கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 33

-மேகலா இராமமூர்த்தி

துன்பமென்றால் என்னவென்றே அறியாத இளைஞன், வாலியின் அருமை மைந்தன் அங்கதன். தன் தந்தையை மலர்கள் மலைபோல் குவிந்திருக்கும் படுக்கையில் கண்டிருக்கின்றானேயன்றி இப்போது கிடப்பதுபோலக் குருதிக்கடலில் கிடக்கக் கண்டவனும் இல்லை. ஆதலால் தந்தையின் அவலநிலை அவன் உள்ளம் வாட்டியது; துன்பத் தீ மூட்டியது. அதனைத் தாளமாட்டாது நிலத்தில் வீழ்ந்துகிடக்கும் சந்திரன்மீது விண்மீனொன்று வீழ்ந்ததுபோல் வாலியின் உடல்மீது வீழ்ந்தழுதான் அங்கதன்.

”தந்தையே! என் தந்தையே! எழுகின்ற அலைகளையுடைய கடல்சூழந்த இந்த உலகில் எவர்க்கும் செய்கையால் மட்டுமன்றிச் சிந்தையாலும் தீங்கு ஏதும் செய்யாதவன் நீ. அப்படிப்பட்ட உனக்கு இப்படியொரு துன்பம் வந்ததே? உன் முகத்தை நோக்கி அந்தக் கூற்றுவனும் அஞ்சாமல் வந்துவிட்டானே! இனி அந்தக் கூற்றுவனின் வலிமையை அழிக்கவல்லார் ஆருளர்?” என்று கதறினான்.

எந்தையே எந்தையே இவ் எழு
      திரை வளாகத்து யார்க்கும்
சிந்தையால் செய்கையால் ஓர்
      தீவினை செய்திலாதாய்
நொந்தனை அதுதான் நிற்க நின்
      முகம் நோக்கிக் கூற்றம்
வந்ததே அன்றோ அஞ்சாது ஆர்
      அதன் வலியைத் தீர்ப்பார். (கம்ப: வாலிவதைப் படலம் – 4187)

வாலியைப் பொறுத்தவரை, தனக்குத் துன்பம் செய்தோர், தன் பகைவர்கள் ஆகியோர் தவிர்த்துத் தன் வலிமையின் காரணமாய்ச் செருக்கடைந்து யார்க்கும் தீங்கு செய்தவன் அல்லன்.

வாலி சுக்கிரீவன்மீது பகைமை பாராட்டியதும், அவன் மனைவியான உருமையைக் கவர்ந்ததும் தவறான செயல்களாக வாலியால் கருதப்படவில்லையாதலால் அங்கதனும் அவற்றில் குறையேதும் காணவில்லை. எனவே தன் தந்தை மனம் சொல் செயலால் யார்க்கும் எந்தத் தீங்கும் செய்யாதவன் என்றே உறுதியாய்க் கருதினான் அங்கதன்.

இந்த இடத்தில் சிலப்பதிகாரக் காட்சியொன்று என் நினைவுக்கு வருகின்றது.

கோவலன் செல்வத்தைத் தொலைத்துத் தான் இலம்பாடு உற்றதற்கு நாணி, தொலைத்த செல்வத்தை மீண்டும் தேடும்பொருட்டுக் கண்ணகியோடும் சமணத் துறவியான கவுந்தியடிகளோடும் மதுரைநோக்கிப் பயணமானான்; அவ் வரலாறு நாமறிந்ததுதான்!

மதுரையை ஒட்டிய புறஞ்சேரியில் கண்ணகியோடும் கவுந்தியடிகளோடும் கோவலன் தங்கியிருந்தபோது அவனைச் சந்திக்கின்றான் அவனுடைய நெடுநாளைய நண்பனும், பூம்புகாருக்கு அருகிலுள்ள தலைச்செங்காடு எனும் பகுதியைச் சேர்ந்தவனுமான மாடலன் என்னும் மறையவன்.

கோவலனின் உருவழிந்த தோற்றத்தைக் கண்டு வேதனையுற்ற மாடலன், கோவலன் செய்த அறச் செயல்களையெல்லாம் பட்டியலிட்டுச் சொல்லிவிட்டு, ”யானறிந்தவரையில் இப்பிறவியில் நீ செய்தவையெல்லாம் நற்செயல்களே! அவ்வாறிருக்கத் திருமகளையொத்த மாணிக்கத் தளிரான கண்ணகியுடன் நீ தனியே மதுரை நோக்கிப் புறப்பட்டது முற்பிறவியில் செய்த தீவினைப் பயனோ?” என்று வருந்திப் புலம்புகின்றான்.

”இம்மைச் செய்தன யானறி நல்வினை
உம்மைப்
 பயன்கொல் ஒருதனி யுழந்தித்
திருத்தகு
 மாமணிக் கொழுந்துடன் போந்தது
விருத்தகோ
 பால நீயென வினவ….” (சிலப்: அடைக்கலக் காதை: 91-94)

மாதவியின் பொருட்டுக் கோவலன் கண்ணகியைப் பிரிந்ததை மாடலன் ஒரு குறையாகக் கருதவில்லை என்பதையே ”இப்பிறவியில் நீ நன்மையன்றி வேறொன்றும் செய்ததில்லையே” என்று கோவலனை நோக்கி மாடலன் கூறும் சொற்கள் நமக்குப் புலப்படுத்துகின்றன.

ஆக, ஆடவர்கள் பல பெண்டிரை மணப்பதையோ, மணவுறவைத் தாண்டி பரத்தையரோடு தொடர்பு வைத்துக்கொள்வதையோ அக்காலச் சமூகம் தவறாகவோ குறையாகவோ எண்ணவில்லை என்பதை நாம் அன்றைய இலக்கியங்கள் வாயிலாய்த் தெற்றென உணரமுடிகின்றது.

இதற்கு விதிவிலக்காக வள்ளுவம் மட்டுமே வரைவின் மகளிரான பரத்தையரின் தொடர்பை ஆடவர் கைக்கொள்வது தவறானது என்று கண்டித்துள்ளமை கருதத்தக்கது.

கம்பனின் காப்பியத்துக்குத் திரும்புவோம்!

வாலியின் பெருமைகளை ஒவ்வொன்றாய் எடுத்துச்சொல்லி வேதனையிலாழ்ந்தான் அவனின் அருமை மைந்தன் அங்கதன்.

”பஞ்சினும் மெல்லிய அடிகளை உடைய உமையை ஒரு பாகத்தில் வைத்த சிவனாரின் திருவடிகளன்றி வேறெதனையும் வணங்கியறியாத, சிவந்த கரங்களையும் ஆணைச் சக்கரத்தையும் உடைய எந்தாய்! நீ கடைந்து தந்ததனால் அமுதத்தையடைந்து அதனையுண்ட தேவர்கள் அனைவரும் உயிரோடு நிலைத்து வாழ்கின்றார்கள்; ஆனால், அமுதம் ஈந்த நீயோ இறந்தவனானாய்! உன்னைவிட வள்ளன்மை மிக்கோர் இவ்வுலகில் வேறு யாருளர்?” என்று கண்ணீர் வழியத் தன் தந்தையைப் பார்த்து வினவினான்.

பஞ்சின் மெல் அடியாள் பங்கன்
      பாதுகம் அலாது யாதும்
அஞ்சலித்து அறியாச் செங் கை
      ஆணையாய் அமரர் யாரும்
எஞ்சலர் இருந்தார் உன்னால் இன்
      அமுது ஈந்த நீயோ
துஞ்சினை வள்ளியோர்கள் நின்னின்
      யார் சொல்லற்பாலார். (கம்ப: வாலிவதைப் படலம் – 4190)

வாணாளை நீட்ட உதவும் அமுதனைய அரிய நெல்லிக்கனியைத் தானுண்ணாது, ஔவைக்கு ஈந்தான் அதியன். அதனால் நனிமகிழ்ந்த ஔவை, அவனை நீலமணிமிடற்று அண்ணலான சிவனாரைப் போல் நீடுவாழ்கென வாழ்த்தினார் என்கின்றது புறநானூறு.

…பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே தொன்நிலைப்
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே
. (புறம் – 91)

வாலியோ இன்னும் ஒருபடி மேலேபோய்த் தான் கடைந்தெடுத்த சாவா மருந்தான அமுதத்தைத் தானுண்ணாது தேவர்கட்கு ஈந்திருக்கின்றான். தன்னலமற்ற அவன் செயல், வள்ளல்களுள் தலைசிறந்தவன் அவன் என்பதற்குச் சான்றாகின்றது.

அங்கதன் கலங்கியழுவதைக் கண்டு மனம்பொறாத வாலி அவனை அணைத்துக்கொண்டு, ”மைந்த!  மூவுலகைச் சேர்ந்தவர்க்கும் இறத்தலும் பிறத்தலும் தவிர்க்க ஒண்ணாதவை. நான் முன்செய்த தவப் பயனால் அனைத்தும் தோன்றி மறைவதைத் தான் அழியாமல் கண்டு சாட்சியாய் நிற்கும் வீரனான இராமனால் வீடுபேறுற்றேன். இந்நன்மையை எனக்குச் செய்த இராமனை நீ போற்ற வேண்டும்; அவனுக்குத் தொண்டாற்ற வேண்டும்” என்றான்.

அதனைத் தொடர்ந்து இராமனை நோக்கிய வாலி, ”நிருதர் சேனை எனும் பஞ்சுமூட்டைக்கு நெருப்புப் போன்றவனும் செயலில் தூய்மை உடையவனுமான இந்த அங்கதன் இனி நின் அடைக்கலப் பொருளாவான்!” என்றுரைத்து இராமனிடம் தன்னருமை மைந்தனை ஒப்படைத்தான்.

தந்தையின் சொற்களையேற்ற அங்கதன், இராமனின் திருவடிகளில் வீழ்ந்து வணங்க, அவ் அளவில் அவனைத் தன் அடைக்கலமாக ஏற்றுக்கொண்ட, தாமரைக் கண்ணனான, இராமன், தன்னுடைய உடைவாளை அங்கதனிடம் நீட்டியவண்ணம், ”நீ என்னுடைய செயலைப் பொறுத்துக் கொள்வாய்!” என்றான். அதனைக் கேட்ட ஏழுலகங்களும் இராமனைப் போற்றின; இவற்றையெல்லாம் கண்டுகொண்டிருந்த வாலி தன் மைந்தனைத் தக்கவனிடம் அடைக்கலப்படுத்திவிட்ட நிறைவில் இவ்வுலகம் நீத்து அப்புறத்து உலகம் எய்தினான்.

தன் அடி தாழ்தலோடும்
     தாமரைத் தடங் கணானும்
பொன் உடைவாளை நீட்டி நீ
      இது பொறுத்தி என்றான்
என்னலும் உலகம் ஏழும்
      ஏத்தின இறந்து வாலி
அந் நிலை துறந்து வானுக்கு
      அப் புறத்து உலகன் ஆனான். (கம்ப: வாலிவதைப் படலம் – 4197)

இப்பாடலில், ’நீ இது பொறுத்தி’ என்று சொல்லி இராமன் அங்கதனிடம் தன் உடைவாளைக் கொடுக்கின்றான். இதனை எண்ணிப் பார்க்கையில், வாலியை மறைந்திருந்து கொன்றது இராமனின் மனத்துக்கு ஓர் உறுத்தலாகவே இருந்திருக்கவேண்டும் என்பதையும் அதற்குக் கழுவாய் தேடும் வகையிலேயே வாலி மைந்தனான அங்கதனிடம், ”இதனைப் பொறுத்துக்கொள்” என்று வருத்தம் தெரிவித்து அவனை இளவரசனாக அங்கீகரிக்கும் வகையில் தன் உடைவாளைக் கொடுத்தான் என்றும் நினைய வேண்டியுள்ளது.

வாலி இராமனிடம் அங்கதனை அடைக்கலமாய் அளித்ததும், அவனுக்கு
இராமன் தன்னுடைய உடைவாளை அளித்ததுமாகிய செய்திகள் வால்மீகி இராமாயணம், அத்யாத்ம இராமாயணம் போன்ற வடமொழி இராமாயண நூல்களில் காணப்படவில்லை. வாலி அங்கதனைச் சுக்கிரீவனிடத்து ஒப்படைத்து உயிர்துறந்தான் என்றே அந்நூல்கள் கூறுகின்றன. ஆனால், கம்பர் அங்கதனைச் சிறப்பிக்கவேண்டி, இராமன் அவனுக்கு அடைக்கலம் அளித்து உடைவாளையும் கொடுத்துத் தன் காப்பாளனாய் ஏற்றான் என்கின்றார். அதுமட்டுமல்லாது, அங்கதனின் வீரத்தையும் பணிசெய்யும் பாங்கினையும் விளக்குமுகமாய் ‘அங்கதன் தூதுப் படலம்’ என்ற தனிப்படலத்தையும் தம் காப்பியத்தில் பாடியுள்ளார்.

அடுத்து மற்றோர் அவலக் காட்சியை அரங்கேற்றுகின்றார் கவிவலவர் கம்பர். அது, கணவனை இழந்த தாரையின் கண்ணீரும் புலம்பலும்!

வாலி இறந்த செய்தியறிந்த தாரை, தாரை தாரையாய்க் கண்ணீர் பெருக்கினாள். அவன் இறந்துகிடந்த இடத்தை அடைந்து அவன் உடல்மீது புரண்டழுதாள்.

”மலைகள் போல் விளங்கும் தோள்கள் புழுதிபடியத் தரைமீது கிடப்பவனே! நீ அடைந்த கதி இதுவோ என்று நான் புலம்பியழக் கண்டும் என் துயர்தீர்க்கும் வண்ணம் வார்த்தை ஒன்றும் உரைத்தாய் இல்லை! இவ்வாறு நீ என்னை வெறுத்தொதுக்க நான் செய்த பிழைதான் என்ன?” என்று கதறினாள்.

வரை ஆர் தோள் பொடி ஆட வைகுவாய்
தரை மேலாய் உறு தன்மை ஈது எனக்
கரையாதேன் இடு பூசல் கண்டும் ஒன்று
உரையாய் என்வயின் ஊனம் யாவதோ.
(கம்ப: வாலிவதைப் படலம் – 4206)

தாரையின் கதறல், மாடமலி மதுரையில் மணவாளன் கோவலன் கொடியோரால் கொலைசெய்யப்பட்டு அவன் நறுமேனி புழுதிபடியத் தரையில் கிடந்த அவலங் கண்ட கண்ணகி, “என்னுடைய மிகுதுயர் கண்டும் இவள் இக்கொடிய காட்சியைக் கண்டால் இடர்உறுவாள் என்று நீர் எண்ணவில்லையே! அந்தோ! சந்தனம் முதலிய நறுமணப் பொருள்கள் பூசப்பட்ட உம் பொன்மேனி புழுதியில் கிடக்கின்றதே!” என்று கதறிய காட்சியோடு ஒப்புநோக்கத் தக்கது.

என்னுறு துயர்கண்டும் இடருறும் இவள் என்னீர்
பொன்னுறு நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ”
(சிலப்: ஊர்சூழ் வரி – 39-40)

அனுமன் தாரைக்கு ஆறுதல்சொல்லி அவளை வானர மகளிரோடு அந்தப்புரத்துக்கு அனுப்பிவிட்டு, அங்கதனைக் கொண்டு வாலிக்கு இறுதிக் கடன்கள் ஆற்றச் செய்தான்.

அடுத்து, சுக்கிரீவனுக்கு முடிசூட்டு விழா நடைபெறுகின்றது. இலக்குவன் சுக்கிரீவனுக்குத் தன் கரங்களால் முடிசூட்டுகின்றான். கிட்கிந்தையின் புதிய அரசனான சுக்கிரீவன் இராமனை வணங்க, அவனுக்கு அரசாட்சியைத் திறம்பட நடாத்துதற்கு உதவக்கூடிய அறவுரைகளைச் சொல்லத் தொடங்குகின்றான் இராமன்.

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

  1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
  2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
  3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
  4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க