளால் நேர்ந்த மாற்றங்களே எனலாம்.

    ”அடிகள் பேச்சு, பல பேச்சாளரைப் படைத்தது; எழுத்து, பல எழுத்தாளரை ஈன்றது; நூல், பல நூலாசிரியன்மாரை அளித்தது; அடிகளே தென்னாடு; தென்னாடே அடிகள் என்று கூறல் மிகையாகாது” என்று மறைமலையடிகளை மனங்கனிந்து பாராட்டியிருக்கின்றார் தமிழ்த்தென்றல் திரு.வி.க.

    சிறந்த சிந்தனையாளர், பேரறிஞர், ஆராய்ச்சியாளர், பழந்தமிழ் நூல்களுக்குப் புத்துரை வரைந்த உரையாசிரியர், வீறுசால் பொழிஞர் எனப் பன்முக ஆற்றலாளராக, தமிழகத்துக்கோர் மாமலையாய் மிளிர்ந்த மறைமலையார், தமிழ்மாந்தர் அறிவுச்செழுமை அடைவதற்கும், நோயற்ற நெடுவாழ்வு வாழ்வதற்கும், ஆன்மநலம் உறுவதற்கும், தனித்தமிழ் உணர்வு பெறுவதற்கும் நல்வழி காட்டிச்சென்ற பெருமகனார் ஆவார்.

    தமிழர்களாகிய நாம் அவர் படைத்தளித்த அருந்தமிழ் நூல்களை ஆர்வத்தோடு கற்போம்; தேவையின்றிப் பிறமொழிச் சொற்களைத் தமிழில் கலந்தெழுதுவதையும் பேசுவதையும் தவிர்ப்போம். நல்ல தமிழ்ப்பெயர்களையே பிள்ளைகளுக்குச் சூட்டுவோம். நம் வெல்லத் தமிழை மெல்லச் சாகாது காப்போம்!

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. https://ta.wikipedia.org/wiki/ மறைமலை_அடிகள்
    2. https://www.hindutamil.in/news/opinion/columns/565268-maraimalai-adigal-birthday-1.html
    3. http://www.tamilvu.org/courses/degree/p102/p1021/html/p1021551.htm
    4. முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1962.
    5. பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1957.

     

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 33

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 33

    -மேகலா இராமமூர்த்தி

    துன்பமென்றால் என்னவென்றே அறியாத இளைஞன், வாலியின் அருமை மைந்தன் அங்கதன். தன் தந்தையை மலர்கள் மலைபோல் குவிந்திருக்கும் படுக்கையில் கண்டிருக்கின்றானேயன்றி இப்போது கிடப்பதுபோலக் குருதிக்கடலில் கிடக்கக் கண்டவனும் இல்லை. ஆதலால் தந்தையின் அவலநிலை அவன் உள்ளம் வாட்டியது; துன்பத் தீ மூட்டியது. அதனைத் தாளமாட்டாது நிலத்தில் வீழ்ந்துகிடக்கும் சந்திரன்மீது விண்மீனொன்று வீழ்ந்ததுபோல் வாலியின் உடல்மீது வீழ்ந்தழுதான் அங்கதன்.

    ”தந்தையே! என் தந்தையே! எழுகின்ற அலைகளையுடைய கடல்சூழந்த இந்த உலகில் எவர்க்கும் செய்கையால் மட்டுமன்றிச் சிந்தையாலும் தீங்கு ஏதும் செய்யாதவன் நீ. அப்படிப்பட்ட உனக்கு இப்படியொரு துன்பம் வந்ததே? உன் முகத்தை நோக்கி அந்தக் கூற்றுவனும் அஞ்சாமல் வந்துவிட்டானே! இனி அந்தக் கூற்றுவனின் வலிமையை அழிக்கவல்லார் ஆருளர்?” என்று கதறினான்.

    எந்தையே எந்தையே இவ் எழு
          திரை வளாகத்து யார்க்கும்
    சிந்தையால் செய்கையால் ஓர்
          தீவினை செய்திலாதாய்
    நொந்தனை அதுதான் நிற்க நின்
          முகம் நோக்கிக் கூற்றம்
    வந்ததே அன்றோ அஞ்சாது ஆர்
          அதன் வலியைத் தீர்ப்பார். (கம்ப: வாலிவதைப் படலம் – 4187)

    வாலியைப் பொறுத்தவரை, தனக்குத் துன்பம் செய்தோர், தன் பகைவர்கள் ஆகியோர் தவிர்த்துத் தன் வலிமையின் காரணமாய்ச் செருக்கடைந்து யார்க்கும் தீங்கு செய்தவன் அல்லன்.

    வாலி சுக்கிரீவன்மீது பகைமை பாராட்டியதும், அவன் மனைவியான உருமையைக் கவர்ந்ததும் தவறான செயல்களாக வாலியால் கருதப்படவில்லையாதலால் அங்கதனும் அவற்றில் குறையேதும் காணவில்லை. எனவே தன் தந்தை மனம் சொல் செயலால் யார்க்கும் எந்தத் தீங்கும் செய்யாதவன் என்றே உறுதியாய்க் கருதினான் அங்கதன்.

    இந்த இடத்தில் சிலப்பதிகாரக் காட்சியொன்று என் நினைவுக்கு வருகின்றது.

    கோவலன் செல்வத்தைத் தொலைத்துத் தான் இலம்பாடு உற்றதற்கு நாணி, தொலைத்த செல்வத்தை மீண்டும் தேடும்பொருட்டுக் கண்ணகியோடும் சமணத் துறவியான கவுந்தியடிகளோடும் மதுரைநோக்கிப் பயணமானான்; அவ் வரலாறு நாமறிந்ததுதான்!

    மதுரையை ஒட்டிய புறஞ்சேரியில் கண்ணகியோடும் கவுந்தியடிகளோடும் கோவலன் தங்கியிருந்தபோது அவனைச் சந்திக்கின்றான் அவனுடைய நெடுநாளைய நண்பனும், பூம்புகாருக்கு அருகிலுள்ள தலைச்செங்காடு எனும் பகுதியைச் சேர்ந்தவனுமான மாடலன் என்னும் மறையவன்.

    கோவலனின் உருவழிந்த தோற்றத்தைக் கண்டு வேதனையுற்ற மாடலன், கோவலன் செய்த அறச் செயல்களையெல்லாம் பட்டியலிட்டுச் சொல்லிவிட்டு, ”யானறிந்தவரையில் இப்பிறவியில் நீ செய்தவையெல்லாம் நற்செயல்களே! அவ்வாறிருக்கத் திருமகளையொத்த மாணிக்கத் தளிரான கண்ணகியுடன் நீ தனியே மதுரை நோக்கிப் புறப்பட்டது முற்பிறவியில் செய்த தீவினைப் பயனோ?” என்று வருந்திப் புலம்புகின்றான்.

    ”இம்மைச் செய்தன யானறி நல்வினை
    உம்மைப்
     பயன்கொல் ஒருதனி யுழந்தித்
    திருத்தகு
     மாமணிக் கொழுந்துடன் போந்தது
    விருத்தகோ
     பால நீயென வினவ….” (சிலப்: அடைக்கலக் காதை: 91-94)

    மாதவியின் பொருட்டுக் கோவலன் கண்ணகியைப் பிரிந்ததை மாடலன் ஒரு குறையாகக் கருதவில்லை என்பதையே ”இப்பிறவியில் நீ நன்மையன்றி வேறொன்றும் செய்ததில்லையே” என்று கோவலனை நோக்கி மாடலன் கூறும் சொற்கள் நமக்குப் புலப்படுத்துகின்றன.

    ஆக, ஆடவர்கள் பல பெண்டிரை மணப்பதையோ, மணவுறவைத் தாண்டி பரத்தையரோடு தொடர்பு வைத்துக்கொள்வதையோ அக்காலச் சமூகம் தவறாகவோ குறையாகவோ எண்ணவில்லை என்பதை நாம் அன்றைய இலக்கியங்கள் வாயிலாய்த் தெற்றென உணரமுடிகின்றது.

    இதற்கு விதிவிலக்காக வள்ளுவம் மட்டுமே வரைவின் மகளிரான பரத்தையரின் தொடர்பை ஆடவர் கைக்கொள்வது தவறானது என்று கண்டித்துள்ளமை கருதத்தக்கது.

    கம்பனின் காப்பியத்துக்குத் திரும்புவோம்!

    வாலியின் பெருமைகளை ஒவ்வொன்றாய் எடுத்துச்சொல்லி வேதனையிலாழ்ந்தான் அவனின் அருமை மைந்தன் அங்கதன்.

    ”பஞ்சினும் மெல்லிய அடிகளை உடைய உமையை ஒரு பாகத்தில் வைத்த சிவனாரின் திருவடிகளன்றி வேறெதனையும் வணங்கியறியாத, சிவந்த கரங்களையும் ஆணைச் சக்கரத்தையும் உடைய எந்தாய்! நீ கடைந்து தந்ததனால் அமுதத்தையடைந்து அதனையுண்ட தேவர்கள் அனைவரும் உயிரோடு நிலைத்து வாழ்கின்றார்கள்; ஆனால், அமுதம் ஈந்த நீயோ இறந்தவனானாய்! உன்னைவிட வள்ளன்மை மிக்கோர் இவ்வுலகில் வேறு யாருளர்?” என்று கண்ணீர் வழியத் தன் தந்தையைப் பார்த்து வினவினான்.

    பஞ்சின் மெல் அடியாள் பங்கன்
          பாதுகம் அலாது யாதும்
    அஞ்சலித்து அறியாச் செங் கை
          ஆணையாய் அமரர் யாரும்
    எஞ்சலர் இருந்தார் உன்னால் இன்
          அமுது ஈந்த நீயோ
    துஞ்சினை வள்ளியோர்கள் நின்னின்
          யார் சொல்லற்பாலார். (கம்ப: வாலிவதைப் படலம் – 4190)

    வாணாளை நீட்ட உதவும் அமுதனைய அரிய நெல்லிக்கனியைத் தானுண்ணாது, ஔவைக்கு ஈந்தான் அதியன். அதனால் நனிமகிழ்ந்த ஔவை, அவனை நீலமணிமிடற்று அண்ணலான சிவனாரைப் போல் நீடுவாழ்கென வாழ்த்தினார் என்கின்றது புறநானூறு.

    …பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
    நீலமணி மிடற்று ஒருவன் போல
    மன்னுக பெரும நீயே தொன்நிலைப்
    பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
    சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
    ஆதல் நின்னகத்து அடக்கிச்
    சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே
    . (புறம் – 91)

    வாலியோ இன்னும் ஒருபடி மேலேபோய்த் தான் கடைந்தெடுத்த சாவா மருந்தான அமுதத்தைத் தானுண்ணாது தேவர்கட்கு ஈந்திருக்கின்றான். தன்னலமற்ற அவன் செயல், வள்ளல்களுள் தலைசிறந்தவன் அவன் என்பதற்குச் சான்றாகின்றது.

    அங்கதன் கலங்கியழுவதைக் கண்டு மனம்பொறாத வாலி அவனை அணைத்துக்கொண்டு, ”மைந்த!  மூவுலகைச் சேர்ந்தவர்க்கும் இறத்தலும் பிறத்தலும் தவிர்க்க ஒண்ணாதவை. நான் முன்செய்த தவப் பயனால் அனைத்தும் தோன்றி மறைவதைத் தான் அழியாமல் கண்டு சாட்சியாய் நிற்கும் வீரனான இராமனால் வீடுபேறுற்றேன். இந்நன்மையை எனக்குச் செய்த இராமனை நீ போற்ற வேண்டும்; அவனுக்குத் தொண்டாற்ற வேண்டும்” என்றான்.

    அதனைத் தொடர்ந்து இராமனை நோக்கிய வாலி, ”நிருதர் சேனை எனும் பஞ்சுமூட்டைக்கு நெருப்புப் போன்றவனும் செயலில் தூய்மை உடையவனுமான இந்த அங்கதன் இனி நின் அடைக்கலப் பொருளாவான்!” என்றுரைத்து இராமனிடம் தன்னருமை மைந்தனை ஒப்படைத்தான்.

    தந்தையின் சொற்களையேற்ற அங்கதன், இராமனின் திருவடிகளில் வீழ்ந்து வணங்க, அவ் அளவில் அவனைத் தன் அடைக்கலமாக ஏற்றுக்கொண்ட, தாமரைக் கண்ணனான, இராமன், தன்னுடைய உடைவாளை அங்கதனிடம் நீட்டியவண்ணம், ”நீ என்னுடைய செயலைப் பொறுத்துக் கொள்வாய்!” என்றான். அதனைக் கேட்ட ஏழுலகங்களும் இராமனைப் போற்றின; இவற்றையெல்லாம் கண்டுகொண்டிருந்த வாலி தன் மைந்தனைத் தக்கவனிடம் அடைக்கலப்படுத்திவிட்ட நிறைவில் இவ்வுலகம் நீத்து அப்புறத்து உலகம் எய்தினான்.

    தன் அடி தாழ்தலோடும்
         தாமரைத் தடங் கணானும்
    பொன் உடைவாளை நீட்டி நீ
          இது பொறுத்தி என்றான்
    என்னலும் உலகம் ஏழும்
          ஏத்தின இறந்து வாலி
    அந் நிலை துறந்து வானுக்கு
          அப் புறத்து உலகன் ஆனான். (கம்ப: வாலிவதைப் படலம் – 4197)

    இப்பாடலில், ’நீ இது பொறுத்தி’ என்று சொல்லி இராமன் அங்கதனிடம் தன் உடைவாளைக் கொடுக்கின்றான். இதனை எண்ணிப் பார்க்கையில், வாலியை மறைந்திருந்து கொன்றது இராமனின் மனத்துக்கு ஓர் உறுத்தலாகவே இருந்திருக்கவேண்டும் என்பதையும் அதற்குக் கழுவாய் தேடும் வகையிலேயே வாலி மைந்தனான அங்கதனிடம், ”இதனைப் பொறுத்துக்கொள்” என்று வருத்தம் தெரிவித்து அவனை இளவரசனாக அங்கீகரிக்கும் வகையில் தன் உடைவாளைக் கொடுத்தான் என்றும் நினைய வேண்டியுள்ளது.

    வாலி இராமனிடம் அங்கதனை அடைக்கலமாய் அளித்ததும், அவனுக்கு
    இராமன் தன்னுடைய உடைவாளை அளித்ததுமாகிய செய்திகள் வால்மீகி இராமாயணம், அத்யாத்ம இராமாயணம் போன்ற வடமொழி இராமாயண நூல்களில் காணப்படவில்லை. வாலி அங்கதனைச் சுக்கிரீவனிடத்து ஒப்படைத்து உயிர்துறந்தான் என்றே அந்நூல்கள் கூறுகின்றன. ஆனால், கம்பர் அங்கதனைச் சிறப்பிக்கவேண்டி, இராமன் அவனுக்கு அடைக்கலம் அளித்து உடைவாளையும் கொடுத்துத் தன் காப்பாளனாய் ஏற்றான் என்கின்றார். அதுமட்டுமல்லாது, அங்கதனின் வீரத்தையும் பணிசெய்யும் பாங்கினையும் விளக்குமுகமாய் ‘அங்கதன் தூதுப் படலம்’ என்ற தனிப்படலத்தையும் தம் காப்பியத்தில் பாடியுள்ளார்.

    அடுத்து மற்றோர் அவலக் காட்சியை அரங்கேற்றுகின்றார் கவிவலவர் கம்பர். அது, கணவனை இழந்த தாரையின் கண்ணீரும் புலம்பலும்!

    வாலி இறந்த செய்தியறிந்த தாரை, தாரை தாரையாய்க் கண்ணீர் பெருக்கினாள். அவன் இறந்துகிடந்த இடத்தை அடைந்து அவன் உடல்மீது புரண்டழுதாள்.

    ”மலைகள் போல் விளங்கும் தோள்கள் புழுதிபடியத் தரைமீது கிடப்பவனே! நீ அடைந்த கதி இதுவோ என்று நான் புலம்பியழக் கண்டும் என் துயர்தீர்க்கும் வண்ணம் வார்த்தை ஒன்றும் உரைத்தாய் இல்லை! இவ்வாறு நீ என்னை வெறுத்தொதுக்க நான் செய்த பிழைதான் என்ன?” என்று கதறினாள்.

    வரை ஆர் தோள் பொடி ஆட வைகுவாய்
    தரை மேலாய் உறு தன்மை ஈது எனக்
    கரையாதேன் இடு பூசல் கண்டும் ஒன்று
    உரையாய் என்வயின் ஊனம் யாவதோ.
    (கம்ப: வாலிவதைப் படலம் – 4206)

    தாரையின் கதறல், மாடமலி மதுரையில் மணவாளன் கோவலன் கொடியோரால் கொலைசெய்யப்பட்டு அவன் நறுமேனி புழுதிபடியத் தரையில் கிடந்த அவலங் கண்ட கண்ணகி, “என்னுடைய மிகுதுயர் கண்டும் இவள் இக்கொடிய காட்சியைக் கண்டால் இடர்உறுவாள் என்று நீர் எண்ணவில்லையே! அந்தோ! சந்தனம் முதலிய நறுமணப் பொருள்கள் பூசப்பட்ட உம் பொன்மேனி புழுதியில் கிடக்கின்றதே!” என்று கதறிய காட்சியோடு ஒப்புநோக்கத் தக்கது.

    என்னுறு துயர்கண்டும் இடருறும் இவள் என்னீர்
    பொன்னுறு நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ”
    (சிலப்: ஊர்சூழ் வரி – 39-40)

    அனுமன் தாரைக்கு ஆறுதல்சொல்லி அவளை வானர மகளிரோடு அந்தப்புரத்துக்கு அனுப்பிவிட்டு, அங்கதனைக் கொண்டு வாலிக்கு இறுதிக் கடன்கள் ஆற்றச் செய்தான்.

    அடுத்து, சுக்கிரீவனுக்கு முடிசூட்டு விழா நடைபெறுகின்றது. இலக்குவன் சுக்கிரீவனுக்குத் தன் கரங்களால் முடிசூட்டுகின்றான். கிட்கிந்தையின் புதிய அரசனான சுக்கிரீவன் இராமனை வணங்க, அவனுக்கு அரசாட்சியைத் திறம்பட நடாத்துதற்கு உதவக்கூடிய அறவுரைகளைச் சொல்லத் தொடங்குகின்றான் இராமன்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share