கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 38

-மேகலா இராமமூர்த்தி

அசோக வனம் என்றால் சோகமில்லா இன்பத்தை நல்கக்கூடிய சோலை என்று பொருள். ஆனால் அங்குச் சிறையிருந்த செல்வியான சீதையோ அதற்கு நேர்மாறாய்ச் சோகத்தின் மொத்த வடிவினளாய்க் காட்சியளித்தாள்.

தன் தனிமைத் துயர் எப்போது தீரும், அருமைக் கணவனைச் சேரும்நாள் எப்போது வாய்க்கும் என்று எண்ணியெண்ணி வேதனை நெருப்பில் வெந்துகொண்டிருந்தாள்.  

ஆழநீர்க் கங்கையில் ஓடம் விட்டுக்கொண்டிருந்த எளிய வேடனான குகனிடத்தில் என் இளவலாகிய இலக்குவன் நினக்குத் தம்பி; நீ என் சோதரன்; என் மனைவி சீதை உனக்குக் கொழுந்தி (மைத்துனி) என்று சொன்ன இராமனின் சகோதர பாசத்தை, தொடர்பற்றவனிடம்கூடக் காட்டிய நேசத்தை எண்ணியவள், தன்பால் அவன் பராமுகமாகயிருப்பது ஏன் என்று நினைந்து கலங்கினாள்.  

ஆழ நீர்க்கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு எம்பி நின் தம்பி நீ
தோழன் மங்கைகொழுந்தி எனச் சொன்ன
வாழி நண்பினை உன்னி மயங்குவாள்.
(கம்ப: காட்சிப் படலம் – 5198)

ஏதேதோ நினைந்து அலமந்துகொண்டிருந்த சீதையைச் சுற்றிலும் அரக்கியர் பலர் காவலிருந்தனர். அப்போது நள்ளிரவு நேரமாதலால், கொடூரமும் துர்க்குணமுமே இயல்புகளாகக் கொண்டிருந்த அவர்கள் துயிலில் ஆழ்ந்திருந்தனர். அவ் அரக்கியர் கூட்டத்தில் நற்பண்புகள் கொண்டவளும் வீடணனின் மகளுமாகிய திரிசடை மட்டும் நன்மொழிகளைச் சொல்லிச் சீதைக்கு ஆறுதல் அளித்துவந்தாள்.

அமர்ந்திருந்த சீதையின் இடக்கண் அவ்வேளையில் துடிக்கவே, ”அஃது உணர்த்துவது என்ன?” என்று திரிசடையிடம் கவலையோடு வினவினாள் சீதை. அவளைப் பரிவோடு நோக்கிய திரிசடை, ”இது மங்கலச் சகுனம். நீ உன் கணவனை அடையப் போவது சத்தியம். கவலை நீக்கு!” என்று சீதையைத் தேற்றினாள். தொடர்ந்தவள்…”நீ துயிலுவதே இல்லை; அதனால் உனக்குக் கனவுகள் தோன்றுவதில்லை; நான் துயிலுவதால் குற்றமற்ற கனவுகள் சிலவற்றைக் கண்டேன்; அவற்றைக் கேள்” என்று சொல்லித் தன் கனவுகளை வி(வ)ரித்துரைக்கலானாள்…

”குற்றமிலாக் கற்புடையவளே! சிறந்த வேலினை ஏந்தியவனாகிய இராவணன் தன் அழகிய பத்துத் தலைகளிலும் எண்ணெய் பூசிக்கொண்டு சிவந்த ஆடையை அணிந்தவனாய்க் கழுதைகளும் பேய்களும் பூட்டப்பெற்ற, சென்றுசேரும் எல்லையை அறியாத, திண்ணிய தேரிலேறித் தென்திசை அடைவதைக் கண்டேன்” என்றாள் திரிசடை சீதையிடம்.

எண்ணெய்பொன் முடிதொறும் இழுகி ஈறுஇலாத்
திண்நெடுங் கழுதைபேய் பூண்ட தேரின்மேல்
அண்ணல் அவ்இராவணன் அரத்த ஆடையன்
நண்ணினன் தென்புலம் நவைஇல் கற்பினாய்.
(கம்ப – காட்சிப் படலம் – 5215)

கனவில் செவ்வாடை, எண்ணெய்ப் பூச்சு, தேரில் செல்லுதல், தென்
திசையில் போதல் முதலியன தோன்றுதல் கேட்டுக்கு அறிகுறி என்பது மக்களின் நம்பிக்கை. வால்மீகத்தில் திரிசடை தான்கண்ட கனவுகளை மற்ற அரக்கியரிடம் கூறுவதாய் அமைத்திருப்பார் வால்மீகி. கம்பர், அவள் நேரடியாகச் சீதையிடமே சொல்லுவதாய் அமைத்துள்ளார்.

இராவணனுக்கும் அவன் நாட்டுக்கும் மனைவியர்க்கும் பல அமங்கலங்கள் நேருவதாய்த் தன் கனவில் தோன்றிய காட்சிகளைச் சீதையிடம் சொன்ன திரிசடை இறுதியாக, நெடுந்தூரம் வெளிச்சம் தரும் ஆயிரம் விளக்குகள் மாட்டிய அடுக்கு தீபமொன்றை ஏந்திய செந்நிறப் பெண்ணொருத்தி, இராவணன் இல்லிலிருந்து நீங்கி வீடணன் இல்லத்தில் நுழைவதைத் தான் கனவில் கண்டுகொண்டிருந்தபோது சீதை தன்னை எழுப்பிவிட்டதாகச் சொல்லவே, அதைக்கேட்ட சீதை, ”சரி நீ மீண்டும் துயில்கொண்டு அக்காட்சியில் தோன்றிய நங்கை யாரெனக் கண்டுபிடி” என்றாள்.

ஆயிரம் திருவிளக்கு அமைய மாட்டிய
சேயொளி விளக்கம்ஒன்று ஏந்திச் செய்யவள்
நாயகன் திருமனை நின்று நண்ணுதல்
மேயினள் வீடணன் கோயில் மென்சொலாய்.
(கம்ப – காட்சிப் படலம் – 5227)

விளக்கோடு பெண்ணொருத்தி இராவணன் மனை நீங்கி வீடணனை அடைகின்றாள் என்ற கனவினுக்கு, இராச்சியலட்சுமி இராவணனை நீங்கி வீடணனுக்குச் சொந்தமாவதாய்ப் பொருள்கொள்ளலாம்.

நீண்ட நேரமாக நாம் கவனிக்கத் தவறிய அனுமனை மீண்டும் கவனிப்போம். சீதையைத் தேடிக்கொண்டு அசோக வனத்துக்குள் நுழைந்த அவன், இப்போது சீதையின் சமீபத்தை அடைந்திருந்தான். செறிந்து வளர்ந்திருந்த மரங்களுக்குப் பின் மறைந்திருந்து தவக்கோலத்தில் அமர்ந்திருந்த சீதையைக் கண்டான்.

துயிலில் ஆழ்ந்திருந்த அரக்கியர் அனைவரும் இப்போது துயில்கலைந்து, சூலம் மழு முதலிய ஆயுதங்களைக் கையில் எடுத்துக்கொண்டு அச்சந் தரத்தக்க பயங்கரத் தோற்றத்தோடு சீதையைச் சுற்றி அமர்ந்தனர்.

சீதையைக் கண்ட மகிழ்வில் உவகைத் தேன் உண்டவனாய், ”அறம் அழியவில்லை; யானும் அழியேன்; இராமன் தேவியைத் தேடிய நான் இதோ கண்டுகொண்டேன் அவளை” என்று மகிழ்ச்சியில் அங்குமிங்கும் துள்ளினான் அனுமன்.  

அவளின் தூய திருக்கோலம் அவனை வியக்க வைத்தது. மனத் தவம் புரியும் கற்புடை மகளிர்க்கு, உடலை வருத்தித் தவம் செய்யும் முனிவரும் ஒப்பாகார் என்ற முடிவுக்கு வந்தான் அவன்.

அவ்வேளையில் சீதையிருந்த இடத்துக்கு அரம்பையர் புடைசூழ வந்தான் இராவணன். அவளருகில் வந்துநின்ற அவன், தனக்கு நேரும் பழிகுறித்து அஞ்சாதவனாய், ”மூவுலகத்தாரையும் அரசாளும் கொற்றமுடைய என்னை உன் அடிமையாய் ஏற்றுக்கொண்டு அருள்வாயாக!” என வேண்டித் தன் சிரங்களின்மேல் குவித்த கரத்தினனாய்ப் பூமியில் வீழ்ந்து வணங்கினான் அவளை.

குடிமை மூன்று உலகும் செயும் கொற்றத்து என்
அடிமை கோடி அருளுதியால் எனா
முடியின் மீதுமுகிழ்ந்து உயர் கையினன்
படியின்மேல் விழுந்தான் பழி பார்க்கலான்.  
(கம்ப – காட்சிப் படலம் – 5289)

இராவணனின் செய்கையும் பேச்சுக்களும் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியைக் காதில் நுழைத்ததுபோல் சீதையை வருத்தின. அவனைத் துரும்பென மதித்த அவள், ”கல்லைப்போல் உறுதியான மகளிரின் மனம் கற்பைவிடச் சிறந்ததாய் எதனையும் கொண்டதில்லை. நீ பேசுகின்ற மொழிகள் நற்குடியில் பிறந்த மாதர்க்கு ஏற்புடையன அல்லாத கொடுஞ்சொற்கள். தவறான வழியில் நடக்கும் உன்னை இடித்துத் திருத்தும் நல்லமைச்சர்களை நீ பெறவில்லை; நீ கருதியதற்குத் துணைபோகும் அவர்கள் உன்னை அழிப்பவர்களே!” என்று சினந்து கூறிவிட்டு, இராமனுக்குத் தெரியாமல் தன்னைத் தூக்கிவந்த அவன் ஈனச் செயலை இகழ்ந்துரைத்தாள்.

அவள் மொழிகளைக் கேட்ட இராவணன் சீற்றத்தின் உச்சிக்குச் சென்று அவளைக் கொல்ல முற்பட்டான். அவள்மீது கொண்ட கழிகாமம் அப்போது கிளர்ந்தெழவே, சீற்றமும் காமமும் ஒன்றையொன்று எதிர்த்துப் போரிடத் தொடங்கின. இரண்டுக்கும் இடையில் சிக்கிக்கொண்ட இராவணன் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனான்.

இவற்றையெல்லாம் ஒரு மரக்கிளையில் அமர்ந்தபடி கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த அனுமன் கோபம் கொண்டு, இந்த இராவணனின் பத்துத் தலைகளையும் மோதி நொறுக்கி, இலங்கையைக் கடலில் அமிழ்த்திவிட்டுத் தேவியை நானே மகிழ்வோடு சுமந்துசென்று இராமனிடம் சேர்ப்பேன் என்று சிந்தித்தவனாய்த் தன் கரங்களைப் பிசைந்தபடி அதற்கேற்ற தக்க தருணத்தை எதிர்நோக்கியிருந்தான்.

தனியன் நின்றனன் தலைபத்தும் கடிதுஉகத் தாக்கி
பனியின் வேலையில் இலங்கையைக் கீழ்உறப்
 பாய்ச்சிப்
புனித மாதவத்து அணங்கினைச் சுமந்தனென் போவென்
இனிதின் என்பது நினைந்துதன் கரம்பிசைந் திருந்தான்.  (
கம்ப – காட்சிப் படலம் – 5315)

சினந்தணிந்த இராவணன் மீண்டும் சீதையிடம் ஏதேதோ பொருத்தமில்லா வார்த்தைகளைப் பேசிவிட்டு, அருகிருந்த அரக்கியரைப் பார்த்து, ”வெவ்வேறு உபாயங்களைக் கையாண்டு சீதையை எனக்கு வசப்படுமாறு செய்யுங்கள்; இல்லையேல் உம் உயிருக்கு நான் நஞ்சாவேன்!” என்று எச்சரித்துவிட்டு அங்கிருந்து அகன்றான்.

தன்னால் முடியாததைத் தன்னிடம் பணிசெய்யும் அரக்கியர் முடிப்பர் என்று கருதியமை இராவணனின் அறியாமையைப் புலப்படுத்துவதாய் உள்ளது. ஆசை, அறிவை அழித்துவிடும் என்பதை இதன்மூலம் நாம் அறியமுடிகின்றது.

இராவணன் மொழிகளைக் கேட்ட அரக்கியர் அஞ்சி வஞ்சியாம் சீதையை மிரட்டத் தொடங்கவே, அவள் கலக்கமுற்றாள். அப்போது திரிசடை சீதையைப் பார்த்து, ”அம்மா! நான் கண்ட கனவுகளைத்தான் உன்னிடம் சொன்னேனே! நீ அஞ்சத் தேவையில்லை இனி!” என்று அவளைத் தேற்றிவிட்டு அக்கனவுகள் குறித்து அரக்கியரிடமும் கூறி இராவணனின் அழிவுக்காலம் நெருங்கிவிட்டது என்பதை விளக்கவே, அவ் அரக்கியர் சீதையை அச்சுறுத்துவதை நிறுத்திவிட்டு அமைதியாயினர்.

தான் சீதையிடம் தனித்துப் பேச அதுவே சரியான நேரம் என்று கணித்த அனுமன், ஒரு மந்திர வித்தை செய்து விழித்திருந்த அரக்கியரை மீண்டும் துயிலில் ஆழ்த்தினான். எளிதில் துஞ்சாத அரக்கியர் துஞ்சுதல் கண்டாள் சீதை. அவளின் ஆற்றொணாத் துயரம் தனிமையில் அதிகரித்தது. நீண்ட இரவும் கதிர்போல் காயும் மதியும் அவளை வாட்டின.

”இராமனைக் காணவேண்டும் எனும் விருப்பத்தில்தான் இவ்வளவு நாட்களும் பொறுமையோடிருந்து என் உயிரைப் போற்றினேன். எனினும், அரக்கர் நகரில் நெடுநாள் சிறையிருந்த என்னைப் புனிதனான இராமன் ஏற்றுக்கொள்வானா?” என்று தனக்குள் வினவிக்கொண்ட சீதை, மாசுற்ற நான் இருத்தலினும் இறத்தலே அறம் என்று எண்ணியவளாய் அங்கிருந்து எழுந்து அருகிலிருந்த குருக்கத்தி (மாதவி) சோலையை அடைந்தாள். அங்குள்ள கொடி ஒன்றை எடுத்துத் தன் கழுத்தை இறுக்கி அவள் சுருக்குப் போட்டுக்கொள்ள முயன்றாள். [வால்மீகி இராமாயணத்தில் சீதை தன் சடையால் கழுத்தை இறுக்கித் தற்கொலை செய்ய முயன்றதாகப் பேசப்பெறும்].

அதுகண்ட அனுமன், சீதையின் உட்கிடையை உணர்ந்து துணுக்கமுற்றான். அவள் திருமேனியைத் தீண்டி அத் தற்கொலை முயற்சியிலிருந்து அவளை விலக்க அவனுக்கு அச்சமாக இருந்ததனால், ”தேவர்கள் தலைவனான இராமபிரானின் அருள்பெற்ற தூதன் நான்” என்று கூறித் தொழுதபடியே, மரத்திலிருந்து குதித்து, மயிலனைய சீதைமுன் தோன்றினான்.

கண்டனன் அனுமனும் கருத்தும் எண்ணினான்
கொண்டனன் துணுக்கம்மெய் தீண்டக் கூசுவான்
அண்டர் நாயகன் அருள் தூதன்யான் எனா
தொண்டைவாய் மயிலினைத் தொழுது
 தோன்றினான். (கம்ப: உருக்காட்டு படலம் – 5357)

தன்னை ஐயத்தோடு நோக்கிய சீதையிடம், ”தாயே! இராமனின் ஆணைப்படி உம்மைத் தேடிக் கண்டுபிடிக்கப் புறப்பட்டோர் பலர். அவர்களுள் உம்மைச் சந்திக்கும் பாக்கியம் பெற்றவனானேன் நான். அம்மையே…நான் இராமதூதன்தான்! என்னை ஐயுறாதீர்! உம்மிடம் காட்டுதற்கு இராமன் தந்த அடையாளப் பொருள் உளது; அப்பெருமான் சொல்லியனுப்பிய செய்திகளும் உள” என்றான்.

அவனுடைய பணிவான தோற்றத்தையும் பக்குவமான மொழிகளையும் கண்ட பிராட்டி, இவன் தன்னை ஏமாற்றும் நோக்கத்தோடு மாய வடிவெடுத்து வந்த அரக்கன் அல்லன் எனத் தெளிந்து, ”வீரனே நீ யார்?” என்று வினவினாள்.

தான் அஞ்சனை மைந்தன் அனுமன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவன், தன்னுடைய வரலாற்றையும், இராமனுக்கும் கிட்கிந்தையிலுள்ள சுக்கிரீவனுக்கும் நட்பு ஏற்பட்ட வரலாற்றையும், சீதையைத் தேடி நாலாபுறமும் வானர சேனைகள் சென்றிருப்பதனையும், சுக்கிரீவனின் வழிகாட்டுதலின்பேரில் தென்திசையில் தேடிவந்த குழுவில் தான் இடம்பெற்றதையும், வாலி மைந்தன் அங்கதன் தன்னை இலங்கைக்கு அனுப்பியதையும் எடுத்துரைத்தான்.

அனுமன் சொன்ன செய்திகளைச் செவிமடுத்த சீதை, ”இராமனின் அங்க அடையாளங்களை உன்னால் உரைக்க முடியுமா?” என்று கேட்கவே, இராமனின் திருமேனியழகை அடிமுதல் முடியீறாய் வருணித்த அனுமன், இராமன் சீதையிடம் காட்டச்சொல்லிக் கொடுத்த அவன் பெயர் பொறித்த திருவாழியை (மோதிரம்) நீட்டினான்.

அதைக் கண்ணுற்ற சீதை, உடலைவிட்டு நீங்கிய உயிர் மீண்டும் அதனை அடைந்ததுபோல் இன்பக் கடலில் மிதந்தாள்; மணியிழந்த நாகம் மீண்டும் அதனைப் பெற்றதுபோல் மகிழ்ச்சியுற்றாள். உவகைக் கலுழ்ச்சியால் மலர்விழிகள் கண்ணீர் முத்துக்களைச் சொரிய, அனுமனை நன்றியோடு நோக்கியவள்,

”மூங்கில்போன்ற தோளையுடைய வீரனே! துணையில்லாத என் துன்பத்தைப் போக்கிய வள்ளலே…நீ வாழ்க! நான் களங்கமற்ற மனமுடையவள் என்பது உண்மையானால், ஒரு யுகத்தை ஒருபகலாய்க் கருதும், பதினான்கு உலகங்களும் அழியும் பிரளய காலத்தும் நீ அழியாது இருப்பாயாக!” என்று அவனை வாழ்த்தினாள்.

பாழிய பணைத்தோள் வீர துணைஇலேன் பரிவு தீர்த்த
வாழிய வள்ளலேயான் மறுஇலா மனத்தேன்
 என்னின்
ஊழிஓர் பகலாய்ஓதும் யாண்டுஎலாம் உலகம் ஏழும்
ஏழும் வீவுற்றஞான்றும் இன்றுஎன இருத்தி என்றாள்.
(கம்ப – உருக்காட்டு படலம் – 5407)

உணர்ச்சிவயப்பட்ட நிலையில் மானுட வேடம் கலைந்து தெய்வ ஆவேசம் உற்றவளாய்ச் சீதை வழங்கிய வரமாய் இது திகழ்கின்றது.

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க