கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 37

-மேகலா இராமமூர்த்தி

கும்பகருணன் இல்லத்தில் நுழைந்த அனுமன் அவனை இராவணனோ என்று ஐயுற்றுப் பின்னர் இவனுக்குத் தலை ஒருபதும் புயங்கள் இருபதும் இன்மையின் இவன் இராவணன் அல்லன் எனத்தெளிந்து தேடுதலைத் தொடர்ந்தான். அடுத்து அவன் நுழைந்தது வீடணனின் இல்லத்தில்.

உறங்கும் வீடணனைக் காண்கின்றான் அனுமன். அவ் இல்லத்தின் எண்ண அதிர்வுகளும் அலைகளும் அங்கு உறைபவன் நல்லவன்; அறத்தின்வழிப் பட்டவன் எனும் உணர்வை அனுமனுக்குள் ஏற்படுத்துகின்றன.

கருநிற அரக்கர்கள் நடுவில் வெண்ணிறங்கொண்டு வெளிப்படையாக வாழ்தல் கடினம் என்பதனால் அவர்களின் கருநிற வடிவத்தை அடைந்து, பவளத்தால் செய்யப்பட்ட கூடத்தில் பசுந்தேன் சிதறுகின்ற கற்பகப் பந்தலின்கீழ் பளிங்கால் அமைந்த மேடையில் மறைந்து வாழுகின்ற தருமம் போன்ற வீடணனை உற்றுநோக்கினான் அனுமன்.

பளிக்கு வேதிகைப் பவளத்தின் கூடத்துப் பசுந்தேன்
துளிக்கும் கற்பகப் பந்தரில் கருநிறத் தோர்பால்
வெளித்து வைகுதல்அரிதுஎன அவர்உரு மேவி
ஒளித்துவாழ்கின்ற தருமம் அன்னான்தனை உற்றான்.
(கம்ப: ஊர்தேடு படலம் – 5077)

அனுமன் வீடணனை அருகில்சென்று கண்டபோது, அவன் குற்றமற்ற நல்மனத்தினன்; உயர் குணத்தினன் எனும் உணர்வடைந்தான். ‘கள்ளி வயிற்றில் அகில் பிறப்பதுபோல’த் தீமையே நிறைந்துள்ள இலங்கையில் இப்படி ஓர் உயர்ந்தவனா என வியந்தபடி அங்கிருந்து அகன்றான்.

பல்வேறு மாளிகைகளைக் கடந்த அனுமன், ஆயுதம் ஏந்திய தடக்கையர், தம் பற்கள் வெளிப்பட மூதுரைகளையும் விடுகதைகளையும் பேசிக் கொண்டிருப்பவர்கள், வலிமையோடு காவல் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் எனப் பலரையும் தாண்டிச்சென்று இந்திரனைச் சிறைவைத்தவனான இந்திரசித்தனின் அரண்மனைக்குள் நுழைந்தான்.

ஆங்கே அழகிய மகளிர் குழாத்திடை உறங்கிக் கொண்டிருக்கின்ற இந்திரசித்தனைக் கண்டான்.

அவனுடைய தோற்றத்தைக் கண்ட அஞ்சனை மைந்தன், குகையில் உறங்கும் கொடுஞ்சிங்கம் போன்ற இவன், வளைந்த ஒளிமிகு பற்களையுடைய அரக்கனோ? மழுப்படை ஏந்திய சிவனின் மகனான முருகனோ? எவனோ என அறியாதிருக்கின்றேன். இளைய வீரனான இலக்குவனும் அடைக்கலமென வந்தோரை ஏந்திக் காக்கும் இராமபிரானும் மன உளைச்சல் அடையும்படி இவ்வீரனோடு நெடுநாள் போர் நிகழப் போகின்றது என உய்த்துணர்ந்தான்.

வளையும் வாள்எயிற்று அரக்கனோ கணிச்சியான் மகனோ
அளையில் வாள்அரி அனையவன் யாவனோ அறியேன்
இளைய வீரனும் ஏந்தலும் இருவரும் பலநாள்
உளைய உள்ளபோர் இவனொடும் உளது என உணர்ந்தான்.
(கம்ப: ஊர்தேடு படலம் – 5082)

இவனைத் துணையாகக் கொண்ட இராவணன் மூவுலகங்களையும் வென்றது அருஞ்செயல் இல்லை என்று எண்ணியவாறே அவ்விடம்விட்டு நீங்கினான்.

அடுத்து இராவணனின் காதற் கிழத்தியர் இல்லங்களிலெல்லாம் நுழைந்து தேடிக்கொண்டு சென்ற அனுமன், அவன் பட்டத்தரசியான மண்டோதரியின் மனையை அடைந்தான். மற்ற மாளிகைகளினும் அழகினும் சிறப்பினும் மேம்பட்டு அது திகழ்வதைக் கண்டு சீதாப் பிராட்டியை இராவணன் சிறை வைத்திருக்கும் மாளிகை இதுவோ என்று சிந்தித்தான்.

அரம்பையும் உருப்பசியும் ஏனைய தேவமாதரும் மண்டோதரியின் தளிர்புரை பாதங்களை வருடிவிட, அவள் துயில்கொண்டிருக்கும் நிலையை மறைந்திருந்து கண்டான் அனுமன்.

எரிகின்ற மாணிக்க விளக்குகளின் ஒளியைக் குன்றச் செய்யும் பேரொளியோடும் எழிலோடும் திகழ்ந்த மண்டோதரியின் தோற்றத்தைக் கண்ணுற்றதும் அவள் சீதாப் பிராட்டியோ எனும் ஐயம் அனுமனுக்கு ஏற்பட்டுவிட்டது. அந்த எண்ணத் தீயானது அவன் உடலை வாட்டியது.

அத்துன்பத்தைத் தாளமாட்டாத அனுமன், எலும்புகளால் கட்டப்பட்ட சிறந்த உடம்பினால் பெறும் பயனை இவள் இழந்துவிட்டாள்; இது கிடக்கட்டும்! இங்கே துயிலும் பெண், அன்பாகிய பிணிப்பைக் குடிப்பிறப்போடு சேர்த்து நீக்கித் தனக்குரிய தெய்வக் கற்பு நீங்கிய சீதை என்பது மட்டும் உறுதியானால், இராமனின் புகழும் பொலிவும், நானும், இந்த இலங்கை மாநகரும், இங்குள்ள இராக்கதர்களும் இன்றைய நாளில் அழிவோம் என்று கருதி வருந்தலானான்.

எற்புவான் தொடர் யாக்கையால் பெறும்பயன்
     இழந்தனள் இதுநிற்க
அற்பு வான்தளை இற்பிறப்பு அதனொடும்
     இகந்துதன்அருந் தெய்வக்
கற்பு நீங்கிய கனங்குழை இவள்எனின்
     காகுத்தன் புகழோடும்
பொற்பும் யானும்இவ் இலங்கையும் அரக்கரும்
     பொன்றுதும்இன்று என்றான். (கம்ப: ஊர்தேடு படலம் – 5141)

கும்பன், வீடணன், இந்திரசித்தன் ஆகியோரைக் கண்ட மாத்திரத்தில் அவர்களின் அங்க அடையாளங்களையும் அவ் இல்லங்களின் இயல்பையும் வைத்தே அவர்களைத் துல்லியமாய் எடைபோட்ட அனுமன் மண்டோதரியைக் கண்டதும் இவள் சீதையோ என்று ஐயுற்றது ஏன்? அத்தகைய குழப்பம் அவனுக்கு நேர்ந்தது எப்படி என்று சிந்தித்தால் அதற்கு நாம் இராமனைத்தான், ஒருவகையில், பொறுப்பாளியாக்க முடியும்.

ஏனெனில், அவன் தன் மனைவியின் அழகை அனுமனிடம் அடையாளத்தின் பொருட்டுப் பாதாதிகேசம் வருணித்திருந்தபடியால் அவளையொத்த அங்க அழகுகள் பொருந்திய ஒருத்தியைக் கண்டதும் அவள் சீதைதானோ என்ற ஐயம் அனுமனுக்கு ஏற்படுவது இயல்புதானே?

எனினும் அவ் ஐயம் அனுமனுக்கு நெடுநேரம் நீடிக்கவில்லை. சில கணங்களிலேயே சிந்தை தெளிந்தவனாய், இவள் சீதையையாய் இருக்க வாய்ப்பில்லை. இவளின் உடலில் சில நல்ல இலக்கணங்கள் உளவெனினும் இவள் மானுடப் பெண்ணினும் சற்று மாறுபட்டவளாய்க் காட்சியளிக்கின்றாள். இவள் உடலின் அடையாளம் இவளுக்கு விரைவில் எல்லையில்லாத் துன்பம் வரப்போகின்றது என்பதை அறிவிப்பதாய் இருக்கின்றது என்றெண்ணினான்.

தான் கண்டவள் சீதையில்லை என்ற மனத் தெளிவினால் ஏற்பட்ட மகிழ்ச்சியோடு மண்டோதரியின் மாளிகையை நீங்கிச் சென்ற மாருதி, அடுத்து பிரம்மாண்டமான பெரிய அரண்மனை ஒன்றைக் கண்டான். அதுதான் இலங்கைவேந்தன் இராவணனின் இருப்பிடம்.

அதனுள்ளே அனுமன் நுழைந்ததும் இலங்கையின் பல இடங்களில் அதிர்வு ஏற்பட்டது; திசைகள் துடித்தன; நீர் நிரம்பிய மங்கலக் கலசங்கள் சிதறின. இவ்வாறு அங்குத் தோன்றிய தீக்குறிகளைக் கண்ட அனுமன், அப்பெரிய நகரின் செல்வம் அழியப் போகின்றது என்பதைத் தன் மதிநுட்பத்தால் உணர்ந்து அதற்கு நெகிழ்ந்து நின்றான். ”எக்குலத்தவராய் இருந்தால்தான் என்ன? எல்லார்க்கும் நல்வினை தீவினைகளின் பயன் ஒன்றுபோலத்தான் இருக்கும். ஊழைவிட வலிமை உடையது எது?” என்று சிந்திக்கலானான்.

புக்குநின்று தன்புலன் கொடு நோக்கினன்
     பொருவருந் திருவுள்ளம்
நெக்குநின்றனன் நீங்கும் அந்தோ இந்த
     நெடுநகர்த்திரு என்னா
எக்குலங்களின் யாவரே யாயினும்
     இருவினை எல்லார்க்கும்
ஒக்கும் ஊழ்முறைஅல்லது வலியது ஒன்று
     இல் என உணர்வுற்றான். (கம்ப: ஊர்தேடு படலம் – 5146)

”ஊழிற் பெருவலி யாவுள?” (380) எனும் பேராசான் வள்ளுவரின் குறள் கருத்தை அனுமன்மூலம் வெளிப்படுத்தியுள்ள கம்பர், பிறர் கேட்டை நினைந்து வருந்தியமையால் அனுமனைப் பொருவருந் திருவுள்ளம் கொண்டவன் (ஒப்பிலா நன்மனத்தினன்) என்கிறார் விதந்து.

பொன்மயமான அம்மாளிகையில் நித்திரையில் ஆழ்ந்திருந்தான் நிருதர்கோன் இராவணன். இருள் என்று சொல்லப்படும் பொருள் அழியும்படி அவன் கிரீடங்களிலிருந்த மணிகள் இளவெயில்போல் ஒளிவீச, இரணியனைக் கொன்ற நரசிங்கம் பல தலைகளோடு துயில்வதுபோன்ற தன்மையோடு காட்சியளித்தான் அவன்.

கருப்பூரம் முதலிய கலவைகளைப் பெற்ற சந்தனப் பூச்சின்மேல் தவழுகின்ற, குளிர்ந்த தமிழ்மொழியுடன் பிறந்த, இளந்தென்றல் காற்றால் கொடுமையான காம நெருப்பானது வெளிப்பட்டு, இரு மடங்கு துருத்தியைப் போல் பெருமூச்சு அதிகமாக, காந்தள் மெல்விரலாள் சானகியின்பால் மனம் முதலான புலன்கள் விரைந்தோட, பாம்புகள் (ஐம்புலன்கள்) நீங்கிய புற்றைப்போல் நெகிழ்ந்த தன்இதயம் சூனியம் பட்டவனாய்க் கிடந்தான் இராவணன்.

சாந்துஅளாவிய கலவைமேல் தவழ்வுறு
     தண்தமிழ்ப் பசுந்தென்றல்
ஏந்து காமவெங்கனல் உயிர்த்து இருமடி
    துருத்தியின் உயிர்ப்புஏற
காந்தள்மெல்விரல் சனகிமேல் மனம்முதல்
     கரணங்கள் கடிதுஓடப்
பாந்தள்நீங்கிய முழைஎன குழைவுறு
     நெஞ்சுபாழ்பட் டானை. (கம்ப: ஊர்தேடு படலம் – 5151)

உறங்கும் வேளையிலும் சீதையின் நினைவால் ஏற்பட்ட மன உளைவால் இராவணனுக்கு அமைதியில்லை; நிம்மதியான நித்திரை இல்லை என்பதைப் பல பாடல்களில் ஈண்டு விளக்குகின்றார் கவிச்சக்கரவர்த்தி.

இராவணனைக் கண்டதும் ஏற்பட்ட சினத்தால் அவனை நானே கொன்றுவிடுகின்றேன் என்று கைகளை நெறித்துப் பற்களைக் கடித்தான் அனுமன். சிந்தித்துப் பார்த்தவன் அது தவறு என்ற முடிவுக்கு வந்தவனாய், இன்றைய தினத்தில் இராவணனனோடு போர் செய்யவேண்டும் எனும் பெருஞ்சீற்றம் என்னுள்ளேயே அடங்கிக் கிடக்கட்டும். கற்றை மலர்க்குழலாளைச் சிறைவைத்த முள்ளனைய இராவணனை ஒரு குரங்கு போரில் முடித்தது எனும் நிலை ஏற்பட்டால் அஃது இராமனின் வெற்றிதரும்  வில்லாற்றலுக்குத் தாழ்ச்சி உண்டாக்கும் என்றுணர்ந்து சீற்றம் தணிந்தான்.

இற்றைப் போர்ப் பெருஞ்சீற்றம்
     என்னோடும் முடிந்திடுக
கற்றைப் பூங் குழலாளைச்
     சிறைவைத்த கண்டகனை
முற்றப் போர்முடித்தது ஒரு
     குரங்குஎன்றால் முனைவீரன்
கொற்றப்போர்ச் சிலைத் தொழிற்குக்
     குறைவுஉண்டாம் எனக்குறைந்தான். (கம்ப: ஊர்தேடு படலம் – 5164)

உணர்ச்சிவெள்ளம் மீதூரும் போதெல்லாம் அதனைத் தன் அறிவின் துணையால் அணைபோட்டு வெல்லும் அனுமனின் செயல்முறை இன்றைய மாந்தர்க்கும் தேவைப்படும் உயர்ந்த பண்பாகும்.

இராவணனின் அரண்மனையைவிட்டு வெளியில் வந்த அனுமனின் உள்ளத்தில் இலங்கை முழுவதும் தேடியும் சீதை சிறையிருக்கும் இடத்தை அறிய முடியவில்லையே என்ற கலக்கம் எழுந்தது.

அப்போது தேன்மலர்கள் நிறைந்த சோலை ஒன்று அருகே இருப்பதைக் கண்ணுற்றான் அவன். அதனுள் சென்று தேடலாம் என்ற முடிவுக்கு வந்தான். அதுவே அசோக வனமாகும்!

இங்கே பிராட்டியைக் கண்டால் எனை வாட்டிக்கொண்டிருக்கும் உளத்துயர் நீங்கும் என்று எண்ணியவனாய்ச் சோலைக்குள் நுழைந்தான் அனுமன்.

இப்போது நீண்ட நாட்களாக நாம் காப்பியத்தில் சந்திக்காமலிருந்த சீதையை அனுமனுக்கு முன்னதாகவே நாம் சந்திக்கக்கூடிய நல்வாய்ப்பை நல்குகின்றார் கம்ப நாடர்.

நாமும் சீதையைச் சந்திக்கும் பேராவலோடு அருகில் சென்றால் அங்கே அந்தப் பெண்ணரசி இருக்கும் நிலை நம்மைக் கண்கலங்க வைக்கின்றது.

தான் உடுத்திய ஆடையை மாற்றாது, நீராடாது, புகைபடிந்த ஓவியமென அந்தப் பாவை, கொடிய அரக்கியர் சூழ, அங்கே அமர்ந்திருந்தாள். அவள் உள்ளக் கடலோ ஏதேதோ எண்ண அலைகளால் தத்தளித்துக் கொண்டிருந்தது.

தன்னை இராவணன் கடத்திக்கொண்டு போனபோது அதனைக் கண்டவனான சடாயு உயிர்நீத்து விட்டபடியால் தன்னிலையை இராம இலக்குவருக்கு விளக்குவார் யாருமிலர். எனவே, இப்பிறப்பில் தான் மீண்டும் அவர்களைக் காணப் போவதில்லை என்றெண்ணி வாடினாள் அவள்.

இராமனைத் தேடிச்செல்ல மறுத்த இலக்குவனைக் கொடுஞ்சொற்களால் தான் நிந்தித்ததை அறிந்த இராமன் தன்னை அறிவில்லாதவள் என்று கருதித் துறந்துவிட்டானா? என் தீவினையின் விளைவா இது? என்றெண்ணிக் குமைந்தாள்.

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல எண்ணவோட்டங்கள் சீதைக்குள் எழுந்து அவளை வாட்டமுறச் செய்தன.

தான் அமர்ந்திருக்கும் இடம் கறையானால் அரிக்கப்பெற்றுப் புற்றுத் தோன்றினும் அவ்விடத்தை விட்டு எழாத சீதை, ”ஐயோ மெல்லிய இலைக்கறி உணவை எவர் பரிமாற இராமன் உண்பான் என்று சிந்தித்துத் துன்புறுவாள்; அவனை நாடி விருந்தினர் வந்தால், அவர்களை வரவேற்று உணவு பரிமாற நான் அருகில் இல்லாததால், எத்தகைய துன்பம் அடைவானோ என்று நினைத்து ஏக்கமுறுவாள்; யானே வரவழைத்துக்கொண்ட இந்த நோய்க்கு மருந்தும் உண்டோ என்றுகூறிச் சோர்வடைவாள்.

அருந்தும் மெல்அடகு ஆர்இட அருந்தும் என்று அழுங்கும்
விருந்து கண்டபோது என்உறுமோ என்று விம்மும்
மருந்தும் உண்டுகொல் யான்கொண்ட நோய்க்கு என்று மயங்கும்
இருந்த மா நிலம்செல் அரித்து எழவும் ஆண்டு எழாதாள்.
(கம்ப: காட்சிப் படலம் – 5190)

விருந்தினரைப் பேண இராமனின் அருகில் தான் இல்லையே என்று சீதை வருந்துவதாய்க் காட்டுவதன்மூலம் ஓர் ஆடவன் பெண்ணை மணப்பதன் முதன்மைப் பயன் விருந்தோம்பலே என்பதை அனைவர்க்கும் அறியத் தருகின்றார், தமிழர் பண்பைப் போற்றுவதில் என்றும் பிறக்கிடாத, கம்பர்.

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை

1.கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

2.கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

3.கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

4.கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க