Author: திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி

  • சேக்கிழார் பாடல் நயம் – 120 (அப்பொழுது)

    சேக்கிழார் பாடல் நயம் – 120 (அப்பொழுது)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு

    கருவூர்ப் பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் எங்கும் இறைவழிபாட்டுக்கு உரிய நிகழ்வுகள் நடந்தன! அவ்வூர்ச் சிவனடியார் விறன்மிண்டர் என்பவராவார். அவர் தம் பெயருக்கேற்ற விறலும்  மிண்டும் கொண்டவர். இறைவன்பால் அன்பு கொண்ட அவர் இறைவழிபாடு செய்யும்  அடியார்களுக்கு ஆவன செய்வதற்கு உரிய பரசும் மனமும், இறைவழிபாட்டுக்கு இடையூறு செய்வாரைத்  தண்டிப்பதற்கு உரிய ஆயுதமாகிய பரசு என்ற மழுவா யுதத்தையும் ஏந்தினார்! சிவகாமியாண்டார் என்னும் அடியவர் ஒருவர், இறைவன்பால் பேரன்பு கொண்டு, அதிகாலையில்எழுந்து இறைவனுக்குச் சாத்துவதற்குரிய மலர்களையும், மாலைகளையும் நிறைத்த  பூக்குடலையையம்  ஏந்திக்கொண்டு எச்சில் தெறிக்காதவாறு வாயை மூடிக்கொண்டு, முதுமை  காரணமாக  ஊன்றுகோல் ஒன்றையும் கொண்டு திருக்கோயிலை  நோக்கி  நடந்து வந்தார். அப்போது அநபாயச் சோழனின்மரபில் வளர்ந்த  பட்டத்து யானையாகிய ஆண்களிறு  திருவிழா வுக்குரிய நவமிக்கு முதல்நாளில்  அமராவதி ஆற்றில் நீராடி, மிகுந்த பெருமிதத்தால் மதநீர் ஒழுக ஓடத்  தொடங்கியது!  அனைவரும் விலகிஓட, யானைப்பாகர்கள் அங்குசம்  முதலிய கோலேந்தி அதனை அடக்க முற்பட்டனர்; பெரிய மலை அசைந்து  வருவது போல விரைந்து வந்த யானை ஓர்ஓரமாக ஒதுங்கி நின்ற சிவகாமியாண்டார் ஏந்தி வந்தபூக்குடலையைப் பறித்துக்கொண்டு ஓடியது!

    யானைமேல் அமர்ந்த பாகர்கள் அந்தயானையை ஊழிக்காற்றைப் போல் விரைந்து செலுத்தினார்கள்; மார்பில்   பூணூல்  அணிந்த சிவனடியார் பதறி வெகுண்டார். மதங்கொண்ட யானையைப் பின் தொடர்ந்துதம் கையில் ஏந்திய தடியால் அடிக்க வந்தார்.

    பாடல்

    அப்பொழுது  அணையவொட்டாது   அடல்களிறு  அகன்று போக
    மெய்ப்பெரும்  தொண்டர் மூப்பால் விரைந்துபின் செல்ல மாட்டார்
    தப்பினர்  விழுந்து  கையால் தரையடித்து  எழுந்து  நின்று
    செப்பரும்   துயரம் நீடிச்  செயிர்த்துமுன்  ‘’சிவதா’’ என்றார்!

    பொருள்

    அப்பொழுது வலிய அவ்வியானை அவர் தன்னை அணுகவொட்டாதபடி நீங்கிப்போயினதாக, உண்மைத் தன்மையுடைய பெருந்தொண்டர் மூப்பினாலே விரைவாய்த் தொடர்ந்து அதன்பின்னே செல்ல மாட்டாதவராகி, அதனை விட்டார்; கீழே விழுந்து, கையினால் தரையில் அடித்து, மோதிப், பின் எழுந்து நின்று, சொல்லற்கரிய துன்பத்தால் நீடிக்கோபித்து முன்னே “சிவதா” என்பாரானார்.

    விளக்கம்

    தப்பினார் என்றசொல்,அந்தநேரத்தில் யானையை நெருங்காது குறி தவறி விழுந்தார் என்றும்,  அடித்திருப்பாராயின், யானையால்  தீங்குறுவார்; ஆதலின் அதனினின்றும் தப்பினர் என்றும்பொருள்படும்.

    விழுந்து  என்றசொல் , துயரத்தால் தாமே நிலத்தில் வீழ்ந்து . வேகத்திற் குறிவைத்து வந்த அது தப்பியதாதலின் அவ்வேகந் தப்பியதாற் கீழேவிழுந்து என்றும். தப்பி  என்றதனை  கால்தவறி வீழ்ந்து  என்றும்  உரைப்பார்.

    கையால் தரையடித்தல் – மிக்க துயரத்தால் நிகழ்வதோர் செயல். துயரமிகுதிப் பாட்டினாலே விழுந்து தரையடித்தலாகிய முதற் செயல் நிகழ்ந்த பின்னர் நிகழும் ஓலமாகிய  மெய்ப்பாடு. எழுந்து நிற்றலும் முறைகூறி ஓலிடுதலும் பின் நிகழ்வன.

    செப்பருந்துயரம் நீடி – என்றதொடர்  சொல்ல முடியாத துயரத்தான் மிக்கவராய். தாம் நித்தமும் நியதியாகச் செய்து வந்த இறைவன் திருப்பணி இன்று இவ்வாறு முட்டுப்பட்டமையால் பெருந்துயரமடைந்து.

    செயிர்த்து  என்றசொல் , திருப்பணி முட்டுமாறு செய்தலின் அதுசெய்த யானைமேல்  சினம் மிக்கது. பெருந்துயரத்தின் பின்னிகழும் உள்ளநிலை.

    சிவதா என்பார் –  என்றதொடர்,  இறைவனை நினைத்து ஓலமிடும் ஓலச்சொல். இது போல,  அவிதா என்பனவும், அப்பிராமண்ணியம் என்பதும் ஆபத்துக் காலங்களில் முறையிடும் ஓலச் சொற்கள். இவ்வாறன்றி இதற்கு எப்போதும் இவர் தம்மிச்சை இன்றிச் ‘’சிவதா , சிவதா!’’  என்றுரைப்பது  வழக்கம் போலும்

    இப்பாடலில் அடியார் துயரமும், சிவபக்திச் செயலும்,  வாய்விட்டுக் கதறி ஏங்குவதும் மனமுருகும் வண்ணம் அமைந்துள்ளன!

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் -119 (மழை)

    சேக்கிழார் பாடல் நயம் -119 (மழை)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    எறிபத்தர் என்ற மன்னர் அக்கருவூரில் வாழ்ந்தார். அவ்வூரில் அமைந்த ஆனிலையப்பர் திருக்கோயிலில் சிவபூசை மரபுகளைப் பேணி வளர்த்த தொண்டராக அவர் திகழ்ந்தார். அவரைப்பற்றி இப்பாடல்கூறுகிறது.

    பாடல்:

    மழைவள ருலகி லெங்கு மன்னிய சைவ மோங்க
    வழலவிர் சடையா னன்பர்க் கடாதன வடுத்த போது
    முழையரி யென்னத் தோன்றி முரண்கெட வெறிந்து தீர்க்கும்
    பழமறை பரசுந் தூய பரசுமுன் னெடுக்கப்  பெற்றார்.

    பொருள்:

    நிலைபெற்ற சைவம் மழையினால் வளருந் தன்மையுடைய உலகத்தில் எங்கும் ஓங்கும்படியாக, அழல்போன்ற நிறத்துடன் அவிர்ந்த சடையினை யுடைய இறைவன் அன்பர்களுக்கு அடுக்கத்தகாத இடர்கள் வந்த காலத்தில், குகையினின்றுங் கிளம்பிப் பாயும் சிங்கம்போல, விரைவில்  தோன்றி அந்த முரண்பட்ட வலிமை கெடும்படி எறிந்து தீர்க்கும் படைக்கலமாகிய, பழமறைகளாற் போற்றப்பட்டதாகிய பரசாயுதத்தை எப்போதும் ஏந்துகின்றவர் (அவர்).

    விளக்கம் :

    மழைவளர் உலகு – உலகம் மழையின் றுணையானே வளர்ந்து வழங்குவதாம். “வானின் றுலகம் வழங்கி வருதலால்”என்பது திருக்குறள்.

    உலகில் எங்கும் மன்னிய சைவம் – மன்னிய சைவம் எங்கும்  ஓங்க என்க. சைவம் சிவத்துடன் சம்பந்தமாவது. உலகத்தென்றும் சிவசம்பந்தமே நிறைவது – சிவ நிறைவுட்பட்டது உலகம்.

    “ஆண்டுலகே ழனைத்தினையும் வைத்தார் தாமே
    யங்கங்கே சிவமாகி நின்றார் தாமே”

    என்ற திருத்தாண்டகமுங் காண்க. மன்னுதல் – இடையூறு வந்த காலத்தும் அழிவின்றி நிலைபெறுதல். ஓங்க – எங்கும் மேம்பட்டு நிற்க. நிலைபெற்ற நிறைவாகிய அது பொதுவகையாலன்றிச் சிறப்பாக விளக்கம் பெற. சைவம் எங்கும் மன்னியதாயினும் இடையூற்றின் மிகுதிப்பாட்டாற் சிலவிடத்து ஓங்காது குன்றி நிற்கும். கூன்பாண்டியர்

    காலத்தே சமணம்மிக்குச் சைவ விளக்கம் குன்றியது போலக் காண்க.

    அவ்வாறு குன்றாது ஓங்க இந்நாயனார் இடையூற்றினை எறிந்து தீர்க்கப் பரசு எடுத்தனர் என்பது. உலகில் எங்கும் மழை மன்னும்பொருட்டுச் சைவம் ஓங்க என்று கருதுக. சைவம் ஓங்குதலால் மழைமன்னுதல் “வீழ்க தண்புனல்” என்ற திருப்பாசுரத்தாற் காண்க.

    அரசினால் அடாதன நீங்கின; அவை நீங்கச் சைவம் ஒங்கிற்று; அது ஒங்க மழை மன்னிற்று; அது மன்ன உலகம் வளரும் – எனக் கொண்டுரைக்க. இச்சரிதத்தே யானையால் நேர்ந்த சிவாபசாரம் இந்நாயனாரது செயலினாலே நீங்க, மன்னனும் ஒங்கியது காண்க. மன்னனது கோலோங்குதலும் மழைக்குக் காரணமாமென்ப. திருப்பாசுரத்தினும் “வீழ்க தண்புனல்; வேந்தனு மோங்குக” எனத் தொடர்ந்து கூறியருளியதுங் காண்க. இதுபற்றிய விரிவுரையில் ஆசிரியர் சேக்கிழார் பெருமான்,

    “வேள்வி நற்பயன் வீழ்புன லாவது,
    நாளு மர்ச்சனை நல்லுறுப் பாதலால்,
    லாளு மன்னனை வாழ்த்திய தர்ச்சனை,
    மூளு மற்றிவை காக்கு முறைமையால்”

    என்றருளியிருப்பதையும் இங்குவைத்துச் சிந்திக்க.

    அழல் அவிர் சடை – தீப்போலச் செந்நிறத்தனவாகி விரிந்தசடை.

    “அழனீரொழுகியனைய சடை”, “மின்னார் செஞ்சடை”, “மின்வண்ண, மெவ்வண்ணமவ்வண்ணம் வீழ்சடை” என்பனவாதி திருவாக்குக்கள் இதனை நிறுவும்.  மின் தீயினது கூறாகும் என்க.

    அடாதன – அடுக்கத்தகாதன. வரத்தகாத தீங்கு. அடியார்களுக்கு நேரும் தீங்கினைத் தம் வாக்கினாலும் சொல்லாத மரபுடைய ஆசிரியர், அம்மரபுபற்றி அடாதன என்றார்.

    முழையரியென்ன – முழை – சிங்கங்கள் பதுங்கி வசிக்கும் மலைக்குகை முதலிய மறைவிடங்கள். அரி – சிங்கம். பசிமுதலிய அவசியம் நேர்ந்தபோ தன்றிப் பிறகாலத்து இது வெளிவராது. அவசியம் நேர்ந்தபோது எவ்வகையிடையூற்றுக்கும் அஞ்சாது வீரத்தோடெழுந்து பாயும். யானைமேற் பாய்தல் சிங்கத்தினாலன்றிப் பிறவற்றில்   இயலாது. இவை முதலியகாரணங்கள் பற்றி இங்குச் சிங்கத்திற்கு ஒப்புமை கூறினார்.  “செங்கண் வாளரியிற்கூடி” (572) என்று பின்னருங் கூறினார்.

    சீறி – இச்சீற்றம் அன்பர்க்கடாதன அடுத்தபோது தீர்க்கும் அன்புடைமையால் எழுந்த கோபம். சிவப் பணியிடையின் நிகழ்வதாகலின் நூல்களால் விலக்கப்பட்ட மனக்குற்றங்களில் ஒன்றாக வைத்து எண்ணப்படாததாம் என்க. இறைவனது கோபப் பிரசாதம் போலக் காண்க.

    முரண்கெட – பகை நீங்குமாறு. முரண்செய்த காரணத்தைக் கெடச்செய்தலே அடாதனவற்றைத் தீர்க்கும் வழியாம்.  அடுத்தார்க்கு அரணும் அடுக்காதார்க்கு முரணுமாம்.

    எறிந்து தீர்க்கும் பரசு – மறைபரசும் பரசு – எனப் பரசு என்பதனை இரண்டிடத்தும் கூட்டுக. மறைபரசும் பரசு – சிவபெருமான் கையில் உள்ளது. பரசு ஹஸ்தாய நம : என்பது சிவாஷ்டோத்தரம். “பரசுபாணியர்” முதலாகவுள்ள தமிழ் வேதங்களும் காண்க. இறைவன் திருக்கரத்தில் ‘பரசு’ என்ற மழு  விளங்கியதைத்  திருமுறைகள் ஆங்காங்கே செப்புகின்றன.  இங்கு நாயனார் ஏந்தியது அது போன்றதே என்பதாம். இது பற்றியே முதனூலாகிய தமிழ் மறையும் “இலைமலிந்த வேல்” என்று போற்றியது.

    பரசும் பரசு – பரசும் =போற்றுகின்ற, பரசு = மழு;   சொற்பின் வருநிலை என்ற சொல்லணி. தூயபரசு – இங்குப் பரசு, எறிந்து கொலைசெய்யும் படையாயிருந்தும், தூய் – என்றது  என்னை? எனின், அடியார்க்கு அடுக்கும் அடாதனவற்றை நீக்கித், தூய நல்ல சிவதருமஞ்செய்யத் துணை செய்தலானும், அடாதன செய்து அடியார்பால் அபசாரப்பட்டாரை ஒறுத்து அவரையுந் தூய்மை செய்தலானும் அது தூயதேயாம் என்க.

    “கோல மழுவா லேறுண்டு குற்றம் நீங்கிச் சுற்றமுடன்,
    மூல முதல்வர் சிவலோக மெய்தப் பெற்றான்”   என்பது  சண்டீசர் புராணம்.

    “பாதகமே சோறு பற்றினவா” – திருவாசகம்.

    முன் எடுக்கப்பெற்றார் – முன் – முதன்மையாக. எப்போதும் தம்முன்னர் விளக்கம் பெற. எடுக்கப்பெற்றார் – எடுத்துத் தாங்கும் பேறு பெற்றார்.

    அடியார் பணிகள் இருவகைப்படும். அவர் வேண்டுவன கொடுத்தல் ஒன்று. இளையான்குடிமாற நாயனார், இயற்பகை நாயனார் முதலியோர் செய்தன. இவ்வகை.

    அடியார்க் கடாதன அடுத்தபோது முன்வந்து தீர்க்கும் வீரம் மற்றொரு வகை. இங்கு நாயனார் செய்கை இவ்வகைப்பட்டது. விறன்மிண்ட நாயனார், சத்திநாயனார் திருப்பணிகளும் இவ்வாறேயாவன.

    மறை, இறைவன் வாக்காய் அநாதியாயுள்ளதென்பார் பழமறை யென்றார். இப்பாடலால்  அரசன்  அரண் போலக் காக்கவும், முரண் நீக்கவும்  ஆயுதம் ஏந்தி இருப்பார் என்பது கூறப்பட்டது. இறைவனின்  திருவுருவங்கள் ஆயுதங்களை ஏந்தி மறக்கருணை புரிவதும்  இது பற்றியே ஆகும். இறைவன்  மழுவேந்தி ஆடிய தலம் ‘திருமழுவாடி’ (திருமழபாடி) என்பது இங்கே நினைந்து மகிழத்தக்கது.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 118 (பொன்மலை)

    சேக்கிழார் பாடல் நயம் – 118 (பொன்மலை)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பொன்மலைப் புலிவென் றோங்கப் புதுமலை யிடித்துப் போற்று
    மந்நெறி வழியே   யாக    வயல்வழி   யடைத்த   சோழன்
    மன்னிய   வநபா    யன்சீர்    மரபின்மா  நகர   மாகுந்
    தொன்னெடுங்   கருவூ ரென்னுஞ்   சுடர்மணி   வீதி   மூதூர்.

    பொருள் 

    பழைமையாகிய நெடிய கருவூர் என்று சொல்லப்பெறும் ஒளியும் அழகுமுடைய வீதிகளோடு கூடிய பழைய ஊர், வெற்றியின் அடையாளமாக இமயமலையினுச்சியில் புலிக்கொடி ஓங்கி நிற்க, அம்மலையினை இடித்துக் காவல் பொருந்தும்படி அமைத்த புதிய வழியே வழியாய் வழங்க ஏனை வழிகளை யடைத்த, கரிகாற் சோழர் முதல் அநபாயச் சோழர் வரை சிறப்பில் நிலைபெற்ற முடிசூட்டு மரபின்வரும் தலைநகரங்களில் ஒன்றாகும்.

    கருவூர் என்னும் மூதூர் – சோழன் – அநபாயன் – சீர்மன்னிய – மரபின் மாநகரமாகும்.

    பொன்மலை – இமயமலையையும் பொன்மலை என்பர்.

    “பொன்னின் வெண்டிரு நீறுபுனைந்தெனப், பன்னு நீள் பனி மால்வரை” (11) என்று உவமை முகத்தால் முன்னர் உரைத்தார்.

    இமயத்து உச்சி வரை சோழர்கள் தமது அரசு நடாத்தி இமயத்துஉச்சியிற் புலிக்கொடி நாட்டிய செய்தி நம் பழந்தமிழ் நூல்களானும், பிற சரித்திர ஆதரவுகளானும் பெறப்பட்ட செய்தியாம். இதுபற்றிக் “கோட்டுயர் பனிவரைக் குன்றின்  உச்சியிற் சூட்டிய வளர்புலிச் சோழர்”  என்ற இடத்துக் கூறியவையுங் காண்க. இவ்வாறு முதலிற் செய்தவர் கரிகாற்சோழர் என்ப.

    “பொன்னிமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ணாண்டான் மன்னன்
    வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்”

    என்று சிலப்பதிகாரம்  பாடுகிறது.

    சோழன் அநபாயன் சீர்மன்னிய என்றது புலிக்கொடி பொறித்த சோழர் முதல் நீடித்து நிகழ்காலத்து அநபாயர்வரை சிறப்பால் நிலைபெற்று வருகின்ற என்றதாம். மரபின் முந்தையோர் புகழொடு புணர்த்திப் பின்வருவாரைக் கூறுதல் கவியியல்பென்க.

    “துலையிற் புறவி னிறையளித்த சோழர்” என்பதும் பிறவும் காண்க. இவ்வாறன்றி மூதாதையர்செயலை அநபாயருக்கே ஏற்றிப் புகழ்ந்தார் என்றுரைகொள்வாருமுளர். முன்னர் வளர்புலிச் சோழர் என்றபடி இங்கும் சீர்மன்னிய என்று கூறியது காண்க. சீரால் மன்னிய என்று விரித்துரைக்க.

    வென்று பொன்மலை புலி ஓங்க என்க. வென்று – வென்றதனாலே. புலி பொன்மலையில் ஓங்குதற் குளதாய காரணங் கூறியவாறு. புலிநின் றோங்க என்று பாடங்கொண்டு நிகழ்காலத்தும் நிலைபெற்று விளங்க என ஆசிக் குறிப்புப்பெற உரை கொள்வாருமுண்டு. ஏனைய விற்கயல்களை வென்று ஒங்க என்பாருமுண்டு.

    மலையிடித்துப் போற்றும் அப்புது நெறியே வழியாக எனக் கொண்டு கூட்டியுரைத்துக்கொள்க.

    அயல்வழி அடைத்த – தான் செய்த புதுவழியே யன்றி அதன்முன் அந்நாள் வழங்கிய வேறு பிற வழிகளை வழங்காது அடைத்த; வழியன்றாகுமாறு மலைகளை இடித்துப் புதிய நேர்வழி உண்டாக்குதல் மன்னர்களின் வழக்கமென்பாருமுண்டு. இது வழக்கமன்று. இங்குக் குறித்தது புதுநாடுவென்ற அரசன் அந்நாட்டின் பாதுகாவலின் பொருட்டுச் செய்த அரணாம். நாட்டிற்குரிய அரச அங்கங்கள் ஆறினுள் அரண் ஒன்று.
    “படைகுடி கூழமைச்சு நட்பரண், ஆறும்
    உடையா னரசரு ளேறு”

    “மணிநீரு மண்ணுமலையு மணிநிழற்,
    காடு முடைய தரண்”

    என்ற திருக்குறட் பாக்கள்  இதனைக் கூறுகின்றன.  இமயமலை நமது பரதநாட்டிற்கு வடக்கு மதில்போல அமைந்தது. அதிற் பல வழிகளிருப்பின் நாடு காவல் பெறாது  என்று  அறிந்தவராய், நாட்டின் காவலழியும்படி முன்வழங்கிய பல வழிகளையும் ஆள் வழங்காது  அடைத்து ஒரு புது வழி யுண்டாக்கி அயற்புலத்தார் நுழையாதவாறு அதனைக் காவல்புரிந்தது பேரரசராய் விளங்கிய கரிகாற் சோழரின் இராச தந்திர காரியப் பெருஞ் செயலாம். அமைச்சராய் விளங்கிய ஆசிரியர் இதன் பெருமையை அறிந்து இதனைத் தேற்றம் பெற  முன்னர்க் கூறியதுமன்றி, இங்கும் எடுத்துக் காட்டியவாறு. அன்றியும் இப்புராணத்துள் வரும் புகழ்ச்சோழரும் அதுபோலவே முரணிய அயலானுடைய மலையரணை வென்று அவனைத் துரத்திய செய்தி அவர் புராணத்துக் காணப்படுவதும் நோக்குக. அயல் வழிகளை அடைக்க, இந்நாட் பிரஞ்சு அரசாங்கத்தாரது புதுவை, காரைக்கால் நகரங்களைச் சுற்றி வேலியிட எண்ணுஞ் செய்திகளையும் இங்கு உன்னுக.

    இடித்துப் போற்றும் – இடித்து – மலையினை இடித்தலால் குறுக்கிடாதபடி யுண்டாகச் செய்து. போற்றும் – காவல் புரியும். இவ்வழியினை அரணாகக் கொண்ட தன்மை கூறியபடி. புறநாட்டார் தம் நாட்டில் நுழையும் வாயில்களைக் காவல் செய்தல் அரசகாரிய முறைகளில் ஒன்று. அரண் என முன்னோர் வழங்கியது இதுவே.

    புறநானூற்றில் கள்ளில்  ஆத்திரையனார்  ஆதனுங்கனைப் பாடிய பாடலில்  இமயத்தில் மோரியர் உலக இடைகழியில் வழிநடை வருத்தம்  தீர இருபுறமும் வருவோருக்கு உணவும் உறைவிடமும்  வழங்கும்  அறத்துறை  ஓன்றனை மலையை  அறுத்து அமைத்த செய்தியை ,

    விண் பொரு நெடும் குடை கொடி தேர் மோரியர்
    திண் கதிர் திகிரி திரிதர குறைத்த
    உலக இடைகழி அறை வாய் நிலைஇய
    மலர் வாய் மண்டிலத்து அன்ன நாளும்
    பலர் புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே’’ 

    என்று புறநானூறு  கூறுகிறது!

    இந்நாளிலும் நமது ஆங்கில மன்னரும் பிறரும் தத்தம் நாடுகளில்அயல் நாட்டார் நீர்வழியாலும் நிலவழியாலும் தம் காவலினுள் அமைந்தன்றி நுழையாது செய்யும் காவல் வகைகளை இங்கு வைத்துக் காண்க. எல்லைப்புறப் பாதுகாவல் (Frontier Defence) என்று இமயச் சாரல் முழுதினும் இந்நாள் நமது அரசர் அரும்பாடுபட்டு அமைத்துள்ள அரண் முறைகளையும், அவற்றையுங் கடந்து எல்லைப்புற நாடுகள் படும் தொல்லைகளையும் இங்கு வைத்து உணர்ந்தால் இக்கூறிய சோழர் செய்தியின் பெருமை தேற்றம்பெற நன்கு விளங்கும். அயல் வழி – அதுவரை அயற்புலத்தோர் வந்துகொண்டிருந்த வழி எனவும், புதுவழியல்லாத பிறவழி என்றும் இருவகையுங் கொள்க.

    அநபாயன் – இப்புராணம் பாடுவித்துச் சைவவுலகத்துக்குச் செய்த பெருந்தொண்டு கருதித் தம் அரசரை ஆசிரியர் பாராட்டி வைத்த பதினோ ரிடங்களில் இது ஒன்று. சோழமன்னரையும், சோழர் தலைநகரையும் பற்றிய புராணங்களில் இவ்வாறு குறித்திருத்தல் மரபின் றொடர்ச்சி பற்றிய முறையுமாம். மரபின் மா நகரம் – முடிசூட்டும் மரபின் வந்த தலைநகரம். மாநகர் – தலைநகர். இவைபுகார் (காவிரிப்பூம்பட்டினம்), திருவாரூர், உறையூர், சேய்ஞலூர், கருவூர் என்பன.

    “அநபாயன் வருந்தொன் மரபின் முடிசூட்டுந் தன்மை நிலவு பதி ஐந்தின்” என்பது சண்டீசர் புராணம்.

    கருவூர் என்னும் மூதூர் மாநகரமாகும் என முடிக்க. தொன்னெடும்- தொன்மையும் நெடுமையும் கொண்ட. நெடுமை – பெருமை. தொன்மையில் நீண்ட – வழிவழி வந்த என்றலுமாம். சுடர்மணி வீதி – இதுபற்றி முன்னர்த் திருநகரச் சிறப்பிலும் பிற இடங்களிலும்  உரைத்தவை காண்க.

    இப்பாடலில்  சோழ மன்னனின் பழங்கால நகராகிய கருவூரின் சிறப்பும் , அவ்வூரில்  இப்புராண  அடியார்  வாழ்ந்த சிறப்பும் கூறப்பட்டது!

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 117 (மல்லல்)

    சேக்கிழார் பாடல் நயம் – 117 (மல்லல்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    1. இலைமலிந்தசருக்கம்

    1. எறிபத்தநாயனார்

    திருத்தொண்டர் வரிசையில் ஒன்பதாமவராக வருபவர் எறிபத்தநாயனார். அவருடைய அருள்வரலாறு திருத்தொண்டர்புராணத்தின் மூன்றாம் சருக்கமாகிய  இலைமலிந்தசருக்கம் என்றபகுதியில் அமைகிறது.

    சுந்தரர் அருளிய திருத்தொண்டத்தொகை பதின்மூன்று எண்சீர் விருத்தங்களால் ஆனது. இந்நூலின் முதல்சருக்கம் திருமலைச்சருக்கம் ஆகும். அடுத்து   இரண்டாம் பாடல் தில்லைவாழ் எனத் தொடங்குகிறது. அதனையே சேக்கிழார் பெருமான்  தம் திருத்தொண்டர் புராணத்தின் இரண்டாம்  சருக்கமாகக்  கொண்டு ‘’தில்லைவாழந்தணர்  சருக்க’’த்தில்  அடியார்கள் எண்மரின் வரலாற்றைப் பாடினார். அவ்வாறே பதின்மூன்று சருக்கங்களுடன்  இப்புராணம்  அமைந்தது.

    இரண்டாம் விருத்தத்தின் முதலடி ‘’இலைமலிந்த சீர்நம்பி’’  எனத்  தொடங்குவதால் இரண்டாம் சருக்கம், ‘’இலைமலிந்த சருக்கம்’’ ஆயிற்று. இதில் ஒன்பதாம் அடியாராகிய எறிபத்த நாயனார் அருள்வரலாறு முதலில் அமைந்தது! அந்நாயனார் அவதரித்த கருவூர்பற்றி  முதலில்  சேக்கிழார் கூறத்  தொடங்குகிறார்.

    பாடல்

    பொன்மலைப் புலிவென் றோங்கப் புதுமலை யிடித்துப் போற்று
    மந்நெறி வழியே யாக வயல்வழி யடைத்த சோழன்
    மன்னிய வநபா யன்சீர் மரபின்மா நகர மாகுந்
    தொன்னெடுங் கருவூ ரென்னுஞ் சுடர்மணி வீதி முதூர்.

    பொருள்

    பழைமையாகிய   நெடிய   கருவூர்  என்று  சொல்லப்பெற்றது இவ்வூர். இவ்வூர்  ஒளியும் அழகும்  உடைய  வீதிகள் நிறைந்த  பழைய ஊராகும்.  வெற்றியின் அடையாளமாக  சோழர் மரபின் முன்னோர் இமயமலையின்  உச்சியில்  புலிக்கொடி ஏற்றினர். பின்னர் தம் நாட்டுக்கு  வரும் பல வழிகளையும் அடைத்து , ஒரு பெரும் வாயிலை அமைத்தனர். கரிகாற் சோழர்  முதல் அநபாயச்  சோழர் வரை ஆண்ட சோழர்கள்  இமய மலையிலும்,  தம் நாட்டிலும் காவல் பொருந்திய  புதிய  வழிகளை அமைத்தனர். அத்தகைய காவல் மிக்க ஊரே கருவூர் . இது சோழர் தலைநகரங்களில் ஒன்று!

    நம் பழந்தமிழ்  நூல்கள்  இமய மலையில் சோழர்  புலிக்கொடியையும் , சேரர்  விற்கொடியையும், பாண்டியர்  மீன் கொடியையும்  ஏற்றி  அரசாண்டனர் என்பதை ஆதாரங்களோடு  கூறுகின்றன.

    ‘’பொன்மலைப் புலிவென் றோங்கப் புதுமலை யிடித்துப் போற்று
    மந்நெறி வழியே யாக வயல்வழி யடைத்த சோழன்’’

    என்ற தொடர்  பொன்மலையாகிய  இமயத்தைப் புலி வென்றோங்கிய காலத்திலிருந்து தம்நாட்டிற்குள்   நுழையும் பெருவழியைத் தவிர வேறு வழிகளை  அடைத்து வைப்பது பாதுகாப்பு நெறியாகும். இக்காலத்திலும் எல்லைப்புறப்   பாதுகாப்பு என்றபெயரில் நீர், நில எல்லைகளை அரண் நிறுவிப் பாதுகாத்தலைக் காண்கிறோம்.

    ‘’மன்னிய  அநபாயன் சீர் மரபின்’’ என்ற தொடரால் சேக்கிழார் தம்காலத்தில்  தம்மைக்காத்த அநபாயச் சோழன் மரபின், முன்னோர்களையும் கருதிப் போற்றிய செயலைக் குறித்தது. அநபாயன் – இப்புராணம் பாடுவித்துச் சைவ வுலகத்துக்குச் செய்த பெருந்தொண்டு கருதித் தம் அரசரைச்  சேக்கிழார்  நன்றியுடன் பாராட்டி வைத்த பதினோரிடங்களில்  ஒன்றாகும்.

    இவ்வாறு தம் காலத்து மன்னரை முன்னோருடன் இணைத்துப் போற்றுதலைக் கம்பராமாயணத்தில் ‘’சடையன்  வன்மை மரபுளோர்  கொடுக்க  வாங்கி   வசிட்டனே புனைந்தான் மௌலி‘’  என்ற பகுதியில் சடையப்ப வள்ளலின் முன்னோர்கள் கொடுக்க, வசிட்டர்  வாங்கி இராமனுக்கு  முடி சூட்டினார் என்ற நன்றி பாராட்டும்  கவிஞரியல்பு  புலனாகிறது.

    ‘’சீர் மரபின்மா நகர மாகும் தொன்னெடுங் கருவூ ரென்னுஞ் சுடர்மணி வீதி  முதூர்.’’

    என்ற தொடர்,  சோழர் மரபில் முடிசூட்டும் மரபில்  வந்த கருவூரைக்  குறித்தது. புகார், திருவாரூர், உறையூர், சேய்ஞலூர், கருவூர் ஆகியவை  முடிசூடியும்  பழமையான  ஐந்து பதிகள் என்பது இப்புராணத்தில் உள்ள சான்றாகும். அவ்வூரின் வீதிகள் சுடர்மணிபோல்  ஒளிவீசும்  என்பது அவ்வீதி இந்த வரலாற்றில் சிறப்பிக்கப் பெறுவது கருதியே.

    இப்பாடலில்  எறிபத்த நாயனாரின் சிறந்த குண நலன்களுக்கு அவர் தோன்றிய நகரமும் துணையான சூழலைப்  புலவர் பெருமான் காட்டுகிறார்.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 116 (நாதர்)

    சேக்கிழார் பாடல் நயம் – 116 (நாதர்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    நாதர் தந்திரு வருளினால் நற்பெருந் துலையே
    மீது கொண்டெழு விமானம தாகிமேற் செல்லக்
    கோதில் அன்பரும்  குடும்பமும்  குறைவறக்   கொடுத்த
    வாதி   மூர்த்தியா   ருடன்சிவ   புரியினை   யணைந்தார்.

    பொருள்

    நாதருடைய திருவருளினாலே நல்ல பெரிய அந்தத் துலையே அவர்களை மேலே கொண்டு எழுகின்ற விமானமாகி மேற்செல்லக், குற்றமில்லாத அன்பராகிய நாயனாரும், அவரது மைந்தர் மனைவியாராகிய குடும்பத்தாரும் எஞ்ஞான்றும் குறைவுபடாத அழிவில் வான்பதங் கொடுத்த சிவ மூர்த்தியாருடனே சிவபுரியை அணைந்தனர்.

    விளக்கம்

    துலையே விமானமதாகி மேற்செல்ல – ஐயர் தம்முன் தொழுதிருக்கும் அழிவில்வான் பதம் கொடுத்தாராதலின், அப்பதத்திற் சேர்த்தற்குரியதாய் நாயனாரும், மைந்தரும், மனைவியாரும் ஏறிய அந்தத் துலையே, விமானமாக ஆயிற்று, துலையே விமானமாகி என்றதனால் அதுவே விமான உருவம் பெற்று இவர்களை மேலெடுத்துச் சென்றது என்றதாம்.

    திருவருளால் என்ற தொடர்,  தனம்  முதலிய பல பொருள்களை ஒரு தட்டிலே கொண்டும், கோவணத் தட்டு கீழ் இறங்கியபடியே தாழ்ந்து நிற்கும் வலிமை பெற்றதும் திருவருட் செயலேயாம்.

    பின்னர் இம்மூவரும் ஏறியவுடன் இருதட்டும் நேர் நின்றதும் திருவருளேயாம்.

    இங்கு அத்துலையே விமானமாகி மேற் சென்றதும் திருவருளேயாம்.

    முதலில்  துலைத்தட்டை மேலேறாது  தாழ்த்திய வலிமையும், மூவரும் ஏறி   நின்றபின்  நேர்   நின்றதும், அத்துலைத்தட்டே விமான மாகி மேலே சென்றதும்  திருவருட்செயலே ஆகும்.

    ஆகவே  முன்னர்த் திருவருள் வெளிப்பாடின்றி யிருந்து இங்கு அருட்சத்தியாகி நாயனாரை அவர் குடும்பத்துடன் அழியா இன்பத்தில் வைத்தலைத்  திருவருளால் என வெளிப்படக் கூறினார்.

    குடும்பம் என்ற சொல்,  மைந்தரையும்  மனைவியாரையும் குறித்தது. இவ்வுலக இன்பத்தை யளிக்கும் மனைவி, மறுமையில் கடைத்தேற்றும் மைந்தன் ஆகிய  எல்லாவற்றையும்  இறைவனிடம் குறைவறக் கொடுத் ததைக்  குறித்தது.

    ஆதிமூர்த்தியாராகிய  சிவபிரான் அடியாருக்கு  முழுதும் இன்னருள் தந்து முன் தொழுதிருக்கும் அழிவில் வான்பதம் கொடுத்த தனையே இங்குக் குறைவறக் கொடுத்த என்றார். குறைவறுதல் -எஞ்ஞான்றுங்கேடுறாது  நிலைத்திருத்தல். குறைவற குறைவு பிறவியாகியகுறை; அற -அறும்படியாக; கொடுத்த – அருள் கொடுத்த; என்றலுமாம் – அதாவது மல மற அருளிய என்பது. இதனை முன்னர்

    நிச்சயித்தவர் நிலையினைத் துலை எனும் சலத்தால்
    இச் சழக்கின் நின்று ஏற்றுவார்; ஏறுதற்கு இசைந்தார்.

    என்றதும் காண்க.

    ஆதிமூர்த்தியாருடன் சிவபுரியினை அணைந்தார் – பதங்கொடுத் தெழுந்தருளிய ஆதிமூர்த்தியுனுடனே பதம் பெற்ற இவர்களும் சிவலோக மடைந்தனர்.

    அழிவில் வான்பதம் – காலநீங்கிய நிலைமையாலே நித்தமாகிய சுத்தபுவனம். உடன் சிவபுரியாகிய மேல் நிலத்தினை அணைந்தார் என்றதனால், இறைவன் இவரை “வாராவுலக நெறியேற்றி“ வைத்தார் என்பதாம். அந்தச் சுத்தமாகிய சிவபுரியே “நிலமிசை நீடு வாழ்வார்“ என்ற  திருக்குறள்   காட்டிய  வீட்டுலகமாம்.

    அடியாரின் அசைவற்ற பக்தியும், அவ்வழியில் குடும்பத்தையே ஈடுபடுத்திய அடிமைத்திறமும், அப்படியே குடும்பத்தினரை மேல்நிலத்துக்குக்  கொண்டு செல்லும் திருவருளைக்  காட்டும்,  என்பது  இப்பாடலின் நுட்பமாகும்!

    இப்பகுதி அடியார்களுள் எட்டாமவ ராகிய அமர்நீதி நாயனாரின் அருள் வரலாற்றைக்  காட்டுகிறது! இனி ஒன்பதாம்அடியாரைப் பற்றிஅடுத்த பகுதிகாட்டும் !

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 115 (மண்டு)

    சேக்கிழார் பாடல் நயம் – 115 (மண்டு)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    தொடக்கம் –

    நல்லூர்  அமர்நீதி நாயனார்  தம்மிடம் வேதியர் வைத்துச்சென்ற  கோவணத்தைக் காணாமல் தேடித்  திகைத்தார்!  தாம் வைத்த இடத்தில் அக்கோவணத்தைக் காணவில்லை. உறவினராலும் அப்பொருளைக்  கண்டுபிடிக்க  இயலவில்லை.  மானை  மறைத்துக்  கரத்தில்  தண்டேந்திய வேதியர் அதுகேட்டுத் தீப்போல் வெகுண்டார். அமர்நீதியார் உணர்வு கலங்கி ‘’என் பெரும்பிழையைப்  பொறுத்துக்  கொள்க; உங்களுக்கு ஒன்றுகூறுகிறேன். இக்கோவணம் தவிர யான்உங்களுக்குச் சிறந்த நல்ல பட்டாடைகள், மணிகள் கொண்ட புதிய ஆடையை ஏற்றுக்கொள்க‘’ என்று கூறி மிகவும்  பணிந்து வணங்கினார்.

    அடியார் கூறியதை ஏற்றுக்கொண்ட வேதியர், ‘’நீங்கள் கொடுக்கும்  புதிய ஆடைகளும் மணிகளும்  எதற்கு?  அணியத்தக்க  கோவணம்   தருக, அதுபோதும்.’’   என்றார்.  அதுகேட்டு மகிழ்ந்த அமர்நீதியார்,‘’ அந்த வெண்ணிறக் கோவணத்திற்கு நிகராக வேறெந்த புதிய ஆடையையும் ஏற்றுக் கொள்ள  இசைக.’’ எனக்கேட்டார்.

    ‘’நீர் தொலைத்த  கிழிந்த கோவணம்  தவிர என்தண்டத்தில் ஏந்திய வேறொரு கோவணம்இது; இதற்கு இணையான  எடையுடைய கோவணம் தருக‘’ என்றார்.  அடியார், ‘’மிகவும் நல்லது’’ எனக்கூறி  ஒரு துலாக்கோலை  நிறுத்தினார். அதன் ஒரு தட்டில் வேதியர் மற்றொரு கோவணத்தை  வைத்தார்.  அடியார்  புதிய  கோவணத்தை  மறு தட்டில் வைக்க அந்தக்  கோவணம்  எடை  குறைந்திருந்தது! அதனைக்  கண்ட அடியார் வியந்தார்;

    ‘’ஈதென்ன மாயம்! இக்கிழிந்த   கோவணம்  நாமளிக்கும்  புதிய கோவணத்தை விட  அதிக  கனம் காட்டுகிறதே!‘’ என்று கூறி, தம்மிடம் இருந்த பற்பல மெல்லிய துகில்களையும் பட்டாடைகளையும் மறுதட்டில் இட்டார். இவ்வாறு தம்மிடம் இருந்த பற்பல கோடித்துணிகளையும் கொண்டு வந்து இட்டார். அப்போதும் கோவணத்தட்டு தாழ்ந்தே நின்றது.

    இதனைக் கண்டு  அஞ்சிய அடியார், தம்மில்லத்தில்  இருந்த ஆடைகள், வண்ண  நூல்கள் பலவற்றையும் இட்டும்  எடை நேராக வில்லை. ‘’இனி  என்னென்ன  செல்வத்தை யான் இட வேண்டும்?’’  என்று  வேதியரிடம் கேட்டார்.

    அதைக் கேட்ட வேதியர் ‘’உங்களிடம்  உள்ள  செல்வம் யாவற்றையும் இடுக, எங்கள்  கோவணம் நேர் நிற்க வேண்டும் ‘’ என்றார். அடியார் தம்மிடமிருந்த பொன், வெள்ளி,நவரத்தினக்  குவியல், பலவகைப் பட்ட உலோகங்கள் முதலான  அளவற்ற பொருள்களை ஒருதட்டில்  இட, இட  ஏற்றுக் கொண்ட தட்டு நிறைந்து மெல்ல மேலுயரத் தொடங்கியது! உலகோர் அனைவரும் வியந்தார்கள்!

    தவத்தால்  நிறைந்த  நால்வேதங்களால் உருவான சிவபிரான் விரும்பிய திருக்கோவணம் இருந்த துலாக்கோல் தட்டிற்கு  இணையாக அடியாரின் செல்வங்கள் மட்டுமல்ல, எல்லா  உலகங்களும்  நேர்நிற்காது ! என்பது புகழ் மொழியல்ல.

    கோவணத்துக்கு  இணையாக துலாக்கோல் தட்டு நிகராகாத போது, கொடையில்  தமக்கு நிகர் இல்லாத அமர்நீதியார், ‘’எல்லாப் பொருள் களையும் ஒன்றுவிடாமல் வைத்து விட்டேன்; இறைவனே  இனி, நானும் என் மனைவியும் மகனும் ஏறி நிற்பது தகுமாயின் , உங்கள் அருளால் செய்வோம்!’’ என்று  வணங்கினார்.

    குற்றமற்ற அடிமைத்திறம் புரிந்த அமர்நீதியார், வேதியர் முன் நேர் நின்று அஞ்சிக் கேட்டுக் கொண்டமையால், தம் விதியை நிச்சயித்த இக்குற்றத்தில் நின்றும் விடுவித்து உயர்த்த அத்தட்டில் ஏற அனுமதித்தார்! உடனே அந்தணர் திருவடியை வணங்கி, குடும்பத்துடன் வலம் வந்து தம் தகுதிக்கேற்ப  தட்டில் ஏறும்போது,

    ‘’நான் இதுவரை செய்த இறைவன் திருநீற்றுக்கு உண்மையான அடிமைத் திறத்தில் சிறுபிழையும் செய்ய வில்லையாயின், இத்துலாக்கோல் தட்டு, கோவணத்தட்டுக்கு நேராக நிற்கட்டும் !’’ என்று நல்லூர்ச் சிவனை வணங்கி, ஐந்தெழுத்தினை  ஓதியவாறே, துலைத்தட்டில்  ஏறினார்!

    பாடல்: 

    மண்டு   காதலின்   மற்றவர்   மகிழ்ந்துட   னேற,
    அண்டர் தம்பிரான் றிருவரைக் கோவணம் அதுவும்
    கொண்ட வன்பினிற் குறைபடா அடியவர்  அடிமைத்
    தொண்டும்  ஒத்தலால் ஒத்துநேர் நின்றதுஅத்   துலைதான்.

    பொருள்:

    மிகுந்த காதலினாலே மற்று அவர்கள் மகிழ்ந்து உடனே தட்டிலே ஏறினார்களாக, எல்லா அண்டமுடையார்க்கும் பெருமானாகிய இறைவனது திருவரையிற் சாத்தும் கோவணமும், அவர்பாற் கொண்ட அன்பினிற் குறைபடாத அடியவர்களது தொண்டும் ஒப்புடையன ஆதலால் (மேலும் கீழுமாய் நிற்றலன்றி) ஒத்து அத்துலைதான் நேர் நின்றது.

    விளக்கம்:

    மண்டுகாதலின்  என்ற தொடர்,  மேன்மேலும்  மிகுகின்ற ஆசையால், கோவண நேர்நிற்கப் பெறுவோம் என்ற திண்மையான உறுதி பெற்றா ராதலின், தமது பிழையினை மாற்றப் பெற்றோமென்ற உணர்ச்சிவர, அதுவே மண்டுகாதலை விளைத்தது.

    மற்றவர் மகிழ்ந்து உடன் ஏற – என்ற தொடரால் மனைவியும்  மகனும்  மகிழ்ச்சியோடுஒன்று சேரத்தட்டிலேஏறினார்களாக,  அவர்களின் உள்ளத்தில் காதல் மண்டியவழி உடம்பிலும் மகிழ்ச்சி உண்டாகியது. காதல் உள்ளத்தும் மகிழ்ச்சி புறத்தும் நிகழ்வன.

    கோவணம் அதுவும் அடிமைத் தொண்டும் ஒத்தலால்  என்ற அடியே இப்பாடலின் அடிப்படை! கோவணமே  மறையாதலின் இறைவனை உள்ளே பொதிந்து வைத்துப் பற்றி நிற்பது. அடிமைத் தொண்டும் அவ்விறை வனையே உள்ளத்திற் பொதிந்து பற்றிக் கிடப்பது. ஆதலின் இரண்டும் ஒத்தன  என்றார்!

    அடிமைத் தொண்டு – அடிமையாந் தன்மை பெற்றதனாற் செய்யும் தொண்டு,

    அண்டர் தம்பிரான் – அண்டங்களுக்கு நாயகர்களாகிய  வானவர்களுக்குத் தலைவர். “அண்டவா னவர்கட் கெட்டா அருட்கழல்“ என்பது முதலியவை காண்க.

    கொண்ட அன்பினிற் குறைபடா அடிமைத் தொண்டு –  இழைத்த அன்பினில் இறை திருநீற்று மெய்யடிமை பிழைத்திலோம் என்ற நிலைமை.

    கொண்ட – உயிர்க்கீடாகக் கொண்ட, கடைப்பிடியாகிய. அன்பினிற் குறைபடா – எந்தவகை முட்டுப்பாடு நேரினுங் குறையாத.

    இப்பாடலில் நேர் நின்றது அத்துலைதான்  என்பதை  அத்துலைதான்  நேர் நின்றது என மாற்றுக. இரண்டுதட்டுக்களிலும் இட்ட பொருள்கள் தம்முள் ஒத்தபோதே துலையும் நேர்நிற்கும். ஆதலின், கோவணமும் தொண்டும் ஒத்தலால் என்று காரணங்கூறியவாறு.

    இங்குத் தட்டில் நின்றது நாயனாரும் மனைவியாரும் புதல்வருமே யாயினும் அவர் தம்மையே அடியவர்க்கு (இறையவர்க்கு) ஒப்புக் கொடுத்த தொண்டின் செயலே இங்கு ஒப்புமை செய்தது என்பார் தொண்டரும் என்னாது கோவணமும்  தொண்டரும் ஒத்தலால் என்றார்.

    “மெய்யடிமை பிழைத்திலோம் எனில்“  என நாயனாரும் அடிமையையே குறித்ததும் காண்க.

    அத்துலைதான் – துலைக்கோல் துலை எனப்பட்டது. இறைவனது கோவணங் கொண்டதேயாயினும் என்க.

    “அன்றே யென்ற னாவியு முடலு முடைமை யெல்லாமுங், குன்றே யனையாய் என்னை யாட்கொண்ட போதே கொண்டிலையோ? இன்றோரிடையூ றெனக்குண்டோ“

    என்ற மணிவாசகத்தின்படி உடல் பொருள் ஆவி என்ற மூன்றையும் அவன் வசமாக்கிய வழியே இறைவன் அவர் இடர்  அடையாது வெளிப்படத் தாங்கி நிற்பன். பணிசெய்து கிடப்பதே கடமையாகிப் பிறிதொன்று மில்லாத பொழுதே, இறைவன்றன்கடன் அடியேனையும் தாங்குதலாம் என்று அருளிய தேவாரமும்  உணர்த்திடும்.

    பணிசெய்து கிடக்கும் நிலையினையே இங்கு அன்பினிற் குறைபடா அடியவர் அடிமைத் தொண்டு எனப்பட்டது. முன்னர் உடைமை மட்டும் நேர்தந்தார்,  உடலும் உயிரும் தம்மதாக நிறுத்தினராதலின் தட்டு நேர்படாது நின்றது.

    இப்போது உடலையும் உயிரையும் நேர்பெற ஒப்புவித்தனர். குறைநிரம்பிட இறைவனும் நேர் கொண்டனர் என்க.

    “ஆட்கொண்ட வார்த்தை“ என்று இது பற்றிய அப்பர் சுவாமிகள் திருவிருத்தமும் சிந்திக்க.

    பொட்டடித்து   எங்கும் பிதற்றித் திரிவேனை
    ஒட்டடித்து  உள்அமர் மாசெலாம் வாங்கிப்பின்
    தட்டொக்க மாறினன் தன்னையும்  என்னையும்;
    வட்டமது  ஒத்தது; வாணிபம் வாய்த்ததே.

    என்ற திருமூலர் திருமந்திரம், இச்சரிதத்தினையும் அதன் தத்துவத்தினையும் நினைவூட்டிநிற்பது ஈண்டுச் சிந்திக்கத் தக்கது.

    மிகுந்த பக்தியுடன் மனைவியையும் மகனையும் ஏற்றிய அமர்நீதியார், அவரும் இறையருள் பெறும் மகிழ்ச்சியுடன் துலைத்தட்டில்  ஏறினார்! அப்போது சிவபிரானின்  திருவரையில் திகழ்ந்த கோவணமும், அடியாரின் குறைவற்ற திருத்தொண்டுக்கு நிகராயிற்று! ஆகவே அந்த துலாக்கோல் தட்டு நேராக  நின்றது!  உள்ளத்தில் மறைந்திருக்கும் பக்தி, வெளியில் புலப்படும் திருத்தொண்டை மீறி  இறையருளைப்  பெற உதவுவன  என்பதை இப்பாடல் விளக்குகிறது

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 114 (நல்ல)

    சேக்கிழார் பாடல் நயம் – 114 (நல்ல)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    “நல்ல கோவணம்  கொடுப்பனென்று  உலகின்மேல்  நாளும்
    சொல்லு வித்ததுஎன் கோவணம் கொள்வது துணிந்தோ?
    ஒல்லை ஈங்குறு வாணிபம்  அழகிதே யுமக்கு!“என்று
    எல்லை யில்லவன்  எரிதுள்ளி னால்என  வெகுண்டான்.

    நல்லூர்  அமர்நீதியாரிடம்  தம்  கோவணத்தை  வைத்துச்  சென்ற  வேதியர் அக்கோவணத்தை மறைத்துவிட்டு  அதற்குத்  தலைமுழுகினாரோ, சடையில் உள்ள கங்கைநீரில்  நனைந்தாரோ, வானம் பெய்த மழையில் நனைந்து வந்தார். அவரை அறுசுவை உணவுடன் அமர்நீதியார் வரவேற்ற பொழுது, ‘’நான் ஈரத்தை  மாற்ற முன்பு உம்மிடம் தந்த  கோவணத்தை தருக’’  என்றார். அந்தணரின் சூழ்ச்சியை அறியாத அமர்நீதியார்  அக்கோவணத்தை  வைத்த இடத்தில் காணாது, எங்கெங்கும் தேடினார். கோவணத்தைக் காணா மையால் பெருந்துன்பமுற்றார். தம் இல்லத்தில்  மனைவியார் மற்ற உறவினர்கள்  யாவரும் இப்படி ஒரு சங்கடம் வந்ததே   என்று திகைத்தனர். ஆகவே  வேதியர் அணிந்து கொள்வதற்கேற்ற நல்ல கோவணத்தை எடுத்துக் கொண்டு, அவர்முன் சென்று ‘’ நீங்கள் அளித்த கோவணத்தை வைத்த  இடத்தில் காணவில்லை;  யாரும் அதனை எடுத்து வைக்க வில்லை; இது வியப்புக்குரியது!  ஆதலால்  நீறு புனைந்த  நெற்றியடைய வேதியரே, நன்றாகப்  புதிய துணியால் நெய்த வேறொரு  நல்ல  கோவணம் கொண்டு வந்தேன்; ஈரத்தை மாற்றி, என்னை மன்னித்து, இதனை அணிந்து கொள்க’’ என்று வேண்ட வேதியர், ‘’இன்று காலையில் வைத்த கோவணம்  இன்றே காணவில்லை என்கிறீர், பலநாளும் ஆகவில்லை, வேறொன்று தருகிறேன் என்பது சரியோ?’’; இதுவரை நல்ல கோவணம் தருவேன் என்று ஊரறியக் கூறி, என் சிறந்த ஆடையைக் கவரும் நும் வியாபார உத்தியோ?‘’ என்று கனல் உமிழும் சொற்களால்  வைதார். அந்தப்பாடல் ,

    “நல்ல கோவணம்  கொடுப்பனென்று  உலகின்மேல்  நாளும்
    சொல்லு   வித்ததுஎன் கோவணம்   கொள்வது   துணிந்தோ?
    ஒல்லை ஈங்குறு வாணிபம்  அழகிதே யுமக்கு!“என்று எல்லை யில்லவன்  எரிதுள்ளி   னால்என  வெகுண்டான்.

    பொருள்:

    “நல்ல கோவணந் தருவேன் என்று உலகிலே பல நாளும் சொல்லச் செய்வது எனது கோவணத்தைக் கொள்வதற்குத் துணிந்துதானோ? விரைவாக நீர் இங்குச் செய்த வாணிபம் உமக்கு அழகிதே!“ என்று கூறி, எல்லையிலாதவராகிய இறைவர் எரிதுள்ளினாற் போலச் சினந்தார்.

    விளக்கம்:

    நல்ல….சொல்லுவித்தது – நாயனார் உலகில் தமது செயலைத் தாமே விளம்பரப்படுத்தியதாகக் கூறியவாறு.

    ‘’உங்கள் பழைய பொருளை போட்டுவிட்டுப் புதியதை எடுத்துச் செல்லுங்கள்‘’ என்று விளம்பரப்படுத்தலே (Advertisement) வியாபார முறை என்பதை இந்நாள் மக்களுக்குச் சொல்லவேண்டுவதில்லையன்றோ?

    சொல்லுவித்தது – பலரும் எடுத்துச் சொல்லும்படி செய்தது. உலகின் மேல் – உலகிலே மேற்போக்காக. மேன்மையாக என்றலுமாம்.

    கொடுப்பன் என்று சொல்லுவித்தது, கொள்வது துணிந்தோ? – கொடுப்பதும் கொள்வதுமே வாணிபத் தொழிற்குரியன. “கொடுப்பதுங் குறைபடாது கொள்வது மிகைபடாது“ என்ற பட்டினப் பாலையை  இங்கு நினைவு கூர்க. இக்கருத்தினைத் தொடர்ந்தே பின்னரும் “ஈங்குறு வாணிபம் அழகிதே“ என்றார் இங்கு மறையவர் நாயனாரது குலத்தொழிலையும் சுட்டி இழித்துக் காட்டுவது போலக் கூறியது. தமது மிக்க வெகுட்சியையும் அறிவித்து, அவர் செயலைமிக இழிவுபடுத்துவது போன்று காட்டி, அதற்கும் கீழ்ப்பட்டுநின்ற அவரது அன்பின் பெருமை காட்டுதற்காம்.

    அழகிதே – அழகன்று. எதிர்மறை குறித்தது. “நிலைமை நன்று“ (526) என்றது போல உடன்பாட்டுப் பொருட் குறிப்பும் பெறக்கூறிய சுவை காண்க.

    எல்லையில்லவன் – அளவுட்படாதவன். “அளவிலா அளவுமாகி“ முதலியனவாக முன்னர் இப்புராணத்தில்  உரைத்தனவுங் காண்க.

    எரிதுள்ளினால் என வெகுண்டான் – கோப மிக்கவழிக் கண்கள் தீப்பொறி பறக்க உள்ளனபோலச் சிவக்கும். இது மிகு கோபத்தின்தியல்பு என்பர். தீயும் சிவந்து மிகுதியும் பற்றியவழிப் பொறி பறக்க நிற்கும். ஆதலின்- எரிதுள்ளினாலென தீப்பொறி பறக்க மிகுவதுபோல என்றதாம். இதனைக் “கதமிக் கெரிகதிரின் முன்னிருள்போல்“ என்ற சிவஞானபோதம் 10-ம் சூத்திர உதாரண வெண்பாவினுரையில் “ஒப்புமைபற்றிக் கதமிக் கெரிகதிர்“ என்றார். ஒப்புமையாதல் “எல்லை யில்லவ னெரிதுள்ளினாலென வெகுண்டான் என்றதனானுமறிக“ என்று சிவஞானபோத மாபாடியத்துள் விளக்கியருளினார்,  எமது மாதவச்சிவஞான சுவாமிகள்!

    அழகிதீதுமக் கென்று – என்பதும் பாடம். 26

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 113

    சேக்கிழார் பாடல் நயம் – 113

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பாடல் :

    “ஓங்கு கோவணப் பெருமையை யுள்ளவா றுமக்கே
    யீங்கு   நான்சொல வேண்டுவ தில்லைநீ   ரிதனை
    வாங்கி நான்வரு மளவுமும் மிடத்திக ழாதே
    யாங்கு வைத்துநீர் தாரு“ மென் றவர்கையிற்   கொடுத்தார்.

    பொருள் :

    (குணத்தினால்) ஓங்கு கோவணத்தின் பெருமையை உள்ளபடி உமக்கே இங்கு நான் எடுத்துச் சொல்ல வேண்டுவதில்லை; நீர், இதை வாங்கி நான் நீராடித்திரும்பி வரும் வரையில் உம்மிடத்தில் இகழ்ந்து விடாமற் காப்பாற்றி ஆங்கு வைத்து நீர் திருப்பித் தருவீராக!“ என்று சொல்லி அதனை அந்நாயனாருடைய கையிலே கொடுத்தார்.

    திருநல்லூரில் வாழ்ந்த அமர்நீதிநாயனார்,  தம்ஊருக்கு வரும் அடியார் களுக்கு, வேண்டிய அனைத்தையும்  பணிவோடும் பரிவோடும்  அளித்து வாழ்ந்தார்!  அவர்  அவ்வூரின்  திருவிழா நிகழ்ந்த நிலையில் அடியார்களுக்கு அமுதுசெய்வித்து  மகிழ்ந்தபோது ஒருநாள் சிவபிரான் ஒருபிரமச்சாரி வடிவம்    கொண்டு  அமர்நீதி நாயனார் இல்லம்   நோக்கி  வந்தார்.

    அவர் சடைகரந்த குடுமி, திருநீறணிந்த மேனியும், வெண்புரி நூலும், மான்தோலும் கொண்டு, தருப்பைப் புல்லைத் திரித்துக் கயிறாக்கிக் கட்டிய கோவணஆடையும்கொண்டு, மெல்லிய திருவடி பதித்து, கையில் ஏந்திய தண்டத்தில் இருகோவணங்கள், திருநீற்றுப்பை, தருப்பைப்புற்கள்  ஆகிய வற்றுடன், அமர்நீதியார் திருமடத்திற்கு வந்தார்.

    அவ்வாறு வந்த இறைவன்  திருவடிவைக்  கண்ட நாயனார், மனத்தைவிட முகம்   மிகவும்   மலர்ந்து,  ‘’இங்கு  நீங்கள் எம்மை  நாடிவர,  யான்  என்ன தவம்  செய்தேனோ?’’ என்று கூறிவணங்கி வரவேற்றார். ‘’இங்கே அடியார்க்கு வேண்டிய உணவும் இடமும்  ஆடையும் நீர்   தருவதாகக்  கேட்டு, உம்மைக்  காண, (நீர் எம்மைக் காண) வந்தோம்.’’ என்றார்.

    ‘’இங்கே அந்தணர்  அமுதுசெய்வதற்கு உரிய வகையில்  அந்தணரே சமைத்து இடுவதற்கு  உரிய ஏற்பாடு  உள்ளது!’’  என்று கூறி,  ‘’இங்கேயே அமுதுசெய்து அருளுக!’’   என வேண்டினார்.

    அப்போது இறைவர் தம் உடைமைகளில் கோவணம் ஒன்றை அடியாரிடம் தந்தார்.

    (குணத்தினால்) ஓங்கு கோவணத்தின் பெருமையை உள்ளபடி உமக்கே இங்கு நான் எடுத்துச் சொல்ல வேண்டுவதில்லை; நீர், இதை வாங்கி நான் நீராடித்திரும்பி வரும் வரையில் உம்மிடத்தில் இகழ்ந்து விடாமற் காப்பாற்றி ஆங்கு வைத்து நீர் திருப்பித் தருவீராக!“ என்று சொல்லி அதனை அந்நாயனாருடைய கையிலே கொடுத்தார்.

    விளக்கம்:

    கோவணத்தின் ஓங்கு பெருமையை என மாற்றுக. ஓங்குதல் – பிறவற்றை யெல்லாந் தாழச்செய்து தான் மேலோங்கிப் புகழால் மிகுதல்.

    “புவனம் யாவையு நேர்நிலா வென்பது புகழோ?“ (540) என்று இதனையே பின்னர் விரித்தனர்

    ஓங்கு கோவணம் என்று கொண்டு, கோவணம் வேதம்;வேதம் நாத உருவமாய் மேலோங்கி நின்று ஏனைய வெல்லாம் தன்னினின்று பிறக்க நிற்பது என்று உரைப்பினும்   அமையும்.

    “மன்னுதலை துன்னு பொருள் மறைநான்கே வான்சரடாத்,
    தன்னையே கோவணமாய்ச் சாத்தினன்காண் சாழலோ“

    என்றதிருவாசகத்திற் கோவணப் பெருமையை விரித்தவாறு காண்க. மேலும் “அருமறைநூற் கோவணத்தின்“ என்றமானக்கஞ்சாறர் புராணம், “மறையே நமது கோவணமாம்“  என்ற திருவிளையாடற் புராணம் காண்க.

    ஈங்கு நான் சொல்ல வேண்டியதில்லை – நீர் கோவணப் பெருமையை அறிந்து அடியார்க் களித்துவருகின்றீ ராதலின் நான் சொல்லித் தெரிய வேண்டுவ தில்லை. ஈங்கு இவ்விடத்தில். இப்போது என்றலுமாம்.

    இப்பெருமையைப் பின்னர் நான் சொல்லாமல் நீரே அறிந்து கொள்ளுவீர் என்பதும் குறிப்பு. வரும் அளவும்  என்றதொடருக்கு,  நீராடித் திரும்பி வரும் வரையிலும் என்பது பொருள்

    இகழாதே என்ற சொல்லுக்கு உம்மிடத்தில் உள்ள அளவற்ற கோவணங்களைப் போன்றதே யிதுவுமாம் என்று இகழ்ச்சியாகக் காணாது காவல் செய்து  என்பது பொருள்.

    ஆங்கு – காவலுள்ள தனியிடத்தில், என்றபொருள்கொண்டது.

    நீர் வாங்கி…..வைத்து…..நீர்தாரும் என, நீர் என்றதனை இருமுறையும் வைத்த தென்னை? எனின், வாங்குதலும் வைத்தலும் நீர் செய்வீர். நான் வாங்குகின்றேன், நான் வைக்கின்றேன் என்ற ஆன்ம போதத்துடன் செய்யும் செயல் நீர் செய்வீர். ஆனால் பின்னர் அக்கோவணத்தைத் திருப்பித் தருகின்ற செயல் உம்முடைய செயலாக நீர் செய்யப் போவதில்லை. தற்போத மிழந்த நிலையில் உம்மையே நீர் தந்து கோவணத்துக்கு நேர் கண்டுகொள்ளுவீர் என்பது குறிப்புமாம்.

    நீர் – வாங்கி வைத்து, என்றது உயிரின் தற்போத நிலை. “யாவையும் வைச்சு வாங்குவாய்“ – திருவாசகம்.

    “எல்லாந் தான்வைத்து வாங்க வல்லான்“ (379) என்றபடி வைத்தலும் வாங்குதலும் என்ற தொழில். ஆனால் நீர் வாங்குவதாயும் வைப்பதாயும் எண்ணி வாங்கி வைக்கின்றீர் என்ற குறிப்புமாம்.

    வைத்தல் – வாங்குதல் என்ற சொல்லாட்சிகள் காண்க. வைத்தல் – சிருட்டி; வாங்குதல் – ஒடுக்கம். இங்கு வாங்கி – வைத்து – தாரும் என்றது கோவணத்தின் மறைவினையும், பின்னர் நாயனார் இறைவனில் ஒடுங்குவதனையும் குறித்து நின்றன என்பர்.

    நீர்தாரும் – என்றது பரவசமாகித் தற்போதமிழந்து சிவம் விளங்கிய நிலை. “இருதிறன் அறிவுள திரண்டலா வான்மா“ என்பது சாத்திரம்.

    வாங்கி – வைத்து என்ற வினைகளுக்கு எழுவாயாய் நின்ற நீர் என்றதின் தன்மை வேறு;  தாரும் – என்ற வினைக்கு எழுவாயாய் நிற்கும் நீர் என்றதின் தன்மை வேறு. ஆதலின் உயிர் ஒன்றேயாகவும், சார்புபற்றித் தன்மை வேறுபாடு நோக்கி இருமுறை கூறினார் என்க.

    “இப்பி றப்பினில்  இணைமலர் கொய்துநான்
    இயல்பொடும்  அஞ்செழுத் தோதித்,
    தப்பி லாதுபொற் கழல்களுக்
    கிடாதுநான் தடமுலை யார்தங்கண்,
    மைப்பு லாங்கண்ணால்  ஏறுண்டு கிடப்பேனை“

    என்ற திருவாசகத்தில் நான் என்றது இருமுறையும் ஆளப் பெற்றது காண்க.

    சொல்ல வேண்டுவதில்லை – இதனை வாங்கி வைத்துத் தாரும் என்றது இதன் பெருமை ஒருபுறமிருக்க, ஒப்புவித்த பொருள் பெரிதேயாக, அன்றிச், சிறியதேயாக, அதனைக் காப்பாற்றித் திருப்பித் தருதல் உமது கடமை என்பதும் குறிப்பாம்.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 112 (பேணும்)

    சேக்கிழார் பாடல் நயம் – 112 (பேணும்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி 

    பாடல்

    பேணும்  அன்பரை  நோக்கி’’நீர்   பெருகிய  அடியார்க்கு
    ஊணும்   மேன்மையில்   ஊட்டிநற்   கந்தை  கீளுடைகள்
    யாணர்   வெண்கிழிக்  கோவணம்  ஈதல்கேட்   டும்மைக்
    காண   வந்தனம் ‘’  என்றனன்  கண்ணுதல்  கரந்தோன்.

    பொருள் :

    இவ்வாறு   வழிபடும்  அன்பரை  நோக்கி, ‘’ நீர் (அன்பினால்) பெருகிய அடியவர்களுக்கு மேன்மை மிக்க  உணவும்  ஊட்டிக் கந்தை,  கீள், உடை  ஆகியவற்றையும்  புதிய வெண்மையான  உயர்ந்த  கோவணங்களையும் கொடுத்தல்  கேட்டு  உம்மைக்  காண வந்தோம் ‘’ என்று  நெற்றிக்கண்ணை  மறைத்து  வந்த இறைவர்  சொன்னார்.

    விளக்கம் :

    பேணும்  அன்பரை – வழிபடுகின்ற அடியவர்களை, பெருகிய- ஓர்அடியாருக்கு உணவு  உடை,முதலிய எல்லாம்உதவுதல்கேட்டு  அடியார்கள் பலரும் வந்தடைகின்றமை யால் அளவினால் பெருகிய என்றும் பொருள் கொள்ளலாம்,

    ‘’ஆளும் நாயகர் அன்பர் ஆனவர் அளவிலார்  உளம்மகிழவே’’ என்று சேக்கிழாரே கூறுதல்காண்க மேன்மையில்  ஊட்டி – மேம்பட்ட வகையில்  உணவளித்து,  மேன்மை  என்பதை  உணவுக்காக்கி மேன்மையில் ஊணும் என்று கூட்டி உணவின் சிறப்புரைத்ததாகக் கொள்ளினு மமையும். ஊட்டுதலின் சிறப்பும், உணவின் சிறப்பும் 442, 443 திருப்பாட்டுக்களிற் காண்க .

    ஊட்டி – ஊண்பித்து. தாய் குழந்தையை ஊட்டுவதுபோலக். காலம் -அளவு – தகைமை – விருப்பு – முதலியன அறிந்து அன்போடு உண்ணச் செய்து என்பதாம். “பானினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப் பரிந்து“ என்ற திருவாசகங் காண்க. உண்பது அடியவர் செயல் என்று காண இயலாதபடி அவர் உண்பது இவர் ஊட்டுவதாகிய செயலேயாய் நின்றது எனக் குறிக்கும் பிறவினைக் கூற்றிற் கூறிய சுவை காண்க.

    கந்தை முதலியன-  கந்தையாவது கிழிந்த துணிகள் பல சேர்த்துத் தைத்த பொந்தையேயாயினும் பற்றற்ற அடியார்கள் இதனையே வேண்டுவா ராதாலானும், வேண்டுவார் வேண்டியது தருதலே சிறந்த கொடையாதலானும், அதனையே உதவினர் என்ப.

    யாணர்வெண்கிழிக் கோவணம் – இச்சரித நிகழ்ச்சிக்குக் கோவணம் காரணமாதலின் இதனை உடை வகைகளினின்று வேறு பிரித்து,  யாணர் – வெண் – கிழி – என மூன்று அடைமொழிகள் தந்து சிறப்பித்துக் கூறினார். யாணர் – புதிய – அழகிய – நல்ல என்றலுமாம். கிழி – கிழி போன்ற. கிழி – பொன் முடிப்பு. எழுது படம் என்றலுமாம். இறைவனின் கீளுடை  புதுவருவாய், தூய்மை ,  பொன் முடிப்பு போன்ற உயர்வு கொண்டது என்று பாடுகிறார்!

    உம்மைக் காண – உம்முடைய தொண்டின் விளக்கங் கண்டு உலகிற்குக் காட்டும்பொருட்டு என்க. “ தொண்டரை விளக்கங் காண’’ என்ற பகுதியைக்  காண்க!  ஒன்றை வாங்கவாவது,கொண்டு போகவாவது அன்று; காணமட்டும் என்ற குறிப்புமாம். “சும்மா உங்களைப் பார்க்க வந்தேன்“ என்னும் உலக வழக்கும் காண்க.

    காண – கண்ணுதற் கரந்தோன் – காண வந்தவன் கண்ணைத் திறந்து வராமல் அதனைக் கரந்து வந்தான் என்ற நயமுங் காண்க. அக் கண் அடியாரிடத்துக் காட்டாது மறைத்தருளுங் கண் என்ற குறிப்பும் காட்டுகிறது!

    ஈவது கேட்டு – பேணிய அடியார்க்கு – என்பனவும் பாடங்கள். 11

    இப்பாடலில்  அடியார்முன்  காட்டிய கீளுடையின்  சிறப்பு அதன் புறத் தோற்றத்தைப் பொறுத்ததன்று, அதன் அகமதிப்பைக்  காட்டும்  அழகுடையது என்பதை விளக்குகிறது!

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 111 (பிறை)

    சேக்கிழார் பாடல் நயம் – 111 (பிறை)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பாடல்

    பிறைத்த ளிர்ச்சடைப் பெருந்தகைப் பெருந்திரு  நல்லூர்க்
    கறைக்க ளத்திறை கோவணப் பெருமைமுன் காட்டி
    நிறைத்த வன்புடைத் தொண்டர்க்கு நீடருள்  கொடுப்பான்
    மறைக்கு லத்தொரு பிரம  சாரியின் படிவாகி,

    அருஞ்சொற்பொருள்

    பிறைத்தளிர் – இளம்பிறையாகிய தளிர், கறைக்களம் = நஞ்சுண்ட கண்டம், கோவணம் = கீளுடை, மறைக்குலம் = வேதியர் சாதி, படிவாகி  = வடிவம் கொண்டு

    பொருள்

    பிறையாகிய தளிரைச் சூடிய சடையினையுடைய பெருந்தகையாகிய பெருந்திருநல்லூரில் எழுந்தருளிய திருநீலகண்டராகிய, இறைவனார், தமது கோவணத்தின் பெருமையை முன்காட்டி, அதன் மூலம், நிறைந்த அன்புடைய திருத்தொண்டர்க்கு நீடிய அருள் கொடுக்கும் பொருட்டு, வேதியர் குலத்து ஒரு பிரமசாரியின் வடிவுடையராகி,

    விளக்கம்

    பிறைத் தளிர்ச் சடை  என்ற தொடர், பிறையைத் தளிர்போலச் சூடிய சடையைக்  குறித்தது. இலையாக மேலும் வளர நிற்பது தளிராதலின், சடையைச் சார்ந்ததனால் முழுமதியாக வளரநின்ற பிறையைத் தளிர் என்றார். ‘பிறையும், ஆத்தியின்தளிரும்’ சூடிய, என்று உம்மைத் தொகையாக்கி உரைப்பாருமுண்டு. “பிறை மல்கு செஞ்சடை“ என்ற இத்தலத் தேவாரக் குறிப்பும் காண்க. பிறை எனத் தக்கன் சாபத்தால் குறைந்த சிறுபிறை, இறைவனின் பெருங்கருணையினால்  வளர்ந்து நிலவாயிற்று  என்று புராணம் கூறும்.

    பெருந்தகைஎன்றதொடர்,பெரியதனுளெல்லாம் பெரிதான தகைமையுடைய என்று பொருள் படும்.  இறைவனது பெருந்தகைமை யாவது உயிர்கள் எத்தனை பிழை செய்யினும் வெறுத்துத் தள்ளாது பொறுத்து அவைகளிடத்து மேலும் கருணை செய்துகொண்டே யிருத்தல்.

    “வெறுப்பனவே செய்யுமென் சிறுமையைநின் பெருமையினாற் பொறுப்பவனே“,

    “பிழைத்தவை பொறுக்கை யெல்லாம் பெரியவர் கடமை போற்றி“,

    முதலிய திருவாசகங்களும்,

    “மண்ணுலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையிற்,
    கண்ணுதலான்பெருங்கணை கைக்கொள்ளும்“

    என்ற புராணமும் காண்க.

    “பேதையா ளவளொடும் பெருந்தகை யிருந்ததே“  சம்பந்தர் தேவாரம் .

    “பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக்கத்தை“ – திருச்செங்காட்டங்குடி – திருத்தாண்டகம்.

    பெருந் திருநல்லூர்  என்ற தொடர், அவனும் பெருந்தகை; அவனது ஊரும் பெரியது; திருவும் நலமும் தருவது என்ற குறிப்பைக்   கொண்டது.

    கறைத் களத்திறை, என்பது கரிய கண்டத்தர்’

    “நஞ்சணி கண்ட னல்லூருறை நம்பனை“ என்பது இத்தலத் தேவாரம். திருநீல கண்டம் அவரது பெருந்தகைமையும் கருணையும் காட்டி நிற்கும் அடையாளமாம்.

    “ஆர்ந்த நஞ்சயின்று  வானோர்க் கமுதமீ வள்ளல் போற்றி“,

    “பொங்கி நின் றெழுந்த கடல் நஞ்சினைப்
    பங்கி யுண்டதோர் தெய்வ முண்டோ சொலாய்“

    முதலிய திருவாக்குக்கள் காண்க.

    ‘’விண்ணோர்  அமுதுண்டும்  சாவ, ஒருவரும்
    உண்ணாத  நஞ்சுண்டு  இருந்து அருள் செய்குவாய்’’

    என்பார் இளங்கோவடிகள் .

    கோவணப் பெருமை முன்காட்டி – கோவணப் பெருமை காட்டுதல் பின்னர் இச்சரித நிகழச்சியிற் காணலாம்.

    மடையில்  வாளை  பாய  மாதரார்
    குடையும்  பொய்கைக்  கோலக்  காவுளான்
    சடையும்  பிறையும்  சாம்பற்   பூச்சும்கீள்
    உடையும்  கொண்ட  உருவ  மென்கொலோ?

    பொ-ரை: நீரைத் தேக்கி வெளிவிடும் மடையில் வாளை மீன்கள் துள்ளிப் பாயுமாறு பெண்கள் கையால் குடைந்து நீராடும் பொய்கைகளை உடைய திருக்கோலக்காவில் எழுந்தருளியுள்ள இறைவன், சடைமுடியையும், அதன்கண் பிறையையும், திருமேனி முழுவதும் திருநீற்றுப் பூச்சையும் இடையில் ஆடையாகக் கீள் உடையையும் கொண்ட உருவம் உடையவனாய் இருப்பது ஏனோ?

    சாம்பற் பூச்சும், கீள் உடையும் பரமனின் பற்றற்ற நிலையைக் குறிப்பன. எல்லாம் இருந்தும் தான் ஒன்றும் அநுபவியாமல் யோகியாயிருந்து உயிர்கட்கு யோகநெறி காட்டி விடுதலை செய்பவன் என்பதைக் குறிப்பது.

    துறந்தோராலும் விரும்பப் பெறும் பெருமை. அதனைத் தரிக்கும் அன்பர் பெருமை, அதன் பெருமை முதலியன. இதனைக் காட்டவே இறைவனும் தாம் இல்வாழ்வார் என்ற நிலையினின்றும் பிரமசாரியா யிறங்கி வந்தனர்.

    ‘முன்’  என்ற சொல்  தேற்றமாக – யாவரும்  அறியுமாறு,  முன்னிலையில் விளங்க. அன்பர்க் கருள் கொடுப்பதன் முன் என்றெல்லாம்  பொருள் தரும்.

    நிறைந்த அன்புடைத் தொண்டர்  என்ற தொடருக்கு,  இனி மேலும்  கொள்ளுதற் கிடமில்லாத படி நிறைவித்த அன்பு எனப்பொருள் கொள்ளலாம்.

    “தீர்ந்த வன்பாய வன்பர்“ என்பது திருவாசகம்.

    “விளைத்தவன் புமிழ்வார் போல“ – என்பது கண்ணப்பர் புராணம்.

    நீடருள் அருள் பேணி என்ற படி இதுவரை ஈந்ததும் அருளேயாம்; ஆயின் இனித் தருவது நீடுகின்ற அருள். அளவு, காலம், அனுபவம், இன்பம் முதலியவற்றாற் குறைவில்லா திருத்தல் நீடு எனப்பெறும். மாளா இன்பம், மீளா நெறி  முதலியனவாகப் பேசப் பெறும் வீட்டின்பம்.

    “பேரா வொழியாப் பிரிவில்லா
    மறவா நினையா வளவிலா
    மாளாவின்ப மாகடலே“

    என்பது திருவாசகம்.

    கொடுப்பான் – பானீற்று வினை யெச்சம். கொடுக்கும் பொருட்டு.

    மறைக் குலத்தொரு பிரமசாரியின் வடிவாகி – மறைக்குலத்து – வேதியர் குலத்திலே. குலங்களிலும் முதல் மூன்றிலும் பிரமசரிய முதலிய நிலைகள் நூல்களில் வகுக்கப் பெறுமாதலின் அவற்றுள் ஏனை மூன்று குலங்களையும் நீக்குதற்கு மறைக்குலத்து என்றார். பிறிதினியையு நீக்கிய விசேடணம்.

    பின்னர்த் துன்று வேதியர் தூய்மையி னமைப்பது முளதால்“

    என்று  இப்புராணமே  பாடும்.

    ஒரு – ஒப்பற்ற. பிரமசாரி – பிரம உபாசனை நிலையிலே சரிக்கின்றவன் – “வேதத்தை ஓதுகின்றவன். அவனுடைய செய்கையாவது: பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் இம்மூன்று சாதியில் ஒரு பாலன் உபநயனம் ஆனவுடனே பாக்கு வெற்றிலை தின்னாமலும், சந்தனந்தரித்தல்,  பூச்சூடுதல் இல்லாமலும், இடையில் ஒரு வஸ்திரத்தை மாத்திரஞ் சுற்றிக் கொண்டு அயலூரில் உள்ள பிராமண அக்கிரகாரத்தில் சென்று, இராக் காலத்தில் தருப்பையைக் கீழே பரப்பி அதன்மேற் படுத்துக்கொண்டு, பிட்சையாகக் கொண்டஅன்னத்தைப் புசித்துத்தகுந்த குருவினிடத்தில் கலியாணம் செய்யத்தக்க காலம். வருகின்ற அளவும் வேத அத்தியயனம் பண்ணிக்கொண் டிருத்தல்“ என்பர் மகாலிங்கையர். இது நாற்பத்தெட்டு வயது எல்லை வரை நீடிக்குமென்பர்.

    “அறுநான் கிரட்டியிளமை நல்லியாண்டு
    ஆறினிற் கழிப்பிய வறனவில்கொள்கை“

    என்பது  திருமுருகாற்றுப்படை!

    இவ் வியல்பின் இயன்ற உண்மைப் பிரமசரிய நிலை இந்நாளில் எங்கேனும் காணக் கிடைக்குமா என்பது அறிவாளிகள் கருதத்தக்கதாம்.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 110 (சிந்தை)

    சேக்கிழார் பாடல் நயம் – 110 (சிந்தை)

    திருச்சி புலவர்  இராமமூர்த்தி

    பாடல் :

    சிந்தை  செய்வது  சிவன்கழ   லல்லதொன்   றில்லார்
    அந்தி   வண்ணர்தம்   மடியவர்க்   கமுதுசெய்  வித்துக்
    கந்தை   கீளுடை   கோவணம் கருத்தறிந் துதவி
    வந்த   செல்வத்தின்   வளத்தினால்  வரும்பயன்  கொள்வார்,

    அருஞ்சொற்பொருள்:

    சிந்தை = மனத்தால்நினைப்பது, அல்லது = அன்றிவேறொன்று, அந்தி வண்ணர் = செவ்வான நிறம்படைத்தசிவன், கந்தை = கிழிந்தஆடை, கீளுடை = கோவணம். வரும்பயன் = நற்பயன்.

    பொருள்:

    அமர்நீதி நாயனார், தமது மனத்தினுள் எஞ்ஞான்றும் வைத்துத் தியானிப்பது சிவபெருமான் திருவடியேயன்றி வேறொன்றையும்  எண்ணாதவர்; அந்தி மாலையின் செவ்வான வண்ணராகிய சிவபெருமானுக்கே உரியவர்களாம் அடியார்களைத் திருவமுது செய்வித்து, அவர்கள் கருத்தறிந்து அதற்கேற்பக் கந்தையுங் கீளும் உடையும் உதவி, (அதன் பயனாகத்) தம்பால் வந்த செல்வத்தினது வளங்களினாலே தாம் இவ்வுலகிற் பிறவி பெற்று வருதலாலுளதாகிய உறுதிப் பயனைக் கொள்வாராய்(விளங்கினார்)

    விளக்கவுரை:

    இவ்விரண்டு பாட்டுக்களும் ஒரு முடிபு படுத்திப் பொருள்கொள்ளத்தக்கன. சிந்தை செய்வது – எப்போதும் எண்ணுவது.

    கழல் அல்லதொன்றில்லார் – என்றதொடரில் அல்லது ஒன்றுஇல்லார்  என்ற இரண்டு எதிர்மறைகள் தேற்றப் பொருளில் உறுதி பெற்றதோர் உடன்பாட்டுப் பொருள் குறித்தன. “அதுவல்ல தூதியமில்லை யுயிர்க்கு“  என்ற குறளில் அல்லது  இல்லை என்றாற்போற் கழலினையல்லாது வேறொன்றினையும் இல்லாதவர்.

    அந்தி வண்ணர் – என்றதொடர் அந்தி – மாலை. அது அக்காலத்தில்தோன்றும் செவ்வான வொளிக்காயிற்று. ஆகுபெயர். “செவ்வான வண்ணர்“ – தேவாரம். தீ என்பது தி எனக் குறுகிநின்ற தென்று கொண்டு அம் தீ அழகிய தீ – நிறம் என உரைத்தாலும்  பொருந்தும் “அழல் வண்ண வண்ணர்“, எரிபோன் மேனிப்பிரான்“, “செந்தீ வண்ணர்“, “தீவண்ணர் திறம்“ முதலிய திருவாக்குக்கள் காண்க. தீ என்பது தன்னுட்பட்ட பொருள்களை எரித்துத் தீயனபோக்கித் தூயதாக்கும். இறைவன்திறம் அத்தகையது!

    கந்தை – பொந்தை. நாலைந்து ஒன்றன்மேலொன்றாக வைத்து நூலிழைகளோட்டப்பட்டிருக்கும் போர்வையாடை. கீள் – அரைநாணுக்குப் பதிலாகத் துறவிகள் கட்டிக் கொள்வது என்பார் காஞ்சிபுரம் வித்வான் சபாபதி முதலியார். கந்தை – கிழிந்த ஆடை என்றலுமாம்.

    “கந்தை மிகையாங் கருத்தும்“

    “சாம்பற் பூச்சுங்கீ ளுடையுங் கொண்ட வுருவம்“  என்பன தேவாரப்பாடல்கள்  உடை – இடையில் உடுக்கும் துகில். ஐகாரம் – செயப்படுபொருளில் வந்த விகுதி; உடுக்கப்படுவது.

    கோவணம் – அற்றத்தை மறைக்கக் கீளுடன் இணைத்துக் கட்டுவது. இது நால்விரல் அகலத்தும், ஐவிரல் அகலத்தும் கொள்ளப்படும். “நால்விரற் கோவணவாடை, “ “ஐவிரற் கோவணம்“ என்பன தேவாரம். இச்சரிதம் கோவணத்தினின்று விளைவதாகலின், பலவகை உடைகளிலும், இதனைத் தேற்றம்பெற இறுதியில் வைத்தார்.

    கருத்தறிந்து உதவி – அடியார்கள் எதையும் பெற விரும்பமாட்டார் ஆதலால், அவர்களது கருத்தைத் தாமே அறிந்து என்க. ஆதலால் அவர்தம் தேவையறிந்து, அதனை நிறைவேற்றுவது சிவனடியார்களின் நற்பண்பாகும்.

    வந்த செல்வம்  என்ற தொடர், இருந்த செல்வங்களுடன் வாணிகத்தால் ஈட்டிய செல்வத்தையும் குறித்தது  “எந்நிலத்தினும் உள்ளன வருவளம்“ என்றபடி பல நிலங்களினின்றும் வந்த செல்வங்கள். முன்னம் இறைவனைப் பூசித்ததன் பயனாய்த் தம்மிடம் வந்த செல்வம் என்றலுமாம்.

    வளத்தினால் – அவற்றின் வாணிபத்தினால்  ஈட்டிய   வளங்களைக் கொண்டு.

    வரும்பயன் – இவ்வுலகில் வருதலால்  உளதாகிய உறுதிப்பயன். பயனை வளத்தினாற் கொள்வார் என்க, கொள்வார் – கொள்வாராகி – அடைவாராகி; முற்றெச்சம். இப்பாடலை, கொள்வார் – அமுது செய்வித்து – வணங்கிச் – சமைத்தார் எனக் கூட்டி முடிக்க.

    இப்பாடலில் அமர்நீதி நாயனார், அடியார்களுக்கு மிகச்சிறிய தேவையாகிய கீளுடை கொடுத்தார் என்பதிலிருந்து, அடியாரின் மிகப்பெரிய தேவைகளாகிய உணவையும், மற்றும் வாழ்க்கைக்குரிய  பெரும் பொருள்களையும் இறையருளால்  பெற்றுக் கொடுக்கும்  பண்புநலம்  பெற்றவர் என்பதும்,  கீளுடை  என்பது இறைவன் திருவருளின்  பெருமையைக்  குறிக்கும் என்பதும்,  அதன்  வலிமையும்  தகுதியும்  மிகவும்  பெரியவை என்பதும்   இறைவனைச் சார்ந்த எப்பொருளும்  பெருமை மிக்கது என்பதும்,  செல்வமும்  கொடையும்  இறைவன் திருவருளால்  அமைவதாகும்  என்பதும்  குறிக்கப் பெற்றன,

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 109 (மன்னும்)

    சேக்கிழார் பாடல் நயம் – 109 (மன்னும்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    அடுத்து, சிவனடியார்களுள் சிறந்த ஒருவராகிய அமர்நீதி நாயனார் புராணம் அமைந்துள்ளது. சோழநாட்டின் பழையாறை நகரில் வாழ்ந்த அமர்நீதி நாயனாரை  திருத்தொண்டத்தொகை ,

    “அல்லி மென் முல்லை அம்தார் அமர் நீதிக்கு அடியேன்”

    என்று போற்றுகிறது. அவரைத்  திருத்தொண்டர் திருவந்தாதி,

    “மிண்டும் பொழில்பழை யாறை அமர்நீதி வெண்பொடியின்
    முண்டம் தரித்த பிராற்குநல் லூரின்முன் கோவணம்நேர்
    கொண்டிங் கருளென்று தன்பெருஞ் செல்வமும் தன்னையுந்தன்
    துண்ட மதிநுத லாளையும் ஈந்த தொழிலினனே! “

    என்று பாடுகிறது. இச்சரிதத்தில் பழையாறை வணிகர் அமர்நீதி நாயனாரின் செல்வமும், வளமும், உளப்பாங்கும்,  அடியாரைப் போற்றும் சிறப்பும் கூறப் பெற்றன.

    பாடல்:

    மன்னும்  அப்பதி  வணிகர்தம்  குலத்தினில்  வந்தார்
    பொன்னும்  முத்தும்நன்  மணிகளும்  பூந்துகில்  முதலா
    எந்நி லத்தினும்   உள்ளன  வருவளத்  தியல்பால்
    அந்நி   லைக்கண்  மிக்கவர்   அமர்நீதி   யாரென்பார்

    பொருள்:

    பழையாறை  என்னும் புகழ் நிலைத்த அந்தப் பதியிலே வணிகர்களுக்குரிய குலத்திலே வந்து அவதரித்தவர்; பொன்னும் முத்தும் ஏனைய நன்மணிகளும், பிற பூந்துகில் முதலியனவுமாக எல்லா நிலத்தினின்றும் வருகின்ற எல்லா வளங்களும் மிகுதியாய்ப் பெற்ற இயல்பினால் அவ்வாணிப நிலையிலே மிகுந்தவர் அமர்நீதியார் என்று போற்றப்படுபவர் வாழ்ந்தார்.

    நயம் :

    இப்பாடலில், மன்னும் அப்பதி – என்ற தொடர் பாரின் நீடிய பெருமை சேர் என்றபடி நிலைத்த புகழுடைய  அந்த ஊர். என்பதைக் குறித்தது.

    வணிகர் தம் குலம் – என்பது தொடர்ந்து வாணிபம் செய்தற்குரியதாகிய அந்த மரபினைக் குறித்தது.

    பொன்னும் முத்தும் நன்மணிகளும் பொன்னும் – பொன்வேறு; முத்துமுதலிய மணிகள் வேறு உம்மை அதனின் வேறாகிய என எச்சப் பொருள் குறித்தது.

    முத்தும் நன்மணிகளும் முத்தும் நன்மணிகளில் ஒன்றாயினும் அவை பிறக்கும் பலவகையிடங்களினின்றும் தனித்தனி முழுமணிகளாகவே விடுபட்டுப் பிறத்தலானும், ஏனைய மணிகள்போல முறுக வாங்கிக் கடைதலானன்றி இயல்பானே ஒளி பரப்புதலானும், மற்றும் பலவகையானும் தனித்தன்மைப் படுதலின்.

    நன்மணிகளும் என ஏனைய மணிகளை ஒன்று சேர்த்துத் தொகுத்து அத்தொகுதியினின்றும். முத்தினை உம்மை தந்து வேறு பிரித்துக் கூறினார்.

    நன்மணிகளும் – இந்நாளிற் கண்ணாடியா லியன்று செயற்கையாற் காணும் பலவகை யிழிந்த போலி மணிகள் போலாது இயற்கையான் விளைந்து உயர்ந்த குணமுடையன என்பார் நன்மணி என்றார் .

    பூந்துகில் – பட்டு முதலிய துகில் வருக்கங்கள்.  உம்மை தொக்கது. முதலா – பொன், மணி முதலியவற்றின் வாணிபம் ஒருபுறமும், பட்டு ஆடை முதலிய வேறு பலவகை வாணிபம் மற்றொரு புறமுமாக நடாத்தி அதனால் வளத்தில் மிக்கவர் என்க. பூந்துகில் முதலா என முதன்மைக் குறிப்புக் கொடுத்தோதியது இச்சரித நிகழ்ச்சிக் குறிப்பு.

    எந்நிலத்தினும் வரும் வளம் – ஒவ்வோர் பொருள்கள் ஒவ்வோர் நிலத்துக் குரியனவாம். ஆயினும் அவை யாவும் வாணிபப் பொருட்டால் இங்கு வந்து கூடியன என்க. இவற்றினியல்பு பட்டினப்பாலை முதலிய நூல்களுட் காண்க.

    எந்நிலம் என்றதனால் யவனம் முதலிய பிற நாடுகளும் கொள்க.

    வளத்து இயல்பால் அந்நிலைக்கண் – அந்தந்த வளங்களின் தன்மைக் கேற்றவாறு அந்தந்த வாணிபநிலைமையிலே மிக்கவர் மிக்க திறமையையும் ஊதியத்தையும்  பெற்றுவிளங்கியவர்.

    என்பார் எனப்படுவார். ‘இல்வாழ்வா னென்பான்’ என்ற குறளிற்போலக் கொள்க. செயப்படு பொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது என்பர் பரிமேலழகர். எனப்படுவான் எனற்பாலது செயப்பாட்டு வினைப் பொருளுணர்த்தும் படு விகுதி தொக்கு என்பான் என நின்றது  என்பர் பிரயோக விவேக நூலார். தொல்காப்பியச் சூத்திர விருத்தியிலும் இவ்வாறே கூறினர். ‘எனப்போற்றப்படுவார்’, என்ற சிறப்புப் பொருளையும் காட்டுகிறது.

    இப்பாடல்  அமர்நீதியார், பன்னாட்டு வாணிகம் செய்து புகழ் பெற்றதோடு சிவனடியார்களையும் பேணிக் காத்தார் என்பதையும் கூற வந்தது

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 108 (ஓக்க)

    சேக்கிழார் பாடல் நயம் – 108 (ஓக்க)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பாடல்

    ஒக்க நெடுநா ளிவ்வுலகி லுயர்ந்த சைவப்  பெருந்தன்மை   
    தொக்க நிலைமை நெறிபோற்றித் தொண்டு பெற்ற விறன்மிண்டர்
    தக்க வகையாற் றம்பெருமா னருளி னாலே தாணிழற்கீழ்
    மிக்க கணநா யகராகுந் தன்மை பெற்று விளங்கினார்.  

    பொருள்

    இதுபோலவே பலகாலம் இவ்வுலகிலே உயர்ந்த பெருந்தன்மைகள் யாவும் கூடிய நிலையாகிய சைவநெறியினைப் பாதுகாத்துத் திருத்தொண்டு செய்யும் பேறு பெற்று வாழ்ந்த விறன்மிண்ட நாயனார் தமது திருத் தொண்டினுக்குப் பொருந்திய வகையினாலே கணநாயகராகும் நிலைமை யினைப் பெற்றுத் திருவடிநிழற்கீழ் விளங்கினார்.

    விளக்கம்

    ஒக்க – மேலே கண்ட வகைகளைப் போலவே. பெருந்தன்மை தொக்க சைவநெறி என மாற்றி, யாவையும் தொகுதியாகக் கூடிய நெறி சைவநெறியேயாம் என்பதை அறிந்துகொள்க  இது திருத்தொண்டத் தொகையாற் போந்த நெறி குறித்தது.

    நிலைமை நெறி – நிலைமையே இந்நெறியாம் என்க. போற்றி – பாதுகாத்து. துதித்து என்றலுமாம்.

    தொண்டு பெற்ற – நெறி போற்றுதலாகிய திருத்தொண்டினைச் செய்யும் பேறு பெற்ற. பெற்ற – “திருக்கூட்டத் தெதிர்முன்பரவு மருள் பெற்றே யிறைவூர் பாதந் தொழப் பெற்றார்“ , “புறகென் றுரைப்பச் சிவனருளாற் பெருகா நின்ற பெரும் பேறு பெற்றார்; மற்றும் பெற நின்றார்“  என்பன, இத்தொண்டினை இறைவ னருளாலே தாம் பெற்றவர். என்பதைஉணர்த்துகின்றன.

    “அவனருளாலே அவன்றாள் வணங்கி“ என்பது திருவாசகம்.

    தக்க வகை – இவர் செய்து வந்த திருத்தொண்டினுக்குப் பொருந்திய வகை. தகுதியாவது, சரியையாதி வழிகளில் தொண்டு செய்வோர்க்கு உரிய சாலோகம் முதலியனவாகச் சாத்திரங்களிற் கூறிய வகை.

    அருளினாலே தன்மை பெற்று – அருளாலே தொண்டு பெற்ற அதனால் அவ்வருளினாலே இறுதியில் இத்தன்மை பெற்று.

    மிக்க – மேன்மையான. கணநாயகர் – சிவகணங்களின் தலைவர். தொண்டர்களின் நெறி போற்றி இங்குத் தலைமை பெற்ற தொண்டினுக் கேற்க அங்கும் கணநாயகராயினர் என்பது.

    “தூநறுங்  கொன்றை முடியவர் சுடர்நெடுங் கயிலைமால் வரையெய்தி,
    மான நற்பெருங் கணங்கட்கு நாதராம் வழித்தொண்டி னிலைபெற்றார்“

    என்பது  கணநாத நாயனர் புராண உள்ளுறை.

    இப்பாடல் தொண்டர்நெறிகளில் தலைமை பெற்றவர் விறன்மிண்டர் என்பதையும், அவருடைய கடுமையான தொண்டுநெறி அவருக்கு ‘கணநாயகர்’ என்ற உயர்பதத்தை அளித்தது என்பதையும்   குறிக்கிறது.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 107 (திருவார்)

    சேக்கிழார் பாடல் நயம் – 107 (திருவார்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பாடல்

    திருவார் பெருமை திகழ்கின்ற “தேவா சிரிய னிடைப்பொலிந்து    
    மருவா நின்ற சிவனடியார் தம்மைத் தொழுது  வந்தணையா
    தொருவாறொதுங்கும்வன்றொண்டன்புறகென்றுரைப்பச்சிவனருளாற்
    பெருகா நின்ற பெரும்பேறு பெற்றார்; மற்றும் பெறநின்றார்.

    பொருள்

    அருட்டிரு நிறைந்த பெருமை  எந்நாளும் விளங்குகின்ற தேவாசிரிய மண்டபத்திற் பொலிந்து பொருந்தி வீற்றிருக்கின்ற சிவனடி யார்களைத் தொழுது, அவர்கள்பால் வந்து அணையாமல் ஒரு புறமாக ஒதுங்கிச் செல்லும் வன்றொண்டன், ‘புறகு’ என்று உரைப்பதற்குச் சிவபெருமானருளிற் பெருகுகின்ற பெரிய பேறு பெற்றார் இந்நாயனார்.அதுவேயுமன்றிமேலும் பெறுதற்கமைந்து நின்றாரானார்

    விளக்கம்

    ‘’திருவார் பெருமை திகழ்கின்ற தேவாசிரியன்’’ என்ற  தொடரில்,   திரு -அருட்டிரு. ஆர் பெருமை – அடைந்தாரை உய்விக்கவல்ல திருநீறு, கண்டிகை,பஞ்சாக்கரம் முதலிய சாதனங்களும் இவை பூண்டொழுகும் சீர் அடியார்களும் எப்போதும் இடையறாது விளங்குதல் குறித்தது.

    இவை பற்றி முன்னர்த் திருக் கூட்டச் சிறப்பிலே சிறப்புறச் சில திருப்பாட்டுக்களில் உரைத்துள்ளார்.

    மாவா ழகலத்து மால் என்றதனால் இங்குத் திரு என்றதும் இலக்குமியைக் குறித்தது என்று உரைப்பாரும்  உண்டு.

    பொலிந்து – சிவசாதனங்களாலே பொலிவு பெற்று. “புரந்த அஞ்செழுத்து  ஓசை பொலிதலால்“ (438)என்றதும் காண்க. இச்-சிவசாதனங்கள் ஆன்மாக்களைத் தம்வசமாக்கிக் கொள்ள இறைவனால் அருளப்பெற்றவை களவு செய்வானொருவன் மிகு செல்வமுடையோனை மந்திரத்தாலும், மருந்தாலும், தந்திரத்தாலும் பேதித்துத் தன்வசமாக்கி அவன் பொருளை வௌவுதல்போல இறைவனும் திருநீறென்கிற மருந்தாலும், சீபஞ்சாக்கரம் என்கிற மந்திரத்தாலும், சொரூபமென்கிற தந்திரத்தாலும் ஆன்மாக்களைப் பேதித்துத் தன்வசமாக்கி அவரவர் வினைகளை அபகரிக்கின்றான்.

    “கள்ளரோ டில்ல முமையார் கலந்திடில்.
    வெள்ள- வெளியாமென்றுந்தீபற,
    வீடு மெளிதாமென் றுந்தீபற“ – திருவுந்தியார்-23.

    தொழுது வந்து அணையாது ஒருவாறு ஒதுங்கும் வன்றொண்டன் – நம்பியாரூரர் திருவாரூரில் தினமும்  பூங்கோயிலுக்குச் சென்று இறைஞ்சி வருகின்ற நியதிப்படி ஒருநாட்செல்வார், “இங்குத் தேவாசிரியனிற் கூடி எழுந்தருளி யிருக்கும் அடியார்களுக்கு என்னை அடியேனாகப் பண்ணுநாள் எந்நாளோ?“ என்று இறைவர் பாதங்களைச் சிந்தித்துக் கொண்டே செயல் மறந்து திருக்கோயிலினுட் சென்றார். இறைவரும் அவர்தாம் வேண்டும் அதனையே அருள வேண்டித் திருவாயிலின் நேரே எழுந்தருளி வந்து, எதிர் காட்சி தந்து, ‘இவர்கள் பெருமைகளைத் தேற்றிப் பாடெ’ன்று பணித்து, அதற்குத் “தில்லை வாழந்தணர்தம் மடியார்க்கு மடியேன்“ என்று அடியும் எடுத்துக் கொடுத்தருளினர்.அதன்வழியேஎடுத்து நம்பிகள் இவ்வடியவர்க ளுக்கெல்லாம் தனித்தனி வேறடியேன் என்று, ‘திருத் தொண்டத்தொகை’ பாடித் தொழுது திருக்கூட்டத்தின் நடுவணைந்தார் என்ற வரலாறு தடுத்தாட் கொண்ட புராணத்தினுட் கூறப்பெற்றது. இவ்வரலாற்றின் சரித நிகழ்ச்சியிலே நம்பிகள் திருக் கோயிலினுட் சென்றபோது எழுந்தது, இப்பாட்டிற் கண்ட விறன்மிண்ட நாயனாரின் செற்றம் பற்றிய செய்தி.

    அங்கு ஒருபுறம் நம்பி ஆரூரர் இவ்வடியவர்களுக்கு ஆளாகப் பண்ணுநாள் எந்நாள் என்று இறைவனை வேண்டி நேரே கோயிலினுட் செல்கின்றார்; அதனை நோக்கி இங்குத் தேவாசிரியனில் இருந்த விறன்மிண்ட நாயனார் நம்பிகள் திருக்கூட்டம் தொழுது வந்து அணையாது ஒருவாறு ஒதுங்கி உட் செல்கின்றார் என்று சினந்து மொழிகின்றார். திருக்கூட்டத் தெதிர்முன் பரவும் அருள்பெற்றே பின் இறைவர் பாதந் தொழப்பெற்றார் விறன்மிண்டர்

    அந்நியதியே விதி எனக்கொண்ட அவர் அதன்வழி ஒழுகாது உட்சென்றது பற்றி நம்பிகள்பாற் சினந்தார். நம்பிகளும், அடியாரை வணங்கி அணையா விடினும், அடியாரைப் பணிய வேண்டியே இறைவனைத் தொழ உட்சென்றனர். எனவே, இருவர் கருத்தும் அடியார்பணி என்ற ஒரு வழியிலே படிந்திருந்தன என்க. ஆயின் கருத்தினைப் பின்பற்றிய புற வழிபாடு நிகழாமையின் “புறகு“ என்ற மொழியும் எழுந்தது. இருவருள்ளும் உயிர்க்குயிராய் உடன் இருந்த இறைவன் இருவர் கருத்தையும் முற்றுவித்துத் திருத்தொண்டின் திறத்தை உலகம் உய்ய உணர்த்தி யருளினார் என்பதனை ஈண்டுச் சிந்திக்க.

    அணையாது ஒருவாறு ஒதுங்கும் – அணைந்தோர் அடியவர்கள். அவரை அணைவது சீவன் முத்தர் நிலை என்பது சாத்திரம்.

    “அன்பரொடு மரீஇ“ – சிவஞானபோதம். அவ்வாறு அணையாது நேரே உட்சென்று ஒதுங்கும். அடியார் வழியே நேர்வழி; பிற வழிகள் ஒதுங்கிய தூர வழியாம் என்பது இந்நாயனார் கொள்கை. ஆதலின் அடியார் தம்மைத் தொழுது வந்தணையாது இறைவரை வணங்கச் செல்லுதலை ஒதுங்கும் என்று  ஒதுக்கினார் நாயனார்.

    புறகு – புறம்பாவான். பெருகாநின்ற பெரும் பேறு – பேறு – பாக்கியம். இப்பேறுபெரியது. இயல்பிற் பெரிதா யிருப்பதுடன் பின்னும் மேன்மேலும் பெருகி வளர்கின்றது என்க. பெருகுதலின் விரிவு மேல்வரும் இரண்டு பாட்டுக்களும் குறித்தன. அவை யன்றியும் திருத்தொண்டத் தொகையால் உலகம் என்றும் உய்ந்து நிகழ்கின்றதும் குறிப்பாம்.

    அவர்பாற் பேறு பெற்றார் – புறகு என்று நாயனார் சொல்லியதும் திருவருளாலே ஆகியதாம். “அகில காரணர் தாள்பணிவார்கள் தாம், அகில லோகமு மாளற்குரியர்“  என்றபடி அடியவர்களே முதல்வராவார் என்பது இந்நாயனார் கொள்கை.

    அதற்கிணங்க இறைவரும் உலகம் உய்யத் திருத்தொண்டத்தொகையினைத் தோற்றுவிப்பதும், நம்பிகளைத் திருக்கூட்டத்தினுட் கூட்டுவிப்பதும் ஆகிய இரண்டினையும் தாமே செய்வதினும் இந்நாயனாரைக் கொண்டு செய்விப்பது தக்கதென்று திருவுளம் பற்றி இவ்வாறு இவர் சொல்லுமாறு செய்தனர் என்க.

    மற்றும் பெற நின்றார் – மற்றும் – வன்றொண்டர் புறகென்றதேயன்றி அவருக்குப் பிரானாகிய சிவபிரானும்  புறகு என்பது. இதுவும் திருவருள் வழியே நிகழ்வதாகலின், மற்றும் – என எச்சவும்மை கொடுத்தோதினார். அதனோடு மேலும், “அல்லல் தீர்ந்துலகுய்ய மறையளித்த“ தமது திருவாக்கினாலே இறைவர் “தில்லைவாழந்தணர்த மடியார்க்கு மடியேன்“ என்று அடியார்க்கு அடிமைத்திறம் தாமே வகுத்தருளப் பெற்றதும், அவ்வருட்டுணை கொண்டு, அதுவே உண்ணின்று உணர்த்திப் பாடுவிக்க  நம்பிகள் திருத்தொண்டத்தொகை பாடித் தொழுது திருக்கூட்டத்தின் நடுவண் வந்து அணையப்பெற்றதும்  ஆகிய பேறுகளுமாம். பெற நின்றார் – இனிப் பெறுதற்குரியராய் நின்றார்.

    இப்பாடல்  அடியார் பெருமையை  ஆண்டவனே ஏற்று மகிழ்வார் என்பதைத்  தெளிவாக்குகிறது.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 106 (அப்பொன்)

    சேக்கிழார் பாடல் நயம் – 106 (அப்பொன்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பாடல் :

    அப்பொன்  பதியின்   இடைவேளாண்   குலத்தை  விளக்க  அவதரித்தார்
    செப்பற் கரிய பெருஞ்சீர்த்திச் சிவனார் செய்ய   கழல்பற்றி
    எப்பற் றினையும்  அறஎறிவார்; எல்லை  தெரிய  ஒண்ணாதார்
    மெய்ப்பத்   தர்கள்பால்   பரிவுடையார்  எம்பி   ரானார்;  விறன்மிண்டர்

    பொருள்

    அந்த அழகிய பதியிலே வேளாண் குலத்தை விளக்கம் செய்ய அவதரித்தார்; சொல்லுதற்கரிய பெருஞ் சீர்த்தியுடைய சிவபெருமானாரின் சேவடிகளையே பற்றுக்கோடாகக் கொண்டு ஏனைய எல்லாப் பற்றுக்களையும் அறஎறிவார்; எல்லையிட வொண்ணாதார் உண்மையடியார்களிடத்து அன்புமிக உடையவர்; எமது பெருமானாராகிய விறன்மிண்டர்.

    பொன்பதி – பொன் -அழகு. திருவுடைமையுமாம். இவற்றின் காரணம் முன்பாட்டில் உரைக்கப்பெற்றது.

    வேளாண் குலத்தை விளக்க  – என்ற தொடர்  வேளாளர் என்ற குலம் இவர் அதனுள் வந்தவதரிக்கப் பெற்றமையால் விளக்கமடைந்தது. வேளாளர் குலத்திற்கு முன்னரிருந்த அளவிளாத பெருமைகளினும், திருத்தொண்டத்தொகையை உலகம் பெற்றுய்தற்குக் காரணராயிருந்த இவரைத் தன்னுட் பெற்றது அக்குலத்திற்கு மிகப் பெருமையும் விளக்கமும் தந்தது என்க.

    “ஆசின் மறைக்,
    கைப்படுத்து சீலத்துக் கவுணியர் கோத்திரம் விளங்கச்,
    செப்பு நெறி வழிவந்தார் சிவபாத விருதயர்“ என்றும்,

    “கானவர் குலம் விளங்கத் தத்தைபாற் கருப்பம் நீட“ என்றும்

    சேக்கிழார்  கூறிய   திருவாக்குக்கள்  குலமாண்பை சிறப்பித்தமை  காண்க.

    செப்பற்கரிய பெருஞ் சீர்த்திச் சிவனார் –  என்ற தொடர்  ‘செப்பற்கரிய’  அதாவது , “உலகெலா  முணர்ந்   தோதற் கரியவன்“ என முதற்கண்ணே ஒதியதை  நினைவூட்டுகிறது.

    “யதோ வாசோ நிவர்த்தந்தே“ – (எதினின்றும் வாக்குக்கள் திரும்பிவிடுகின்றனவோ) – என்னும் பொருள் காட்டும்  உபநிடதத்தால்   செப்பற்கருமை உணரப்படும். பெரும் – மிகச்சிறியதும் செப்பரிதாம்   ஆதலின் அதனை  விலக்க, ‘பெரும்’ என்றார்.

    சீர்த்தி – இச் சீர்த்திகளை மறைகள் பற்பலவாறு பேசித் திளைத்துணர்த்தும் சிவம் என்ற சொல் இருத்தல் – கிடத்தல் எனப் பொருள் தருதலால், எங்கும் இருப்பது – எங்கும் பதிந்து கிடப்பது எனப் பொருள் கொண்டு சிவபெருமானது எல்லா மறியுந் தன்மை, ஒன்றாயும் வேறாயும் உடனாயும் இருக்குந் தன்மை முதலிய பல சீர்த்திகளையும் மறைகள் பேசும். வேதங்களுள்ளே திருவுருத்திரமும்,

    “மண்ணாகி விண்ணாகி மலையு மாகி
    வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகி“,

    “மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை
    மலையல்லை கடலல்லை வாயு வல்லை“,

    என்பன முதலிய எண்ணிறந்த தமிழ் மறைகளும் இறைவன் எல்லாமாய் அல்லனுமாய் நின்றருளும் இச்சீர்த்தியை மிக விதந்து பேசுகின்றன. இறைவன் உயிர்களுக்கருள்புரியும் சீர்த்தியே அவனது கீர்த்திகளுள் மிகச் சிறந்ததாம். மாணிக்கவாசக அடிகள் கீர்த்தித் திருவகவலுள்ளே இதனை விரித்துப் பாராட்டியிருத்தலைக்  கண்டு தெளிக..

    இனி வேதம்,  முன்னுரையாகப்  பிரமன் விட்டுணு முதலிய தெய்வங்களின் புகழ்களையும் பேசும். ஆனால் அவை, இறைமைக் குணங்கள் முற்றும் உடையவரல்லாதாரை அவையுடையரெனப் பேசுதலால், பொருள் சேராவாம். அவை அவற்றினும் வலிமையுடைய கூற்றுக்களாற் பாதிக்கப்பட்டு இறுதியில் சிவனது சீர்த்தியே பெரியதாய்ப் பேசப்பெறும்.

    பிரமனை, அயன் – அசன் – பிறப்பில்லாதான் என உபசரிக்கும் கூற்று, பிரமன் விட்டுணு உந்தியிற் பிறந்தான் என்றபோது பொருள் சேராப் புகழாயொழியும். அவ்வாறே விட்டுணுவைப் பேசும் நாராயண உபநிடதம், நாராயணன் ஆத்மா – ‘’அவர் சத்தியம் – அவர் முதலில் இருந்தவர் – அவரே இந்திரன்’’ – என்றெல்லாம் புகழும். ஆயின் முடிவில் நாராயணன் ஆத்மா – அவர் சத்தியம் – அவர் முதலில் இருந்தவர் – அவரே இந்திரன் – என்றெல்லாம் புகழும். ஆயின் முடிவில், நாராயண:பரோத்யாதா – சுவேதாசுவதரம், அவர்தியானிக்கிறவர்; சிவனொருவனே தியானிக்கத்தக்கவர்; தியானிக்கப் படுபவர். சிவ ஏகோத்யேம்: (அதர்வசிகை) என முடிக்கின்றபோது முன்னர்க் கூறிய புகழ்கள் பொருள் சேராவாம்.

    “பையஞ் சுடர்விடு நாகப் பள்ளி கொள் வானுள்ளத் தான்“, “திருமாலகத்தான்“, “தொழப்படுந் தேவர் தொழப்படுவானை“, “சேர்ந்தறியாக் கையான்“, “தன்னாற் றொழப்படுவா-ரில்லை தானே“ என்பனவாதி எண்ணிறந்த தமிழ்

    மறைகளும் இக்கருத்தே பற்றியன.

    (இவை திரு.க. சதாசிவ செட்டியா ரவர்கள் உரைக் குறிப்புக்கள்.)

    சிவனார் – ஆர் விகுதி உயர்வு குறித்தது. செய்ய கழல்- சேவடி “அரவணையான் சிந்தித் தரற்றும்படி“ என்பது முதலாகத் திருவடித் திருத்தாண்டகத்திற் கூறியன காண்க.

    கழல் – ஆகுபெயர். திருவருள் நிறைவே திருவடியாகக் கூறப்பெறும். இறைவனுக்குத் திருமேனி கற்பிக்கப் பெறும்போது திருவடியும் கற்பிக்கப் பெறுமென்க. திருவடியே சிவசத்தியாம் – அதுவே தாரகமாவது.

    செய்ய – செம்மையுடைய – வீடுபேறுதரும் – என்ற பொருளில் வந்தது. செய்ய -சிவந்த எனக் கூறலுமாம். எல்லாரும் மலரிட்டு அருச்சித்து வணங்குதலால்  சிவந்தது.

    “தேவரெல்லாந் தொழச்சிவந்த செந்தாள் முக்கட் செங்கரும்பே“ – தாயுமானார்;

    “நின்போ லமரர்கள் நீண்முடி சாய்த்து நினைந்துகுத்த,
    பைம்போ துழக்கிப் பவளந் தழைப்பன“ (அப்பர் – திருவிருத்தம்).

    அருச்சித்த மலர்களினின்றும் தேன்பாய்ந்து சிவந்தது என்பதுமொரு கருத்து.

     “சிறந்து வானோர் ,
    இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற
    வின்மலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி,
    நனைந்தனைய திருவடி“      என்பது  திருமுறை .

    கழல்பற்றி எப்பற்றினையும் அற எறிவார் – பற்றத்தக்கது கழலேயாம் என்பது. அதனைப் பற்றுவதும் பிற எல்லாப் பற்றுக்களும் அறுதற்கேயாம். பிற பற்றுக்களற்ற போதே திருவடிப் பற்று உளதாம். திருவடிப் பற்று உளதாகப் பிற பற்றுக்கள் அறும். இவ்விரண்டும் திருவருளால் உண்டாகவேண்டும் என்க. “முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா பாவமே“ என்ற தேவாரமும் காண்க.

    எப்பற்றினையும் – யான் எனது என்ற அகப்பற்று, புறப்பற்றுக்கள் அனைத்தையும்; தேவலோக நாகலோக பூலோகப் பற்றுக்களையும்.

    “போகம்வேண்டிவேண்டிலேன்புரந்த ராதி இன்பமும்,
    ஏக நின் கழலிணை யலாது  இலேன்“ என்பது திருவாசகம்.

    கழற்பற்று ஒன்றொழித்து வேறு எல்லாப் பற்றுக்களையும் எப்பற்றினையும் என்றதனால் “வீடும் வேண்டா விறலின் விளங்கினார்“, “ஈசனோ டாயினு மாசை யறுமின்“ என்றபடி நிராசையாகிய தொண்டர் நிலையுங் கொள்ளப்பெறும்.

    இந்நாயனார் இறைவனிடத்து வீடும் வேண்டா விறலை உடையராய், அவனையும் புற கென்ற திறத்தைக் காண்க. அற எறிவார் – அற – அறவே – முழுதும். அறும்படியாக என்றலுமாம். எறிவார் – எறிவாராயினர்.

    எல்லைதெரிய ஒண்ணாதார்  என்ற தொடர்,  பொருளின் அளவால் அளக்க லாகாதவருடைய. முன் செப்பற்கரிய என்றது உரையின் அளவால்  அளக்கலாகாமை குறித்தது.  இதனை நாயனார்க்குக் கூட்டி, அளவிடமுடியாத பெருமையுடையவர் என்றுரைப்பதும்  உண்டு. எல்லை தெரிய ஒண்ணா இறைவன் கழல்பற்றியவராதலின் இவரும் அத்தன்மையினரே.

    மெய்ப்பத்தர்கள் – உண்மை யன்பர்கள். மெய்ப்பொருணாயனார் போலல்லாது இந்நாயனார் உண்மை யன்பர்கள் பாலே பத்தி செய்வார். ஆயின் இவர் வேடத்தைச் சிந்தை செய்யாரோ எனின், வேடத்துடன் உண்மை யன்பும் உடன்சேர்த்தி எண்ணி அன்பு செய்வார் என்க.

    இது இவரது சரிதக் குறிப்பாகும். நம்பியாரூரரையும் அவரை ஆட்கொண்ட பெருமானையும் புறகு என்று கூறவல்ல விறல் படைத்தவராதலின் இவரது திருவுள்ளம் மெய்ப் பத்தர்கள் பாற் பரிவுடையது என்றார். பரிவுடைமை – அன்பு பூண்டொழுகுதல்.

    எம்பிரானார் – எமது பெருமானார். தலைவர் என்று ஆசிரியர் இங்குக் குறித்ததன் காரணம்இப்புராணப்  பாட்டிற் காண்க. இப்புராணத்திற்கு முதனூலாகிய திருத்தொண்டத் தொகை இவராலே உலகம் பெறுதற்குக் காரணமாயிற்று என்ற நன்றி கருதி வணங்கினார் என்க. அதனாலே தொண்டர் கூட்டமும் அவர் புகழும் உலகெலாம் எங்கும் நிலவி நின்றதென்பதுமாம்.

    அவதரித்தாராகவும், எறிவாராகவும், உடையாராகவும், பிரானாராகவும்  விளங்கிய விறன்மிண்டர் என முடிக்க.

    நாயனாரது பெயரை முதலிற் கூற நேர்ந்தபோது, இவ்விடத்து “மெய்ப்பத்தர்கள்“ அடியின் அடியில் ஆசிரியர் அமைத்துக்காட்டி, நாயனாரது உண்மை நிலையைக் குறித்த அழகு காண்க. மெய்ப்பத்தர்கள்பாற் பரிவுடைமையே “கூட்டம் பேணா தேகும் ஊரனுக்கும் புறகு“ என்று நாயனார் கூறக் காரணமாயிற் றென்பதும், இதுவும் இச்சரிதக் குறிப்பாம் என்பதும் இங்கும் காண்க. வரும் பாட்டுக்களிலும்   காண்போம்.

    Share